சென்ற வருடம் அருண்மொழியுடன் ஜெயமோகன் அவர்கள் ஜப்பான் சென்று வந்த கீற்றோவியம் கட்டுரையில் அவர்களிருவருமாக பச்சைக்குழம்பாக தேநீரை அங்கு அருந்தியதை வாசித்ததிலிருந்தே ஜப்பானின் தேநீர் சடங்கு குறித்து எழுத நினைத்திருந்தேன் ஜப்பான் போனதில்லை எனினும் தேநீர் செடிகளைக் குறித்து தாவரவியல் ஆசிரியையாக தகவல்கள் சேகரிக்கத்துவங்கி இந்த சுவாரஸ்யமான சடங்கைக்குறித்தும் கற்றுத்தருகிறேன் வணிகப்பயிர்களைக் குறித்த தாவரப்பொருளாதாரப் பாடத்தில்.
கமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) எனப்படும் தேயிலைச்செடியின் ஒற்றை இலை மொக்கு மற்றும் இரண்டு குருத்து இலைகளைக் கொண்ட flush எனப்படும் தொகுதியை உலர்த்தி நீராவியில் வேகவைத்து பதப்படுத்தி உருவாக்கப்படுவதே தேயிலை. சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. சீனாவில் தோன்றிய தாவரச்சிற்றினங்களின் பெயர் சினன்சிஸ் என்றே இருக்கும்
பொதுவாக மூன்று வகை தேயிலைச் செடி வகைகள் பயிரிடப்படுகின்றன. சிறிய இலைகளைக் கொண்ட சீன வகை (கமிலியா சினென்சிஸ் சினென்சிஸ்), கொஞ்சம் பெரிய இலைகளைக் கொண்ட அசாமிய வகை (கமிலியா சினென்சிஸ் அசாமிக்கா) இவையிரண்டிற்கும் நடுவிலுள்ள கம்போட் வகை, நடுத்தர அளவுள்ள இலைகளைக் கொண்டது.
சீனாவில் 618-907ல் தாங் அரசமரபில் உலர்த்தப்பட்ட தேயிலைகளை சிறிதளவு மாவும் உப்பும் கலந்து அழுத்தி கட்டிகளாக்கபட்டு வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. கட்டிகள் பின்னர் தேவைப்படுகையில் உடைக்கப்பட்டு கொதிநீரில் இட்டு தேநீர் தயாரிக்கபட்டது.
பின்னர் சோங் மரபில் (960-1279) தான் தேயிலையை உலர்த்தி தூளாக்கி கொதிநீரில் இட்டு பானமாக தயாரிக்கத்துவங்கினார்கள். 762ல் சீன எழுத்தாளர் லூ யூவின் தேயிலை குறித்த உலகின் முதல் தேயிலை பற்றிய புத்தகம் வந்துவிட்டது (Lu Yu‘s The Classic of Tea,) அதில் தேயிலையை நீராவியில்,வேகவைத்தல், உலர்த்தித் தூளாக்குதல் கொதிநீரில் இட்டு பானமாக்குதல் பற்றிய குறிப்புக்கள் விவரமாக தரப்பட்டிருக்கும்
தேயிலையும் தேநீரும் சீனாவிலிருந்து 700களிலேயே ஜப்பானுக்குஅறிமுகமாயிருந்தாலும் அதிகம் பயன்பாட்டுக்கு வந்திருக்கவில்லை. 8 ஆம் நூற்றாண்டில் ஜப்பானிலிருந்து சீனாவுக்கு சென்ற இரு துறவிகள் சீனக்கலாச்சரத்தை பற்றி தெரிந்துகொண்டு அங்கிருந்து தேயிலைச்செடியின் விதைகளை ஜப்பானுக்கு கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. எனினும் இதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை
