2005ல் ஒரு வயதான தருணையும் சரணையும் அழைத்துக்கொண்டு விஜியின் திருமணத்தின் பொருட்டு ஒரேயடியாக இந்தியா வந்த பின்னர் அவனை பள்ளியில் சேர்த்தோம். பள்ளி அவனுக்கு எட்டிக்காயாகவே இருந்தது. பள்ளியில் அவன் அலறும் குரல் எனக்கு அடுத்த தெருவை தாண்டும் வரை கேட்கும், நானும் கண்ணீருடன் வீடு வருவேன்.அவனுடன் சேர்ந்து புத்தகங்களுக்கு மணிக்கணக்காக அட்டை போடுவது பளளி பெற்றோர் ஆசிரிய கூட்டங்களுக்கு கல்லூரியில் அனுமதி வாங்கி அடித்து பிடித்து போவதுமாக சரணுடன் நெருக்கமாக இருந்த நாட்களவை
இந்த வேடசெந்தூர் வீட்டை கட்டிக் கொண்டிருக்கையில் கல்லூரி முடிந்து பேருந்தில் மாலை மூவருமாக பொள்ளாச்சியில் இருந்து வேடசெந்தூர் வந்துவிட்டு பின்னர் திரும்ப இரவு பொள்ளாச்சி வருவோம். பொள்ளாச்சி வீட்டில் இருக்கவே முடியாதபடி நெருக்கடிகள் அளித்தவர்களுக்கு நான் எப்போதும் நன்றி சொல்லுவேன் அத்தனை நெருக்கடிகள் இல்லாதிருந்தால் இந்த வீட்டை கட்டி இருக்கவே மாட்டேன்.
அப்படி ஒருநாள் வேடசெந்தூர் வந்துவிட்டு காரில் விஜியுடன் 14 கி மீ கடந்து பொள்ளாச்சி சென்று, வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திய பின்னர் அத்தனை தூரம் என்னருகில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த என்னருகில் நின்று கொண்டே பயணித்த சரண் காலடியில் இருந்த ஒரு பெரிய பாம்பொன்று சரேலென வெளியே சீறி பாய்ந்தது. அது விஷம் உள்ளதா இல்லையா என்றெல்லாம் பார்க்க சந்தர்ப்பமே வாய்க்க விலை.அது சரணை எதுவும் செய்யாமலிருந்தது தெய்வாதீனம்தான்.
விஜி.வண்டி ஓட்டுகையில் அதை பார்த்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கும் சாத்தியங்களும் இருந்தன
அதுபோலவே ஏதோ ஒரு பரீட்சைக்காக சென்னைக்கு அவனையும் அழைத்துக்கொண்டு போயிருக்கையில் அபயம் அத்தையின் வேளச்சேரி வீட்டில் முன்பக்கம் சரண் வெகுநேரம் விளையாடிக்கொண்டிருந்தான்.
எதற்கோ அவனை நானழைத்து, அவன் அங்கிருந்து விலகி என்னை நோக்கி நடக்க துவங்கிய மறு நொடி போர்டிக்கோவில் மேல்பக்கம் பதித்திருந்த கனத்த ஓடுகள் சில கீழே விழுந்து நொறுங்கின.
அங்கேதான் சரண் அத்தனை நேரம் நின்றிருந்தான்.எனக்கு திகைப்படங்கவே நெடு நேரமாயிற்று
அவனுடன் எதோ தெய்வனுக்ரஹம் இருக்கிறது என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். அவனுடன் மட்டுமல்ல ஆதரவற்றவர்களுடன் எப்போதும் அறியாத்தெய்வமொன்று எப்போதும் துணையிருக்கும், திக்கற்றவர்களுக்கு தெய்வமன்றி வேறு என்ன துணையிருக்கும்? எங்களுக்கு இருந்தது, இருக்கிறது. இருக்கும்.
