இன்று தினமணியில் திரு அருள் செல்வன் அவர்களுக்கு அளித்த நேர்காணல் வெளியாகியிருக்கிறது. நான் நாளிதழ்கள் எதுவும் வாங்குவதில்லை .ஏதேனும் குறிப்பிட்ட செய்தி வாசிக்கவேண்டியிருந்தால் நூலகம் சென்று வாசிக்கிறேன். அதுவும் அரிதினும் அரிதாகத்தான்.
இப்போதெல்லாம் இந்து தமிழில் வெளியாகும் நண்பர் ஸ்ரீராமின் வியாழக்கிழமை கட்டுரைகளுக்காகச்செல்கிறேன். நாளிதழ்களும் தொலைக்காட்சித்தொடர்பும் இல்லாத இயற்கையுடன் இணைந்த வாழ்வின் ஆடம்பரம் இது.
முன்பு தினமலர் பட்டம் நாளிதழில் தொடர்ச்சியாகக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்ததற்குப்பிறகு அறவே நாளிதழ்கள் வாசிப்பதில்லை. எல்லாச்சேதியும் யாருடனும் தொடர்பிலில்லாமல் தனியறையில் கல்லூரியிலும், தன்னந்தனிமையில் வீட்டிலும் இருக்கையிலும் எனக்கு வந்து சேர்ந்துவிடுகிறது.
இன்று தினமணியில் என்னைக்குறித்த பதிவை வாசிக்கையில் தினமணிக்கும் எனக்குமான தொடர்பு நினைவுக்கு வந்தது.
நான் சிறுமியாக இருக்கையில் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். அந்த வீடு அங்குலம் அங்குலமாக எனக்கு நினைவிருக்கிறது. வீட்டைஒட்டி இருக்கும் ஐய்யப்பன் கோயிலில் தான் பெரும்பாலும் இருப்பேன். விறகடுப்பு பம்ப் ஸ்டவ் திரிஸ்டவ் என்று படிப்படியாக மேலே வந்ததும் நினைவிலிருக்கிறது. வாரா வாரம் செவ்வாய்க்கிழமை ஒரு ட்ரம் இணைக்கப்பட்ட தள்ளு வண்டியில் ’’….கிஷ்ணாயில்ல்ல்ல்ல்ல்ல்ல்…’’ என்று கூவி விற்றுக்கொண்டு ஒருவர் வருவார் அவரிடம் காத்திருந்து வாங்கிக்கொள்வது வழக்கம்.
அந்த தெருவின் கோடியில் இருந்த கொஞ்சம் வசதியான ஒரு வீட்டில் மட்டும்தான் தினமணியும் மாதாமாதம் ராணிமுத்துவும் வாங்குவார்கள். காலை 11 மணி வாக்கிலிருந்து அந்ததெருவே ஒவ்வொருவராக அவர்கள் வாசித்து முடித்த தினமணிப்பேப்பரை கடன்வாங்கி வாசித்து மாலை திருப்பிக்கொடுப்போம் பெரும்பாலும் நான் தான் போய் வாங்கிவருவேன். ஞாயிற்றுக்கிழமை இணைப்பான கதிர் பலர் வீட்டில் வாரக்கணக்காக இருக்கும் அதில் வரும் குறுக்கெழுத்துப்போட்டிகளை அம்மாமார்கள் சமையலறை வேலை முடிந்தபின்னர் குழுவாக அமர்ந்து போடுவார்கள். செல்போனும் தொலைக்காட்சியும் இல்லாத பொற்காலமது.
அந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார்கள் அவர்களின் பெயரே கதிரக்காதான் ஏனெனில் கதிர் புத்தகத்தை கடன் கேட்ப்பவர்களுக்கு அவர்தான் எடுத்துக்கொடுப்பது வழக்கம். அவரது அசல் பெயர் எனக்கு நினைவிலில்லை. அந்தக்கதிரக்காவுக்கு கத்தரித்து விட்டபின்னரும் கணுக்கால்வரை நீண்ட பின்னல் இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் அவரது வீட்டுக்கு ஓட்டமாய் ஓடிப்போய் அவரது யக்ஷிபோல விரிந்திருக்கும் நீண்ட தலைமுடியை துவைக்கும் கல்லில் பரப்பி கதிரக்காவின் அம்மா அரப்புபோட்டு அலசுவதை வேடிக்கைப்பார்ப்பேன். அதைக்குறித்து வீட்டுக்கு வந்து நான் கண்கள் விரிய’’.. எத்தனை நீளம் தெரியுமா ..’’என்று பேசுகையில் அம்மா ’’…ஆமா சீவக்கட்டையாட்டம் எதுக்கு ஒருத்திக்கு அத்தனை முடி’’அதிகமுடி ஆளைக்கொல்லும்டீ’ என்பார்கள்.
பின்னர் ஒரு கூடையில் சாம்பிராணி போட்டு அக்காவின் முடியை அதில் விரித்துப்போட்டு உலர்த்துகையில் நானும் கூட ஒத்தாசை செய்வேன். கதிரக்காவின் கறுத்த களையான முகம் எனக்கும் அப்படியே நினைவில் இருக்கிறது. ஒருநாள் புளியை சர்க்கரையும் உப்பும் கலந்து உருட்டி ஈர்க்குச்சியில் செருகி அவருக்கும் எடுத்துக்கொண்டு எனக்கும் ஒன்று கதிரக்கா கொடுத்ததும் அதன் ருசியும் நினைவிருக்கிறது. கதிரக்காவுக்கு எப்போது கல்யாணம் ஆனது என்பதெல்லாம் எனக்கு நினைவிலில்லை நான் எப்போதிலிருந்து அந்த வீட்டுக்கு கதிரை தினமணியை வாங்கச்செல்வதையும் தலைமுடி அலசுவதை வேடிக்கை பார்ப்பதையும் நிறுத்தினேன் என்பது நினவிலில்லை.
ஆனால் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே அம்மாவீட்டுக்கு விருந்துக்கு வந்த கதிரக்கா, உடலெல்லாம் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டு தெருவுக்கு வந்து சம்மணமிட்டு அமர்ந்து ஒரு சின்ன கதறலோ கூவலோ சத்தமோ இல்லாமல் எரிந்தழிந்துபோனதையும், அதற்கு முந்தின நாள் பொள்ளாச்சியின் மிகப்பிரபலமான மற்றொரு குடும்பத்து இளைஞரொருவர் விஷமருந்திச் செத்துப்போனதையும் பிற்பாடு அம்மாவும் அத்தையுமாய் மாய்ந்துமாய்ந்து பேசிக்கொண்டிருக்கையில் கேட்டுத்தெரிந்துகொண்டேன். சண்முகம் என்னும் அந்த இளைஞரின் புகைப்படத்துடன் அஞ்சலிப் போஸ்டர்கள் பல இடங்களில் தெருவெல்லாம் ஒட்டப்பட்டிருந்தது.
இன்று அஜிதனின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை எதிர்பார்த்திருந்த நாளில் தொடங்கி அவன் பள்ளிக்காலத்தைக் குறித்து ஜெ எழுதி இருந்த தேர்வு என்னும் பதிவை மீள வாசித்தேன்,(https://www.jeyamohan.in/488/#.VSOmPdyUf0d)
மகன்களின் இளமைக்காலத்தையும் பள்ளிக்காலத்தையும் மீண்டும் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். மகன்களின் பள்ளிப்பருவத்திலும் கொந்தளிப்பான காலம்தான்.. கடும் பொருளாதார நெருக்கடி, ஆனாலும் மகிழ்ந்திருந்தோம். எப்போதும் கதை கேட்பதும், சொல்வதுமாகவே கழியும் மாலைநேரங்களும் விடுமுறைநாட்களும்.
சிரிப்புச்சத்தம் கேட்டபடியே இருக்கும் வீட்டிலிருந்து .ரேடியோவில் பாடல்கள் கேட்டுக்கொண்டு வாசலில் மரத்தடியில் விறகடுப்புக்கூட்டி சமைப்போம் அடிக்கடி, மகன்களை அப்படி நட்புடன் நடத்தக்கூடாது என அப்பா என்னை கடுமையாக விமர்சிப்பார். முன்சகோதரி சங்கமித்ராவும் அதே எண்ணம் கொண்டிருந்தாள் எனினும் நேரடியாக தெரிவித்ததில்லை.
எனினும் இவர்களின் சகோதரனும் முன்சகோதரியின் மகனுமான சாந்தனுபரீக்ஷித் 11,12ம் வகுப்புகளுக்கு நாமக்கல்லில் ஒரு கோழிப்பண்ணைப் பள்ளியில் சூட்கேஸில் பெரும்பணத்துடன் வரிசையில் காத்து நின்று சேர்க்கப்பட்டபோது சங்கமித்ரா என்னிடம் எந்தக் கூச்சமும் இல்லாமல் நேரடியாக’’… தேவி நீ அவன் ஸ்கூல் முடிச்சு வரவரைக்கும் அவனைப்பார்க்க வேண்டாம்,பேசவேண்டாம் லெட்டெர் கூட எழுதிராதே…’’ என்றாள். அப்படியே செய்தேன். மகன்களை எந்த சீரியஸ்னெஸும் இல்லாமல் விளையாட்டுத்தனமாக வளர்க்கும் கிறுக்கு அம்மாவாகத்தான் நான் பார்க்கப்பட்டேன். (பார்க்கப்படுகிறேன்)
அம்மாவின் புடவையைப் பிடித்துக்கொண்டே வளர்ந்த ஆண்கள் உருப்பட்டதில்லை என்னும் விமர்சனத்தை நான் பெரும்பாலும் மாதா மாதம் கேட்பேன்.
பள்ளிக்கூடத்தில் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் சரணுக்கு தமிழில் எழுதுவது பெரும் சிரமமாக இருந்தது தமிழ்ப்பாடமும் அவனுக்குப் புரியவில்லை. மதிப்பெண்கள் மிகக்குறைவாகவே வாங்கினான். ’’…..எனக்கு ழ ள ல ன ண இதெல்லாம் எங்கே எழுதனும்னு தெரியலைம்மா யாரும் சொல்லிக்கொடுக்க மாட்டேங்கறாங்க…’’ என்பான் வீட்டில்.
பள்ளியில் இருந்து அடிக்கடி என்னை வரச்சொல்லி அனுப்புவார்கள். ஜெ சொல்லியிருப்பது போலத்தான், முதலில் தடித்த கண்ணாடி போட்டுக்கொண்டு உக்கிரமாக இருக்கும் பிரின்சிபாலின் அறைக்கு முன்பாக அழகிய வரவேற்பாளினியால் அமரச்சொல்லப்படுவேன் பின்னர் உள்ளே சென்று மிகக்கடுமையாக சரணின் தமிழ் மார்க்கைக் குறித்து விமர்சனம் செய்து நான் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் தமிழாசிரியைப் பார்க்கனும் என்றும் அறிவுறுத்தப்படுவேன். மீண்டும் ஆசிரியர் அறைக்கு முன்னால் காத்திருத்தல் அந்த தமிழம்மா சரணை என்னவோ கூட்டுப், சரி வேண்டாம் அப்படி அவனைக் குற்றம் சொல்லி அதைக்காட்டிலும் கடுமையாக என்னையும் வசைபாடுவார்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வீடு வருவேன்.
