பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், மரக்கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது.
மர வழிபாடு ஐரோப்பிய பாகன் பழங்குடிகளின் மரபாக இருந்தது. (pagan European). 723ல் ஜெர்மானிய இறையியலாளர் புனித போனிபேஸ் கிறிஸ்தவத்தை பரப்பும் இறைப்பணியில் இருந்தபோது பாகன் பழங்குடியினர் அவர்களின் கடவுளாக கருதப்பட்ட ஓக் மரமொன்றை வழிபடுவதை கண்டார். கிறுஸ்துவை அல்லாது மரத்தை வழிபடும் அவர்கள் மீது கோபம் கொண்ட அவர் அந்த ஓக் மரத்தை கோடாலியால் வெட்டி வீழ்த்தினார். வீழ்ந்த ஓக் மரத்தின் அடியில் இருந்து ஒரு பசுமை மாறா மரம் அப்போதே முளைத்து எழுந்ததை கண்ட துறவி அம்மரத்தை உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அடையாளமாக கொண்டு வழிபட துவங்கினார். பகன் பழங்குடியினரும் கிறுஸ்துவத்தை தழுவினர்.
அதன் பிறகே கிறுஸ்துவ வழிபாடுகளில் பசுமை மாறா மரங்கள் பங்குபெற்று படிப்படியாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலும் அவை இடம்பெற்றன என நம்பப்படுகிறது. கிறிஸ்துமஸ் மரத்தை குறித்து பெரும்பாலான ஜெர்மானிய மக்களால் சொல்லப்படும் இக்கதையின் நம்பகத்தன்மை ஆராய்ச்சிக்குரியது என்றாலும் இன்று வரை பசுமை மாறா மரங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் முக்கிய அங்கமாக இருக்கின்றன.
இவ்வாறு பசுமை மாறா மரக்கிளைகளை, இலை மற்றும் மலர்களால் ஆன வளையங்களை, மாலைகளை,அழியா வாழ்வின் குறியீடாக பயன்படுத்துவது பண்டைய எகிப்தியர்கள் மற்றும், சீனர்களின் வழக்கமாக இருந்தது.
ஸ்கேண்டினேவியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வீட்டை பசுமைமாறா புதிய மரக்கிளைகளால் அலங்கரிப்பதும் மரம் போன்ற அமைப்பை வீட்டு முன்பு அமைத்து அதில் பறவைகள் தங்க கூடுகளைஅமைப்பதும் தீய சக்திகளை விரட்டி, நீளாயுள் தரும் எனும் நம்பிக்கை இருந்தது,
ஜெர்மனியில் வீட்டு முன்பாகவும் வீட்டினுள்ளும் யூல் மரக்கிளைகளை குளிர்கால விடுமுறையில் நட்டு வைப்பது வழக்கம். நூற்றாண்டுகளாக கிருஸ்துமஸ் காலங்களில் வீட்டு முகப்பில் மிஸ்ஸெல்டோ-Mistletoe என்னும் ஒரு வகை மர ஒட்டுண்ணி செடியை வைப்பதும் அங்கு வழக்கமாக இருக்கிறது. காலம் காலமாக காதலுணர்வின் அடையாளமாக இச்செடி கருதப்படுவதால் அச்செடியை கடந்து வீட்டினுள் நுழையும் யாராக இருந்தாலும் உடனே முத்தமிடப்படவேண்டும் என்பது ஒரு மரபாக இருக்கிறது
பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் பசு மரக்கிளைகள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
1500 களில் கிறித்துவத்தின் முதலாவது சமயச் சீர்திருத்தச் சிந்தனையாளர் மார்ட்டின் லூதர், ஒரு கிறிஸ்மஸ் கால பனி நாளில் ஊசி இலைக்காடுகளின் வழியே காலைநடையில் ஈடுபட்டிருக்கையில், அப்பசுமை மாறா கூம்பு வடிவ மரங்களில் சூரிய ஒளி பட்டு அவை பொன்மஞ்சளில் ஒளிர்வதை கண்டார்.
