அக்டோபர் 16,2020 அன்று நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான தமிழ்ப்படம் ‘புத்தம் புது காலை’’, சுதா கொங்காரா, கெளதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம் , ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் என ஐந்து இயக்குநர்களின், 5 குறும்படங்களின் தொகுப்பு படமாகும் (Anthology/package film).
ஜெயராம், ஜெயராமின் மகன் காளிதாஸ், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷிணி, சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசன், பாபிசிம்ஹா, குருசரண், ஆண்ட்ரியா, லீலா சாம்சன், காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் இந்த தொகுப்புப்படங்களின் முக்கிய கதாபாத்திரங்களாக வருகின்றனர். ஐந்து படங்களுமே கோவிட் தொற்றின் வீடடங்கு காலத்தில் படம்பிடிக்கப்பட்டவை, அனைத்து படங்களுமே வைரஸ் வீடடங்கு பல குடும்பங்களில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களையும், அதன்பேரில் முகிழ்க்கும் காதலை, புதிய துவக்கத்தை, தோழமையை, நம்பிக்கையை பேசுகின்றன.
புத்தம் புதுகாலையை துவங்கிவைப்பது’ ஜெயராம் மற்றும் ஊர்வசியின் ’’இளமை இதோ இதோ’’. மிக நல்ல தொடக்கம். இளமை இறங்கு முகத்திலிருக்கும், தத்தமது துணையை இழந்திருக்கும் ஆனாலும் மீதமிருக்கும் வாழ்நாளை தகுந்த, நேசமிக்க துணையுடன் வாழ நினைப்பவர்களாக மிகசிறப்பாக நடித்திருக்கிறார்கள் ஊர்வசி மற்றும் ஜெயராம் இருவருமே. மனைவியை இழந்த ஜெயராமும் கணவனை இழந்த ஊர்வசியும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். ஜெயராமின் வீட்டில் அவரை சந்திக்க ஊர்வசி வந்திருக்கையில் வைரஸ் தொற்றினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஊர்வசி ஜெயராமுடனேயே 21 நாட்கள் தங்கும்படி ஆகின்றது. அவர்கள் பரஸ்பரம் ஒரு துணை மட்டுமல்ல நல்ல தோழமையும் புரிதலும் உள்ளவர்களாகவும் இருப்பதை அந்த சில நாட்களில் உணருகின்றனர்.
இருவரின் மனதிலிருக்கும் இளமையான உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்திருப்பதும் ஜெயராமின் இளம் வடிவமாக அவர் மகன் காளிதாஸே இருப்பதும் மிகப்புதுமை. ஊர்வசியின் இளமை வடிவமாக லிஸியின் மகள் கல்யாணி. மிகபொருத்தமான தேர்வு. காளிதாஸ் கண்களிலும் சிரிப்பிலும் அப்படியே அம்மா பார்வதியைக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சாக்லெட் ஹீரோ காளிதாஸ் தான் இனி. மணிரத்தினத்திடன் உதவியாளராக இருந்த சுதா இயக்கத்தில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
படத்தொகுப்பும் இசையும் ’’பேபி’’ பாடலுமாக அருமையான துவக்கமாக அமைந்துவிட்டிருக்கிறது இளமை இதோ இதோ. வாய்ஸ் ஓவர், மாதவன்
இரண்டாவதாக ’அவரும் நானும்-அவளும் நானும்’ வைரஸ் தொற்றுக்காலத்தில் தனிமையில் இருக்கும் தாத்தாவை கவனிக்கவென்று வந்திருக்கும் மகள் வயிற்றுப்பேத்தியின் பார்வையிலும், காதல் திருமணம் செய்துகொண்டதால் மகளிடமிருந்து விலகிவிட்ட தந்தையாக, பேத்தியுடன் தங்குவதை எதிர்பார்த்து காத்திருக்கும் தாத்தாவின் பார்வையிலுமாக ஒரு அழகுக்கதைக்களம்.
மகளை பேத்தியில் கண்டு மகிழும் தாத்தாவாக MS பாஸ்கர், அம்மாவையும், அம்மாவின் காதலையும் அங்கீகரிக்காத தாத்தாவின் மீதான மனவிலக்கத்துடனேயே உள்ளே வரும் பேத்தியாக ரிதுவர்மா.
