மனிதர்களின் வாழ்வில் மலர்கள் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டிருக்கின்றன. பண்டைய காலத்திலிருந்தே உலகின் அனைத்து நாகரிகங்களும் இறைவழிபாட்டில், பண்டிகைகளில், மங்கல நிகழ்வுகளில் பிறப்பு,இறப்பு திருமணம் உள்ளிட்ட  சடங்குகளிலும் தலையில் சூடிக் கொள்ள, மாலையாக,  மருந்தாக, மகிழ்ச்சிக்காக,  அழகுக்காக, பரிசளிக்க என்று பலவிதங்களில் மலர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மலர்களின் பொருள் என்னவென்பதை சொல்லும் மலர்மொழி உலகெங்கிலும் புழக்கத்தில் இருக்கிறது. மலர் மருத்துவமும் அனைவரும் அறிந்ததே.

 இவற்றோடு  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பல வகையான மலர்கள் சமையலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு உண்ணப்படுகிறது.  ஆங்கிலத்தில் Edible Flowers-EF என்று குறிப்பிடப்படும் இம்மலர்கள் பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. இவற்றில் பல சமைக்கப்படுகின்றன, ஒரு சில மலர்கள் சமைத்த பிற உணவுகளின் மீது அலங்காரம் செய்ய பயன்படுகின்றன மேலும் பல அப்படியே சமைக்காமல் உண்ணப்படுகின்றன. மருத்துவ காரணங்களுக்காகவும் அவற்றின் சுவைக்காகவும் மலர்களின் பிரத்யேக சத்துக்களின் பொருட்டும் இவை உணவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

பண்டைய ரோமானிய கிரேக்க, சீன மூலிகை மருத்துவர்கள் மலர்களின் உணவுப் பயன்பாட்டைக் குறித்தும் அவற்றால் குணமாகக்கூடிய நோய்களையும் விளக்கி இருக்கின்றனர். தொல்குடிகளான அஸ்டெக்குகள், இன்க்காக்களும் மலர்களை உணவாக எடுத்து கொண்டிருக்கின்றனர். இந்து மதம் உள்ளிட்ட பல மதச்சடங்குகளில் மலர்கள் உண்ணப்படுகின்றன. மெக்ஸிகன் பழங்குடியினர் பலநூற்றண்டுகளாக மலர்களை உண்டு வந்திருக்கின்றனர்.

மலர் உண்ணுதலை முதன் முதலாக  ‘floriphagia’ என்னும் சொல்லால் 2013ல் Lara-Cortés என்பவரின் குழுவினர் குறிப்பிட்டனர்.

சாமந்தி மலர்களை ரோமானியர்கள் உணவில் குங்குமப்பூ நிறம் கிடைக்க பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் சாமந்திப்பூ ’’ஏழைகளின் குங்குமப்பூ’’ என்று அழைக்கப்படுகிறது. குங்குமப்பூவில் கலப்படமாகவும் இம் மலரிதழ்கள் பயன்படுகின்றன.

ரோஜா இதழ்கள் பல பண்டைய நாகரிகங்களில் உணவுக்கு சுவை மணம் நிறம் அளிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் ரோஜா பன்னீரும் குல்கந்தும் இனிப்புகளும் நம்மிடையே பிரபலமாக இருக்கிறது. செம்பருத்தி தேநீர் சில வருடங்களாக பசுமை மருத்துவத்தின் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமாகி வருகிறது.

17ம் நூற்றாண்டில் வயோலா என்னும் அடர் ஊதா மலர், திரவ மருந்துகளுக்கும்  மதுபானங்களில் நிறமூட்டவும் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் மட்டும் சுமார்  35 வகையான மலர்கள் உண்ணப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆர்டிசோக் எனப்படும் மலரரும்புகள் (Cynara scolymus). காலிஃப்ளவர் என்னும் பூக்கோசு (Brassica oleracea var. botrytis) புராக்கலி என்னும் பச்சைபூக்கோசு (Brassica oleracea var. italica), வாழைப்பூ, அகத்திப்பூ, முருங்கைப்பூ ஆகியவை பலரும் அறிந்திருக்கும் உணவில் சேர்க்கப்படும் மலர்கள்.  ஸ்ட்ராபெரி, கடுகு மற்றும் கொத்துமல்லி மலர்களும் உண்ணக்கூடியவையே.

 தாமரை மலரிதழ்கள் சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் காஷ்மீரில் உண்ணப்படுகின்றன. இவற்றை தேநீர் தயாரிப்பில் அதிகம் உபயோகிக்கிறார்கள்.

 தாய்லாந்தில் சாமந்தியின் ஒரு வகையான டாஜிடஸ், காகித மலர் மற்றும் கேந்தி மலர்கள் உண்ணப்படுகின்றன. அமெரிக்காவில் டாஜிடஸ், அலரி எனப்படும் ஃப்ராங்கி பானி மலர்கள் மற்றும் கற்றாழை மலர்கள் உண்ணப்படுகின்றன. பிரேஸிலில் வாழைப்பூவுடன்  பூசணிப் பூவும் உண்ணப்படுகிறது.

