லோகமாதேவியின் பதிவுகள்

Category: அனுபவம் (Page 5 of 7)

Bro’Taa

நேற்று கோவை சென்றிருந்தேன். சரணையும் தருணையும்  கல்லூரியிலிருந்தும் பள்ளியிலிருந்தும்அழைத்துக்கொண்டு வழக்கமான கோவை சுற்றல்கள். மாலையில் மென்தூரலாய் மழை இருக்கையில்  மகன்களை அவரவர் விடுதிகளில் சேர்ப்பித்துவிட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன். மதிய உணவை மாதவன் இளங்கோ மற்றும் அவரது நண்பர்கள் துவங்கியுள்ள ப்ரோ’டா-Bro’Taa என்னும் புதிய உணவகத்தில் சாப்பிட்ட அனுபவங்களை நாளைக்கு எழுதலாம் என்று ஒத்திப்போடமுடியாமல் இப்போதே எழுதிவிட்டு உறங்கச்செல்கிறேன். அத்தனைக்கு சிறப்பானதொரு அனுபவமாக இருந்தது.

வழக்கமாக  தருணின் ‘day out’ நாட்களின் போது திரைப்படங்களுக்கு செல்லுவோம் இன்று அதைத்தவிர்த்து மாதவன் மாமாவின் உணவகத்துக்கே போகலாமென்று ஏகமனதாக முடிவெடுத்தோம். எற்கனவே இதுகுறித்து மகன்களிடம் அலைபேசுகையில் சொல்லியுமிருந்தேன். காந்திபுரத்திலிருந்து கணபதி செல்லும்போது உணவகத்தை அலைபேசியில் சரண் அழைத்து சரியான அமைவிடம் கேட்டுக்கொண்டான். பொறுமையாக சரியாக அன்னபூர்ணாவின் அருகில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் மேற்புறம் என்று பதிலளித்தார்கள்.

சரணுக்கு உடனே கவலை தொற்றிக்கொண்டது அன்னபூர்ணா பெரிய போட்டியாளர்களாச்சே, இத்தனை அருகிலேயே இருக்காங்களே என்று. பின்னர் அவனே சமாதானமாக அசைவமும் இருக்கில்லையா அப்போ போட்டின்னு சொல்லிறமுடியாது என்றான்

வழியை அத்தனை விசாரித்தும், உணவகத்தை கடந்து சற்று தூரம் சென்றுவிட்டு பின்னர் மீள கூகிளாண்டவரின் உதவியால் வந்துசேர்ந்து. பக்கவாட்டில் இருந்த படிகளின் வழியே மேலேறிச்சென்றோம். படிகளின் பக்கச்சுவற்றில்  புதிகாக அடர் ஆரஞ்சு வர்ணமடித்திருந்ததால் வாசனையாக இருந்தது. வர்ணம் பொருத்தமாகவும் இருந்தது. எனக்கு எப்போதும் ஆரஞ்சுநிறம் சமையலை, உணவை நினைவூட்டும். தீப்பிழம்பின் நிறமாதலாலோ என்னவோ.

முகப்பிலேயே நீளவாக்கிலான, சிறிய ஆனால் கச்சிதமான ஒரு வரவேற்பறை. நேர்த்தியாக நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தன.  அறிவிப்புப்பலகையின்றில் ’’வரவேற்கிறோம் புரோ’டாவிற்கு’’ என்றெழுதியிருந்தது.

உள் நுழைந்ததும் நல்ல pleasant feel  வரும்படியான அமைப்பிருந்தது. நாற்காலிகளும் மேசைகளும் அடர் காப்பிக்கொட்டை நிறத்தில் , மேசையின் கால்கள் வித்தியாசமான வளைவுவடிவத்தில்.  நடமாடும்/புழங்கும் இடம் தாராளமாக செளகரியமாக விடப்பட்டு மிகச்சரியாக இருந்தது எல்லாம். சுவரோரமாக அமர்ந்தோம். அங்கே பணியில் பொள்ளாச்சி ஸ்லேவ்ஸில்  எனக்கு அறிமுகமாயிருந்த ஹரீஷ் என்னும் இளைஞனிருந்தான், அவனை இளைஞன் என்று சொல்வதே பிழை என்னும்படிக்கு சிலவருடங்களாகவே பார்த்துக்கொண்டிருந்தும் சற்றும் மாறாமல் சிறுவனின் தோற்றமுடையவனாகவே இருக்கிறான். தோழிகளுடன் எப்போது ஸ்லேவ்ஸ் சென்றாலும் அவனை அவதானித்திருக்கிறேன். சுறுசுறுப்பும் ஆர்வமும் துடிப்பும் உள்ளவன்.  பிரகாசமான கண்களுடன் பணிவு நிரம்பிய உடல்மொழியுடன், தோழமையுடன், புன்னைகையுடன் இருக்கும ஹரீஷ் போன்றவர்கள் எந்த நிறுவனத்திலும் பெரும் சொத்தென நான் நினைத்துக்கொள்ளுவேன்

சுவரோரம் இருக்கும் ஒரு மேசையை தேர்ந்தெடுத்து அமர்ந்து தண்ணீர் குடித்தோம். அழகிய பித்தளைக் கைப்பிடியுடனான ஜாடியில் தண்ணீர். அதை ஜாடி என்று சொன்னதும் jug அல்ல அது pitcher என்று சின்னவன் திருத்தினான். ஆம் பின்னரே கவனித்தேன் சரிதான்.

 வரெவேற்பு குளிர்பானம் அளிக்கப்பட்டது. நன்னாரி வாசனையுடன், குளிர்ச்சி நேரடியாக மூளையை கூசவைக்கும்படி இல்லாமல் மிதமாக வெய்யிலில் அலைந்துவந்தவர்களுக்கு குடிக்க ஏதுவாக இருந்தது. மெனு அட்டையை கைகளில் கொடுத்தபின்னர் பணியாளார்கள். விருப்பமிருந்தால் கன்வேயரில் வரும் துவக்க உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளலாமென்று தெரிவித்தார்கள். அந்த ’தெரிவித்தலை’ மிகச்சரியாக செய்தார்கள். கன்வேயரின் உணவுகளை எடுத்துக்கொள்ளும்படி வற்புறுத்தவில்லை. கூடுதலாக  விளக்கம் சொல்லி அழுத்தமும் தரவில்லை. ஆர்வமூட்டும்படி மிகைப்படுத்தவுமில்லை. ஒரு புதிய விஷயம் இருக்கின்றது, தேவையெனில் விரும்பினால் செய்யலாம் என்னும் தொனியில் அழகாக சொன்னார்கள்.

உடன் கன்வெயரின் அருகிலிருக்கும் மேசைக்கு மாறினோம். பின்னர் உணவுகளின் வகைகள், அவை வைக்கபட்டிருக்கும் தட்டுக்களின் நிறங்களைப் பொருத்து சைவம் அசைவம் என அவை வேறுபடுவது இவறையெல்லாம் விளக்கி, அவறிறின் விலை விபரங்கள் பிரசுரமாயிருக்கும் பக்கத்தை மெனுஅட்டையில் சுட்டிக்காட்டிவிட்டு சென்றனர். ஆர்வமாக வேண்டியதை எடுத்துக்கொண்டோம்

உண்மையிலேயே அனைத்தும் சுவையாக, சிறப்பாக  இருந்தன. பிரதான உணவுகளைக்காட்டிலும் துவக்க உணவுகளையே தொடுகறிகளாகவும் எண்ணியபடி அதிகம் எடுத்துக்கொண்டிருந்தோம். விலையும் worth paying எனும் உணர்வையே அளித்தது.

வழக்கமாக ஒரு முறை ஆர்டர் செய்து வாங்கும் ஒரு உணவை பிடித்திருந்தாலும் இல்லையெனினும் பெரிய கிண்ணங்களில் அளிக்கப்படுவதை   அனைவரும் பகிர்ந்துகொண்டே இத்தனை வருடங்களாக சாப்பிட்டிருக்கிறோம். இங்கு கன்வேயரில் வந்ததைப்போல போதுமான ‘proper size of a single serve’’ என்று சொல்லும்படி சிறிய தட்டுக்களில் பல வகைகளை  அளவாக ருசிக்கும்போது வயிற்றுடன் மனதுக்கும் நிறைவளிக்குமொன்றாகவே இருந்தது. வரிசையாக எங்களைக்கடக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்ட அனுபவம் மிகவும் விரும்பத்தக்கதாகவும் இருந்தது.

மிகப்பிடித்தவற்றை மீண்டும் கேட்டு வாங்கினோம்.   வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தட்டுக்களின் வண்ணங்களையும் எண்ணிக்கைகளையும் கொண்டு செலுத்தவேண்டிய தொகையை கணக்கிடுவார்கள் என்பதை புரிந்துகொண்டோம். மகன்கள் கேட்ட வீச்சு மற்றும் நாணய பரோட்டாக்களும் எனக்கான தயிர்சாதமும், பிற மெனுஅட்டையிலிருந்த கேட்டுக்கொண்ட அனைத்துமே வந்தன.  எதையுமே இல்லையென்று சொல்லவில்லை. அனைவரும் மகிழ்ந்து உணவுண்டோம். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்

பணியாளர்கள் மரியதையான தூரத்தில், ஆனால் அழைத்தால் உடன் வரும் இடத்தில் நின்றபடி காத்திருந்து உதவினார்கள். அசைவம், முட்டை இரண்டுமே சாப்பிடாத மகனுக்கு 2 நிமிடங்களில் பீன்ஸ் வெட்டிப்போட்ட ஒரு குழம்பு கொண்டு வந்து தந்தார்கள்,

 ஒன்றே ஒன்று மட்டும் வருத்தமளித்தது. இனிப்பு  உண்பதில்லை என்று கட்டுப்பாட்டுடன் கொஞ்சநாளாக இருந்தேன்.  கையருகில்  மெல்ல நீந்துவது போல வந்துகொண்டிருந்த கிண்ணங்களில்  வைக்கப்பட்டிருந்த கவர்ச்சியான கஸ்டர்டை எல்லாக்கட்டுப்பாடுகளையும் நிமிஷமாய் மறந்து எடுத்துக்கொண்டேன்.  இனிப்புக்களை ஆர்டர் செய்து சாப்பிடாமல் இருப்பதும், வேண்டுமா என கேட்கையில் மறுப்பதும் மிக எளிது. இப்படி மெதுவாக அழகாக கையருகில் கைக்குழந்தை நீந்துவது போல சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்குமொன்றை எப்படித்தான் வேண்டாமென்று சொல்வது?

எனவே இப்போதுதான் மறையத்துவங்கியிருந்த அந்த குண்டம்மா மீண்டும் கண்ணாடியில் தெரிந்தால் அந்தப்பாவம் மாதவன் இளங்கோவையே சேரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

 .

சென்னைப்பெருநகர்-வாழ்தலும் பிழைத்தலும்!

ஒரு உடல் நலக்குறைவின் பொருட்டு, மூளையை முற்றிலும் மழுங்கடிக்கும் வீரியமுள்ள மருந்துகள் எடுத்துக்கொள்வதால், வகுப்புக்களுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாமென்று, ஒரு நீண்ட மருத்துவ விடுப்பில் சென்னை, செம்பரம்பாக்கம் சென்றேன். சரண்அப்பா துவங்கவிருக்கும் புதிய கிளையின் கட்டுமானப்பணிகள் அங்கு நடப்பதால்  அவரிருக்கும் ஒரு அடுக்ககத்தில் தங்கி இருந்தேன்.

 இப்படியான பெருநகரங்களில் இத்தனை நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இதுவே முதன் முறை. (கடைசியும் கூட!) திருமணமாகி. அபுதாபியில் பல வருடங்கள் இருந்தபோதும் அது அத்தனை உவப்பான வாழ்விடமாக எனக்கு தெரியவில்லைதான் எனினும் அன்னைமையிலும் மகன்களை வளர்த்துவதிலும் எப்படியோ அவ்வருடங்களை நான் கடந்துவிட்டிருந்தேன்.

ஆனால் இப்போது தனியே மகன்களின்றி, இங்கு இத்தனை நாள் இருந்தது பெரிய திகில் அனுபவமாகி விட்டது. புதிதாக கட்டப்பட்டிருக்கும்  20 தளங்களுடனான அடுக்ககம். பச்சையே எங்கும் இல்லை.  மரக்கன்றுகளை கொண்டு வந்து  இப்போதுதான் இறக்கிக்கொண்டிருக்கிறார்கள்

இவரை அனுப்பி காலை 8 மணிக்கு கதவைச் சாத்தினால் இரவு 8 மணி வரை கொடுந்தனிமை. காலி பங்களாவில் பேய் நடமாடுவதைப்போல அறையறையாக நடந்துகொண்டிருந்தேன். இரண்டுமூன்று நாட்கள் கழித்துத்தான், நானே  என்னுடன்  பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை கண்டுபிடித்தேன்.

புறப்படுகையில் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் சில, பால்கனி இருக்கும், எட்டாவது மாடியிலிருந்து வாசிக்க உகந்தவையல்ல என்று சில பக்கங்களிலேயே தெரிந்தது. சுகந்தி சுப்ரமணியனின் பதிவுகளை  வாசித்தேன் அவரின்  எளிய கவிதைகளையும், நாட்குறிப்புக்களையும் சுகந்தி யாரென்று அறியாமல் வாசிப்பவர்களுக்கு பொருளற்றவையாக கூட தோன்றியிருக்கும்,  ஆனால் உங்கள் தளத்தின் வாயிலாக நான் சுகந்தியை அறிந்துகொண்டவளென்பதால் அவரது பதிவுகள்  என்னை பெரிதும் தொந்தரவு செய்தன

 வாசல் தெளிக்க கோலம்போட என்று எந்த வேலையும் இல்லை பெரிதாக. புறநகர் குடியிருப்பென்பதால் சென்னையின் விரைவும் பரபரப்பும் கூட இங்கில்லை.

எல்லாவற்றையும் விட அங்கு மனிதர்களை அதிகம் பார்க்கவோ பேசவோ முடியவில்லை கதவை திறந்தால்  இன்னும் இரண்டு வீடுகளின் கதவுகள், எப்போதாவது கீழே போனாலும், மின்தூக்கியில்  துக்கவீட்டைபோல இறுகின முகத்துடன் இருக்கும் யாரும் யாரையும் பார்த்து பேசுவதோ, புன்னைகைப்பதோ கூட இல்லை

chennai.jpg

 அங்கேயே இருக்கும் சிறிய  பூங்காவில், சைக்கிள் ஓட்டிக்கொண்டு துரத்தி ஓடி  விளையாடும் குழந்தைகள். (கூண்டுப்பறவைகளின் காதலில் பிறந்த  குஞ்சுப்பறவைகளுக்கு எப்படி, எதற்கு,  சிறகுன்னு வண்ணதாசன் ஒரு கவிதையில் கேட்டிருப்பார். அதை நினச்சுக்கிட்டேன்) ஒரு  குட்டி  விநாயகர் கோவில், உள்ளேயே வந்து குழந்தைகளை ஏற்றி இறக்கும் பள்ளி வாகனங்கள், செல்போனில் மூழ்கி இருக்கும்  இளைஞர்கள். இங்கிருப்பவர்களுக்கு வெளி உலகமென்பது ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லும் மால்களும் சினிமாவும் உணவகங்களும் மட்டும்தான் போல. பகலிலும் இரவிலுமாய் நாற்பது காவலாட்கள் உள்ளிருக்கும் எதையோ தீவிரமாக  காவற்காக்கின்றனர். பெரிய நூலகம், ஏராளமாய் ஆங்கிலப்புத்தகங்களும், தமிழில் ஒரே ஒரு வைரமுத்துவின் புத்தகமும்.

