லோகமாதேவியின் பதிவுகள்

Category: Uncategorized (Page 2 of 3)

ஆலிவ், கனி மரம்.

கனி மரம்

ஆலிவ் மரக்காடுகளுக்குள் சென்றிருக்கிறீர்களா? காற்றில் மண் மணமும், மரங்களினடியில்  குளிர்ந்த நிழலும் கவிந்திருக்கும், வெள்ளியென மினுங்கும் ஆலிவ் இலைகள் உரசும் ஒலி ஒரு நாடன் பாடலைப்போல் காதில் கேட்கும், ஆலிவ் மரங்களை சிறிதளவாவது அறிந்து கொண்டிருப்பவர்களுக்கு, அந்த அனுபவம்,அந்த அற்புத மரங்கள் தோன்றிய கடந்தகாலத்துக்கே அழைத்துச் சென்றுவிடும்

6000 வருடங்களுக்கு முன்பிருந்தே மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் ஆலிவ் மரங்கள், பல சாம்ராஜ்யங்களின், நாகரீகங்களின் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும், பற்பல கலாச்சாரங்களை சேர்ந்த பல கோடி மக்களின் வாழ்வையும் பார்த்து கொண்டிருப்பவை, 

ஆலிவ் மரங்களின் வரலாறு மனித குல வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருப்பது. பண்டைய கிரேக்கத்தில் இருந்து ரோமாபுரி வரை, போனிஷியாவிலிருந்து பாலஸ்தீனம் வரை ஆலிவ், சமாதானத்தின் அமைதியின், வளமையின் குறியீடாக இருந்து வருகிறது

 அவற்றின் குறியீட்டு முக்கியத்துவங்களை கடந்தும் ஆலிவ் மரங்கள் அவற்றின் கனிகளால், ஆலிவ் எண்ணெயால் பல கலாச்சாரங்களின் சமையலறைகளில் இன்றியமையாத இடம் கொண்டிருக்கிறது. இன்று குக்கிராமங்களுக்கும் அறிமுகமாகி இருக்கும் பீட்ஸாக்களில் இருப்பது எங்கோ தொலைதூர நாடொன்றில் விளைந்த ஆலிவின் கனிகள் என்பதை எத்தனை இளைஞர்கள் அறிந்து உண்ணுகிறார்கள் ? 

கிரேக்க தொன்மங்களில் ஆலிவ் மரங்கள் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன அதில் முதன்மையானது எவ்வாறு ஆலிவ் மரங்கள் முதன் முதலில் உருவாகின என்பதுதான். அதனுடன் சேர்ந்தே ஏதென்ஸ் நகரத்துக்கு அப்பெயர் எப்படி வந்ததென்பதும் சொல்லப்பட்டிருக்கும்

மெய்ஞானத்தின் தெய்வமான ஏதினாவுக்கும் கடலின் தெய்வமாகிய பொசைடனுக்கும் நடந்த போட்டியில் உருவானதுதான் ஆலிவ் மரம் என்கிறது கிரேக்க  தொன்மம்.

ஆட்டிக்காவில்  புத்தம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு நகர் யாருக்கு சொந்தம், யார் அந்நகரின் பாதுகாவல் தெய்வம் என முடிவு செய்வதில் சிக்கல் உண்டாகியது, அந்நகரின் குடியேறவிருக்கும் மக்களின் தீர்ப்பே இறுதி எனவும்,  யார் வெல்கிறார்களோ அவர்களின் பெயராலேயே அந்த நகரும் அழைக்கப்படும் என்றும்  தீர்மானிக்கப்பட்டது. 

ஏதென்ஸ் என அப்போது பெயரிடப்பட்டிருக்காத அப்பெரு நகரம் யாருக்கானது என்னும் போட்டி ஏதீனாவுக்கும் பொஸைடனுக்கும் நடுவே நடந்தது. கிரேக்க கடவுளர்களின்  அரசரான ஜீயஸ் இதை ஏற்பாடு செய்திருந்தார். மன்னர் செக்ராப்ஸின் (Cecrops ) முன்னிலையில் இந்த போட்டி ஏற்பாடானது. 

 அந்நகர மக்களுக்கு அரிய பரிசை அளிப்பவர் யாரோ அவருக்கே அந்த நகரம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. பொஸைடன் தனது திரிசூலத்தை  அக்ரோபொலிஸ் கற்கோட்டையின் பாறை ஒன்றில் வேகமாக ஊன்றி ஒரு பெரும் உப்பு நீரூற்றை உருவாகினார்.  கடலின் தெய்வமாகிய அவர் அந்த உப்பூநிரூற்றை தனது கடலின் சக்தியாக காட்டினார். அவ்வூற்று நீர் பீறிட்டுக்கொண்டு வந்து நிலத்தை ஈரமாக்கியபடி நகரினுள் பாய்ந்தது. ஏதீனா அந்த ஈரநிலத்தில் மண்டியிட்டு ஒரு சிறு நாற்றை  நட்டுவைத்தாள், சில நொடிகளில் அந்நாற்று  வெள்ளியென மினுங்கும் பச்சிலைகளும் கொத்துகொத்தான கனிகளுமாக  அமைதியின், வளமையின்,நம்பிக்கையின் குறியீடான ஒரு ஆலிவ் மரமாக முளைத்து எழுந்தது. மக்களுக்கு உப்புநீரூற்றைவிட ஆலிவ் மரங்களே பிடித்திருந்ததால் அந்நகரம் ஏதினாவுக்கானதாகி அன்றிலிருந்து ஏதென்ஸ் என அழைக்கப்பட்டது. ஏதீனாவே எப்போதைக்குமாக ஏதென்ஸின் தெய்வமாகவும் ஆனாள் .

 இன்று வரையிலும் ஏதென்ஸின் கலாச்சாரத்தில் இரண்டற கலந்திருக்கிறது ஆலிவ் மரங்கள். ஆலிவ் இலைகள் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் தலையில் கிரீடமென, ராணுவ தளபதிகளின் தலையில், அரசர்களின் மணிமகுடத்தில் மகுடமென சூட்டப்படுகிறது. ஆலிவ் மரக்கட்டைகள் வீடுகள், படகுகள் செய்யவும் ஆலிவ் எண்ணெய் உணவாகவும், விளக்குகளுக்கு எரிபொருளாகவும் உடலில் தடவிக் கொள்ளவும் பயனாகிறது. ஆலிவ் கனிகள் ஏராளமான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. பண்டைய ரோமானிய கிரேக்க  நாணயங்களில் ஆலிவ் இலைக் கொத்து பொறிக்கப்பட்டிருந்தது

 அக்ரோபொலிஸ் நகரின் மத்தியில் கோட்டைகளின் இடிபாடுகளுக்கிடையில் ஏதீனாவின் ஆலிவ் மரம்தான் இன்றும் இருக்கிறது என கருதப்படுகிறது,  பலநூறு  ஆண்டுகளாக அங்கேயே இருக்கும் அம்மரம் மிகப்பழமையாகும் போதெல்லாம் அதிலிருந்து ஒரு கிளை எடுக்கப்பட்டு புதிய மரம் அதிலிருந்து அதே இடத்தில் உருவாக்கப்படுகிறது.

 சுமார் 2500 வருடங்களாக அந்த ஆலிவ் மரம் ஏதென்ஸின் வளமை நம்பிக்கை அமைதி மற்றும் உயிர்த்தெழுதலின் குறியீடாக காலத்தை கடந்து நின்றுகொண்டிருக்கிறது. கனிகளும் அளிக்கிறது.

 கிமு 480 ல் பெர்சியன் படையெடுப்பின் போது ஏதென்ஸின் புனித கோட்டை தரைமட்டமாகப்பட்டு அந்த ஆலிவ் மரமும் நெருப்பிட்டு அழிக்கப்பட்டது . அழிந்த அந்த ஆலிவ் மரம் அன்றே மீண்டும் ஒரு அடி உயரம் வளர்ந்ததாகவும் அதிலிருந்து மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்ட ஆலிவ் மரமே இன்று அதே புனிதமான ஏதீனா ஆலிவ்மரமாக நிற்கிறதென்றும் நம்பப்படுகிறது. பாதகமான சூழலிலும் முளைத்தெழும். அழித்தபின்னரும் உயிர்த்தெழும்   ஏதென்ஸ் மக்களின் இயல்பை குறிக்கும் மரமாக கருதப்படும் அந்த ஆலிவ் மரம்  கடவுளாகவும் வணங்கப்படுகிறது. 

 அந்த ஆலிவ் மரக்கிளைகளிருந்து உருவாக்காப்பட்ட 12 மரங்களும் ஒரு சரணாலயத்தில் வளர்கின்றன அவற்றிற்கு   moriai என்று பெயர். இச்சொல்லிற்கு ’’ஒரு பகுதி’’ என்று பொருள் அதாவது அவை ஏதென்ஸ் அரசின் ஒரு பகுதி, அதற்கு சொந்தமானது என்று பொருள். பண்டைய கிரேக்கத்தில் அம்மரங்கள் ஏதீனாவின் சொத்துக்களாக கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இன்றும் ஏதென்ஸில் இருக்கும் ஆலிவ் மரங்களனைத்துமே ஏதீனா உருவாக்கிய மரத்தின் சந்ததிகள் என நம்பப்படுகிறது.

கிரேக்கத்தில் ஆலிவ் அறுவடை அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடிவடையும். குடும்பமாக நண்பர்களுடன் சேர்ந்து ஆலிவ் அறுவடை ஒரு கொண்டாட்டமாகவே அங்கு நிகழும். அறுவடை முடிந்த பின்னர் காய்ந்த ஆலிவ் மரக் குச்சிகளில் நெருப்புண்டாக்கி மகிழ்வதும் அங்கு வழக்கம். சில ஆலிவ் தோட்டங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் அந்த அறுவடையில் பங்குகொள்ளும் வாய்ப்பளிக்கிறார்கள். அவர்களே பறித்த ஆலிவ் கனிகளிலிருந்து , எண்ணெய் எடுத்து, கையோடு சில பாட்டில் ஆலிவ் எண்ணெயும் வீட்டுக்கு எடுத்து செல்லும் அந்த அனுபவத்துக்கு சுற்றுலாப் பயணிகள் போட்டி போடுகிறார்கள்.   

வரலாறு

இத்தாலியில் கிடைத்த ஆலிவின் புதைபடிவ எச்சங்கள் இவை 40 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே பூமியில் இருந்ததற்கான சான்றளிக்கின்றன

.கிரேக்க கோவில்களின் தீபங்களிலும் , ஒலிம்பிக் தீபத்திலும் ஆலிவ் எண்ணெயே உபயோகப்படுத்தப்பட்டது.

பிளைனி, ஹோரேஸ் மற்றும் தியோஃப்ராஸ்டஸ் ஆகியோரும் ஆலிவ் மரங்களை அவர்களின் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்

கிரேக்கத்தில் ஹோமரின் காலத்திலிருந்தே ஆலிவ் எண்ணெய் உடலில் தேய்த்து கொள்ளப்  பயன்பட்டது. கிமு 600களில் ரோமானியர்களின் முக்கிய பயிராக ஆலிவ் இருந்திருக்கிறது. ஆலிவ்களை  சித்தரிக்கும்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பான ஓவியங்கள் அகழ்வாய்வில்  கிடைத்திருக்கின்றன

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முதன் முதலில் குறிப்பிடப் பட்டிருக்கும் மரம் ஆலிவ் தான்.ஜெருசேலத்தின் ஆலிவ் மலைக்குன்றுகள் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கிறிஸ்தவ தொன்மம் ஒன்று ஏசு கிறிஸ்துவின் சிலுவை ஆலிவ் மரங்களில் செய்யபபட்டதென்றும்  அதன்பிறகே குற்றவுணர்வில் அவை நிமிர்ந்து வளர்வதில்லை என்கிறது.

திருக்குரானில் ஆலிவ் மரங்களும் கனிகளும் எண்ணெயும் 7 முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது

முகமம்து நபி அவர்கள் புனிதமரமான ஆலிவின் எண்ணெயை தேய்த்து குளிப்பதை குறித்து சொல்லி இருக்கிறார். பல நாடுகளில் ரமலான் நோன்பில் பேரீச்சைகளுக்கு பதிலாக ஆலிவ் கனிகள் உண்ணப்படுகின்றன.

சாலமன் அரசர் உலகின் அனைத்து உயிரினங்களின் மொழியுமறிந்தவர். அனைத்துயிர்களின் பேரிலும் பேரன்பு கொண்டிருந்தவர், அவர் உயிரிழந்தபோது அனைத்து விலங்கு,பறவை, பூச்சி இனங்களும் கண்ணீர் விட்டழுதன ,உலகத்தின் மரங்களெல்லாம் இலைகளை கண்ணீரை போல் உதிர்த்து துக்கத்தை காட்டின.  ஆனால் ஆலிவ் மரங்கள் மட்டும் இலை உதிர்க்கவில்லை, பிற மரங்கள் அதை நன்றி கெட்ட மரமென்று ஏசின, அப்போது ஆலிவ் மரம் ’’சாலமன் அரசரின் மீதுள்ள எனதன்பை நான் இலைகளை உதிர்த்தல்ல ஏராளமான கனிகளை அளித்தே காட்டுவேன்’’ என்று சொல்லியதாம் இப்படி சிரிய நாட்டுப்புறக் கதைகளிலும் ஆலிவ் மரம் இருக்கிறது.

மற்றொரு ஆலிவ் தொன்மம் சிறுவனாயிருந்த ஹெர்குலிஸ் ஒரு சிங்கத்தை ஆலிவ் மரக்கட்டையால் அடித்து கொன்றான் என்கிறது

பொ யு 3700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கணிக்கப்பட்ட, உறைந்த கிரேக்க எரிமலை குழம்புகளிலிருந்து  கிடைத்த ஒரு ஆலிவ் இலையில் நோய் உண்டாகி இருந்த வெள்ளை ஈ யும் படிவமாயிருந்தது. அதே வெள்ளை ஈயான  whitefly Aleurobus olivinus என்பது இன்றும் ஆலிவ் மரங்களில் அரிதாக உண்டாகும் நோய்க்கு காரணமாக இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த ’’தாவர – பூச்சி பரிணாம- இணை’’  அறிவியலில் மிக முக்கியமாக கவனிக்கப்படும் ஒன்று.

ஒடிஸியில், குரானில், விவிலியத்திலென பல முக்கிய இலக்கிய படைப்புகளில் தொன்று தொட்டு இடம்பெற்றிருக்கும் ஒரு கனிமரம் ஆலிவ்.

அமைதி, வளமை, செல்வம், வெற்றி ஆகியவற்றின் குறியீடாக, புனித மரமாக,  பல நாகரீகங்களில் இருந்து, இன்றும் அதே பொருளில் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் ஒரு மரம் ஆலிவ்.

 நோவாவின் படகுக்கு திரும்பிய புறா வாயில் கொண்டு வந்த ஆலிவ் சிறுகிளைதான் பூமியில் வாழ்வதற்கான சாத்தியத்தை அறிவித்தது.

  1782   ல் வெளியிடபட்ட அமெரிக்காவின் முதல் அதிகார பூர்வமான அரசு முத்திரையில் ஒரு கழுகு தன் கால்களில் ஆலிவின் சிறுகிளையை பற்றியிருக்கும் சித்திரம் அமைதியின் வலிமையை குறிப்பிட சித்தரிக்கபட்டது.

 1946ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் கொடியில் உலக வரைபடத்தில் இருபுறமும் ஆலிவ் கிளைகள் இருக்கின்றன.

மத்திய தரைக்கடல் பகுதி உணவுகளின் ‘Triad’’  எனப்படும் மூன்று’  முக்கிய இடுபொருட்களில் ரொட்டிக்கான கோதுமை, வைன் தயாரிப்புக்கான திராட்சைகளுடன் மூன்றாவதாக ஆலிவ் இருக்கின்றது..

பரவல்

.கிமு 16 ஆம் நூற்றாண்டில் பீனிசியர்கள் கிரேக்க தீவுகள் முழுவதும் ஆலிவ் சாகுபடியை தொடங்கினர், பின்னர் கிமு 14 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிரேக்க நிலப்பகுதிக்கு ஆலிவை அவர்கள் அறிமுகப்படுத்தினர், அங்கு அதன் சாகுபடி வெகுவாக.அதிகரித்தது . 

கிமு 4 ஆம் நூற்றாண்டில்  (கிரேக்க நாட்டின்) ஏதென்சின் அரசியல்வாதியும், சட்ட நிபுணரும், கவிஞரும்  நெருக்கடியான மற்றும் குழப்பமான நிலையில் இருந்த ஏதென்சில் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் பல மாற்றங்கள் செய்தவருமான  சோலோன் ஆலிவ் நடவு ஒழுங்குமுறை ஆணையை வெளியிட்டபோது உலகெங்கிலுமே ஆலிவ் சாகுபடி பெரும் முக்கியத்துவம் பெற்றது.  கிமு 6ம் நூற்ரண்டில்  சிசிலி வழியாக இத்தாலிக்கு நுழைந்த ஆலிவ்கள் பின்னர் உலகெங்கிலும் பரவின.

2007ல்தான் இண்டியாவில் ஆலிவ் வளர்ப்பு தொடங்கியது. முதன் முதலில் ராஜஸ்தான்  தார் பாலை நிலங்களில் ஆலிவ் சாகுபடியாகப்பட்டது.  

தமிழில் இடலி மரமென்றும்,  விரலிக்காய் எனவும் அழைக்கப்படும் ஆலிவ் இந்தியாவின் பல மாநிலங்களில் வளர்கிறது எனினும் இந்தியாவில் ஆலிவ் மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது

தாவரவியல்

ஐரோப்பிய ஆலிவ் என்று பொருள்படும்  Olea europaea என்னும் அறிவியல் பெயர் கொண்ட ஆலிவ் ஒருபசுமை மாறா குறுமரம் மற்றும் புதர் வகையைச் சேர்ந்தது. மல்லிகைப்பூவின் குடும்பமான ஓலியேசீ குடும்பத்தை சேர்ந்த இவற்றின் புதர் வகைகள் ஆங்கிலத்தில்  Olea europaea ‘Montra’, dwarf olive, அல்லது  little olive. என அழைக்கப்படுகின்றன

3 லிருந்து 12 மீ உயரம் வரை வளரும் இவை  ஏராளமான கிளைகள் கொண்டிருக்கும்.  எதிரெதிராக அமைந்திருக்கும் ஜோடி இலைகளின் மேற்பரப்பு அடர் பச்சையிலும் அடிப்பரப்பு வெள்ளிபோல மினுக்கமும் கொண்டிருக்கும். இதன் மரக்கட்டை மிகவும் உறுதியானது. மரத்தின் மேல் பாகம் பழமையாகி இற்றுப்போய்  மடிந்தால் வேர்களிலிருந்து மீண்டும் ஒரு புதிய மரம் உருவாகி வளரும்.

 ஆலிவ் மரங்கள் 4 வருடங்களில் மலர்களும் கனிகளும் அளிக்கத் துவங்குகின்றன. வசந்த காலத்தில் இலைக் கோணங்களிலிருந்து  சிறு வெண்மலர்களின் தளர்வான மலர் கொத்துக்கள் உருவாகும். மாமரங்களை போலவே ஆலிவ் மரங்களிலும் கனிகளை அளிக்கும் இருபால் மலர்களும், வெறும் மகரந்தங்களை மட்டும் கொண்டிருக்கும் ஆண்மலர்களும் ஒரே மஞ்சரியில் அமைந்திருக்கும் (Polygamous inflorescence). ஆலிவ் மலர்களின் மகரந்தம்  மனிதர்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கும்.

காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும் இம்மரங்கள் பொதுவாக  ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் கனியளிக்கும், சில மரங்கள் வருடா வருடம் கனியளிப்பதும் உண்டு. கனிகள் பீச், பிளம், மா போல ட்ரூப் வகையை சேர்ந்தவை, கனிகளின் மத்தியில் கடினமான உறைகொண்ட இருவிதைகள் இருக்கும்

பச்சை நிறத்தில் இருக்கும் கனி முதிர்கையில் கரிய நிறம் கொள்ளும் விதைகளில்  30- 40 % எண்ணெய் அடங்கி இருக்கும். சுமார் 7 கிலோ கனிகளிலிருந்து 1 லிட்டர் ஆலிவ் எண்ணெய் கிடைக்கும் 

ஆலிவ்கள்  விதைகள் மூலம் இனப்பெருக்கம்  செய்வதில்லை, இவற்றில் தண்டுகள், வேர்கள் அல்லது இலைகள் மூலமே இனப்பெருக்கமும் சாகுபடியும் நடைபெறுகிறது.

ஆலிவ்களில் ஆயிரக்கணக்கான கலப்பின வகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன, பொதுவில் உண்ணக்கூடிய கனிகள்  “table olives’’ எனப்படுகின்றன. உண்ணும் கனிகளுக்கெனவும் எண்ணெய்க்கெனவும் பிரத்யேக வகைகள் வளர்க்கப்படுகின்றன

உலகின் மொத்த ஆலிவ் உற்பத்தியில் 80% எண்ணெய் தயாரிப்பிலும், 20 சதவீதம் மட்டுமே உண்ணும் கனிகளுக்காகவும் பயன்படுகின்றன.

இதன் பல கலப்பின வகைகளில் இருப்பதிலேயே பெரிய ஆலிவ் மரம் டாங்கி ஆலிவ்  (“donkey olive” ) என்றும் ஆகச்சிறிய ஆலிவ்  மரம் புல்லட் மரம்  ( “bullet”) என்றும் பெயர் கொண்டிருக்கிறது.

 ஆலிவ் மரங்கள் கடற்கரையில் செழித்து வளர்பவை எனினும் இவை பாறை குன்றுகளிலும் வறள் நிலப்பகுதிகளிலும் நன்கு வளரும், அதிக காற்றையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது ஆலிவ். 

