சரண் தருண் இருவருமே சூழலை உற்றுக்கவனிப்பவர்கள் தான். தினமும் பள்ளிக்கதைகள் வேனிலிருந்து இறங்க இறங்கவே தொடங்கிவிடும், இரவு என்னிடம் நெடுநேரம் கதை கேட்பார்கள்.
என்னிடம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பள்ளியில் நடப்பவற்றை கவனிப்பார்கள்.
dont talk in tamil என்பதை அரிச்சுவடியிலிருந்தே கடுமையாக வலியுறுத்தும் பள்ளிதான் அதுவும். தமிழ்ப்பாடமும் வேண்டா வெறுப்பாக வைத்திருந்தார்கள். எப்படியோ எதன்பொருட்டோ பள்ளியில் ஒரு நாள் ஏதோ விழாவுக்காக ஒரு சிறப்பு விருந்தினர் தமிழில் உரையாற்றியிருக்கிறார் அதுவும் கண்ணகியைக்குறித்து.
அன்று மாலை தருண் கயிற்றுக்கட்டிலில் மூவருமாக அமர்ந்திருக்கையில் அந்த உரையைக்குறித்துச் சொன்னான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அப்போது தருண் 4-லிலோ ஐந்திலோதான் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்குக் கண்ணகியைக் குறித்து சொல்லப்பட்டது வியப்பும் சந்தோஷமும் அளித்தது.
…“ உனக்குப் புரிஞ்சுதாடா அவர் பேசினது?“… என்றேன்.
..நல்லா புரிஞ்சுதே. கோவலன் கெட்டவன்
, கண்ணகி பாவம் இல்லையா?…“ என்றான் எனக்கு நம்பவே முடியவில்லை.
ஈகை வான் கொடி அன்னாளான கண்ணகியை விட்டுவிட்டு மாதவியிடம் போன கோவலனை ,அறம் தவறிய மன்னனை, ஊர் விட்டு ஊர் செல்லவேண்டிய துயரத்தை எல்லாம் கண்ணகிக்கு ஊழ் அளித்ததை தருண் புரிந்துகொண்டிருக்கிறான் என்பது பெருமகிழ்வளித்தது.
…ஆமாண்டா ரொம்ப ரொம்ப பாவம் அவ
… என்றேன்.
…..இந்தக்கோவலன் அந்த அத்தைக்கு ஏன் சாப்பாடே போடலை?.... என்ற கேள்வியில் திகைத்து, ...``கண்ணகிக்கு கோவலன் சாப்பாடு போடலியா யார் சொன்னாங்க அப்படின்னு?
…. என்றேன்
….அந்த தாத்தா பேசினாரே அவர்தான் சொன்னாரு
… என்றான்
…இல்ல இல்ல எதோ தப்பா புரிஞ்சுகிட்டிருக்கே தருண் சாப்பாடெல்லாம் நல்லாத்தான் கிடச்சுது அவளுக்கு ஆனா அவ பிரச்சனை வேறடா, அவளை விட்டுட்டு அந்த மாமா வேற ஒரு பொண்ணு கூட போயிட்டாரு, அதனால கஷ்டப்பட்டா அப்புறம் கோவலனை கொலைபண்ணிட்டாங்க அதனால் அவ பாவமாயிட்டா
,…. என்றேன்
…அதெல்லாம் தெரியும் அந்த இன்னோரு அத்தை பேரு மாதவி
… “….என்றான் அப்போது 7-ல் படித்துக்கொண்டிருந்த சரண்
அதற்குச் சில மாதங்கள் முன்பு நாங்கள் மூவருமாக HBO வில் ஒரு ஆங்கிலப்படம் பார்த்துக்கொண்டிருந்தோம் . கிளைமாக்ஸில் ஒரு நிலத்தடி அறையில் மாட்டிக்கொண்ட நாயகனையும் நாயகியையும் வெள்ள நீர் உள்ளே கொஞ்சம் கொஞ்சமாகப் புகுந்து மூழ்கடிக்கிறது கழுத்தளவுக்கு நீர் வந்தபோது இருவரும் ஆவேசமாக முத்தமிட்டுக்கொள்கிறார்கள்,
அது இறுதி முத்தமாதலால் வெகுநேரம் நீடித்தது, சரண் சந்தேகமாக என்னிடம்
…அம்மா அந்த மாமாவும் அத்தையும் என்ன செய்யறாங்க?
