Changeling
ஐரோப்பிய நாட்டுப்புறக்கதைகளில் தேவதைகளும், யட்சிகளும் தங்களுக்கு பிடித்தமான மனிதக்குழந்தைகளை கடத்திக்கொண்டு போய் அடிமைகளாக்கி சேவை செய்ய வைத்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக அதே சாயலுள்ள, தீய குணங்களுள்ள வேறு குழந்தைகளை கொண்டு வந்து மாற்றி வைத்துவிடுவார்கள் என்று நம்பிக்கை நிலவுகிறது. அப்படி மாற்றபட்ட குழந்தைகளே ‘changelings’ எனப்படுவார்கள்.
லாஸ் ஏஞ்சலஸில் 1928 ஆம் வருடம், திருமதி கிரிஸ்டைன் கோலின்ஸ் பணியிலிருந்து வீடு திரும்பியபோது, வீட்டில் தனித்திருந்த அவரது 9 வயது மகன் வால்ட்டர் காணாமல் போயிருந்தான். காவல்துறையில் புகாரளித்தும் பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காத நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு வால்ட்டர், இல்லினாய்ஸில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையிலிருந்து செய்து வருகின்றது. ஆனால் ரயில் நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்த அன்னை கோலின்ஸிடம் வால்ட்டர் என்று ஒப்படைக்கப்பட்டதோ உயரம், சாயல், உடல்மொழி, பாவனை என அனைத்திலும் வேறுபட்டிருந்த மற்றொரு சிறுவன். அது தன் மகனில்லை என்ற கோலின்ஸின் மறுப்புக்கு காவல்துறை செவிசாய்க்காமல், அது வால்ட்டர்தான் 5 மாதங்களில் சாயல் மாறிவிட்டது என்று சாதித்துவிட்டு, ஊடகங்களில் காணாமல்போன சிறுவனை விரைவில் கண்டுபிடித்த தங்களின் சாகசத்தை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.
அச்சிறுவன் தன் மகனில்லை என்பதை நிரூபிக்க கோலின்ஸ் செய்யும் முயற்சிகள், போராட்டங்கள் அனைத்தும் பயனற்றுப்போகையில், திருச்சபையின் மதகுரு ஒருவரின் உதவியால் லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையின் செயலின்மையும், ஊழலும் வெளிச்சத்துக்கு வந்து, கடத்திச்செல்லபட்டு கொடூரமாக கொலைசெய்யபட்ட பலகுழந்தைகளைப்பற்றியும் பின்னர் தெரிய வந்து புலன்விசாரணை நடக்கிறது. அதன்பிறகும் வால்டரைக்குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காததால், தன்னிடம் அளிக்கப்பட்ட சிறுவன் தன் மகனல்ல என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முயன்ற கோலின்ஸை மனநோயாளி என முத்திரை குத்தி காப்பகத்துக்கு அனுப்பி சித்ரவதை செய்கிறார்கள்.கடும் போராட்டத்துக்கு பிறகு காப்பகத்திலிருந்து வெளிவரும் கோலின்ஸ் மீண்டும் முழுவீச்சில் தன் மகனைதேடுவதை தொடர்கிறார்.
இந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையிலான குற்றமும் மர்மமும் கலந்த திரைப்படம்தான் 2008ல் வெளியான ’’Changeling’.’ தயாரிப்பும், இயக்கமும், பிண்ணனி இசையும் பிரபல இயக்குநர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood ). திரைக்கதை மிக்கேல் ஸ்ட்ரேக்ஜின்ச்கி (Michael Straczynski). இக்கதையில் அக்காலகட்டத்தின் குழந்தைக்கடத்தல், பெண்களுக்கெதிரான குற்றங்கள், வன்முறைகள், அரசியல் ஊழல், மனநோய் காப்பகங்களில் நடந்த அநீதிகள், ஆகியவையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஏஞ்சலினா ஜோலி, திருமதி கோலின்ஸ் ஆக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். திரைக்கதை எழுதியிருக்கும் மிக்கேல் எதேச்சையாக இந்த சம்பவத்தை குறித்து கேள்விப்பட்டு அதன்பின்னர் அதன் குற்றப்பின்ணனியை காவலதிகாரிகளால் எரிக்கப்படவிருந்த பல்லாயிரக்கணக்கான பக்கங்களடங்கிய குற்றம் தொடர்பான ஆவணங்களையும், கோலின்ஸுடனான நீதிமன்ற விசாரணைகளையும் வாசித்து, சம்பவத்துடன் தொடர்பிலிருந்த பல இடங்களுக்கு பிரயாணித்து, பல வருடங்கள் ஆய்வு செய்தே இக்கதையை எழுதியிருக்கிறார். இது அவரின் முதல் வெள்ளித்திரைக்கதை. ஊடகவியல் மற்றும் இதழியலில் அவருக்கிருந்த அனுபவம் திரைக்கதையை செம்மையாக்கியிருக்கிறது Imagine Entertainment மற்றும் Universal Pictures ஆகியவையும் தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் பங்கு கொண்டனர்
Period film வகையிலான இத்திரைப்படத்தில் மகனை இழந்த, நம்பிக்கை இழக்காமல் இறுதிவரை போராடும் அன்னையின் கதாபாத்திரத்திற்கு பல முன்ணனி நடிகைகள் போட்டியிட்டும், கிளிண்ட் ஈஸ்ட்வுட் 1920களில் நடக்கும் கதைக்கான முகமும், அன்னைமை மிளிரும் தோற்றமும் இருப்பவராக ஏஞ்சலினாவையே தேர்வு செய்தார். ஏஞ்சலினாவுடன் Jeffrey Donovan, Jason Butler Harner, John Malkovich, Michael Kelly, மற்றும் Amy Ryan.ஆகியோரும் முக்கியப்பாத்திரமேற்றிருக்கின்றனர்
2007 அக்டோபரில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் தெற்கு கலிஃபோர்னியாவில் துவங்கி நடத்தப்பட்ட படப்பிடிப்பு விரைவாக நடந்து 43 நாட்களில் முடிவடைந்தது. அதன் பின்னர் post production வேலைகளாக கணினியில் 70 வருடங்களுக்கு முன்னரான நகரநிர்மாணம் மற்றும் சாலைப்போக்குவரத்து, உடையலங்காரம் உள்ளிட்ட பழமை ஒவ்வொரு காட்சியிலும் பிழையின்றியும் சிறப்பாகவும் இருக்கும்படி கவனமாக இணைக்கப்பட்டது
.அக்டோபர் 2008ல் உலகெங்கிலும் வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் காட்டும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கான எதிர்ப்பும் கொஞ்சம் இருந்ததென்றாலும் 55 மில்லியனில் தயாரிக்கபட்ட இத்திரைப்படம் 113 மில்லியன் லாபமீட்டி பெருவெற்றி பெற்றது சந்தேகமில்லாமல். ஆஸ்கார் உள்ளிட்ட ஏராளமான விருதுகளுக்கு பரிந்துரைககப்பட்டு, மிக முக்கியமான பலவிருதுகளையும் பெற்றது ‘’changeling’’.
ஏஞ்சலாவின் பிரமாதமான நடிப்புக்கு இப்படமும் மற்றுமொரு உதாரணம். படத்தின் துவக்கத்தில் அவரின் அழகியதோற்றத்தில், குறிப்பாக ரத்தச்சிவப்பு சாயமிட்ட அவரின் உதடுகளிலிருந்து கவனத்தை திருப்ப கொஞ்சம் பிரயத்தனப்படவேண்டியிருப்பினும் சில காட்சிகளிலேயே அவர் மகனை இழந்த அன்னையான கோலின்ஸ் ஆக மட்டுமே உணர்வுபூர்வமாக திரையில் தெரியத்தொடங்குவதால் கதையோட்டத்தில் நாமும் கலந்துவிடுகிறோம்.
