சமீபத்தில் நடிகர் சரத்பாபு மரணம் என்று செய்தி பரவியது. இப்போது வளர்ந்த பிள்ளைகளுடன் இருக்கும் என் வயது பெண்களின் இளவயது கனவு நாயகன் அவர். செய்தி கேட்டு, பலர் மனமுடைந்து போனோம். சரத்பாபுவின் பல திரைப்படங்கள் சிறப்பானவை, அதிலும் ரஜினி, ஷோபாவுடன் அவர் நடித்த ’முள்ளும் மலரும்’ பலரின் தனித்த பிரியத்துக்குரியது.
இப்படத்தின் ’செந்தாழம்பூவில்’ பாடலை இன்று வரையிலும் மீள மீளக் கேட்காத என் தலைமுறையினர் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த செய்தி கேள்விப்பட்ட அன்று மீண்டும் ’செந்தாழம்பூவில்’ பாடலை கேட்க நினைத்தேன்.
ஒரு மலைப்பாதையில் வயல் வேலையிலிருந்து திரும்பும் அல்லது செல்லும் ஷோபா உள்ளிட்ட இளம்பெண்களை ஜீப்பின் பின்புறம் அமரவைத்து சரத்பாபு என்னும் எஞ்சினீயர், காடுகள் பெருமரங்கள் தேயிலை தோட்டங்கள் வழியில் இடைபடும் செம்மறியாட்டு கூட்டங்களை ஜீப்பில் கடந்துசென்றபடி பாடும் பாட்டாக இத்தனை வருடங்களாக அது மனதில் பதிந்திருந்தது. பெரும்பாலும் பலநூறு முறை அப்பாடலை ஒலிவடிவில்தான் கேட்டிருக்கிறேன்,
அதைக் காட்சியாகப் பார்க்கும் அவகாசமற்ற, பரபரப்பான பல வருடங்களுக்குப் பின்னர், இப்போது திரையில் பார்க்கையில்தான் சரத்பாபுவுக்கும் ஷோபாவுக்குமான காம்பினேஷன் காட்சிகளே இல்லாமல், அவர்களிருவரும் தனித்தனியாக படமாக்கப்பட்டிருக்கும் அநீதி தெரியவந்தது.
சரத்பாபு பக்கவாட்டு காமிராவை பார்த்து முறுவலிக்கிறார், ஷோபா காமிராக்காரரை அல்லது பாலுமகேந்திராவை பார்த்து நாணுகிறார். தூரக்காட்சிகளில் ஷோபா இல்லாமல் பல பெண்கள் ஜீப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.என்னவோ ஏமாற்றமாக இருந்தது.
இப்பாடலை இறுதிக்காட்சிகளில் காண்பிக்கப்படும் மலைப்பிரதேசங்களில் மட்டும் வளரும் யுலெக்ஸ் யுரோப்பியா என்னும் மஞ்சள் நிற மலர்களும் கூர் முட்களும் நிறைந்த ஒரு பயறு வகை குடும்பத்தை சேர்ந்த செடியை சுட்டிக்காட்டும் பொருட்டு நான் மாணவர்களுக்கு பரிந்துரைப்பேன். கூடவே கற்றலை சுவாரஸ்யமாக்க ஷோபா என்னும் பேரழகியைக் குறித்தும் சொல்வதுண்டு. அந்த பாடல் ஜீப் கடந்து வரும் சில்வர் ஓக் மரங்கள் நிறைந்த தேயிலைத் தோட்டங்கள், பெருமரங்களின் நிழலில் நனைந்திருக்கும் காட்டுப்பாதை, மலைச்சரிவுகள், மலைமுகடுகள் என மிக அழகிய காட்சிப்புலம் கொண்டிருக்கும்.
தாவரவியல் துறை சார்ந்த பிரேமை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதால் எல்லாக் காட்சிகளிலும் கதை மாந்தர்கள், திரைக்கதையில் உண்டாகி இருக்கும் உணர்வெழுச்சி, அக்காட்சியின் முக்கியத்துவம் போன்ற பலவற்றையும் கடந்து திரையில் தெரியும் செடிகொடிகளின் மீதுதான் என் கவனம் முற்றாக குவிந்திருக்கும்.
தாவரங்கள் மீதான அதீத கவனத்தில் புடவையில், படுக்கை விரிப்பில் இருக்கும் மலர், கனி வடிவங்களை கூட கவனமாக பார்ப்பதுண்டு. ஜோதிகா ’’திருமண மலர்கள் தருவாயா’’ பாடலில் ’’வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே’’ என்னும்போது ’’அட, மாதுளை sun demanding செடியாயிற்றே அதைப்போய் ஜோ வீட்டுக்குள் வைத்து இம்சைபண்ணி, தினமொரு கனியைத் தருமாறு கூடுதல் கோரிக்கை வேறு வைக்கிறாரே’’ என்று கவலைப் பட்டிருக்கிறேன்.