சரண் சாந்தி பள்ளியில் படிக்கையில் 6 அல்லது 7ல் என்று நினைக்கிறேன். அவன் பள்ளியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது மாலை வரும்படி. என்னவாக இருக்கும் எதேனும் புகரா என்று யோசித்தபடியே சென்றேன்
முதல்வரின் அறையில் அமரவைத்து சரண் கலந்து கொண்ட ஒரு போட்டியில் தென்னிந்தியாவில் முதலிடம் பிடித்ததற்காக ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு தங்கப்பதக்கமும் கணிசமான ஒரு தொகைக்கு காசோலையும் வந்திருந்தது
அந்த போட்டித்தேர்வுக்கும் அதன் பின்னரான 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு வரைக்குமே அலட்டிக்கொள்ளாமல் வீட்டில் தயாராகாமல்தான் சென்றான் பின்னர் மற்றொரு தேசிய அளவிலான போட்டியில் அதே வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்று மாநில அளவில் சிறந்த மாணவன் என்னும் சான்றிதழ் சென்னை எஸ் ஆர் எம் கல்லுரியில் வைத்து ஒரு பெரிய விழாவில் ஒய் எஸ் ராஜன் அவர்களால் வழங்கப்பட்டது. தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் எப்போதும் இருக்கும் சின்மயா பள்ளியின் ஆகச்சிறந்த கௌரவ் விருதும் காசோலையும் 12 ம் வகுப்பில் சரணுக்கு வழங்கப்பட்டது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது வேல்ஸ் பல்கலைக்கழக சான்றிதழையும் தங்கப்பதக்கதையும் வைத்துக்கொண்டு சரண் நின்றிருக்கும் புகைப்படத்தை தினமலர் அலுவலகத்தில் கொடுக்க மகாலிங்கபுரம் வீதிகளில் நான் தன்னந்தனியே நடந்து சலித்து அலுவலகத்தை கண்டுபிடித்து அதை அடுத்த நாள் நாளிதழ்களில் வரவழைத்தது.
பின்னர் தருணும் அவனுமாக வாங்கிய தங்கப்பதக்கங்கள் எல்லாம் ஒரு வட்டப் பெட்டியில் கொட்டிக்கிடக்கின்றன. சாத்வீகியாக சாந்த ஸ்வரூபியாக இருந்த சரணை குறும்பனாக மாற்றிய பெருமை அவன் இளவல் தருணையே சேரும்.
தருணும் சரணுக்கு இணையாக படிப்பில் சுட்டி அவனை தினம் மாலை பள்ளியில் கண்டுபிடித்து காரிலேற்றுதே பெரும்பாடு.
சரணை குறித்த பதிவென்பதால் இதில் தருணை குறித்து அதிகம் எழுதவில்லை அண்ணன் மீது மாளாநேசம் கொண்டவன் தருண், அவன் பள்ளிக்கு செல்ல துவங்கியிருக்காத, சரண் கேஜி வகுப்புகளுக்கு சென்ற காலங்களில் தினம் அண்ணன் வரும் ஆட்டோவை மாடியிலிருந்து பார்த்ததும் குதித்து கும்மாளமிடுவான்.
மாலை வீட்டுக்கு வரும் அவனுக்கு ஷூ சாக்ஸ் கழட்டி பணிவிடை செய்வது தினம் தினம் தருந்தான்,சரணுக்கு உடல்நிலை சரியில்லாத நாட்களில் நான் மருத்துவமனை செல்ல ஆட்டோவுக்கு போன் பண்ணுகிறென் என்றால் உடனே குட்டி தருண் ஓடிபோய் சரணுக்கு இரண்டு செட் உடை, தண்ணீர்பாட்டில் ஆகியவற்றை ஒரு பையில் எடுத்து வைத்து மருத்துவமனைக்கு தயாராகிவிடுவான். லகஷ்மணன் கூட ராமனுக்கு இத்தனை அனுசரணையாக இருந்திருக்க மாட்டான்
சரணை பள்ளியில் ஒரு பையன் அடித்து விட்டான், சரண் தேமே என்று அடி வாங்கிக்கொண்டு வந்தான், ஆனால் மறுநாள் அண்ணனை அடித்தவனை தருண் அடித்து ஒரு புதருக்குள் தள்ளிவிட்டு அந்த விசாரணைக்கு நான் பள்ளிக்கு விடுப்பெடுத்து செல்ல வேண்டி வந்தது.
கார் வாங்கிய பிறகு மாலை வேளைகளில் நானே அவர்களை பள்ளியிலிருந்து அழைத்து வருவேன் கடைசி பீரியட் வகுப்பு முடிந்ததும் சாக்பீஸ் படிந்த கைவிரல்களும் கலைந்த தலையுமாக பள்ளிக்கு வரும் என்ன பார்த்து அங்கே முன்கூட்டியே வந்து அமர்ந்து குடும்ப கதை பேசிக்கொண்டும் டப்பர் வேர் வியாபாரம் செய்துகொண்டும் இருக்கும் மேல்தட்டு பெடிக்யூர் மெனிக்யூர் செய்த ஒப்பனை கலையாத அம்மாக்கள்’’ இதான் சரண் தருண் அம்மா’’ என்று என்னை காட்டி உயர்வாக பேசிக்கொள்ளுவர்கள்.
