Nordic noir, அல்லது Scandinavian noir, வகையைச்சேர்ந்த காவல்துறையினரின் பார்வையில் சொல்லப்படும் குற்றப்புலனாய்வு கதைகளின் நெடுந்தொடர் ’’மார்செல்லா’’
இந்த மூன்று சீசன்களும் 24 பகுதிகளுமான நெடுந்தொடரை எழுதி இயக்கி தயாரித்துமிருப்பவர் ஸ்வீடன் நாட்டு திரைக்கதாசிரியரும், 2011ல் வெளிவந்து 10 நாடுகளில் ஒளிபரப்பான புகழ்பெற்ற குறறப்பின்னணிக் கதையான‘ The Bridge’’ தொலைக்காட்சித் தொடரை எழுதி இயக்கியவருமான (Hans Rosenfeldt,) ஹான்ஸ் ரோசன்.
விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத பரபரப்பாகவே செல்லும் கதைத்தொடர் இது. கடத்தல், கொலை, குடும்ப வன்முறை, காவல் துறை குற்றப்புலனாய்வு, தாய்மை, காதல், பிறழுறவு, வன்முறை, போதை மருந்து, கடத்தல், ஊழல், இளமை, பயணம் ஆள் மாறாட்டம் , நம்பிக்கைத்துரோகம் என எல்லா அம்சங்களும் உள்ள ஒரு நெடுந்தொடர் மார்செல்லா. ஒவ்வொரு எபிசோடும் மிக சுவரஸ்யமாகவே கட்டமைக்கப்ட்டிருக்கிறது.
குடும்பத்தை கவனிக்கவென காவல்துறைப்பணியிலிருந்து விலகியிருந்த காவல் அதிகாரியான மார்செல்லா 11 வருடங்களுக்கு முன்பு தொடர் கொலைகள் செய்துகொண்டிருந்த குற்றவாளி மீண்டும் கொலைகளை செய்யத்துவங்கிருக்கலாமென்னும் சந்தேகத்தின் பேரில் அக்கொலைகளை விசாரிக்கவென மீண்டும் பணியில் இணைகிறார்.
சவாலான பணி, சீர்கெட்டுக்கொண்டிருக்கும் குடும்ப வாழ்வு, மனப்பிறழ்வு, கட்டுபடுத்தமுடியாத கோபம், இப்படி பலவற்றுடன் போராடும் 30களின் இறுதியில் இருக்கும் பெண் காவலதிகாரி மார்செல்லாவாக ’துணிந்து’ நடிப்பதில் பெயர் பெற்ற பிரிடிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையான அன்னா ஃப்ரெயெல் (Anna Friel) . அவரைத்தவிர வேறு யாராலும் இத்தொடரின் மார்செல்லா பாத்திரத்தை இத்தனை சிறப்பாக நடித்திருக்க முடியாது என்பதை பார்வையாளர்களை முதல் சீசன் முடியும் போதே உணர வைத்துவிடுவார். காவலதிகாரியாக நடிக்கையிலேயே, குடும்பத்தலைவியாக், கணவனின் அன்புக்கு ஏங்குபவளாக , நல்ல அன்னையாக கணவனின் துரோகத்தை தாங்க முடியாமல் சீறுபவராகவும் நடி்ப்பதென்பது பெரிய சவால். அன்னா இதை வெகு சிறப்பாக செய்திருக்கிறார். பொருத்தமான உடற்கட்டும் கூட.
மார்செல்லாவின் கணவராக அன்னாவைபோலவே திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துகொண்டிருக்கும் புகழ்பெற்ற நடிகர் நிக்கோலஸ். (Nicholas Andre Pinnock)
லண்டனை தலைமையகமாக கொண்ட பிரிட்டிஷ் தொலைக்காட்சியான ITV யில் 2016ல் ஒளிபரப்பான மார்செல்லா தற்போது நெட்ஃப்லிக்ஸில் கிடைக்கிறது.
