
ஜெ சமீபத்தில் பாவோபாப் மரங்களைக் கர்நாடகத்தில் பார்த்ததை தொனமையின் தொடரில் என்னும் கட்டுரையில் எழுதியிருந்தார். நானும் சில வருடங்களுக்கு முன்னர் கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் அருங்காட்சியகத்துக்கு முன்னால் அதிலொன்று நிற்பதைப் பார்த்தேன். இந்தியாவில் பாவோபாப் மரங்கள் சுமார் 1000-தான் இருக்கின்றன, இவை அரிய மரங்கள் என்பதே பலருக்கும் தெரியாது. ஜெ அதில் மிகப்பெரியவற்றை, பாதுகாக்கப் பட்டவற்றை நேரில் பார்த்ததும் புகைப்படங்களை பிரசுரித்திருப்பதும் மகிழ்ச்சி அளித்தது. நான் அந்தப் பதிவை மாணவர்களுடன் பகிர்ந்தேன்.
கர்நாடகத்தில் பவோபாப் மரங்களிருக்கும், ஜெ சென்ற அக்கிராமம் ‘பெரிய புளி மரம்-தொட்ட ஹுன்ஸி மரா’ என்றுதான் பெயர் கொண்டிருக்கிறது. இவை புளிய மரத்தின் வகையல்ல எனினும் இவற்றின் பலமொழிப்பெயர்கள் புளிய மரம் என்றுதான் இருக்கின்றன. தமிழில் இதன் பெயர் பப்பரப்புளிய மரம்.
(நம்மூர்ப்புளியமரமும் இண்டிகா (Tamarindus indica) என்று பெயர்கொண்டிருந்தாலும் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டதல்ல ஆப்பிரிகாவைச்சேர்ந்த அம்மரம் ஆசியாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானது, இந்தியாவைச்சேர்ந்தது என்று சொல்லிக்கொள்கிறோம் இண்டிகா என்னும் சிற்றினப்பெயரைக்கொண்டு) .
பாவோபாப் மரத்தின் தாவர அறிவியல் பெயரான Adansonia digitata என்பதில் பேரினப்பெயர் Adansonia என்பது செனிகல் நாட்டிலேயே வசித்து அந்த நாட்டின் இயற்கை வரலாற்றை எழுதியவரான பிரஞ்சு தாவரவியலாளர் மைக்கேல் ஆடன்சனை சிறப்பிக்கும் பொருட்டு வைக்கப்பட்டது. (Michel Adanson 91727- 1806), digitata என்பது விரல்களைப் போலிருக்கும் அதன் கிளைகளைக் குறிக்கிறது.
இதன் வழங்கு பெயரான பாவோபாப் என்பது ’பலவிதைகளின் தகப்பன்’ என்னும் பொருள் கொண்ட அரபி வேர்கொண்ட லத்தீனச்சொல்லான baho-bab என்பதிலிருந்து பெறப்பட்டது.செம்பருத்தியின் குடும்பமான மால்வேசியின் துணைக்குடும்பத்தைச் சேர்ந்த பாவோபாப் இலை உதிர்க்கும் மரவகையைச் சேர்ந்தது.
இந்த பாவோபாப் மரம் கண்டங்கள் பிரிவதற்கு முன்னரே தோன்றியிருக்கக்கூடும் எனினும் இதன் புதைபடிவங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறாததால் இதன் தோற்றம் குறித்தும் பூர்வீகம் குறித்தும் தெளிவாக எந்தத் தகவலும் இல்லை.
மடகாஸ்கர் அல்லது ஆப்பிரிக்கா இதன் பூர்வீகமாக இருக்கலாம் அல்லது மடகாஸ்கரில் தோன்றி ஆப்பிரிக்காவுக்கு கடல் வழி வந்து சேர்ந்திருக்கலாம் என்னும் இரு கருத்துகள் தான் பரவலாக ஏற்கப்பட்டிருக்கிறது.

ஆடன்சோனியாவில் மொத்தம் 8 சிற்றினங்கள் உலகில் இருக்கின்றன. பல இணையதளங்களில் 9/10 சிற்றினங்கள் இருப்பதாக தவறான தகவல்கள் இருக்கிறது. இதன் இணைப்பெயர்களையும் தனிப்பெயராக கருதும் குழப்பத்தால் இந்த தவறு நேர்கிறது.
Adansonia digitata
Adansonia gibbosa as Adansonia gregori
Adansonia grandidieri
Adansonia madagascariensis
Adansonia perrieri
Adansonia rubrostipa as Adansonia fony
Adansonia suarezensis
Adansonia za
மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் ஆடன்சோனியாவின் 8 சிற்றினங்களில் 6 மடகாஸ்கரிலும், 1 ஆப்பிரிக்காவிலும் 1 ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது.