கனிகளின்  வகைகள்

சர்வதேச ஆலிவ் சபையான  International Olive Council (IOC)  உண்ணக்கூடிய ஆலிவ்களை  மூன்றாக வகைப்படுத்தி இருக்கிறது

  1. முற்றிலும் பழுத்திருக்காத கொஞ்சம் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும்  கசப்பு சுவை கொண்ட பச்சை ஆலிவ்கள்
  2. சிவப்பும் பழுப்பும் பச்சையும் கொண்டிருக்கும் பாதி பழுத்த ஆலிவ்கள்

     3. நன்கு கனிந்த கருப்பு ஆலிவ்கள்

கனிந்த ஆலிவின் கசப்பை நீக்க மரச்சாம்பலிலிருந்து கிடைக்கும் ‘’லெ’’ (lye) எனும் வேதிப்பொருள் உலகெங்கும் உபயோகிக்கப்படுகிறது.

ஆலிவ்களின் கசப்புக்கு காரணமான oleuropein என்னும் வேதிப்பொருளை  நீக்க உப்பு நீரில் அவை  நனைக்கப்பட்டு நொதிக்கச்செய்யாப்படுகிறது.  இதை அறிந்துதான் ஏதீனா உப்பூ நீரூற்றின் அருகே ஆலிவ் மரத்தை  உருவாக்கி இருக்கிறாள் போலிருக்கிறது.

இந்த ஆலிவ் நொதித்தல் உலகின் பலநாடுகளில் பலவிதமான முறைகளில் நிகழ்கிறது.

கனிகள் பலமுறை அழுத்தப்பட்டு சாறெடுத்தும், வேதிபொருட்கள் கலக்கப்பட்டும் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் ஆண்டுத்தோறும் 3 மில்லியன் டன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது 

உலகின் மிக அதிகம் விளைவிக்கப்படும் கனிகளில் ஆப்பிள், வாழை, மா இவற்றுடன் ஆலிவ்களும் இருக்கின்றன. உலகில் எண்ணெய்க்காக சாகுபடி செய்யப்பட்ட கனிகளில் மிகபழமையாதும் ஆலிவ்தான். 7000 வருடங்களுக்கு முன்னர் மத்தியதரைக்கடல் பகுதியில் ஆலிவ் சாகுபடி  செய்யப்பட்டு எண்னெய் பிழிந்து எடுக்கபப்ட்டதற்கான சான்றுகள் உள்ளன  

ஆயில்-Oil  என்னும் ஆங்கிலச் சொல்லின் வேர் இந்த ஆலிவ் என்னும் சொல்லிலிருந்தே வந்தன.  உலகின் மிக அதிகமாக சுவைத்து மகிழப்படும் கனியும் ஆலிவ்தான்,  

 ஆலிவ் மரங்களும் கற்பக விருட்சங்கள் தான் அவற்றில் பயனற்றவை என எந்தப் பகுதியும் இல்லை. கனிகள் உண்ணத்தகுந்தவை, கனிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உலகெங்கிலும் பலவிதமான பயன்பாட்டில் இருக்கிறது. 

கரிய ஆலிவ் கனிகளில் செம்பு இரும்பு உள்ளிட்ட பல சத்துக்களும் ஓலியிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.. எனினும் நன்கு பழுக்காத ஆலிவ் காய்களை உண்ணுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். 

 ஆலிவ் எண்ணெய் அழகு சாதன  பொருட்கள் தயாரிப்பிலும் வெகுவாக பயன்படுகிறது. ஆலிவின் மரக்கட்டைகள்  மரச்சாமான்கள் செய்ய பயன்படுகிறது. ஆலிவ் கனிகளும் எண்ணெயும் ஏராளமான மருத்துவ பலன்களும் கொண்டிருக்கின்றன.

 கிரேக்க ஆலிவ் எண்ணெய் உலகின் முதல் தரமானது ஆனால் உலகின் முன்னணி ஆலிவ் எண்ணெய் உற்பத்தியாளராக இருப்பது ஸ்பெயின், இரண்டாவது இத்தாலி பின்னரே கிரேக்கம்.

புகழ்பெற்ற ஒரு ஆலிவ் மரம்

 இத்தாலிய மரபுகள், இயற்கை காட்சிகள்,, வரலாறு, கலைப் பாரம்பரியம், மீயுயர் பண்பாட்டில் தாக்கம் ஆகியவற்றிற்காக பெரிதும் அறியப்படுகின்ற டுஸ்கான்  (Tuscany ) பிரதேசத்தில்  15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயமான  சாண்டிஸிமா (Santissima Annunziata) வின் பின்புறம்    3500 வருட பழமையான Olivo della Strega, என்னும் பெயர் கொண்ட ஆலிவ் மரமொன்று கடந்த கால தொன்மங்களின் நினைவுச்சின்னமாக நின்றுகொண்டிருக்கிறது. இதுவே உலகின் மிக பழமையான உயிருள்ள ஆவணமென்று கருதப்படுகிறது. ஐரோப்பாவின் மிக பழமையான மரமும் இதுதான்.

மரத்தண்டும் கிளைகளும்   திருகிக் கொண்டிருக்கும் இந்த சூனியக்காரிகளின் ஆலிவ் மரம் என்று பெயர் கொண்ட மரத்திற்கு பின்னால் ஒரு மர்மம் கலந்த தொன்மம் இருக்கிறது.  

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு  பாகன் பழங்குடியினரின் கொண்டாட்டங்களின் ஓரிரவில் சூனியக்காரிகளும் பாதி குதிரை- பாதி மனிதன், பாதி மனிதன்- பாதி ஆடு என்னும் உடலமைப்பு கொண்டிருக்கும் உயிரினங்களும் இம் மரத்தின் கீழ் கூடி மகிழ்வார்கள். அவர்களில் மிக சக்திவாய்ந்த சூனியக்காரி என்று தேர்வு செய்யப்படுபவள் அன்றிரவு முழுக்க அம்மரத்தின் முன்னால் நடனம் ஆடுவது வழக்கம். நடனத்தின் உச்சத்தில் அம்மரத்தில் உறையும் தீய ஆவிகள் எழும்பி உடன் நடனமாடும், விடியும்போது நடனத்தில் ஈடுபட்ட  சூனியக்காரி ஒளிரும் கண்கள் கொண்ட ஒரு மாபெரும் பூனையாக  உருமாறி அம்மரத்துக்கு அடுத்த வருடம் வரை காவலிருப்பாள் என்கிறது அத்தொன்மம்.

 உபகதையொன்று அந்த மரக்கிளைகளில் அமர்ந்திருந்த ஒரு ராபின் பறவையை நோக்கி கல்லெறிந்த ஒரு சிறுவனை  காவலிருந்த சூனியக்காரி ஆலிவ் கனிகளை வீசியெறிந்து துரத்தினாள் என்கிறது. இக்கதையை கேட்காத இத்தாலிய சிறுவர்களே இல்லை எனலாம். 

சூனியக்காரிகள் ஆலிவ் மரத்தினருகில் கூட்டமாக நடனமிட்டு ஆவிகளை எழுப்பும் சித்திரம் அந்நாட்டு கலாச்சாரத்துடன் இணைந்து தலைமுறைகளாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது

 இத்தாலியின் பண்டைய கலாசாரத்தின் நீட்சியாக இன்றும் அங்கு நின்றிருக்கும் இம்மரத்தின் கார்பன் ஆய்வுகள் இவை 3500 வருடத்திற்கு முற்பட்டவை என்றும் இன்னும் 90 வருடங்களில், இம்மரம் உயிரிழக்கும் எனவும் தெரிவிக்கின்றது.   இப்போதும் சிறுகிளையொன்றில் சில ஆலிவ் கனிகளை வருடம்தோறும் அளிக்கும் இம்மரம் இத்தாலியின் புகழ்மிக்க சொத்தாக கருதப்படுகிறது. இத்தாலிய சுற்றுலாவின் மிக முக்கிய பகுதியாகவும் இது விளங்குகிறது. 

9 மீ சுற்றளவும் 10 மீ உயரமும் கொண்டிருக்கும் 3500 ஆண்டு பழமையான தெற்கு நோக்கிய இம்மரமும் அதனுடன் இணைந்து வளர்ந்திருக்கும் அதன் அடிப்பாகத்திலிருந்து தோன்றிய 200 வருட பழமையான ஒரு புதிய மரமுமாக இணைந்து திருகி நிற்கும் இந்த மரத்தை சுற்றிலும் வேலியிட்டு அரசு பாதுகாத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆலிவ் எண்ணெய் தயாரிப்பிற்கு இம்மரத்தின் பெயரால் ஒரு விருதும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆலிவ் மரங்கள் சாதாரணமாக 500- 600  வருடங்கள் உயிர் வாழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளை தாண்டி வாழ்ந்து இன்னும் கனியளித்துக்கொண்டிருக்கும் பல ஆலிவ் மரங்களும் உலகெங்கிலும் உள்ளன.

கிரேக்கத்தில் ஆலிவ் அருங்காட்சியகமொன்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான  பல ஆலிவ் மரங்கள் இருக்கும் காட்டினருகில் அமைந்திருக்கிறது. அங்கு ஆலிவ் மரக்காட்டு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுகிறது, ஆலிவ் மரங்களை எப்படி வளர்ப்பது, பாதுகாப்பது, அவற்றிலிருந்து மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரிப்பது ஆகியவையும், ஆலிவ் மரங்களுடன் இணைந்த கிரேக்க கலாச்சரா அம்சங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகிறார்கள்.

உலகெங்கிலும் எப்படி வைன் சுவைத்தல் என்பது ஒரு சடங்காக கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கிறதோ அப்படி கிரேக்கத்திலும் இத்தாலி மற்றும் ஸ்பெயினியில் ஆலிவ் எண்ணெய் சுவைத்தலும்  விமரிசையாக நடக்கிறது.பல நாகரீகங்களின் கலாச்சாரத்துடன் பிணைந்திருக்கும் திராட்சைக்கனியின் எதிர்த்தரப்பென்றால் அது நிச்சயம் ஆலிவ்தான்.  

ஆலிவ் கனி, எண்ணெய் மற்றும் சிறு கிளை ஆகியவை பல பண்பாடுகளின் குறியீடாக அமைந்திருக்கின்றன. நட்புறுதிக்கென நண்பர்கள் உலகெங்கிலும் கைமாற்றிக் கொள்வதும் ஆலிவ் கிளைகளைத்தான். மனிதர்களின் சரும நிறத்தில் ஒரு வகை ஆலிவ் நிறம் எனப்படுகிறது

பப்பாயி என்னும் புகழ்பெற்ற கார்டூன் கதாநாயகனின் மனைவியின் பெயர் ஆலிவ் ஆயில் என்பது அதை சிறுவயதில் பார்த்தவர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும்

 ஸ்பெயினின் புகழ்பெற்ற  கால்பந்தாட்ட  நிர்வாகியும், பிரீமியர் லீக் அர்சினால் குழுவின் தற்போதைய நிர்வாகியுமான மைக்கேல் அர்டேட், குழுவினருடன் நடக்கும் ஒவ்வொரு முக்கிய கூடுகைகளுகும் ஒரு சிறு ஆலிவ் மரக்கன்றை  அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பொருட்டு எடுத்துச்செல்வதாக சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.150 வருடங்கள் பழமையான  போன்ஸாய் மரமான அதை தன் குழுவின் குறியீடாக காட்டுகிறார் அவர்

2015 ன் ஸ்பெக்டர் திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டான டேனியல் கிரெய்க் தனது வழக்கமான பானத்துக்கு மாற்றாக ஆலிவ் கனிகள் அலங்கரிக்கும் மார்டினி அருந்துவதை கவனித்தீர்களா யாரேனும்?

 வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றிருப்பது  மட்டுமல்ல நம் ஆரோக்கியத்தின் மகிழ்ச்சியின் கலாச்சாரத்தின் அங்கமாகவும் ஆகிவிட்டிருக்கும் ஆலிவ்களை குறித்து  உலகமொழிகளில் பல அழகிய கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன, பெரும்பாலும் பிரிவுத்துயரை சொல்லி மீண்டும் சந்திக்கையில் ஆலிவ் மரங்களினடியில் முத்தமிட்டுக்கொள்வதை குறித்தானவைகளாக இருக்கும்.  

இனி எப்போதேனும் ஆலிவ் காடுகளுக்குள் செல்ல நேர்ந்தால் அவற்றின் காலம் கடந்த அழகை ஆராதிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள், அவை கடந்து வந்திருக்கும் காலத்தை, அவற்றை பேணிப்பாதுகாத்த நம் முன்னோர்களின் தலைமுறைகளை எண்ணிப்பாருங்கள். ஆலிவ் கனிகளின் வாசனையையும் சுவையையும் அனுபவியுங்கள். அதன் மூலம் இயற்கைக்கும், கலாச்சாரங்களுக்கும் மனிதனுக்குமான பிரிக்க முடியாத தொடர்பையும் நீங்கள் உணரலாம் 

சமர்ப்பணங்கள்

வாசிப்பிற்குள் நான் மிக இளமையிலேயே நுழைந்துவிட்டேன் என்றாலும் அப்போது அவை திருட்டுத்தனமான வாசிப்பென்பதால் அத்தனை மகிழ்ந்து வாசித்திருக்கவில்லை அப்பாவுக்கு பெண்கள் கதைப்புத்தகம் வாசிப்பதில் பெரும் ஆட்சேபணை இருந்தது, வாரப்பத்திரிகைகளுடன் என்னையோ அக்காவையோ பார்த்துவிட்டால் வீடு இரண்டுபடும். அவர் வீட்டில் இல்லாத சமயங்களில் அவசரமாக படிப்பதுண்டு.

அப்போது பெரும்பாலும் காதல் கதைகள் தான் வந்துகொண்டிருந்தன என்பதும் காதல் திருமணத்தின் எல்லா பாதகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர் என்பதையும், இப்போது நினைக்கையில் அப்பாவின் அந்த மூர்க்கத்தை கொஞ்சமாகவேனும் புரிந்துகொள்ள முடிகின்றது

சுதந்திரமாக வாசிக்க தொடங்கியது நூலகம் சென்ற கல்லூரிக் காலங்களில் தான் அப்போதும் வீட்டுக்கு பின்னே இருந்த கல்லூரி என்பதால் அதிக நேரம் செலவழிக்க முடிந்ததில்லை. கோவை பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காகச் சென்று விடுதியில் தங்கியிருந்தபோது தான் ஏராளம் வாசித்தேன். என்னை முழுக்கவே வாசிப்பு அப்போது மூடிக் கொண்டிருந்தது.

பல்கலைக்கழகத்துக்கு எதிரே   A-Z  என்று ஒரு இரவல் புத்தக நிலையம் இருந்து. அங்கே பெண்கள் கூட்டம் அலைமோதும் ரமணிசந்திரன் அங்கேதான் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தார். ஒரு வாரத்தில் திருப்பி கொடுக்கையில் புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கும் விலையில் 10 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு பேருந்தில்  பயணித்த அந்த சில வருடங்களில் எப்போதும் என்னுடன் எண்டமூரியோ, சுஜாதாவோ, பாலகுமாரனோ, லா சா ரா வோ , தி ஜாவோ உடனிருந்தார்கள். அப்போதுதான் அ முத்துலிங்கம் அவர்களையும் அறிந்து கொண்டிருந்தேன்

அ.முவின் கதைகளின் மாந்தர்கள், கதைக்கரு, நிலக்காட்சிகள் என்ற அத்தனை சுவாரஸ்யங்களைக் காட்டிலும் அவரது தூய இனிய மொழி என்னை கவர்ந்தது. இலங்கை தமிழின் மீது எனக்கு எப்போதும் தனித்த பிரியம் உண்டு. மொழியின்பத்துக்காகவேதான் நான் பிரதானமாக அவரது கதைகளை வாசித்தேன்

என்  ஆய்வு நெறியாளருக்கு கோத்தகரி வனக்கல்லூரிக்கு மாற்றலானதும்  இரண்டு வருடங்கள் பொள்ளாச்சி- கோவை- மேட்டுப்பாளையம்- கோத்தகிரி என்று கூடுதலாக பயணங்களும் கூடுதல் வாசிப்புமாக இருந்தேன். அட்டையிலிருந்து அட்டை வரை நிதானமாக வாசித்த அச்சமயத்தில்  புத்தகங்களை யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பதும் விசித்திரமானவைகளை  குறித்து வைத்துக்கொள்வதும் வாடிக்கையாக இருந்தது.

தனக்கு பிரியமான சிவப்பு மதுவுக்கு, மனப்பிறழ்வு நோய்க்கு தானெடுத்துக் கொள்ளும் மருந்துக்கு, இறந்த தன் மனைவிக்கு போன்ற சமர்ப்பணங்கள் இருந்தன. தனது, ஏராளமான, நெருக்கமான காதலிகளுடனான  உறவைச் சொல்லிய நூலொன்று எழுதியவரின் மனைவிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது):. தன்னை முதன்முதலாக நூலகத்துக்கு அழைத்துச் சென்ற தனது அன்னைக்கு ஒரு நூல், தனக்கு பிரியமான முலாம்பழத்துக்கும் ஒருநூல் அர்ப்பணமாயிருந்தது.

2016 எனக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு முதன் முதலாக வீட்டைவிட்டு, மகன்களை பிரிந்து  மற்றொரு இடத்தில் ஒரு மாதம் தங்கி இருந்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்த கொந்தளிப்பான காலமது.  ஒரு மாத கால துறை சார்ந்த பயிற்சியையும் அச்சமயத்தில் எடுத்துக் கொண்டிருந்தேன். பல்கலைக்கழக பேருந்தில் பயிற்சிக்கு செல்லுகையில் நட்பான பேராசிரியர் ஒருவர் எனக்கு அ. முவின் ‘’மகாராஜாவின் ரயில் வண்டி’’ தொகுப்பை வாசிக்கக் கொடுத்தார். நூலாகவோ அல்லது மின்னூல் வடிவிலோ அல்லாது நகலெடுத்த பக்கங்களை இணைத்து புத்தகமாக்கிய வடிவம் அது

நாள் முழுக்க நீண்ட பயிற்சியின் முடிவில் களைத்துப் போயிருந்த ஒரு நாள் இரவில் அதை பிரித்து வாசிக்கத் துவங்கினேன். மகாராஜாவின் ரயில் வண்டி என்னும் அந்த நூலை அ.மு  சமர்ப்பித்திருந்தது,  அவரால் உயிரிழந்த ஒரு பறவைக்கும் பிறக்காமல் போன அதன் சந்ததிக்கும். அவரே அது சமர்ப்பணமல்ல பிராயச்சித்தம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த ஒரு பத்தி என்னை கசிந்துருகச் செய்துவிட்டது. இளமையின் வேகத்தில் நண்பனுடன் சேர்ந்து விளையாட்டாக செய்யப்போன ஒரு காரியம் விபரீதமாக முடிந்து ‘பாம்’மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஒரு பாவமும் செய்திராத அந்த கொழுத்த பறவை உயிரிழந்ததை   சொல்லுகையில்:

//அந்தகாகம் ஒரு குற்றமும் செய்யவில்லை. அது செய்ததெல்லாம் அந்த நாட்டில் இருந்த அத்தனை காடுகளில், அந்த காடுகளில் இருந்த அத்தனை மரங்களில், அந்த மரங்களிலிருந்த அத்தனை ஓலைகளில், அந்த வளைந்த ஓலையை தேர்வு செய்து அங்கே தன் பாட்டுக்கு உட்கார்ந்திருந்துதான். இந்த புத்தகம் ஒருபாவமும் அறியாத அந்த பறவைக்கு,பிறக்காமல் போன அதன் சந்ததிகளுக்கு// என்று சொல்லி இருந்தார்.

 எத்தனை வாஞ்சையும், பரிவும், கருணையும், அறியாத செயலுக்கான குற்ற உணர்வும் கலந்த ஒரு சமர்ப்பணம்? இந்தவரிகளில் காணமுடிந்த அந்த மனதின் ஈரம் என்னால் ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் அவ்விரவு முழுவதும் உறங்காமல், உறக்கம் வராமல் ஒரே மூச்சில் அத்தனை கதைகளையும் வாசித்து முடித்தேன்.  அத்தொகுப்பின்  75 கதைகளின் ஒவ்வொரு வரியும் அ.முவின் அந்த கனிவில் தோய்ந்தவைகளாகவே இருந்தன.

அப்போது எனக்கிருந்த பல சிக்கல்களிலிருந்து நான் எளிதில் அந்த தூய அன்பின் கையைப்பிடித்துக் கொண்டு கடந்தும்  வந்து விட்டிருந்தேன். இத்தனை நல்ல மனம் கொண்ட மனிதர்கள் இருக்கையில் நான் அஞ்சவும் நம்பிக்கையிழக்கவும் தேவையில்லை என்று ப் மனமார நம்பினேன்

 ’’ஓர் அவமானத்தை ஓர் இளவெயில் போக்க முடியுமானால், ஓர் இழப்பை ஒரு மென்மழை மறக்கச் செய்ய முடியுமானால், ஒரு நோயை பூவின் நறுமணத்தால் சமன் செய்து கொள்ள முடியுமானால், வாழ்க்கையில் அஞ்சக்கூடியதாக ஏதுமில்லை..!!என்று சொல்லி இருப்பார் ஜெயமோகன்

அப்படி என் முன்பாக ஒரு பெரிய மலையைப் போல நின்றிருந்து அச்சமூட்டிய ஒரு சிக்கலை  அ. முவின் அந்த கனிவினால் திரைச்சீலையை தள்ளி விலக்குவதுபோல் எளிதில் கடந்து வந்துவிட்டேன். உலகம் அப்படியொன்றும் அன்பின்மையால் வரண்டு விடவில்லை என்று அந்த சமர்ப்பணம் எனக்கு சொல்லியது.

அவரின் பல படைப்புக்களை நான் வாசித்திருந்தும் இந்த குறிப்பிட்ட தொகுப்பு என் தனித்த பிரியத்துக்குரியதானது.

கோடைமழையில் அவரது சொந்த ஊரான கொக்குவில்லிலிருந்து புறப்படும் மஹாராஜாவின் ரயில் வண்டி ’எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலையில் நிற்கும்’ வரை நான் வண்டியை விட்டு இறங்கவேயில்லை.

