இந்த யுகத்தின் இளைஞர்களுக்கான புது வழங்கு சொற்களை வீட்டில் அறிமுகப்படுத்துவது பெரும்பாலும் அல்லது எப்போதும் தருண் தான். அரிதாக நானும் கல்லூரியில் கேட்பவற்றை சொல்லுவதுண்டு.
சரணோ சுவாமி அனுகூலனந்தாவின் சமீபத்திய போதனைகளை, அமெரிக்க நன்றி தெரிவிக்கும் நாளின் பின்புலத்தை, வெண்முரசின் பூரிசிரவஸ் இழந்த பெண்களை, உருமாறியதாக சொல்லப்படும் வைரஸின் உண்மைத் தன்மை போன்றவற்றை பேசும் வழக்கம் கொண்டவன்.அரிதாக குழந்தைகளின் காணொளிகளை அந்த குழந்தைகளை காட்டிலும் குழந்தைமையோடு பகிர்ந்துகொள்வதும் உண்டு.
ஆனால் தருண் மிக சிறியவனாக இருக்கையிலேயே புதுபுத்தன் திசை நோக்கியே தன் கவனத்தை குவித்திருப்பவன். எல் கே ஜி ‘ல் படிக்கையில் ஒரு நாள் மாலை பள்ளி விட்டு வந்து உதட்டின் இரு கோடிகளையும் விரல்களால் ஆன மட்டும் இழுத்து பிடித்துக் கொண்டு ’’போண்டா, டீ’’ என்று வேக வேகமாக சொன்னால் அது ;பொண்டாட்டி’ என்று ஒலிக்கும் விந்தையை செய்து காண்பித்தான். அவன் விரல்களை எடுத்துவிட்டு அத்தனை சிரமப்பட வேண்டியதில்லை உதடுகளை சாதாரணமாக வைத்துக்கொண்டே ’பொண்டாட்டி’ என்று’’சொல்லலாம் என்றேன். ‘’ஓ! அது அப்ப கெட்ட வார்த்தை இல்லையா’’ என்று சந்தேக நிவர்த்தி செய்து கொண்டான் நண்பர்கள் உபயமாயிருக்கும் அந்த நவீன யுக்தி எல்லாம்.
அவன் நண்பர்களும் அவன் போலவேதான் அடங்காதவர்களும் அசராதவர்களும். மாலை நேரம் பள்ளியில் இருவரையும் அழைக்க செல்கையில் தருணின் பைகளையும் அணைத்துக்கொண்டு மைதானத்தில் கலைந்த தலையுடன் களைத்துப்போய் சரண் வழக்கமான இடத்தில் காத்துக் கொண்டிருப்பான், சரண், நான், கார் ஓட்டுநர் செந்தில் இன்னும் சில மாணவ தன்னார்வலர்கள் இணைந்து எங்கு தருண் தனது நண்பர்களுடன் புழுதி பறக்க விளையாடிக்கொண்டிருகிறான் என்று தேடும் பணியை துவங்கி சுமார் அரைமணி நேரத்தில் கண்டுபிடித்து குண்டுக் கட்டாக தூக்கிக்கொண்டு வந்து காரில் ஏற்றுவோம்.
தருணின் நண்பன் ஒருவன் தேமே என்றிருக்கும் சரணை கைகளில் காம்பஸால் குத்தி காயப்படுத்தி இருந்தான் ’’இளமுருகு ஏண்டா சரணை குத்தினே’’? என்று மறுநாள் கேட்டதற்கு ’’நான் சும்மாதான் இருந்தேன் ஆண்ட்டி, காம்பஸ் அதுவே போய் சரண் அண்ணாவை குத்திருச்சு’’ என்றான்.
தருணும் நண்பர்களும் ஓடிப்பிடித்து விளையாடிய ஒரு நாளில் ஓங்கு தாங்கான தருணின் நண்பன் ஒருவன் வேகமாக ஓடிவந்து அங்கு நின்று கொண்டிருந்த, அப்போதுதான் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்திருந்த ஒரு ஒல்லிப் பெண்ணின் மீது விசையுடன் மோதியதில் கீழே விழுந்து அந்த பெண்ணின் கை எலும்பு முறிந்துவிட்டது. குணமான பின் அவள் செய்த முதல் வேலை அந்த பள்ளி வேலையை ராஜி வைத்ததுதான்.