வாரமொருமுறை கறிகாய்கள் விற்கும் ஒரு அம்மாவுக்காக. பெண்கள்  கூட்டமாக காத்திருக்கிறார்கள் நான்கு முழம் மல்லிகைச்சரத்தை கொண்டு வந்து நறுக்கி, ஒரு இணுக்கு 20 ரூபாய் என்று அந்தம்மா விற்கிறார். வாங்கி அங்கேயே தலையில் வைத்துக்கொள்கிறார்கள். ”போன வாரமே  மாங்காய் கொண்டு வரேன்னு சொன்னீங்களே என்னாச்சு” என்று வயிறு மேடிட்டிருந்த இளம் பெண்ணொருத்தி கேட்டுக்கொண்டிருந்தாள்

சென்னையில் இருக்கும் உறவினர்களுடன் ஒரு சினிமா போனோம். 6 பேர் இருக்கும் ஒரு குடும்பம் சென்னையில் சினிமா  பார்க்க    ஆகும் செலவில் இங்கு ஒரு குடும்பம் தாராளமாக  ஒரு மாதத்தை மகிழ்ச்சியாக கழித்துவிடலாம் அத்தனை செலவுள்ள விஷயம் அது.

அதுவும் இடைவேளையில் விற்கும் சோளப்பொறியின் விலையை கேட்டு கிராமத்து மனுஷியான எனக்கு  கண்ணைக்கட்டியது.  முன்னைப்போல முகமூடியுடனோ, ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு உடம்பெல்லாம் எண்ணையும் கரியுமாக பூசி, இருட்டில் பயந்தும் ஒளிந்துமோ கொள்ளையடிக்க வேண்டியதில்லை, உன்னத சீருடையணிந்து, குளிரூட்டப்பட்ட சென்னை மால்களில்  சோளப்பொறி விற்றால் போதும் போலிருக்கிறது

ஆட்டோவிலும் இருசக்கரவாகனத்திலும் குடங்களுடன் சனம் அலைகின்றது தண்ணீருக்காக.  வயதுக்கு மீறி கொழுந்த குழந்தைகள், எங்கெங்கும் துரித உணவுகள், ஒரு மழைக்கே நாறிப்போகும் தெருக்கள் என்று சென்னைப்பெருநகரின் முகத்தைப்பார்த்து மிரண்டு போனேன்.

உடல் ஓய்வெடுத்தாலும் உள்ளம் இது எனக்கான இடமல்ல என்று அலறிக்கொண்டெ இருந்தது. என்னால் அமைதியாக  ஒரு மணி நேரம் கூட அங்கே இருக்கமுடியவில்லை.  பால்கனியை திறந்தால் பரந்து விரிந்து, முற்றிலும் வறண்டிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் மனச்சோர்வையளித்தது..

தீயின் எடையும் தாங்க முடியவில்லை. குருதிபெருக்கெடுத்து ஓடியது குருஷேத்திரக்களத்தில், துரியோதனனின் பாவை தன்னந்தனியெ களத்தில் நின்றிருந்த அன்றும், பீமனை குரங்குகள் புறக்கணித்தபோதும் கடுமையான உளச்சோர்வுக்கு உள்ளானேன்.  பாதிஇரவுகளில் அலறிக்கொண்டு விழித்தெழத்துவங்கினேன் ஒரே வாரத்தில்

நல்லவேளையாக சென்னை  நண்பர் ஒருவர் பரிசளித்த புத்தகங்களை வாசித்தபின்னரே என்னுடன் தமிழ்நதியும் ,யூமா வாசுகியும், கசீ சிவகுமாரும் சில நாட்கள் உடனிருந்தனர்

 நரம்புக்கோளாறு, இன்னும் இங்கிருந்தால் மூளைக்கோளாறாக மாறிவிடும் சாத்தியங்கள் தென்பட்டதால், விடுப்பு முடியும் முன்னரே ரயிலைப்பிடித்து, ஊர் வந்து சேர்ந்தேன். வெளிக்கதவை திறந்ததும் திடுக்கிட்டு தென்னையில் தாவி ஏறிய அணிற்பிள்ளைகளையும், புன்னம்பூக்களும் பவளமல்லியுமாய் நிறைந்துகிடந்த ஈர வாசலையும் குலைதள்ளி இருந்த வாழைகளையும் பார்த்தபின்பே பழைய மனுஷியானேன

இந்த இரண்டு வாரத்தங்கலில் எதையாவது மீள நினைத்துக்கொள்வேன் என்றால் அங்கிருந்த துல்லிய நீலவானை பிரதிபலித்துக்கொண்டு, ஒளியலைகளுடனிருந்த மாபெரும் நீச்சல்குளத்தையும், மெட்ரோவில் பயணிக்கையில் என்னை நோக்கி சிரித்தபடி கையை நீட்டிய ஒரு குழந்தையையும் தான்.

பிழைப்புக்காக சென்னை போவது, என்பதை நெடுங்காலம் முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன். சரிதான், சென்னையில் வாழ்தலே இல்லை வெறும் பிழைத்தல் தான்.

ISKON

கோவை iskon கோவிலுக்கும் சமீபத்தில் சென்றிருந்தேன். ஆச்சர்யமாக கிருஷ்ணர் தங்கை சுபத்ரையுடனும் அண்ணா பலராமருடனும் அங்கிருந்தார். ஒரு பூரி அளவிற்கு உப்பி இருக்கும் கண்களும் மிக அகலமாக காது வரை விரிந்திருக்கும் புன்னகையுமாக பொம்மைகளைப்போல  கடவுளர்களை முதன்முறையாகப் பார்த்தென். அங்கிருக்கும் ஒரு சேவகி எனக்கு அதை விவரித்தார் மனைவியுடனும் காதலியுடனும் இருப்பதைக்காட்டிலும் உடன்பிறந்தவர்களுடன் இருக்கையிலேயே உளம்நிறைந்த மகிழ்ச்சியுடன் இருப்போமல்லவா அதனால் தான் கண்கள் உவகையிலித்தனை பெரிதாகவும் இதழ்கள் இத்தனை அகலமாக சிரிப்பில் விரிந்தும் இருக்கிறதென்றார்

loved that!

iskon

ஊட்டி காவியமுகாம் 2018

முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே அதைக்குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்தேன். முதலில் சரணுடன் செல்வதாக இருந்து பின்னர் அவனுக்கு  மே 6 அன்று நுழைவுத்தேர்வு இருப்பதால் அவன் வரமுடியாதென்று நினைத்து, பின்னர் அதை ஆன்லைனில் எழுதலாமென்று முடிவுசெய்து மீண்டும் அவனும் பங்கேற்க அனுமதி வாங்கி ஒருவழியாக இரண்டு பேரும் செல்வதாக தீர்மானமாயிற்று

வீட்டிலிருக்கும் செடிகளுக்கு இக்கடும்கோடையில் எப்படி 3 நாட்கள் தண்ணிர் விடாமல் இருப்பதென்னும் அடுத்த கட்ட பிரச்சனைக்கு இயற்கையே தீர்வாகி பெருமழை பொழியத்துவங்கியது  2 ஆம் தேதியிலிருந்தே.

4அம் தேதி அதிகாலை எழுந்து தயாராகி, வெளிக்கதவைச்சாத்திவிட்டு காரில் ஏறுவதற்குள் தொப்பலாக நனையும் அளவிற்கு கொட்டும் மழையில் புறப்பட்டோம்.  கரிய நீண்டநனைந்திருந்த தார்ச்சாலையில் அவ்வளவாக போக்குவரத்து இல்லாமலிருந்த அதிகாலையில் ஜென்சியின் பாடல்களைக் கேட்டுக்கொண்டு மலைப்பயணம் துவங்கினோம்.

மேட்டுப்பாளையத்தில் காலை உணவு

குன்னூரிலிருந்தே வாகன நெரிசலில் சிக்கி வால்பிடித்துக்கொண்டே ஊர்ந்துகொண்டிருந்தோம். மலைச்சரிவெங்கும் மே மாதத்திற்கே உரிய ஜகரண்டாவும், தீக்கொன்றையும் பூக்கத்துவங்கி, அடர் ஊதாவும் ஆரஞ்சுமாக வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்தது. மழையில்லை ஊட்டியில்.

நான் குருகுலத்திற்கு வந்துசேர்கையில் காளிபிரசாத் ’காரணம் ’  கதையினரங்கை துவங்கிவிட்டிருந்தார்.  சாலக்கிராமக்கல் காணாமற்போவதும் ஒரு முதியபெண்ணின் வாழ்வின் மாற்றங்களுக்கு அது காரணமாயிருப்பதையும் குறித்த விவாதம்.. ஜெ அவர்கள் அருண்மொழி மற்றும் சைதன்யாவுடன் வந்திருந்தார். நானும் சரணும் அங்கு விரித்திருந்த கம்பளத்தில் அமர்ந்துகொண்டோம். நல்ல கூட்டமிருந்தது ஏராளம் புதுமுகங்கள் இளைஞர்கள், அதிகம் பெண்கள். கம்பளியைத்தாண்டி பனிக்கட்டிபோல குளிர்ந்திருந்த தரையின் சில்லிப்பை உணர முடிந்தது.

ஆசையாக வாங்கிவந்த கருப்பு ஸ்வெட்டரை அணிந்துகொண்டேன். முதலரங்கு முடியுமுன்னரே சரணுக்கு  மலைப்பயணம் ஒத்துக்கொள்ளாமல் வாயுமிழ்ந்துகொண்டிருந்தான். அவன் பின்னர் இரு அரங்குகளுக்கு வராமல் அறையில் ஓய்வெடுத்தான்

முதலரங்கு முடியும் தருவாயில் நாஞ்சில் அவர்கள் வந்து சேர்ந்தார்.தேனீர் இடைவேளையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டேன். குவிஸ் செந்திலிடம் எனக்கும் சரணுக்கும் அறை ஒதுக்கித்தரும்படி கேட்டுக்கொண்டேன்

மதியமே இரண்டுபேருக்குமாய் ஒரு அறை ஏற்பாடு செய்துதந்தார். நாஞ்சில் சாரின் கம்பராமாயண அரங்கு, யுத்தகாண்டம், ஆஹா என்ன அழகு விவரணை எத்தனை சரளம் எத்தனை இனிமை. அவர் சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டே இருக்கலாமென்றிருந்தது

புகழ்பெற்ற ’நின்னொடும் ஐவரானோம்’ முதற்கொண்டு பல பாடல்களை பொருளுடன் விளக்கினார் ஆங்காங்கே அவருக்கே உரித்தான அங்கதங்களுக்கும் குறைவில்லை, மயில் என்று சீதாவைகுறிப்பிடும் இடமொன்றில் மயில் என்பது சீதையை குறிக்கின்றது ஸ்ரீதேவியை அல்ல, என்பதும், இலங்கையின் கிணறுகளில் குருதி ஊறிக்கொண்டிருக்கின்றது என்னும் குறிப்பினைச்சொல்லும்போது திருப்பூரில் எப்படி எங்கு தோண்டினாலும் பச்சையும் சிவப்புமாக நிலத்தடிநீர்  வருகின்றதோ  அப்படி என்பதுவுமாய் ,  எல்லாப்பாடல்களுக்கும் ஒரு கேலிக்குறிப்பிருந்தது அவரிடம், ரசிக்கும்படியுமிருந்தது அவரின் இந்த  இடைச்செருகல்கள்.

கம்பராமாயணத்தை முதல்முறையாகக்கேட்கும் சரண் ஆழ்ந்து போயிருந்தான், அரங்கு முடிந்த பின்னர் நாஞ்சில் சாரிடன்  சரண் தன்னை    அறிமுகம் செய்துகொண்டு. ’ ஏன் குகன் சுக்ரீவன் விபீஷணன் இவர்களை எல்லாம் சகோதரனாகப்பாவித்த ராமன் அனுமனை அப்படிச்சொல்லவில்லை’ என்று கேட்டான், அனுமனுக்கு சகோதரனைக்காட்டிலும் மேலாக தனக்கு இணையனாகவே ஓரிடத்தை  ராமன் வைத்திருந்தார் என்றும் , அனுமன் சாலிஸாவில் ராமனின் சகோதரன் அனுமன் என்னும் ஒருவரி வருகின்றதென்று சரண் மீண்டும் கேட்க அது பிற்பாடு துளசிதாஸ் எழுதியதென்றும்  சொன்னார். இன்னும் 1வாரம் தொடர்ந்து கம்பராமாயணமே அவர் தொடர்ந்து உரையாற்றுவாரெனினும் அமர்ந்து ஆர்வமாக கவனித்திருப்போம்

முதல் அமர்வு துவங்கியதிலிருந்து  நிறைவான அரங்குவரை, வழக்கம் போல  எந்த தொய்வும் குளறுபடிகளும் இன்றி குறித்த நேரத்திற்கு முறையாக அரங்குகள் நடந்தன. இந்த ஒழுங்கு எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. பல்வேறு தளங்களிலிருந்து , பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன் உட்பட, பல அகவைகளில் வரும் இருபாலரும் பங்குகொள்ளும் கூடுகையில் ஒரு பிழையுமின்றி திட்டமிட்டபடியே எல்லாம் நடைபெறுவது மிக அரிதான ஒன்று, இம்முறையும் அப்படியே நடந்து முடி ந்தது

. நாஞ்சில் நாடன், P.A. கிருஷ்ணன், தேவ தேவன், லக்‌ஷ்மி மணிவண்ணன், அசோக், விஷால் ராஜா, சுனீல் உள்ளிட்ட பல எழுத்தாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். கதை, கவிதை கம்பராமாயண அரங்குகள் அனைத்துமே வெகு சிறப்பாக இருந்ததென்றாலும் , எனக்கென்னவோ இம்முறை கவிதை விவாத அரங்கு    மிக மிக நன்றாக அமைந்திருந்தது என்று தோன்றியது. அத்தனை விரிவாகவும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் வந்த கருத்துக்களாலும், விளக்கங்களாலும் கவிதை அரங்கு சிறப்பாக இருந்தது

கவிதைகளின் சிறப்பம்சங்களை சில  விவாதங்களில்  பேசினோம் என்றாலும் நாகப்பிரகாஷ் தெரிவு செய்திருந்த கவிதையைக்குறித்தான விவாதத்தில்,  எது நல்ல கவிதை என்பதற்கான விளக்கமும், எப்படி நல்ல கவிதையை இனம் காண்பதென்றும், எதை நாம் கவிதைவாசிக்கையில்  கவனிக்கனுமென்றும் தெரிந்துகொண்டேன்.மூன்று நாட்களுக்கு முன்னரான என் கவிதை வாசிப்பிற்கும் இனிமேலான என் கவிதை வாசிப்பிற்கும், தெரிவிற்கும் நிச்சயம் நல்ல மாற்றமிருக்கும்

மோகனரங்கன் அவர்களின் ’முடிச்சு’ கவிதை விவாதம் ஆச்சர்யமளிக்கும் விதத்தில் விரிந்துகொண்டே போனது. எனக்கு அது மிகப்பிடித்த கவிதைகளிலொன்று அந்தக்கவிதையை முகாமிற்கு வரும்முன்னர் நான் தனிமையில் வாசிக்கையில் அது எனக்களித்த  உணர்வையும் புரிதலையும் விட விவாதத்தின் போது  ஜெ வும் பங்கேற்பளர்களும் பிற எழுத்தாளர்களுமாய் அதை பல கோணங்களிலிருந்து அர்த்தப்படுத்துகையில் அது ஒரு மிக அழகிய நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு வடிவிற்கு வந்து சேர்ந்தது. கலைடாஸ்கோப்பில் ஒவ்வொரு அசைவிற்கும் கோணங்கள் மாறி உள்ளிருக்கும் கண்ணாடிச்சில்லுகள் வேறு வேறு வண்ணச்சித்திரங்களைக் காண்பிப்பது போல. ஒரு சிறு புள்ளியாக என் மனதில் இருந்த அந்தக்கவிதையின் பொருள் விரிந்து விரிந்து மிக அழகிய சித்திரமானது

கரமசோவ் சகோதரர்களிலிருந்து ஜன்னல் வரை  ஆரோக்யமான விவாதங்களும், விளக்கங்களுமாய் நிறைந்திருந்தது   சிறுகதைஅரங்கு

நெற்றியில் விபூதிப்பட்டை துலங்க வெண்கலக்குரலுடன் திருக்குறள் உரையாற்றிய  திருமூலநாதன் என்னும் இளைஞரின் தமிழறிவை வணங்குகிறேன்.  என்ன தமிழறிவு, இலக்கணம் எல்லாம் அத்தனை அழகாக நாஞ்சில் சாருக்கே கூட தெளிவாக சொல்லித்தந்தார்

ஆடல்கோட்பாட்டில் ஜடாயு அவர்களிடம் முனைவர் பட்ட ஆய்வு முடித்திருக்கிறாராம். நல்ல குரல்வளம். முதல் நாளிலேயே தூரத்தில் அமர்ந்திருந்தவரை ஜெ அழைத்து, ’’வா பக்கத்தில்’’ என்றதும் ஓடோடி வந்து நாற்காலியில் அமர்ந்திருந்த அவரின் காலடியில் அமர்ந்துகொண்டார் அவர். ஜெ வின் அன்பிற்குரியவரென்று அப்போதே கண்டுகொண்டேன்

அவர் உரை முடிந்ததும் நான் ஜெ விடம் , திருமூலநாதனை கல்லூரிக்கு அழைத்துச்சென்று அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க சொல்லணும் என்றதும் ஜெ ’அவ்வளவுதான் 6 மாசத்தில் இவன் முழுக்க மழுங்கி எந்தப்பக்கமும் கிரிப் இல்லாம ஆயிருவானே’ என்றார். அரங்கு மொத்தமும் சிரித்தாலும் இது உண்மையென்பதை நானுமறிவேன். இன்றும் ஒவ்வொரு மாணவனாக எழுந்து ஒவ்வொரு பத்தியாக வாசிக்க அந்த பாடத்தை ‘’நடாத்தி’’ முடிக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் தமிழாசிரியர்களை நானறிவேன்.

