இந்தியாவை 17 முறை படையெடுத்து வந்த கஜினியை சேர்ந்த முகமது  நடத்தியதிலேயே  மாபெரும் கொள்ளையாக கருதப்படுவது 1026 ல் குஜராத்தில் சோம்நாத் கோயிலை தகர்த்த பின்னர் செய்த பெரும் கொள்ளைதான். சோம்நாத் கோயிலின் பிரம்மாண்டமான  மடக்கும் வசதிகொண்ட சந்தன கதவுகளும் கொள்ளையடித்த பொருட்களில் இருந்தன.

சந்தன மரத்தில் செய்யப்பட்ட நுணுக்கமான செதுக்கு  வேலைப்பாடுகள் கொண்டிருந்த அக்கதவுகள், நான்கு வருடங்களுக்கு பின்னர்  இறந்து போன கஜினி முகமதின் கல்லறை கோட்டையில் பொருத்தப்பட்டிருந்தன. 

அதிலிருந்து சுமார் 800 வருடங்களுக்கு பின்னர் எடின்பர்க் பிரபு வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் மிகப்பிரபலமான ’’கதவுகளின் பிரகடனத்தை’’ அறிவித்தார். அதன்படி ஒரு தனி சிப்பாய் படை ஆப்கானிஸ்தானுக்கு கஜினியின் கல்லறையிலிருந்து சந்தனக்கதவுகளை திரும்ப எடுத்துக் கொண்டு வர புறப்பட்டு சென்றது. 

கல்லறையிலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வரப்பட்ட அக்கதவுகள் பெரும்  கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக ஆக்ரா கோட்டைக்கு 1842 ல்  கொண்டு செல்லப்பட்டன. ஆனால் அக்கதவுகளின் வேலைப்பாடுகள் இந்தியப்பாணியிலோ அல்லது பிரிடிஷ் பாணியிலோ இல்லாததை கண்ட பின்னர் ஆராய்ந்து பார்க்கையில் , சோம்நாத் கோவிலில் இருந்து கஜினி முகமதுவால் கொண்டு செல்லப்பட்டவையல்ல, அவை இரண்டும் போலி என தெரியவந்தது. 

அசல் கதவுகள் கருப்பு சந்தையில் எப்பொழுதோ கைமாறி இருக்கும் என யூகிக்கப் பட்டது. இன்று வரையிலும் அந்த போலிக் கதவுகள் தட்டுமுட்டு சாமான்களை போட்டு வைத்திருக்கும் ஆக்ரா கோட்டையின் மாபெரும் அறையொன்றில் புழுதிபடிந்து கிடக்கின்றன. 

அப்போது மட்டுமல்ல இன்று வரையிலும் அசல் சந்தன மரத்தில் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் மரச்சாமான்களும், கைவினைப் பொருட்களும், கடவுள் திருவுருவங்கள் உள்ளிட்ட பல விலையுயர்ந்த  பொருட்களும்,  புட்டிகளில் கிடைக்கும் சந்தன எண்ணையும் பெரும்பாலும்  போலியாகத்தான் இருக்கின்றன.  

சண்டாலேசி (Santalaceae) குடும்பத்தை சேர்ந்த  உலகின் மிக விலையுயர்ந்த மரங்களில் ஒன்றான Santalum album என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த (வெண்) சந்தன மரங்கள் உலகெங்கிலும் மிகுந்த மதிப்புக்குரியதாக  இருக்கின்றன.

சந்தன மரம் அடர்த்தி மிகுந்தவை நீடித்த நறுமணம் கொண்டவை என்பதால்  செதுக்கு வேலைகளுக்கும், சிற்பங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. காய்ச்சி  வடிகட்டுதல் மூலம் முதிர்ந்த சந்தன மரங்களிலிருந்து சந்தன எண்ணெய்   எடுக்கப்பட்டு நறுமண திரவியங்கள், சோப்புக்கள், மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, வழிபாட்டு பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்காக பல்லாண்டுகளாகப்  பயன்படுகிறது

சந்தன மரக்கட்டைகளும், சந்தனப்பொடியும் உலகின் முக்கிய மதங்களான இந்து, பௌத்தம் மற்றும் இஸ்லாமிய மதங்களில் வெகுவாக பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமயம் சார்ந்த சடங்குகளிலும் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இவை அதிகம் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

உலகின் மிதமான மழைப்பொழிவும், அளவான வெப்பமும், நல்ல ஒளியும் இருக்கும் இடங்களில் எல்லாம் சந்தன மரங்கள் செழித்து வளர்கின்றன. இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா பாலினேசியா, நியூசிலாந்து,  ஹவாய் ஆகிய நாடுகளில்  வணிக முக்கியத்துவம் கொண்ட சந்தன மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன

இந்தியாவின் பல மாநிலங்களில் சந்தன மரங்கள் வளர்கின்றன எனினும் மிக அதிக எண்ணிக்கையில் இவை கர்நாடகத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. 

மணற்பாங்கான, வறண்ட நிலப்பகுதிகளிலும் இவை நன்கு வளரும். இவற்றை மலைப்பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் பாலைவனங்களிலும் கூட காணலாம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் இவை செழித்து வளர்கின்றன. வணிக ரீதியில் மிக முக்கியமான பசுமை மாறா சந்தனமரங்களின் 16 வகைகள் ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளில் காணப்படுகின்றன

உலகெங்கும் உள்ள சந்தன மரங்களின் பல வகைகளில் முதல் தரமென கருதப்படுவது இந்திய மரங்களே! இந்தியா முழுவதும் பரவலாக காணப்படும் இவை தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மிக அதிகம் காணப்படுகின்றன.

இலங்கையிலும் பன்னெடுங்காலமாக சந்தன மரங்கள் வளர்கின்றன. இப்போதும் இலங்கையின் சில காட்டுப் பகுதிகளில் தானாக வளர்ந்த சந்தன மரங்களைக் காணலாம். தற்போது சந்தன மரங்களை வணிகப் பயிர்களாக வளர்க்கும் திட்டங்கள் இலங்கையில் தொடங்கப்பட்டிருக்கின்றன.

