நேற்று கோவை சென்றிருந்தேன். சரணையும் தருணையும் கல்லூரியிலிருந்தும் பள்ளியிலிருந்தும்அழைத்துக்கொண்டு வழக்கமான கோவை சுற்றல்கள். மாலையில் மென்தூரலாய் மழை இருக்கையில் மகன்களை அவரவர் விடுதிகளில் சேர்ப்பித்துவிட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன். மதிய உணவை மாதவன் இளங்கோ மற்றும் அவரது நண்பர்கள் துவங்கியுள்ள ப்ரோ’டா-Bro’Taa என்னும் புதிய உணவகத்தில் சாப்பிட்ட அனுபவங்களை நாளைக்கு எழுதலாம் என்று ஒத்திப்போடமுடியாமல் இப்போதே எழுதிவிட்டு உறங்கச்செல்கிறேன். அத்தனைக்கு சிறப்பானதொரு அனுபவமாக இருந்தது.
வழக்கமாக தருணின் ‘day out’ நாட்களின் போது திரைப்படங்களுக்கு செல்லுவோம் இன்று அதைத்தவிர்த்து மாதவன் மாமாவின் உணவகத்துக்கே போகலாமென்று ஏகமனதாக முடிவெடுத்தோம். எற்கனவே இதுகுறித்து மகன்களிடம் அலைபேசுகையில் சொல்லியுமிருந்தேன். காந்திபுரத்திலிருந்து கணபதி செல்லும்போது உணவகத்தை அலைபேசியில் சரண் அழைத்து சரியான அமைவிடம் கேட்டுக்கொண்டான். பொறுமையாக சரியாக அன்னபூர்ணாவின் அருகில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் மேற்புறம் என்று பதிலளித்தார்கள்.
சரணுக்கு உடனே கவலை தொற்றிக்கொண்டது அன்னபூர்ணா பெரிய போட்டியாளர்களாச்சே, இத்தனை அருகிலேயே இருக்காங்களே என்று. பின்னர் அவனே சமாதானமாக அசைவமும் இருக்கில்லையா அப்போ போட்டின்னு சொல்லிறமுடியாது என்றான்
வழியை அத்தனை விசாரித்தும், உணவகத்தை கடந்து சற்று தூரம் சென்றுவிட்டு பின்னர் மீள கூகிளாண்டவரின் உதவியால் வந்துசேர்ந்து. பக்கவாட்டில் இருந்த படிகளின் வழியே மேலேறிச்சென்றோம். படிகளின் பக்கச்சுவற்றில் புதிகாக அடர் ஆரஞ்சு வர்ணமடித்திருந்ததால் வாசனையாக இருந்தது. வர்ணம் பொருத்தமாகவும் இருந்தது. எனக்கு எப்போதும் ஆரஞ்சுநிறம் சமையலை, உணவை நினைவூட்டும். தீப்பிழம்பின் நிறமாதலாலோ என்னவோ.
முகப்பிலேயே நீளவாக்கிலான, சிறிய ஆனால் கச்சிதமான ஒரு வரவேற்பறை. நேர்த்தியாக நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தன. அறிவிப்புப்பலகையின்றில் ’’வரவேற்கிறோம் புரோ’டாவிற்கு’’ என்றெழுதியிருந்தது.
உள் நுழைந்ததும் நல்ல pleasant feel வரும்படியான அமைப்பிருந்தது. நாற்காலிகளும் மேசைகளும் அடர் காப்பிக்கொட்டை நிறத்தில் , மேசையின் கால்கள் வித்தியாசமான வளைவுவடிவத்தில். நடமாடும்/புழங்கும் இடம் தாராளமாக செளகரியமாக விடப்பட்டு மிகச்சரியாக இருந்தது எல்லாம். சுவரோரமாக அமர்ந்தோம். அங்கே பணியில் பொள்ளாச்சி ஸ்லேவ்ஸில் எனக்கு அறிமுகமாயிருந்த ஹரீஷ் என்னும் இளைஞனிருந்தான், அவனை இளைஞன் என்று சொல்வதே பிழை என்னும்படிக்கு சிலவருடங்களாகவே பார்த்துக்கொண்டிருந்தும் சற்றும் மாறாமல் சிறுவனின் தோற்றமுடையவனாகவே இருக்கிறான். தோழிகளுடன் எப்போது ஸ்லேவ்ஸ் சென்றாலும் அவனை அவதானித்திருக்கிறேன். சுறுசுறுப்பும் ஆர்வமும் துடிப்பும் உள்ளவன். பிரகாசமான கண்களுடன் பணிவு நிரம்பிய உடல்மொழியுடன், தோழமையுடன், புன்னைகையுடன் இருக்கும ஹரீஷ் போன்றவர்கள் எந்த நிறுவனத்திலும் பெரும் சொத்தென நான் நினைத்துக்கொள்ளுவேன்
சுவரோரம் இருக்கும் ஒரு மேசையை தேர்ந்தெடுத்து அமர்ந்து தண்ணீர் குடித்தோம். அழகிய பித்தளைக் கைப்பிடியுடனான ஜாடியில் தண்ணீர். அதை ஜாடி என்று சொன்னதும் jug அல்ல அது pitcher என்று சின்னவன் திருத்தினான். ஆம் பின்னரே கவனித்தேன் சரிதான்.
