சமீபத்தில் ஒரு நிகழ்வுக்காக வெளியூர் சென்றிருந்தேன், விஷ்ணுபுரம் அமைப்பல்லாத நிகழ்வுகளின் நேரமேலாண்மை குறித்து முன்பே அறிந்திருப்பதால் கையோடு லக்ஷ்மி சரவணகுமாரின் பன்றிவேட்டையை எடுத்துச்சென்றிருந்தேன். யூகித்தபடியே குறித்த நேரத்துக்கு 2 மணி நேரம் தாண்டித்தான் விழா தொடங்கியது.
அதுவரை இசைக்கக்சேரி நடந்தது. நான் பன்றிவேட்டையை பொறுமையாக அடிக்கோடிட்டு வாசித்து முடித்துப் பன்றி வேட்டை என்னும் தலைப்புக்குள் லக்ஷ்மி சரவணகுமார் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதும் பாடல்கள் இசைக்கப்பட்டன. 2 மணிநேரத்துக்குப்பின்னர் அறிவிப்பாளர் வந்து விழா `குறித்த நேரத்துக்கு` துவங்கவிருப்பதால் அரங்கிற்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் திகைத்து `சீரியஸ்லி`? என்றது `மன் கி பாத்` என்பதால் அவருக்குக் கேட்கவில்லை.
விழா துவங்கியது. எனக்கு வலது புறம் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் நல்ல அகடமிக் வாசனை வீசியது. 20 ஆண்டுகால பழக்கத்தில் அந்த வாசனை எனக்கு அத்துப்படி. அவர் என்னிடம் பன்றி வேட்டையைச் சுட்டிக்காட்டி“நீங்க இந்தப் புத்தகத்துக்குத்தான் விருது வாங்கறீங்களா?“ என்று கேட்டார். “இல்லைங்க என் நண்பரின் புத்தகம் இது. நான் எழுத்தாளர் இல்லை கட்டுரையாளர்தான் என் கட்டுரைத்தொகுப்புக்குத்தான் விருது“ என்றேன். “ தமிழ்த்துறையா ஆங்கிலத்துறையா?“ என்றார். “இரண்டும் இல்லை தாவாவியல் துறை“ என்றேன். குழப்பமானார்.
“பின்னே உங்க பேருக்கு முன்னாடி எழுத்தாளர்னு பத்திரிக்கையில் போட்ருக்காங்களே?“ என்றார். அவரை நன்றாக நிமிர்ந்து பார்த்தேன். ஆய்வு மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக்குளித்து ஜிமிக்கியும் மல்லிகைப்பூவுமாக வருகையில் அவர்களைப்பார்க்கும் பெண் நெறியாளர்களின் (அந்தப்பட்டியலில் லோகமாதேவி இல்லை) கண்களில் தெரியும் அதே உக்கிரம் இருந்தது. அவரை மலையிறக்குவதற்காக “தவறுதலாபோட்டிருப்பாங்கம்மா“ என்றேன். அந்த அம்மா விகுதியும் அவரை எரிச்சலூட்டியதை அவரது உடல்மொழியிலிருந்து அறிந்தேன். பணிஓய்வு பெற்று 20 வருடமானவராதலால் அப்படி அழைக்கும் உரிமையை நானாக எடுத்துக்கொண்டிருந்தேன்.
அமர்ந்திருந்த நாற்காலி மிகச்சிறியதாக, அசெளகரியமாக அமரும்பொருட்டு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது என்பதால் முதுகு விண் விண் என்று தெறித்தது. எனக்கே அப்படி என்றால் விழாநாயகரும் பேருடல்கொண்டவருமான …… சரி வேண்டாம் சாமி கண்ணைக்குத்தும்.
எனவே கையில் இருந்த பன்றிவேட்டையையும் போனையும் கட்டிப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். “அப்ப இது என்னபுக்கு“ என்று மீண்டும் அவர் கேட்டதும் “இது என் நண்பர் எழுதினது“ என்றேன். “கொடுங்க“ என்றவர் நான் அதைக்கொடுக்க யத்தனிப்பதற்குள் கையிலிருந்து தட்டிப்பறித்தார். என் மனம் தின்னப்பழம் கொண்டு தருவானுக்குத் தாவியது.
அட்டையைத் தடவிப்பார்த்தவர் “ஓ இதுவா நல்லாருக்கும் நான் 50 வருஷம் முன்னாடியே படிச்சுருக்கேன் மறு பிரசுரமா?“என்றார். நான் “இல்லைங்க இது வர வெள்ளிக்கிழமைதான் வெளியாகுது;; என்றேன். “அப்ப உங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சுது?“ என்றார். “எழுதினவர் என் நண்பரென்பதால் எனக்கு முன்னாடியே அனுப்பி இருக்காரு“ என்றேன். மீண்டும் பின்னட்டையை தொட்டுத்தடவியவர் “இல்லை இதை நான் வாசிச்சுருக்கேன் அதே புக்தான்“ என்றார்.
அட்டையை வைத்து நூலைஎடைபோடாதே என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருப்பதை சார்ந்திருந்த தமிழ்த்துறையினால் அவருக்கு ஒருவேளை தெரிந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் என் கோபத்தை காட்டிக்கொள்ளாமல் “இல்லைங்க இது சினிமாவா வரப்போற கதை அவர் சினிமாவில் இருக்காரு நிச்சயமா இதை நீங்க படிச்சிருக்க முடியாது“ என்றேன்.அகங்காரம் சீண்டப்பட்டவராக“இல்லை வாசிச்சுருக்கேன் ஒரு காட்டில் நடக்கற பன்னி வேட்டையைப்பத்தித்தான கதை?“ என்றார்.
என்ன சாமர்த்தியம்!! பன்னி வேட்டை காட்டில் நடக்காமல் மும்பை தாஜ் ஹோட்டலிலா நடக்கும்?. சரிங்கம்மா என்று மட்டும் சொல்லிவிட்டு மறக்காமல் புத்தகத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன்.
இடதுபக்கம் வந்தமர்ந்த ஒரு பெண் என்னைப்பார்த்து புன்னகைத்து “மேடம் நீங்க——– கல்லூரியின் கரஸ்பான்டென்டா? என்றார். அச்சச்சோ முகத்தில் அத்தனை கடுமையா தெரிகிறது என்று துணுக்குற்று முகத்தை சாந்தமாக்கிக்கொண்டு “இல்லைங்க நான் வெறும் பேராசிரியர்தான்“ என்றேன்.
வலது பக்க அம்மாள் மேடையின் அச்சுபிச்சு நகைச்சுவைக்கெல்லாம் மகிழ்ந்து சிரித்துக்கொண்டும் கூடக்கூட அங்கிருந்தே மேடையில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டுமிருந்தார்.
எனக்கு மூச்சுலகில் தேவனிடம் கேட்கவென்று பல கோரிக்கைகள் இருக்கின்றன. அதில் இன்னார் இன்னாராக இன்னாருக்கு ஆகவேண்டும் என்னும் மறுபிறவிக்கான கோரிக்கைகள் தான் பிரதானமாக இருக்கும். எனக்குத் தனிப்பட்டதாக- எங்கேனும் ஒரு மலைஉச்சியில் நீலமாக மலர்களைச் சொரிந்துகொண்டிருக்கும் ஜகரண்டா மரமாக, தப்பிப்போனால் கணேஷ்பெரியசாமிக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்னும் இரண்டுகோரிக்கைகள் தான் இருக்கிறது,
எனக்குத்தெரிந்த ஒருவர் அடுத்த பிறவியில் பின் வீட்டில் இருக்கும், தன் கணவரைச் சட்டைக்காலரோடு கழுத்தை சுவற்றோடு சேர்த்துப்பிடித்து அடி சாத்தும் ஒரு பெண்ணின் கணவராகி விடவேண்டும் என்னும் விருப்பம் என் மன்றாட்டுகளில் அடிக்கடி இடம்பெறுமொன்று.
என்னையே பூமர் என்று சொல்லும் சரணையும் தருணையும் அடுத்த பிறவியில் எப்படியாவது இந்த வலதுபக்க அம்மாளின் மகனாக்கிவிடுங்கள் தேவனே என்று கண்ணீருடன் பிரார்த்தித்துக்கொண்டேன்,
ரிதன்யாவின் மரணம் செய்தித்தாளும் தொலைக்காட்சியும் இல்லாத வீடென்பதால் தாமதமாகத் தெரிந்தது. அவளது கடைசிக்குரல் பதிவுகளையும் துரதிர்ஷ்டவசமாகக் கேட்க வேண்டி வந்தது.
அவள் குரலில் இருந்த குழந்தைத்தனம்தான் இப்போது வரை மனதைப் பிசைகிறது. உண்மையில் ரிதன்யாவுக்குத் தன்னை மாய்த்துக் கொள்வது என்றால் என்னவென்றே தெரியாமல் அதைச் செய்து கொண்டிருக்கிறாள்.
தன் அப்பாவுக்குத் தான் பூட்டி வைத்துவிட்டு வந்திருக்கும் ஒரு ட்ராயரில் இருக்கும் நகைகளை அத்தனை அறியாத்தன்மையுடன் மயில் தோடு ஒத்தை வளையல் அத்தை கொடுத்த செயின் என்று பட்டியலிடுகிறாள். அந்தக் குழந்தையின் அறியாமையை என்னவென்று சொல்வது?
அடுத்து தென்னைமரத்துக்கு வைக்கும் மிக வீரியமுள்ள விஷத்தை சாப்பிடப்போகிறாள், அந்த கொடும் நஞ்சு அவளை என்னவெல்லாம் செய்யும், சாவு என்றால் என்ன இதெல்லாம் ஒன்றுமே தெரியாமல் எல்லா கதவும் அவள் முன்னால் அறைந்து சாத்தப்பபட்ட தன்னிரக்கத்தில் நகைகளைப் பட்டியலிடுகிறாள் பாவம்.
அந்தக் குறிப்பிட்ட மருந்து மிகக் கொடுமையான விளைவுகளை உண்டாக்கியே உயிரைப்போக்கும் அதைச் சாப்பிட்டபின்னர் பிழைப்பது துர்லபம். பல வருடங்களுக்கு முன்பு சின்னு மாமனின் மகன் மிக இளம் வயதில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட ஒரு தகராறில் மனமுடைந்து இதைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது நானும் உடன் இருந்தேன். அவன் துடித்த துடிப்பும் பட்டபாடும் அப்படியே இன்னும் நினைவிலிருக்கிறது. மருத்துவரிடம் அவனைக்காப்பாற்ற வழி இருக்கிறதாஎன்று கேட்டேன் ‘’ இல்லைங்க அந்த மருந்து உள்ளே போறப்பவே அது போற வழியெல்லாம் அழிச்சுட்டே போகும்’’ என்றார். ரிதன்யா சாப்பிட்டது அதைத்தான்.
ரிதன்யா செல்வந்தர் வீட்டுப்பெண் என்பதாலும் இப்போது ஊடக வளர்ச்சி மிக விரிவாகியிருப்பதாலும் இந்த விஷயம் இத்தனை கவனம் பெற்றிருக்கிறது ஆனால் கொங்குப் பகுதியில் இது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சி தென்னைநகரென்பதால் இந்த மருந்து மிக எளிதில் கிடைக்குமொன்றாகத்தான் இப்போது வரை இருக்கிறது.
முதுகலை படித்த, கார் ஒட்டத் தெரிந்த ரிதன்யா செய்துகொண்டது தற்கொலை அல்ல அவளுடையது ஆணவக்கொலைதான். அவளைப்போல் பலருக்கு இப்படி இங்கு நடந்திருக்கிறது நடந்துகொண்டிருக்கிறது நாளையும் நடக்கும்.
இன்றைய செய்தித்தாள்களில் மகள் வேற்றுச்சாதியில் கல்யாணம் செய்துகொண்டதால் ரயில் முன் பாய்ந்து இறந்து போன அரசு அதிகாரி தம்பதிகளைக் குறித்துப் பார்த்த போதும் இதுதான் தோன்றியது. குடும்ப கெளரவம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றைக்காப்பாற்ற அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழ்க்க வாழவே முடியாத அளவுக்குக் குற்ற உணர்வை அளிப்பதைத் தவிர அந்தத் தற்கொலைக்கு வேறெந்த நோக்கமும் இல்லை.
இந்தக் கிராமத்தில் நான் வீடு கட்டி வந்த புதிதில் பக்கத்தில் ஒரு வீட்டில் மகளுக்குக் கல்யாணம். வீடு கட்டத்துவங்கி பணமுடையால் அதை முடிக்க முடியாமல் அவசரமாகப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள். பாதி முடிந்த அந்த வீட்டில் மணமக்களுக்கு முதலிரவு நடந்த அன்று இந்தப்பகுதி வழக்கமாகச் சந்தகை செய்து முதலில் மணமக்கள் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்று விட்டார்கள் மீதமிருந்த சந்தகையில் விஷம் கலந்து மணப்பெண்ணின் தம்பி மற்றும் பாட்டிக்கும் கொடுத்துத் தாங்களும் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டார்கள் பெற்றோர்கள் இருவரும்.
காலையில் தன்னை வந்து யாரேனும் கதவைத்தட்டி எழுப்புவார்கள் என்று வெட்கத்துடன் காத்திருந்து காத்திருந்து வேறு வழியின்றி கதவைத் தானே திறந்துகொண்டு வந்த அந்தப்பெண் பார்த்தது சடலமான பெற்றோர்களையும் உயிருக்குப்போராடும் தம்பியையும் பாட்டியையும்தான். எத்தனை முட்டாள் தனம் அத்தனை கடன் வாங்கி வீடுகட்டி மேலும் கடன் வாங்கி கல்யாணம் செய்துவைத்து அந்தக் கல்யாணத்தில் அந்தப்பெண் வாழவே முடியாதபடிக்கு அன்றைக்கே செத்துப்போனார்கள். அந்த முட்டாள் பெற்றோர்கள். உலகம் போய்க்கொண்டிருக்கும் திசைக்கு நேர் எதிர் திசையில் செல்பவர்கள் கொங்குப் பகுதி ஆட்கள்.
உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்னுமறிதல் சிறிதும் இல்லாமல் தாங்கள் காலம் காலமாக வசிக்கும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் இவர்கள்.
உண்மையில் ரிதன்யாவின் புகுந்தவீட்டினரையும் கணவன் கவினையும் வரிந்துகட்டிக்கொண்டு குற்றம் சொல்லும் அவளது சுற்றம் உட்பட்ட பொதுமக்கள் பலருமே அவள் அப்படி செய்ததற்கு காரணமான கொங்குப் பகுதியினரின் குடும்ப கெளரவத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்னும் முட்டாள்தனத்தினால் தான் இது நடந்தது என்பதைக் கவனிக்கவே இல்லையா? உண்மையில் ரிதன்யாவைக் கொன்றது இந்த வெற்றுஆணவம்தான்.
நம்ம வீட்டுப் பெண் நம் சாதியில்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் கல்யாண வாழ்க்கையில் என்ன இடர் வந்தாலும் அவள் ஒருபோதும் கணவன் என்னும் கடவுளை விட்டுவிட்டு திரும்ப வந்துவிடக்கூடாது என்பதை சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட, அப்படியும் தாங்கமுடியாமல் 5 முறை புகார் சொல்லி ஒவ்வொரு முறையும் அறிவுரையும் அறவுரையும் சொல்லி திருப்பி அனுப்பப்பட்ட ரிதன்யாதான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.
இப்படி எனக்குப் பல பெயர்களில் பிறந்து , தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாக்களைத் தெரியும். இன்னும் செத்துப்போகமால் தென்னை மர விஷத்தை குடித்தால் உண்டாகும் விளைவுகளைக்காட்டிலும் நூறுமடங்கு துயரை, வேதனையை உள்ளுக்குள் சகித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ரிதன்யாக்களையும் அறிவேன்.
இந்க்த கொங்குப்பகுதி ஆட்களைக் காட்டுமிராண்டிகள் என முன்பு எண்ணியதுண்டு. ஆனால் பழங்குடித்தாவரவியலில் ஈடுபட்டப் பின்னர் காட்டில் இருப்பவர்களை கொங்குப்பகுதியினருடன் ஒப்பிட்டுக் கேவலப்படுத்தியதை எண்ணி வருந்தி இருக்கிறேன். ரிதன்யாவின் அப்பா அம்மா பேசுவதை அவ்வப்போது பல்லைக் கடித்துக்கொண்டுதான் பார்க்கிறேன். முத்தம் கொடுத்ததை, செல்லம் கொடுத்ததை, கல்வி கொடுத்ததை எல்லாம் சொல்லிச் சொல்லி அழும் அவர்கள், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை அவளுக்கு அளிக்கவேயில்லை. என்னவானாலும் சகித்துத்கொண்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால்
எத்தனையோ செலவழித்துச் செய்த கல்யாணம் கேள்விக்குரியதாகிவிடும் குடும்ப கவுரவம் என்னும் மண்ணாங்கட்டி உடைந்துவிடும் என்றுதான் இங்கு எப்போதும் சொல்லப்படுமொன்று.இப்படியான பஞ்சாயத்துகள் இங்கு வாராவாரம் நடப்பதை நானறிவென்.
உடலெங்கும் கடித்துவைத்த ஒரு கணவனுடன் சகித்துக்கொண்டு வாழும்படி சொன்ன ஒரு தகப்பன் இருக்கிறார் அதைச் சொல்லிவிட்டு உடலிலிருந்த கடிபட்ட காயங்களுக்கு அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றது அந்தக்குடும்பம்.
பெண்கள் மடியில் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெருஞ்சுமை இங்கு பெற்றோர்களுக்கு, அவர்களை கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் தீர்ந்தது சுமை. இதோ இந்த வாரம், இறுதி ஆண்டில் தாவரவியல் படித்துக்கொண்டிருக்கும் மாணவிக்கு கல்யாணம் என்று வந்தார்கள். எத்தனையோ எடுத்துச் சொன்னேன் மிக இளம் வயது இன்னும் அவள் டிகிரி முடிக்கச் சில மாதங்கள் தான் இருக்கிறது. கொஞ்சம் தாமதிக்கக்கூடாதா? அவள் டிகிரி முடித்து அக்கம்பக்கம் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிகொடுத்து 3000. 4000 சம்பாதிக்கும் வாய்ப்பையும் ஏன் கெடுக்கிறீர்கள் என்று எத்தனை சொல்லியும் கேட்கவில்லை. இப்படி வருடா வருடம் நடந்துகொண்டே இருக்கிறது.
சாம்பவிக்கு நாங்கள் நேரடியாக இப்படி எதேனும் நடந்தால் சரி செய்யவே முடியாதென்றால் புறப்பட்டு வந்துவிடு நாங்கள் இருக்கிறோம் என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் அவள் வாழ்வில் சவால்களைச் சந்திக்க போதுமான தைரியம் உள்ளவளாக வளர்ந்திருப்பதை உறுதி செய்திருக்கிறோம்.
இன்னொரு சாதியில் காதல் மணம் செய்து கொண்ட பெண்களை அடித்துக் கொன்றவர்களின் கதைகளை நான் இளமை முதலே கேட்டிருக்கிறேன்.
பல காதலை முறித்து, அந்தக் காதலை உறவினர்களின் முன்பாக கூட்டம்போட்டுச் சொல்லும் பழக்கமும் இங்கு உண்டு. இப்படி விவாதித்து அந்தப் பெண்ணைச் சுயசாதியில் கல்யாணம் செய்துகொடுத்து அந்தக் கணவனுக்கு வெகுசீக்கிரம் விஷயம் தெரியவந்து பின்னர் காதலித்தவனை மறக்க முடியாமல், சந்தேகப்படும் கணவனுடன் வாழவும் முடியாமல் பிணம்போல் வாழும் மகளுக்கு வருடா வருடம் தவறாமல் சீர் செய்யும் பெற்றோரால் ஆனதுதான் இந்தச் சமூகம். இந்தச் சமூகத்தில் வெற்று ஆணவம் மட்டுமே இருக்கிறது. அறிவென்பது துளியும் இல்லை உணர்வுகளுக்கோ உயிருக்கோ வாழ்க்கைக்கோ எந்தப்பொருளுமில்லாத ஒரு முட்டாள் சமூகம்இது. இதை இந்தச் சமூகத்தின் உள்ளிருந்துகொண்டே தான் சொல்கிறேன்.
சென்ற மாதம் கூடச் சொந்தத்தில் ஒரு திருமணம், அந்த மாப்பிள்ளைப் பையன் வேறு சமூகப் பெண்ணுடன் காதலில் இருந்தான். காதலை முறித்து, என் பிணத்தைத் தாண்டித்தான் அவளைக்கலயாணம் செய்யப்போகனும் போன்ற அரதப்பழசான பொய்யான மிரட்டல்களால் அவனைப்பணிய வைத்து சொந்தச்சாதியில் கல்யாணம் நடந்தது.
மாப்பிள்ளை முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அந்த அறியா மணப்பெபெண் மலர்ந்து சிரித்தபடி மேடையில் இருந்தாள். எப்படி அவளுடன் அவன் மகிழ்ந்து வாழ்க்கையை நடத்துவான்? மாப்பிள்ளையின் பெற்றோர் வாய்கொள்ளாச் சிரிப்புடன் வரேவேற்பில் இருந்தார்கள். சாப்பாடெல்லாம் பரவாயில்லிங்களா? என்று என்னிடம் கேட்டார், தலையசைத்துவிட்டு வந்தேன். அந்த முறிந்த காதலில் இருக்கும் அந்தப் பெண்ணின் மனநிலையையும், அவளை ஏமாற்றியதாகி விட்டிருக்கும் நிலையில் இருக்கும் அந்தப் பையனின் மனதையும் எண்ணிக்கொண்டேன்
எனக்கு ஏதேனும் ஒரு அதிகாரம் கிடைத்தல் இந்தச்சாதியின் பெருசுகளை ஆண் பெண் வேறுபாடில்லாமல் அப்படியே அள்ளிப் போட்டு அந்தமானுக்கப்பால் இருக்கும் ஒரு தனித்தீவில் கொண்டு போய் விட்டுவிடுவேன்.
என் மாணவர்களிடம் இதைக் குறித்து பேசினேன். ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக மணவாழ்வில் இடர்கள் வந்தால், சரி செய்யவே முடியாதென்றால் வெளியே வந்துவிடுங்கள் பெற்றோரிடம் செல்ல முடியாதென்றால் என் வீட்டுக்கு எந்நேரமானாலும் வந்துவிடுங்கள் கதவுகள் திறந்திருக்கும். ஒருவேளை அச்சமயத்தில் நான் உயிருடன் இல்லை என்றால் இந்தச் சமூகத்தின் சாயல்கூட இல்லாத என் மகன்கள் என்னைக் காட்டிலும் கதவை அகலத்திறந்து வைத்திருப்பார்கள் என்றேன்.
நண்பர் கார்த்திக் வேலு (சிட்னி) எழுதியிருக்கும் பதிவையும் இணைத்திருக்கிறேன்.
பெங்களூருவில் தங்கி இருக்கையில், தருணுடன் இப்போது கட்டிக்கொண்டிருக்கும் மேல் தளத்திற்கான உள் அலங்காரங்களுக்கென ஒருவரைப் பார்க்க நெடுந்தொலைவு பைக்கில் செல்ல வேண்டி வந்தது. எனக்கு பைக் பயணங்கள் உவப்பானதல்ல, பழக்கமில்லை என்பது முதன்மைக் காரணம் வேறு சில கசப்பான காரணங்களும் கூடவே உண்டு.
மூத்த சகோதரர்கள் யாருமில்லை எனவே அவர்கள் பைக் வாங்கி ஓட்டி என்னை அழைத்துசெல்லும் சாத்தியங்கள் அற்ற இளமைப்பருவமே வாய்த்தது. அப்பா என்பவர் வாய்ச்சொல்லில் மட்டும்தான் வீரர் அவருக்கு சைக்கிள் கூட ஓட்டத்தெரியாது, எதிர்க்கும் திராணியற்றவர்கள் மீது கட்டற்ற வன்முறையை செலுத்துவதைத்தவிர ஏதுமறியாதவர் அவர்.
என்னைவிட 7 வயது இளையவனாகிய தம்பி விஜி வளர்ந்து பைக் ஓட்டக் கற்றுக்கொண்டபோது துரதிர்ஷ்டவசமாக நான் திருமணமாகி அபிதாபியில் இருந்தேன். பலவருடங்களுக்கு முன்பு புதுதில்லியில் ஒரு பிப்ரவரி மாதம் நடந்த பைக் விபத்து பெரும் வடுவாக வாழ்க்கையில் தங்கி விட்டது, எனவே பைக் பயணங்கள் எனக்கு எப்போதுமே ஒத்து வருவதில்லை. சென்னையில் எழுத்தாளரான நண்பர் ஒருவருடன் சிலவருடங்களுக்கு முன்னர் ஓரிரவு நீண்ட பைக் பயணமொன்று சென்றேன். அதை மட்டுமே மகிழ்வுடன் நினைவு கூற முடிகிறது.
இத்தனை காலத்தில் பயந்தபடி ஒரு பத்துமுறை பைக்கில் பயணித்திருப்பேன் அவ்வளவுதான். டாக்ஸியில் போகலாம் என்றதை மறுத்து , வற்புறுத்தி என்னை அன்று தருண் பைக்கில் அழைத்துச்சென்றான். தருணுக்கு பைக் அலாதிப்பிரியம் மிகக்கவனமாக ஓட்டுவான். அவனது நேபாளத்தோழி ரெஜினியின் ஹெல்மெட் வீட்டில் இருந்தது அதை அணிந்துகொண்டு அவன் பின்னால் அமர்ந்து கொண்டேன்.சாலைப்போக்குவரத்து அசமஞ்சமாகத்தான் எப்போதும் போல் இருந்தது ஆனாலும் முழங்கால்களுக்கருகில் வரும் கார்க்கதவுகளும், பேருந்துகளின் மாபெரும் சக்கரங்களும் அச்சமூட்டின.
அதிகாலையில் இருந்து , புறப்படும் வரை பெரியதிரையில் சஞ்சய் சுப்ரமணியனின் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். சாலைக்காட்சிகளில் மனதைக்குவிக்காமல் ‘’ அன்பே இன்பம் சேர்க்க மாட்டாயா’’ என்று சஞ்சய் உருகுவதை மீள் மீள மனதில் நினைத்துக்கொண்டே பயணித்தேன்.
அந்த அலுவலகத்தில் எங்களது வேலை முடிய மதியமாகிவிட்டது. தருணுக்கு பைன்லேபில் (நாம் அட்டை பரிவர்த்தனை செய்யும் அந்த பெட்டியில் பைன்லேப் என்று எழுதி இருப்பதை பிற்பாடுதான் கவனிக்கிறேன்) இடைக்காலப்பயிற்சி நடந்து கொண்டிருப்பதால் அவனுக்கு உபகாரச்சம்பளம் அளிக்கப்பட்டிருந்தது.எனவே அன்று எனக்கு அவன் மதிய உணவு ட்ரீட் தருவதாக மேலும் தொலைவுக்கு அழைத்துச் சென்றான்.
