
அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் செப்டம்பர் 14, 2018ல் வெளியான மனதின் விழைவென்னும் பொருள் கொண்ட இந்தித்திரைப்படம் மன்மர்ஜியான். தயாரிப்பு Eros International, Phantom Films மற்றும் Colour Yellow. அபிஷேக் பச்சன், விக்கி கெளஷல் மற்றும் தாப்ஸி பன்னு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில். திரைக்கதை கனிகா, இசை அம்ரித் திரிவேதி, படத்தொகுப்பு ஆர்த்தி பஜாஜ், ஒளி இயக்கம் சில்வெஸ்டர் பொன்சேகா; இந்தியாவில் மட்டும் 1500 அரங்குகளிலும், வெளிநாடுகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்paட்ட இப்படம் பரவலான வரவேற்பை பெற்றிருந்தது.
முதன் முதலாக விக்கி கெளஷல், விக்கி என்னும் பெயரிலேயே வருகிறார், முதன்முறையாக படு கிளாமராக தாப்ஸி , முதன் முறையாக அபிஷேக் சர்தார் பாத்திரத்தில், முதன் முதலாக அனுராக் தானெழுதாத திரைக்கதையை இயக்கியிருக்கிறார்.
மூன்று நபர்களுக்கிடையேயான முக்கோணக்காதல் கதையை பார்த்திருக்கிறோம், இதுவும் அப்படித்தான் ஆனால் காதல் காமம் கல்யாணமென்னும் புதிய முக்கோணத்தை சொல்லும் படமிது. காதலின் நிறங்களை சொல்லும் “Grey Waala Shade”, பாடலிலேயே இயக்குநர் கதையை கோடிட்டு காட்டிவிடுகிறார். இந்தப்பாடலே, படம் கொடுக்கவிருக்கும் கலாச்சார அதிர்ச்சிகளுக்கும், மரபு மீறல்களுக்கும் நம்மை தயார் செய்துவிடுகிறது. படமும் அப்படியேதான். காதலைக்குறித்தும், காதலைச்சொல்லும் சினிமாவை குறித்தும் இதுநாள் வரை நமக்கிருந்த பார்வையையும் எண்ணங்களையுமே மொத்தமாக கலைத்துவிடுகிறது. புறாக்கள், கடிதங்கள், நண்பர்கள் வழியே வளர்ந்து, பின்னர் மின்னஞ்சல் முகநூல் என்று பரிணாம் வளர்ச்சி அடைந்துகொண்டே வந்த காதல் இதில் டிண்டரின் தாக்கத்தை சொல்லுகின்றது.
கதவுக்குப்பின்னே மறைந்து கொள்ளுவது, கால்விரல்களால் தரையில் கோலம்போடுவது, காதலனின் பேரைக்கூட சொல்லாமலிருப்பது, முகத்தைப்பார்க்கமலேயே காதலிப்பது, காதலுக்காக உயிரைவிடுவது என்றெல்லாம் பார்த்த பல நூறு படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் காதலென்பதைக் குறித்த மனச்சித்திரத்தின் மீது பெரிய சுத்தியலால் ஒரேயடியாக அடித்து நொறுக்குகிறது இந்தப்படம்.

கட்டிபிடித்தலும் ஆழ்ந்தமுத்தங்களுமாக மொட்டைமாடிக்கு ரகசியமாக வரும் காதலன் விக்கியும் , வீட்டுப்பெரியவர்கள் கதவை உடையும்படி தட்டினாலும் திறக்காமல் துணிந்து காதலனுடன் நெருக்கமாக இருக்கும் தாப்ஸியுமாக படம் அதிரடியாக துவங்குகிறது
ரூமியாக தாப்ஸி, விக்கியாகவே விக்கி,ராபியாக அபிஷேக். தாப்ஸியின் பாத்திரம் மிகச்சிக்கலானது. தீவிர காதலில் விக்கியுடன் இருக்கிறார். உண்மையில் அவர்களுக்கிடையே இருப்பது காட்டாறைப்போல அவர்களை இழுத்துச்செல்லும் கட்டற்ற, இளமையின் வேகத்தில் காதலென்னும் போர்வையில் இருக்கும் காமம்தான்
.பெற்றாரை இழந்த, உறவினர்களின் ஆதரவில் இருக்கும், ஹாக்கி விளயாடும், எல்லைகளை மிகசுலபமாக தாண்டும், வேலிகளை உடைக்கும், கருக்கலைப்பு செய்துகொள்ளும், கணத்துக்குகணம் முடிவுகளை மாற்றிக்கொள்ளும், ஆவேசமான காதலில் இருப்பது, காதல் கைகூடவில்லையெனில் உடன் இன்னொரு அப்பாவியை கல்யாணம் செய்துகொள்ளுவதென்று இந்த யுகத்தின் இளைஞியாக கலவர கேரக்டர் ரூமியுடையது.
காதலுக்கும் காமத்திற்கும் இடையிலிருக்கும் கோட்டை முற்றிலுமாக அழித்துவிட்டு எல்லா விதிகளையும், நெறிகளையும், கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் மீறும், இதயமும், ஹார்மோன்களும் சொல்லுவதை மட்டுமே பின்பற்றும் பஞ்சாபி பெண்ணாக ரூமி. அவளுக்கு காதலனும் வேண்டும் கணவனும் வேண்டும். காதலனுடனும் கோபம், கணவனுடனும் கோபம், ஆனால் இருவருடனும் காமம் கொள்கிறாள்
அவளின் துடிப்பும் உற்சாகமும், துள்ளலும், வேகமும், கோபமும் நம்மையும் தொற்றிக்கொள்ளும். ரூமிதான் முழுப்படத்தையும் ஆள்கிறார். நிச்சயமாக தாப்ஸியின் மிகச்சிறந்த படங்களில் இதை முதலாவதாக சொல்லிவிடலாம்.

