நாளை அகிலாவின் நிச்சயதார்த்தம். கோவை செல்ல வேண்டி இருக்கிறது. நினைத்துக்கொண்டாற்போல டெய்லர் சங்கீதாவிடம் இருக்கும் தைத்து முடித்த புதுப்புடவைகளில் ஒன்றை வாங்கிகொள்ளலாமென்று புறப்பட்டேன். செந்திலை இனி பொள்ளாச்சியிலிருந்து வரச்சொல்லி பின்னர் புறப்பட மாலை ஆகிவிடும் எனவே பேருந்திலேயே செல்ல நினைத்தேன்.
நல்ல உச்சிவெயிலில் புறப்பட்டு வேடசெந்தூர் பேருந்து நிறுத்தத்தில் 20 நிமிடம் நின்றேன்.பேருந்து வரும் அறிகுறியே இல்லை. என்னுடன் நிலா டைன் உணவகத்தில் பாத்திரம் தேய்க்கும் பணியிலிருக்கும் ஒரு பெண்மணியும் காத்திருந்தார், பின்னர் இருவருமாக பேசிக்கொண்டே அடுத்த சுங்கம் நிறுத்தம் வரை நடந்துவந்தோம்.அங்கு நான்கு வழிச்சாலையாதலால் அடிக்கடி பேருந்துகள் வரும்.
அவர் பெயர் கோகிலா, தினம் 3 மணிக்கு பணி முடிந்து புறப்படுவார் நாளொன்றுக்கு 300 ரூபாய் சம்பளம் என்பதை எல்லாம் பேசிக்கொண்டு வந்தார், நல்ல திருத்தமாக புடவை உடுத்திக்கொண்டு தலையில் பூச்சரம் வைத்துக்கொண்டு அழகாக இருந்தார்.
நான் என்னசெய்கிறேன் என்றுகேட்கப்பட்ட போது டீச்சர் என்று சொன்னேன்.
சுங்கத்திலும் நல்ல கூட்டம். இன்று முகூர்த்த நாள், ஏதோ திருமணவிருந்தில் பணிபுரிந்து வீடு திரும்பும் சரிகைக்கரை இட்ட வெள்ளை முண்டும் அழுத்தமான நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்த பெண்கள் கூட்டமொன்றும் இருந்தது. அனைவருமே வெகுவாக களைத்திருந்தார்கள்.
வெயில் முதுகில் அறைந்து மண்டையை பிளந்து உள்ளே இறங்கிக்கொண்டிருந்தது. பேருந்து அங்கும் வெகுநேரம்வரக்காணோம். என்னருகில் நின்று கொண்டிருந்த பெண் போனில் உரக்க யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அன்றுதான் ICUவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்லவிருப்பதாகவும் கணவரும் உடன் சிகிச்சையில் இருந்து இப்போது அவரது அக்காவீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் எதிர்முனையில் இருந்தவரிடம் சொல்லிக்கொண்டார்.
20 நாட்களுக்கு முன்னர் அவர்களின் செல்ல நாய் சின்னுவுக்கு வெறி பிடித்து பால் சோறு கொடுக்க வந்த இவரை தலையில் கடித்து,காப்பாற்ற வந்த அவர் கணவரையும் கை,காலென்று ஏகத்துக்கும் கடித்துவிட்டது அக்கம்பக்கத்தினர் வந்து காப்பற்றி ஆம்புலன்ஸில் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்திருக்கிறார்கள். இனி 10 நாட்கள் கழித்தே தையல் பிரிக்கவேண்டும். ஊர்ப்பஞ்சாயத்தில் அந்த நாயை கொல்ல முடிவாகி கொன்றும் விட்டார்கள், அதை சொல்லுகையில் அவருக்கு குரல் கம்மியது. அவரது தலையின் மறுபக்கத்தில் பெரிய பாண்டேஜ் போடப்பட்டிருந்ததை பின்னரே கவனித்தேன். ’’நானே வளர்த்தி இப்படி கொல்லவேண்டியதாயிருச்சே’’ என்று புலம்பினார். ’’ பாடு தான் எப்பவும் பாடுதான் ஒருநாளும் விடியாது’’ என்றவர். தனக்கு ஏதேனும் வேலை இருந்தால் சொல்லும்படி மீள மீள எதிர்முனையை கேட்டுக்கொண்டார்
50 வந்தது,நானும் கோகிலாவும் ஏறினோம். அகால வேளை என்பதால் இருக்கைகள் காலியாகவே இருந்தன. கோகிலா என்னருகில் அமர்ந்தார்.