வரலாறு

சந்தனம் என்னும் தமிழ்ச்சொல் சதி (Cadi) எனப்படும் ’மகிழ்வு’  என்னும் பொருள் கொண்ட சமஸ்கிருத சொல்லிலிருந்து பெறப்பட்டது 

 இந்திய கலாச்சாரத்துடன் சந்தன நறுமணமும் கலந்திருக்கிறது ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் சந்தன மரங்களும், சந்தன விழுது பூசிக்கொள்வதும், சந்தன பாத்திரங்களில் நீர் அருந்துவதும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராமாயணம் கரையோர சந்தன மரக்காடுகள் காதலனை தேடி ஓடும் காதலி போல தாமிரபரணியை சென்று சேருகிறது என்கிறது.

அரண்மனையில் இருக்கும் ராமனின் மேனியில் சந்தனம் பூசப்பட்டது  வால்மீகி ராமாயணத்தில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

பண்டைய இந்திய இலக்கியங்களில்  சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சந்தனம் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிட பட்டிருக்கிறது.

இந்திய புராணங்களும், வேதங்களும்   மருத்துவத்திலும் அழகுப் பொருளாகவும் சந்தனத்தின் பயன்பாட்டை விவரிக்கின்றன.   ஜைன  மற்றும் பெளத்த மதங்களும் சந்தனத்தை உபயோகிப்பது குறித்து சொல்லுகின்றன.

சங்க இலக்கியங்களிலும் சாந்து பூசுதல் என்று  சந்தனம் பூசுதல் சொல்லப்பட்டிருக்கிறது. பண்டைய இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான முக்கிய பொருட்களில் பட்டும், சந்தனமும் முக்கியமானவைகளாக  இருந்திருக்கின்றன 

சிவனுக்குரிய வழிபாடுகளில் சந்தனம் முக்கியமானதென்று சொல்லும் வாமனபுராணம்,  லஷ்மிதேவி வசிக்கும் மரமாகவும் சந்தனமரத்தை குறிப்பிடுகிறது.

பண்டைய எகிப்தியர்கள் சந்தன மரங்களை பிற நாடுகளிலிருந்து தருவித்து, அதை மம்மிகளை பதப்படுத்துவது உள்ளிட்ட  பல்வேறு சடங்குகளிலும் அழகு சாதன பொருட்களிலும் பயன்படுதி இருக்கின்றனர்.

கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம் வனங்களின் மதிப்பு மிக்க மரமாக சந்தன மரத்தை குறிப்பிட்டிருக்கிறது, அர்த்த சாஸ்திரத்தில் வெண்மை, கருஞ்சிவப்பு, சிவப்பு, வெண்சிவப்பு, கருப்பு, பச்சை மற்றும் குங்குமப் பூவின் நிறம் கொண்ட பலவகையான சந்தனங்களையும் கெளடில்யர் விவரித்திருக்கிறார்,(Chapter 2.11 pp 43-72)

மருத்துவ தொல் நூல்களான சரக, சுஸ்ருத மற்றும் அஷ்டாங்க ஹிருதய சம்ஹிதைகளிலில்  சந்தன உபயோகத்தை குறித்த விரிவான விளக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, குறிப்பாக மனநலமின்மைக்கு தீர்வாக சந்தன விழுதின் பயன்பாடு சொல்லப்பட்டிருக்கிறது.

நான்காயிரம் வருடங்களாக இந்தியாவில் சந்தனம் பல்வேறு வடிவங்களில் உபயோகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மிகப்புனிதமான  வழிபாட்டுக்குரிய பொருளாக சந்தனம் கருதப்படுகிறது.

சரக சுஸ்ருத சம்ஹிதைகள் இதை ஸ்வேத சந்தனம் என்கின்றன. இதன் அறிவியல் பெயரில் இருக்கும் ஆல்பா என்பதும் வெண்மையென்றே பொருள்படுகிறது

கூர்ம ,மத்ஸ்ய, கந்த சிவ, தர்ம புராணங்களிலும் சந்தனம்  சொல்லப்பட்டிருக்கிறது.

வாமன புராணம் பிரம்மாவின் ரோமத்துவாரங்களிருந்து உருவான மரமாக இதை சொல்லுகிறது. அதில்  மணமிக்க சந்தனமரப்பொருட்களால் சிவனை வழிபடலாமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேத வியாசர் சந்தன மரங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய புராணங்களில் அறிவு, வளமை,புனிதம் ஆகியவற்றின் குறியீடாக காணப்படும் மரங்களில் சந்தனமும் இருக்கின்றது. 

பார்வதி தேவி   மஞ்சளும் சந்தனமும் கலந்து பிசைந்து  செய்த உருவமே பின்னர் விநாயனாயிற்று என்கிறது இந்து மத  தொன்மங்கள். 

5ம்  நூற்றாண்டின்  உருவான பஞ்சதந்திர கதைகளிலும்  சந்தன மரங்கள் இருக்கின்றன. ’தென்மலையில் பிறந்த சந்தனம்’ என்கிறார் இளங்கோவடிகள்.  

புத்தர் சந்தனம், மல்லிகை, தாமரை  மற்றும்  நந்தியாவட்டை மலர்களின் நறுமணத்திற்கு இணையாக எதுவும் இல்லை என்கிறார் .

புராணங்களில் தேவர்கள் உபயோகிக்கும் சந்தனம் ’ஹரிசந்தனம்’ என்றும் மானுடர்கள் கடவுள் திருவுருவங்களுக்கு படைத்தும் பூசியும் வழிபடும் சந்தனம் ’ஸ்ரீ சந்தனம்’ என்றும் சொல்லப்படுகின்றது.இந்து மத வழிபாடுகளில் மிக முக்கியமானவைகளாக சொல்லப்படும் ஐந்து பொருட்கள் :

  • நறுமணமிக்கவை, 
  • நறுமணப் புகையை அளிப்பவை, 
  • மலர்கள் 
  • நைவேத்தியம் எனப்படும் தெய்வங்களுக்கான உணவு மற்றும் 
  • தீபச்சுடர் 

இவற்றில் நறுமணமிக்க என்னும் வகையில் மிக அதிகம் உபயோகிக்க படுவது சந்தனம்தான்

இஷ்வாகு குல அரசியான இந்துமதியின் சிதை விறகாக சந்தன மரக்கட்டைகள் இருந்ததாக கவி காளிதாசர்  ரகுவம்சத்தில் விவரிக்கிறார் .

