கடந்த ஜனவரியில் பிரபல வார பத்திரிக்கையின் பெண்களுக்கான பிரத்யேக இதழொன்றில் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன்,அப்பகுதியில் மிகத் தரம் குறைவான, கவிதை என்றே கருத இடமில்லாத , மடக்கி எழுதப்பட்ட பொருளற்ற வரிகளுக்கு கணிசமான பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் அப்படியான கவிதைகளே அப்பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஒரு காலத்தில் அந்த பத்திரிகையில் என் படைப்பு ஏதேனும் வெளிவர வேண்டும் என்பது என் கனவாக இருந்தது.  எனக்கு கவிதைகளில் நல்ல ரசனை உண்டு ஆகச்சிறந்த கவிதைகள் வாசிப்பவள். எனினும் கவிதை முயற்சிகள் செய்திருக்கிறேனே தவிர நல்ல கவிதையொன்றை இன்று வரை  எழுதவில்லை. அந்த பத்திரிகையில் வந்திருப்பவைகளைப்போல ஒரே நாளில் பல நூறு கவிதைகள் என்னால் எழுத முடியும். எனவே அப்போதே  வெகு சுமாரான சில வரிக்கவிதை ஒன்றை எழுதி அனுப்பினேன். இரண்டு நாட்களில் என் கவிதை பிரசுரிக்க தேர்வான  தகவல் வந்து, இரண்டாவது வாரம் பிரசுரமாகி அடுத்த மாதம் சன்மானத்தொகையும் வந்தது.

ஆனால் அச்சில்  என் பெயருடன் கவிதையை பார்த்ததும் எனக்கு என்னை குறித்தே மிக தாழ்வான அபிப்பிராயம் உண்டானது. ஏதோ உள்ளுண்ர்வின் தூண்டுதலால் அக்கவிதைக்கு பிழை என்றே தலைப்பிட்டு இருந்தேன். எப்போதும் வாட்ஸ்அப் நிலைத்தகவல்களில் என் படைப்புகள் குறித்த  தகவல்களை வைக்கும் நான் இதை ரகசியமாக வைத்துக் கொண்டேன்

போகன் சங்கரின் 

‘’ஒரு தோல்வியை எங்கு வைப்பது என்று தெளிவாக தெரிந்திருந்தும் ஒரு வெற்றியை ஒளித்து வைப்பது’’ என்னும் அருமையான கவிதை ஒன்று இருக்கிறது.

அப்படி அந்த கவிதை பிரசுரத்தை ஒளித்து வைத்துக் கொண்டேன். நல்லவேளையாக எனக்கு தெரிந்த யாரும் இதுவரை அதை பார்க்கவில்லை. எனினும் நல்ல கவிதையொன்றை எழுதும் கொதி அதிகரித்திருந்தது.

மார்ச்சில்  நண்பர் சாம்ராஜ், லக்‌ஷ்மி மணிவண்ணன் மற்றும் ஆனந்த்குமார் நடத்தும் கன்னியாகுமரி கவிதை அரங்கு குறித்து தகவல் சொன்னார்.  அந்த கவிதை பிரசுரமானதன் பிழையீடாக இக்கவிதை அரங்கில் கலந்து கொள்ள விரும்பினேன். மேலும்  சித்திரை முழுநிலவன்று கடற்கரை கவிதையரங்கு என்னும் கற்பனையே வசீகரமாக இருந்தது

கடல் எனக்கு அத்தனை பரிச்சயமில்லை. இத்தனை வயதில் நான் மொத்தமாக நாலோ ஐந்தோ முறை தான் கடற்கரையில் இருந்திருக்கிறேன். சென்னை மெரினா, திருச்செந்தூர்,ராமேஸ்வரம்  என்று. ஆனால் அங்கெல்லாம் சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது போல கூடியிருந்த  ஜனக்கூட்டங்கள் தான் கடலா கடலலையா என்று எண்ண வைக்கும் . கடல்கண்டு  திரும்பிய பின்னரும் எனக்கு நினைவில் கடலோ அலையோ இருந்ததில்லை. உடல் கசகசப்பு, மாங்காய் பத்தை, குதிரைச் சவாரி, பலூன்,  நெரிசல் இவைகளே நினைவிலிருக்கும். நீர்நிலைகளின் அருகில் செல்கையில் உண்டாகும் இனம்புரியா அச்சமும் இருப்பதால் அதிகம் கடலை நெருங்கியதுமில்லை

எனவே கடல், அங்கு நடக்க இருக்கும் கடற்கரை கவியரங்கம் என்று உற்சாகமாக இருந்தது.

எனினும் தனியே அத்தனை தொலைவு செலவது குறித்தும் யோசனையாக இருந்தது. ஆனால் சரணும் தருணும் தனியே போய்த்தான் ஆகவேண்டும் பழகிக்கொள் என்று படித்துபடித்து பாடம் எடுத்தார்கள்.அவர்களின் வற்புறுத்தலின் பேரில் ரயில் இரவுப்பயணத்திற்கென சரணுடன் சென்று எனக்கு பழக்கமில்லாத குர்த்திகளை வாங்கினேன். ஆபத்பாந்தவனாக ஆனந்த் அழைத்து கோவையிலிருந்து கதிர்முருகனும் வருவதாக சொன்னார். இருவரும் இணைந்துசெல்ல முடிவானது.

புறப்படும் அன்று. மாலை கனமழை வீட்டு வாசலில் இருந்து காரில் ஏறுவதற்குள் முழுக்க நனைந்தேன். 8 மணி ரயிலுக்கு மாலை 6 மணிக்கே ரயில் நிலையம் போயிருந்தேன்.

நான் நினைத்துக்கொண்டிருந்தது போலல்லாமல் ரயில் நிற்கும் இடத்தை கண்டுபிடிக்க அத்தனை சிரமமெல்லாம் இல்லை. சரண் போனில் வழிகாட்ட நேராக சென்று குறிப்பிட்ட ரயில் பெட்டியின் எதிரே அமர்ந்து கதிருக்கு காத்திருந்தேன்.