அப்போது மாலைநேரத்தில் என்னிடம் சும்மா கூட இருக்கவென்று சித்தேஷ் என்று ஒரு சிறுவன் வருவான். அப்போது 8-லிலோ 9-லிலோ படித்துக்கொண்டிருந்த அவன் பிற்பாடு போட்டித்தேர்வுகள் எழுதவிருந்தான். அவன் அம்மா என்னை எப்படியோ தலையைச்சுற்றி மூக்கைத்தொடுவதுபோல தெரிந்துகொண்டு மாலைவேளைகளில் என் செளகரியத்தை கேட்டுக்கொண்டு என்னுடன் இருக்கவென்று காரில் அனுப்பி வைப்பார்.
நான் அவனுடன் தாவரங்களையும் பொதுவான அறிவியலையும் பற்றிப்பேசிக்கொண்டெ வீட்டு வேலைகளைப் பார்ப்பேன். அவன் வாசிப்பில் ஆர்வமாக இருந்த சரணுக்கு ஹாரிபோர்ட்டர் வரிசை புத்தகங்கள் அனைத்தையும் மொத்தமாகப் பரிசளித்தான். அதில் தீவிரமாகியது சரணின் வாசிப்புப்பித்து. அவன் வாசிக்கும் வேகம் என்னைவிட பலமடங்கு அதிகம் என்னை இன்னும் ’’…..நிஜமாகவே வாசிச்சிங்களா இல்லை சும்மா மேலோட்டமா பார்த்தீங்களா…’’ என கேட்பவர்கள் உண்டு மிக விரைவாக வாசிப்பவள் நான்.
சரண் என்னைக் காட்டிலும் வேகம். மாசக்கடைசிகளில் பொள்ளாச்சி எதிர்வெளியீடின் சின்ன புத்தகக்கடை வழியாக அவனைக் கூட்டிக்கொண்டு போகவே தயங்குவேன் ஏதாவது புத்தகதை கட்டாயமாக வாங்குவான். பள்ளியில் 5-ல் படித்துக்கொண்டிருந்த அவனது வகுப்பில் அப்போது மாலைநேரங்களில் ராமேஸ்வரத்திலிருந்து வரும் ஒரு ஆசிரியர் சில சிறப்பு வகுப்புகள் எடுத்தார், குறிப்பாக புதிய சொற்களை கற்றுக்கொண்டு வந்து எனக்கும் சொல்லிக்கொடுப்பான். எனக்கு நினைவிருக்கிறது biscuit என்னும் சொல்லுக்கு twice baked, bi- scuit என்று பொருள் என்று அவன் சொல்லிக்கொடுத்தது.அறிதலில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தான். புதிய புத்தகம் வாங்காமல் இருக்கையில் வாசித்ததையே மீண்டும் மீண்டும் வாசிப்பான் ஆனால் ஆங்கிலம் மட்டுமே தான் எனவே ஆங்கிலம் வாசித்து வாசித்துத்தான் தமிழ் வரவில்லயோ என் சந்தேகமாக இருந்த எனக்கு,
பேருந்துப்பயணங்களில் நின்றுகொண்டே கூட வாசிப்பான் கல்யணம் காட்சி என எங்கு அழைத்துச்சென்றாலும் ஒரு மூலையை கண்டுபிடித்து அமர்ந்து வாசித்துக்கொண்டிருப்பான்.
நான் அவர்கள் இருவருக்கும் பாடம் சொல்லிக்கொடுத்ததே இல்லை ஆனால் உறவினர்களும் பள்ளியில் பிற பெற்றோர்களும் நான் ஸ்கேலும் கையுமாக மாலைவேளைகளில் ட்யூஷன் எடுப்பேன் என்று ஆணித்தரமாக நம்பினார்கள். நான் இருவரையும் எல்கேஜியிலிருந்து 12ம் வகுப்பு வரை எந்த ட்யூஷனுக்கும் அனுப்பாததற்கும் பலரால் வன்மையாக கண்டிக்கப் பட்டேன்.
’….ஒழுங்கா காலையிலயும் சாயங்காலமும் ட்யூஷன் அனுபினா 10த்லயும் 12த்லயும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்து தெருமுனைகளில் பள்ளிவாசலில் போஸ்டரில் போட்டோ வரும் புத்திசாலிப்பசங்களைக் கதை சொல்லிச்சொல்லி கெடுக்கிறேன்…’’ என்பது என்மீதான பொதுவான குற்றச்சாட்டாகவே இருந்தது.
’’..சரண் உன் போட்டோ பேனரில் ஸ்கூல் வாசலில் வரணுமாடா? ட்யூஷனுக்கெல்லாம் போறியா?…’’
’’….வேண்டாம்மா. இந்த வருஷம் ஃபர்ஸ்ட் வந்தவங்க பேனரை இப்போ ஸ்கூல் ஆயாம்மா எல்லாம் மழை வந்தா நனையாம இருக்க கிழிச்சு ஒரு கூரை மாதிரி கட்டி இருக்காங்க , இதுமாதிரியெல்லாம் போட்டோவும் பேனரும் எனக்கு வேண்டாம், ட்யூஷனுக்கே நான் போகமாட்டேன்..’’
கதை கேட்டுத்தான் வளர்ந்தார்கள் இருவரும் . ஒரே ஒரு சிறப்பு வகுப்பிற்கு கூட இருவருமே போனதில்லை.
இந்த தமிழம்மா தொல்லையை சரி செய்யவேண்டி இருந்தது. நான் சமையலறையில் வேலையில் இருக்கையில் இருவரையும் கூடவே தரையில் அமரச்சொல்லி நாளிதழ்களின் தலைப்புசெய்திகளை உரக்க வாசிக்கச் சொல்லுவேன் மாலையில் எஃப் எம் ரேடியோவில் ஒலிக்கும் பாடல்களின் முதல்வரியை அடுத்த பாடல் ஒலிக்கும் முன்பு எழுதிக்காண்பிக்கச் சொல்லுவேன்.
அதை ஆர்வமாகச் செய்தார்கள். தருணுக்கும் தமிழ் தகராறு தான் எனினும் புகார் சொல்லும் அளவுக்கு அவன் மதிப்பெண்கள் இல்லை அவன் ஆங்கிலமும் வாசிக்கவில்லை. ஆனால் தமிழை தப்புத்தப்பாகப் புரிந்துகொள்வான், ஒரு கூட்டத்தில் தாத்தா ஒருவர் (பள்ளிக்கு வந்து உரையாற்றிய பெரியவர்) சொன்னதாக கண்ணகி பட்டினி கிடந்து கஷ்டப்பட்டாள் என்று தருண் வீட்டுக்கு வந்து சொல்வதும் அவ பட்டினி இல்லடா பத்தினி என்று நான் திருத்தி பத்தினின்னா என்னவென்று பதிலுக்கு அவன் கேட்டு உரையாடல் உக்கிரமாகப் போகும் அவனுடன்.
நல்லவேளையாக தமிழம்மா வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போய் சரணுக்கு எந்தக்காரணத்தாலோ மிகவும் பிடித்துப்போன சங்கீதா என்னும் ஒரு இளம் ஆசிரியை வந்தார் அதன்பிறகு சரண் தமிழில் விருப்பம் கொண்டு நல்ல மதிப்பெண்கள் வாங்கினான். வெண்முரசு தொடர்ந்து கேட்பதும் அவனும் மெல்ல மெல்ல வாசிப்பதுமாக சரணுக்கு அறிமுகமே ஜெ வின் மிகச்செறிவான மொழிதான்.
பிற்பாடு அவன் ஜெ வுக்கு எழுதிய கடிதங்கள் அவரது தளத்தில் பிரசுரமாகின அவன் 7லிலும் தருண் 5லும் படிக்கையில் இருந்தே விஷ்ணுபுரம் கூட்டங்களுக்கு என்னுடன் வர துவங்கினார்கள்.மகன்களை படிப்பில் சோடை போன காரணத்தைச்சொல்லி ஒருபோதும் நான் கடிந்துகொண்டதே இல்லை.
ஆனால் இருவருமே பாடத்தைத்தவிர மற்றவற்றில் ஆர்வமாக இருந்தார்கள். 7ம் வகுப்பில் சரணுக்கு ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகம் state level best student award அளித்து அப்போது நான் வாங்கிய சம்பளத்தில் 4 – ல் ஒரு பங்கை விருதுத்தொகையாகவும் அளித்தார்கள். சென்னைக்கு மூவருமாக ரயிலில் சென்று, எங்கேயோ தங்கி, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் அந்த விருதை வாங்கினோம். ஒரு யோகா போட்டிக்கு தருணை வெளியூருக்கு அழைத்துசென்று நாள் முழுவதும் காத்திருந்து அலுத்துப்போய் போட்டி முடிந்ததும் முடிவுகளைக்கூட கேட்டுக்கொள்ளாமல் ஊருக்கு திரும்பிவிட்டேன் மறுநாள் பள்ளியில் முந்தைய நாளின் போட்டியில் மாநில அளவில் முதலிடத்துக்கான தங்கபதக்கத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு புழுதிபறக்க தருண் என்னைப்பார்த்ததும் ஓடிவந்தான். இப்படி பல போட்டிகள் பல வெற்றிகள் ஆனால் 9ம் வகுப்பு வரை பாடங்களில் இருவருமே சொல்லிக்கொளும் படியில்லைதான். அதைக்குறித்து மூவருமே கவலைப்பட்டதுமில்லை. இருவரும் வாங்கிய தங்கவெள்ளி வெண்கல பதக்கங்கள் குப்பையாக ஒரு பெட்டியில் போட்டு வைத்திருக்கிறோம்
நல்லாசிரியர்கள் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை, நல்ல கல்விக்கூடம் வாசிப்புப்பழக்கம் இவையெல்லாம் இளமைப்பருவத்தில் எத்தனை முக்கியம் என்பதற்கு சரணும் தருணுமே உதாரணம். பள்ளிக்கூடம் ஒரு மாணவனை அடையாளப்படுத்துவதே அவனது மெய்யான அடையாளம் என்று நம்ப வேண்டியதில்லை என்பதற்கும்.
தருணுக்கு மத்தகம் கதையின் கேசவன் குட்டி கற்பனை விளையாட்டுத் தோழனாக இருந்து ஒரு கட்டத்தில் தருண் தானே கேசவன் குட்டி யானை என நம்பத்தலைப்பட்டு நாலு காலில் நடந்து வீட்டில் என்னையும் சரணையும் முட்டித்தள்ளிக்கொண்டிருந்தான்.அதைக்குறித்து சரண் ஜெவிற்கு எழுதின தப்பும் தவறுமான கடிதம்தான் தளத்தில் முதன்முதலில் ஒரு சிறுவனின் கடிதம் என்று பிரசுரமானது. பின்னரே பலவருடங்கள் கழித்து நான் எழுதினேன். https://www.jeyamohan.in/18020/
சரணின் அந்தக்கடிதத்துக்கு பதில் அளித்த ஜெ உங்கள் சகோதரர் சிறந்த காட்டிலாகா அதிகாரியாக ஆக வாழ்த்துக்கள் என்றிருந்தார்.
தருண் யானை டாக்டரும் காடும் வாசித்து சொல்லக்கெட்டு காட்டியல் படிக்க விரும்பி இப்போது காட்டியலாளன் (அல்லது காட்டாளன்) ஆகியிருப்பதும் சரண் சின்மயா பள்ளியில் best outgoing student விருது கௌரவ் விருது என ஏகப்பட்ட விருது வாங்கியதும் வரலாறு.