பெங்களூருவின் புறநகர்ப்பகுதியின், புறநகரில் ஒரு காட்டின் எல்லையில் இருந்தது அம்மச்சியுடைய கைப்புண்ணியம் என்னும் அந்த அழகிய கேரள உணவகம். எல் வடிவில் அமைந்திருந்த சிவப்புச்செங்கல் கட்டிடம், நடுவில் கூடத்தில் வளர்ந்திருந்த ஒரு அத்தி மரத்துக்கு இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்தது சிவப்பு ஓடுகளிட்ட கூரை.
முதல் தளத்தின் வெளிப்புறத்தில் பெரிய புகைப்படத்தில் ஃபகத் ஃபாஸில் மேசையில் கையூன்றிக்கொண்டு வருபவர்களை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். தென்னை மரங்களும் புல்வெளியுமாக அப்படியே கேரளாவில் இருக்கும் உணர்வளித்தது அந்த இடம், குறையில்லாமல் இருக்க தென்னங்கீற்றை அசைபோடும் யானையை நானே மனத்தில் வடித்து முற்றத்தில் நிறுத்தினேன். உள்ளே சேட்டன்கள் கரை வேட்டி கட்டிக்கொண்டு ஓர்டர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். எல்லா மலையாளத்திரைநடிகர்களும் புகைப்படங்களாக சுவரில் இருந்தார்கள்
பெரும்பாலும் மலையாளிகளே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். சிறு குழுவாக வந்திருந்த பெண்களில் வைன் சிவப்பில் உடையணிந்திருந்த ஒரு சுருட்டை முடிக்காரி தருணை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். பதிமுகப்பட்டையிட்ட செந்நீர் ஒரு கண்ணாடிக் குடுவையில் வெதுவெதுப்பாக இருந்தது அந்த அத்தி மரத்தின் கிளைகளில்செயற்கை பொன்கொன்றைச் சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. எங்கிருந்தோ ’’ஒன்னாம் ராகம் பாடி’’, கேட்டது தொடர்ந்து’’ பிரமதவனம் வீண்டும்’’, அதையடுத்து தாஸேட்டனின் குரலில் மம்மூட்டியும் லாலேட்டனும் சுரேஷ்கோபியுமாய் உடனிருந்தார்கள்.
ஒரு உருளிச்சோறும், கேரளா மீல்ஸும் கறிமீன் பொளிச்சதும் ஓர்டர் செய்தோம். இறுதியாக பாலடைப்பிரதமன். மறக்க முடியாத தருணின் ட்ரீட். முன்பு தருண் 10-ல் படிக்கையில் எனர்ஜி அம்பாஸடராக இருந்ததற்காக பத்தாயிரம் ரூபாய் பரிசை பள்ளியில் பெற்றான். அப்போது எனக்கு ஒரு அழகிய குளிர்கண்ணாடியும் குப்பண்ணாவில் ஒரு நல்ல அசைவ விருந்தும் பூமராங்கில் மரத்தட்டில் புகைந்துஎரிய கொண்டு வந்த ஒரு ஐஸ்கிரீமும் வாங்கிக்கொடுத்தான்.
சரண் ஐரோப்பாவில் வேலையில் சேர்ந்து சம்பளம் வாங்கியதும் என்னை தனிஷ்க் அழைத்துச்சென்று 6 இதழ் கொண்ட தாமரை வடிவ வைரமூக்குத்தியும், மரகதக் கற்கள் பதித்த மோதிரமும், உடன் லோகமாதேவி என்று பெயர் எழுதிய ஒரு காரும் வாங்கிக்கொடுத்தான். அதில்தான் மிகப்பெருமையாக இப்போது கல்லூரிக்குச்செல்கிறேன்.
எனவே நல்ல கேரள உணவுக்குப் பின்னர் கல்லாவில் விற்ற சக்கைச் சிப்ஸ் வாங்கிக்கொண்டு மீண்டும் ஹெல்மெட் அணிந்து வீடு திரும்பினோம். வழியெல்லாம் பெருநிறுவனங்களின் வாசலில் அடுக்கடுக்கான இலைகளுடன் நின்றிருந்தது டெர்மினாலியா மாண்டலி. ஏன் பங்களூர்காரர்களுக்கு இதன் மேல் இத்தனை பிரியம் என்று நினைக்குமளவுக்கு அந்த மரங்கள் அதிகமாக இருந்தன. சிக்னலில் வெகுநேரம் காத்திருக்கையில் ஒரு பெண் மனதிற்குள் எதையோ பாடிக்கொண்டு விரல்களால் தொடையில் தாளமிட்டபடி புன்னகையுடன் இருந்தாள், பையன்கள் எல்லா ஊர்களில் இருக்கும்படியே பொறுமையின்றி சந்துகளில் நுழைய முற்பட்டார்கள்,
ஒரு வளைவில் காத்திருக்கையில் குப்பைக் கூளங்களுக்குள்ளிருந்து ஒரு பூனைக்குட்டி கண்ணாடிக் கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய லாரியின் சக்கரங்கள் என் அருகில் வந்த போது நான் அதை பொருட்படுத்தாமல் வியர்வை பூத்திருந்த முகத்துடன் சஞ்சய் ’’கன்னத்தில் முத்தமிட்டால்’’ என்பதை நிறுத்தி நிதானமாக பாடுவதை எண்ணிக்கொண்டேன்.
ஒரு வழியாக மாலை வீடுவந்து சேர்ந்தபோது தருண் எப்படி இருந்தது இந்த நாள்? பைக் பயம் போயிருச்சா என்றான் ? என்றான். ’’நல்லாதான் இருந்தது ஆனா பயம் போகலை பயப்படாம இருக்க வழிபூரா நான் சஞ்சய் சுப்ரமணியணியனை நினைத்துக்கொண்டேன்’’ என்றேன்.
’’அடிப்பாவி கட்டிளங்காளை நான் முன்னாடி உட்கார்ந்திருக்கும் பொது நீ சஞ்சய்சுப்ரமணியனை நினைச்சுகிட்டு வந்தியா?’’ என்றான். நான் ’’ஆம்’’ என்றேன்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகவே சமூக ஊடகங்கள் அனைத்தும் NEET மற்றும் JEE நுழைவுத்தேர்வுகள் குறித்தே பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பெற்றோர்களில் 99 சதவீதத்தினரும் இவை இரண்டைத்தவிர உலகில் தங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்ளவும் பொருளியல் ரீதியாக வெற்றியடையவும் வேறு வழியே இல்லை என்று மூர்க்கமாக நம்புகிறார்கள்.
இனி அப்படி முழுக்க முழுக்க பொறியியலாளர்களும் கணினி மேதைகளும் மருத்துவர்களும் மட்டுமே நிறைந்திருக்கும் பொன்னுலகு ஒன்று வரப்போகிறதா என்ன? நிச்சயமாக இல்லை . எல்லா விதத்திலும் உலகின் சமநிலையைக் குறைக்க நம்மால் ஆனதை செய்துகொண்டே இருக்கிறோம்.
வானொலிகளில் அனைத்து எஃப் எம் சேனல்களிலும் பள்ளிக்கூடங்கள் குறித்த விளம்பரங்களில் JEE NEET க்கான சிறப்புப்பயிற்ச்சி அளிக்கும் பள்ளிகள், 8-ம் வகுப்பிலிருந்தே IIT க்கு தயாராக்கும் பள்ளிகள், போதாக்குறைக்கு ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி வளாகமும் விடுதிகளும் இருக்கும் பள்ளிகளை விளம்பரப்படுதுகிறார்கள்.
அந்தப்பள்ளிகளை விரும்பித்தேர்ந்தெடுக்கும் முட்டாள் பெற்றோர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். எதிர்பாலினத்தவரைக் குறித்த அறிதலே இல்லாமல் பிள்ளைகள் வளர்வது அவர்களின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்ற சிறு அறிதல் கூட இல்லாத அவர்களை நினைத்து கவலைப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. தென்தமிழகத்தின் பிரபல பள்ளி ஒன்றில்படித்த என் நண்பரின் மகன் மாணவிகளின் தனித்த வளாகத்தில் அவர்கள் மைதானத்தில் விளையாடுவதை திரும்பிப்பார்த்ததற்காக மணிக்கணக்காக வெயிலில் முட்டி போடவைக்கப்பட்டான்.
பள்ளிகளைச்சொல்வானேன் நான் பணிபுரியும் கல்லூரி உட்பட பல கல்லூரிகளுக்கு benchmark institute என்று சொல்லபடும் ஒரு கல்லூரிக்கு அவர்களிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள அனுப்பப்பட்ட பேராசிரியர்களில் நானும் இருந்தேன். அந்தக்கலூரியில் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் அங்கு தனித்தனி மாடிப்படிகள் இருந்தன ஒருபோதும் அவர்கள் வகுப்பிலோ வளாகத்திலோ ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லையாம் பெருமையாக அதன் தாளாளரும் முதல்வரும் சொல்லிக்கொண்டார்கள்.
மற்றொரு கல்லூரியில் வளாகத்தில் நின்று ஒரு மாணவனிடம் பேசிக்கொண்டிருந்ததால் அவர்களின் அடையாள அட்டையை வாங்கிக்கொண்டு, மறுநாள் பெற்றொர்களை அழைத்துவரச்சொன்னதால் பயந்து போன அந்த 20 வயதுகூட நிரம்பி இருக்காத மாணவி தற்கொலை செய்துகொண்டாள். வீட்டிலும் குழந்தைகளுக்கு அரவணைப்போ அன்போ கிடைப்பதில்லை, படி படி படி படி, உனக்காக கடன் வாங்கி இருக்கிறேன் உனக்காக கடுமையாக உழைக்கிறேன் என்பதைத்தான் திரும்பத்திரும்ப கேட்கிறார்கள் பதினமவயதின் குழப்பங்களுக்கு தீர்வு சொல்லவோ இனம்புரியாத அச்சங்களை, முதிரா வாய்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ளவோ காதுகொடுக்கவோ யாரும் இல்லாத லட்சக்கணக்கான வீடுகளில்தான் நமது அடுத்த தலைமுறையினர் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் ஜெ தனக்கு வந்த ஒரு கடிதத்தைப் பற்றி அவரது தளத்தில் எழுதி இருந்தார். வயதான காலத்தில் தங்களை வந்து பார்க்காமல் வெளிநாட்டிலேயே இருக்கும் தங்களின் மகனைப்பற்றிக் குற்றம் சொல்லிய பெற்றொர்களின் தரப்பும், படிப்பதை தவிர வேறொன்றுக்கும் இடமில்லாத தன் இளமைக்காலத்தின் கசப்பான நினைவுகளால் பெற்றோர்களை தவிர்க்கும் மகனின் தரப்பும் விரிவாக சொல்லப்பட்டிருந்த கட்டுரை அது. அப்படித்தான் அப்படியேதான் நடக்கும்.
இப்போது மகன்களையும் மகள்களையும் தாங்கள் விரும்பும் துறையில் சேர்ப்பதற்காக, அடுத்தவீட்டினரின், சுற்றத்தாரின் பொறாமையை சம்பாதித்துக்கொள்ள, அதுதான் கெளரவம் என்று அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் இதுமட்டும்தான் நடக்கும்.
அதிகாலை 6 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மாலை 8 மணிக்கு வீடு வந்து மீண்டும் படித்து எழுதி மனப்பாடம் செய்து நள்ளிரவு உறங்கப் போகும் குழந்தைகளை எனக்கு ஏராளமாகத் தெரியும். விடுதிகளில் சேர்ககப்ட்டிருப்பவர்களின் நிலைமை இதைக்காட்டிலும் மோசம் அதிகாலை எழுந்து குளித்து இரவு வரை ஒரே கேள்வியை 100 முறை எழுதி எழுதி மூளை மழுங்கடிக்கபப்ட்டு சிந்திக்கும் திறனை முற்றிலும் இழந்து, ஆனால் நல்ல மதிப்பெண் மட்டும் வாங்கி விடும் இவர்கள் எதிர்காலத்தில் இளமைக்கால ட்ராமாவால எத்தனை பாடுபடப்போகிறார்களோ எனபதைக்குறிது யாருக்காவது அக்கறை இருக்கிறதா?
தினமும் வீட்டில் அதிகாலையிலிருந்தே வானொலி கேட்பேன். அதில் தொடர்ந்து 7 மணி வரை பேசும் ஒரு நபரை பல்லாயிரக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள். அவர் தினமும் அதிகாலை பிரார்தனைக்கென்று ஒரு நேரம் ஒதுக்குவார்.அந்நேரத்தில் அவருக்கு வரும் கடிதங்களில் சிலவற்றைச்சொல்லிக்கூட்டுப்பிரார்த்தனைச் செய்யச்சொல்லுவார். கடந்த சில மாதங்களாகவே பிரார்த்தனையில் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சைக்கும் JEE NEET எழுதவிருக்கும் தங்களின் குழந்தைகளின்வெற்றிக்குமாகத்தான் பிரார்த்திக்கசொல்லி கடிதங்கள் வந்தவண்ணம் இருக்கின்றது.
அந்த நபரும் பேச்சோடு பேச்சாக தன்மகனையும் அதே நுழைவுத்தேர்வுக்கு அழைத்துச் சென்றதாக இரண்டுநாட்கள் முன்பு சொல்கிறார். கேட்பவர்களுக்கு உலகம் ஓடும் பாதையில் தான் நாமும் ஓடவேண்டும் என்று தோன்றாதா? கேரளாவில் சொல்வார்கள் நாடோடும் போழ் நாம் நடுவில் ஓடனும் என்று. இப்படிச் செய்யலாமா கல்வி வெற்றிமட்டும்தான் வெற்றியா? சகதாபம் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா ? அவர்களுக்கு வாழ்வில் அறம் வழித்துணையாக வேண்டாமா? குழந்தைகள் பல துறைகளையும் கற்றுக்கொள்ளவேண்டாமா? என்ன மாயை இது?