தம்பி கதிர்ருமுருகனும் வந்தார். இரவுணவை இருவருமாக இருக்கையில் அமர்ந்து உண்டோம். கோவிட் தொற்றுக்கு பிறகு இப்போதுதான் ரயிலில் போர்வை கம்பளி எல்லாம் கொடுக்கிறார்கள்.  எங்கள் பெட்டியில் இரு இளைஞர்கள் இருந்தார்கள் மிக உரக்க பேசிக்கொண்டு பாடல்கள் ஒலிக்க செய்து கொண்டுமிருந்தார்கள். இரவு நெடுநேரமாகியும் அப்படியே தொடர்ந்தார்கள்.கதிர் மென்மையாக சொல்லிப் பார்த்தும்  பிரயோஜனமில்லை. பின்னர் டிக்கெட் பரிசோதகரை அழைத்துவந்து கண்டித்த  பின்னர் அவர்கள் அமைதியானார்கள்.முப்பது வயதுக்குள்தான்  இருக்கும் அவர்களுக்கு 

குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி முன்னதாகவே நாகர்கோயில் வந்துசேர்ந்தோம் ரயில் நிலைய வாசலிலேயே எங்களை வரவேற்க இலைகளைக் காட்டிலும் அதிக  மலர்களுடன்  தங்க அரளிச்சிறு மரமொன்று நின்றிருந்தது 

அதே ரயிலிலும் ,சில நிமிட இடைவெளியில் வந்த மற்றொரு ரயிலிலுமாக  சுதா மாமி, மதார், ஆனந்த ஸ்ரீனிவாசன்,நேசன் உள்ளிட்ட பதினைந்து பேர் இருந்தோம் அந்த நேரத்திலேயே ஆனந்தகுமார், லக்ஷ்மி மணிவண்ணன் இருவரும் காரில் வந்திருந்தார்கள் எல்லாருமாக புறப்பட்டு லக்‌ஷ்மி மணிவண்னன் அவர்களின்   கடையருகில் தேநீர் அருந்திவிட்டு அந்த கடற்கரை விடுதிக்கு வந்தோம்.

ஊருக்கு மிக ஒதுக்குப்புறமான விடுதி. அத்தனைஅ ருகில் கடல் இருக்கும் நான் எண்ணி இருக்கவில்லை. முதலில் எனக்கு கடலின் சீற்றம் மனசிலாகவே இல்லை. அருகில் எங்கோ பேருந்துகள் சீறிக் கொண்டு செல்கின்றன என்றே நினைத்தேன் . அத்தனை அருகில் கடலை, அத்தனை நீண்ட தூய மணற் கடற்கரையை, புரண்டு வந்துகொண்டிருந்த அலைகளை பார்த்ததும் முதலில் திடுக்கிட்டேன் கற்பனையில் நான் நினைத்திருந்ததை காட்டிலும் மிக வசீகரமான கடல் யாருமற்று தன்னந்ததனித்திருந்தது.

அந்த கடற்கரையில் பாறைகள் அதிகம் என்பதால் யாரும் அங்கு குளிக்க இறங்க வேண்டாம் என்று அப்போதிலிருந்தே பலமுறை  எச்சரிக்கப்பட்டோம்.

தனித்தனி குடில்களாக  தங்குமிடம். நானும் சுதா மாமியும் ஒரு குடிலில். அந்த குடிலின் கட்டுமானம் பிரமிப்பளித்தது, மிகச்சிறிய  ஒழுங்கற்ற இடங்களை மிக சமார்த்தியமாக உபயோகித்து அறையை வடிவமைத்திருந்தார்கள். குடிலறையிலும் அரங்கிலும் எங்கெங்கும் மணல் காலடியில் நெறி பட்டது.

.

குளித்து கடல் பார்த்து ,கால் நனைத்து நல்ல உணவுண்டு அமர்வுகளுக்கு தயாரானோம். விஷ்ணுபுரம்  வட்ட நண்பர்கள் பலர் இருந்தார்கள் அவர்களை எல்லாம் எப்போது பார்த்தாலும் ’குடும்பத்தில் எத்தி’ என்று நினைத்து நெஞ்சம் பொங்கும் எனக்கு. 

விஷ்ணுபுரம் இலக்கிய விழாக்களில் பார்த்திருக்காத பலர் இருந்தார்கள். அதிகம் இளைஞர்களும்

சுதந்திர வல்லி , சுதா மாமியுடன்

லக்‌ஷ்மி மணிவண்ணன் அவர்களின் மனைவி மக்களும் வந்திருந்தார்கள் அவர் மனைவி சுதந்திர வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு பறவையுடையதைப் போல மிக இனிமையான குரல் அவருக்கு. பேசப் பேச கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருந்தது

அருண்மொழியும்  வந்துவிட்டார்கள் அமர்வுகள் துவங்கும் முன்பே. .அருணாவை 2017 ஊட்டி காவிய முகாமில் சந்தித்து அறிமுகமாயிருந்தேன். இந்த வருடம்தான் அவரது தொடரை வாசித்து, பின்னூட்டமிட்டு, அடிக்கடி பேசி என்று நெருக்கமாயிருந்தேன். ஜெவையும் அருணாவையும் வெண்முரசையும் கொஞ்சமும் அறியாதவர்களும் இருந்தார்கள் அவர்கள் பல எதிர்பாராத ஆனால்  சுவாரஸ்யமான  கேள்விகள் கேட்டார்கள்.அவற்றிற்கெல்லாம் நான் முன்புபோல பதட்டப்படாமல் கோபித்துக் கொள்ளாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். மனமுதிர்ச்சி மட்டுமல்ல  எனக்கு வயதாகிவிட்டதையும் முதன்முதலாக அப்பதில்களின்  போது உணர்ந்தேன் . ஒரு சிலர் மறக்க முடியாதர்வளாகிவிட்டிருக்கிறார்கள்

அருகில் அருணா பின் வரிசையில் கதிர்முருகண், ஜி எஸ் வி நவீன்

அமர்வுகள் துவங்கும் முன்பு அனைவரும் அறிமுகம் செய்து கொண்டோம் அருணா தான் கவிதைகளை கொஞ்சம் தள்ளி வைத்திருப்பதாக சொன்னார். இளைஞர்களில் இருவர் சிறுவர்களைப்போல 7 அல்லது 8ல் படிப்பார்கள் என்று எண்ணத்தக்க தோற்றத்தில் இருந்தார்கள் எனக்கு எப்போதுமே இலக்கிய கூட்டங்களில் இளைஞர்களின் பங்கேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.

