AGS எண்டர்டயின்மெண்ட் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் அட்லீ விஜய் கூட்டணியில் (மூன்றாவதாக), இந்த மாதம், அக்டோபர் 2019, தீபாவளி ரிலீஸ் திரைப்படமாக உலகெங்கிலும் வெளியானது ‘’பிகில்’’. இசை ரஹ்மான், இசைக் கூட்டணியும் மூன்றாவது முறை, நாயகி நயன்தாரா.
இந்நாள் ரவுடியும் முன்னாள் கால்பந்தாட்ட வீரருமான மைக்கேல் ராயப்பன், அவரின் காதலி ஏஞ்சல், நண்பரும் பெண்களின் கால்பந்தட்ட பயிற்சியளருமான கதிர், மைக்கேலின் எதிரி டேனியல் என்று கதை துவங்கி, கதிருக்கு டேனியலினால் முதுகெலும்பு முறிந்ததால் 7 வருடத்திற்கு முந்தைய மைக்கேலின் ஃப்ளேஷ் பேக்’கிற்கு நகர்கின்றது
ரவுடி ராயப்பனின் மகன் மைக்கேலும் நண்பன் கதிரும் கால்பந்தாட்ட வீரர்கள். மகன் தன்னைபோலல்லாமல் நல்ல விளையாட்டு வீரராக வர விரும்பும் அப்பா ராயப்பன் ரவுடி அலெக்ஸினால் மகன் கண்முன்னாலேயே கொல்லப்படுகிறார். பழிக்கு பழி வாங்க கால்பந்தட்ட கனவை மறந்து ரவுடியாகி, பின்னர் மீண்டும் கால்பந்தாட்டத் துறைக்கே பயிற்சியாளராகிறார் பிகில் என்றழைக்கப்படும் மைக்கேல்
நட்புக்காக மைக்கேல் பயிற்சியாளராவது, ஷர்மா அவரை பழி வாங்குவது, குற்றப்பிண்ணனி உள்ள விஜயை ஆட்சேபித்து, வெறுத்து பயிற்சிக்கு உடன்பட மறுக்கும் விளையாட்டு வீராங்கனைகள், கொலை முயற்சி அடிதடி, கடத்தல், கொக்கைன், அமில வீச்சு , கால்பந்தாட்ட விளையாட்டில் மைக்கேலின் அணி வெற்றி பெறாமல் இருக்க நடக்கும் உள்ளடி வேலைகள் என்று ஏராளம் பிரச்சனைகளுடனும் எளிதாக யூகிக்க முடியும் அரதப்பழசான திருப்பங்களுடனும் படம் நகர்கின்றது.
துவக்க காட்சியிலேயே விஜய் ’’தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா’’ என்று சொல்ல அரங்கம் ரசிகர்களின் கூச்சலில் அதிர்கின்றது.
ஏறத்தாழ 3 மணிநேர நீளமுள்ள இத்திரைப்படத்தில் எந்த கணக்குமின்றி திரைக்கதை துண்டு துண்டாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான முந்தைய தமிழ் மற்றும் பிறமொழிப் படங்களிலிருந்து காட்சிகளை அப்பட்டமாக நினைவூட்டும், நிறைய லாஜிக் ஓட்டைகளும் இருக்கும் திரைக்கதை. பாதிக்குமேல் பாட்ஷாவின் ரீமேக் என்றே சொல்லிவிடலாம் அதில் முன்பு ரவுடியாக இருந்து ஆட்டோ ஒட்டுவார் இதில் பின்னர் ரவுடி, ஆட்டாவுக்கு பதில் கால்பந்தாட்டம் அவ்வளவுதான்.
ஏஞ்சலாக .நயன் தாராவுக்கு அழகாய் திரையில் தோன்றுவதைத்தவிர வேறு வேலையே இல்லை. ’’நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ, போ, போ’’ என்று பாடாத குறையாக விஜயுடன் கூடவே வந்து கொண்டிருக்கிறார்
ஜாக்கி ஷெராஃப் ஷர்மாவாக சோபிக்கவேயில்லை. தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத அம்சங்களில் ஒன்றாகிவிட்டிருக்கும் யோகிபாபுவும் இருக்கிறார்.
90 களில் இந்தியாவின் புகழ்பெற கால்பந்தாட்ட வீரராக இருந்த அர்ஜுனா விருது பெற்ற கேரளாவைச் சேர்ந்த திரு I M விஜயனை (Inivalappil Mani Vijayan), பிகிலில் வில்லனாக நடிக்க வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து உலகப்புகழ்பெற்ற விளையாட்டு வீரராக இருக்கும் ஒருவரை இப்படியா எதிர்மறையாக திரையில் சித்தரிப்பது? அதுவும் அவர் ஈடுபட்டிருந்த அதே விளையாட்டுத்துறையை சார்ந்த திரைக்கதையில்?
