PC Tharun

இப்போது தேர்வு கால விடுமுறை எனவே வீட்டிலிருந்தேன் விஷ்ணுபுரம் விழாவில் இருந்து நேற்றுத்தான் திரும்பினேன்.  மதிய உணவுக்கு பின்னர் அலைபேசியில் விழா புகைப்படங்களை  பார்த்துக்கொண்டிருந்தேன்.

திடீரென பின் தெருவிலிருந்து தீதி, தீதி’’ என்று அழைக்கும் குரல் கேட்டது

அப்படி யாரும் என்னை இங்கு அழைத்தது இல்லை.

வேகமாக வீட்டை சுற்றிக் கொண்டு சென்று பார்த்தேன் பின் தெருவின்  பேக்கரி செல்வத்தின் வீட்டில்  சில பிஹாரி இளைஞர்கள் வசிக்கிறார்கள் தேர்ந்த சமையல் வல்லுநர்கள். சில நாட்களில் வீட்டு வாசலில் அவர்கள் சமைக்கும் வாசனை தாளமுடியாத பசியுணர்வு அளிக்கும்.சுத்தமாக தமிழ் தெரியாது அவர்களுக்கு.

அவர்களில் ஒருவன் அங்கே மதிலுக்கு பின்னர் எனக்கென  காத்திருந்தான். என்னவென்று விசாரிக்க ’க்யா’?  என்றேன் எனக்கு மிக கொஞ்சமாக சல்மான், அமீர் மற்றும் ஷாருக் கான்கள் கற்றுக்கொடுத்த இந்திதான் தெரியும்.

அவன் அடர்ந்து வளர்ந்து மதிலை தழுவிப் படர்ந்திருந்த அலமண்டா புதர்செடியை  காட்டிக்காட்டி பரபரப்பாக ஏதோ சொன்னான். 

அலமண்டாவும் ராமபாணமும்

நான் புரிந்துகொண்டேன் கொம்பேறி மீண்டும் தலையை காட்டி இருக்கிறது. இவர்கள் முதன்முறையாக பார்க்கிறார்கள், அதுதான் பயந்து அழைத்திருக்கிறார்கள்.

 அந்த புதர் செடியில்  அடிக்கடி ஒரு கொம்பேறி நாகன் வந்து ஓய்வெடுத்துவிட்டு அதுபாட்டுக்கு சென்றுவிடும். தருண் அதை பாஸ்கிங் -Baskingஎன்று விளக்கி இருக்கிறான். சற்று நேரம் கொடியில் உடலைச்சுற்றி  தலையை மட்டும்  வெயிலில் காட்டியபடி கம்பீரமாக வெயில் காய்ந்துவிட்டு பின்னர் சரசரவென்று  செடிகளுக்குள் கரைந்து காணாமல் போய்விடும்.

அலமண்டாவில் எப்போதும் இருக்கும் கொம்பேறி மூக்கன் :புகைப்படம் தருண்

 

முன்பெல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருந்தேன் , பின்னர் அது விஷமும், ஆபத்துமற்றது என்று தருண்  கற்பித்த பின்னால் அதுபாட்டுக்கு அதுவும் நான் பாட்டுக்கு  நானும் சேர்ந்தே பின்வாசலில் இருப்போம். சில சமயம் முன்வாசல் மோட்டார் சுவிட்ச் பெட்டிக்குள்ளே வயர்களோடு வயராக சுருண்டு கிடக்கும் நான் சுவிட்ச் போட போனால் ஒரு சம்பிரதாயத்துக்கு பயந்ததுபோல் கொஞ்சமாக உள்ளே சுருண்டு கொள்ளும், அவ்வளவுக்கு மரியாதை இருந்தால் போதுமென்று நானும் கண்டுகொள்ளாமல் இருப்பேன்.