சூதில் வென்றாலும் அது தூண்டில்பொன் விழுங்கிய மீன் போல என்னும் குறளில் வரும்   ’’ தூண்டில் பொன்’’ என்பதற்கு ஜெ  சொல்லிய அந்த  பட்டு நூல் துண்டினை தூண்டிலில் கட்டுவது குறித்தான  விளக்கம் இனி எப்போதும் நினைவிலிருக்கும்.

சு ரா அவர்கள் ஒருமுறை ஜெ விடம் ’’என்னமோ இந்த கடற்கரைபயலுங்களுக்கு தங்கநிறச்சட்டைமீது அப்படி ஒரு மோகம் இன்னிக்கும் அந்த துணிதான் 15 மீட்டர் போயிருக்கு என்றிருக்கிறார், ஜெ அப்படி கடற்கரையில் தங்கநிறச்சட்டையணிந்தவரகளை அதிகம் பார்த்திருக்காத, தால் விசாரித்திருக்கிறார்

குமரி மாவட்ட மீனவர்கள், தங்கநிறத்துணிகளை வாங்கிச்சென்றுஇழை இழையாக அதை பிரித்து, தூண்டிலில் ஒற்றைநூலாக அதை கட்டிவிடுவதையும், நெளியும் பொன்புழுப்போலத்தெரியும் அதைநோக்கி மீன்கள் வந்து தூண்டிலில் மாட்டுவதையும் சொன்னார். இடைச்செருகலாக ‘’ ஆகவே வள்ளுவனும் குமரி மாவட்டம்தான் என்றார் நாஞ்சில், ஜெ மீண்டும் ’’வேற எங்க சார் இருப்பானுங்க எழுத்தாளரெல்லாம் நாகர்கோயிலைத்தவிர’’ என்றார்

வேளாவேளைக்கு சூடான சுவையான உணவும் , இடைவேளைகளில் தேனீருமாய் எல்லாம் கச்சிதமாக எப்போதும் போல நடந்தது

அரங்கில் அனைவரும் வசதியாக குடும்ப நிகழ்வொன்றில் அமர்ந்திருப்பது போல சாய்ந்தும் சம்மணமிட்டும் கம்பளியால் போர்த்திக்கொண்டும் சிலர் நாற்காலிமாய் அமர்ந்துகொண்டிருந்தோம் எனினும் அரங்கு ஒரு கட்டுக்குள் இருப்பதையும் உணர்ந்திருந்தோம்.  அருண் மொழியும் சைதன்யாவும் பல விவாதங்களில் கலந்துகொண்டார்கள். ’’நீர்க்கோல வாழ்வினைநச்சி’’  என்னும் பாடலை பள்ளியில் மனப்பாடமாக கற்றிருப்பதாக அருண்மொழி சொல்லவும்  ‘’ எங்கே சொல்லு பார்போம் ’’ என்றார் ஜெ அழகாக பிழையின்றி சொன்னார் அருண்மொழி

அவர்களின் அன்னியோன்யம் நான் எப்போதும் ரசிக்குமொன்று, ’’என்னமோ சொல்ல வந்தியே சொல்லு’’ என அவர் மனைவியை ஊக்கப்படுத்துவதும் காலடியில் அமர்ந்திருக்கும் சைதன்யாவின் கன்னங்களை வாஞ்சையுட்ன அவ்வப்போது வருடிகொண்டிருப்பதுமாய் அழகிய குடும்பம் அவர்களுடையது. முன்னொருமுறை என்னுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அருண்மொழியை ஜெ முதுகில் கொஞ்சம் பலமாகவே அடித்து ‘’ எழுந்து வா அரங்கு துவங்கபோகின்றது’’ என்றதும் பாய்ந்து எழுந்த அருண்மொழி அவரைத்துரத்திப்போய் பதிலுக்கு முதுகில் பளாரென ஒன்று வைத்தார்,’’ எதுக்கு ஜெயன் அப்படி அடிச்சே’’ என்றதும் அவர் அருண்மொழியின் முகவாயினைபிடித்துக்கொண்டு ’’இல்லை நேரமாசுன்னுதான் கூப்பிடேன்’’ என்றார், எங்கிருந்தானோ அஜிதன் இரண்டுபேருக்கும் இடையில் உடன் வந்து நின்றான்

இதை நான் அடிக்கடி நினைவுகொள்ளுவேன்

திருமணத்திற்குப்பின்னும் தொடரும் பேரன்புக்கு எனக்கு தெரிந்து  ஜெ உட்பட வெகுசிலரே இருக்கிறார்கள் சுட்டிக்காட்ட, இதை உள்ளார்ந்த மகிழ்ச்சியுடந்தான் ஒவ்வொருமுறையும் நினைவு கூறுகிறேன்

இரவு 10 மணிக்கு மேலும் அரங்கில், ஆர்வமுடன் அமைதியாக அனைவரும் கலந்துகொண்டதும். பெருமழை வரப்போகும் அறிகுறிகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதையும்,வியப்புடன் நினைவு கூறுகிறேன்.

மறுநாள் காலை வழக்கம் போல அதிகாலை எழுந்து குளித்து இளவெயிலில் காய்ந்துகொண்டே அன்றைய வெண்முரசு  அத்தியாயம் வாசித்துக்கொண்டிருந்தேன்

ஜெ வுடன் பலர் நடைக்கு சென்றிருந்தார்கள், அன்றாடம் கதவு திறக்க, மேல்தொட்டி நீர் நிறைக்க, சமைக்க பால் வாங்க மதிய உணவு பேக் செய்ய மகன்களுக்கு உணவளிக்க வீடு பூட்டி கல்லூரிக்கு கிளம்ப என்று நான் மிகபரபரப்பாக ஆயிரம் கைகளுடன் இயங்கும் அதிகாலைபொழுதொன்றில் எந்த வேலையும் இல்லாமல் குளிர்காய்ந்துகொண்டிருப்பதில் என் உள்ளம் திடுக்கிட்டுப்போனது. அலைமோதியது என் மனம் என்ன செய்யலாம் ஏன் இப்படி ஓய்வாக இருக்கிறேன் என்று!!

சமையலறையில் ஒப்பந்த அடிப்படையில் எங்களுக்கான உணவு தயாராகிக்கொண்டிருந்தது எனவே அங்கு சென்று உதவ வழியில்லை.  Enforced rest  அதை என் உடலும் மனமும் ஏற்றுக்கொள்ள திண்டாடியது. மெல்ல குருகுலத்தைச்சுற்றி வந்தேன்

கவிஞர் தேவதேவன் வசமாகசிக்கினார், இது என்ன பூ வித்தியாசமாக இருக்கே என்று ஊழ் உறுத்துவந்து ஊட்ட என்னிடம் கேட்டே கேட்டுவிட்டார்,

அவரும் நானுமாக அங்கிருக்கும் அனைத்து மலர்களையும் ஆராய்ந்தும் பெயர் தெரிந்தவற்றிற்கு பெயர் சொல்லியும் தெரியாதவற்றிற்கு  நாங்களாகவே பெயரிட்டும் மலர்களைக்குறித்து அவர் எழுதிய கவிதைகளைக்குறித்து சிலாகித்துக்கொண்டுமிருந்தோம் அங்கிருந்த   dancing doll  மலரை அவருக்கு மிகப்பிடித்துப்போனது அதிலொன்றைப்பறித்துக்கொண்டார் அதைப்பற்றி ஒரு கவிதை எழுதி எனக்கு அனுப்புவதாகச்சொன்னார். என் பெயரும் மிக அழகென்றார்,  ஒரு சிறுவனைபோல கண்கள் விரிய பூக்களைப்பார்ப்பதும் அவசரமாக காகிதம் எடுத்து அதில் பெயரெழுதித்தரும்படி கேட்டுக்கொள்வதுமாய் அவரின் உற்சாகமென்னையும் தொற்றிக்கொண்டது, தேவதேவனின் இந்த அதீதமும் இயற்கை மீதான பெருவிருப்பும் அவரிடமிருக்கும் அந்த   madness ம் தான் அவரைக் கவிஞராக்கியிருக்கிறது

ஒரு சிறு குழுவுடன் அங்கிருக்கும் தாவரங்களை இனம்கண்டுகொண்டிருந்ததில் எப்படியோ அரங்குஇலாத சமயங்களில் என் நேரம் செலவானது திருப்திகரமாக

பொள்ளாசியிலிருந்து கொண்டுபோயிருந்த கரகரப்பான கடலை மிட்டாய்களும் சுதாமாமி  எப்போதும்போல செய்துகொண்டுவந்திருந்த வாயிலிட்டால் கரையும் இனிப்புகளுமாக எதோ கல்யாணவீடு போல இருந்தது முகாமின் மூன்று நாட்களுமே

14டிகிரி குளிரிலும்  குளியலறைக்கு வரிசையில் காத்திருந்து அனைவரும் அரங்கிற்கு சரியான நேரத்திற்கு வர அவசரமாய்  தயாராகி வந்தோம். எந்த குடும்ப நிகழ்விற்கும் இப்படி ஒரு மகிழ்ச்சியுடன் நாங்கள் கலந்துகொண்டிருக்க மாட்டோம் இதுவரை

அரங்கிற்கு வெளியேயும் உணவுண்ணும் போதும்  பேகிக்கொண்டிருந்ததில் மற்ற எழுத்தளர்களிடமிருந்தும், ஜெவிடமிருந்தும், பங்கேற்பாளர்களிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன். ஜெயந்தி என்னும்   வாசகி ஜெவின் வெண்முரசின் பெண்கள் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு துவங்க இருப்பதாசொன்னதும் சரண் அவரிடம்  winds of asthinapur  என்னும் நூலில் மகாபாரதத்தில்  வரும் எல்லாப்பெண்களையும் பற்றி எழுதியிருகிறதென்று சொல்லி என்னையும் அவரையும் ஒருசேர வியப்பிலாழ்த்தினான். அந்த புத்தகத்தைக்குறித்து ஜெயந்தி சரணிடம் கேட்டு எழுதிக்கொண்டார்

இரண்டாம் நாள் மாலையில் ஒரு சிறிய குழுவாக அங்கிருந்த  ஷாமியானாபந்தலில் நாங்கள் அமர்ந்து பலதையும் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென நல்ல கட்டஞ்சாயா குடிக்கணுமென்று ஒரு நண்பர் விரும்பினார்,  உடன் அத்தனைபேருக்கும் அந்த ஆவல் எழுந்தது. முகாமிற்கென சமையல் ஒப்பந்ததாரரிருக்கிறார் அம்ஜத்கானைப்போலவே இருப்பார், நானும் சுதா மாமியுமாய் அவரிடம் கட்டஞ்சாயா ஒரு 15பேருக்கு வேண்டுமென்றோம், அத்தனை சிறிய குழுவிற்கு சமைக்க ஏதுவான பாத்திரங்கள்  இல்லையென்று மறுத்துவிட்டார், அருகிலிருக்கும் சமையலறை அங்கிருக்கும் துறவிகளுக்கானது, ஒரு பெண் துறவி உள்ளிருந்தார் சுதா மாமியும் நானும் தயங்கியபடி விஷயத்தைசொல்ல அவர் அகமகிழ்ந்து தாராளமாய் போடுக்கொள்லாச்சொல்லிவிட்டார்,

2நாட்களாக சமைகாமல் ஏங்கிக்கொண்டிருந்த  நான் நண்வர் பெல்ஜியம் மாதவனின் செய்முறையின் பேரில் நல்ல அரபிசுலைமானி தயாரிக்க சென்றேன்

தேவையானவற்றை எடுத்துகொடுத்த அவரிடம்  நான் மாதவனைப்பற்றியும் அவரின் செய்முறைபப்டி மசாலாப்பொருட்கள் தேவைஎன்றும் சொல்ல உடன் தேடித்தேடி அவற்றையும் கொணர்ந்தார். கழுத்தில் காதில் கைகளில் ஏதும் அணிந்திராத அந்த இளம் துறவி சிரிக்கையில் இன்னும் பேரழகியாகத்தெரிந்தார், வெளிறிய மெல்லிய உதடுகளவருக்கு ஆனால் புன்னைகைக்கையில் முழுமுகமும் புன்னைகைக்கிறது. அத்தூய புன்னகையில் தான் அவர் இன்னும் அழகாகிறார் என்று தோன்றியது.

நான் தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கையில் இன்னொரு அமெரிக்கர் வந்தார்,  நல்ல பாலாடைக்கட்டியின் நிறத்திலிருந்தார், அழகாக புன்னகைத்தார், புன்னைகைக்கையில் அவரும் இன்னும் வசீகரமாக இருந்தார், பெரிய கெளபாய் தொப்பி அணிந்துகொண்டிருந்தார் அவரும் குருகுலத்தில் தங்கி இருக்கிறார், என்னையும் கஞ்சி சாப்பிடும்படி சொன்னார் நன்றி சொல்லி நான் மறுத்தேன்

ஒரு சின்னக்கிண்ணத்தில் பயறுசேர்த்து தயாரித்த கஞ்சியை சரித்து கரண்டியிலெடுத்து மெல்ல சுவைத்து எந்த தொடுகறியும் இல்லாமல் அமைதியாகச்சாப்பிட்டார், அவருடன் அந்த பெண் துறவியும் உணவருந்தினார். நேற்று அவர்கள் வாசித்த பிரபஞ்ச ரகசியம் குறித்த ஒரு புத்தகத்தைகுறித்து மெல்லிய குரலில் விவாதித்துக்கொண்டிருந்தார்கள் உன்னத ஆங்கிலத்தில், அத்தனை சாத்வீகமான உண்வைஅந்த குளிரில் சாப்பிடுவது உண்மையில் துறவுதானெறெண்னிக்கொண்டேன்

சாப்பிட்டதும் அவர் அந்த கிண்ணத்தை கழுவி ஒரு உலர்ந்த துணியில் துடைத்து, எடுத்த இடத்தில் மீண்டும் வைத்தார். என்னிடம் என் ஊரைக்குறித்தும் என் வேலைகுறித்தும் விசாரித்தார், தென்னைமரங்கள் நிரம்பிய இடமென்றஊம் ஒருமுறை வருவதாகச்சொன்னார். 50 சதவீத மரங்கள் கருகி மொண்ணையாக நிற்பதையும் பல தோப்புக்கள் அடுக்குமாடிக்கட்டிடங்களானதையும் சொல்லவில்லை நான். அவர் மனதில் எங்கோ இருக்கும் ஒரு தென்னைகள் நிறைந்த அழகிய கிராமமொன்று பசுமையாக இருகட்டுமே அவர் ஒருவேளை வருவாரேயெனில் அதுவரைக்கும்

இன்னொன்றையும் என் அகம் மீள மீள நினைத்துக்கொண்டே இருந்தது, இப்படி  அழகாக புன்னகைக்கும், உணவை தானே எடுத்துப்பொட்டுக்கொண்டு சாப்பிடும், சாப்பிட்ட பத்திரத்தைந்துலக்கி துடைத்தும் வைக்கும் இவரெல்லாம் அழகாக கல்யாணம் பண்ணிக்கொண்டு மகிழ்ந்து இல்லறத்தில் ஈடுபடாமல் பயறுகஞ்சி சாப்பிட்டுக்கொண்டு பிரபஞ்சரகஸ்யம்பற்றி விவாதித்துக்கொண்ட்ருப்பதும் வாழ்வின் நகைமுரண்களில் ஒன்று அல்லவா ?

