திரைக்கதை எழுதியிருக்கும் ஸ்யாம் புஷ்கரன் தன் பால்யத்தில் கேட்டிருந்த அவரது சொந்த கிராமத்தை சேர்ந்தவரும் தந்தையின் தோழருமான தம்பான் புஷ்கரன் என்பவரது வாழ்வில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தினை அடிப்படையாகக்கொண்ட இத்திரைப்படத்தில் காதல் மட்டுமே கற்பனை. ஃபகத் ஃபாஸில், அனுஸ்ரீ, செளபின், அலென்சியர், சுஜித் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கியப் பாத்திரமேற்றிருக்கின்றனர். இயக்குனராக திலீப் போத்தனுக்கு முதல் படம். திகிலான பழிவாங்கும் கதைகளுக்கு மத்தியில் இது ஒரு இனிய பழிவாங்கும் கதை.
பழைய பாபு ஆண்டனியின் சாயலில் இருக்கும் ஜிம்சனுடனான ஒரு தெருச்சண்டையில் அடிபடும், கேவலப்படும் ஃபகத் மீண்டும் ஜிம்சனை அடித்தபின்னரே ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்வதாய் சபதமெடுப்பதே கதை. ஜிம்சன் துபாய்க்கு வேலைக்கு போனதால் அவன் திரும்பி வரும் வரை காத்திருக்கையில் புகைப்படக்கலையென்பது பாஸ்போர்ட் புகைப்படம் எடுப்பதல்ல என்பதை அப்பா ஆண்டனியிடமிருந்து ஃபகத் கற்றுக்கொள்கிறார். முதல் காதல் கைநழுவிபோகின்றது, பின்னொரு அழகிய காதல் முகிழ்க்கிறது
நாயகன் ஃபகத்திற்கு இயல்பான நடிப்பு குருதியிலேயே கலந்துள்ளது. முதல்காட்சியிலெயே வெள்ளையில் நீலவாரிட்ட செருப்பை கழுவி, நீரில் மிதந்து வரும் நட்சத்திரப்பழங்களை சேகரித்தபடி குளத்தில் குளிக்கும், ஃபாசிலைப்போல இயல்பாக நடிக்க இனிபிறந்து வரணும் பிறமொழியிலெல்லாம் நடிகர்கள். சிலுவை சுமந்து வருவோரின் கால்களிலும் பின்னர் காட்டப்படும் அச்செருப்புக்களுக்கு கதையில் மிக முக்கிய இடம் இருக்கின்றது
புதுமுகங்கள் பலர் இருந்தாலும் அத்தனைபாத்திரங்களுக்கும் அனைவரும் கச்சிதமாகப் பொருந்துகின்றனர். அந்த கிராமத்து மக்களும் அப்படியே இயல்பாக அணிந்திருக்கும் உடையிலேயே பல காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இயக்குனர் திலீப் போத்தனும் புஷ்கரனின் மனைவி உன்னிமாயாவும் கூட நடித்திருக்கின்றனர்.
ஆர்ட் டைரக்டர் அஜயன் சாலிசேரி ஒவ்வொரு காட்சியிலும் மிகக்கவனமெடுத்து அடுப்படியில் இருக்கும் பாத்திரங்களிலிருந்து சுவற்றில் இருக்கும் புகைப்பட சட்டங்கள் வரை இடுக்கியின் கலாச்சாரத்தை திரையில் அப்படியே கொண்டு வந்து காட்டியிருக்கிறார்
நாயகன் உட்பட அனைவரும் பெரும்பாலான காட்சிகளில் கிராமத்தினரிடமிருந்து புது உடைகளை கொடுத்து பதிலாக வாங்கிய அவர்களின் உபயோகப்படுத்தபட்ட உடைகளையே அணிந்திருப்பதால் காட்சிகளில் அத்தனை உயிரோட்டம்
செளம்யாவின் திருமணத்தன்று தனிமையில் கதறி அழுகும் ஃபகத்தின் துயரை கரைப்பது, அக்கிராமத்தின் பச்சையை நனைத்து நனைத்து இன்னும் அடர்த்தியாக்குவது, தேவாலயத்தில் குடையுடன் எதிரெதிரே கடக்கும் ஃபகத், செளம்யா இருவரின் மீதும் காதலென பொழிவது, மரவள்ளிக்கிழங்கு காடுகளில் இலைப்பரப்பை கோதியபடி கடந்துசெல்வது என பெரும்பாலான மலையாளப்படங்களைப்போலவே இக்கதையிலும் மழை ஒரு பாத்திரமாகவே இருக்கிறது.