ஆப்பிரிக்கா முழுவதுமிருக்கும் Adansonia digitata அங்கிருந்துதான் இந்தியாவுக்கு வந்திருக்கக்கூடும். டிஜிடேட்டா பவோபாப் மரங்கள் இலங்கையிலும் இருக்கின்றன. Adansonia gregorii ஆஸ்திரேலியாவிலும் பிற 6 சிற்றினங்கள் மடகாஸ்கரிலும் இருக்கின்றன.
அதிகபட்சமாக 30 மீ உயரமும் 50 மீ சுற்றளவும் கொண்டிருக்கும் பாவோபாப் மரங்கள் 32 ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கின்றன.
வறண்ட, உயிர் வாழச்சாத்தியமே இல்லாத ஆப்பிரிக்கப்பகுதிகளில் கம்பீரமான பெரும் தோற்றத்துடன் வளர்ந்து, உணவுக்காக சத்தும் சுவையும் மிக்க கனிகளையும், வறட்சிக்காலத்துக்காக சேமித்து வைத்திருக்கும் ஏராளமான நீரையும், மரப்பட்டையிலிருந்து கயிறு, ஆடை போன்றவற்றிற்கான நாரும், பலவேறு சிகிச்சைகளுக்கான மருந்தும், வேர்களிலிருந்து சிவப்புச்சாயமும், இலைகளைக் கால்நடைத் தீவனமாகவும் அளிப்பதால் வாழ்க்கை மரம் என அழைக்கப்பட்ட, பாவோபாப் மரங்களை ஒட்டியே ஆப்பிரிக்க பழங்குடியினரின் வாழிடங்கள் உருவாகின.
8 லிருந்து 20 வருடங்களில் பாவோபாப் மரங்கள் மலர்களைத் தோற்றுவிக்கும். இரவில் மலரும் இவற்றின் அழகிய பெரிய வெண்ணிற மலர்கள் இரவாடிகளான வவ்வால்,நாகாபிஸ், ரோஸ் வண்டு, அந்துப்பூச்சி ஆகியவற்றால் மகரந்தச்சேர்க்கை செய்யப்படுகிறது.

ஆப்பிரிக்கக் தொன்மமொன்று தனது கம்பீரமான தோற்றத்தினால் பெருமை கொண்ட பவோபாப் மரம் அகந்தை தலைக்கேறி கனியளிக்க மறந்துவிட்டதால் கடவுள் கோபித்துக்கொண்டு அதை பிடுங்கி தலைகீழாக நட்டார் என்கிறது. அதனால்தான் இம்மரம் வேர்கள் மேல்நோக்கி இருக்கும்படி தோற்றம் கொண்டிருக்கிறது என்று நம்புகிறார்கள்.
அதைப்போலவே மலரமுது நிரம்பிய இதன் வெண்ணிற மலர்களை யாரேனும் பறித்தால் அவர்கள் சிங்கத்தால் கொல்லப்படுவார்கள் என்றும் நம்புகிறார்கள்.
பவோபாப் மரம் ஒரு கம்பீரமான ஆண், மரத்தடியில் நிற்கும் கன்னிப்பெண்களை மரத்துக்குள்ளே இழுத்துக்கொண்டு விடும், உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களின் அலறல் இரவுகளில் காடுகளுக்குள்ளிருந்து கேட்கும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது.
பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்குழந்தைகளை பாவோபாப் மரப்பட்டையை ஊறவைத்த நீரில் குளிப்பாட்டும் வழக்கம் இருக்கிறது அப்படிச்செய்தால் அந்தக்குழந்தை பாவோபாப் மரம் போலவே கம்பீரமான உருவம் கொண்ட ஆண் மகனாக வளருவான் என நம்புகிறார்கள்
ஆப்பிரிக்கப் பழங்குடியினர் பாவோபாப் மரங்களின் பல பாகங்களைச் சந்தைப் படுத்துகிறார்கள். 1 அடி நீளம் இருக்கும் இதன் கனிகள் உதிராமல் மரத்திலேயே 6 மாதம் வரை இருந்து, உள்ளிருக்கும் சதைப் பகுதி முழுவதும் உலர்ந்து அதன் பச்சையான வெல்வெட் போன்ற மேற்பகுதி தேங்காய் கொப்பரை போல காய்ந்த பின்னர் அறுவடை செய்யப்படுகிறது. விதைகளை (சருமப்பாதுகாப்பில் பயன்படும் ) எண்ணெய் எடுக்க அகற்றிவிட்டு கனியின் மேற்தோல் துருவப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. வைட்டமின் C, நார்ச்சத்து ஆன்டிஆக்ஸிடெண்ட் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கிய இந்த பொடி 3-லிருந்து 4 வருடம் வரை கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தப்பொடி கிடைக்கிறது.