நற்றிணையில் கோடைக்காலங்களில் பெண்களின் மார்பகங்களில் சந்தன விழுது பூசியது சொல்லப்பட்டிருக்கிறது 

பாகவத புராணமும் கிருஷ்ணனின் மேனியில் சந்தனம் பூசப்படுவதை சொல்கிறது. 

பண்டைய சீனாவில் அரசகுடும்பத்தினரின் குற்றங்களை தண்டிக்க சந்தனக்கட்டைகளில் கழுவேற்றுவது, சந்தனக்கட்டையால்  கபாலத்தை உடைப்ப்து போன்ற தண்டனைகள் இருந்தன இதுகுறித்த சந்தச்சாவு என்னும் பிரபல சீன மொழி நூல்  2001ல் வெளியானது,(sandalwood death- mo-yan) 

வளரியல்பு

6-10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய குறு மரங்களாகவும், பிற மரங்களை தழுவியும், பிற மரங்களுடன் பின்னிக்கொண்டும் வளரும்  சந்தன மரங்கள் 80 லிருந்து 100 வருடங்கள் வரை வாழும்.

ஒளிச்சேர்க்கை மூலமும் இவை பிற தாவரங்களைப்போல உணவு தயாரிக்கும் என்றாலும் வாகை, சீமை ஆவாரை, புங்கை   சவுக்கு,  கத்திச்சவுக்கு போன்ற  மரங்களுடன்  பாதி ஒட்டுண்ணி (hemiparasitic) வாழ்வில் இருக்கும் இவை பிற மரங்களிலிருந்து தனது குழல் போன்ற வேர்களினால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக்கொள்ளும்.  

வறண்ட நிலப்பகுதிகளிலும் வளரும் சந்தனமரங்கள் அவற்றின் வகைகளை பொருத்து   15 லிருந்து 20 வருடங்களில் அறுவடை செய்யப்பட தயாராகும்..

தாவரவியல் பண்புகள்

மரப்பட்டை செம்பழுப்பு,  பழுப்பு அல்லது அடர் மண் நிறம் கொண்டிருக்கும். இலைகள் நீள் முட்டை வடிவில் கூர் நுனியுடன் மிருதுவாக இருக்கும், சிவப்பு நிறத்தில் 4 இதழ்களைக் கொண்ட, கொத்துக்களாக தோன்றும் சிறு மலர்கள் நறுமணமற்றவை. உருண்டையான சிறு  கனியில் ஒற்றை விதை இருக்கும்

பாதி ஒட்டுண்ணிகளான சந்தன  மரங்களை சாகுபடி செய்கையில் அவை சார்ந்து வளரும் மரங்களும் உடன் வளர்க்கப்படுகின்றன.

முதிர்ந்த மரங்களிலும் வேர்களிலும் சந்தன எண்ணெய் உருவாக சுமார் 20 லிருந்து 30 வருடங்கள் ஆகும்.  எளிதில் நெருப்பு பற்றிக் கொள்ளும், பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகும் இயல்பு கொண்டவை இம்மரங்கள்.

முதிர்ந்த மரங்களின் வைரக்கட்டை எனப்படும் நடுப்பகுதியே பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சந்தன மரமெனப்படுவது. ஒவ்வொரு முதிர்ந்த மரங்களிலும் அதன் வைரக்கட்டையின் (heart wood) அளவும் வேறுபடும் எனவே அவற்றிலிருந்து கிடைக்கும் சந்தன எண்ணெயின் அளவும் வேறுபடும் 

முக்கிய வகைகள்

 சந்தன மரங்களின் பல வகைகளில் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை மூன்று வகைகள்

  1.  இந்திய சந்தன மரமான   Satalum album. இது வெள்ளை அல்லது மஞ்சள் சந்தனத்தை அளிப்பது.
  2. ஆஸ்திரேலிய சந்தன மரமான  Santalum spicatum
  3.  ஹவாய் சந்தனமான Santalum paniculatum 
  • செம்மரக்கட்டை,செம்மரம்,ரக்த சந்தனம்,ரது ஹந்துன் அல்லது செஞ்சந்தனம் எனப்படுவது இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட Pterocarpus santalinus என்னும் மரம். இது தமிழில்  பிசனம், கணி, உதிரச் சந்தனம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லையில் கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் காணப்படும் இவை இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலும்  வளர்கிறது

  • வெள்ளை சந்தன மரம் என்னும் வகையானது மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சிறப்பு மர வகை.  லட்சம் சந்தன மரங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வெண் சந்தன மரங்கள் மட்டுமே இருக்கும்.மிக அரிதான இம்மரத்தில் செய்யப்படும் கடவுள் சிலைகள் அரிதினும் அரியவையாக கருதப்படுகின்றன. 

இந்திய சந்தன மரங்கள்

5000 ஆண்டுகளாக உலகின் சந்தன மர வளர்ப்பிலும் சந்தன பயன்பாட்டிலும் இந்தியாவே முதன்மை இடத்தில் இருந்து வருகிறது.

 இந்திய  சந்தன மரம்  வணிக ரீதியாக ஆங்கிலத்தில் East Indian sandalwood என்றும் அதன் எண்ணெய்  East Indian sandalwood oil என்றும் அழைக்கப்படுகிறது மிக அதிக அளவில்   a-sotalol மற்றும் b-sotalol, ஆகியவற்றை கொண்டிருக்கும் மருத்துவ குணம் கொண்டிருக்கும் நறுமணம் கமழும் இந்திய சந்தன மரங்களே பிற சந்தன வகைகளை காட்டிலும் மிக உயர்ந்தது

கேரளா கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இவை குறைந்த எண்ணிக்கையில் இயற்கையாக காடுகளிலும், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டும் காணப்படுகின்றன. 

