கருத்தரங்குகளில் கலந்து கொள்வதும், ஆராய்ச்சி கட்டுரைகளை பிரசுரிப்பதுமாக பரபரப்பான முனைவர் பட்ட ஆய்வின் இறுதி வருடங்களில் கர்நாடகத்தின் விவசாய பல்கலைக்கழகத்தில் நடந்த சர்வதேச உணவு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. நானும் என்னுடன் அதே துறையில் ஆய்வு செய்து கொண்டிருந்த தோழியும் கலந்துகொண்டோம். ஹெப்பல் என்னுமிடத்தில் நடந்த அந்த ஆய்வரங்கு அப்போதைய கர்நாடக முதல்வரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆய்வாளர்களும் அரசியலாளர்களுமாக ஆயிரக்கணக்கில் பங்கேற்பாளர்கள். முதல் நாள் அமர்வுகள் முடிந்த பின்னர் வருகை தந்திருக்கும் அதி முக்கிய பிரமுகர்களின் விமான பயண சீட்டுக்களுக்கான கட்டணத்தை திரும்ப கொடுக்கும் பணிக்கு எங்களை பணித்தபோது ஆர்வமாக ஒத்துக்கொண்டு, 1 மணி நேரத்தில் 6 லட்சம் ரூபாய்களை எந்த குளறுபடியும் இன்றி உரியவர்களுக்கு கொடுத்துவிட்டோம். முதல்வரின் கவனத்திற்கு இந்த விஷயம் போனதும் எங்களிருவருக்கும் அன்றிரவு நடக்க இருந்த பெரும் விருந்துக்கு அழைப்பு விடுத்து அழைப்பிதழ் அட்டையையும் கொடுத்தனுப்பினார்.
பெங்களூருவின் பூங்காக்களில் ஒன்றில் இரவு விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. மாபெரும் உண்டாட்டு அது அங்கேதான் அழகிய வைன் கோப்பைகளை முதன் முதலில் பார்த்தேன். முதன் முதலாக மாநில எல்லையை கடந்திருந்த கிராமத்துப் பெண்ணான எனக்கு அந்த கோப்பைகளின் ஒயிலும் வடிவங்களும் பரவச மூட்டியது. பழரச பானங்கள் இருக்கும் பகுதியிலிருந்து தூரத்தில் வைன் அருந்தி கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் அதுவரை சாதாரண கண்ணாடி டம்ளர்களை மட்டுமே பார்த்திருந்ததால், அந்த மெல்லிய தண்டுகளுடன் கூடிய, பளபளக்கும், பல வடிவங்களில் இருந்த கோப்பைகளின் தோற்றம் வசீகரமாயிருந்தது.
அங்கிருந்து வந்து பல வருடங்களாகியும் மனதின் அடியாழத்தில் அவ்வபோது அக்கோப்பைகள் மினுங்கிக் கொண்டேயிருந்து, கல்லூரி பணிக்கு வந்து பல வருடங்களுக்கு பிறகு வைன் நொதித்தலில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு, வைன் நொதித்தலின் வேதிவினைகள் குறித்தெல்லாம் கற்பிக்கும் வாய்ப்பு அமைந்தபோது மீண்டும் அக் கோப்பைகளின் நினைவு மேலெழுந்து வந்தது.
கத்தரிக்கப்பட்ட தண்டுகளிலிருந்து திராட்சைக் கொடிகளை வளர்த்து பழங்களை அறுவடை செய்யும் அறிவியல் மற்றும் கலையான விட்டிகல்ச்சர்- (Viticulture) தாவரவியலின் பிற துறைகளை போலவே வெகு சுவாரசியமாக இருந்தது. திராட்சை பழங்களின் சர்க்கரையே பின்னர் ஆல்கஹாலாக மாறுவதால், பழங்களின் brix எனப்படும் சர்க்கரை அளவை, ஊசி போட்டுக்கொள்ளும் சிரிஞ்சை போன்ற ஒரு எளிய உபகரணத்தால் பழங்களில் குத்தி கணக்கிட்ட பின்னர் திராட்சை தோட்டங்கள் ஏலம் எடுக்கப்படுகின்றன. இத்துடன் திராட்சைக் கொடிகள் வளரும் மண்ணின் கார அமிலத்தன்மை, வளம், அவற்றிற்கு பாய்ச்சப்பட்ட நீரின் நுண் சத்துக்கள், பெய்த மழையின் அளவு, அவற்றின் மீது விழுந்திருக்கும் சூரிய ஒளியின் அளவு இப்படி பல காரணிகளும் ஏலம் எடுக்கையில் கணக்கிடப்படுகின்றன. அறுவடையான பழங்களிலிருந்து வைன் தயாரிக்கும் கலை வினாலஜி (oenology) என்றழைக்கப்படுகிறது. இத்துறையில் ஆழ்ந்திருக்கையில்தான் வைன் கோப்பைகளை குறித்து விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.
கண்ணாடி பொது வருடத் துவக்கத்துக்கு முன்னர் 4000 ஆண்டுகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தும், அதன் உலகளாவிய பெருமளவிலான பயன்பாடு 18ஆம் நூற்றாண்டுக்கு பிறகே இருந்தது. கண்ணாடிக் கோப்பைகளின் வரலாறும் கண்ணாடியின் பயன்பாடு வந்ததிலிருந்தே இருக்கிறது.
