நீர்வாழ்தாவரங்களில், மிதப்பவை, முற்றிலுமாக நீரில் மூழ்கியிருப்பவை, நீரினாழத்தில் மண்ணில் வேரூன்றிய, ஆனால் இலைகளும் மலர்களும் நீரின் மேல்மட்டத்தில் இருப்பவை, பாசிகள், என பலவகையான தாவரங்கள் உள்ளன. அவற்றில் நாம் அதிகம் காண்பது ஆகாயத்தாமரை அல்லது வெங்காயத்தாமரை என்னும் water hyacinth (Pontederia crassipes). அதைக்காட்டிலும் இன்னும் சற்று சிறிய அளவில் பச்சைரோஜா மலர்களைப்போல மிதந்தபடி இருக்கும், அந்தரத்தாமரையை அதிகம் யாரும் கவனிப்பதில்லை.. இதுவும் ஆகாயத்தாமரையைபோலவே ஒரு ஆக்ரமிப்பு நீர்க்களைத் தாவரம்தான்
நீர் முட்டைகோஸென்றும் அழைக்கப்படும் இவை உண்ணத்தக்கவையல்ல. சிறிய மிதக்கும் வேர்கள் கன்ணுக்குப்புலப்படாமல் நீரில் மூழ்கி இருப்பதால் இவற்றை அந்தரத்தில் மிதக்கும் தாமரையென அழைப்பதுண்டு. இவை முதன்முதலில் ஃப்ளோரிடாவில் ஜான் மற்றும் வில்லியம் ஆகியோரால் 1765-1774 ல் அடையாளம் காணப்பட்டது. பிரேசிலை தாயகமாகக்கொண்ட ஒருவித்திலை தாவர வகையை சேர்ந்தவையான இவை (Monocot) அண்டார்டிகாவைத் தவிர பிற அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ளன. நைல் நதியிலும் இவை அடர்ந்து காணப்படுகின்றன
ஆங்கிலப்பொதுப்பெயர்கள்; Water Cabbage, Water Lettuce, Nile Cabbage, Shellflower, floating Aroid.
Lettuce (Lactuca sativa) எனப்படும் சூரியகாந்தி குடும்பத்தைச்சேர்ந்த கீரைவகைச்செடியின் இலைகளைப்போல இவற்றின் தோற்றமிருப்பதால் இவற்றின் Water lettuce என்னும் பொதுப்பெயர் உலகெங்கிலும் பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. இவற்றில் மிகச்சிறிய (Dwarf water lettuce) வகையும் இருக்கின்றன. இவையே அலங்காரச்செடிகளாக தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. குழித்தாமரை என்றும் இவை அழைக்கப்படுகின்றன.
ஒன்றிலிருந்து பலவாக அந்தரத்தாமரைகள் மிக விரைவாக பெருகும் இயல்புடையது. இவை தனித்தும், பல தாவரங்கள் இணந்த கூட்டமாகவும் நீரில் மிதந்தபடி இருக்கும், சிறிய நீர்நிலைகளை முழுவதையும் ஆக்ரமிப்பதும் உண்டு
இணையறிவியல் பெயர்கள்; (Synonyms)
- Pistia stratiotes var. cuneata
- Pistia stratiotes var. linguiformis
- Pistia stratiotes var. obcordata (Schleid.)
- Pistia stratiotes var. spathulata (Michx.)
இதன் Pistia stratiotes, என்னும் அறிவியல் பெயரில் Pistia என்பது நீர் அல்லது திரவம் எனவும் stratiotes என்பது நீர்வீரன் எனவும் கிரேக்க மொழியில் பொருள்படும். ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்களின் நீரில் மிதக்கும் வகையான தாவரமான, இளம் பச்சை ரோஜா மலரைப்போல சற்றேறக்குறைய ரோஜா மலரின் அளவில் அல்லது அதைக்காட்டிலும் சிறிது பெரியதாக, பட்டுப்போன்ற மிருதுவான இதழமைப்பில் இருக்கும் காம்புகளற்ற இலைகளால் ஆன இவை ஏரேசியே (Araceae) குடும்பத்தை சேர்ந்தவை.
பொதுவாக 3-25 செமீ உயரம் வரை வளரும் ஒற்றைத்தாவரம், 5 லிருந்து 25 செமீ விட்டம் கொண்டிருக்கும். காம்புகளற்ற, அடிகுறுகி நுனி அகன்று விரிந்து, சதைப்பற்றுடனுமிருக்கும். இலைகள் சாம்பல்பச்சை நிறத்தில், தெளிவான இணைக்கோடுகளும் மென்ரோமங்களும் கொண்டிருக்கும் இந்த மென்ரோமங்களுக்கிடையில் சிக்கிக்கொள்ளும் நீர்க்குமிழிகள் இவற்றின் மிதவைத்தன்மையை (Buoyancy) அதிகரிக்கும்.