காதல் காட்சிகளில் கூட ’’அடடே இந்த மால்வாவிஸ்கஸ் மலர்ச்செடிகள் பின்னால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்திருக்கலாம், செடியை பார்த்தே ரொம்ப நாளாச்சு,’’ என்று அங்கலாய்ப்பது, காதலர்கள் பெயர் பொறித்திருக்கும் மரப்பட்டைகளை கண்டவுடன் ’’இது முதலை மரப்பட்டை அப்படின்னா இது மருத மரம்தான்,’’ என்று கூவுவது, ’’என்னதிது பாட்டில் தாமரைன்னு வருது, இவங்க என்னமோ அல்லிக்குளத்தில் நீந்தறாங்களே,’’ என்று கொதிப்பது, காதலன் அல்லது காதலிகள் பேசிக்கொண்டே, காதல் வேகத்தில் அமர்ந்திருக்கும் புல்வெளியின் புற்களை பிய்த்து கொண்டே இருக்கும் காட்சிகளில் ’’அடப்பாவமே இந்த ஜோய்ஸியா ஆஸ்திரேலியப் புல் வளருவதே பெரும்பாடு அதை ஏன் பிச்சுகிட்டுப் பேசறே’’ என்று மானசீக கண்டிப்புக்களுமாகவே இருப்பேன்.
வெட்டப்படும் வாழைகளையும், வைக்கோல் படப்புக்கு வைக்கப்படும் நெருப்பும், தூக்கிப்போட்டு உடைக்கப்படும் தொட்டிச்செடிகளுமாக Anti Botanical சண்டைக்காட்சிகளில், மனம்வெதும்புவது எப்போதும் நடக்கும்.
எலுமிச்சை, கேரட், மக்காச்சோள லாரிகளில் படுத்துப்புரளும் காதலர்களும், காய்கறி மார்க்கெட்டில் எல்லாத் தள்ளுவண்டிகளிலும் ஏறிமிதித்து துவம்சம் செய்யும் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகளும் ஒரு தாவரவியலாளராகவும் ஒரு நல்ல இல்பேணுநராகவும் எனக்கு தாளமுடியாத வருத்தத்தை உண்டாக்குபவை.
பல்வேறு நிலப்பரப்புக்கள், இயற்கை காட்சிகள், விலங்குகள், தாவரங்கள், நீர்நிலைகள் என பலவற்றுடன் இணைந்த காதல், பாடல், சண்டை காட்சிகள் ஆகியவைதான் கதைகளே இல்லாத பல தென்னிந்திய திரைப்படங்களைத் தோள் தாங்கி நிமிர்த்திச் சில வாரங்கள் தாக்குப்பிடிக்கச் செய்திருக்கின்றன
காதலைச் சொல்லக் கொடுப்பதிலிருந்து, மனம் சிதைந்த தொடர் கொலையாளியால் கொல்லப்பட்ட பெண்களை புதைத்த இடத்தில் நட்டு வைக்கும் குருதிச் சிவப்பு மலர்ச்செடிகள் வரை தமிழ் சினிமாவில் ரோஜா மலர்களின் தாக்கம் ஹாலிவுட் படங்களின் அளவுக்கே இருக்கிறது.
அப்படியே மன்னன் மயங்கும் மல்லிகைகளும். 1974ல் வெளியான தீர்க்க சுமங்கலியில் ஏழுஸ்வரங்களின் நாயகி, சமீபத்தில் மறைந்த இசையரசி வாணி ஜெயராமின் குரலில் மணத்த அதே மல்லிகை கடந்த வருடத்தின் வெந்து தணியும் காட்டில் ஒரு நாயகனை பிரிந்த நாயகியின் தலையில் பிரிவுத் தாபத்தின் வெம்மையில் வாடியது.
மல்லிகை என்றதும் கே ஆர் விஜயாவும் நினைவுக்கு வருகிறார், கிலோ கிலோவாக மல்லிகை மலர்ச்சரம் சூடிவரும் அவரின் தலைக்கனத்தை அநேகமாக எல்லா பாடல்களிலும் வியப்பதுண்டு.
