GREEN BOOK
பீட்டர் ஃபாரெல்லியின் இயக்கத்தில் 2018’ல் வெளிவந்த 1960ல் நடைபெறும் கதைக்களத்துடனான Green Book என்னும் இந்த ஆங்கிலத்திரைப்படம் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஜாஸ் பியானோ இசைமேதையுமான திரு டான் ஷர்லி (Don shirley) மற்றும் அவரின் கார் ஓட்டுனரும் பாதுகாவலருமாகிய இத்தாலிய அமெரிக்கரும் பவுன்ஸரான டோனி வேலிலங்கா (Tony vellelonga) ஆகிய இருவரையும் குறித்தான ஒரு உண்மைக்கதையை சொல்கிறது.
இசை, இனவெறி மற்றும் அசாதாரண தோழமை ஆகியவற்றை மிக அழகாக சொல்லிச்செல்லும் படம் இது
திரைக்கதையை இயக்குனர் பீட்டர், பிரையன் பியூரி மற்றும் டோனி வேலிலங்காவின் மகனாகிய ’’நிக் வேலிலங்கா’’ வுடன் இணைந்து எழுதியுள்ளனர். நிக் தனது அப்பா மற்றும் டான் ஷர்லியுடனான நேர்காணல்கள் கடிதங்கள் நாட்குறிப்புகள் என பலவற்றின் உதவியுடன் திரைகதையை செம்மையாக்க பெரிதும் உதவியிருக்கிறார் கதைக்களம் 1960களில் நடைபெறுவதுபோல அழகாக காட்சிப்படுத்தபட்டிருக்கின்றது எவ்விதப்பிழையுமின்றி
கருப்பினத்தவர்களை மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் நகரை விட்டு வெளியேறச்சொல்லும்,வெள்ளையரல்லாதோர் உபயோகிக்கக்கூடாத பொதுஇடங்களின் பட்டியலை வைத்திருக்கும், இதற்கென பிரத்யேக சட்டங்களையும் விதிகளையும் வன்முறைகளையும் பின்பற்றும், வெள்ளையர்கள் மட்டும் வசிக்கும் அமெரிக்காவின் Sun down towns எனப்படும் தெற்கிலிருக்கும் நகரங்களுக்கு தொடர்ச்சியாக இசைக்கச்சேரிகள் செய்யவிருக்கும் வடக்குப்பகுதியைச் சேர்ந்த உளவியலிலும் இசையிலும் டாக்டரேட் பட்டம் வாங்கியிருக்கும் கருப்பின இசை மேதையொருவர், தனக்கு அங்கு ஏற்படக்கூடும் என அஞ்சும் தாழ்மைகளுக்கும், உள்ளாகக்கூடுமென்னும் அச்சுறுத்தல்களுக்கும், துணைக்கும், பாதுகாப்பிற்கும் காரோட்டுவதற்குமாக பணத்தேவையிலிருக்கும் ஒரு வெள்ளையரை 8 வாரங்களுக்கு பணியிலமர்த்திக்கொள்ளுவதும் அந்த பயணமும், கலவையாக அங்கு நடைபெறும் சம்பவங்களும் அவர்களுக்கிடையே முகிழ்க்கும் அழகிய தோழமையும் நம்மை திரைப்படத்துடன் ஒன்றச்செய்யும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது
கருப்பினத்தவர்கள் அந்நகரங்களில் எங்கெங்கு மட்டும் தங்கலாம், உணவு உண்ணலாமென்னும் விவரங்களடங்கிய GREEN BOOK என்னும் பயணக்குறிப்பேட்டை/கையேட்டை டோனி உடன் கொண்டுசெல்வதால் இப்படத்திற்கு இந்தப்பெயர். 1936 லிருந்து 67 வரையிலுமே பயன்பாட்டிலிருந்த இந்த பயணக்குறிப்பேடு சாலைவழிப்பயணங்களில் கருப்பினத்தவர்கள் அந்நகரங்களை பாதுகாப்பாக கடந்து செல்வதையும், அங்கு தங்குவதையும் ஓரளவிற்கேனும் சாத்தியமாக்கியிருக்கிறது
எப்போதும் உணவுண்ணுதலில் பெரும் ஆர்வம் கொண்டிருக்கும், ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும், வாழ்வை மிக இலகுவாக எடுத்துக்கொள்ளும், பணத்திற்கான தேவை அதிகமாக இருக்கும், மனைவியும், இரு மகன்களும் சுற்றங்களுமாக நிரம்பிய வாழ்விலிருக்கும் வெள்ளையரான டோனிக்கும், உலகம் முழுதும் பிரபலமான பெரும் இசைமேதையான, தன்னந்தனிமையில் ஒரே ஒரு உதவியாளருடன், பகட்டான ஒரு வாழ்விலிருக்கும், வரவழைத்துக் கொண்ட மிடுக்கும் நிமிர்வுமாய், மிக சொற்பமாகவே பேசும் கருப்பினத்தவரான ஷர்லியுமாய் தொடர்ந்து பயணிப்பதும், மிக வேறுபட்ட பின்புலங்களைச் சேர்ந்த இவ்விருவரும் அந்த பயணத்தில் சந்திக்கும் எதிர்பாராமைகளும், அவை மெல்ல மெல்ல ஷர்லியை மாற்றுவதும் அவர்களுக்கிடையே ஒரு பந்தம் உருவாவதும் இப்படத்தில் மிக மிக அழகாக சொல்லப்பட்டிருக்கின்றது