இப்போது 26 வயதாகும் சரண் 23 வயதிற்குள் அர்த்தசாஸ்திரம் முழுமையாக வாசித்து எனக்கும் அதன் சாரத்தை சொன்னான். காமசூத்ரா எனப்து ஒரு sex manual என்று நினைத்திருந்த எனக்கு அது ஒரு தனி நூலல்ல 7 தொகுதிகளும் பல அத்தியாயங்களுமாகச் சொல்லப்பட்ட art of living என்பதை அவனே விளக்கினான். பிரஜாபதி நந்திகேசர் உள்ளிட்ட பலர் அத்தியாயங்கள் எழுதி வாத்ஸ்யாயனர் அதை தொகுத்தார் என்பதையும் அவனிடமிருந்தே அறிந்தேன். அதன் பிறகு என் அறிதல்கள் எல்லாமே ஜெ அவருக்கு அடுத்தபடியாக சரண் ஆகிய இருவரிடமிருந்துதான். சில மாதங்களுக்கு முன் அரிஸ்டாட்டிலின் Politiks (ஆம் k தான்) வாசித்து முடித்து அதைக்குறித்துப் பேசினோம். சமீபத்தில் அவன் பரிந்துரைத்த medical apartheid வாசித்து இன்னும் அந்த நூல் உருவாக்கிய குற்றவுணர்விலிருந்து மீளமுடியாமலிருக்கிறேன்.
குழந்தைகளைக்குறித்து பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை, பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் குழந்தைகளைக் குறித்து உருவாக்கும் பிம்பங்களை நம்பாமல் இருந்தால் நல்ல இளமைப்பருவமும் அவர்களுக்கு மிக நல்ல எதிர்காலமும் அமையும் என்று நான் நம்புகிறேன்..
இன்று விவேகானந்தர் ஜெயந்தி கல்லூரியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. விவேகானந்தரையும், இளமையில் அவரைப் போலாக வேண்டும் என்று கனவுகொண்டிருந்த தருணையும் நினைத்துக்கொள்கிறேன்.
சரண், தருணை நான்தான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்வேன். அப்படியொரு மாலையில் 1-ம் வகுப்பிலிருந்த தருணின் வகுப்பாசிரியை கீதா மிஸ் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் எனத் தகவல் சொல்லி இருந்ததால் அவருக்காக ஆசிரியர் அறையில் காத்திருந்தேன். அவரது மேசை முழுக்க குழந்தைகள் வரைந்த படங்களும் திருத்தவேண்டிய தாள்களும் நிரம்பிக்கிடந்தன. களைத்துப்போய் தலையில் சாக்பீஸ் துகள்களுடன் வந்த அவர் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டே எதிரில் இருந்த நாற்காலியில் அமரும்படிச் சொன்னார். வழக்கமாக அவரது முகத்தில் இருக்கும் புன்னகை அன்று இல்லை என்பதை கவனித்தேன்.
எடுத்த எடுப்பிலேயே ...வீட்டில் நிறைய டிவி பார்ப்பிங்களா... என்றார் ... இல்லைங்க எங்க வீட்டில் டிவியே இல்லையே!..என்றேன்
. ... அப்போ அடிக்கடி பசங்களை சினிமாக்கு கூட்டுட்டு போவீங்களா?.. என்றார்.
.. இல்லைங்க, எப்பவாவதுதான் போவோம்…“
என்னை நம்பாமல் முறைத்துப்பார்த்துவிட்டு“ ..அப்புறம் எப்படிங்க வகுப்பில் மாணவர்களை எல்லாரும் எதிர்காலத்தில் என்னவாகப் போறீங்கன்னு வரிசையாச் கேட்டு, ஒவ்வொருத்தருனும் டாக்டர், இஞ்சினீயர், கலெக்டர், கண்டக்டர்னு சொல்லிட்டிருக்கறப்போ தருண் எழுந்து விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொல்லறான்?, ஏன்னு நான் கேட்டா எங்கம்மாதான் அப்படி ஆகனும்னு சொன்னாங்கன்னு சொல்லறான், சின்னக்குழந்தைகளை இந்த வயசிலெயெ சினிமாவை நோக்கித் தள்ளறது சரியா ? அதுவும் நீங்களே ஒரு டீச்சரா இருந்துகிட்டு?... என்றார்.
அயர்ந்து போனேன். தருணுக்கு விஜயகாந்தைத் தெரியும் என்பதே எனக்குத்தெரியாது, அன்னையின் விழைவுகள் ஜீன் வழியாகக் கடத்தப்படுமென்பது உண்மையென்றால் அவன் பார்த்திபன் ஆக வேண்டும் என்றுதானே நியாயமாகச்சொல்லி இருக்க வேண்டும் ஆனால் எப்படி விஜயகாந்த்?
கீதா மிஸ்ஸிடம் அப்படி நான் எதுவும் சொன்னதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு அது சம்பந்தமாகத் தருணைக்கண்டிக்கிறேன், சினிமா மோகத்திலிருந்து அவனைத் திருப்பித் திருந்திய குமரனாக்கி நல்வழிப்படுத்துகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு மகன்களை அழைத்துக்கொண்டு வந்தேன்.
தருணுக்கு எதிர்காலத்தில் ஒரு பன்றிகுட்டியாக வேண்டும் என்னும் ஒரு பெருவிருப்பம் இருந்ததுதான் எனக்குத்தெரியும், பள்ளியிலிருந்து வீடு செல்லும் வழியில் ஒரு சாக்கடையில் பன்றிக்குடும்பமொன்று இருந்தது, கட்டாயம் அங்கே காரை நிறுத்தி மனங்குளிர அவன் பன்றிகளைப் பார்த்து ரசித்தபின்னரே காரை எடுக்கமுடியும்.
கொஞ்சம் வளர்ந்து, நம்மைப்போல எளியமானுடர்கள் பிற்காலத்தில் பன்றிகளாக முடியாது என்று தருண் அறிந்துகொண்ட போது அவன் 3-ம் வகுப்பு முடித்து விட்டிருந்தான். அப்போதும் மனம் தளராமல் கண்ணாடி முன்பு நின்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மட்டும் பன்றிக்குட்டியைப்போல மாற்றிக்கொள்ளும் சாத்தியங்களைப்பற்றி யோசிப்பான்.
ஒரு ஞாயிறன்று உயரமாக தலையணைகளை அடுக்கி வைத்து அவற்றின் மேலிருந்து தரையில் குதிக்கும் பரிசோதனையொன்று நூழிழையில் பிசகிப்போய் தரையில் குப்புற விழுந்து உதடுகள் வீங்கி பத்துப்பதினைந்துநாட்கள் அசல் பன்றிக்குட்டியைப் போலவே முகம் இருந்ததை நொடிக்கொருதரம் கண்ணாடி முன்பு நின்று பார்த்துப்பார்த்துத் துயருற்றவன் பிறகு ஒருபோதும் பன்றிகுட்டிகளைப் பற்றிப் பேசவேயில்லை
இரவு சமைக்கையில் அதே யோசனையில் இருந்தேன் கொஞ்சநாள் முன்பு ரமணா திரைப்படத்தை லேப்டாப்பில் மகன்களுடன்பார்த்து, கல்லூரிப் பேராசிரியராரன விஜயகாந்த் குற்றங்களைத் தட்டிக்கேட்பதை, சண்டைக்காட்சிகளில் எதிராளியின் நெஞ்சுக்குநேரே அவர் கால்கள் உயர்ந்ததை எல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது அதனால் சொல்லி இருப்பானோ என்றூ ஒரு சம்சயமும் உண்டானது.
இரவு இருவருக்கும் கதைசொல்லித் தூங்கவைக்கையில் மெதுவாக“.. தருண், கீதா மிஸ் கிட்ட என்னடா சொன்னே?.. என்றேன்.
..அதுவா நான் பெரிசாகி விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொன்னேன், கீதா மிஸ் முறைச்சுப்பார்த்து இனிமே அப்படிச்சொன்னா அடிப்பேன்னாங்க..ஆனா நான் பயந்துக்கலை அவங்க அடிக்கவே மாட்டாங்கனு எனக்குத்தெரியும்..“ என்றான்.
..ஆமா பிடிக்கும் நீதான சொன்னே அவர் ரொம்ப நல்லவரு நமக்கு நிறைய நல்லது பண்ணி இருக்காருன்னு அதான் நான் சொன்னேன்..
..நானா, நான் எப்படா சொன்னேன்..?
... மீ மறந்துட்டியா நீயே? அந்த பெட்ருமில் அவர் போட்டோ கூட இருக்கே நீ அதைக்காமிச்சு சொல்லி இருக்கே, தலையில் துண்டு கட்டிட்டு, கையை இப்படி கட்டிட்டு நிப்பாரே அந்த விஜயகாந்த்,,, என்றான்.
..அடப்பாவி அவர் விஜயகாந்த் இல்லடா விவேகானந்தர்..
“... ஹி ஹி ஆமா வி- ல ஆரம்பிச்சதால நான் மாத்திச் சொல்லிட்டேன் நாளைக்கு கீதா மிஸ்கிட்ட சொல்லிடறேன் நான் விவேகானந்தராகப் போறேன்னு.. என்றான்.
வேடசெந்தூ ர் வீடு கிரஹப்பிரவேசத்துக்கு வந்திருந்த என் ஆசிரியர் திரு ராஜகுமார் அவர்கள் விவேகானந்தரின் சட்டமிடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தைப் பரிசளித்திருந்தார் இன்றுமவர் அதே இடத்திலிருந்து சைடாக எங்களைப்பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார், அந்தப் புகைப்படத்தைக்காட்டி அவரைக் குறித்து மகன்களிடம் பேசி இருக்கிறேன்.அதில் வந்த வினை அது. இதையெல்லாம் இன்னுமே வீட்டில் பேசிப்பேசி சிரித்து தருணை கோபமூட்டுவோம்.
சில வருடங்களுக்கு முன்பு இதே நாளில் என்னைத் தெரியாத்தனமாக விவேகானந்தரைக் குறித்து உரையற்றச் சொன்னார்கள். நானும் ஜெ வின் தளத்திலிருந்தும் விவேகானந்தரைக் குறித்த நூல்களிலிருந்தும் மிகத்தரமான ஒரு உரையைத் தயாரித்துகொண்டு போய் விவேகானந்தரின் பயணங்கள் என்னும் செறிவான உரையாற்றினேன்.
அதுவரை அரைத்தமாவே அரைக்கப்பட்ட அந்த அரங்கில அது மிகப்புதியதோர் எழுச்சி உரை (என்பதையும் நானே சொல்லிக்கொள்கிறேன்). மேடையில் அமர்ந்திருந்த ஒரு பெரும் பேராசிரியர் பிரமை பிடித்ததுபோல் இருந்தார், வேறு வழியில்லாமல் என்னைப்பாராட்டி விட்டு, தான் அந்த உரையைப் பதிவு செய்திருப்பதாகவும், கல்லூரி நிர்வாகத்துக்கு அதைஅனுப்பி என்னைக்குறித்துச் சொல்லப்போவதாகவும் சொன்னார்.
அவர் பணி ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாகிது பாவம் அவரால் அதை இன்று வரை செய்ய முடியவில்லை என்பதையும் என்னை அதன்பிறகு நிர்வாக அங்கத்தினர் இடம்பெறும் முக்கிய விழாக்களில் உரையாற்ற அழைப்பதில்லை என்பதையும் இந்த நன்னாளிலே புன்னைகையுடன் நினைவு கூறுகிறேன்.