மாமன்னர் சாகாவின் ஆட்சியே (Saga-809-823) sinophile அதாவது சீனக்கலாசாரத்தின் மீது குறிப்பாய் சீனர்களைபோல் தேநீர் அருந்துவதிலும், தேநீர் குறிதத சீனாவின் ஏரளமான கவிதைகளை வாசிப்பதிலும் பெருவிருப்பு கொண்டிருந்த ஒன்றாகவே விவரிக்கப்படுகின்றது. அவரும் சீனாவிலிருந்து தருவித்த விதைகளைக்கொண்டு ஜப்பானில் 5 இடங்களில் தேயிலைத்தோட்டங்களை ஏற்படுத்தியதாகவும் சொல்லப்படுகின்றது. அதன்பிறகும் தேநீர் அத்தனை பிரபலமாகவில்லை. அறிமுகமான் 8 ஆம் நூற்றாண்டிலிருந்து துறவிகளும் அரசகுடும்பத்தினரும் செல்வந்தர்களுமே தேநீரை அருந்திவந்தனர்
பின்னர் கமகுரா காலத்தில் (1192-1333), ஜென் புத்தமதத்தை தோற்றுவித்தவரான துறவி எய்சை (Eisai-1141-1215) சீனாவிலிருந்து தேயிலைச்செடியின் விதைகளையும் தூளாக்கப்பட்ட தேயிலையையும் கொண்டுவந்து பச்சைத்தேநீர் தயாரிப்பதையும் தேயிலைச்சாகுபடியையும் ஜப்பானுக்கு அறிமுகபடுத்தினார். பின்னரே கியோட்டொ உள்ளிட்ட முக்கிய இடங்களில் முழுவீச்சில் தேயிலை சாகுபடி செய்யபட்டது தேயிலையின் மருத்துவ உபயோகங்களை குறித்தான இவரின் ’’ஆரோக்கிய வாழ்வுக்கான தேநீர்’’ நூல் மிகவும் பிரசித்தம். (Drink Tea and Prolong Life). இதுவே ஜப்பானில் தேநீரைக் குறித்து எழுதப்பட்ட முதல் புத்தகம் தேநீரின் மென்கசப்பு அப்போது ஜப்பானியர்களுக்கு அதிகமாக இருந்த இருதயப்பிரச்சனைகளுக்கு நல்லதீர்வாக இவரால் பரிந்துரைக்கபட்டிருந்தது.
மாருமோச்சி காலத்தில் (1333-1573), தேநீர் ஜப்பான் முழுவதுமே மிகப் பிரபலமான பானமாகியது. தேநீர் விருந்துகளும், தேநீர் அருந்தி அதை எந்த பிரதேசத்தில் விளைந்தது என கண்டுபிடிக்கும் போட்டிகளும், கொண்டாட்டங்களும் நடந்தபடியே இருந்தன. சென்ச்சா (Sencha) எனப்படும் உலர்த்தபட்ட முழுத்தேயிலைகளை கொதிநீரில் இட்டு தேநீர் தயாரிக்கும் கலை ஜப்பானில் 18 அம் நூற்றாண்டில் மிகப் பிரபலமானதாகியது. இன்று வரையிலுமே உலகெங்கிலுமே தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் அருந்தப்படும் பானமாக தேநீரே இருக்கிறது. காபி மூன்றாவது இடத்தில்
