தேர்தல் திருவிழா
தேர்தல் கமிஷன் அறிவிப்பு வந்ததிலிருந்தே தேர்தல் நடக்குமா நடக்காதா என்று இரு விதமான கருத்துக்கள் வலுவாக நிலவி வந்தது. பெருந்தொற்று காரணமாக தேர்தல் நடைபெறாது என்றே பரவலாக கருத்து நிலவியது. ஆனால் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறும் என்று பிப்ரவரி 11 ம் தேதி இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சென்னையில் அறிவித்த பின்னர்தான் பலருக்கு நம்பிக்கையே வந்தது.
தமிழ்நாட்டில். ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் வழக்கமான தேர்தல் நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெருந்தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக 1500 வாக்காளர்கள் மட்டும் என நிர்ணயிக்கப்பட்டது வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு, அதற்கேற்ப தேர்தல் பணியாளர்களும் அதிகரிக்க பட்டனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கும் வசதியும் இம்முறை இருந்தது.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் களம் கண்டார்கள், இவர்களில் .2 இடைப்பாலினத்தவர்களும் இருந்தார்கள். அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள், குறைந்த பட்சமாக வால்பாறையில் 6 வேட்பாளர்களும் இருந்தார்கள்
வேட்பு மனு தாக்கலுக்கு, பரிசீலனைக்கு, திரும்ப பெறுவதற்கான கால அட்டவணைகள் வழக்கம்போலவே வெளியாகின. தமிழகத்தில் வாக்களிக்க தகுதியானோர் இம்முறை 6 கோடியே 28 லட்சம் பேர் இருந்தனர்
கடந்த 50 வருடங்களாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரிந்த இரு பிரதான கட்சிகளின் முக்கிய தலைவர்களான செல்வி ஜெயலலிதாவும் கருணாநிதியும் உயிரோடு இல்லாத சமயத்தில் நடக்கும் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் அனைவராலும் கவனிக்கப்படும் ஒன்றாகவே இருந்தது. கட்சியினருக்கு இது வாழ்வா சாவா என்னும் முனையிலிருந்து நடக்கும் தேர்தலானது
தேர்தல் கூட்டணி அமைப்பதில் தொடங்கிய இழிபறி சில நாட்களுக்கு நீடித்தது பல எதிர்பாரா கூட்டணிகள் உறுதியானது, சில கட்சிகள் வெளியேறின, சில கட்சிகள் புதிதாக இணைந்தன, பல கட்சித் தாவல்கள் நடந்தன பலருக்கு ஏமாற்றத்தையும், பலருக்கு அதிருப்தியும், சிலருக்கு திருப்தியையும் அளித்தது இந்த தேர்தலுக்கான கூட்டணிகள் .பல திரைப்பிரபலங்கள் இம்முறை களம் கண்டார்கள்.
தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பே முடித்தாக வேண்டிய பரப்புரை பரபரப்பாக துவங்கியது. தமிழக அரசியல் வரலாறு இதுவரை கண்டிராத அளவில் தேர்தல் பரப்புரைகளில் அனல் வீசியது மிக வித்தியாசமான கீழ்த்தரமான பரப்புரைகள் அநேகமாக எல்லாக் கட்சியிலும் நடந்தது பொது வாழ்வை மட்டுமல்லாது, குடும்ப வாழ்வை, அந்தரங்க வாழ்வை கூட விமர்சித்தார்கள் .வேட்பளர்களுக்கு மக்கள் போட்டுபோட்டுக்கொண்டு ஆரத்தி எடுத்தார்கள் வேட்பாளர்கள் நடனமாடினார்கள். மேடைபோட்டு சினிமா பாடல்களுக்கு நடனங்களை ஏற்பாடு செய்தார்கள்.
சாலையில் வாகன போக்குவரத்தை பல மணி நேரம் ஸ்தம்பிக்க செய்து பிரச்சாரம் செய்தார்கள். முன்னறிவிப்பின்றி ஒரு முக்கிய பிரமுகர் கடலில் குதித்து, மீனவர்களுடன் நீந்தியபடியே அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார், மீன் பிடித்தார். இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினார்கள். கடைகளை அடைக்க சொல்லி கல்லெறிந்தார்கள். ஆட்சேபணைக்குரிய விஷயங்களை இன்ஸ்டாகிராமில் பதிந்துவிட்டு பின்னர் நான் அதை செய்யவே இல்லை நாசவேலைதான் காரணமென்றார்கள் சில கட்சிகளில் வேட்பாளர்களை வலை வீசி தேடினார்கள்.