எலுமிச்சைச்சாறுஇல்லையென்பதைத்தவிரவேறு குறையிலாது அந்தக்குளிரில் அனைவருமாக சுலைமானியை மாதவனின் பேர்சொல்லி அருந்தினோம்

முகாமிற்கு வரும்பொழுது நான் சுத்தமாக துடைத்த வெற்றுக்கலமாகவே வந்தேன். இப்போது நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறேன்3 நாட்களில் எத்தனை எத்தனை அறிதல்கள்?

இந்திய ஞானமரபில் தத்துவம் குறித்து சந்திரசேகரென்னும் இளைஞர் பேசினது எனக்கு மேலோட்டமாகவே புரிந்தது எனினும் அதற்கே அரங்கு முடிந்த போதுஎடை கூடினதுபோல பிரமையேற்பட்டது.  That was too much for me ,  இந்தியச்சிற்பக்கலை குறித்தும் சந்துரு  மாஸ்டர் உரையிலிருந்து நிறைய அறிந்துகொண்டேன், ஒருஅடிச்சிற்பமொன்றில் இருக்கும் நுணுக்கங்களைக்குறித்து 1 மணிநேரம் அழகிய உரையாற்றினார். பல வருடங்களுக்குப்பிறகு அத்தனை எளிய உடையில் ஒருவரைப்பார்க்கிறேன்.

சுவிஸ்ட்சர்லாந்திலிருந்து சுசித்ராவும் சிங்கையிலிருந்து சுபாவும் இதற்கெனவே வந்திருந்தார்கள்.  இறுதி நிகழ்வாக சுபா வைக்கம் முகமது ப்ஷீரின்  கதையினை விவரித்தார். ஒரு இளைஞன் சுபாவிடம், அவர் ஜெவினை அறிந்தபின்னரே இதுபோல பேசுகிறாரா அல்லது அவரது சுய சிந்தனையா இந்த உரை என்று கேட்டதற்கு சுபாவின்  defence  அபாரமாயிருந்தது, என் அறிதல் ஜெ விடமிருந்துதான் ஆனால் அந்த அறிதலென்னும் பீடத்திலிருந்துகொண்டு பேசுவதெல்லாம் நான் அறிந்தவற்றையே என்றார். மனமாரப்பாராட்டினேன் சுபாவை

My husaband and other animals  புத்தகம்குறித்து நிலாமுற்றத்தில் நான் சிலமாதங்களுக்கு முன்னர் உரையாற்றியதின் காணொளியைபார்க்கையில் நானும் திடுக்கிட்டுத்தான் போனேன் பாதி உரை ஜெ அவர்களிடமிறுந்து நான் கற்றுக்கொண்டதையே பேசியிருந்தேன். சுபா சொல்வது போல எனக்கான  source  உறுதியாக ஜெ அவர்கள் தான் எனினும் என் அறிதலென்பது அதன் பின்னர் என்னிடமிருந்துவருவது,

மேலும் ஜெவின் பாதிப்பில்லாது அவரின் வாசகர்கள் பேசவும் எழுதவும் இயலாதென்பதும் சத்தியமல்லவா?

குருகுலத்தைசுற்றியும் பச்சைபச்சேலென்று காரட் பயிரிட்டிருந்தார்கள் நிறையபுகைப்படமெடுத்துக்கொண்டோம் நானும் சரணும். புதிதாக கலந்துகொண்ட இளம் வாசகர்கள் ஆர்வமிகுதியிலும் பதட்டத்திலும் கோர்வையாக பேசமுடியாமல் கேட்கநினைத்ததை துண்டு துண்டாக  கேட்கையில், ஜெ அதை சரியாக தொகுத்து அழகாக முன்வைக்கிறார். உண்மையில் அதை மறுகட்டமைப்புச்செய்து ஜெ சொன்ன பிறகே எங்களுக்கு மட்டுமல்லாது கேள்வி கேட்டவருக்கே அவர் கேட்க நினைத்ததென்னவென்று  புரிந்தது

இன்னொரு விவாதத்தில் படைப்பாளி தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்ல வேண்டும் தேவையற்றவற்றைச் சேர்த்து குழப்பக்கூடாது என்பதற்கு ஜெ spontaneous  ஆக சொன்ன உதாரணம், ஒரு  fruit salad  தயாரிக்கையில் அதனுடன் சர்க்கரை சேர்த்தால் பழங்களின் சுவை எப்படி தெரியும் ? என்பது. அழகான உதாரணம்

அவரைக்குறித்து இரவு நானும் சரணுமாய் பேசிக்கொள்கையில் எனக்கு ஜெ ஒரு சூப்பர் ஹுயூமன் என்றும் அவர் ஒரு gene level mutant  என்றும் சொன்னேன், சரண் திடுக்கிட்டான். ஆம் நான் அப்படித்தான் நினைக்கிறேன்

ஒரு நாளுக்கும் மற்றொன்றிற்கும், எந்த மாறறமுமில்லாத பணிச்சுமை எப்போதும் கூடி இருக்கும், மிகுந்த பரபரப்பான நாட்கள் நிறைந்த என் வாழ்வில் இந்த  3 நாட்களும் முழு ஓய்வு மட்டுமல்லாது, பற்பல புரிதல்களும், அறிதல்களும், தோழமையுமாய் நிறைந்திருந்த து

குருநித்யாவின் சமாதி இருக்கும் இடத்தில் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படத்தை எனக்கு ஒரு தோழி பகிர்ந்திருந்தார். அதில் வாய்கொள்ளாச்சிரிப்புடன் இருக்கும் என்னை நானே வியப்புடன் பார்த்துக்கொண்டேன். இப்படி நான் மனம் விட்டுச்சிரிக்கும் ஒரு புகைப்படமும் வீட்டில் இல்லை ,ஏனெனில் அத்தகு தருணங்கள் இதுவரை வாய்த்ததில்லை.  இந்த 3 நாட்களைக்குறித்தான  இத்தனை நீளப்பதிவில் எழுதிய  அனுபவங்கள் அனைத்தையும்  அந்தப்புகைப்படத்திலிருக்கும்  என் சிரிப்பு சொல்லிவிடும்

அனைவரிடமும் விடைபெற்று ஊர் திரும்புகையில் மனம் கனத்திருந்தது. நிர்மால்யாவிடன் அனுமதி வாங்கி  குருகுலத்திலிருந்து நான் கொண்டுவந்து கூடத்தில் ஒரு கண்ணாடிக்குவளை நீரில்  வைத்திருக்கும் ஹைட்ராஞ்சியாவின்  இளநீலமும் வெள்ளையுமாய் மலர்கள் செறிந்திருக்கும் மிகப்பெரிய  ஒற்றை மலர்க்கொத்தொன்று , குருகுலத்தினின்றும் ஒரு சிறு பகுதியையே நான் என்னுடன்  கூடவே வீட்டிற்கு எடுத்துக்கொண்டுவந்ததுபோல  ஆறுதலை அளிக்கின்றது

இப்படி  முற்றிலும் மகிழ்வான நிறைவான நாட்கள் வேறெந்த வகையிலும் எனக்கு கிடைத்திருக்காது என்பதை நிச்சயமாகச்சொல்லமுடியும் என்னால். இம்மூன்று நாட்களின் இனிய நினைவுகள்,  இன்னும் சில வருடங்களுக்கு  உற்சாகமாக நான் வேலை செய்யவும் , தளரும் தருணங்களில் என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொள்ளவும் உதவி செய்யும்.

பெருமழை பெய்துகொண்டிருந்த வெள்ளியன்று காலை புறப்பட்டு இப்போது வீடுதிரும்பியது வரையிலான இம்மூன்று நாட்களின் நிறைவிலும் இனிமையிலுமாய்  மனம் நிறைந்திருக்கின்றது மிக நிறைவான இந்த முகாமிற்கும் ஏராளமாக நான் கற்றுக்கொண்டவைகளுக்குமாய்  ஜெவிற்கு மனமார்ந்த நன்றியும் அன்பும்

 

 

மேடைப்பேச்சு

இன்று காலை முதல்வரிடமிருந்து சிறப்பு பேச்சாளரின் உரையொன்று இருப்பதாக தகவல் வந்தது, இன்று மாணவர்களுக்கு கல்லூரியில் கடைசி நாள் எனவே முக்கியமாக ஏதேனும் பேசும்படியான ஒருவரே வந்திருப்பாரென்றெண்ணினேன். பெயரை தெரிந்துகொண்டதும் ஆச்சர்யமாயிருந்தது. அவரை பத்தி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கேன். வாரமலரில் எல்லாம் மொக்கை கவிதைகளா எழுதுவாரு சரி எழுத்துதான் அப்படி பேச்சு பேச்சாயிருக்குமோ என்னமோ,  என்னதான் பேசறாருன்னு பார்ப்போம்னு போனேன்.

நல்ல கூட்டம் அரங்கில்  MOC யில் அவரைபத்தி ஆஹா ஓஹொன்னு அறிமுகப்படுத்த துவங்கினப்போ அவர் கையை அமர்த்தலா காட்டி நிறுத்தும்படியும் சுருக்கமா சொல்லலைன்னா  அவரின் சாதனைகளின் பட்டியல் தான் பேசவே நேரமின்றி  நீண்டுகொண்டே போயிரும்னு சொன்னாரு ஆச்சர்யமா இருந்துது எனக்கு சபையில் இப்படி ஒருத்தர்  அப்பட்டமான தற்புகழ்ச்சியுடன் நடந்துக்க முடியுங்கறதை பார்த்துட்டு

நல்ல கருப்பாக்கப்பட்ட தலைமுடி, உன்னத உடை, அடுக்கடுக்கான ஒப்பனையுடன் (குழாயடியில் உட்கார்த்திவச்சு தேச்சு கழுவிறலாமான்னு ஆத்திரமா இருந்துது)  மேடைக்கு வந்தார், பல பேச்சாளர்கள் போடியத்திற்கு வந்ததும்  அவங்க உயரத்துக்கேற்றபடி மைக்கை அட்ஜஸ்ட் பண்ணுவாங்க பார்த்திருப்போம். இவர் கொஞ்சம் கூடுதலா  இரண்டு கைகளாலும் போடியத்தையே தூக்கி நகர்த்தி அட்ஜஸ்ட் பண்ணிகிட்டாரு அதாவது மேடையெல்லாம் தனக்கு தண்ணி பட்ட பாடுன்னு சொல்லறாரு போல . ஆரம்பமே எனக்கு பீதியாக இருந்துது

ஒரு மேடையில் இளைஞர்களுக்கு என்னவெல்லாம் சொல்லவேண்டியதில்லையோ அதையெல்லாம்  உற்சாகமா சொல்லிட்டு இருந்தாரு. பல கல்லூரிகளில் 4 லட்சம் மாணவர்களுக்கு மேல் இவர் சந்தித்து உரையாடியிருக்காருன்னும் இன்னிக்கு நாங்கள்ளாம் அதிர்ஷ்டம் செய்திருப்பதால் அவரை சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கெல்லாம் கிடச்சிருக்குனு வேற அவரே சொல்லிக்கிட்டாரு. இத்தனை வெட்கம் கெட்டவரை சமீபத்தில் நான் சந்தித்திருக்கவில்லை

கிராமப்புறத்தைச் சேர்ந்த வெளியுலகம் அவ்வளவாக தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்கள் குறைந்த மாணவர்களிடையே, கல்லூரியின் கடைசி நாள் அன்று எப்படி அழகா அருமையா பேசலாம். இவரானா துவங்கினதுமே ’’உப்பில்லாம கூட சாப்பிட்டுரலாம் ஆனா நட்பில்லாம வாழமுடியாது’’ன்னாரு. ’’கண்ணீரை துடைப்பவனல்ல நண்பன் கண்ணிரே வராமல் பார்த்துக்கொள்பவனே நண்பன் ’’ இப்படி ஒரே நட்பு மழையா இருந்துது

ஒரே கைதட்டல், அதில்  குஷியாகிட்டாரு மீண்டும் நட்பு குறித்து தான் எழுதின மொண்ணைக்கவிதைகளா எடுத்து விட்டுகிட்டே இருந்தாரு

இடையிடையே வாட்ஸ் அப்பில் வந்த சில  நான்காம் தர ஜோக்குகள் வேறு

’ அவர் பேச வந்த தலைப்பு ’’தன்னம்பிக்கையே வெற்றி ‘’

தான் எழுதிய அரியர்ஸ் இல்லா மனிதன் அரை மனிதன் என்னும் பழஞ்சொல்லை அத்தனை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கிட்டாரு

பசங்களும் ஓயாம கைதட்டிகிட்டே இருக்காங்க

தானும் அரியர் வாங்கினவன்தானென்றும் பின்னர் தமிழின் மேல் உளள காதலினால்  அதை படித்துப்படித்து இப்படி உயரத்துக்கு வந்துட்டதாவும் சொன்னார். அவர் மேடையிலிருப்பதை உயரம்னு வேன்னா சொல்லிடலாம் மத்தபடி  அவர் உயரத்துக்கு வந்ததுன்னு சொல்லறதெல்லாம் மிகு புனைவு.  எல்லா பேரசிரியர்களும் சிரிச்சுட்டு கையடிச்சுகிட்டு இருக்காங்க எனக்கானா வயத்தை பிசையுது

என் தீயூழ் நான் முன்னாடி வேற உட்கார்ந்துட்டேன். கொடுமையிலும் கூடுதல் கொடுமையா அப்பப்போ என்னையும் பார்த்து ’’என்ன மிஸ் நான் சொல்லறது சரிதானே’’ங்கறார். சும்மாவே என்னை மிஸ் னு சொன்னா எனக்கு பத்திட்டு வரும் இதில் இவர் வேறெ

அப்பொவெல்லாம் என்னால அமைதியா புன்னகைக்க முடிஞ்சதுங்கறதைத்தான் நான் இன்னமும் வியந்து நினச்சுக்கறேன். எனக்கும் முதிர்ச்சி வந்துருச்சு . முதிர்ச்சி மட்டுமல்ல ஏறக்குறைய இன்னிக்கு அந்த முன்வரிசையில் எந்த உணர்வையும் வெளிக்காட்டிக்காம விண்  விண் னுன்னு தெறிக்கற தலைவேதனையை தாங்கிகிட்டு அவ்வப்பொது அவர் என்னை பார்த்து எதாச்சும் சொல்ல நான் அழகா மென்மையா புன்னகைச்சுட்டும் இருந்தேன். ஒரு மாதிரி ஊழ்க நிலை அது