அடிக்கடி இடையில் சுருட்டு, புகையிலை, சிகரெட் வாடை வந்து கொண்டிருந்தது,  மழை பெய்தது, வெயிலடித்தது, புழுதி பறந்தது அதிக ரிக்டர்  அளவிலான பூகம்பம் வந்தது, போர் தொடர்ந்தது, ஏதேதோ ஒழுங்கைகள் வழியாக பயணம் ஆப்பிரிக்காவிலும் கொக்குவில்லிலும் சோமாலியாவிலும், நைரோபியிலும் தொடர்ந்தது.  இடையே யாழ்தேவி கணக்காய்  நேரத்துக்கு கடந்து சென்றது. கச்சான் காற்றும் சோளக்காற்றுகளும் அடித்தன

ரயிலெங்கும் குட்டிக்கூரா மணந்தது, இடைக்கு கல்பெஞ்சும், கவண்மேந்தும் வருகின்றன,  நாடன் பாட்டுக்களும் பழமொழிகளும் சிறார்களின் விளையாட்டுப் பாட்டுக்களும் காதில் கேட்டது.

இரண்டு பூ பூக்கும் ஒரே மரமென்னவென்னும் விடுகதையும் போடுகிறார் அ.மு.

 நல்ல பசி நேரத்தில் மாங்காய் சம்பலும் ஆப்பிரிக்காவின் வ்வூவ்வூ களியும் மணமடித்து அவற்றை உண்ணவேண்டும் என்னும் ஆவலை உருவாக்கியது. ஆட்டுச்செவி பருவத்தில் இளசாக உடையாமல் இருந்த தேங்காயின் வழுக்காய் சச்சதுரமாக வெட்டிபோடப்பட்டு செய்த குழம்பும், கணவாயுடன் ஒரு சொட்டு மையும் முருங்கைப்பட்டையும் போட்டு வேகவைத்த மணத்தையெல்லம் கூட சமாளித்துவிடலாம், ஆனால் அந்த  ஆட்டுக்கறி பிரட்டல் இருக்கிறதே! வாய்நீர் ஊறாமல் அதை கடந்து வந்திருக்கும்  அசைவ உணவுக்காரர்கள் இருக்கவே முடியாது.

கோலாகலமான  மஞ்சவனப்பதி தேர் திருவிழாவை மட்டுமல்ல, மக்களை மக்கள் அடித்துக் கொள்ளும் இனவெறியில் சிந்தும் கண்ணீர்த்துளைகளையும் ரத்தத்தையும் கூட காண நேர்ந்தது

இந்த ரயில் வண்டி பிரயாணத்தில் என்னை கவர்ந்தது அல்லது என்னை பேரலையென அடித்துக் கொண்டு சென்றது உடன் வந்த பெண்மைப் பெருக்குத்தான். எத்தனை எத்தனை வகையில் பெண்கள்! துணிச்சல்காரிகளும், துயரமே உருவானவர்களும், வடிவானவர்களும், அன்பான அக்காக்களும், பச்சிளம் குழந்தைகளும், சிறுமிகளும், சிறு மகள்களும், காதலிகளும் அன்னைகளும், மனைவிகளுமாக வரும் அவர்களுக்கெல்லாம்தான் எத்தனை வகையில் இடர்பாடுகள், சிக்கல்கள் கலைடாஸ்கோப்பின் வர்ணஜாலம் போல அவர்களின் இயல்புகளின் வண்ணக்கோலம் கண்முன்னே விரிந்தது

மனதில் ஒருவனை வைத்துக்கொண்டு, இன்னொருவனை மணமுடித்த சாந்தினி,  காதல் துயரை உவந்து ஏற்றுக்கொள்ளும் அனுலா,  மனதிற்குள் ரகசியமாக ’கொண’ மாமாவை காதலிக்கும் ஒரு அக்கா, சோதிநாதன் மாஸ்ரரை தவிக்க வைக்கும்,  பல்லி வயிற்றில் முட்டை தெரிவது போல விரல்களில் ஓடும் ரத்தம் கூட தெரியும் நிறத்திலிருக்கும் இளமை பொங்கும் அலமேலு, தண்ணீருக்காக காதலை மறக்கும் சோமாலியாவின் மைமூன், திறமான நிச்சயத்துடன் வருவேனென்று சொன்னவனுக்காக காத்திருந்து மட்கும் ஹொன்ஸாகூல், என ஒவ்வொரு நிறுத்தத்திலும் காதல் கொண்ட, காதல் கொள்ள வைத்த பெண்கள் பயணத்தில் இணைகிறார்கள்

  துயரமே உருவான பெண்கள் பலரையும் காணமுடிகின்றது பிள்ளைப்பாசத்தில் கட்டுண்ட பார்வதி, இனக்கலவரத்தில் உயிர்பிழைக்க ஓடிவருகையில் இறந்துபோய் புதைக்கவும் இல்லமால் எரிக்கவும் இல்லாமல் அப்படியே வீதியோரத்தில் விடப்பட்ட தங்தம், சிறு ஜாடையில் அவளைப்போலவே இருக்கும்  அவள் மருமகள். பயணச்சீட்டுக்களாக மாறிவிட்ட வளையல்கள்  இல்லாத மூளிக்கைகளை அசைத்து பிளேனில் போகும் மகனுக்கு விடைகொடுக்கும் ஒரு அன்னை,

எங்கோ நாதியற்று கிடக்கும் மகனுக்கு வயலட் கலர் பென்சிலை நாக்கில் தொட்டுத்தொட்டு ’’இப்போதெல்லாம் தென்னையிலிருந்து தேங்காய்கள் விழுவதில்லை, வானத்திலிருந்து மழை விழுவதில்லை ஆகாயத்திலிருந்து குண்டுகள் தான் விழுகின்றன’’ என்று கடிதம் எழுதும் அன்னையொருத்தியின் சித்திரமும், வீட்டை துடைத்துப் பெருக்கி, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது போல வாஞ்சையுடன் பாத்திரம் அலம்பி, துணிகளை துவைத்து அப்படியும் நேரம் எஞ்சி இருக்குமானால் அடுப்புக்கரி அணைந்த இடத்தில் படுத்துக்கொள்ளும்  பதிமூன்றே வயதான வேலைக்கர சிறுமி பொன்னியையும்,  நினைத்தாலே கிலி பிடிக்கும்படியாக ஒரு பிறந்த நாள் பரிசைப்பெறும் பாரதிராஜா பார்த்தால் பொறாமைப்படும் படியாக ஒரு  நீள  வெள்ளைத் துகில் உடையை வைத்திருக்கும் பத்மாவதியும்  மனதை கனக்க செய்து விடுகிறார்கள். ரயில் பெட்டியிலிருந்து நான் இறங்கி இத்தனை காலமாகியும். அந்த கனம் இன்னும் நெஞ்சில் தான் அழுத்திக் கொண்டிருக்கிறது

 நகை சுற்றிவரும் மெல்லியதாள் போன்ற காகிதத்தில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அந்நிய தேசத்திலிருக்கும் கணவனுக்கு கடிதம் எழுதும் ஒரு பாவப்பட்ட மனைவி, பாயை விரித்துப்போட்டு  இரு பக்கத்திலும்  இரண்டிரண்டாக படுத்திருக்கும் பிள்ளைகளுக்கு  சரிசமமாக தன்னை பிரித்துக் கொடுத்து நடுவாக படுத்துக்கொள்ளுமொருத்தி, தனக்கு விதிக்கப்பட்ட வறுமையை ரகஸ்யமாக அனுபவிக்க விரும்பும் பாத்திமா, நாலு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு போகும் தொக்கையான ஒரு மனுஷி என இவர்களின் துயரத்தில்  ரயில் வண்டி  தளும்புகிறது.

குளிருக்கென அடைத்த வாத்துச்சிறகுகள் பிய்ந்து வெளியே வந்திருக்கும் மோசமான  காலணிகளுடன்  தினமும் ரெய்கி சிகிச்சைக்கு செல்லும்  இரண்டு கிழமைகளுக்கு முன்னர் மோசம் போய் விட்ட பரமசோதியின் அக்கா மேல்கோடடை மறந்து வைத்துவிட்டுபோகிறாள்.

கஷ்டப்பாடுகள் கீழ்மையின் எல்லை வரைக்கும் துரத்தி வந்ததில் சொந்த மகளிடமே  வட்டிக்கு காசுகொடுக்க துணியும் வெயிலில் உலர்த்தியது போலிருக்கும் சின்னாயிக்கிழவியும் ரயிலில் இருந்தாள்.  

தனியாக எடுத்து வைத்த சாமி படையல் போல சிரிக்கிற இரண்டே இரண்டு பாவாடைகளும் அவையிரண்டுக்குமாக சேர்த்து ஒரே  ஒரு நாடாவையும் வைத்திருக்கும், மேலுதட்டில் வெண்டைக்காய் மயிர்போல  ரோமம் கொண்டிருக்கும்  அம்மா ஒருத்தி  கண்களை நிறைக்கிறாள் ,மூன்றாவது அம்மாவின் மகளான, மூக்குத்தியும் முகப்பருவும் போட்டிருந்த , ஒரே நாள்  மூளைக்காய்ச்சலில் செத்துப்போன அழகு அக்காவை மறக்கமுடியுமா?

துயரமே உருவானவர்களுக்கிடையில் துணிச்சல்காரிகளும் புதுமைப் பெண்களும் கூட  இருந்தார்கள்  ஒரு காவாலியின் அசிங்கமான செய்கையை பார்த்து திகைத்து பயந்து போகாமல் கண்களை நேராகப் பார்த்து ’’அடுத்த ஷோ எப்போ வரும். என் தங்கையும் பார்க்கனும்’’ என்ற ஒரு துணிச்சல்காரி, .ஒப்பாரிப்பாட்டிலும் வம்புச்சண்டை வளர்க்கும் உறவுப் பெண்கள், வீட்டுவேலைக்கு வந்து எஜமானியாகிவிடும்  ஆப்பிரிக்க கருப்பழகி அமீனாத்து, தமிழ் படங்களில் ’’ஏன் கேர்ல்ஸ் எல்லாம் குனிஞ்ச படியே போகினம்?’’என்று கேட்கும் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சிறுமி.

ஆங்கிலம், ரஸ்யன், பிரெஞ்சு எல்லாம் சரளமாக பேசும், பச்சை கண்கொண்ட மூச்சை நிறுத்தும் அழகில்லாவிட்டாலும் வசீகரமாயிருந்த, ஒரு பார்ட்டியின் முடிவில் இரு மார்புகளையும் கழட்டி வீசியெறியும் அனா என்கிற அன்னலட்சுமி, இவர்களுடன்  நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும், துணிவும் சாதுர்யமும் கொண்ட, கற்பெனும் புனிதப்போர்வயால் மூச்சுமுட்டும்படி  போர்த்தப்படாத பல ஆப்பிரிக்க பெண்களும் இருக்கிறார்கள்.

ஸ்வென்காவின் 17 பெண் கருச்சிசுக்களில் ஒன்றாக காத்திருந்த காமாட்சி இனி வரப்போகும் காலங்களின் இனவிருத்தி எப்படி இருக்கும் என்று கோடு காட்டி அச்சமூட்டினாள்

பேரம் படியாத போது அலறும் ’யூ லவ்  மீ’’ மீன்காரியும் அவள் முதுகில் ஒட்டிக்கொண்டிருக்கும் கரிக்குருவிக் குழந்தையையும்  இந்த பிரயாணத்திலல்லாது வேறெங்காவது காணக்கிடைக்குமா என்ன?

பலவிதமான மனைவிமார்களையும் பார்க்கமுடிந்தது இந்த ரயில் பிரயாணத்தில்.

வெளிநாட்டுக்கு போகும் கணவனுக்கென்று பார்த்துப் பார்த்து சூட்கேஸில் சாமான்கள் அடுக்கும் ’’வாங்கும் நோய்’’ கொண்டிருந்த பட்டியல் போடும் மனைவி, கொஸ்டோரிக்கன் போலவே இருந்த பிடிவாதக்காரியும் சீனனிடம் மார்பில் டிராகனை பச்சை குத்திக்கொண்டவளுமான  தங்கராசாவின் மனைவி பத்மாவதி,  

தனது மூன்று மாத குழந்தைக்கு முலைப்பாலை கறந்து போத்தல்களிலடைத்து டேகேரில் குழந்தையுடன் கொடுத்துவிட்டு வரும் ஜமைக்காவின் எஸ்தர், உள்ளத்தின் குரலை கேட்காமல், உடலின் கட்டளைகளை மட்டும் செவிமடுத்து மருகும் கமலி, பணிவிடை செய்யும் கணவன் மீதுள்ள பிரேமையை சந்தேகமாக மாற்றிக்கொண்ட கமலா, உருண்டை வீட்டில் பிரியமில்லாததால் கணவன் மீது மயிர் வளர்வது போல கண்ணுக்கு தெரியாத விரோதத்தை வளர்க்கும் மனைவி, இவர்களின் துக்கம்   வாசிப்பிற்கு பின்னர் என் துக்கமாகிவிட்டிருந்தது.

ஆப்பிரிக்க யானைத்தந்தத்தின் மீது  எத்தனைதான் ஆசையிருந்தும் பேருயிரொன்று அதன்பொருட்டு அழிந்ததை அறிந்ததும் அன்னை மனம் துடிக்க கிடைத்த தந்தத்தை ஏறெடுத்தும் பார்க்கமல் ஊர் திரும்பு இன்னொருத்தியும் இருந்தாள்

குடியுரிமைக்கு பிறகே தாய்மை என முடிவு செய்து பெண்மையையும்  தாய்மையையும் தவறவிடும் சங்கீதா மனம் கனிய வயதும் காலமும் தடையில்லை என் உணர்கிறாள், அதற்கு சாட்சியாக அவளருகில் கிடக்கிறது  பெண்குழந்தை அய்சாத்து

இத்தனை பேருடன் பச்சிளம் குழந்தைகளும் பருவப்பெண்களும் சிறுமிகளுமாக மகள்களும் நிறைய பேர் இருந்தனர். ரயிலில் 75 பெட்டிகளல்லவா?

தங்கைக்கு பிறகு தாமதமாக மலர்ந்த ராசாத்தி, தேநீர் போல கோபத்தில் சிவந்த , தூக்கி வைத்துக் கொள்ள யாருமில்லாமல் தானாகவே தூக்கி வைத்துக் கொள்ளும் 14 வயது பள்ளி மாணவியொருத்தி, ஒழுங்காய் சடை நுனியில் நீல ரிப்பன் கட்டிக்கொண்டு கிலுகிலுவென்று சிரித்துக்கொண்டு பள்ளி செல்லும் சிறுமிகள், பாய்பிரண்டின் பிறந்த நாளை  மறந்த  அப்பாவை கோபித்துக்கொள்ளும், அவருடனான தன் இளமைப்பருவத்தின் அபூர்வ தருணங்களையெல்லாம் மறந்தே மறந்து விட்ட மகளொருத்தி,

ராட்சத்தனமான கருப்பு புழு போல் நெளியும் மூன்று மாதமேயான தில்லைநாயகி, விருந்தாளிகளுக்கு  ஆட்டுப்பால் கொடுத்து உபசரிக்கும் வீட்டைச்சேர்ந்த,  கண் இமைகளில் வைரத்துண்டுகள் ஒட்டியிருக்குமோர்  சிறுமி, ஐஸ்கிரீம் கடையை கண்டால்  வெட்டுக்கிளியை கண்ட நாய் போல் அசைய மறுக்கும் ஒரு இளமகள், இவர்களுடன் வரும் நீளமான கண்கள், நீளமான விரல்கள் கொண்ட அம்மாவிற்கு பிரசவம் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண். முதலில் தெரிந்த கால்களை பிடித்து இழுத்ததால் நீளமான கால்களும் கொண்ட டோல்ரஸை சொல்லுகையில் ‘’தின்னவேண்டும் என்று பட்டது’’ என்கிரார் அ.மு. எனக்கும் அவளைப்பார்க்கையில் அப்படித்தான் இருந்தது.

பஞ்சலோகத்தில் செய்ததுபோல் ஒரு 4 வயது மகளும் இருக்கிறாள். அள்ளியெடுத்து மடியிலிருந்திக்கொள்ள மனம் விழைந்த நிமோனியாவால்  மூச்சுவிட சிரமப்படும்  லவங்கிக்குட்டி, ஏன் தனக்கு சூரிய கிரகணம் பிடிக்காது என்பதை சொல்லாமலே மறைந்த பஸ்மினா, இடுப்பில்  குடத்திலேயே அடித்த அப்பனுக்கு  சோறாக்கிப் போடும் பூரணி மற்றும் தன் பெரியப்பனை கொழுத்த ஆடாக்கி, கொள்ளியால் சுடும் விஜயாவின் மகளான குண்டுப்பெண் ஆகியோருமுண்டு.(பல சினிமாக்களில் போடுவார்களே இருதயம் பலவீனமானவர்கள் கர்ப்பிணிகள் அதை பார்க்க வேண்டாமென்று,  அப்படி ,மனைவி மக்களை பிரிந்து நினைவில் வாழும் பலவற்றுடன் போராடிக்கொண்டு பொருள் வயிற்றின் நீங்கியிருப்பவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாமென்று டிஸ்க்ளெய்மெர் போடவேணுமென்கிற அளவுக்கு மனதை கலைக்கும் கதையது)

மிக அழகான பெண்ணாக வருவதற்கு திட்டம் போட்டிருந்த டொன் தம்பதினரின் சிறு மகளுடன், சிறிய சிவப்பு உருண்டை வாயுடன் இருக்கும் ஒரு குட்டியும், பாஸ்மதி அரிசியைப்போல நாலே நாலு பற்களைக் கொண்டிருக்கும்,  திராட்சைகளை சுவைக்கும், ஜெயமோகனின் ’’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’’ புத்தகத்தை  மட்டும் சரியாய் தூக்கிக்கொண்டு ஓடிப் போகும் 26 இன்ச் உசரமான வாசகி i think அப்சரா குட்டியும் வருகிறார்கள்.

நான் கண்னை விரித்துக்கொண்டு பார்த்த சுவாரஸ்யமான  பல பெண்களும் பயணத்தில் உண்டு. பிரான்ஸிஸ் தேவசகாயத்தின் சவக்குழியை பிரான்ஸிஸ் தேவ சகாயத்திடமே சுட்டிக்காட்டும் செங்கூந்தலும் வெள்ளுடையுமாக  கனவில் வருமொருத்தி. ரம்புட்டான் பழம் போல சிவந்த உதடுகளுடன் சரசக்கா, நட்ட நடு நிசியில் வாடிக்கையாளரிடம் இனிக்க இனிக்க பேசும்  17 வருடமும் ஒன்பது மாதமும் வயதான ஸேர்லி, ஸ்கர்ட் உடுத்திய பெண் படம் வரைந்த  கதவு கொண்ட கழிப்பறைக்குள் தன்  பணிச்சூழலின் அழுத்தமனைத்தும் மறந்து உற்சாகமாகிவிடும் மீனுக்குட்டி.

ஆஸ்பத்திரியின் சக்கர நாற்காலியின் உராய்வுக்கும் பிணம் தள்ளிக்கொண்டு போகும் சில்லு வைத்த கட்டிலின் கரகர ஓசைக்கும் நடுவெ பொருத்தமில்லாத இனிமையுடன் ஒலிக்கும் குரலைக்கொண்ட யவனம் நிறைந்த, தேனிக் கூட்டம் போல சிவந்த கூந்தல் கொண்டிருக்கும் வெளிநாட்டு டாக்டர் பெண்ணொருத்தியும் உண்டு.

புன்னகையை ஸ்டிக்கர் பொட்டு போல ஒட்டி வைத்திருக்கும்  வரவேற்பாளினியும், கந்த சஷ்டி விரதத்திற்கு இரவு பாலும் பழமும் மட்டும் சாப்பிடுகிற, அந்த பழம் ஒரு முழு பலாப்பழம் என்பதை மறைத்துவிடும் அன்னமக்காவும் புன்னகைக்க வைக்கிறார்கள்.

மலர்வதற்கு இரண்டு நாள் இருக்கும் மல்லிகை மொட்டுக்களை  தலையில் சூடிக்கொள்ளும், தன் வனப்பை தொற்று வியாதி போல பரப்பிவிடும் மகேஸ்வரி, தலைமயிர் அவ்வளவு குவியலாக அவ்வளவு பொன்னிறமாக இருந்த ஸோரா , ட்ராஃபிக் சிக்னலைப்போல மஞ்சள் முகமும் ரத்தச் சிவப்பு உதடுகளும், பச்சைக்கீற்று கண்களுமாக ஒரு சீனப்பெண் என்று எத்தனை எத்தனை வகைப்பெண்கள்

’ம்வாங்கியை’ களவு செய்யத்தூண்டும் அழகுடன் இருந்த எமிலி, போறனையில் இருந்து இறக்கிய பாண் போல மொரமொரவென்று இளஞ்சூடும், மணமுமாக  இருக்கும் துப்புரவுக்காரியொருத்தி, ஜெனிஃபர் என்ற பெயருள்ள நாயுடன் வரும் பெயரிடப்படாத ஒரு அழகி ,  பச்சைப்பாவாடையும் பட்டுரிப்பனுமாக, உப்பு என்று சொல்வதுபோல் உதடுகளை எப்போதும் குவித்து வைத்திருக்கும் விசாலமான கண்கள் கொண்ட விசாலாட்சி,  தானாக கனிந்த அறுத்த, கொழும்பான் மாம்பழம் போலவும், அரிய வண்ணத்துப்பூச்சியை போலவும் இருப்பவளான,  வேகமான  யாமினி, கிட்டார் வாசிக்கிற பூனைக்குட்டிக்கு அரிஸ்டாட்டில் என பெயர் வைத்திருந்த ரோஸ்லின், மர அலங்காரியாக வேலை செய்யும் அமண்டா ஆகியோரும் ரயிலை அவர்களின் பேரழகாலும் ததும்பும் இளமையாலும் நிறைக்கிறார்கள்

ஒரே கரண்ட் கம்பியில்  வேலை செய்யும் பல்புகள் போல மூன்று உடலும் ஓருயிருமாக இருக்கும் மூன்று ஸ்நேகிதிகள் அவர்களில் ஒருத்தி அமெரிக்காவின் நட்சத்திர உணவகத்தில் தட்டில் வைக்கபட்ட முட்டையை பார்த்துக்கொண்டிருக்கையில் காதலனால்  முத்தமிடப்படும் மித்  என்கிற மைதிலி,

மண்ணெண்ணெய் வாடை அடிக்கும், மூக்குத்தியில் அழுக்கு சேர்ந்திருக்கும் கருத்த மாமி,  நாவல் பழம் பொறுக்குகையில் கதாநாயக சிறுவனுக்கு ராமு மாட்டுடன் அறிமுகமாகும் வத்ஸலா,  உடும்புப்பிடி போல குணம் கொண்ட சரசக்கா ஆகியோருடன் வரலாற்றிலிருந்து எழுந்துவந்து இணைந்து கொள்கிறார்கள்  பொத்தா தேவியும் குந்தியும். ரோட்டின் கீழே இருந்து வென்ற் வழியாக அடிக்கும் வெப்பக்காற்றில்  மேலே எழும்பி பறக்கும் இடையாடையை இரண்டு கைகளால் அமத்திப் பிடிக்கும் மர்லின் மன்றோ கூட  பிரயாணத்தில் இருக்கிறாள்

சிரிப்பால் வீட்டை நிறைக்கிற, அண்ணாந்து தண்ணீர் குடிக்கையில் சிந்தும் தண்ணீர் கழுத்துக்குழியில் தங்கிவிடும் அளவுக்கு ஒல்லியான,   இன்னும் நிரப்பப்படாத பல அங்கங்களைக் கொண்ட, காதுவரை நீண்ட ஓயாது வேலை செய்யும் கண்களைக் கொண்ட கனகவல்லி,  வெங்காய சருகு போல மெல்லிய சருமம் கொண்ட ஸ்வீடனின் மார்த்தா, மறைக்கப்படாத  மார்பகங்களுடன் மீன்களும் துள்ள, கார்களை துரத்தி  வரும் மீன்காரப்பெண்கள், பிறகு நினைத்துப் பார்க்கையில் ஒரு சொற்பொழிவு போல தோன்றும்படியாக  இடுப்பை வெட்டி காண்பித்த ஆப்பிரிக்க அழகியென அநேகம்பேர் வருகிறார்கள்

கிராமத்து மனுஷியும் நான்கு ஆதார சுவைகளை கலந்து பத்தாயிரம் சுவைகளை கொண்ட உணவுகளையும், தோசையில் விழும் துளைகள் கூட எண்ணினால் ஒரே மாதிரியாக இருக்கும்படி சமைப்பவளுமான  ஒரு அம்மாவும், அவரை சமையலறைக்குள்ளேயே நுழையவிடாத, சமையல் வகுப்புக்களுக்கு போய் கற்றுக்கொண்ட சமையலை செய்து பார்க்கும் அவரது மருமகளும் கூட உண்டு.

