வாசிப்பிற்குள் நான் மிக இளமையிலேயே நுழைந்துவிட்டேன் என்றாலும் அப்போது அவை திருட்டுத்தனமான வாசிப்பென்பதால் அத்தனை மகிழ்ந்து வாசித்திருக்கவில்லை அப்பாவுக்கு பெண்கள் கதைப்புத்தகம் வாசிப்பதில் பெரும் ஆட்சேபணை இருந்தது, வாரப்பத்திரிகைகளுடன் என்னையோ அக்காவையோ பார்த்துவிட்டால் வீடு இரண்டுபடும். அவர் வீட்டில் இல்லாத சமயங்களில் அவசரமாக படிப்பதுண்டு.

அப்போது பெரும்பாலும் காதல் கதைகள் தான் வந்துகொண்டிருந்தன என்பதும் காதல் திருமணத்தின் எல்லா பாதகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர் என்பதையும், இப்போது நினைக்கையில் அப்பாவின் அந்த மூர்க்கத்தை கொஞ்சமாகவேனும் புரிந்துகொள்ள முடிகின்றது

சுதந்திரமாக வாசிக்க தொடங்கியது நூலகம் சென்ற கல்லூரிக் காலங்களில் தான் அப்போதும் வீட்டுக்கு பின்னே இருந்த கல்லூரி என்பதால் அதிக நேரம் செலவழிக்க முடிந்ததில்லை. கோவை பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காகச் சென்று விடுதியில் தங்கியிருந்தபோது தான் ஏராளம் வாசித்தேன். என்னை முழுக்கவே வாசிப்பு அப்போது மூடிக் கொண்டிருந்தது.

பல்கலைக்கழகத்துக்கு எதிரே   A-Z  என்று ஒரு இரவல் புத்தக நிலையம் இருந்து. அங்கே பெண்கள் கூட்டம் அலைமோதும் ரமணிசந்திரன் அங்கேதான் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தார். ஒரு வாரத்தில் திருப்பி கொடுக்கையில் புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கும் விலையில் 10 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு பேருந்தில்  பயணித்த அந்த சில வருடங்களில் எப்போதும் என்னுடன் எண்டமூரியோ, சுஜாதாவோ, பாலகுமாரனோ, லா சா ரா வோ , தி ஜாவோ உடனிருந்தார்கள். அப்போதுதான் அ முத்துலிங்கம் அவர்களையும் அறிந்து கொண்டிருந்தேன்

அ.முவின் கதைகளின் மாந்தர்கள், கதைக்கரு, நிலக்காட்சிகள் என்ற அத்தனை சுவாரஸ்யங்களைக் காட்டிலும் அவரது தூய இனிய மொழி என்னை கவர்ந்தது. இலங்கை தமிழின் மீது எனக்கு எப்போதும் தனித்த பிரியம் உண்டு. மொழியின்பத்துக்காகவேதான் நான் பிரதானமாக அவரது கதைகளை வாசித்தேன்

என்  ஆய்வு நெறியாளருக்கு கோத்தகரி வனக்கல்லூரிக்கு மாற்றலானதும்  இரண்டு வருடங்கள் பொள்ளாச்சி- கோவை- மேட்டுப்பாளையம்- கோத்தகிரி என்று கூடுதலாக பயணங்களும் கூடுதல் வாசிப்புமாக இருந்தேன். அட்டையிலிருந்து அட்டை வரை நிதானமாக வாசித்த அச்சமயத்தில்  புத்தகங்களை யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பதும் விசித்திரமானவைகளை  குறித்து வைத்துக்கொள்வதும் வாடிக்கையாக இருந்தது.

தனக்கு பிரியமான சிவப்பு மதுவுக்கு, மனப்பிறழ்வு நோய்க்கு தானெடுத்துக் கொள்ளும் மருந்துக்கு, இறந்த தன் மனைவிக்கு போன்ற சமர்ப்பணங்கள் இருந்தன. தனது, ஏராளமான, நெருக்கமான காதலிகளுடனான  உறவைச் சொல்லிய நூலொன்று எழுதியவரின் மனைவிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது):. தன்னை முதன்முதலாக நூலகத்துக்கு அழைத்துச் சென்ற தனது அன்னைக்கு ஒரு நூல், தனக்கு பிரியமான முலாம்பழத்துக்கும் ஒருநூல் அர்ப்பணமாயிருந்தது.

2016 எனக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு முதன் முதலாக வீட்டைவிட்டு, மகன்களை பிரிந்து  மற்றொரு இடத்தில் ஒரு மாதம் தங்கி இருந்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்த கொந்தளிப்பான காலமது.  ஒரு மாத கால துறை சார்ந்த பயிற்சியையும் அச்சமயத்தில் எடுத்துக் கொண்டிருந்தேன். பல்கலைக்கழக பேருந்தில் பயிற்சிக்கு செல்லுகையில் நட்பான பேராசிரியர் ஒருவர் எனக்கு அ. முவின் ‘’மகாராஜாவின் ரயில் வண்டி’’ தொகுப்பை வாசிக்கக் கொடுத்தார். நூலாகவோ அல்லது மின்னூல் வடிவிலோ அல்லாது நகலெடுத்த பக்கங்களை இணைத்து புத்தகமாக்கிய வடிவம் அது