தருணுக்கு இன்னும் விவேகானந்தராகும் உத்தேசம் இருக்குமேயானால் அவனது ஏராளமான தோழிகள் அதற்கு அனுமதி தரவேண்டி இருக்கும் சிக்கலும் இப்போது இருக்கிறது என் பதை அவனுக்கு நினைவூட்ட வேண்டும்.
// இன்னும் இருந்துகொண்டிருக்கிறது அந்த அழகிய முகம். என்றும் மாறாத இளமையிலேயே அவரை நம் நினைவுகளில் நீடிக்கச் செய்த விதி பெரும் கருணைகொண்டது//- ஜெ
மிக மிக அரிதாகவே கண்ணீர் விட்டு அழுகிறேன். அப்படியான உறுதிப்பாடோ முன்முடிவோ எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் துயர்களுக்கும் கஷ்டப்பாடுகளுக்கும் immune ஆகிவிட்டிருக்கிறேன். அந்த shield ஐயும் கடந்து உள்ளே செல்லும் கூர்நுனிகள் உண்டாக்கும் காயங்களுக்கான கண்ணீரை மிக நெருங்கியவர்கள் மட்டுமே கண்டிருக்கிறார்கள்.
ஆனால் அகரமுதல்வன் இயக்கத்தில் ரமேஷ் பிரேதனின் அம்மை, அப்பன், அயோனிகன் ஆவணப்படம் பார்க்கையில் என்னையுமறியாமல் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தேன். ரமேஷ் பிரேதன் இறந்த செய்தியைக் கேட்டபோது மெய்யாகவே வருந்தினேன்தான். அதற்குச் சிலநாட்கள் முன்புதான் விருதுக்கான வாழ்த்து தெரிவித்த எனக்கு ’’நன்றி தோழர்’’ என்று ரமேஷ்பிரேதன் முதலும் கடைசியுமாகப் பதிலனுப்பி இருந்தார்.
ஒரு அறைக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கும் அவர், அத்தனை திரளான வாசகர்களையும் அந்த விழாவையும் அந்த அங்கீகாரத்தையும் நேரில் அனுபவித்தபின், இந்த விருதை வாங்கிய பின் அவர் இறந்திருக்கலாமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன், எனினும் தேற்ற யாருமில்லாத தனிமையில் பெருகிய அந்தக்கண்ணீர்தான் ரமேஷின் இழப்புக்கான என் இதயபூர்வமான அஞ்சலி.
இந்த ஆவணப்படப்படபிடிப்பின் பல வித்தியாசமான களங்கள், மாந்தர்கள். பிரபலங்களின் நினைவுத்தொகுப்புக்கள், மிகச்சிறப்பான இயக்கம், mystic ஆன ஒரு பொதுத்தனமை எல்லாவற்றையும் விட பிரேமாவின் இழப்பின் துயரும் அவரின் உடைந்த இதயத்தின் குருதிக் கசிவெனப் பெருகிய கண்ணீரும்தான் எனக்கு முதன்மையாகத் தெரிந்தது. ’’என்னைப் பிரேமான்னு கூப்பிடமாட்டாரு பன்னிக்குட்டின்னு, பூனைக்குட்டின்னு கூப்பிடுவாரு’’ என்று அவர் கண்ணீர் பெருக்கியபோது நானும் உடைந்து அழுதேன்.
அவரைப் பருமனான உடலுடன் கழிவறைக்கு அழைத்துச்செல்கையில் எடை தாளாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்து விடுவதை கண்ணீரும் சிரிப்புமாகச்சொன்னதும், தான் கோபித்துக்கொண்டு இருந்தாலும் ’’பன்னிக்குட்டி வா உனக்கு வைன் வாங்கித்தரேன்’’ என்று ரமேஷ் சொல்லுவதையும், இன்னும் அவர் தன்னோடு தான் இருக்கிறார் என்ற அவரின் காதலில் தோய்ந்த நம்பிகையுமாக, ஜெ சொல்லி இருப்பது போல தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்ல, அன்பென்பதை மறந்தே போயிருக்கும் மொத்த மானுடமே அவருக்கு கடமைப்பட்டிருப்பதாவே எண்ணுகிறேன். ரமேஷ் பிரேதனின் நூலில் பிரேமாவை மழையெனச் சித்தரித்திருப்பதுதான் எத்தனை பொருத்தம். அப்படித்தான் அன்பை அவர் ரமேஷ் பிரேதன் மீது பொழிந்துகொண்டிருந்தார்,
ரமேஷ் செயலாக இருக்கையில் பிரேமா அவரிடம் சென்று சேரவில்லை அவர் படுக்கையில் இருக்கையில்தான் அவரிடம் சென்றிருக்கிறார். அவருக்குப் பணிவிடைகள் செய்வதன் மூலம்தான் அவரை நேசித்திருக்கிறார்.அந்த அன்பில், நேசத்தில், காதலில் தளும்பிக் கொண்டிருந்த அவருக்கு இப்போது ரமேஷின் இழப்பு உண்டாக்கியிருக்கும் துயரைத்தான் என்னால் தாளமுடியவில்லை.
அசலான காதலோ நேசமோ இப்போதெல்லாம் அரிதினும் அரிதாகவே நிகழ்கிறது, காணக்கிடைக்கிறது. சொல்லப்போனால் பெரும்பாலான இப்போதைய நேசம், உறவு,காதல் எனப்படுவதெல்லாமே மிக வெளிப்படையான கணக்கீடுகள் அல்லது ஏமாற்றுதல்கள் மட்டுமே. நம்பிக்கையூட்டும் அணுகுமுறைகள், மிக எளிய நாடகங்கள் மூலமே அன்பைப்பெறமுடிகிறது பலருக்கும். பின்னர் அணுகியதைக் காட்டிலும் எளிதாக விரைவாக அதிலிருந்து விடுபட்டுப் புதியவற்றை நோக்கிச் செல்கிறார்கள்.
ஆகப்பெரிய நம்பிக்கைத்துரோகங்கள் படுக்கையிலல்ல இப்படியான விலக்குதல்களிலும் விலகிச்செல்லுதல்களில்தான் நிகழ்கின்றன. எனினும் ஆணும் பெண்ணுமாக இருபாலாருக்கும் நேசமென்பது மிகத்தேவையாக இருப்பதால் அதன்பொருட்டு தொடர்ந்து பலியாகிக் கொண்டும் பலிவாங்கிக்கொண்டும் இருக்கிறார்கள்.
இளமையில் இருப்போருக்கும், ஆரோக்கியமானவர்களுக்கும் உண்மையான அன்பு கொண்டிப்பவர்களுக்கும் மிக நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் இதுவே நிகழ்கையில், இளமை இறங்கு முகத்திலிருக்கையில், குணப்படுத்த முடியாத மரபுரீதியான உடல்நிலையும், அசாதாரணமான உடலெடையும் கொண்ட சொல்லிக்கொள்ளும்படியான பொருளாதார நிலையுமில்லாத ரமேஷ் பிரேதன் மீதான பிரேமாவின் தூய அன்பு என்னை அசைத்துவிட்டது, I sway!
விஷ்ணுபுரம் விழாவன்று பிரேமாவை இறுகக்கட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த வருடத்திய பயணங்களின் பட்டியலில் முதன்மையாகப் பிரேமாவைச் சந்திக்கவிருக்கிறேன் ஆரத்தழுவிக்கொள்ளப்போகிறேன்.
அந்தத் தூய அன்பை, கண்ணீரையும் துயரத்தையும் விழுங்கும் முயற்சியில் தோற்று கட்டுக்கள் அவிழ்ந்து அவர் உடைந்தழுவதெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
பிரேமாவையும் ரமேஷ்பிரேதனையும் நினைத்தால் பொறாமையாகவும் இருந்தது. மிகத்தூய அன்பை அளித்தும் பெற்றுக்கொண்டுமிருந்த இருவரல்லவா?
ஒரு பிழையீட்டைப் போலப் பிரேமாவின் காதலின்பொருட்டும் இழப்பின் பொருட்டும் நானும் அழுது கொண்டிருந்தேன்
13 வருடங்கள் ஒரே அறையில் படுக்கையிலேயே வாழ்ந்து, எழுந்து நடக்கவும் வெளி உலகை, வானைக்காண பெருவிருப்பம் கொண்டிருந்தவரின் மறைவுக்குப் பின்னர் அந்த வீட்டுக்கு வந்து, வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்த சிட்டுகுருவியை அது அவர்தான் என்று பிரேமா சொன்னது உண்மைதான். நான் நம்புகிறேன் அவரது ஆன்மா 16 நாட்கள் அங்கேயே தான் இருந்திருக்கும்.
எடை கொண்டிருந்த உடலற்ற ஆன்மாவாகவாவது பரந்த வானை அந்தச் சில நாட்களில் பார்க்கவும் அனுபவிக்கும் வாய்ப்பிருந்தும், தன்னை எந்தக் கணக்கீடும் நோக்கமும் இல்லாமல் நேசித்த பிரேமாவுடன் 2 நாட்கள் இருக்கவும் சிட்டுகுருவியென வந்தது ரமேஷ் பிரேதன் தான்.
அம்மா சிலவருடங்களுக்கு முன்பாக ஒரு பண்டிகை நாளில் இரவில் நெஞ்சடைத்து இறந்துபோனார்கள். தினமும் மாலையும் குளிக்கும் பழக்கம் அம்மாவுக்கும் இருந்தது என்னைப்போலவே அல்லது எனக்கிருக்கிறது அம்மாவைபோலவே.
அன்று மாலையும் குளித்து, உடல் துவட்டிய ஈரிழைத்துண்டை இனி ஒருபோதும் உடலைத் துவட்டப்போவதில்லை, நெருப்புக்கு தின்னக்கொடுக்கபோகிறோம் என்றறியாமல். வராந்தா கம்பி மீது கடைசியாகக் காயப்போட்டிருந்தார்கள்.
அம்மா இறந்து உடலை வீட்டுக்குக் கொண்டுவந்த நள்ளிரவில் எதேச்சையாகக் கவனித்தபோது அந்தத் துண்டில் வழக்கத்தைக் காட்டிலும் பெரிய அளவிலான வெட்டுக்கிளிஒன்று அமர்ந்திருந்தது. அதே துண்டின் மீது 2 நாட்கள் அந்தப் பூச்சி அசையாமல் அமர்ந்திருந்து எங்கள் கதறலை, கண்ணீரை, பொருளற்ற சடங்குகளை, இனி யார் மீதும் பிரயோகிக்க முடியாத, அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் ஆணவத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தது.
பின்னர் எங்கோ எப்படியோ மறைந்துவிட்ட அந்தப்பூச்சி அம்மாவின் அஸ்தியை மின்மயானத்திலிருந்து வாங்கிக்கொண்டு வருகையில் தம்பி விஜியின் முதுகிலும் அஸ்தியை பாரதப்புழாவில் கரைத்துவிட்டு திரும்புகையில் உடனிருந்த இன்னொருவரின் தோளிலும் இருந்தது. அது அம்மாதான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்த ஆவணப்படத்தின் மிஸ்டிக்கான பகுதிகளாக கருப்புவெள்ளையில் காட்சிப்படுத்தப்பட்டவைகளும் அந்த வண்ணத்துப்பூச்சியும் பறக்கும் பன்றியுமிருந்தன என்றாலும் பிரேமாவின் கண்ணீரும் அவர் சிட்டுகுருவியைப்பற்றி தொண்டையடைக்கச் சொன்னதும் தான் ஆவணப்படத்தின் உச்சம்.