இதுபோலவே கருப்புவெள்ளைப்படமான கொடிமலரில், ’’மெளனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாடவேண்டும்’’ பாடலில் முத்துராமனும் விஜயகுமாரியும் செயற்கை குளம், செயற்கை தோட்டம் என அமைக்கப்பட்ட செட்டில் இருப்பார்கள். விஜயகுமாரிக்கு கூந்தலில் குறைந்தபட்சமாக 4 கிலோ மல்லிகைச்சரமும், குழாயடியில் அமரவைத்து தேய்த்துக்கழுவி விடலாமென்னும் கொதியுருவாக்கும் அதீத ஒப்பனையும் இருக்கும். கையில் ஒரு தாமரை மலரை நல்லவேளையாகக் கசக்காமல் முழுப்பாடலிலும் வைத்துக்கொண்டிருப்பார். அவர்களிருவரும் ஒரு மரத்தருகில் நின்றிருப்பார்கள், அம்மரத்தில் தாவர அறிவியல் அடிப்படையில் சாத்தியமே இல்லாத வகையில் மலர்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
’’ஆயிரம் தாமரை மொட்டுக்களே’’வில் ராதா மலர்ந்த தாமரை மலர்களின் மத்தியில் ட்ராலியில் பயணித்துக்கொண்டும், படுத்துக்கொண்டுமிருப்பார். நாயகனை காட்டிலும் நாயகியிடம் மிக நெருக்கமான இடம் பிடித்திருக்கும் தாமரைகள். குளக்கரையில் காதலிக்கும் அவர்களை சுற்றி பிடுங்கிப் போடப்பட்ட தாமரை இலைகளும், மலர்களும் சோர்ந்து கிடக்கும்.
காதலோவியம் பாடலிலும் ஏராளமாக இதழிதழாக பிய்த்துப் போடப்பட்ட மலர்கள் காதலர்கள் மீது பொழிந்துகொண்டே இருக்கும், காலடியிலும் மலர்கள் மிதிபடும்.
பல்வேறு மலர்களை காட்சிக்குள் கொண்டுவந்த புண்ணியத்தை பெரும்பாலும் பாரதிராஜா கட்டிக்கொண்டார்.
கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் அகலக்கண்களுடன் அருணா சலவை செய்த பாரதிராஜாவின் உடைகளை எடுத்துக் கொண்டு வருவார். அறைக்குள் நுழையும் முன்னர் வாசலிலிருக்கும் ஒரு செடியின் சிறுமலர்க்கொத்தொன்றைப் பறித்து சலவை சட்டைகளின் மீது வைத்து அப்படியே மேசையில் வைத்துவிட்டு வந்துவிடுவார். கலைஞனான பாரதிராஜாவால் அம்மலர்களின் சுகந்தத்தை ரசிக்காமல் இருக்க முடியாதல்லவா, அவர் அருணா ஒளிந்திருந்து பார்ப்பது தெரியாமல் மலர்களை நுகர்வார். அருணாவின் இளமனதில் கிளைவிரித்து பெருமரமாகவிருக்கும் ஓர் காதல்விதையூன்றப்படுவதைக் காட்டும் அழகிய காட்சியது
ஆனால் மிகக் கோரமாக மலர்கள் தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா முழுவதிலுமே காட்டப்பட்ட இடமென்றால் அது முத்தக்காட்சிகளில் தான்.
காதலை உன்னதமாக காட்டிய திரைப்படங்களே அரிதினும் அரிதுதான் அக்காலத்தில். அப்போதைய சமூக கட்டுப்பாடுகள் அப்படி.
’’ஏரிக்கரை மேலே போறவளே பெண்மயிலே, நில்லுகொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போலாம் பெண்ணே’’ என்னும் பாடல் வெளியான போது மரபுகளில் ஊறித்திளைத்திருந்த வேறு ஒரு பாடலாசிரியர் இத்தனை வெளிப்படையாக காதலியை அழைக்கும் ஒரு பாடல் திரையில் காட்டப்படும் இந்த காலத்தில் நானும் திரைப்பாடலாசிரியர் என்று சொல்ல வெட்குவதாக அறிவிக்து திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகியதை பிற்பாடு கேள்விப்பட்டிருக்கிறேன். அதன்பின்னர் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழத்துக்கு பதிலாக என் கன்னம் வேண்டுமென்றான் பாடல் வெளிவந்தபோது அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.
எனவே அத்தனை கட்டுப்பாடும் ஒழுக்க நெறிகள் என்னும் கற்பிதங்களும் நிறைந்திருந்த சமூகத்தில் முத்தக்காட்சிகள் காட்டப்படத் துவங்கியது பெரும் புரட்சியாகத்தான் இருந்திருக்கும்.
அப்போதைய இந்திய திரைப்படங்களில் காதல் இலைமறை காய் மறையாகவும், முத்தம் மலர்மறையாகவும் காட்டப்பட்டது. ஒரு பெருமலர் அல்லது மலர் நிறைந்த செடி, இவற்றில் ஏதேனும் ஒன்றின் பின்னர் காதலனும் காதலியும், முகத்தை அல்லது முழு உடல்களை மறைத்துக் கொண்டபிறகு அவற்றை வெகு வேகமாகவும் ஆபாசமாகவும் அசைத்து, அல்லது ஒன்றுடன் ஒன்று ஒட்டவும்முட்டவும் வைத்து முத்தமிடப் பட்டதை பார்வையாளர்கள் யூகித்துக்கொள்ளுபடி காட்டினார்கள்.
இதைவிட கேவலமாக ஒரு முத்தத்தை காட்டவே முடியாது .