தேநீரை அருந்துவதை ஒரு சடங்காக துவங்கியது ஜென் துறவிகளே 1103 ல் எழுதப்பட்ட Rules of purity for the chan monastery என்னும் நூல் தேநீர் சடங்கை விரிவாக சொல்லுகின்றது. சீனாவில் பிரபலமாகி இருந்த தேநீர் சடங்கு 13/14 ஆம் நூற்றாண்டுகளில் தான் ஜப்பானின் பரம்பரியத்திலும் இணைந்தது
ஜப்பானில் இச்சடங்கை தோற்றுவித்தவர் சென் நோ ரிக்யூ (Sen no Rikyū) இவர் தேநீர் உள்ளிட்ட பல நாசுக்கான புதிய கலாச்சரங்களுக்கு பெயர்பெற்ற சகாய் (இப்போது ஒசாகா) நகரிலிருந்து வந்தவர். தன் 19 ஆவது வயதிலேயே தேநீர் சடங்கினைக்குறித்து டேக்கனோவிடம் (Takeno) கற்றறிந்தார். தனது 52 ஆவது வயதில் இவர் ஜப்பானின் மிக முக்கியமான ராணுவத்தலைமையில் இருந்த ஒடா நோபுநகா (Oda Nobunaga -1534–1582) மற்றும் போர்வீரராக இருந்து ராணுவத்தளபதியாக வளர்ந்த டொயொட்டொமி ஹிதயோஷி (Toyotomi Hideyoshi 1537–1598). ஆகிய இருவருக்கும் தேநீர் தயாரித்துக்கொடுக்கும் நிபுணராக இருந்தவர். அப்பொது ஹிதயோஷி பேரரசர் ஒகிமாச்சிக்கு அளிக்கும் அரசியல் காரணங்களுக்கான தேநீர் விருந்துகளை அரண்மனையிலும் ரிக்யூவே நடத்தினார், ஜப்பானிய வரலாற்றில் மிக முக்கியமானதாக கருதப்படும் 1587ல் நடைபெற்ற மாபெரும் கிடானொ தேநீர் விருந்தையும் இவரே நடத்தினார்,
ரிக்யூதான் ஜப்பானின் தேநீர்சடங்கை தோற்றுவித்து அவற்றிற்கான நெறிகளையும் வகுத்தவர். அதுவரையிலும் கொண்டாட்டமாக கேளிக்கையாக நடைபெற்று வந்த தேநீர் விருந்துகளை வாபி-சாபி (Wabi–sabi) எனப்படும் நிரந்தரமற்ற, அழியும் சாத்தியமுள்ள, வாடி உதிரும் இயல்புடைய, நேர்த்தியற்றவைகளின் அழகை ஆராதிக்கும், எளிமையைப் போற்றும், பாசாங்கற்ற ஒரு எளிய கலையாக , ஒரு ஆன்மீக சடங்காக இதை வகுத்தார்,
இதுவே அவர் தோற்றுவித்த இன்று வரையிலும் ஜப்பானிய பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும் சா-னோயூ அல்லது தேநீரின் மார்க்கம்
இந்த தேநீர் சடங்கில் மாச்சா (matcha) எனப்படும் பிரத்யேகமாக நிழலில் வளர்த்தப்பட்டு நிழலிலேயே உலர்த்தபட்டு தூளாக்கபட்ட பச்சைநிற தேயிலையே பயன்படுத்தப்படுகின்றது. நிழலில் வளர்ந்த செடிகளிலிருந்து 20 நாட்களுக்கொருமுறை வளரும் தளிர்கள் பறிக்கபட்டு இலைக்காம்பும் இலைகளின் மெல்லிய நரம்புகளும் கூட நீக்கப்படுகின்றது. நிழலில் வளருகையில் சூரிய ஒளி அதிகம் விழாததால் அடர்பச்சை நிறமாகிவிடும் இலைகளில் Caffenine மற்றும் Theanine அளவுகள் அதிகரிக்கும். சூரிய ஒளியை தடுக்க தேயிலைச்செடிகளை ’”கன்ரைஷா” எனப்படும் கனத்த படுதாக்களால் மூடிவைத்து வளர்க்கும் முறை உலகிலயே ஜப்பானில் மட்டுமே பின்பற்றப்படுகின்றது. கோடைக்காலங்களில் வெப்பம் செடிகளை நெருங்காமல் இருக்க சுற்றிலும் மூங்கில் தப்பைகளால் மறைப்பும் ஏற்படுத்தப்படும்