ஆனந்த் சீனிவாசன் மிக இனிமையான, பொருத்தமான சரஸ்வதி துதியொன்றை பாடி அமர்வுகளை துவக்கி வைத்தார்,தாடி இல்லாமல் இருந்த அண்ணாச்சியை வெகு நேரம் கழித்தே அடையாளம் கண்டு கொண்டேன்.

கண்டராதித்தன், சபரி, அதியமான் உள்ளிட்ட பலர் வந்திருந்தார்கள் லக்‌ஷ்மி மணிவண்ணன் மற்றும் கண்டராதித்தன் அமர்வுகள், பின்னர் தேநீர் இடைவேளை அதன் பிறகு போகன் சங்கர் அமர்வு

போகன்

கவிதைகளில் என்ன இருக்கலாம், இருக்கவேண்டியதில்லை, தோல்வியுறும் கவிதைகளின் அழகு என்று மிக விரிவான, வேறெங்கும் கிடைக்கப் பெறாத தகவல்களுடன் அமர்வு களைகட்டி இருந்தது

மதிய உணவு முதன் முதலாக வல்லரிச்சோறுடன் நாகர்கோவில் பக்க உணவு

எனக்கு இந்த முகாம் கலந்து கொண்டதில் பல முதன் முதலாக இருந்தன

அப்படி துவரன், தீயல், வல்லரிச்சோறு, பிரதமன் என்று சிறப்பான உணவு. விஷ்ணுபுர குழுமம் எப்போதும் குடும்பமாக கூடியிருந்தே விழாக்கள் நடைபெறும் என்பதால் இங்கும் விளம்புவதும், இலைபோடுவதும், சுத்தம் செய்வதுமாக பலர் முனைந்திருந்தனர் புதியவர்களும் இதைக்கண்டு இயல்பாக கலந்து புழங்கினார்கள்

கவிழ்ந்து விழுந்த எச்சில் இலைகள் நிறைந்து இருந்த ஒரு பீப்பாயை சிவாத்மா பொறுமையாக நிமிர்த்தி  சரியாமல்  நிற்கவைத்து  கொண்டிருந்தார்,

அருணாவும் சுதந்திராவுமாக எனக்கு நாகர்கோவில், கன்னியாகுமரி உணவு வகைகளின் செய்முறைகள் சொல்லிக்கொடுத்தார்கள் இருவருமாக ஒரு புத்தகம் எழுதினால் பிரமாதமாக இருக்கும். அருணா சக்கையை அரைத்து செய்யும் ஒரு இனிப்பை அவரது வழக்கம்போலான அபிநயத்தில் சொல்லி அங்கே காணாப்புலத்தில் எங்கள் முன்னிருந்த அந்த இனிப்பை ஒரு கரண்டி எடுத்து , ரொட்டியில் தடவி சுவைத்ததை பார்க்கவே நாவூறியது. அவசியம் செய்து பார்க்க போகிறேன் அவற்றை.

மதிய அமர்வுகளில் மதாரும் ஆனந்தும்.  மதார் புதுக்கவிதை தொகுப்புக்களிலிருந்து உணர்வுபூர்வமாக எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். 

ஆனந்த்குமார் அமர்வு அபாரம் குறிப்பாக அந்த பழங்குடியினரின் மொழிக் கவிதையை அவர் மொழியாக்கம் செய்து, அவர்களின் மொழியிலும் வாசித்தது இன்னும் காதில் ஒலிக்கிறது

’வீழ்ந்து கிடந்த மரக்கொம்பில் உயிர் இருக்கோ இல்லியோ’ என்று துவங்கிய அக்கவிதை, அக்கொம்பில்  முளைக்கும் இருதளிர்களில்  ஒன்றில் அன்பென்றும் மற்றொன்றில் வாழ்வென்றும் எழுதியதாக செல்கின்றது.முகாமில் வாசிக்கப்பட்ட அனைத்திலுமே  அதுவே அபாரமானது

மரக்கொம்பு- சாந்தி பனக்கன்

***காட்டிலொரு மரக்கொம்புமுறிந்துகிடக்கிறது

இறந்துவிட்டதாஉயிர் உள்ளதா?
தினமும் நானதை கடந்து போகிறேன்

ஒரு நாள் அதில்இரண்டிலை தளிர்த்தது

ஓரிலையில் நான் அன்பென்றெழுதினேன்

மற்றொன்றில் வாழ்வென
வேர் நீர் பிடித்து தண்டு உரம் பிடித்து

நீலக்கல் வைத்த ஆகாயம் தொட்டது.
உழுதிட்ட வயலைக் காணதலை நீட்டி நீட்டிகொம்பு மரமானது

மகனொரு ஏறுமாடம் கட்டினான்

மகளொரு ஊஞ்சலிட்டாள்

பறவையொரு குடும்பம்சேர்க்க

இலையொரு நிழல்விரித்தது
நானொரு குடில் கட்டிவேலி நடவும்வேர்கள் எல்லை கடந்தன

அதனால்தான் அதனால்தான்நாங்கள் அதை வெட்டியிட்டோம்

கொண்டுபோக உறவில்லாமல்உதிரம் துடிக்கக் கிடக்கிறது

நேற்று நான் கண்ட கொம்பும்நாளை நான் காண விழைந்த காடும்.-

பணியர் மொழியில்:கோலு கொம்பு- சாந்தி பனக்கன்-காட்டிலொரு கோலு கொம்புஒடிஞ்சு கிடக்கிஞ்சோ.சத்தணோ அல்லசீம உளணோ?ஓரோ நாளு நானவெ கடந்து போஞ்சே,ஒரு நாளுஇரண்டிலே வந்த.ஓரிரெம்பே நானு..இட்ட எஞ்செழுத்தே.பின்னொஞ்சும்பே ஜீவிதனும்வேர் நீர் வச்சுதண்டு தடி வச்சுநீலே கால்லு வெச்ச மானத்தொட்டு.ஊளி இட்ட கட்ட காம.நீலே நீட்டி நீகொம்பு மராத்த.மகனொரு ஏறுமாடம் கெட்டுத்த.மகளொரு ஊஞ்ஞாட்டளு.பக்கியொரு குடும்ப உண்டாக்குத்த.இலயொரு தணலுட்டநானொரு கூடு கட்டிவேலி திரிச்சக்குவேரு அதிரு கடந்தா.அவேங்காஞ்சு அவேங்காஞ்சு வெட்டியுட்டே..கொண்டு போவ குடிப்படில்லடெ..சோரெ புடச்சு கிடந்துளஇன்னலெ நானு கண்ட கோலுகொம்பும்நாளெ ஞான் காமதிரச்ச காடும்

