ஹெச். வினோத்தின் எழுத்து மற்றும் இயக்கத்தில் போனிகபூரின் தயாரிப்பில் 2016 ல் வந்த (’’பின்க்’’ஹிந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமான) நேர்கொண்ட பார்வை 8/8/2019 அன்று உலகெங்கும் வெளியானது அஜித் குமாருடன் கன்னட நடிகை ஸ்ரத்தா, அபிராமி , ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ள legal drama வகைப்படம் இது. ஆண்ட்ரியா மட்டுமே மூலப்படமான பின்க்’ கிலும் நடித்தவர். இசை யுவன் ஷங்கர் ராஜா. வித்யா பாலன் அஜித்தின் ஜோடியாக தமிழில் இப்படத்தில் அறிமுகமாகிறார்.பிரபல நடிகை கல்கி கோச்லினும் துவக்க பாடலில் மட்டும் வருகிறார்
பின்க் சொன்ன அதே கதைதான் எனினும் இதில் அஜீத்திற்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். அமிதாப் நடித்த வயதான ஒரு பாத்திரத்திற்கு ஒத்துக்கொண்டதற்கும் மிக அழகாக இப்பாத்திரத்தை கையாண்டதற்கும் அஜித்தை பாராட்டியே ஆகவேண்டும்.
நிகழ்வுகளில் நடனமாடும் ஸ்ரத்தா, கால் சென்டரில் வேலைபார்க்கும், மணமுறிவான பேராசிரியருடன் வாழ்வை பகிர்ந்துகொண்டிருக்கும் பேரிளம்பெண்ணான அபிராமி, ஒரு சலூனில் சிகை அலங்கார நிபுணராக இருக்கும் ஆண்ட்ரியா, இவர்கள் மூவரும் சென்னையில், பூந்தொட்டிகளும் டெராரியமும் மூலை முடிச்செல்லாம் பசுஞ்செடிகளும் நிறைந்திருக்கும் ஒரு அழகிய வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்கள்.
ஸ்ரத்தா நடனமாடும் ஒரு நிகழ்வுக்கு மூவருமாக சென்றுவிட்டு திரும்ப எத்தனிக்கும் ஓரிரவில் அவர்கள் சில இளைஞர்களை சந்திக்கின்றனர். அதன்பின்னர் நடக்கும் எதிர்பாரா விஷயங்களால் அப்பெண்களின் வாழ்வே முற்றிலுமாக மாறிவிடுகிறது., வழக்கறிஞர் உத்யோகத்திலிருந்து ஓய்வு பெற்ற அஜித் அரசியல் மற்றும் குண்டர்கள் தொல்லைகளையும், கடந்த கால வாழ்வின் கசப்புகளினால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நிலையையும் சமாளித்து மூன்று பெண்களுக்கும் உதவி எப்படி அனைத்தையும் சீராக்குகிறார் என்பதே கதை
துடிக்கும் இசையுடன் நடனம் , கொப்பளித்து ததும்பும் இளைஞர் கூட்டம், விரையும் காரினுள் இருக்கும் இளைஞனின் மண்டை உடைந்து கொட்டும் இரத்தம்,, இறுகிய முகத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் பயணிக்கும் மூன்று பெண்கள், மிக அருகே என மோத வரும் ஒரு லாரி என துவக்க காட்சிகளே படத்தை பரபரப்பாக்குகிறது
வழக்கம் போலவே எந்த ஒப்பனையும் இல்லாது முகத்தை கழுவிவிட்டு அப்படியே படப்பிடிப்பிற்கு வந்தாற்போல உப்பும் மிளகுமான தலைமுடியுடன் அஜீத். அவர் திரையில் தோன்றியதும் அவரது ரசிகர்கள் ததும்பி வெறி கொண்டு கூச்சலிடுகிறார்கள்.. பென்சில் மீசையும், பொய்த்தலைமுடியும் லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகளும் சேர்ந்து அளிதது வந்திருந்த வந்த நாயகன் என்னும் பிம்பமெல்லாம் வழக்கொழிந்துபோய், திரைக்கு பின்னும் முன்னுமான ஆளுமையால் மட்டுமே இப்போது நாயகர்கள் இளைஞர்களை ஈர்க்கமுடியுமென்பதை , ,திரையில் அவரை நோக்கி வீசப்பட்ட வண்ணக்காகிதங்களும் காது கிழியும் படியான விசிலும் கூச்சலும் உணர்த்தின
என்ன நடந்தது என்பதை பிற்பாடு நீதிமன்றத்தில் தன் நாம் புரிந்துகொள்கிறோமென்றாலும் பெண்கள் மூவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அரசியல் செல்வாக்குடைய ஆதிக்’தான் அடிபட்டது என்று தெரியும் போதும், ஸ்ரத்தா கடத்தபடுகையிலும் நாமும் பதட்டமாகிறோம்.