ஒவ்வொரு சந்தன மரத்தையும் அரசுடையமாக்கி பாதுகாத்த  திப்புசுல்தான் இந்தியாவில் சந்தன மரங்களின் காவலனாக கருதப்படுகிறார் .திப்புசுல்தான் காலத்தில் சந்தனமரங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட  கடுமையான சட்டங்கள் 2000 த்தில்தான் சற்று தளர்த்த பட்டிருக்கிறது. 1792ல் திப்புவின் காலத்தில் அரமரமென்னும் அந்தஸ்தை சந்தன மரங்கள் பெற்றிருந்தன.

ஏராளமான சந்தன மரங்களை, சேகரித்து வைத்திருந்த  அவரது அரண்மனையை திப்பு சந்தனக்கோட்டை என்று குறிப்பிட்டார் 

திப்புவின் காலத்தில் ஆப்கானியர்கள், அரேபியர்கள் மற்றும் துருக்கியர்கள் சந்தன வாணிகத்தின் பொருட்டு தொடர்ந்து கர்நாடகத்திற்கு வந்து கொண்டிருந்தனர். 

 திப்பு வணிக ரீதியாக 18 சந்தன மர பொருட்களை அடையாளப்படுத்தி அவற்றிற்கு பெயர்களும் வைத்திருந்தார்.

இன்றளவிலுமே சந்தன எண்ணெயும் மரமும் மைசூருவில் பொன்னுக்கு நிகரகவே கருதப்படுகின்றன. குடகு  பகுதியில்  10000 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும்  600க்கும் மேற்பட்ட சந்தன வனங்கள் அனைத்தும் ’தேவர காடு’ தெய்வங்களின் வனம் என்று அழைக்கப்படுகிறது. சந்தன மரங்களை அறுவடை செய்யவும் வளர்க்கவும் அனுமதி வாங்கவேண்டி இருந்தாலும் இவற்றின் உலக சந்தை மதிப்பினால் கர்நாடக காடுகளிலிருந்து மட்டும் 500 டன் சந்தன மரக்கட்டைகள் வருடந்தோறும் திருடு போகின்றன.

ஆந்திராவிலும் வருடா வருடம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினசரி பூஜைகளுக்கும், திருமஞ்சன சேவைக்காகவும் சுமார்  அரை டன் சந்தனம் உபயோகிக்கப்படுகிறது 

திருக்கோயில் தேவைக்கென திருப்பதி தேவஸ்தானம் சொந்தமாக 100 ஹெக்டேரில் சந்தனமரக் காடுகளை வளர்த்து பாதுகாக்கிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு சந்தன மேனியன் என்றும் பெயருண்டு . 

ஸ்ரீ ரவிஷங்கரின்  Art of Living  அமைப்பும் ஏராளமான சந்தன மரங்களை வளர்த்து பாதுகாக்கிறது 

 இந்தியாவில் சிறந்த சந்தன மரங்கள் ஒரிஸாவில் வளர்கின்றன. உத்திரபிரதேச சந்தன மரங்கள் தரம் குறைந்தவையாக கருத படுகின்றன. 

சந்தன மரங்கள்  வேருடன் பிடுங்கி அறுவடை செய்யப்படுபவை. எனவே அவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது புதிய சந்தன மரங்கள்  வளர்ந்து பலன்கொடுக்க பல வருடங்கள் ஆகுமென்பதால் இந்திய சந்தனமரம் அழிவின் விளிம்பில் இருக்கிறது.

ஆஸ்திரேலிய சந்தன மரங்கள்

S.spicatum அலல்து Western Australian sandalwood ஆஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படும் சந்தன மரம். 20 அடி உயரம் வரை வளரும் இவை 10 வருடங்களிலேயே பலனளிக்க துவங்குகிறது.  30 வருடங்களில் முழுமையாக முதிர்ந்துவிடும்.  உறக்கமின்மை, சரும நோய்கள், மனப் பிறழ்வுகள்  மன அழுத்தம்  ஆகியவற்றிற்கான சிகிச்சைக்களுக்காக இந்திய அரேபிய சீன பாரம்பரிய மருத்துவங்களில் இவற்றின் தேவை மிக அதிகமாகி, உலகளவில் ஆஸ்திரேலிய சந்தனத்திற்கு தட்டுப்பாடு 1900தில் உச்சத்தில் இருந்தது.

1788ல் சிட்னி வியாபாரிகள் சீனாவின் தேயிலைக்கு மாற்றாக  பண்டமாற்றாக அளிக்க ஒரு பொருளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் மருத்துவ மற்றும் சமயம் சார்ந்த  சந்தனப் பயன்பாடு அப்போதுதான் தெரியவந்தது.அதன் பிறகு வேருடன் மரங்கள் அறுவடை செய்யப்பட்டது

முதன் முதலாக 4 டன் ஆஸ்திரேலிய சந்தனமரங்கள் சிங்கப்பூருக்கு 1844ல் ஏற்றுமதியான போது உலகமே அதன் தரத்தையும் இன்றியமையாமையையும் உணர்ந்தது. அப்போது ஒரு டன் 20 டாலர் மதிப்பிருந்தது.

 ஆஸ்திரேலிய சந்தன மரங்களான Santalum Spicatum  சுமார் 9000 ஹெக்டேரில் வளர்க்கப்படுகின்றன

ஆஸ்திரேலியாவில் பல  சந்தன மர வகைகள் இருக்கின்றன எனினும் அவற்றில்  S.Spicatum மற்றும் S.Lanceolatum. ஆகிய இரு வகைகளே வணிக ரீதியாக முக்கியமானவை.

1800களின் ஆரம்பத்தில் இவ்விரண்டு வகைகளுமே அதிகம் சாகுபடி செய்யப்பட்டு ஏற்றுமதியாகி கொண்டிருந்தன. குறிப்பாக சீனாவுக்கும் ஐரோப்பாவிற்கும் மிக அதிக அளவில் இவை அனுப்பப்பட்டன. 19 ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவின் துறைமுகங்களில் இருந்து ஐரோப்பாவுக்கு மட்டுமே  வருடந்தோறும் சுமார் 14000 டன் சந்தனம் ஏற்றுமதியானது. அப்போதிலிருந்து உலகின் முன்னணி சந்தன மர ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியாவே இருக்கிறது. 

