சர்வதேச மகளிர் தினம் இன்று. இப்படியொரு தினத்தைப் பிரத்யேகமாகக் கொண்டாடுவதே உலகில் பெண்களின் நிலை என்ன என்பதைக்காட்டுகிறது.
நான் பதின்ம வயதில் இருக்கையில் தொலைக்காட்சியில் HBO`வில் ஏதோ ஒரு ஆங்கிலப்படம். படத்தின் பெயர் நினைவிலில்லை ஆனால் ஒரு காட்சி மட்டும் அச்சடித்தது போல் நினைவிலிருக்கிறது.
கணவன் கூடத்தில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக்கொண்டிருப்பான், குழந்தை கீழே விளையாடிக்கொண்டிருக்கும். மனைவி சமையலறலையில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருப்பாள். கொஞ்சநேரத்தில் கணவன் உள்ளே வந்து மனைவியிடன் நெளிந்துகொண்டே “நீ தள்ளிக்கோ நான் பாத்திரம் தேய்க்கிறேன்“ என்பான். அவள் அவனை விசித்திரமாகப்பார்த்துக்கொண்டே “என்ன திடீர்னு வேண்டாம் நானே செய்யறேன்“ என்பாள் மீண்டும் கணவன் “இல்லை நீ வேணா போய்க் குழந்தையப் பார்த்துக்கோ, நான் இதைச்செய்யறேன்“ என்பான். மனைவி கையைக்கழுவிக்கொண்டு கூடத்துக்குச்செல்வாள்.அங்கு குழந்தை மலம் கழித்திருக்கும். கணவனை அருவருப்புடன் பார்த்தபடி குழந்தையை எடுக்கச்செல்வாள்,
இது அமெரிக்கா என்கிற வல்லரசில் பல ஆண்டுகள் முன்பு நடந்தைக்காட்டிய ஒரு திரைக்காட்சி. இன்னும் அப்படியேதான் அல்லது அதைக் காட்டிலும் கேவலமாகத்தான் இருக்கிறது பெண்களின் நிலைமை.
கல்லூரியில் அலுவலக நேரம் முடிந்தும் சில சமயம் கூட்டங்கள் நடக்கும். அப்போது பெண் பேராசிரியர்கள் அனைவருமே நிலைகொள்ளாமல்தான் இருப்போம், ஏனென்றால் மாலை குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவருவது. பால்காரரிடம் பால் வாங்குவது, வீட்டில் இருக்கும் பெரியவர்ளைக் கவனித்துக்கொள்வது, காலையில் ஊற வைத்த உளுந்து அரிசியை மாவாக்குவது, கூட்டிப்பெருக்கி, விளக்கேற்றி, என பல நூறு வேலைகள் எங்களுக்குக்காத்திருக்கும்.
ஆண்களோ எந்தக்கவலையுமின்றி மேலும் மேலும் தேவையற்றவைகளைப் பேசிக்கொண்டு காலம் தாழ்த்திக்கொண்டிருப்பார்கள் ஏனென்றால் எத்தனை தாமதமாகப்போனாலும் அவர்கள் உடைமாற்றிக்கொண்டதும் காபியோ தேநீரோ இரவுணவோ கொண்டு வந்துகொடுக்கப்படும் எனவே அவர்களுக்கு நேரம்குறித்த கவனம் இருப்பதே இல்லை.
மகன்கள் பள்ளியில் படிக்கையில் நானும் அப்படியான கூட்டங்களிலிருந்தோ, கல்லூரியின் கடைசி வகுப்பிலிருந்தோ அப்படியே கார் நிறுத்துமிடத்துக்கு பாய்ந்து செல்வேன். வகுப்பறைகளில் மின் விசிறி இருப்பதால் கைகள்,தலையெல்லாம் சாக்கட்டியின் தூள் படிந்திருக்கும் , அப்படியே பள்ளிக்குச்சென்று காத்திருக்கும் மகன்களை அழைத்துக்கொண்டு அவர்களின் அன்றைய நாளைக்குறித்துக் கேட்டுதெரிந்துகொண்டு வழியில் நிறுத்தி நிறுத்தி காய்கறியோ திண்பண்டங்களோ வேறுஏதாவதோ வாங்கிக்கொண்டு வீடு வருவேன்.
