பலர் இது மனதை கனக்கச்செய்ததாகச் சொல்லி இருந்தார்கள் எனக்கென்னவோ படம் பார்த்து முடிந்ததும் பெரிய விடுபடல் இருந்தது. படத்தின் இறுதிக்காட்சி காட்டும் காதலை துறத்தல்,மன்னித்தல் மறத்தலினால் அல்ல. இன்னாது அம்ம இவ்வுலகு என்பதை மீண்டும் நினைவு படுத்திய திரைப்படம் என்பதால்.

தாமஸ் குட்டியின் அந்த நீல நிற ஃபைலை பார்த்துவிட்டுப் பார்வதி சவப்பெட்டியின் முன்னமர்ந்து ஊர்வசியிடம் பேசுவதும்,  ’’நின்ன கட்டியவனாடி இவிட கிடக்குன்னது’’ என்னும் ஊர்வசிக்கு பார்வதி திரும்பச்சொல்வதும் நிறைவளித்தது.

அந்த சிஸ்டர் தெரிவிக்கும் உண்மையும், பிறகு  இருட்டில் சமையலறையில் பார்வதியின் அம்மா சொல்லுவதும் எனக்கு அதிர்ச்சியாகவே இல்லை. இங்கும் ஒரு ’சிஸ்டர்’ இங்கும் ஒரு அன்னை என்று நினைத்துக்கொண்டேன்.புன்னகைத்தும் கொண்டேன். இறுதியில் பார்வதிக்காவது பற்றிக்கொள்ள ஊர்வசியின் தளர்ந்த கைகள் இருந்தது ஆசுவாசம் அளித்தது. எனது உள்ளொழுக்கின் வேகம் இனி மட்டுப்படலாம்.