சந்தன மரங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துவருவதை அறிந்தபின்னர் 1929ல் தான் இவற்றின் ஏற்றுமதிக்கும் அறுவடைக்கும்  சில கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலிய அரசு உண்டாக்கியது.1932ல் ஆஸ்திரேலிய சந்தனமரங்கள் பிரிடிஷ் பார்மகோபியாவில் இணைந்தது. ( British Pharmacopoeia).

ஆஸ்திரேலிய சந்தன மரங்கள்  Department of Protection and Wildlife (DPAW) கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவ்வமைப்பு முறையாக சந்தன மர விதைகளை, அறுவடை செய்யப்படும் மரங்களுக்கு இணையாக நட்டு வைப்பதால் நிலையாக  தொடர்ந்து சுமார் 2000 டன் சந்தன மரங்கள் இப்போது வருடந்தோறும் ஏற்றுமதியாகிறது 

 இந்திய சந்தன மரங்களில்  90 சதவீதம் இருக்கும் சாண்டலோல். (Santalol) ஆஸ்திரேலிய சந்தன மரங்களில் 40 சதவீதம் தான் இருக்கிறது. வேதிப்பொருள்களின் வகைகளிலும் அளவிலும் வேறுபாடுகள் இருந்தாலும் இந்திய சந்தன எண்ணெய்க்கும் ஆஸ்திரேலிய சந்தன எண்ணெய்க்கும் இருக்கும் மருத்துவ ஒற்றுமைகளும் அப்போதே கண்டறியப்பட்டிருந்தது

Santalum lanceolatum  டாஸ்மேனியா மற்றும் தெற்கு விக்டோரியாபகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் வளர்கிறது. Santalum spicatum  மேற்கு ஆஸ்திரேலியாவிலும் தென்மேற்கு ஆஸ்திரெலியாவின் சில பகுதிகளிலும் மட்டும் காணப்படுகிறது

ஆஸ்திரேலியாவின்  S. acuminatum வகை சந்தன மரங்களின் பெரிய சிவப்புக் கனிகள் உண்ணக்கூடியவை.  சதைப்பற்றான இக்கனிகளிலிருந்து பழக்கூழ் தயாரிக்கப்படுகிறது. 

ஹவாய் சந்தன மரங்கள்

 1790 ல் கேப்டன் ஜான் கெண்ட்ரிக் ( Captain John Kendrick)   ஹவாய் தீவுகளில் எரிவிறகுக்காக அமெரிக்ககப்பலை கரை சேர்த்தார். காட்டுமரங்களை வெட்டிச் சேகரிக்கையில்தான் ஹவாயின்   நறுமணமிக்க சந்தன மரங்களை ஜான் கண்டறிந்தரர்.  அதுவரை ஹவாய் பழங்குடியினரால் சமயச் சடங்குகளில், மருத்துவ சிகிச்சையில் மட்டுமே உபயோக பட்டுக்கொண்டிருந்த சந்தனமரங்கள் இந்த கண்டு பிடித்தலுக்கு பிறகு அமெரிக்கர்களுக்கு முக்கியமான வாணிப பொருளாக மாறிப்போனது.

ஹவாயின் சந்தன வளத்தை சீனாவும் அறிந்தது. சீனாவின் அதீத சந்தன தேவைகளுக்கென பல சீன வியாபாரிகள் ஹவாய் வர துவங்கினர். சந்தன மரங்களுக்கு பதிலாக பட்டும் சீனக்களிமண்ணும் வாங்கிக்கொண்ட ஹவாய் மக்கள் அவற்றை அமெரிக்கர்களுக்கு கொடுத்து பெரும் பொருளீட்டினர். 

ஹவாய் விரைவிலேயே ’சந்தன மலைப்பகுதி’ என்று பொருள்படும்  “Tahn Heung Sahn,” என்ற பெயரில் அழைக்கப்படலானது.

 ஹவாயின் அரசர் முதலாம் காமேஹமேஹா (Kamehameha 1) காலத்தில்  பண்டைய ஆசிய அளவு முறையான் பிகல்களில் (picul) ஒருவன் தோளில் சுமக்க முடியும் என்னும் அளவான 133 பவுண்டு எடைகொண்ட சந்தனக்கட்டைகள் 8 டாலர்களுக்கு விலைபோனது. அப்போது மலையிலிருந்து சந்தனக்கட்டைகளை கொண்டு வர ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்படி மலைகளிருந்து சந்தன கட்டைகளை  தொடர்ந்து சுமந்து கொண்டு வரும் ஹவாய் மக்களின் முதுகு காப்புக் காய்த்திருந்தது. சந்தன மரங்களின் சுமையால் காய்த்துப்போன முதுகு கொண்டவர்களை Kua-leho என்னும் காய்த்துப்போன முதுகுடையவன் என்னும் பெயரால் அப்போது அழைக்கப்பட்டனர். 

வரலற்றில் இந்த ஹவாய் சந்தனமரங்கள் எல்லாம் ரத்தம் தோய்ந்தவை என்றே குறிபிடப்பட்டிருக்கிறது. காட்டுச்சூழலில் வனவிலங்குகளாலும் குளிரிலும் ஊட்டச்சத்தில்லாத உணவுகளாலும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் இரவில் பந்தங்களின் வெளிச்சத்தில் கூட சந்தனமரங்களை வெட்ட துணிந்திருக்கிறார்கள்.

1819-ல் சந்தன மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்த போது விழித்துக் கொண்ட அரசர்  காமேஹமேஹா சுமைக்கூலியை விதித்து ஓரளவுக்கு ஏற்றுமதியை கட்டுக்குள் கொண்டு வந்தார் ஆனால் செய்து கொண்டிருந்த தொழில்களை எல்லாம் விட்டுவிட்டு சந்தன மர அறுவடைக்கே பெரும்பாலான மக்கள் சென்றதால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருந்தது.

அந்த வருடம் காமேஹமேஹா இறந்த பின்னர்  அவரது மகன் லிஹோலிஹோ (Liholiho) சுமைக்கூலி வரியை ரத்து செய்தார். 1820ல் ஹவாய் சந்தனம் ஏற்றுமதியின் உச்சத்தில் இருந்தது.

