ஆஃப்பிரிக்காவின் வடக்குப்பகுதியில் தோன்றிய ஆலோ வீரா (Aloe vera) உலகெங்கிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நோய் தீர்க்கவும் அழகை மேம்படுத்தவும் அலங்காரச்செடியாகவும் பயன்பட்டு வருகின்றது. இதன் 360 சிற்றினங்களில் 130 மட்டுமெ ஆப்பிரிக்காவில் தோன்றியவை. மற்றவை கலப்பின வகைகள்.
இதன் சதைப்பற்றான இலைகளினுள்ளிருக்கும் கெட்டியான சாறு பல்வேறு மருத்துவ குணங்களுடையது. கெட்டியான இந்த சாற்றினாலேயே இது சோற்றுக்கற்றாழை என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் இது பிள்ளைக்கற்றாழை.
உலகின் பல நாடுகளில் இந்த தாவரம் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு மருந்துகளும், அழகு சாதனப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. சோற்றுக்கற்றாழையின் மருத்துவக்குணங்கள் பண்டைய எகிப்து மற்றும் சீனாவில் பெரிதும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. மாவீரர் அலெக்ஸாண்டர் தனது குருவான அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் சொகோட்ரா (Socotra) தீவுகளை கைப்பற்றியதே அங்கு செழித்து வளர்ந்திருந்த இந்த கற்றாழைகளுக்காவே என்கின்றது வரலாறு.
எகிப்தின் பேரழகிகள் நெஃப்ரிடியும் கிளியொபாட்ராவும் (Nefertiti and Cleopatra) சருமப்பொலிவிற்கு இதன் சாற்றை பயன்படுத்தினார்கள். எகிப்தியர்கள் இதனை ’’அழியாத்தாவரமென்றார்கள்’’, கிரேக்கர்கள் இதை உலகின் எல்லாப்பிணியையும் போக்கும் மாமருந்தென்றார்கள். மெசாபடோமியாவில் கிறிஸ்துக்கு 2200 வருடங்களுக்கு முன்பே சோற்றுக்கற்றாழையின் பயன்கள் இருந்ததை அகழ்வாய்வில் கிடைத்திருக்கும் களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.
கொலம்பஸ் தனது கடற்பிரயாணங்களில் கப்பலுக்குள்ளேயே தொட்டிகளில் இந்த செடியை வளர்த்தி, உடனிருந்தவர்களின் காயங்களுக்கும், நோய்களுக்கும் சிகிச்சையளித்திருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பேனிஷ் துறவிகள் சோற்றுக்கற்றாழையை பலவிதங்களில் மருந்தாக பயன்படுத்தி , அதன் பயன்களை பலருக்கும் தெரியப்படுதினார்கள், மாயன்கள் இதை ”இளமையின் ஊற்று” என அழைத்தார்கள்.
புனித வேதகாமம் சிலுவையிலிருந்து எடுத்த கர்த்தரின் உடலை சோற்றுக்கற்றாழைச் சாற்றில் பதப்படுத்தியதை சொல்கின்றது. சோற்றூக்கற்றாழையைக் குறித்து 5 இடங்களில் வேதகாமத்தில் குறிப்பிடபட்டிருக்கின்றது.
நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்த பண்டைய எகிப்து நகரமான தெபெஸிலிருந்து, 1858ல் கண்டெடுக்கப்பட்ட, கிறிஸ்து பிறப்பிற்கு 1,550 வருடங்கள் முன்பு எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படும் எகிப்தியர்களின் மருத்துவநூலான “papyrus of Eber” ல் சோற்றுக்கற்றாழைகளின் பல பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல் தற்போது ஜெர்மனியின் ஜெர்மனியின் லெய்ப்ஸிக் (Leipzig) பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. எகிப்தியர்கள் சோற்றுக்கற்றாழையை கடவுளாக வழிபட்டதோடல்லாது, புனிதச்சின்னமாகவும் கருதினார்கள். இறந்த உடல்களை மம்மிகளாக்குதல் என்னும் பதப்படுத்துதலுக்கும் சோற்றுக்கற்றாழையை அதிகம் பயனபடுத்தி இருக்கிறார்கள்.
ஜப்பானில் மருத்துவருக்கு வேலையில்லாமல் செய்யும் தாவரமென்றே இதற்குப் பெயர். அங்கு இந்த ஜெல்லை தயிரில் கலந்து சாப்பிடுவதுண்டு.
இஸ்லாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதங்களில் பயன்படும் இந்த கற்றாழையை அற்புதச் செடி (Miracle plant) என்றே குறிப்பிடுகின்றது. ஷார்ஜாவில் 2014ல் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும், சோற்றுக்கற்றாழை, கருஞ்சீரகம், எலுமிச்சம்புல், அத்தி, ஆலிவ் உள்ளிட்ட 50 மருத்துவ தாவரங்களுக்கென்றே ஒரு பிரத்யேக பூங்காவை உருவாக்கி இருக்கிறார்கள்.
1800 களிலிருந்து இதன் உலகளாவிய பயன்பாடு மருத்துவத்துறையிலும் அழகுசாதனத்துறையிலும் மிகப்பெரும் அளவில் துவங்கியது.1944ல் ’A bomb’ அணுகுண்டு வீச்சில் காயம்பட்ட ஜப்பானிய வீரர்கள் கற்றாழைச்சாற்றை தடவியே விரைவில் நலம்பெற்றார்கள். இதன் தாவர அறிவியல் பெயரான Aloe vera வில் Aloe என்பது கசப்புத்தன்மையுடைய பளபளக்கும் பொருள் என்னும் பொருள்படும் ‘’Alloeh’’ என்னும் அரபிச்சொல்லிலிருந்தும் இதன் சிற்றினப்பெயராகிய vera என்பது கிரேக்கமொழியில் ‘’True’’ உண்மையான என்னும் பொருளையும் கொண்டது. இதன் அறிவியல் பெயரையே உலகெங்கிலும் பொதுப்பெயராகவே வழங்கும் அளவிற்கு இது புழக்கத்தில் இருக்கும் ஒரு தாவரமாகிவிட்டிருக்கிறது.
