(விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி தொண்டைமான் பூபதி காளிங்கராய சுப்ரமண்ய சுந்தரவடிவேல் தனது சென்னை விஜயம் குறித்தும் அகரனுடனான நட்பைகுறித்தும் எழுதிய (முதல் எழுத்துப்) பதிவு)
எழுதுவதில் உள்ள சிக்கல் எழுதுவது அல்ல, துறை சார்ந்த வேலைகளும், நேரமின்மையும், நமக்கு எழுத்து முதிர்ச்சி இருக்குமா என்ற ஐயப்பாடு இவையெல்லாம் தான். பிரதிபலன் பாரா பேரியற்கை எப்படி நமக்கு வேண்டுவனவற்றை வாரிவழங்கிக்கொண்டுள்ளதோ அப்படியே நம் சமூகமும். நாம் கவனிக்கவில்லையே, கிரகிக்கவில்லையே தவிர, வழங்குதல் என்றுமே வற்றுவதில்லை வரண்டுவிடுவதில்லை. எல்லோருக்கும் வாழ்வை வரையறுக்கும், வெற்றிடமாக்கும், திசைமாற்றும் புள்ளி என்று ஒன்று உண்டு,
ஓரு பேரிழப்பு, பெருந்துயரம், அவமானம், வெறுமை, பெருஞ்சுழல், பயணம், ஓர் சந்திப்பு அந்தப்புள்ளியை அணுப்பிளவாகவும் மாற்றும் அல்லது மிக எளிமையாக தடயங்களே இல்லாமல் அழித்துவிடும்.
ஒரு தனிமனிதனின் சிறப்பாளுமை, ஒரு சந்திப்பு மீளாஅற்புதங்களை நிகழ்த்தும் என்று கண்டுகொண்டேன்.
சென்னைக்கு ஒரு இலக்கிய அமர்வுக்கு சென்ற போது அகரமுதல்வன் என்ற அகரன் எப்படி ரயில் நிலையம் வந்து தன்னை அழைத்தது முதல் அரசியல் கட்சி கூட்டத்திற்கு ஆள் பிடித்துச்சென்று கட்சிக்கூட்டம் முடிந்தபின் ஆதரவற்றவர்களை கைவிட்டு வருவது போல இல்லாமல், திரும்ப பாதுகாப்பாக வழியனுப்பி வைத்த அகரனுடனான முழு பயன அனுபவத்தை என் மூத்தசகோதரி லோகமாதேவி என்னிடம் கூறினார்.
பேராசிரியையாக உள்ளதால் பொதுவாகவே நிகழ்வுகளை நேர்த்தியான விவரிப்புடன் கூறுவார் என் சகோதரி. எல்லா சந்திப்புகளும், உரையாடல்களும் பெரும்பாலும் உள்நோக்கத்துடன் தான் இருக்கும், அமையும் என்று திடமாக நம்புபவன் நான். சில சுயநலத்துடனும் சில இயற்கை விதிப்படியும் சில காரணகாரியங்களுக்காகவும் அமையும். ஆனால் விதிவிலக்குகள் உண்டு என அகரனை குறித்து கேள்விப்பட்டபோது உணர்ந்தேன்
தன்னை தேடி வரும் அனைவரையும் இவ்வாறே அகரன் அழைத்து, அனுசரித்து திரும்ப அனுப்பிவைப்பதாகவும் கூறினார். கூடவே அகரனின் ஈழப்பிறப்பிடம் பற்றியும் “ கடவுள் பிசாசு நிலம்” பற்றியும் கூறினார். வெகு சில நாட்கள் நான் ஈழத்தில் வேலை செய்திருக்கின்றேன். வெகு இயல்பான என்கொடியுறவு என்பதாலும் என் இனக்கீற்று அவன் என்பதாலும் ஒரு பிணைப்பு ஏற்ப்பட்டதில் வியப்பில்லை. ஈழம் எப்போதுமே ஈர்ப்புதான் எனக்கு.