நாள் முழுக்க நீண்ட பயிற்சியின் முடிவில் களைத்துப் போயிருந்த ஒரு நாள் இரவில் அதை பிரித்து வாசிக்கத் துவங்கினேன். மகாராஜாவின் ரயில் வண்டி என்னும் அந்த நூலை அ.மு  சமர்ப்பித்திருந்தது,  அவரால் உயிரிழந்த ஒரு பறவைக்கும் பிறக்காமல் போன அதன் சந்ததிக்கும். அவரே அது சமர்ப்பணமல்ல பிராயச்சித்தம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த ஒரு பத்தி என்னை கசிந்துருகச் செய்துவிட்டது. இளமையின் வேகத்தில் நண்பனுடன் சேர்ந்து விளையாட்டாக செய்யப்போன ஒரு காரியம் விபரீதமாக முடிந்து ‘பாம்’மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஒரு பாவமும் செய்திராத அந்த கொழுத்த பறவை உயிரிழந்ததை   சொல்லுகையில்:

//அந்தகாகம் ஒரு குற்றமும் செய்யவில்லை. அது செய்ததெல்லாம் அந்த நாட்டில் இருந்த அத்தனை காடுகளில், அந்த காடுகளில் இருந்த அத்தனை மரங்களில், அந்த மரங்களிலிருந்த அத்தனை ஓலைகளில், அந்த வளைந்த ஓலையை தேர்வு செய்து அங்கே தன் பாட்டுக்கு உட்கார்ந்திருந்துதான். இந்த புத்தகம் ஒருபாவமும் அறியாத அந்த பறவைக்கு,பிறக்காமல் போன அதன் சந்ததிகளுக்கு// என்று சொல்லி இருந்தார்.

 எத்தனை வாஞ்சையும், பரிவும், கருணையும், அறியாத செயலுக்கான குற்ற உணர்வும் கலந்த ஒரு சமர்ப்பணம்? இந்தவரிகளில் காணமுடிந்த அந்த மனதின் ஈரம் என்னால் ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் அவ்விரவு முழுவதும் உறங்காமல், உறக்கம் வராமல் ஒரே மூச்சில் அத்தனை கதைகளையும் வாசித்து முடித்தேன்.  அத்தொகுப்பின்  75 கதைகளின் ஒவ்வொரு வரியும் அ.முவின் அந்த கனிவில் தோய்ந்தவைகளாகவே இருந்தன.

அப்போது எனக்கிருந்த பல சிக்கல்களிலிருந்து நான் எளிதில் அந்த தூய அன்பின் கையைப்பிடித்துக் கொண்டு கடந்தும்  வந்து விட்டிருந்தேன். இத்தனை நல்ல மனம் கொண்ட மனிதர்கள் இருக்கையில் நான் அஞ்சவும் நம்பிக்கையிழக்கவும் தேவையில்லை என்று ப் மனமார நம்பினேன்

 ’’ஓர் அவமானத்தை ஓர் இளவெயில் போக்க முடியுமானால், ஓர் இழப்பை ஒரு மென்மழை மறக்கச் செய்ய முடியுமானால், ஒரு நோயை பூவின் நறுமணத்தால் சமன் செய்து கொள்ள முடியுமானால், வாழ்க்கையில் அஞ்சக்கூடியதாக ஏதுமில்லை..!!என்று சொல்லி இருப்பார் ஜெயமோகன்

அப்படி என் முன்பாக ஒரு பெரிய மலையைப் போல நின்றிருந்து அச்சமூட்டிய ஒரு சிக்கலை  அ. முவின் அந்த கனிவினால் திரைச்சீலையை தள்ளி விலக்குவதுபோல் எளிதில் கடந்து வந்துவிட்டேன். உலகம் அப்படியொன்றும் அன்பின்மையால் வரண்டு விடவில்லை என்று அந்த சமர்ப்பணம் எனக்கு சொல்லியது.

அவரின் பல படைப்புக்களை நான் வாசித்திருந்தும் இந்த குறிப்பிட்ட தொகுப்பு என் தனித்த பிரியத்துக்குரியதானது.

கோடைமழையில் அவரது சொந்த ஊரான கொக்குவில்லிலிருந்து புறப்படும் மஹாராஜாவின் ரயில் வண்டி ’எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலையில் நிற்கும்’ வரை நான் வண்டியை விட்டு இறங்கவேயில்லை.

அடிக்கடி இடையில் சுருட்டு, புகையிலை, சிகரெட் வாடை வந்து கொண்டிருந்தது,  மழை பெய்தது, வெயிலடித்தது, புழுதி பறந்தது அதிக ரிக்டர்  அளவிலான பூகம்பம் வந்தது, போர் தொடர்ந்தது, ஏதேதோ ஒழுங்கைகள் வழியாக பயணம் ஆப்பிரிக்காவிலும் கொக்குவில்லிலும் சோமாலியாவிலும், நைரோபியிலும் தொடர்ந்தது.  இடையே யாழ்தேவி கணக்காய்  நேரத்துக்கு கடந்து சென்றது. கச்சான் காற்றும் சோளக்காற்றுகளும் அடித்தன

ரயிலெங்கும் குட்டிக்கூரா மணந்தது, இடைக்கு கல்பெஞ்சும், கவண்மேந்தும் வருகின்றன,  நாடன் பாட்டுக்களும் பழமொழிகளும் சிறார்களின் விளையாட்டுப் பாட்டுக்களும் காதில் கேட்டது.

இரண்டு பூ பூக்கும் ஒரே மரமென்னவென்னும் விடுகதையும் போடுகிறார் அ.மு.

 நல்ல பசி நேரத்தில் மாங்காய் சம்பலும் ஆப்பிரிக்காவின் வ்வூவ்வூ களியும் மணமடித்து அவற்றை உண்ணவேண்டும் என்னும் ஆவலை உருவாக்கியது. ஆட்டுச்செவி பருவத்தில் இளசாக உடையாமல் இருந்த தேங்காயின் வழுக்காய் சச்சதுரமாக வெட்டிபோடப்பட்டு செய்த குழம்பும், கணவாயுடன் ஒரு சொட்டு மையும் முருங்கைப்பட்டையும் போட்டு வேகவைத்த மணத்தையெல்லம் கூட சமாளித்துவிடலாம், ஆனால் அந்த  ஆட்டுக்கறி பிரட்டல் இருக்கிறதே! வாய்நீர் ஊறாமல் அதை கடந்து வந்திருக்கும்  அசைவ உணவுக்காரர்கள் இருக்கவே முடியாது.