மிகவும் எதிர்பார்க்கபட்ட ஒரு பிரமுகர் சிறையிலிருந்து வெளிவந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு பழிதீர்க்க போ வதாக வஞ்சினமெல்லாம் உரைத்துவிட்டு பின்னர் சில நாட்களிலேயே அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளுவதாக அறிவித்தார்.
ஒரு முக்கிய கட்சித்தலைவரின் மகன் பிரச்சாரத்தின் போது கட்சியினருக்கு உண்வளிக்க, சொல்லாமல் கொள்ளாமல் சாலையோர கடையிலிருந்த பிரியாணி அண்டாவையே வண்டியில் தூக்கிகொண்டு சென்றார்.
மிக சுவாரசியமான சில விஷயங்களும் நடந்தது ஒரு முக்கிய வேட்பாளர் தனக்கிருந்த உடல் பிரச்சினைகள் எல்லாம் எடுத்துக் கூறினார் ’’எனக்கு பிபி சுகர் இருக்குது, உடல் எடையே 8 கிலோ குறைந்து நிச்சயமா எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருங்க’’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்’
இன்னொருவரோ ’’இத்தனை பாடுபட்டு இந்த தொகுதிகளில் எத்தனை வேலைகளை செய்து இருக்கிறேன் என்னை நீங்கள் வெற்றி பெற செய்யாவிட்டால் இதே தொகுதியில் நான் உயிரை விடுவேன்’’ என்று பிளாக் மெயில் செய்து கொண்டிருந்தார். இன்னும் ஒரு படி மேலே போய் இன்னொரு வேட்பாளர் ’’எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கலைன்னா சூனியம் வச்சிருக்கேன் ரத்தமா கக்கி செத்துபொயிருவீங்க’’ என்றார். பலரிடம் குலதெய்வங்களின் மீது சத்தியம் வாங்கிக்கொண்டு வாக்குக்கு பணம் அளிக்கபட்டது.
எல்லா கட்சியினரும் ஏராளமான நலத்திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசினார்கள் இல்லத்தரசிகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள், மாதா மாதம் உதவித்தொகை உள்ளிட்ட கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நலத்திட்டங்கள் மாற்றி மாற்றி வெளியிடப்பட்டு கொண்டே இருந்தன.அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது ஐம்பதிலிருந்து 59 ஆகி இப்பொழுது 60 ஆகிவிட்டது.
வழக்கமான தேர்தல் ஸ்டைலான மூதாட்டிகளை அணைத்து முத்தமிடுவது, எதிர்பாராமல் வீடுகளுக்குள் நுழைந்து உணவு உண்பது, கைக் குழந்தைகளுக்கு பெயரிடுவது, குழந்தைகளை எடுத்துக் கொஞ்சுவது போன்றவைகளோடு இம்முறை வேறு சில சுவாரசியமான விஷயங்களும் நடந்தன சில வேட்பாளர்கள் பெரும் தொற்றால் பள்ளிகள் இல்லாததால் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினர் இன்னும் சிலர் அடி பம்பில் நீர் இறைத்து பெண்களுக்கு குடங்களை நிரப்பிக் கொடுத்தார்கள் இட்லி கடையில் இட்லி வேகவைத்து, இட்லி சாப்பிட்டார்கள், சலவை தொழிலாளி ஒருவருக்கு உதவியாக சில துணிகளை இஸ்திரி போடுவதும் நடந்தது
சில பல கட்சி தாவல்களுக்குப் பிறகு ஒரு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒரு முன்னாள் முன்னணி நடிகை ’ என்னை சட்டைசபைக்கு அனுப்புவீர்களா அனுப்புவீர்களா? என்று மழலைத் தமிழில் ஆவேசமாக திரும்பத் திரும்ப கேட்டது ரசிக்கும்படி தான் இருந்தது