.-சாந்தி பனக்கன் பணியர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர். கேரளத்தின் வயநாடு மாவட்டம் நடவயல் என்னும் ஊரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்.(தகவல் நன்றி: நிர்மால்யா, ஆவநாழி)

மாலை கதிரணைவை பார்க்க கடற்கரை சென்றோம். கடலுக்குள் மெல்ல இறங்கும் மாபெரும் தீக்கோளம் கண்ட பிரமிப்பு  நீங்கு முன்பே சுதந்திரா சுட்டிக்காட்டியதும் எதிர்திசையில் திரும்பினால் வெள்ளித்தாம்பாளமாக முழுநிலவு மெல்ல எழுந்துகொண்டிருந்தது, உண்மையில் அத்தனை பரவசமாக இருந்தது. நெஞ்சு பொங்குதல் என்றால் என்ன என்று அப்போது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனந்த்குமார்  அங்கிருந்தவர்களுக்கு மணலில்அமர்ந்து சில கவிதைகளை வாசித்து காட்டினார் . குளித்துவிட்டு வீடு நுழையும் ஒருவனுடன் பிரியமான நாய்க் குட்டியை போல தொடர்ந்து நீர்த்துளிகளும், ஈரக்கால்சுவடும் வருவதை சொல்லும் கவிதை. அருமையான இனி ஒருபோதும் மறக்கவியலாத கவிதை அது

sargassum

கடற்கரையில் ஒரு பதின்பருவ மீனவப்பெண் பிளவு பட்ட இதய வடிவில் கடற்கரையெங்கும் பரவி வளர்ந்திருந்த சிறு செடிகளின் இலைகளை சேகரித்துக்கொண்டிருந்தாள். மான் நிறம் பளிச்சிடும் சிறிய கண்கள். எண்ணெய் மினுங்கும் சருமம் கொள்ளை அழகு . பெயர் ஜென்ஸி என்றாள், ஒரு எளிய நைட்டியில் அத்தனை அழகாக ஒருத்தி இருக்கமுடியுமென்பதை யாரேனும் சொல்லி இருந்தாலும் நம்பி இருக்கமாட்டேன். இந்த இலைகளை ஆடுகளுக்கா எடுத்துபோகிறாய்? என்று கேட்டேன் ‘’இல்ல மொசலுக்கு ‘’ என்றாள் புதியவர்களை கண்ட கூச்சத்தில் நாணி இன்னும் அழகானாள். அடிக்கடி திரும்பி பார்த்துக்கொண்டாள்

”’இந்த செடிக்கு என்ன பேரு’’?/என்றென் ’’மாமனுக்கு தான் தெரியும் ‘’என்று சற்று தூரத்தில் சவுக்கு மரங்களுக்கிடையில் தெரிந்த ஒருவரைக்காட்டினாள். காடு நீலி நினைவில் வந்தாள் இவள் கடல்புரத்து நீலி

நிறைய கிளிஞ்சல்கள், கடல் குச்சிகள், சங்குகள் சேகரித்தேன். சர்காசம் என்னும் காற்றுக்குமிழிகளை கொண்டிருக்கும் ஒரு கடற்பாசி உலர்ந்து கரை ஒதுங்கி இருந்தது. இராவணன் மீசை என்னும் ஒரு கடற்கரை மணலை பிணைக்கும் வேர்களை கொண்ட,   கொத்துக் கொத்தாக  புற்களை  கொண்டிருக்கும் புல்வகையை பல வருடங்களுக்குப் பின்னால் பார்த்தேன்.Spinifex littoreus என்னும் அதை எனக்கு ராமேஸ்வரத்தில் காட்டி விளக்கிய  மறைந்த  என் பெருமதிப்புக்குரிய பேராசிரியரை நினைத்துக்கொண்டேன். மலையாளத்தில்  எலிமுள்ளு எனப்படும் இப்புல் C4 மற்றும் CAM ஒளிச்சேர்க்கைகளை  விளக்கும் மிக முக்கியமான பரிணாம வரலாற்றை கொண்டிருப்பவை. இவற்றின் கூரிய விதைகள் காற்றிலும் நீரிலும் பரவி மணலில் குத்தி நின்று  கடற்கரை எங்கும் வளரும்.

ராவணப்புல்

இரவு கவிதை அமர்வில் பல புதியவர்களும் இளைஞர்களும் கவிதைகள் வாசித்தார்கள் பல கவிதைகள் கறாராக விமர்சிக்கப்பட்டன. யாமம், பிரளயம் போன்ற சிக்கலான வார்த்தைகளை தேவையற்று உபயோகிப்பதை குறித்தும் சொல்லப்பட்டது. சிலர் அவர்களுக்கு பிடித்த கவிதைகளையும் வாசித்தார்கள். கவிதைகள் சாதாரணமாக இருந்தாலும் அந்த நான்கு நாட்கள் விடுமுறையில் பொதுவாக இளைஞர்கள் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களுக்கு செல்லாமல் கவிதை முகாம் வந்து சாதாணரமாகவேனும் கவிதைகளை வாசிக்கும் இளைஞர்கள் குறித்து  மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

அந்த இளைஞர்கள் நிச்சயம் பேரருவியின் முன் நின்று ஊளையிடமாட்டார்கள் காடுகளில் பீர்பாட்டிலை உடைத்து வீசமாட்டார்கள் ரயிலில், பிற பொது இடங்களில் சகமனிதர்களை  தொந்தரவு செய்ய மாட்டார்கள்  என்னும் உறுதி எனக்கு இருந்தது

கவிதை முகாமின்  முதல் நாள் நிறைவாக பள்ளி மாணவனை போலிருந்த அந்த  துடிப்பான இளைஞன் ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு அஞ்சலி செலுத்தும் கவிதையாக ,

’’சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து

முத்தம் தரும் போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து

 அப்பறவைக்குத் தருகிறது

 இக்கடல்’’

என்பதை வாசித்தார்

கடல்மணல்  காலடியில் நெறி பட்டுக்கொண்டிருந்த, கடலின் சீற்றம்  கேட்டுக் கொண்டிருந்த ஓர் அரங்கில் அக்கவிதை அன்றைய நிகழ்வை முடித்துவைக்க  மிகப்பொருத்தமானதாக இருந்தது.மனம் கனத்திருந்தது.