கோலாகலமான  மஞ்சவனப்பதி தேர் திருவிழாவை மட்டுமல்ல, மக்களை மக்கள் அடித்துக் கொள்ளும் இனவெறியில் சிந்தும் கண்ணீர்த்துளைகளையும் ரத்தத்தையும் கூட காண நேர்ந்தது

இந்த ரயில் வண்டி பிரயாணத்தில் என்னை கவர்ந்தது அல்லது என்னை பேரலையென அடித்துக் கொண்டு சென்றது உடன் வந்த பெண்மைப் பெருக்குத்தான். எத்தனை எத்தனை வகையில் பெண்கள்! துணிச்சல்காரிகளும், துயரமே உருவானவர்களும், வடிவானவர்களும், அன்பான அக்காக்களும், பச்சிளம் குழந்தைகளும், சிறுமிகளும், சிறு மகள்களும், காதலிகளும் அன்னைகளும், மனைவிகளுமாக வரும் அவர்களுக்கெல்லாம்தான் எத்தனை வகையில் இடர்பாடுகள், சிக்கல்கள் கலைடாஸ்கோப்பின் வர்ணஜாலம் போல அவர்களின் இயல்புகளின் வண்ணக்கோலம் கண்முன்னே விரிந்தது

மனதில் ஒருவனை வைத்துக்கொண்டு, இன்னொருவனை மணமுடித்த சாந்தினி,  காதல் துயரை உவந்து ஏற்றுக்கொள்ளும் அனுலா,  மனதிற்குள் ரகசியமாக ’கொண’ மாமாவை காதலிக்கும் ஒரு அக்கா, சோதிநாதன் மாஸ்ரரை தவிக்க வைக்கும்,  பல்லி வயிற்றில் முட்டை தெரிவது போல விரல்களில் ஓடும் ரத்தம் கூட தெரியும் நிறத்திலிருக்கும் இளமை பொங்கும் அலமேலு, தண்ணீருக்காக காதலை மறக்கும் சோமாலியாவின் மைமூன், திறமான நிச்சயத்துடன் வருவேனென்று சொன்னவனுக்காக காத்திருந்து மட்கும் ஹொன்ஸாகூல், என ஒவ்வொரு நிறுத்தத்திலும் காதல் கொண்ட, காதல் கொள்ள வைத்த பெண்கள் பயணத்தில் இணைகிறார்கள்

  துயரமே உருவான பெண்கள் பலரையும் காணமுடிகின்றது பிள்ளைப்பாசத்தில் கட்டுண்ட பார்வதி, இனக்கலவரத்தில் உயிர்பிழைக்க ஓடிவருகையில் இறந்துபோய் புதைக்கவும் இல்லமால் எரிக்கவும் இல்லாமல் அப்படியே வீதியோரத்தில் விடப்பட்ட தங்தம், சிறு ஜாடையில் அவளைப்போலவே இருக்கும்  அவள் மருமகள். பயணச்சீட்டுக்களாக மாறிவிட்ட வளையல்கள்  இல்லாத மூளிக்கைகளை அசைத்து பிளேனில் போகும் மகனுக்கு விடைகொடுக்கும் ஒரு அன்னை,

எங்கோ நாதியற்று கிடக்கும் மகனுக்கு வயலட் கலர் பென்சிலை நாக்கில் தொட்டுத்தொட்டு ’’இப்போதெல்லாம் தென்னையிலிருந்து தேங்காய்கள் விழுவதில்லை, வானத்திலிருந்து மழை விழுவதில்லை ஆகாயத்திலிருந்து குண்டுகள் தான் விழுகின்றன’’ என்று கடிதம் எழுதும் அன்னையொருத்தியின் சித்திரமும், வீட்டை துடைத்துப் பெருக்கி, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது போல வாஞ்சையுடன் பாத்திரம் அலம்பி, துணிகளை துவைத்து அப்படியும் நேரம் எஞ்சி இருக்குமானால் அடுப்புக்கரி அணைந்த இடத்தில் படுத்துக்கொள்ளும்  பதிமூன்றே வயதான வேலைக்கர சிறுமி பொன்னியையும்,  நினைத்தாலே கிலி பிடிக்கும்படியாக ஒரு பிறந்த நாள் பரிசைப்பெறும் பாரதிராஜா பார்த்தால் பொறாமைப்படும் படியாக ஒரு  நீள  வெள்ளைத் துகில் உடையை வைத்திருக்கும் பத்மாவதியும்  மனதை கனக்க செய்து விடுகிறார்கள். ரயில் பெட்டியிலிருந்து நான் இறங்கி இத்தனை காலமாகியும். அந்த கனம் இன்னும் நெஞ்சில் தான் அழுத்திக் கொண்டிருக்கிறது

 நகை சுற்றிவரும் மெல்லியதாள் போன்ற காகிதத்தில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அந்நிய தேசத்திலிருக்கும் கணவனுக்கு கடிதம் எழுதும் ஒரு பாவப்பட்ட மனைவி, பாயை விரித்துப்போட்டு  இரு பக்கத்திலும்  இரண்டிரண்டாக படுத்திருக்கும் பிள்ளைகளுக்கு  சரிசமமாக தன்னை பிரித்துக் கொடுத்து நடுவாக படுத்துக்கொள்ளுமொருத்தி, தனக்கு விதிக்கப்பட்ட வறுமையை ரகஸ்யமாக அனுபவிக்க விரும்பும் பாத்திமா, நாலு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு போகும் தொக்கையான ஒரு மனுஷி என இவர்களின் துயரத்தில்  ரயில் வண்டி  தளும்புகிறது.