மனிதர்கள் மட்டுமல்லாமல்  எல்லா பயணங்களிலும் நான் தவறவிடாமல்  ரசித்துப் பார்க்கக்கூடிய விதம் விதமான மரங்களும் மலர்களும் கனிகளும் இந்தப் பயணத்திலும் காணக்கிடைத்தன. அனிச்சம்பூ ,ஓக், அகேஸியா, கிளுவை மரங்களுடன், சதி செய்யும் முசுட்டை மரங்கள், கணப்பு அடுப்பில் புகையின்றி சிறிது மணத்துடன்  எரியும் விறகைத் தரும் பேர்ச் மரங்களை எல்லாம் ரயில் கடந்து சென்றது. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை காய்க்கும் ’மொற’ மரமொன்றையும் கண்டேன்

பயணத்தில் எதிர்பாராமல் திடீரென தலை காட்டும்  கவிதைகளைப் போல சின்னப்பெண்கள் தங்களை கடக்குமுன்பாக அனைத்துப் பூக்களையும் அவர்கள் முன் கொட்டும் மரங்களும்,  மஞ்சளாக வழவழப்பாக  பார்க்க லட்சணமாக இருக்கும் தண்ணீர் பாங்கான இடங்களில் வளரும் ஃபீவர் மரமும்,  மரெண்டா கீரைகளும், நிலம் தெரியமல் பூக்களை சொரிந்திருக்கும் ஜகரண்டா மரங்களையும் காண முடிந்தது.  கதிரைகள் செய்யப்படும் காஷ்மீரி வால்நட் மரமும், வானத்தில் பறந்து வந்த வாழையிலைகளும் ஆழ்குளிரிலிருந்து எழுப்பிய மாவிலைகளையும் கூட பார்த்தேன். தோறாஇலையும் குயினைன் மரப்பட்டைகளும் இருக்கின்றன. எங்கோ கமகமவென்று இலுப்பைப்பூ மணமுமடித்தது

பேயின் கைவிரல்களைப்போல் பரவி வளரும் ஐவி செடியும் வழியில் இருந்தது. இதுநாள் வரை மணிப்ளாண்ட் என்றே சொல்லியும் கேட்டும் வாசித்தும் பழக்கமாயிருந்த , முதன் முதலில் அ. மு வால் மணிச்செடி என்று அழைக்கபட்ட அந்த செடியை கண்டதும் அத்தனை பிரியம் உண்டாகி விட்டிருந்தது. பயணத்தில்  இப்படி பல புதிய அழகிய சொற்கள் இடையிடையே வந்து எட்டி பார்த்து சந்தோஷப்படுத்தும்.

அடடா பட்சிகள் உச்சியில் அமர்ந்திருக்கும் மிமோசா விருட்சங்கள்.முதலில் இலைகளை கொட்டும் பேர்ச் மரமும் இலைகளை கொட்டவே கொட்டாத மேப்பிள் மரமும், தோட்டத்தின் சிவப்பு வத்தகப்பழமரம்,  அக்லனீமா செடிகளும், தோலுரித்து வைத்த தோடம்பழங்களுமாய் பசுமைப்பெருக்கும் பயணத்தில்  கூடவே வந்தது

நம்மூர் தீக்கொன்றை மரத்தை அவர் தீச்சுவாலை மரம் என்கையில் அதற்கொரு ஆப்பிரிக்கத்தனம் வந்துவிட்டிருந்தது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பரமசோதியின்  சாமான்களுடன் நிற்கிறது  ஒரு வாகைமரம்

இடிமுழக்க துண்டுகளை  கட்டி இழுப்பது போல் சத்தம் போடும் ஒரு மோட்டர் சைக்கிளும், கோபத்துடன் உறுமி எழுந்த சிங்கம் போல ஒரு ஓஸ்டின் காரும் ரயிலை கடந்து சென்றன. வழியில் மகரந்த துள்களை பரப்பி வைத்ததுபோல பரவிக்கிடந்த மணலைப்பார்க்க முடிந்தது. பிரயாணத்தின் ஓரிரவில் குழைத்து வைத்ததுபோல் கலங்கலாக தெரிந்தான் சந்திரன். யாரோ ராட்சஷன் அடித்து வீழ்த்தியது போல சிவந்திருக்கும் ஆகாயத்தையும் அந்தியொன்றில் கடந்தது ரயில்.

பிரயாணத்தில் கந்தபுராணமும், சிவபுராணமும்,சிலப்பதிகாரமும், ராமாயணமும் மகாபாரதமும் கூட கேட்கிறது. துரியோதனன் மனதை கெடுக்கிறது  ஒரு சடைக்கார சிறுக்கி நாய்

’’அம்மணத்துகு கோமணம் மேல்’’ போன்ற முதுமொழிகள் இடையிடையே வந்து விழுகின்றன. பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு நெருக்கமாக வந்து அணில்கள் பொறுக்கிச் சாப்பிடுகின்றன. அந்த செகரட்டரி பறவை தான் என்ன வினோதம், அப்படியொன்றை கேள்விப்பட்டது கூட இல்லையே!

அதைப்போலவே சாளரம் 2000 என்பது முதலில்  என்னவென்று மனசில் தைக்கவே இல்லை அத்துடன் சேர்ந்து நின்ற பில்கேட்ஸை பார்த்ததும்தான் அது விண்டோஸ் 2000 என்பது உரைத்தது . Veloy don என்கிற வேலாயுதமும் வருகிறார்.

 சாளரம் உள்ள கடித உறையும் அப்படித்தான் வியப்பூட்டிய மற்றொன்று.  அப்படியான கடித உறையை இதுவரை பலநூறு பயன்படுத்தி இருப்பேன் அதை கவனித்து இப்படி ஒரு பெயர் இருக்கலாமென்று ஒருபோதும் எண்ணியதில்லையே!

அ.முவுக்கே உரித்தான அங்கதங்களும் வேடிக்கையான மனிதர்களும்  குறைவில்லாமல் உண்டு  குறிப்பாக அடைப்புக்குறிக்குள் சொல்லப்பட்டிருப்பவைகள்.(கடைசி மூச்சில் இருந்த பேட்டரி) நாலு பியருக்கு மேல் நாப்பது வாட்டில் மூளை வேலை செய்கையில் மட்டும் அரசியல் பேசும் தம்பிராசா, சிவராத்திரி கந்த சஷ்டியையெல்லாம் தீவிரமாக சிந்திக்கும் மாரியோ இவர்களுடன் இடது கைப்பழக்கம் கொண்ட ஒரு கரப்பான் பூச்சியும் இருக்கிறது, ஆம் நிஜம்தான்.

கனடிய அரசுக்கு அனுப்பும் குரல் பதிவில் வசந்தம் வந்து, தோட்டத்தில் முதல் பூ பூத்ததையும்,  பெண்ணின் சடைபோல் பின்னப்பட்ட பிரெஞ்ச் ரொட்டியை பிய்த்து தின்றதையும், தட்டில் கிடந்தபடி  தன்னையே பார்த்துக் கொண்டிருந்த  வதக்கபட்ட பெரிய மீனை உண்ணமால் விட்டதையும் சொல்லும் ஒருவர் எத்தனை சுவாரஸ்யமான மனிதராயிருப்பார்?

மைமலான மழைநாளில்  காதலிக்கு முதல் முத்தம் பதிக்கும் காதலனும் ஸ்ட்ராபெரி ஜாம் வாசனையுடன் கொட்டாவி விடும் மனிதர்களையும் போல  அ.மு அவர் வாழ்க்கையில் சந்தித்த,  அறிந்துகொண்ட சுவாரஸ்யமானவர்களை உலகில் வேறு யாருமே சந்தித்திருக்க மாட்டார்கள்

ஒரு பிரயாணம் இப்படி ரசிக்கத்த விஷயங்களுடன் மட்டும் முடிந்து விடாதில்லையா?

தோலைச்சீவுகையில் பூரணமாக ஒத்துழைப்பு கொடுத்து  இறைச்சி வெட்டப்படுகையிலும் கண்களை அசைத்துக்கொண்டே இருந்த உடும்பையும், அந்நியமான ஊருக்கு வந்து அடிபட்டு செத்துப் போகிற பறவையொன்றையும், நிலவறையில் விறைத்துக்கிடப்பவரையும் அ.மு சொல்லிக்கேட்கையில் என்னையறியாமல் கண் நிறைந்து வழிந்தது.

தில்லை அம்பல பிள்ளையார் கோவில் கதையை கேட்டு முடித்ததும். கல் மனசுக்காரர் என்று அ. முவை மனதில்  மரியாதையுடன் கடிந்து கொண்டேன்.

இத்தனை சுவாரஸ்யமான பிரயாணமொன்றை இதுவரையிலும் நான் செய்ததில்லை இனிமேலும் செய்யப்போவதுமில்லை.. அ.மு இத்தொகுப்பில் உள்ளதை பெரிதாக்கவில்லை, இல்லாததை இட்டுக்கட்டவில்லை, ஏன் உள்ளது உள்ளபடிகூட சொல்லவில்லை நம்மை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் கதைகளின் நடுவில் நிறுத்தி விடுகிறார். எல்லாக்கதைகளும் நம்மைச்சுற்றித்தான் நடக்கிறது நாம் கதைகளை  பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கன்னத்து உப்பலில் கூர்பார்க்கப்படும் கல்லுப்பென்சிலும், பென்னம் பெரிய காரில் பொம்பளை பார்க்க வருபவர்களுமாக நிறைந்திருக்கும் கதைத்தொகுப்பை அ. முவல்லாது வேறு யாரால் அளிக்க முடியும்?

‘திரு அ முத்துலிங்கம் அவர்கள் இன்னுமோர் நூற்றாண்டு நல்ல தேக ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்கட்டும். அவருக்கு என் வணக்கங்கள்

அன்புடன்

லோகமாதேவி.

-விஜயா பதிப்பகம் 2022ல் அ மு அவர்களுக்காக கொண்டு வந்த சிறப்பி நூலில் வெளியான எனது கட்டுரை

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

சமீபத்தில் நடிகர் சரத்பாபு மரணம் என்று செய்தி பரவியது.  இப்போது வளர்ந்த பிள்ளைகளுடன் இருக்கும் என் வயது பெண்களின் இளவயது கனவு நாயகன் அவர். செய்தி கேட்டு, பலர் மனமுடைந்து போனோம். சரத்பாபுவின் பல திரைப்படங்கள் சிறப்பானவை, அதிலும் ரஜினி, ஷோபாவுடன் அவர் நடித்த ’முள்ளும் மலரும்’ பலரின் தனித்த பிரியத்துக்குரியது.

இப்படத்தின் ’செந்தாழம்பூவில்’ பாடலை இன்று வரையிலும் மீள மீளக் கேட்காத என் தலைமுறையினர் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த செய்தி கேள்விப்பட்ட அன்று மீண்டும் ’செந்தாழம்பூவில்’ பாடலை கேட்க நினைத்தேன்.

ஒரு மலைப்பாதையில் வயல் வேலையிலிருந்து திரும்பும் அல்லது செல்லும்  ஷோபா உள்ளிட்ட இளம்பெண்களை ஜீப்பின் பின்புறம் அமரவைத்து சரத்பாபு என்னும் எஞ்சினீயர்,  காடுகள் பெருமரங்கள் தேயிலை தோட்டங்கள் வழியில் இடைபடும் செம்மறியாட்டு கூட்டங்களை ஜீப்பில் கடந்துசென்றபடி பாடும் பாட்டாக இத்தனை வருடங்களாக அது மனதில் பதிந்திருந்தது. பெரும்பாலும் பலநூறு முறை அப்பாடலை ஒலிவடிவில்தான் கேட்டிருக்கிறேன், 

அதைக் காட்சியாகப் பார்க்கும் அவகாசமற்ற,  பரபரப்பான பல வருடங்களுக்குப் பின்னர்,  இப்போது திரையில் பார்க்கையில்தான்  சரத்பாபுவுக்கும் ஷோபாவுக்குமான காம்பினேஷன் காட்சிகளே இல்லாமல்,  அவர்களிருவரும் தனித்தனியாக படமாக்கப்பட்டிருக்கும் அநீதி தெரியவந்தது.

சரத்பாபு  பக்கவாட்டு காமிராவை பார்த்து முறுவலிக்கிறார், ஷோபா காமிராக்காரரை  அல்லது பாலுமகேந்திராவை பார்த்து நாணுகிறார். தூரக்காட்சிகளில்  ஷோபா இல்லாமல் பல பெண்கள்  ஜீப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.என்னவோ ஏமாற்றமாக இருந்தது.

இப்பாடலை  இறுதிக்காட்சிகளில் காண்பிக்கப்படும் மலைப்பிரதேசங்களில் மட்டும் வளரும் யுலெக்ஸ் யுரோப்பியா என்னும் மஞ்சள் நிற மலர்களும் கூர் முட்களும் நிறைந்த ஒரு பயறு வகை குடும்பத்தை சேர்ந்த செடியை  சுட்டிக்காட்டும் பொருட்டு நான் மாணவர்களுக்கு பரிந்துரைப்பேன். கூடவே கற்றலை சுவாரஸ்யமாக்க ஷோபா என்னும் பேரழகியைக் குறித்தும் சொல்வதுண்டு. அந்த பாடல்  ஜீப் கடந்து வரும் சில்வர் ஓக் மரங்கள் நிறைந்த  தேயிலைத் தோட்டங்கள், பெருமரங்களின் நிழலில் நனைந்திருக்கும் காட்டுப்பாதை, மலைச்சரிவுகள், மலைமுகடுகள் என மிக அழகிய காட்சிப்புலம் கொண்டிருக்கும்.

 தாவரவியல் துறை சார்ந்த பிரேமை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதால் எல்லாக் காட்சிகளிலும் கதை மாந்தர்கள், திரைக்கதையில் உண்டாகி இருக்கும் உணர்வெழுச்சி, அக்காட்சியின் முக்கியத்துவம் போன்ற பலவற்றையும் கடந்து திரையில் தெரியும் செடிகொடிகளின் மீதுதான் என் கவனம் முற்றாக குவிந்திருக்கும்.

தாவரங்கள் மீதான அதீத கவனத்தில் புடவையில், படுக்கை விரிப்பில் இருக்கும் மலர், கனி வடிவங்களை கூட கவனமாக பார்ப்பதுண்டு. ஜோதிகா ’’திருமண மலர்கள் தருவாயா’’ பாடலில் ’’வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே’’ என்னும்போது ’’அட, மாதுளை sun demanding செடியாயிற்றே அதைப்போய் ஜோ வீட்டுக்குள் வைத்து இம்சைபண்ணி, தினமொரு கனியைத் தருமாறு கூடுதல் கோரிக்கை வேறு வைக்கிறாரே’’ என்று கவலைப் பட்டிருக்கிறேன்.

 காதல் காட்சிகளில் கூட ’’அடடே இந்த  மால்வாவிஸ்கஸ் மலர்ச்செடிகள் பின்னால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்திருக்கலாம், செடியை பார்த்தே ரொம்ப நாளாச்சு,’’ என்று அங்கலாய்ப்பது,  காதலர்கள் பெயர் பொறித்திருக்கும்  மரப்பட்டைகளை கண்டவுடன் ’’இது முதலை மரப்பட்டை அப்படின்னா இது மருத மரம்தான்,’’ என்று கூவுவது, ’’என்னதிது  பாட்டில் தாமரைன்னு வருது,  இவங்க என்னமோ அல்லிக்குளத்தில் நீந்தறாங்களே,’’ என்று கொதிப்பது,  காதலன் அல்லது காதலிகள் பேசிக்கொண்டே, காதல் வேகத்தில் அமர்ந்திருக்கும் புல்வெளியின் புற்களை பிய்த்து கொண்டே இருக்கும் காட்சிகளில் ’’அடப்பாவமே இந்த ஜோய்ஸியா ஆஸ்திரேலியப் புல் வளருவதே பெரும்பாடு அதை ஏன் பிச்சுகிட்டுப் பேசறே’’  என்று  மானசீக கண்டிப்புக்களுமாகவே இருப்பேன்.

வெட்டப்படும் வாழைகளையும், வைக்கோல் படப்புக்கு வைக்கப்படும் நெருப்பும், தூக்கிப்போட்டு உடைக்கப்படும் தொட்டிச்செடிகளுமாக  Anti Botanical சண்டைக்காட்சிகளில்,  மனம்வெதும்புவது எப்போதும் நடக்கும்.

எலுமிச்சை, கேரட், மக்காச்சோள லாரிகளில் படுத்துப்புரளும் காதலர்களும், காய்கறி மார்க்கெட்டில் எல்லாத் தள்ளுவண்டிகளிலும் ஏறிமிதித்து துவம்சம் செய்யும் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகளும் ஒரு தாவரவியலாளராகவும் ஒரு நல்ல இல்பேணுநராகவும் எனக்கு தாளமுடியாத வருத்தத்தை உண்டாக்குபவை.

 பல்வேறு நிலப்பரப்புக்கள், இயற்கை காட்சிகள், விலங்குகள், தாவரங்கள், நீர்நிலைகள் என பலவற்றுடன் இணைந்த  காதல், பாடல், சண்டை காட்சிகள் ஆகியவைதான்  கதைகளே இல்லாத பல  தென்னிந்திய திரைப்படங்களைத் தோள் தாங்கி நிமிர்த்திச் சில வாரங்கள் தாக்குப்பிடிக்கச் செய்திருக்கின்றன

காதலைச் சொல்லக்  கொடுப்பதிலிருந்து, மனம் சிதைந்த  தொடர் கொலையாளியால் கொல்லப்பட்ட பெண்களை  புதைத்த இடத்தில் நட்டு வைக்கும் குருதிச் சிவப்பு மலர்ச்செடிகள் வரை தமிழ் சினிமாவில் ரோஜா மலர்களின் தாக்கம் ஹாலிவுட் படங்களின் அளவுக்கே இருக்கிறது.

 அப்படியே மன்னன் மயங்கும் மல்லிகைகளும். 1974ல் வெளியான தீர்க்க சுமங்கலியில் ஏழுஸ்வரங்களின் நாயகி, சமீபத்தில் மறைந்த இசையரசி வாணி ஜெயராமின் குரலில் மணத்த அதே மல்லிகை கடந்த வருடத்தின் வெந்து தணியும் காட்டில்  ஒரு  நாயகனை பிரிந்த நாயகியின் தலையில் பிரிவுத் தாபத்தின் வெம்மையில்  வாடியது.

மல்லிகை என்றதும் கே ஆர் விஜயாவும் நினைவுக்கு வருகிறார், கிலோ கிலோவாக மல்லிகை  மலர்ச்சரம் சூடிவரும் அவரின் தலைக்கனத்தை அநேகமாக எல்லா பாடல்களிலும் வியப்பதுண்டு.

இதுபோலவே கருப்புவெள்ளைப்படமான கொடிமலரில், ’’மெளனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாடவேண்டும்’’ பாடலில் முத்துராமனும் விஜயகுமாரியும் செயற்கை குளம், செயற்கை தோட்டம் என அமைக்கப்பட்ட செட்டில்  இருப்பார்கள். விஜயகுமாரிக்கு கூந்தலில் குறைந்தபட்சமாக 4 கிலோ மல்லிகைச்சரமும், குழாயடியில் அமரவைத்து தேய்த்துக்கழுவி விடலாமென்னும் கொதியுருவாக்கும்  அதீத ஒப்பனையும் இருக்கும். கையில் ஒரு தாமரை மலரை நல்லவேளையாகக் கசக்காமல் முழுப்பாடலிலும் வைத்துக்கொண்டிருப்பார். அவர்களிருவரும் ஒரு மரத்தருகில் நின்றிருப்பார்கள், அம்மரத்தில் தாவர அறிவியல் அடிப்படையில்  சாத்தியமே இல்லாத  வகையில் மலர்கள் அமைக்கப்பட்டிருக்கும். 