பூங்காவில் அமர்ந்திருக்கும் அஜீத் மாத்திரைகளை போட்டுக்கொள்ளாமல் இருக்கையில் அவருக்குள்ளிருந்து திமிறிக்கொண்டு, கட்டுக்களையும் தளைகளையும் அறுத்துக்கொண்டு வெளிவரத்துடிக்குமொன்றை அவர் கட்டுப்படுத்திக்கொள்வதை மிக நன்றாக காட்டியிருக்கிறார். அந்த பூங்காவில் நடக்கும் சண்டைக்ககாட்சி ( கதைக்கு தேவையற்றது எனினும் ) பிரமாதம். உடைந்த குழாயிலிருந்து பீறிட்டு வரும் நீரின் பிண்ணணியில், யுவனின் பொருத்தமான இசையுடன் ஒவ்வொரு அடியும் இடியாக நம் இதயத்தில் விழுகிறது. தமிழில் வித்யா பாலன், நல்ல புஷ்டியாக கொழுக் முழுக்கென்றூ இருக்கிறார். Close up காட்சிகளில் கண் பட்டுவிடும் என்றூ சொல்லும் அளவிற்கு பேரழகியாக இருக்கிறார்.அகலாதே மனதை விட்டு அகலாத பாடல்.
மகேசின்டெ பிரதிகாரத்தின் வில்லனாகிய சுஜித் இதிலும் வருகிறார் மிக இயல்பான உடல்மொழி அசத்தல் நடிப்பு. தமிழுக்கு ஒரு நல்ல உருப்படியான வில்லன் கிடைத்திருக்கிறார்.
நீதிமன்ற நிகழ்வுகள் மிக நன்றாக காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன. அரங்கு மொத்தமும் மிக அமைதியாக கவனிக்கிறது வசனங்களை. Are you a virgin ? என்று அஜித் ஸ்ரத்தாவை கேட்கும் கேள்வியைப்போல, தமிழ் சமூகமும், திரையுலகும் கொஞ்சமும் நினைத்திராத பல திடுக்கிடும் கேள்விகள் நம்முன் கேட்கப்படுகின்றன.
