பிரபல நடிகரும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான ஆண்டனி ஹாப்கின்ஸ் மற்றும் ’லா லா லேண்ட்’ புகழ் ரையான் கோஸ்லிங் (Anthony Hopkins & Ryan Gosling) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ’த்ரில்லர்’ வகை ஆங்கிலத் திரைப்படமான Fracture, 2007ல் வெளியானது.
மணவாழ்க்கையில் தனக்கு துரோகம் செய்த மனைவியை கொலை செய்த குற்றவாளிக்கும், நீதிமன்றத்தில் அவருக்கெதிராக வழக்காடும் வக்கீலுக்கும் இடையிலான மனக்கணக்குகளும், பிரத்யேக சவால்களும், போராட்டமுமே கதை. இந்த வகைப்படங்களில் இது மிக விறுவிறுப்பான ஒன்றென சொல்லலாம். ஏப்ரல் 20, 2007ல் அமெரிக்காவில் மட்டும் சுமார் 2,500 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இப்படம் வசூலை வாரிக்குவித்தது.
இயக்கம் Gregory Hoblit, கதை Daniel Pyne, திரைக்கதை Glenn Gers மற்றும் Daniel Pyne. இசை ஜெஃப் மற்றும் மைக்கேல், ஒளி இயக்கம் Kramer Morgenthau. படத்தொகுப்பு David Rosenbloom, தயாரிப்பு Charles Weinstock (Castle Rock Entertainment).
பிரபல நடிகை Rosamund Pike மற்றும் David Russell Strathairn ஆகியோரும் குறிப்பிட்டு சொல்லும்படியான சிறிய பாத்திரங்களில் இருக்கின்றனர்.
செல்வந்தரும், அதிபுத்திசாலியும், துணிச்சல்காரருமான, சிறுவயதிலிருந்தே மிக நுட்பமானவரகவே அறியப்பட்ட டெட் (ஆண்டனி) தன் மனைவி ஜோஸபினுக்கும் காவலதிகாரி ராப்’க்கும் இடையேயான நெருக்கமான உறவை அறிந்து மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். குற்றம் நடந்த இடத்திலேயே கைதும் செய்யப்படுகிறார். நீதிமன்றத்தில் இவருக்கெதிராக வழக்காடும் வில்லியிடம் (ரையான்) வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாதபடிக்கு சாமார்த்தியமாக விளையாடுகிறார். குற்றத்தில் தொடர்புடைய துப்பாக்கியையும் காவல் துறையால் கண்டு பிடிக்க முடியவில்லை என்னும் போது இறுதி வெற்றி யாருக்கு, எப்படி என்பதே கதை.
எல்லாம் சரியாக இருப்பதுபோல் வெளித்தோற்றமிருப்பினும் hair line fracture எனப்படும் வெளியில் தெரியவே தெரியாத மிக மிக லேசான நுட்பமான விரிசல் உள்ளிருக்கும் சாத்தியங்கள் இருப்பதைப்போல, தங்களுக்குள்ளிருக்கும் பலவீனங்களை டெட் மற்றும் வில்லி இருவரும் பரஸ்பரம் கண்டடையும் முயற்சியில் இறுதிக்காட்சி வரை ஈடுபட்டிருப்பதால் இத்திரைப்படத்திற்கு fracture என்று பெயர்.
ஆண்டனியும் ரையானும் போட்டி போட்டுக்கொண்டு திரையை நிறைத்துவிடுகிறார்கள். இருவருமே முழுப்படத்தின் பெரும் பலம். இசை ஜாம்பவான்களின் புகைப்படங்கள் இருக்கும், மிக அழகிய மெல்லிய வெளிச்சமுள்ள அந்த வீடு, சிறப்பான காமிரா கோணங்கள், மிக அழகாக கட்டமைக்கப்பட்ட காட்சிகள், புழுதி கிளப்பிக்கொண்டு டெட் செல்லும் அந்த பிரமாதமான porsche Carrera GT கார், மாறி மாறி குற்றவாளியும் வக்கீலுமாக ஒருவரை ஒருவர் வெல்ல செய்யும் முயற்சிகள், நேர்த்தியான, சுவாரஸ்யமான திரைக்கதை, கோமாவில் இருக்கும் ஜோஸபின், ஒரு தற்கொலை, மிக எதிர்பாரா இறுதிமுடிச்சு என காட்சிகள் தொய்வின்றி செல்லுகிறது.