இறந்த விலங்குகளின் கொம்புகளை்க குடிகலன்களாக பயன்படுத்திய ஆதி காலத்துக்கு பிறகு மரக் கோப்பைகளும் தோல்பைகளுமே திரவக்கொள்கலங்களாக இருந்தன. ப்ளைஸ்டொஸீன் காலத்தில்தான் களிமண் கோப்பைகள் புழக்கத்திற்கு வந்தன. பின்னர் வெண்கலக் காலத்தில் செம்பு உள்ளிட்ட உலோகக் கோப்பைகள் பல வடிவங்களில் இருந்தன. ரோமானியர்கள் இரட்டை இலையும் ஒற்றை மொக்கும் பொறிக்கப்பட்ட பொன் மற்றும் வெள்ளிக் கோப்பைகளை அறிமுகப்படுத்தினர். பொதுயுகம் 5 ஆம் நூற்றாண்டில் உயர் குடியினருக்கு கண்ணாடிக் கோப்பைகளும் சாமானியர்களுக்கு மண்குடுவைகளும் என பருகும் கோப்பைகளில் வேறுபாடு காணப்பட்டது. அதன் பின்னர் பலவிதமான கோப்பைகள் பல வடிவங்களில் பற்பல பயன்பாடுகளுக்கான இருந்தன..
1600’க்கு பிறகு புழக்கத்திலிருந்த சில சுவாரஸ்யமான கோப்பைகளின் பட்டியல்
- Piggin-சிறிய தோல் கோப்பை
- Noggin-மரக் குடுவை
- Goddard-pewter –தேவாலயங்களில் சமய சடங்குகளில் உபயோகப்படுத்தப்பட்ட கோப்பைகள்
- Bombard-உயரமான அலங்கரங்கள் மிகுந்த சீசாக்கள் போன்ற கோப்பைகள்
- Hanap-கூடைகளுக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் அலங்காரமான பெரிய பீப்பாய்கள்.
- Tappit-இரவு தாமதமாக புறப்பட்டு செல்லும் விருந்தினர்களுக்கு, அவர்கள் வீட்டிற்கு சென்ற பின்னர் அருந்த பானம் நிறைத்துக் கொடுக்கும் மூடிகளுடன் கூடிய கோப்பை
- Fuddling cup- இரண்டு மூன்று சிறு சிறு கோப்பைகளை ஒன்றாக இணைத்த புதிர் வடிவம். இதில் இருக்கும் பானத்தை சிந்தாமல் அருந்துவது ஒர் விளையாட்டாக இருந்திருக்கிறது
- Puzzle jug- கழுத்துப்பகுதியில் சிறுதுளைகளிடப்பட்டிருக்கும் கோப்பையான இதில் விரல்களால் துளைகளை மூடியபடிக்கு லாவகமாக பானம் சிந்தாமல் அருந்தவேண்டும்
- Yard glass- சுமார் 90 செமீ உயரமுள்ள, கைகளில் பிடித்துக் கொண்டபடி அருந்தும் கோப்பை. .
- Milk jugs-பசுமாட்டை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் வாலே கைப்பிடியாக இருக்கும் பால் கோப்பைகள்
- kronkasa- மிக அழகிய மர சித்திர வேலைப்பாடுகளுள்ள ஸ்வீடனின் மரக்கோப்பைகள்
- Gourd cup- உலர்ந்த சுரைக்குடுவைகள் மரக்கட்டை கைப்பிடிகளுடன்
- Toby jugs- மாலுமிகளும், பாதிரிமார்களும் காவலதிகாரிகளும் மட்டும் உபயோகப்படுத்தியவை
- Rhyton- யுரேஷியாவில் பிரபலமாயிருந்த உலோகங்களால் செய்யப்பட்ட விலங்குகளின் தலையை[போலிருக்கும் கோப்பைகள்
- விளிம்பில் வெள்ளி வளையம் இருக்கும் தேங்காய் சிரட்டை மற்றும் நெருப்புகோழியின் முட்டையோட்டு கோப்பைகள்
- வைனின் சுவையை, தரத்தை சோதிப்பவர்களுக்கான சிறப்பு பீங்கான் கோப்பைகள்
- அளிக்கப்பட்டிருக்கும் பானத்தில் நஞ்சு கலந்திருக்க வில்லை என்பதை உணர்த்தும் இருபுறமும் கைப்பிடிகள் வைத்திருந்த கோப்பைகள்.
- இருகண்ணாடித்தகடுகளை ஒன்றாக சிறிய தட்டை போல இணைத்த அடிப்பாகத்துடன் கூடிய கோப்பை. கடைசித்துளி பானத்தை அருந்தினால் மட்டுமே இந்த அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதனின் சித்திரம் புலனாகும்
- ஒன்றின் மீது ஒன்றாக இரட்டை அடுக்கு கோப்பைகள் தூரதேசம் செல்லவிருக்கும் தோழர்களை வழியனுப்புகையில் கொடுக்கும் விருந்தின்போது பயன்படுத்தப்பட்டது அதில் நட்பை குறிக்கும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்
- திருமண விருந்துகளில் இரட்டை அடுக்கும் அலங்காரங்களும் கொண்டிருக்கும் வைன் கோப்பைகள் இருந்தன. மேலடுக்கு வைனை மணமகனும், பின்னர் கீழடுக்கில் உள்ளதை மணமகளும் அருந்துவர்
- இந்திய திருமணங்களில் மாலை மாற்றிக் கொள்ளுதல் போல ஜப்பானிலும் மணமக்கள் மூன்றடுக்கு வைன் கண்ணாடிக் கோப்பைகளை மூன்று முறை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இருந்தது.அதன் பின்னர் அவ்வடுக்கு கோப்பை மதுவை மணமக்கள் அருந்துவார்கள்.