30 மணி நேரத்தில் சொல்ல வேண்டிய விஷயங்களை 3 மணிநேரத்தில் கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையை திணிப்பதென்பார்களே அப்படித் திணிக்கிறார் அட்லீ. வேலுநாயக்கரை, பாட்ஷாவை, அமீர்கானை ஏன் சிவகார்த்திகேயனைக்கூட நினைவுக்கு கொண்டு வரும் காட்சிகள் ஏராளம்.. பல காட்சிகளில் வசனங்களும் பெண்கள் அணியின் பயிற்சியாளருக்கானதாக இல்லாமல் விஜய் என்னும் அரசியல் உத்தேசம் உள்ள நடிகருக்கானவையாகவே இருப்பதும் ஆதங்கமாக இருக்கிறது.. விஜயை தமிழகத்தின் தன்னிகரில்லா தனிப்பெரும்தலைவனாக காட்ட நினைத்திருக்கிறார் அட்லீ.
விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த அறிமுகப்பாடல், சண்டை, கால்பந்து விளையாட்டு என அடுக்கிக்கொண்டே போகும் காட்சிகளால் முன்பாதி இழுவை , அறுவை மற்றும் ஓவர் டோஸ். பின்பாதியில் கால்பந்தட்ட போட்டிகளின் விறுவிறுப்பு மட்டுமே கதையை தாங்கிப்பிடித்து கரைசேர்க்கின்றது.
கடந்த ஜூன் மாதம் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு மெதுமெதுவே இரட்டை வேடமென்பதையும் நள்ளிரவில் விஜயின் பிகிலுக்கான தோற்றமென்னவென்பதையும் அறித்தபோது எழுந்த ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கைக்கூட திரைப்படம் முழுதாய் பார்க்கும் போது ஏற்படுத்தவில்லை
படத்தின் ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பு முற்றிலும் அணைந்தேவிட்டது படம் பார்க்கையில். முதல்பாதியிலியே. லாஜிக் மீறலின் எல்லைகளை தாண்டிய ஹீரோயிசம் செய்கிறார் விஜய். காவல் நிலையத்தில் குண்டு வைப்பது முதலமைச்சர் வரும் வழியில் தகராறு என . இவற்றை எல்லாம் ரசிகர்கள் கொண்டாடி கூச்சலிடுவதை பார்க்கையில் திகிலாயிருக்கிறது..
இத்திரைப்படம் காட்சி ஊடகம் என்பதையே படக்குழுவினர் மறந்தது போல பல விஷயங்கள் காட்டப்படுவதற்குப்பதில் சொல்லப்படுவது எரிச்சலைத்தருகின்றது. பாடல்களில் ’சிங்கப்பெண்ணே’ பரவாயில்லை. ரஹ்மானும் அட்லியும் சிறப்புத்தோற்றத்தில் வருகிறார்கள்
விஜய், இந்தப்படத்திற்கும் இத்தனை வசூலை அள்ளிக்கொடுத்திருக்கும், திரையில் விஜயின் தோற்றத்திற்கே வெறிக்கூச்சலிடும் ரசிகர்களுக்கு இன்னும் கவனமாக கதையை தேர்வு செய்திருக்கலாம். பண்டிகைக்காலங்களில் புதிய திரைப்படங்களை பார்ப்பதென்பது முக்கால் நூற்றாண்டாக தமிழகத்தில் ஒரு மரபாகிவிட்டிருக்கையில் தீபாவளீ ரிலீஸ் படமான இதில் 63 படங்களில் நடித்திருக்கும் விஜய் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்
நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் விவேக், ரோஹினி, தேவதர்ஷிணி, போன்ற தேர்ந்த முக்கிய நடிக, நடிகையர்களும் கூட இதில் சில காட்சிகளில் மட்டும் வந்து வீணடிக்கபட்டிருக்கிறார்கள். படத்தின் ஒரே ஆறுதல் விஜய் மட்டுமே! முன்னை விட இள்மையாக முன்னை விட துடிப்புடன் இருக்கிறார்.
அப்பா கெட்டப்பில் உப்பும் மிளகுமான தலைமுடியில் வந்தாலும் இளமையையும் மிடுக்கையும் ஸ்டைலையும் மறைக்க முடியவில்லை ஒப்பனையாலும். ஆச்சர்யம் ! நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளிலும் அதே வேகமும் ஸ்டைலும்
G.K விஷ்னுவின் ஒளிப்பதிவுக்கு பாராட்டுக்களை சொல்லியே ஆகவேண்டும் . அனல் அரசுவும் சண்டைக்காட்சிகளை திருப்தியாகவே அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு திணறியிருக்கிறது .
முதன்முதலாக எகிப்தில் திரையிடப்படும் தமிழ்த்திரைப்படமாகிறது பிகில். இரண்டே நாட்களில் ஒரு கோடியே 85 லட்சங்களை தாண்டி சாதனை வசூல் படைத்து ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையினரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது
விஜய் படம் எப்படி இருப்பினும் திரையில் அவரை பார்த்தாலே போதும் என படத்தை கொண்டாடி வசுலை அள்ளிகுவிக்கும் ரசிகப்பட்டாளங்களுக்காகவாவது இன்னும் கவனமாக நன்றாக பிகிலை ஊதியிருக்கலாம்
Leave a Reply