இந்த ஆவணப்படத்தின் இறுதியில் இயக்கம் அகரமுதல்வனென்னும் பெயரைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. வெள்ளித்திரையில் இதே பெயரின் ஓரெழுத்து சிவப்பில் தனித்துத் தெரிகையில் முன்வரிசையில் அமர்ந்து பார்க்கக் காத்திருக்கிறேன்.
பிரமிளாவைத் தெரியும் தானே? 70- 80களில் தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நாயகி, மகள், மருமகள், தங்கை வேடங்களில் நடித்து ஒரு அமெரிக்கரைக் காதல் திருமணம் செய்துகொண்டு கலிஃபோர்னியாவில் செட்டில் ஆகியவர்.
ஒருவேளை மறந்திருந்தாலும் இதைச்சொன்னால் நிச்சயம் தெரியும் தங்கப்பதக்கத்தில் ஓவராக உணர்ச்சிவசப்படும் சிவாஜியிடம்(அவர் எல்லாப்படங்களிலும் தான் ஓவர் இல்லையா) “… மாமா காஞ்சு போன நதியெல்லாம்…“ வசனம் பேசியவர். முகத்தில் பருக்கள் நிறைந்திருக்கும் அழகி. பிரமிளா என்னும் பெயரும் இப்போது அதிகம் புழக்கத்திலில்லை. எனக்குத்தெரிந்து பிசிக்ஸ் ஷண்முகப்பிரியாவின் மகள் பெயர் தான் பிரமிளா என் இத்தனை பெரிய உலகில். ஆச்சர்யம்தான்.
இன்று பிரமிளாவையும் அந்த வசனத்தையும் நினைத்துக்கொள்ள வேண்டி வந்தது. கல்லூரி வளாகத்துக்குள்ளேயே ஆசிரியர்களுக்காக இந்தியன் ஓவெர்சீஸ் வங்கிக்கிளை ஒன்று இருக்கிறது. திருமணத்துக்கு முன்பு நான் இங்கு பணி புரிகையில் சம்பளம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொள்ளாச்சிக்கிளையில் சேர்ப்பிக்கப்படும். அப்போதெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனை இல்லையே எனவே பஸ் ஸ்டேண்ட் தாண்டி நடையாய் நடந்து நேரில் சென்று தேவுடுகாத்து பணம் எடுப்போம்.
மெய்யாலுமே வங்கிப்பணியாளர் அவரது இருக்கைக்கு வர 11 மணி ஆகிவிடும், வந்து அமர்ந்து வரிசையில் நிற்பவர்களை அவர் ஏறிட்டுப்பார்க்க மேலும் ஒரு அரைமணிநேரமாகும் பின்னரே பரிவர்த்தனை நடக்கும். பிற்பாடு இந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கிளை வளாகத்துக்குள்ளேயே வந்தது எங்களுக்கு வசதியாக இருந்தது. எங்களைப்போலவே வங்கி அலுவலர்களும் நேரத்துக்கு வந்துவிடுவார்கள் சிறிய கிளை, சொற்பமான அலுவலர்கள் என்பதால் எங்களுடன் நட்புடன் இருப்பார்கள், துறைசார்ந்த விழாக்களுக்கு அவர்களை அழைப்பதும் அவர்கள் கலந்துகொள்வதுமாக ஒரு பெருங்குடும்பத்தின் அங்கத்தினர்களாக்த்தான் இருக்கிறோம்.
பிரமிளாவுக்கு வருகிறேன், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து வங்கியிலிருந்து எனக்கு //நீங்கள் வாங்கி இருக்கும் கடனுக்கான வட்டியை சரியான தேதியில் செலுத்துங்கள்// என என் வங்கிக்கணக்கு எண்ணைக்குறிப்பிட்டு குறுஞ்செய்தி வந்துகொண்டிருந்தது. வங்கியில் கடனேதும் வாங்கியதில்லை எனவே நேரில் சென்று சொன்னபோது அது எதாவது கணினிப்பிழையாக இருக்கும் அல்லது கடன் வாங்கியவர் தவறுதலாக உங்கள் தொடர்பு எண்ணைக்கொடுத்திருப்பாராயிருக்கும், கவலைப்பட வேண்டாம் விட்டுவிடுங்கள் என்றர்கள்.
ஆனாலும் சில நேரங்களில் இந்தத்தேதியில் கட்டனும் இல்லையென்றால்நடவடிக்கை வரும் என்றெல்லாம் செய்திவருகையில் பதறி மீண்டும் வங்கிக்குச் செல்வேன் மீண்டும் திருப்பி அனுப்புவார்கள்.
இன்று காலை நீளமாக ஒரு செய்தி வந்திருந்தது -//வட்டியே மாதா மாதம் ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும் நீங்கள் பலமுறை தகவலனுப்பியும் கட்டவில்லை, எனவே நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்// என்று. பதட்டமானேன் வட்டியே லட்சக்கணக்கில் என்றால் அசல் எத்தனை லட்சம் வாங்கி இருப்பார் அந்தப் பாழாய்போன என் தொடர்பு எண்ணை வங்கியில் கொடுத்த கடங்காரன்(!).
11 மணிக்கு வங்கிக்குப் போய் “… என்னங்க இது இப்படியெல்லாம் மெசேஜ் வருதே…“ என்றதும் நம்ம பிரமிளாவின் வசனம் போலவே அந்தப் பெண் அதிகாரி அவரது போனை எடுத்துக்காண்பித்து “…மேடம் என்னத்தை சொல்லறது ஒரு மாசமா எங்களுக்கும் இப்படி கடன் இருக்கு வட்டிகட்டனும்னு இஷ்டத்துக்கு மெசேஜ் வருது நீங்க அந்தச் செய்தியை எல்லாம் கண்டுக்காதீங்க எங்களுக்கே கடுப்பாத்தான் இருக்கு…“ என்றார்.
“….மாமா வங்கிகணக்கு வச்சிருக்கறவங்க எல்லாம் ஒரு பிரச்சனைன்னா வங்கி அதிகாரிகளைத்தான் போய்ப்பார்க்கிறோம், ஆனா அந்த அதிகாரிகளுக்கே இப்படி பிரச்சனை வந்தா யாரால எங்களுக்குஆறுதல் சொல்ல முடியும்?…“
கல்லூரி விடுமுறை முடிந்து நாளை புதிய கல்விப் பருவத்துக்குக் கல்லூரி திறக்கிறது. இந்த விடுமுறையையும் வழக்கம்போல வாசிப்பு, எழுத்து, பாடல்கள், பயணம், மேடை உரைகள், நிகழ்வுகள் என்று செலவழித்தேன். சென்னை,பாண்டிச்சேரி, கோவை, பெருந்தலையூர் என்று பயணித்துக்கொண்டிருந்தேன். இடையில் கல்லூரியில் தேர்வுப்பணி, திருத்தும்பணி என்றும் செல்லவேண்டி இருந்தது.
என்ன வேலையாக இருந்தாலும் எங்கு பயணித்தாலும் தமிழ்விக்கி பணியைத் தேங்க விடுவதில்லை அவ்வப்போது அதைத் திருத்தி விடுகிறேன்.
புதிதாகத் தமிழக அரசு ஆவணக் காப்பகத்தின் பழைய நூல்களிலிருந்து தமிழக மாவட்டங்களின் flora வைத் தொகுத்து திருத்தி, மேம்படுத்திப் புதிய ஆவணமாக்கிக்கொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறேன். அதில் இப்போது 4 மாவட்டங்களைத் தொகுத்து முடித்து அனுப்பிவிட்டேன். மீதமுள்ளவற்றை செய்துகொண்டிருக்கிறேன்.
18-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழைய நூல்களில் ஆவணப்படுத்தப் பட்டிருக்கும் விவரங்கள் மலைப்பேற்படுத்துகின்றன. அவற்றைப் பெரும்பாலும் முழுமையாகப் படித்துவிடுகிறேன். Hemingway , Baliga ஆகியோரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்தையும் அத்தனை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வு தான் மேலோங்கி இருக்கிறது படிக்கையில். அப்போது இருந்த ஜாதி அடுக்குகள், ஜாதி சார்ந்த சடங்குகள், உணவுப்பழக்க வழக்கங்கள், சமூக அமைப்பு என்று சங்கிலித் தொடர்போலச் சுவரஸ்யமாகப் படிக்கப் படிக்க நல்லவேளை நான் இந்தப்பணியை ஒத்துக்கொண்டேன் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட ஜாதியில் இறப்பு நிகழ்ந்தால் இறந்தவரைச் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும் முன்பு அவரது வலதுகையை சாணத்தில் முக்கி அவர் வாழ்ந்த வீட்டின் சுவற்றில் கை அச்சைப் பதித்தபின்னரே கொண்டு செல்கிறார்கள் என்னும் தகவல், குகைஓவியங்களில் இருக்கும் கைச்சித்திரங்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. ரெஃபெரென்ஸ்க்கு அளிக்கப்பட்ட நூல்களை நானே வைத்துக்கொள்ளலாம் என்பது கரும்பு தின்னக்கூலி தான்.
புதிதாக மாறி இருக்கும் தாவரங்களில் பெயரைகளை மாற்றி, பிழைகளைக் கண்டறிந்து திருத்தி, ஒவ்வொரு அறிவியல் பெயருக்கும் அந்தபெயரை வைத்தவரின் பெயரை இணைத்து. எல்லாப்பெயர்களையும் இட்டலைஸ் செய்து அட்டவணை இட்டு என ஏராளமான நேரம் ஒதுக்கி, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது தவறு நேர்ந்துவிடாமல் கவனமாகவும் இருக்க வேண்டி இருக்கிறது என்றாலும் மிகுந்த மனநிறைவுடன் இந்தப்பணியைச் செய்கிறேன். சீமைக்கருவேலத்தின் பெயர் இப்போது ப்ரொசாஃபிஸ் ஜூலிஃப்ளோரா என்பதிலிருந்து நெல்டுமா ஜூலிஃப்ளோரா என மாற்றப்பட்டிருக்கிறது எனவே இப்படியான மாற்றங்களுக்காக ஒவ்வொன்றையும் சரிபார்த்து எழுதவேண்டி இருப்பது எனக்குப் புதிய கற்றலுக்கும் உதவியாக இருக்கிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!
காலச்சுவடுக்காக ’’அலையிடைவெளியில்’’ மொழியாக்க நூலையும் இரவு பகலாக எழுதிச் சரிபார்த்து முடித்து அனுப்பினேன். சென்ற வாரம் தருண் பெங்களூருவில் ஒரு காட்டுயிர் கருத்தரங்கில் கலந்துகொண்டு அங்கிருந்த புத்தகக்கடையில் எனக்குப்பரிசளிக்க ஒரு நூலைத் தேடியிருக்கிறான். விற்பனையில் இருந்த பெண் ’’….உங்கள் அம்மாவுக்கு எந்த மாதிரியான நூல் பிடிக்கும்…’’ என்று கேட்டபோது ’’…சூழல், தாவரங்கள், இயற்கை தொடர்பானவை…’’ என்று தருண் சொல்லி இருக்கிறான்.
அந்தப்பெண் ’’…அப்படியானால் அவருக்கான மிகச்சிறந்த ஒன்றாக இதுதான் இருக்க முடியும்…’’ என்று இவான் ஏவ்ஸின் intertidal நூலை எடுத்துத்தந்திருக்கிறார், தருண் பெருமிதத்துடன் ’’…இந்த நூலை என் அம்மாதான் மொழிபெயர்த்திருக்கிறார்..’’ என்று சொல்லி அந்தப்பெண்ணை ஆச்சர்யப் படுத்திவிட்டு ஜானகி லெனினின் எனது கணவரும் ஏனைய விலங்குகளும் இரண்டாம் பாகத்தையும், கண்ணுக்குப்புலப்படாத வைரஸ்களின் உலகம் குறித்த இன்னொன்றும் வாங்கி வந்தான். வாசிக்கத் துவங்கி இருக்கிறேன். மைந்தரால் பொலியும் அன்னை.