- பானங்களில் நஞ்சு கலந்திருந்தால், நிறம் மாறி அதை அடையாளம் கட்டும் கோப்பைகளும், கொதிநீர் ஊற்றுகளிலிருந்து நரடியாக நீரை பிடித்து அருந்தும் ஸ்பா கோப்பைகளும், உள்ளே நிறைக்கப்படும் பானங்க்களுக்கு ஏற்ப நிறம் மாறும் கோப்பைகளும், பேரரசர்களின் பிரத்யேக பொன்கோப்பைகளுக்கென தனியே காவல்காரர்கள் கூட இருந்தனர்
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இயற்கை வரலாறு மற்றும் புவியியல் நிகழ்வுகளை ஆராய்வதில் கழித்தவரான, ரோம எழுத்தாளரும், வரலாற்றாளரும், தீராப்பயணியும் இயற்கை மெய்யிலாளருமான பிளினி (Pliny -23-79 A.D.) கண்ணாடி கோப்பைகளின் வரவுக்குப் பின்னர் பொன் மற்றும் வெள்ளிக்கோப்பைகளைத் தவிர்த்து அனைவரும் கண்ணாடிக்கோப்பைகளையே பெரிதும் விரும்பியதைக் குறிப்பிட்டிருக்கிறார். பிளினி, பீனிசிய வணிகர்கள் பொ.யு. மு. 5000 வாக்கில் சிரியாவின் பிராந்தியத்தில் முதல் கண்ணாடியை உருவாக்கியதாக கூறினாலும், தொல்லியல் ஆதாரங்கள், கண்ணாடி தயாரித்த முதல் மனிதன் பொ.யு.மு. 3500 வாக்கில் கிழக்கு மெசபடோமியா மற்றும் எகிப்தில் இருந்ததாக உறுதியளிக்கிறது.
பொ.யு.மு. 1ஆம் நூற்றாண்டில், சிரிய கைவினைஞர்கள் ஊதுகுழாய் முறையில் கண்ணாடி உருவாக்குவதை கண்டுபிடித்த பின்னர் கண்ணாடி உற்பத்தி எளிதாகவும், வேகமாகவும், மலிவாகவும் ஆனது. ரோமப் பேரரசில் கண்ணாடி உற்பத்தி செழித்து இத்தாலியிலிருந்து அதன் ஆட்சியின் கீழ் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவியது. பொ.யு. 100’ல் எகிப்திய நகரமான அலெக்ஸாண்டிரியா கண்ணாடி உற்பத்தியின் மிக முக்கியமான மையமாக இருந்தது. தொடர்ந்த இரண்டாம் நூற்றாண்டில் ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் கண்ணாடிக்குடுவைகளும், வைன் உள்ளிட்ட பானங்களை பருகுவதற்கான கோப்பைகளும் செய்யப்பட்டது.
தொடர்ந்து நிறமற்ற ஒளி உட்புகும் கண்ணாடிகளே உருவாக்கப்பட்டு கொண்டிருக்கையில் நாலாம் நூற்றாண்டில்தான் காடுகளிலிருந்து பொட்டாசியமும், இரும்புச்சத்தும் கொண்ட மணலிலிருந்து பச்சைக் கண்ணாடி தயாரிக்கப்பட்டது. அப்போதிலிருந்துதான் வைன் பாட்டில்களும், வைன் கோப்பைகளும் பச்சை நிறக் கண்ணாடியில் உருவாக்கப்பட்டன. பானம் ஊற்றப்படும் மேல் பகுதி குறுகலாகவும், நீளமாகவும் செய்யப்பட்டு வந்த கோப்பைகள் காலப்போக்கில் குறுகிய வடிவிலிருந்து அகலக்கிண்ணங்களாகின.
உள்ளே ஊற்றப்படும் வைனின் நிறத்தை பச்சைக் கண்ணாடி மறைத்து விடுவதால் பச்சை தண்டுகளும், நிறமற்ற கிண்ணங்களுடனான கண்ணாடி கோப்பைகள் பின்னர் புழக்கத்தில் வந்தன. குறிப்பாக Rieslings மற்றும் Gewürtztraminers. இரண்டு வைன் வகைளும் இப்படி பச்சை தண்டுகளை உடைய கண்ணாடி கோப்பையில் மட்டுமே பரிமாறப்பட்டன.
13 ஆம் நூற்றாண்டில் வெனிஸ் கண்ணாடி கோப்பைகளின் உற்பத்தி மையமாக இருந்தது. அப்போதுதான் கண்ணாடி கோப்பைகளுக்கு பொன்முலாம் பூச்சிடுவதும், சித்திரங்கள் பொறிக்கப்படுவதும் துவங்கியது.