நாமனைவரும் பருகும் தேநீர் சூரிய ஒளியில் வளர்க்கபடும் செடிகளிலிருந்து தயாரிக்கப்படுபவை இவை ஜப்பானில் சென்ச்சா (Sencha) எனப்படுகின்றன. சிலவாரங்கள் நிழலிலும் பின்னர் சூரியஒளியிலும் வளர்க்கப்படும் கியோகுரோ ( Gyokura), 1 அல்லது 2 வாரங்களுக்கு மட்டும் படுதாக்களால் மூடப்பட்டு வளர்க்கப்படும் காபூஸ் வகை (Kabuse) என்று நுணுக்கமான சாகுபடி வேறுபாடுகளால் வகைப்படுத்தபடும் ஜப்பானிய தேயிலை வகைகள் ஏராளம் உண்டு. ஜப்பானின் பிரபல 20க்கும் மேற்பட்ட தேநீர் வகைகளை குறித்து தெரிந்து கொள்ள ;https://www.japan-talk.com/jt/new/japanese-tea
தேர்ந்த ஆட்களால் கைகளால் கவனமாக பறிக்கப்பட்டு மூங்கில் கூடைகளில் சேகரிக்கப்படும் தளிர் இலைகளில் இருந்து மாச்சா தயாரிக்க 20 நாட்களாகின்றது. இயந்திரங்களில் அரைபடுகையில் வெப்பம் வருமாதலால் கற்செக்குகளிலேயெ மிக மெதுவாக இலைகளின் நறுமணமும் பச்சைவாசமும் கொஞ்சமும் மாறாமலிருக்கும்படி இவை தூளாக்கப்படும். ஏறக்குறைய 1 மணி நேரத்தில் 30 கிராம் தூள் மட்டுமே தயாராகும். தூளாக்காமல் இலைகளை உலர்த்தமட்டும் செய்து உருண்டைகளாக உருட்டப்பட்டவை டென்ச்சா எனப்படும். இவையும் தேநீர் சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றது.
செடியின் வயது, அது வளர்க்கப்படும் கோணம், மண்ணின் சத்துக்கள் போன்றவற்றால் மாச்சாவின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது..
கிரானைட் கற்களில் தூளாக்கபட்ட மிக உயர்தர மாச்சா 100 கிராம் 150 அமெரிக்க டாலர்கள் வரை விலையிருக்கும் இவை புத்தக்கோவில்களிலும் அரசகுடும்பத்திலும் தேநீர் சடங்கில் உபயோகிக்கப்படும்
செல்வந்தர்கள் வீட்டில் உபயோகிக்கப்படும் ப்ரீமியம் வகை 80 டாலர் வரை விலை இருக்கும்.
உணவு மாச்சா எனப்படும் ரகமே சாதாரண மக்கள் அனைவரும் உபயோப்பதும் சுற்றுலாப் பயணிகளிக்கு வழங்குவதும் இது 100 கிராம் 15 லிருந்து 40 டாலர் வரை இருக்கும். இது பெரும்பாலும் தளிரிலைகளல்லாது, தேயிலைச்செடியின் கீழ்புறமிருக்கும் முதிர்ந்த இலைகளிலிருந்து தயாரிக்கப்படுபவை.
