இன்று எதேச்சையாக சுரேஷின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் பார்க்கையில் ‘அபி’ குறித்த லின்க் பார்த்தேன். வேறேதேனும் தலைப்பாக இருந்திருந்தால் பின்னர் கூட வாசித்திருப்பேன் ஆனால் இந்த அபி எனக்கு மிக விருப்பமான பெயர், சங்கமித்ரா,  கருவுற்றிருந்தபோது  இங்கு பொள்ளாச்சி வீட்டிலிருந்தாள் பிரசவம் வரைக்கும். அப்போது ஷாரூக்கான் முதன் முதலில் சின்னத்திரையில் நடித்த தொலைக்காட்சியில் பிரபலமான ஹிந்தி தொடர் ஒன்று ’சர்க்கஸ்’  அதில்  ஷாரூக்கின் பெயர் அபி, அது எனக்கு மிகப்பிடித்த தொடர். இரவு பல்கலையிலிருந்து வீடு வந்த உடன் நான் செய்யும் முதல்காரியம் இந்த தொடரை பார்ப்பதுதான்

மித்ராவிற்கு என்ன குழந்தை பிறந்தாலும் அபியென்று தான் அழைக்கப்போவதாக சொல்லிக்கொண்டே இருந்தேன். மகன் பிறந்து மகாபாரதத்தின் மீதிருந்த பெருவிருப்பின் காரணத்தால் ’’சந்தனுபரீக்‌ஷித்’’ என்று அவனுக்கு பெயரிட்டாலும் ,கல்லூரியில் மட்டுமே அவன் அப்பெயரால் அழைக்கப்படுகிறான் நாங்கள் அனைவருமே அபியென்றே அழைக்கிறோம் அவனை

எனவே, அபியென்னும் தலைப்பில்  கவரப்பட்டு இன்று பின் மதியம்  வாசிக்கத்துவங்கினேன். பலத்த மழைக்கான ஆயத்தங்களுடன் வானிலையும் நல்ல குளிரும் இருந்ததால் அதிகாலை மட்டுமே  ஒரு சிறிய  கப் காபி என்னும் வழக்கத்திற்கு விரோதமாக இன்னொரு காபியும் கலந்துகொண்டு என் பிரிய கல்மேசைக்கு எதிரில் அமர்ந்து  வாசித்தேன்.  ஒரு பகுதி வாசித்தபின்னரே இது Non linear   narrative முறையில் எழுதபட்டது என்று மனசிலானதால் மீண்டும் முதலிலிருந்து வாசித்தேன்.

அபி, அச்சு,ஸ்ரீ,சரண்  நான்கு பேரின்  கதை. அபிக்கும் அர்ச்சனாவிற்கும் இரண்டு வாய்ப்பு தந்திருந்த நீங்கள் ஏன் சரணுக்கு அளித்த  ஒரு வாய்ப்புக்கூட ஸ்ரீக்கு கொடுக்கவில்லை என தெரியவில்லை. ஸ்ரீயின் பார்வையிலும் ஒரு பகுதி இருந்திருக்கலாம். மனைவியின் அலைபேசியை சோதிக்காத கணவர்களே இல்லாத உலகம் போலும் இது, எனினும் ஸ்ரீ குறித்து offensive  ஆக ஏதும் இல்லை இந்தக்கதையில்.  பயிற்றுவிக்கப்பட்ட கண்ணியத்துடனான நல்ல கணவன்,  மனைவியின்  extra marital affair  குறித்து தெரிந்ததும் விலகிக்கொள்கிறான் அவ்வளவே இல்லையா?

ஆனால் ஒரு பெண்ணாக எனக்கு இதில் ஸ்ரீயின் கோணம் என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலிருந்தது. இதுபோன்ற தாம்பத்தியத்தை தாண்டின மீறின உறவுகள் மிக வெளிப்படையாக அதிகம் தெரியவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில்,  இதற்கு பெரும்பாலும் பெண்களின் அடங்காமை அல்லது அதீத பாலுறவு நாட்டமே காரணமாய் சித்தரிக்கப்படுகின்றது. நல்ல துணையொன்றிற்கான தேடல் பெண்களுக்கும் இருக்குமல்லவா? மேலும், பாலுறவைத்தாண்டிய சந்தோஷங்களை அறிந்துகொண்ட பெண்களும் இருக்கிறார்கள்

வேலிதாண்டுவதென்பது ஆண்களின் பிறப்புரிமை யாகவும் , நடத்தை கெட்ட பெண்களே எல்லைகளைத் தாண்டுவார்கள் என்பதுமே காலம் காலமாக நிலவிக்கொண்டிருக்கிறது இங்கு. நடத்தை, அதிலும் நல்ல நடத்தை என்பதற்கான  standardization   யார் நிறுவியது?

Arranged  திருமணங்கள்,  இனிமேல் அவனும் அவளும் ஒரே கூரையின் கீழ் ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழ்வதற்கான ஒரு ஏற்பாடு , ஒரு ஒப்பந்தம் அவ்வளவே! பலருக்கு மணவாழ்வை பாதி முடித்தபின்னரே தனக்கு  எல்லாவிதத்திலும் இணையான, காதலும் சாத்தியமாகும் ஒருவரைச்சந்திக்கும் வாய்ப்பே வருகின்றது. முன்பைப்போலில்லாமல் இப்போது அப்படியான வாய்ப்புகளை பலரும் உபயோகப்படுத்தியும் கொள்கிறார்கள்.  காலம் மாறிக்கொண்டிருக்கையில் அதற்கேற்றபடி வாழ்வுமுறையும்  பெருமளவில் மாறிக்கொண்டிருக்கின்றது அப்படியான மாற்றமொன்றினை இலகுவாக ஆர்ப்பாட்டமின்றி சொல்லும் கதையே இது

ஜெ அவர்கள் இப்போது  ஊட்டி முகாமில் கூட சொல்லிக்கொண்டிருந்ததுபோல, ஒரு நல்ல கதை அல்லது நல்ல கவிதையை வாசித்து முடித்ததும் ஓகே   so what ?  என்று வாசகன் கேட்காதபடிக்கு இருக்கணும் அது. அபி ஸ்ரீயின் மனைவி அவளுக்கு சரணுடன் கூடுதல் நட்பு இதை தோழி அர்ச்சனாவும் அறிவாள் கணவனுக்கு தெரிந்து அவன் விலகிவிடுகிறான்,  so what?  என்று கேட்டிருக்கலாம் இதை linear  கதையாக எழுதி இருந்தீர்களென்றால்.

