எப்பொழுதும் ஜெ அவர்களின் தளத்தை அன்றன்றே பார்த்துவிடுவேன். இந்த வாரம் முழுதும் ஊர்த்திருவிழாவென்பதால் நானும் சரணும் அதில் மும்முரமாக இருந்ததில் சிலநாட்கள் பதிவுகளை வாசிக்காமல் விட்டுவிட்டேன் அதில் அருணா அவர்களின் பனைமரச்சாலை பதிவும் சேர்ந்து தவறிவிட்டது.
இன்று அதிகாலையிலேயே பனைமரச்சாலை பற்றிய அவரது விமர்சனத்தை வாசித்தேன். அது குறித்துச்சொல்லும் முன்னர் அவரது எழுத்தைக்குறித்த என் பொதுவான அபிப்ராயத்தையும் சொல்லிவிடுகிறேன். ஜெ சாரின் எழுத்துக்களை ஆழ்ந்து வாசிக்கையில் அவரது மொழி எப்படியோ பெரும் பாதிப்பை உண்டு பண்ணி எங்களின் அகமொழியையும் மேம்படுத்திவிடுகிறது. 10 வருடங்களுக்கு முன்பிருந்த தேவியின் எழுத்துக்களுக்கும் (கடிதங்களிலும் விமர்சனங்களிலும்தான் ): ) இப்போதைக்குமான எழுத்துக்களுக்கும் இருக்கும் பெரும் வித்தியாசத்தை யாராலும் சொல்லிவிட முடியும். சமீபத்தில் நான் gender knowledge குறித்து ஒரு உரையாற்றியதின் ஒலிப்பதிவினை கேட்டபொழுது திகைப்பாயிருந்தது. பெரும்பாலும் ஜெ சாரின் கருத்துக்களை அப்படியேதான் பேசியிருந்திருக்கிறேன். காப்பி அடிக்கலை ஆனால் என் மனதில் அப்படி அவர் சொன்ன, எழுதின கருத்துக்கள் வலுவாக பதிந்திருக்கின்றன. என் உரைகளைக்கேட்ட்பவர்களும், நான் எழுதுவதை தொடர்ந்து வாசிப்பவர்களும் ஜெவின் எழுத்துக்களை வாசிப்பதனால் செம்மைப்படுத்தபட்டிருக்கும் எனது மொழியினைக்குறித்து சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
பேசும்போதும் அப்படியே! சரணின் ஆசிரியர் ஒருவரிடம் இரண்டு நாட்கள் முன்பு பேசிக்கொண்டிருக்கையில் அவரது நண்பரின் மரணம் எப்படி தவிர்க்கமுடியாமலானதென்று அவர் வருத்தப்பட்டுக்கொண்டபோது சமாதானமாக நான் ’’வேறென்ன சார் ஊழ்தான்’’ என்றேன். அவர் அச்சொல்லை முதன்முறையாக கேட்கிறார் போல. அப்படியே திகைத்து ’’என்ன சொன்னீங்க’’ என்றார். நான் சுதாரித்துக்கொண்டு ஊழ் சார், fate, destiny அது , என்றேன். உடனிருந்த சரண் கண்களால் புன்னகைத்தான்
ஆனால் அருணாவின் எழுத்துக்களில் அப்படி ஜெவின் influence ஏதும் இல்லாமலிருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை அளிக்கின்றது. சீரான ஆழ்ந்த தெளிவான முற்றிலும் சாரிடமிருந்து வேறுபட்டிருக்கின்ற மொழி உங்களது. எப்போதும் போலவே இதையும் எழுதி விடுதியிலிருக்கும் சரணிடம் அலைபேசியில் வாசித்துக்காட்டினதும் ’’ எப்போவும் ஏன் ஜெ சாருடனேயே எல்லாருடையதும் ஒப்பிட்டு பார்க்கிறே?, இதை செய்யாதேன்னு சொல்லியிருக்கிறேனில்ல ’’ என்று கடிந்துகொண்டான் இதைமட்டும் உங்களுக்கு எழுதவே கூடாதென்றும் கண்டிப்பாக சொன்னான்.