1927ல் ஃப்ளோரிடாவில் வசதியான கருப்பினக்குடும்பத்தில் பிறந்த கருப்பினத்தவரான ஷர்லி, 1930ல் பிறந்த டோனி வேலிலங்காவை பணியில் அமர்த்திக்கொண்டதும், எந்தப்பொருத்தமுமில்லாத இந்த இணையர் மேற்கொண்ட நெடிய சாலைப்பயணத்தில் பரஸ்பரம் மற்றவரின் உலகை அவற்றின் பலவீனங்களுடன் அறிந்துகொண்டு, 2013 ஆம் வருடம் இருவருமே இறந்து போகும் வரை உற்ற நண்பர்களாயிருந்ததும் இப்படத்திற்கு வலுவையும் ஆர்வத்தையும் சேர்க்கும் உண்மை பின்புலக் காரணங்கள்
அமெரிக்க நடிகரும் 2017 ல் ஆஸ்கர் வென்ற முதல் இஸ்லாமிய நடிகருமான
(Mahershala Ali). மகிர்ஷாலா அலி, டான் ஷர்லியாகவும், அமெரிக்க நடிகர், எழுத்தாளர், கவிஞர், ஓவியர் அகாடமி விருது ,கோல்டன் குலோப் விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரர் எனும் பல சிறப்புகளை உடைய விகோ மோர்டென்சன் (Viggo Mortensen) டோனி லிப் வேலிலங்காவாகவும் பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர்
கிரிஸ்’ன் உறுத்தாத இசையும், நெடும்பயணத்தை, உணர்வெழுச்சிகளை உடல்மொழியின் மாற்றங்களை, இசைக்கும் விரல்களை, இழிவுபடுத்தப்படுகையில் புண்படும் நாயகனை, பொங்கும் தோழனை அந்த சாலைகளை, பனியை, காவல் நிலையத்தை, விடுதிகளை, சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும் மாபெரும் அரங்குகளை துல்லியமாக காண்பிக்கும் சீயான் போர்ட்டரின் காமிராவும், தொய்வின்றி கதையை சொல்லிச்செல்லும் விட்டோவின் அருமையான படத்தொகுப்பும் நம்மையும் அவர்களுடனேயே பயணிக்க வைக்கிறது.
மிக நேர்த்தியான உயர்தர உடைகளும், துல்லிய, இலக்கண சுத்தமான ஆங்கிலமும், மேட்டுக்குடியினருக்கே உரித்தான மேம்பட்ட நாகரீகமும் நாசூக்கும் கொண்டவராய், மேடையில் தனக்கு அளிக்கப்படும் கெளரவங்களுக்கு அடியில் கருப்பினத்தவர் என்னும் எள்ளலும் கேலியும் வெறுப்பும் மண்டிக்கிடப்பதை உணர்ந்தவராக , கச்சேரியின் இடையில் கழிப்பறையை உபயோகிக்க அனுமதி மறுக்கப்படுகையிலும் உணவகங்களுக்குள் நுழைவொப்புதல் இல்லாதபோதும் சமநிலை இழக்காமல் இருப்பதுவுமாய் அலி அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார். வெள்ளையர்களுக்கான இறுதிக்கச்சேரியை ரத்து செய்துவிட்டு கருப்பின மக்களுக்கான் பிரத்யேக விடுதியில் அனைவருக்குமாய் தன் மேட்டுகுடித்தனங்களையெல்லாம் உதறிவிட்டு இயல்பாக இசையை ரசித்து துள்ளலாக மெல்லிய நடன அசைவுகளுடன் எந்த பாசாங்கும் இன்றி பியானோ வாசிப்பதும், தானும் தன் இசையும் உண்மையில் யாருக்கு சொந்தமென்பதை உணர்ந்திருப்பதை உடல்மொழியிலேயெ வெளிப்படுத்துவதுமாக அசத்துகிறார் அலி
டோனி படம் முழுதும் வாழ்வை அதன் சாதக பாதகங்களுடன் எதிர்கொள்ளும் சாமான்யராகவே நடித்திருக்கிறார்