தாவரவியல் அகராதிப்பணியை மீண்டும் தொடங்கி இருக்கிறேன். அதில் முழுக்கவனம் குவிக்க முடியாமல் தொடர்ந்து இருக்கும் பணிகள் அலைக்கழிக்கின்றன.
சரண் இந்தியா வந்துவிட்டிருக்கிறான் எனினும் இன்னும் வீட்டில் ஒரு நாள் கூட இருக்கவில்லை. அவன் இருந்து முடிக்க வேண்டிய முக்கியவேலை ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது.
இரண்டு கட்டுரைத்தொகுப்புக்களை பிரசுரத்துக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் முடியவில்லை. டிசம்பரில் சிலநாட்கள் விடுமுறை வருகையில் அதைச்செய்ய வேண்டும்.
விழாக்களில் அநேகமாக எல்லா நண்பர்களையும் சந்திக்க முடிந்தது பெருமகிழ்வளித்தது.
நல்ல மழை இருந்ததால் புதிய விதைகளையும் செடிகளையும் நட்டு வைத்திருக்கிறேன். சமீபத்தில் சென்ற ஒரு பயணத்தின் நினைவாக அந்த ஊரிலிருந்தே பிரகாசமான மஞ்சள் சிறு மலர்களை அளிக்கும் ஒரு புதர்ச்செடியின் செம்பு நிற உலர்வெடி கனிகளைக் கொண்டு வந்து விதைத்திருக்கிறேன். அந்த ஊரின், அந்தத் தங்கலின், அந்த நினைவுகளின், அந்த இனிமையின் சாட்சியாக அது இனி முளைத்து வளர்ந்து முதிர்ந்து மலரளிக்கவிருக்கிறது.
கல்லூரியில் இந்தப்பருவத்தில் தோட்டக்கலைப் பாடத்தையும், புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் தாவரங்களின் அடிப்படை இயல்புகள்குறித்த ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுக்கவிருக்கிறேன். மாணவர்களுக்கு எப்படியோ எனக்கு கல்லூரி திறப்பது வழக்கம்போல ஆர்வத்தைத்தான் எழுப்பி இருக்கிறது.
வகுப்பறைக்குச் சென்று சாக்பீஸ் பிடிக்காமல் இருக்கும் நாட்களின் பதட்டம் மெல்ல உருவாகி விட்டது., நாளைசரியாகிவிடும். 🙂
இன்று ஜெ தளத்தில் தமிழ் விக்கியில் இருக்கும் என் பக்கம் வந்திருந்தது. பலர் அழைத்துப்பாராட்டினார்கள். இன்றிருக்கும் இந்த இடத்துக்கு ஜெ வைத்தவிர வேறு யாருமே காரணமில்லை. நன்றியுடன்அவரை நினைத்துக்கொள்ளாத நாளுமில்லை.
இன்றென்னவோ நான் திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கடந்து வந்த காலங்களை கடினப்பாதைகளை, விழுங்கிய கசப்புக்களை பிடுங்கப்பட்ட வாய்ப்புகளை, தலைகுப்புற தள்ளிவிடப்பட்ட படுகுழிகளை, பறிக்கப்பட்ட மகிழ்வுகளை இப்போதிருக்கும் கண்ணியமான வாழ்வை என்று வேகமாக காணொளிக்காட்சிகளை ஓட்டி ஓட்டி பார்ப்பதுபோல மனம் பார்த்துக்கொண்டது. கடந்து வந்த மனிதர்களை குறித்த புகார்கள் பெரிதாக இல்லை. அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதால் அவர்களுக்கும் என் அன்பு . இதோ விரைவில் என்னை இறுகப்பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு தளையிலிருந்து முற்றாக வெளியேறவிருக்கிறேன்.
சரியான மனிதர்களுடன் வாழக்கொடுத்து வைக்காததைக் காட்டிலும் சரியில்லாதவர்களோடான வாழ்வுதான் வதையாகிவிடுகிறது. அன்னைமையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தளையிடுகிறது.
நான் அன்னைமையை ஒருபோதும்உணர்ந்ததில்லை எனவே அதை அத்தனை இழக்கவேயில்லை. எனினும் அன்னையை இழந்தேன் மூன்று வருடங்களுக்கு முன்னர்.
இழந்துகொண்டிருக்கும் இளமையை குறித்த வருத்தமேதும் இல்லை. சரண் தருண் இருவரின் தோளும் நெஞ்சும் அகமும் விரிந்திருப்பதில் என் இளமையின் பங்களிப்பு இருக்கிறதே! நான் தான் அவர்களும்.
நான் இழந்தவை அவர்களில் மெல்ல மெல்ல நிரம்புவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இளமையை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை மாறாக இந்த வயதிற்கான தோற்றத்தின் கண்ணியத்திலும் கம்பீரத்திலும் கவனமாக இருக்கிறேன். i am aging gracefully. முன்னெப்போதைக்காட்டிலும் நம்பிக்கையுடன் உள்ளொளியுடன் நிறைவுடனும் இருக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன். மிகுந்த மகிழ்வுடனும் இருக்கிறேன்.
வெண்முரசில் ஒரு வரி இருக்கும் மீட்டப்படாத யாழும் இசையாலானதே என்று.அப்படி எனக்குள்ளும் நாதம் இருந்தது . நானே அதை வெகு தாமதமாக அறிந்துகொண்டேன். புழுதியில் எறியப்பட்டிருந்த நல்லதோர் வீணையை எடுத்தேன். தூசி தும்புகளை துடைத்துச் சுத்தம் செய்தேன் தந்திகளை சீராக்கினேன். அரிதாக மீட்டினேன் எழுந்த சுகநாதத்தை மனமகிழ்ந்து ரசித்தேன். மீட்டாதபொழுதுகளிலும் நினைவில் இருக்கும் அவ்விசையை நினைத்துக்கொண்டேன்.
இந்தக்கொரியர் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையினால் ஏராளமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வசிக்கும் வேடசெந்தூருக்கு அரை கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு நிறுவனம் வீட்டில் கொண்டு வந்து கொடுக்க விதிகள் இல்லையென்பார்கள் நான் போய் நேரில்தான் வாங்கி ஆகவேண்டும். கேட்டால் ’’நான் சர்வீஸ் ஏரியாவாம்’’. அரைகிமீ தொலைவில் இருப்பது எப்படி சேவைக்கு அப்பாற்பட்ட இடமாகும்?.
முன்பே ப்ரொஃபெஷனல் கொரியரின் அலட்சியத்தைக் குறித்து எழுதி இருக்கிறேன். இருந்தாலும் அனைத்து பொறுப்பற்ற நிறுவனங்களுக்கும் நல்லபெயர் வாங்கித்தந்துவிடும் இந்த DTDC -Desk to Desk courier and cargo என்கிற நிறுவனம்.
ஆகஸ்டில் சரணுக்கு ஒருசில பொருட்கள் தேவையாக இருந்ததால் இந்த நிறுவனத்தை அணுகினேன். ’’எல்லாம் அனுப்பிடலாம் கொண்டு வாங்க’’ என்றார்கள். ஆகஸ்ட் 6ம் தேதி ’’ஓனர்’’ என்று சொல்லி எனக்குத்தரப்பட்ட ஒரு அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ………’’அங்கே வந்து பேக் செய்யவேண்டுமா?’’….. எனக்கேட்டேன், …’’என்ன என்ன பொருட்கள் இருக்கிறது என்று ஒரு பட்டியலுடன் நீங்களே பேக் பண்ணி கொண்டு வந்துவிடுங்கள்’’…. என்றார்.
சரணுக்கு வேண்டியவற்றை கடைகடையாக அலைந்து வாங்கி ஒழுங்காகப் பேக்பண்ணி சுமார் 15 ஆயிரம் மதிப்புள்ள முறையான பிராண்டட் பொருட்களை அழகாக அடுக்கி கல்லூரியிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் அந்தக் கண்ணாடிச் சுவர்களும் வேலையாட்களும் ஒரு வரவேற்பாளினியும் இருந்த அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 7 அன்று போனேன். உள்ளே இருப்பவற்றின் பெயர் அளவுபோன்றவைகள் இருந்த பட்டியலையும் ஆதார் நகலையும் அந்த ரிஷப்ஷன் பெண் வாங்கிக்கொண்டாள்.
பார்சலை எடைபார்த்துவிட்டு 8450 ரூபாய் கேட்டாள், 5-கிலோவுக்கு மேல் இருந்தால் 10 கிலோவுக்கானதுதான் தொகை செலுத்தவேண்டும் என்றாள், சரி என்று ஜிபே செய்து விட்டு பார்சலையும் கொடுத்தேன். ரசீது கேட்டபோது வாட்ஸேப்பில் வரும் என்றாள் அந்தப்பெண்.
மறுநாள் 8 ம் தேதி ரசீது வரவில்லை. காத்திருந்துவிட்டு 9 அன்று அழைத்துக்கேட்டபோது பார்சலே ஜெர்மனிக்கு போய்ச் சேர்ந்துவிட்டது என்றாள் அதே வரவேற்பாளினி. சரி இனி எதுக்கு ரசீது என்று நானும் விட்டுவிட்டேன். சரணைக் கேட்டபோது ட்ராக் செய்து பார்த்துவிட்டு அருகிலிருக்கும் ஒருநகருக்கு வந்துவிட்டதாகவும் தன்னை இன்னும் யாரும் அழைக்கவில்லை என்றும் சொன்னான்
1 வாரமானதும் மீண்டும் ’’வந்துச்சாடா’’ என்று கேட்டேன், …’’இப்படி லேட் ஆகாது என்னன்னு தெரியலை என்றவன் மீண்டும் சரிபார்த்து குவாரண்டைனில் இருக்கு போலிருக்கு’’… என்றான். நான் மீண்டும் அந்த ஓனருக்கு அழைத்துக்கேட்டேன் …’’போயிரும் மேம் இன்னிக்கோ நாளைக்கோ’’… என்றார்.
ஆனால் செப்டம்பர் முழுவதும் இப்படியே போன் பண்ணிக்கேட்பதும் அவர்கள் எதோ சொல்லுவதுமாகவே கழிந்தது. பார்சலில் இருந்தது எல்லாம் உணவுப் பொருட்கள் வீணாகிவிடும் என்றும் எனக்குப் பதட்டமாக இருந்தது.
பிறகு அவர்கள் ஒருநாள் அழைத்து என் இமெயில் வாங்க மறந்து விட்டதால் அதை கொடுக்கச்சொன்னார்கள் கொடுத்தேன். பின்னர் 10 நாட்கள் அமைதி. செப்டம்பரே முடியும் தருவாயில் சரண் அழைத்து …’’அந்தப் பார்சல் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக தகவல் இருக்கு, என்னையும் யாரும அழைக்கவில்லை, உன்னை அழைத்தார்களா?…’’ என்றான். இல்லை என்றேன்.