பின்னர் கொஞ்சம் துணிவு வந்த காலத்தில் மலர்களின் தேவை மெல்லக் குறைந்து காதலி வெட்கப்பட்டு கொண்டே தன் உதட்டை துடைத்து கொள்ளும் நேரடிக்காட்சிகள் முத்தத்தை உணர்த்த வந்தன. மலர்களும் தப்பிப்பிழைத்தன. பின்னர் ரகஸ்யமென்றோ உன்னதமென்றோ ஏதுமில்லா காதல்கள் மலிந்த திரைப்படங்கள் வந்தபோது எல்லா உணர்வுகளுமே பரஸ்யமாக பட்டவர்த்தனமாக காட்டப்பட்டன.
எம்ஜிஆர், லதாவின் ’’நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது’’ என்னும் பாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மிக கவர்ச்சியான, உடலை ஒளிவு மறைவின்றி காட்டும் ஒரு சிங்கிள் பீஸ் உடையில் லதாவும், வழக்கம்போல அழுத்தமான நிறத்தில் கோட்டும் சூட்டுமாக கூடுதல் ஒப்பனையில் எம்ஜிஆரும் இருக்கும் அந்த பாடல்காட்சியை ஒலியை குறைத்துவிட்டு பார்த்தால் முழுப்பாடலும் விரசமாக மட்டும்தான் இருக்கும். லதாவின் ஒவ்வொரு அசைவும் ’’நான் அழகி என்னைப் பாருங்கள்’’ என்று எம்ஜிஆரை அழைத்துக்கொண்டே இருக்கும். வேடிக்கை என்னவென்றால் நடனம் என்னும் பெயரில் அந்த பாடலில் படுக்கை அறை காட்சிகள்தான் காட்டப்பட்டிருப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.
பல தமிழ்ப்பாடல்கள் அப்படிதான். ஆனால் இதில் அத்தனை நெருக்கமான காதல் காட்சிகளின்போது அவர்களை சுற்றிலும் தடித்தடியாய் பல ஆண்களும் நல்ல அழகிய அலங்காரங்களுடன் பல பெண்களுமாக நின்று கொண்டு இவர்களின் நெருக்கத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுதான் தாங்க முடியவில்லை.
அந்த நடன இயக்குநரின் கரங்களை மானசீகமாக கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். அத்தனை ரசனையான அசைவுகள் லதாவுக்கு, எம்ஜிஆருக்குத்தான் எப்போதும் நடன அசைவுகள் தேவையில்லையே. அவருக்கு மிகப்பிடித்த, எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம் என்னும் சாத்தியம் கொண்ட ஒரு உணவுப் பண்டத்தை போலவே பாடல் முழுவதும் லதாவை எம்ஜிஆர் பார்த்துக் கொண்டிருப்பார். காமிராக்கோணங்களை பற்றியெல்லாம் பொதுவில் பேசவே முடியாது.
’’நில்லு கொஞ்சம் நானும் வாரேன்’’ என்பதற்கே கோபித்துக்கொண்டவரை, இப்பாடலை பார்க்கும் போதெல்லாம் நினைத்துக்கொள்வது வழக்கம்.
காதலை, அத்தனை மறைவிலும், இத்தனை அப்பட்டமாகவும், இந்தியச் சினிமா எதிரெதிர் முனைகளில் நின்று காட்டி கேவலப்பபடுத்திக் கொண்டேதான் இருக்கிறது. ஒரு சில மலையாளப் படங்களைத் தவிர பிற மொழிப் படங்களில் காதல் பல்வேறு வழிகளில் சிதைக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
அழகிய உரையாடல்களில் எளிமையாக அழகாக, வார்த்தைகளில் காதலை வெளிப்படுத்த முடியாதென்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பவை தமிழ் சினிமாக்கள். மீசை மாதவனில் ’’பிணங்கல்லே’ என்னும் காவ்யாவின் கொஞ்சலில் தெரிவிக்கப்படும் காதலுக்கீடாக தமிழில் எந்த காட்சியை சொல்லமுடியும்?
சந்ரோல்ஸ்வம் திரைப்படத்தில் முன்காதலியும் அப்போது விதவையும் ஆகிவிட்டிருக்கும் மீனாவுடன் நான்கு கட்டுவீட்டின் நடுமுற்றத்தின் தாமரைக்குளத்தில் மழை பெய்து கொண்டிருக்கையில் பழைய நினைவுகளை பேசிக்கொண்டு மீனாவின் எதிர்காலம் குறித்து படிகளில் எதிரெதிரே அமர்ந்தபடி லாலேட்டனும் மீனாவும் உரையாடும், மழையின் ஸ்ரீ ராகத்தில் ஒரு துண்டு கீர்த்தனையை மீனா பாடிக்காட்டும் அக்காட்சி முழுக்கவே காதல் நிறைந்திருக்கும்.
இப்படி பல உதாரணங்கள் காட்டலாம் வங்காள மற்றும் மலையாளப் படங்களில், அரிதாக பழைய இந்தி படங்களில்.
