வானம் கொட்டட்டும்
பிப்ரவரி 7 , 2020ல் தேதி உலகெங்கிலும் ரிலீஸானது வானம் கொட்டட்டும்.. இயக்குனர் காற்றுவெளியிடையில் மணிரத்தினத்திடம் உதவியாளராயிருந்த படைவீரன் தனா. திரைக்கதையை தனாவும் மணிரத்தினமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர். மணிரத்னத்தின் மெட்ரஸ் டாக்கீஸுடன் லைக்கா அல்லிராஜா சுபாஷ்கரனும் இணைந்து தயாரித்துள்ளனர்
வெகு எளிமையான, தமிழ்த்திரையுலகிற்கு மிகப்பரிச்சயமான வெட்டுப்பழி குத்துப்பழி கதைதான். சட்டென வந்த ஒரு கோபத்தில் அண்ணனை வெட்டியவர்களை, பிள்ளைகளின் முன்னிலையிலேயே வெட்டிச்சாய்த்துவிடுகிறார் சரத். அதுவும். இரட்டைப்பிள்ளைகளின் முன்னால். கொலைக்குற்றத்துக்காக சரத் சிறைக்குச் சென்ற பின்னர் மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து படாதபாடுபட்டு குழந்தைகளை வளர்க்கிறார் ராதிகா. எதிர்த்தரப்பிலோ, இறந்தவரின் இரட்டைப்பிள்ளைகளில், ஒருவன் கோபமாகவும் இன்னொருவன் பழியுணர்வுடனும் வளர்கிறார்கள்.
சிறைக்கு சென்ற சரத் திரும்ப வருகையில் மகன் மகளுக்கும் அவருக்குமிடையேயான இடைவெளி அதிகமாவது, அவரின் இருப்பு குழந்தைகளுக்கு சங்கடமாக இருப்பது, வாழ்வின் இயங்கியலில் வழக்கமாக ஏற்படும் மனஸ்தாபங்கள், கோபதாபங்கள், சண்டைகள் என முட்டிமோதி, அந்த மோதலிலேயெ ஒருவரை ஒருவர் புரிந்து, அறிந்து இணங்கி, மீண்டும் அவர்கள் ஒரு குடும்பமாவது, அவரைக்கொல்ல காத்திருக்கும் இரட்டையரில் ஒரு நந்தா, சகோதரன் அவரைக்கொல்லாமல் தடுக்க நினைக்கும் இன்னொரு நந்தா, தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷின் காதல், அவளை விரும்பும் உறவினரான திரையில் கொஞ்சநேரமே வரும் (அந்த கொஞ்சநேரத்திலும் பைக்கிலேயே வரும்) சந்தனு பாக்கியராஜ், ஐஸ்வர்யாவை விரும்பும் இன்னோரு காதலன், (வேலையில்லா பட்டதாரி இளம்வில்லன்) அப்பாவைப்போலவே கோபக்கார விக்ரம் பிரபு, அவரின் வாழைத்தார் மண்டி வியாபாரம் அதன் பிரச்சனைகள், இறுதி சண்டைக்காட்சி பின்னர் சுபம்.
இது விக்ரம்பிரபுவுக்கு நல்ல பாத்திரம் கொடுத்தால் அருமையாக நடிப்பார் என்று சொல்லும் படமும் கூட
ஆக்ரோஷமாக அடிதடியில் இறங்குகையிலும், அப்பாவுடன் முறைத்துக்கொள்ளும்போதும், பல காட்சிகளில் உடல்மொழியிலும் கூட அக்னிநட்சத்திரம் கார்த்திக்கை நினைவூட்டுகிறார். ஆனால் படம் முழுவதுமே முகத்தில் கோபம் நிறைந்து சீரியஸாக விறைப்பாகவே இருக்கிறார். காதலியுடன் நெருக்கமாக இருக்கும் அந்த ஒற்றைக்காட்சியிலும் கூட அப்படித்தான். கொஞ்சம் சிரிங்க பாஸ் இனிவரும் படங்களில்.
மடோனா செபாஸ்டியன் மட்டுமே எந்த வேலையும் இன்றி சம்பந்தமில்லாமல் அப்பா பிசினஸ், இன்கம் டேக்ஸ், கடன், குடி என்று குழப்பியடித்து எப்படியோ விக்ரம்பிரபு காதலித்ததும் (அதாவது அப்பா இறந்த அன்று இரவு விக்ரம் பிரபு மடோனாவை மெல்ல அணைத்துக்கொள்வதை காதலென்று நாம் எடுத்துக்கொண்டால்) அவர் பாத்திரத்துக்கு முற்றும் போடப்படுகின்றது. காதலி இல்லாமலும் விக்ரம் பிரபுவின் பாத்திரம் நன்றாக பேசப்பட்டிருக்கும்
ஐஸ்வர்யா ராஜேஷ் வசீகரம். இயல்பாக பொருந்தி நடிக்கிறார். சமீபத்திய படங்களை பார்க்கையில் இவர் தமிழ்சினிமாக்களில் நிரந்தர தங்கச்சியாகிவிடும் அபாயம் தெரிகின்றது. பாலாஜி சக்திவேல் பிரமாதம். நல்ல குணசித்திர நடிகரராக அசத்தியிருக்கிறார்.
ராதிகா, சரத்குமார் மிகப்பிரமாதமான ஜோடி. அவர்கள் சந்திக்கும் உணர்வுமயமான காட்சிகளிலெல்லாம் பிண்ணனியில் வரும் ’’ கண்ணு, தங்கம் ராசாத்தி” பாடல் மனதைஉருக்குகின்றது. அது ஒன்றுதான் படத்தில் உருப்படியான பாடலும் கூட
சித்ஸ்ரீராம் அறிமுக இசைஇயக்குனர், ஆனால் பாடல்களில் மட்டுமல்ல பிண்ணனி இசையிலும் ஏமாற்றமளிக்கிறார்.