பொள்ளாச்சி DTDC கொரியர் அலுவலகத்துக்குப் போனில் கேட்டபோது அவர்களுக்குப் பார்சலைக்குறித்து எதுவுமே தெரியவில்லை. அப்படியா?திருப்பி அனுப்பிட்டாங்களா? என்று என்னைக் கேட்டார்கள். பிற்பாடு பட்டியலிட்டீர்களா? ஆதார் கொடுத்தீர்களா என்று ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு என்னை வெறுப்பேற்றினார்கள். பின்னர் ’’அப்படியெல்லாம் திருப்பி அனுப்ப மாட்டாங்க நாங்கள் பார்க்கிறோம்’’ என்றார்கள்.
அடுத்த வாரம் கடும் கோபத்தில் அந்த ஓனருக்கு பலமுறை அழைத்தேன் அவர் எடுக்கவேஇல்லை . அந்த அலுவலகதுக்கு நேரில் சென்றேன். அதே வரவேற்பாளினி மட்டும் இருந்தாள். ஓனர் எங்கே என்றேன். போன் பண்ணுங்க என்றாள், அவர் எடுக்கலை நீ கூப்பிடு என்றேன். அவள் அவருக்கு போன் பண்ணினதும் எடுத்தார் ஓனர், எனக்கு போனைக் கொடுத்தாள் …’’ நான் இத்தனை நேரம் போன் பண்ணினேன் எடுக்கவேயில்லையே நீங்க என்றேன், அவர் நான் பேசுவது கேட்காதது போல் ’’ஹலோ ஹல்லோ’’ என்று மீண்டும் மீண்டும் சொல்லிகொண்டிருந்தார். கடுப்பாகி சத்தமாக ‘’ஏன் நான் அத்தனை முறை கூப்பிட்டு எடுக்கவில்லை ஆனால் இப்போ ரிஷப்ஷனில் கூப்பிட்டா மட்டும் எடுக்கறீங்க ,பார்சலை திருப்பி அனுப்பினது கூட தெரியலையா உங்களுக்கு ?’’… என்று கேட்டேன்
பதிலுக்கு அந்த ஒனர் ’’… கூப்பிட்டீங்கன்னா உடனே எடுக்கனுமா என்ன? கார் ஓட்டிக்கொண்டிருக்கையில் யார் கூப்பிட்டாலும் எடுக்கும் வழக்கம் இல்லை…’’ என்றார்.
கோபம் எனக்குக் கட்டுக்கடங்காமல் போனது, ஒரு அலுவலகம் வைத்து நடத்தும் ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசும்முறைஅல்ல அது. கோபமாக போனை அணைக்காமலேயே அந்தப்பெண்ணின் மேசையில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்
அதன்பிறது அந்தத் திருவாளர் ஓனர் என்னை அழைத்து …’’பணம் கட்டினீங்கன்னா என்னவேணா செய்வீங்களா? என்றும் பார்சலை அப்படி ட்ராக் செய்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் போனை அப்படியெல்லாம் கோபமாக மேசையில் வைக்கக்கூடாது என்றும் அதட்டினார். பதிலுக்கு அவரைப்போன்ற நபர்களிடம் அப்படிக் கீழே இறங்கிப்பேசும் வழக்கமில்லை என்பதால் நான் இதைக்குறித்து புகார் அளிக்கப்போகிறேன் என்று மட்டும் சொல்லி போனை கட் செய்தேன். அதன்பிறகு வேறொரு பெண் கோவையிலிருந்து அழைத்து அதிலிருக்கும் ஒரு பாக்கெட்டின் அளவு குறித்த சந்தேகத்தால் அது திருப்பி அனுப்பப்பட்டது என்றும் என் இமெயில் இல்லாததால் அதை சரிபார்க்க முடியாமலானதாகவும் சொன்னாள். நான் அவர்கள் என்னிடம் இமெயில் கேட்டு நான் அனுப்பிய தகவலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினேன் பிறகு மரண அமைதி.
நான் பெங்களூர் தலைமை அலுவலகத்துக்கு பல புகார் மெயில் அனுப்பியும் எந்தப் பலனும் இல்லை. ரசீது இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றார்கள். ரசீதை மீண்டும் கேட்டு வாங்கி அனுப்பினேன். ஒரு பலனும் இல்லை, ஒரு பதில் கூட இல்லை.
நேற்று நவம்பர் 1ம் தேதி அந்தப்பார்சலை கோவையில் இருந்து பணம்கட்டி நான் மீண்டும் திருப்பி எடுத்துகொள்ளும்படி தகவல் வாட்ஸேப்பில் வந்தது.
நான் பதிலளிக்கவில்லை , சரணே இப்போது இந்தியாவுக்கு வந்துவிட்டான் அதை மீண்டும் செலவு செய்து திருப்பி எடுத்துகொள்ளும் எண்ணமும் இல்லை.
இந்தியா முழுக்க இப்படி பொறுப்பற்றவர்களால்தான் பல பெயர்பெற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. பார்சலை வாங்கும்போதே என்ன என்ன தேவை எனக்கேட்டு வாங்கத்தெரியவில்லை, பார்சல் எங்கு இருக்கிறது என்று ட்ராக் செய்யவும் தெரியாமல் வாடிக்கையாளாரிடம் மரியாதையாக பேசவும் தெரியமல் பொறுப்பாக பார்சல் போய்ச்சேர்ந்ததை உறுதிப்படுத்தவும் தெரியாமல் இவர்கள் இப்படி அலுவலகம் எல்லாம் வைத்துகொண்டு இருப்பதை நினைத்தால்….
வாழ்கையில் இந்த DTDC பக்கமே இனி போகமாட்டேன். செலவுசெய்து வாங்கியவை சரணுக்குப் போய்ச்சேரவில்லை, தேவையில்லாமல் அந்த ’ஒனர்’ என்னை மரியாதைக்குறைச்சலாக பேசியதைக் கேட்டுக்கொள்ள வேண்டி வந்தது, அந்தப்பொருட்கள் எல்லாம் வீணாகியது எல்லாவற்றையும் விட அந்தப்பார்சலில் ஒரு வெள்ளை அட்டையில் அழகாக ஒரு இதயம் வரைந்து அன்பு என எழுதி அனுப்பி இருந்தேன். யாராலும் கவனிக்கப்படாமல் போன அந்த அன்பையும் நினைத்துத்தான் இப்போது மன உளைச்சல்.
பொறுப்பற்றவர்களுக்கு மத்தியில் வாழ்வதும், மூடர்களை அன்றாடம் எதிர்கொள்வதும்தான் இப்போதிருக்கும் பெரும் பிரச்சனைகள். 25 ஆயிரம் ரூபாய் யாரோ பிக்பாக்கட் அடித்துவிட்டார்கள் திருட்டுக்கொடுத்துவிட்டேன் என்று நினைத்துக்கொள்கிறேன்.
நல்ல வெயில் இப்போதெல்லாம். இப்படி புரட்டாசியில் வெயிலடித்ததே இல்லை. பாம்புகள் வீட்டைச்சுற்றிலும் மண்ணுக்குள் இருக்க முடியாமல் வெளியே திரிகின்றன.
எப்போதும் தோட்டத்துக்குள்ளிருக்கும் அந்த பெரிய மஞ்சள் சாரை இன்று தண்ணீர்த்தொட்டிக்கருகில் தென்பட்டு திடுக்கிடவைத்தது. அதன் முழங்கை பருமனும் நெகுநெகுவென்னும் தேகமும் பொன்மஞ்சள் நிறமும் அதன் விரைவும் , நமக்குக் கண்ணில் அதிகம்படும் உடல்வடிவங்களிலிருந்து வெகுவாக அந்நியப்பட்டிருக்கும் உடல்வடிவமுமாக என்னதான் அவற்றைக்குறித்த அறிதலிருந்தாலும் திடீரெனப் பார்க்கையில் மனம் திடுக்கிட்டுவிடுகிறது. (இப்படியே என்னைக்குறித்து அந்தச்சாரையும் ’’இந்தம்மாவை தினம் பார்க்கிறோம் ஆனாலும் இன்னிக்கு நீலக்கலர் புடவையில் திடீர்னு குறுக்கே வந்ததும் பகீர்னுச்சு’’ என்று நினைத்திருக்கக்கூடும்)
பின்னர் ஆயிரங்களின் அன்னை திமுதிமுவென வளர்ந்திருக்கும் தொட்டியில் ஒரு க்க்க்க்குட்ட்ட்டிப் பச்சைக்கொடிப்பாம்பு. அதன் பெற்றோர்களையும் நானறிவேன். நம் வீட்டில்தான் ஜாகை. ஒருமுறை அவையிரண்டும் காதலின்பத்தில் மெய்மறந்து தென்னை மரத்திலிருந்து தொப் எனக் கீழே விழுந்து ஸ்தம்பித்து பின்னர் சுதாரித்துக்கொண்டு விரைந்தோடி இலைதழைப்புக்குள் மறைந்தன. அவற்றின்சாயல் (? ) இந்தகுட்டியில் எனக்குத் தெரிந்தது. என்னைபார்த்தும் பயப்படாமல் அங்கேயே அதன் குட்டியூண்டு நாக்கை நீட்டிக்கொண்டு இருந்தது.
நான் அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். அதன் அம்மாவிடம் அதற்கு இன்று நன்றாகக் கிடைத்திருக்கும். அபாயகரமான, கண்ணில் பட்டால் உயிராபத்தை உண்டாக்கும் மனிதர்களைக் கண்டால் ஓடிஒளிந்து கொள்ளும்படி அதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தும் அது இப்படி கவனக்குறைவாக இருந்ததற்கு இன்னிக்கு உண்டு,
தென்னைமர ஓலைகள் பெருஞ்சத்தத்துடன் அவ்வப்போது விழுகின்றன, குரும்பைகளும் வெயில் தாங்காமல் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மழை வருவதுபோல இடியெல்லாம் இடித்து, போக்குக்காட்டிவிட்டு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
காலை 9 மணி வெயிலில் ’அக்கா அக்கா’வென ஒரு தீனக்குரல் பின்வாசல் கதவுக்குவெளியே ஒரு கருத்த, ஏறு வெயிலில் தளர்ந்த 23/24 வயதிருக்கும் ஒருத்தி நின்றாள். கழுத்தில் எண்ணெய்ப் பிசுக்ககேறிய சரடு மட்டும் , கைகளில் கண்ணாடி வளை. அழுக்குச்சுரிதார். உடன் ஒரு 3 வயதுகூட நிரம்பி இருக்காத சிறுமகன். இன்னும் மொட்டை அடிக்கவில்லைபோல முடி பிடரிவரை நீண்டிருந்தது, உச்சியில் ஒரு குடுமி.
கையில் இருந்த வயர்க்கூடையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் வண்ணத்திரவங்கள் இருந்தன. ’’அக்கா மகளிர் சுய உதவிக்குழுவிலிருந்து வரேங்க்கா, இது டைல்ஸ் வாஷ்பேசின் கறையெல்லாம் சுத்தமா எடுத்துரும் நான் வேணா எடுத்துக்காமிக்கறேன் அதுக்கு காசுவேண்டாம் பார்த்துட்டு பிடிச்சா வாங்குங்கக்கா’’ என்றாள்.
நான் அப்படியான பொருட்களை வாங்குவதில்லை. எனவே ’’வேண்டாம்மா’’ என்று சொல்லிவிட்டென் எனினும் அந்த வெயிலில் தலைக்கு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் முகத்தில் வழிய ஒரு பழைய சிறு செருப்புப்போட்டுக்கொண்டிருந்த, அம்மாவுடன் இன்று நாள் முழுவதும்,தெருத்தெருவாக அலையவிருக்கிற கூட நின்ற அந்தக்குழந்தையைப்பார்த்து மனம் கலங்கியது.