பெற்றோர் ஆசிரியக்கூட்டங்களுக்கு கல்லூரியில் விடுப்பெடுத்துக்கொண்டு போவது, ப்ராஜெக்ட்களுக்கு மெனக்கெடுவது, ஸ்போர்ட்ஸ்டே, ஆன்னுவல் டேக்களுக்கு தயார்ப்படுத்துவது, ஏதேனும் புகார்களென்றால் உடனே பள்ளிக்குப்போய் என்னவென்று கேட்டுச் சரிசெய்வது, பதின்மவயதில் மகன்களின் மனக்குழப்பத்துக்கு, பிரச்சனைகளுக்கெல்லாம் உடன்நிற்பது, வளரும் வயதுக்கு தேவையான உணவைச் சுவையாகச் சமைத்துக்கொடுப்பது, கூடவே கல்லூரிவேலை, சமையல், இல்பேணுதல், நல்லது கெட்டதுகளுக்குச் செல்வது விருந்தினர்களின் வருகையைச்சமாளிப்பது, என இப்போது நினைத்துப்பார்த்தால் மலைப்பாயிருகிறது. கூடவே மாதாந்திர விலக்குநாட்களின் சுமையும் இருக்கும்.
பள்ளியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு, சன்மானம் தரவேண்டியதில்லை என்பதால் மாணவர்களின் பெற்றோர்களை(non financial contribution) பேசுவதற்கு அடிக்கடி அழைப்பார்கள். அப்படியும் பலமுறை சென்றிருக்கிறேன்.
ஆனால் பள்ளியின் விழாக்களுக்கு வீட்டுக்கு அழைப்பிதழ் வருகையில் பள்ளி அதுவரை பார்த்தே இருக்காத அப்பாவின் பெயரில் மட்டும்தான் அழைப்பிதழ் அனுப்பப்படும்.
இன்றும் இதே நிலைதான் தொடர்கிறது. முன்பு ஆண்கள் மட்டுமே சம்பாதித்துக்கொண்டிருந்த நாட்களில் உண்டி சுருங்குதல் பெண்டிருக்கும் ,உத்தியோகம் புருஷர்களுக்கும் லட்சணமாகச்சொல்லப்பட்டது. பெண்களும் வேலைக்குச்செல்லும் இப்போதும் அதுவே தொடருவது துயரளிக்கிறது என்றால், ஒட்டுண்ணிகளாகப் பெண்களை உறிஞ்சி சக்கையெனத் துப்பும் ஆண்களும் பெண்கள் தினத்துக்கு எந்த வெட்கமும் இல்லாமல் வாழ்த்துவது எரிச்சலூட்டுகிறது.
எனக்குத்தெரிந்த பல குடும்பங்களில் வாழ்வின் இயங்கியல் சார்ந்த பல நம்பிக்கைகள் தடைகள் சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன, அன்னக்கை எனப்படும் சாதம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கரண்டியை நீர் நிரம்பிய ஒரு தட்டில் தான் வைக்கவேண்டும் அது ஒரு போதும் காய்ந்துவிடக்கூடது என்பதில் மிகக்கவனமாக இருக்கும் ஒரு குடும்பம் அவர்கள் வீட்டுப்பெண்களை குடும்பத்து ஆண்கள் பலர் முன்னிலையில் தாழ்வாகவும் இழிவாகவும் நடத்துவதை பொருட்டாகவே நினைப்பதில்லை. பெண்கள் அப்படித்தான் நடத்தப்படவேண்டும் என்று நம்புகிறார்கள் போல.