15 ஆம் நூற்றாண்டில் இரும்பு ஆக்ஸைடுகளினால் உருவாகும் பச்சை அல்லது மஞ்சள் நிறங்கள் இல்லாத தூய ஒளி ஊடுருவும் கிரிஸ்டல்லோ கண்ணாடி கோப்பைகள், (Cristallo) மாங்கனீஸ் ஆக்சைடு கலப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் லேட்டிமா எனப்படும் தூய வெண்ணிற பால் கோப்பைகளும், கருப்பு,இளஞ்சிவப்பு மண் நிறங்களிலும் கோப்பைகளும் வடிவமைக்கப்பட்டு பிரபலமாயின.
பின்னர் கோப்பைகளில் பலவகையான அலங்காரங்களும், சித்திர வேலைப்பாடுகளும் நுண்ணிய அலங்காரங்களும் சேர்க்கப்பட்டு மிக ஆடம்பரமான கோப்பைகள் வடிவமைக்கப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டில் வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி கோப்பைகள் பெரும்பாலானோரின் விருப்பத்திற்குரியவைகளாக இருந்தன.
16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோப்பையின் தண்டுகளில் திருகு வேலைப்பாடுகள் இருந்த Air Twist கோப்பைகளும், கண்ணாடி நூலிழைகள் இருக்கும் Opaque Twist கோப்பைகளும் மிகப் பிரபலமாயிருந்தன. 1700களில் ரோமானியர்கள் கண்ணாடிக் கோப்பைகளை செய்யத் தொடங்கினார்கள். பிறகு கிண்ணப்பகுதியிலும் தண்டிலும் உள்ளே காற்றுக்குமிழ்கள் இருக்கும் கோப்பைகளும், அலங்காரங்கள் ஏதுமில்லா மெல்லிய கண்ணாடித்தண்டுகளுடன் கூடிய கோப்பைகளும் 1740’ல் திடீரென பிரபலமாயின.
பிரிட்டனில் 1746’ல் இரண்டாம் ஜார்ஜ் மன்னர் ஆட்சியில் கண்ணாடி தயாரிப்புக்கான மூலப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரி மிக அதிகமாக இருந்ததால் கண்ணாடி கோப்பைகளின் அளவு மிக சிறியதாக இருந்தது 1811ல் இவ்வரி விலக்கப் பட்டபோது பெரிய அளவிலான கோப்பைகள் மீண்டும் புழக்கத்தில் வந்தன. இங்கிலாந்தில் பெரும்பாலும் 125 மிலி கொள்ளளவுள்ள கோப்பைகளே பயன்பாட்டில் இருந்து வந்தது பலவருடங்களுக்கு பின்னர்தான் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிறிய அளவிலான கோப்பைகளும் சந்தைக்கு வந்தன
துல்லிய ஒளி ஊடுருவும் கண்ணாடி கோப்பைகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டன. ஒரே ஒரு அவுன்ஸ் கொள்ளளவுள்ள கோப்பைகள் 19 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டு ஜோடிகளாக விற்பனை செய்யப்பட்டன.1950ல் தான் தற்போது புழக்கத்தில் இருக்கும் வடிவில் தண்டும் கிண்ணப்பகுதியுமான் கோப்பைகள் சந்தைக்கு வந்தன.
பெரும்பாலான வைன் கோப்பைகள் தண்டுடன் இணைக்கப்பட்ட அகலக்கிண்ணமும் அடியில் வட்டத்தட்டு போன்ற பகுதியும் கொண்டவை ( bowl, stem, and foot). பரிமாறப்பட்ட வைனின் சுவை மணம் இவை அருந்துபவரின் நாசிக்கும் உதட்டிற்கும் மிகச்சரியான கோணத்தில் இருந்தால் மட்டுமே முழுமயாக சுவையை அனுபவிக்க முடியும், அதன்பொருட்டே ஒவ்வொரு வகையான வைனுக்கும் பிரத்யேக வடிவங்களில் கோப்பைகள் வடிவமைக்கபட்டிருகின்றன.
எல்லாக்கோப்பைகளுமே அகலமான கிண்ணங்களை கொண்டவையல்ல. குறுகலான நீளமான குழலைபோன்ற கிண்ணப்பகுதிகளைக் கொண்டிருப்பவைகளும், தண்டுகள் இல்லாமல் கிண்ணங்கள் மட்டுமேயான கோப்பைகளும் கூட புழக்கக்தில் உள்ளன.
சிவப்பு வைனுக்கான கோப்பைகள் அகலமான கிண்ண அமைப்பு கொண்டவை. காற்றின் பிராணவாயு சிவப்பு வைனுடன் கலந்து oxidation நடக்க இந்த அகலப்பகுதி உதவுகின்றது
சிவப்பு வைனுக்கான கோப்பைகள் பலவகைப்படும்
Bordeaux glass: இது உயரமான காம்புடன் அகலக்கிண்ணமும், அருந்துகையில் வாயின் உட்புறத்துக்கு நேரடியாக வைனை செலுத்தும்படியும் வடிவமைக்கப்பட்டது
Burgundy glass: முன்பு சொல்லபட்டிருப்பதை விட அகலம் அதிகமான கிண்ணப்பகுதி கொண்டவை, pinot noir போன்ற துல்லிய சுவையுடைய வைனுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது, இது வைனை நாவின் நுனிக்கு கொண்டு வரும்.