குளிருக்கென அடைத்த வாத்துச்சிறகுகள் பிய்ந்து வெளியே வந்திருக்கும் மோசமான  காலணிகளுடன்  தினமும் ரெய்கி சிகிச்சைக்கு செல்லும்  இரண்டு கிழமைகளுக்கு முன்னர் மோசம் போய் விட்ட பரமசோதியின் அக்கா மேல்கோடடை மறந்து வைத்துவிட்டுபோகிறாள்.

கஷ்டப்பாடுகள் கீழ்மையின் எல்லை வரைக்கும் துரத்தி வந்ததில் சொந்த மகளிடமே  வட்டிக்கு காசுகொடுக்க துணியும் வெயிலில் உலர்த்தியது போலிருக்கும் சின்னாயிக்கிழவியும் ரயிலில் இருந்தாள்.  

தனியாக எடுத்து வைத்த சாமி படையல் போல சிரிக்கிற இரண்டே இரண்டு பாவாடைகளும் அவையிரண்டுக்குமாக சேர்த்து ஒரே  ஒரு நாடாவையும் வைத்திருக்கும், மேலுதட்டில் வெண்டைக்காய் மயிர்போல  ரோமம் கொண்டிருக்கும்  அம்மா ஒருத்தி  கண்களை நிறைக்கிறாள் ,மூன்றாவது அம்மாவின் மகளான, மூக்குத்தியும் முகப்பருவும் போட்டிருந்த , ஒரே நாள்  மூளைக்காய்ச்சலில் செத்துப்போன அழகு அக்காவை மறக்கமுடியுமா?

துயரமே உருவானவர்களுக்கிடையில் துணிச்சல்காரிகளும் புதுமைப் பெண்களும் கூட  இருந்தார்கள்  ஒரு காவாலியின் அசிங்கமான செய்கையை பார்த்து திகைத்து பயந்து போகாமல் கண்களை நேராகப் பார்த்து ’’அடுத்த ஷோ எப்போ வரும். என் தங்கையும் பார்க்கனும்’’ என்ற ஒரு துணிச்சல்காரி, .ஒப்பாரிப்பாட்டிலும் வம்புச்சண்டை வளர்க்கும் உறவுப் பெண்கள், வீட்டுவேலைக்கு வந்து எஜமானியாகிவிடும்  ஆப்பிரிக்க கருப்பழகி அமீனாத்து, தமிழ் படங்களில் ’’ஏன் கேர்ல்ஸ் எல்லாம் குனிஞ்ச படியே போகினம்?’’என்று கேட்கும் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சிறுமி.

ஆங்கிலம், ரஸ்யன், பிரெஞ்சு எல்லாம் சரளமாக பேசும், பச்சை கண்கொண்ட மூச்சை நிறுத்தும் அழகில்லாவிட்டாலும் வசீகரமாயிருந்த, ஒரு பார்ட்டியின் முடிவில் இரு மார்புகளையும் கழட்டி வீசியெறியும் அனா என்கிற அன்னலட்சுமி, இவர்களுடன்  நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும், துணிவும் சாதுர்யமும் கொண்ட, கற்பெனும் புனிதப்போர்வயால் மூச்சுமுட்டும்படி  போர்த்தப்படாத பல ஆப்பிரிக்க பெண்களும் இருக்கிறார்கள்.

ஸ்வென்காவின் 17 பெண் கருச்சிசுக்களில் ஒன்றாக காத்திருந்த காமாட்சி இனி வரப்போகும் காலங்களின் இனவிருத்தி எப்படி இருக்கும் என்று கோடு காட்டி அச்சமூட்டினாள்

பேரம் படியாத போது அலறும் ’யூ லவ்  மீ’’ மீன்காரியும் அவள் முதுகில் ஒட்டிக்கொண்டிருக்கும் கரிக்குருவிக் குழந்தையையும்  இந்த பிரயாணத்திலல்லாது வேறெங்காவது காணக்கிடைக்குமா என்ன?

பலவிதமான மனைவிமார்களையும் பார்க்கமுடிந்தது இந்த ரயில் பிரயாணத்தில்.

வெளிநாட்டுக்கு போகும் கணவனுக்கென்று பார்த்துப் பார்த்து சூட்கேஸில் சாமான்கள் அடுக்கும் ’’வாங்கும் நோய்’’ கொண்டிருந்த பட்டியல் போடும் மனைவி, கொஸ்டோரிக்கன் போலவே இருந்த பிடிவாதக்காரியும் சீனனிடம் மார்பில் டிராகனை பச்சை குத்திக்கொண்டவளுமான  தங்கராசாவின் மனைவி பத்மாவதி,  

தனது மூன்று மாத குழந்தைக்கு முலைப்பாலை கறந்து போத்தல்களிலடைத்து டேகேரில் குழந்தையுடன் கொடுத்துவிட்டு வரும் ஜமைக்காவின் எஸ்தர், உள்ளத்தின் குரலை கேட்காமல், உடலின் கட்டளைகளை மட்டும் செவிமடுத்து மருகும் கமலி, பணிவிடை செய்யும் கணவன் மீதுள்ள பிரேமையை சந்தேகமாக மாற்றிக்கொண்ட கமலா, உருண்டை வீட்டில் பிரியமில்லாததால் கணவன் மீது மயிர் வளர்வது போல கண்ணுக்கு தெரியாத விரோதத்தை வளர்க்கும் மனைவி, இவர்களின் துக்கம்   வாசிப்பிற்கு பின்னர் என் துக்கமாகிவிட்டிருந்தது.