 ’’ஆயிரம் தாமரை மொட்டுக்களே’’வில் ராதா மலர்ந்த தாமரை மலர்களின் மத்தியில் ட்ராலியில் பயணித்துக்கொண்டும், படுத்துக்கொண்டுமிருப்பார்.   நாயகனை காட்டிலும் நாயகியிடம் மிக நெருக்கமான இடம் பிடித்திருக்கும் தாமரைகள். குளக்கரையில் காதலிக்கும் அவர்களை சுற்றி பிடுங்கிப் போடப்பட்ட தாமரை இலைகளும், மலர்களும் சோர்ந்து கிடக்கும்.

காதலோவியம் பாடலிலும் ஏராளமாக இதழிதழாக பிய்த்துப் போடப்பட்ட மலர்கள் காதலர்கள் மீது பொழிந்துகொண்டே இருக்கும், காலடியிலும் மலர்கள் மிதிபடும்.

பல்வேறு மலர்களை காட்சிக்குள் கொண்டுவந்த புண்ணியத்தை பெரும்பாலும் பாரதிராஜா கட்டிக்கொண்டார்.

கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் அகலக்கண்களுடன் அருணா சலவை செய்த பாரதிராஜாவின் உடைகளை  எடுத்துக் கொண்டு வருவார். அறைக்குள் நுழையும் முன்னர் வாசலிலிருக்கும் ஒரு செடியின் சிறுமலர்க்கொத்தொன்றைப் பறித்து சலவை சட்டைகளின் மீது வைத்து அப்படியே மேசையில் வைத்துவிட்டு வந்துவிடுவார். கலைஞனான பாரதிராஜாவால் அம்மலர்களின் சுகந்தத்தை ரசிக்காமல் இருக்க முடியாதல்லவா, அவர் அருணா ஒளிந்திருந்து பார்ப்பது தெரியாமல் மலர்களை  நுகர்வார். அருணாவின்  இளமனதில் கிளைவிரித்து பெருமரமாகவிருக்கும் ஓர் காதல்விதையூன்றப்படுவதைக் காட்டும் அழகிய காட்சியது

ஆனால் மிகக் கோரமாக மலர்கள் தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல்  இந்திய சினிமா முழுவதிலுமே காட்டப்பட்ட  இடமென்றால் அது முத்தக்காட்சிகளில் தான்.

காதலை உன்னதமாக காட்டிய திரைப்படங்களே அரிதினும் அரிதுதான் அக்காலத்தில். அப்போதைய சமூக கட்டுப்பாடுகள் அப்படி.

’’ஏரிக்கரை மேலே போறவளே பெண்மயிலே, நில்லுகொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போலாம் பெண்ணே’’ என்னும் பாடல் வெளியான போது மரபுகளில் ஊறித்திளைத்திருந்த வேறு ஒரு பாடலாசிரியர் இத்தனை வெளிப்படையாக காதலியை அழைக்கும் ஒரு பாடல் திரையில் காட்டப்படும் இந்த காலத்தில் நானும் திரைப்பாடலாசிரியர் என்று சொல்ல வெட்குவதாக அறிவிக்து  திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகியதை பிற்பாடு கேள்விப்பட்டிருக்கிறேன். அதன்பின்னர் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழத்துக்கு பதிலாக என் கன்னம் வேண்டுமென்றான் பாடல் வெளிவந்தபோது அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

எனவே அத்தனை கட்டுப்பாடும் ஒழுக்க நெறிகள் என்னும் கற்பிதங்களும் நிறைந்திருந்த சமூகத்தில் முத்தக்காட்சிகள் காட்டப்படத் துவங்கியது பெரும் புரட்சியாகத்தான் இருந்திருக்கும்.

அப்போதைய இந்திய திரைப்படங்களில் காதல் இலைமறை காய் மறையாகவும்,  முத்தம் மலர்மறையாகவும் காட்டப்பட்டது. ஒரு பெருமலர் அல்லது மலர் நிறைந்த செடி, இவற்றில் ஏதேனும் ஒன்றின் பின்னர்  காதலனும் காதலியும், முகத்தை  அல்லது முழு உடல்களை  மறைத்துக் கொண்டபிறகு அவற்றை  வெகு வேகமாகவும் ஆபாசமாகவும் அசைத்து, அல்லது ஒன்றுடன் ஒன்று ஒட்டவும்முட்டவும் வைத்து  முத்தமிடப் பட்டதை பார்வையாளர்கள் யூகித்துக்கொள்ளுபடி காட்டினார்கள்.

இதைவிட கேவலமாக ஒரு முத்தத்தை  காட்டவே முடியாது .

பின்னர் கொஞ்சம் துணிவு வந்த காலத்தில் மலர்களின் தேவை மெல்லக் குறைந்து காதலி வெட்கப்பட்டு கொண்டே தன் உதட்டை துடைத்து கொள்ளும் நேரடிக்காட்சிகள் முத்தத்தை உணர்த்த வந்தன. மலர்களும் தப்பிப்பிழைத்தன. பின்னர்  ரகஸ்யமென்றோ உன்னதமென்றோ ஏதுமில்லா காதல்கள் மலிந்த திரைப்படங்கள் வந்தபோது  எல்லா உணர்வுகளுமே பரஸ்யமாக பட்டவர்த்தனமாக  காட்டப்பட்டன.

எம்ஜிஆர், லதாவின் ’’நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது’’ என்னும் பாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மிக கவர்ச்சியான, உடலை ஒளிவு மறைவின்றி காட்டும் ஒரு சிங்கிள் பீஸ் உடையில் லதாவும், வழக்கம்போல அழுத்தமான நிறத்தில் கோட்டும் சூட்டுமாக கூடுதல் ஒப்பனையில் எம்ஜிஆரும் இருக்கும் அந்த பாடல்காட்சியை ஒலியை குறைத்துவிட்டு பார்த்தால்  முழுப்பாடலும் விரசமாக மட்டும்தான்  இருக்கும். லதாவின் ஒவ்வொரு அசைவும் ’’நான் அழகி என்னைப் பாருங்கள்’’ என்று எம்ஜிஆரை அழைத்துக்கொண்டே இருக்கும். வேடிக்கை என்னவென்றால் நடனம் என்னும் பெயரில் அந்த பாடலில் படுக்கை அறை காட்சிகள்தான் காட்டப்பட்டிருப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

பல தமிழ்ப்பாடல்கள் அப்படிதான்.  ஆனால் இதில் அத்தனை நெருக்கமான காதல் காட்சிகளின்போது அவர்களை  சுற்றிலும் தடித்தடியாய் பல ஆண்களும் நல்ல அழகிய அலங்காரங்களுடன் பல பெண்களுமாக நின்று கொண்டு இவர்களின் நெருக்கத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுதான் தாங்க முடியவில்லை.

அந்த நடன இயக்குநரின் கரங்களை  மானசீகமாக கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். அத்தனை ரசனையான அசைவுகள் லதாவுக்கு, எம்ஜிஆருக்குத்தான்  எப்போதும் நடன அசைவுகள் தேவையில்லையே.   அவருக்கு மிகப்பிடித்த, எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம் என்னும் சாத்தியம் கொண்ட ஒரு உணவுப் பண்டத்தை போலவே பாடல் முழுவதும் லதாவை எம்ஜிஆர் பார்த்துக் கொண்டிருப்பார்.  காமிராக்கோணங்களை பற்றியெல்லாம் பொதுவில் பேசவே முடியாது.

’’நில்லு கொஞ்சம் நானும் வாரேன்’’ என்பதற்கே கோபித்துக்கொண்டவரை, இப்பாடலை பார்க்கும் போதெல்லாம் நினைத்துக்கொள்வது வழக்கம்.

காதலை, அத்தனை மறைவிலும், இத்தனை அப்பட்டமாகவும், இந்தியச் சினிமா எதிரெதிர் முனைகளில் நின்று காட்டி  கேவலப்பபடுத்திக் கொண்டேதான் இருக்கிறது. ஒரு சில மலையாளப் படங்களைத் தவிர பிற மொழிப் படங்களில் காதல்  பல்வேறு வழிகளில் சிதைக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

அழகிய உரையாடல்களில் எளிமையாக அழகாக, வார்த்தைகளில்  காதலை வெளிப்படுத்த முடியாதென்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பவை  தமிழ் சினிமாக்கள். மீசை  மாதவனில் ’’பிணங்கல்லே’ என்னும் காவ்யாவின் கொஞ்சலில் தெரிவிக்கப்படும் காதலுக்கீடாக  தமிழில் எந்த காட்சியை சொல்லமுடியும்?

சந்ரோல்ஸ்வம் திரைப்படத்தில் முன்காதலியும் அப்போது விதவையும் ஆகிவிட்டிருக்கும் மீனாவுடன்  நான்கு கட்டுவீட்டின் நடுமுற்றத்தின் தாமரைக்குளத்தில் மழை பெய்து கொண்டிருக்கையில் பழைய நினைவுகளை பேசிக்கொண்டு மீனாவின் எதிர்காலம் குறித்து படிகளில் எதிரெதிரே அமர்ந்தபடி லாலேட்டனும் மீனாவும் உரையாடும், மழையின் ஸ்ரீ ராகத்தில் ஒரு துண்டு கீர்த்தனையை மீனா பாடிக்காட்டும் அக்காட்சி முழுக்கவே காதல் நிறைந்திருக்கும்.

 இப்படி பல உதாரணங்கள் காட்டலாம் வங்காள மற்றும் மலையாளப் படங்களில், அரிதாக பழைய இந்தி படங்களில். 

தமிழில் அதுபோன்ற  காட்சிகள் வணிக வெற்றியைத்தராதவை என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறது போல. அப்படியான  காட்சிகளை  கமல்ஹாசனைத் தவிர பிறர் சிந்திப்பதில்லை, அல்லது அவர்களுக்கு அமைவதில்லை. 

 ‘சலங்கைஒலி’ படத்தில் காதலி ஜெயப்ரதாவை கணவருடன் ரயிலேற்றிவிடுகையில்  அவரைப் புகைப்படமெடுக்க முனைவார் கமலின் பாத்திரம். காமிரா வழியே காணும் அவரின் பேரழகை, அதை இழப்பதின் துயரைத் தாங்கமுடியாத கமலின் நடிப்பை, அவர் உடல்மொழியில் தெரியும் காதலைப் போலவெல்லாம்  காட்சிகளை அதற்கு முன்பும் பின்பும் தமிழில் யாரும் கொண்டு வந்ததில்லை. சமீபத்தில் மறைந்த புகழ் பெற்ற இயக்குநர் கே. விஸ்வநாத் இந்தக் காட்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். 

 மலையாளப் படங்களுக்கு வரலாம் மீண்டும். கேரளாவின் பாரம்பரியமும் இயற்கை அழகும், நிலக்காட்சிகளும் இடம் பெறாத மலையாளப்படங்கள் அரிதினும் அரிது கப்பைக் கிழங்கு, மீன், கஞ்சி, தென்னை,வாழை, யானை,  சந்தனக் குறியிட்ட நெற்றிகள், அகலக் கண்களுக்கு மை எழுதிய நாயகிகள், முண்டும் துவர்த்தும் அம்பலமும், வாழையிலைப் பிரசாதமும், காடும் மலையும், மழையும், விவசாய பூமியும் இல்லாத மலையாளப்படங்களை தேடித்தான் பார்க்கவேண்டும்.

இப்படித் தங்களின் நிலத்தை, இனத்தை , மொழியை கலாச்சாரத்தை இயல்பாக பிரதிபலிக்கும் கலைகள் தான் காலத்தை கடந்தும் நிற்பவை.

தமிழிலும் கிராமியப்படங்களில் வயலும் வரப்பும் தோப்புமாக முழுக்க பொள்ளாச்சியை அதன் சுற்றுப்புறங்களை நம்பி எடுக்கப்பட்ட படங்கள் பலநூறிருக்கும். ஆனால் அனைத்திலும் பேசுபொருள் காதல் மட்டும்தான் என்பதுதான் ஆயாசமளிப்பது. அவற்றில் கதை என்று ஒன்று இருக்குமா என்னும் கேள்விக்கெல்லாம் போகவே வேண்டியதில்லை, ஆனால் கண்ணை நிறைக்கும் பசுஞ்சூழல் நிச்சயம் இருக்கும்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமலிருப்பதற்கு சினிமா படப்பிடிப்புக்களும் காரணம். அதிகாலை டிராக்டர்களிலும், குட்டியானை எனப்படும் சிறு பார வண்டிகளிலும் பேருந்து நிறுத்தத்தில்  காத்திருக்கும் ஆட்களை  திரட்டிக்கொண்டு போவர்கள் crowd artists எனப்படும் இவர்களுக்கு ஒப்பனை தேவையில்லை, நடிப்பும் சொல்லித் தர வேண்டியதில்லை.

ஆலமரத்தடி பஞ்சாயத்தில் வெறுமனே குந்தி அமர்ந்திருக்க வேண்டும் கோழிப்பண்ணையில் நடக்க்கும் சண்டையின்போது  நாலா திசைகளிலும் சிதறி ஓடவேண்டும்,  செட்போடப்பட்டிருகும் காய்கறி மார்க்கெட்டில் குறுக்கும் மறுக்கும் நடக்கவேண்டும், காய் வாங்க வேண்டும், வயலில்  களை எடுக்கவோ, நெல்லறுக்கவோ வேண்டும். இப்படி சிக்கலில்லாத வேலைதான். 400 ரூபாய்களும், மதிய உணவும் தண்ணீர் பாட்டிலும் அளிக்கப்படுகிறது பிறெகெங்கே  விவசாய கூலிவேலைகளுக்கு ஆட்கள் வருவது?

அதுபோலவே  மழை, அணை ஏரி கடல் குளம் குளக்கரை ஆறு போன்ற நீர்நிலைகளும் தமிழ்சினிமாவில் வழக்கமாக  காட்டப்படுவதுண்டு

பத்தில் 8 தமிழ் படங்களில் ஆளியார் அணை தவறாமல் இடம் பெற்றிருக்கும். கோழி (சேவல்) கூவி விடியும் தேனீர்க்கடையில் புகைபோகும் பாய்லர்கள்,,  சமையலறையில் ஆவிபறக்கும் இட்லிப்பாத்திரங்களும் கதிரெழும் துவக்கக்காட்சிகளும் மலிந்துதான் கிடக்கின்றது.

எனினும் தமிழ்சினிமாவில் அரிதாகவே  காதலர்கள் சாலையை குறுக்கே பத்திரமாகக் கடந்து தர்பூசணி கீற்று வாங்கி சாப்பிடுகிறார்கள் அப்படியான இயல்பான் காட்சிகளுக்கு மறுபடி நாம் மலையாளப்படங்களுக்கு தான் போகவேண்டி இருக்கிறது. 

நாடோடிக்காற்று படத்தில் ஷோபனாவுக்கு  அம்மியில் தேங்காய் அரைத்துக்கொடுத்து, வாசலில் கோலம் போட்டு, அவர் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கருகே இருக்கும் டீக்கடையில் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு வர்க்கி தொட்டுக்கொண்டு டீ குடித்தபடி,  ஷோபனாவையும்,  டீ குடிக்க வற்புறுத்தி அழைத்து செல்லும் அழகிய காட்சிகள் கொண்ட பாடலான ’’வைசாக சந்தியே’’ பாடல் நான் பலநூறு முறை கண்டு ரசிக்கும் பிரியப்பட்ட பாடல்களில் பட்டியலில் ஒன்று.

 இயல்பான காட்சிகளில் தமிழ் சினிமாக்காரர்களுக்கிருக்கும் ஒவ்வாமை ஆச்சர்யமூட்டும். பொள்ளாச்சி கரும்பு காட்டில் காதல் சொல்லப்பட்டதும் , காதலர்கள் கோட்டும் சூட்டும் உடலை இறுக்கிப்பிடிக்கும் உடையுமாக சுவிட்ஸர்லாந்தில் டூயட் பாடுவது நல்ல ரசனைக்காரர்களுக்கு எத்தனை துயரளிக்கும் என அவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை

பேருந்து நிறுத்தங்களும், ரயில்நிலையங்களும் இல்லாத தென்னிந்திய சினிமாவே இல்லையென்றே சொல்லலாம். தமிழ்சினிமாவில் பேருந்துநிறுத்தங்கள் என்னும் தலைப்பில் எளிதாக ஒரு முனைவர் பட்ட ஆய்வை செய்துவிடலாம், சுவாரஸ்யமாக இருக்கும்.

கமலின் பாபநாசம்  திரைப்படத்தின் கதையை மேலும் சுவாரஸ்யமாக்குவது  தென்னையும், காப்பியும், வாழையும் செறிந்து வளர்ந்திருக்கும் அந்த தோட்ட வீடு தான்  இல்லையா? ஜப்பானில் கல்யாணராமன் படத்தை நினைத்தாலே  செர்ரி மரங்களுக்கடியில்  ராதா பாடும்  ’’சின்னப்பூ சின்னப்பூ’’ பாடல் தான் நினைவுக்கு வரும்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் தீபாவை காடுமலையெல்லாம் கூட்டிச்செல்லும் சிவச்சந்திரனின் புல்லட்டில் நாமுமல்லவா அமர்ந்திருப்போம்?

நிழல்கள் பாடலான  ’’இது ஒரு பொன்மாலைப் பொழுதில்’’ மரங்களடர்ந்த சாலையும் தீக்கொன்றைகளும், கடற்கரையும்,  புல்வெளியும், கதிரணைதலுமாக 80களின்  சென்னைச்சாலை அந்தியின் செவ்வொளியில் மூழ்கிக் கொண்டிருக்கும்.

தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பிரபல பாடலான ’’காதலின் தீபமொன்று’’  துவங்குகையில் பட்டைஉரித்திருக்கும் யூகலிப்டஸ் மரத்தில் சுமதி என்று பெயரெழுதி முத்தமிடும் ரஜினியை காட்டித்தான் துவங்கும், அந்தப் பாடலில் அவர்களுக்கிடையில்  உருவாகி இருக்கும் காதலை எண்ணியபடி ஓங்கி உயர்ந்த யூகலிப்டஸ் மரங்களின் காடுகளில் நடந்தபடி ரஜினி சென்று கொண்டிருப்பார். ரஜினியின் இயல்பான பாடல்களில் இதுவும் ஒன்று 

ஊட்டியின் யூகலிப்டஸ் காடுகளும் பொள்ளாச்சி அருகே இருக்கும் வனப்பகுதியான சர்க்கார்பதியின் முள்மரக்காடுகளும் பல காதலை சொல்லி இருக்கின்றன.

என் தனித்த பிரியத்துக்குரிய படமான பன்னீர்புஷ்பங்கள் திரைப்படத்திலும் ’’ஆனந்தராகம்’’ பாடலில் அந்த பள்ளியின் ஆரம் லில்லிகளும், பைன். யூகலிப்டஸ், சாம்பிராணி மரங்களுமாக திரையில் பச்சிலை வாசனையே அடிக்கும் 

அதிலேயே  ’’பூந்தளிராட’’  பாடல் லவ்டேலின் ரயில் நிலயத்தையும் தண்டவாள விளிம்பில் தடுமாறிக்கொண்டு நடந்துவரும் இளங்காதலர்களையும் புகைந்து கொண்டுவரும் ரயிலையும் பட்டையுரித்த   யூகலிப்ட்ஸ் மரங்களுக்கிடையில்  அழகாக காட்டும். 

பகத்ஃபாசிலின் மகேஷிண்ட ப்ரதிகாரம் படத்தின் துவக்க காட்சியிலேயே அவர் குளிக்கும் நதிநீரில் இரண்டு நட்சத்திர பழங்கள் மிதந்து வரும்.

அப்படியான வெகு இயல்பான இயற்கையுடன் நெருங்கிய காட்சிகள் அப்படங்களை அணுக்கமாக்கிவிடும்

உயரக்காட்சியில் படம் துவங்கும்போதே பாம்புபோல வளைந்து வளைந்து செல்லும் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, கொல்லிமலை, கேரளா என்று மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியை காண்பித்து துவங்கும் எந்தப்படமானாலும் கதையையோ கதைமாந்தரையோ பற்றி கவலையின்றி முழுப்படத்தையும் அவை எடுக்கப்பட்ட கதைக்களத்திற்கெனவே பார்த்து ரசிப்பதுண்டு. சில காட்சிகளில் தெரியும் சில அரிய தாவரங்களை பார்த்து பரவசமடைவதும் வழக்கம்.பல திரைப்படங்களில் உள்ளறை அலங்காரங்களில்  அழகிய பசுஞ்செடிகள் பிரமாதமாக காட்டப்பட்டதுண்டு.

தமிழ்சினிமாவில் இயல்பான இயற்கை காட்சிகளும் காதில் கேட்கும்படியானதும், என்றும் மறக்கமுடியாத நல்ல இயற்கைகாட்சிகளுமாக பாரதிராஜா இளையராஜா கங்கைஅமரன் ஆகியோரின் கூட்டணிக்காலத்தில்  நமக்கு காணக்கிடைத்தது 

குறிப்பிட்ட நிலப்பரப்புக் காட்சிகளில் திரைப்படங்களை காட்டுவது உலகசினிமாக்களின் முக்கிய அம்சமாகும், இது கதைக்களத்திற்கு பார்ப்பவர்களை அணுக்கமாக்கி, கதையில் அவர்களையும் ஈடுபடுத்துவதின் மூலம் பார்வையாளர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஈர்க்கின்றது    

திரைப்படங்களின் அழகியல் மற்றும் கதைப்போக்கு  இவ்விரண்டிலும் பங்களிப்பதில் நிலப்பரப்பின் முக்கியத்துவம்  வெகுவாக இருக்கும் போதிலும், இந்திய சினிமாவில்  நிலக் காட்சி பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம் பற்றி மிகக் குறைவாகவே அறியபட்டிருக்கிறது.

அடர் வனங்கள், பனிமூடிய மலைமுகடுகள், பாழ்நிலங்கள், பாலைவனபெருமணற்பரப்புக்கள், சந்தடியான நகரங்கள், இயற்கை எழில் நிறைந்த கிராமப்புறங்கள் கைவிடப்பட்ட பின்னி மில்ஆகியவற்றை திரையில் காண்பவருக்கும் அந்நிலப்பரப்புக்குமான அந்தரங்கமான நினைவுகளும் கதையோட்டத்துடன் கலந்து திரைப்படக்குழுவினர் எண்ணியிராத வடிவத்தில் ரசிகர்களிடம் அக்காட்சி சென்று சேரும். ரசிகர்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பை நினைவூட்டும் ஒரு ஊடகமாக இப்படியான காட்சிகள் அமைந்துவிடுகின்றன.

