ஏழாம் கடல்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்

கடந்த ஞாயிறு அன்று வீட்டில் இலவம் பஞ்சு மெத்தை தைத்துக்கொடுக்க பொள்ளாச்சியிலிருந்து மெத்தை கடைக்காரர் வந்திருந்தார். நல்ல சுத்தமான பஞ்சும், நியாயமான விலையும், வீட்டில் நம் கண்முன்னே பஞ்சை அடைத்து தைத்துத்தரும் தொழில் சுத்தமுமாக அவர் பிரபலம் தான் இந்த பகுதிகளில். பெயர் அபு, இஸ்லாமியர் கோவை, திருப்பூர் எல்லாம் கூட வீட்டுக்கே நேரில் சென்று தைத்து கொடுத்துவிட்டு வருவார்.

அன்று இங்கு வீட்டில் வேலை முடிய மதியமாகிவிட்டது எனவே மதியம் சாப்பிட்டு விட்டு போகச் சொன்னேன்  மறுத்தவர் 32 வருடங்களாக தனது நண்பரொருவர் தான் தனக்கும் சேர்த்து மதிய உணவு கொண்டு வருவதாகவும் அவர் காத்துக் கொண்டிருப்பார் என்றும் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது ஏழாம் கடலின் வியாகப்பனை, அவர் மீதிருக்கும் கோபத்தில் மகனிடம் சீறும் அந்த பெண்ணை என்று மனம் நூறு கதைகளுக்கு  சென்றது. அவரிடம் இன்னொரு நாள் இந்த நட்பை குறித்து விரிவாக  கேட்க வேண்டும் என இருக்கிறேன்.

ஏழாம் கடல் போல உண்மையாகவே வருடங்கள் தாண்டிய நட்பு இருப்பது பிரமிப்பளிக்கிறது. அத்தனை வருடங்களாக சமைத்து தரும் அந்த வீட்டுப் பெண்ணையும் நினைத்துக்கொண்டேன். குடும்ப உறவுகளே இப்போது பட்டும் படாமல்தான் இருக்கின்றது. சொந்த சகோதரர்களுக்குள்ளேயே சின்ன சின்ன மனஸ்தாபங்கள், வெட்டு குத்துபழிகள் என்று உறவு சீரழிகின்றது  திருச்செந்தாழையின் ஆபரணம்,  அதுகுறித்து எழுதிய ஒரு வாசகியின் குடும்பக்கதை இவற்றை  இந்த நட்புடன் பொருத்திப் பார்த்துக்கொண்டேன்.

ஜெ வின்ன் நூறு கதைகளில் ஒன்று நேரில் எழுந்து வந்தது போல் இருந்தது.