ஆப்பிரிக்க யானைத்தந்தத்தின் மீது  எத்தனைதான் ஆசையிருந்தும் பேருயிரொன்று அதன்பொருட்டு அழிந்ததை அறிந்ததும் அன்னை மனம் துடிக்க கிடைத்த தந்தத்தை ஏறெடுத்தும் பார்க்கமல் ஊர் திரும்பு இன்னொருத்தியும் இருந்தாள்

குடியுரிமைக்கு பிறகே தாய்மை என முடிவு செய்து பெண்மையையும்  தாய்மையையும் தவறவிடும் சங்கீதா மனம் கனிய வயதும் காலமும் தடையில்லை என் உணர்கிறாள், அதற்கு சாட்சியாக அவளருகில் கிடக்கிறது  பெண்குழந்தை அய்சாத்து

இத்தனை பேருடன் பச்சிளம் குழந்தைகளும் பருவப்பெண்களும் சிறுமிகளுமாக மகள்களும் நிறைய பேர் இருந்தனர். ரயிலில் 75 பெட்டிகளல்லவா?

தங்கைக்கு பிறகு தாமதமாக மலர்ந்த ராசாத்தி, தேநீர் போல கோபத்தில் சிவந்த , தூக்கி வைத்துக் கொள்ள யாருமில்லாமல் தானாகவே தூக்கி வைத்துக் கொள்ளும் 14 வயது பள்ளி மாணவியொருத்தி, ஒழுங்காய் சடை நுனியில் நீல ரிப்பன் கட்டிக்கொண்டு கிலுகிலுவென்று சிரித்துக்கொண்டு பள்ளி செல்லும் சிறுமிகள், பாய்பிரண்டின் பிறந்த நாளை  மறந்த  அப்பாவை கோபித்துக்கொள்ளும், அவருடனான தன் இளமைப்பருவத்தின் அபூர்வ தருணங்களையெல்லாம் மறந்தே மறந்து விட்ட மகளொருத்தி,

ராட்சத்தனமான கருப்பு புழு போல் நெளியும் மூன்று மாதமேயான தில்லைநாயகி, விருந்தாளிகளுக்கு  ஆட்டுப்பால் கொடுத்து உபசரிக்கும் வீட்டைச்சேர்ந்த,  கண் இமைகளில் வைரத்துண்டுகள் ஒட்டியிருக்குமோர்  சிறுமி, ஐஸ்கிரீம் கடையை கண்டால்  வெட்டுக்கிளியை கண்ட நாய் போல் அசைய மறுக்கும் ஒரு இளமகள், இவர்களுடன் வரும் நீளமான கண்கள், நீளமான விரல்கள் கொண்ட அம்மாவிற்கு பிரசவம் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண். முதலில் தெரிந்த கால்களை பிடித்து இழுத்ததால் நீளமான கால்களும் கொண்ட டோல்ரஸை சொல்லுகையில் ‘’தின்னவேண்டும் என்று பட்டது’’ என்கிரார் அ.மு. எனக்கும் அவளைப்பார்க்கையில் அப்படித்தான் இருந்தது.

பஞ்சலோகத்தில் செய்ததுபோல் ஒரு 4 வயது மகளும் இருக்கிறாள். அள்ளியெடுத்து மடியிலிருந்திக்கொள்ள மனம் விழைந்த நிமோனியாவால்  மூச்சுவிட சிரமப்படும்  லவங்கிக்குட்டி, ஏன் தனக்கு சூரிய கிரகணம் பிடிக்காது என்பதை சொல்லாமலே மறைந்த பஸ்மினா, இடுப்பில்  குடத்திலேயே அடித்த அப்பனுக்கு  சோறாக்கிப் போடும் பூரணி மற்றும் தன் பெரியப்பனை கொழுத்த ஆடாக்கி, கொள்ளியால் சுடும் விஜயாவின் மகளான குண்டுப்பெண் ஆகியோருமுண்டு.(பல சினிமாக்களில் போடுவார்களே இருதயம் பலவீனமானவர்கள் கர்ப்பிணிகள் அதை பார்க்க வேண்டாமென்று,  அப்படி ,மனைவி மக்களை பிரிந்து நினைவில் வாழும் பலவற்றுடன் போராடிக்கொண்டு பொருள் வயிற்றின் நீங்கியிருப்பவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாமென்று டிஸ்க்ளெய்மெர் போடவேணுமென்கிற அளவுக்கு மனதை கலைக்கும் கதையது)

மிக அழகான பெண்ணாக வருவதற்கு திட்டம் போட்டிருந்த டொன் தம்பதினரின் சிறு மகளுடன், சிறிய சிவப்பு உருண்டை வாயுடன் இருக்கும் ஒரு குட்டியும், பாஸ்மதி அரிசியைப்போல நாலே நாலு பற்களைக் கொண்டிருக்கும்,  திராட்சைகளை சுவைக்கும், ஜெயமோகனின் ’’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’’ புத்தகத்தை  மட்டும் சரியாய் தூக்கிக்கொண்டு ஓடிப் போகும் 26 இன்ச் உசரமான வாசகி i think அப்சரா குட்டியும் வருகிறார்கள்.