அடுத்தமுறை சென்னைக்கு சென்றால் நிச்சயம் அகரனை நான் சந்திக்க வேண்டும் என்றும்,அல்லது இதற்க்காகவே செல்ல வேண்டும் என்று கூறினேன்.ஆச்சரியத்தோடு பார்த்தாள் அக்கா. நீ அவனை பார்த்ததே இல்லையே பின் எதற்க்கு இத்தனை ஆர்வம்? என்றாள் தெரியவில்லை என்றேன்,
இரண்டொரு மாதம் கழித்து அகரன், லக்ஷ்மணன், மூர்த்தி, மணி நால்வரும் பொள்ளாச்சியை அடுத்த வேடசெந்தூரில் உள்ள எங்களது வீட்டிற்க்கு வந்தார்கள். இரண்டொருமணி நேரம் கதைத்ததில் சற்றே அறிமுகம் கிடைத்தது நால்வருக்கும். நால்வரும் ஒவ்வொரு ஆளுமை. பார்ப்பதற்க்கு வெகு இயல்பாகவும் இனிமையாகவும் இருந்தனர்.உணவு இடைவேளையின் போது இலக்கியம் மற்றும் திரைப்படம் சார்ந்தும், பகடிகளோடு அன்று பகல் போனது. மிக சிறிய சந்திப்பு அது.
கடந்த வாரம் நடைபெற்ற திரு. எம் கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஒரு நாள் கருத்தரங்கிற்கு அகரனிடமிருந்து அழைப்பு வந்தது. நானும் எனது சகோதரியும் சென்னைக்கு சென்றோம். முன்னிரவு விலாசம் தொடங்கி நிலப்படம் வரை மிகச்சரியான வழிகாட்டுதலோடு தகவல் வந்து சேர்ந்தது.
இலக்கியமும் திரையுலகம் இரு வேரு ஆளுமைகளைக் கொண்ட துறைகள்.
இலக்கியத்திற்கும் திரையுலகிற்கும் மொழி ஆளுமை, கற்பனை, பயணம், வாசிப்பு, புனைவு பற்றிய அடிப்படைகள், துறை சார்ந்த அறிவு, அனுபவம் எனப் பல விதிகள் பொதுவில் உண்டு, ஆனால் அதில் பயணிப்பவர் வேறு வேறு அடையாளங்களைக் கொண்டிருக்க வேண்டும். திரையுலகில் உள்ளவர் பெரும்பாலும் இலக்கியம் சாராமலே இருப்பர். முதல் நாள் முழுவதும் திரைத்துறை நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார் அகரன். அணைவரிடமும் ஒரே மாதிரியான பாவனையில் இணைந்திருந்தார். அவர் பேசிய உலகத்திரைப்படம் அனைத்தும் போர்ச்சூழல், புலம்பெயர்தல், மனித உணர்வுகள் மற்றும் மனஎழுச்சி என்றே கட்டமைக்கப்பட்டிருந்தது.

ஆங்கில அமெரிக்க ஐரோப்பிய பொழுதுபோக்குப் படங்களையே பார்த்து வளர்ந்த எனக்கு அகரனினுடைய விவாதம், திரைப்படங்களைப் பற்றிய பார்வை, படத்தேர்வு, காட்சி நுகர்வு, திரை அரசியல் எனப் பல நுண்மைகளை கவனிக்க கற்றுத்தந்தது. என்னுடைய விவாதம் நிச்சயம் சிறுபிள்ளைத்தனமாகவே இருந்திருக்கும். என் வயது மற்றும் என் துறை சார்ந்த அனுபவத்திற்காக மட்டுமே அகரன் அமைதிகாத்தார் என்றே நம்பிக்கொண்டேன்.
ஒரு முறை என் சகோதரியின் மற்றுமொரு அறிமுகமான் சதீக்ஷ் என்பவரிடம் இதே போல உரையாடிக்க்கொண்டிருந்த போது அதுவும் பிதாமகன் காந்தியைப்பற்றி கதைத்தபோது அவர் பாவம் பொறுமை இழந்து, பற்றிக்கொண்டு எரிந்தார், அவரின் உடல் மொழிசிதைந்து, அகமெய் அலறியஹை முகத்தில் காணமுடிந்தது. நரம்பு புடைக்க ஆற்றாமையை அடக்க முடியாமல் வயதின் வரம்பு மீறி …..…ஒன்றும் செய்ய இயலாததால் கூடுதலாக இரண்டு சுருட்டு புகைத்து விட்டு கூடுமானவரை வேகமாக அங்கிருந்து தன் காதலியுடன் தூர விலகி விட்டார். பாவம்
அகரன் அமைதியானவர், விருந்தின் வினயம் கருதி விவாதத்தை தொடர்ந்தார். அந்த மனசுதான் “ கடவுள்”. அனுபவமில்லாத துறைசார்ந்த பேச்சும், நகைப்பும், பகடியும் ஆளுமைகளால் பெரும்பாலும் சகித்துக்கொள்ளமுடியாது, அகரன் அப்படியல்ல என்பதை தெரிந்துகொண்டேன்.