வெண்ணிற வைனுக்கான கோப்பைகளின் அளவுகளும் வடிவங்களும் பல வகைப்படும். குறுகிய நீண்ட மேற்புறமுள்ளவை, அகலமான ஆழம் குறைவான கிண்ணங்களுள்ளவை என்று பலவிதங்களில் இவை உள்ளன. வெண்ணிற வைன் சிவப்பைப்போல அதிகம் oxidation தேவைப்படும் வகையல்ல எனவே மேற்புறம் அகலம் குறைவான வடிவிலேயே இக்கோப்பைகள் இருக்கும். இளஞ்சிவப்பு வைனும் வெண்ணிற வைனுக்கான கோப்பைகளிலேயே வழங்கப்படுகின்றது.
ஷேம்பெயின் போன்ற மினுங்கும் வைன் வகைகளுக்கு குறுகிய குழல் போன்ற கிண்ணங்கள் இருக்கும் கோப்பைகளே பொருத்தமானவை. sparkling வைனுக்கான கோப்பைகள் நீளமாகவும் ஆழமான கிண்ணங்களுடையதாகவுமே இருக்கும். இக்கோப்பைகள் demi flute, flute narrow, tall flute & glass என நான்கு வகைப்படும்
ஷெர்ரி கோப்பைகள் நல்ல நறுமணமுள்ள, ஆல்கஹால் அளவு அதிகமான பானஙகளான sherry, port, aperitifs, போன்றவற்றிற்கானவை ஷெர்ரி கோப்பைகளில் copita மிக பிரபலமானது.
பொக்காலினோ கோப்பைகள் பிரத்யேகமாக சுவிட்ஸர்லாந்தின் அடர் நீல நிற திராட்சைகளிலிருந்து பெறப்படும் மெர்லாட் வைனுக்கானவை. இவை 200 மிலி மட்டுமே கொள்ளும்
தற்போது வைன் கோப்பைகள் உடையும் சாத்தியங்களை குறைக்க கண்ணாடியுடன் டைட்டானியம் சேர்க்கப்படுகின்றது .
வைன் சுவைத்தல் என்னும் வைனின் தரத்தை சோதிக்கும் நிகழ்வு கோடிகளில் புழங்கும் வைன் தொழிற்சாலைகளின் மிக முக்கிய நிகழ்வாதலால் (ISO 3591:1977) ISO தரக்கட்டுப்பாடு மிகத்துல்லியமாக பின்பற்றப்படும். அந்த சோதனைக்கு உபயோகப்படும் கோப்பைகள் மிகத்துல்லியமான அளவுகளிலும்,வடிவங்களிலும் தயாரிக்கப்படும்.
பல வடிவங்களில் இருக்கும் வைன் கோப்பைகளின் வசீகர வடிவம் அந்த பானத்தை ரசித்து ருசிப்பதற்கான் காரணங்களில் முக்கியமானதாகி விட்டிருக்கிறது. ஒரே வைனை வேறு வேறு கோப்பைகளில் அருந்துகையில் சுவையும் மாறுபடுகிறது என்று வைன் பிரியர்கள் சொல்லக் கேட்கலாம். வைனை விரும்பும் அளவுக்கே வைன் கோப்பைகளை விரும்புபவர்களும் சேகரிப்பவர்களும் உண்டு.
கோப்பைகளின் விளிம்பு எத்தனை மெல்லியதாக உள்ளதோ அத்தனைக்கு வைனை ஆழ்ந்து ருசித்து அருந்தலாம்., விளிம்புகள் கூர்மையாக இல்லாமல் மென்மையாக்க பட்டிருப்பது வைனை நாவில் எந்த இடையூறுமின்றி சுவைக்க உதவுகின்றது. கிண்ணப்பகுதியை கைகளால் பற்றிக்கொள்கையில் உடலின் வெப்பத்தில் வைனின் சுவை மாறுபடலாம் என்பதால் கோப்பைகளை எப்போதும் தண்டுப்பகுதியை பிடித்தே கையாள வேண்டும்.
ஒரே கோப்பையில் அனைத்து விதமான வைன்களையும் அருந்தலாம் எனினும் வைனை அருந்துதல் என்பது தனிமையில் நிலவின் புலத்தில் நனைந்தபடிக்கோ அன்றி மென்சாரலில் மலைச்சரிவொன்றை நோக்கியபடி கவிதையொன்றை வாசிப்பதை போலவோ மிக நுட்பமான ஒரு அனுபவம் என்பதால் கோப்பைகளின் வேறுபாடு சுவையுடன் தொடர்புடையதாகி விட்டிருக்கிறது. ஊற்றப்பட்ட வைனை கோப்பையின் உள்ளே மெல்ல சுழற்ற ஏதுவாக கிண்ண பகுதியின் அளவு இருத்தல் அவசியம்
வைன் கோப்பை வடிவமைப்பில்:.
- எளிதில் கவிழ்ந்துவிடாமல் இருக்க உறுதியான அடிப்பகுதி.
- கின்ணப்பகுதியை விரல்கள் தொட்டுவிடாத தூரத்தில் பிடித்துக்கொள்ள ஏதுவான நீளத்தில் தண்டுப்பகுதி.
- வைனை சுழற்றி நுகர்வதற்கு வசதியான அகலத்திலும் ஆழத்திலும் உள்ள கிண்ணப்பகுதி
- கோப்பையின் உறுத்தும் விளிம்பை உதடுகள் உணராவண்ணம் கவனமாக உருவாக்கப்பட்ட மென் விளிம்புகள்.