தமிழில் அதுபோன்ற காட்சிகள் வணிக வெற்றியைத்தராதவை என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறது போல. அப்படியான காட்சிகளை கமல்ஹாசனைத் தவிர பிறர் சிந்திப்பதில்லை, அல்லது அவர்களுக்கு அமைவதில்லை.
‘சலங்கைஒலி’ படத்தில் காதலி ஜெயப்ரதாவை கணவருடன் ரயிலேற்றிவிடுகையில் அவரைப் புகைப்படமெடுக்க முனைவார் கமலின் பாத்திரம். காமிரா வழியே காணும் அவரின் பேரழகை, அதை இழப்பதின் துயரைத் தாங்கமுடியாத கமலின் நடிப்பை, அவர் உடல்மொழியில் தெரியும் காதலைப் போலவெல்லாம் காட்சிகளை அதற்கு முன்பும் பின்பும் தமிழில் யாரும் கொண்டு வந்ததில்லை. சமீபத்தில் மறைந்த புகழ் பெற்ற இயக்குநர் கே. விஸ்வநாத் இந்தக் காட்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
மலையாளப் படங்களுக்கு வரலாம் மீண்டும். கேரளாவின் பாரம்பரியமும் இயற்கை அழகும், நிலக்காட்சிகளும் இடம் பெறாத மலையாளப்படங்கள் அரிதினும் அரிது கப்பைக் கிழங்கு, மீன், கஞ்சி, தென்னை,வாழை, யானை, சந்தனக் குறியிட்ட நெற்றிகள், அகலக் கண்களுக்கு மை எழுதிய நாயகிகள், முண்டும் துவர்த்தும் அம்பலமும், வாழையிலைப் பிரசாதமும், காடும் மலையும், மழையும், விவசாய பூமியும் இல்லாத மலையாளப்படங்களை தேடித்தான் பார்க்கவேண்டும்.
இப்படித் தங்களின் நிலத்தை, இனத்தை , மொழியை கலாச்சாரத்தை இயல்பாக பிரதிபலிக்கும் கலைகள் தான் காலத்தை கடந்தும் நிற்பவை.
தமிழிலும் கிராமியப்படங்களில் வயலும் வரப்பும் தோப்புமாக முழுக்க பொள்ளாச்சியை அதன் சுற்றுப்புறங்களை நம்பி எடுக்கப்பட்ட படங்கள் பலநூறிருக்கும். ஆனால் அனைத்திலும் பேசுபொருள் காதல் மட்டும்தான் என்பதுதான் ஆயாசமளிப்பது. அவற்றில் கதை என்று ஒன்று இருக்குமா என்னும் கேள்விக்கெல்லாம் போகவே வேண்டியதில்லை, ஆனால் கண்ணை நிறைக்கும் பசுஞ்சூழல் நிச்சயம் இருக்கும்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமலிருப்பதற்கு சினிமா படப்பிடிப்புக்களும் காரணம். அதிகாலை டிராக்டர்களிலும், குட்டியானை எனப்படும் சிறு பார வண்டிகளிலும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் ஆட்களை திரட்டிக்கொண்டு போவர்கள் crowd artists எனப்படும் இவர்களுக்கு ஒப்பனை தேவையில்லை, நடிப்பும் சொல்லித் தர வேண்டியதில்லை.
ஆலமரத்தடி பஞ்சாயத்தில் வெறுமனே குந்தி அமர்ந்திருக்க வேண்டும் கோழிப்பண்ணையில் நடக்க்கும் சண்டையின்போது நாலா திசைகளிலும் சிதறி ஓடவேண்டும், செட்போடப்பட்டிருகும் காய்கறி மார்க்கெட்டில் குறுக்கும் மறுக்கும் நடக்கவேண்டும், காய் வாங்க வேண்டும், வயலில் களை எடுக்கவோ, நெல்லறுக்கவோ வேண்டும். இப்படி சிக்கலில்லாத வேலைதான். 400 ரூபாய்களும், மதிய உணவும் தண்ணீர் பாட்டிலும் அளிக்கப்படுகிறது பிறெகெங்கே விவசாய கூலிவேலைகளுக்கு ஆட்கள் வருவது?
அதுபோலவே மழை, அணை ஏரி கடல் குளம் குளக்கரை ஆறு போன்ற நீர்நிலைகளும் தமிழ்சினிமாவில் வழக்கமாக காட்டப்படுவதுண்டு
பத்தில் 8 தமிழ் படங்களில் ஆளியார் அணை தவறாமல் இடம் பெற்றிருக்கும். கோழி (சேவல்) கூவி விடியும் தேனீர்க்கடையில் புகைபோகும் பாய்லர்கள்,, சமையலறையில் ஆவிபறக்கும் இட்லிப்பாத்திரங்களும் கதிரெழும் துவக்கக்காட்சிகளும் மலிந்துதான் கிடக்கின்றது.