இதற்கு முன்னரும் அவர் எழுதினதை வாசித்து ரசித்திருக்கேன். சோர்பா, நீல ஜாடி இப்படி
இப்போது இந்த பனைகளின் இந்தியா வாசிக்கையில் அவருடையதைப்போலவே எங்களுக்கும் ஒரு அழகிய பால்யம் வாய்த்திருந்ததை நினைவுகூர்ந்தேன், நானும் சங்கமித்ராவும் (அக்கா) வேட்டைக்காரன் புதூரில் இப்படி வேம்பு, பனை மா என மரங்களுடனும் ஆடு மாடுகளுடனும் ஆத்தாவீட்டில் மகிழ்ந்து வாழ்ந்திருந்தோம். வாழ்வின் துயர்கள் தொட்டிராத காலமென்பதால் மீள மீள நினைவுக்கு கொண்டு வந்து மகிழும் வெகுசில நினைவுகளில் அந்த கிராமத்து நினைவும் எப்போதும் இருக்கும். வேப்ப முத்துக்கள் எனப்படும் வேம்பின் பழக்கொட்டைகளை, இலந்தை மற்றும் சூரிப்பழங்களை சேகரிக்கவும், பனங்கூம்புகளை வேகவைத்து சாப்பிடவும், பிடிக்க முயற்சிக்கும் விரல்களுக்குள் அடங்காமல் உயிருள்ளவைபோல நெளிந்து தளும்பும் நொங்குகளை பனையோலையில் வைத்து முகமெங்கும் ஈஷிக்கொண்டு சாப்பிடவும், விரல்கள் புண்ணாகும் அளவிற்கு நொங்குகளை நோண்டி எடுத்து சுவைத்தபின்னர் பனம்பழங்களில் வண்டி செய்து தெருவெல்லாம் தள்ளிக்கொண்டே விளையாடவும் தான் விடுமுறை முழுக்க செலவாகும். அருளப்பட்ட நாட்கள் அவை
பனை வசீகரிக்கும் ஒரு மரமல்ல, அருணா சொல்லியிருப்பது போல அது ஒரு அமானுஷ்ய மரமென்னும் எண்ணத்தைத்தான் உருவாக்கும் என்றாலும் எனக்கு அம்மரத்தின் மீது விருப்பும் வெறுப்பும் ஏதுமிருந்ததில்லை காட்சனை , அவர் எழுத்துக்களை சந்திக்கும் வரையிலும்
ஒரு தாவரவியலாளராக மட்டுமே பிற மரங்களைப்போலவே பனையைக்குறித்தும் கொஞ்சம் அறிந்திருந்தேன். ஆனால் தளத்தில் காட்சனைக்குறித்தும் பனைமரச்சாலை பயணத்தைக்குறித்தும் அறிந்துகொண்டபின்னர் காட்சனுக்கு எழுதிய நீண்ட கடிதமொன்றுக்கு பதிலாக அவர் அனுப்பிய கடிதத்தின் பின்னர் பனையை நான் மிக நெருக்கமாக அறிந்துகொண்டது மட்டுமன்றி நேசிக்கவும், வழிபடவும் செய்தேன் அவரளவிற்கே!
இன்னும் அந்தப்புத்தகம் எனக்கு கைக்கு கிடைக்கவில்லை என்றாலும் அது அத்தியாயங்களாக எழுதப்பட்டபோது அனேகமாக எல்லாப்பதிவுகளையும் பின்னிரவில் காட்சன் வலையேற்றும் வரை காத்திருந்து வாசித்திருக்கிறேன். முழுமையாக புத்தகமாக வாசிக்கும் நிறைவு இனிமேல் தான் கிடைக்கும் என்றாலும் அருணா எழுதியிருப்பது அப்படி ஒரு முழுமையான புத்தக வாசிப்பின் நிறைவை உண்டாக்கியது. அழகாக பனையைக்குறித்த பின்தொடரும் நிழலின் குரல் மேற்கோளில் துவங்கி அவரின் ன் இளமைக்கால பனை தொடர்பான நினைவுகளைச் சொல்லி, பின்னர் காட்சனின் பயணத்தை, வழித்தடத்தை அவர் பார்வையில் பனையை, அவரின் மொழிவளத்தை, காட்சன் பனையில் கிருஸ்துவையும் தன்னையும் கண்டு கொள்ளும் இடங்களை அருணாவின் இன்னாள் வரையிலான பனை குறித்தான பிம்பம் வாசிப்பின் பின்னர் எப்படி மாறியிருக்கிறதென்பதையெல்லாம் சொல்லி முடிக்கிறார்.
இடையே பனை குறித்த ஒரு நாட்டுப்புறக்கதையொன்றினையும் சொல்லியிருக்கிறார். அதை இது வரையிலும் எந்த வடிவிலும் நான் கேள்விப்பட்டதேயில்லை. ஆர்வமாக வாசித்தேன். எங்களூரில் கணவரின்றி குறைப்பட்டுபோன பெண்களுக்கு ஒரு முருங்கை மரமும் எருமையும் கொடுத்தால் போதும் ஒழுக்கமாக ஜீவித்துக்கொள்வாளென்று சொல்வதைத்தான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். எருமையும் பனையும் முருங்கையும் நிச்சயம் அடித்தட்டு மக்களின் வாழவாதாரங்களில் மிக முக்கியமானவை
பனையில் காட்சனைப்போல ஏசுவைக்காண வாசிக்கும் அனைவராலும் இயலாதென்றாலும் பனை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான மிக முக்கியமான ஒரு மரமென்பதை கட்டாயம் பனைமரச்சாலையை வாசிக்கும் அனைவருமே உணரமுடியும் . இந்தப் பதிவில் காட்சன் எங்கு பயணத்தை துவங்கினார், நீண்ட அப்பயணத்தில் எங்கெங்கு தங்கினார், யாரையெல்லாம் சந்தித்தார், எப்படி பனையை ,பனையின் பாதையை, பனையை நம்பியிருக்கும் மக்களை தொடர்ந்தார், என்பதையெல்லாம் சுருங்க ஆனால் சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார் அருணா
காட்சனின் பதிவுகளை, அவரது இலட்சியத்தினை அவரது கனவுகளை கொஞ்சமும் அறியாதவர்களுக்கும் இப்புத்தகத்தை வாங்கும் ஆவலை உருவாக்கும் விதமாக பதிவு எழுதப்பட்டுள்ளது.