பெரும்பாலான வீடுகளில் இச்சடங்கிற்கென தேயிலை அறைகளென்றே தனியே அறைகளும் இருக்கின்றது. இவ்வறைகளில் டடாமி (tataami) எனப்படும் வைக்கோல் பாய்கள் விரிக்கப்பட்டிருக்கும். இச்சடங்கு வெண்முரசில் உண்டாட்டுகளில் சொல்லபட்டிருப்பதைப் போலவே ஏராளமான ஒடுக்குநெறிகளையும் செலுத்துநெறிகளையும் கொண்டது
தேநீர் சடங்கிற்கு விருந்தினர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே வந்து காத்திருக்கும் அறையின் சுவற்றில் தொங்கிகொண்டிருகும் துணிச்சுருளில் அன்றைய தேநீர் விருந்து பற்றிய குறிப்புகளை வாசித்து அறிந்தபின்னர் ஒவ்வொருவராக அடுத்த அறைக்கு சென்று கல்லாலான வாஷ்பேசினில் கைகள் வாய் ஆகியவற்றை நீரால் சுத்தம் செய்துவிட்டு, அங்கிருந்து தேநீர் அறைக்கு மூன்றடிக்கும் குறைவான நுழைவுவாயிலில் ஏறக்குறைய தவழ்ந்தபடி உள்ளே சென்று உள்ளே விரிக்கபட்டிருக்கும் பாய்களில் செய்சா (Seiza) எனப்படும் ஜப்பானிய பாரம்பரிய அமரும் முறையான முழந்தாளிட்டு சமூக அந்தஸ்தின் படிநிலைகளின் படி வரிசையில் அமரவேண்டும் இறுதியாக வரும் விருந்தாளி அறைக்கதவை மெதுவாக அடைக்கும் ஓசையை கேட்ட பின்னரே விருந்தளிப்பவர் அறைக்குள் நுழைவார்
பாரம்பரிய வணக்கங்கள் அறிமுகங்கள் செய்துகொண்டபின்னர் முதலில் சாகே அரிசி மதுவும் ’’வாகாசி’’ என்னும் தாவரப்பொருட்களிலிருந்து எடுக்கப்படும் இனிப்பும் வழங்கப்படும். அவற்றை உண்டபின்னர் வரிசையாக் தேநீர் அறையுடன் இணைந்த சிறு தோட்டத்துக்குள் சென்று ஒரு உலாத்தலை செய்து கொண்டிருக்கவேண்டும் விருந்தளிப்பவர் செய்யும் மணியோசை அழைப்பை கேட்ட பின்னர் மீண்டும் உள்ளே வந்து அமரவேண்டும். இப்போது பூசை செய்வது போல தேநீர்க்கோப்பைகளை கிண்ணங்களை மெல்ல நடன அசைவு போன்ற உடலசைவுகளுடன் அடுக்கி கரியடுப்பில் ஒவ்வொன்றாக கரியிட்டு பற்ற வைத்து மந்திர உச்சாடனம் போல மெல்லியகுரலில் முணுமுணுத்து விட்டு மாச்சா பச்சைத்தேயிலைத்தூள் இச்சடங்கிற்கெனவே இருக்கும் ஒரு உலோகச் சல்லடையில் கொட்டி மரக்கரண்டியாலோ அல்லது சிறு கல் கொண்டோ தட்டித்தட்டி சலிக்கபட்டு, சக்கி எனப்படும் மூடியுடன் கூடிய செராமிக் அல்லது மூங்கில் கெட்டிலில் கொட்டப்படுகின்றது
சக்கியிலிருந்து ஒரு சிறு மூங்கில் கரண்டியால் 4 கிராம் அளவுக்கு எடுக்கப்பட்ட தூள் சாவன் எனப்படும் தேநீர்க்கிண்ணத்தில் கொட்டப்பட்டு உடன் 60- 80 மில்லி வெந்நீரும் சேர்க்கப்படும். மூங்கிலில் செய்யபட்ட (Chasen) சேசன் எனப்படும் பிரத்யேக கலக்கி ஒன்றினால் இக்கலவை கட்டிகள் இன்றி கோப்பையின் உட்சுவரில் தூகள் ஒட்டாதவண்ணம் மெல்ல கலக்கப்படும்.
பச்சைக்குழம்பு போன்ற இந்த கொய்ச்சா (koicha) திரவத்தை ஒரு அகன்ற கிண்ணத்தில் விருந்தளிப்பவர் ஒரு வாய் அருந்திவிட்டு கிண்ணத்தின் விளிம்பைத் துடைத்துவிட்டு முதல் விருந்தாளியிடம் கொடுப்பார், அவரும் கொஞ்சமாக அருந்திவிட்டு விளிம்பை துடைத்து சுத்தம்செய்து அடுத்தவருக்கு அளிக்கவேண்டும் இப்படி ஒவ்வொருவராக கொடுத்துக்கொண்டிருக்கையில் தேநீர் சிறப்பாக இருந்தது என்னும் முகக்குறிப்பை காட்டலாம்.