சமீபத்தில் ஒரு குடும்பத்தில் குலதெய்வ விழா எனக்கும் அழைப்பிருந்தது போயிருந்தேன். குலத்தின் ஆண்கள் 11 நாட்கள் கடும் விரதமிருந்து கைக்காப்புக் கட்டிக்கொண்டு எங்கோ தொலைவிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்திருந்தனர். தீர்த்தக்குடங்களை கோவில் வளாகத்தில் அடுக்கி வைக்கையில் ஒருகுடும்பத்துப்பெண் செய்த சிறு கவனக்குறைவிற்காக அவரது கணவர், அந்த விரதம் இருந்து விபூதிப்பட்டையும் குங்குமமும் காவிவேட்டியுமாக தெய்வீகமாக தோற்றமளித்தவர், ஒரு பச்சையான கெட்ட வார்த்தையைச்சொல்லித் திட்டினார். அவரது குலத்தைக் காப்பதாக அவர் நம்பும் அவர்களது குலதெய்வமும் ஒரு பெண்தான். அந்த அம்மன் சிலை முன்புதான் இது நடந்தது.
என் மாணவி ஒருத்தி எனக்குத்தெரிந்த ஒரு நிறுவனத்தில் வரவேற்பாளினியாக இருக்கிறாள். அவளையும் அவளது அம்மாவையும் அவளது குடிகாரத்தகப்பன் எப்போதும் சந்தேகப்பட்டு மிகக்கொடுமை செய்வான். சமீபத்தில் வேலைக்குப்புறப்பட்டுச்சென்ற அவளை முழுப்போதையில் துரத்தி வந்து பேருந்துக்குள் நுழைந்து தென்னைமட்டையால் அடித்திருக்கிறான். பெண்களை வெளி உலகின் ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றுவதைப்போலவே குடும்பவன்முறையிலிருந்தும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது.இங்கெதற்கு பெண்கள் தினம்?
நான் முன்பிருந்த வீட்டருகில் பெண்களுக்காக இயங்கிய பெண்களால் நடத்தப்படும் காவல்நிலையம் இருக்கிறது. அங்கு அப்போது உதவிக்காவலராக இருந்த, குடும்ப வன்முறை கேஸ்களை எளிதாக ஹேண்டில் செய்யும், எஸ்தர் என்பவரை ஒருநாள், அவரது வேலைவெட்டி இல்லாமல் காவலர் குடியிருப்பில் குடித்துவிட்டு அலப்பறை செய்வதை மட்டுமே செய்துவந்த கணவன் ஸ்டேஷனுக்குள் நுழைந்து அடித்து அவரது கையை முறித்தான்.
காவலர் குடியிருப்புக்கருகில் வசித்த நான், எஸ்தரின் வீட்டுக்கு முன்பாக மனைவியை அடிக்கப்போன ஒருவனை எஸ்தர் காதோடு சேர்த்து அறைந்து அவன் தலைகுப்புற மண்ணில் விழுந்ததை ஒருமுறை பார்த்தேன்.
எத்தனை உயர்ந்த சமூக அந்தஸ்துள்ள பணியில் இருந்தாலும், குடும்பத்தினரால் இழிவு படுத்தப்படுவதை எந்தப்புகாரும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளவும் பெண்கள் நூற்றாண்டுகளாகப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.
எங்கள் குடும்பத்திலேயே காதலித்ததற்காகக் கழுத்தில் சுருக்கு வைத்து கொல்லப்,பட்ட பெண்கள் இருந்தார்கள். பாம்பு கடித்ததாகச்சொல்லப்பட்டு வாசலில் மஞ்சள் நீரூற்றி ஈரமாகக் கிடத்தப்பட்டிருந்த அருக்காணி அத்தையின் மகளின் கழுத்தைச்சுற்றிலும் சிவப்பாக இருந்த கயிற்றின் தடம் ஒரு ரோஜா மாலையால் மறைக்கப்பட்ட போது நானும் அருகிலிருந்தேன்.
காதலை முறித்து வலுக்கட்டாயமாக வேறொருவருக்கு மணம் செய்துவைக்கப்பட்ட, முன்காதலையும் மறக்கமுடியாமல் கணவனுடன் மனதொன்றியும் வாழமுடியாமல் இருதலைக்கொள்ளியாய் அவஸ்தைப்படும் நூறு நூறு பெண்கள் எனக்குத்தெரிந்து இருக்கிறார்கள்.
