இன்று மீண்டும் ஒரு கீழ்மையை அருகில் சந்திக்க வேண்டி வந்தது. வழக்கம்போல உதாசீனப்படுத்தி விட முடியாமல் இன்றென்னவோ அதிகம் சங்கடப்பட்டேன். இந்த நாற்காலிகள் படுத்தும் பாடு இருக்கிறதே அப்பப்பா!சரண் ஒரு முறை என்னை the pale blue dot என்னும், பால்வெளியில் மிகச்சிறிய ஒரு புள்ளியாக நமது பூமி சுழன்று கொண்டிருப்பதைக் காட்டும் ஒரு ஆவணப்படம் பார்க்கச்சொன்னான். அந்தச் சிறு புள்ளிக்குள்தான் ,அதற்குள்தான் பலரின் ஆணவம் இப்படி பேருருக்கொள்கிறது.
ஏதேனும் ஒரு விதத்தில் சிறப்பான தகுதி கொண்டிருப்போர், பொதுவான அறிவோ, பொதுஅறிவோ கொஞ்சமாவது கொண்டிருப்பவர்கள், எப்படியோ எதோ ஒரு தகுதியாவது கொண்டிருப்போரின் ஆணவத்தை நான் சகித்துக்கொள்ளப் பழகி விட்டிருக்கிறேன். 22 நீண்ட வருடங்களல்லவா ?
ஆனால்அப்படி எதுவுமே இல்லாமல் கீழ்மையில் திளைப்பவர்கள், கீழ்மையை தங்களைச்சுற்றிலும் பரப்பிக்கொள்பவர்களின் ஆணவம் என்னைச்சீண்டுகையில் எரிச்சலாகிறேன்.
முன்பெல்லாம் கல்லூரி இப்படி இல்லை மெய்யாலுமே பெரிய மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் இருந்தார்கள். இளம் ஆசிரியர்களான எங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆசிரியம் என்பதை வாழ்வுநெறியாகக் கற்றுக்கொடுத்தார்கள்.இன்று அவற்றையெல்லாம் மீண்டும் நினைத்துக்கொண்டேன்
நான் திருமணத்திற்காக விடுப்பு எடுக்கக் கடிதம் எழுதிக்கொண்டு அப்போது முதல்வராக இருந்த திரு சுந்தரம் என்பவரைக் காணச்சென்றேன். அப்போதுதான் கல்லூரியில் இணைந்திருந்தேன். சம்பிரதாயமான கடிதங்கள் எழுதிப்பழகி இருக்கவில்லை. கடிதத்தில் ஒரு சொல்லில் tense தவறாக இருந்திருக்கிறது.
என்னை முதலில் அமரச்சொன்ன அவர் (முதல்வரின்) அறையின் மூலையில் அவரிடம் PhD ஆய்வு செய்துகொண்டிருந்த ,அமர்ந்து என்னவோ எழுதிக்கொண்டிருந்த இளைஞரை ’’கொஞ்சநேரம் வெளியே போப்பா’’என்று சொல்லி, அவர் எழுந்து சென்று கதவை மூடியதும் என்னிடம் ’’லோகமாதேவி இந்த இடத்தில் இதுவல்ல இதுதான் வரனும்’’ என்று சொல்லிக் கடிதத்தைத் திருத்தினார், பின்னர் ’’இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் கத்துக்குவீங்க இது ஒன்னும் பெரிய விஷயமல்ல இருந்தாலும் நீங்க தெரிஞ்சுக்கனும்னு சொல்லறேன்’’ என்றார்.பிறகு நான் கற்றுக்கொண்டேன்தான்.
இதைச் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் மிக வயோதிகராகிவிட்டிருந்த அவரிடமே சொன்னேன் அவருக்கு நினைவே இல்லை. புன்னகைத்தார் பதிலுக்கு.
அவர் நினைத்திருந்தால் அந்த இளைஞர் முன்னாலேயே என்னைக் கடிந்திருக்கலாம், கடிந்துகொள்ளாமல் அன்புடன் சொல்லுவதாக இருந்தாலும் அவர் முன்னிலையிலேயே சொல்லி இருக்கலாம்.
அப்போது நான் முனைவர் பட்டம் பெற்றிருந்தேன். இந்தக்கல்லூரியின் முனைவர் பட்டம் வைத்திருந்த முதல் பெண்பேராசிரியர் நான். சர்வதேச சஞ்சிகைகளில் வெளியாகி இருந்த என் ஆய்வுக்கட்டுரைகள் கல்லூரியின் பேசுபொருளாக இருந்தன.
அவர் என்னிடம் ‘’என்னம்மா PhD படிச்சிருக்கே ஒரு லெட்டர் கூட எழுதத்தெரியாதா’’? என்று கேட்பதற்கான எல்லா சாத்தியங்களும் அவர் முன்பாக இருந்தன. ஆனால் அவர் எத்தனை கவனமாக இருந்திருக்கிறார் அந்த நாற்காலியில், அந்தப்பதவியில்?
பிறரை எப்படி நடத்துவது என்பதை அவரிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டேன்.
இதைப் பல நூறு முறை நான் நினைத்துப்பார்ப்பதுண்டு, மகன்களுக்கும் மீள மீளச்சொல்லி இருக்கிறேன்.
அப்படி என்னை வழிநடத்திய துறைத்தலைவர் திருசங்கரன், திருஷண்முக சுந்தரம் சார்,திரு வசந்தகுமார் திரு ரவீந்திர ராஜு, திரு மணியன், திருமதி நர்மதா பாய் என்று பலரை நான் மரியாதையுடன் நினைவில் வைத்திருக்கிறேன்.