மிகச்சிறப்பாக இயல்பாக நடித்திருக்கிறார் பாஸ்கர். முதலில் இருந்த தயக்கத்தையும் விலக்கத்தையும் மெல்ல மெல்ல கடந்தும் மறந்தும், தாத்தாவின் கோணத்தை புரிந்து மனமிரங்கும் பேத்தியாக ரிதுவும் மிகபிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார். ரிது களங்கமற்ற இளமையில் பூரிக்கும் அழகுடன் தூய வெள்ளுடைகளில் வருகையில் அவரது வசீகரதோற்றம் நெஞ்சை அள்ளுகின்றது. சமையலறைக்காட்சி ஒன்றில் ஒற்றைக்கல் மூக்குத்தி பளீரிட தெரியும் ரிதுவின் க்ளோஸப் காட்சியிலிருந்து மனதை திருப்பவே முடியாது. நீர்த்துளி வடிவ கண்ணாடியில் ரிதுவின் முகம் தெரியும் ஒரு காட்சியும் கவனத்தை ஈர்க்கிறது.
நல்ல கதை நல்ல பாத்திரத்தேர்வு அந்த ’கண்ணா’ பாடலும் அழகு. இருவேறு தலைமுறையினரானாலும் அவர்களுக்கிடையேயான இடைவெளியை ரத்த உறவும் புரிதலும் நிறைத்து விடுகிறதென்பதை அலங்காரங்கள் ஏதுமில்லாமல் நிதானமாய் சொல்லி இருப்பதை பாராட்டியே ஆகவேண்டும் இயக்கம் கெளதம் வாசுதேவ் மேனன். பி சி ஸ்ரீராமின் காமிரா வழியே ரிதுவையும் அந்த மிக அழகிய பசுமை சூழ்ந்த வீட்டையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
அடுத்து வரும் காஃபீ எனி ஒன்? (coffee any one?) இயக்கம் சுஹாசினி, திரைக்கதை மணிரத்னம் மற்றும் சுஹாசினி. அனுஹாசன், ஸ்ருதி ஹாசன் சுஹாசினி என்று சகோதரிகள் மூவருமே நடித்திருக்கிறார்கள். சுஹாசினியின் அம்மாவாக நடித்திருப்பவர் கோமளம் சாருஹாசன், சுஹாசினியின் அம்மாவேதான். ஒரு குடும்பப்படம்.
விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து வருவது அன்புக்கு நான் அடிமை ஓட்டுநர் கணேசன். வெகுநாட்களுக்கு பின்னர் அனுஹாசன் திரையில். முதன்முறையாக இயல்பான நடிப்பில் ஸ்ருதிஹாசன். மிக எளிய கதை. கோமாவில் இருக்கும் அம்மாவை பார்க்க வரும் இரு சகோதரிகள், வராத இன்னுமொரு செல்லத்தங்கை. அம்மாவை மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்து பராமரிக்கும் அப்பாவை கோபித்துக்கொள்ளுகிறார்கள் மகள்கள். ஆனால் அம்மாவின் உடல்நிலையில் மாற்றம் முன்னேற்றம் எல்லாம் தெரிவதுதான் கதை.
சுஹாசினியும் அனுவும் நாடகத்தனமாக வெகு செயற்கையாக நடித்திருக்கின்றனர். காத்தாடி ராமமூர்த்தி மிகசிறப்பான நடிப்பு, பொருத்தமான தேர்வும் கூட. கோமாவில் இருந்த அம்மா மெல்ல மெல்ல குணமடைவதாக காட்டியிருக்கலாம். கண்விழித்து உடனே சமையலறையில் கணவர் கொடுக்கும் காபியை குடிப்பதெல்லாம் அதிசயம்தான். படத்தின் தலைப்பாக மெடிகல் மிராக்கிள் என்று வைத்திருக்கலாம்.
ஸ்ருதி ஹாசன் அதிக இடைவெளியில் பெற்றோரின் வயதான காலத்தில் பிறந்தவரென்பது ஓகே அத்தோடு நிறுத்தி இருக்கலாம். தேவையில்லாமல் அனுஹாசனின் கர்ப்பம் உறுதியானதை சேர்த்திருப்பது ஓவர்டோஸ்
ஐந்தில் ஒரு கதை என்னும் போது குறைந்த நேரத்தில் சுருக்கமாக சிறப்பாக கதையை சொல்ல முயற்சிக்காமல் குழப்பியடித்திருப்பது திரைத்துரையில் ஆழக்கால் பதித்த குடும்பத்தினர் என்பதுதான் வருத்தம். அறிமுக இயக்குநர்கள் படமென்றால் இது குறையாக சொல்லவேண்டி இருந்திருக்காது. இந்தப்படத்திற்கு இந்த பிரபலங்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். இந்த சின்னக்கதைக்கும் மிகபிரபலமான இயக்குநர் கதாசிரியர் என்பதால் இயல்பாகவே பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பிருக்கும். ஆனால் அதற்கு பொருத்தமான விஷயங்களுடன் இந்த மூன்றாவது பகுதி இல்லையென்பது ஏமாற்றமே!