இவை நான்கும் மிக முக்கியமானவை
இப்போது கண்ணாடி கிண்ணங்களை காட்டிலும் உறுதியும், நுட்பமான வேலைப்பாடுகளும் கொண்ட கிரிஸ்டல் கிண்ணங்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. தண்டுப்பகுதி இல்லாமல் வெறும் கிண்ணம் மட்டுமே இருக்கும் சாசர் போன்ற கோப்பைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன என்றாலும் தண்டுகள் உள்ளவையே மிக அதிகம் பேரின் விருப்பத்துக்கு உகந்தவை
வைன் பிரியர்களின் ஏகோபித்த கருத்து கோப்பைகளின் வடிவத்திற்கும் வைனின் ருசிக்கும் தொடர்பிருக்கிறது என்பதுதான் எனினும் இப்படிச் சொல்லுபவர்களுக்கும் அதன் அடிப்படையை சொல்லத் தெரி்வதில்லை. இதற்கு அறிவியல் ஆதாரமும் இல்லைதான். எனினும் வைன் கிண்ணங்களின் வடிவத்திற்கும் வைனின் சுவைக்குமான. குறிப்பாக ஆண்களின் சுவைக்கான தொடர்பு உளவியல் காரணங்களைக் கொண்டது என்று சொல்லலாம்
வைன் கோப்பைகளின் வடிவத்திற்கான சுவாரஸ்யமான பின்னணிக்கு வரலாம். அறுவடை குறைவு, பசி, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு இவற்றால் தவித்த மக்களின் மன்றாட்டுக்கு பதிலாக ’’ரொட்டி இல்லை என்றால் அவர்கள் கேக் உண்ணலாம்’’ என்று பதிலளித்ததாக சொல்லப்படும் பிரஞ்சு புரட்சியின் போது கில்லட்டில் தலை துண்டித்து கொல்லப்பட்ட மேரி அண்டோய்னெட் (1755-1793, (16ஆம் லூயிஸி ன் மனைவி) என்னும் சீமாட்டியின் மார்பகங்களின் வார்ப்பிலிருந்து உருவாக்கப்பட்ட தண்டுப்பகுதிகளற்ற வைன் கோப்பைகள் வெகு பிரசித்தம், என்றும் அவரது மார்பின் மெழுகு அச்சுக்களிலிருந்தே வைன் கோப்பைகள் அப்போது தயாரிக்கப் பட்டதாகவும், வைனை அக்கோப்பைகளில் அருந்துபவர்கள் அனைவரும் மேரியின் ஆரோக்கியதிற்கென அருந்துவதாகவும் நம்பிக்கை நிலவியது
15 ஆம் லூயிஸ் காதலியான ட்யூ பொம்பாதோர் (1721-1764): தன் காதலின் சாட்சியாக தன் மார்பகங்களின் மீது பித்துக்கொண்டிருந்த லுயிஸூக்கு மார்பின் மெழுகு வார்ப்பை எடுத்து தயாரிக்கப்பட்ட கோப்பைகளிலேயே ஷாம்பெயின் பரிமாறினாராம்
இதே போன்ற மார்பக மெழுகு வார்ப்பு கோப்பை கதையே நெப்போலியனே திகைக்கும் அளவிற்கான ஷேம்பெயின் செலவு கணக்குகள் கொண்டிருந்த நெப்போலியனின் மனைவியான பேரரசி ஜோஸ்பினுக்கும் சொல்லப்படுகின்றது
இரண்டாம் ஹென்றியின் காதலியான டயானாவின் (1499-1566): இடது மார்பகத்தின் வடிவிலான கோப்பைகளில் மார்பகங்களின் சித்திரங்களும் வரையப்பட்டிருந்ததாக சொல்லபடுகின்றது
Helen of Troy புகழ் ஹெலெனின் அழகிய மார்பகங்களின் வார்ப்புக்கள் அவளது கணவர் மெனிலாஸ் எடுக்கப்பட்டு அவருக்கான வைன் கோப்பைகளை வடிவமைத்துக்கொண்டாரென்கிறது மற்றுமொரு கதை.
இவ்வாறு பெண்களின் மார்பக வடிவே வைன் கோப்பைகளின் ஆதார வடிவம் என்பதற்கான கதைகள் ஏராளம் இருப்பினும், உண்மையில் தண்டுப்பகுதி அற்ற அகலக்கிண்ண கோப்பைகளை 17 ஆம் நூற்றாண்டில் ஒரு துறவியே கண்டுபிடித்தார். 1663’ல் இங்கிலாந்தில் கண்ணாடி கோப்பைகள் தண்டுகளின்றி உருவாக்கப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்களும் உள்ளன. அக்காலகட்டத்தில் மேற்சொன்ன எந்த காதலிகளும் இருக்கவில்லை.