… என்றான்
நான்..“ அதுவா அந்த வெள்ளம் வந்துச்சில்ல அந்த தண்ணி நிறைய அத்தை வாயில போயிருச்சு, அதை மாமா எடுக்கறார்“…. என்றேன், வேறென்னத்தை சொல்வது.
சரண் என்னப்பார்த்து அடப்பாவமே என்னும் தொனியில் ``போம்மா, மாமா முத்தா குடுக்கறாரு அத்தைக்கு
…. என்றான்
…தெரியுதில்ல பேசாம படம் பாரு
…. என்றேன்.
எனவே கோவலன் மாதவியைத் தேடிப்போனதால் உண்டான extra maraital affair குறித்து சரணுக்கு தெரிந்திருந்ததில் ஆச்சர்யமில்லை.
ஆனால் கண்ணகிக்கு சாப்பாடே இல்லாமல் போனதை இளங்கோவடிகள் கூட குறிப்பிடவே இல்லையே?
மீண்டும் தருண் … சாப்பாடே இல்லாம கண்ணகி பட்டினியா இருந்தாங்க அவங்கள மாதிரி யாருமே பட்டினியா இருந்ததே இல்லையாமா
… தாத்தா சொன்னாரே“…. என்றான்
எனக்கு விஷயம் புரிந்தது
வீட்டில் டேக்ஸா எடுத்துட்டுவா என்று சொன்னபோது அது என்னவென்று தெரியாமல் பேய் முழி முழித்துக்கொண்டு நின்ற. ….பன்னாடி எங்கேங்கம்மா?
… என்று கிராமத்துப்பெண் ஒருத்தி கேட்க ,
….பன்னாடி வெளியூர்ல இருக்காரு
.. என்று நான் பதில் சொன்னதுக்கு
…எதுக்கு அப்பாவ பன்னாடைன்னு அந்த அம்மாகிட்டெ திட்டினே
… என்று கோபித்துக்கொண்ட தருணுக்கு “பார்தொழுது ஏத்தும் பத்தினி” என்றால் என்னவென்று தெரியாமலிருந்ததில் வியப்பொன்றும்மில்லை.
அவனுக்கு பத்தினித்தனத்தை எப்படி விளக்கிச்சொல்வதென்று தெரியவும் இல்லை.
….“அது பட்டினி இல்லடா பத்தினி, அப்படின்னா ரொம்ப நல்லவங்க, மாமா இவங்களை விட்டுட்டு வேற அத்தைகிட்டே போனாலும் கோபிச்சுக்காம இருந்தா, எப்பவந்து கேட்டாலும் கொலுசு, தோடு செயினை எல்லாம் கழட்டிக்கொடுத்தா பத்தினின்னு பேரு கிடைக்கும், கோவில் கட்டி சிலையெல்லாம் வச்சு சாமியாவே கும்பிடுவாங்க அவங்களை“… என்றேன்.
முன்பு ஜெயா டிவியில் குஷ்பூ விதம்விதமான வடிவங்களில் ஜன்னல், கதவு, வாசல் ,வாசற்படி, மாடிப்படி, வராண்டா வெல்லாம் வைத்த ஜாக்கட் போட்டுக்கொண்டு ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தினார்.
அப்போது வீட்டில் டிவி இருந்தது. தருண் என்னுடன் அமர்ந்து ஜாக்பாட் பார்ப்பான். ஒருசில வாரங்களுக்குபிறகு நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கையில் குஷ்புவைக்காட்டி
....``இந்த அத்தை பாவம்``....
என்றான்
கொளுக்மொழுக் என்று போஷாக்காக, புஷ்டியாக அழகாக இருக்கும் குஷ்புவைப் பார்த்தால் எப்படி இவனுக்குப் பாவமாக இருக்கிறதென்று தெரியவைல்லை.
ஏண்டா ? என்றேன்
…“பட்டுசாரி எல்லாம் நல்லதா வச்சுருக்குக்காங்க ஆனா ஜாக்கட்தான் எல்லாமே கிழிஞ்சுருக்கு“….என்றான்.):
தருணுக்கு தெரிந்த அத்தைகள் எல்லாமே பாவம்தான்!
Leave a Reply