குடும்பப் படங்களை, குறிப்பாக பெண்களை மையப்படுத்திய படங்களை அளித்தவரும், 1960 ஆம் ஆண்டுகளின் மிக வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தவருமான K.S கோபாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் 1966ல் வெளிவந்த ’மாற்றாந்தாய்’ என்னும் பொருள்படும் ’சித்தி’ அதன் கதாபாத்திரத்தேர்வுக்கும் மிகச்சிறந்த திரைக்கதையமைப்புக்குமாக புகழ்பெற்றிருந்தது. 55 வருடங்களுக்குப் பிறகும் சுவாரஸ்யம் குறையாமல் நம்மால் பார்க்கமுடியும் பல கருப்பு வெள்ளைப்படங்களில் சித்தி மிக முக்கியமானது.
மாற்றாந்தாய் என்றாலே கொடுமை செய்பவள் என்னும் ஆழமான நம்பிக்கை இன்றளவும் இருக்கும் சமூகத்தில், அப்போதே அப்படியில்லை, மூத்தாள் குழந்தைகளை தன் குழந்தைகளாகவே எண்ணும் நல்ல பெண்களும் சித்திகளாய் இருப்பார்கள் என்று அழுத்தமாக, அழகாக, உணர்வுபூர்வமாக சொன்ன படம் இது. சித்தியாக வரும் பத்மினியின் குண இயல்புகளை மிக அழகாக இதில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பார்
விடுதலைப் போராட்ட வீராங்கனையும் பிரபல நாவலாசிரியையுமான நாவல் ராணி, கதா மோகினி என்றெல்லாம் புகழ்பெற்றிருந்த வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள் எழுதிய தயாநிதி என்னும் நாடகத்தை தழுவியே சித்தி எடுக்கப்பட்டது. ஹிந்தியில் Aurat, மலையாளத்தில் ‘அச்சன்ட பார்யா’ தெலுங்கில் ‘பின்னி’ , கன்னடத்தில் ’சிக்கம்மா’ என இதே நாடகம் திரைப்படமாக பல மொழிகளில் அப்போது எடுக்கப்பட்டது.
திருமணத்திற்குப்பின் அமெரிக்கா போய்விட்டு, பத்மினி திரும்பி வந்து நடித்த படம்தான் ‘சித்தி’ இந்த படம் ஆறு விருதுகளை அள்ளித் தந்தது. சிறந்த கதையாசிரியர் விருது கோதைநாயகிக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த விருது வாங்கும்போது அவர் உயிருடன் இல்லை. தன் மகன் ஸ்ரீனிவாசன், வாழவேண்டிய வயதில் விஷக்காய்ச்சலால் இறந்துவிட்ட துக்கம் அவரை படுத்த படுக்கையாக்கிவிட்டது. அதன் விளைவாக மகன் இறந்த நான்கு ஆண்டுகளில் (20.02.1960) சாவு இவரையும் அழைத்துக் கொண்டது
சித்தியில் இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடல்கள் கண்ணதாசன், உதவி பஞ்சுஅருணாசலம். ஒளி இயக்குநர் ஆர் சம்பத், படத்தொகுப்பு, ஆர் தேவராஜன். தயாரிப்பு சித்ரா ப்ரொடக்ஷன்ஸ். வசன ஒலிப்பதிவு பிரசன்ன குமார் ஏறக்குறைய 3 மணி நேரங்கள் நீளமுள்ள இந்த திரைப்படம் 1966 ஜனவரி 14 அன்று வெளிவந்தது.
தண்ணீர் சுடுவதென்ன, காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, சந்திப்போமா இன்று சந்திப்போமா, உள்ளிட்ட சித்தியின் 7 பாடல்களுமே மிகப்பிரபலமடைந்தவை .’’காலமிது’’ பாடல் எக்காலத்துக்குமானது.
மிக எளிய குடும்பக்கதை. மனைவியை இழந்த பெரியசாமி என்கிற எம் ஆர் ராதாவுக்கு இரண்டாம் மனைவியாக அவர் வயதில் பாதியே இருக்கும் மீனாட்சியாகிய பத்மினி, குடும்பத்தின் வறுமை, தம்பியின் மருத்துவக் கல்லூரிப்படிப்பு இவற்றின் பொருட்டு ஜெமினியுடனான தன் காதலை துறந்து வாழ்க்கைப்படுகிறார். இறந்த மூத்தமனைவிக்கு இருபதுகளில் இருக்கும் நாகேஷும், பதின்மவயதில் இருக்கும் விஜய நிர்மலா மற்றும் நண்டும் சிண்டுமாக குழந்தைகள். பெரியசாமியின் அம்மாவுக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லையெனினும் தள்ளாத வதில் கைக்குழந்தையுடன் போராடமுடியாமல் புது மருமகளை வரவேற்கிறார்
ஒளிரும் கண்களும் செதுக்கியதுபோன்ற உடலுமாக பத்மினி மிகப்பிரமாதமாக நடித்திருக்கிறார். ஒரு ஊமைத்தங்கை உள்ளிட்ட 7 உடன்பிறந்தவர்களின் பொருட்டு தன் வாழ்வை தியாகம் செய்துவிட்டு கண்ணீரை மாறாத புன்னகையால் மறைத்துக்கொண்டு அன்னையாகாமலே அன்னைமையால் நிறைந்து மிளிரும் பாத்திரம் அவருக்கு
இப்படியான சவாலான பாத்திரங்களில் மிக அநாயசமாக நடிக்கும் பத்மினி இதிலும் அப்படியே நம் உள்ளங்களில் சித்தியாகவே நிறைந்துவிடுகிறார்.