ஆப்பிரிக்க பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் நாட்டுமருத்துவத்திலும் பாவோபாப் மரங்களின் பல பாகங்கள் பலவிதமான சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.இதன் விதைகளை காப்பிக்கொட்டைகளைப்போல வறுத்து சூடான பானம் தயாரித்து அருந்துகிறார்கள். மரப்பட்டையிலிருந்து காகிதம், ஆடைகள், கூடை, கயிறு உள்ளிட்ட பல பொருட்கள் உருவாகின்றன. இலைகள் சமைக்கப்பட்டும் சமைக்காமலும் உண்ணப்படுகின்றன, மலர்களின் மகரந்தங்களிலிருந்து ஒரு பசை தயாரிக்கப்படுகின்றது.
இந்தியாவில் ஒரு சில பாவோபாப் மரங்களே இருக்கின்றன என பொதுவாகக் கருதப்படுகிறது, ஆனால் மாபெரும் கோட்டைகள், சுல்தான்கள், மராட்டியர்கள், முகலாயர்கள் ராணி ரூப்மதி ஆகியோரை நினைவுபடுத்தும் மத்தியப்பிரதேசத்தின் தார் மாவட்டத்தின் நகரமான மாண்டுவில் ஏராளமான பாவோபாப் மரங்கள் இருப்பது பலருக்கு தெரியாது.
`மாண்டுவின் புளிய மரம்` என்ற அழைக்கப்படும் (Mandu ki Imli) இவை சாலையோரங்களிலும், விவசாய நிலங்கள், கோவில்கள்,புராதன கோட்டைகளில் எல்லாம் வளர்ந்திருக்கின்றன. சுமார் ஆயிரம் பாவோபாப் மரங்கள் இங்கு இருக்கின்றன அவற்றை அப்பகுதியின் பில்லு பழங்குடியினர் பாதுகாக்கிறார்கள்.
பில்லு பழங்குடியினரின் வாழ்வாதாரமாக பாவோபாப் மரங்கள் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. பாவோபாப் கனிகள், பழச்சாறு, விதைகள் ஆகியவை இங்கு சந்தைகளில் ஏராளமாக விற்கப்படுகிறது. இதன் நீர் தேக்கி வைக்கும் பண்பிற்காக முன்பு மாண்டுவை ஆண்ட சுல்தான்கள் இதை ஆப்பிரிக்காவிலிருந்து தருவித்து அங்கு வளர்த்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது
ஜெ அந்தப் பயணக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல் இங்கும் கிருஷ்ணர் ஆப்பிரிக்காவுக்கு சென்று திரும்புகையில் இதன் விதைகளை கொண்டு வந்தார் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது.

ஹரிவம்ச புராணத்தில் சத்யபாமாவை மகிழ்விப்பதற்காக கிருஷ்ணர் பவோபாப் மரத்தைக் கொண்டு வந்தாரென்று குறிப்பிட்டிருப்பதாகவும் இங்கு சொல்கிறார்கள்.
இது 5000 வருடம் வரை உயிர்வாழும் என ஐரோப்பியப் பயண ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் என்றாலும் கார்பன் கணக்கீடுகள் இவை அதிகபட்சமாக 3000 வருடங்கள் வாழும் என்கிறது.
பல்லி, குரங்கு, பலவிதப் பறவைகள், வறட்சிக்காலத்தில் இதன் மரப்பட்டையை உரித்துண்ணும் யானைகள், மலரமுதை உண்ண வரும் அந்துப்பூச்சிகள், வவ்வால்கள் என நூற்றுக்கணக்கான உயிர்களின் புகலிடமாக பாவோபாப் மரங்கள் இருக்கின்றன.
பல தண்டுகள் ஒன்றிணைந்து பாவோபாபின் பெரிய பருத்த அடிமரம் உருவாகிறது எனவே தண்டுகளுக்கிடையில் இருக்கும் இடைவெளிகள் பொந்துகளாக அமைந்துவிடுகின்றன. பாவோபாப் மரங்களின் தனித்தன்மையாக இந்த பொந்துகளைச் சொல்லலாம்.