‘’ எவ்வளவும்மா’’? என்று கேட்டேன், அவள் 120 ரூபாய்க்கா என்று சொல்லச் சொல்லவே அந்தக் குழந்தையும், கேட்டுக்கேட்டுப் பழகி விட்டிருக்கும் போல மழலையில் ’’நூயிருபது’’ என்று மிழற்றியது. கண்ணீரை மறைத்தபடி அவசரமாக ஒரு பாட்டிலை வாங்கிக்கொண்டேன். மீண்டும் பணம் கொடுக்கச்செல்லுகையில் அந்தக்குழந்தையை கவனமாகப் பார்க்காமலிருந்தேன். சீக்கிரமே அவனை ஸ்கூலுக்கு கொண்டு விடும் காலத்தில் அந்தகுழந்தை இப்படி அலைய வேண்டி இருக்காது என்று என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டேன்.
வாழ்வென்னும் வதை.
அமேஸானில் நான் ஆர்டர் செய்திருந்த ஒன்று வந்திருப்பதாக ஒரு அழைப்பு வந்தது. ’’நான் வீட்டிலிருக்கிறேன் வீடு தெரியுமா’’வெனக் கேட்க ’’தெரியுங்க்கா’’ என்று பதில் வந்தது.
கொஞ்ச நேரத்தில் மீண்டும் அழைப்பு நான் எடுக்க ’’அக்கா வாசலில் நிற்கிறேன்’’ என்றான் அவன். போனேன் வியர்த்து வழிந்தபடி பைக்கிலிருந்து இறங்கி கையிடுக்கில் ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு என்னிடம் பார்சலைக் கொடுத்தான் நன்றி சொல்லிவிட்டு நான் திரும்ப எத்தனிக்கையில் ’’அக்கா ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்கதானே’’? என்றான்.
திரும்பி நின்று நேராக அவனைப்பார்த்து ’’இல்லை சொல்லு’’ என்றேன்.
’’உங்கபோனில் வச்சிருக்கற அந்தப்பாட்டை நான் இதுவரைக்கும் கேட்டதே இல்லைக்கா, ரொம்ப ரொம்ப நல்லா இருந்துது அதான் மறுபடியும் கூப்பிட்டேன்’’ என்றான்
புன்னைகைத்து ‘’அப்படியா அந்தப் பொன் என்பேன் எனக்கு ரொம்பப்பிடிச்ச பாட்டு. நான் பிறக்கறதுக்கு முன்னாடி வந்த பாட்டு அது, இதேதான் ரொம்ப வருஷமா வச்சிருக்கேன்’’ என்றேன். மறுபடியும் தயங்கி ’’அக்கா, அது எந்தப்படத்திலன்னு சொன்னீங்கன்னா நானும் அதையே வச்சுக்குவேன்’’ என்றான்.
’’போலீஸ்காரன் மகள்’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன் பின்னாலிருந்து ’’அக்கா ரொம்ப நல்லா இருக்கு பாட்டு’’ என்று குரல் கேட்டது. தேங்ஸ் என்றேன்
சமீபத்தில் வெண்ணிலாவும் நானுமாகக் கோவையில் ஷாப்பிங் சென்றிருந்தோம். சென்னை சில்க்ஸில் வெண்ணிலா எனக்கு top & bottom ஒன்றே போலிருக்கும் சில உடைகளை வாங்கித்தந்தார். இரவுடையைப் போலல்லாமல் பயண உடையென்று சொல்லும்படியானது அது. தளர்வாகவும் வசதியாகவும் இருந்தது.
அப்படியொரு உடையை நான் அப்போதுதான் முதன்முதலில் பார்க்கிறேன். தூரத்திலிருந்த வெண்ணிலா கடைச்சிப்பந்தியிடம் கோஹார்ட் என்று அந்த உடையைக்குறிப்பிட்டதாக எனக்குக் காதில் விழுந்தது. அல்லது அப்படி நான் நினைத்துக்கொண்டேன்.
இன்று அந்த உடையை அணிந்துகொண்டிருந்தேன். மகன்களுடன் வழக்கமாக அன்றாடம் வீடியோ அழைப்பில் பேசுவதால் அந்த உடையைச் சுட்டிக்காட்டி தருணிடம் ….’’இது கோஹார்ட் வெண்ணிலா அத்தை வாங்கிக்கொடுத்தது நல்லாருக்கா….’’என்றேன். கோபமாக …’’அதுக்குப்பேரு கோஹார்ட் இல்லை co-ord மேலும் கீழுமாக மேட்சிங்காக இருப்பதால் “coordinate set” என்பதுதான் கோஆர்ட்….’’ என்றுவிட்டு…’’ஒரு டீச்சரா இருந்துட்டு நீ இப்படி தப்பா சொல்லலாமா ….’’? என்று கோபித்துக்கொண்டான்.
அந்த உடையைப் பற்றி நான் வசிக்கும் இந்தக்குக்கிராமத்தில் இன்னும் பேசப்பட்டிருக்காததாலும் எனக்குப் பெண்பிள்ளைகள் இல்லாததாலும் அந்தத் தவறைச்செய்துவிட்டேன் என்றுசொல்லி திருத்திக்கொண்டேன். ….’’எது புதுசா கேள்விப்பட்டாலும் அதைச்சொல்லறதுக்கு முன்னாடி முழுக்க தெரிஞ்சுக்கனுமில்ல…’’ என்று மேலும் ஒரு சின்ன அறிவுரையும் கொடுத்தான், ஏற்றுக்கொண்டேன்.
தருண் மிக இளமையிலிருந்தே பொதுவான உச்சரிப்பிலும் பெயர்களைச் சரியாகச் சொல்வதிலும் கவனம் கொண்டவன்.
சரண் ப்ரிகேஜி சென்ற, தருண் இன்னும் பள்ளிக்குச் சென்றிருக்காத காலத்தில் அப்பாவின் வீட்டில் ஒருவருடகாலம் வரை தங்கி இருக்கவேண்டிய கஷ்டமான சூழல் இருந்தது.
அப்போது அந்த மாடிப்போர்ஷனின் குறுகிய முன் வாசல் வராண்டாவின் கம்பிஅழியை பிடித்தபடி நின்றுகொண்டு தெருவை எந்நேரமும் வேடிக்கை பார்ப்பான் தருண். மாலையில் அவனது அண்ணன் சரண் வழக்கமாக வரும் ’சிவா ஆட்டோ’வின் சத்தம் கேட்டதும் நின்ற இடத்திலேயே மகிழ்ச்சிக் கும்மாளமிடுவான். அவன் வந்ததும் அண்ணனுக்குக் காலிலிருந்து ஷூக்களை கழட்டுவதும், சாக்ஸை உருவுவதும், பேக்கில் இருப்பவற்றை எடுத்துவைப்பதுமாக ராமனுக்கு லஷ்மணன் செய்த பணிவிடைகளை எல்லாம் பொருளற்றதாக்கிவிடும் சேவைகளை மனமுவந்து செய்வான்.
அப்படியொரு நாள் கம்பியைப் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். நானும் அவனைக் கண்கொத்திப்பாம்பு போல (அச்சச்சோ பாம்பு கண்ணைக்கொத்தாதுன்னு உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கேன்னு இதுக்கும் சண்டைக்கு வருவானே பாம்புகளின் காவலன்!) பார்த்தபடி முன்னறையில் கையெட்டினால் அவனைப் பிடித்துவிடும் தொலைவில் இருந்தேன்.
அப்போது பொள்ளாச்சியில் பரோட்டா, இட்லி மாவு, சந்தகையெல்லாம் தெருவிலேயே கொண்டு வந்து கூவிக் கூவி விற்கத்தொடங்கி இருந்தார்கள்.
….’’புரோட்டா, புரோட்டா, புரோட்டா…..’’ என்று ஒரு இளைஞன் சைக்கிளில் விற்றுக்கொண்டு வந்தான். தருண் ஒரு கையால் கம்பியை இறுகப்பற்றிக்கொண்டு மற்றொரு குட்டிக்கையை அசைத்து …..’’மாமா, மாமா, இங்கே வாங்க ….’’என்றழைத்தான்.
நான் ஒருவேளை பரோட்டா வாங்க நினைக்கிறானோ என்னவோ என்று கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த இளைஞன் மகிழ்ந்து போய் வாசலில் ஒரு காலை ஊன்றிச் சைக்கிளை நிறுத்தி …’’தங்கம் புரோட்டா வேணுமா…’’? என்றான்.
குட்டித்தருண் ….’’இல்லை வேண்டாம் ஆனா நீங்க விக்கறது புரோட்டா இல்லை பரோட்டா….’’ என்றான். உண்மையிலேயே அந்த இளைஞன் பேயறைந்தது போலாகி அங்கிருந்து நகர்ந்தான். பிறகு வெகுநேரத்துக்கு அவன் குரலே கேட்கவில்லை.
இப்படி பல மாமாக்களை அவன் காவு கொடுத்திருக்கிறான். நல்ல கூட்ட நெரிசலான ஒரு பேருந்துப்பயணத்தில் நானும் சரணும் நின்றுகொண்டிருக்கையில், ஒரு ’மாமா’ தருணை வாங்கி மடியில் வைத்துக்கொண்டார். கொஞ்ச தூரம் கூட பேருந்து நகர்ந்திருக்கவில்லை ,அவர் மடியில் உட்கர்ந்தபடியே என்னைப்பிறாண்டத்தொடங்கினான்.
…’’ என்னடா…’’ என்றதும் ….’’அம்மா இந்த மாமா வாயில என்னமோ நாத்தம் அடிக்குது,நான் இறங்கி உன் கூடவே நின்னுக்கறேன்…’’ என்றான். அந்த ‘’மது’’ மாமா வெட்கி அவனை இருக்கையில் அமர வைத்துவிட்டு அவசரமாக அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச்சென்றுவிட்டார்.
நண்பர்களுடன் ஒரு முறை வால்பாறை சென்றிருக்கையில் கம்யூனிஸ்ட் பச்சைச் செடியைக் காண்பித்து…’’ இது யுபடோரியம் ஓடொரேட்டம்…’’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில். டேராடூனில் காட்டியல் படித்துக்கொண்டிருந்த தருண் இடைமறித்து …’’இதுக்கு குரோமோலீனா ஓடோரேட்டானு பேரு மாத்தினதுகூட உனக்குத் தெரியலையா….’’ என்றான்.
அம்மாவை மிஞ்சிய மகன்.
அவன் பிறந்தபோது ஜாதகம் எழுதியவர், தருண் எழுத்து அல்லது சொல் தொடர்பான் ஏதோ ஒரு, அப்போது அவரால் கணித்துச்சொல்ல முடியாத ஒரு துறையில் மிகப்பிரபலமானவனாக வருவான் என்றார். காட்டியல் படித்து வணிக மேலாண்மையும் படிக்கும், காட்டிலாகா அதிகாரியாக வரவிரும்பும் தருணின் எதிர்காலம் எதிலென்று தெரியவில்லை.
ஆனால் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணை முன்பே பார்ப்பேனாயானால்…’’ கொஞ்சம் நல்லா பேசிப்பழகிட்டு அப்புறமா வீட்டுக்கு வாம்மா மின்னல்…’’ என்று சொல்லிவிட வேண்டும். சொல்லின் செல்வனாயிற்றே கல்யாணம் செய்துகொள்ளப்போகிறவன்.