ஆயினும் எப்படியோ வைன் அல்லது வைன் கோப்பைகளின் வரலாற்றில் மார்பக வடிவங்கள் குறித்து பல கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. அரச குடும்பத்து விருந்துகளில், எந்த இளம் பெண்ணின் மார்பகங்கள் காலி வைன் கோப்பைகளுக்குள் கச்சிதமாக பொருந்துகிறதோ அவர்களே இளவரசர்களுடன் நடனமாட தெரிவு செய்யப்பட்டனர் என்கிறது மற்றொரு கதை
இங்கிலாந்தின் சூப்பர் மாடலாகிவிட்டிருக்கும் அழகிய மார்பகங்களுக்கு சொந்தக்காரியான கேத்தரினை (Katherine Ann Moss) அறியாத இளைஞர்கள் இங்கிலாந்தில் இருக்கவே முடியாது. தன் திறந்த மேனியை ப்ளேபாய், வேனிட்டி ஃபேர், போன்ற சஞ்சிகைகளில் ஏராளமாக வெளியிட்ட பெருமைக்குரியவரான இவரின் மார்பகங்களின் வடிவில் லண்டனின் புகழ்பெற்ற உணவகம் வைன் கோப்பைகளை வடிவமைத்திருக்கிறது. அவரின் மார்பக அளவான் 34 என்பதுதான் உணவகத்தின் பெயரும். வைன் கோப்பை வரலாற்றின் பக்கங்களில் உண்மையும் இருக்கிறதென்கிறது இச்சம்பவம்.
ஒருவேளை வழங்கப்பட்ட வைனின் சுவையோ தரமோ சரியில்லை என்று புகாரளிக்கும் வாடிக்கையாளர்களை புளகாங்கிதப்படுத்தி வாயை அடைக்க செய்யப்பட்ட வியாபார யுத்தியோ என்னவோ?
பெண்களின் மார்பக மாதிரியில் வைன் கோப்பைகள் வடிவமைக்க பட்டதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் இல்லைதான் என்றாலும், மார்பகங்கள் மீதான ஆண்களின் மையலுக்கு வைன் கோப்பை வடிவங்களும் காரணமாக இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.
வரலாற்று நாயகர்களில் பலருக்கு திரண்ட மார்பகங்கள் உள்ள பெண்களைக்காட்டிலும் கச்சிதமான சிறிய மார்பகங்களுள்ள பெண்களே பிரியத்துக்கு உகந்தவர்களாயிருந்திருப்பதை அறிந்திருக்கிறோம்
இவ்வாறு புனைவுகளும், வதந்திகளும், கற்பனைக் கதைகளும், ஆதாரபூர்வமான உண்மைகளும் பின்னிப்பிணைந்து நமக்கு காட்டுவது என்ன? ஆண்கள் மார்பகங்கள் மீதான ஈர்ப்பில்தான் அந்த வடிவத்திலிருக்கும் கிண்ணங்களில் போதையூட்டும் பானங்களை அருந்துகின்றார்களா? அல்லது பெண் என்பவள் வெறும் சதைத்திரளே, பெண்கள்,ஆண்களை மகிழ்விக்கும் பொருட்டே பிறவியெடுத்திருக்கின்றனர் என்றெண்ணும் ஆணின் ஆதிக்க மனோபாவத்தைத்தான் இக்கதைகள் நமக்கு காட்டுகின்றனவா? அருந்தியதும் தூக்கி வீசலாம், உடைக்கலாம், வேறு வேறு வடிவங்களில் இருக்கும் கோப்பைகளை முயற்சிக்கலாம். சலிப்பின்றி ஒன்றிலிருந்து இன்னுமொன்று தேடிச்செல்லலாம். போன்ற வேறேதேனும் காரணங்கள் இதன் பின்னனியில் இருக்குமா?
அன்னை முலையருந்துதல் என்னும் குறியீடு பலவகைகளில் புராணங்களில் சொல்லப்பட்டிருப்பதை பார்க்கலாம்.
எகிப்திய புராணங்கள் அன்னையிடம் முலையருந்தும் ஆண்மகவுக்கே ஆட்சிசெய்யும் அதிகாரமும் வலிமையும் கிடைக்குமென்கிறது
ஹெர்குலிஸ் ஹெராவின் சம்மதமின்றி அவள் முலையருந்தியே கடவுளானார் என்கின்றது ரோமானியப்புராணம். கோபமுற்ற ஹீரா முலைகளை கிழித்தெறிகையில் சொட்டிய துளிகளே பால் வெளியெங்கும் இப்போது மின்னி கொண்டிருக்கிறதாம். ஹெராவின் முலையருந்தியதாலே அவர் ஹெர்குலிஸ் எனப்பட்டார்.
Tiber ஆற்றில் விடப்பட்டு, ஓநாய் முலையளித்து காப்பாற்றிய இரட்டையர்களான ரோமுலஸும் ரீமஸுமே ரோமனிய பேரரசை நிறுவினர் என்கிறது ரோமானிய புராணங்கள்
இப்படி பெண்ணினத்தின் முலைகள் புராண காலத்திலிருந்தே ஆட்சியின் அன்பின் சக்தியின் தெய்வீகத்தனமையின் குறியீடாகவே கருதப்பட்டும் நம்பப்பட்டும் வந்திருக்கிறது,
15 ஆம் நூற்றாண்டின் நூலான Tristan de Nanteuil, நடுக்கடலில் தன் பச்சிளம் சிசுவுக்கு பாலூட்டமுடியாமல் வருந்திய இளம்தாயொருத்தி கன்னிமேரியை வேண்டிகொண்டதும் மார்பகங்களில் பால் வெள்ளமெனப்பெருகியதை சொல்கின்றது. யாலோமின் ’’மார்பகங்களின் வரலாறு’’ நூல் கன்னி மேரியின் முலைப்பாலானது தேவகுமாரனின் குருதிக்கு இணையாகவே புனிதமானதாகவும், பல அற்புதங்களை நிகழ்தியதாகவும் குறிப்பிடுகின்றது.