நான்காவதாக Reunion. ஆண்டிரியா, குருசரண் மற்றும் லீலா சாம்சன் ஆகியோரின் கதை. திரைக்கதை, இயக்கம் மற்றும் ஒளி இயக்கம் ராஜீவ் மேனன். பள்ளித்தோழனின் பெயரை வீட்டு மதில் சுவற்றில் பார்த்துவிட்டு தன் இருசக்கர வாகனம் பழுதானதால் வீட்டுக்குள்ளே வரும் ஆண்டிரியா வைரஸ் தொற்றாலும் வீட்டங்கு உத்தரவாலும் அங்கேயே தங்கவேண்டி வருவதும் மெல்ல மெல்ல தோழனுடன் காதலரும்புவதும் கதை
ஐந்து படங்களிலும் கிளாமர் இல்லையென்ற குறை வந்துவிடக்கூடாதென்றே ஆண்ட்ரியாவை சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கின்றது. கவர்ச்சியாக வசீகர உடைகளில் வருகிறார் ஆண்ட்ரியா. நண்பன் மருத்துவரென்பதும் வைரஸ்தொற்று இருக்கலாமெனும் சந்தேகத்தின் பேரில் அவர் மாடியிலும் ஆண்ட்ரியாவும் லீலா சாம்சனும் கீழ்தளத்திலும் தங்கியிருப்பதும் பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பவர்களுக்குள் நெருக்கம் வருவதெல்லாம் சரிதான் ஆண்டிரியாவின் போதைப்பழக்கத்தை தேவையில்லாமல் வலிந்து உள்ளே திணித்திருக்கிறார்கள்
மன அழுத்தம், பணிச்சுமை, போதைப்பழக்கம் என்றெல்லாம் தேவையில்லாமல் குழப்பாமல் பள்ளித்தோழமை மெல்ல மெல்ல காதலாக மிளிரத்துவங்குவதை மட்டும் அழகாக சொல்லி இருக்கலாம். மிக நன்றாக துவங்கி மோசமாக முடிந்திருக்கும் படம் இது. லீலா சாம்சன் சரண்யா பொன்வண்ணனைப்போலவே அக்மார்க் அம்மா வேடத்துக்கு மிகப்பொருத்தம். ஆண்ட்ரியாவும் குருசரணும் சேர்ந்திருக்கும் அந்த நிஜ பள்ளிப்புகைப்படம் எதிர்பாரா இனிய அதிர்ச்சியை இறுதியில் அளிக்கின்றது
இறுதிப்படம் பாபி சிம்ஹா நடித்திருக்கும் ’மிராக்கிள்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. புதிய இயக்குநர்கள் யாரேனும் எடுத்திருந்தாலும் அதன் தரம் இப்படித்தான் இருந்திருக்கும். கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் என்று சொல்லும்படியான ஒருகாட்சி கூட படத்தில் இல்லை. அற்புதத்தை நம்பும் இரு இளைஞர்களுக்கு அது நடக்காமல் போவதும், அற்புதம் நிகழுமென்னும் நம்பிக்கையின்றி சாகத்துணிந்த ஒருவருக்கு அற்புதம் நடப்பதுமான எதிர்பாராமையின் கதை
.
பாபி சிம்ஹா என்னும் மிகத்திறமையான, வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தக் காத்திருக்கும் நடிகரைத்தவிர சொல்லிகொள்ளும் படியாக எதுவுமே இல்லை படத்தில்.
ஐந்து படங்களும் ஒரு பொன்மஞ்சள் நிற மலரின் ஐந்து இதழ்களாக காட்டி ஒவ்வொரு படம் முடியும் போதும் அம்மலரிதழ்களில் ஒவ்வொன்றாக வண்ணத்தில் நிறைப்பது மிக அழகு
ஐந்தில் முதலிரண்டும் சிறப்பு, பிறகு வரும் மூன்றும் பார்க்கலாம் ரகம் அவ்வளவுதான்
ஐந்து கதைக்களங்களும் முற்றிலும் வேறானவை. பிரபல பாடல்களின் முதல்வரிகளையே பொதுத்தலைப்பாகவும் கதைகளின் தலைப்புக்களில் சிலவற்றிலும் பயன்படுத்தி இருப்பதும் கவனிக்கத்தகக்து.
FEFSI யின் ஊரடங்கு காலத்துக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி படத்தை எடுத்தமைக்காகவும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்