என் வாழ்வில் இந்த 2 மணி நேரமே என்னால் தாங்க முடியாது என்னும் எல்லையையும் தாண்டி நான் தாங்கிட்டும் சகிச்சுட்டும் இருந்த காலம்

உயரமென்றால் எவெரெஸ்ட் நீ உயரனும்னா நெவர் ரெஸ்ட் இல்லைனா யு வில் ரஸ்ட் அண்ட் பிகம்  ஏ  டஸ்ட் என்னும் பழமொழியை

இறக்கை இருக்கும் வரையிலும் பட்டாம்பூச்சிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்னும் தான் எழுதிய பிரபல கவிதையை

சாகும் போதும் கைதட்டல் வாங்கிட்டு சாகும் கொசுவைப்போல் இருக்கனும்னு அறிவுரைகளை

தான் எழுதியிருக்கும் சிகரங்களை தொட்டுவிடு என்னும் (தலைப்பையே மாற்றி மாற்றி வைத்து வெளியிட்டிருக்கும் ) 67 புத்தகங்களை

அவற்றை வாங்கி மாணவர்கள் படிச்சு உலக வாழ்வில் உய்ய வேண்டியதன் அவசியத்தை

கலாமுடன் தனக்கிருந்த நெருக்கத்தை ,சில பல அவருக்கு மனப்படமாகி இருந்த திருக்குறள்களை

இப்படி தாளிச்சுக்கொட்டிட்டு இருந்தார்

பேசும்போது கைகளை பலமாக  ஆட்டுக்கல்லில் மாவாட்டி தோண்டி எடுப்பது போலவும், பெரிய கிரைண்டரின் குளவிக்கல்லை தூக்க முடியாமல் தூக்குவது போலவும் கரகரவென்று எதையோ  கையில்  வைத்து சுற்றுவது போலவும், கம்பிகளில் சிக்கிக்கொண்ட மாஞ்சா கயிற்றை விடுவித்து பட்டத்தை எடுப்பது போலவும் செய்கைகளும் அல்லது சேஷ்டைகளும் செய்துகொண்டிருந்தார்

குரலையும் அவ்வபொது MR ராதா போல திடீரென்று உயர்த்தி உச்சஸ்தாயியிலும், பின்னர் கிசுகிசுப்பாக காதலனிடமோ காதலியிடமோ ரகசியமாய் பேசும் குழைவான கொஞ்சும் குரலிலும் திடீரென்று முழங்கியும் மாடுலேஷனில் வித்தியாசம் வேறு காட்டிக்கொண்டிருந்தார்

 இவையனைத்துக்கும் மேல் அவ்வபோது முஷ்டியை மடக்கி போடியத்தை படார் படாரென பலமாக் குத்திக்கொண்டும் ஆவேசமாகவும் பேசிக்கொண்டிருந்த போதெல்லாம் எனக்கு வயிற்றில் உப்பு புளி காரம் எல்லாம் சேர்த்து கலக்கினாற்போலிருந்தது

இறுதியாக என்பதையே பலமுறை சொல்லிக்கொண்டிருந்தாரே ஒழிய அந்த இறுதியே  பேச்சில் வரக்காணோம். இந்த லட்சணத்தில் மேஜர் சுந்தரராஜனை போல தமிழில் சொன்னதையே ஆங்கிலத்திலும் அடுத்தடுத்து சொல்லி ரெண்டிற்கும் கைதட்டல் வேறு வாங்கிக்கொண்டிருத்னார்

’’செத்த மீனைத்தான் ஆற்றுத்தண்ணீர் இழுத்துக்கொண்டு போகும் உயிருள்ள மீன்தான் நீரை எதிர்த்துச்செல்லும் எனவே’’  எனற போது அவர் முடிச்சுட்டாரென்றெ நான் உளம் மகிழ்ந்தேன்

ஆனால் அதான் இல்லை ’’எனவே, எப்படி எதிர்த்து வாழ்வதென்று’’ கற்பிக்க துவங்கிவிட்டார்

பின்னர் போன ஜென்மத்து குரு சிஷ்ய ஜோக்குகளை எடுத்து விட்டார்

கேள்விகளை வேறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுஇருந்தார் இடைக்கிடைக்கு

’’ஒரு வரிதான் வாசிக்க முடியும்னா ஆத்திசூடி  படி

இரண்டென்றால் குறள்  படி

மூன்றென்றால் விவேகானந்தரின் பொன்மொழிகள்   படி

நான்கு வரிகளே வாசிக்க முடியும்னா நாலடியார்  படி

எதுவுமே வாசிக்க முடியலைனா செத்து மடி’’

இதை அவரெழுதியதாகச்சொன்னதில் எனக்கு விரோதமெல்லாமில்லை என்ன என்னவோ யார் யாரோவெல்லாம் எழுதறாங்களே இப்போல்லாம் ஆனா இதை அவர் எழுதின கவிதைங்கறாரே? அதைத்தான் தாங்கவே முடியாம கண்ணில் ஜலம் வச்சுக்கிட்டேன். செய் அல்லது செத்து மடிங்கறதை மகாத்மாவுக்கு அடுத்து தானே சொல்லியிருப்பதாகவும் உபரித்தகவலை சொன்னார்

இதை மட்டும் 3 முறை திரும்ப திரும்ப சொல்லிவிட்டு நான்காவது முறையாக  முதல் பாதி இவரும் மறுபாதி மாணவர்களுமா சொல்லச்சொல்லி fill in the blanks  விளையாட்டு வேற நடத்தினார்

நான் கைதட்டவேயில்லை எனபதை அவவ்போது ஓரக்கண்ணால் கவனித்தார் எனினும் என் முகத்திலிருந்த மந்தகாச புன்னகையில் அவரை நான் மதிக்கிறேன் அல்லது ரசிக்கிறேன் என்றே அவர் யூகித்துக்கொண்டிருந்தார்

இந்தம்மா நம்ம பேச்சை ரொம்ப கவனமா ஆழ்ந்து கவனிக்கறாங்க என்றும் புளகாங்கிதமடைந்திருக்கக்கூடும்

ஒருவழியாக அவரின் பலத்த கைதட்டல்களுக்கிடையேயான பேச்சு முடிந்ததும் நான் முதல் ஆளாக வெளியெ வந்து லேபில் இருந்த முதலுதவி பெட்டியிலிருந்து பஞ்சு எடுத்து காதில் வழிந்துகொண்டிருந்த ரத்தத்தை துடைத்து சுத்தம் செய்துகொண்டேன்

21 அன்று நடக்கும் ஜெ வின் கட்டணக்கூட்டதிற்கு எப்படியும் இடம் கிடைக்கனும் என்றும் கிடைத்தால் இன்றைய பேச்சாளரின் பேச்சை  ரசித்துக்கொண்டிருந்த பேராசிரியர்களில் யாருக்காவது மொட்டை போடுவதாகவும் குலசாமிக்கு வேண்டிக்கொண்டேன்

ஜெ வின் பேச்சைக்கேட்பதுதன் இன்னிக்கு நடந்த அநீதிக்கான  ஆகச்சிறந்த பிழையீடு அல்லது பிராயசித்தமாக இருக்கும்

அலுவலக்தில் பேச்சாளருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கவரினுள்ளே எத்தனை  சன்மானமிருந்ததுன்னு கேட்கலமான்னு நினச்சுட்டு உடன் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். தெரிஞ்சுகிட்டேன்னா ரொம்ப காலத்துக்கு  தூக்கம் வராது எனக்கு

ஜெ சொல்லுவாரில்லியா தீயூழ்னு அடிக்கடி. இன்னிக்கு அந்த தீயுழை மிக அருகில் முன்வரிசையில் அமர்ந்து பார்த்துகிட்டு இருந்தேன்.

பி கு

 இந்த பேச்சாளரின், எழுத்தாளரின் நூல்களில் பன்முகத்தன்மைன்னு ஒரு முனைவர் பட்ட ஆய்வும் நடந்திருக்காம்

கலி முத்திடுச்சுன்னு கேட்டுருக்கோம் இப்போதான் நிதர்சனமா தெரியுது இதெல்லாம் எழுதினப்புறம் தான் நெஞ்சில் என்னவோ கல்லாட்டம் ஒண்ணு அடைச்சுகிட்டு இருந்தது அதை இறக்கி வச்சாப்பல இருக்கு

நவம்பர் நாடகவிழா

 பொள்ளாச்சி தமிழிசைச்சங்கம்,  48ஆவது ஆண்டுக்கான நிகழ்வுகளாக, தமிழ்நாடு அரசு கலை பண்பட்டுத்துறையுடன் இணைந்து   2018 நவம்பர் 19,20,21. மற்றும் 22 ஆகிய நான்கு நாட்களிலும்  மேடை நாடகங்களை அரங்கேற்றியது.

கணினிப்பயன்பாடும், தொலைக்காட்சியும், இணையமும், வணிகத்திரைப்படங்களும் மக்களின் வாழ்வில் இணைபிரியா அங்கமாகி விட்ட இக்காலத்தில் அழிந்து வரும் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான மேடை நாடகங்களை பொதுமக்களுக்கு கொண்டுவந்து சேர்த்து, அக்கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் புத்துயிர் அளித்தது தமிழிசைச்சங்கத்தின் ஆகச்சிறந்த ஒரு சேவையாகும்

பள்ளிப்பருவத்தில் சோ, கிரேஸீ மோகன் எஸ்.வி சேகர் ஆகியோரின் நாடகங்களை பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் பல வருட இடைவெளிக்குப்பிறகு இன்று பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மகன்களுடன் இப்போதுதான் நாடகம் பார்க்கிறேன்.

துவக்க நாளான 19 ஆம் தேதி அன்று மாலை  ‘’சாணக்ய சபதம்’’ என்னும் புராண நாடகம் அரங்கேறியது. நாடகச்செம்மல் அமரர் R.S  மனோகரின் சகோதரரின் மகனான திரு சிவபிரசாத் அவர்கள் இயக்கி சாணக்யனாக நடித்துமிருந்தார். மதுரை திருமாறன் அவர்களின் எழுத்தில் வசனங்களும், R.S   மனோகர் அவர்களின் சிறப்பம்சமான பிரம்மாண்ட அரங்க அமைப்புக்களுமாக நாடகம் மிகச்சிறப்பாக இருந்தது, சிறு பிழைகூட இல்லாமல் அத்தனை நடிகர்களும் நடித்ததும், துல்லியக்காட்சி அமைப்பும் அபாரமான உடைவடிவமைப்புமாய் கிரேக்க அலெக்ஸாண்டரும், செல்லுகஸ் நிகேடரும் ரோஷனாவும் சந்திரகுப்தனும் பிற வரலாற்றுக் கதாபாத்திரங்களும் கண்முன்னே  வந்து, அக்கதை நடைபெற்ற அக்காலத்திலேயே நாம் இருப்பதுபோல ஒரு பிரமையை உண்டாக்கியது.

இரண்டாம் நாளின் இசை நாடகம் ‘ சத்தியவான் சாவித்ரி’’  தமிழ் நாடக உலகின் முன்னோடியான தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் இயற்றியது. மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தினர் நடத்தினார்கள்.  ஒரு இசை நாடகத்தின் எல்லா அம்சங்களுடனும் அருமையான அன்னிகழ்வு இருந்தது,

மூன்றாம் நாளான 21 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் ஸ்ரீ மாரியம்மன் தெருக்கூத்து நாடகக்குழுவினரின் ’’வாலி வதம் மற்றும் சுக்ரீவன் பட்டாபிஷேகம்’’ அரங்கேறியது மிகப்பிரமாதமான அந்நிகழ்வில் அனைத்து நடிகர்களின் திறமையும் அர்ப்பணிப்பும் வெளிப்பட்டது. இரவு  முழுவதும் நீளும் நாடகத்தை அன்றைய தேவைக்கேற்ப 2 மணிநேரமாக சுருக்கி அமைத்திருந்தனர்

 பொருத்தமான ஒப்பனை,  அழகிய வண்ண உடைகள், உரக்க வசனங்களை பேசுவது, அந்த பாத்திரமாகவே மாறி விடுவது என பார்வையளர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச்சென்றனர் நடிகர்கள். பள்ளியில் தமிழ்ப்பாடத்தில் வாலி வதமும் அதன்பின்னர் தாரை அழுதுபுலம்பும் படலமுமாக படித்து தாரை என்னும் ஒரு துயர பிம்பம் மனதில் இருந்தது. இத்தெருக்கூத்தில் தாரை அறிமுகப்படலத்தில்  நடனமிட்டுக்கொண்டெ வருவதும், பளபளக்கும் அவரது  உடையுமாக இன்னொரு மாறுபட்ட சித்திரம் மனதில் உருவாகி ஆழப்பதிந்தது

மேடையின் பக்கவாட்டில் காட்சி மாறும் இடைவெளிகளில் அனுமன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததும், இராவணன் தொடர் வசனங்களால் காய்ந்துபோன  தொண்டைக்காக அடிக்கடி தேனீர் அருந்துவதும், லக்‌ஷ்மணராக நடித்த இளைஞர், வாட்ஸ் அப்பில் முழ்கி இருந்ததும் கவனிக்க முடிந்தது. ராவணன் பல முகங்களுடன் அந்தர் பல்டி அடிப்பதும்,  பேச்சு வழக்கில் வாலி ’அதொன்னும் problem இல்லை’ எனச்சொல்வதும், மேடையிலேயே மறைந்திருந்து வாலியை ஸ்ரீராமர் அம்பெய்து கொல்வதுமாக பல   சுவாரஸ்யமான காட்சிகளும் காணக்கிடைத்தது

நான்காம் நாளான 22அன்று  ‘’ நிதர்சனம் ‘’ என்னும் சமூக நாடகம் மாலி அவர்களின் இயகக்த்தில் கே. எஸ் . என் . சுந்தர் அவர்களின் கதை வசனத்தில் நிகழ்ந்தது. வழக்கமான அறிவுரை சொல்லும் உத்தியை மேற்கொள்ளாமல் இக்காலத்துக்கு ஏற்றபடி பல அழகிய வசனங்களும்,  எதிர்பாரா முடிவுமாக இருந்தது நாடகம். சாதிய வித்தியாசங்கள், கலப்புத்திருமணம், இட ஒதுக்கீடு, ஆச்சாரம், மத நம்பிக்கைகள் என பல மிக  முக்கியமான ஆனால் கவனத்துடன் அணுக வேண்டிய சமூக பிரச்சனைகளை சாதுர்யமாக கையாண்டு நாடகத்தை அழகாக நடத்தினார்கள். ஈஸ்வரன் IAS   அவர்களின் தந்தையாக நடித்தவரின் நடிப்பும் வசன உச்சரிப்பும் பிரமாதம். இவரெல்லாம் வெள்ளித்திரையில்  இருக்கவேண்டியவர். அவரின்  உடல்மொழியும் அபாரம். லக்ஷ்மியாக நடித்த செளம்யா ராம் நாராயண் ஒவ்வொரு காட்சிக்கும் அழகிய பல வண்ணப்புடவைகளையும் பொருத்தமான அணிகலன்களையும் மாற்றிக்கொண்டு வந்து அரங்கிலிருந்த பெண்களின் பெருமூச்சுக்களுக்கு காரணமானார்

காதலை பேசுபொருளாககொண்ட அனைத்து  நாடகங்களும், அது கல்யாணத்தில் முடியும்  சுபம் எனும் முடிவுக்கே வரும் வழக்கத்திற்கு மாறாக இந்நாடகம் வாழ்வின் நிதர்சனம் என்னவென்பதை அழகாக உணர்த்தியது பாராட்டத்தக்கது

 பார்வையாளர்கள்  திரளாக வந்திருந்ததும், நிகழ்வு முடியும் வரை அரங்கிலிருந்து ரசித்ததும் , பல கைதட்டல்களுக்கு இடையில் நாடகங்கள் நிகழ்ந்ததும் இதுபோன்ற ஆதாரக்கலைகள் முற்றிலும் அழியாது,  புத்துயிர் பெற்று மீள எழுந்து வரும் என்னும் நம்பிக்கையை தோற்றுவித்தது.