மணவுறவைத் தாண்டிய பந்தத்திலிருந்த, தனக்கு துரோகம் செய்த மனைவியை கொல்வது, மனைவியின் காதலனையும் சிக்கலுக்குள்ளாக்குவது, எதிராக வாதாடுபவரையும் தோற்கடிப்பது, தன்னம்பிக்கையை எந்த நேரத்திலும் இழக்கமால் இருப்பது என டெட்’ ஆக ஆண்டனி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
எப்படியும் இந்த வழக்கின் உண்மையை கண்டுபிடிக்க முயல்வது, கோமாவிலிருக்கும் ஜோஸபினுக்கு புத்தகம் வாசித்து காண்பிப்பது, நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தோற்று திகைத்து நிற்பது, உயரதிகாரியுடன் மோதல் இருந்தாலும் அவருடன் நெருக்கமாகவும் இருப்பது, எதையாவது மென்றுகொண்டும், அருந்திக்கொண்டும், வசீகரமாக சிரித்துக்கொண்டும் ரையானும் வில்லியாக உள்ளம் கொள்ளை கொள்ளுகிறார்.
டெட்’டின் அந்த வன்மம் நிரம்பிய, எதிரிலிருப்பவர்களை எரிச்சலூட்டும் தந்திரமான சிரிப்பும், மிகத்தேர்ந்து அவர் பேசும் வசனங்களும் சிறப்பு அவற்றுக்காகவே படத்தை மீண்டுமொருமுறை பார்க்கலாம்
முதல் காட்சியிலேயே நம் கண்ணெதிரே மனைவியை சுட்டுக்கொன்றவன், கையும் களவுமாக பிடிபட்டதும், காவலதிகாரிகள் முன்பு கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்து, கைதும் செய்யபட்ட பின்னரும் open and shut case என்ற வகையான இக்குற்றத்தில், திரைக்கதையில் பிறகென்ன சுவாரஸ்யம் இருக்கமுடியும் எனும் கேள்விக்கான பதிலே இத்திரைப்படம்.
Your wife? Is she OK? ’’ I don’t think she is. I shot her.’’
’’I took both the bastards out with one f—-g bullet’’
’’Knowledge is pain’’ போன்ற மிக நுட்பமான வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. இத்திரைப்படத்தின் சற்றே மாறுபட்ட கூடுதல் காட்சிகள் இருக்கும் ஒரு பிரதியும் DVD யில் கிடைக்கிறது.
கைக்கடிகாரம் தெளிவாக நேரம் காட்டுகையில் அதற்கு முற்றிலும் மாறான ஒரு நேரத்தை கதாபாத்திரம் குறிப்பிடுவது, தயாரிக்கும் போதே துப்பாக்கி சரியாக வெடிக்குமா என சோதிப்பது வழக்கமென்பதால், குற்றம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த துப்பாக்கி ஒருமுறை கூட சுடப்பட்டதல்ல என்பது போன்ற வாக்கு மூலம், மருத்துவமனையில் ஜோஸபினை உயிருடன் வைத்திருக்கும் மருத்துவ உபகரணங்களின் இணைப்புக்களை அகற்றுவது குறித்தான நீதிமன்ற தடையுத்தரவுடன் வந்திருக்கும் பிரபல வக்கீலை, அதை அதை அவரே குறிப்பிட்டும் கூட உள்ளே செல்லவிடாமல் காவலதிகரிகளே தடுப்பது, தொலைபேசியில் பதிவாகி இருக்கும் வாய்ஸ் செய்திகளின் எண்ணிக்கை குழப்பம், வில்லி புத்தகத்தை தலைகீழாக வைத்துக்கொண்டிருப்பது, ஒரு சில continuity shot களில் இருக்கும் குழப்பங்கள், ராப் தற்கொலை செய்துகொண்ட மாடிப்படியின் மேல்பகுதியில் ரத்தம் சுவற்றில் சிதறி இருக்கையில் கீழே உருண்டு விழுந்திருக்கும் சடலத்தின் அருகில் துப்பாக்கியும் எப்படியோ சரியாக வந்து சேர்ந்திருப்பது, சாத்தியமே இல்லாத ஒன்றாக துப்பாக்கியை டெட் சிறை அலுவலகத்தில் சமர்த்திருப்பது, போன்ற நுண்மையான தவறுகளை கண்டுகொள்ளாமலிருந்தால், வெள்ளிக்கிழமை மாலைக்கான மிகபொருத்தமான திரைப்படம் இது.
Leave a Reply