மிகச்சாதாரணமாக பார்க்க முடிகின்ற சிறு வெண்ணிற டெய்ஸி மலர்கள் விழாக்கால விருந்துகளில் உணவுகளை அலங்கரிக்கவும் உணவுகளோடு சேர்த்து உண்ணவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Tisanes எனப்படும்  பருவ கால உலர் மலரிதழ்களில் உண்டாக்கப்படும் தேநீர் சர்க்கரை நோய் உள்ளிட் பல நோய்களுக்கான சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தபடுமொன்று

தென்தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் பொன்னாவாரை மலர்களில் தேநீர் தயாரித்து அருந்துவார்கள். நீலத்தேநீர் எனப்படுவது சங்கு புஷ்ப த்திலிருந்து உண்டாக்கப்படும் மருத்துவ குணங்கள் மிக்க நீலத்தேநீர். சங்கு புஷ்ப அரும்புகள் தாய்லாந்தில் அரிசியுடன் வேகவைக்கப்பட்டு நீலச்சோறு உண்டாக்கப்படுகிறது.

குங்குமப்பூவின் மூன்று சூலகமுடிகள் மட்டும்தான்  குங்குமப்பூ என சந்தை படுத்தப் பட்டிருக்கிறது. சோம்பு மலர்கள் சூப்’களில் புத்தம் புதிதாக சேர்க்கப்படுகின்றன. குழந்தையின்மைக்கு தீர்வாக சிலரால் நள்ளிருள் நாறி என்றும் நிஷாகந்தி, பிரம்மகமலம் என்றும் அழைக்கபடும் மலர்  உண்ணப்படுகின்றது.

கொரியாவில் Hwajeon எனப்படும் அரிசிமாவு இனிப்பொன்றில் அந்தந்த பருவ கால மலர்கள் சேர்க்கப்படுகின்றன. பிரபல நறுமணப்பொருளான கிராம்பு எனப்படுவது அம்மரத்தின் முதிரா மலர் அரும்புகள் தான், ஆக்ஸாலிஸ் எனப்படும் புளியாரைக்கீரை மலர்களும் உண்ணக்கூடியவைதான்..

அனைத்து மலர்களும் உண்ணத்தக்கவை அல்ல என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும் தாவரங்களில் பல நச்சுத்தனமை கொண்டவை எனவே நன்கு அறிந்திருந்தால் மட்டுமே புதிய தாவர வகைகளின் மலர்களை உண்ண வேண்டும். இன்னும் சில உண்ணப்படும் தாவர மலர்களில் நச்சுப்பொருட்கள் இருப்பதால் மிக குறைந்த அளவிலேயே அவை உண்ணப்படவேண்டும்.

உதாரணமாக ஆப்பிள் மலர்கள் உண்ணக்கூடியவையே எனினும் அவற்றின் சயனைட் நஞ்சைப்போன்ற நஞ்சு இருப்பதால் மிக மிக குறைவான அளவிலேயே அவற்றை உண்ணவேண்டும். அதுபோலவே வயோலா மற்றும் பொராஜ் மலர்கள் சிறுநீர் பெருக்கும் இயல்புடையவை என்பதால் கவனமாக அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் நஞ்சுகொண்டிருப்பவை  மட்டுமலல்ல. குறிப்பிடட்ட சில விளைவுகளை உண்டாக்கும்  வேதிப்பொருட்களை  கொண்டிருக்கும் மலர்களும் இருக்கின்றன.

பல வகையான மலர்கள் உண்ணத்தகுந்தவை மேலும் பல மலர்களின் உண்ணும் தன்மை இப்போது ஆராயப்பட்டு கொண்டிருக்கிறது. காய்களையும் கனிகளையும் இலைகளியும் வேர்க்கிழங்குகளையும் போல மலர்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் அவற்றில் நஞ்சு கொண்டிருப்பவை, பல முக்கிய வேதிப்பொருட்களை கொண்டிருப்பவை எவையெவை என அறிந்து கொண்டு அவற்றை தவிர்த்துவிட்டு மற்றவற்றை உண்ணலாம்

  • உண்ணக்கூடிய மலர்களை குறித்து மேலும் தெரிந்து கொள்ள Monica Nelson Adrianna Glaviano ஆகிய இருவர் இணைந்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான உணவு மலர்களை குறித்த பிரபலமான Edible Flowers: How, Why, and When We Eat Flowers  என்னும் நூலை வாசிக்கலாம்.
  • மேலதிக தகவல்களுக்கு:https://www.healthline.com/nutrition/edible-flowers#TOC_TITLE_HDR_6