// நம்பிக்கையும் சோர்வும் மாறி மாறி வரும் பயணம்// பனை சார்ந்த தொழிலாளர்கள் குறைந்துவருவதென்பது கடக்க முடியாத அகழியாக மாபெரும் சுவராக முன் நிற்கும் பிரச்சனை // அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்தும் தமிழகத்தில் பனை சார்ந்த பிரச்சனைகள் அத்தனை சுலபத்தில் தீராது என்பதையெல்லாம் எளிமையாக ஆனால் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் அருணா
உலகளாவிய பனைப்பயன்பாட்டின் கூறுகளை காட்சனின் பார்வையிலும், கிருத்துவ மதபோதகரான அவர் பனையின் பிறசமயத்தொடர்புகளை தேடிச்செல்வதையும், அவரின் ரசனையை கலையுணர்வை இப்படி எல்லாவறையும் அழகாக தொட்டுத்தொட்டு எங்கள் முன்னால் தீற்றி பனைமரச்சாலையைக்குறித்த ஒரு அழகிய சித்திரத்தை விரிக்கிறார் அருணா
//போகிற வழியில் அவர் மயங்கி நிற்கும் கோட்டைகள் , கோவில்கள், தேவாலயங்கள், ஏரிகள், அஸ்தமனசூரியன் எரிந்தணையும் பனங்காடுகள் என முழுமையான ஒரு பயண அனுபவம் இந்நூல்// இதை ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க அருணா.
//பயணம் நம்முள் நிகழ்த்துவது என்ன? மனதின் சுருள்கம்பி மெல்ல முறுக்கவிழ்கிறது. மனம் இலகுவாகிறது.நிலக்காட்சிகள் மாறத் தொடங்கும்போது வீடு, வாசல், சுற்றம் விலகிப் போக நாம் புதிய உலகிற்குள்நுழைகிறோம். அக்கணங்களில் நேற்று இல்லை, நாளை இல்லை, சஞ்சலங்கள் இல்லை. முதலில் ஒரு பரவசம்,உற்சாகம். பிறகு அதன் அலைகளடங்கி அதுவே ஆழ்நிலை தியானமாகிறது// இந்த பத்தியில் எனக்கு அத்தனை அறிமுகமில்லாத அருண்மொழி நங்கை என்பவரை மிக அணுக்கமாக அறிந்துகொண்டேனென்றே சொல்லலாம்
//பெண்கள் கால் பதிக்க இயலா நிலவெளிகளில் அலைந்து திரிவது ஆண்களுக்கு மட்டுமேயான ஒரு வரம்இந்தியாவில். அதன் விடுதலையும் அவர்களுக்கே இன்றுள்ளது.// இதையும் நான் மிக ரசித்தேன். இனி அருணாவின் எழுத்துக்களை அவர் பெயரைப்பார்க்கும் முன்னரே நான் அடையாளம் கண்டுகொள்ளக்கூட முடியுமென்று இவ்வரிகளை வாசிக்கையில் நம்பிக்கை வந்தது
எனக்கும் ஒற்றைப்பனையை காண்கையில் துக்கமாக இருக்கும் இவ்வுலகு தாட்சண்யமின்றி கைவிடப்பட்டவைகளில் அதுவும் ஒன்றெனத் தோன்றும். புகைப்படங்கள் இல்லையென்னும் குறையையும் புகைப்படங்கள் நம்முடன் மிக அதிகமாக உரையாடுகின்றன என்பதையும் அருணா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இறுதியாக அருணா அவருக்குள் செய்துகொண்டதைபோலவே பனைமரச்சாலையை வாசித்து முடித்த அனைவருக்கும் இனி அவரவர் மனதில் அதுவரை இருந்த பனைசார்ந்த பிம்பங்களை மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும்
அருணாவிற்க்கு பனை தூய கருப்பட்டியின் இனிப்பாக, பனங்கற்கண்டின் படிக ஒளியாக, அக்கானியின்சுவையாக, நுங்கின் குளிர்ச்சியாக வளர்ந்திருக்கிறது. எனக்கு பனை என்பது தாவரவியல் பாடங்களில் ஒன்றாக மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டிய மரங்களில் ஒன்றாக மட்டுமல்ல, வானளாவி நின்றுகொண்டு எளிய மானுடத்தை, அவற்றின் கீழ்மைகளை குனிந்தபடி புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் இறையின் வடிவமும் கூட
காட்சனின் பனைப்பயணத்தைக்குறித்த ஒரு அழகிய அறிமுகத்துடன் அதில் அவருடன் பயணிக்கவும் பலருக்கு விருப்பத்தை உண்டாக்கியிருக்கும் பதிவு இது
அருணாவிற்கு நன்றி