நாட்டின் பொருளாதாரத்திற்கென அமெரிக்கர்களிடம் கடன் பட்டிருந்த லிஹோ அரசர் அதைப்பற்றியெல்லாம் கவலையின்றி சந்தனமர லாபத்தில் ஏராளமான சொத்துகளையும் கப்பல்களையும் வாங்கி குவித்தார். லண்டனுக்கு சென்றிருக்கையில் உண்டான தொற்று நோயால் 1824ல் லிஹோ லிஹோ. இறந்தபின்னர் மூன்றாம் காமேஹமேஹா அரசரானார் அவர் முன்னால் அவரது முந்தைய அரசு அமெரிக்கர்களிடம் வாங்கி இருந்த கடன்  500,000 டாலர்களாக வளர்ந்து நின்றது. 

உண்மையாகவே கடன் கழுத்தை நெரித்ததால் அரசர் வேறு வழியின்றி செப்டெம்பர்  1, 1827. க்குள் ஒவ்வொரு குடிமகனும்i ஒரு பிகல் சந்தனக்கட்டைகள் அல்லது 4 ஸ்பேனிஷ் டாலர்களை அரசுக்கு செலுத்தியாக வேண்டும் என்று அறிவித்தார்

மீண்டும் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி தங்களின்  விவசாயம் உள்ளிட்ட  தொழில்களை நிறுத்திவிட்டு சந்தன மரங்களை வேட்டையாட துவங்கினர்.  அப்போது மட்டும் 13,000,000  பவுண்டு சந்தன மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன.. சந்தன மரங்களின் எண்ணிக்கை குறைய குறைய மேலும் மலை உச்சிகளுக்கு சென்று தேடத் துவங்கினர்  1840ல்  ஹவாயில் சந்தன மரங்கள் அரிதாகி சந்தன மர  வணிகம் முற்றிலும் நின்று போனது. பல தொழில்களும் முடங்கியதால் நாடு பெரும் வறுமையில் இருந்தது

மீண்டும் 1851மற்றும்1871 க்கு இடைப்பட்ட காலங்களில் தாவரவியலாளரும் தோட்டக்கலை நிபுணருமான விலியம் ஹில்லெப்ராண்டின்  (Dr. William Hillebrand) முயற்சியால்  ஹவாயில் மீண்டும் சந்தன மர சாகுபடி தீவிரப்படுத்தபட்டது. அவரது முதல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் அவர் தொடர்ந்து அவற்றை சாகுபடி செய்ய முனைந்தார்  30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹவாயில் மீண்டும் சந்தன மர வணிகம் துவங்கியது.

1930ல் நியூயார்க்கில் இந்திய சந்தனக் கட்டைகள் ஒரு டன் 500 டாலர்கள் என விற்கப்பட்டபோது அமெரிக்க அரசு ஹவாயில் இந்தியாவிலிருந்து வாங்கிய சந்தன மர விதைகளிலிருந்து உருவாக்கபட்ட  1500 நாற்றுக்களுடன் சந்தன மர சாகுபடியை துவங்கியது துணை மரங்களாக வளர்ந்த, கத்திச்சவுக்கு மரங்களிலிருந்து  ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு சந்தன மரங்கள் செழித்து  வளரத் துவங்கின. அப்போதைய நாளிதழ்கள்  ’’ஹவாயின் பழைய தங்கச்சுரங்கங்களான சந்தன மரங்கள் மீண்டும் வந்துவிட்டன’’ என்று எழுதின.

1992ல் Mark Hanson  என்பவர் தனது  கனவில் ஹவாய் தீவு தோன்றி தன் மலை உச்சியில் இருக்கும் சந்தன மர விதைகளை சேகரிக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறினார்.  அவர் விதைகளை மலை உச்சிகளுக்கு சென்று  சேகரித்து மிக துரிதமாக நாற்றுக்களை வளர்க்க துவங்கினார். இரண்டு 2 வருடங்களுக்கு பின்னர் 40 சந்தன மரங்களும் 30 இயல் மரங்களும்  அவரால் ஹவாயில் வளர்ந்தன.

ஹவாய் மக்களால் சந்தன மனிதர் என்று பிரியத்துடன் அழைக்கப்பட்ட மார்க், 1994 ல் ஹவாய் மீள் காடமைப்பை (reforestation) துவங்கி இயல் மரங்கள் மற்றும் சந்தன மரங்களின் விதைகளை சேகரிப்பது அம்மரங்களை பாதுகாப்பது ஆகிய முயற்சிகளை பெரிய அளவில் துவங்கினார். நாற்றங்கால் பராமரிப்பில் ஹவாய் பள்ளிச்சிறுவர்களையும் ஈடுபடுத்தினார் வெகு விரைவிலேயே ஹவாய் பசுமை பெருக்கினால் நிறைய துவங்கியது.

மார்க் பிற நாடுகளுக்கும் சந்தன விதைகளையும் நாற்றுக்களையும் ஆயிரக்கணக்கில் பரிசளிக்கவும் செய்தார். 

உலக சந்தையிலிருந்து காணாமல் போயிருந்த “Iliahi” என்றழைக்கப்படும் Santalum paniculatum  என்னும் ஹவாய்  சந்தனமரங்கள் ஒரு தனி மனிதனின் முயற்சியால் மீண்டும் வெற்றிகரமாக ஹவாய் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தின.

பயன்கள் 

தோற்றத்தில் வெண்மையாகவும் அரைத்த விழுது இளமஞ்சள்  நிறத்திலும் இருப்பதே மிகச்சிறந்த சந்தனம்.  

பண்டைய தமிழகத்தில் சந்தானம் பல்வேறு வகைகளில் உபயோகிக்கப்பட்டது. மங்கல விழாக்களில் சந்தனம் பூசிக்கொள்வது வழக்கமாக இருந்தது.  செல்வந்தர்கள் வீட்டு திருமணங்களில் பெரிய மனிதர்களுக்கு  மார்பில் சந்தனம் பூசி, தாசிகள்  சன்மானம் பெற்றுக் கொள்வது பெரும் கெளரவமாக கருதப் பட்டிருக்கிறது. சந்தனத்தின் பாலுணர்வை தூண்டும் குணத்தினால் புதுமணத் தம்பதியருக்கு சந்தனம் பூசுதல் ஒரு சடங்காகவே நிகழ்ந்து வந்திருக்கிறது.