பெற்றோராசிரிய கூட்டங்களில் மூன்று பள்ளிகளிலும் இருவரைக்குறித்தும் ஒருபோதும் ஒரு புகாரும் சொன்னதில்லை.இருவரும் 12 ம் வகுப்பு வரைக்கும் எந்த ட்யூஷனுக்கும் சென்றதில்லை.
இருவரும் மிக சிறுவர்களாக இருக்கையில் தெருமுனையில் மூவருமாக நின்று போக்குவரத்தை மணிக்கணக்காக பார்த்துக்கொண்டிருப்போம். கார் ஒருத்தருக்கு, பஸ் ஒருத்தருக்கு, பைக் ஒருத்தருக்கு என்று எங்களுக்குள் பிரித்துக்கொண்டு யாருடைய வண்டி அதிகம் கடந்து செல்கிறதோ அவர்கள் வெற்றியாளர்கள் என்னும் விளையாட்டு விளையாடுவோம். அப்பா அம்மா சகோதர சகோதரிகள் அனைவராலும் கைவிடப்பட்டிருந்த புறக்கணிக்கப்பட்டிருந்த நிர்க்கதியான காலமது எனினும் எங்களின் அந்தரங்க வாழ்வை நாங்களே அன்பினால் நிறைத்து ததும்பிக்கொண்டோம்.
பள்ளி விடுமுறைகளும் கல்லூரி விடுமுறைகளும் வேறு வேறு சமயங்களில் இருக்குமென்பதல் மகன்களை பெரும்பாலும் வீட்டுக்குள் விட்டு கதவை பூட்டிவிட்டு செல்வேன் ஹால் முழுக்க செய்தித்தாள்களை பரப்பி அதில் உணவை எடுத்து வைத்திருப்பேன் மாலை திரும்ப வந்து மூவருமாக வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் பார்ப்போம்.
அப்போதிலிருந்து கல்லூரி பள்ளி விடுதிக்கு போகும் வரை சமையல், துணி துவைத்து காயப்போடுதல், பாத்திரம் தேய்த்தல், அம்மிக்கல்லில் அரைத்தல், தோட்ட செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் என்று எதுவாகினும் மூவரும் சேர்ந்தே செய்வோம், எங்களுக்குள் நல்ல புரிதலும் அதனாலேயே உண்டாகியிருந்தது.
அந்த நாட்கள் கனவு போல கலைந்து மறைந்து போய்விட்டது, அக்காலத்தை நான் இப்போதும் நினைத்து ஏங்குகிறேன். பள்ளிக்கு அவர்கள் வேனில் செல்ல துவங்கிய போது. அவர்களை அனுப்பி விட்டே நான் கல்லூரிக்கு புறப்படுவேன். பள்ளியின் மஞ்சள் நிற வேன் கண்ணுக்கு தெரியும் வரை தாத்தாரப்புச்சி மரத்தின் புடைத்த வேரில் அமர்ந்து வெண்முரசு கதை கேட்டபடி காத்திருப்பார்கள்.
கண்களில் வெண்முரசு கனவென மிதக்க சரண் வேனில் ஏறிச்செல்வான்
சின்மயா பள்ளியில் சரணுக்கு துவக்கக்தில் விருப்பமின்றி இருந்தது, அக்காலத்தில் ஏகத்துக்குமழுகை.பின்னர் சரியாகி சின்மயா இப்போது அவன் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டிருக்கிறது.
மாதா மாதம் அவர்களை காணச் செல்லும் ஞாயிறுகளில் அதி்காலை எழுந்து அவர்களுக்கு பிடித்ததை சமைத்து ஓட்டமாக ஓடி பள்ளிக்குச் செல்வேன். கோவை நகருக்கு சிலநாட்களில் செல்வதுண்டு, பலநாட்கள் பள்ளிக்கு வெளியே சாலையோரம் இருந்த கொடிக்கம்ப படிகளிலமர்ந்து வெண்முரசு கதையை நாள்முழுக்க கேட்டுவிட்டு உணவை காரில் சாப்பிட்டு விட்டு மாலை பள்ளியில் திரும்ப கொண்டு விட்டு விட்டு இருக்கிறேன் வெண்முரசு மகன்களுடன் கூடவே வளர்ந்துவந்தது.