6 குழந்தைகளின் தந்தையாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டு மிச்சமிருக்கும் இளமையையும் அனுபவிக்க துடிக்கும், ஆடம்பர வாழ்விலும் நாகரிக மோகத்திலும் மூழ்கி இருக்கும், கோட்டும் சூட்டுமான மிடுக்கான தோற்றத்தில் எம் ஆர் ராதாவும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். வில்லனாகவும் நாயகனாகவும் அவரே தனிஆவர்த்தனம் செய்கிறார், ப்ரத்யேக கிண்டல் குரலில் ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசும் வசனங்கள் எல்லாமே சபாஷ் ரகம்.
இரு மாபெரும் நடிக மேதைகளாதலால் காட்சிக்கு காட்சி திரைப்படம் சுவாரஸ்யம் மிகுந்தபடியே இருக்கின்றது.
தன் பொருட்டு அக்கா வாழ்வை தியாகம் செய்வதை தம்பி முத்துராமன் தடுக்க முயல்கிறார் இருந்தும் பத்மினி திருமணத்திற்கு சம்மதிக்கிறார்
பத்மினியின் முன்காதலன் ஜெமினி என்னவானார்? அவருக்கு அந்த பல லட்ச ரூபாய் சொத்து கிடைத்ததா? எம் ஆர் ராதா பத்மினியின் தியாகத்தை புரிந்துகொண்டாரா? வீட்டை விட்டு துரத்தப்பட்ட முத்துராமன் மருத்துவப்படிப்பை முடித்தாரா?, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதமிருக்கும் இரண்டாம் பாதியின் சுவாரஸ்யம்
அமைதியான பாத்திரத்தில் வழக்கம் போல முத்துராமன். தன்னால் பாழாய்ப்போன அக்காவின் வாழ்வுகுறித்தான குற்றவுணர்வும், எதிர்பாரா காதலுமாக தவிக்கும் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்
சிறிய ஆனால் முக்கியமான பாத்திரம் ஜெமினிக்கு. நாகேஷ் இருக்கிறார் நகைச்சுவை இல்லை. விகே ராம்சாமி சுந்தராம்பாள் ஆகியோரும் உள்ளனர்
பத்மினிக்கும் குழந்தைகளுக்குமான புரிதலும் அன்பும் மிக சுவாரஸ்யம். கணவனின் ஆசைக்காக மாடித்தனியறையில் அந்தரங்கமாக இருக்கையில் தாயெனவே பத்மினியை நினைக்கும் கைக்குழந்தை வீறிட்டு அழுதபடி அவரைத்தேடி படியேறுகையில், அரைகுறையாக ஆடைகளை அள்ளிப்போர்த்திக் கொண்டு பத்மினி அறையிலிருந்து ஓடிவந்து குழந்தையை வாரி எடுத்துக்கொள்ளும் காட்சி, வீட்டில் நிம்மதியில்லையென மனைவியை எம் ஆர் ராதா, விடுதிக்கு அழைத்துவருகையில், பத்மினியை அதற்கு முன்னர் பார்த்திராத நாகேஷ் அவரிடம் பேசும் காட்சி , மகளுடனான முத்துராமனின் காதலை அறிந்து எம் ஆர் ராதா அவரை அடித்து துரத்தும்போது, மிக அமைதியாக பத்மினி பேச ’’ என்னடி பெரிய கவர்னர் ஜெனெரல் மாதிரி பேசிட்டு போறே’’ என்று துவங்கி கணவன் மனைவிக்குள் நடக்கும் உரையாடலும், எம் ஆர் ராதாவின் ஆக்ரோஷமும் அவர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களும், பத்மினியின் எதிர்வினைகளுமாய் இருக்கும் அந்தக்காட்சி இப்படி பல உணர்வு பூர்வமான நம்மை நெகிழவைக்கும் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு
பத்மினி ,எம்.ஆர் ராதவுக்கு இணையாக நடித்திருபப்து கைக்குழந்தையான அந்த ராணிப்பாப்பா. பத்மினியைபோலவே ஆடுவதும், அவருடன் எபோதும் ஒட்டிக்கொண்டே இருப்பதும், கன்னத்தை பிடித்து முத்தமிடுவதுமாக அந்தகுழந்தை கண்ணையும் மனசையும் நிறைந்துவிடுகின்றாள். பார்த்துக்கொண்டிருப்பது திரைப்படம் என்பதே அக்குழந்தையினால் மறந்துபோகும் அளவுக்கு நெகிழ்ச்சியான காட்சிகள் அந்தக்குழந்தை வரும் காட்சிகளெல்லாம்.
