இளையராஜாவின் இம்சைகள் இப்போதெல்லாம் கூடிப்போய் விட்டிருக்கிறது. அவரது இசையை அவரது குரலை எப்போது கேட்கத் துவங்கினேன் என்று நினைவில்லை, சிறுமியாக இருக்கையில் எப்போதும் கேட்டது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இசைதான். பின்னர் அப்பா எங்களை எழுப்பவென்றே உரக்க வைக்கும் பக்திப்பாடல்கள். ஐந்தாவது படிக்கும் வரை இவை மட்டுமே எனக்கான இசையாக இருந்தன

அப்போது திருமண வயதிலும் காதலிலும் இருந்த ஒரு அத்தை எப்போதும் வானொலியில் பாடல்கள் கேட்பார். அதிகம் கமல்ஹாசனின் குரலில் ’’ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் நானவள் பூவுடலில் புது அழகினை ரசிக்கவந்தேன்’’ என்னும் பாடல் அப்போது ஒலிபரப்பாகும் அத்தைக்கு அதில் தனித்த பிரியமுண்டு. அப்படி நல்லிசை எனக்கு அறிமுகமாகியது.

அன்னக்கிளி படம் பார்த்த நினைவிருக்கிறது //மச்சானை பார்த்தீங்களா// என்னும் கேள்வியை, தேடலை, பாடலை, அதன் இசையை விட கடைசிக் காட்சியில் சுஜாதா தியேட்டர் நெருப்பில்  முகமெல்லாம் தீக்காயத்துடன் செத்துப் போவது தான் மனதில் பாவமாக பதிந்திருந்தது.அந்த வயது அப்படி.

ஒருவேளை பதின்பருவத்தில் ராஜாவின் பாடல்கள் மனதில் நுழைந்திருக்கலாம். குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. வானொலியில் கேட்பது பேருந்தில் கேட்பது திரைப்படம் பார்க்கையில் கேட்பது என்பது மட்டுமல்லாமல் இசையை கேட்க வென்றெ பிரத்யேக நேரமொதுக்கி கேட்டதெல்லாம் முதுகலைப்படிப்பை முதன் முதலில் வீட்டிலிருந்து அகன்று,பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்த வருடங்களில் தான்.

அதற்குள் இளையராஜா, பாலகுமாரன் பித்துக்களுக்கு உள்ளாகி இருந்தேன். கிருஷ்ணசந்தர் குரலும் அப்போதுதனித்த பிரியம். கவிதையுலகிலும் பொற்தாழ்விலக்கி நுழைந்திருந்தேன்.(வாசிப்புத்தான்)

இப்போது வாழ்வின் இயங்கியலில் ராஜாவும் கூடவே இருக்கிறார். ராஜாவின்  இசையமைப்பில் பல திரைப்படங்களை பார்த்து அவரது இசைக்குள் நுழைந்து திளைக்கும் பல கோடியினரில் நானும் இருக்கிறேன். தன்னந்தனிமையில் காலை சமைக்கையில் எப்போதும் இவரும் கூட இருந்து பாடிக்கொண்டிருப்பார். ’’கொஞ்சம் அடுப்பை பார்த்துக்குங்க இதோ வந்துட்டேன்’’ என்று அவரிடம் சொல்லாத குறைதான். எனினும் கடந்த சில வருடங்களாக அவரது இசை பெரும் சித்திரவதை ஆகிவிட்டிருக்கிறது

இத்தனை வருடங்களில் பலவிதமான மனிதர்களை பார்த்தாகிவிட்டது, கொடுமைக்காரர்கள், கல்நெஞ்சர்கள் அப்பா என்பவரைப்போல வன்முறையாளர்கள், ஏமாற்றுக்காரர்கள் என்று ஆனால் இவர்களில் இளையராஜாவைபோல கொடூரர் ஒருவரும் இல்லை (கொடூரன் என சொல்ல முடியாதல்லவா, என்ன இருந்தாலும் பெரிய மனிதர்,  ஞானி) 

வெண்முரசில் சுநீதி சுருசி இருவரின் உளப்போராட்டங்களை சொல்லுகையில் அதிலொருத்தியின் கடுஞ்சொல், உடலுக்குள் கத்தியை சொருகி, சுழற்றி வெளியே இழுப்பது போல என்று ,அப்படித்தான் வெறுமனே இதயத்தை கீறிவிட்டுச்செல்வது, எளிதாக குத்திக் கொலைசெய்வதெல்லாம் இல்லை , இசையென்னும் பெயரில் ராஜா கத்தியை ஆழச்செருகி, சுழற்றி பின்னர் ஆன்மாவையும் பிடித்து வெளியே இழுப்பார்.  முன்னைக்காட்டிலும் இப்போது கூடுதல் பணிச்சுமை வயதும் கூடிகொண்டே இருக்கிறது இருந்தும் முன்னெப்போதையும் விட இப்போது ராஜாவின் இசையும் குரலும் படுத்தி எடுக்கிறது

ஒருவேளை கடந்த சில வருடங்களாக  முழுத்தனிமையில் இருப்பதாலும் இருக்கலாம்.