பள்ளி முடித்து கல்லூரிசேர்க்கைக்கு அவனுக்கு பல கல்லூரிகளில் இடம் கிடைத்தது. வேலூர் வெய்யில் என்பதால் எனக்குஅவனை அங்கு அனுப்ப பிரியமில்லை. ஆரவல்லி மலைத்தொடரருகில் ஒரு பல்கலைக்கழகத்தில் உபகாரச்சம்பளத்துடன் அனுமதி கிடத்தது அந்த நேர்முகத்தில் சரணிடம்’’ நீ வாங்கிய விருதுகளில் எதை உயர்வாக சொல்லுவாய்’’ என்னும் கேள்விக்கு நான் எந்த வெற்றியை அடைந்தாலும் அது என் அம்மாவின் முகத்தில் உருவாக்கும் புன்னகைக்கு மேலான விருதை இன்னும் தான் பெறவில்லை என்று சொன்னான்.
பல இடங்களில் இடம் கிடைத்தும் அம்ரிதா ஒரு பெருங்காட்டைப்போல் இருந்ததால் அங்கேயே சரண் சேரட்டும் என விரும்பினேன் .
அம்ரிதா கல்லூரியில் விடுதியிலிருந்து வாரமொருமுறை சரண் வருகையில் நான் பேருந்தில் அவன் வரும் வரை தெருமுனையில் காத்திருப்பேன் அவன் வந்ததும் அவனது பையின் கைப்பிடியை இருவரும் ஆளுக்கொன்றாக பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து வீடுவருவொம் மீண்டும் ஞயிறு பேருந்துநிலையம் வரை அவனுடன் பேசிக்கொண்டு சென்று 3.30 மணி பேருந்தில் அனுப்பி வைப்பேன்
சரண் என்னைப் போலில்லை நான் எப்போதும் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பவள் ஆனால் சரண் தர்க்க ரீதியாகவே எல்லாவற்றையும் பார்ப்பவன். மிகுந்த ஏழை மனம் கொண்டவன் ஆனாலும் வரம்புகளுக்குட்பட்டே அவனது மனம் இயங்கும் இதை பல முறை கண்டிருக்கிறேன்.
அவன் படித்த அம்ரிதா பல்கலைக்கழகத்தில் அசைவம் வளாகத்தில் எங்குமே உண்ணப்படக் கூடாதென்னும் கடுமையான நெறி இருந்தது.ஆனாலும் சில மாணவர்கள் திருட்டுத்தனமாக அசைவ உணவுகளை கொண்டு வந்து விடுதியில் சாப்பிடுவதும் கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு பருவம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதும் நடந்தது. சொந்த வாகனங்களில் வருபவர்களை சோதைனையிடமாட்டார்கள் என்பதால் அப்படி வரும் நண்பர்களின் வாகனங்களில் அசைவ உணவுகளை விடுதிக்குள் கொண்டு செல்வதும் நடக்கும்.
நானும் சரணும் ஒரு ஞாயிறு மாலை விடுதிக்கு சரணை கொண்டு விட போயிருந்தபோது நுழைவு வாயிலிலேயே இருக்கும் ரயில்வே கிராஸ் அடைக்கப்பட்டிருந்தது,அப்போது சரணுக்கு பரிச்சயமில்லாத ஒருவன் வந்து சரணிடம் தன்னிடம் அசைவ உணவு இருப்பதாகவும் காரில் ஏறி விடுதி வரை வரட்டுமா என்றும் கேட்டான் சரண் உடனடியாக அதில் அவனுக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டான் அந்த சரண் வயதே இருக்கும் பையன் விலகி சென்று விட்டான். எனக்கு என்னவோ மனக்கஷ்டமாகி விட்டது ’’ஏண்டா அவன் எப்படியும் சாப்பிட போறான் நம்ம காரில் கொண்டு போய் இறக்கி விட்டா என்ன’’ என்றேன்.
’’நாம ஒரு அமைப்புக்குள் இருக்கோம்னா அதன் நெறிகளுக்கு கட்டுப்பட்டு உடன்பட்டுத்தான் அதுக்குள்ள இருக்கனும். அம்ரிதாவில் யாரும் அசைவம் சாப்பிட வேண்டாம்னு சொல்லலை அந்த கேம்பஸில் சாப்பிடாதீங்கன்னுதான் சொல்லறாங்க. ஞாயிற்றுக்கிழமையே அவன் வரனும்னு இல்லை அவன் நல்லா அசைவம் சாப்பிட்டுட்டு திங்கட்கிழமை காலையில் கூட 9 மணிக்கு முன்னாடி வந்துருக்கலாம், திருட்டுத்தனமா கொண்டு வந்து விடுதியில் சாப்பிடறதும் மத்தவங்களுக்கு இப்படி சாப்பிட கொடுக்கறதும் அமைப்பின் விதிகளுக்கு எதிரானது, இங்கு சொல்லப்படும் கடைபிடிக்கப்படும் விதிகளுக்கு மாறா ஒருத்தன் நடக்கும் போது அதில் நானும் பங்கெடுத்துக்கனும்னு அவசியம் இல்லை. நான் அப்படி ஒரு போதும் செய்யவும் மாட்டேன் மேலும் என் பேர் யாரு எது சொன்னாலும் கேட்டுக்கற லோகமாதேவியும் இல்லை சரண் ‘’ என்றான் அவன் சொன்னதின் நியாயங்கள் பிறகு எனக்கு புரிந்தது.