பரப்புரைகளை இப்போது வரும் சினிமாக்களை காட்டிலும் மிக சுவாரசியமாக இருந்ததால் அந்த காணொளிகள் பல லட்சம் பேர்களால் பார்க்கப்பட்டன ஒரு கட்சியினர் உருவாக்கிய காணொளிகளின் வரிகளில் திருத்தமும் கிண்டலும் செய்து செய்து எதிர்க்கட்சியினரும் அதே வரிகளோடு பழிக்குப்பழி காணொளிகளும் வெளியிட்டார்கள் . பல முக்கிய தலைவர்கள் கண்ணீருடன் இறைஞ்சியதையும் பார்க்க முடிந்தது
படித்த வாக்காளர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இம்முறை களம் காணும் ஒரு அறிவு ஜீவி என்னும் பிம்பம் உடைய ஒரு பிரபல வேட்பாளர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் நீட் தேர்வு குறித்த ஒரு அடிப்படைக் கேள்விக்கு பதிலளிக்க தெரியாமல் ’’தான் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தனது கட்சியினரிடம் கேட்டால் இதை சொல்வார்கள்’’ என்றும் சொன்னார் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த பல இளைஞர்களுக்கு அந்த நேர்காணல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது
தனது மகளை பிரச்சாரத்தின் போது தெருவெங்கும் நடனமாட விட்டார் ஒரு வேட்பாளர். குடும்பத்தினரையும் அழைத்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபடச்செய்தார் இன்னொருவர். ஒருவர் மீது ஒருவர் வசைபாடி கொண்டார்கள் புகார் அளித்து கொண்டார்கள் அடித்துக் கொண்டார்கள்
அரசு ஊழியர்கள் ஆனதால் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதை எதிர்பார்த்திருநதோம், எனினும் எங்களுக்கும் இந்த தேர்தல் நடைபெறும், நடைபெறாது என்று இரு விதமான கருத்துக்கள் இருந்தது. தேர்தல் பணிக்கான படிவங்களை பூர்த்தி செய்யச் சொல்லி கல்லூரி முதலவரிடமிருந்து ஆ்ணை வந்ததும்தான் நாங்களும் தேர்தல் பணிக்கு செல்வது உறுதியானது.
அரசு ஊழியர்களில் கல்லூரி பேராசிரியர் மட்டுமல்லாது பொது நல வாரியம் மின்சார வாரியம் என்று பெரும்பாலான அரசு ஊழியர்கள் இந்தமுறை தேர்தல் பணிக்கான அழைக்கப்பட்டிருந்தார்கள் எந்த காரணம் கொண்டும் இதனை தவிர்க்கவே முடியாது என்பது வழக்கம் போலவே எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
மூன்று பயிற்சி வகுப்புகள் இருந்தன அவரவர் சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவிலேயே வழக்கம்போல பயிற்சிகள் இருந்தன. எந்த தவறும் நிகழ்ந்து விடாமல் கன்ட்ரோல் யூனிட், யாருக்கு வாக்களித்தோம் என்னும் சின்னத்துடன் கூடிய தாளை ஏழு நொடிகளுக்கு காண்பிக்கும் இன்னொரு இயந்திரம், வேட்பாளரின் சின்னங்கள் அடங்கிய பேலட்பாக்ஸ் ஆகிய மூன்று இயந்திரங்களையும் எப்படி எந்த தவறும் இல்லாமல் இயக்குவது, பாதுகாப்பது , எப்படி பாதுகாப்பாக மாதிரி தேர்தல் நடத்துவது தேர்தல் முடிந்த பின்னர் அவற்றை காவல் அதிகாரிகளின் உதவியுடன் எப்படி முறையாக சீல் வைத்து சமர்ப்பிப்பது என்கின்ற பயிற்சி மூன்று நாட்களும் திரும்பத் திரும்ப எங்களுக்கு அளிக்கப்பட்டது
எந்த தவறும் வாக்குப்பதிவில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொன்னார்கள் எனக்கு கோவையில் சூலூரில் பணியாணை வந்திருந்தது அந்தப் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏதோ ஒன்றில் எனக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட இருந்தது