அவற்றின் மகத்தான குறியீட்டு மதிப்பினால், குறிப்பிட்ட நிலப்பரப்புக்காட்சிகள் கொண்ட படங்கள் அச்சினிமாவிற்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான பரந்த உரையாடலின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றன.

உதாரணமாக ஹாலிவுட் படமான ’The mountain between us’ என்பதை எடுதுக்கொள்ளலாம்.

துவக்கத்தில் சில காட்சிகளில் மட்டும் வரும் வால்டர் என்னும் விமான ஓட்டியும், இறுதிவரை பெயரிடப்படாத கோல்டன் ரெட்ரீவர்  நாயொன்றையும்  தவிர,  பரந்து விரிந்திருக்கும் பனிமலை முகடுகளுக்கு நடுவில் நாயக நாயகி இருவர் மட்டுமே கதைமுழுக்க வருகிறார்கள்.

பனிக்காற்றில் உலையும் பைன் மரங்களும்,  முகத்திலும் உடைகளிலும் ஒட்டியிருக்கும்   பனிப்பொருக்குகளும் , உலர்ந்த உதடுகளும், வழக்கமான ஒப்பனையின்றி வீங்கிய முகமும் ரத்தக்காயங்களுமாய்,   எப்போதுமாய் கொட்டிக்கொண்டிருக்கும் பனியும்,  அதில் கால் புதையப்புதைய இருவரும் நாட்கணக்காக நடப்பதுமாய்   வழமையான திரைக்காட்சிகளினின்றும் மிக வேறுபட்ட ஆனால்  அழகுக்காட்சிகள்.

 இவர்களிருவரும் சிக்கிக்கொண்டிருக்கும், முடிவற்றதுபோல தோற்றமளிக்கும் பனிமலையையல்ல இக்கதையும் அதன் தலைப்பும் பேசுவது,  அது ஒரு குறியீடுமட்டும்தான், வாழ்வு குறித்தான விழைவுகளும் அச்சங்களும் கவலைகளும் திட்டங்களுமாக இவர்கள் இருவருக்கும் இடையில்  உருவாகியிருந்த மாபெரும்  பனிமலையொன்றினைக்குறித்தும் அது மிக மெல்ல  அவர்களுக்குள் உருவாகும் காதலின் வெம்மையில்   கரைவதையுமே இத்திரைப்படம் பேசுகின்றது.

சில வருடங்களாகவே  சினிமா சுற்றுலா பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. ரஜினி பாறை, குணா குகை, குஷ்பூ குளம், தேவர் மகன் அரண்மனை வீடு, ஜியா ஜலே பாடலுக்கு பிறகு அதிரப்பள்ளி அருவி, குசேலனுக்கு பிறகு ஆலப்புழை, கடலோர கவிதைகளுக்கு பிறகு முட்டம் கடற்கரை என்று சொல்லிக்கொண்டே போகலாம் உதாரணங்களைக் கவனமாக கையாளப்படுகையில் நிலப்பரப்புகாட்சிகளை காட்டும் சினிமாக்கள்  நமது கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்கு  கொண்டு செல்லவும் உதவுகிறது.இந்தியா கேட்டும், தாஜ்மகாலும்,   சார்மினார் சதுக்கமும் தலைமுறைகளாக நம் நினைவில் நின்றுகொண்டிருக்கிறதல்லவா?

பல்வேறு வகையான நிலப்பரப்பு மற்றும் வாழ்விடங்களை கொண்டிருக்கும் இந்தியா திரைப்படம் தயாரிக்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும், சர்வதேச மற்றும் உள்நாட்டு சினிமாக்களை தயாரிப்பதற்கான ஒரு வசீகரமான  இடமாகவும்   இருக்கிறது.  

சினிமாக்கலையுடன் சினிமா அனுபவமும் மாறிக்கொண்டே இருக்கிறது. 70, 80களில் சினிமாவுக்கு செல்லுதல் என்பதே ஒரு பெரிய குடும்ப நிகழ்வாக, கூட்டு அனுபவமாக இருந்தது, அந்த சினிமாஅனுபவம் பலகாலங்களுக்கு நினைக்கப்படும் போற்றப்படும் ஒன்றாகவும் இருந்து. பின்னர் நகரங்களின் மல்டிப்ளெக்ஸுகள் வேறு விதமான அனுபவங்களை அளித்தன. 

கனிணி மயமாக்கல் இப்போது தொடுதிரைகளை நம் விரல்நுனிகளில் உயிர்ப்பித்து சினிமாவை  அந்தரங்க அனுபவமாக வீட்டறைகளுக்குள் கொண்டுவந்து விட்டிருக்கிறது. 

செந்தாழம்பூவில் காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்பது பல வருடங்கள் கழித்தே எனக்கு தெரியவந்திருக்கிறது. ஆனால் சினிமா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் அத்துப்படியாயிருக்கும் இந்த தலைமுறையினரை லேசாக நினைத்துவிடக்கூடாது.

பிரம்மாண்ட வெள்ளித்திரை அனுபவம் மீச்சிறு தொடுதிரை அனுபவமாகிவிட்டிருக்கும் இக்காலத்தில் நிலப்பரப்புகளை, இயற்கையின் அம்சங்களை, கலச்சாரங்களை, மரபை சினிமா என்னும் மாபெரும்  சக்திவாய்ந்த ஊடகத்தின் மூலம்  அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் பொறுப்பு சினிமாக்காரர்களின் தோளில்தான் இருக்கிறது. 

மாறிக்கொண்டு வரும் உலகை மனதில் கொண்டு  கண்ணியமாகவும் கவனமாகவும்,அதே சமயம் கொண்டாடும்படியும் சினிமாக்கள் உருவாக்கப்படவேண்டி இருக்கிறது.

இந்த கட்டுரையை வாசித்து முடித்ததும் உடனடியாக  ’’நீல நயனங்களில்’’பாடலை யூடூபில் பார்க்கச்செல்பவர்கள் அதற்கு பிழையீடாக மகேஷிண்ட பிரதிகாரத்தின் ’’இடுக்கி’’பாடலையோ அல்லது இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே   நம்மை விட்டுபிரிந்த சரத்பாபுவின் ’’செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றலை’’யோ சேர்த்துப் பார்க்கலாம். 

புளிப்பும் இனிப்பும்,

 நாளை அகிலாவின் நிச்சயதார்த்தம். கோவை செல்ல வேண்டி இருக்கிறது. நினைத்துக்கொண்டாற்போல டெய்லர் சங்கீதாவிடம் இருக்கும்  தைத்து முடித்த புதுப்புடவைகளில் ஒன்றை வாங்கிகொள்ளலாமென்று புறப்பட்டேன். செந்திலை இனி பொள்ளாச்சியிலிருந்து வரச்சொல்லி பின்னர் புறப்பட மாலை ஆகிவிடும் எனவே பேருந்திலேயே செல்ல நினைத்தேன்.

நல்ல உச்சிவெயிலில் புறப்பட்டு வேடசெந்தூர் பேருந்து நிறுத்தத்தில் 20 நிமிடம் நின்றேன்.பேருந்து வரும் அறிகுறியே இல்லை. என்னுடன் நிலா டைன் உணவகத்தில் பாத்திரம் தேய்க்கும் பணியிலிருக்கும் ஒரு பெண்மணியும் காத்திருந்தார், பின்னர் இருவருமாக பேசிக்கொண்டே அடுத்த சுங்கம் நிறுத்தம் வரை நடந்துவந்தோம்.அங்கு நான்கு வழிச்சாலையாதலால் அடிக்கடி பேருந்துகள் வரும்.

அவர் பெயர் கோகிலா, தினம் 3 மணிக்கு பணி முடிந்து புறப்படுவார் நாளொன்றுக்கு 300 ரூபாய் சம்பளம் என்பதை எல்லாம் பேசிக்கொண்டு வந்தார், நல்ல திருத்தமாக புடவை உடுத்திக்கொண்டு தலையில் பூச்சரம் வைத்துக்கொண்டு அழகாக இருந்தார்.

நான் என்னசெய்கிறேன் என்றுகேட்கப்பட்ட போது டீச்சர் என்று சொன்னேன். 

சுங்கத்திலும் நல்ல கூட்டம். இன்று முகூர்த்த நாள், ஏதோ திருமணவிருந்தில் பணிபுரிந்து வீடு திரும்பும் சரிகைக்கரை இட்ட  வெள்ளை முண்டும் அழுத்தமான நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்த பெண்கள் கூட்டமொன்றும்   இருந்தது. அனைவருமே வெகுவாக களைத்திருந்தார்கள்.

வெயில் முதுகில் அறைந்து மண்டையை பிளந்து உள்ளே இறங்கிக்கொண்டிருந்தது.  பேருந்து அங்கும் வெகுநேரம்வரக்காணோம். என்னருகில் நின்று கொண்டிருந்த பெண் போனில் உரக்க யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அன்றுதான் ICUவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்லவிருப்பதாகவும் கணவரும் உடன் சிகிச்சையில் இருந்து இப்போது அவரது அக்காவீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் எதிர்முனையில் இருந்தவரிடம் சொல்லிக்கொண்டார். 

20 நாட்களுக்கு முன்னர் அவர்களின் செல்ல நாய் சின்னுவுக்கு வெறி பிடித்து பால் சோறு கொடுக்க வந்த இவரை தலையில் கடித்து,காப்பாற்ற வந்த அவர் கணவரையும் கை,காலென்று ஏகத்துக்கும் கடித்துவிட்டது அக்கம்பக்கத்தினர் வந்து காப்பற்றி ஆம்புலன்ஸில் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்திருக்கிறார்கள். இனி 10 நாட்கள் கழித்தே தையல் பிரிக்கவேண்டும். ஊர்ப்பஞ்சாயத்தில் அந்த நாயை கொல்ல முடிவாகி கொன்றும் விட்டார்கள், அதை சொல்லுகையில் அவருக்கு குரல் கம்மியது. அவரது தலையின் மறுபக்கத்தில் பெரிய பாண்டேஜ் போடப்பட்டிருந்ததை பின்னரே கவனித்தேன். ’’நானே வளர்த்தி இப்படி கொல்லவேண்டியதாயிருச்சே’’ என்று புலம்பினார். ’’ பாடு தான் எப்பவும் பாடுதான் ஒருநாளும் விடியாது’’ என்றவர். தனக்கு ஏதேனும் வேலை இருந்தால் சொல்லும்படி மீள மீள எதிர்முனையை கேட்டுக்கொண்டார்

50 வந்தது,நானும் கோகிலாவும்  ஏறினோம். அகால வேளை என்பதால் இருக்கைகள் காலியாகவே இருந்தன. கோகிலா என்னருகில் அமர்ந்தார்.

அவரது வயர் கூடையில் இருந்த சிறு பெட்டியிலிருந்து பொன்மஞ்சள் வண்ணக் காகிதம் சுற்றப்பட்டிருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து, பிரித்து இரண்டாக உடைத்து எனக்கு பாதியை அளித்தார். வாங்கிக்கொண்டேன். அவருக்கு இனிப்பு மிகவும் பிடிக்குமென்றும் எப்போதும்  பயணங்களில் சாப்பிட கையோடு கொண்டு வருவதாகவும்சொன்னார்.  வாழ்வென்னும் பெருவதை அவருக்கான  இனிப்புச்சுவையை  எப்படியோ விட்டுவைத்திருக்கிறது. எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. இனிப்புப்பிரியையான நான் இத்தனைகாலம் சாப்பிட்டதிலேயே ஆகச்சிறந்த இனிப்பு அதுதான். கோகிலாவை கட்டிக்கொள்ள நினைத்தேன். பேருந்தில் சாத்தியமில்லாமல் போனது.அவரது கையை ஒரு முறை பிடித்துக்கொண்டேன்.

பலர் நல்ல உறக்கத்திலும் வெயிலின் கிறக்கத்திலும் இருந்தார்கள்.நடத்துனர் ஓட்டுநர் இருவருமே சுவாரஸ்யமில்லாமல் இருந்தார்கள் . கட்டணமில்லை பெண்களுக்கு என்பதை வெகுநேரம் கழித்தே உணர்ந்துகொண்டு கையில் வைத்திருந்த  பணத்தை பர்ஸில் வைத்துக்கொண்டேன். கோகிலாவிடம் விடைபெற்றுக்கொண்டு வஞ்சியாபுரம் பிரிவில் இறங்கிநடந்தேன். முந்தாநாள் மழையில் சங்கீதாவின் கடை வாசலில் குளமாக நீர் தேங்கி இருந்தது.

என் புடவை ரவிக்கையை தயாராக வைத்திருந்தார். திரும்ப வந்து சாலையை கடந்து எதிர்புறமாக நின்றேன்

20 நிமிட காத்திருப்பிற்கு மீண்டும்  சுங்கம் வழியே உடுமலை செல்லும் மற்றொரு50 வந்தது. நல்ல கூட்டமதில். மூன்றாவது இருக்கைக்கு அருகில் நின்று கொண்டேன். அந்த இருக்கையில் இரு பெண்களும் அவர்களை பார்த்து திரும்பியபடி நின்று கொண்டு மற்றொருத்தியுமாக இருந்தார்கள், தோழிகள்,  ஒரே இடத்தில் பணிபுரிவர்கள்  என தெரிந்தது. அவர்களில் மிக இளையவள் ‘’காலையில் 3 மணிக்கா, வீட்டைவிட்டு போன்னு சொல்லறாங்க்கா உள் ரூமை வேற பூட்டிவச்சுட்டான் பர்ஸ் அங்கே இருக்கு எங்கேக்கா போவேன் ஆட்டோ கூட இருக்காது அந்நேரெத்துக்கு ‘’என்றாள் அதை முன்னரே பல முறை பேசிஇருப்பார்கள் போல.’’மசநாயாயிருந்தாகூட குடும்பம் நடத்திடலாங்க்கா இவன்கூட முடியது கெரகம் மறுபடி அங்கேயே போரேன்பாருங்க இப்போ ‘’ என்றாள்.

 சின்னப்பெண், வயது  20 அல்லது 22 தான் இருக்கும் சிவப்பில் பழைய சுடிதார், எண்ணெய் இறங்கிய ஒரு மூக்குத்தி, கழுத்தில் அழுக்காக ஒரு வெறுஞ்சரடு, காதில் ஒரு பிளாஸ்டிக் மொட்டுத்தோடு. இவர்களெல்லாம் ஒரு டிகிரி படித்திருக்கலாம், கம்ப்யூட்டரில் பில் போட 8000, அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்தால் மேலும் 3000 என்று, அந்த அவன்களில் எவன்  எத்தனை மணிக்கு போகச்சொன்னாலும் புறப்பட்டு வந்து தனியே  கண்ணியமாக வாழ்ந்திருக்கலாம்.

சற்று நேரத்திலேயே மூவருமாக என்னமோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது

துயர்களை இவர்கள் பெருக்கிக்கொள்வதில்லை மேலும் அவை இருப்பதுதான் வாழ்க்கை என்றும் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. 

சுங்கத்தில் இறங்கி செல்வம் கடைக்கு வந்தேன், ரேகாவும் இருந்தாள்.அக்‌ஷய திருதியைஅன்று நகைக்கடைபோல கூட்டம் நெரிபட்டது.  இருவரிடமும் பேசிக்கொண்டிருந்துவிட்டு பச்சைமிளகாய்களும் புதினாஇலைகளும் மிதந்த குளிர்ந்த  எலுமிச்சை ரசத்தை குடித்தேன்.  வெயில் உறிஞ்சிக்கொண்டிருந்த உயிர் திரும்ப வந்தது. 

அங்கிருந்து நடந்து ஊருக்கு வரும் வழியில் பலர் என்னையும், ஏன் நடந்து வருகிறேனென்றும், அப்பா எப்படி இருக்கிறார் என்றும் விசாரித்தார்கள்.  ஊமைக்கவுண்டர் சரண் எப்படி இருக்கிறான் என்று சைகையில் கேட்டார் நலமென்று தெரிவித்தேன். ’’போ போ’’ என்று கையாட்டி சிரித்தார்.

காவலர் பிரபுவின் அப்பா தன்னந்தனியே கோவில் வாசல் கல்பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவரும் மனைவியை இழந்திருந்தார் சில வருடங்களுக்கு முன்னர். அப்பா தளர்ந்துவிட்டார் என்றதும் ’’என்ன கண்ணு பண்ணறது உங்கம்மவோட போச்சு எல்லாம்’’  என்ற படி சுய பச்சாதாபத்தில் கண் நிறைந்து  வேட்டி  நுனியில் துடைத்துக்கொண்டார். சங்கடமாக இருந்தது. 

மெல்ல நடந்துவந்தேன், வழியெங்கும் தீக்கொன்றைகள் மலரத் துவங்கி இருந்தன.புளியமரங்கள் தளிரும் மலருமாக நிறைந்திருந்தன புளியம்பூக்களை எனக்கு  சாப்பிட பிடிக்கும் ஆனால் எட்டாத உயரத்தில் இருந்தன. 

ஒரு வெள்ளை நாய் வாலாட்டிக்கொண்டே தொடர்ந்தது.  நாய் இன்று மூன்றாவது முறையாக இடைபடுகிறது. கொல்லப்பட்ட சின்னு,3 மணிக்கு வெளியே போகச்சொன்ன ஒன்று, பிறகு இது.

லண்டனில் ஒரு மகளையும் அமெரிக்காவில் இன்னொருத்தியையும் கட்டிக்கொடுத்துவிட்டு கணவரும் இல்லாமல் தனியே வாழ்ந்துவரும் அந்த அரசமரத்துக்கருகிலிருக்கும் வீட்டம்மா கூடத்தில் கையை தலைக்கு வைத்து உறங்கிக்கொண்டிருப்பது திறந்திருந்த கதவு வழியே தெரிந்தது. அருகில் பால்வாங்க பாத்திரம் வைத்திருந்தார். எங்கோ வெகு தொலைவில் இருக்கிறதென்று நான் நினைக்கும் எதிர்காலம் ஒரு கணம் மிக அருகிலென வந்துசென்றது.

நல்ல இளங்காற்றில் புளியம்பூக்கள் உதிர்ந்தன, இன்றும் மழை வரலாம்.  மணி அண்ணன் வொர்க்‌ஷாப் அருகில் வந்ததும் திரும்பி அந்த வெள்ளைநாயிடம் ’போடா’  என்று அதட்டினேன். உடனே சொல்பேச்சு கேட்டு பவ்யமாக திரும்பி நடந்தது, டீச்சர் என்று தெரிந்திருக்குமோ?

வீடு வந்து வெளிவாசல் கதவை திறக்கையிலேயே இன்று பறிக்காமல் விட்ட ராமபாண மணம் கமழ்ந்தது. 

குளிக்க செல்லுமுன்பு கொண்டைபோட தலை முடியை பிரிக்கையில்  தலையிலிருந்து ஒரு  புளியம்பூ விழுந்தது. வாயில் போட்டுக்கொண்டேன் நல்ல புளிப்பு.

அருகில்,

அத்தனை அருகில் நீ வந்திருக்கக்கூடாது

இப்போது பார்

என் அகந்தை விழித்துக்கொண்டது

இனி ஒன்றும் செய்வதற்கில்லை!

செளசெள!

Image result for chayote

மனிதகுலம்  ஏறத்தாழ 6000 வகையான பயிரிடப்பட்ட தாவர இனங்களை உணவுத்தேவைக்காக நம்பியுள்ளது, இவற்றில் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுபவை 170 பயிர்கள் மட்டுமே. இவற்றிலும் 30  பயிர்கள் மட்டுமே அதிக அளவில் மீண்டும் மீண்டும் சாகுபடி செய்யப்பட்டு  பயன்படுத்தப்படுகின்றன   ஒப்பீட்டளவில் சிறிய கவனம் கூட அளிக்கப்படாத பல முக்கிய காய் கனி வகைகளை அளிக்கும்  ஏராளமான பயிர்கள் உலகின் கவனத்துக்கே வராமல் இருக்கின்றன..  

சத்துக்கள் நிறைந்த  இத்தகைய உலகளாவிய அளவில் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்படும் பயிர்கள் தேசிய அல்லது பிராந்திய அளவில் பிரதானமானவை. அவற்றில் ஒன்றுதான் செள செள காய்.

Image result for chayote

 பூசணிக்காய் குடும்பமான குக்கர்பிட்டேசியின் சுரைக்காய், புடலை, பீர்க்கன், தர்பூசணி, பாகல் போன்றவை அதிகம் புழக்கத்தில் இருப்பவை. அதே குடும்பத்தில் இருக்கும் செள செள எனப்படும் காய் தென் தமிழகத்தில் அரிதாகவே  உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. 

 ஆங்கிலத்தில் cho cho , choko, mirliton, chayote  என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் Sechium edule.

இதய வடிவ இலைகளும், பற்றுக்கம்பிச்சுருள்களும், வேர்க்கிழங்குகளும் கொண்ட  செள செள  ஒரு ஏறுகொடித்தாவரம். ஆண் மலர்கள் கொத்தாகவும் பெண் மலர் ஒற்றையாகவும் தனித்தனியே ஒரே கொடியில் அமைந்திருக்கும். தண்டுகளில் நார் நிரம்பியிருக்கும்.

See the source image

உணவுக்காக சந்தைப்படுத்தப்படும் செள செள காய்கள் எனப்படுவது இதன் கனிகளே. இவை ஒழுங்கற்ற பேரிக்காய் வடிவில் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக கனிகளில் முட்கள் காணப்படும். முட்களின்றியும், அடர்பச்சையிலும், வெளுத்த மஞ்சள் நிறத்திலும், அளவில் சிறிதாகவும் கூட காய்கள் இருக்கும்.  நீர் நிரம்பிய, சதைப்பற்றான காய்கள் இனிப்புச்சுவையுடைய பெரிய ஒற்றை விதை கொண்டிருக்கும்.