இடுக்கிமாவட்டத்தின் இயற்கை எழில் நிரம்பிய பிரகாசம் எனும் ஒரு மலையடிவார கிராமத்தில் நல்ல மழைக்காலத்தில் 45 நாட்களில் படமாக்கியிருக்கிறார்கள்
இரண்டு சண்டைகள் மட்டுமே. சண்டை இயக்குனர் குங்ஃபூ சஜித். கதை துவங்குவதற்கு காரணமான சண்டையே கதையை முடித்தும் வைக்கின்றது. ஷாஜு ஸ்ரீதரனின் படத்தொகுப்பும் அபாரம்
பீஜ்பால் இசையமைத்து இரண்டு பாடல்களும் பாடியிருக்கிறார். கவிஞர் அஹமத் ஒரேநாளில் எழுதிய கவிதையான ‘’ இடுக்கி ’’ பாடலில் கேரளத்தின் ஜீவனை நுட்பமாகவும் துல்லியமாகவும் கண்டுவிடமுடியும் அத்தனை அற்புதமான பாடல்
காதலியை மகேஷ் சந்திக்க ஏதுவாக பேபிச்சேட்டன் காண்பிக்கும் மார்வலியென்னும் ’’நம்பர்’’ எக்குத்தப்பாய் மாறிப்போவது போல திரைக்கதையினூடே மெல்லிய நூலாக மிகையில்லா இயல்பான நகைச்சுவைக்காட்சிகள் பல இருப்பினும் செளபின் ஷாகிர் வரும் காட்சிகளையெல்லாம். புன்முறுவலுடனேயே பார்க்கமுடியும், குறிப்பாய் அந்த ’’கிரிஸ்பின்’’
’’தெளிவெயிழலகும், மழையுட குளிரும்’’ பாடல் கொள்ளை அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது
ஒப்பனை அறவே இல்லாத சோனியாமோளாக வரும் லிஜிமோள் ஜோஸின் இயற்கை அழகும் செளபினுடனான அவரின் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ‘’நீயும் சுந்தரனாடா’ என்று சொல்லப்படுகையில் அலென்சியர் முகத்தில் காட்டுவது அசலான பெருமிதம். பேருந்து ஸ்டுடியோவை கடக்கையிலெல்லாம் ஃபகத் ஃபாஸிலின் உடல்மொழியும் நாயகியின் நடிப்பும் பிரமாதம், ஜிம்சனின் தங்கையே காதலி ஜிம்சி என்பது நாயகனின் சபதத்தை ஒன்றும் சிதைப்பதில்லை. முன்காதலியின் திருமணத்தன்று அவளை தெருவிலிருந்தபடி பார்த்து ஃபாஸில் புன்னகைகும் காட்சியை திரைப்படக்கல்லூரியில் பாடமாக வைக்கலாம்.
துக்கவீட்டில் காதலிக்கு கும்பிலியப்பம் சாப்பிடக்கொடுப்பது, கப்பைக்கிழங்களைகொத்துக்கொத்தாகப் பிடுங்கி சீவுவது, தட்டில் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் பொன்மஞ்சள் நிறப் பலாச்சுளைகள் , வீட்டு வாசலில் வாழைக்குலை, பச்சைபிடித்த கிராமம், நைட்டியில் பெண்கள், அச்சு அசலாக கேரளக்கிருத்துவ சாவு வீடும் திருமணமும், மென்பஞ்சுக்குலையுடன் பறக்கும் எருக்கம்பூ விதைகளின் பிண்ணனியில் தெரியும் ஜிம்சி, பேருந்தில் நேந்திரன் சிப்ஸ், லாட்டரிச்சீட்டு விற்பனை, தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கும் பெண்கள், மினுங்கும் சருமத்துடன் அடர்கூந்தலும் மையெழுதிய அகலகண்களுமாய் கேரளத்துச்சுந்தரிகள், மழை, நதி, கட்டஞ்சாயா என்று ஷைஜுவின் காமிரா கேரளத்தை கண்ணிலும் மனசிலும் கொண்டு வந்து கொட்டி நிறைப்பதில் படம் முடிந்து அரங்கைவிட்டு புறப்படுகையில், ஏதோ கேரளகிராமம் ஒன்றிலிருந்து புறப்படுவது போலவே இருந்தது
திரைக்தையின் எளிமை உண்மையில் திகைப்பூட்டும். இத்தனை எளிய மிகச்சிறிய ஒரு புள்ளியிலிருந்து தொட்டுத்தொட்டு அழகிய முழுநீளத்திரைச்சித்திரத்தை தீட்டுவதென்பது இம்மொழியிலல்லாது வேறெந்த மொழியிலும் நிகழாச்சாத்தியமே!
ஆக்ஷன் ஹீரோ பிஜுவிற்குபிறகு அமெரிக்காவின் மிக அதிக வசூலைப்பெற்ற மலையாளப் படமும் இதுவே! 5 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு பிப்ரவரி 5 2016 ல் வெளியாகி 18 கோடி வசூலுடன் வணிகரீதியாகவும் வெற்றி பெற்று வட அமெரிக்க திரைவிருது, பன்னாட்டு திரைப்படவிருது வனிதா விருது மாநில மற்றும் தேசிய விருதுகள் உள்ளிட்ட 23 விருதுகளை அள்ளிக்குவித்திருக்கும் இந்த அ,ரிய அழகிய திரைப்படத்தைப் பார்க்கத்தவறினால் அது திரைக்கலையை நேசிப்பவர்களுக்கு நிச்சயம் பேரிழப்பாகும்.
ஃபகத்தின் அப்பா படத்தில் சொல்லியிருப்பது உண்மை என்பதை உணர்ந்தபடியேதான் அரங்கிலிருந்து வெளியெ வருவோம்
’’ஆம் இ ஜீவிதம் சுந்தரமானு’’