ஆனால் பெற்றோர் ஆசிரியக் கூட்டங்களின் போது தருணைக்குறித்த பராட்டுப்பத்திரங்கள் அவனது ஆசிரியர்களால் வாசிக்கப்படும் விந்தையை இன்று வரை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
8 ஆம் வகுப்பில் தருணுக்கு நடனம் சொல்லி கொடுத்த ஆசிரியர் பள்ளியை விட்டு சொல்லிக்கொள்ளாமல் போனது, கிரிக்கெட் மற்றும் ஹாக்கி மட்டை களை அதிகம் பிறரின் மண்டைகளை உடைப்பதற்கும், எப்போதாவது விளையாடுவதற்கும் பயன்படுத்துவது, இப்போது டேராடூன் கல்லூரி விடுதி வார்டனை கண்ணில் குருதி வருமளவுக்கு படுத்தி எடுப்பதுமாக தருணின் விளையாட்டுக்களின் பட்டியல் விரிவானது
புன்னை மரத்தடியில் வளர்ந்திருந்த பெரிய குடைக்காளானொன்றை எனக்கு தெரியாமல் பள்ளிக்கு எடுத்துச்சென்று அவனிடம் தனித்த பிரியத்துடன் இருக்கும் ஆசிரியை ஒருவருக்கு கொடுத்திருக்கிறான். அந்த ஆசிரியை பின்னர் ஒரு வருடம் வரை பள்ளிக்கு வராமலிருந்து, நான் காவலதிகாரிகள் கதவைத்தட்டும் கனவுகள் கண்டு அலறிக்கொண்டு எழுந்த இரவுகள் அனேகம்.
செண்டு மல்லிச்செடிகளில் இருக்கும், தீப்பட்டது போல் கடிக்கும் செவ்வெறும்புகளை சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல்வதை குறித்து விசாரித்த ஆசிரியரிடம் அப்போதுதான் அவன் Ant man ஆகமுடியும் என்று சொன்னது என சொல்லிக்கொண்டே போகலாம்.
சமீபத்தில் வீட்டில் உருட்டு என்னும் சொல்லை அதிகமாக புழங்கினான் பேசுகையிலும், வாட்ஸப் செய்திகளிலும் அடிக்கடி இடம்பெற்ற அந்த சொல் ’’பொய் சொல்லுதல், உண்மைக்கு புறம்பாக பேசுதல், ஏமாற்றுதல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல். வார்த்தை தவறுதல், இல்லாததை இருப்பதென்று சொல்லுதல்’’ என்று விரிந்த பொருள் கொண்டிருப்பதை காலப்போக்கில் அறிந்துகொண்டேன் . வாட்ஸப் தகவல்களில் உருட்டு என்று சொல்லுவதற்கு பதில் ஒரு எலுமிச்சம் பழத்தை தரையில் தேய்த்து உருட்டும் துண்டுக்காணொளியை பயன்படுத்தவும் துவங்கினான்.
சமயங்களில் சாம்பவிக்கும் அவனுக்கும் சண்டை துவங்க இந்த எலுமிச்சை உருட்டே காரணமாகிவிடும். அவள் எதோ ஒன்றை முக்கியமாக சொல்லப் போக இவன் எலுமிச்சையை உருட்டி அனுப்பி உடன் சண்டை தொடங்கி, மள மளவென்று வளரும்.
இந்த உருட்டு, தருண் மட்டும் உபயோகப்படுத்துவதல்ல, இது வெளி உலகிலும் புழங்கும் வார்த்தைதான் என்பதும் தெரியவந்தது. எழுத்தாள நண்பர் சுரேஷ் பிரதீப் அவரது வாட்ஸப் நிலைத்தகவலில் ஒரு முறை ’’இந்த நூற்றாண்டின் மாபெரும் உருட்டு மகாத்மா காந்தி என்று குறிப்பிட்டிருந்தார்’’.