ஆனால் இக்கதையை இப்படி கதாபாத்திரங்களின் கோணங்களில்  மாற்றி மாற்றி வாசிக்கையில்,  அது ஏற்படுத்தும் பாதிப்பே இதன் வெற்றி

அதில் வரும் பல நிகழ்வுகளை  என் சொந்த வாழ்வுடன் தொடர்பு படுத்திக்கொண்டேன், கதை முடிந்தபின்னர் மழை துவங்கியதால் கொடியில் உலர்ந்துகொண்டிருந்த துணிகளை வாரிக்கொண்டுவருகையிலும்  தோழியை பேருந்தில் ஏற்றிவிட சென்ற சரணைக்காணோமென்று காத்திருக்கையிலும், கதையை உள்மனசு அசைபோட்டுக்கொண்டே இருந்தது

அர்ச்சனாவின் தோழமை அருமை கணவருடன் கொஞ்சிக்கொண்டிருந்துவிட்டு பிரிவுத்துயரில் கண்ணீர் விடும் அபிக்கும் ஆறுதல் அளிக்கிறாள், அலுவலகத்தில் புதிய நட்பை முன்பே யூகித்தும் தடையோ , பாக்கியராஜ் கதைகளில் வரும் பெரிய கண்ணாடி போட்டுக்கொண்டு வரும்  முதிர்கன்னியைப்போல புத்திமதியோ சொல்லாமல் அப்பொழுதும் உடனிருக்கிறாள்.  இந்த நேர்மறைத்தோழமை என்னவோ ஆறுதலாக இருந்தது ஏறக்குறைய அபியின் மனச்சாட்சியைபோல அச்சுவின் பாத்திரம் அர்ச்சனாவைப்போல இதை ஆரம்பத்திலிருந்து கவனித்தும், ஸ்ரீயுடனான உறவிலும் சரணுடனான உறவிலும் இரண்டுபேரும் இல்லாத பொழுதிலும் உடனிருக்கும் தோழமை நிஜத்தில் யாருக்கும் கிடைபதில்லை.

சரணின் முகம் இறுகியிருந்ததைத்தவிர வேறேதும் சொல்லாமலேயே அவன் என்ன சொல்லியிருப்பானென்று வாசகர்களை யூகிக்க வைத்ததும் அருமை

அபி இறுதியில்  ’இருக்கட்டும் ஒரு சேஃப்டிக்கு’ என்னுமிடத்தில் நானும் புன்னகைத்தேன்

சரண் வந்து எனக்கும் அவனுக்குமாக சிற்றுண்டி சமையலறையில் தயாரித்துக்கொண்டிருந்தான், இந்த கதையை கூடத்திலிருந்து  இன்னொரு முறை வாசித்து  HBO channel  ஐப்போல  suitably modified version  ஆக அவனுக்கும் சிலவற்றை மட்டும் கத்தரித்துவிட்டு சொல்லிக்கொண்டிருந்தேன். சரண் என்னும் பெயரைக்கேட்டதும் நான் வேண்டுமென்றே  அந்தப்பெயரைச்சொல்கிறேன்  என்றெண்ணிக்கொண்டான். வந்து வாசித்து ஊர்ஜிதம் பண்ணிவிட்டே மீண்டும் சமையலறைக்கு  போனான்

முழுக்க கேட்டு முடித்ததும்  எங்கள் வீட்டுக்குப்பின் வீட்டிலிருக்கும் கவிதாவின் இதுபோன்றதொரு சிறு மீறலுடனான வாழ்வொன்றினைக்குறித்து அவன் இக்கதையை  relate  பண்ணி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தான். அவனின் இந்த மனமுதிர்ச்சியையையும் இக்கதை அவனைபோன்ற பதின்பருவத்திலிருக்கும் இளைஞர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்குமென்பதையும்  நான் எதிர்பார்க்கவேயில்லை

இறுதியாக இன்னுமொன்று, சுரேஷ் எழுதுகிறான் என்று முகப்பில் வாசித்தாலும் கதையில் எங்கும் சுரேஷை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. இக்கதை சுரேஷின் முந்தைய எந்தக்கதையையும் நினைவூட்டவில்லை எந்த வரியிலும்  சுரேஷின் ஸ்டைல் என்று ஒன்றை அடையாளம் காணவும் முடியவில்லை முழுக்க வேறாகவே இருக்கின்றது இவரின் ஒவ்வொரு கதையும்

எப்போதுமே விரிவாகவே எழுதுபவள் நான் என்பதால் இக்கதையினைக்குறித்து மட்டும் எதிர்வினையாற்றாமல்  பலதையும் நினைவுக்கு கொண்டு வரும் கதையாகிவிட்டபடியால் இன்னுமே இதன் நீளம் அதிகமாகிவிட்டது

எப்போதும் நினைவிலிருக்கும் கதைகளில் ஒன்று அபி, நன்றி சுரேஷ்