பல தேர்தல்களை இதற்கு முன்னர் நான் பணியாற்றி இருந்தேன் எனினும் கடந்த தேர்தலில் பல கசப்பான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருந்தன நான் பணியாற்றிய குக்கிராமத்தில் தேர்தல் தொடங்கி ஒரு மணி நேரத்திலேயே கன்ட்ரோல் யூனிட் இயந்திரம் கோளாறு இயந்திரத்தை மாற்றி ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் தேர்தலை தொடங்க வேண்டி இருந்தது அதன் பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்னும் தாள்களை 7 நொடி காட்டும் அந்த இயந்திரம் இரண்டு முறை பழுதாகி மூன்றாவது இயந்திரம் மாற்ற வேண்டி வந்தது இந்த தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து எதுவும் அறியாத வெளியே வரிசையில் காத்திருந்த கிராமத்தவர்களிடமிருந்து ஏராளமான கண்டனங்களும் வந்தது இரவு ஏழு மணிக்குப் பிறகும் 50 பேருக்கு மேல் வாக்களிக்க காத்திருக்கையில் எதிர்பாராமல் வந்த இடி மின்னலுடன் கன மழையினால் மின்சாரம் தடைபட்டு மீண்டும் வாக்களிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது அதன் பின்னர் வாக்களிப்பதை முடித்து இயந்திரங்களை சீல் வைத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிய பின் மறுநாள் அதிகாலை வீடு திரும்பி இருந்தேன்
அந்த கசப்பான அனுபவங்களின் பிறகு இந்த முறையாவது வாக்குச்சாவடிக்கு செல்லாத, தேவைப்படும்போது மட்டும் அழைக்கப்படும் ரிசர்வ் பணி எனக்கு அளிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்னும் நப்பாசையுடன் நான் சூலூர் சென்றேன் மிகப் பிரபலமான கல்லூரி வளாகத்தில் காரில் இருந்து இறங்கியதுமே அங்கிருந்து ஒரு பெரிய மரத்தில் ரிசர்வ் என்று எழுதி ஒட்டப்பட்ட அம்புக்குறி கண்ணில் பட்டது. குணா கமல் கோவிலில் லட்டு வாங்க போகும் போது அவரை வழி நடத்தும் அம்புகளைப் போல எனக்கும் இது ஏதோ ஒரு நிமித்தமாயிருக்குமோ என்று மனதில் தோன்றியது.
எதிர்பார்த்தபடியே நான் உள்ளிட்ட சுமார் 300 அரசு ஊழியர்கள் ரிசர்வ் என்று அறிவிக்கப்பட்டு கல்லூரி வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டோம்
வாக்குச்சாவடி அதிகாரிகளில் யாருக்கேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ, வேறு ஏதேனும் எதிர்பாரா நிகழ்வுகளால் அவர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி வந்தாலோ ரிசர்வில் காத்திருக்கும் நாங்கள் அழைக்கப்படுவோம்.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் என்னைபோன்ற வாக்குச்சாவடி அதிகாரி ஒருவரும் அவருக்கு உதவியாக 3 தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள்
ரிசர்வில் இருந்த நாங்கள் அனைவரும் ஒரு மிகப்பெரிய கலை அரங்கத்தில் நோய்தொற்றுக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சமூக இடைவெளிகளும் இல்லாமல் தங்க வைக்கப்பட்டிரு்தோம்
காலை பத்து மணிக்கு கலையரங்கு சென்ற அனைவரும் இரவு எட்டு மணி வரை குடிநீரோ தேநீரோ உணவோ வழங்கப்படாமல், எந்த அதிகாரிகளாலும் கண்டுகொள்ளப்படாமல் காத்திருந்தோம். 8 மணிக்கு மேல் அங்கு வந்திருந்தவர்களில் சிலர் அதிகாரிகளிடம் அலைபேசியில் அழைத்து சண்டையிட்டபின்பே அருகில் இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்கச் சொல்லி அறிவுறுத்தினார்கள்.