பழங்குடியினர் நுற்றண்டுகளாக இந்த தந்தைமரத்துடன் இணைந்து அதைப்பாதுகாத்து அதனுடன் வாழ்வை இணைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் காலநிலை மாற்றம் பாவோபாப் மரங்களை அழிவுக்கு தள்ளி இருக்கிறது ஆப்பிரிகாவின் 13 மிகப்பழமையான மாபெரும் பாவோபாப் மரங்களில் 9 மரங்கள் கடந்த பத்தாண்டுகளில் அழிந்க்து விட்டிருக்கின்றன.
இவற்றின் 8 சிற்றினங்களில் A. suarezensis, A. grandidieri மற்றும் A. za, A. perrieri ஆகியவை அழியும் ஆபத்தில் இருக்கின்றன. ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் இருக்கும் A. digitata வை 2023-ல் அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN சிவப்புப்பட்டியலில் இணைத்திருக்கிறது.
ஹைதராபாதில் 200 ஏக்கரில் உருவாகும் அரிய வகை தாவரங்களுக்கான பிரத்யேக பூங்காவிற்காக மாண்டு பகுதியிலிருந்து 11 பாவோபாப் மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்துக் கொண்டு செல்ல 2022-ல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பில்லு பழங்குடியினர் சாலை மறியலிலும் பெரும் போராட்டங்களிலும் இறங்கினார்கள்.
`ஹைதராபாத் பூங்காவுக்கு பாவோபாப் மரங்கள் தேவைப்பட்டால் நாங்கள் முளைக்க வைத்திருக்கும் பாவோபாப் நாற்றுக்களைத் தருகிறோம், ஒருபோதும் வேரோடு மரங்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம்“ என போரட்டம் நடத்தினார்கள். அதன் பின்னர்தான் நவம்பர் 2022-ல் பாவோபாப் கனிகளுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக தார் மாவட்டத்தின் தோட்டக்கலைத்துறை முயற்சிக்கிறது.
புவிசார் குறியீடு கிடைத்தால் இம்மரங்களின் பாதுகாப்பு மேலும் உறுதியாகும். 2025 பிறந்துவிட்டிருந்தாலும் அரசு இதில் நத்தைவேகம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் தாவரவியலாளர்கள்.
ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இவை எப்படி வந்திருக்கக் கூடும் என்பதை அறிய இந்திய பாவோபாப் மரங்களின் மரபணு ஒப்பீட்டு ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆய்வு முடிவுகளில் மாண்டுவில் இருக்கும் பாவோபாப் மரங்களும் ஆப்பிரிக்காவின் ஆடன்சோனியா டிஜிடேட்டாவும் ஒரே சிற்றினம் தான் என்பது நிரூபணமாகியிருக்கிறது.
பாவோபாபின் பரவல் குறித்த இதுபோன்ற பல ஆய்வுகள் நடந்திருக்கின்றது. ஒரு சில ஆய்வுகள் இம்மரத்தின் பரவல் மனிதர்களால்தான் நடந்திருக்க முடியுமென்கின்றன.
கடல் நீரில் அமிழ்த்தி வைக்கப்பட்ட பாவோபாப் கனிகள் 6 மாதங்களுக்குப் பிறகும் முளைத்தன என்பதால் இவை கடல்நீரில் அடித்து வரப்பட்டு கடற்கரையோர பகுதிகளில் பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையே பண்டமாற்று, குறிப்பாக சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு, தட்டைப்பயறு, மொச்சை ஆகியவற்றிற்கு மாற்றாக பாவோபாப் கனிகள் இந்தியர்களால் வாங்கப்பட்டிருக்கும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் இவற்றிற்கு மரபியல், தொல்தாவரவியல் மற்றும் தொல் இனவியல் நிரூபணங்களோ சான்றுகளோ இதுவரை இல்லை. எனவே பாவோபாப் மரங்கள் உலகெங்கும் எப்படிப் பரவின என்பது பெரும் மர்மமாகவே இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் மாபெரும் பாவோபாப் மரத்தடியில் ஒரு மனிதர்கள் சிறு பூச்சிகளைப் போல் நிற்கும் புகைப்படம் மனிதன் எத்தனை எளியஉயிரி என்பதைக் காட்டுகிறது.

எங்கு தோன்றியது எப்படி உலகெங்கும் பரவியது என்று இன்று வரை அறிந்துகொள்ள முடியாத பாவோபாப் மரங்கள், தொன்மையின் தொடரில் கட்டுரையின் இறுதியில் ஜெ குறிப்பிட்டிருப்பதைப் போல காலமற்ற கனவுகளில் ஒன்றுதான்.
Leave a Reply