இசை நாடகம் மற்றும் தெருக்கூத்துக்கலைஞர்களின் உடைகள்  நைந்திருந்ததும், ராவணனுக்கு 8 தலைகளே இருந்ததும் அதுவும் cardboard அட்டையில்  செய்தவையென்பதும், அக்கலையும் கலைஞர்களின் வாழ்வும் நலிந்திருப்பதைக்காட்டும் குறியீடாகவே தோன்றியது. தெருக்கூத்து நடத்தியவர்கள் முப்பாட்டன் கால்த்திலிருந்து பல  தலைமுறைகளாக இக்கலையை தொடர்வதும், நாடகத்தின அங்கத்தினர் அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்களே என்பதும் வியப்பிலும் வியப்பு. பொருளாதார மேம்பாட்டை பெரிதாக நினைக்காமல் உண்மையான கலையார்வத்துடனிருக்கும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

பிண்ணனித்திரைச்சீலையை மாற்றியே அரங்கை சிறைச்சாலையாகவும் கோவிலாகவும் அந்தப்புரமாகவும் வீட்டுக்கூடமாக்வும் அழகாக மாற்றுவதும், நாடகத்துக்கு தேவையான் மிகை ஒப்பனையையும்  மிக நடிப்பையும் தேவை அறிந்து அளவுடன் கொடுப்பதுமாக வெற்றிகரமாக நடந்தன அத்தனை நாடகங்களும்

நிகழ்வு முடிந்து அவர்கள் பாராட்டப்படுகையில் போர்த்தபட்ட  அந்த எளிய பொன்னாடை அவர்களின் முகத்தில் தோற்றுவித்த உணர்வெழுச்சிகளை என்றென்றைக்கும் மறக்க முடியாது. நாடகத்தில் ’ரீடேக்’ என்பதே இல்லயென்பதால் கடும் பயிற்சியின் பின்னரே அவர்கள் அதை வெற்றிகரமாக செய்யமுடியும். எனவே இந்த நாடகங்களில் நடித்த அனைவருமே உண்மைக்கலைஞர்கள் . கேரளத்தைப்போல நாடகக்கலையை  தமிழ்நாடு ஊக்குவிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டைப்பொய்யாக்க இனி இதுபோன்ற முயற்சிகள் தமிழகமெங்கும் நடைபெறவேண்டும்

பார்வையாளர்களில் கல்லூரியில் படிக்கும் என் மகனும் பள்ளிக்குழந்தைகளுமாக கலந்து கொண்டிருந்தது  இன்னும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. இனி தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளைக்காண முதல் நாளே தமிழைசைச்சங்கத்தில் உறுப்பினராக சந்தா கட்டினேன். இப்பதிவினை படிக்கும் அனைவரையும் தொடர்ந்து நாடகங்கள் பார்க்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன். இந்த விடுமுறையை  தொடர் வாசிப்பிலும் நாடகங்கள் பார்ப்பதிலுமாக செலவழிக்கும் படி நான் அருளப்பட்டிருப்பதில் மகிழ்கிறேன்

உன்னதி என்னும் ஒரு நாய்க்குட்டி!

 

கடந்த வாரம் முழுதும் தேர்வுவாரமானதால் இந்த திங்கட்கிழமைதான் மீண்டும் வழக்கமான கல்லூரி நாள். அமெரிக்கத்தோழி, அவளது தோழர் எல்லாம் புறபட்டுச்சென்றுவிட்டபின் கல்லூரிக்கு எப்போதும் போலவே ½ மணி நேரம் முன்னதாக இன்றும் சென்றுவிட்டேன். வேதியியல் துறையின் இடைநாழியில் செல்லும்முன்பாகவே என்னவோ ஒரு  ஹீனமான சத்தம் வித்தியாசமாக கேட்டுக்கொண்டே இருந்தது.

ஆய்வகத்துக்கு முன்னாலிருக்கும்  சீராக வெட்டிவிடப்பட்டிருக்கும் துஜா புதர்களுக்குள்ளே எனக்கு மிக நன்றாக பரிச்சயமான, அவ்வபோது   Taxonomy  வகுப்பை எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும்  ஒரு இஞ்சி நிற நாய் 8 குட்டிகளை ஈன்றிருந்தது. எல்லாம் பால் நிறம் ஒன்றே போல அத்தனை அழகாய். அம்மாநாயும் அழகுதான்  சற்றே நீள முகமும். மையிட்டதுபோல விளிம்புள்ள பெரிய கண்களுமாய் அதுவும் லட்சணமாகவே இருக்கும். 3  குட்டிகள் பால் குடித்துக்கொண்டும் 4  குட்டிகள் கிறங்கிப் போய் ஒன்றின் மீது ஒன்றாக படுத்துக்கொண்டு சிவப்பான வாயைத்திறந்தபடி  அருகிலேயே உறங்கிக்கொண்டும் இருந்தன. ஒரு குட்டி மட்டும் கழுத்தில் ஒரு வெட்டுக்காயத்துடன் தீனமாக கத்திக்கொண்டு கொஞ்சம தள்ளி குட்டைஅத்திச்செடிகளுக்கிடையே கிடந்தது. கழுத்தெல்லாம் எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்தது.

அம்மா என்ன நினைத்துக்கொண்டோ அந்த அடிபட்ட குட்டியை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஆனால் முலைகொடுத்துக்கொண்டே அதை தீர்க்கமாகப்பார்த்துக்கொண்டிருந்தது.   என்னை அறிந்திருப்பதாலோ என்னவோ நான் முன்னகர்ந்ததை ஆட்சேபிக்கவில்லை அதனால் மெல்ல  சதுரபபுல்வெளிக்குள் போய் அதை எடுத்து துடைத்து அம்மாவிடம் விட்டேன். நக்கிக்கொடுக்கத் துவங்கியதும் மீண்டும் இடைநழிக்கு வந்தேன்

எல்லாம் அத்தனை அழகாக கண்ணை நிறைத்துக்கொண்டு கிடந்தது

அடிபட்ட நாய்க்குட்டிக்கு மட்டும் உடனடியாக பெயர் வைத்துவிடலாமென்று  98க்கப்புறம் நான் சந்திக்கவே சந்திக்காத  ஒரு நண்பரின் அமுதம் என்று பொருள்படும் பியூஷ் என்று வைத்தேன் அமுதத்தின் 8 சொட்டுக்களில் ஒன்றல்லவா?

ஆனால் பெயர் வைத்த நொடியில் இன்னொன்றை உணர்ந்தேன் எடுத்துக்கொண்டுபோய் அம்மவிடம் விட்டபோது அதன் வயிற்றில் செம்புள்ளிகளாய் முலைக்கண்களிருந்தன என்பதை.

பெட்டைக்குட்டி! பியூஷின் காதல் மனைவிபெயர் உன்னதி உடன் அதற்கு உன்னதி என்று பெயரிட்டேன்

இப்போது கொஞ்சம் சத்தமில்லாமல் அமைதியாக இருந்தது  உன்னதி. அம்மா கழுத்துக்காயத்தை  நக்கிக்கொண்டிருந்தது

அதன்பிறகு நான் மனசில்லாமல் மாடியிலிருக்கும் என் அறைக்கும் துறைக்கும் சென்று விட்டேன்

அவ்வப்போது   அங்கிருந்தே கீழே எட்டி எட்டிபார்த்துக்கொண்டிருந்தேன்

உன்னதி குடும்பத்தை எடுத்த புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் பதிவிட்டேன்

மாலை திரும்ப இறங்குகையில் குட்டிகளையும் அம்மவையும் அங்கே காணோம் இடம் மாறிடுச்சோ என்னவோன்னு யோசனையாகவே வீடுவந்தேன்

சரணிடம் போனில்  கூப்பிட்டு 8குட்டிகளின் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தேன்

நாளை மறக்காமல் அம்மா நாய்க்கு சாப்பிட ஏதாவது கொண்டுபோகும்படி பலமுறை சொல்லிவிட்டுத்தான் போனை வைத்தான்

இரவு குமார் அம்பாயிரத்திடமும் போனில் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன்

இன்று காலையில் வழக்கம்போல ஆயிரம் கைகளில் வேலைசெய்துகொண்டிருந்தாலும் பிஸ்கட் பாக்கட் எடுத்து கைப்பையில்  மறக்காமல் போட்டுக்கொண்டேன்

சாமி அலமாரிக்குமுன்னால் நிற்கையில் உன்னதி பிழைத்திருக்கனுமென்று வேண்டிக்கொண்டேன்.

கல்லூரிக்கு வந்து கையெழுத்திட்டுவிட்டு வேகமாக நடக்கையிலேயே அங்கு திருமலைசாமி அண்னன் நிற்பதைபார்த்தேன்

அவர் கல்லூரியின் தோட்டங்களை பராமரிக்கும் வேலையை  நான் இங்கு பணியில் சேரும் முன்பிருந்து செய்துவருபவர்.

நான் அவருடன் பேசும் சந்தர்ப்பமே வாய்த்ததில்லை இதுவரை ஆனால் அவர் புல்வெளியை செதுக்குகையில் வரும் பச்சையத்தின் வாசனையை அவரை எப்போது பார்த்தாலும் உணர்வேன் மனதில்

கிட்டே போனதும் ஒரு அலுமினிய தட்டில் குழைய வேகவைத்த , தயிரிட்டுப்பிசைந்த சாதத்தை அண்னன் போட்டுக்கொண்டிருக்க  அம்மா நாய் மெல்ல சாப்பிட்டுக்கொண்டிருந்ததை பார்த்தேன்.. உன்னதியைக்காணோம். 7 குட்டிகளும் ஒரே மென்சதைக்குவியலாக ஒரு சிறு வட்டமாய் ஒன்றின் மேலொன்றாகக் கிடந்தன

எல்லாம் அச்சிறுவயிறு முட்டப்பால்குடித்து கிறக்கத்தில் நேற்றினைப்போலவே

என்னப்பார்த்ததும் திருமலைசாமி அண்ணன் ’’வீட்டிலிருந்துகொண்டுவந்தேங்க,  இது 8 குட்டிகளுக்கு பால்குடுக்கனுமில்ல அதான்’’ என்றார்

அவர் கைகளைப்பிடித்துக்கொண்டு நன்றி சொன்னேன்

அன்னைமை என்பது 9 மாத காலம் கருவை வயிற்றில் சுமப்பது  மட்டும் அல்ல.  கருணையும் பச்சதாபமும்  ஹிருதயத்தில் ஈரமும் உள்ள ஒரு நிலைப்பாடு அது. திருமலைசாமி அண்ணன் வாங்கும் சம்பளம் என்னிலிருந்து பல படிகள் கீழ். ஆனால் அவரின் மனசு இருக்கும் உயரத்தில் என்னால் நிமிர்ந்துகூட பார்க்கமுடியாது

என் கைப்பையில் இருந்த பிஸ்கட்டுக்களுக்காக வெட்கினேன்

 

உன்னதி என்னவாயிற்று என்று தெரியலை எதற்கும் எண்ணிப்பார்க்கலாமென்று மெல்ல குட்டிகளை ஒவ்வொன்றாக தூக்கியும் கலைத்தும் தேடினேன் அவள் இல்லவே இல்லை

செத்துப்போயிருக்கனுமென்றே உள்ளம் பதறியது கழுத்தின் வெட்டுக்காயத்தினின்றும் நேற்று வழிந்த குருதியுடன் உயிரும் வடிந்துகொண்டிருந்திருக்கும்

பிறந்து, பெயரிடபட்டு, இவ்வுலகின் ஒரு மாசும்  படுவதற்கு முன்னர் அன்றே செத்துப்போன அதி உன்னதி

திருமலைசாமி அண்ணன் எவர்சில்வர் டிஃபன் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போனபின்பும் கொஞ்சநேரம் அங்கிருந்தேன்

நேற்று பிறழ் உறவுக்கு இடையூறாக இருந்ததால், பெற்ற மகனையும் மகளையும் விஷம் கொடுத்து கொலைசெய்த அன்னை யொருத்தியைப்பற்றி நாளிதழ்களில் வாசித்து இரவு குழுமத்தில் காரசாரமான விவாதம் இருந்தது

10 ஆயிரம் சம்பளம் வாங்க்க்கொண்டு நாய்க்கு தயிர்சாதம் பிசைந்துகொண்டுவந்த திருமலாசாமியும் இதே உலகில்தான் இருக்கிறார்

என்ன  சமன்பாட்டில் இவ்வுலகியங்குகின்றதென்று தெரியவில்லை

ஜெமோ சொலவ்துபோல ஊழென்பது  ஒரு கையில் மலரும்  மற்றொரு கையில் கூர்வாளும் கொண்ட விந்தைப்பெருந்தெய்வமேதான்

லவ்யூ உன்னதி ! லவ் யூ திருமலை அண்ணா!

 

 

செல்ஃபி ஐஸ் கிரீமும் லட்டுவும்,

இன்று விடுமுறையாதலால் ஈரோடு சென்றிருந்தேன்.  கொட்டும் மழையில் , குளிரில் நடுங்கிக்கொண்டு புறப்பட்டு, வெள்ளக்காடாகியிருந்த சாலைகளில் பயணித்து, இரட்டைச்சூரியன் தகிக்கும் ஈரோட்டில் நுழைந்தது வினோதமாயிருந்தது, முற்றிலும் வேறு வேறான இரு உலகங்களுக்கிடையே பயணித்ததுபோல

அஸ்விதா ரேஷ்மா ரேஷ்மியுடன்

அங்கே காத்திருடந்த ரேஷ்மா ரேஷ்மி இரட்டைச்சகோதரிகளும் அவர்களின் குட்டி அக்காவான அஸ்விதாவின் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவளித்து  குழந்தைகளின் அன்பில் நனைந்துவிட்டு பின்னர் அவர்களுடன் சத்திரம் வீடு.

அங்கு லட்டு மற்றும் சிபியுடன் விளையாட்டு தற்படங்கள் காணொளிகள்,  என வழக்கமான பரிபாடிகள்  முடிந்ததும், அனைத்துக்குழந்தைகளுடனும் ஐஸ்க்ரீம் கடைக்கு சென்றேன்.

அதிகமாக குளிரூட்டப்பட்டு மெனக்கெட்டு  செயற்கையாய் இருட்டாக்கப்பட்ட அந்த இடத்தில் வெண்கலக்கடையில் யானைபோல நாங்கள் ஆராவாரமாய் நுழைந்தோம்

முதல்சுற்றில் எல்லோரும் என்ன சாப்பிடுவதென்பது முடிவாகவே அதிக நேரமானது.  நினைத்து நினைத்து மாற்றிக்கொண்டும் கீச்சுக்குரலில் கூச்சலும் பூசலுமாக இருந்தார்கள். பில் போடும் பெண் திகைத்துப்போயிருந்தாள்

லட்டு

காம்பஸ் வைத்து வரைந்ததுபோன்ற  உருண்டை முகத்துடனும் உப்பிய கன்னங்களுடனும் இருக்கும் லட்டு என நாமகரணம் கொண்ட வைஷிகா தனக்கு‘’ செல்ஃபி’’ ஐஸ் க்ரீம் வேணும் என்றதும் நானும் திகைத்துப்போனேன். உண்மையில் அப்படி ஒன்று இருக்குமோ என்று சந்தேகத்தில் சிப்பந்திகளிடம் கேட்க அப்படியேதும் இல்லையென்றார்கள்

ஆனால் ஆவேசத்தில்  லட்டுவிற்கு சாமி வந்துவிட்டது ’’செல்ஃபி ஐஸ் கிரீம்’’ ’’செல்ஃபி ஐஸ் கிரீம் ‘’ என்று ஒரே பாட்டாக பாடிக்கொண்டிருக்க, நிலைமை தீவிரமாகிக்கொண்டிருந்தது.