அங்கும் மிகப் பெரியதோர் கூடத்தில் ஆண்களும் பெண்களுமாய் அனைவருமே ஒரே இடத்தில் இரவு தங்க வைக்கப்பட்டோம் நோய் தொடர்பான எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை 10 மணிக்கு மேல் கொங்கு நாட்டின் பிரபல உணவான கோதுமை ரவா உப்புமா அனைவருக்கும் இரவு உணவாக வழங்கப்பட்டது
தேர்தல் பணிக்கு வந்த நான் உள்ளிட்ட பல பெண்கள் அலைபேசியில் வீட்டை நிர்வகித்துக் கொண்டு இருந்தோம் ’’அரைமணிநேரம் மோட்டாரை போடு, அப்பாவுக்கு பரிமாறிடு, வாசற்கதவை நல்லா பூட்டிக்கோ, சாமி விளக்கேற்று’’ என்றெல்லாம்
ஒரு இளம் தாய் தன் கணவரிடம்’’ ஏங்க, பாப்பா உந்தி உந்தி கட்டிலிலிருந்து நகர்ந்து ஃபேனுக்குள்ள கையை விட்டுருவா,கொஞ்சம் பாத்துக்கங்க ’’என்ற பின்னர் தாழ்ந்த குரலில்’’ இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துடாதீங்க. பாப்பா பாவம்’’ என்றார்
இந்த தேர்தல் பணிக்கு அரசு ஊழியர்களுக்கு எந்த காரணத்தைக் கொண்டும் விளக்கு அளிக்கப்படாது என்று அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இருந்து கடினமான அறிவுறுத்தல்கள் வந்திருந்தன நான் தங்கியிருந்த இந்த கல்யாண மண்டபத்தில் இருவருக்கு கடுமையான காய்ச்சலும் இருமலும் இருந்தது. ஒரு பெண்மணி சமீபத்தில் ஏற்பட்ட மாரடைப்பினால் ஒரு கையும் காலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது அவரும் பணிக்கு வந்திருந்தார் அவர் கழிப்பறை செல்லவும் படிகளில் ஏறவும் நாங்கள் கைபிடித்து உதவ வேண்டி இருந்தது. கணவனும் மனைவியுமாக இருவரும் அரசுப் பணியாளர்கள் என்பதால் இரு குழந்தைகளுடன் வந்து குடும்பமாக தங்கியிருந்தனர் இருவர். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த வயிற்ரை கைகளால் தாங்கி பிடித்துக்கொண்டபடியே இருந்த ஒரு இளம் பெண்ணுமிருந்தார் இப்படி ஏராளமானவர்களை கவனிக்க முடிந்தது.
ஒரு பேராசிரியர் ஸ்விக்கியில் அனுப்பாணை பிறப்பித்து சிக்கன் பிர்யாணி வாங்கி சாப்பிட்டுக்கொண்டுபோனில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கையில் அவரது மனைவி அழைக்க இவர் அலட்டிக்கொள்லாமல் ‘’நான்தான் பூத்தில் முக்கிய வேலையில் இருப்பேன் ரெண்டு நாளைக்கு கூப்பிடாதேன்னு சொன்னேன்னில்ல. இப்போ ஒட்டுப்போட ஜனங்க கூட்டமா நிக்கறாங்க, உன்கிடே பேசிட்டு இருக்க முடியுமா’’ என்று கோபமாக கேட்டதும் மறு முனை அவசரமாக துண்டிக்கப்பட்டது. எங்களை பார்த்து கண் சிமிட்டிவிட்டு’’ 1 மாசமா தேர்தல் பணி, தேர்தல் பணின்னு புலம்பிட்டு இப்போ கலயாண மண்டபத்தில் பிரியாணி சாப்டுட்டு இருக்கேன்னு சொல்ல முடியாதில்ல ‘’ என்றார்.