பள்ளியில் ஒரு பெரும் செல்வந்தரின் மகன் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் பள்ளியை விட்டு நீக்கப்பட்டபோதும் அவன் செல்வசெருக்கில் செய்த அந்த தவறை சரணால் மன்னிக்கவே முடியவில்லை. இப்படி பல விஷயங்கள் அவன் ஆளுமையை எனக்கு உணர்த்தி இருக்கின்றன.
சரண் வேர் கொண்டவன் தருண் சிறகு கொண்டவன். ஐரோப்பா செல்லும் முன்பு விமான நிலையத்தில் அவன் கண்ணிருடன் கண்ணாடி தடுப்பிற்கு அப்பால் நின்ற சித்திரம் கண்ணிலேயே இருக்கிறது.
இன்னும் சில வருடங்கள். பின்னர் அவன் நல்ல குடும்ப வாழ்வில் இருப்பதை பார்த்துவிடலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.
சரன் தருண் திருமணங்களின் போது விழாவிற்கு வரும் உறவினர்களின் பார்வையில் படும்படி மலர்களும் ரிப்பனும் அமைக்கப்பட்டிருக்கும் உயர்ரக காரும், இடுப்பிலும் கையிலும் ஒட்டியாணம் வங்கியுமாக பொன்னால் ஜொலிக்கும் மருமகளும் எனக்கும் சரணுக்கும் தருணுக்கும் வேண்டியதில்லை காரும் பணமும் வசதியும் எல்லாம் இருந்தும் தோல்வியுற்ற பல தாம்பத்தியங்களை மகன்களும் என்னுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை தாயின் பரிவுடன் அன்புசெலுத்தி பார்த்துக்கொள்ளும் அவர்களைப்போன்ற ஆண்மகனின் முழு அன்புக்கும் பாத்தியமான,அவர்களின் மனதுக்குகந்த எளிய குடும்பப் பெண் போதும்.
பல வருடங்களுக்கு முன்னர் சரணை மசானிக் மருத்துவர் பரிசோதித்து அவன் நல்ல இயற்கை சூழலில் ஓடியாடி விளையாடினால் போதும் என்று சொன்ன பின்னர் தான் இந்த வீட்டைகட்ட முனைத்தேன். இங்கு வந்ததிலிருந்து படிப்படியாக குணமாகி ஆரோக்கியமான இளைஞனாக இன்று வளர்ந்து 23 வயதை தொட்டிருக்கிறான். சரணையும் தருணையும் வளர்த்திய காலத்து கஷ்டப்பாடுகளனைத்துமே இப்போது கனவென மாறிவிட்டன.
சரண் 11ல் படிக்கையில் நான் பாண்டிச்சேரிக்கு ஒரு சிறுகதை பட்டறைக்கு செல்ல வேண்டி இருந்தது. அதன்பொருட்டு அவன் தலையிட்டு பேசத்துவங்கிய பின்னர் என் பொறுப்பை, என் வாழ்வை முழுக்க அவன் கைகளில் எடுத்துக்கொண்டான். அன்றிலிருந்தே என் சுதந்திரத்தை என்னால் உபயோகிக்க முடிந்தது.எல்லைகளை தாண்டாமல் அவற்றை உணர்ந்து அதற்குள் என்னால் இப்போது விரும்பும் உயரம் வரை பறக்க முடிந்திருப்பது சரண் மற்றும் தருணால் மட்டுமே.
நான் மகன்களுக்கு உயிர்கொடுத்தேன் என்றால் அவர்களும் என்னை எல்லாவற்றிலும் இருந்து விடுவித்து என்னையும் மீண்டும் புதிதாக பிறக்க செய்திருக்கிறார்கள் சரணும் தருணும் எனக்கு மகனும் அன்னையும் தந்தையும் நண்பனுமானவர்கள். இருவருக்கும் என் அன்பும் ஆசிகளும் எப்போதும்.