இப்படம் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தவறுசெய்யலாம் என்று சொல்லும் படமல்ல. வெகுவாகவும் விரைவாகவும் மாறிவரும் கலாச்சார சூழலில், சில பண்பாட்டுக்கூறுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதை நாம் விசால மனதுடன் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், கற்பை மட்டுமல்ல இதுபோன்ற தவிர்க்கவே முடியத சில அம்சங்களையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக வைக்கவேண்டும் என்றும் சொல்லுகிறது
இறுதியாக அஜித் சொல்லும் ’”NO என்றால் அது NO’” தான் என்பது, அவர் குரலாக மட்டுமல்லாது பல்லாயிரம் பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவும் ஒலிப்பதால் பெரும் ஆறூதலளித்தது .தினமலர், ஆயுத எழுத்து, என் கேள்விக்கென்ன பதில் போன்ற நிகழ்ச்சிகளில் பிரபலமான தொலைக்காட்சி புகழ் ரங்கராஜ் பாண்டே இதில் அரசுத்தரப்பு வக்கீல். மிக மிகப்பொருத்தமான பாத்திரம் அவருக்கு. இருக்கையிலிருந்து எழுந்து அவரை ஓங்கி அறைந்துவிடலாமாவென்று நினைக்க வைக்கும் உடல்மொழியும் வசனவெளிப்பாடும். பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
டெல்லி கணேஷும் ஸ்ரத்தாவின் அப்பாவாக வருகிறார். புராதன அப்பாவாக இன்றி மகள் குடிப்பது கன்னித்தன்மையை இழந்தது பற்றியெல்லாம் கேட்டபின்னரும் நீதிமன்றத்தில் இருக்கிறார், வருந்துகிறார். ஆனால் எந்த காட்சியிலும் ’’அடிப்பாவி மகளே! மோசம் பண்ணிட்டியே, என்று கண்ணீர் விட்டு கதறியோ வழக்கமான தமிழ்சினிமாவில் போல் மொத்துமொத்தென்று மொத்தியோ இருந்தால் இப்படம் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போயிருக்கும். இப்போது காலம் மாறியிருக்கிறது என்பதை டெல்லி கணேஷ் பாத்திரமும் நமக்கு உணர்த்துகிறது
பெண்களின் பாலுறவு தொடர்பான சிக்கல்களுக்கும், வீட்டிற்கு வெளியே அவர்களுக்கு எப்போதும் கூர் நகங்களுடனும் கோரைப்பற்களுடனும் காத்திருப்பதாக நாம் நம்பும் ஒரு ஆபத்தான உலகிற்கும் அவர்கள் அணிந்துகொள்ளும் ஆடைகளும், அவர்கள் சுயமாக எடுக்கும் துணிச்ச்சலான முடிவுகளும், அவர்களும் மது அருந்துவதும் தான் என்று காரணங்களை நாம் அடுக்காமல் இதற்கு நாம் எத்தனை தூரம் காரணமாயிருக்கிறோம் என்றும் யோசனை செய்ய சொல்லும் படமிது. கூட்டுக்குடும்பம் இல்லை பல வீட்டில் ஒற்றை பெற்றோர் அல்லது ஒற்றை பிள்ளைகள். சொந்தம் பந்தம் என்று எதுமில்லா சூழலில் உள்ளத்திலுள்ள பதின்பருவ சிக்கலகளை பகிர்ந்துகொள்ள யாருமற்ற ஒரு சமூகத்தில் அவர்கள் வளரவேண்டி வந்திருப்பதில் நம் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டும்
பெண்களும் ஆண்களும் எதையெதையெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது என்று பாடம் எடுக்கும் படமுமல்ல இது.கலாச்சார மாறுதல் என்பது ஒரு சுனாமி போல வெகு விசையுடன் இளைஞர்களை உள்ளிழுத்துகொண்டிருக்கையில் நாம் இன்னும் பெண்கள் எதை செய்யலாம் செய்யக்கூடாது என்று பட்டியல் போட்டுக்கொண்டிருக்காமல் அவர்களை, அவர்களின் வயதை, ஹார்மோன்கள் செய்யும் கலவரங்களை, உடல் சார்ந்த தேவைகளை வீட்டுக்கு வெளியே அவர்களை ஈர்க்க காத்திருக்கும் ஒரு வேகமான உலகை, நாமும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நமக்கு சொல்லும் ஒரு படம்
பெண்களுக்கு தளைகளை பிணைப்பதற்கு முன்பு, குற்றம் சாட்டுவதற்கு முன்பு அவர்களை பரிர்ந்துகொள்வதும் , அவர்கள் தரப்பு நியாயங்களையும் அநியாயங்களையும் நாம் அறிந்துகொள்வதன் அவசியத்தை சொல்லும் படமிது
ஸ்ரீதேவி இருக்கும் போது அவருக்கு அளித்த வாக்கின்படி போனி கபூரின் தயாரிப்பில் அஜித் நடித்துக்கொடுத்திருக்கும் இப்படத்தை சென்ற தலைமுறையை சேர்ந்தவர்களும் இத்தலைமுறையினரும் இணைந்து பார்க்கலாம்
Leave a Reply