தேர்தல் பணிக்கு வந்து இருப்பவர்களுக்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், நியாயமான காரணங்களின் பெயரில் அவர்களுக்கு பணியிலிருந்து விலக்களிக்கவும் அதிகாரிகளுக்கு நேரமிருக்கவில்லை என்பது மிகப்பெரிய விளைவுகளை பின்னர் உருவாக்கும் என நான் எதிர்பார்த்தபடியே தேர்தலுக்குப் பிறகு நோய் தொற்று பல மடங்கு ஆகியிருக்கிறது
நான் பணிபுரியும் கல்லூரியிலேயே தேர்தல் பணியாற்றி வந்த பல ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது
நான் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே ஒரு ஆரம்பப் பள்ளியில் நான்கு வாக்குச்சாவடிகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன இங்கிருந்து வாக்குச்சாவடி நிகழ்வுகளை பார்க்க முடிந்தது வாக்குப்பதிவு நடைபெறும் அறைக்கு முன்பு மட்டுமே சமூக இடைவெளி்யுடனான அடையாளப்படுத்திய வட்டங்களுக்குள் வாக்காளர்கள் நின்று வாக்களித்தனர்
வாக்குச்சாவடிக்கு வெளியே இரண்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்து கைகளுக்கு சானிடைசர் களையும் பிளாஸ்டிக்கை உ்றையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். பிளாஸ்டிக் கையுறைகளை ஓட்டு போட்ட பிறகு அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கழற்றி போட்டு விட்டு செல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது பிளாஸ்டிக் இல்லாத பிரதேசங்களான நீலகிரி போன்ற இடங்களில் இந்த பிளாஸ்டிக் கையுறைகள் கடினமான ஆட்சேபத்திற்கும் கண்டனத்துக்கும் உள்ளானது
ஆனால் தேர்தல் கமிஷன் இந்த புகார்ளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை வாக்களிக்க நின்ற பத்து பதினைந்து பேரை தவிர வாக்குச்சாவடிக்கு வெளியே அனைவரும் முகக்கவசம் இல்லாமல் தகுந்த சமூக இடைவெளி இல்லாமல் தான் காணப்பட்டனர்
இவர்களை சொல்வானேன் பரப்புரையின் போது தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களும், வேட்பாளர்களும், பொது மக்களும், கட்சியினரும் யாருமே சமூக இடைவெளியை, முக கவசம் உள்ளிட்ட முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொஞ்சம்கூட கவனத்தில் கொள்ளவே இல்லை
தேர்தல் முடிந்து இரண்டாம் நாளிலிருந்து மறுபடியும் அமல்படுத்தப்பட்டிருக்கும் தளர்வுகளுடனான் ஊரடங்கினால் எந்தப் பயனும் இல்லாத அளவிற்கு பெருந்தொற்று வெகு வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது
வாக்குப்பதிவு பகல் ஒரு மணிவரை மிக மந்தமாகவே நடந்தது மதிய உணவின் போது 50 சதவீதம் மட்டுமே வாக்கு பதிவு நடந்து இருந்து தமிழகம் முழுவதும் 6 மணியிலிருந்து 7 மணி வரை நோய் தொற்று உள்ளவர்கள் வாக்களிக்கும் சமயம் என்பதால் வாக்குச்சாவடி அதிகாரிகள் முழு கவச உடை அணிந்து தயாராக காத்திருந்தனர் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைவான எண்ணிக்கையிலேயே தொற்று உள்ளவர்கள் வாக்களித்தனர். பிரபல கட்சி தலைவரின் மகள் மருத்துவ மனையிலிருந்து முழு கவச உடையில் வந்து வாக்களித்தார்.
மிகவும் கவனிக்க வேண்டிய இன்னொன்றும் இந்த தேர்தலில் நடந்து இருக்கிறது. மனநல பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாமா ? என்ற ஒரு கேள்வி எழுந்ததால் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திலிருந்தவர்களில் அரசியல் புரிதல் உடையோர், கட்சிகள், வேட்பாளர்கள், சின்னங்கள் குறித்து தெரிந்தவர்கள் ஆகியன குறித்து மருத்துவ நிபுணர் குழுவினர் பரிசோதனை செய்ததன் அடிப்படையில், 56 ஆண்கள், 28 பெண்கள் என மொத்தம் 84 பேர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வாக்களித்துவிட்டு வரும் போது அவர்களிடம் நிருபர்கள் கேட்ட சமகால பிரச்சனைகளான petrol diesel உயர்வு பற்றிய கேள்விகளுக்கெல்லாம் பொருத்தமான பதிலை கூறினார்கள். வாக்களிக்காமல் இருந்த அந்த 28%பேருக்கு இந்த செய்தி ஒருவேளை குற்றவுணர்வை தருமோ என்னவோ?