அத்தனைபேரும் இதையே படிக்க வேண்டும் என்றால் மற்ற துறையெல்லாம் என்னவாவது? அந்தத் துறைகளில் நடக்கவேண்டிய ஆய்வுகளெல்லாம் ? அந்த ஆய்வுகளினால் சமூகத்துக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் எல்லாம்?
முன்பெல்லாம் பொறியியல் கல்லூரிகள் காளான்களைப்போல முளைத்தவண்னம் இருந்ததென்றால் இப்பதெல்லாம் புற்றீசல் போல அவை பெருகிக்கொண்டிருக்கின்றன. மிக வெளிப்படையாக கொள்ளை அடிக்கிறார்கள் என்றாலும் தங்களின் பொருளாதார தாங்கும் சக்தியைமீறி, தோட்டத்தை விற்று கடன்வாங்கி நகைகளை விற்றுக்கூட பிள்ளைகளை பொறியியல் படிக்க வைக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
அத்தகைய பெற்றோர்களின் பேராசையும் அடிமுட்டாள் தனமும்தான் இப்படியான சுயநிதிக்கல்லூரிகளைப் பெருக வைக்கிறது. ஒரு செமஸ்டருக்கு 5 லட்சம் என 8 செமெஸ்டர்களுகு கல்விக்கட்டணம் செலுத்தி பொறியியல் படித்தபின்னர் மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு வேலைசெய்யும் பலரையும், அந்த வேலைகூட கிடைக்காமல் இருக்கும் மேலும் பலரையும் நாமெல்லோருமே அறிவோம்.
கலை அறிவியல் கல்லூரியில் மிகக்குறைந்த கல்விக்கட்டணம் செலுத்தி தாவரவியல் படித்துவிட்டு காபிவாரியம் ஏலக்காய் வாரியம் தேயிலை வாரியம் கரும்பு ஆராய்ச்சி பருத்தி ஆராய்ச்சி என பல மத்திய அரசு வேலைகளில் இளமையிலேயே இணைந்து கம்பீரமாக வேலைசெய்பவர்கள். விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் சுயமாக தொழில் செய்பவர்கள் நஞ்சில்லா விவசாயம் செய்பவர்கள் பயிர்நோயியலாளர்கள் எல்லாம் ஏன் வெளியுலகத்துக்கு தெரிவதேயில்லை?.
கடந்த ஆண்டுகளில் டெங்கி காய்ச்சல் வந்தபோது, கொரோனா பெருந்தொற்று வந்தபோது நாம் தேடிச்சென்ற பப்பாளி மரங்களும் நிலவேம்புச்செடிகளும் அதன்பின்னர் ஏன் மதிப்பிழந்தன ? அவற்றால் உயிர் பிழைத்த எத்தனை பேர் தாவரவியல் படிப்பு முக்கியம் என்று உணர்ந்தார்கள்? ஆனால் ஆன்லைன் வகுப்பில் கணினிப்பயன்பாட்டைப் பார்த்த பட்டிதொட்டிகளில் இருக்கும் பெற்றோர்கள் எல்லாம் கணினிதான் இனி எதிர்காலம் என்று முடிவுக்கு வந்து அந்தப்படிப்பில் பிள்ளைகளைச்சேர்த்தார்களே அது எப்படி?
எத்தனை ஆண்டுகளாக டிஜிடாலிஸ் செடி இதயநோயாளிகளுக்கு மருந்தளித்து அவர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது? எத்தனை எத்தனை ஆண்டுகளாக கசகசா செடியிலிருந்து எடுக்கப்படும் மார்ஃபின் உச்சகட்ட வலிநிவரணியாக இருந்து வருகிறது ? எத்தனை புற்றுநோயாளிகளுக்கு நித்யகல்யாணிச்செடியிலிருந்து எடுக்கப்படும் நூற்றுக்கணக்கான வின்கா ஆல்கலாய்டுகள் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கின்றன?
இப்படி அட்ரோபின் நிகோடின் ஆஸ்பிரின் கொகெய்ன் என்று தாவரங்களிலிருந்து கிடைக்கும் மருந்துகளையெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருகும் நாம், நமது அடுத்த தலைமுறையினருக்கும் இவை தேவைப்படுகையில் இந்தத் தாவரங்களை அடையாளம் காணும் தாவரவியலாளர்கள் வேண்டும் என ஏன் நினைப்பதில்லை? பைட்டோகெமிஸ்ட்ரி துறைசார்ந்தவர்களே இந்தத்தாவரங்களில் இருந்து வேதிப்பொருட்களை பிரித்தெடுக்க முடியும் பொறியியலாளர்களும் மருத்துவர்களும் அல்ல. அந்தப்படிப்பை கற்றுக்கொள்ள யாருமே முன்வருவதில்லையே?
மேட்டுப்பாளையத்தின் பிரபல உறைவிடப்பள்ளியில் படிக்கும் உறவினரின் மகனை அழைத்துச்செல்ல ஒரு விடுமுறையின் போது நானும் அவர்களின் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அந்தப்பள்ளியில் உயிரியல் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 13 பேர் மட்டும்தான், அவர்கள் அனைவருமே மருத்துவம் படிக்கும் உத்தேசத்துடன் தான் இருக்கிறார்கள்.
அந்தப் பள்ளியில் வளாகம் எங்கிலும் பல மரங்களுக்கு தவறான அறிவியல் பெயர்கள் எழுதப்பட்ட பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதை நான் புகைப்படத்துடன் என் கல்லூரி முகவரியிலிருந்து, தாவரவியல் துறைத் தலைவர் என்று குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டி கடிதம் எழுதியும் இப்போது வரை அவை திருத்தப்படவில்லை. ஏன் தாவரவியல் இத்தனை தாழ்வானதாக நினைக்கப் படுகிறது?
கூட்டுப்பிரார்த்தனை செய்தாவது மகனும் மகளும் மருத்துவராக வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் ஏன் தாவரவியல் என்று ஒரு துறை இருப்பதைக்கூட அறியாமல் இருக்கிறார்கள்?
மருத்துவர்களும் பொறியாளர்களும் வியாபாரிகளும் உயிருடன் இருக்க தாவர உணவைத்தானே சாப்பிட வேண்டி இருக்கிறது , எங்கே ஒரே ஒரு உணவைச்சொல்லுங்களேன் பார்ப்போம் தாவரங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படாமல்?
சுனிதாவில்லியம்ஸ் வெண்வெளிக்குச் செல்லும் போதும் சமோசா தானே எடுத்துச்சென்றார்?
ஏன் தக்காளி கிலோ 8 ரூபாய்க்கும் ப்ரோக்கலி ஒன்று 125 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது? தேவைக்கு அதிகமான உற்பத்தியினால்தானே?
எத்தனை பொறியாளர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்கள் இருக்கிறது இப்போது? எல்லா மருத்துவர்களும் குறைந்த பட்சம் 12 ஆண்டுகளாவது கடும் உழைப்பைச் செலுத்தினால் மட்டுமே தனியே சிகிச்சையளிக்கும் கட்டத்துக்கு வரமுடியும், அதில் அத்தனை பேர் வெற்றிகரமான மருத்துவர்களாகிறார்கள்? உலகியல் வெற்றி அடைகிறார்கள். வெகுசிலர்தான் இல்லையா?
எத்தனைபேருக்கு சொந்தமாக மருத்துவமனை இருக்கிறது படித்து முடித்து அங்கேயே பணிபுரிய?
மூன்று தளங்கள் கொண்ட மாபெரும் மருத்துவமனையை வைத்திருக்கும் எங்கள் குடும்ப மருத்துவரின் மகள்கள் இருவரும் மருத்துவம் படிக்காமல் வேறு துறைகள் தான் படிக்கிறார்கள், என் மகன்களில் ஒருவன் சைபர் பாதுகாப்பும் மற்றொருவன் காட்டியலும் படிக்கிறார்கள்.
கலைஅறிவியல் கல்லூரிகளிலும் கணினி அறிவியலும் வணிகவியலும்தான் படிக்க விரும்புகிறார்கள். பிற அடிப்படை அறிவியல் துறைகள் அனைத்திலும் மாணவர்களே இல்லை
நான் பணிபுரியும் கல்லூரியில் இன்னும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரவில்லை ஆனாலும் கணினி அறிவியல் துறை மற்றும் வணிகவியல் துறைகளில் இடங்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. அறிவியல் துறைகளில் மொத்தமாகவே 10 விண்ணப்பங்கள் கூட வாங்கப்படவில்லை. எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்? எதை நோக்கி நம் சமூகம் போய்க்கொண்டிருக்கிறது?
இன்று காலை எனக்கு குப்பைமேனிச்செடியின் புகைப்படம் அனுப்பி இது என்ன செடி என ஒருவர் கேட்டிருந்தார். அவருக்கு இரு மகள்கள் இருவரும் மருத்துவத்தில் முதுகலை படிக்கிறார்கள் அவரும் கணினி அறிவியல் பேராசிரியர். நம் சுற்றுப்புறங்களில் இருக்கும் முக்கியமான மூலிகைகள் பற்றிக்கூட அறிதல் இல்லாத இப்படியான் குடும்பங்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன.
குப்பைமேனிக்கு போவானேன்? செம்பருத்திச்செடியே அடையாளம் தெரியாமல் என்வீட்டிலிருந்து அலமண்டா மலர்களைப் பறித்து தலைக்கு தேய்க்கும் எண்ணெய் காய்ச்சி எடுத்தாள் பின்வீட்டுக்கார 30 வயதைத்தாண்டிய பெண்ணொருத்தி. இனி வரப்போகும் காலத்தில் என்ன என்ன நடக்கவிருக்கிறது?
பலவீடுகளில் அலங்காரச் செடியாக வளர்க்கப்படும் கவிழ்ந்து தொங்கும் ஊமத்தைகளைப்போன்ற மலர்களைக் கொண்டிருக்கும் ஏஞ்சல் ட்ரம்பெட் செடி கடும் நஞ்சுகொண்டது அதைத்தொட்ட கைகளால் கண்ணைத்துடைத்தால் கூட பார்வையிழப்பு உண்டாகும்.
சுற்றுப்புறமெங்கும் வளரும் குன்றிமணிக்கொடியின் கருப்பும் சிவப்புமான விதைகளில் இருக்கும் நஞ்சான ஏப்ரினுக்கு இன்னும் முறிமருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதைக்கடித்தால் உடனடியாக மரணம் உண்டாகும். ஆமணக்குச்செடியின் கனிகளில் இருக்கும் ரிசின் என்னும் புரதநஞ்சும் மிகக்கடுமையான உயிரைப்போக்கும் வீரியம்கொண்டது என்பதையெல்லாம் இனி கற்றுக்கொடுக்க தாவரவியலாளர்கள் வேண்டாமா?
நீர்நிலைகளிருந்து நிலம் காற்று என அனைத்தும் மாசுபட்டு இருக்கையில் அவற்றைச் சரிசெய்ய சூழியலாளர்கள் வேண்டாமா? பால் 40 ரூபாய்க்கும், குடிநீர் அதில் பாதி 20 ரூபாய்க்கும் வாங்க்கிக்கொண்டிருக்கும் நாம் ஏன் இதை யோசிப்பதில்லை.பேரூர் நதியில் நீத்தார் கடன் செலுத்த வருபவர்களுக்கு ஆற்றில் நீர் இல்லாததால் பாட்டிலில் நீர் விற்கப்படுகிறது. இந்த அவலத்துக்குப்பிறகும் நாம் இயற்கையைக் குறித்துச் சிந்திப்பதில்லை
இனியொரு பெருந்தொற்று வந்தால் அதற்கு மருந்தளிக்க தாவரங்களும் அந்தத் தாவரத்திலிருந்து சிகிச்சையளிக்கத் தாவரவியலாளர்களும் வேண்டவே வேண்டாமா?
எனக்குத் தெரிந்து ஒரு பேராசிரியர் தென்னந்தோப்பில் 4 ஏக்கரை விற்று மகனை ஒரு செமஸ்டருக்கு 8 லட்சம் கட்டி ( 8 செமஸ்டர்களுக்கு) பொறியியல் படிக்க வைத்து அவன் கல்லூரியிலேயே ப்ளேஸ்மெண்டில் வேலைகிடைத்து சென்னையில் வீடுபார்த்து நண்பர்களுடன் தங்கி சமைத்துச் சாப்பிட்டு வேலைக்குபோய் மாதம் 50 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான். கணக்குப் போட்டுப் பார்த்தால் என்ன ஒரு முட்டாள்தனமென்று புரியும். ஆனால் அவர் பெருமையாக மகன் சென்னையில் வேலை செய்துகொண்டிருக்கிறான் என்கிறார்.