கல்லூரியில் என்னை மரியாதைக் குறைவாக நடத்தியவர்கள், நடத்துபவர்கள், இனி நடத்தவிருப்பவர்களை எல்லாம் நான் ஒட்டுமொத்தமாக அலட்சியப்படுத்துகிறேன். ஒற்றைக்கையால் தூசியைப்போலத் தட்டி உதறுகிறேன் ஆனாலும் இப்படி சில சமயம் கண்ணில் தூசி விழுந்ததுபோல் சங்கடமாகி விடுகிறது.
நான் எத்தனை எட்டி எட்டிச் என்றாலும் அலுவலக ரீதியாகச் சிலரை சிலசமயம் நேரில் சந்திக்கவேண்டி வருகிறது அதுவும் துறைத்தலைவரான பிறகு இப்படி அதிகம் நடக்கிறது.
நாளை என் நெடுநாள் கனவான விதை வங்கி மற்றும் மூலிகைத்தோட்டத்தின் திறப்பு விழா. எனவே அதற்கான ஏற்பாடுகள். அடுத்துவரும் தேர்வுக்கான வினாத்தாள்களை அனைவரிடமும் கேட்டு வாங்கி தேர்வுக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப கடைசிநாள் என்பதால் அந்த வேலை. வழக்கமான வகுப்புகள் என்று ஏராளம் வேலைப்பளுவும் இந்த மோசமான அனுபவத்தின் கூடச் சேர்ந்து விட்டது.
மாணவர்கள் முன்பாக என அகத்தை பெரிதும் மறைத்துக்கொள்வேன்தான் என்றாலும் ஒரு சிலர் என்னை மிக அணுக்கமாக அறிந்துகொள்பவர்கள். என் ஆய்வு மாணவி மேனகா வந்து என்னவாயிற்று என்றாள் ’’இப்போவேண்டாம் பிறகு பேசலாம்’’ என் அவளை அனுப்பினேன், ’’சாப்பிட்டீங்களா’’? என்று கேட்டுவிட்டே என் அறையிலிருந்து அவள் சென்றாள்.
ஆய்வகத்தில் நாளை ஆயுதபூஜைக்கான ஏற்பாடுகளை முகமாறுதலின்றி கவனித்துவிட்டு நான் வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டேன்.
வீடு வரும் வழியில் இளம் தூறலாக மழை பெய்து கொண்டே இருந்தது பருவமழை துவங்கவிருக்கிறது. நல்ல குளிரும் ஆரம்பித்துவிட்டது.
வெண்முரசில் பாண்டவர்களை தண்டிக்க அந்த ஆயிரத்தவன் செய்யும் கீழ்மையான செயல்களைக் குறித்த அத்தியாயம் வாசித்தேன். அறிவின்மை முழங்கும் என்பதை மீள மீள வாசித்தேன். என்னால் அமைந்திருக்க முடியவில்லை சாக்கில் கட்டி வைத்த பூனை போல உள்ளே என்னவோ நிமிண்டிக்கொண்டே இருந்தது.
நான் வீடு வந்தபோது எனக்கு வாட்ஸ் அப்பில் புவனா, காவ்யா என்னும் இரு மாணவிகள் என் அறை வாசலில் சிறிய மிக அழகிய பூக்கோலமிட்டு அதைப் புகைப்படம் எடுத்து ’’மேம்,உங்களுக்காக’’ என்றெழுதி அனுப்பி இருந்தார்கள்.அந்த வண்ணமயமான மலர்க்கோலம் என்னை உண்மையிலேயே மலர்ச்சிகொள்ளச்செய்துவிட்டது.
நான் இந்தக் கல்லூரியிலிருந்து உடனடியாக வெளியேற ஆயிரக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன, இன்னும் அதைச் செய்யாமல் இருக்க இந்தக் குழந்தைகளின் அன்பும் தாவரவியல் கற்றுக்கொடுப்பதில் எனக்கிருக்கும் பிரியமும்தான் காரணம்.
நிச்சயம் இந்த வேலைக்கான சம்பளம் ஒரு காரணமல்ல. இதற்குச்சற்றும் குறைவு இல்லாமல் அல்லது கூடுதலாகக்கூட நீட் பித்துப்பிடித்திருகும் இந்தக்காலத்தில்நான் அதற்கான சிறப்பு வகுப்புகள் எடுக்க முடியும், கட்டணத்தின் பேரில் தாவரவியல் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து நடத்த முடியும், அப்படியொரு திட்டம் கைவசம் வைத்திருக்கிறேன். தருண் படிப்பை முடிக்கக்காத்திருக்கிறேன்.
ஜெ சொல்லிய
‘’ ஓர் அவமானத்தை ஒரு இளவெயில் போக்க முடியுமானால்,
ஒர் இழப்பை ஒரு மென்மழை மறக்கச் செய்ய முடியுமானால்,
ஒரு நோயைப் பூவின் நறுமணத்தால் சமன் செய்துகொள்ள முடியுமென்றால்
வாழ்க்கையில் அஞ்சத்தக்கதாக ஏதுமில்லை ‘’
என்னும் வரிகளை வாசித்தேன்
எத்தனை உண்மை!
அந்தக்கோலம் இன்றைக்கு நான் சந்தித்த கீழ்மையை சமன் செய்துவிட்டதோடு என்னை அந்தச் சங்கடத்திலிருந்து விடுவித்தும் விட்டது.
அன்பு!