பொங்கல் பண்டிகை ரிலீசென்பதால் டைட்டிலிலேயே கரும்பும் வாழையும் தேங்காய் பழமும் பொங்கல் பானையும் மங்கல இசையுமாக படம் துவங்குகின்றது.
டைட்டிலில் எவர்சில்வர் பாத்திரங்கள் என்றெல்லாம் போடுவதை சுவாரஸ்யமாக பார்க்கலாம். இப்போது உலகத்திரைப்படங்கள் கைவிரல் நுனியில் ஒரு தட்டலில் காணக்கிடைக்கும் காலத்தில் இப்படி பாத்திரங்கள் வாங்கியது முதற்கொண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு பழைய திரைப்படத்தை பார்க்கையில், நம் தமிழ் சினிமா கடந்து வந்த அந்த நீண்ட பாதை பெரும்பிரமிப்பை உண்டாக்குகின்றது. அப்போதும் இப்போதும் திரைத்துறையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை குறித்த ஒரு சித்திரத்தை சித்தி நமக்களிக்கின்து.
குழந்தை பிறந்திருக்கும் அறையின் வாசலிலேயே ஜோதிடர் காத்திருப்பது, தனது அம்மாவுக்கே 3 பிரசவத்தை மகள் பத்மினி பார்ப்பது, அப்போதைய கூட்டுக்குடும்பத்தில் தண்ணீர் பில்டரின் அளவிலிருக்கும் பெரிய காபி ஃபில்டர், விஸ்தாரமான சமையலறை, 8 பேர் 2 ரூபாயில் சாப்பிட முடியும் பொருளாதார நிலை, ஒரு பெண் ஹோட்டலுக்கு போவது என்பதே மற்றொரு பொருளில் சொல்லப்படுவது என்பது போல இப்போதைய தலைமுறை ஆச்சர்யத்துடன் ரசிக்க ஏராளமான விஷயங்களும் சித்தியில் உள்ளது.
உணர்வுபூர்வமாக அபிநயங்களுடன் நிறுத்தி நிதானமாக தெளிவான உச்சரிப்புடன் பத்மினி பேசும் வசனங்களுக்காகவே பலமுறை சித்தியை பார்க்கலாம். அகலக்கண்களை மலர்த்தி மலர்த்தி அவர் பேசுவதே அத்தனை அழகு. ஆற்றில் குளித்துக்கொண்டே பத்மினியும் ஜெமினியும் பாடும் ஒரு டூயட்டும் ஆச்சர்யமாக சித்தியில் உண்டு
//ஏழைகள் வயசுக்கு தகுந்தபடி வாழக்கூட முடியாதே//, //அட்சதையா அத்தனைபேர் மேல போட்டாக்கூட பத்தாத அரிசியையா சமைக்க எடுத்துட்டு போறீங்க?// என்பது போன்ற ருசிகரமான வசனங்கள் திரைக்கதையை மேலும் செறிவாக்குகின்றது.
ஒரு பெண் நடத்தை தவறுவதும் ஒரு ஆண் தான் அளித்த வாக்குறுதியை தவறவிடுவதும் ஒன்றுதான் என்னும் கருத்தை சொல்லும் பொருட்டு சில இறுதிக்காட்சிகள் வலிந்து சேர்க்கப்பட்டிருந்தாலும் அந்தகாலத்தில் அது அவசியமானதாயிருந்திருக்கும்.
பெரும்பாலான அந்தக்காலத்து படங்களைப்போலவே சித்தியும் சுபமாகவே முடிகின்றது. காதலர்கள் ஒன்று சேர்வதும், எம் ஆர் ராதா மனம் திருந்துவதும் ஊமைத்தங்கையை லட்சாதிபதியாகிய ஜெமினி மணம் புரிந்து கொள்ளுவதுமாக, பண்டிகை நாளில் திரைப்படத்தை பர்த்துவிட்டு நிறைவுடன் ரசிகர்கள் வீடு திரும்பியிருப்பர்கள் என்பதை நாமும் அதே நிறைவுடன் உணருவோம்.