ஐரோப்பாவின் தேவாலயங்கள் அனைத்துமே கன்னி மேரியின் முலைப்பால் பொடியை பாதுகாத்து வைத்திருப்பதாக சொல்லப்படுகின்றது. இறக்கும் தருவாயில் மாமனிதர்களின் உதடுகளில் வீழும் அன்னைத்தெய்வதின் முலைப்பால் துளிகளால் அவர்கள் உயிர்மீண்ட பல கதைகளை நாமும் கேட்டிக்கிறோமே.
பேரரசர் சார்லிமேக்னி கன்னி மேரியின் முலைப்பால் துளிகள் அடங்கிய தாயத்தை அணிந்துகொண்டே போர்களுக்கு சென்றார் என்கின்றது மற்றோரு கதை
பெத்லஹேமில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் செல்லும் பால் குகை தேவலயமான Milk grotto வில்தான் கன்னிமேரி குழந்தை இயேசுவுக்கு முலையளிக்கையில் பால் துளிகள் கீழே சிந்தியதாக தொன்மையான நம்பிக்கை நிலவுகிறது
கிரேக்க புராணங்கள் (mastos) மாஸ்டோஸ் எனப்படும் மார்பகங்களைப்போலவே முலைக்காம்புடன் கூடிய கிண்ணம்போன்ற அமைப்பிலிருக்குமொரு வைன் கோப்பையை பற்றிச்சொல்லுகின்றது இரட்டைக் கைப்பிடிகளுள்ள இக்கோப்பை அன்னை தெய்வங்களுக்கான பூசனைகளின் போது மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வாளரான அட்ரியானி மேயர் ‘’வைன் கோப்பைகளும் மார்பகங்களும்’’ என்னும் ஆய்வுக்கட்டுரையில் மார்பக வடிவுக்கும் அளவுக்கும் வைன்கோப்பை வடிவமைப்பிற்கும் இருக்கும் தொடர்பு நேரடியானது என்று குறிப்பிடுகிறார்.
பல சமூகங்களில் இந்த மார்பக வடிவ விருப்பம் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றது. 1983ல் அமெரிக்காவில் துவங்கப்பட்ட கவர்ச்சிகரமான சிக்கன உடையணிந்து தாராளமாக மார்பகங்களை காட்டிக்கொண்டு இருக்கும் பெண் ஊழியர்கள் பணியாற்றும் Breastaurants தொடர் உணவகங்கள் இன்றும் வெகு பிரபலம். குழந்தைகளின் பால் பாட்டில்களிலுள்ளதைப்போலவே நிப்பிள்களுடன் இருக்கும் பீர் டின்கள், Boob Tube beer bong,எனப்படும் முலைவடிவ பீர் உறிஞ்சும் உபகரணங்கள், பெண்களின் உள்ளாடையைப்போலவே வடிவமைக்கப்ட்ட வைன் பாட்டில்களின் அலமாரிகள் என வைனும் மார்பக வடிவங்களும் ஒன்றுடனொன்று தொடர்புடையதாகவே தான் இருந்து வருகிறது.
”நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும்,இந் நொய்து இலங்கை
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும், என் பின் பிறந்தாள்
மூக்கு அறவும், வாழ்ந்தேன் ஒருத்தி முலைக் கிடந்த
ஏக்கறவால்; இன்னம் இரேனோ, உனை இழந்தும்?”
கம்பராமாயணத்தின் இவ்வரிகளுக்கு பெரும்பாலான உரைகள் சீதையின் முலையின் மீதான் விருப்பத்தினால் வேண்டியவர்களை இழந்து தங்கையின் மூக்கு அறுபட்டு இருப்பதாக ராவணன் வருந்துவதாகவே இருக்கும் ஆனால் சமீபத்தில் ஒரு காவிய முகாமில் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் இவ்வரிகளுக்கு வெகு சிறப்பானதொரு பொருள் அளித்தார். /ஒருத்தி முலைக்கிடந்த ஏக்கறவால்// என்பது ’ஒரு அன்னையின் முலைஅருந்திய உறவால்’ என்றார். அது மிகப்பொருத்தமல்லவா? அத்தகைய உன்னத உறவல்லவா அன்னைக்கும் மக்களுக்கும் இருப்பது. அதனுடனொப்பிட முடியாத சிற்றின்பங்களலல்லவா நம்முன்னே கொட்டிக்கிடப்பவை?
பச்சிளம் சிசுவாக அன்னை முலையருந்தியதிலிருந்து, மதுக் கோப்பைகள் வரையிலான பயணத்தில், கோப்பையின் வடிவங்களில் இருக்கும் அடிப்படை உளவியலலை நோக்குகையில் ஆண்கள் விலகி வெகுதூரம் வந்துவிட்ட அன்னைமையின் மீதான் ஈர்ப்பாகவே அது இருக்க முடியும்
அன்னை முலையருந்திய நாட்கள் அளித்த பாதுகாப்புணர்வின் ஆழ்மன ஏக்கத்தையே வைன் கோப்பைகளின் வடிவங்களில் தீர்த்துக் கொள்கிறார்களா ஆண்கள்?
__________________________________________________________________________________________