இந்தப்போதாதவேளையில் புறப்பட்டு ஒரு இளைஞன் அவன் காதலியுடன் அருகில் இருக்கும் மேசையில் அமர்ந்திருந்தான். அந்தப்பெண் பேசிக்கொண்டிருக இவன் மெளனமாய் கேட்டுகொண்டு தலையை மட்டும் அவ்வப்போது சம்பிரதாயத்துக்கு அசைத்து ஆமோதித்துக்கொண்டிருத்ததை பார்க்கையில், அனேகமாக கல்யாணத்தில் முடியும் காதலைப்போலத்தான் இருந்தது.  நாங்கள் செய்துகொண்டிருந்த அமர்க்களத்தில், அந்தப்பெண், இல்லறமென்னும் அமைப்பின் மீதும் திருமணம் மற்றும் குழந்தைப்பேற்றின் மீதுமான அடிப்படை நம்பிக்கையையே இழந்துவிடுவாளென்று அஞ்சிய அந்த இளைஞன் ஆபத்பாந்தவனாக முன்வந்து ’’ஒருவேளை பாப்பா கேட்கறது ’’குல்ஃபி ஐஸ்கிரீமா இருக்குமோ என்னவோ ’’ என்றான்

சட்டென்று  மலையிறங்கிய லட்டு,  ஆமா , ’குல்ஃபிதான் எனக்கு பேரு மறந்திருச்சு’ என்று திருவாய் மலர்ந்தருளினாள்

பின்னர் ஆளாளுக்கு வேண்டியதை வாங்கி மாற்றி மாற்றி எச்சில் பன்ணிக்கொண்டும்  பரஸ்பரம் ஊட்டிக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம் இடையிடையே  செல்ஃபி ஐஸ் க்ரீம் என்னும் நாமகரணத்தை  நியாயம் பண்ணும் விதமாக  ஏராளமாய் தற்படங்கள் வேறு எடுத்துக்கொண்டோம்

திடிரென சிபிக்கு சரண் அண்ணாவிடம் பேசனும்னு தோன்றியதால் விடுதியில் இருந்த அவனை அலைபேசியில் அழைத்து 6 பேருமாக மாற்றி மாற்றி பேசினோம். குழந்தைகள் அனேகமாக ஒரே கேள்வியை பலமுறை  பல மாடுலேஷன்களில் கேட்டார்கள் இரண்டாம் சுற்றில் லட்டு போனை பிடுங்கி ’’சரண் நல்லா படிக்கணும்,  அப்பத்தான் தேவிம்மா உனக்கும் ஐஸ் கிரீம் வாங்கித்தருவாங்க’’ என்று  ஒரு உறுதிப்பாட்டினையும் அளித்தாள்.

அடுத்த சுற்றுக்கும் எல்லோருமாய் அவனிடம் பேச தயாரனபோதுதான்  சரண் குரல் கம்ம, தனக்கு மறுநாள் கணக்கு பரீக்‌ஷை இருப்பதால் நண்பர்களுடன் தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்பதாகவும் இனி போனில் அழைக்கவேண்டாமென்றும் கேட்டுக்கொண்டதால் அருள் கூர்ந்து பேச்சுவார்த்தையை அத்துடன்  முடித்துக்கொண்டோம்

சுதந்திர தினத்தன்று விடுப்பு எடுக்க முடியாமல் வேலைக்கு வந்திருந்த அந்த கடைச் சிப்பந்திகள், நாங்கள் சீக்கிரம் கடையிலிருந்து கிளம்பவேண்டி அவரவர் குலசாமிக்கு நேர்ந்துகொண்டிருக்கக்கூடும். ஒரு வழியாக நாங்கள் புறப்பட்ட பின்னர் அந்த இடம் போர் முடிந்த போர்க்களம் போல் இருந்திருக்ககூடும். ஒரு யூகம்தான் ஏனெனில் நாங்கள், திரும்பிப்பார்க்கவில்லை

பின்னர்  ஜவுளி நகரம் எனப்படும் ஈரோட்டிற்கு வந்துவிட்டு புடவை எடுக்காமல் திரும்புவதை மூதாதையர்களும் தெய்வங்களும் கூட மன்னிக்க மாட்டார்கள் என்பதால்  அத்தகைய  அறப்பிழை  ஏதும் செய்யாமல்   துணிக்கடைகளுக்கு சென்றோம்.6ம் 6 மாய் மொத்தம் 12 மணி நேர ரயில் பயணத்தில் அங்கு வந்திருந்த, சரண் அப்பாவையும் விசாலமனதுடன் உடன்  அழைத்துக்கொண்டோம்.

மோஹனாவும் நானுமாய் உற்சாகமாய் புடவைகளைத்  தொட்டும், தடவியும், சிலவற்றை வாசனைகூட பார்த்தும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தோம். ’’எதற்கு இத்தனை புடவைகள்? உனக்கு மட்டும்தானே ஷாப்பிங்? கொஞ்சநாள் முன்னாடி வாங்கினெதெல்லாம் என்னாச்சு? போன்ற, ஒரு போதும்  பதிலளிக்கப்படாத  கேள்விகளின் பொருளின்மையை சரண் அப்பா துவக்க வருடங்களிலேயே உணர்ந்திருந்ததால் அதுபோன்ற வீண் முயற்சிகளில் எல்லாம் இப்போது ஈடுபடுவதில்லை

புதுமணப்பெண் போல குனிந்தபடியே  வாட்ஸ் அப்பிலோ, அன்றி உள்ளத்தின் உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டாத நிர்மலமான பளிங்குப்பரப்பினைப்போன்ற முகத்துடனோ அங்கு இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருப்பார். அரைமணிக்கொருமுறை ஒருவேளை முடிதிருபோமா என்னும் நப்பாசையில் தலையை உயர்த்தி பார்த்துக்கொள்ளுவதும் உண்டு. ஜென் துறவிகளின் நிச்சலன முகத்தை பார்க்காதவர்கள் அச்சமயங்களில் அவர் முகத்தை பார்த்துக்கொள்ளலாம்.

ஒருவழியாக எல்லாம் முடிந்து அவரை ரயிலடியிலும் குழந்தைகளை அவரவர் வீட்டிலுமாய் விட்டு விட்டு நான் பொள்ளாச்சிக்குப் புறப்பட்டேன்

இரவாகிவிட்டது, விடுமுறைதானென்றாலும் அதிகம் போக்குவரத்து  இல்லாமல், எப்போதாவது, ஒளிரும் சிவப்பு விளக்குகளுடன் கடந்துசெல்லும் இருசக்கர வாகனங்களைத்தவிர வேறு சஞ்சாரமற்ற  நீண்ட கரிய  நனைந்திருந்த காங்கேயம்  பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் பயணிக்கையில் காலை நண்பர் செளந்தருடன் பேசிக்கொண்டிருந்த மகிழ்ச்சியும்,, ரேஷ்மா ரேஷ்மி நான் புறப்படுகையில் முழங்கால்களை இருபுறமும் கட்டிக்கொண்டு ’’அத்தை போகாதே! என கதறியழுததின் துக்கமும், காரின் பின் சீட்டிலிருந்து கமழ்ந்துகொண்டிருந்த புதுத்துணிகளின் வாசனையுமாய்   கலவையான மனநிலையிலிருந்தேன்.

இன்று இன்னுமோர் அருளப்பட்ட நாள்  எனக்கு,15/8/18

மலைத்தொடர்ச்சி

 நேற்று மாலை கல்லூரியிலிருந்து உலர்சலவையகம் செல்லும் பொருட்டு ஐயப்பன் கோவில் சாலை வழியே செல்கையில் சாலையை கடந்து வரதராஜ் செல்வதைப்பார்த்தேன். வரதராஜ் என்னுடன் 5 ஆம் வகுப்பில் படித்த என் விரோதி. ஆம் தோழனென்று சொல்லமுடியாத அளவிற்கு நாங்களிருவரும்  விரோதத்துடன் குருதிக்களத்தில் சந்தித்திருக்கிறோம்.

அப்பா அம்மாவின் பணியிட மாறுதல்களின் போதெல்லாம்  சகோதரிகளான எங்களிருவரின் வாழிடங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே வந்த இளம்பருவத்தில் மழலையர் வகுப்பிலிருந்து 2 ஆம் வகுப்பு வரை பொள்ளாச்சி புனித லூர்து ஆங்கிலப்பள்ளியிலும் 3 ஆம் வகுப்பு வேட்டைக்காரன் புதூர் துவக்கப்பள்ளியிலும் 4 தாராபுரம் அலோசியஸ் கான்வென்டிலும் 5 பொள்ளாச்சி நேதாஜி ஆரம்பப்பள்ளியிலுமாக படித்தேன்

ஒருமுறை 5 ஆம் வகுப்பில்  மைதானத்தில் விளையாடுகையில் அனைவரும்  அவரவர் குடும்ப உறுப்பினர்களை பற்றிப் பெருமையாக பேசிக்கொண்டிருந்தபோது, எனக்கு சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறதென்று தெரியவில்லை

எப்போதுமே அச்சமூட்டும் ஆளுமையாக அப்பாவும், அவசர அவசரமாக காலையில் கிளம்பிசென்று ,அவிழ்ந்த இரட்டைச்சடையும் அழுக்கு உடைகளுமாய் களைத்து பசியுடன் தாழிட்டுப்பூட்டிய கதவின் முன்னால் மாலையில் காத்திருக்கும் 2 சிறுமிகளை விட அதிகம் சோர்வுடன்  தாமதமாக வரும் அம்மா என்னவாக இருக்கிறார்கள் என்னும் சரியான அறிதலும் இல்லாததால் அதையெல்லாம் சொல்லி பீற்றிக்கொள்ள முடியவில்லை

உடன் என் சின்னசித்தப்பாவின் நினைவு வந்தது. அவர் பெயர் சிவலிங்கம் ஆனால் அவர் அடிக்கடி சபரிமலைஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுக்கொண்டு செல்வதால் நான் அவரை இன்ற் வரையிலுமே ஐயப்பா என்றுதான் அழைக்கிறேன்

வேட்டைக்காரன் புதூரில்  நான்இருந்த  ஒரு வருட பொற்காலத்தில்  ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப்பணிகள் செய்துகொண்டிருந்த அவர் விடுமுறை நாட்களில் என்னையும் பணியிடத்திற்கு அழைத்துச்செல்வார். சலித்துக்குழைத்த செம்மண்ணில் ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் எனக்கு செய்துதருவார், அவற்றை உலரவைத்து அங்கு விளையாடிகொண்டிருப்பேன் அவையெல்லாம் எனக்கு அப்போது பெரும்பொக்கிஷங்கள்.

அது போன்றதொரு நாளில் சித்தப்பா என்னிடம் ’’இதோ இது நான் கட்டிமுடித்தது’’ என்று  என்னிடம் சுட்டிக்காடிய இடத்தில் ஏதேனும் ஒரு கட்டிடம் அன்று இருந்திருக்கும் ஆனால் எனக்கு அப்போது கண்ணில் பட்டது  பிரம்மாண்டமாக பின்புலத்தில் நின்றிருந்த மேற்குத்தொடர்ச்சி மலை. அந்த  அறியா வயதில் வேலையாட்கள் கருங்கற்களை தலையில் சுமந்துசென்று கொண்டிருந்த சூழலில்  சொல்லப்பட்டதால் நான் சத்தியத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை என் சித்தப்பாவால்தான் கட்டப்பட்டது என்று உளமார நம்பிவிட்டேன்

எனவேநானும் என் பங்கிற்கு மேற்குத் தொடர்ச்சிமலையைக்காட்டி இந்த மலை   என் சித்தப்பா கட்டியது என்று சொன்னதும் வரதராஜ் விளையாட்டை நிறுத்திவிட்டு வந்து எதை ? என்று மறுபடியும் கேட்டான் நான் இன்னும் மகிழ்ந்து மலையைக்காட்டினேன்

அவன் அட்டகசமாக சிரித்து ’’ஏன் இப்படி பொய் சொல்லறே? இதெல்லாம் யாராச்சும் கட்டுவாங்களா,உன் சித்தப்பாவெல்லாம் இதை  கட்டியிருக்கவே முடியாது ‘’என்றான்

எனக்கு வந்த ஆத்திரத்தில்  கண்ணீருடன் இன்னும் ’’ இல்லை இது என் சித்தப்பா கட்டினதுதான்’’ என்று வீறிட்டேன்

அவனுக்கும் கோபம்வந்து ’’மலையெல்லாம் அப்படி  யாரும் கட்டமுடியாது’’ என்றான்

’’அப்போ அதை யாரு  கட்டினதுன்னு நீ சொல்லு’’ என்ற என் கேள்விக்கு , பிரபஞ்சக்கட்டுமானம் பற்றியெல்லாம் அறிதல் இல்லாததால், பதில் தெரியாத வரதராஜ் திகைத்துப்போய் ’’அது தெரியாது ஆனாலும் நீ சொல்லறது பொய்’’ என்று கத்திவிட்டு, அனைவர் முன்னாலும் அவனுக்கு பதில் தெரியாத கேள்வியைக் கேட்டதற்காக என் மீது பாய்ந்து கழுத்திலும் முகத்திலுமாய் அடிக்க துவங்கினான்.

பதிலுக்கு நானும் அவன் கன்னங்களிலும் கைகளிலும் கிள்ளி, அவனும் என்னைப்பிடுங்கி, குருதிக்களமாகியது பள்ளிமைதானம்

வாத்தியார் வந்து இருவருக்கும் உள்ளங்கை பழுத்துச்சிவக்க மர ஸ்கேலில் நிறைய அடி கொடுத்ததுடன் வெளியே மணலில் முட்டிபோடவும் செய்துவிட்டார்

கண்ணீருடன் முட்டிபோட்டுக்கொண்டிருந்த எனக்கு நகக்காயங்களோ அடிவாங்கியதோ கூட வலிக்கவில்லை, அப்போதும் என்முன்னே மாறா உண்மையென நின்றிருந்த மலைத்தொடர்ச்சியை சித்தப்பா கட்டவில்லை என்று எப்படி இவன் சொல்லப்போகலாமென்னும் ஆற்றாமையில் துக்கம் பொங்கிபொங்கி வந்துகொண்டிருந்தது.