மீண்டும் இடைவேளை மீண்டும் தோட்டத்தில் உலாத்தல் பின்னர் அமர்கையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக்கோப்பைகளில் கொடுக்கப்படுவது மாச்ச்சாத்தூளுடன் மூன்று மடங்கு கொதிநீர் சேர்த்து தயாரிக்கப்பட்ட நீர்த்த உசுச்சா (usucha) கரைசல். இம்முறை மெதுவாக பேசிக்கொள்ளலாம். பின்னர் கோப்பைகளை மெல்லிய முறையான அசைவுகளுடன் விருந்தளித்தவர் சுத்தம் செய்வார்
பின்னர் விருந்தளிப்பவரிடம் முறையான அனுமதி பெற்று உபயோகப்படுத்தபட்ட கெட்டில் கோப்பை, கிண்ணங்கள் ஆகிவற்றை தொட்டுப்பார்க்கலாம். அவை எல்லாம் மிக விலையுயர்ந்த ,பண்பாட்டு முக்கியத்துவமுள்ளவை என்பதால் அதற்கென இருக்கும் ஒரு அலங்கார துணியினால் பிடித்து மிகக் கவனமாக பார்க்கவேண்டும். இப்படிப்பார்த்து அவற்றின் கலைநயத்தினையும் அழகையும் சிலாகிப்பது விருந்தளிப்பவருக்கு விருந்தாளிகள் செய்யும் ஆகச்சிறந்த கெளரவமாக கருதப்படும்.
இறுதியில் விருந்தளித்தவர் கதவுக்கு அருகே நின்று குனிந்து வணங்கியதும் பதில் வணக்கம் சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொள்ளவேண்டும் . மரபான தேநீர்சடங்கு குறைந்தபட்சம் 4 மணிநேரத்திலிருந்து முழுநாள் வரைக்குமே காலம், கலந்துகொள்பவர்களின் அந்தஸ்து, எண்ணிக்கை இவற்றை பொருத்து வேறுபடும்
ஒரு வருடத்தை ஜப்பானிய தேநீர் வல்லுநர்கள் நவம்பர் முதல் ஏப்ரல் வரை குளிர்காலமென்றும் மே முதல் அக்டோபர் வரை கோடைக்காலமென்ரூம் இரண்டாக பிரித்து அந்தந்த காலத்திற்கேற்றபடி தேநீர்ச்சடங்கில் உபயோகப்படுத்தப்படும் பாத்திரங்கள் கோப்பைகள் ஆகியவற்றையும் வேறுபடுத்தி, காலத்துக்கேற்றபடி தேநீர் அறையில் செய்யவேண்டிய மாற்றங்களையும் முறைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இந்த சம்பிரதாயங்கள் பொதுவில் ”தெமாயே” (temae.) எனப்படுகின்றன.
ஜப்பனிய பாரம்பரிய மலரலங்காரம் இகபானா என்றால் தேநீர் சடங்கிற்கான மிக எளிய பிரத்யேக மலரலங்காரம் சா-பானா-(தேநீர் மலர்). ஒன்றிரண்டு மலர்கள். மூங்கில் குச்சிகள், கண்ணாடி சீசாக்கள் அள்லது மூங்கில் கூடைகள், செராமிக் கூஜாக்கள் ஆகியவையே இதற்கு உபயோகப்படுத்தப்படும்.
தேநீர் சடங்கிற்கு ஆண்கள் தேசிய உடையான கிமானோவிலும் பெண்கள் அவர்களுக்கான் ஐரோமூஜியையும் அணிந்திருப்பார்கள். குளிர்கால சடங்கில் ஆண் பெண்ணிருவருமே உள்ளே கனத்த அடித்துணி வைத்துத் தைக்கப்பட்டிருக்கும் கிமானோவையே ஒன்றே போல அணியலாம்.