பாரம்பரிய மருத்துவமுறைகளின் தாய் எனக்கருதப்படும் ஆயுர்வேதத்தில் சோற்றுக்கற்றாழை ‘Ghrita- kumari” எனப்படுகின்றது. பெண்களின் நலனுள்ளிட்ட இதன் பல்வேறு பயன்களை இம்மருத்துவ முறை விளக்கமாக சொல்லி இருக்கிறது.. பல்வேறு நோய்களுக்கும் இதிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கின்றது
பூஞ்சைத்தொற்று, பேக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் இந்த சோற்றுக்கற்றாழையில் மனித உடலுக்கு மிக அத்யாவசியமான 8 முக்கிய அமினோ அமிலங்களும் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும், பிற முக்கிய சத்துக்களும் நிறைந்துள்ளது
உலகெங்கிலும் வளரும் இந்த தாவரத்தின் பேரினமான Aloe பல சிற்றினங்களை உள்ளடக்கியது. 3அல்லது 4 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் இத்தாவரம் அதிகபட்சமாக 21 சதைப்பற்றான இலைகளை உருவாக்கி 30-70செமீ உயரம் வரை வளரும். இதன் சாற்றில் ஏறக்குறைய 200 வகையான முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கோண வடிவில் இருக்கும் சதைப்பற்றான இலைகள் விளிம்புகளில் கூரான பற்களைப்போன்ற அமைப்பை கொண்டிருக்கும் இவை அஸ்போலேடேசியே (Asphodelaceae) குடும்பத்தை சேர்ந்தவை. சிவப்பும் மஞ்சளுமான சிறு மலர்கள் செடியின் மத்தியிலிருந்து உருவாகும் நீளமான ஒற்றைத்தண்டின் நுனியில் கொத்தாக இருக்கும். இலைச்சோறும், மஞ்சள் நிற இலைப்பிசினும் புற்றுக்கட்டிகளை அழிப்பது, ஜீரணத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
இவற்றில் கொடிபோல படருவது, மரம்போல வளருவது, மிக சிறியது, குறுகிய இலைகள் கொண்டது,செந்நிறமானது என பல அழகிய வகைகள் காணப்படுகின்றன.
சோற்றுக்கற்றாழையின் பயன்கள்
சருமப்பாதுகாப்பு
புற்றுநோயை தடுக்கும்
மலமிளக்கி
கேச வளர்ச்சியை ஊக்குவிக்கும்
உடலை குளிர்விக்கும்
வயிற்று உபாதைகளை குணமாக்கும்
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்
புண்களை ஆற்றும்
நோயெதிர்ப்புச்சக்தியை கொடுக்கும்
நல்ல முதிர்ந்த இலைகளை செடியின் கீழ்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கலாம். ஒரு சமயத்தில் 3 அல்லது 4 இலைகளை இப்படி எடுக்கலாம். நன்கு கழுவி மேல்தோலை கத்தியால் பிளந்து உள்ளிருக்கும் சோறு போன்ற பிசுபிசுப்பான கண்ணாடிபோல பளபளக்கும் ஜெல் பகுதியை எடுக்கவேண்டும்
இதிலிருந்து வடியும் மஞ்சள் நிறபிசினை வடியவிட்டு ஜெல் போன்ற பகுதியை மட்டும் தனியே எடுத்து உபயோக்கிக்கலாம்.
நேரடியாக உடலின் மேற்புறத்திலோ அல்லது கேசத்திலோ இந்த ஜெல்லை தடவலாம் அல்லது இதை நன்கு கழுவி நொங்கு போன்ற இதன் சதையை சாப்பிடலாம், ஜூஸ் போல தயாரித்தும் அருந்தலாம். பலநாட்களுக்கு இவறை குளிர்பதனப்பெட்டியில் சேமித்தும் வைக்கலாம்
மாறிவரும் வாழ்வுமுறைகளாலும் மருந்துகளின் பக்கவிளைவுகளினாலும் தாவர மருந்துப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உலகெங்கிலும் இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் சோற்றூக்கற்றாழையின் தேவை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. உலகளவில் தாய்லாந்து சோற்றூக்கற்றாழை ஜெல் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருகிலோ கற்றாழை ஜெல்லின் விலை சுமார் 100 லிருந்து 250 ரூபாய்கள் வரை இருக்கும். பொடியாகவும் ஜெல்லாகவும் சாறாகவும் கழுவி சுத்தம் செய்யப்பட்ட துண்டுகளாக்வும் சந்தையில் இவை கிடைக்கின்றன. வீட்டில் தொட்டிகளில் மிக எளிதாக இவற்றை நல்ல சூரிய ஒளி இருக்கும் இடங்களில் மிககுறைந்த நீரூற்றி வளர்க்கலாம்.
இரண்டு ஏக்கர் நிலத்தில் பெரிதாக எந்த பராமரிப்புச்செலவுமின்றி 20 லிருந்து 30 டன் எடையுள்ள கற்றாழைகளை வளர்த்து 5 அல்லது 6 லட்சம் லாபம் பார்க்கலாம்.அரிதாக சிலருக்கு சோற்றுக்கற்றாழை ஒவ்வாமையை உண்டாக்கும்.
Leave a Reply