ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் தமிழ்ப் படம் சுல்தான். தமிழிலும் தெலுங்கிலும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது
ஆக்ஷன் த்ரில்லர் என்ற ஜானரில் எடுக்கப்பட்டதாக சொல்லபட்டிருந்தாலும் கார்த்திக்கு பிடித்தமான, வழக்கமுமான குடும்ப செண்டிமெண்ட் படம்தான் இதுவும்
தெலுங்கு கன்னட மொழி திரைப்படங்களின் முன்னணி கதாநாயகி ராஷ்மிகா இதில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்
லால். யோகி பாபு, பொன்வண்ணன் மற்றும் ராமச்சந்திர ராஜு முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் இசை விவேக்- மெர்வின் இணை. பின்னணி இசை மட்டும் யுவன் ஷங்கர் ராஜா. ஒளி இயக்கம் சத்தியம் சூரியன், படத்தொகுப்பு ரூபன்.
நூற்றுக் கணக்கான அடியாள்களுடன் வாழும் தாதா நெப்போலியன், அவர் மனைவி அபிராமி. அபிராமி விக்ரம் என்கிற சுல்தானை பிரசவித்துவிட்டு இறந்துவிடுகிறார். தாதாவான அப்பாவுடனும் அடியாட்களுடன் வளரும் தாயில்லாப்பிள்ளை கார்த்தி பின்னர் ரோபோடிக்ஸ் படிக்க வெளிநாடு செல்கிறார்.
படிப்பு முடிந்து விடுமுறையில் ஊர் திரும்பும் சுல்தானுக்கு திடீரென நிகழும் அப்பாவின் மரணத்தால், அப்பாவை நம்பியிருந்த அடியாட்களையும், இறக்கும் தருவாயில் பொன்வண்ணன் கிராமத்து பிரச்சனையை தீர்ப்பதாக அப்பா செய்து கொடுத்திருக்கும் வாக்கை காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பும் ஏற்படுகிறது.
அடியாட்களை திருந்திய குமரர்களாக்கும் முயற்சியில் சுல்தான் வெற்றி பெற்றாரா, பொன்வண்ணன் கிராமத்து பிரச்சினைகளை அப்பா வாக்கு கொடுத்தபடி அவரால் தீர்க்க முடிந்ததா, என்பதும், இடையில் ஏற்படும் காதலும்தான் மொத்த கதையும்.
கார்த்தியின் படங்கள் எல்லாம் தெலுங்கு மொழி மாற்றப் படுவதால் அவருக்கு என்று தெலுங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் இது தெலுங்கு பாதி தமிழ் பாதி இரண்டும் கலந்த கலவையாக தான் இருக்கிறது. அதிலும் சண்டைக்காட்சிகள் எல்லாம் அக்மார்க் தெலுங்கு ரகம். ராஷ்மிகாவுக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை, அழகாக வருகிறார், சிரிக்கிறார், உதட்டை சுழித்து கொள்கிறார், இனிமையான பாடல்களில் வருகிறார் அவ்வளவே.
யோகிபாபு சமீபத்திய தமிழ் படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக விட்டிருக்கிறார் எந்த திரைப்படம் ஆனாலும், எந்த பட்ஜெட் ஆனாலும் யோகிபாபுவின் அடர்ந்த சுருட்டை முடித்தலை தெரிகின்றது.
தெலுங்கு வாசனையுடன் தமிழ் பேசும் அந்த பிரதான வில்லன் ராமச்சந்திர ராஜூ உட்பட பல வில்லன்களின் அழகாக சுருண்ட அடர்ந்த கேசத்தை பார்க்கையில் எந்த எண்ணெயை தலையில் தேய்க்கிறார்கள் இவர்களெல்லாம் என்று கேட்கத் தோன்றுகிறது.
ஜீப்பும், அடியாட்களுமாக லோக்கல் வில்லன் ஒருவர், அவருக்கு மேலே 10,000 கோடிகளில் பிசினஸ் செய்யும் கோட் போட்ட,விமானத்தில் வந்திறங்கும் இன்னொரு கார்ப்பரேட் வில்லன், ஒற்றை ஆளாக அத்தனை பேரையும் அடித்து அழிக்கும் கதாநாயகன், அவர் விரும்பும், சின்ன ரோல் பண்ணும் ஒரு கதாநாயகியுமாக வழக்கமான தமிழ் தெலுங்கு மசாலா கதை தான். சமீபத்திய கார்த்தி அவரது அண்ணன் சூர்யா படங்களை போலவே இதிலும் விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
சுல்தானின் பாதுகாவலராக வரும் பிரம்மாண்ட நடிகர் ஜன்சீர் முன்பு குழந்தைகளுக்கான ஒரு தொடரில் நடித்தவர் என்பதால் குழந்தைகளுக்கும் இப்படம் பிரியமானதாகிவிட்டது.
சுல்தான் என்னும் தலைப்பை இந்து முன்னணி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனமும் ஆட்சேபமும் தெரிவித்ததால், படப்பிடிப்பின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டன பின் படக்குழுவினர் திப்பு சுல்தானை குறிப்பிடவில்லை இது ஒரு சாதாரண வழங்கு பெயர் தான் என்பதை தெளிவுபடுத்தினார்கள்.
அனிருத் குரலில் ’’ஜெய் சுல்தான்’’ மற்றும் ’’யாரையும் இவ்வளவு அழகா’’ பாடல்கள் சிறப்பு. அதிலும் சிலம்பரசனின் குரலில்’’யாரையும் இவ்வளவு அழகா’’ இனிமை.
கார்த்தி உடல எடையை குறைக்கவேண்டும். பல லாங் ஷாட் காட்சிகளில் சிவக்குமாரோ என்றே சந்தேகம் வருகின்றது. ஒரு வருடங்களுக்கு மேலாக நோய்த் தொற்றினால் மூடிக்கிடந்த திரையரங்குகளில் சமயத்தில் வெளியிடப்பட்டவைகளில் குடும்பத்துடன் பார்க்கலாம் என்னும் ரகத்திலான திரைப்படம் சுல்தான்.
Leave a Reply