ஜப்பானில் தேநீர் சடங்கைக்குறித்த வகுப்புக்கள் பள்ளி, கல்லூரி பல்கலைக்கழக அளவுகளில் நடத்தப்படுகின்ற்ன. தனியார் வீடுகளிலும் தோட்டங்களும் பூங்காக்களிலும் இவ்வகுப்புக்கள் இளம் பெண்கள், வயதானவர்கள், இல்லத்தரசிகள் என பலதரப்பட்ட குழுக்களாக கலந்துகொள்பவர்களுக்கு நடத்தப்படுகின்றன. தேநீர் சடங்கு நடத்துபவர் மரபுகளுக்கேற்றபடி தேநீரை தயாரித்து விருந்தினருடன் பகிர்வதே இச்சடங்கின் சாரம்சம்.
ஜப்பானிய தேநீர்ச்சடங்கு நான்கு முக்கியமான அடிப்படைகளை கொண்டது
1. இயற்கையுடனான ஒத்திசைவை சொல்லும் “Wa”, ’இதன்பொருட்டே தேநீர் அறையுடன் இணைந்த தோட்டம். தோட்டங்களிலும் பிரகாசமான நிறமும் மணமுள்ள மலர்ச்செடிகள் மனதை திசை மாற்றலாமென்பதால் எளிய தாவரங்களே வளர்க்கப்படும். தேநீர் கோப்பைகள் கிண்ணங்கள் அவற்றின் வண்ணங்கள், தீட்டப்பட்டிருக்கும் சித்திரங்கள், எழுத்துக்கள் ஆகியவையுமே ஒன்றுக்கொன்று இயைந்து ஒத்திசைவுடன் இருக்கும்
- “Kei” என்பது பணிவைக்குறிப்பது. மிகக்குனிந்து வரவேண்டிய அந்த நுழைவு வாயில், முழந்தாளிட்டு அமர்வது, இடுப்பை வளைத்து வணங்குவது, அமைதியாக இருப்பது அனுமதிபெற்றே பொருட்களைத் தொடுவது என்று ஒவ்வொன்றிலும் மரியாதையும் பணிவும் இருக்கும் சடங்கு இது
- “Sei” தூய்மையை குறிக்கும். அறையும் பொருட்களும் மட்டுமல்லாது விருந்தாளிகளும் விருந்தளிப்பவரும் அகத்தூய்மையுடன் இருப்பதையும், நுழைவுவாயிலுக்கு வெளியே தங்கள் மன அழுக்குகளையும் விகாரங்களையும் களைந்துவிட்டே வரவேண்டும் என்பதையும் இது குறிக்கின்றது. விருந்தளிப்பவர் தன் தூய இருதயத்தையும் ஆன்மாவையுமே மனம் சிதறாமல் தேநீராக விருந்தினருக்கு அளிப்பதாகவும் கருதப்படுகின்றது. தேநீரறையே ஒரு அழகிய துயரற்ற இனிமையும் தோழமையும் நிரம்பிய தூய உலகமாக கருதப்படுகின்றது.
4.“Jaku”என்பது தேநிர் விருந்தின் நினைவுகள் கலந்துகொண்டவர்களுக்கும் அளித்தவருக்கும் அளிக்கும் ஆழ்மன அமைதியை குறிக்கின்றது.
தேனீர் சடங்கு நடத்துனர் தேநீர்மற்றும் தேயிலை வகைகள், தயாரித்தல், பரிமாறல் போன்ற கலைகளில் மட்டுமல்லாமல், ஜப்பானிய பாரம்பரியத்துக்கேயான பல கலைகளையும் அறிந்து தேநீர்ச்சடங்கில் அவற்றின் பங்கினையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இக்கலையை முழுமையாக கற்க பல ஆண்டுகள் தேவைப்படும்.