எனினும் தமிழ்சினிமாவில் அரிதாகவே காதலர்கள் சாலையை குறுக்கே பத்திரமாகக் கடந்து தர்பூசணி கீற்று வாங்கி சாப்பிடுகிறார்கள் அப்படியான இயல்பான் காட்சிகளுக்கு மறுபடி நாம் மலையாளப்படங்களுக்கு தான் போகவேண்டி இருக்கிறது.
நாடோடிக்காற்று படத்தில் ஷோபனாவுக்கு அம்மியில் தேங்காய் அரைத்துக்கொடுத்து, வாசலில் கோலம் போட்டு, அவர் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கருகே இருக்கும் டீக்கடையில் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு வர்க்கி தொட்டுக்கொண்டு டீ குடித்தபடி, ஷோபனாவையும், டீ குடிக்க வற்புறுத்தி அழைத்து செல்லும் அழகிய காட்சிகள் கொண்ட பாடலான ’’வைசாக சந்தியே’’ பாடல் நான் பலநூறு முறை கண்டு ரசிக்கும் பிரியப்பட்ட பாடல்களில் பட்டியலில் ஒன்று.
இயல்பான காட்சிகளில் தமிழ் சினிமாக்காரர்களுக்கிருக்கும் ஒவ்வாமை ஆச்சர்யமூட்டும். பொள்ளாச்சி கரும்பு காட்டில் காதல் சொல்லப்பட்டதும் , காதலர்கள் கோட்டும் சூட்டும் உடலை இறுக்கிப்பிடிக்கும் உடையுமாக சுவிட்ஸர்லாந்தில் டூயட் பாடுவது நல்ல ரசனைக்காரர்களுக்கு எத்தனை துயரளிக்கும் என அவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை
பேருந்து நிறுத்தங்களும், ரயில்நிலையங்களும் இல்லாத தென்னிந்திய சினிமாவே இல்லையென்றே சொல்லலாம். தமிழ்சினிமாவில் பேருந்துநிறுத்தங்கள் என்னும் தலைப்பில் எளிதாக ஒரு முனைவர் பட்ட ஆய்வை செய்துவிடலாம், சுவாரஸ்யமாக இருக்கும்.
கமலின் பாபநாசம் திரைப்படத்தின் கதையை மேலும் சுவாரஸ்யமாக்குவது தென்னையும், காப்பியும், வாழையும் செறிந்து வளர்ந்திருக்கும் அந்த தோட்ட வீடு தான் இல்லையா? ஜப்பானில் கல்யாணராமன் படத்தை நினைத்தாலே செர்ரி மரங்களுக்கடியில் ராதா பாடும் ’’சின்னப்பூ சின்னப்பூ’’ பாடல் தான் நினைவுக்கு வரும்.
ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் தீபாவை காடுமலையெல்லாம் கூட்டிச்செல்லும் சிவச்சந்திரனின் புல்லட்டில் நாமுமல்லவா அமர்ந்திருப்போம்?
நிழல்கள் பாடலான ’’இது ஒரு பொன்மாலைப் பொழுதில்’’ மரங்களடர்ந்த சாலையும் தீக்கொன்றைகளும், கடற்கரையும், புல்வெளியும், கதிரணைதலுமாக 80களின் சென்னைச்சாலை அந்தியின் செவ்வொளியில் மூழ்கிக் கொண்டிருக்கும்.
தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பிரபல பாடலான ’’காதலின் தீபமொன்று’’ துவங்குகையில் பட்டைஉரித்திருக்கும் யூகலிப்டஸ் மரத்தில் சுமதி என்று பெயரெழுதி முத்தமிடும் ரஜினியை காட்டித்தான் துவங்கும், அந்தப் பாடலில் அவர்களுக்கிடையில் உருவாகி இருக்கும் காதலை எண்ணியபடி ஓங்கி உயர்ந்த யூகலிப்டஸ் மரங்களின் காடுகளில் நடந்தபடி ரஜினி சென்று கொண்டிருப்பார். ரஜினியின் இயல்பான பாடல்களில் இதுவும் ஒன்று
ஊட்டியின் யூகலிப்டஸ் காடுகளும் பொள்ளாச்சி அருகே இருக்கும் வனப்பகுதியான சர்க்கார்பதியின் முள்மரக்காடுகளும் பல காதலை சொல்லி இருக்கின்றன.
என் தனித்த பிரியத்துக்குரிய படமான பன்னீர்புஷ்பங்கள் திரைப்படத்திலும் ’’ஆனந்தராகம்’’ பாடலில் அந்த பள்ளியின் ஆரம் லில்லிகளும், பைன். யூகலிப்டஸ், சாம்பிராணி மரங்களுமாக திரையில் பச்சிலை வாசனையே அடிக்கும்
அதிலேயே ’’பூந்தளிராட’’ பாடல் லவ்டேலின் ரயில் நிலயத்தையும் தண்டவாள விளிம்பில் தடுமாறிக்கொண்டு நடந்துவரும் இளங்காதலர்களையும் புகைந்து கொண்டுவரும் ரயிலையும் பட்டையுரித்த யூகலிப்ட்ஸ் மரங்களுக்கிடையில் அழகாக காட்டும்.