சென்னையிலிருகும் அகரனின் இல்லதிற்கு சென்றோம் காலை உணவிற்கு. என்னதான் ஈழ எழுச்சி என்றாலும் சாய்விருக்கையில் புலித்தோல் விரிப்பு அமைக்கப்பட்டு இருந்தது. ஆச்சரியமாக கேட்டதற்கு நகைச்சுவையாக இல்லை, ஆமாம் என்று பதில் வந்தது. யோசனையூடே அவரின் தாய் என்னை எடை போட்டுக்கொண்டே இருந்தார். அவர் கடந்து வந்த பாதையை என் அக்கா முன்பே கூறி இருந்தார். மரியாதையூடே ஒரு பயத்துடன் அமர்ந்திருந்தேன். அகரனின் மனைவி ப்ரபா மிக மிக எளிமையானவர், அவர் ஈழத்தமிழில் பேசுவதை கேட்பதற்கு கொடுப்பினை வேண்டும். நாம் மறந்த ஒரு அழகு தமிழ் நடை. தமிழகம் முழுவதும் வாசிப்பில், நட்பில், இயல்பில், மரபில் இப்படி பேசினால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அவர்கள் சமைத்த புட்டு, பருப்பு மற்றும் முட்டையை சுவைத்தோம். அகரனின் அன்பு மைந்தன் ஆதீரன் , இருவரின் கலவை. தமிழில் மைனா பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்தான். மைனாவை அவன் மைய்யா என்றது இனிமை.
அகரனை சிறிது வேலை செய்ய விடுவோம் என்று நானும் எனது அக்காவும் நீரதிகாரம் வெண்ணிலாவின் வீட்டிற்க்குச் சென்றோம். அவரது தாயும் இரட்டை மகள்களில்களில் ஒருவரான அன்பு மட்டும் இருந்தனர் வீட்டில். என்னுடன் அதிகமாக என் அக்கா பேசியது திரு ஜெயமோகன் மற்றும் திருமதி. வெண்ணிலா அவர்கள் பற்றி மட்டுமே. அவரின் மகள் அசல் என் மகள் சாம்பவியின் ஜாடையை ஒத்து இருந்தார். சிறிது நேரத்தில் வெண்ணிலாவும் கதிரும்(அவர் பெயர் தீபக் ஆனால் எனக்கு கதிர் என்ற பெயர் அவருக்கு ஒத்திருந்தாக நினைக்கிறேன்) வந்தனர். பல நாள் பேசிப்பழகிய உணர்வுடன் உண்மையாக இயல்பாக உள்நோக்கமில்லாமல் பேசுவது எளிது என்று அவர்கள் குடும்பத்தைப்பார்த்து தெரிந்து கொண்டேன். இது எனக்கு புதிது. நான் அவர்களில் வேறல்ல என்பதை ஒவ்வொரு உரையாடல்களிலும் இயல்பாக்கிக்கொண்டே வந்தார்கள். வெகு குறைவான நேரமே அங்கிருந்தோம்.
மதியம் ஒரு புது உணவகத்திற்க்கு அழைத்துச்செல்வதாக அகரன் கூறி இருந்தார். பிரபாவுடன் இணைந்து நால்வரும் விமலம் மெஸ் சென்றோம். தீர்கசுத்த அசைவ உணவகம். பசிக்காக அல்லாமல் எங்களை மகிழ்விக்க, புதிய உணவனுபவத்தை தருவதற்க்காகவே அகரன் அங்கு அழைத்து வந்தார் என்பதை பிறகு புரிந்து கொண்டோம். வெகுசிறப்பான அனுபவம்.
மறுநாள் அகரன் நடத்தவிருந்த திரு எம்.கோபலகிருஷ்ணனின் கருத்தரங்கிற்கு கூட்டிச்சென்றார். அவரின் தோழமைகள் கட்டளையின்றி வேலை செய்துகொண்டிருந்தார்கள். சில சிறப்பு மேற்பாற்வைகள் செய்துவிட்டு ஒரு தமிழ்த்திரைப்பட முன்னோட்டக் காட்சிக்கு ஆயத்தமானோம்.