அவரது வயர் கூடையில் இருந்த சிறு பெட்டியிலிருந்து பொன்மஞ்சள் வண்ணக் காகிதம் சுற்றப்பட்டிருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து, பிரித்து இரண்டாக உடைத்து எனக்கு பாதியை அளித்தார். வாங்கிக்கொண்டேன். அவருக்கு இனிப்பு மிகவும் பிடிக்குமென்றும் எப்போதும் பயணங்களில் சாப்பிட கையோடு கொண்டு வருவதாகவும்சொன்னார். வாழ்வென்னும் பெருவதை அவருக்கான இனிப்புச்சுவையை எப்படியோ விட்டுவைத்திருக்கிறது. எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. இனிப்புப்பிரியையான நான் இத்தனைகாலம் சாப்பிட்டதிலேயே ஆகச்சிறந்த இனிப்பு அதுதான். கோகிலாவை கட்டிக்கொள்ள நினைத்தேன். பேருந்தில் சாத்தியமில்லாமல் போனது.அவரது கையை ஒரு முறை பிடித்துக்கொண்டேன்.
பலர் நல்ல உறக்கத்திலும் வெயிலின் கிறக்கத்திலும் இருந்தார்கள்.நடத்துனர் ஓட்டுநர் இருவருமே சுவாரஸ்யமில்லாமல் இருந்தார்கள் . கட்டணமில்லை பெண்களுக்கு என்பதை வெகுநேரம் கழித்தே உணர்ந்துகொண்டு கையில் வைத்திருந்த பணத்தை பர்ஸில் வைத்துக்கொண்டேன். கோகிலாவிடம் விடைபெற்றுக்கொண்டு வஞ்சியாபுரம் பிரிவில் இறங்கிநடந்தேன். முந்தாநாள் மழையில் சங்கீதாவின் கடை வாசலில் குளமாக நீர் தேங்கி இருந்தது.
என் புடவை ரவிக்கையை தயாராக வைத்திருந்தார். திரும்ப வந்து சாலையை கடந்து எதிர்புறமாக நின்றேன்
20 நிமிட காத்திருப்பிற்கு மீண்டும் சுங்கம் வழியே உடுமலை செல்லும் மற்றொரு50 வந்தது. நல்ல கூட்டமதில். மூன்றாவது இருக்கைக்கு அருகில் நின்று கொண்டேன். அந்த இருக்கையில் இரு பெண்களும் அவர்களை பார்த்து திரும்பியபடி நின்று கொண்டு மற்றொருத்தியுமாக இருந்தார்கள், தோழிகள், ஒரே இடத்தில் பணிபுரிவர்கள் என தெரிந்தது. அவர்களில் மிக இளையவள் ‘’காலையில் 3 மணிக்கா, வீட்டைவிட்டு போன்னு சொல்லறாங்க்கா உள் ரூமை வேற பூட்டிவச்சுட்டான் பர்ஸ் அங்கே இருக்கு எங்கேக்கா போவேன் ஆட்டோ கூட இருக்காது அந்நேரெத்துக்கு ‘’என்றாள் அதை முன்னரே பல முறை பேசிஇருப்பார்கள் போல.’’மசநாயாயிருந்தாகூட குடும்பம் நடத்திடலாங்க்கா இவன்கூட முடியது கெரகம் மறுபடி அங்கேயே போரேன்பாருங்க இப்போ ‘’ என்றாள்.
சின்னப்பெண், வயது 20 அல்லது 22 தான் இருக்கும் சிவப்பில் பழைய சுடிதார், எண்ணெய் இறங்கிய ஒரு மூக்குத்தி, கழுத்தில் அழுக்காக ஒரு வெறுஞ்சரடு, காதில் ஒரு பிளாஸ்டிக் மொட்டுத்தோடு. இவர்களெல்லாம் ஒரு டிகிரி படித்திருக்கலாம், கம்ப்யூட்டரில் பில் போட 8000, அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்தால் மேலும் 3000 என்று, அந்த அவன்களில் எவன் எத்தனை மணிக்கு போகச்சொன்னாலும் புறப்பட்டு வந்து தனியே கண்ணியமாக வாழ்ந்திருக்கலாம்.