ஒரு வாக்குச்சாவடியில் முழுக்க பெண்களே பணியிலிருந்தார்கள் அந்த வாக்குச்சாவடி மட்டும் மலர்களாலும் வண்ண வண்ண பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இன்னும் சில சுவாரசியமான மற்றும் வேதனையான விஷயங்களும் நடந்தன.. ஒரு முதியவர் ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வெளியே வந்து வாக்குச்சாவடி வாசலிலேயே மாரடைப்பினால் உயிரிழந்தார்.
பச்சிளம் குழந்தையுடன் வந்த இளம் தாயிடமிருந்து காவலர் குழந்தையை வாங்கி வைத்துக்கொண்டு அவர் வாக்களித்துவிட்டு வரும் வரை குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தா. ர் ஆந்திராவில் இருந்து வந்திருந்த சர்க்கரை நோயாளியான காவலர் ஒருவர் உணவு ஏதும் அளிக்கப்படாததால் மயக்கம் போடும் நிலைமைக்கு வந்து விட்ட பின்னர் வாக்களிக்க வந்த ஒருவர் அவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உணவு வாங்கி கொடுத்து திரும்ப கொண்டு வந்து விட்ட மனிதாபிமானமிக்க செயலும் நடந்தது
பல முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். சக்கர நாற்காலிகள் அளிக்கப்படாத வாக்குச் சாவடி ஒன்றில் மாற்றுத்திறனாளியான ஒரு இளம்பெண் படிகளில் தவழ்ந்தே சென்று வாக்களித்தார். ஒரு வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து வாக்களிக்க வந்த பொதுமக்களில் 5 பேர் படுகாயமடைந்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்
பல வாக்குச்சாவடிகளில் இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு வாக்குச்சாவடி வாக்குப்பதிவு சில மணி நேரம் தடைபட்டது ஒரு பிரபல வேட்பாளர் விவிபேட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்னும் சின்னத்தை 7 நொடிகள் காண்பிக்கும் இயந்திரத்தை சரியாக கவனிக்காமல் தான் வாக்களித்த சின்னம் அதில் வரவில்லை என்று அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் அவருக்கு விளக்கி அவரை சமாதானப்படுத்த சில மணி நேரங்கள் தாமதமானது.
இன்னும் சில இடங்களில் கட்சி சின்னங்களை எதை அழுத்தினாலும் வேறு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஓட்டு விழுவதாக புகார்கள் வந்து வாக்குப்பதிவு தடைபட்டது. பல கிராமங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உபயோகிக்க தெரியாமல் பொதுமக்கள் தடுமாறினர்
குறிப்பாக பேலட் பாக்ஸ் எனப்படும் வேட்பாளர்களின் சின்னங்கள் வரிசையாக ஒட்டப்பட்டிருக்கும் அந்த இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்துவது என்று தெரியாமல் சின்னங்கள் ஒட்டப்பட்டு இருக்கும் இடத்தில் அழுத்தியபடி பலர் தடுமாறுவதும் பிறகு அதிகாரிகள் உதவுவதுமாக வழக்கமான குழப்பங்களும் நடந்த வண்ணமே இருந்தன
உடன் பணியாற்றுபவர்கள் இதுபோன்ற வாக்குச்சாவடி நிகழ்வுகளை அலைபேசியில் பகிர்ந்ததால் கேட்டுக் கொண்டே இருந்தோம் எங்களைப் போலவே பல இடங்களில் ரிசர்வ் தங்கியிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குச் சாவடியில் பணியில் இருந்தவர்களுக்கும் உணவு குடிநீர் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
அதிகாலையிலேயே குளித்துவிட்டு மண்டபத்துக்கு வெளியில் ஒரு நாள் முழுவதும் அங்குமிங்குமாக அமர்ந்தபடியே இருந்து பெண்கள் சிறூ குழுவாக குடும்பக் கதைகளை பகிர்ந்து கொண்டும், ஆண்கள் பெரிய குழுவாக வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும் இருந்தார்கள் இரவு ஒரு மணிக்கு கூட தூங்குபவர்களை எழுப்பி வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்றார்கள் தேர்தல் அன்று மாலை 3 மணி வரை கையில் வெள்ளைத்தாளுடன் அதிகாரிகள் வருவதும் பெயர்களை வாசித்து ஒவ்வொருவராக கூட்டிச் செல்வதும் நடந்துகொண்டே இருந்தது