நான் கண்னை விரித்துக்கொண்டு பார்த்த சுவாரஸ்யமான  பல பெண்களும் பயணத்தில் உண்டு. பிரான்ஸிஸ் தேவசகாயத்தின் சவக்குழியை பிரான்ஸிஸ் தேவ சகாயத்திடமே சுட்டிக்காட்டும் செங்கூந்தலும் வெள்ளுடையுமாக  கனவில் வருமொருத்தி. ரம்புட்டான் பழம் போல சிவந்த உதடுகளுடன் சரசக்கா, நட்ட நடு நிசியில் வாடிக்கையாளரிடம் இனிக்க இனிக்க பேசும்  17 வருடமும் ஒன்பது மாதமும் வயதான ஸேர்லி, ஸ்கர்ட் உடுத்திய பெண் படம் வரைந்த  கதவு கொண்ட கழிப்பறைக்குள் தன்  பணிச்சூழலின் அழுத்தமனைத்தும் மறந்து உற்சாகமாகிவிடும் மீனுக்குட்டி.

ஆஸ்பத்திரியின் சக்கர நாற்காலியின் உராய்வுக்கும் பிணம் தள்ளிக்கொண்டு போகும் சில்லு வைத்த கட்டிலின் கரகர ஓசைக்கும் நடுவெ பொருத்தமில்லாத இனிமையுடன் ஒலிக்கும் குரலைக்கொண்ட யவனம் நிறைந்த, தேனிக் கூட்டம் போல சிவந்த கூந்தல் கொண்டிருக்கும் வெளிநாட்டு டாக்டர் பெண்ணொருத்தியும் உண்டு.

புன்னகையை ஸ்டிக்கர் பொட்டு போல ஒட்டி வைத்திருக்கும்  வரவேற்பாளினியும், கந்த சஷ்டி விரதத்திற்கு இரவு பாலும் பழமும் மட்டும் சாப்பிடுகிற, அந்த பழம் ஒரு முழு பலாப்பழம் என்பதை மறைத்துவிடும் அன்னமக்காவும் புன்னகைக்க வைக்கிறார்கள்.

மலர்வதற்கு இரண்டு நாள் இருக்கும் மல்லிகை மொட்டுக்களை  தலையில் சூடிக்கொள்ளும், தன் வனப்பை தொற்று வியாதி போல பரப்பிவிடும் மகேஸ்வரி, தலைமயிர் அவ்வளவு குவியலாக அவ்வளவு பொன்னிறமாக இருந்த ஸோரா , ட்ராஃபிக் சிக்னலைப்போல மஞ்சள் முகமும் ரத்தச் சிவப்பு உதடுகளும், பச்சைக்கீற்று கண்களுமாக ஒரு சீனப்பெண் என்று எத்தனை எத்தனை வகைப்பெண்கள்

’ம்வாங்கியை’ களவு செய்யத்தூண்டும் அழகுடன் இருந்த எமிலி, போறனையில் இருந்து இறக்கிய பாண் போல மொரமொரவென்று இளஞ்சூடும், மணமுமாக  இருக்கும் துப்புரவுக்காரியொருத்தி, ஜெனிஃபர் என்ற பெயருள்ள நாயுடன் வரும் பெயரிடப்படாத ஒரு அழகி ,  பச்சைப்பாவாடையும் பட்டுரிப்பனுமாக, உப்பு என்று சொல்வதுபோல் உதடுகளை எப்போதும் குவித்து வைத்திருக்கும் விசாலமான கண்கள் கொண்ட விசாலாட்சி,  தானாக கனிந்த அறுத்த, கொழும்பான் மாம்பழம் போலவும், அரிய வண்ணத்துப்பூச்சியை போலவும் இருப்பவளான,  வேகமான  யாமினி, கிட்டார் வாசிக்கிற பூனைக்குட்டிக்கு அரிஸ்டாட்டில் என பெயர் வைத்திருந்த ரோஸ்லின், மர அலங்காரியாக வேலை செய்யும் அமண்டா ஆகியோரும் ரயிலை அவர்களின் பேரழகாலும் ததும்பும் இளமையாலும் நிறைக்கிறார்கள்

ஒரே கரண்ட் கம்பியில்  வேலை செய்யும் பல்புகள் போல மூன்று உடலும் ஓருயிருமாக இருக்கும் மூன்று ஸ்நேகிதிகள் அவர்களில் ஒருத்தி அமெரிக்காவின் நட்சத்திர உணவகத்தில் தட்டில் வைக்கபட்ட முட்டையை பார்த்துக்கொண்டிருக்கையில் காதலனால்  முத்தமிடப்படும் மித்  என்கிற மைதிலி,

மண்ணெண்ணெய் வாடை அடிக்கும், மூக்குத்தியில் அழுக்கு சேர்ந்திருக்கும் கருத்த மாமி,  நாவல் பழம் பொறுக்குகையில் கதாநாயக சிறுவனுக்கு ராமு மாட்டுடன் அறிமுகமாகும் வத்ஸலா,  உடும்புப்பிடி போல குணம் கொண்ட சரசக்கா ஆகியோருடன் வரலாற்றிலிருந்து எழுந்துவந்து இணைந்து கொள்கிறார்கள்  பொத்தா தேவியும் குந்தியும். ரோட்டின் கீழே இருந்து வென்ற் வழியாக அடிக்கும் வெப்பக்காற்றில்  மேலே எழும்பி பறக்கும் இடையாடையை இரண்டு கைகளால் அமத்திப் பிடிக்கும் மர்லின் மன்றோ கூட  பிரயாணத்தில் இருக்கிறாள்