Offshoot/stolons எனப்படும் நீரின் மேற்பரப்பில் மிதக்கும் இலைகளை இணைந்திருக்கும் அடித் தண்டுகளிலிருந்து புதிய தாவரங்கள் முளைத்து வளரும். இந்த அடித்தண்டுகள் மிக மெலியதாக உடையும் இயல்புடன் இருக்கும். இறகு போன்ற, மென்மையான, 50 செமீ நீளமுள்ள கிளைத்த, நீரில் அசைந்துகொண்டு மிதந்தபடி இருக்கும் வேர்த்தொகுப்பைக் கொண்டிருக்கும்.
இலைகளின் அடியிலிருந்து உண்டாகும், சிறிய சதைப்பற்றான காம்புகளிலிருந்து ஏராளமான நுண்ணிய மலர்கள் இலையிதழ்களுக்குள், மெல்லிய மங்கலான இளம்பச்சை நிறத்திலிருக்கும் செதில்போன்ற உறையினால் சூழப்பட்டு மறைந்திருக்கும். ஒற்றைப்பெண்மலர் அடியிலும் அதன்மேலே வட்டஅடுக்கில் நிறைய ஆண்மலர்களும் காணப்படும். மிகச்சிறிய 6-10 மிமி அளவுள்ள விதைகள் அடர்நிற நுண்விதைகளுடன் உருவாகும்
மிதக்கும் நீர்வாழ் தாவரங்களில் மிக முக்கியமான ஆக்ரமிப்புக்களையாக கருதப்படும் இவை (Invasive aquatic weed) இயற்கையான வாழ்விடங்களில் பல்கிப்பெருகி நீர்மாசை உண்டு பண்ணுகின்றது. கால்வாய்களை அடைத்து நீரோட்டத்தை துண்டிக்கவும் செய்கின்றன.
உலகளாவிய ஆக்கிரமிப்பு இனங்களின் தரவுத்தளம் (Global Invasive Species Database GISD) இவற்றையும் உலகின் தொல்லைதரும் ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இணைத்திருக்கின்றது. அமெரிக்காவிலும் இவை பரவுதலை கட்டுப்படுத்த வேண்டிய தாவரங்களின் பட்டியலில்தான் இருக்கிறன.
உயிரிக்கட்டுப்பாட்டு முறையில் சிலநாடுகள் இவற்றின் பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து கொண்டுமிருக்கின்றன. தாய்லாந்தில் அந்தரத்தாமரைகளின் இலையை உண்ணும். Neohydronomous affinis, பூச்சிகளை தென்னமரிக்காவிலிருந்து தருவித்து, இவற்றை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவிலும் ஃபிஜி தீவுகளிலும் பரிந்துரைககப்பட்ட ரசாயனக் களைக்கொல்லிகளை உபயோக்கிறார்கள்.
அழுகிரந்தி குஷ்ட மடர்ந்த கரப்பான்
புழுவுறு மக்கூடு முதற்போகும் – அழகாகும்
மிந்திர நீலக்கருங்க ணேந்திழையே யெப்போழ்து
மத்திரத் தாமரையா லாய்.
என்னும் சித்த வைத்திய பதாற்தகுண விளக்கப்பாடலொன்று இந்த அந்தரத் தாமரை அழுகின ரணம், குஷ்டம், கரப்பான், மார்புக்குள் கூடு கட்டுகின்ற நுண் கிருமிகள் ஆகிவற்றை அழிக்கும் என்கின்றது. எனவே இவற்றைக்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் ஆய்வுகளை செய்யலாமென்கிறன சித்தவைத்திய அமைப்புக்கள். இவற்றை உலர்த்தி சுட்ட சாம்பலை தொழுநோய்ப் புண்களுக்கும் மருந்தாக பயன்படுத்துகின்றனர்
இவை சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டிருப்பதால் இவற்றை அதிகம் உண்ணும் கால்நடைகளுக்கு உடலுபாதைகள் உண்டாகும். சீனாவில் உலர்த்திய அந்தரத்தாமரைகளை கால்நடைத்தீவனங்களில் கலந்து (குறிப்பாக பன்றிகளுக்கு,) கொடுக்கப்படுகின்றது. சீன பாரம்பரிய மருத்துவத்தில் சில குறிப்பிட்ட நோய்களுக்கு இவை மருந்தாகவும் பயன்படுகின்றது. மீன் தொட்டிகளிலும் அலங்காரத்தொட்டிகளிலும் இவை அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. அந்தரத்தாமரையின் சாற்றை துணிகளில் படிந்திருக்கும் கறைகளைப் போக்கவும் பயன்படுத்தலாம். உலர்ந்த இலைகளை பூச்சிகள் வராமலிருக்க அலமாரிகளில் போட்டுவைக்கலாம்.
.