அவ்வழகில் மனம் மயங்கிய அவர் ஒரு ஃபிர் மரத்தை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதை கிறிஸ்துமஸ் விழாவில் பயன்படுத்தினார். இதுவே அதிகார பூர்வமாக கிறிஸ்மஸ் மரம் கிறிஸ்மஸ் விழாக்களில் இடம்பெற்ற தருணம் என வரலாய்வாளர்கள் கருதுகிறார்கள்
நவீன கிறிஸ்துமஸ் மரம் மேற்கு ஜெர்மனியில் உருவானது. இதன் துவக்க கால நோக்கம் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் விலக்கப்பட்ட கனியை அளித்த சொர்க்க மரம் போன்ற ஒன்றை கிறிஸ்துமஸ் சமயங்களில் அமைப்பதுதான். பதினைந்தாம் நூற்றாண்டுகளில் டிசம்பர் 24 நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது அக்காலங்களில் அத்தி மரக்கிளைகளில் ஆப்பிள்களை கட்டி தொங்கவிட்டு ஏதென் தோட்டம் போல வீட்டை அலங்கரிப்பது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் முக்கிய அங்கமாக இருந்தது
அம்மரத்தில் கிறிஸ்துவின் கடைசி இரவு உணவை குறிக்க வேஃபர் பிஸ்கட்டுகள் கட்டி தொங்கவிடப்பட்டன. தொடர்ந்த காலங்களில் வேஃபர்களுக்கு பதிலாக பல வடிவ பிஸ்கட்டுக்கள் இடம்பெற்றன. அத்துடன் மரக்கட்டைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிறிய பிரமிடும் பிறகு இணைந்துகொண்டது அதில் தேவனின் புகைப்படங்களும், நட்சத்திர வடிவமும், உலகின் ஒளியான கிறிஸ்துவின் அடையாளமாக கருதப்பட்ட மெழுகுவர்த்திகளும் வைக்கப்பட்டன
16.’ம் நூற்றாண்டில் கிருஸ்துமஸ் மரங்களும் பிரமிடும் இணைந்து அலங்கரிக்கப்பட்ட கிருஸ்துமஸ் மரங்களாகின. 1521ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனா தனது திருமணத்திற்கு பிறகு ஒரு கிறிஸ்மஸ் மரத்தை பாரிஸ் நகருக்கு கொண்டுவந்து விழா கொண்டாடியது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் மரம் நுழைந்ததன் முக்கிய நிகழ்வாக வரலாறு குறித்து வைத்திருக்கிறது.
1790களில் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் மனைவியும் ஜெர்மானிய பெண்ணுமான சார்லட் விடுமுறை காலங்களில் தோட்டத்து மரங்களை அலங்கரிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
இங்கிலாந்து அரசி விக்டோரியாவின் ஜெர்மனி பயணங்கள் அவருக்கு ஜெர்மன் நாட்டு இளவரசர் ஆல்பர்ட்டுடன் காதலை வளர்த்தது. இவர்களின் திருமணத்துக்க் பிறகு, 1841ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்மஸ் மரத்தின்அதிகாரபூர்வமான இங்கிலாந்து பிரவேசம்.
அதன் பின்னர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் டிசம்பர் 24 அன்று விக்டோரியன் கிறிஸ்துமஸ் மரம் என்றழைக்கப்பட்ட அவற்றில் கேக்குகளும், பல வண்ண ரிப்பன்களும், வண்னக்காகிதங்களும் வழக்கமான சிறு பரிசுகளுடன் இணைத்து தொங்கவிடப்பட்டன. பரிசுப்பொருட்கள் கிருஸ்துமஸ் தினத்தன்று திறந்து பார்க்கப்பட்டன.
கிறிஸ்மஸ் மரத்தின் கிளைகள் இயற்கையாகவே சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பதும், தந்தை, மகன், தூய ஆவியை குறிக்கும் முக்கோண வடிவம் அதில் காணப்படுவதும் மிக அதிர்ஷ்டமென்று கருதப்படுகிறது.
இங்கிலாந்தில் சுமார் நான்கடி உயரத்திலும், அமெரிக்காவில் 10 அடிக்கும் மதிகமாக வீட்டுக் கூரை வரை உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரங்களும் பயன்பாட்டில் உள்ளன.
17ம் நூற்றாண்டில் வடக்கு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த ஜெர்மானியர்கள் அங்கும் இவ்வழக்கத்தை அறிமுகம் செய்தார்கள். எனினும் துவக்கத்தில் இம்மரம் அமெரிக்கர்களால் அவ்வளவாக விரும்பப்படவில்லை
இவ்வழக்கம் 18 நூற்றாண்டு வரை லூதரன் கிருஸ்துவர்களால் உலகெங்கும் பரவலாக்கப்பட்டது. 1820க்கு பிறகுதான் கிருஸ்மஸ் கொண்டாடங்கள் அமெரிக்காவில் புத்துயிர் பெற்று, கிறுஸ்துமஸ் மரங்களும்புழக்கத்துக்கு வந்தன.
1830ல்தான் முதன்முறையாக நாட்டின் கிறிஸ்துமஸ் மரமொன்று காட்சிக்கு வைக்கப்பட்டது. அதன்பிறகு கிறிஸ்துமஸ் மரங்களின் பிரபலத்துக்கு அப்போது செல்வாக்குடன் இருந்த சஞ்சிகையான Godey’s Lady’s Book, ஒரு முக்கிய காரணமாயிருந்தது.
19ம் நூற்றாண்டில் ஜெர்மானிய கலாச்சாரத்தில் கிறிஸ்துமஸ் மரம் ஆழ வேரூன்றியது பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் வெகுவாகப் பரவிவிட்டது.
முதல் கிருஸ்துமஸ் மர விற்பனை அங்காடி அமெரிக்காவில் 1851ல் மார்க் சார் (Mark Carr ) என்பவரால் நியூ யார்க்கில் துவக்கப்பட்டது. 1887-1933 களில் அமெரிக்க துறைமுகங்களில் நங்கூரம் இடப்பட்ட கப்பல்களிலும் கிருஸ்துமஸ் மரங்கள் விற்பனையாகின.