இரவுணவிற்கு பிறகு அனைவருமாக முன்னிரவில் கடற்கரை சென்றோம் ஆங்காங்கே சிறு குழுக்களாக அமர்ந்து கொண்டு கடல் பார்த்தோம். முழு நிலவின் ஒளி புறண்டெழுந்து மடங்கி, உருண்டு,  பாறைகளில் அறைபட்டு வேகம் குறைந்து தவழ்ந்தபடி கரை நோக்கி  வரும் அலைகளின் நுனிகளை  வெள்ளியாக மினுக்கியது. எனக்கு  கடலே புதிது, அதுவும் இந்த கடல் தூய கடற்கரையுடன் மிகப்புதிது,  சித்திரை முழுநிலவில் இப்படி நிலவொளியில் மினுங்கும் அலைவிளிம்புகளை பார்த்துக்கொண்டிருந்தது  மிகமிக புதியது. காரணமில்லாமல் கண் நிறைந்தது.

முதலில் பேசிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பின்னர் அமைதியனோம் அனைவருமே அவரவர் கடலுடனும், நிலவுடனும் தனிக்திருந்த கணங்கள் அவை.  கடற்கரையில் விடுதியின் ஏராளமான நாய்கள் திடீரென வெறியேறி ஒன்றுடன் ஒன்று உருண்டுபுரண்டு சண்டையிட்டுக் கொண்டன பின்னர் தனித் தனியே அவையும் அமர்ந்து அமைதியாக கடலை பார்த்துக்கொண்டிருந்தன.  அவை எப்போதும் முழுநிலவில் அப்படி பார்க்குமாயிக்கும். நாங்கள் தான் எப்போதாவது பார்க்கிறோம்.

மனம் துடைத்து கழுவியது போலிருப்பது  என்பார்களே உண்மையில் அப்படித்தான் இருந்தேன். எந்த பராதியும் யார் பேரிலும் அப்போது இல்லை மிகத் தூய தருணம் என் வாழ்வில் அது.  கரையை மீள மீள தழுவிக்கொள்ள யுகங்களாய் புரண்டு வந்துகொண்டிருந்த அலைகளை,  பொழிந்துகொண்டிருந்த நிலவொளியில் பார்க்கையில் என்னவோ உள்ளே உடைந்தும், முளைத்தும் இழந்தும் நிறைந்தும் கலவையாக மனம் ததும்பி கொண்டிருந்தது

.

 எனக்கு ஒருவரிடம் தீராப்பகை இருந்தது. சாதரணமான கோபம் இல்லை மாபெரும் வஞ்சமிழைக்கப்பட்ட. உணர்வில் நான் கொந்தளித்த காலத்தின் கோபம்.

ஜெ நஞ்சு சிறுகதையில் சொல்லி இருந்தது போல அது வெறும் அவமதிப்பல்ல, இளமை முதலே பேணி வந்திருந்த ,என் அகத்தில் இருந்த, நான் என்று எண்ணி வருகையில் திரண்டு வரும் ஒன்று உடைந்த நிகழ்வது, அதன் பின்னால் அந்த நபரின் எண்ணை நான் தடைசெய்து விட்டிருந்தேன். அந்த வீழ்ச்சியிலிருந்தும்  எழுந்துவந்து விட்டிருந்தேன்

அத்தனை வருடங்கள் கழித்து, கவிதை முகாமிற்கு வரும்போது ரயிலில் தடைசெய்யப்பட்டிருந்த அந்த  எண்ணிலிருந்து பலமுறை தவறிய அழைப்புக்கள் வந்திருந்ததை பார்த்தும் பொருட்படுத்தாமலிருந்தேன்

நிலவை கண்டுவிட்டு நள்ளிரவில் குடிலறைக்கு திரும்பிய பின்னர் மீண்டும் வந்த  அழைப்பை எடுத்து எந்த கொந்தளிப்புமில்லாமல் சாதரணமாக பேசிவிட்டு வைத்தேன். நிலவு மேலிருந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தது. பெரும் விடுதலையுணர்வை அடைந்தேன். முழுவதுமாக அதிலிருந்து என்னை நான் மீட்டுக் கொண்டிருந்தேன்.  என் வாழ்வை நான் மீண்டும் திரும்பி பார்க்கையில் என்னைக்குறித்து நானே பெருமைப் பட்டுக்கொள்ளும் ஒரு சிலவற்றில் இதுவும் இருக்கும். அந்த நஞ்சை  நான் கடந்து விட்டிருந்தேன்.

வழக்கம்போல கனவும் நனவுமாக இல்லாமல் ஆழ்ந்து உறங்கி அதிகாலை எழுந்தேன் கடலின் இரைச்சல், இடியின் ஒலி, இளமழையின் குளிர்ச்சியுமாக இருந்தது புத்தம் புது காலை

யாரும் எழுந்திரித்திருக்க வில்லை நான் குளித்து தயராகி அந்த அதிகாலையில் கடலுக்கு சென்றேன். பொன்னாவாரை மலர்ந்து கிடந்தது வழியெங்கும்.

