
பழந்தமிழ் இலக்கியங்கள் சதங்கை அணிந்த இளம்பெண்கள் கால்களால் உதைத்தால் மட்டுமே மலரும் மரங்களை குறிப்பிடுகின்றன.
தன் கணவனை காணாமல் துயருற்ற தமயந்தி ஒரு மரத்திடம் தான் சென்று புலம்புகிறாள்.
தான் விளையாட்டாக மணலில் புதைத்து வைத்த புன்னை விதை முளைத்து செடியாகிவிட்டது, தனக்கு சோறூட்டுகையில் அச்செடிக்கும் ஊட்டுவதாக தாய் பாவனை செய்வாள். எனவே என்னுடன் வளர்ந்த அப்புன்னை மரம் தன் தங்கை அதனருகில் தலைவனுடன் காதல் செய்ய நாணம் கொள்கிறேன் என்னும் தலைவியொருத்தியையும் நாம் அறிவோம்
நம் முன்னோர்கள் இயற்கையுடன் கொண்டிருந்த அணுக்கமும் பந்தமும் நம்மிடையே முற்றிலும் இப்போது இல்லை
இயற்கையை அறிந்துகொள்ளுதலின் குறைபாடென்னும் (nature deficit disorder) பெருநோய் உலகை பீடித்திருக்கிறது.இதற்கு தீர்வாக பல நாடுகள் பல முன்னெடுப்புக்களை கடந்த சில ஆண்டுகளாக துவங்கி இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் மரம் தழுவுதல்.

21 மார்ச் 2017’ல் கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த 4620 மக்கள் மரங்கள் மற்றும் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி என் மரம் என் வாழ்வு என்னும் முழக்கத்துடன்,மரங்களை தழுவிக்கொள்ளும் பிரம்மாண்ட நிகழ்வில் ஈடுபட்டார்கள். அந்த நாள் சர்வதேச வன நாள் ஆகையால் அந்நிகழ்வு பெரும் கவனம் பெற்றது . அதில் பங்கு பெற்றோர் குறைந்தபட்சம் 60 நொடிகளாவது மரங்களை ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

இது போன்ற நிகழ்வுகளுக்கு செப்டம்பர் 12 1730’ல் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு முன்னுதாரணமாக இருந்தது. வடஇந்தியாவின் தார்பாலைப்பகுதியின் ஒரு கிராமத்தில் தாவரங்களையும் காடுகளையும் வழிபடும் பிஷ்னோய் மார்க்கத்தை சேர்ந்த 294 ஆண்கள் மற்றும் 69 பெண்கள் அப்பகுதி அரண்மனை கட்டுமானத்திற்காக பாலையின் பசுமைக்கு காரணமாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் இருந்த பல நூறு வன்னி மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்தார்கள். அனைவரும் மரம் வெட்ட வந்தவர்ள் முன்பு மரங்களை ஆரத் தழுவிக்கொண்டு போராடினார்கள். போராட்டத்துக்கு அம்ரிதா தேவி என்னும் பெண் தலைமை தாங்கினார். மரங்களை வெட்டக் கூடாது என்று தழுவிக்கொண்டு போராடிய அம்ரிதா தேவி அவரது மூன்று மகள்கள் உள்ளிட்ட 300 போராட்ல்டகாரர்கள் அன்று வெட்டிக்கொல்லபட்டார்கள்.



அதுவே ’தழுவுதல்’ என்னும் பொருள் கொண்ட 1970களில் துவங்கிய சிப்கோ இயக்கத்துக்கும் முன்னுதாரணமாக அமைந்தது. உத்திரபிரதேசத்தில் துவங்கிய சிப்கோ இயக்கம் மர சத்தியாகிரகமென்னும் பெயரில் இந்தியாவெங்கும் வேகமாக பரவியது. இன்றும் மரம் தழுவுதல் ஒரு சிகிச்சையாகவும் வழிபாட்டு முறைகளிலொன்றாகவும் உலகின் பல பகுதிகளில் நடைபெறுகின்றது.

மனிதர்களுக்குத்தான் மரம் தழுவுதல் என்பது புதிய விஷயம், ஆனால் விலங்கினங்களுக்கு மரம் தழுவுதல் என்பது இயற்கையிலேயே அவை அறிந்திருக்கும் ஒன்று.
தென்னமரிக்காவின் அசையாக்கரடி (sloth), கோலா கரடிகள், புலி, பூனை, அணில்,பாண்டாக்கள் மற்றும் ஒராங்குட்டான்கள் மரம் தழுவுதலை அறிந்திருக்கின்றன..
.

2014ல் நடந்த ஒரு ஆய்வு இவ்விலங்குகளில் கோலா கரடியே மிக அதிகமாக மரம் தழுவும் விலங்கு என்கிறது.
மர உச்சியில் வாழும் கோலா கரடிகள் தங்கள் உடலை குளிரச்செய்ய மரங்களை தழுவிக்கொள்கின்றன.

மரங்களின் உள்ளே எப்போதும் நீரும் , திரவ வடிவில் உணவும் சாற்றேற்றம் எனப்படும் தொடர் நிகழ்வாக நடந்துகொண்டே இருப்பதால், விலங்குகள் மரங்களை தழுவிக்கொள்ளுகையில் அவற்றின் உடலெப்போதும் குளிர்ச்சியாக இருக்க இது மிக உதவுகிறது. அகசிவப்பு கதிர் புகைப்படங்கள் மரங்களை தழுவிக்கொள்ளும் விலங்குகளின் உடல் வெப்பம் குறைவதை காட்டுகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளும் மரம் தழுவும் நிகழ்வினை சூழல் பாதுகாப்பின் பொருட்டு முன்னெடுத்து நடத்துகின்றன. இந்நிகழ்வில் பெரும்பாலும் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மரம் தழுவுதல் என்பது ஒரு சிகிச்சையாகவும் நடைபெறுகிறது.உணர்வுபூர்வமான சமயங்களில் நம் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் (Oxytocin) என்னும் ஹார்மோன் மரம் தழுவுகையிலும் உருவாவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது

மரத்தை அணைத்துக் கொள்ளும் மனிதர்களின் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி பெருகுகிறது. மரங்களை இறுக அணைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் பேரியற்கையின் ஒரு பகுதியாக அவர்களை மனப்பூர்வமாக உணர்கிறார்கள்.
வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டங்களான வழிபாடு, கேளிக்கை மற்றும் விருந்துகளுடன் இவ்வாண்டில் இருந்து குடும்பத்துடன் மரம் தழுவுதலையும் இணைத்துக்கொள்ளலாம்.அதுவே குடு்ம்ப ஆரோக்கியம், உடலாரோக்கியம் மற்றும் சூழலாரோக்கியதுக்கான இன்றியமையாத சிகிச்சை.


வீடுகளில் வளர்க்க முடியாதவர்கள் , மனம் இல்லாதவர்கள் சுற்றுப்புறங்களிலும், சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் காணப்படும் பெரு மரங்களையாவது ஆரத்தழுவிக்கொள்ளலாம்.