சிரிப்பால் வீட்டை நிறைக்கிற, அண்ணாந்து தண்ணீர் குடிக்கையில் சிந்தும் தண்ணீர் கழுத்துக்குழியில் தங்கிவிடும் அளவுக்கு ஒல்லியான,   இன்னும் நிரப்பப்படாத பல அங்கங்களைக் கொண்ட, காதுவரை நீண்ட ஓயாது வேலை செய்யும் கண்களைக் கொண்ட கனகவல்லி,  வெங்காய சருகு போல மெல்லிய சருமம் கொண்ட ஸ்வீடனின் மார்த்தா, மறைக்கப்படாத  மார்பகங்களுடன் மீன்களும் துள்ள, கார்களை துரத்தி  வரும் மீன்காரப்பெண்கள், பிறகு நினைத்துப் பார்க்கையில் ஒரு சொற்பொழிவு போல தோன்றும்படியாக  இடுப்பை வெட்டி காண்பித்த ஆப்பிரிக்க அழகியென அநேகம்பேர் வருகிறார்கள்

கிராமத்து மனுஷியும் நான்கு ஆதார சுவைகளை கலந்து பத்தாயிரம் சுவைகளை கொண்ட உணவுகளையும், தோசையில் விழும் துளைகள் கூட எண்ணினால் ஒரே மாதிரியாக இருக்கும்படி சமைப்பவளுமான  ஒரு அம்மாவும், அவரை சமையலறைக்குள்ளேயே நுழையவிடாத, சமையல் வகுப்புக்களுக்கு போய் கற்றுக்கொண்ட சமையலை செய்து பார்க்கும் அவரது மருமகளும் கூட உண்டு.

மனிதர்கள் மட்டுமல்லாமல்  எல்லா பயணங்களிலும் நான் தவறவிடாமல்  ரசித்துப் பார்க்கக்கூடிய விதம் விதமான மரங்களும் மலர்களும் கனிகளும் இந்தப் பயணத்திலும் காணக்கிடைத்தன. அனிச்சம்பூ ,ஓக், அகேஸியா, கிளுவை மரங்களுடன், சதி செய்யும் முசுட்டை மரங்கள், கணப்பு அடுப்பில் புகையின்றி சிறிது மணத்துடன்  எரியும் விறகைத் தரும் பேர்ச் மரங்களை எல்லாம் ரயில் கடந்து சென்றது. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை காய்க்கும் ’மொற’ மரமொன்றையும் கண்டேன்

பயணத்தில் எதிர்பாராமல் திடீரென தலை காட்டும்  கவிதைகளைப் போல சின்னப்பெண்கள் தங்களை கடக்குமுன்பாக அனைத்துப் பூக்களையும் அவர்கள் முன் கொட்டும் மரங்களும்,  மஞ்சளாக வழவழப்பாக  பார்க்க லட்சணமாக இருக்கும் தண்ணீர் பாங்கான இடங்களில் வளரும் ஃபீவர் மரமும்,  மரெண்டா கீரைகளும், நிலம் தெரியமல் பூக்களை சொரிந்திருக்கும் ஜகரண்டா மரங்களையும் காண முடிந்தது.  கதிரைகள் செய்யப்படும் காஷ்மீரி வால்நட் மரமும், வானத்தில் பறந்து வந்த வாழையிலைகளும் ஆழ்குளிரிலிருந்து எழுப்பிய மாவிலைகளையும் கூட பார்த்தேன். தோறாஇலையும் குயினைன் மரப்பட்டைகளும் இருக்கின்றன. எங்கோ கமகமவென்று இலுப்பைப்பூ மணமுமடித்தது

பேயின் கைவிரல்களைப்போல் பரவி வளரும் ஐவி செடியும் வழியில் இருந்தது. இதுநாள் வரை மணிப்ளாண்ட் என்றே சொல்லியும் கேட்டும் வாசித்தும் பழக்கமாயிருந்த , முதன் முதலில் அ. மு வால் மணிச்செடி என்று அழைக்கபட்ட அந்த செடியை கண்டதும் அத்தனை பிரியம் உண்டாகி விட்டிருந்தது. பயணத்தில்  இப்படி பல புதிய அழகிய சொற்கள் இடையிடையே வந்து எட்டி பார்த்து சந்தோஷப்படுத்தும்.

அடடா பட்சிகள் உச்சியில் அமர்ந்திருக்கும் மிமோசா விருட்சங்கள்.முதலில் இலைகளை கொட்டும் பேர்ச் மரமும் இலைகளை கொட்டவே கொட்டாத மேப்பிள் மரமும், தோட்டத்தின் சிவப்பு வத்தகப்பழமரம்,  அக்லனீமா செடிகளும், தோலுரித்து வைத்த தோடம்பழங்களுமாய் பசுமைப்பெருக்கும் பயணத்தில்  கூடவே வந்தது

நம்மூர் தீக்கொன்றை மரத்தை அவர் தீச்சுவாலை மரம் என்கையில் அதற்கொரு ஆப்பிரிக்கத்தனம் வந்துவிட்டிருந்தது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பரமசோதியின்  சாமான்களுடன் நிற்கிறது  ஒரு வாகைமரம்

இடிமுழக்க துண்டுகளை  கட்டி இழுப்பது போல் சத்தம் போடும் ஒரு மோட்டர் சைக்கிளும், கோபத்துடன் உறுமி எழுந்த சிங்கம் போல ஒரு ஓஸ்டின் காரும் ரயிலை கடந்து சென்றன. வழியில் மகரந்த துள்களை பரப்பி வைத்ததுபோல பரவிக்கிடந்த மணலைப்பார்க்க முடிந்தது. பிரயாணத்தின் ஓரிரவில் குழைத்து வைத்ததுபோல் கலங்கலாக தெரிந்தான் சந்திரன். யாரோ ராட்சஷன் அடித்து வீழ்த்தியது போல சிவந்திருக்கும் ஆகாயத்தையும் அந்தியொன்றில் கடந்தது ரயில்.