பகத்ஃபாசிலின் மகேஷிண்ட ப்ரதிகாரம் படத்தின் துவக்க காட்சியிலேயே அவர் குளிக்கும் நதிநீரில் இரண்டு நட்சத்திர பழங்கள் மிதந்து வரும்.
அப்படியான வெகு இயல்பான இயற்கையுடன் நெருங்கிய காட்சிகள் அப்படங்களை அணுக்கமாக்கிவிடும்
உயரக்காட்சியில் படம் துவங்கும்போதே பாம்புபோல வளைந்து வளைந்து செல்லும் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, கொல்லிமலை, கேரளா என்று மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியை காண்பித்து துவங்கும் எந்தப்படமானாலும் கதையையோ கதைமாந்தரையோ பற்றி கவலையின்றி முழுப்படத்தையும் அவை எடுக்கப்பட்ட கதைக்களத்திற்கெனவே பார்த்து ரசிப்பதுண்டு. சில காட்சிகளில் தெரியும் சில அரிய தாவரங்களை பார்த்து பரவசமடைவதும் வழக்கம்.பல திரைப்படங்களில் உள்ளறை அலங்காரங்களில் அழகிய பசுஞ்செடிகள் பிரமாதமாக காட்டப்பட்டதுண்டு.
தமிழ்சினிமாவில் இயல்பான இயற்கை காட்சிகளும் காதில் கேட்கும்படியானதும், என்றும் மறக்கமுடியாத நல்ல இயற்கைகாட்சிகளுமாக பாரதிராஜா இளையராஜா கங்கைஅமரன் ஆகியோரின் கூட்டணிக்காலத்தில் நமக்கு காணக்கிடைத்தது
குறிப்பிட்ட நிலப்பரப்புக் காட்சிகளில் திரைப்படங்களை காட்டுவது உலகசினிமாக்களின் முக்கிய அம்சமாகும், இது கதைக்களத்திற்கு பார்ப்பவர்களை அணுக்கமாக்கி, கதையில் அவர்களையும் ஈடுபடுத்துவதின் மூலம் பார்வையாளர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஈர்க்கின்றது
திரைப்படங்களின் அழகியல் மற்றும் கதைப்போக்கு இவ்விரண்டிலும் பங்களிப்பதில் நிலப்பரப்பின் முக்கியத்துவம் வெகுவாக இருக்கும் போதிலும், இந்திய சினிமாவில் நிலக் காட்சி பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம் பற்றி மிகக் குறைவாகவே அறியபட்டிருக்கிறது.
அடர் வனங்கள், பனிமூடிய மலைமுகடுகள், பாழ்நிலங்கள், பாலைவனபெருமணற்பரப்புக்கள், சந்தடியான நகரங்கள், இயற்கை எழில் நிறைந்த கிராமப்புறங்கள் கைவிடப்பட்ட பின்னி மில்ஆகியவற்றை திரையில் காண்பவருக்கும் அந்நிலப்பரப்புக்குமான அந்தரங்கமான நினைவுகளும் கதையோட்டத்துடன் கலந்து திரைப்படக்குழுவினர் எண்ணியிராத வடிவத்தில் ரசிகர்களிடம் அக்காட்சி சென்று சேரும். ரசிகர்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பை நினைவூட்டும் ஒரு ஊடகமாக இப்படியான காட்சிகள் அமைந்துவிடுகின்றன.
அவற்றின் மகத்தான குறியீட்டு மதிப்பினால், குறிப்பிட்ட நிலப்பரப்புக்காட்சிகள் கொண்ட படங்கள் அச்சினிமாவிற்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான பரந்த உரையாடலின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றன.
உதாரணமாக ஹாலிவுட் படமான ’The mountain between us’ என்பதை எடுதுக்கொள்ளலாம்.
துவக்கத்தில் சில காட்சிகளில் மட்டும் வரும் வால்டர் என்னும் விமான ஓட்டியும், இறுதிவரை பெயரிடப்படாத கோல்டன் ரெட்ரீவர் நாயொன்றையும் தவிர, பரந்து விரிந்திருக்கும் பனிமலை முகடுகளுக்கு நடுவில் நாயக நாயகி இருவர் மட்டுமே கதைமுழுக்க வருகிறார்கள்.
பனிக்காற்றில் உலையும் பைன் மரங்களும், முகத்திலும் உடைகளிலும் ஒட்டியிருக்கும் பனிப்பொருக்குகளும் , உலர்ந்த உதடுகளும், வழக்கமான ஒப்பனையின்றி வீங்கிய முகமும் ரத்தக்காயங்களுமாய், எப்போதுமாய் கொட்டிக்கொண்டிருக்கும் பனியும், அதில் கால் புதையப்புதைய இருவரும் நாட்கணக்காக நடப்பதுமாய் வழமையான திரைக்காட்சிகளினின்றும் மிக வேறுபட்ட ஆனால் அழகுக்காட்சிகள்.