தேநீர்ச் சடங்கை வெறும் தேநீர் அருந்தும் ஒரு நிகழ்ச்சியாக பார்க்காமல் ஆன்மீக, உளவியல், சமூக நிலையில் அணுகினாலே ஜப்பானிய பண்பாடுகளில் அதற்கு இருக்கும் முக்கியதுவத்தை புரிந்து கொள்ள முடியும்
தோழமையை, தேநீரின் உன்னத சுவையினை, வெகு எளிமையான அதன் தயாரிப்பு முறையை, விருந்தோம்பலின் மேன்மையை, பரம்பரியத்தின் முக்கியத்துவத்தை போற்றும், கொண்டாடும் ஒரு அற்புதக்கலையாக, ஆன்மிக ஒழுங்குகளுடன் அளிக்கப்படும், கலந்துதுகொள்ளப்படும் ஒரு மிக முக்கியச்சடங்கு இது
ஜப்பானின் மூன்று முக்கிய தேநீர் நகரங்களில் ஒன்றான ’மட்சூ’ வில் எப்போதும் தேநீர் சடங்கு நடந்தபடி இருக்கும். கடைத்தெருவில் வகாசி இனிப்புக்களும் தேநீர் சடங்கிற்கு தேவையான கிண்ணங்கள், கரி அடுப்புக்கள், கோப்பைகளை விற்பனை செய்யும் கடைகளும் நிறைந்திருக்கும். இங்கு 1779 லிருந்து பேணப்பட்டு வரும் மீ மீ என்னும் தோட்டத்துடன் இணைந்த பாரம்பரிய தேநீர் இல்லத்துக்கு சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணமே இருப்பார்கள். இங்கு நடக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள 200லிருந்து 400 யென் வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
தேயிலையே இல்லாமல் மல்லிகைப்பூவை கொதிநீரில் இட்டு சான்பின்ச்சா (sanpincha) எனப்படும் மல்லிகைத்தேநீரையும், பார்லியை கொதிக்கவைத்து முகிச்சா(Mugicha) என்னும் பார்லித்தேநீரையும், கடற்பாசிகளை கொதிக்கவைத்த புளிப்புச்சுவையுள்ள கொம்புச்சா(Kombucha) தேநீரையும் ஜப்பானியர்கள் விரும்பி அருந்துவார்கள்
ஜப்பனிய செர்ரி மரமான சகுரா பூக்கும் காலத்தில் சகுரா மலரிதழ்களை வினிகரும் உப்புமிட்டு பதபப்டுத்தி கொதிக்க வைத்து செர்ரிமலர்தேநீரும் அருந்துவார்கள். பெரும்பாலும் எல்லா உணவகங்களிலும் இலவசமாக உணவிற்கு பின்னர் பச்சைத்தேநீர் அளிக்கும் வழக்கமும் இங்கு உண்டு.
சீனாவில் வூயி மலைப்பகுதியில் இரும்புச்சத்தும் பிற மிக முக்கியமான நுண் சத்துக்களும் நிறைந்த மண்ணில் வளர்ந்திருக்கும் ஆயிரமாண்டுகள் பழமையான மூன்று உயர்ரக தேயிலைப்புதர்களிலிருந்து எடுக்கப்படும் உலகிலேயே மிக விலையுயர்ந்த தேயிலை ட-ஹாங்-பாவ் (Da-hong pao). ஒருகிலோ சுமார் 1 லட்சத்து இருபத்தைந்தாயிரம் அமெரிக்க டாலர்கள் ( 7 அல்லது 8 கோடி ரூபாய்கள் ) விலையுள்ள இத்தேயிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீர் சீனாவுக்கு வரும் மிக மிக முக்கிய விருந்தாளிகளுக்கு மட்டும் அளிக்கப்படும்
இதற்கு அடுத்து இருப்பது ஒரு கிலோ 3300 அமெரிக்க டாலர்கள்(இரண்டரை லட்சம் ரூபாய்கள் ) விலையுள்ள டீகுன்யன் (Tieguanyin) தேயிலை.