பிரயாணத்தில் கந்தபுராணமும், சிவபுராணமும்,சிலப்பதிகாரமும், ராமாயணமும் மகாபாரதமும் கூட கேட்கிறது. துரியோதனன் மனதை கெடுக்கிறது  ஒரு சடைக்கார சிறுக்கி நாய்

’’அம்மணத்துகு கோமணம் மேல்’’ போன்ற முதுமொழிகள் இடையிடையே வந்து விழுகின்றன. பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு நெருக்கமாக வந்து அணில்கள் பொறுக்கிச் சாப்பிடுகின்றன. அந்த செகரட்டரி பறவை தான் என்ன வினோதம், அப்படியொன்றை கேள்விப்பட்டது கூட இல்லையே!

அதைப்போலவே சாளரம் 2000 என்பது முதலில்  என்னவென்று மனசில் தைக்கவே இல்லை அத்துடன் சேர்ந்து நின்ற பில்கேட்ஸை பார்த்ததும்தான் அது விண்டோஸ் 2000 என்பது உரைத்தது . Veloy don என்கிற வேலாயுதமும் வருகிறார்.

 சாளரம் உள்ள கடித உறையும் அப்படித்தான் வியப்பூட்டிய மற்றொன்று.  அப்படியான கடித உறையை இதுவரை பலநூறு பயன்படுத்தி இருப்பேன் அதை கவனித்து இப்படி ஒரு பெயர் இருக்கலாமென்று ஒருபோதும் எண்ணியதில்லையே!

அ.முவுக்கே உரித்தான அங்கதங்களும் வேடிக்கையான மனிதர்களும்  குறைவில்லாமல் உண்டு  குறிப்பாக அடைப்புக்குறிக்குள் சொல்லப்பட்டிருப்பவைகள்.(கடைசி மூச்சில் இருந்த பேட்டரி) நாலு பியருக்கு மேல் நாப்பது வாட்டில் மூளை வேலை செய்கையில் மட்டும் அரசியல் பேசும் தம்பிராசா, சிவராத்திரி கந்த சஷ்டியையெல்லாம் தீவிரமாக சிந்திக்கும் மாரியோ இவர்களுடன் இடது கைப்பழக்கம் கொண்ட ஒரு கரப்பான் பூச்சியும் இருக்கிறது, ஆம் நிஜம்தான்.

கனடிய அரசுக்கு அனுப்பும் குரல் பதிவில் வசந்தம் வந்து, தோட்டத்தில் முதல் பூ பூத்ததையும்,  பெண்ணின் சடைபோல் பின்னப்பட்ட பிரெஞ்ச் ரொட்டியை பிய்த்து தின்றதையும், தட்டில் கிடந்தபடி  தன்னையே பார்த்துக் கொண்டிருந்த  வதக்கபட்ட பெரிய மீனை உண்ணமால் விட்டதையும் சொல்லும் ஒருவர் எத்தனை சுவாரஸ்யமான மனிதராயிருப்பார்?

மைமலான மழைநாளில்  காதலிக்கு முதல் முத்தம் பதிக்கும் காதலனும் ஸ்ட்ராபெரி ஜாம் வாசனையுடன் கொட்டாவி விடும் மனிதர்களையும் போல  அ.மு அவர் வாழ்க்கையில் சந்தித்த,  அறிந்துகொண்ட சுவாரஸ்யமானவர்களை உலகில் வேறு யாருமே சந்தித்திருக்க மாட்டார்கள்

ஒரு பிரயாணம் இப்படி ரசிக்கத்த விஷயங்களுடன் மட்டும் முடிந்து விடாதில்லையா?

தோலைச்சீவுகையில் பூரணமாக ஒத்துழைப்பு கொடுத்து  இறைச்சி வெட்டப்படுகையிலும் கண்களை அசைத்துக்கொண்டே இருந்த உடும்பையும், அந்நியமான ஊருக்கு வந்து அடிபட்டு செத்துப் போகிற பறவையொன்றையும், நிலவறையில் விறைத்துக்கிடப்பவரையும் அ.மு சொல்லிக்கேட்கையில் என்னையறியாமல் கண் நிறைந்து வழிந்தது.

தில்லை அம்பல பிள்ளையார் கோவில் கதையை கேட்டு முடித்ததும். கல் மனசுக்காரர் என்று அ. முவை மனதில்  மரியாதையுடன் கடிந்து கொண்டேன்.

இத்தனை சுவாரஸ்யமான பிரயாணமொன்றை இதுவரையிலும் நான் செய்ததில்லை இனிமேலும் செய்யப்போவதுமில்லை.. அ.மு இத்தொகுப்பில் உள்ளதை பெரிதாக்கவில்லை, இல்லாததை இட்டுக்கட்டவில்லை, ஏன் உள்ளது உள்ளபடிகூட சொல்லவில்லை நம்மை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் கதைகளின் நடுவில் நிறுத்தி விடுகிறார். எல்லாக்கதைகளும் நம்மைச்சுற்றித்தான் நடக்கிறது நாம் கதைகளை  பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கன்னத்து உப்பலில் கூர்பார்க்கப்படும் கல்லுப்பென்சிலும், பென்னம் பெரிய காரில் பொம்பளை பார்க்க வருபவர்களுமாக நிறைந்திருக்கும் கதைத்தொகுப்பை அ. முவல்லாது வேறு யாரால் அளிக்க முடியும்?

‘திரு அ முத்துலிங்கம் அவர்கள் இன்னுமோர் நூற்றாண்டு நல்ல தேக ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்கட்டும். அவருக்கு என் வணக்கங்கள்

அன்புடன்

லோகமாதேவி.

-விஜயா பதிப்பகம் 2022ல் அ மு அவர்களுக்காக கொண்டு வந்த சிறப்பி நூலில் வெளியான எனது கட்டுரை