துவக்கக்காட்சியில் வீட்டில் வேலைக்கென வந்த இரு கருப்பினப்பணியாளர்கள் உபயோகித்த டம்ளர்களை அசூயையுடன் குப்பக்கூடையில் தூக்கிப்போடும் அவரே, பிற்பாடு ஷர்லியை புண்படுத்தும் அதிகாரிகளை அடிப்பதும் , ஒருபால் உறவின் பொருட்டு கைது செய்யபட்ட ஷர்லியை காவலர்களிடமிருந்து மீட்பதும் (அந்த அசந்தர்ப்பத்தின் பொருட்டு மாடிப்படிகளின் மேலிருந்து மன்னிப்பு கேட்கும் ஷர்லியிடம், கீழே நின்றவாறு, வாழ்வின் சிக்கலான பல அடுக்குகளை கண்டிருக்கும் தனக்கு இதை புரிந்துகொள்ள முடிகின்றது என்று அவர் எளிதாக சொல்லுவதும் அப்போது ஷர்லியின் புன்னகையும், கவிதை). அவரின் இசைமேதமையால் கவரப்பட்டு அவரை ஆராதிக்க துவங்குவதுமாக விகோவும் வேலிலங்காவாகவே மாறியிருக்கிறார். மனைவிக்கு மொக்கையாக கடிதமெழுதும் டோனிக்கு ஷர்லி கவித்துவமான கடிதங்களை எழுத உதவுவதும் பின்னர் டோனியே அப்படி எழுதமுற்படுவதுமாக அவர்களின் தோழமையை மிக அழகாக சொல்லும் காட்சிகள் பல இருக்கின்றன
பயணம் துவங்குகையில் டோனியின் அசுத்தமென்று நினைக்க வைக்கும் வழமைகளால் ஷர்லிக்கு ஒவ்வாமை எற்படுவதும் பின்னர் திரும்பும் பயணத்தில் வேலிலங்காவை பின் இருக்கையில் தூங்கச்செய்து இவரே காரோட்டுவதும், காவல்துறை அதிகாரிகள் மீண்டும் குறுக்கிடுகையில் வழக்கத்துக்கு விரோதமாக ஷர்லி பேச முற்படுவதும், காவலரும் எதிர்பாராவிதமாக உதவுவதுமாய் காலம் மாறிக்கொண்டிருப்பதையும், இனவெறியிருட்டினூடே நம்பிக்கையின் ஒளிக்கீற்று புலப்படுவதையும் பார்வையாளார்களும் காண முடிகின்றது.
பல நுட்பமான செய்திகளை அழகாக போகிற போக்கில் சொல்லிச்செல்லும் இத்திரைப்படத்தை அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும்
2018 ஆம் வருடத்தின் மிகசிறந்த திரைப்பட விருதையும், சிறந்த துணை நடிகருக்கான விருதை அலியும், உண்மைத்திரைக்கதைக்கான விருதை நிக் வேலிலங்காவும் பெற்று, இன்னும் பல விருதுகளையும் பெற்றிருக்கும் இத்திரைப்படம் வழக்கமான திரைப்படங்களினின்றும் மாறுபட்ட படம் மட்டுமல்ல வரலாற்றின் கறுப்புப்பக்கங்களை குறித்து அறியாத நமக்கெல்லாம் சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட ஒரு பாடமும் கூட.
நெடும்பயணமொன்றின் பிறகு அந்த இளநீலவண்ண 1962 மாடல் கெடிலாக் செடான் காரிலிருந்து இறங்கி, பனிபொழியும் கிருஸ்துமஸ் இரவில் நமக்கென வீட்டில் காத்திருப்பவர்களை காண, தோழமையில் நிரம்பியிருக்கும் இதயத்துடன் செல்லும் உணர்வுடனேதான் திரையரங்கிலிருந்தும் வெளியேறுவோம்.
-____________________________________________________________________________________________
நீதிக்கு புறம்பாக பலரால் பொது இடத்தில் கொல்லப்படுதல், துன்புறுத்தபடுதல், எந்த சொத்துக்களையும் அவர்கள் வங்கும் உரிமையை சட்டபூர்வமாக மறுத்தல், வெளிப்படையாக அவர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்று அறிவிக்கும் பலகைகளை உணவகங்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட பல பொது இடங்களில் வைத்திருத்தல், நிறவேறுபாடுள்ளவர்களை நெருப்பிட்டு கொளுத்துதல், பலர் முன்னிலையில் தூக்கிடுதல், உயிர்போகும் வரையில் துன்புறுத்துதல் (Lynching) இந்த வதைகளை புகைப்படமெடுத்து வாழ்த்து அட்டைகளாக வைத்துக்கொள்ளுதல் போல பல அநீதிகள் அந்தக்காலகட்டத்தில் நடந்திருக்கின்றன. சமூகவியலாளர் James W. Loewen 2005’ ல்எழுதிய ’’Sundown Towns: A Hidden Dimension of American Racism , என்னும் புத்தகம் இவற்றையெல்லாம் விரிவாக பேசுகின்றது.
Leave a Reply