வளர்ப்புப்பிராணிகள் நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் தோழமையையும் நிறைவையும் தருகின்றன, ஆனால் அவற்றின் உரிமையாளர்களாக, அவற்றைப் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதும் மிக முக்கிய கடமையாகும். வளர்ப்பு பிராணிகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருட்கள் நம் வீட்டிலும் வீட்டுதோட்டத்திலும் நாம் பிரியம் என்னும் பேரில் அவற்றிற்கு அளிக்கும் உணவுபொருட்களிலும் இருக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன
நச்சுத்தன்மையுள்ள தாவரங்கள் அல்லது சில உணவுகள் என செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது உயிருக்கே ஆபத்தான பல பொருட்கள் நம்மை சுற்றிலும் அநேகமாக அனைத்து வீடுகளிலும் உள்ளன.
வீடுகளில் தோட்டம் வைத்திருப்பவர்கள் பலர் செடிகொடிகளை செல்லமாக வளர்ப்பதுண்டு. செடிகளுக்கு நீரும் உரமும் அளித்தால் போதும் ஆனால் செல்லப்பிராணிகளுக்கு எதை உணவாக்க கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர்களும் உண்டு.
கோடைவிடுமுறைக்கென சமீபத்தில் ஊட்டி சென்றிருந்த போது தங்கி இருந்த விடுதி ஒன்றில் தங்கள் வீட்டு பொமரேனியன் நாயையும் உடன் அழைத்து வந்திருந்த ஒரு குடும்பத்தினர், ரமேஷ் என்று பெயரிடப்பட்டிருந்த அதை மடியில் அமர்த்தி மூன்று வேளையும் தயிர் சாதம் ஊட்டினார்கள். நல்லவேளை தொட்டுக்கொள்ள ஊறுகாய் கொடுக்கவில்லை.
பிராணிகளின் உடலியல்புக்கு தகுந்த. மனிதர்களின் சீரண மண்டலத்தை காட்டிலும் வேறுபட்ட சீரணமண்டலத்தை கொண்டிருக்கும் விலங்குகளுக்கு, அவற்றின் உடலியக்கங்களுக்கு தேவையான மற்றும் ஏற்ற உணவுகளை அளிப்பதுதான் சரி
அவற்றை நம் குடும்பத்தின் உறுப்பினர் போல நடத்துவதும் நினைப்பதும் அன்புமிகுதியால் தான் எனினும் அவற்றின் உணவுத்தேவைகள் மனிதர்களை காட்டிலும் வேறானது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். மேலும் பல உணவுப்பொருட்கள் செல்லப்பிராணிகளுக்கு மிக ஆபத்தானதாகி விடுவதுமுண்டு. அப்படியான சிலவற்றின் பட்டியல் இங்கே:
- அவகேடோ-அல்லது பட்டர் பழம் (Avocado): (Persea americana) அவகேடோவின் இலைகள், கனிகள் மற்றும் விதைகளில் இருக்கும் பெர்சின் (persin,) என்னும் வேதிப்பொருள் பறவைகளின் உயிருக்கு ஆபத்தானது
- ரோடோடென்ரான் (Rhododendron)செடிகளில் இருக்கும் க்ரேயான் (grayantoxins,) நஞ்சு பறவைகளின் இதயத்தை செயலிழக்கச் செய்யும்
- Lily of the Valley என்றழைக்கப்படும் மிக அழகிய வெண்ணிற மணிகளை போன்ற மலர்களைக் கொண்டிருக்கும் செடியில் (Convallaria majalis) கார்டியாக் கிளைகோசைடுகள் எனப்படும் இதயத்துடிப்பை நிறுத்தும் பொருட்கள் உள்ளன. அவை பறவைகளுக்கு மிகவும் ஆபத்தானது
- டேஃபோடில்கள் எனப்ப்டும் மிக அழகிய மலர்களை கொண்டிருக்கும் அலங்கார செடியின் (Daffodils,Narcissus spp.) வேர்க்கிழங்குகள் லைகோரின் (lycorine) என்னும் ஆல்கலாய்டை கொண்டிருக்கும் இது பறவைகளின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்
- தென்னிந்தியாவில் மிக சாதாரணமாக காணப்படும் கோவில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் அழகிய நறுமணமுள்ள மலர்களை அளிக்கும் அரளிச் (Oleander Nerium oleander) செடியின் அனைத்து பாகங்களுமே மிக மிக நஞ்சுகொண்டது. இவையும் பறவைகள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கும் கார்டியாக் கிளைக்கோசைடுகள் கொண்டிருக்கின்றது.