இப்படி உருட்டு உருண்டு கொண்டிருக்கையில் இன்னும் சமீபகாலத்தில் பூமர் என்ற சொல்லும் அவனால் புழங்கப்பட்டு வீட்டின் வழங்கு சொற்களிலொன்றாகி விட்டிருந்தது அது சமயங்களில் என்னையும் குறிக்க பயன்பட்ட போதுதான் நான் இதுகுறித்து விசாரிக்கத் தலைப்பட்டேன். இந்த காலத்திற்கு பொருந்தாத பலதையும் சொல்லும் பெரிசுகளை குறிக்கும் சொல் அது என்று தெரிந்து, நான் சினந்துகொண்ட பின்னர் என்னை அந்த சொல்லால் குறிப்பிடுவதை குறைத்துக்கொண்டான்.(நிறுத்திக்கொள்ளவில்லை) அதிகம் அந்த சொல்லால் குறிக்கப்பட்டவராக பக்கத்து வீட்டிலேயே வசிக்கும் என் அப்பா இருக்கிறார் என்பதையும் கவனிக்க முடிந்தது.
இந்த சொற்கள் எல்லாம் எங்கு தோன்றி வளர்ந்து எப்படி இவர்களிடையே புழங்கி பிரபலமாகி நிலைபெற்று விடுகிறது என்பதுதான் அதிசயம் .
என் கல்லூரி பேராசிரியர்களுக்கான வாட்ஸ்அப் குழுமத்தில் தகவல்கள் பகிரும் பலர் அவனால் பூமர் என்றே அடையாளப்படுத்த படுகிறார்கள்.
அவன் போனில் அடிக்கடி ’’டேய் உருட்டாதடா, போதும் உருட்டினது, இந்த உருட்டெல்லாம் என்கிட்டே வேண்டாம், அந்தாள் ஒரு பூமர்டா, அய்யோ அந்த பூமர் வகுப்பா இப்போ’’ என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.
அவனை கானுலாக்களுக்கு உடனழைத்து செல்வதாக கூறிவிட்டு கடைசி நிமிடத்தில் பயணத்தை ரத்து செய்யும் ஒரு நண்பனை போனில் ’உருட்டு’ என்றே பெயர் பதிவு செய்திருக்கிறான்.
உறவினர் வருகையொன்றின் போது அவர்களிடம் வழக்கம்போல் சாதியை குறித்து அப்பா பேசிக்கொண்டிருக்கையில் தருண் உரக்கவே ’’பூமர்’’ என்று சொன்னதை அப்பா கேட்டும் அது என்னவென்று அவரால் உய்த்துணர முடியாத்தால் விஷயம் அத்தோடு போனது.
சிலநாட்களுக்கு முன்னர் ஒரு திருமண வரவேற்பிற்கு போயிருந்தோம். விருப்பத் திருமணம். மாப்பிள்ளைக்கு நாங்கள் நெருங்கிய உறவு. மணப்பெண் உற்சாக மிகுதியில் இருந்தாளோ என்னவோ, உடலில் ஒரு துள்ளலுடன் அவ்வப்போது லேசாக எம்பி எம்பி குதித்தபடி சிரித்துக்கொண்டே இருந்தாள். அது எனக்கு புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.
வரிசையில் நின்று பரிசுகள் கொடுத்து புகைப்படம் எடுத்துகொள்ளுவதில் அப்படி நகைச்சுவையாக ஏதும் இல்லை. பெண்ணின் உடையில் மேடையின் அலங்கார இரவு விளக்குகளின் ஒளியை பிரதிபலிக்கும் பெரிய கற்கள் ஏராளம் பதிக்கப்பட்டு அவளே ஒரு அருமணி போல் ஜொலித்துகொண்டிருந்தாள்.
ஒரு நீண்ட பாவாடையும் , நீளக் கை வைத்த ரவிக்கையும், பட்டை பட்டையாக உடைக்கு பொருத்தமான நிறங்களில் ஆபரணங்களும், ஆர்கிட் மாலைகளுமாக அழகான ஒப்பனை. மாராப்பு அல்லது மேல் புடவை போன்ற எதுவும் இல்லை வட இந்திய சோளி போன்ற உடை.