முந்தியநாளின் இரவில் நாங்கள் அமர்ந்திருந்த இடங்களில் அப்போது கடல் இருந்தது.நிலவு மிச்சமிருந்தது தூரத்தில்அலைகள்  உயரத்தில் இருந்து கொண்டிருந்தது. கரையோரம் நடந்தேன். அங்கேயே பலமணி நேரம் இருந்தேன்

 நானும் கடலும் மட்டும் தனித்திருந்தோம். எங்களுக்குள் உரையாடிக் கொள்வதுபோல அலைகள் என்னை  தொட்டுத்தொட்டு திரும்பிக்கொண்டிருந்தன. கிளிஞ்சல்களை கொண்டு வந்து அளிப்பதும் பிறகு அவற்றை எடுத்து செல்வதுமாக விளையாடிக்கொண்டிருந்தது கடல்.  மிகச்சிறிய மணல் நிறத்திலேயே இருந்த நண்டுகள் ஊர்ந்துசென்ற புள்ளிக்கோலங்களையும் அலை அழித்தழித்துச் சென்றது.

என்னை தழுவிக்தழுவி ஆற்றுப்படுத்தி. கழுவிக்கழுவி தூயவளாக்க அலைகளை அனுப்பிக் கொண்டே இருந்தது கடல்.

சில பேரலைகள் காலடி மண்ணுடன் என்னையும் சேர்த்து உள்ளே இழுத்தன.  பிரிய   நாய்குட்டிகள் வா வாவென்று நம்மையும்  விளையாட அழைக்குமே அப்படி அலைகள் என்னை  அழைத்தன. ஒரு கட்டத்தில் அந்த அழைப்புக்களை தட்ட முடியாதவளாகி இருந்தேன் ஒரு பித்துநிலை என்று இப்போது நினைக்கையில் தோன்றுகிறது.

கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்று முறை கடலுக்குள் இறங்க நினைத்தேன்.  கடலுக்குள் இறங்கி அப்படியே காணாமலாகிவிடுவதை எந்த பயமும் இன்றி விரும்பி எதிர்பார்த்த கணம்அது. எப்படி அவ்விழைவிலிருந்து மீண்டு வந்தேன் என இப்போதும் தெரியவில்லை

அலைகள் வேகம் குறைந்தன, காலடியில் இருந்த .சில சங்குகளில் உள்ளே மெல்லுடலிகள் உயிருடன் இருந்தன.அத்தனை மெல்லிய உடலுக்கு எத்தனை கடின ஓடு? மிகஅருகே வந்த அலையொன்று ஒரு பெரிய வெள்ளை சிப்பியை கொண்டுவந்து தந்தது.

பட்டாம்பூச்சியின் ஒற்றைச்சிறகு போன்ற  அச்சிப்பியின்  மேற்புறத்தில்  ஒரு புள்ளியிலிருந்து துவங்கி அகல விளிம்பு வரை நீளும் நூற்றுக்கணக்கான  மெல்லிய இணை வரிகள் இருந்தன

அந்த வரிகளை அதே அளவில் , அதே இடைவெளிகளில் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் தவறில்லாமல் வரைய சில நாட்களாவது வேண்டும் மனிதனுக்கு. எப்படி, எதற்கு ஒரு சிப்பிக்கு இத்தனை ஒரு அழகு வடிவம்?அந்த சிப்பியை மொழுக்கென்று ஒரே வெண்பரப்பாக கூட படைத்திருக்கலாமல்லவா இந்த பேரியற்கை?

இப்படி கோடானுகோடி சிப்பிகளை, கோடானுகோடி வடிவங்களை, உயிர்களை, ரகசியங்களை கொண்டிருந்த கடல் கண்முன்னே இருந்தது. அச்சிப்பியை பத்திரமாக எடுத்துக்கொண்டேன். என் மகன்களை காட்டிலும் முக்கியமென நான் ஒருவேளை யாரையேனும் நினைப்பேனேனெறால் அவளுக்கு அல்லது  அவனுக்கு அதை பரிசளிக்கவிருக்கிறேன்

முகாமிற்கு வந்திருந்த கலியபெருமாள் என்பவர் கடற்கரையில் தனித்திருந்த என்னை தூரத்திலிருந்து படம்பிடித்து பின்னர் அனுப்பினார்.

சரியான முக்கோண வடிவில் ஒரு கல் இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டேன்.  மெல்ல மெல்ல ஒவ்வொருவராக  கடல் காண  வந்தார்கள்  சுதா மாமியும் ஜெயராமும் மணல் வீடு கட்டினார்கள் ஜெ சமீபத்தில் சொல்லியிருந்தீர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களை இழப்பதில்லை என்று.

ஜெயராம் மணல்மேட்டில் ஒரு வினாயகர் முகத்தை அமைத்து அதன் தந்தங்களை  நீட்டி  நீட்டி கடலலயை பருகும்படி அமைத்தான் தும்பிக்கை ஒரு மாநாகம்   போல வெகுதூரம் சென்றிருந்தது.

ஜெயராமுடன் நாய்கள் ஓடிப்பிடித்து கடற்கரையில் விளையாடின. திடீரென ஒரு மாபெரும் வானவில் எங்கள் முன்னே எழுந்தது. ஒரு நாளில் எத்தனை பரிசுகள் ? திகைப்பாக  பரவசமாக இருந்தது

அங்கே அமர்ந்திருக்கையில் ஒரு புதியவர் வேள்பாரியையும் வெண்முரசையும் ஒப்பிட்டால் எது சிறந்தது என்னும் கேள்வியை முன்வைத்தார். அப்படி வெண்முரசுடன் ஒப்பிடும் படியான படைப்புக்கள் ஏதும் இல்லை என்று புன்னகை மாறாத முகத்துடன் சொல்லியதோடு அக்காலை இனிதே நிறைவுற்றது.

பின்னர் ஜெ வந்ததும் மேலும் மெருகேறியது அமர்வுகள். அருணா உணர்வுபூர்வமாக முந்தின நாளின் அமர்வுகளை குறித்தும் கவிதைகளை குறித்தும் உரையாற்றினார். அவர் பேசுவதை கேட்பதைக் காட்டிலும் பார்ப்பது மேலும் அழகு கண்களின் உருட்டல், உணர்வு மேலீட்டில் மிகலேசாக திக்குவது,  கம்மலும் தெளிவுமாக கலவையான அவர் குரல், விரல்களின் நாட்டியமும் உடலசைவுமாக  ரம்மியம் எப்போதும் போல

அவரது நினைவாற்றலையும் வாசிப்பின் வீச்சையும் வழக்கம் போலவே பிரமிப்புடன் கவனித்தேன். வெள்ளைப் பல்லி விவகாரம் வெளியிடப்பட்டது.வாங்கி வந்திருக்கிறேன் வாசிக்கவேண்டும்

வெள்ளைப்பல்லி விவகாரம்

பிறகு ஜெவின்  ஆக சிறந்த அந்த  உரை. கவிதைக்கு இன்றியமையாத மூன்று இன்மைகளை பற்றி சொன்னார்.