இவர்களிருவரும் சிக்கிக்கொண்டிருக்கும், முடிவற்றதுபோல தோற்றமளிக்கும் பனிமலையையல்ல இக்கதையும் அதன் தலைப்பும் பேசுவது, அது ஒரு குறியீடுமட்டும்தான், வாழ்வு குறித்தான விழைவுகளும் அச்சங்களும் கவலைகளும் திட்டங்களுமாக இவர்கள் இருவருக்கும் இடையில் உருவாகியிருந்த மாபெரும் பனிமலையொன்றினைக்குறித்தும் அது மிக மெல்ல அவர்களுக்குள் உருவாகும் காதலின் வெம்மையில் கரைவதையுமே இத்திரைப்படம் பேசுகின்றது.
சில வருடங்களாகவே சினிமா சுற்றுலா பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. ரஜினி பாறை, குணா குகை, குஷ்பூ குளம், தேவர் மகன் அரண்மனை வீடு, ஜியா ஜலே பாடலுக்கு பிறகு அதிரப்பள்ளி அருவி, குசேலனுக்கு பிறகு ஆலப்புழை, கடலோர கவிதைகளுக்கு பிறகு முட்டம் கடற்கரை என்று சொல்லிக்கொண்டே போகலாம் உதாரணங்களைக் கவனமாக கையாளப்படுகையில் நிலப்பரப்புகாட்சிகளை காட்டும் சினிமாக்கள் நமது கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் உதவுகிறது.இந்தியா கேட்டும், தாஜ்மகாலும், சார்மினார் சதுக்கமும் தலைமுறைகளாக நம் நினைவில் நின்றுகொண்டிருக்கிறதல்லவா?
பல்வேறு வகையான நிலப்பரப்பு மற்றும் வாழ்விடங்களை கொண்டிருக்கும் இந்தியா திரைப்படம் தயாரிக்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும், சர்வதேச மற்றும் உள்நாட்டு சினிமாக்களை தயாரிப்பதற்கான ஒரு வசீகரமான இடமாகவும் இருக்கிறது.
சினிமாக்கலையுடன் சினிமா அனுபவமும் மாறிக்கொண்டே இருக்கிறது. 70, 80களில் சினிமாவுக்கு செல்லுதல் என்பதே ஒரு பெரிய குடும்ப நிகழ்வாக, கூட்டு அனுபவமாக இருந்தது, அந்த சினிமாஅனுபவம் பலகாலங்களுக்கு நினைக்கப்படும் போற்றப்படும் ஒன்றாகவும் இருந்து. பின்னர் நகரங்களின் மல்டிப்ளெக்ஸுகள் வேறு விதமான அனுபவங்களை அளித்தன.
கனிணி மயமாக்கல் இப்போது தொடுதிரைகளை நம் விரல்நுனிகளில் உயிர்ப்பித்து சினிமாவை அந்தரங்க அனுபவமாக வீட்டறைகளுக்குள் கொண்டுவந்து விட்டிருக்கிறது.
செந்தாழம்பூவில் காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்பது பல வருடங்கள் கழித்தே எனக்கு தெரியவந்திருக்கிறது. ஆனால் சினிமா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் அத்துப்படியாயிருக்கும் இந்த தலைமுறையினரை லேசாக நினைத்துவிடக்கூடாது.
பிரம்மாண்ட வெள்ளித்திரை அனுபவம் மீச்சிறு தொடுதிரை அனுபவமாகிவிட்டிருக்கும் இக்காலத்தில் நிலப்பரப்புகளை, இயற்கையின் அம்சங்களை, கலச்சாரங்களை, மரபை சினிமா என்னும் மாபெரும் சக்திவாய்ந்த ஊடகத்தின் மூலம் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் பொறுப்பு சினிமாக்காரர்களின் தோளில்தான் இருக்கிறது.
மாறிக்கொண்டு வரும் உலகை மனதில் கொண்டு கண்ணியமாகவும் கவனமாகவும்,அதே சமயம் கொண்டாடும்படியும் சினிமாக்கள் உருவாக்கப்படவேண்டி இருக்கிறது.
இந்த கட்டுரையை வாசித்து முடித்ததும் உடனடியாக ’’நீல நயனங்களில்’’பாடலை யூடூபில் பார்க்கச்செல்பவர்கள் அதற்கு பிழையீடாக மகேஷிண்ட பிரதிகாரத்தின் ’’இடுக்கி’’பாடலையோ அல்லது இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே நம்மை விட்டுபிரிந்த சரத்பாபுவின் ’’செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றலை’’யோ சேர்த்துப் பார்க்கலாம்.