நேற்று மாலை இஸ்திரி போடக்கொடுத்த துணிகளை வாங்க பொள்ளாச்சி சென்றிருந்தேன். கல்லூரிக்கு நேர் எதிரில் இருக்கும் கடை அது. எனக்கு அவரகளை 90களின் இறுதியில் இருந்து தெரியும். நான் அப்போது கல்லூரிப்பணியில் சேர்ந்த புதிது. வீட்டுக்கு பின்புறம் இருக்கும், அவ்வப்போது சர்க்கஸ் நடக்கும் ஒரு காலி மைதானத்தை கடந்து கல்லூரிக்கு வருகையில் மையச்சாலை துவங்கும் இடத்தில் இருக்கும் இந்த கடையை கடந்தே செல்லவேண்டும்.
இந்தனை வருடத்தில் குடும்ப உறுப்பினர்கள் போல அவர்கள் நெருங்கி இருக்கின்றனர். பத்து நிமிஷமாவது நலம் விசாரித்துக்கொள்ளாமல் துணிகளை கொடுப்பதோ வாங்குவதோ இல்லை. நேற்று கடையில் யாரும் இல்லை. ஒரு பேண்ட் பாதி தேய்ப்பில் அப்படியே கைவிடப்பட்டு கால் மடக்கி காத்திருந்தது. ’’குமார் குமார்’’ என குரல் கொடுத்தும் பதிலில்லை. புகையும் இஸ்திரிப்பெட்டி ஒரு சிவப்பு ஓட்டின் மீது இளைப்பாறிக்கொண்டிருந்தது. நானும் காத்திருந்தேன்
எதிர்ப்புறமிருந்து குறுக்கில் சாலையை கடந்து அந்த வீட்டு பையன் கேசத்தை ஒதுகியபடி உற்சாகமாய் ஓடிவந்து ,புன்னகையுடன் ’’அங்கே டெய்லர் கடையில் பேசிட்டிருந்தேன், உங்களை பார்த்துட்டுத்தான் ஓடிவந்தேன்’’ என்றான்
ஏற்கனவே அடுக்கிய துணிகளை மீண்டும் நிதானமாக அடுக்கி கொடுத்து பணம் வாங்கிக்கொண்டவன் நான் காரை நோக்கி திரும்புகையில் சத்தமாக ’’இதை சாப்பிட்டு பாருங்க’’ என்றான். திரும்பினேன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறிய மிட்டாயை எடுத்து ’’எனக்கு இது ரொம்ப பிடிச்ச மிட்டாய்ங்க, உங்களுக்கும் பிடிக்கும்’’ என்று கொடுத்தான். சிரித்தபடி வாங்கிக்கொண்டேன். பின்னால் அவன் குரல் கேட்டது ‘’சாப்பிட்டுபார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க ‘’ என்று
அந்தியின் அந்த அன்பை அளித்தல் முழுநாளையே இனிப்பாக்கிவிட்டபிறகு மிட்டாயின் இனிப்பு தனித்து தெரியாமல் அதில் கரைந்து விட்டிருக்கும் என்பதை அவனுக்கு சொன்னால் புரியப்போவதில்லை. திரும்பி சிரித்துக்கொண்டே ‘’சரி சொல்லறேன்’’ என்று நானும் உரக்க சொல்லிவிட்டு புறப்படேன்
இப்படி முன்பு ஒருமுறையும் நடந்தது. தருண் அப்போது குட்டிப்பையன், சரண் இல்லாமல் அவன் மட்டும் ஒருநாள் பள்ளிக்கு செல்லவிருந்தான்.நான் வழக்கம் போல ஏதோ துயரிலிருந்தேன்.
நல்ல மழை இரவின் மறுநாள் காலை அது. பள்ளிப்பேருந்து வந்ததும் அவனை ஏற்றிவிட்டேன். படிக்கட்டோரம் அமர்ந்திருந்த ஒரு குட்டிப்பெண் காத்திருந்து அவனுக்கு ஒரு பிறந்த நாள் மிட்டாயை கொடுப்பது தெரிந்தது. ஜன்னல் வழியே அவன் கையசைக்க காத்திருந்தேன் . எதிர்பராமல் ஜன்னல் வழியே அந்த மிட்டாயை என்னை நோக்கி வீசிய தருண் ’’அம்மா எடுத்துக்கோ’’ என்று நகரும் பேருந்திலிருந்து கூவினான். நனைந்திருந்த கரிய தார்ச்சலையில் சரிகைக்காகிதம் சுற்றப்பட்டு கிடந்தது பேரன்பின் இனிமை.
துயர் துடைத்து அகத்தில் சுடர் ஏற்றிய நிகழ்வது. அதைப்போலத்தான் இதுவும்
முன்பே சொல்லப்பட்டிருக்கிறதே
‘’துன்ப நினைவும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடீ!’’ என்று!