வரெவேற்பு குளிர்பானம் அளிக்கப்பட்டது. நன்னாரி வாசனையுடன், குளிர்ச்சி நேரடியாக மூளையை கூசவைக்கும்படி இல்லாமல் மிதமாக வெய்யிலில் அலைந்துவந்தவர்களுக்கு குடிக்க ஏதுவாக இருந்தது. மெனு அட்டையை கைகளில் கொடுத்தபின்னர் பணியாளார்கள். விருப்பமிருந்தால் கன்வேயரில் வரும் துவக்க உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளலாமென்று தெரிவித்தார்கள். அந்த ’தெரிவித்தலை’ மிகச்சரியாக செய்தார்கள். கன்வேயரின் உணவுகளை எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்தவில்லை. கூடுதலாக விளக்கம் சொல்லி அழுத்தமும் தரவில்லை. ஆர்வமூட்டும்படி மிகைப்படுத்தவுமில்லை. ஒரு புதிய விஷயம் இருக்கின்றது, தேவையெனில் விரும்பினால் செய்யலாம் என்னும் தொனியில் அழகாக சொன்னார்கள்.
உடன் கன்வெயரின் அருகிலிருக்கும் மேசைக்கு மாறினோம். பின்னர் உணவுகளின் வகைகள், அவை வைக்கபட்டிருக்கும் தட்டுக்களின் நிறங்களைப் பொருத்து சைவம் அசைவம் என அவை வேறுபடுவது இவறையெல்லாம் விளக்கி, அவறிறின் விலை விபரங்கள் பிரசுரமாயிருக்கும் பக்கத்தை மெனுஅட்டையில் சுட்டிக்காட்டிவிட்டு சென்றனர். ஆர்வமாக வேண்டியதை எடுத்துக்கொண்டோம்
உண்மையிலேயே அனைத்தும் சுவையாக, சிறப்பாக இருந்தன. பிரதான உணவுகளைக்காட்டிலும் துவக்க உணவுகளையே தொடுகறிகளாகவும் எண்ணியபடி அதிகம் எடுத்துக்கொண்டிருந்தோம். விலையும் worth paying எனும் உணர்வையே அளித்தது.
வழக்கமாக ஒரு முறை ஆர்டர் செய்து வாங்கும் ஒரு உணவை பிடித்திருந்தாலும் இல்லையெனினும் பெரிய கிண்ணங்களில் அளிக்கப்படுவதை அனைவரும் பகிர்ந்துகொண்டே இத்தனை வருடங்களாக சாப்பிட்டிருக்கிறோம். இங்கு கன்வேயரில் வந்ததைப்போல போதுமான ‘proper size of a single serve’’ என்று சொல்லும்படி சிறிய தட்டுக்களில் பல வகைகளை அளவாக ருசிக்கும்போது வயிற்றுடன் மனதுக்கும் நிறைவளிக்குமொன்றாகவே இருந்தது. வரிசையாக எங்களைக்கடக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்ட அனுபவம் மிகவும் விரும்பத்தக்கதாகவும் இருந்தது.
மிகப்பிடித்தவற்றை மீண்டும் கேட்டு வாங்கினோம். வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தட்டுக்களின் வண்ணங்களையும் எண்ணிக்கைகளையும் கொண்டு செலுத்தவேண்டிய தொகையை கணக்கிடுவார்கள் என்பதை புரிந்துகொண்டோம். மகன்கள் கேட்ட வீச்சு மற்றும் நாணய பரோட்டாக்களும் எனக்கான தயிர்சாதமும், பிற மெனுஅட்டையிலிருந்த கேட்டுக்கொண்ட அனைத்துமே வந்தன. எதையுமே இல்லையென்று சொல்லவில்லை. அனைவரும் மகிழ்ந்து உணவுண்டோம். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்
பணியாளர்கள் மரியதையான தூரத்தில், ஆனால் அழைத்தால் உடன் வரும் இடத்தில் நின்றபடி காத்திருந்து உதவினார்கள். அசைவம், முட்டை இரண்டுமே சாப்பிடாத மகனுக்கு 2 நிமிடங்களில் பீன்ஸ் வெட்டிப்போட்ட ஒரு குழம்பு கொண்டு வந்து தந்தார்கள்,
ஒன்றே ஒன்று மட்டும் வருத்தமளித்தது. இனிப்பு உண்பதில்லை என்று கட்டுப்பாட்டுடன் கொஞ்சநாளாக இருந்தேன். கையருகில் மெல்ல நீந்துவது போல வந்துகொண்டிருந்த கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்த கவர்ச்சியான கஸ்டர்டை எல்லாக்கட்டுப்பாடுகளையும் நிமிஷமாய் மறந்து எடுத்துக்கொண்டேன். இனிப்புக்களை ஆர்டர் செய்து சாப்பிடாமல் இருப்பதும், வேண்டுமா என கேட்கையில் மறுப்பதும் மிக எளிது. இப்படி மெதுவாக அழகாக கையருகில் கைக்குழந்தை நீந்துவது போல சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்குமொன்றை எப்படித்தான் வேண்டாமென்று சொல்வது?
எனவே இப்போதுதான் மறையத்துவங்கியிருந்த அந்த குண்டம்மா மீண்டும் கண்ணாடியில் தெரிந்தால் அந்தப்பாவம் மாதவன் இளங்கோவையே சேரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
.
Leave a Reply