”நூடில்ஸ்” என்ற படம். முதன் முறையாக நானும் அக்காவும் சென்றோம். அன்று முழுவதும் பேரலைச்சலாக இருந்ததால் முன்னூடே அகரன் எங்களிடம் முக்கிய ஒப்பந்த விதிகளை அறிவுருத்தினார். கண்டிப்பாக தூங்க கூடாது, குறட்டையேதும் மறந்தும் விட்டுவிடக்கூடாது, நல்ல விமர்சனமாக இருக்க வேண்டும்(திரைப்படம் கவலை மறந்து ஈடுபாட்டுடன் ரசிக்கும்படியாக இருந்தது). வழி நெடுக கலைஞர்கள் வரவேற்றார்கள். சிறிய அரங்கம். அகரனைத்தெரியாதவர்கள் மிகச்சிலரே. சில நபர்களை அறிமுகம் செய்து வைத்தார். இரண்டு மணி நேரத்திற்க்கும் குறைவாக ஓடக்கூடிய நகைச்சுவைப் படம்.
ஞாயிறு காலை நானும் எனது அக்கா மற்றும் நீரதிகாரம் வெண்ணிலா அனைவரும் திரு எம்.கோபாலகிருஷ்ணனின் கருத்தரங்கிற் கு சென்றோம். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடக்கம். வெண்ணிலா அவர்கள் முதலில் பேசுவதாக நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்தது, சென்னையில் 8.30 க்கு தொடங்கி மண்டபம் வருவதற்க்குள் 10.20 ஆகி விட்டிருந்தது. மிகுந்த பதற்றத்தினூடே உள்சென்றோம், அது வரையில் அகரன் எங்களிடம் கைபேசியில் அழைக்கவில்லை,நாங்கள் எங்கிருக்கிறோம் என்று கேட்கவில்லை. மிகவும் இயல்பாக எங்களை வரவேற்று அமரச்செய்தார். ஒரு 11 மணிக்கு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று தகவல் கூறிச்சென்றார். எப்படி ஒருவர் மிகப்பெரும் ஆளுமைகள் கலந்து கொள்ளும் ஒரு கருத்தரங்கத்திற்க்கு நேரம் தவறியதற்கு பெரிய பதட்டம் ஏதுமில்லாமல் எரிச்சலில்லாமல் நிகழ்வை நேர்மறையாக கொண்டுசெல்ல முடியும்?
25 – 30 வருடத்திற்கும் குறையாமல் இலக்கிய பங்களிப்பை செய்து வருகிறார் திரு. எம்.கோபாலகிருஷ்ணன். 1994 ல் சிறுகதை எழுத ஆரம்பித்தார், 2002க்கு பிறகு தொடர்ச்சியாக எழுத்துலக பணிகளை செய்கிறார். பொதுவில், வளரும், வளர்ந்துவரும், அரியப்படாத இளம் இலக்கியவாதிகளை பெரும்படைப்பாளர்கள் முன்னிருத்துவது வழக்கம். புலம்பெயர் ஈழத்தமிழர் இளந்தமிழர் ஒருவர் , இலக்கியவட்டத்தில் , திரைத்துறையில், வேரூன்றிக்கொண்டிருக்கும் வேளையில் தன்னுடைய படைப்புகளை தரவேற்றிக்கொள்ளவே முனைவார். ஆனால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்று திரு எம்.கோபலாகிருஷ்ணனை சிறப்பிக்கும் விதமாக, தமிழில் தற்போது பிரபலமடைந்துவரும், முறையே பங்களிப்பாற்றிவரும், திறமைமிகுந்த இளம் எழுத்தாளர்களை, பேச்சாளர்களை திரு. எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் முக்கிய படைப்புகளை படித்தறிந்து கருத்தரங்கில் பேச அழைத்திருந்தார்.

திரை விமர்சனம் போலவே திரு. எம்.ஜி யின் படைப்புகளை பகுப்பாய்வு செய்தனர் இளம் பேச்சாளர்கள். மொத்தம் ஆறு தலைப்புகள், ஒவ்வொறு தலைப்பிற்கும் இரண்டு பேச்சாளர்கள். ஒரே தலைப்பில் ஒருவர் மட்டுமே வாசிப்பை செய்தால் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதால் இரண்டு பேரை கூராய்வு செய்ய அமர்த்தியிருந்தார் அகரன்.