என் திருமணத்தின் போது மாலைகளின் சுமையினால் லேசாக ஒதுங்கி இருந்த புடவையை நான் கவனித்திருக்கவில்லை. மேடைக்கு கீழிருந்து கவனித்து, பாய்ந்து மேடையேறி அங்கு ஓடிக்கொண்டிருந்த வயர்களில் தடுக்கி விழுந்து முட்டி பெயர்ந்தபின்னரும், நொண்டியபடி வந்து என் புடவை தலைப்பை சரி செய்த லீலாவதி அத்தையின் பேரனுக்குத்தான் அன்று வரவேற்பு நடந்துகொண்டிருந்தது. அத்தை கீழே ஒரு நாற்காலியில் அமர்ந்து நிகழ்வை பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
பஃபே இரவுணவு அல்லது உண்டாட்டு. ஆப்பச்சட்டிகளின் முன்னே எச்சில் தட்டுடன் காத்துக்கொண்டிருந்தவர்களில், என் திருமணத்தில் அப்பா வந்து முறையாக பந்தி விசாரிக்கவில்லை என்பதால் கோபித்துக்கொண்டு, உடன் மதுவும் அருந்திவிட்டு ஏகத்துக்கும் சலம்பிக்கொண்டிருந்த மாரிமுத்து மாமாவும் இருந்தார்.
நிகழ்வில் உறவினர்களில் பலர் தருணின் நீண்ட கேசத்தை குறித்து கேள்வி எழுப்பி அறிவுரைகளும், அறவுரைகளும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவன் மானசீகமாக ’பூமர், பூமர்’ என்று சொல்வது எனக்கு தெளிவாக கேட்டது.
நிகழ்வு முடிந்து வீடு திரும்புகையில் ’’எதுக்குடா அந்த பொண்ணு கெக்க பிக்கேன்னு சிரிச்சுகிட்டே இருக்கா? மேடையில் கொஞ்சம் மரியாதையாக இருக்கலாம் இல்ல ’’ என்றேன். ’பூமர், பூமர் பேசாம இருக்கியா’’ என்றான் தருண்.
கேட்டுக்கேட்டு எனக்கும் அந்த வார்த்தைகள் மனசிலாகி விட்டிருக்கின்றன.
பேராசிரியர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத நிர்வாகத்தை கண்டித்து கடந்த வாரம் நடத்தப்பட்ட வேலை நிறுத்தம் செய்தோம். சமாதானமாக போகச்சொல்லி, நிர்வாகத்தின் தரப்பை எங்களுக்கு ஒருவர் விளக்கி சொல்லிக்கொண்டிருக்கயில் ’’உருட்டு உருட்டு’’ என்று சத்தம் கேட்டது. திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன், வேறு யாரும் இல்லை என் மனக் குரல்தான்
இன்று வரை செயல்படுத்தப்பட்டிருக்காத என் இரண்டு பதவி உயர்வுகள், அவற்றிற்கான ஊதிய உயர்வுகள் இந்த மாதமாவது வருமா என அலுவலகத்தில் கேட்டால் போன ஜனவரியில் சொன்னது போலவே’’ நிச்சயம் 2 வாரத்தில் வந்துவிடும்’’ என்றார்கள், என்ன ஒரு உருட்டு?
இன்று காலையில் அவனைப்போலவே கானுயிர் புகைப்படங்களில் ஆர்வம் கொண்டிருக்கும் அவன் தோழியிடம் இருந்து டாப் ஸ்லிப் போகலாம் என்று அழைப்பு வந்தது. தருண் புறப்பட்டு காத்திருந்தான். காரில் வந்த அவளுடன் கிளம்பி டாப்ஸ்லிப் யானைகளை ஆவணப்படுத்த சென்றுவிட்டான். இவற்றை கவனித்துக்கொண்டிருந்த அப்பா மெல்ல என்னிடம் வந்து ‘ இந்த வயசுல இப்படி அனுப்பறதெல்லாம் சரியில்லை நான் சொல்றதை சொல்லிட்டேன் ‘ பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில் வைக்கலாமா? என்றார்’’ நான் மனதுக்குள் ‘பூமர்’ என்றேன்.