கூடவே இன்றைய கவிஞர்களின் கவிதைகளில் இருக்கும் மூன்று தேவையில்லாதவைகளையும் விளக்கினார், அந்த பிரபல பத்திரிகையில் வந்த என் கவிதையின் நினைவு வந்து வெட்கினேன் ஊருக்கு வந்ததும் என் இணையப் பக்கத்திலிருக்கும் அதைப் போன்ற அசட்டுக்கவிதைகளையெல்லாம் ஒரேயடியாக நீக்கிவிட முடிவு செய்துகொண்டேன்

அந்த அமர்வுடன் அன்றைய நிகழ்வும் கவிதை முகாமும் முடியவிருந்தன . மதிய உணவிற்கு பின்னர் கலையலாம் என்றும் சொல்லப்பட்டது அனைவரும் இறுதி நிகழ்வில் லக்‌ஷ்மி மணிவண்னன் அவர்களின் உரையை கவனித்துக்கொண்டிருந்தோம் ஜன்னல்வழியே பார்க்கையில் ஆனந்த் ஸ்ரீனிவாசன் உணவுண்ணும் மேசைகளை ஒரு பழந்துணியால் பொறுமையாக ஒருமுறைக்கு பலமுறையாக துடைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தார்.  கண்ணும் நெஞ்சும் நிறைந்தது இது குடும்பம் இது குடும்பம் என்று மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. அந்த  விடுதியின்  ஆரஞ்சு வண்ண சீருடையிலிருந்த முதல்நாளிலிருந்தே வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு துரும்பை கூட எடுத்து போடாத, நான் குந்தாணி என்று மனதிற்குள் சொல்லிக்கொண்ட அந்த பெண் பணியாளர் அவர் துடைப்பதை ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

.லக்‌ஷ்மி மணிவண்ணன்  நிறைவுரையில் சரஸ்வதி தேவி பலிக்கல்லில் இருபது வருடங்களாவது படுக்கப்போட்டு பலிகொடுத்த பின்னரே நல்ல கவிதை வருமென்றார்.

அப்படியனால் நான் என் அபத்தக்கவிதைகளை அழிக்க வேண்டியதில்லை. இன்னும் 19 வருடங்களில் நிச்சயம் செறிவும் கவிதைக்கணங்களும் நிறைந்த, புரட்சியும் தன்னிரக்கமும், பொய்யுமில்லாத நல்ல கவிதையை என்னாலும் எழுத முடியும்

சிவாத்மாவின் சுருக்கமான இனிமையான பாடலுடன் விழா நிறைவுற்றது

மதிய உணவுக்கு பின்னர் ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டனர். கடைசியாக கடலை காண சென்றேன் விடைபெற்றுகொள்கையில் என் காலடிச்சுவடை ஒரு பேரலை வந்து அள்ளிச்சென்றது.

என்னை அருணா கன்னியாகுமரி சுற்றி காண்பிப்பதாக சொல்லி இருந்ததால் நான் அனைவரும் புறப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்

லக்‌ஷ்மி மணிவண்ன அவர்களும் ஆனத்குமாரும் ஒய்வொழிச்சலும் உறக்கமும் இன்றி எல்லாவற்றையும் பார்த்து பார்த்து  செய்துகொண்டிருந்தார்கள். ஆனந்த்  சோர்வை காட்டிக்கொள்ளவே இல்லை பம்பரமாய் சுற்றி புறப்பட ஏற்பாடு செய்வது, அங்கிருந்த நாய்களுக்கு அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாத படிக்கு தனிதனியே உணவிடுவது, எல்லா வேளைக்கும் அந்த குந்தாணி அம்மாவுக்கு அவர் கொண்டு வந்த அனைத்து பாத்திரங்களிலும் நிறைய  உணவை கொடுப்பதுமாக இருந்தார்.

ஆனந்துக்கு விருது என தெரியவந்ததும் அவர் நாய்களுக்கு சோறிட்டதும் அந்த அம்மாளுக்கு அவரளித்த சோறும் அதன் பின்னரே அவர் கவிதைகளும் நினைவுக்கு வந்தன

இவ்விருதை வாங்க மிக பொருத்தமான  கவிஞர், மிகப் பொருத்தமான மனிதரும் கூட 

அனைவரும் சென்ற  பின்னர் நான் அருணா, கதிர் மற்றும் நவீன் கன்னியாகுமரி சென்றோம்.

நல்ல கடைத்தெருவொன்றை அங்கு பார்த்தேன்.பலவித பொருட்கள் சங்கு,  சங்கு வளை, கிளிஞ்சல், சோழி, சங்குகளில் திரைச்சீலை, தொப்பிகள், மலிவு விலை உடைகள் பொம்மைகள் என்று ஏராளம்.  ஒவ்வொன்றாக பார்த்ததே எல்லாவற்றையும் வாங்கியதுபோல மகிழ்ச்சி அளித்தது

முதன்முதலாக மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டேன் அருணா வாங்கிக்கொடுத்து. நான் நினைத்திருந்தது போல  அது பயங்கர காரமெல்லாம் இல்லை கடலை மாவு தோல் போர்த்திய பசுதான் அது. காந்திமண்டபம் சென்றோம். குமரி முனையில் பாசம் வழுக்கி விடாமல் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நானும் அருணாவும் கால் நனைத்துக்கொண்டோம். 