 அந்த பையன்களிடம் ‘’அது ஒன்றுமில்லை பயப்பட வேண்டாம்’’ என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்ல தெரியவில்லை, ‘’ஸ்நேக் நோ ப்ராப்ளம் வெரி ஸ்மால்’’ என்று கைவிரலை பென்சில் போல காட்டி  சிரித்தேன். அவன் பலமாக தலையாட்டி கைகளை படம் எடுப்பது போல் ஒன்றின்  மீது ஒன்று குவித்து வைத்து காட்டினான்

 பிக் ஒன் ? என்றேன் அதற்கும் அதே கை பொதியும் சைகை. இப்போது எனக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டிருந்தது. இவன் காட்டும் அளவில் பத்தி கொண்ட பாம்பென்றால் கொம்பேறி அல்லவே. மீண்டும் செடிக்குள் நுழைந்து தேடினேன் .  கொம்பேறியை காணவில்லை ஆனால் சர சரவென்று சத்தம்  மட்டும் கேட்டது. 

அலமண்டா  தண்டுகளின் அதே வண்ணத்தில் அதே அளவில் தான் அதுவும் இருக்கும், எனவே நன்றாக தேடினேன் காணவேயில்லை.

ஒருவேளை  அடுத்திருந்த  ராமபாணம்  மல்லிகை பந்தலில் இருக்குமோ என்று அங்கே சென்று தேடினேன்

அந்த  இளைஞன் பரபரப்பாக என்னிடம் வானத்தை காட்டி அதிலிருந்து அலமண்டாவிற்கு வந்தது போல சைகை செய்து காட்டினான்.

PC Tharun

இப்போது கொஞ்சம் கவலையாகியது.ஏதோ பறவை வானில் இருந்து கொண்டு வந்து பாம்பை போட்டிருக்கிறது போல, அப்படியானால் அது விஷப் பாம்பாகத்தான் இருக்கும்.

PC Tharun

அருகிலே சமையலறை ஜன்னல் வேறு திறந்திருந்தது.மதியம் உண்ட களைப்பில் கண்ணசந்திருந்த  சில பெண்மணிகள்  எழுந்து வந்து கூடி நிற்க துவங்கினர்

 சிலர் நான் எதிர்பார்த்தது போலவே’ இப்படி புதராட்டம் செடிக இருந்தா பாம்பு வராம ‘ என்று துவங்கினர்கள். அய்யோ தருண் இருந்தால் அனைவருக்கும் ஒரு வகுப்பெடுத்திருப்பானே, அவனும் இல்லையே என்று கவலைப்பட்டேன்.

அதுமட்டும் அகப்படவில்லை கண்ணுக்கும் தட்டுப்படவில்லை

நான் பாம்பு படமெடுக்கும்சைகை செய்து எத்தனை பெரிது என்று எப்படியோ அவனுக்கு புரிய வைக்க முயன்றேன். அவன் அதே கைகளை பொதிந்து காட்டும் சைகை செய்தான். தலை வலித்தது.

ஒருவேளை மோட்டார் ரூமில் இருக்குமோ என்று தேடினேன், அங்கும் இல்லை அலமண்டாவின் ஒவ்வொரு தண்டாக பிரித்துப்பிரித்து தேடினேன்’ ‘’மகனைப்போலவே அம்மாவும் பாரு  பயமில்லாம பாம்பை தேடுது’’என்று ஒரு விமர்சன குரல் வந்தது.ஏறக்குறைய ஒரு மணி நேரம் தேடல் தொடர்ந்தது. திடீரென அந்த இளைஞன் ’’சுண்டூ’’ என உற்சாகமாக கத்தியபடி ராமபாண  புதருக்குள் கைகளை விட்டு ஒரு சிறு பழுப்பு நிற புறாவை எடுத்தான்.

 சுண்டூ அவன் வளர்ப்பு பறவையாம்  தீபாவளிக்கு ஊருக்கு போய் திரும்பியவன் அதையும் கூட கொண்டு வந்திருக்கிறேன். இன்று சுண்டு அவனை ஏமாற்றிவிட்டு பறந்து இங்கு வந்து ஒளிந்து கொண்டிருந்திருக்கிறது

சுண்டூவை செல்லமாக அதட்டி கோதுமை மாவு மூட்டைகளுக்குள் இறக்கி விட்டுவிட்டு என்ன பார்த்து கைகளை  கூப்பி மொச்சைகொட்டை பற்களை காட்டி பெரிதாக சிரித்து’’ நமஸ்தே தீதி’’ என்றான்.

PC Tharun

அத்தனை நேரம் எங்களுக்கிடையில் ஒளிந்து விளையாடிய  பாஷைப்பாம்பு அப்போதுதான் காணாமல் போனது.