எளிய பழைய கதை ஆனால் தனாவின் இயக்கத்தில் பல காட்சிகள் குறிப்பிட்டுசொல்லும்படியாக இருக்கின்றது. திரையரங்கில் தன்னை கண்டிக்கும் சரத்தை ஐஸ்வர்யா ”அப்பா”வென முதன்முதலில் அழைப்பது, அப்பாவின் சட்டையில் மகன் பணம் வைப்பது, மழைநாளில் குடையுடன் அப்பாவைத்தேடி அம்மா கிளம்புகையில் தடுத்துவிட்டு மகன் போவது வாழைத்தாரின் கைப்பகுதியை சீவி அதில் கணக்கை பேனாவால் எழுதுவது, பெரியப்பா வாங்கி வந்த முறுக்கு பாக்கட்டை அப்போதே ஐஸ்வர்யா பல்லில்கடித்து திறப்பது, கொலைக்குப்பிறகு ரத்தக்கறைச் சட்டையுடன் இருக்கும் சரத் ராதிகாவிடம் கோவிலில் பேசிக்கொண்டிருக்கையில் பிண்ணனியில் தெரியும் நேர்த்திக்கடன் மரத்தொட்டில், கம்பிக்கு வெளியில் மனைவியை பார்க்கும் சரத்தின் உணர்வுபூர்வமான் நடிப்பு, வானம் கொட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாலையில் வாழைக்காய் பாரமேற்றிய லாரியின் மேல் அமர்ந்து சரத் வரும் காட்சி, ஒரே பாடலில் அண்ணாமலையைபோல் பணக்காரராகாமல் கஷ்டப்பட்டு படிப்படியாக விக்ரம் பிரபு வாழைமண்டி வியாபாரத்தில் முன்னுக்கு வருவது என்று தனா பல எளிய, இயல்பான அழகிய இடங்களில் நம்மை கவனிக்க வைக்கிறார்.
விக்ரம் பிரபு வெகுநாட்களுக்கு பிறகு மிக நன்றாக பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் படம் இது.
அபியும் நானும்புகழ் பிரீதா ஜயராமன் ஒளி இயக்குனர் ஒளிப்பதிவு மணிரத்தினம் படத்திற்கேயானது. மலையடிவார கிராமத்தில் துவங்கிய கதைக்களம் சென்னையிலும் தொடர்கின்றது உயிரோட்டத்துடன்
ராதிகா சென்னையில் தங்கியிருக்கும், குடியிருப்பு வளாகம், சந்துகள், எதிரில் ஓடிவந்து மோதும் குழந்தைகள், குதூகலித்துக்கொண்டு கன்றுக்குட்டிபோல் துள்ளித்திரியும், விளையாட்டாய் சிகரட் கூட பிடித்துப் பார்த்திருக்கும் ஐஸ்வர்யா, மர்மமான குடும்பப்பிண்ணனி கொண்ட கதாநாயகி, முறுக்கிகொண்டே விரைப்பாகத் திரியும் நாயகன் என மணிரத்தினம் தயாரிக்கும் படத்தின் எல்லா அம்சங்களும் இதிலும் இருக்கின்றது காதலர்களின் நெருக்கமான காட்சிகள் நீங்கலாக.
சரத் கம்பீரம் குறையாமல் அப்படியே இருக்கிறார். ராதிகாவும் அழகு, அவருக்கு வயதானாலும் அவரின் கொஞ்சும் குரல் என்றென்றும் இளமையுடன் அப்படியே இருக்கிறது. இவர்கள் இருவரையும் இன்னும் கொஞ்சம் மையப்படுத்தி திரைக்கதையை கொண்டுபோயிருந்தால் திரைப்படம் இன்னும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும், கதாபாத்திரங்களின் எண்ணிக்கையையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம், தெலுங்கு பண்ணையார் அவரது குடும்பத்தினர், அவரது மகனான இன்னொரு காதலன் என்று, ஒரே கூட்டமாக இருக்கின்றது திரையில்.
சரத்தின் அண்ணன் உழுதவயலில் வெட்டுப்பட்டு விழும் காட்சியுடன் துவங்கும் படத்தின் விறு விறுப்பு போகப்போக குறைந்து மிக மெதுவே நகருவதும் குறைதான்.
மடோனா ஏன் கதைக்குள் வந்தார்? எப்படி, ஏன் அவர் கதாபாத்திரம் முடிகின்றது, ஏன் எதற்கு அவரை விக்ரம் பிரபு காதலிக்கவேண்டும் என்ற கேள்விகளெல்லாம் அப்படி அப்படியே கிடக்கின்றது படம் முடிந்த பின்னரும்
ஒரு நந்தாவே பழிவாங்க போதுமென்றிருக்கையில் எதுக்கு இன்னொரு நந்தா?
்இப்படி ஒருசில குறைபாடுகள் இருப்பினும், பகையும் பழிவாங்கலுமான அதே பழைய கதைதான் என்றாலும் சொல்லப்பட்டிருக்கும் விதத்திலும் கதாபாத்திரத்தேர்விலும், அவர்களின் மிகபொருத்தமான நடிப்பிலும், நேர்த்தியான திரைமொழியிலும், தனாவின் இயக்கத்திலும் வானம் திருப்தியாகவே கொட்டியிருக்கின்றது. வெகுநாட்களுக்கு பின்னர் வந்திருக்கும் ஒரு குடும்பக்கதை. குடும்பத்துடன் சென்று பார்க்கலாமென்னும் படமும் கூட
வாழ்த்துக்கள் தனா!
Leave a Reply