சமயங்களில் தோன்றும் ராஜா பாட்டுக்கு இசையமைக்கையிலேயே மிகுந்த வன்மத்துடன் ’’இதை இரவில் தனிமையில் முடிவற்று நீண்டிருக்கும் இருளை பார்த்துக்கொண்டு கேட்டிருப்பவர்களை ஒரேயடியாக கொல்லட்டும்’’ என்ற ஒரே உத்தேசத்துடன் இசையமைத்திருப்பாரோ என்று! அத்தனைக்கு கொடுமையாக இருக்கும் தனித்திருக்கும் இரவுகளில் கேட்க.

ராஜாவின் இசை பயங்கரவாதம் என்றால் அவருடன் கங்கைஅமரன் கூட்டுசேர்ந்தால் அதுவே தீவிரவாதமாகிவிடும்.’’சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும்’’ அந்த வகை கொலையாயுதம். நான் மீள மீள கேட்பவற்றில் இதுவுமொன்று.

சென்ற மாத முழுநிலவன்று நான் ஒரு இரவுப்பயணத்திலிருந்தேன். நிலவு கூடவே பயணித்துக்கொண்டிருந்தது காரில் இருந்த குட்டி மீனாக்‌ஷிக்கு வைத்திருந்த பாரிஜாதம்  மணக்கிறது, தலையில் வைத்திருந்த ராமபாணம் கூட சேர்ந்துகொண்டது ,ஒரு பாலத்தில்  கார் திரும்புகையில் நிலவு அப்படியே அள்ளி எடுத்து மடியில் வைத்துக்கொள்ளலாம்போல வெகு அருகிலிருக்கையில் ,ராஜா 

//தெளியாதது எண்ணம்

கலையாதது வண்ணம்

அழியாதது அடங்காதது

அணை மீறிடும் உள்ளம்// என்று பாடிக்கொண்டிருந்தார். ’’சார் கொஞ்சநேரம் சும்மா இருக்கீங்களா? ’’என்று கடிந்துகொண்டேன் அவர் காதில் போட்டுக்கொள்ளாமல்

//நிதமும் தொடரும் கனவும்

நினைவும் இது மாறாது//

என்று போய்கொண்டே இருந்தார். கொலைகாரப்பாவி என்று மனதில் வைதுகொண்டேன்

எப்படியோ துயரை அழைத்துக்கொண்டு வரும் அந்தியின் மழையைபோல ராஜாவின் பாடல்களும் தனிமையை மன்மடங்கு பெருக்கி தவிக்கச்செய்துவிடுபவை

பக்திப்பாடல்களிலும் மனதை கரையச்செய்துவிடுபவர் அவர் மட்டுமே

காமாட்சி கருணாவிலாசினியில் ’’மந்தஹாசினி மதுரபாஷினி சந்தரலோசனி சாபவிமோசனி ‘’என்னும் அவர் குரல் எப்போதும் துயர் துடைப்பது.

கல்லூரிக்காலங்களில் மிகவும் இம்சை செய்த குரலுடன் கூடிய அவர் பாடல் ’’வழிவிடுவழிவிடு என் தேவி வருகிறாள்’’ தான். பொதுவில் எவர் இசையமைத்திருந்தாலும், யார் குரலாயிருப்பினும் தேவி என்னும் பெயர் வருவதெல்லாமே எனக்கு தனித்த பிரியமுள்ள பாடல்களாகவே இருக்குமென்றாலும் இதில் ராஜாவின் குரல் காதலில் அதுவும் கொஞ்சம் மனம் பிசகின காதலில் தோய்ந்திருக்கும். 

’’என் மீதுதான் அன்பையே பொன் மாரியாய்த் தூவுவாள் என் நெஞ்சையே பூ என தன் கூந்தலில் சூடுவாள்’’ இவ்வரிகளை எத்தனை முறை கேட்டிருப்பேன் ?

அப்பாடல் வெளியான சமயத்தில் மனம் கலங்கிய, குழம்பிய, பிசகிய ஒருவரை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என பிரியப்பட்டதுண்டு, பிற்பாடு அதற்கென மெனக்கெட வேண்டியதில்லை என்று தெரிந்திருந்தது.

ராஜாவை குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். அவரது புதுவீட்டின் கட்டுமானம் பற்றிய ஒரு செய்தியில் அவர்மனைவி ஜீவா வீட்டு முகப்பில் ஒரு மாபெரும் கல்தாமரையை அமைத்திருக்கிறார் என கேள்விப்பட்டேன். கருங்கற்களில் செய்யப்பட்டவைகளில் தனித்த பிரியமுள்ளவள் என்பதால்  என்றைக்கேனும் அதை பார்க்கவேண்டும் என்னும் பெருவிருப்புள்ளது. அதை கல்லில் வடிக்க நினைத்ததே ராஜாவின் கலையின் அழிவின்மையை குறிக்கும் பொருட்டுத்தான் என நினைப்பேன்.  இன்னும் பார்த்திராத என்றேனும் உறுதியாக பார்க்கவிருக்கும் அந்த தாமரையில் அமர்ந்துகொண்டிருக்கும் சரஸ்வதியின் வடிவம்தான் அவர். 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார். உலகெங்கிலும் எல்லார் வீட்டிலும் எப்போதும் இசைவடிவில் அழியாமல் இருக்கும் பேறுகொண்டவர் நீங்கள். 

அன்பு