எனக்கும் வரதராஜுக்கும் ஏற்கனவே முன்விரோதமும் இருந்தது    என் கிறுக்கல் கையெழுத்தை மற்றவர்களிடம் காட்டி கேலி செய்யும் பொருட்டு என் சிலேட்டை பலவந்தமாக என்னிடமிருந்து ஒருமுறை பறித்துச்சென்றதும்,  உட்கார பெஞ்சுகள் கூட இல்லாத அந்த எளிய ஓலைக்கூரையிட்ட பள்ளிக்கூட அறையின் சுவற்றில்  சாய்ந்து கால்நீட்டி அமர்ந்து வாயைக்குவித்து என்னமோ  தீவிரமாக நான் எழுதிக்கொண்டிருக்கையில் என் கால்களை தாண்டி குதித்துச்சென்றதுமாய் ஏற்கனவே எங்களிருவருக்கும் இடையில் விரோதம் புகைந்துகொண்டுதானிருந்தது. பெண்பிள்ளைகளின்  காலை பையன்கள் தாண்டும் அடாத காரியத்தையும் செய்த வரதராஜின் மேலான வன்மம்  மலை விவகாரத்தினால்  புகையும் நிலையிலிருந்து முன்னேறி  தழலாடி எரிந்தது

உண்மையில் 3 ஆம் வகுப்பில் படிக்கையில் நான்  சின்னச்சித்தப்பாவுடன்  மிகவும் நெருக்கமாக இருந்தேன்

இரவில் அவருக்கான தனியறையில் அவருடனே படுத்துறங்குவது எனக்கான ஒரு மிகச்சிறப்பான, பிரத்யேகமான சலுகையாக இருந்தது.  அவர் எனக்கு தினமும் அமிர்தாஞ்சனம் தடவிவிடுவதும் அவருடனே கண்ணைசுழற்றிக்கொண்டு தூக்கம் வரும் வரையில் வானொலி கேட்டுக்கொண்டிருப்பதும் வாடிக்கை. இன்றும் அமிர்தாஞ்சனம் தடவிக்கொண்டுதான் உறங்கச்செல்கிறேன். இன்று வரையிலும் வானொலி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் சொல்லவதெல்லாமே எனக்கு சத்தியத்தைத்தவிர வேறேதுமில்லை அனைத்தையும் மாற்றும் ஒரு சம்பவமாக சித்தப்பாவின் திருமணம் நடந்தது

அவரது திருமண நாளின் இரவிலும் மூக்கு மட்டும் உடைந்த என் மரப்பாச்சி பொம்மையையும், முன்னொரு காலத்தில் ஆரஞ்சு நிறத்திலிருந்து பின்னர்  ஆணா பெண்ணா என்று கூட பிரித்தரிய முடியா அரூபமாக  சகல இடங்களிலும் நசுங்கிய ஒரு பிளாஸ்டிக் பொம்மையையும் கட்டி அணைத்துக்கொண்டு வழக்கம்போல அவரது அறைக்கு  உறங்கச்சென்ற என்னை வலுக்கட்டாயமாக பலர் ஆக்ரோஷமாக தடுத்ததும், படுத்துப்புரண்டு அழுத என்னை யாரோ இழுத்துக்கொண்டு  போனதிலும் கூட வருத்தமில்லை, அப்போதும்  என்னைத்திரும்பிக்கூட பார்க்காமல் பட்டுவேட்டி சட்டையுடன் நண்பர்களுடன் கைகளைகட்டியபடி சிரித்துப்பேசிக்கொண்டிருந்த சித்தப்பாவையும், தையற்கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததால் பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வந்த,   பச்சை நூலில் ஜோடிக்கிளிகளையும் கீழே சிவலிங்கம் என்று சித்தப்பாவின் பெயரையும் எம்பிராய்டரி  செய்த,  4 ஓரங்களிலும் லேஸ் வைத்திருந்த வெள்ளை தலையணை உறையுடன் அந்த அறைக்குள், நுழைந்த தடித்த உதடுகளுடன் இருந்த புது சித்தியையும் அந்தகணத்திலிருந்து வெறுத்தேன்.

என் சித்தப்பாவிற்கும் எனக்குமிடையில் இப்படி ஆயிரமிருக்கலாம் எனினும் வரதராஜ் போன்ற வீணர்கள் அவரைக்குறித்தெல்லலாம் பேச அனுமதிக்க முடியதல்லவா?

சென்ற நவம்பரில் சித்தப்பாவின் 31 வயதான் மறுமகன் அநியாயமாய் சாலைவிபத்தில் அடிபட்டு உயிரழந்த போது, அரசு மருத்துவமனை பிணக்கிடங்கிற்கு வெளியெ பெரும் பூவரசமரமொன்றின் அடியில் அமர்ந்திருந்த தலை முழுவதும் நரைத்துவிட்ட  சித்தப்பாவின் மடியில்  கதறியபடி  விழுந்த என் தலையைத்தடவி, நல்லா  இருக்கியா தேவி என்று கேட்ட அவருக்கு என்மேல் எந்தகக்சப்பும் இல்லைதானென்று நினைக்கிறேன்

 வரதராஜுக்கு இது எதுவும் நினைவிலிருக்காது எனினும் எனக்கு வரதராஜையும் அந்த சண்டையையும் அப்படியே துல்லியமாக  இப்போதும்  கணம் கணமாக நினைவிலிருந்து கொண்டுவர முடிகின்றது.

முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரையில் மேற்குதொடர்ச்சி மலை எங்கிருந்து  துவங்கி எங்கு முடிவடைகின்றது என்று  எழுத வேண்டியிருந்தது, அப்போது அது முழுவதையும் கட்டியது என் சித்தப்பாதான் என்ற வரலாற்றுக்குறிப்பையும் எழுத நினைத்தேன்  உள்ளூரில் இருக்கும் வரதராஜுக்கே அதுகுறித்து தெரியாமல் இருக்கையில் தில்லியில் இருக்கும் மினிஸ்ட்ரி ஆட்களுக்கு  தெரிந்திருக்க வாய்ப்பில்லை  என்பதால்  அந்த உண்மையை அதில் சேர்க்கவில்லை

இப்போதிருக்கும் வீட்டிலிருந்து கைநீட்டினால் தொட்டுவிடும் தூரத்திலேதான் இருக்கின்றது என் சித்தப்பா கட்டிய அந்த மலைத்தொடர்ச்சி

17

இன்று செந்தில் விடுப்பெடுத்துவிட்டதால் 17 ல் கல்லூரி சென்றேன். 12 கிலோமீட்டரை 1 மணி நேரத்தில் கடக்கும்,  உண்மையிலேயெ 18 பட்டிகளைச் சுற்றிக்கொண்டு நேராக கல்லூரிக்கே செல்லும்  பேருந்து 17. நான் எப்போதாவது செல்லும்போது சொல்லிவைத்தாற்போல சிலநாட்களில் வழியில் பழுதாகி நின்று இதுவரையிலும் ஒருமுறைகூட தாமதமாக கல்லூரிக்குச்சென்றே இருக்காத என்னை பதட்டப்படுத்துவதும் 17க்கு வாடிக்கை. இந்த முறையும் அப்படி ஆகுமோவென்று அச்சப்பட்டுக்கொண்டேதான் ஏறினேன்.

ஓட்டுனர் வழக்கமாக இருப்பவரேதான். தாட்டியாக அல்லது புஷ்டியாக அல்லது கட்டுமஸ்தான  அல்லது வாட்டசாட்டமாக இருப்பவர். எப்போதும் என்னைக்கண்டதும் அவர் பார்வையிலும் உடல்மொழியிலும் ஒரு பணிவு தென்படும் அது ஆசிரியப்பணிக்கென்றேயான ஒரு மரியாதை. என்னிடம் ஒரு புன்னகையைத்தவிர ஒருவார்த்தைகூட இதுவரை பேசியதில்லை எனினும் எப்படியோ எனக்கான இருக்கையை என்னை தூரத்தில் கண்டதுமே காலியாக இருக்கும்படி செய்துவிடுவார். இன்றும் அதே , ஓட்டுனரை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்படி அமைந்துள்ள இருக்கை.  ஒருமுறை நல்ல மழைநாளில் நான் ஏறியதும் அவர் வண்டி இஞ்சினை அணைத்துவிட்டு  எழுந்து வந்து அவரது துண்டால்  அந்த இருக்கையை துடைத்து விட்டார். இத்தனை மரியாதைக்கு உரியவர்களா உண்மையில் ஆசிரியர்கள் ! என்று அன்று நினைத்துக்கொண்டெ இருந்தேன்

வழக்கமான அரசுப்பள்ளிச் சீருடை மாணவர்கள், மில் தொழிலாளர்கள். எப்போதும் நல்ல நல்ல இளையராஜா பாடல்களை அலைபேசியில் அனைவருக்குமாய் ஒலிக்கச்செய்யும் இளைஞர்கள்,(மயிலே மயிலே உன் தோகை எங்கே! ஒலித்தது நான் ஏறும் போது) மல்லிகைப்பூச்சரம் பேருந்துக்குள்ளேயே விற்கும்  பெண்மணி,  இவர்களுடன் இன்று புதிதாக 2 சேவல்களும் ஒரு கருப்புக்குட்டி ஆடும்.

அடுத்தடுத்த நிறுத்தங்களில் நல்ல கூட்டம், தேவனூர் புதூரில் கோவில் திருவிழா, மைக்செட்டில் உரக்க  திருகுக்கொலுசை தொலைத்தவர்கள் ஜோடியைக்காட்டி ஆஃபீசில் அதைப்பெற்றுக்கொள்ளலாமென்றும், தீர்த்தக்குடம் எடுப்பவரகள்  தெருமுனைக்கு வந்து சேரும்படியும், கரகாட்டக்குழுவினர் குளித்து (!) 1 மணி நேரத்தில் தயாராகும்படியும் அறிவித்தார்கள்

வீடுகளும் தெருவும் சாணமிட்டுமெழுகி  பெரிது பெரிதாய் கோலமிட்டிருந்தது. இன்னும் அதிகபட்சமாய் ஒரு பத்து  வருடத்திற்கு வேணுமானால் இதுபோன்ற காட்சிகளைக் காணக்கிடைக்கும் என்றெண்ணினேன். நகரமயமாக்கலில் திருவிழாக்களும், கோலமும்,  தீர்த்தக்குடமும், நாட்டார்கலைகளும்,  மறையும் காலம் வெகு அருகில்தான் இருக்கின்றது. இதுபோன்ற கூடுகைகளுக்கேயான பிரத்யேக மகிழ்வுகளை வரும்தலைமுறையினர் முற்றிலுமாக இழக்கப்போகிறார்கள்.

கோவிலைத்தாண்டுகையில் ஒரு அண்டாவிலிருந்து ராகிகூழை  வினியோகித்துக்கொண்டிருந்ததை பார்க்கமுடிந்தது. நிறைய இச்சிலிபிச்சிலி சாமான்கள் விற்கும்  கடைகள் சாலையெங்கும் முளைத்திருந்தது அனேகமாய் அனைத்திலும் பெண்களும் சிறுவர்களும் இருந்தார்கள்.

பிரதான சாலை  வருமுன்னரே பேருந்து நிரம்பி வழிந்தது, அதிகம் கல்லூரி மாணவர்கள், பெரும்பாலும் யாரும் அலைபேசியிலிருந்து தலை நிமிரவோ வெளியில் பார்க்கவோ  இல்லை. யாரோ தலையில் வைத்திருந்த  செண்பகம் பேருந்துமுழுதுமாய் கமழ்ந்தது.

பருத்தி மில்லிற்கு செல்லும் பெண்கள் வயர்க்கூடையுடன் இறங்கினார்கள், அத்தனைபேரும்  வெற்றிலையும் புகையிலையும் மென்றபடியும், கடைவாயில் வழியும் எச்சிலை லாவகமாய் துடைத்தபடியுமிருந்தார்கள். அது இல்லாமல் மில்லிலும்  , வேலைக்கு வருமுன்னரும்   மாலை வீடு திரும்பியபின்னரும் வீட்டிலும் கடினமாக உழைக்க முடியாதுபோலும். இதுபோல எனக்கு எது லாகிரிவஸ்து என யோசித்தேன் சந்தேகமில்லாமல் ஜெ வின் எழுத்துக்கள தான்.

வழியில் பட்டுக்கன்னங்களில் அப்பியிருந்த பவுடர்பூச்சில் கண்ணீர்த்தடத்துடன் ஒரு குட்டிப்பெண் சீருடையில் பள்ளிப் பேருந்திற்கு வீட்டு வாசலில் காத்திருந்தாள் ,  உடன் அவள் அம்மா நைட்டியுடன் . இப்போது நைட்டி பலருக்கு பகல்டி .

ஒரு அன்னைப்பன்றி 10/ 12 ஒரே மாதிரியான குட்டிகளுடன்  சாலையைக்கடந்து காட்டிற்குள் சென்றது. வெண்முரசுக்குப்பின்னர் இந்த பன்றிக்குட்டிகளின் பேரில்  ஏகத்துக்கும் பிரியமாகிவிட்டது.

சமத்தூர் பிரதான சாலைக்குச் செல்லும் வழியிலிருக்கும் ஓடை முற்றிலும் காய்ந்து  ஒற்றையடித் தடம்போல உடன் வந்துகொண்டிருந்தது . ஓடைக்கரையெங்கும் யானைநெருஞ்சில்  வெளிறிய மஞ்சளில் பூக்கள் செறிந்து அடர்ந்து வளர்ந்திருந்தது, உடன் மனதில் பெடாலியம் மூயூரக்ஸ் என்று நினவு வந்தது,    தாவரவியல் பெயர்களை நினைப்பதிலிருந்து மீட்சியில்லை எப்போதும்,

என் இறுதிப்பயணத்தில் கூட என் மீது போடப்படுவது chrysanthemum ,    calendula,   jasminum  என்று நினைத்தபடியேதான் மின்மயானம் போவேன் போலிருக்கிறது. அப்போதெல்லாம் நினைக்கமுடியுமாவென்றும் தெரியல்லை, யாரிடமும் கேட்கவும் முடியாதே!

Near death experience  குறித்து எழுதினவர்களில் சிலர் பதைபதைத்தபடி தன்  உடலின் அருகில் தானே நின்றதை  குறிப்பிட்டிருந்தார்கள். என் மீது  அடர் நீல ஜகரண்டா போடப்படவில்லையெனில் கட்டாயம் நான் வருந்துவேன். ஏப்ரல் மே வில் இறந்தால்தான் ஜகரண்டா கிடைக்கும்,  அல்லது பருவம் தப்பியும் எனக்கென எதேனும் பூத்தாலும் பூத்திருக்கும்.

சமத்தூருக்கு முந்தைய நிறுத்தத்தில் ஓட்டுநரின் மனைவி ஒரு கூடையில் அவருக்கான சாப்பாட்டுடன் காத்திருந்தார், மழை தூறியதால்  கொஞ்சமாய் நனைந்திருந்தார், மவுனமாக கூடையைகொடுத்துவிட்டு சாலையைக்கடந்து மறுபக்கம் சென்றார். இரண்டுபேரும் பேசிக்கொள்ளவும் இல்லை ஒரு புன்னகையுமில்லை, ஏன்  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. திருமணமாகி 25 வருடங்களிருக்கலாம்.  காதலும் வெட்கமுமாய் அந்தப்பெண்ணூம் காத்திருந்திருப்பாள் ஒருகாலத்தில், இவரும் பணி முடிந்து பரிசும் பூக்களும் இனிப்புமாய் வீடு வந்திருப்பார், ஆணும் பென்ணுமாய் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்ட ஆரம்பக்காலத்திற்குப்பின்னர் குடும்பமும், பிள்ளைகளும்,கடமையுமாய் மூழ்கத்துவங்கி எந்தப்புள்ளியில் இவர்கள் ஒரே கூரையின் கீழ் ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ளும் வாழ்விற்கு தயாராகி இருப்பார்கள்  என்றெண்ணிக்கொண்டேன். இல்லறமென்னும் கற்பிதம்!

பூரிசிரவஸும் பிரேமையும் 25 வருடங்கள் கழித்து சந்தித்துக்கொண்ட இன்றைய வெண்முரசினை எதற்காகவோ நினைத்துக்கொண்டேன்.

தாவரவியல் துறை மாணவிகளும்  பேருந்தில் இருந்தனர்.  புர்க்காவுடன் ஏறியது பாத்திமாபர்வீன்தான் என்று அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது, வகுப்பில் அவள் புர்க்காவை எடுத்துவிடுகிறாளென்றாலும்  பட்டையாக மையெழுதிய அகன்ற கண்களைக்கொண்டெ அவளை எனக்கு அடையாளம் தெரிந்தது. உழவர் சந்தைக்கு வெளியில் கீரைக்கட்டுக்களோடு பிரண்டைக்கொடிகளைக்கட்டி விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்

9 க்கு 2 நிமிடமிருக்கையில் கல்லூரிக்கு முன்பாக நின்றது பேருந்து. இப்படி கொட்டுவாயில் கொண்டு வந்துநிறுத்தாமல் 10 நிமிஷம் முன்னதாக வந்தால் நான் தினமும் இப்படி மகிழ்ந்து பயணிக்கலாம்.   அடுத்து செந்தில் விடுப்பெடுக்கும் நாள் வரையிலும்    ill miss   you dear 17

 

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