முதல் தொடர்;
பல ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்கொலைகளை செய்த குற்றவாளி மீண்டும் அதே பாணியில் மூன்று கொலைகளை செய்திருப்பதாக சந்தேகப்படுவது, அந்த குற்றப்புலனாய்வும் அதன் திடுக்கிடும் திருப்பங்களும், செல்வந்தரும் கணவன் பணியாற்றும் தொழில்குடும்பத்தின் வாரிசுமான் கிரேஸ் கொலையாவதும், அந்தகொலையை மார்செல்லாவே மனம்பிறழ்ந்திருந்த சமயத்தில் செய்திருக்கலாமென்ன்னும் சாத்தியமும் , இறந்துபோன கிரேஸுக்கும் மார்செல்லாவின் கணவனுக்குமான பிறழ் உறவு , கிரேஸின் கர்ப்பம், குடும்ப வன்முறை குழந்தைகளுடனான் முரண், கணவன் மணவிலக்கு கோருவது, என கலவையான, உணர்வெழுச்சிகளுடனான் கதைகள் நிறைந்தது இந்த முதல் தொடர்.
இரண்டாம் தொடர்;
மார்செல்லாவின் மகனின் பள்ளித்தோழன் உட்பட பல குழந்தைகள் காணாமல் போய், பின்னர், தொடர்ந்து கொல்லப்படுவதை புலனாய்வு செய்யும் இந்த தொடரில் குழந்தைகளுடன் உற்வுகொள்ளும் முன்னால் குற்றவாளி, ஒரு செல்வந்தர் , மிகப்பிரபலமானெ முன்னால் பாடகர் என ஒவ்வொருவராக விசாரிக்கப்படுவது, இடையே வரும் மாந்த்ரீக குறியீடுகள், விலகிச்சென்றுவிட்ட கணவன் மணவிலக்குக்கு முன்பாகவே ஒரு நர்சுடன் வாழத்துவங்குவது, மார்செல்லாவின் மனப்பிறழ்வு அதி்கரித்திருப்பது, குழந்தைகள் மார்செல்லாவை புரிந்து கொள்ளாமலிருப்பது என விறு விறுப்பான நிகழ்வுகள் இருக்கின்றன.
மூன்றாம் தொடர்;
மார்செல்லா, தான் இறந்துவிட்டதாக மற்றவர்களை நம்பவைத்துவிட்டு கெய்ரா எனும் புதிய பெயரில் under cover அதிகரியாக மாபெரும் குற்றசாம்ராஜ்ஜியத்துக்கே சொந்தமான வீட்டிலேயே வாழத்துவங்குவதும் அந்த வீட்டு வாரிசுடன் நெருங்கிப் பழகுவதும் அவர் எதிர்கொளும் பிரச்சனைளுகம், அவர் கெய்ரா இல்லை மார்செல்லாதான் என கண்டுபிடிக்கப்படும் சாத்தியங்கள் அவ்வப்போது இடைபட்டுக்கொண்டே இருப்பதும்தான் கதை
முதலிரண்டு தொடர்களை ஒப்பிடுகையில் மூன்றாம் தொடர், நாடகபாணியில் பிரம்மாண்ட வீடு, மர்மமான பல நிகழ்வுகள், என பழைய சிவாஜிகணேசன் திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றது..
சர்வசாதாரணமான கொலைகள், கெளரவக்கொலைகள் என இதிலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை.
8 பகுதிகளை கொண்டிருக்கும் மூன்று தொடர்களுமே இறுதிப்பகுதிகலில் இருக்கை நுனிக்கு நம்மை கொண்டு வந்துவிடும். அத்தனை பரபரப்பு, மர்மம் ,அத்தனை வேகம், அத்தனை எதிர்பாராமை கொண்டவைகளாக இருக்கும் காட்சிகள்.
சிறந்த இயக்கம்,பொருத்தமான கதாபாத்திர தேர்வு, பிரமாதமான திரைக்கதையாக்கம் மற்றும் அபாரமான படத்தொகுப்பு
குற்றப்ப்புலனாய்வு கதைப்பிரியர்கள் அவசியம் பார்க்கவேண்டிய சிக்கலான சுவாரஸ்யமான ஒரு தொடர் மார்செல்லா. காவல் துறை குற்றப்புலனாய்வு என்று ஒரே பாதையில் திரைக்தையை அமைக்காமல் குடும்பச்சிக்கல்களையும், சேர்த்திருப்பதால் இத்தொடர் மற்றவற்றிலிருந்து மாறுபட்டிருக்கிறது. ஆபாசவசைச்சொற்கள், போதை மருந்து பயன்பாடு, வன்முறை , கொலை, இறப்பு இறந்த உடல்கள், மற்றும் நெருக்கமான ஆண்பெண் உறவுக்காட்சிகள் நிறைந்திருப்பதால் மார்செல்லா பெரியவர்களுக்கு மட்டுமேயான தொடர்.