தலைமுடியை காணிக்கை அளிப்பவர்கள்  தலையில் சந்தனம் பூசிக்கொள்வதும், தெய்வ திருவுருக்களுக்கு அலங்காரங்கள் செய்வதில் சந்தனகாப்பு எனப்படும் அரைத்த சந்தன விழுதால் முழுவதும் பூசுவதும் அந்த காப்புச்சந்தனம் உலர்ந்தபின் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுவதும் இன்றும் பல கோயில்களில் நடந்து வருகிறது.

 தாம்பூலம் தரித்துக்கொள்ளுகையில் சிறு துண்டு சந்தனம் சேர்த்துக்கொள்ளும் வழக்கமும்  இந்தியாவில்  இருந்திருக்கிறது சந்தனம் மரக்கட்டைகளாகவும், வில்லைகளாகவும் தூளாகவும் தைலமாகவும், செதுக்குச் சிற்பங்களாகவும் கிடைக்கின்றன.

.சந்தன மரத்தின் கட்டைகளிலிருந்து மட்டுமல்லாது  கனிகளின் விதையிலிருந்தும் மணமற்ற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் இருக்கும் ஜிம்னேமிக் அமிலம் அழகுசாதன பொருட்களின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிக பாலிஃபீனால்கள் கொண்டிருக்கும் சந்தனத்தின்  இளம் இலைகளும் மருந்தாக  பல்வேறு சிகிச்சைகளில் பயன்படுகின்றன.

பாதுகாப்பான கொசு விரட்டிகளாகவும் சந்தன குச்சிகள் எரித்ஊ பயன்படுத்த படுகின்றன..

 வழிபாட்டில் ஸ்ரீகந்தம் என்று சந்தனம் அழைக்கப்படுகிறது.   இந்தியகோவில்களிலும் பெரும்பாலான இந்தியவீடுகளிலும் எப்போதும் சந்தனமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். 

இந்தியர்களின் வாழ்வில் நெற்றியில் சந்தனக்குறி தீற்றிக்கொள்வதிலிருந்து  சிதை விறகு வரை  சந்தனம்  இடம்பெற்றிருக்கிறது..1948ல் மகாத்மா காந்தியிலிருந்து 2018 ல் வாஜ்பாய் வரையிலும் சந்தன மரங்களில்தான் எரியூட்டப்பட்டார்கள். இந்தியாவில் சில குறிப்பிட்ட இனத்தவர்களின் சிதைவிறகுகளில் ஒரே ஒரு சந்தன விறகாவது வைக்கும் பழக்கம் இருக்கிறது.

நூற்றாண்டுகளாக இந்தியா மற்றும் அரேபிய வாசனை திரவங்களில்  சந்தன தைலம் பயன்பட்டு வருகிறது

 ஆயுர்வேத மருத்துவம்  பல சரும நோய்களுக்கு தீர்வாக சந்தன தைலத்தையும் குழைத்த சந்தனப் பொடியையும்  பரிந்துரைக்கிறது. 

புத்த மதத்தில் தியானம் செய்கையில் சந்தன ஊதுவத்திகளின் மணம்  தியானிப்பவர்களை பூமியில் இருப்பவர்கள் என்று உணர செய்கிறது  எனப்படுகிறது. 

சந்தன மரக்கட்டைகளை தூளாக்கி  காய்ச்சி  வடிகட்டுகையில் கிடைக்கும் சந்தன எண்ணெய் சந்தன மரங்களைக்காட்டிலும் மிக அதிகம் விரும்பப்படுகிறது.

நிலவுக்கும் நீருக்குமான மரமாக குறிப்பிடப்படும் சந்தனமரம் பாலுணர்வை தூண்டும்,  குளிர்ச்சி அளிக்கும் மற்றும் சருமநோய்களை  தீர்க்கும் மருந்தாக இருக்கிறது.

இந்து மத பக்தர்கள் சந்தனம் நெற்றியில் குறியிட்டு கொள்வது மரபு அதிலும் கிருஷ்ணனை வழிபடுகிறவர்கள் உடலில் சந்தனம் பூசிக் கொள்வது வழக்கம்.

 இந்தியாவில் மட்டும் சுமார் 500 மில்லியன் சந்தன ஊதுவத்திகள் நாள் தோறும் பயன்படுகிறது. பல நாடுகளில் சந்தன மரக்கட்டைகளில் தங்களது விருப்பங்களை எழுதி நெருப்பில் இட்டு எரித்தால் விருப்பங்கள் நிறைவேறும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. வீட்டுத்தோட்டங்களில் சந்தனம் வளர்ப்பது தீய சக்திகளை விலக்கும் என்றும் இந்தியாவில் நம்பப்படுகிறது.

பர்மாவில் சந்தன நீரை ஒருவர் மீது தெளித்தால் அவரது பாவங்கள் கழுவப்பட்டு அவர் தூய்மையாக்கப்படுகிறார் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. 

செளராஷ்டிர சடங்குகளில் மனிதகுலத்தின் அனைத்து துயர்களுக்கும் தீர்வாக  யாக குண்டங்களில் சந்தனக்கட்டைகளை அவியாகுவது  வழக்கமாக இருக்கிறது.

கத்தோலிக்க தேவாலயங்களிலும், யூத மடங்களிலும் சந்தன ஊதுவத்திகள் பயன்படுத்தபடுகின்றன.

இருபுருவங்கள் இணையும் புள்ளியில் சந்தன குறியிட்டுக்கொள்ளுவது உடலின் அக்னியை தணிக்கும். 

இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு சந்தன மரச் சீவல்களால் உருவாக்கப்பட்ட  மாலை போடப்படும் வழக்கமும் இந்தியாவில் உண்டு.

உற்பத்தியும் தேவையும்

சந்தனத்திற்கு உலகெங்கிலும் வணிகம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் இருந்தபோதிலும், இந்தியாவில் சந்தன மர மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான திட்டங்கள் குறைவாகவே உள்ளன.