மகனுடன் அவனுக்கு புரியும் மொழியில் உரையாடியபடியே நாளைத்துவங்குவது, தன் அப்பா ஏன் தன்னுடன் இல்லையென்ற அவன் கேள்விக்கு வெகுசாமர்த்தியமான பதிலைச்சொல்லுவது, மகன் காணாமல் போனபின்பு பரிதவிப்பது, விடாமுயற்சியுடன் அவனை தேடுவது, அக்காலகட்டத்தில் வழக்கத்திலிருந்தது போல் ஸ்கேட்டிங் ஷூக்கள் அணிந்து லாவகமாக பணிசெய்வது, காவல் துறையினரிடம் தன் கருத்தை திரும்பத் திரும்ப மனம் தளராமல் எடுத்துரைப்பது, மகனல்லவென்று தெரிந்திருந்தும் அந்த மாற்றி அனுப்பப்பட்டிருந்த சிறுவனிடமும் கரிசனத்துடன் இருப்பது என ஏஞ்சலினா கோலின்ஸாகவே மாறி விட்டிருக்கிறார்
இயற்கையில் மலரிதழ்களின் மிகச்சரியான எண்ணிக்கை, அவற்றிற்கிடையேயான சீரான இடைவெளி, மிகத்துல்லியமான இடைவெளியில் அமைந்திருக்கும் சூரியகாந்திப்பூக்களின் விதைகள், பைன் கோன்கள் ஆகியவற்றின் அமைப்பை கணிதவியல் தங்கக்கோணம், Golden Angle அல்லது Golden Ratio என்கிறது. அப்படியான மிகத்துல்லியமான அளவுகளில் தங்கவிதியின்படி அமைந்திருக்கும் முகம் கொண்டவரென்று (golen ratio face) அறியப்பட்ட பிரபலமான ஏஞ்சலினா தன் அழகுக்கு அழகு சேர்க்கும் நடிப்பை இப்படத்தில் அளித்திருக்கிறார். இல்லினாய்ஸிலிருந்து ரயிலில் வரும் காணாமல் போன மகனுக்காக பரிதவிப்புடன் காத்திருப்பதும் மகனல்லவென்று சந்தேகம் வந்தாலும் ஊடகங்களின் முன்னால் எப்படி மறுத்துச்சொல்வதென்ற தயக்கமும், காவலதிகாரியின் வற்புறுத்தலால் வந்த குழப்பமுமாக இருக்கையில், இவர்தான் நாயகி என்னும் கிளிண்ட் ஈஸ்வுடின் கணிப்பு எத்தனை சரியென்பது புலனாகும் பார்வையாளர்களுக்கு.
இத்திரைப்படத்தின் பொருட்டு ஸ்கேட்டிங் ஷூக்களில் விரைவாக நடப்பதற்கான பயிற்சியையும் ஏஞ்சலினா எடுத்துக்கொண்டிருக்கிறார்.
திரும்ப கிடைத்திருப்பது தன் மகனல்ல, இன்னும் எங்கேயோ தன்மகன் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறான் என்பதை நிரூபிக்க அவர் செய்யும் முயற்சிகள் எல்லாமே மனதை பிசைபவை. இப்படி ஒரு ஒற்றைத்தாய் முன்னெப்போதோ அல்லலுற்றிருக்கிறார் என்னும் உண்மையை கண்முன்னே கொண்டு வந்து காட்டிவிடுகிறார் ஏஞ்சலினா.
மாற்றபட்ட சிறுவனின் உயரம் குறைவாக இருப்பது, சிறுவனின் ஆணுறுப்பின் முனைத்தோல் நீக்கப்பட்டிருப்பது, அவன் பற்களின் அமைப்பு மாறியிருப்பது, அவன் பள்ளி ஆசிரியையின் இது வால்டரல்ல என்னும் வாக்குமூலம் போன்ற மறுக்க முடியாத ஆதாரங்களை மறுநாள் ஊடகங்களின் முன்வைக்கப்போகிறார் என்று தெரிந்ததும் சொந்த மகனை மறுக்கும் மனப்பிறழ்வு உள்ளவரென காட்டி கோலின்ஸை காவல்துறை மனநோயாளிகளின் காப்பகத்துக்கு அனுப்புவதும், அங்கு அவருக்கு நடக்கும் இழிவுகளும், கிடைத்திருப்பது வால்ட்டர்தான் என்று ஒத்துக்கொள்ளும்படி அவருக்கு கொடுக்கப்படும் நேரடியான மிரட்டல்களும், உயிராபத்துக்களுமாக திரைப்படம் உண்மைச்சம்பவம் நடைபெற்ற காலத்துக்கே நம்மை அழைத்துச்சென்று கலங்க வைத்து விடுகின்றது.