வள்ளுவர் சிலை, மாயம்மா ஆலயம், காந்திமண்டபம்  என்று ஒவ்வொன்றாக பார்த்தோம்

அருணா எல்லாவற்றையும் புத்தம் புதிதாக பார்க்கும் உற்சாக மனநிலையிலேயே இருக்கிறார். எங்களை யாரேனும் கவனித்திருந்தால்,  கன்யாகுமரியில்  பிறந்து வளர்ந்த நான்  அருணாவை அங்கு அழைத்து வந்திருக்கிறேன் என்று  நினைத்திருக்க கூடும் அப்படி எல்லாவற்றையும்  ஒரு சிறுமியின் குதூகலத்துடன் பார்க்கிறார் ரசிக்கிறார். அருணாவே எனக்கு ஓரிரவில் திடீரென வளர்ந்து பெரிதாகிவிட்ட சிறுமியை போலத்தான் தெரிந்தார்.

மேலும் அருணா ஒரு தகவல் சுரங்கம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் வள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்குமான படகுச்சவாரி குறித்து கேட்டதும் அந்த இரு படகுகளின்  பெயர்களையும்  சவாரி நேரங்களையும் கூட துல்லியமாக சொன்னார்.  

பிறகு குமரி அன்னை ஆலயம் . திரையிட்டிருந்தார்கள். கூட்டமே இல்லை

சிறப்பு அனுமதியில் முன்னால்  ஒரு இளம் தம்பதியினர் சிறுமகளுடன் அமர்ந்திருந்தனர்.

நீலப்பட்டாடை அணிந்திருந்த அந்த குழந்தை தன் சதங்கைச்சிறுகாலினால் முன்னிருந்த ஒரு கயிற்றை உதைத்துக்கொண்டும் அவள் முன்னே ஒரு வாளியில் கொட்டிகிடந்த செந்தாமரை மொட்டுக்களை  எடுக்க தாவுவதுமாக இருந்தாள். குமரித்துறைவி நினைவுக்கு வந்தது.

திரை விலகி பல சுடராட்டுக்களில் அன்னையும் சிறுமியுமாக கண்ணார தரிசனம் கிடைத்தது.சங்குவளைகள் இரு ஜோடிகள் வாங்கிக்கொண்டேன். வெளியே வந்தோம் வள்ளுவர் சிலை  ஜகஜ்ஜோதியாக விளக்குகளுடன் ரம்மியமாக இருந்தது.

பிறகு சுசீந்திரம். ஓட்டுநர் சந்தேகித்த படி வாகன நெரிசல் இல்லாமல் விரைவில் போய் சேர்ந்தோம் அங்கே காரில் காத்திருந்த ஆனந்த் என்னிடம் ’’அக்கா உங்களுக்கு பழம் பறி வாங்கி கொடுக்க நினச்சிருந்தேன் இந்தாங்க’’ என்று நீட்டினர் குடும்பமல்லாது இது வேறென்ன?

  கோவிலுக்குள் நுழைகையில் தலவிருட்சம் சரக்கொன்றை பொன்னாய் பூத்து நிறைந்திருந்தது வாசலிலேயே. நல்ல தரிசனம் அங்கே. வெளியே போலி முத்து மாலைகளும் பலவித உணவுகளும் விற்றார்கள்.கடலை வறுபடும், கடலை மாவு, வேகும், சோளம் வாட்டும் வாசனை கூடவே வந்தது. பல வண்ண ரப்பர் பேண்ட் களை விற்கும் இரு சிறுமிகள் அங்கமர்ந்திருந்த முழங்கால்களுக்கு கீழ் இரு கால்களையும் இழந்த்திருந்த ஒரு பிச்சைக்காரரிடம் பணத்தை கொடுத்து சில்லறை மாற்றி கொண்டிருந்தார்கள் 

ஒரு நல்ல உணவகத்தில் இரவுணவு .முதன்முதலாக ரசவடை. என்னது ரசத்தில் வடையை போடுவார்களா? என்று முதலில் துணுக்குற்றாலும் சரி சாம்பார் வடை இருக்கிறது தயிர் வடையும் இருக்கிறது இடையில் இருக்கும் ரசத்திலும் இருப்பதுதானே நியாயம் என சமாதானமானேன்

இனிய தோழி அருணா, அவருடன் பழகுகையில் பேசுகையில் எனக்குள் எந்த  தயக்கமும் இல்லை பல்லாண்டுகள் பழகிய உணர்வை அவரால் அவரருகிலிருப்பவர்களுக்கு அளிக்க முடிகின்றது.

 என்னையும் கதிரையும் ரயிலடியில் விட்டுவிட்டு அருணா சென்றார் நினைவுகளின் எடையில் மூச்சு திணறிக்கொண்டு உறக்கமின்றி ரயிலில் இரவு கழிந்தது. காலை கோவையில் கதிரும் நானும் விடைபெற்றுக்கொண்டோம்.  சொந்த தம்பியை காட்டிலும் அன்புடனும் பொறுப்புடனும் என்னுடன் கதிர் வந்தார்

பொள்ளாச்சி வந்து கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு குளிக்கச் செல்ல கைக்கடிகாரத்தை கழற்றினேன். கடிகார பட்டைக்குள்ளிருந்து  மேசையில் உதிர்ந்தது கொஞ்சம் கடற்கரை மணல்

 என்னை வா வாவென்று அழைத்தும் நான் வராததால்,  கடல் தானே கொஞ்சம் என்னுடன் வந்துவிட்டிருந்தது.

ஸ்ரீபதி பத்மநாபாவின் ஒரு கவிதை இருக்கிறது. ஒரு காதலனும் காதலியும் சோடியம் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் நடந்து சென்று ஒரு பேருந்துக்காக காத்து நிற்பார்கள் வழக்கத்துக்கு மாறாக காதலி அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டதும் காதலன் இனி காதலைப் பற்றி தான் கவிதை எழுத வேண்டியதில்லை என்று நினைப்பதாய் முடியும் அது

 மனம் முழுக்க   ராவணப்புல்லாக பிடித்து இறுக்கியபடி  நிறைந்திருக்கும் கவிதை முகாமின் இனிய நினைனவுகளே போதும், ஒருபோதும் நல்ல கவிதைகளை  எனனால் எழுதமுடியாவிட்டலும் என்று தோன்றியது.

உங்களுக்கும், லக்‌ஷ்மி மணிவண்னனுக்கும் ஆனந்த்குமாருக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும்