உலகெங்கிலும் பிரபலமான ஒரு சிறார் கதை. “Jack and the Beanstalk’’. இதில் தகப்பனை இழந்த ஜேக் தனது அம்மாவுடன் வறுமையில் வாழ்கிறான். அவர்களது மாட்டையும் விற்க வேண்டி வந்தபோது சிறுவனான ஜேக் சந்தையில் மாட்டை விற்றுவிட்டு பதிலாக கிடைத்த ஐந்து  மந்திர பீன்ஸ் விதைகளை கொண்டு வருவான். கோபம் கொண்ட ஜேக்கின் அம்மா அவற்றை ஜன்னல் வழியே வீசி எறிவாள்.

ஆனால் மறுநாள் காலையில் ஜேக் அந்த பீன்ஸ் கொடி பிரம்மாண்டமாக வளர்ந்து வானுயர சென்றிருப்பதை  பார்க்கிறான், அந்த  பீன்ஸ் செடியில் ஏறி  சூனியக்காரியொருத்தியின்  மாயக்கோட்டைக்குச் சென்று  பொன்முட்டையிடும் கோழியை கொண்டு வரும் ஜேக்,  துரத்தி வந்த சூனியக்காரியை பீன்ஸ் கொடியை கோடாலியால் வெட்டி கொல்கிறான்.பின்னர் அவனும் அம்மாவும் செல்வச்செழிப்புடன் வாழ்கிறார்கள்.

1734  ல் வெளியான இந்த ஜேக் மற்றும் மந்திர பீன்ஸ் கொடியின் கதை பின்னர் பற்பல வடிவங்களில் உருமாறி உலகெங்கும் பரவியது. இதை கேட்காத குழந்தைகளே இல்லை எனலாம் 

இப்படி ராட்சஷத்தனமாக ஓரிரவில்  வளரும்  மந்திர செடிகள், மாயக்கொடிகள் குறித்த சிறார் கதைகள் ஏராளமுண்டு.

ஒரு வீட்டின் அளவில் பெரிதாக இருக்கும் மந்திர பண்புகள் கொண்ட இலைகள் கொண்டிருக்கும் மரம் குறித்த The Giving Giant,கதை.

அந்த மரத்தடியில் வந்து நிற்பவர்களை  கிளைகளை பெருக்கி கட்டித் தழுவி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி அவர்களை அறிவாளியாக்கும் வில்லோ மரத்தின் கதையான The Wisdom Willow,

ஒரு பள்ளத்தாக்கு கிராமத்தில் வளரும்   மேகங்களுக்குள் மறையும் கிளைகளையும் பாதாளம் வரை செல்லும் வேர்களையும் கொண்ட மரங்களின் கதையான The Legend of Titan Sprout Valley.

மிக வேகமாக வளர்ந்து தனது பற்றுக்கம்பிசுருள்களால் அருகில் வருபவர்களை இழுத்து பிடிக்கும் ஒரு ஐவி கொடியை பற்றிய  Enchanted Ivy என்னும் கதை,

இது போன்ற தேவதைக்கதைகளில் கற்பனையில் உருவாக்கப்பட்ட தாவரங்களை காட்டிலும் மிக அதிகம் வளரும் தாவரங்கள்  உண்மையிலேயே இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் குட்ஸூ கொடி (Kudzu). இக்கொடியை குறிக்கும் ஜப்பானிய பெயரான  “kuzu”, என்பதன் ஆங்கில தழுவல்தான் Kudzu.

ஆசியாவை தாயகமாக கொண்ட பயறு வகை குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த   பல்லாண்டு கொடி வகை தாவரமான குட்ஸூ மிக வேகமாக வளரக்கூடிய ஆக்கிரமிப்பு தாவரம்

ஆசியாவிலிருந்து அறிமுகமாகி அமெரிக்காவின் சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை அளித்துக் கொண்டிருக்கிறது இந்த குட்ஸூ கொடி. இக்கொடிக்கு அமெரிக்காவில் ’’தெற்கை தின்ற கொடி’’ என்றே பெயர் .(the vine that ate the South) ஏனெனில் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் மிக வேகமாக பரவி ஆக்கிரமித்திருக்கும் இக்கொடியை அகற்ற  களைக்கொல்லிகள்  பயன்படுத்துவது, வெட்டியகற்றுவது ஆகியவற்றிற்கு மட்டும் ஆண்டுக்கு சுமார்  6 மில்லியன் டாலர்கள் செலவாகிறது. 

அமெரிக்க வனத்துறையும் விவசாயத்துறையும் குட்ஸூவை எத்தனை கட்டுப்படுத்தியும் ஆண்டுக்கு சுமார் 1, 50,000 ஏக்கர்களில் இவை விரைந்து செழித்துப் பரவுகிறது என 2015ல்  ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

வளையும் தன்மை கொண்ட உறுதியான தண்டுகளையும் பற்றுகம்பி சுருள்களையும் கொண்டு அருகில் இருக்கும் ஆதாரங்களை தழுவிப்பிணைத்து மிக வேகமாக அவற்றையே கம்பளியை போல் மூடி  வளரும் இலையுதிர்க்கும் இதற்கு Japanese arrowroot , Chinese arrowroot என்றும் பெயர்களுண்டு

Pueraria  பேரினத்தை சேர்ந்த இவற்றின் ஐந்து சிற்றினங்களுமே அகன்ற முக்கூட்டிலைகளை கொண்டிருப்பவை, ஆக்ரமிக்கும் இயல்பு கொண்டவை .(P. montana, P. lobata, P. edulis, P. phaseoloides, P. thomsoni)

Pueraria montana var. Lobata என்னும் சிற்றினம் இவற்றில் மிக அதிகம் காணப்படுமொன்று.

இக்கொடியின் தண்டுக்கணுக்கள் மண்ணில் பட்டால் வேர் பிடிக்கும் இயல்புடையவை என்பதால்  தண்டு மண்ணில் படும் இடங்களிலெல்லாம் இவை மிக வேகமாக வளர்ந்து அடர்த்தியாக பரவும்.. வேர்க்கிழங்குகள் மாவுச்சத்தும் நீர்சத்தும் நிரம்பியவை, வேர்தொகுப்பு மிக அடர்த்தியாக முழுத்தாவரத்தின் எடையில் 40 சதவீதத்தை கொண்டிருக்கும், அகன்ற இலைகள் வளிமண்டல நைட்ரஜனை ஈர்த்து தாவரத்துக்கு அளிக்கும்.

பொதுவாக தண்டுகள் மூலம் இவை பரவி வளருமென்றாலும் மகரந்த சேர்க்கை நடைபெறுகையில் விதைகளும் உருவாகும். விதைகள் வேர்க்கிழங்குகள் மூலமும் குட்ஸூ இனப்பெருக்கம் செய்யும். காடுகளின் விளிம்புகளில் இவை அதிகம் காணப்படும்

குட்ஸு ஜப்பானில் தோன்றி பின்னர் சீனாவுக்கும் கொரியாவுக்கும் அலங்காரத்தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஜப்பானிலும் அதை சுற்றியுள்ள பல தீவுகளிலும் , கொரியாவிலும் இவை செழித்து வளர்ந்திருக்கின்றன.  

உலகின் முதல் சர்வதேச கண்காட்சி பிலடெல்பியாவில் 1876, ல் நடைபெற்ற போது குட்ஸூ அங்கு காட்சிப்படுத்தபடுவதற்காக ஜப்பானிலிருந்து கொண்டுவரப்படடது. அதன் அழகிய  அகன்ற இலைகளுக்காகவும்  நறுமணமிக்க வண்ணமயமான மலர்களுக்காகவும் இவை பெரிதும் விரும்பப்பட்டன. பின்னர் வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கவும் நிழல் தரும் செடிகளாகவும் இவை சந்தைப்படுத்தப்பட்டன. இதன் விரைவான வளர்ச்சியினால் ’அதிசயக்கொடி’ என்று அப்போது பரவலாக இதற்கு பெயர் இருந்தது. இவற்றின் அதிகப்படியான  புரதத்தினால் கால்நடை தீவனமாகவும்,  அதிகம் சாகுபடி செய்யப்பட்டன.

தாவரவியல் பண்புகள்

 ஒரு நாளில்  0.3 மீ வளரும் குட்ஸு புனைவுகதைகளில் வரும் ராட்ஷச தாவரங்களை காட்டிலும் அச்சுறுத்துவது.

ஒரு குட்ஸு கொடி சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஒரு நாளில் 3செ மீ தூரம் கீழ்நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் இவற்றின்    வேர்கிழங்குகள் 200 கிலோ அளவு எடைகொண்டிருக்கும்,

இவற்றின் இலைகள் நல்ல அகலமாக அடர்பச்சை நிறத்தில் இருக்கும். இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிற  நறுமணம் மிக்க மலர்கள் நீண்ட தொங்கு மஞ்சரிகளில்  உருவாகும்.

மண் நிறத்தில் தட்டையான நீண்ட பீன்ஸ் போன்ற  மென்மயிர் போன்ற வளரிகள் சூழந்திருக்கும் கனிகள் 3 லிருந்து 10 கடினமான விதைகளை கொண்டிருக்கும்,

குட்ஸு அனைத்து விதமான காலநிலைகளையும் தாங்கி வளரும் இயல்புடையது அதிக பனிக்காலத்தில் கூட இவற்றின் மேல் பகுதி மட்டும் உலர்ந்து வாடிவிடும். சாதகமான காலம் திரும்புகையில் வேர்கிழங்குகளிலிருந்து இவை மீண்டும் முளைத்து வளரும். இவை வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை.

பரவலும் ஆக்கிரமிப்பும்

இதன் அகன்ற வேர்த்தொகுப்பினால் தென்னமெரிக்காவில் மண் அரிப்பை தடுக்க சரிவான நிலங்களில் குட்ஸூ ஏராளமாக பயிரிடப்பட்டது, 1946ல் சுமார் 85 மில்லியன் குட்ஸு விதைகள் இதன்பொருட்டு சரிவுகளில் விதைக்கப்பட்டு 1,200,000 ஹெக்டேர்களில் குட்ஸு பரவியது, விவசாய நிலங்களின் விளிம்புகளில் இவை பசுமைவேலிகளாக பரவி வளர்ந்தன.  

பெரும்பாலான பருத்திப்பயிர்களில்  பூச்சித்தாக்குதல் உண்டாகி விளைநிலங்கள் கைவிடப்பட்டபோது குட்ஸு வேகமாக பரவி விளைநிலங்களுக்குள் ஊடுருவியது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியின்  காலநிலை குட்ஸுவுக்கு சாதகமாக இருந்ததால் அவற்றின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாமலாகியது.

அவற்றின் மண்ணரிப்பை தடுக்கும் பயன்கள் பலராலும் வியந்து பாரட்டப்பட்டு 1930–1940 களில் அமெரிக்க குட்ஸு கிளப் துவங்கப்பட்டு 1943ல் அதில் 2000  உறுப்பினர்கள் இணைந்திருந்தார்கள்.

இவற்றின் அச்சுறுத்தும் வளர்ச்சியினால் மண்ணரிப்பை தடுப்பதற்கென்று குட்ஸுவை பயிரிடுவது 1950களில் முற்றிலும் நிறுத்தப்பட்டது

இரண்டாம் உலகப்போரின் போது குட்ஸு அமெரிக்க படையினர் மறைந்துகொள்ள வசதியாக இருந்ததால் பசிஃபிக் தீவுகளின் அருகில் இருக்கும் வனட்டு மற்றும் பிஜி தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1970. ல் அமெரிக்க விவசாய துறை குட்ஸு ஒரு ஆக்கிரமிப்புக் களை என அறிவித்து சில விளைநிலங்களில் அவற்றை அப்புறப்படுத்தியது

1997ல் குட்ஸூ தொந்தரவு தரும் களைச்செடிகளின் பட்டியலில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டது 

தற்போது குட்ஸூ அமெரிக்காவின் தென்கிழக்கு பிரதேசங்களில் மட்டும் சுமார் 7,400,000  ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது

அச்சுறுத்தல்

குட்ஸூ அருகில் இருக்கும் மரங்களை கம்பளி போல மூடி அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி கொல்கிறது பல மரங்கள் குட்ஸுவின் எடையினால் கிளைகள் முறிந்தும் வேரோடு பெயர்ந்தும் அழிந்திருக்கின்றன. கட்டுப்படுத்த முடியாத   வளர்ச்சியால் குட்ஸூ அமெரிக்காவின் இயல் தாவரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

வளிமண்டல நைட்ரஜனை அம்மோனியாவாக மாற்றி அருகிலிருக்கும் தாவரங்களுக்கான நைட்ரஜனையும் குட்ஸூ  தான் எடுத்துக்கொள்கிறது. ஒரு ஆண்டில் சுமார் 235 கிலோ நைட்ரஜனை குட்ஸு எடுக்கிறது. இந்த வேகம் இயல் தாவரங்கள் நைட்ரஜனை எடுத்துக்கொள்ளும் வேகத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமென்பதால் இயல்தாவரங்கள் மெல்ல மெல்ல நைட்ரஜன் சத்து இல்லாமல் மடிகின்றன. அருகில் எந்த தாவரமும் வளராமல் மண்ணும் நல்ல நைட்ரஜன் சத்துடன் இருக்கையில் குட்ஸு ராட்ஷத்தனமாக வளர்கிறது.

குட்ஸு அமெரிக்காவின் 32 மாநிலங்களில் பெரும் சூழல் அச்சுறுத்தலை கொடுக்கிறது. 

ஆசிய பிரிவெட்களும், ஆக்ரமிப்பு ரோஜா செடிகளும் குட்ஸுவைகாட்டிலும் தீவிரமான அச்சுறுத்தலை அமெரிக்க சூழலுக்கு அளிக்கின்றன என்றாலும்  விரைந்து வளருவதால் குட்ஸுவே அதிக ஆக்ரமிப்பு தாவரமாக அமெரிக்க மக்களால் கருதப்படுகிறது. குட்ஸு ஒரு நாளில் 1 மைல் தூரம் வளரும் என்னும் கதைகளெல்லாம் கூட அமெரிக்காவில் உலவுகின்றன, 

வன எல்லைகளில் மரங்களினடியில் கவனிக்காமல் விட்டுவிட்ட வாகனங்களை குட்ஸு ஒரு வாரத்தில் முழுவதும் பரவி மூடிவிடுகிறது, கட்டிடங்களையும் இவை ஆக்கிரமித்து மூடிவிடுகின்றன.

ஐரோப்பாவில் 2016ல் குட்ஸு, ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இணைக்கப்பட்டது. ஐரோப்பாவில் குட்ஸுவை இறக்குமதி செய்வது, சாகுபடி செய்வது மற்றும்  அதன் விதைகளை சந்தைப்படுத்துவது  ஆகியவை சட்டப்படி குற்றம்

சமீபத்தில் குட்ஸூ வடகிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்ஸர்லாந்து, வடக்கு இத்தாலி ஆகிய பிரதேசங்களில் ’’தேவையற்ற தாவரம்’’ என்று வகைப்படுத்தப் பட்டிருக்கிறது  

அமெரிக்க வனப்பொருட்களின் விளைச்சலில் குட்ஸுவினால் மட்டும் ஆண்டுக்கு  $100 லிருந்து $500 மில்லியன் நஷ்டம் உண்டாகிறது. குட்ஸுவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2000 டாலர்களும்,  குட்ஸு,  தொழிற்சாலைகளின் நிலத்தடி குழாய்களை சுற்றி இறுக்கி உடைத்துவிடுவதை சரிசெய்யமட்டும் 1. 5 மில்லியன் டாலர்களும் ஆண்டு தோறும் செலவாகிறது.

அமெரிக்க தேசிய பூங்காக்களில்  பல ஏக்கர்களில் குட்ஸூ ஊடுருவியிருப்பதால் பூங்காக்களின் முக்கியத்துவமும் அழகும் குறைகிறது.

கட்டுப்படுத்தல்

குட்ஸுவை இயந்திரங்கள் கொண்டும் ரசாயனங்கள் கொண்டும் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றாலும், தண்டு,விதை, வேர்கிழங்குகளின் மூலம் இவை தொடர்ந்து பெருகி வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் உடைந்த சிறு துண்டு வேர்க்கிழங்கு கூட மிக வேகமாக வளர்ந்து விடும்.

குட்ஸு ஆக்கிரமித்திருக்கும் பிற இயல் தாவரங்களை அதிகம் சேதப்படுத்தாமல் குட்ஸுவில் மட்டும் நோயுருவாக்கும் Myrothecium verrucariap பூஞ்சையை அறிமுகப்படுத்தி இவற்றை கட்டுப்படுத்தும் முயற்சி  1998லிருந்து அமெரிக்க விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு இன்னும் ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றது.

வெற்றிகரமான முறையாக இப்போது நடைபெறுவது ஆடுகளும் பன்றிகளும் குட்ஸுவை மேய்வதுதான். ஒரு சிறு ஆட்டுக்கூட்டம் ஒருநாளில் ஒரு ஏக்கரில் பரவியுள்ள குட்ஸுவை உண்டு விடுகிறது.

உணவுப்பயன்கள்

கொரியாவின் பிரபல நுடுல்ஸ் உணவான naengmyon குட்ஸுவின் வேர்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது

 இதன் வேர் கிழங்கு மாவு சீன, ஜப்பானிய, கொரிய உணவுகளில் அதிகம் பயன்படுகிறது, கொரியாவில் வேர் கிழங்கிலிருந்து தேநீர்  போன்ற பானம் தயாரிக்கப்படுகிறது. ஜப்பானில் இந்த மாவு சூப்களை கெட்டியாக்க உபயோகப்படுகிறது

இதன் மலர்களும் இலைகளும் கூட உணவாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் மலர்களிலிருந்து கிடைக்கும்  ஊதா நிற தேன் திராட்சையின் சுவை கொண்டிருக்கும்.

 மருத்துவப்பயன்கள்

குட்ஸுவின் மற்றொரு பயன் அதிலிருக்கும் மருத்துவகுணம் உள்ள வேதிப்பொருட்கள்  Puerarin, daidzein, daidzin,, mirificin, மற்றும் salvianolic அமிலம் ஆகியவை பாரம்பரிய சீன மருத்துவத்தில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது

சீன மருத்துவத்தில் மது அடிமைகளை மீட்க குட்ஸுவிலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் உபயோகிக்கப்படுகின்றன.

பிற பயன்கள்

குட்ஸு கால்நடை தீவனமாகவும்,  மட்கச்செய்தபின் பயிர்களுக்கு உரமாகவும் பயனாகிறது.

குட்ஸுவின் தண்டுகளிலிருந்து நார் எடுக்கப்பட்டு ஆடைகளும் காகிதங்களும் உருவாக்கப்படுகின்றன .இவற்றை தொழிற்சாலைகளில் தயாரிக்கும் முன்னெடுப்புகளும் நடந்துகொண்டிருக்கின்றன. குட்ஸுவிலிருந்து அழகுசாதன பொருட்கள், எத்தனால் ஆகியவையும் கிடைக்கின்றன 