காதலைச்சொல்லகூடத் துணிவில்லாமல் கழுத்தை நீட்டிக், குடும்பமென்னும் கற்பிதங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த பல நூறு பெண்களையும் நானறிவேன்.
கூடி இருப்பதால்தான் அது குடி என்றும் அதில் இயங்குவதுதான் குடித்தனம் என்றும் வகுக்கப்பட்டது. அப்படிக் கூடக் கூடி இருப்பதன் பாதகங்களை, சிரமங்களை, குடும்பச்சுமையை தோளில் ஏற்றிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக, உடலில் இளமையும் கண்களில் கனவுகளும் நிரம்பி இருக்கும் மனைவிகளைத் தனியே இல்பேணவும், குழந்தைகளை வளர்க்கவும், வீட்டுப்பெரியவர்களை பராமரிக்கவும் பணித்துவிட்டு, வெளிநாட்டிலும் வெளியூரிலும் பணம் சம்பாதிக்கப் பிரிந்துசென்று, அங்கேயே வாழ்ந்து, விடுமுறைக்கு விசிட்டிங் கணவர்களாக வந்துசெல்லும், மடியில் வந்து விழுந்த வாழ்வெனும் கனியை ருசிக்கத்தெரியாத முழுமுட்டாள் கணவர்களும் பல நூறுபேர் இருக்கிறார்கள்.
பேருந்து நிலையங்களில் இன்றும் இங்கெல்லாம் சாதரணமாகப் பார்க்கமுடியும் பேருந்தைவிட்டு வேட்டியை, லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டோ, பேண்ட் பாக்கட்டில் கைகளை விட்டுக்கொண்டோ இறங்கி, விரைந்து முன்னே நடந்துசெல்லும் கணவர்களையும், இரண்டு கைகளிலும் பைகளையும் குழந்தைகளும் பிடித்துக்கொண்டு கணவன் சென்ற திசையில் ஓட்டமாக ஓடும் பெண்களையும்.
அரிதாகவே குழந்தைகளைத் தோளில் எடுத்துக்கொள்ளும், மனைவியுடன் இணையாக நடந்துசெல்லும் ஆண்களைப் பார்க்கமுடியும்.
பத்தாம் வகுப்புப்படிக்கும் தன் மகள் காலையில் வைத்துக்கொண்ட கனகாம்பரச்சரம் வாடியிருந்த பின்னலை மாலை பள்ளி விட்டு வந்து இயல்பாக கொண்டைபோட்டுக்கொண்டதற்கு “விலைமகளே கொண்டையைப்பிரி“ என்று தெருவில் நின்று கூச்சலிட்ட ஒரு தகப்பனை நானறிவேன். விலைமகள்கள் கனகாம்பரம் வைத்துக்கொள்வார்களென்பது அந்த ஆணுக்குதெரிந்ததுபோல அந்தச் சிறுமிக்கு தெரிந்திருக்கவில்லை.
நானும் எனது சகோதரியும் அம்மாவும் எதாவது ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் நாட்களில் வீட்டுக்கூடத்துக்கு கூட வர அனுமதிக்கப்பட்டதில்லை. எல்லா முடிவுகளையும் வெறும் ஆணாக மட்டுமே இருந்த அப்பா என்பவர் தான் எடுத்தார், நிறைவேற்றினார். அதில் பெரும்பாலான முடிவுகள் மகா கேவலமானவை.
எனக்கும் அக்காவுக்கும் அப்போதைய பெருங்கனவென்பது எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது செத்துப் போகவேண்டுமென்பதுதான். இரண்டுக்குமே துணிவில்லை என்பதால் இன்றும் உயிரோடு இருக்கிறோம். ஒரு போதும் சொன்னதில்லை என்றாலும் 50 வருட மணவாழ்வில் ஒரு தென்னிந்தியப் பெண்ணுக்கு சாதாரணமாக இழைக்கபப்டும் அனைத்து அநீதிகளையும் தாங்கிக்கொண்டு 82 வது வயதில் செத்துப்போன என் அம்மாவுக்கும் அதுதான் கனவாக இருந்திருக்கும்.