சந்தனத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக சந்தன மரங்களை பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது 

கடந்த 200 வருடங்களாக  உலகளாவிய சந்தனத்தின் தேவை மிக அதிகரித்திருக்கிறது  சந்தனமரத்தின் தேவை இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தாய்வானிலும் அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கிறது.  உலகின் மொத்த சந்தனமர தேவையை காட்டிலும் நான்கில் ஒரு பங்குதான் உற்பத்தி ஆகிறது எனவே இதன் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது 

கடந்த 75 வருடங்களில் இந்திய சந்தன மர உற்பத்தி மெல்ல மெல்ல சரிந்து கொண்டே வருகிறது. 1940களில் ஆண்டுக்கு 4000 டன் உற்பத்தி செய்து கொண்டிருந்த இந்தியா இப்போது வெறும்  20-50 டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது.

உலகத்தின் பிற பகுதிகளிலிருந்து இந்திய சந்தனம் மற்றும் சந்தனப் பொருட்களுக்கான தேவை சுமார் 6000 டன் ஆக இருக்கையில் இந்திய உற்பத்தி தேவைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத அளவில்தான் இருக்கிறது 

காட்டு சந்தனமர வகைகள் முழுவதும அழிந்துவிட்டிருக்கும் நிலையில் மிக மெதுவாக வளர்ந்து பலன் அளிக்கும் சாகுபடி செய்யப்படும் வகைகளும் அதிக அளவில் திருட்டு போவதால் இவை அழியும் அபாயத்தில் இருக்கின்றன. இந்திய சந்தன மரங்களுக்கு மாற்றாக அதிகம் உபயோகிக்கப்படுவதால் ஆஸ்திரேலிய சந்தன மரங்களும் இப்போது அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றன. உலகின் கவனம் இப்போது விரைவில் வளரும் வகையான ஹவாய் மரங்களின் மீது திரும்பி இருக்கிறது.

சந்தன மணத்துக்கு காரணமான alpha-santalol மற்றும் beta-santalol இரண்டிற்கும் இணையான நறுமணத்தை அளிக்கும் செயற்கை வேதி பொருட்கள் இருப்பதால் சந்தனப் பொருட்களில் போலிகள் மிக அதிகமாக இருக்கின்றன

2014 ல் இந்தியாவில் 20,725 ஹெக்டேரில் சந்தன மரங்கள் சாகுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இவை முதிர்ந்து அறுவடை செய்ய இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்

தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் மிக விலையுயர்ந்த பொருளாக கருதப்படும் சந்தன மரங்கள்IUCN Red Listல்  அழிந்துகொண்டிருக்கும் வகையில் ஆவணப்படுத்தபட்டிருக்கின்றன.அதிகரிக்கும் உலகத்தேவையின் அளவுகேற்ப அதை பாதுகாத்கும் முயற்சிகள் நடைபெறுவவதில்லை 

சட்டங்கள்

சமீப காலமாக ஆசியாவின் சந்தனத் தேவை மிக அதிகரித்து, சந்தன மரங்களை அழிவின் விளிம்பில் நிறுத்தி இருக்கிறது. அதன் பொருட்டே சந்தன மர வளர்ப்பு, அறுவடை ஆகியவற்றிற்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டிருக்கின்றன. இத்தனை காவலும் சட்டமும் இருந்தும் சந்தன திருட்டுகளும் நடந்துகொண்டே இருக்கின்றன.

 இந்தியாவெங்கிலும் குறிப்பிட்ட பருமன் உள்ள சந்தனமரங்கள் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் வளர்ந்தாலும் அவை அனைத்தும் அரசுக்கு சொந்தமென்றும் அவற்றை வனத்துறை அனுமதியின்றி வெட்டுவதும் விற்பதும் குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

எனினும் சந்தன மரங்களை வளர்ப்பவர்கள் ஒரு போதும் தண்டிக்கப்படுவதில்லை. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஐந்தாண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். முன்பு சந்தன மரத்தின் மூலம் வரும் வருமானத்தில் 25% அரசுக்கு வரியாகவும், 75% வளர்ப்பவர்களுக்கு வருமானமாகவும் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மொத்தத் தொகையும் வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

பண்டைய இந்தியாவில் குறிப்பிட்ட  மரங்கள் தெய்வீக நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் மத முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன, பல மர இனங்கள் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றில் முதன்மையான பங்கை கொண்டுள்ளன,  

ஆசியாவின் கீழைத்தேய மற்றும் தாவோயிக் மதங்கள் மரங்களுக்கு ஒரு புனிதமான இடத்தை அளித்தன.இந்திய சந்தனம் அதன் தனித்துவமான இயற்கை பண்புகள் காரணமாக தாவர உலகத்தின் அரிதான ஆபரணமாக ஜொலிக்கிறது.

ரவீந்திரநாத் தாகூர் வெறுப்பை விட அன்பே பெரிது என்பதை சொல்ல ’’வெட்டும் கோடாலியையும் மணக்க வைக்கும் சந்தன மரங்களை சொல்லலாம்’’ என்று கவித்துவமாக குறிப்பிட்டிருக்கிறார்.

 இந்தியாவில் மாநில எல்லைகள் மறுசீரமைக்கப்படும் முன்னரே  மைசூரு பல்கலைக்கழகத்தின் கன்னட, ஆங்கில துறைகளின் புகழ்பெற்ற  முன்னாள் பேராசிரியரான பி எம் ஸ்ரீகண்டையா (B. M. Srikantaiah) கன்னடத்தில் ஒரு பிரபல பாடலை எழுதி இருந்தார்.

’’பொன்னின் நாடு மைசூரு
சந்தனக்கோவிலும் மைசூரு
வீணையின் நாதமும் மைசூரு
கிருஷ்ணனின் நாடும் மைசூரு’’

 கர்நாடகத்தின் சந்தனப்பெருமையை சொல்லும் இந்த  நாட்டுப் பாடலை மொத்த இந்தியாவுக்குமே பொருத்திக்கொள்லாம்.

தெய்வத்திருவுருவங்களுக்கு சந்தனகாப்பு இடுவதின் முக்கியத்துவத்துக்கு இணையாக   அழிந்துவரும் சந்தனமரங்களை காப்பதிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே அடுத்த தலைமுறையினருக்கும் இயற்கையின் இந்த அரிய பொக்கிஷம் அளிக்கப்படும்.