பஞ்சாபில் மால்வா பிரதேசத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவைக்காட்டிலும் 40 மடங்கு அதிக பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதால் வீட்டுக்கு ஒரு புற்றுநோயாளி இருக்கிறார்கள் எனவே தினமும் சண்டிகருக்கு(cancer train) புற்றுநோய் ரயிலொன்று மருத்துவமனைகளுக்கென்றெ பல பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.அதில் நோயாளிகளுக்கு இலவசமாகவும் உடன் வருபவர்களுக்கு சலுகைவிலையிலும் கட்டணம் வாங்கப்படுகிறது
இனிமேல் பயிர்களுக்கு வரும் நோய்களுக்கு எத்தனை மருந்து எப்படி எப்போது அடிக்க வேண்டுமென யார் கற்றுக் கொடுக்க போகிறார்கள்? வீட்டுத்தோட்டம் பற்றி எப்படி தெரிந்துகொள்வார்கள்? சோயாப் பயிருக்கு அடிக்கும் கிளைபோசேட் மருந்தின் நஞ்சு சோயாவின் எல்லா உணவு ப்பொருட்களிலும் இருக்கிறது அதை அதிகம் சாப்பிடக்கூடது, சோயா கழிவுகளை கோழித்தீவனமாகக் கொடுப்பதால் கோழி இறைச்சியிலும் முட்டையிலும் அந்த நஞ்சு இருக்கிறது என்பதெல்லாம் யார் சொல்லிக்கொடுப்பர்கள் எப்படி தெரிந்து கொள்வது ?
கவலையாக இருக்கிறது எதிர்காலத்தை நினைத்தால். ஏன் இந்த மோகம்? ஏன் இப்படி இந்த ஆசை பிசாசாக எல்லோரையும் ஆட்டுவிக்கிறது? இதில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொள்ளும் குழந்தைகள் வேறு இருக்கிறார்கள், அவர்கள் பயந்துகொள்வது தேர்வுத்தோல்வி குறித்தல்ல, ஒருவேளை தோல்வி அடைந்தால் எதிர்கொள்ளப்போகும் பேராசைக்கார பெற்றொர்களை நினைத்தே உயிரை மாய்த்துகொள்கிறார்கள். லட்சக்கணக்கான பெற்றோர்களுக்கு கவுன்சலிங் தேவைப்படுகிறது இப்போது.
பள்ளிக்குழந்தைகளின் அடிப்படைக் கல்வியில் A for apple சரிதான் ஆனால் N for neen, T for turmeric என்று சொல்லி கொடுக்க முடியாத நாம் எப்படி அமெரிக்கா நம் இயல் மரமான வேம்பிற்கு காப்புரிமை வாங்கியதற்காக நீதிமன்றத்தை நாடலாம்? நம் இயல் தாவரங்களை குழந்தைகளுக்கு இளமையிலேயே கற்றுக்கொடுக்க வேண்டாமா இதில் என்ன கஷ்டம் இருக்கிறது?
இந்தப்பரிந்துரையை எல்லாம் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்களிடம் தெரிவிக்க இயலாத எளிய ஆசிரியை நான். அரசியல் செல்வாக்கும் அவரவர் குழந்தைகளின் எதிர்கால நன்மையைக் குறித்து அக்கறையும் கொண்டவர்கள் யாரேனும் முயற்சி செய்யலாம்.
தமிழகமெங்கும் அயல் ஆக்கிரமிப்புத்தாவரங்கள் அழகுத்தாவரங்களாக அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. இயல் தாவ்ரஙக்ளுக்கான வாழிடங்களை இழந்துகொண்டே இருக்கிறோம். பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். எது அயல் தாவரம் அது இயல் தாவரம் என்று யார் கற்றுக்கொடுப்பார்கள்? அந்த தாவரத்தின் கெடுதல் என்ன என்பதை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்?
நம்மைச் சுற்றி இத்தனை தாவரவியல் சார்ந்த பயன்பாடுகளும் தேவைகளும் இருக்கையில் ஏன் பொறியாளர்களையும் மருத்துவர்களையுமே நாம் உருவாக்க வேண்டும்? யோசித்துப்பாருங்கள்.
If all flowers wanted to be roses, nature would lose her springtime beauty and the fields would no longer be decked out with wild flowers!
மழை போலவே வெயில் பொழியும் கடுங்கோடை தொடங்கி விட்டது. கல்லூரி பின் மதியம் 3 மணிக்கு முடிவதால் முதுகில் வெயில் அறைய அறையத்தான் தினமும் வீட்டுக்குப் புறப்படுகிறேன். எனினும் புகாரொன்றுமில்லை. மழைக்காலங்களைப்போலவே எனக்குக் கோடைக்காலமும் பிரியம்தான்.
சாலையெங்கும் வண்ணங்கள் நிறைந்திருக்கிறது. நீலவாகையான ஜகரண்டாக்கள் மலைப்பகுதியில்லை என்றாலும் பொள்ளாச்சியிலும் வீடுகளின் முன்பாக ஊதாமலர்களுடன் மலர்ந்து நிற்கின்றன. நெடுஞ்சாலை எங்கிலும் தீக்கொன்றைகளின் செக்கசெவேலென்னும் மலர்தல் கண்ணை நிறைக்கின்றது. இடையிடையே பொன் மலர்ந்தது போல சரக்கொன்றைகள் ஒரு இலைகூட இல்லாமல் மஞ்சளான மஞ்சளாக ஒயிலாக நிற்கின்றன.
அடர்மஞ்சளில் சிறு மலர்கள் நிறைந்திருக்கும் பெருங்கொன்றைகளும், ஒரு இலைக்கு ஒரு மலர் என நிறைந்து ததும்பியபடி மிக அழகிய கிளையமைப்பில் வான் நோக்கி மலர்ந்து நிற்கும் செம்பட்டு வாகைகளும் வரிசையாக நிற்கும் சாலைகளில் பின்மதியப்பயணம் என்பது ஒரு அருள் தான்.
காபிப்பொடி வண்ணத்தில் புல்லிக்கிண்ணங்களும், தூயவெள்ளையில் இதழ்களுமாக புங்கனும் போட்டிபோட்டுக்கொண்டு கூட மலர்ந்திருக்கிறது தூரத்தில் இருந்து பார்க்கையில் இதழிதழாக தரையெங்கும் கொட்டிக்கிடக்கும் புங்கை மலர்கள், இறைந்துகிடக்கும் பொரிபோல இருப்பதால் இதைப் பொரிப்புங்கை என்போம் இங்கு.
அப்படியேதான் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கின்றது வேம்பும். கல்லூரிக்குள் நுழைகையிலேயே எடுத்துச் சாப்பிட்டு விடலாம் போல வேம்பின் மணம் நிறைந்திருக்கிறது. நான் நினைப்பதுண்டு கோடையில் மட்டும் வேம்பின் தாவர அறிவியல் பெயரான Azadirachta indica வின் இண்டிகாவை எடுத்துவிட்டு Azadirachta edulis (எடுலிஸ்- உண்ணத்தகுந்தது) என்று தற்காலிகமாக மாற்றிக்கொள்ளலாம் என்று.
வீட்டிலும் கோடைக்கொண்டாட்டம்தான். இன்னும் ஜகரண்டா மலரவில்லை வீட்டில். ஆனால் நுண்மணிகளைபோல பசுமஞ்சளில் மலர்சொரிகிறது சொர்க்கமரம், சந்தனம் மஞ்சள் அடர் ஊதா என மூன்று நிறங்களில் அலமண்டா , ஆரஞ்சு காம்புகளுடன் கவிழ்ந்து கிடக்கிறது அதிகாலியில் பின்வாசலெங்கும் பவளமல்லிகை.
இளஞ்சிவப்பு வெள்ளை நீலம் என மூவண்ணத்தில் ருயெல்லியா, பலவண்ண ஜினியா,
மரம் முழுக்க கை அகலத்துக்கு சதைப்பற்றான இதழ்களுடன் பாரிஜாதம், குருதிநிறப் பந்துகளாக தெட்சி, பல நிறங்களில் செம்பருத்தி, வெள்ளைச்சிறுகுடைகளாக சாம்பங்காய் மலர்கள், அமரில்லிகள் என வீடும் வண்ணங்களிலும் நறுமணங்களிலும் நிறைந்திருக்கிறது.
கண்ணுக்கு மட்டுமல்ல நாக்குக்கும் கோடை விருந்தளிக்கிறது. கோடையில் கனியளிக்கும் பல அன்னை மரங்கள் வீட்டில் இருக்கின்றன. அருநெல்லிக்காய்களை பச்சைமிளகாய் கல்லுப்பு வைத்து அம்மியில் சதைத்துச் சாப்பிடுவது, பெரிய நெல்லிக்காய்களை ஆவியில் வேகவைத்து காரமிட்டு தாளிப்பது,
விளிம்பிக்காய்களில் ஏராளமாக ஊறுகாய் தயாரித்து வேண்டியவர்களுக்குக் கொடுப்பது,
மாமரம் காய்க்கொழுந்து விடத்துவங்கியதும் செம்பு நிறத் தளிரிலைகளில் புளியும் உப்பும் வைத்து சுருட்டிச் சாப்பிடுவது, மாமரம் எப்போது பூக்கும் எப்போது காய்க்கும் எப்போது கனியும் என பார்த்துக்கொண்டே இருப்பது, முதல் ஆளாகக் காய்த்து திரண்டு விடும் நடுச்சாலையை வைக்கோலில் மூடி வைத்து வீடே மணக்கையில் எடுத்து சாறு கைகளில் வழிய வழியச் சாப்பிடுவது, குறுக்கே வெட்டினால் நட்சத்திர வடிவில் இருக்கும் ஸ்டார்கனிகளை தட்டு நிறைய காலை உணவில் சேர்த்துக்கொள்வது,
கரும்புச்சக்கரை கலந்து பற்கள் கூசும் வரை சாப்பிடும் விளாம்பழங்கள்,
தமிழ்நாட்டில் அவ்வளவாகத் தெரியப்பட்டிருக்காத லோலோலிகா கனிகள் சொப்பிக்காய்த்து செங்கனிகளானதும் பறித்து லேசாகப்பிளந்து முன்பே கலக்கப்பட்ட உப்பு மிளகாய்த்தூளை தூவி, தேங்காய் எண்ணெய்ச்சொட்டு விட்டு மூடி வாயிலிட்டு புளிப்பும் காரமும் எண்ணெய் மணமுமாக அதன் நுண்ணிய விதைகள் பற்களில் இடறச் சுவைப்பது, ஆப்பிள் செர்ரியின் குட்டிக்குட்டிபழங்களை புளிப்பாகச்சாப்பிடுவது,,,,,
வேப்பம்பூக்களைச்சேகரித்து வடகத்தில் சேர்த்துக்கொள்வது , ஆஹா எத்தனை கோடி இன்பம் கோடையிலும் வைக்கப்பட்டிருக்கிறது ? இப்படிச் சுவைக்கையில் எல்லாம் அடடா, இந்தச் சுவையெல்லாம் தெரிந்துகொள்ளாத கோடிப் பேர் இருக்கிறார்கள் என்னும் ஆதங்கம் உண்டாகும்.
வெண்முரசு வாசிக்கையிலும் இதைத்தான் நினைத்துக்கொள்வது. எத்தனை கோடிப்பேர் இந்த வாசிப்பனுபவத்தை அறியாமலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என.
இதோ சாளரம் வழியே வீசுகிறது வெம்மையும் வேம்பின் வாசனையும் நிறைந்த கோடைக்காற்று.
சிவப்பும் அழகு சூடும் ருசி, கருப்பும் அழகு காந்தலும் ருசி என்பதுபோல கோடையும் தனி ருசிதான்.
ஐரோப்பாவுக்கு மேற்படிப்புக்காகப் போனபின்பு சரண் இந்தியாவிற்கு வந்த சென்ற ஆண்டின் முதல் விடுமுறையின்போது சென்னைக்கு விஜய் ஆண்டனியின் இசைக்கச்சேரிக்கு என்னையும் அழைத்துச் சென்றிருந்தான். சரணுக்கு அதற்கு முன்பு செலிபிரிட்டி க்ரஷ் என்று எதுவும் இருந்ததில்லை, முதலும் கடைசியுமாக விஜய் ஆண்டனிதான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஜெர்மனியிலிருக்கையிலேயே கச்சேரியின் தேதிகளைக் குறிப்பிட்டு சென்னை போகனும், போகனும், நீயும் வந்தே தீரனும் என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.
அவனுக்கு விஜய் ஆண்டனியின் பாடல்கள், இசை, அவரது குரல் எல்லாவற்றின் மீதும் பெரிய மரியாதையும் பிரியமும் இருக்கிறது. எப்போது கார் ஓட்டினாலும் விஜய் ஆண்டனி அவனுடன் இருப்பார். கூடவே உற்சாகமாக உரக்கப் பாடிக்கொண்டே வருவான். அவரது பாடல்களில் பிரத்யேக பொருளற்ற சில சங்கதிகள் வருமல்லவா அது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதைத் தனியே சொல்லிச்சொல்லிச் சிலாகிப்பான். எனக்கு அத்தனை பிரியமில்லையென்றாலும் அவரின் நெஞ்சாங் கூட்டில் போல சில பாடல்களின் மீது தனித்த பிரியமுண்டு.
இப்படி இசைக்கச்சேரிகளுக்கெல்லாம் நான் போனதில்லை. பொள்ளாச்சியின் ஒருகோடியில் ஒரு சிறு இருண்ட வீட்டில் பிறந்து அப்பாவின் ஆணவத்திற்கு அஞ்சியும் ஒளிந்தும் வளர்ந்து, எப்படியோ தப்பிப்பிழைத்து அன்னையாகவும் ஆசிரியையாவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு அதற்கான சாத்தியங்கள் வாழ்வில் இல்லாமல் இருந்தது.
சிறுமியாக இருக்கையில் விடியற்காலை அப்பா ட்ரான்ஸிஸ்டரில் வைக்கும் பாடல்கள் பரிச்சயமானது. பதின்பருவத்தில் அத்தைகள் இருவரும் பாக்கட் டிரான்சிஸ்டரில் கேட்கும் பாடல்களை நானும் அக்காவும் கேட்போம். அதுவும் வேட்டைக்காரன் புதூர்செல்லும்போது மட்டும்.