சிண்டெரெல்லா ஒருபோதும் ஒரு இளவரசனுக்காக காத்துக்கொண்டிருக்கவில்லை அவளுக்கு நல்ல உடை அணிந்துகொண்டு ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு வெளியே செல்லவேண்டுமென்பதுதான் கனவாக இருந்தது.இளவரசன் தான் ஒரு மணப்பெண்ணுக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.
நான் பதின்மவயதில் எப்படி இருந்தேனென்று எனக்குத்தெரியவே தெரியாது ஒரே ஒரு புகைப்படம் கூட எடுக்கப்பட்டதில்லை, எடுக்க அனுமதிக்கப்பட்டதும் இல்லை. இன்று அதற்குப் பிழையீடாகத்தான் ஆயிரமாயிரம் புகைப்படங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்கிறேன்.
சமூக ஊடகங்களிலும் பெண்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
சிம்பு முன்பு ஏதோ ஒரு பாடலில் பெண்ணை இழிவு படுத்தும் ஒரு சொல்லை பீப் ஒலியால் மறைத்ததற்கு பெண்கள் அமைப்புக்கள் கொடி பிடித்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அந்த அமைப்புகள் ஒருபோதும் “புல்வெளியாகிறேன் இப்பொழுது என்னை ஆடுதான் மேய்வது எப்பொழுது“ போன்ற வெளிப்படையான ஆயிரமாயிரம் பாடல்வரிகளுக்கெல்லம் ஏன் எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை?
இப்போது ஒரு அரசியல் நகைச்சுவையாளர், விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் என்று பெயர் வைப்பதுபோல சற்றும் பொருத்தமில்லாத பெயரை வைத்துக்கொண்டிருக்கும் அவர், தனது முன்காதலியை விலைமகள் என்று சமூக ஊடகங்களில் பேட்டிகொடுக்கையில் அதைப் பெண்கள் ஆண்கள் என யாரும் எதிர்க்காதது மட்டுமல்ல, அவருக்குப் பின்னே கும்பலாக நின்று கேலியாகச்சிரிக்கும் கூட்டத்தினரும் அதிர்ச்சி அளிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வீட்டில் அன்னை மனைவி மகள் சகோதரிகள் இருக்கிறார்கள் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
உண்மையில் ஆண்கள் மகிழ்ந்துகொள்ள வேண்டும் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் இழிவு படுத்தப்பட்டும் பழிவாங்கப் புறப்படாமல் பெண்கள் சமஉரிமை மட்டும்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு.
கல்லுரியில் இன்று படிகளில் ஏறி என் அறைக்கு வருகையில் எனக்கெதிரே கிளர்ந்தொளிரும் இளமையுடன் ரோஜ நிற ஈறுகள் தெரியச் சிரித்தபடி என்னைக்க்டக்கும் மாணவிகளைப் பார்க்கையில் கலக்கமாக இருக்கிறது இவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்னும் பதைப்பு எனக்குள் நிரந்தரமாக இருக்கிறது.
இதோ எனக்கு அடுத்த வகுப்பு stress physiology, ரெஃபெர் செய்ய ஒரு புத்தகத்தை எடுத்தேன். Biological clock என்பதற்கு உதாரணமாக //sleeping and awakening in man are caused by biological clock// என்றிருக்கிறது. ஏன் அது human என்று குறிப்பிடப்படவில்லை?

1863-ல் வெளியான தாமஸ் ஹென்றியின் Evidence as to Man’s Place in Nature. என்னும் நூலில் “March of Progress” என்னும் பிரபலமான தலைப்பில் வெளியான பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து மனிதகுலம் உருவானதைச் சித்தரிக்கும் படத்திலும் குரங்கிலிருந்து ஒரு ஆண் தான் உருவாகிறான் பெண்ணல்ல. 2025-லும் அறிவியல் புத்தகத்தில் ஆண் தான் இருக்கிறான்.
பெண்கள் இல்லவே இல்லையா இந்த உலகில்?பிறகென்ன பெண்கள் தினமும் கொண்டாட்டமும்? shame!
Leave a Reply