மதகுருவின் ஒத்துழைப்பால் பல குழந்தைப்படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்து குற்றவாளி நார்த்காட்(Northcott) பிடிபடுகிறான்.20 குழந்தைகளை கொன்று புதைத்தாக ஒத்துக்கொண்ட அவனிடமிருந்து தப்பி வந்த சிறுவனின் வாக்கு மூலமும், அவனுடன் தப்பித்த சிறுவர்களைப்பற்றிய தகவல்களும், சிறைத்தண்டனையில் இருக்கும் நார்த்காட் 2 வருடங்களுக்கு பிறகு தூக்கிலிடப்படுவதற்கு முந்தின நாள், கோலின்ஸை சந்தித்து வால்டரைக்குறித்து பேச விருப்பப்படுவதாக சொல்லுவதும், தூக்கிலடப்படும் இறுதி நிமிடம்வரை பரிதவித்தபடி காத்திருக்கும் அன்னையிடம் அவன் என்ன சொன்னானென்பதுவும், வால்டர் மீண்டும் கிடைத்து அன்னையும் மகனும் இணைந்தார்களா என்பதையும் திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்வதே உசிதம்.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஊழல் காவலதிரிகாரிகள் உண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் (Captain Jones & Chief Davis ) அரசியல்வாதி ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவே இல்லை. கலிஃபோர்னியவின் நீதித்துறை மனநாயாளிகளை விடுதியில் சேர்ப்பது குறித்த முறையான சட்டங்களை இதன்பிறகே பிறப்பித்தது. குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட வைன்வில்லி (Wineville) நகரம் கொலைகளினாலேயே பிரசித்தி பெற்றுவிட்டதால் சில வருடங்களுக்கு பிறகு நகரமே மிரா லோமா (Mira Loma ) எப்பெயர் மாற்றபட்டது
குற்றவாளி Northcott, ஆக நடித்திருக்கும் Jason Butler Harner ன் நடிப்பை பாராட்ட வேண்டும். மனம் பிசகியவர்களுக்கேயான பித்தேறிய கண்களும் கொஞ்சம் குழறலான உச்சரிப்புமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
படப்பிடிப்பு தளங்களில் பழையபாணி கட்டிடங்களும், அப்போதிருந்த புகைப்படக்கருவிகள், நெருப்பை உபயோக்கும் காமிரா ஃப்ளாஷ்கள் புகைவண்டி, 1918லிருந்து 1928 வரை புழக்கத்திலிருந்த கார்களை சேகரித்து வைத்திருந்தோரிடமிருந்து வாங்கிய 150 கார்கள் என மிகப்பொருத்தமாக அமைந்திருக்கும் பின்ணனி திரைக்கதையை உறுத்தாமல் கொண்டு போகின்றது. ஒரு சில காட்சிகள் கோலின்ஸ் வாழ்ந்த தெருவிலேயே படமாக்கவும் பட்டிருக்கிறது. பல வரலற்றுஆய்வாளர்களும் படப்பிடிப்பில் முக்கியப்பங்காற்றியுள்ளனர்
ஆடைவடிவமைப்பளர் Deborah Hopper, பள்ளி , கல்லூரிகளின் மிகப்பழைய ஆண்டு மல்ர்கள், LIFE உள்ளிட்ட எராளமான பழைய சஞ்சிகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தே உடைகளை வடிவமைத்திருக்கிரார். 1930ல் பிறந்தவரான கிளிண்ட் ஈஸ்ட்வுட் தனது பால்யகால நினைவுகலிருந்தும் சில விஷயங்களை சொல்லி உதவியிருக்கிறார்
ஒளி இயக்குநர் டாமுக்கு ( Tom Stern) இது ஆறாவது திரைப்படம். ஒளிப்பயன்பாட்டை வெகுவாக குறைத்து திரையில் ஏஞ்சலீனாவை மட்டும் முக்கியத்துவப்படுத்தும் காட்சியமைப்புக்களை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தொகுப்பு மூன்றே நாட்களில் முடிவடைந்திருக்கிறது.
தேவதைகளின் பிரதேசமென அறியப்பட்ட லாஸ் ஏஞ்சலஸ், மெல்ல மெல்ல குற்றங்களும், வன்முறையும், ஊழலும் மலிந்த நகரமாக மாறியதையும் இப்படம் பதிவுசெய்கின்றது
குழந்தை கடத்தலை மையமாக கொண்ட எல்லா மொழித்திரைப்படங்களிலும் பழிவாங்குதலே பிரதானமாக இருக்கும். changeling இம்மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டு மகன் மீண்டும் கிடைக்கும் வரை போராடிக்கொண்டேயிருந்த அன்னையின் கதையைசொல்லும் வகையில் மிக முக்கியமானதாகின்றது.. திரைக்கதையை காலையில் கேட்டுவிட்டு அன்று மதியமே இயக்குவதாக ஒப்பந்ததில் கையெழுத்திட்டிருக்கிறார் ஈஸ்ட்வுட்
இயக்குநரின் மகள் கைல் இசையமைப்பில் உதவியிருக்கிறார். மற்றொரு மகள் மோர்கன், ’’வால்ட்டரை பார்க்கவில்லை’’ என்று கோலின்ஸிடம் சொல்லும் ஒரு சிறுமிகளில் ஒருவராக திரையில் ஒரே காட்சியில் தோன்றுகிறார்.
பலவருடங்களுக்கு முன்பான பழமையை திரையில் காட்டவென இத்திரைப்படத்திற்கென படக்குழுவினர் மேற்கொண்ட கடின உழைப்பைக்குறித்து இணையத்தில் வாசிக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.இதற்காகவே இப்படத்தை பார்க்கலாம்
Leave a Reply