தேர்தல் நேரம் முடிந்தவுடன் கல்யாண மண்டபத்துக்கு அதிகாரிகள் வந்து எங்களுக்கான சன்மானத்தை கவரில் வைத்து கொடுத்து ஒவ்வொருவராக அனுப்பினார் சன்மானமாக அளிக்கப்பட்ட சில நூறு ரூபாய்களை வாங்கிக்கொண்டோம்
இந்தியாவில் தேர்தல் என்பது திருவிழாதான் இனி வரப்போகும் ஐந்து ஆண்டுகளுக்கு இத்தனை நெருக்கடியில் இருக்கும் தமிழகம் இனி யாருடைய ஆட்சியின்கீழ் இருக்கப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் இந்த தேர்தலில் இந்த பெரும் தொற்று காரணமாக கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக நடக்காததால் நிச்சயம் அதன் விளைவுகள் மிகப் பெரிதாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம்
மேலும் பல தேர்தல்களில் நான் பணியாற்றி இருப்பதால் வாக்குப்பதிவு மிக அதிகமாக நடக்கும் பொழுது அது ஆளும் கட்சிக்கு எதிரான முடிவை கொண்டு வரும் என்றும் தேர்தல் மந்தமாக நடந்தால் இப்போதுள்ள ஆட்சியை நீடிக்கும் என்பது பொதுவாக பணியாற்றும் எங்களின் அனுமானம் இப்பொழுதும் 72 சதவீதம் மட்டுமே மொத்த வாக்குப்பதிவு என்பதால் நான் அப்படியே தான் அனுமானிக்கிறேன்
நான் தங்கியிருந்த இடத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு வீடு வந்து சேர்ந்து உறங்கி எழுந்த பின்னர் ஊடகங்களில் வந்திருந்த காணொளிகள் பெரும் அதிர்ச்சி அளித்தன பிழைகள் ஏதும் நடக்காமல் ஒரே ஒரு ஓட்டு எண்ணிக்கை கூட குறையவோ கூடவோ இருக்கக்கூடாது , தவறு நடந்துவிடக் கூடாது என்று திரும்பத் திரும்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்லி கடுமையான பயிற்சிகள் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன.
நான் பணிபுரியும் கல்லூரியிலேயே ஒரு மாதத்துக்கு முன்னரே தேர்தல் பணிக்கான இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன அங்கிருந்துதான் அவை தமிழகத்தின் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன
ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் ஒரு கண்டெய்னர் லாரி முழுவதும் வாக்கு இயந்திரங்கள் எந்த ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதும் தேர்தல் கமிஷனால் அமர்த்தப்பட்ட இரு ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் சென்று அவை சாலையில் தவறி விழுந்து அங்கு பொது மக்கள் ஒரு சிறு கும்பலாக கூடி எப்படி இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இப்படி போலீசாரின் பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் எடுத்துக் கொண்டு வரலாம் என்று பெரிய சண்டையும் சச்சரவும் ஆன காணொளிகள் பெரும் அதிர்ச்சியை அளித்தது
அரசு ஊழியர்களுக்கு அத்தனை பயிற்சி அளித்து அத்தனை சிரமங்களுடன் நாங்கள் பணியாற்றி வந்த பின்னர் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் எந்த ஆவணங்களும் இல்லாமல் ஓட்டுப் பெட்டிகள் இப்படி வெளியே எடுத்து வர முடியும் என்றால் எதன் பொருட்டு நாங்கள் இத்தனை பயிற்சி எடுத்துக் கொள்கிறோம் என்று புரியவில்லை
மே இரண்டாம் தேதி ஓட்டு எண்ணிக்கை இந்த தேர்தலிலும் பறக்கும் படையினரின் கண்காணிப்பையும் மீறி வாக்காளர்களுக்கு பணமும் பரிசுகளும் அளிக்கபட்டிருக்கின்றன. பணம் பத்தும் செய்யும் அறம் ஏதேனும் செய்யுமாவென்று காத்திருந்து பார்க்கலாம்