கல்லூரிக்காலத்தில் வீட்டில் டிவியும் மர்ஃபி வானொலியும் இருந்தது. இளையராஜா அறிமுகமென்றாலும் பாடல்களை உரக்கக்கேட்கவோ உடன் பாடிமகிழவோ வாய்ப்பிருக்கவில்லை.
ஒரு இருண்ட வாழ்வில் இருந்தோம் நான், அம்மா அக்கா மூவரும்.அப்பா வீட்டில் இல்லாதபோது இரவெல்லாம் வானொலியைத் திருகிக்கொண்டிருப்போம். ரஷ்ய ஒலிபரப்பு விடுதலைபுலிகள் ஒலிபரப்பெல்ளாஆம் சிலசமயம் கேட்கும். பரவசமடைந்து கொள்வோம்.
பின்னர் ஒரு பெரும் கதவு திறந்து முதுகலை படிக்கக் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் போனபோது தனியே எனக்கென்று ஒரு வானொலிப்பெட்டி இருந்தது . அதில் எப்போதும் பாடல்கள் கேட்பதுண்டு சில இரவுகள் உறங்காமல் கூடக் கேட்டிருக்கிறேன். எப்படியோ இந்துஸ்தானி இசையில் பிரியமாகி விட்டிருந்தது. கூடவே கஜல்களும் ராஜி என்னும் தோழியால் அறிமுகமானது. பங்கஜ் உதாஸ் மீது பெரும் பிரேமை கொண்டிருந்தேன். ’’சிட்டி ஆயிஹே ,பதனுக்கு மிட்டி ஆயிஹே’’வை ஓராயிரம் முறை கேட்டதுண்டு. இளமைக்கனவுகளின் ஒரு பகுதியாகவே அப்போது கஜல் இசை இருந்தது.
அச்சமயம் வீட்டில் குடியிருந்த நாகமாணிக்கம் குடும்பத்தினரால் டேப் ரெக்கார்டர் அறிமுகமானது. பலமுறை முயன்றும் எங்களுக்கென ஒன்று அப்பாவிடம் சம்மதம் பெற்று வாங்க முடியவில்லை. ஆனால் அவர்கள் வீட்டு டேப்ரெக்கார்டரை எங்களிடமே பெரும்பாலும் கொடுத்திருந்தனர். இசை கேட்டுக்கேட்டு மகிழ்ந்த காலமது.
முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தபோது எனக்கு ஆராய்ச்சிக்கான மாதாமாதம் கணிசமான உதவித்தொகையும் கிடைத்தது. எனவே ஒரு வாக்மேன் வாங்கினேன் அடிக்கடி ரயிலில் புதுதில்லி ஹைதராபாத், கோவா எனச் செல்லவேண்டி இருந்த போதெல்லம் அதில் தொடர்ச்சியாக இசைகேட்பேன்.
ஆனால் சரண் அழைத்துச் சென்றது போல் திறந்தவெளி அரங்கில் ஆயிரக்கணக்கானோருடன் இப்படியொரு இசை நிகழ்ச்சியைக் கேட்டதே இல்லை. இப்படி கேட்கக் கிடைக்குமென்று நினைத்தது கூட இல்லை. ஆனால் சரண் வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.
நான், சரண், அகரமுதல்வன் மனைவி பிரபா மூவருமாகச் சென்றோம். நிகழ்ச்சிக்குப் பெருங்கூட்டம் இருந்தது அங்கே. பிரபாவின் ஆட்டோ வந்து சேர முடியாத அளவு சாலையிலும் இசை நிகழ்ச்சியால் நெரிசலாகியது.
இருக்கைகள் போடப்பட்டிருந்த இடத்துக்கு வெளியே பல்லாயிரம் இளைஞர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் நாங்களும். கட்டணத்திற்கேற்ப வண்ணப்பட்டைகள் கைகளில் கட்டப்பட்டன. அங்கேயே குளிர்பானங்கள் தண்ணீர் பாட்டில்கள் நொறுக்கு தீனிகள் விற்கப்பட்டன. வேண்டியதை வாங்கிக்கொண்டோம்.
உள்ளே அவரவர் இருக்கைகளில் அமர்ந்தோம். மிக உயரமான மேடை என்பதால் எல்லாருக்குமே மேடை நன்றாகத் தெரிந்தது ராட்ஷச ஸ்பீக்கர்கள் அங்கங்கே வைக்கப்பட்டிருந்தன. எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் படி மஞ்சள் நிறத்தில் கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் இருந்தன.
ஜொலிக்கும் பல வண்ணமின்விளக்குகளுடன் வண்ணமயமாகத் துவங்கியது நிகழ்வு. கூரையிலிருந்து தொங்கிக்கொண்டு விஜய் ஆண்டனி இறங்கியபோது கூட்டம் வெடித்து ஆர்ப்பரித்தது.
அவர் எதன்பொருட்டோ மாகப என்னும் ஒரு தொலைக்காட்சி பிரபலத்தை அழைத்துவந்திருந்தார். மாகப நிச்சயமாக இடைச்செருகல் தான். விஜய் ஆண்டனிக்கு மாகபா போன்ற ஒருவர் தோள் கொடுக்க வேண்டியதில்லை. அடுத்தடுத்த பாடல்களைக்குறித்த அறிவிப்புகளுக்கு எதிர்த்தரப்பில் ஒருவர் வேண்டி இருந்ததால் அவரை அழைத்திருக்கலாம். அசட்டுபிசட்டென்றேதான் அந்த நிகழ்விலும் அவர் பேசிக்கொண்டிருந்தார். நிகழ்வின் வீரியத்தை கொஞ்சம் குறைத்த பெருமை மாகாபவிற்கே.
ஒவ்வொரு பாடலுக்கும் அந்த வெளி அதிர்ந்தது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கிளர்ந்தொளிரும் இளமைப்பெருக்கில் கலந்துகொண்டு உச்சகட்ட ஒலியில் பாடல்களைக் கேட்டது பெரிய அனுபவமாக இருந்தது.சரண் எழுந்து நின்று மற்றவர்களைபோல் நடனமாடி கொண்டே கேட்டான். நானும் பிரபாவும் கூடவே பாடினோம். மச்சக்கண்ணி, புலி உறுமுது பாடல்களுக்கெல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் வெறியாட்டம் போட்டது. அவ்வப்போது சிறு தூறலாக மழை பெய்தது.
பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பெரியதிரையில் தனது காதல் மனைவியையும் இளைய மகளையும் காட்டி விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்தினார்.
என்னைப்போலவே சில அன்னைகளும் வந்திருந்தனர் அவர்களும் மகள் மகனுடன் சேர்ந்து நடனமாடி ரசித்தனர். எனக்கு முன்பாக ஒரு இளைஞர் கூட்டமிருந்தது. ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அல்லது நண்பர் குழாம். அவர்கள் ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ந்திருந்தார்கள். என் இருக்கைக்கு நேர் முன்பு ஒரு இளைஞன். 22-லிருந்து 24-க்குள் வயதிருக்கும். ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்தான் வெள்ளைச் சட்டையும் கால் சட்டையும், கன்னமெங்கும் செம்பருக்கள், அவன் நாற்காலி மேல்நின்று ஆடிக்கொண்டிருக்கையில் என் புடவையின் கீழ்நுனி அவன் நாற்கலிக்கடியில் சிக்கிக்கொண்டது. அவன் ஆட்டம் ஆடிமுடித்து இறங்கிய பின்னரே புடவையை விடுவித்தேன்.
ஆனால் அவனின் அத்தனை கொந்தளிப்புக்களையும் ’’நூறு சாமிகள் இருந்தாலு’’ம் பாடல் பொங்கும் பாலில் நீர்தெளித்தது போல் அடங்கச்செய்தது.
பாடல் பாடப்பட்டுக்கொண்டிருக்கையில் அந்த இளைஞன் அமைதியாக நாற்காலியில் அமர்ந்து கொண்டான். கண்களில்இருந்து கண்ணீர் சரம்சரமாய் வழிந்தது. கண்ணாடியைக் கழற்றி பாக்கட்டில் வைத்துக்கொண்டு அழுகையை கட்டுப்படுத்தவோ கண்ணீரைத் துடைக்கவோ செய்யாமல் அப்படியே கண்ணீர் சொரிந்தபடி அந்தப் பாடலைக்கேட்டுக் கொண்டிருந்தான். அன்னையை இழந்த மகனாயிருக்கக்கூடும் என்று நினைத்தேன். அவனை அணைத்துக் கொள்ள விழைந்தேன்.
அதன் பிறகான பாடல்களுக்கு அவனால் அப்படி ஆடவும் கூடவே பாடவும் முடியவில்லை. முறிந்துவீழ்ந்த மரம்போலிருந்தான். இறுதிப்பாடல்களின் போது மழை பலமாகவேதொடங்கியது , ஆனால் கூட்டம் மழையை பொருட்படுத்தவே இல்லை.
நாங்கள் மூவரும் கூட்ட நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க 2 பாடல்களை தியாகம் செய்துவிட்டு புறப்பட்டோம்.
பெரும் திருவிழா முடிந்தது போலசாலை முழுக்க நெரிசலாக இருந்தது
தமிழ் விக்கியில் விஜய் ஆண்டனியின் கொள்ளுத்தாத்தாவான மாயுரத்தில் பணிபுரிந்த வேதநாயகம் பிள்ளையின் பக்கத்தை இறுதிசெய்தபோது குற்ற விசாரணைகளை மொழியாக்கம் செய்யும் சுவாரஸ்யமான பணியில் பிள்ளை இருந்ததை அறிந்தேன். 4 பெண்களை திருமணம் செய்துகொண்டிருக்கிறார் பிள்ளை.
தமிழின் முதல் நாவலாகப் பிரதாபமுதலியார் சரித்திரத்தை எழுதியவர். தாது வருஷபஞ்சத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கஞ்சித் தொட்டிஅமைத்து பசியாற்றி இருக்கிறார் பிள்ளை. தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி இருக்கும் இவரைக்குறித்து ஒரு கீர்த்தனை பாடப்பட்டிருக்கிறது
இரவெல்லாம் காதுகளில் விஜய் ஆண்டனியின் குரலும் பாடலும் இசையும் கேட்டுக்கொண்டே இருந்தது.
அத்தனை ஆயிரம்பேரின் கொந்தளிப்பிலும் கூக்குரலிலும் உற்சாகத்திலுமல்ல, அந்த இளைஞனின் துயரத்தை மிக அந்தரங்கமாகத் தொட்டதில்தான் விஜய்ஆண்டனியின் வெற்றி இருக்கிறது. இதை என்றைக்காவது விஜய் ஆண்டனியிடம் சொல்லவேண்டும். சரணும் அவரைநேரில் பார்க்கக் காத்திருக்கிறான்.
வீட்டில் நாங்கள் மூவருமே தினசரி காலண்டரில் தேதி கிழிக்கையில் அன்றைய ராசிபலன் பார்ப்போம். ஸ்கூல் வேனுக்குக்காத்திருக்கையில் அதைக்குறித்து விரிவாகப்பேசிக்கொள்வோம்.
எஃப் எம்ரேடியோவில் சிவல்புரி சிங்காரம் சொல்லும் ராசிபலன்களையும் கேட்டு அவர் அன்று என்ன நிறப்புடவை உடுத்தச்சொல்கிறாரோ அதைத் தேர்வு செய்து உடுத்துவதும் வழக்கம். இன்று கூடச் சிவல்புரியார் மேஷ ராசிக்கு பிரகாசமான மஞ்சள் என்றார். நான் மஞ்சளில் தான் கல்லூரி வந்தேன்.
காலண்டரில் இன்று என் ராசிக்கு பீடை என்றிருந்ததைப் பார்த்ததும் பழைய நினைவுகள் எழுந்தன
மகன்களின் பள்ளிக்கூட நாட்களில் சரணுக்குத்தமிழ் அவ்வளவாக வராது. அவன் அதிகம் திட்டு வாங்கியது அவனது தமிழாசிரியையிடம் தான். அவனுக்கு மட்டுமல்லாது பெற்றோர் சந்திப்பின்போது எனக்கும் மானாவாரியாகத் திட்டுக்கிடைக்கும்
(“நீங்களே டீச்சரா இருந்துட்டு இப்படி விட்டுருக்கீங்க?)
100 க்கு 11 என்றெல்லாம் வரலாற்றுச்சிறப்பு மிக்க மதிப்பெண்கள் வாங்கிய சரண், அந்த ஆசிரியை வேலையை விட்டுவிட்டு போனபின்பு சங்கீதா என்னும் ஒரு ஆசிரியை வந்தபின்னால் தமிழ்மகனாகி தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெறத்துவங்கினான்.
பின்னர் வெண்முரசு 26 நாவல் நிரைகளையும் வாசித்து நீலம் தொகுப்பை எப்போதும் மார்போடணைத்துக்கொண்டே இருப்பவனாகினான், ஜெ தளத்தில் நல்ல தமிழில் அவனது கடிதங்கள் எல்லாம் வரத்துவங்கின காலமும் வந்தது.
மகன்களின் பள்ளிக்காலத்தில் ஒருநாள் சரண் முதலில் சாமிகும்பிட வந்து காலண்டரில் தேதியைக் கிழிக்கையில் அவனுக்கான மீன ராசிக்கு பீடை என்று இருந்தது.
அவன் …….`தருணிடம் பீடைன்னா என்னடா……? என்றான்
தருணுக்கும் தமிழ் தகராறுதான். அவன் அண்ணனிடம்.