சிற்றொளியில் வீற்றிருந்த மூலவரை பேரொளியில் உற்சவமூர்த்தியாக உலவச் செய்யும் முயற்சி என்று அகரன் முதலுரையாய் பேசும்போதே கைதட்டல் முழங்கியது. அது உண்மையும் கூட. பன்னிரண்டு பேரும் பகுத்தாய்ந்து பேசியதை ரசிகர்களுடன் சேர்ந்து தன் முதல் திரைப்படத்தை கான வந்த இயக்குநர் போல சலனமில்லாமல் உற்சவமூர்த்தி பார்த்துக்கொண்டிருந்தது. யாரும் ஒருவரை ஒருவர் போல் இல்லாமல் தங்கள் இயல்பில் தனித்துவமாக பேசியது வியப்பும், மகிழ்வாகவும் இருந்தது. முதல் நூலாக “அம்மன் நெசவு” நீரதிகாரம் வெண்ணிலா மற்றும் திரு. விக்னேஷ் இருவரால் பேசப்பட்டது.

அடுத்த உரை தொடங்குமுன்னே பலரும் அம்மன் நெசவு புத்தகங்களை வாங்க வரிசைகட்டியதே முதல் வெற்றியைக்காட்டியது. ஒவ்வொரு உரையின் தொடக்கத்தில் முன்னுரை வழங்கிவிட்டு தேநீர் ஏற்பாட்டினை செய்யச்சென்றார் அகரன். உரை முடிந்ததும் வாழ்த்துரை வழங்கி பின் அடுத்த உரையை தொடங்கி விட்டு மதிய உணவிற்கான ஏற்ப்பாட்டிற்கு சென்றார் .

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே விருந்துபச்சாரம் செய்து முடித்து மதிய அரங்கு ஆரம்பித்தது. பன்னிரண்டு ஆய்வுகள் முடிந்தவுடன், சிறப்பு அழைப்பாளர்கள் தங்கள் பங்கினைச் செய்ய முடிவாக திரு எம்.ஜி அவர்கள் பேசினார். நிறைய இடங்களில் நெகிழ்ந்து, கண்பணித்து தனது இதயபூர்வமாண நன்றிகளை நெகிழ்வுடன் கூறினார், மிகச்சுருக்கமான பேச்சு.

ஞாயிற்றுக்கிழமை, சென்னை கூட்ட நெரிசல், மதிய அசைவ உணவு, ஒருநாள் விடுமுறை போன்ற பல காரணங்களைத் தாண்டி அகரனின் அன்பிற்கும், திரு. எம்.கோபாலகிருஷ்ணனின் தன்னலமற்ற இலக்கிய அர்ப்பணிப்பிற்கும், இதுபோல் கருத்தரங்கிற்கு இசைவாகாமல் இருப்பது எதிர்கால இலக்கிய உலகிற்கு கேடு என்று வருகை தந்து அரங்கை நிறைத்த சொந்தங்களுக்கும் நன்றி கூறி விடை கொடுத்தது அந்நாள்.

போர்ச்சூழலில் பிறந்து, துயரங்களால் தத்தெடுக்கப்பட்ட தம்பி அகரன். புலம்பெயர்ந்தவர்கள் பொதுவில் தன்னை தன் குடும்பத்தை தன் சுற்றத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதிலேயே கவனமாக இருப்பர். பிறப்பிடத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்படுதலின் தாங்கொணாத்துயர் புதிய முயற்சிகளுக்கும், பெறிய முன்னேற்றத்திற்கும், துணிந்த பரிசோதனைகளுக்கும் தடையாகவே இருக்கும். அதற்கு நாம் திருப்திகொள்ளும் வகையில் சப்பைக்கட்டுகள் நிறைந்து கிடக்கும். திருமணத்தில், வேலையில், சமூகத்தில் நமது போரட்ட வைபவங்கள் மாறி மாறி அமையப்பெற்று நம்மைச் சமூகப்போராளியாக மாற்றுவது போல இல்லை இந்த வாழ்விடப்பெரும்பெயர்ச்சி. மிகச்சரியான திட்டமிடல், எளிய பணிவான வாழ்வு, கடும் பயிற்சி, தொடர் முயற்சி, நன்றியுணர்வு, தாய்மொழிப்பற்று, வாசித்தல், நட்புபாரட்டுதல், பயணம், பக்தி என்று பலதுறைகளில் தன்னை அர்ப்பணிப்பவருக்கு மட்டுமே அருளப்படும். அகரன் அருளப்பட்டவன். அகரனின் நட்பை நான் பொக்கிஷமாக பாதுகாப்பேன்.