மெக்ஸிகோவை சேர்ந்த பல்லாண்டுத்தாவரமான இதன் ஒரு கொடி வருடத்திற்கு 80லிருந்து 100 காய்களையும் 25 கிலோ வேர்க்கிழங்குகளையும்  கொடுக்கும். 

 உலகெங்கும் இதன் பல வழங்கு பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. chayote, christophene, vegetable pear, mirliton, merleton choko ( ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில்), starprecianté, citrayota, citrayote (எக்குவடோர்  மற்றும் கொலம்பியா), chuchu (பிரேசில்), machucha, caiota, pipinela (போர்ச்சுக்கல்), chow chow (இந்தியா), cho cho (ஜமைக்கா), Sayote (பிலிப்பைன்ஸ்), güisquil (குவாத்தமாலா), pear squash / iskus(நேபாள்). 

இவை சௌசௌ / பெங்களூர் கத்தரிக்காய் / மேராக்காய் / சீமை கத்தரிக்காய்/சொச்சக்காய்  என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன. Custard marrow என்னும் இதன் ஆங்கிலப்பெயர்களில் ஒன்றுதான் தமிழில் மேராக்காய் ஆகி இருக்கிறது 

Image result for chayote foods

இதன் அறிவியல் பெயரின் பேரினப்பெயரான  ’Sechium’ என்பது  வெள்ளரிக்காயை குறிக்கும் பண்டைய கிரேக்கச் சொல்லான ’síkyos’  என்பதிலிருந்து பெறப்பட்டது. சிற்றினப்பெயரான  ’edule’’  என்பது உண்ணத்தகுந்த என்று பொருள்படும்.

செள செள உற்பத்தியில் மெக்ஸிகோவும் பிரேசிலும் முதலிடத்தில் இருக்கின்றன. இந்த நாடுகளில்  அவகேடோ, தக்காளி மற்றும் காபிக்கொட்டைகளுக்கு அடுத்த படியாக செளசெள அதிகம் விரும்பப்படும் நான்காவது உணவுப்பொருளாக இருக்கிறது.

இது அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும்கொண்ட சுவையான காய்களும்,“Quelites” எனப்படும் இதன் தளிரிலைகளும் “chayotextle” எனப்படும் வேர்க்கிழங்குகளும்  இங்கு விரும்பி உண்ணப்படுகிறது

இதன் இலைகளிலும், வேர்க்கிழங்குகளிலும், காயிலும் ஏராளமான கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்களும் பல வைட்டமின்களும் உள்ளன.

Image result for Chayote Squash Mirlitons

இவை வேகவைத்தும், ஊறுகாய்களாகவும், அவித்தும், எண்ணையில் பொரித்தும் உண்ணப்படுகின்றன. காயின் அனைத்துப்பகுதிகளுமே உண்ணத்தகுந்தவை என்பதால் இதன் மெல்லிய தோலையும் விதையையும் நீக்க வேண்டியதில்லை. செள செளெவின் தோல் மற்றும் விதையையும்  சேர்த்து சமைத்தும், சமைக்காமல் பச்சையாகவும் உண்ணலாம்

இக்கொடியின்  காய் உள்ளிட்ட அனைத்துபாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை

Image result for Chayote Squash white

இவை சிறுநீர் பெருக்கும், சிறுநீரக கற்களுக்கும் வீக்கங்களுக்கும் எதிராக செயல்புரியும், இருதயத்தை பாதுகாக்கும், குருதிக்கொதிப்பை கட்டுப்படுத்தும் மற்றும் உடலை வலுப்படுத்தும்.

செளசெள முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. காய்கள் கொடியில் இருக்கும் பொழுதே அதனுள் இருக்கும் விதை முளைத்துவிடுகிறது. தண்டின் வெட்டுத் துண்டுகளையும் சாகுபடிக்கு பயன்படுத்தலாம்

See the source image

 பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருங்காலத்திற்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் உணவு அடிப்படையிலான அணுகுமுறைகளில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத இனங்களின் (Neglected and underutilized species-NUS)   பரவலான மீள் உபயோகங்கள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன.

See the source image

செள செள்  போன்ற ஊட்டச்சத்து நிறைந்த, அனைத்துக் காலநிலைகளிலும் வளரும் இயல்பு கொண்ட, நோய் எதிர்ப்புதிறன் மிக்க, லாபம்அளிக்கும், உள்நாட்டில் கிடைக்கக்கூடிய  எளிதில் வளர்க்க முடியும் பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதும், அவற்றின் நுண்சத்துக்கள் நிறைந்த காய்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதும் வருங்காலத்துக்கான உணவுசார்ந்த அணுகுமுறைகளில்  மிக முக்கியமானவை. 

Image result for Chayote Fruit

புளி

Buy Cloud Farm Tamarind Plant online at Flipkart.com

உலகெங்கிலும் விதவிதமான  உணவு வகைகளும் அவற்றை தயாரிக்க ஆயிரக்கணக்கான சேர்மானமற்றும், மசாலாப்பொருட்களும்  உள்ளன. இந்த அடிப்படை பொருட்களில்லையெனில் பல உணவுகளை செய்ய இயலாது.உலகின் ஒருசில  பகுதியில் மட்டும் பயன்படுத்தப்படும் பிரத்யேக மசாலா வகைகளும் பல இருக்கின்றன.  இவற்றில் சில பொருட்கள்  மிக அத்தியாவசியமானவை. அப்படியானஒன்றுதான் இந்தியாவின் பிரபலமான உணவுச்சேர்மானமான புளி.

.இனிப்பு மற்றும் புளிப்பு ஆகிய இருவகைகளில் புளி இருக்கிறதென்றாலும் அதிகம் சமையலில்உபயோகப்படுவது புளிப்பு வகைதான்.

16ம்நூற்றாண்டில் புளி ஆப்பிரிக்காவிலிருந்துமெக்ஸிகோ மற்றும் போர்ச்சுகலுக்கு  வணிகர்களால்அறிமுகமானதுபின்னர்அங்கிருந்துஉலகின்பலபகுதிகளுக்கும்பயணித்தது,அரேபியர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் புளியமரத்தையும் அதன் கனிகளியும்முதன்முதலில்கண்டபோது அதை இந்தியாவின்பேரீச்சை என்னும் பொருளில்  dates of India  அதாவது  tamar-al-hindi, என அழைத்தார்கள்.  எனவேஇம்லி என்றும் இந்திய பேரீச்சை என்றும் அழைக்கப்படும் புளியின் ஆங்கில பெயர் டாமரிண்ட்என்றானது.மார்க்கோபோலோபுளியைடேமரண்டி என்று குறிப்பிட்டிருக்கிறார்tamarandi.

No photo description available.

தென்னிலங்கையில்இது  வடுபுளி எனப்படுகிறது.. பேபேசிகுடும்பத்தைச் சேர்ந்தஇதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களைஅளிக்கும்புளிய மர வகைகள் உள்ளன

புளியின்தாவர அறிவியல் பெயர் டாமரிண்டஸ்இண்டிகா(.TamarindTamarindus indica)இவ்வாறு அறிவியல் பெயரின் இரண்டாம் பாதியில் வரும் பிரதேச அல்லது நாட்டின் பெயர்கள் அந்த தாவரம் எந்த பகுதியைச்சேர்ந்தது என்பதை குறிக்கும் என்றாலும் புளியின் பெயரில் இருக்கும் இந்தியாவுக்கு அது சொந்தமான மரம் இல்லை. ஆப்பிரிக்காவை சேர்ந்த புளிய மரம் இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்குமுன்பிருந்தேஅறிமுகப்படுத்தப்பட்டிருந்ததால்இந்தியாவுக்கும்சொந்தமென்று கருதி அதன் அறிவியல் பெயரின்பிற்பாதியில் இந்தியா சேர்க்கப்பட்டிருக்கிறது.

புளிய மரம் மிக பிரமாண்டமாக வளரும் இயல்புடையதுஇறகுக்கூட்டிலைகளும், மஞ்சள் பழுப்பு கலந்த மலர்களும்கொண்டிருக்கும்இம்மரம் சுமார் 90 அடி உயரம் வரை வளரக்கூடியது. வருடத்துக்கு சுமார் 225 லிருந்து300 கிலோ கனிகளைஅளிக்கின்றது.மிக மெதுவாக வளரும் இவை பல்லாண்டுகளுக்குபூத்துக்காய்த்து உயிர் வாழும்.

மிக பருத்த தடிமனான அடிமரத்தைகொண்டிருக்கும் புளியமரம் பெரும்பாலும் பசுமை மாறமல் இருக்கும்.   மண் நிறத்தில்   உலர்ந்த ஓடுகளுடன் ஒழுங்கற்ற வளைவுகளுடன்கொத்துக் கொத்தாக தொங்கிக்கொண்டிருக்கும்வெடியாக்கனிகளானபுளியங்காய்கள்10 இன்ச் நீளம் இருக்கும்பட்டும் படாமல் புழகும்இயல்பைதமிழத்தில் ’’ஓடும் புளியம்பழமும் போல ’’என சொல்லுவார்கள்.. ஏனெனில் புளியின்ஓடானது அதன் சதையோடுஒட்டுவதில்லை. 10லிருந்து12 விதைகள்கனிகளினுள் காணப்படும்

 இந்தியர்களின்விருப்ப உணவுகள் பலவற்றில் புளி சேர்க்கப்பட்டிருக்கும்அசைவசைவ உணவுகள் இரண்டிலும் புளி இங்கு சேர்க்கப்படுகிறது.. தென்னிந்தியாவின்பயணஉணவென்றே பெயர் பெற்றிருக்கும் புளியோதரை, தென்னிந்தியகலாச்சாரத்துடன்புளிக்கு இருக்கும் நெருக்கமான தொடர்புக்குசாட்சியளிக்கிறது 

புளியில்பாலிஃபீனால், மெக்னீசியம்,செம்பு, செலினியம் போன்ற பல முக்கிய சத்துக்கள் இருக்கின்றன.இவற்றுடன் பல வகையான வைட்டமின்கள்பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தும்புளியில்நிறைந்துள்ளன. 

 இந்தியாவின் பஞ்ச காலங்களில் ஊற வைத்த புளியங்கொட்டைகள்  உணவாகி இருக்கிறது. இன்றும் புளியங்கொட்டைகளை வறுத்து சாப்பிடும் பழக்கம் தென்னிந்தியகிராமங்களில் இருக்கிறது. கொட்டையைசுற்றியிருக்கும் நார் நிறைந்த சதைப்பற்றான பகுதியில் அதிக அளவு டார்டாரிக் அமிலம் இருக்கும் இதுவே புளியின்சுவைக்கு காரணம்

கெய்ரோவில்புளித்தண்ணீரில்தயாரிக்கப்பட்ட இனிப்பு பானகம் தெருவொரக்கடைகளில்விற்கப்படுவது பல்லாண்டு கால வழக்கமாக இருக்கிறது

அரேபியர்கள்கெட்டியாக்கப்பட்டபுளிச்சதையை பாதுகாத்து உலகெங்கிலும்உணவுச்சேர்மானமாகஅறிமுகப்படுத்தியபெருமைக்குரியவர்கள்.

Tamarind: What is it & how do you eat it? | Better Homes and Gardens

புளிய மரங்கள்  நிதானமாக எரியும் தன்மை கொண்டவையாதலால் சமையல் அடுப்புக்குஎரிவிறகாகபயனாகிறது.புளியமரக்கட்டைகள்  மரச்சாமன்கள் செய்யவும் பயன்படுகின்றன புளியமரம்  வண்டிச் சக்கரம், உலக்கை மற்றும் நீண்ட நாள் உழைக்கும்மரப்பொருட்கள் செய்யவும்பயன்படுகிறது..இம்மரம் வெட்டுவதற்கு மிகவும் கடினம். இதன் கடினத்தன்மை கரணமாக, இறைச்சிக் கடைகளில் அடிப்பலகையாகபயன்படுத்தப்படுகின்றது.

இந்தியாவெங்கிலும்கோவில்களிலும்வீடுகளிலும்செம்புச்சிலைகள் வெண்கல, பித்தளை பாத்திரங்களைதுலக்கபுளியேஉபயோகிக்கபடுகிறது. புளியங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் வார்னிஷ்களில்கலக்கபடுகிறது  

Fruits anyone? - Stamp Community Forum - Page 2
Barbados SG1366Tamarindus indica

தென்னிந்தியசாலைகளின் இருமருங்கிலும் நிழல் தரும் இம்மரங்களின்பெயரால்பலகிராமங்களின்  பேருந்து நிறுத்தங்கள்உள்ளன. 

 4ம்நூற்றாண்டிலிருந்தே பண்டைய எகிப்திலும்கிரேக்கத்திலும் புளி பரவலாக உணவில்சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு உணவு வகைகளிலும்புளியின்சதைப்பகுதிசுவைக்காகவும், அதன் உணவை பாதுகாக்கும்தன்மைக்கெனவும்சேர்க்கப்படுகின்றது. இம்மரத்தின்  தளிரிலைகளும், இளம் காய்களும்மலர்களும்துவையலாகஅரைத்துஉண்ணப்படுகின்றன.

 பல.இந்தியகிராமங்களில் வெற்றிலை போடுகையில்சுண்ணாம்புக்கு பதில் புளியமரத்தின்  இளம்தண்டுகளைசேர்ப்பதுண்டு. இதன்மரப்பட்டையிலிருந்து சாயம் எடுக்கப்படுகின்றது  பல்வேறு பாரம்பரியமருத்துவமுறைகளில்இம்மரத்தின் பல பாகங்கள்சிகிச்சைக்கெனபயன்பாட்டில் இருக்கிறது

புளிய மரம் இந்தியக்கலச்சாரத்துடன்  நெருங்கிய தொடர்பில் உள்ளது. இம்மரத்திற்கடியில்உறங்கக்கூடாது என்னும் பொதுவான நம்பிக்கைக்கு காரணம் இதன் உதிரும் இலைகள் உடையில் கறையை ஏற்படுத்துவதால் இருக்கலாம்.

tamarind flowers by kumarvijay1708 on DeviantArt

 பர்மாவில்மழைக்கடவுள்புளிய மரங்களில் வசிப்பதாக நம்பிக்கை நிலவுவதால் அங்கு இம்மரங்கள்வழிபடப்படுகின்றன. பல கிராமங்களில்அரசமரத்துக்கும்வேம்புக்கும் திருமணம் செய்துவைப்பதைப்போல, சிலஇந்தியகிராமங்களில்மழை வேண்டி புளியமரத்துக்கும் மா மரத்துக்கும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

ஆப்பிரிகாவில்புளியமரபட்டையை ஊற வைத்த நீரில் சோளத்தை கலந்து கால்நடைகளுக்குதீவனமாக கொடுத்தால் அவை காணாமல் போனாலும் திருட்டுப்போனாலும் திரும்ப உரிமையாளரிடம்வந்துவிடும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.

 இந்தியாவில் பிறந்த குழந்தைக்குநாக்கில் தேன் தடவுவது போல மலேயாவில்  புளித்தண்ணீரில்தேங்காய்பால் கலந்து தடவும் வழக்கம் இருக்கிறது.  பல நாடுகளில் புளிய இலைகளை உண்ணக்கொடுத்தாலயானைகள்கட்டளைகளுக்கு எளிதில் கீழ்படியும் என்னும் நம்பிக்கை உண்டு.

பல்லாங்குழிகளில்சோழிகளுக்கு பதில் புளியங்கொட்டைகளைபன்னெடுங்காலமாக தமிழர்கள் உபயோகிக்கிறார்கள்.பலநாடுகளில்புளியமரம்தபால்தலைகளில்இடம்பெற்றுள்ளது.

உலகெங்கும் புளி பயணித்து வந்திருக்கும் பாதைகளைட்ரினிடாட்டாம்பரன் இனிப்பு- புளிப்பு உருண்டைகளும்(tambran balls) இந்தியாவின் சாம்பாரும், ரசாமும், புளியோதரையும், மெக்ஸிகோவின்புல்பரிண்டோ  (pulparindo) மிட்டாய்களும்அகுவாஃப்ரெஸ்கா (agua fresca) பானமும், நைஜீரியாவின்காலையுணவுகஞ்சியானகுனான்சமியாவும்(kununtsamiya,) இந்தோனேஷியாவின்சம்பல்சாஸும் (sambal sauce) பிலிப்பைன்ஸின்சினிகேங்சூப்பும் (sinigang soup.) சுவையாக சொல்லிக் கொண்டிருக்கின்றன .தற்போது இந்தியா புளி உற்பத்தியில்முதலிடத்தில் இருக்கிறது 

This contains an image of: Tamarind Fruit Health Benefits  and Uses Of Tamarind Seeds! Tamarind Juice and Tamarind candies!
pallanguzhi - Twitter Search / Twitter

அதழ்

தாவரவியல் அகராதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் நினைத்ததைக்காட்டிலும் பெரும்பணியாக இருக்கிறது. பல தமிழ்சொற்களுக்கு வாரக்கணக்கில் தேடுகிறேன். அப்படி perianth/tepal என்னும் அல்லியும் புல்லியும் சேர்ந்த மலரின் இதழைபோன்ற பகுதிக்கு அதழ் என்னும் பெயர் கிடைத்தது. எத்தனை அழகான பெயர்! இந்த தளத்தின் பெயரையும் மென்மொழிகளிலிருந்து அதழ் என்றே மாற்றிவிட்டேன்.

மூன்று சகோதரிகள்

 நியூயார்க்கின் வடக்கு பகுதியில் வாழ்ந்த 6 இனக்குழுக்களின் ( Cayuga,Mohawk, Oneida,Onondaga,Seneca and  Tuscarora.) கூட்டான பழங்குடியமைப்பு   இரா குயிஸ் (Iroquois)  வேட்டையாடிகளும், விவசாயிகளுமான  மக்களை கொண்டது. இவர்களனைவருக்குமான பொதுவான சட்டங்களும் வரையறைகளும் உள்ளன.

இப்பழங்குடியினரின் தொன்மங்களிலொன்று  இரட்டை ஆண்குழந்தைகளின் மகப்பேறில் இறந்த ஆகாயதேவதையின் உடலிலிருந்து மகன்களுக்கு உணவளிக்கும் பொருட்டு முளைத்த மக்காச்சோளம், பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் செடிகள், பின்னர்  அம்மக்களனைவருக்கும் உணவளித்ததென்கிறது.

 இணைபிரியாத மூன்று சகோதரிகள் பற்றிய இம்மக்களின் மற்றொரு தொன்மம்    டியோ-ஹா-கோ (Deo-ha-ko) என்றழைக்கப்படும் இச்சகோதரிகள்  இம்மூன்று பயிர்களையும் காப்பதாக சொல்லுகின்றது.

மக்காச்சோளப் பயிர் பூமியில் விளைவிக்கப்பட்ட தானியப் பயிர்கள்களில் மிகப்பழமையானது.  பலவிதமான பழங்களை அளிக்கும் ஸ்குவாஷ் கொடியின் காய்களும் கனிகளும் பலநாட்களுக்கு சேமித்து வைக்கும் படியான கடினமான வெளித்தோலை கொண்டவை. கிமு 20 ஆம் நூற்றாண்டிலேயே மெசோ அமெரிக்கர்களால் பயிரிடப்பட்ட ஆரம்பகால பழக்கப்பட்ட பயிர்களில்  பீன்ஸ் செடியும் இருக்கிறது. புரதம் நிரம்பிய இதன் காய்களும் விதைகளும் இன்றுவரையிலும் உலகெங்கிலும் மிக முக்கியமான உணவு பொருளாக இருந்து வருகிறது,

இராகுயிஸ் மக்களே மூன்று சகோதரி பயிர்களென்னும் மக்காச்சோளம் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பழங்களை ஒன்றாக பயிரிடும் முறையை உருவாக்கியவர்கள். ஒன்றுக்கொன்று துணையாகவும், பயனுள்ளதாகவும் இவை மூன்றும் இருந்ததால் இவை சகோதரி பயிர்கள் என அவர்களால் அழைக்கப்பட்டன. இப்பயிரிடும் முறையை பிற பழங்குடி இனங்களும் கற்றுக்கொண்டு இம்முறையை பரவலாக்கினர்

பீன்ஸ் பயிர்கள் தென்அமெரிக்காவிலும்,மத்திய அமெரிக்காவில் ஸ்குவாஷ் பயிர்களும் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. இவற்றிற்கு ஆயிரமாண்டுகளுக்கு பின்பே மக்காச்சோள பயிர் உருவானது என்பதால் இம்மூன்றும் எப்போதிலிருந்து ஒன்றாக பயிரிடப்பட்டன என்று துல்லியமான கணக்குகள் கிடைக்கவில்லை. எனினும் தொல்லியல் ஆதாரங்கள் இம்மூன்று பயிர்களும் சுமார் 3500 வருடங்களுக்கு  முன்பிருந்து துணை பயிர்களாக விளைவிக்கப்பட்டதற்கான  சான்றுகளை அளிக்கிறது.

பீன்ஸ் கொடி பற்றி படர மக்காச்சோள செடி  தனது உயர்ந்து வளரும் தண்டுகளை அளிக்கிறது, பீன்ஸ் கொடி தனது வேர் முடிச்சுக்களில் இருக்கும் பாக்டீரியாக்களால் நிலத்தின் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கிறது, பூசணிக்காய் குடும்பத்தை சேர்ந்த ஸ்குவாஷ் செடி நிலத்தில் பரவிப் படர்ந்து தனது அகலமான இலைகளால் நிலத்தை மூடி, ஈரத்தை வேர்களுக்கடியில் சேமித்து, களைகள் முளைக்கா வண்ணம் செய்கிறது.

30 செமீ உயரமும் 50 செமீ அகலமமும் கொண்ட தட்டையாக்கப்பட்ட மண் மேடுகளின் நடுவில்  ஏராளமான மக்காச்சோள விதைகள் விதைக்கப்பட்டு அவற்றிற்கு உரமாக மீன்களும் புதைக்கப்படுகின்றன. 15 செமீ உயரத்துக்கு மக்காச்சோள பயிர்கள் வளர்ந்ததும் அவற்றின் அடியில் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பயிர்களின் விதைகள் அடுத்தடுத்து விதைக்கபட்டு கொத்துக்கொத்தாக இம்மூன்று பயிர்களும் வளர்க்கப்படுகின்றன. இப்பயிரிடும் முறை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக எந்த மாற்றமுமின்றி  பின்பற்றப்படுவருகின்றது

வடஅமெரிக்காவின் வறட்சியான பகுதிகளில் மட்டும் நான்காவது சகோதரியாக ஸ்குவாஷ் மற்றும் பீன்ஸ் பயிர்களில் மகரந்த சேர்க்கை செய்யும் வண்டுகளை கவரும் மலர்கள் கொண்ட செடியான  Cleome serrulata வையும் பயிரிடுகிறார்கள். சிலநாடுகளில்  மூன்று சகோதரிப்பயிர்களுடன் , தோட்டத்தின் வடக்குப் பகுதியில் இச்செடிகளுக்கு நிழல் தராதவாறு சூரியகாந்தி செடிகளும் வளர்க்கப்படுகிறது.