“… அது வந்து அம்மா செய்யுமே பலகாரம் ஒன்னு, குட்டியா பந்து மாதிரி கடிக்கவே முடியாம கெட்டியா இருக்குமே அதோட பேரு....“என்றான்.
நான் சமையலறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தென். சரண் மீண்டும் ….அதுவா ஆனா அதை ஏன் ராசி பலன்ல போட்டுருக்காங்க....என்றான்
ஒரு கருப்பு வெள்ளைப்படம். வெகுகாலம் முன்பு வந்தது. நான் பள்ளியில் படிக்கையில், வீட்டுக்கு தொலைக்காட்சி வந்த புதிதில் பார்த்தது. திரைப்படத்தின் பெயரோ நடிகர்களோ எதுவும் நினைவில் இல்லை, ராஜா ராணி படம் அதுவும் ஒரு அறிவியல் புனைவுக் கதை என்பது தேசலாக நினைவிருக்கிறது.
ஒரு கண்ணுக்குத் தெரியாத அரூபக் கதாபாத்திரம் அந்தப்படத்தில் முக்கியமாக இருக்கும், அது எல்லோரையும் தொல்லை பண்ணிக் கொண்டிருக்கும். அதன் அட்டகாசம் நடக்கையில் எல்லாம் ஒருவர் ’’ஆரம்பித்துவிட்டது அரூபத்தின் வேலைகள்’’ என்பார். அந்த வசனத்தைத்தான் ஜனவரியில் இந்த வருடத்துக்கான என் பயணம் தொடங்கியதும் எண்ணிக்கொண்டேன். மகனுடன் மனமகிழ்ந்து நீண்ட பயணம், அலைச்சல், பலவித மனிதர்கள், தவிர்க்க முடியாமல் சில கசப்புகள் என்று மீண்டும் தொடங்கி விட்டிருக்கிறது ஒரு புதிய வருடம்.
ஜனவரி முதல் வாரமே கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடும் போர்டில் கலந்துகொண்டு, முற்பகலில் மீண்டும் அங்கிருந்து பொள்ளாச்சி புறப்பட்டு, வழியில் அமுத சுரபியில் அன்றைய மதிய உணவை ( நான் தான் போணி ) சாப்பிட்டு, கல்லூரிக்கு வந்து, தாவரவியல் துறையில் நடந்துகொண்டிருந்த மூலிகை மருந்துகள் தயாரிப்பதற்கான ஒரு நாள் பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் கலந்துகொண்டு, நன்றி நவில்ந்து, விருந்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, மறுநாள் கல்லூரியில் நடைபெற இருந்த பொங்கல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அறைக்குச்சென்று அவசரமாக தலைவாரிக் கொண்டு மார்கழி மகோத்ஸ்வத்தின் இறுதி விழாவில் ’ஆண்டாள் என்னும் பெருங்காதலி’ என்னும் தலைப்பில் உரையாற்றி, காரில் பாய்ந்து ஏறி வீடு வந்து, மறுநாள் திருச்சியில் அயல் ஆக்கிரமிப்புதாவரங்களை அகற்றுவதாக 12 ஆயிரம் பள்ளிகுழந்தைகள் ஒரே சமயத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் கின்னஸ் சாதனை நிகழ்வுக்காக செல்லவேண்டி சூட்கேஸில் எல்லாம் எடுத்து வைத்து இரவுணவு தயாரித்து சரணுடன் சாப்பிட்டு, படுக்கப்போகையில் நள்ளிரவாகி இருந்தது.
மனதுக்குள் ஆரம்பித்துவிட்டது அரூபத்தின் வேலைகள் என்றுதான் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. சரண் என் உரை மிக நன்றாக இருந்ததாக சொன்னதில் மகிழ்ந்தேன்.. வசிஷ்டர் வாயால்……….
அதிகாலை சரணும், நானும் திருச்சி நோக்கி உடுமலை வழியாக புறப்பட்டோம். வேடசந்தூரில் இருந்து முக்கோணம் செல்லும் வழி எனக்கு எப்போதும் பிரியமானது. முதன்முதலாக பழனியாண்டவர்க் கல்லூரிக்கு அந்த வழியில் பேருந்தில் செல்லும் போது வழியெல்லாம் சூரியகாந்தி பயிரிட்டிருந்தார்கள்.
ஒரு குழந்தையின் முகம் போல பெரிதாக பிரகாசமான மஞ்சளில் மலர்களுடன் சாலையின் இருமருங்கிலும் உயரமாக, கம்பீரமாக நின்றிருந்த சூரியகாந்திச்செடிகள் வழியெங்கும் உடன்வந்த அந்தப்பயணம் ரம்மியமாக இருந்தது. அதன்பிறகு ஒரு போதும் சூரியகாந்தி அங்கு பயிரிடப்படவில்லை, அவரை, கரும்பு, வாழை என்றுதான் இருந்ததென்றாலும் அன்று மலர்ந்த சூரியகாந்தி மனசில் அப்படியே வாடாமல் நிலைத்து நின்றுவிட்டது. எனவே அந்தச்சாலை வழியே பயணிப்பது எனக்கு மிகப்பிடித்தமானதொன்றாகி விட்டிருக்கிறது. வழியெல்லாம் எனக்கு மட்டும் அவரைச் செடியில், கரும்பில் எல்லாம் சூரியகாந்தி மலர்ந்திருந்தது.
குளித்தலையில் இருக்கும் விஷ்ணுபுரம் குழும நண்பர் ஷண்முகம் அவர்கள் வீட்டிற்கு மதிய உணவுக்கு அழைத்திருந்தார். எனவே குளித்தலை வழியாகப் பயணித்தோம்.
மேக மூட்டமாக இருந்ததால் புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலையில் மிக அருமையான பயணம். ஸ்பாட்டிஃபையில் குழுவாக இணைந்து கொள்ளும் வசதி இருந்தது எனவே பிடித்த பாடல்களை மாற்றி மாற்றி இருவருமாகக் கேட்டுக்கொண்டிருந்தோம்.
நான் ’…..கங்கைக்கரைத்தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம்…..’ கேட்டால், சரண் ’…..ஹே யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலே, ஒன்னப்போல் எவளும் உசிர தாக்கலே…..’ கேட்பான்,
நான் ’……நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா, அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா….’ கேட்டால், அவன்’ மம்மட்டியானிலிருந்து’’….மலையுரு நாட்டாமை , மனச காட்டு பூட்டாம,உன்ன போல யாரும் இல்ல மாமா …..’’கேட்பான்.
டோல்கேட் பகுதிகளில் ஓய்வறைகள் நன்கு சுத்தமாக பராமரிக்கப்படுவது நெடுஞ்சாலைப் பயணத்தில் ஒரு சௌகரியம்.
ஒரு நெரிசலான சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டிருந்தது பலருடன் நாங்களும் வெகுநேரமாக காத்திருந்தோம். இருசக்கர வாகனத்தில் ஒரு இளம்பெண் இடுப்புவரை பறந்த கூந்தலுடன் முறையாக ஹெல்மெட் எல்லாம் போட்டுக்கொண்டு முன்னால் இருந்தாள். வார்செருப்பிட்டிருந்தாள், பாதங்களின் விளிம்பில் சுற்றிலும் மருதாணி வரம்பிட்டிருந்தது. அந்தப் பாதங்களால் சாலையை உதைத்து உதைத்து மெல்ல முன்னேறினாள். தினம் மாபெரும் கரிய சக்கரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நெடுஞ்சாலைக்கு மருதாணிக்கரையிட்ட அக்கால்களின் அந்த மெல்லிய உதை எத்தனை வசீகரமானதாக இருந்திருக்கும்?
ஸ்ரீ சஷ்டி நாட்டுக்கோழி விருந்து என்று ஒரு கடை பெயர்ப் பலகையைப்பார்த்தேன். வேற பேரே கிடைக்கலையா?
திண்டுக்கல் மதுரைச்சாலையிலும் ஒரு வேடசெந்தூர் இருப்பதால் வேடசெந்தூரிலிருந்து வேடசெந்தூருக்குச் செல்லும் விசித்திரமன பயணத்திலிருந்தோம், வழியில் மைவாடி, மயிலாடி என்று அழகிய பெயர்களுடன் ஊர்கள் இருந்தன.
மதியம் 12 மணிக்கெல்லாம் குளித்தலை வந்துவிட்டோம். சரணுக்கு குணசீலம் பெருமாள் கோயிலுக்குப் போகவேண்டி இருந்தது.
கையில் வழிபாட்டுக்கு வாழையிலையில் சுற்றிய துளசியும், வாழைப்பழங்களுமாகவே வந்துவிட்ட ஷண்முகம் அவர்களுடன் நேரே கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருந்த அந்த பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலுக்கு சென்றோம்.
அன்று சொர்க்கவாசல் திறப்பு என்பதால் நல்ல கூட்டம்.. நடைசார்த்தும் முன்பு கடைசியாக உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.
இரவெல்லாம் விழித்திருந்ததில் களைத்திருந்த பட்டர்,சுருக்கமாக ஆனால் தெளிவாக செங்கோல் தாங்கி அர்ச்சாவதாரமாக மார்பில் திருமகளுடன்ன் இருந்த பெருமாளைப் பற்றிச்சொல்லி ஹாரத்தி காட்டினார், வணங்கி வெளியே வந்து சர்க்கரைப்பொங்கல், துளசிப் பிரசாதம், தீர்த்தம் வாங்கிக் கொண்டு, வீட்டில் அவ்வப்போது வேண்டுதலின்போது மஞ்சள் துணியில் முடிந்து வைத்திருந்த நாணயங்களை உண்டியலில் போட்டுவிட்டு வெளியே வந்தோம். கோயில் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் முழுமையாக கோயிலின் சித்திரம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் திருப்தியான தரிசனம்
மனநலம் பாதித்தவர்களுக்கான பிரத்யேக கோயில் இது. எனக்கு இனி எல்லாம் சரியாகிவிடும்.
கோயில் வாசலில் கூட்டமாக ஆடுகள் காத்திருந்து சர்க்கரைப் பொங்கலுக்கு முண்டியடித்தன. இரண்டு கொழுத்த ஆடுகளுக்கு பொங்கலை ஊட்டிவிட்டேன்.காருக்கடியிலும் இருந்த நாலைந்து ஆட்டுக்குட்டிகளை விரட்டிவிட்டு பயணித்தோம்,
வழியெல்லாம் ஷண்முகம் தலபுராணங்களை, வழிபாட்டு முறைகளை, திருத்தல மகிமைகளை, காவிரியின் மணல் கொள்ளையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். நாளொன்றுக்கு 5000 லோடு மணல் அள்ளப்பட்டது என்பதைக்கேட்கவே மலைப்பாக இருந்தது.
வழியெங்கும் கிளையாறுகளும் கால்வாய்களும் பெரிய பெரிய வாய்க்கால்களுமாக நிரம்பித் ததும்பி ஓடிக்கொண்டிருந்தன. நீர்வளம் அப்பிரதேசத்தின் வாழ்வியலை முழுக்க முழுக்கத் தீர்மானித்திருப்பதைக் கண்கூடாக பார்க்கமுடிந்தது. எங்கும் நெல்லும், வாழையும் பயிராகின.
நீர் நிறைந்து நின்ற வயல்களில் பெருங்கோரைகள் ஆளுயரம் வளர்ந்து, பழுப்பில் மலர்க்கொத்துக்களுடன் நின்றன. வேறு பயிர்களுடன் வளர்கையில் அவை களைச்செடிகள் ஆனால் அவையே சாகுபடியாகி பலனுமளிக்கிறது. yes, weeds are right plants in the wrong place.
சாலையோரம் லாரியில் கோரைப்புல்கட்டுக்களை ஏற்றிக்கொண்டிருந்தவர்களிடம் பேசி எப்படி கோரையை பாய் பின்னுவதற்காக மெலிசாகக்கிழிப்பார்கள் என்று செய்து காண்பிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
மஞ்சக்கோரை என்று ஒரு ஊர்ப் பெயரை பார்த்தேன்,
அங்கிருந்து கோரைப்பாய்கள் விற்கும் கடைக்குச்சென்று பந்திப்பாய்கள் வாங்கினேன்.
இங்கே கொங்குப்பகுதியில் கோரைப்பாய்கள்கொண்டு வந்து விற்பவர்கள் நான்குமடங்கு விலைசொல்லுவது அப்போதுதான் தெரிந்தது.நல்ல நீளமானப் பந்திப்பாய் 60 ரூபாய் தான். பாயின் ஓரங்கள் ரெக்ஸின் வைத்தது. மெத்தை வைத்துத் தைத்தது,குழந்தைகளுக்கானது என்று பல விதங்களில் பாய்கள் நல்ல தரமானதாக இருந்தன.
கோரை தலவிருட்சமாக இருக்கும் சாய்க்காட்டில் அருளும் சாயவனேஷ்வரர் கோயிலைக்குறித்து கோரைபற்றிய கட்டுரையில் முன்பு நான் எழுதியதை பற்றிக் காரில் பேசிக்கொண்டே பயணித்தோம். https://logamadevi.in/792
நீர்நிலைகள் அதிகம் இருந்ததால் கோழியிறைச்சிக் கடைகளுக்குப்பதில் ஏராளம் வாத்திறைச்சிக்கடைகளும். பன்றியிறைச்சிகடைகளும் இருந்தன. வாழையிலை வாழைப்பழங்கள் சாலையோரங்களில் எங்கும் விற்கப்பட்டன. வேகத்தடைகளில் எல்லாம் முளைத்த தேங்காய்க்குருத்தும் செக்கச்சிவந்த சதைப்பகுதியைக் கொண்டிருக்கும் கொய்யாக்காய்களும் விற்றார்கள்.
ஷண்முகம் அவர்களின் 15 ஏக்கர் விஸ்தீரணமான வாழைத்தோட்டத்துக்குப் போனோம். அந்தப்பிரதேசத்தின் சுவையான ஏலக்கி, பூவன் போன்ற வாழைகள் தார் விட்டிருந்தன. சில மரங்களில் காய்கள் முதிர்ந்து மஞ்சள் பிடித்து திரண்டிருந்தன. தூயமல்லி, பொன்னி, பாஸ்மதி என்று நெல்லும் பயிரிட்டிருந்தார்.
அந்தப்பகுதியில் எங்குமே வாழைத்தார் வெட்டியதும், கொங்குப்பகுதியில் செய்யப்படுவதுபோல வாழைமரத்தை அடியோடு வெட்டி தண்டை உரித்தெடுத்து வியாபாரம் செய்வதில்லை. அன்னைமரத்தை அடுத்த சந்ததி வளருகையில் உடன் நிற்க அப்படியே விட்டுவிடுகிறார்கள். மெல்ல அழிந்துகொண்டிருக்கும் அன்னையினருகாமையில் கன்றுகள் செழித்துவளர்கின்றன
புதிதாக இந்த முறையைக் கேள்விப்படுகிறேன்
வாழைக்காய் வியாபாரம் குறித்து வெற்றிகரமான வாழைவியாபாரியான ஷண்முகம் சொல்லிக்கொண்டிருந்தார். வாழைக்கன்று ஒரு தோட்டத்தில் நட்டுவைக்கப்படுகையிலேயே அதன் விலையை நிர்ணயித்து, விளைந்தபின்னர் வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது. 12 மாதப் பயிரென்பதால் விளைச்சலின் போது, விலைவாசியின் நிலவரத்தைப்பொறுத்து லாபமோ நஷ்டமோ அது ஒப்பந்தம் செய்தவர்களுக்குத்தான். ஷண்முகம் ‘….மூணு சீட்டுமாதிரிதாங்க…’ என்றார். நூற்றாண்டுகளுக்கு முன்பு ட்யூலிப் மேனியாவும் இப்படித்தான் நிகழ்ந்தது
விவசாயத்தைக்காட்டிலும் பெரும் சூதாட்டம் வேறு இருக்க முடியாது.. ஷண்முகம் இயற்கை விவசாயி எனப்து மகிழ்வளித்தது.
சண்முகம் ஒரு தகவல் சுரங்கம், வழியெங்கும் இருந்த கட்டிடங்கள் கோயில்கள் என்று பலவற்றைக் குறித்து விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்,
மாபெரும் கண்டெய்னர் லாரிகள் நாகப்பட்டினம்-திருச்சிச் சாலையில் துறைமுகங்களுக்கு சென்றபடியே இருந்தன. அங்கிருந்து ரத்னகிரீஷ்வரர் மலைக்கோயில் அடிவாரம் வரை சென்று காரிலேயே கிரிவலம் வந்தோம். நேரம் 2 மணியைத் தாண்டி விட்டிருந்தது.
அந்த மலையில் இன்றும் மண்ணைக் கிளறினால் சிறிதும் பெரிதுமாக ரத்தினங்கள் கிடைக்கிறதாம், மழைக்காலங்களில் ஊர்மக்கள் குச்சியுடன் மலையில் அங்கும் இங்குமாக கிளறிக்கொண்டிருப்பதை பார்க்கலாம் என்றார் ஷண்முகம்.
மலையெங்கும் குரங்குக்கூட்டங்கள் . அங்கு மூன்று குரங்கு ’குரூப்’ இருப்பதாகச் சொன்னார். மலையின் கீழ்ப் பகுதியில் இருக்கும் கூட்டம் மற்றவற்றை அண்ட விடுவது இல்லையாம். குரங்குகளுக்கு அடிக்கடி வாழைப்பழங்கள் கொண்டு வந்து கொடுப்பதாகச்சொன்னார்.
குரங்குகள் ஆவலாக வாழைப்பழங்கள் உண்ணும் காணொளிகளையும் பார்த்தேன்,
மீண்டும் ஒரு கோவிலுக்குச்சென்று நடை சார்த்தும் சமயமாதலால் வெளியிலிருந்தே வணங்கிவிட்டு புறப்பட்டோம். பல நெல்வயல்களில் சமீபத்திய மழையினால் பொன்னாக விளைந்திருந்த நெற்ப்பயிர்கள் முழுக்கச் சாய்ந்திருந்தன. பலவயல்களில் அறுப்பு நடந்து கொண்டிருந்தது.
12 மணிக்குப்பிறகு நான் பசி தாங்க மாட்டேனென்பதால் சரண் திரும்பித் திரும்பி என் முகத்தைப் பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினான். நான் பயண அனுபவங்களில் திளைத்து பசியை மறக்கடித்துக் கொண்டிருந்தேன்.
ஷண்முகம் அவர்களுக்கு அவரது சொந்த ஊரான தோகைமலையில் இருந்து உறவினரின் தொலைபேசி அழைப்பு வந்தது.
அன்று மாலை ஊசாத்து இருப்தால் வந்துவிடும்படி கேட்டுக்கொண்டார் எதிர்முனையில் இருந்தவர்.
’…என்னது ஊசாத்து…?’ என்று விசாரித்தேன்,விளக்கினார்.
ஊர்ச்சாட்டுதல்தான் காலப்போக்கில் மருவி ’ஊசாத்து’ ஆயிருக்கிறது
கார்த்திகை தீபம் முடிந்ததும் மழை நிற்க வேண்டும் அதன்பிறகும் மழை தொடர்ந்தால் விவசாயம் பாதிப்பதோடு நீரினால் பரவும் நோய்களும் ஊருக்குள் பரவும் என்பதால் மழைபோதும் என்பதற்காக நோன்பு சாட்டி ஊரின் நான்கு எல்லயிலும் ஆடு அறுத்து செய்யும் சடங்கு பலகாலமாக நடந்துவருகிறது.
ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டேன்.
மழை வேண்டி யாகம் செய்யும், மழையை நம்பியே வாழும் ஒரு பகுதியிலிருந்து மழை போதுமென்று வேண்டிக்கொள்ளும் நீர்வளமிக்க பகுதிக்கு வந்திருக்கிறேன்
நகருக்குள் செல்லும் வழியில் பல இடங்களில் ஷண்முகம் அவர்களுக்குச்சொந்தமான பல வீடுகள், காம்ப்ளக்ஸ்கள், கடைகள் அலுவலகங்களைப் பார்த்தோம். நகருக்குள் அவரது பெரிய வீடு இருந்தது. கீழிருந்து பார்க்கையிலேயே மேல்தளத்தில் இரு படுக்கையறைகளின் பால்கனிகள் உருமால்போல உருண்ட பெரிய வளைவுகளுடன் அலங்காரமாகத் தெர்ந்தன.
அவரின் இருமகன்களையும்,மனைவியையும் அறிமுகம் செய்து கொண்டோம்
மாபெரும் உணவு மேசையில் கரும்பு, வாழைப்பழச் சீப்பு. மூங்கில் கூடைகளில் காய்கறிகள் எல்லாம் ஒருபக்கம் வைக்கப்பட்டிருந்தன. டிபிக்கல் வளமான விவசாயின் வீடு.
தலைவாழை இலையில் நல்ல ருசியான சைவ சாப்பாடு. வாழைப்பூ வடை,மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் வறுவல் அவரைக்காய் பொரியல், கூட்டு, அப்பளம், பாயஸம் என்று விரிவான மெனு.
புறப்படுகையில் கார் டிக்கியில் ஒரு ஏலக்கி வாழைத்தாரை வைத்துவிட்டு எங்களுடன் ஸ்ரீரங்கம் வந்தார் ஷண்முகம்.
ஸ்ரீரங்கத்திலும் சொர்க்கவாசல் திறபபாதலால் பெருங்கூட்ட நெரிசல் இருந்தது. சாலையே மக்கள் வெள்ளத்தால் நெரிந்தது. கோயில் காளைகளும் சாலையெங்கும் திரிந்தன.
ஏராளமான சாலையோரக் கடைகளில் மலர்களும், பெரிய பெரிய கூடைகளில் கலவைக்காய்கறித் துண்டங்களும் விற்கப்பட்டன.
சிறுமழைதூறிக்கொண்டிருந்தது பக்தர்களின் வரிசை நீண்ண்ண்ண்ண்டிருந்தது. கோவிலுக்குச்செல்லும் எல்லாச்சாலைகளும் பாதுகாப்புக்கருதி அடைக்கப்பட்டிருந்தன. கார் நிறுத்தத்திலிருந்து வெகுநேரமாக சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தோம். அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் வந்திருந்ததால் கூடுதல் கெடுபிடி.
என்னால் நிச்சயம் அந்த நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாது எனவே வெளியிலிருந்து வணங்கிவிட்டு புறப்பட்டோம். அத்தனை நீண்ட் வரிசையில் நின்றிருந்தால் நிஜமாகவே சொர்க்க வாசலையோ நரகவாசலையோ திறந்து என்னை உள்ளே அனுமதித்திருப்பார்கள்,
கோயில் அருகில் இருந்த ஒரு காபிக்கடையில் நல்ல டிகிரி காப்பி குடித்கோம், அருமையான கள்ளிச்சொட்டு டிகாக்சன் காப்பி . அங்கிருந்து கார் நிறுத்தத்திற்கு ஆட்டோவில்தான் போகவேண்டி இருந்தது.
பின்னர் நாங்கள் திருச்சியில் தங்கவிருந்த விடுதிக்கு எங்களைக்கொண்டு வந்துவிட்டுவிட்டுத்தான் ஷண்முகம் கிளம்பிச் சென்றார்
எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்ன அந்த விடுதியில் அறை எப்படியோ குழப்பத்தில் இல்லாமலாகி இருந்தது. அங்கிருந்து மீண்டும் சாலைப்போக்குவரத்து நெரிசலில் நீந்தி நீந்திப் பயணித்து இன்னொரு விடுதிக்குச்சென்று அங்கு பினாயில் வாடையடித்த அறையைப்பார்த்து வெறுத்துபோய்த் திரும்பி மீண்டும் சாலையிலேயே நெடுநேரம் காத்திருந்து மற்றொரு விடுதிக்கு வந்து சேர்ந்தபோது பாதங்களிரண்டும் பூரிபோல வீங்கி இருந்தது.களைத்திருந்தேன்.
கல்லூரியில் தாமிரநிற காய்களுடன் நின்றிருந்த பெருங்கொன்றை மரத்தடியில் காத்திருக்கையில் இரு மாணவிகள் என்னைக் கடந்து நடந்து சென்றார்கள்.நெருங்கிய தோழிகள்போல, இறுக்கமாகக் கைகோர்த்திருந்தார்கள்.
அதில் ஒருத்தி மற்றவளிடம் …”” நேத்து நைட் பத்தரை மணிக்குடி , எல்லாரும் டிவி பார்த்துகிட்டு இருக்கோம் எனக்குப் போன் வருது புது நம்பரிலிருந்து. அப்பா எடுத்து ஹலோங்கறாரு கட் ஆயிருச்சு அப்பா மறுபடியும் ட்ரை பண்ணினா சுவிட்ச் ஆஃப்னு வருது, நான் பேசாம டிவியையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்பா கொஞ்ச நேரம் பார்த்துட்டு விட்டுட்டாரு. நைட் நான் ட்ரூ காலர் போட்டுப் பார்த்தா அது நம்ம கிளாஸ் — டி……””
…””அடப்பாவி கூப்பிட்டவன் பேசவேண்டியதுதானே உங்கப்பாட்டெ தைரியமா?…”” என்றாள் அந்த மற்றொருத்தி.
….””ம்க்கும், பேசிட்டாலும், என்கிட்டே ரெக்கார்ட் நோட் கேட்கறதுக்கே ஒரு செமெஸ்டர் ஆயிருச்சே அவனுக்கு!..
…””இன்னிக்கு காலையில் கிளாஸில் என்ன பார்த்துட்டு ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி உட்கார்ந்திருக்கான் பார்த்தியா?…”” என்றாள் முதலாமவள். பின்னர் கிளு கிளுவென்று சிரித்தபடி என்னைக் கடந்துசென்றார்கள்.
காலையில் கல்லூரியின் அறிவியல் ஆய்வகமொன்றின் முன்பிருந்த இடைநாழியில் ஓர் இளைஞனும், யுவதியும்.
அன்றைய செய்முறைத்தேர்வுக்காக தூண்களின் இடையில் இருந்த திட்டில் அமர்ந்து மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்த அவளிடம் அவன் ’’ப்ளீஸ் ரெகார்டு எழுதிக் கொடுடி’’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் அவள் எரிச்சலுடன் ’’ஆமா நீ ஊர் சுத்தப்போவே நான் உட்கார்ந்து 22 பக்கம் இப்போ எழுதிதரனுமாக்கும் போடா’’ என்றாள்.
அவன் பத்தெட்டுக்கள் பின்புறமாகவே நடந்துசென்று, மண்டியிட்டு கைகளை அகலமாக விரித்தபடி ‘’ வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச்சேரும்’’ என்று பாடியபடி முன்னே வந்து மீண்டும் மண்டியிட்டு கைகளை பக்கவாட்டில் எம் ஜி யார்போல வீசிக்காண்பித்தான். அவள் சிரித்தபடி ’’எருமை மாடு, எழுதித்தொலைக்கறேன்’’ என்றாள்