இந்தியப்பெருங்கடலில் ஆப்பிரிக்க கடற்கரைக்கு அடுத்து அமைந்திருக்கும் நான்கு தீவுகள் அடங்கியது  சொகோட்ரோ தீவுக்கூட்டம். இது 34 மில்லியன் வருடங்களுக்கு முன்பே அரேபிய நிலப்பரபிலிருந்து தனியே பிரிந்த நிலப்பரப்பு. யேமான் குடியரசின் பகுதியாகிய இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை.

டிராகன் குருதி மரங்கள் என்பவை தாவர உலகின் அதிசயங்களில் ஒன்று.இத்தீவுக்கூட்டங்களில் ஒரு தீவில் மட்டுமே காணப்படும் இவற்றை நாம் விரைவில்   நிரந்தரமாக இழக்கவிருக்கிறோம். 

இம்மரங்கள் 1835ல்    அத்தீவுக்கூட்டங்களுக்கு சென்ற கிழக்கிந்திய கம்பெனியின் லெஃப்டினண்ட் வெல்ஸ்டெட் (Lieutenant Wellsted) என்பவரால்  முதன் முதலில் விவரிக்கப்பட்டது. முதலில் இவை Pterocarpus draco என்று பெயரிடப்பட்டன. பின்னர் 1880ல்தான் ஸ்காட்லாந்து  தாவரவியலாளர் ஐஸக் பேலே இதை   Dracaena cinnabari என்று  முறையாக மறுபெயரிட்டார். டிரசீனா பேரினத்தின் 100 சிற்றினங்களில் சின்னபரி உள்ளிட்ட 6 சிற்றினங்களே மரமாக வளரக்கூடியவை.

30 அடி உயரம் வளரும் 600 வருட வாழ்வை கொண்டிருக்கும் இம்மரங்கள் அத்தீவின் மலைக்குன்றுகளில் வளர்கின்றன. மரங்களில் இருந்து வடியும் குருதி போன்ற  அடர்சிவப்புநிற  கசிவு  இம்மரத்தின் பெயருக்கு காரணமாகிவிட்டிருக்கிறது.  டிராகனின் குருதி என்றழைக்கப்படும் இக்கசிவை அத்தீவு வாசிகள் ’emzoloh’ என்றழைக்கிறார்கள். 

அத்தீவின் பழங்குடியினரால் அந்த செஞ்சாறு உதட்டுக்கு சாயமிடுவதிலிருந்து மருந்துப்பொருளாக, வயலினுக்கு மெருகேற்ற என பல நூறு பயன்பாடுகளை நூற்றாண்டுகளாக கொண்டிருக்கிறது.

அத்தீவின் தொல்குடிகளின் பாரம்பரிய இசைகக்ருவியான Stradivarius violin எனப்படும் செந்நிற வயலின் இம்மரத்தின் செந்நிற கசிவினால் நிறமேற்றப்படுகிறது.

மாபெரும் குடைக்காளான்களை போலவும் பெரிய மழைக்குடை போலவும் அமைந்திருக்கும் இம்மரங்களின் தோற்றம் பிரமிக்க வைக்கும்.

இயற்கையில் எந்த ஒரு உயிரினத்தின் பாதுகாப்பு, பலநூறு பிற உயிர்களின் வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் காரணமாக இருக்கின்றதோ அவை குடை உயிரினங்கள் – umbrella species  எனப்படுகின்றன. டிராகன் குருதி மரங்கள் பார்ப்பதற்கு குடை போலிருப்பது மட்டுமின்றி அப்பிரதேசத்தின் குடை உயிரினங்களாகவும் இருக்கின்றன. எனவேதான் அழியும் ஆபத்திலிருக்கும் இவற்றின் பாதுகாப்பு தற்போது உலகின் கவனத்துக்கு வந்திருக்கின்றது.

நேரடியாகவும் மறைமுகமாகவும்  அவற்றின் வாழ்விடங்களிலும். அவற்றிற்கு அருகிலும்  இருக்கும் பல உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் வாழ்விற்கும் காரணமாக இருக்கும் குடை உயிரினங்களின் பட்டியலில் புள்ளி ஆந்தைகள், பாண்டா கரடிகள் மற்றும் மலை கொரில்லாக்கள் போன்ற பறவை விலங்கினங்களும் இருக்கின்றன.

அஸ்பரகேசி (Asparagaceae) குடும்பத்தை சேர்ந்த ஒருவித்திலை தாவரமான  டிராகன் குருதி மரங்களின் அறிவியல் பெயர் Dracaena cinnabari. Dracaena என்பதன் கிரேக்க பொருள் டிராகன், cinnabari  என்பது செங்குழம்பு அல்லது சிவப்புக் கசிவு என பொருள்படும். இம்மரங்கள்  இத்தீவை வறளச்செய்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றம், விதைகளையும் இளம் செடிகளையும் மேய்ச்சல் விலங்குகள் உண்பது மற்றும் வாழ்விட அழிப்பு ஆகியவற்றால் அழியும் ஆபத்திலிருக்கிண்றன. ஆய்வாளர்கள் தற்போது 10 சதவீத வாழ்விடங்களில்  மட்டும் வளரும் இவை 2080ல் முற்றிலும் அழியும் என்கிறார்கள்.

 பச்சை வெள்ளை நிறங்கள் கலந்த சிறுமலர்களின் கொத்துக்கள் மார்ச் மாதத்தில் தோன்றி ஐந்து மாதங்களில் ஆரஞ்சு நிற சிறுகனிகள் உருவாகும். கனிகளில் 1லிருந்து 4 விதைகள் இருக்கும். கனிகளிலும் சிவப்பு சாறு இருக்கும். பறவைகளின் விருப்ப உணவு இக்கனிகள்.

இவற்றின் நாற்றுக்களை வளர்த்து பாதுகாக்கும் திட்டமும் தற்போதைய ஏமானின் அரசியல் காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையியலாளர்கள் இவற்றை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

இவற்றை குறித்து மேலும் அறிந்துகொள்ள : https://youtu.be/hnIBdNqx2So