சற்று நேரத்திலேயே மூவருமாக என்னமோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது
துயர்களை இவர்கள் பெருக்கிக்கொள்வதில்லை மேலும் அவை இருப்பதுதான் வாழ்க்கை என்றும் நினைக்கிறார்கள் போலிருக்கிறது.
சுங்கத்தில் இறங்கி செல்வம் கடைக்கு வந்தேன், ரேகாவும் இருந்தாள்.அக்ஷய திருதியைஅன்று நகைக்கடைபோல கூட்டம் நெரிபட்டது. இருவரிடமும் பேசிக்கொண்டிருந்துவிட்டு பச்சைமிளகாய்களும் புதினாஇலைகளும் மிதந்த குளிர்ந்த எலுமிச்சை ரசத்தை குடித்தேன். வெயில் உறிஞ்சிக்கொண்டிருந்த உயிர் திரும்ப வந்தது.
அங்கிருந்து நடந்து ஊருக்கு வரும் வழியில் பலர் என்னையும், ஏன் நடந்து வருகிறேனென்றும், அப்பா எப்படி இருக்கிறார் என்றும் விசாரித்தார்கள். ஊமைக்கவுண்டர் சரண் எப்படி இருக்கிறான் என்று சைகையில் கேட்டார் நலமென்று தெரிவித்தேன். ’’போ போ’’ என்று கையாட்டி சிரித்தார்.
காவலர் பிரபுவின் அப்பா தன்னந்தனியே கோவில் வாசல் கல்பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவரும் மனைவியை இழந்திருந்தார் சில வருடங்களுக்கு முன்னர். அப்பா தளர்ந்துவிட்டார் என்றதும் ’’என்ன கண்ணு பண்ணறது உங்கம்மவோட போச்சு எல்லாம்’’ என்ற படி சுய பச்சாதாபத்தில் கண் நிறைந்து வேட்டி நுனியில் துடைத்துக்கொண்டார். சங்கடமாக இருந்தது.
மெல்ல நடந்துவந்தேன், வழியெங்கும் தீக்கொன்றைகள் மலரத் துவங்கி இருந்தன.புளியமரங்கள் தளிரும் மலருமாக நிறைந்திருந்தன புளியம்பூக்களை எனக்கு சாப்பிட பிடிக்கும் ஆனால் எட்டாத உயரத்தில் இருந்தன.
ஒரு வெள்ளை நாய் வாலாட்டிக்கொண்டே தொடர்ந்தது. நாய் இன்று மூன்றாவது முறையாக இடைபடுகிறது. கொல்லப்பட்ட சின்னு,3 மணிக்கு வெளியே போகச்சொன்ன ஒன்று, பிறகு இது.
லண்டனில் ஒரு மகளையும் அமெரிக்காவில் இன்னொருத்தியையும் கட்டிக்கொடுத்துவிட்டு கணவரும் இல்லாமல் தனியே வாழ்ந்துவரும் அந்த அரசமரத்துக்கருகிலிருக்கும் வீட்டம்மா கூடத்தில் கையை தலைக்கு வைத்து உறங்கிக்கொண்டிருப்பது திறந்திருந்த கதவு வழியே தெரிந்தது. அருகில் பால்வாங்க பாத்திரம் வைத்திருந்தார். எங்கோ வெகு தொலைவில் இருக்கிறதென்று நான் நினைக்கும் எதிர்காலம் ஒரு கணம் மிக அருகிலென வந்துசென்றது.
நல்ல இளங்காற்றில் புளியம்பூக்கள் உதிர்ந்தன, இன்றும் மழை வரலாம். மணி அண்ணன் வொர்க்ஷாப் அருகில் வந்ததும் திரும்பி அந்த வெள்ளைநாயிடம் ’போடா’ என்று அதட்டினேன். உடனே சொல்பேச்சு கேட்டு பவ்யமாக திரும்பி நடந்தது, டீச்சர் என்று தெரிந்திருக்குமோ?
வீடு வந்து வெளிவாசல் கதவை திறக்கையிலேயே இன்று பறிக்காமல் விட்ட ராமபாண மணம் கமழ்ந்தது.
குளிக்க செல்லுமுன்பு கொண்டைபோட தலை முடியை பிரிக்கையில் தலையிலிருந்து ஒரு புளியம்பூ விழுந்தது. வாயில் போட்டுக்கொண்டேன் நல்ல புளிப்பு.