- பல நிறங்களில் மிக அழகிய மலர்களை அளிக்கும் லில்லிகள் உண்டு (Lilium spp.) ஈஸ்டர் லில்லி, டைகர் லில்லி, டே லில்லி என பலவகைகளில் இருக்கும் இவை பூனைகளுக்கு மிக ஆபத்தானது இவற்றின் இலை மலர் மகரந்தம் என எதை பூனைகள் சாப்பிட்டலும் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழப்பு உண்டாகும்
- மதன காமராஜ மரம் என்றழைக்கப்டும் சிறிய தென்னை மரங்களை போலிருக்கும் சைகஸ் மரங்கள் (Sago Palm ,Cycas spp ) உலகெங்கிலும் மிக அதிகமாக விரும்பி வளர்க்கப்படும் பிரபலமான அலங்கரவகை தாவரங்கள். இதன் கொட்டைகள் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஈரல் செயலிழப்பை, வலிப்பை உண்டாக்கி உயிரிழக்கச் செய்யும்
- ட்யூலிப் மற்றும் வெங்காயத்தாமரை செடிகளும் (Tulips and Hyacinths) ட்யூலிபாலின் மற்றும் ஹையாசிந்தின் என்னும் நஞ்சினை கொண்டிருக்கின்றன. இவை செல்லப்பிராணிகளுக்கு உடலுபாதைகளை உண்டாக்கும்
- சோற்றுக்கற்றாழை மனிதர்களுக்கு பல நன்மைகளை அளிக்கும் ஒரு மூலிகை தாவரம் ஆனால் இது நாய்களுக்கும் பூனைகளுக்கும் வயிற்று உபாதைகள் உண்டாக்க்கி அதிகமான அளவில் உட்கொள்ளப்பட்டால் உயிரிழப்பையும் உண்டாக்கும்
- மிக சாதாரணமாக வீடுகளில் அழகிய இலைகளுக்காக பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும் ஊமைப்பிரம்பு என்றழைக்கப்படும் (Dieffenbachia (Dieffenbachia spp, Dumb Cane) செடியில் ஆக்ஸலேட் கிரிஸ்டல்கள் உள்ளன. இவை வாய் மற்றும் தொண்டையில் அழற்சி மற்றும் வீக்கம் உண்டாக்கி குரல் இழப்பை தற்காலிகமாக உண்டாக்கும். இச்செடிகள் வளர்ப்பு பிராணிகள் மற்றும் மனிதர்களுக்கும் மிக ஆபத்தானவை
- மிக மிக குறைந்த அளவில் கொடுக்கப்பட்டாலும் தியோபுரோமின், காஃபின் ஆகியவற்றை கொண்டிருக்கும் சாக்கலேட்டுகள் கிளி உள்ளிட்ட அனைத்து பறவைகளுக்கும் நஞ்சாகி உயிராபத்தை உண்டாக்கும்
- இவற்றோடு மிக அதிக உப்பு, கொழுப்பு, வெங்காயம் பூண்டு, திராட்சை, ஈஸ்ட் கலக்கப்பட்ட மாவு ஆகியவைகளும் செல்லப்பிராணிகளுக்கு உடல்நல கோளாறுகள் உண்டாக்கும்.
செல்லப்பிராணிகள் இப்போது காவலுக்கு மட்டுமல்ல நடைபயணத்தோழமைக்கும் விழியற்றவர்களுக்கு வாழ்க்கைத் துணையாகவும் பலருக்கு பெற்ற பிள்ளைகளுக்கிணையாகவுமே இருக்கின்றன. அவற்றின் உணவுத்தேவையை சரியாக அறிந்துகொண்டு அவற்றிற்கு உணவளிக்க வேண்டும். அவற்றிற்கு ஆபத்துண்டாக்கும் உணவுகளைக்குறித்தும் நாமறிந்திருக்க வேண்டியது மிக அவசியம்