உலகின் மாபெரும் சவால்களான காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு அகியவற்றுடன் இந்த  அயல் ஆக்கிரமிப்புக்களைகள், அயல் ஆக்கிரமிப்பு உயிரினங்களின் அச்சுறுத்தலும் இணைந்திருக்கிறது எனினும் இதுகுறித்து போதுமான கவனம் இன்னும் உலக நாடுகள் பலவற்றில் உண்டாகி இருக்கவில்லை

 இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்கின் மனைவி ஹூக்ளி நதியில்  அறிமுகப்படுத்திய ஆகாயத்தாமரைகள் இப்போது இந்தியாவின் நீர் நிலைகள் பலவற்றை மாசுபடுத்தி பல நீர்வழித்தடங்களை அடைத்திருக்கிறது

குட்ஸுவை போலத்தான் தென்னமெரிக்காவில் இருந்து லண்டானா அழகுத்தாவரமாக உலகின் பல நாடுகளுக்கு அறிமுகமாகி உலகின் முதல் பத்து ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இருக்கிறது

 தென்னமரிக்காவிலிருந்து நமக்கு விறகுக்காக  சீமைக்கருவேலம் அறிமுகமாகி இப்போது கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டிருக்கிறது.  

இந்தியாவுக்குள் கோதுமை தானியங்களுடன் கலந்து வந்ததுதான் பார்த்தீனியம்.

கருங்கடலில் இருந்து வட அமெரிக்காவுக்கு கப்பல்களின் அடியில் ஒட்டிக்கொண்டு வரிக்குதிரை சிப்பி உயிரினங்கள் சென்று  பல்கிபெருகி இன்று ஆக்கிரமிப்பு உயிரினங்களாக, பல கடல்வாழ் இயல் உயிர்களுக்கு அச்சுறுத்தலாகி விட்டிருக்கின்றன

1949ல் இந்தியபெருங்கடலின் தென்பகுதியின் மரியோன் தீவுக்கு ஐந்து பூனைகள் எலிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு கொண்டுவரப்பட்டன. 1977ல் மூவாயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அப்பூனைகள் பல்கிப்பெருகி அங்கிருந்த இயல் பறவைகள் பலவற்றை  வேட்டையாடி அழித்தன.

வளர்ப்பு பிராணியாக வைத்திருந்த மலைப்பாம்புகளை ஃப்ளோரிடாவில் காடுகளுக்குள் சிலர் கொண்டு வந்து விட்டனர். 6 மீட்டருக்கும் அதிகமான நீளம் வளரக்கூடிய அப்பெரும் பாம்புகள் அப்பிரதேசத்தின் இரு முக்கிய பறவை இனங்களை வேட்டையாடி முற்றிலும் அழித்தன

Bighead மற்றும் silver carp  எனப்படும் இரு பெரிய மீன் வகைகள் மீன் பண்ணைகளில் இருந்து தப்பி மிஸோரி ஆற்றுக்கு வந்தன. அவை அங்கிருந்த சிறு மீன்களின் உணவுகளை வேகமாக உண்டு அவற்றை பெருமளவில் அழித்தன.

இப்படி ஏராளமான அயல் உயிரினங்கள் தெரிந்தும் தெரியாமலும் புதிய இடங்களில் அறிமுகமாகி இயல் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறுகின்றன.

ஜேக் ஏறிச்சென்று மாயக் கோட்டையிலிருந்து பொன்முட்டையிடும் கோழியை கொண்டு வந்தது போலல்ல இதுபோன்ற அயல் ஆக்கிரமிப்பு தாவரங்களின் பரவல். இவை  சூழல் படுகொலைக்கு  காரணமாகிவிடுகின்றன.

பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களின் காலணிகளின் அடியிலிருக்கும் மண்ணிலிருந்தும் பல அயல் தாவர விதைகளும் மகரங்தங்களும் புதிய பிரதேசங்களுக்கு அறிமுகமாகின்றன, எனவே உலக நாடுகள் அனைத்தும் மிக கவனமுடன் இருந்து இந்த அயல் உயிரினங்களின் அறிமுகத்தை, ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த வேண்டும்.