அபிஷேக்கின் ராபி பாத்திரமும் புதிர்தான். திருமணத்துக்கு பிறகும் முன்காதலை நினைத்துக்கொண்டே இருக்கும், முன்காதலனுடன் தொடர்பிலும் , உடலுறவிலும் இருக்கும் மனைவியையும் மனதார நேசிக்கிறார் அவளை எந்த கேள்வியும் கேட்பதில்லை மெளனமாகவே இருக்கும் ’’என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’’ என்னும் மனநிலை கொண்ட, எப்போதும் புன்சிரிப்புடனிருக்கும் ஏறக்குறைய துறவி கேரக்டர். விமான நிலையத்தில் வந்து தலைப்பாகை அணிந்து கொள்ளும் சமத்து சர்தார். பதிவிரதைபோல இவர் பத்தினி விரதர்.

எந்த கட்டுப்பாடுகளும், ஒழுங்கும், குறிக்கோளும், திடசித்தமும் இல்லாத காதலனாக விக்கி. அவரது சிகை அலங்காரமே சொல்லிவிடும் அவரது பாத்திரத்தின் இயல்புகளை.
இருவருக்குமே ரூமியின் மீது கண்மூடித்தனமான காதல். காதலனும் சரி கணவனும் சரி ரூமியின் கட்டற்ற வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். ராபி, விக்கி இருவருக்குமான பாத்திரப்படைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
நிலையிலா மனம் கொண்டிருப்பதில் மட்டும் ரூமியுடன் ஒத்துபோகிறான் விக்கி. இருவரும் பெண்டுலம் போல முன்னும் பின்னுமாக உசலாடிச்கொண்டெ இருக்கிறார்கள் படம் நெடுகவே!

ஒரு நல்ல அக்மார்க் கணவனாக ராபியின் பாத்திரத்தை காட்டியிருப்பதாக திரைக்கதை சொன்னாலும் பார்வையாளர்களுக்கு ’’அடப்பாவி இப்படியும் ஒரு ஏமாந்தவன் இருப்பானா’’ என்றே அங்கலாய்க்க தோன்றுகிறது. அன்புக்கும் எல்லைகள் உண்டே!. மனைவிக்கு சுதந்திரம் கொடுப்பது வேறு, அவள் மனைவியாகவே இல்லாமலிருக்கையிலும் சுதந்திரம் கொடுப்பதென்பது முற்றிலும் வேறு. ’’மெளன ராக’த்தை மாய்ந்து மாய்ந்து இன்னும் பேசும் நமக்கெல்லாம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுக்கின்றது இத்திரைப்படம்.. விட்டுப்பிடிப்பதற்கும், ஒரேயடியாக விட்டுவிடுவதற்குமான வேறுபாடு மிக முக்கியமல்லவா?
ரூமியின் இரட்டை மனதின் குழப்பங்களையும், கணவன் காதலன் என இருதிசைகளிலும் இருக்கும் ரூமியின் விழைவுகளுக்கும் குறியீடாக பாடல்களிலும் காட்சிகளிலும் இரட்டைச்சகோதரிகள் இடையிடையே வருவது நல்ல உத்தி. இரட்டை சகோதரிகள் ப்ரியங்கா ஷா, பூனம் ஷா இருவரும் B fusion எனப்படும் பரதநாட்டியம், பாங்ரா, பாலிவுட் நடனம் இவற்றின் கலவையை ஹிப்ஹாப்’புடன் கலந்து ஆடுகிறார்கள்.

பத்துப்பாடல்கள். எல்லாமே அருமை குறிப்பாக, காதலனுடன் மனைவி நெருக்கமாக இருப்பதை ராபி, நேரில் பார்த்தபின்பு வரும் ’’ஹல்லா’’ மனதை உருக்குகின்றது.
இதில் வரும் மூன்று பாத்திரங்களுமே மரபை, சம்பிரதாயங்களை, இல்லறமென்னும் அமைப்பின் அடிப்படைகளை அல்லது கற்பிதங்களை கேள்வி கேட்கின்றன, கேலி செய்கின்றன.
திரைப்படம் பார்த்தபின்பு இப்படியான விஷயங்கள் சாதாரணமாக நடைபெறும் காலம் வெகுதூரத்தில் இல்லையென்பதையும் நாம் உணரமுடியும். நிச்சயம் இது பெரியவர்களுக்கு மட்டுமேயான திரைப்படம்.

Leave a Reply