1870களில் ஊது கண்ணாடி அலங்கார பொருட்கள் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் அறிமுகமாயின. அப்போது பல வண்ணங்களில் சிறு மின்விளக்குகளும் கிருஸ்துமஸ் மரங்களில் கட்டி தொங்கவிடப்பட்டன.
கிருஸ்துமஸ் மரங்களில் கட்டி தொங்கவிடுவதெற்கென்றே பலவகையான உலோகங்கள், பருத்தி, காகிதங்கள் மற்றும் கண்ணாடிகளால் அலங்காரப் பொருட்கள் செய்யும் பணிமனைகள் ஜெர்மனியிலும் பொஹிமியாவிலும் ஏராளமாக நடத்தப்பட்டன அமெரிக்காவின் பிரபல பொதுவணிக நிறுவனமான F.W. Woolworth 1890களில் மட்டுமே 25 மில்லியன் மதிப்பிலான அலங்கார பொருட்களை சந்தைப்படுத்தின.
19 மற்றும் 20 ம் நூற்றாண்டுகளில் சீனாவிலும் ஜப்பானிலும் மேற்கத்திய மிஷனரிகளால் அறிமுகமான கிருஸ்துமஸ் மரங்களில் சிக்கலான காகித வடிவங்கள் தொங்கவிடப்பட்டன
கிறிஸ்துமஸ் மரம் எனப்படும் பசுமை மாறா மரம் பொதுவாக பைன் ஸ்ப்ரூஸ் அல்லது ஃபிர் மரங்களாக இருக்கும். இம்மரங்கள் புதிதாக கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு வெட்டபடும் அல்லது வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும். பலர் செயற்கை மரங்களையும் பயன்படுத்துகின்றனர். பலவிதமான பொருட்களை மறு சுழற்சி செய்தும் இம்மரங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன
இந்த வாரம் 2022 கிறுஸ்துமஸ் கொண்டாட்டத்தை சரண் ஆஃபன்பெர்கின் முதியவர்களுடன் கொண்டாடினான். அந்நகரில் வீழ்ந்த மரங்களின் பட்டைகளிலிருந்து கிறுஸ்துமஸ் மரங்கள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.
சுமார் மூன்று கோடியே முப்பது லட்சம் கிறிஸ்மஸ் மரங்கள் வட அமெரிக்காவில் வருடந்தோறும் விற்கப்படுகின்றன. மூன்று லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் இணையம் வழி விற்கப்படுகின்றன. கிறிஸ்மஸ் மர வளர்ப்பில் ஓரகன், வட கரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன், வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் போன்ற மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக உள்ளன.
அமெரிக்காவில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் கிறிஸ்மஸ் மர வளர்ப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர். சுமார் பன்னிரண்டாயிரம் இடங்களில் நமக்குத் தேவையான மரத்தைத் தேர்வு செய்து வெட்டிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது
செயற்கை நாரிழைகளை கொண்டு உருவாக்கப்படும் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்களின் பயன்பாடு 1930களில் துவங்கியது 1950 மற்றும் 60களில் ஏராளமான செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக பச்சை மரங்கள் கிடைக்காத நாடுகளில்,இவை வேகமாக புகழ்பெற்றன.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பைன்களின் பல வகைகளான வெள்ளை பைன் (Pinus strobus), ஸ்காட்ச் பைன் (P. sylvestris), மற்றும் விர்ஜினியா பைன் (P. virginiana) ஆகியவைகளும், பால்சம் ஃபிர் (Abies balsamea), ஃப்ரேசர் ஃபிர் (A. fraseri), பெரும் ஃபிர் (A. grandis),வெள்ளி ஃபிர்(A. alba) மற்றும் வெள்ளை ஃபிர் (A. concolor);மரங்களும் பல ஸ்ப்ரூஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் மரங்களாக பயன்படுகின்றன
சைப்ரஸ், செடார் மரங்கள் கிருஸ்துமஸ் வளையங்கள் செய்ய அதிகம் பயன்படுகின்றன.
அமெரிக்காவில் அம்ட்டும் 1500க்கும் அதிகமான கிருஸ்துமஸ் மரப்பண்னைகள்3லட்சத்து 5 ஆயிரம் எகர் நிலபப்ரப்பில் உள்ளன அங்கு ஏறக்குறிஅய 350க்மில்லியன் மர்னக்கள் வளர்ககப்டுகின்றன
செயற்கை மரங்களுக்கான தயாரிப்பில் கொரியா, தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. கிறிஸ்மஸ் மரங்கள்,அவற்றை அலங்கரிப்பதற்காக தயாரிக்கப்படும் பொருட்களுக்கான வணிகம் உலகின் மிகப்பெரிய வியாபாரத் தளமாகிவிட்டிருக்கிறது