Cleome serrulata

மக்காச்சோளம் வளருகையில் மண்ணின் நைட்ரஜன் சத்தை முழுவதுமாக உறிஞ்சி கொண்டுவிடும். மண்ணில் குறையும் நைட்ரஜனை பீன்ஸ் பயிர் மீண்டும் கொண்டு வரும், மண்ணில் இருக்கும் ஈரம் காய்ந்துவிடாமல்  தனது அகலமான் இலைளால் காபந்து செய்து  கூடவே வளரும் ஸ்குவாஷ் செடிகள் மக்காச்சோளம் உண்டாக்கும் மண் அரிப்பையும் தடுக்கின்றன. பயிர் சுழற்சியால் மட்டுமே சாத்தியமாகும்  இழந்த சத்துக்களை, மண்ணில் மீண்டும் நிறைக்கும் முறையை, பயிர் சுழற்சி இல்லாமலேயே மூன்று சகோதரி பயிர்கள் கொடுக்கின்றன

கூட்டு பயிரிடும் முறையான இது இன்றளவும் உலக நாடுகள் பலவற்றில் சிறு விவசாயிகள் பின்பற்றும் வெற்றிகரமான ஒரு விவசாய முறையாக இருக்கிறது. அமெரிக்காவில் மிக பரவலாக இருக்கும் இம்முறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு மூன்று சகோதரி பயிர்களின் சித்திரம் செதுக்கப்பட்டிருக்கும் அமெரிக்க  நாணயமொன்று 2009 ல் வெளியிடப்பட்டது.

அமெரிக்க பழங்குடியினரின் விவசாய முறையான இதிலிருந்து கிடைக்கும் மூன்று விளைபொருட்களில் மக்காச்சோளத்தில் இருந்து ஸ்டார்ச்சும், பீன்ஸில் இரருந்து புரதமும், ஸ்குவாஷ் பழங்களிலிருந்து வைட்டமின்களும் கிடைப்பதால் சரிவிகித உணவினால் உடலாரோக்கியமும் இக்கூட்டு விவசாயமுறையினால் மண்வளமும் மேம்படுகிறது. அமெரிக்க பழங்குடியினரின் இந்த முறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றும் அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் நாளில்  தயாரிக்கப்படும் சிறப்பான உணவுகளில் இம்மூன்று விளைபொருட்களும் கலந்து இருக்கும்.

சின்னஞ்சிறு வயதில் ,

அய்யப்பன் கோவில் அருகில் இருந்த அந்த வாடகை வீட்டில் கழிந்த என் பால்யம் என்றென்றைக்கும் மறக்கவியலாததாகி விட்டிருக்கிறது. இன்றும்கூட  மனது பாரமாகும் நாட்களில் அந்த தெருவுக்கு போய் இப்போது அடையாளம் தெரியமலாகிவிட்டிருந்தாலும அந்த முன்னறையின் பச்சைவண்ணமடித்த கம்பிகளுடனான ஜன்னல்  மட்டும் அப்படியே இருக்கும் வீட்டை பார்த்துவிட்டு வருவதுண்டு. அந்த ஜன்னல் என் பால்யத்துக்குள் நான் நுழையும் வாசலாகி விட்டிருக்கிறது.

அந்த வீட்டில் நான் 2 ஆம் வகுப்பு படிக்கும் வரைதான் இருந்திருக்கிறேன், அம்மா தம்பி விஜியை வயிற்றில் கொண்டிருந்ததால்..3ம் வகுப்புக்கு வேட்டைக்காரன் புதூரிலும், பின்னர்  ராஜா ராமண்ணா நகர்  சொந்த வீடு கட்டப்பட்ட பின்பு அம்மாவுடன் தாராபுரம் போய் செயின்ட் அலொஷியஸில் 4 ம் வகுப்பும் படித்தேன்

ஆனால் அந்த வெங்கடேசா காலனி வீட்டின் அமைப்பு  அப்படியே நினைவில் இருக்கிறது. இரண்டு அறையும் பின்னால் கரி படிந்த விறகடுப்பு டன் கூடிய சமையலறையும்,துவைக்கும் கல்லுடன் கூடிய , கீழே அமர்ந்து , பாத்திரம் கழுவும் இடத்துடன் பின் கதவுடன் முடியும் பெரிய பின் முற்றமும், பின் கதவை திறந்து கொஞ்சம் நடந்தால் தனியே வரிசையாக கட்டப்பட்டிருக்கும்  எடுப்பு பொதுக்கழிவறைகளுமாக 3 குடித்தனங்கள் ஒரே காம்பவுண்டில்.

 இதில் நாங்களும் கமலா அத்தை ராமு மாமா குடும்பம் பக்கம் பக்கமாக இரட்டை வீடுகளில். குருவாயூரப்பன் வீடு மட்டும் எங்கள் இருவரின் வீட்டுக்கு பின்னால் பக்கவாட்டில் திரும்பி கோபித்து கொண்டதுபோல் அமைந்திருந்க்கும். அவன் யாருடனும் அதிகம் ஒட்ட்டியதில்லை.  வீட்டு பெரியவர்களும் அப்படியே. வீட்டு மதில் சுவரும் அடுத்திருந்த ஐயப்பன் கோவில் மதிலும் ஒன்றே. அந்த பால ஐயப்பனும் எங்கள் களித் தோழன்தான்.

எனக்கு எப்படி இது நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை எனினும் துல்லியமாக என்னால் நினைவு கூற முடிந்த ஒரு நினைவென்றால் முன்னறையின் வாசல் நிலையில் அம்மா என்னை மடியில் அமர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார் அறையின் கோடியில் பச்சை இரும்பு மடக்கு நாற்காலியில் அப்பா அமர்ந்து முன்னால் இருந்த மர ஸ்டூலில் சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி,ஒரு டம்ளரில் தண்ணீர், சோப்பு நுரையுடன் ஷேவிங் பிரஷ் சகிதம் முகச்சவரம் செய்து கொண்டிருக்கிறார். நான் அம்மாவின் ரவிக்கைக்குள் இருந்து முலையை எடுத்து அதன் காம்பை திருகி கொண்டிருப்பதை அம்மா புன்னகையுடன் அப்பாவிடம் சுட்டி காண்பிக்கிறார், திரும்பி பார்க்கும் அப்பா மறுமொழி ஏதும் சொல்லாமல் புன்னைகையைபோல எதோ செய்கிறார். 

ஆச்சர்யமாக இருக்கிறது ஏனெனில் ஒரு வேளை  அம்மா எனக்கு 2 வயது வரை முலைகொடுத்திருப்பினும் அந்த நினைவுகள் இன்னும் அழியாமல் இருப்பது விநோதம்தான்.

அந்த வீட்டில் தான் அப்பா கலைக்களஞ்சியம் என்னும் ஒரு கெட்டி அட்டை போட்ட வண்ண புத்தகம் கொண்டு வந்து தந்தார்.கனத்த அதன் அட்டையை திறந்ததும் உள்ளே ஒருகாகித செந்தாமரை மலர் விரியும் அமைப்பு இருக்கும். மனம் அப்போது அப்படி பொங்கி ததும்பும்.என்  சின்னஞ்சிறு கரங்களில் மீள மீள அச்செந்தாமரை மலர்ந்தபடியே இருந்தது.  அட்லஸ் வழியே உலகை முதன் முதலில் பார்த்ததும் அதில்தான். அது அளித்த பரவசம் பின்னர் வேறெதிலும் கிடைத்ததில்லை..

 நேரம் கிடைக்கையில் எல்லாம் அந்த முழு உலக வரைபடத்தையும் பின்னர் அடுத்தடுத்த பக்கங்களில் தனித்தனி கண்டங்களையும் அவற்றின் வழவழப்பையும் தொட்டுத்தொட்டு பார்த்தபடியே இருப்பேன். அங்கெல்லாம் சென்று வந்தது போலவே பெரும் பரவசமளித்த அனுபவம் அது. அப்பா அப்போது பார்த்து வந்த ஆசிரியப்பணியுடன் கூடுதலாக நூலக  பாதுதுகாப்பும் அவர் பொறுப்பில் இருந்ததால் அதைக் கொண்டு வந்திருந்தார்..என் வாழ்வின் முதல் நூல் பரிச்சயமது.கமலா அத்தையின் மகன் ராமுவும் நாங்களும் ஏக வயது எனவே எல்லா விளையாட்டுகளிலும் அவனுமிருப்பான். அவனுடனும் கலைக்களஞ்சியத்தை வாசிப்போம் அல்லது பார்ப்போம். 

கமலா அத்தையின் வீட்டு கூடத்தில் டைனிங் டேபிளுடன் இணைக்கப்பட்டிருந்த காப்பிக்கொட்டை அரைக்கும் சிறு இயந்திரம் இருக்கும், அதில் அவ்வப்போது காபிக்கொட்டைகளை வறுத்தரைத்து அத்தை போடும் பில்டர் காபி கமகமக்கும்., அத்தையின் கீழுதட்டின் சின்ன சதைத் திரட்டு அளிக்கும் கவர்ச்சியாலேயே நான் அவர்பால் பெரிதும் ஈர்க்கப் பட்டிருந்தேன்.

 பிரபாவுக்கென அத்தை தயிர்சாதத்தில்  மாம்பழத்தை பிசைந்து ஊட்டுவார். வாசனை அபாரமாயிருக்கும்.  ஒருமுறை அத்தையின் உறவினரான கிளியுடன் விளையாடுகையில் , ஆம் அவள் பெயரே கிளிதான், மூன்று வரிசையில் இருந்த சிவப்பு சி்மெண்ட் பூசப்பட்டு கோடுகள் இடப்பட்டிருக்கும் வீட்டு வாசற் படிகளில் தடுக்கி விழுந்து மித்ரா நாக்கை துண்டித்துக்கொண்டாள், அப்பா அவளை தூக்கிக்கொண்டு அடுத்த தெரு தாமஸ் டாக்டர் வீட்டுக்கு ஓடி நாக்கை தைப்பதற்குள் அவரது வெள்ளை வேட்டி முழுக்க சிவப்பானது, பலமுறை அதே தாமஸ் டாகடரிடம் சின்ன சின்ன விஷக்கடிகளுக்கு சிகிச்சை பெற்றிருக்கிறோம். மித்ராவால் அவளது நுனி நாக்கை இப்போதும் முழுதாக மடிக்க முடியும்

வீட்டு வாசலில் எப்போதுமிருக்கும் கனகாம்பர பூச்செடிகள். அம்மா மாலையில் அவற்றை தொடுத்து தலையில் வைத்துக்கொள்வார்.பெரிய பெண்ணானதும் அப்படி நானும் வைத்துக்கொள்ளனுமென்று  ரகசியமாக  மனதில் நினைத்துக் கொள்வேன்.

கமலா அத்தை வீட்டு வாசலில் நின்ற சிவப்பு செம்பருத்தி மரங்களில், பூக்கள் பறிக்க வரும் ஐயப்பசாமி மாலை போட்ட  என்னால் ஊமை மாமா என்றழைக்கப்பட்ட ஊமை பக்தர் ஒருவர் எல்லா வருடமும் தவறாமல் வந்து மலர்களை பறித்துசென்றுவிட்டு, கோவிலிலிருந்து திரும்புகையில் ஒருநாள் கூட தவறாமல் பொங்கலும் புளியோதரையுமாக பிரசாத தொன்னையை என் கையில் கொடுப்பார்.

அந்த தெருவில் தினமணிக்கதிர் பேப்பர் வாங்குவதால் கதிரக்கா என்றழைக்கப்டும் ஒரு பெண்ணின் வீடிருந்தது. அங்கே அநேகமாக தினமும் அந்த பேப்பரை நான் சென்று வாசிக்க வாங்கி வந்து பின்னர் திரும்ப கொடுப்பேன், அந்த கதிரக்காவின் குதிகால் வரை நீண்டிருக்கும் அடர்ந்த கூந்தலை அவரது அம்மா துணி துவைக்கும் கல்லில் பரத்தி வைத்து அரப்பிட்டு தேய்த்து கழுவுவார், கூடவே ’’ஆளைக்கொல்லும்டீ  இத்தனை முடி’’ என்று கடிந்து கொள்வார்.

 ’’சீமெண்ணே ’’என்று கூவியபடி அவ்வபோது வாசலில் ஒற்றை மாட்டு வண்டி வரும்.  தகர டின்னில் மண்ணெண்ணெய் வாங்குவது வழக்கம் அப்போது., ஒருநாள் பிரபா உரக்க ’’எங்கம்மா இன்னிக்கு தீட்டு சீமெண்ண வேண்டாம்’’ என்று வீட்டு வாசலிலிருந்தே  கத்த ராமு மாமா பின்னாலிருந்து காதை திருகி உள்ளே கூப்பிட்டு போனார். ‘’திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே சீமெண்ன  நாராயணா ’’ என்று கோரஸாக அந்த வண்டி வருகையில் நாங்கள் மூவரும் பாடுவோம்.  கபாலத்தின் கடின ஓடே இல்லாமல் பிறந்த பிரபாவின் தங்கை ப்ரியாவை, வெகு பத்திரமாக கமலா அத்தை பார்த்துக் கொள்ளுவார்.5 வயதான பின்னரே அவளுக்கு சரியானது

அடுத்த தெருவில் பெரும் பணக்கார குடும்பமான சுஜியின் வீடிருந்தது. அதில் இருந்த நிலவறை பெரும் மர்மம் கலந்த வசீகரம் அளித்தது எனக்கு.

மேரி  நிம்மி,பாபு என்னும் ஒரு கிறிஸ்தவ குடும்பமும் நட்பிலிருந்தார்கள்.   அவர்கள் வீட்டிலிருக்கும் இப்போது’’ பெயிண்டர் பிரஷ் குரோட்டன்’’ என நான் தெரிந்து கொண்டிருக்கும் பலவண்ணச் சிதறல்கள் இருக்கும் இலைகளுடனான குரொட்டன் செடியும் நிலவறை அளித்த அதே ஈர்ப்பை அளிக்கும் எனக்கு., 

பெயிண்டர்ஸ் பிரஷ் குரோட்டன்

அம்மா பணிபுரிந்த பெண்களுக்கான அரசு விடுதி  வீட்டின் நேரெதிர் கட்டிடத்தில் இருந்தது, அங்கு நான் அம்மாவுக்கு தெரியாமல் ஹாஸ்டல் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிட்ட கஞ்சியும் கொள்ளுத்துவையலும்,அதன் பொருட்டு வாங்கிய  அடிகளுமாக நிறைந்திருந்த காலமது. அங்கிருந்த ஒரு சிறு பப்பாளி மரத்தின் உச்சி வரை நான் ஏறி விளையாடுவேன்.  தங்கம்மாவும் நாகம்மாவும் இறங்கச் சொல்லி கூச்சலிடுவார்கள்.ஹாஸ்டலின் வேப்ப மரத்தின் பாதி நிம்மி வீட்டில் நிற்கும். 

 ஹாஸ்டல் சமையல்கார நாகம்மா என்னை மடியில் படுக்க வைத்து சொல்லிய கதைகள் ஏராளம் பெரும்பாலுமவை அவரின் சொந்த வாழ்வின் கதைகள் என்பதை இப்போது உணர்கிறேன் அப்பா அம்மா எனக்கு கதைகள் சொல்லியதே இல்லை ஆனால் நாகம்மாவே என் உலகில் கதைகளை புகுத்தியவர் அவை அனைத்துமே  துயரக்கதைகளானாலுமே.

மிக இளம் வயதிலேயே குறை பட்டுபோன நாகம்மாவின்  கறை படிந்திருக்கும் வெள்ளைச்சேலையின் வாசம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது,, கால்களை நீட்டி என்னை படுக்க வைத்து நாகம்மா அடிக்கடி ’’கிங்கிங் கிங்கிங் காணலையே, எங்கயும் காணலியே, எங்கயும் காணலியே வாழமரத்தடியே மாமியார் வீடிருக்க’’ என்று  துவங்கும் பூ வங்கி வரச்சென்ற  தன் கணவனான ஆண் தவளை ஒரு பஸ் சக்கரத்தில் நசுங்கி செத்துப் போனது தெரியாமல் போனவர காணோமே என்று கண்ணீருடன் தேடும் பெண் தவளையின் பாடலை பாடுவார்., எப்போது அதை பாடினாலும் சொட்டு சொட்டாக நாகம்மா கண்களில் இருந்து வழியும் கண்ணீரின் வெம்மையை இப்போது சக ஹிருதயளாக உணர்கிறேன்,

 நாகம்மா தன் ஒரே ஆசையாக கருப்பு செருப்புக்களை போட்டுக் கொள்ள விரும்பினார் என்னிடம் விளையாட்டாக எப்போது நான் வேலைக்கு போனாலும் சம்பளத்தில் செருப்பு  வாங்கி தர வேண்டும் என்று சொல்லுவார். ஆய்வு மாணவிக்காக அளிக்கபட்ட சலுகைக்கட்டணம் வாங்கிய முதல் மாதமே நாகம்மாவிற்க்கு செருப்புக்கள் வாங்கினேன். ஆனால் போது அவர் அவற்றை அறிந்துகொள்ள முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒரு மூலை கட்டிலில் படுத்திருந்தார். பின்னர் சில நாட்களில் மறைந்துவிட்டார்.

கருப்பு செருப்புகளும், தவளைகளும், வெள்ளைச்சீலையும் எப்போதும் எனக்கு  நாகம்மாவை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது

 இன்னொரு உதவியாளர் தங்கம்மாவும் என்னை வளர்த்தவரில் ஒருவர். நாகம்மா என் செவிக்குணவளித்தார். தங்கம்மா  வயிற்றுக்கு.

எப்போது என்னை பார்த்தாலும் எனக்கென்று அம்மாவுக்கு தெரியாமல் நான் சாப்பிடும் ஒரு ரகசிய தின்பண்டம் வைத்திருந்து கொடுப்பார்.அதில் தங்கமையின் வியர்வையின் வாசம் இருக்கும். அன்பின் வாசமது

திலேப்பி மீன்களீன் சதையை கீறி அவற்றில் மசாலாவை திணிக்கும் மெலிந்த எலும்பு புடைத்திருக்கும் கரிய தங்கம்மாவின் கைவிரல்கள் வளர்த்த உடலிது.

 முதன் முதலாக  வீட்டுக்கு வாங்கிய ஒரு சின்ன நாய் குட்டியின் கழுத்தில் கயிறு கட்டி ஜன்னலுக்கு உள்ளிருந்து கிணற்றில் தண்ணீர் சேந்துவதுபோல  இழுத்து, அதை தூக்கிட்டு அறியாமல் நான் கொன்றேன். அது ஏன் அசையாமல் என்னிடம் விளையாடாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறதென்பதை முதுகில் நாலு விழுந்த பின்னே தெரிந்துகொண்டேன். எனக்கு தெரியவந்த முதல் மரணம் அது.

எதன் பொருட்டோ எப்போதுமே வீட்டின் சந்தில் நின்றுகொண்டிருந்தது  சிமெண்ட் தள்ளிக்கொண்டு போகும் சிறு வண்டியொன்றூ. அதனருகில் அமர்ந்து நிம்மியும் பிரபாவும் நாங்களும் பேசிய கதைகளில் பெரும்பாலும் ஒரு பெருங்காடிருக்கும் அதனுள் நுழைந்ததுமே கனிகள் செறிந்திருக்கும் பழமரங்களும் அண்டாக்களில் நிரம்பியிருக்கும் எலுமிச்சை சர்பத்துமாகவே இருக்கும். கேட்பாரற்ற அந்த உணவுகளை கற்பனைக்கதைகளில், அள்ளி அள்ளி புசிப்போம் அப்போ்து. 

அங்கமர்ந்துதான் அப்போது எங்களுக்கு தெரிந்த இரண்டு சிற்றுண்டிகளான வாழைப்பழத்துக்கு அடுத்ததான நறுக்கிய தக்காளி துண்டுகளில் சர்க்கரை தடவி சாப்பிடுவோம், அம்மாவுக்கு தெரியாமல் ஒரு துளி நீர் ஊற்றி வைத்த  சர்க்கரை டப்பாவில் மறுநாள்  கிடைக்கும் சிறு சர்க்கரை வில்லையளித்த குதூகலத்தை இப்போது குளிர்சாதனப் பெட்டியில் எந்த அடுக்கில் கைவைத்தாலும் மகன்களுக்கு கிடைக்கும் பட்டை சாக்லேட்டுகள் அளிக்கவே முடியாது.

 பள்ளியின் ,NCC  ஆபீசரான அப்பா சுவரில் தொங்க விட்டிருக்கும்  கார்க் குண்டுகள் சுடும் வெற்றுத் துப்பாக்கியை கொண்டு எங்களிருவரையும், அந்த அறியா வயதின் தவறுகளின் பொருட்டு  சுட்டுவிடுவதாக சொல்லி மிரட்டுவார். வாயை பொத்திக்கொண்டு கண்ணீர் வழிய சுவரோடு சுவராக பல்லியை போல அழுந்தியபடி அஞ்சி நின்ற இரு சிறுமிகளை நானே இப்போது அந்த பச்சை கம்பி ஜன்னல் வழியே பார்க்க முடிகிறது.

’’கண்ணீரும் கனவும்’’ என்று அருணா அவர்களின் இன்றைய பதிவை வாசித்ததும் எனக்கும்  பால்யத்தின் நினைவுகள் கொப்பளித்து கிளம்பியதால் அவற்றை எழுத தொடங்கியிருக்கிறேன். ஜன்னல் வழி பயணம் இன்னும் தொடரும்

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