லோகமாதேவியின் பதிவுகள்

Month: March 2022 (Page 2 of 4)

மலர் பித்து

tulip | Description, Flower, Cultivation, & Facts | Britannica

சென்ற பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழுக் கூட்டம் முடிவடைந்த பின் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் எண்ம ரூபாய்களில் முதலீடு செய்பவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் அதை செய்யவேண்டும் என்றும் அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது தன் கடமை என்றும்  அறிக்கை வெளியிட்டிருந்தார்!

கடந்த சில வருடங்களாக பிட்காயின், எதீரியம், சொலோனா, ஷிபாஇனு, டோஜ் காயின் மேட்டிக், டெதர், டெரா, கார்டோனா போன்ற நுண் நாணயங்களிலும், எண்ம நாணய குறியீடுகளிலும் ஏராளமானோர்  பங்கு வர்த்தக முதலீடுகள் செய்து லாபமும் அடைந்து வருகின்றனர். 

எனினும்  தனியார் எண்ம நாணயங்களில் செய்யப்படும் அதிகப்படியான முதலீடுகள்  இந்தியாவின் பருப்பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும்,  அவற்றின்  சமநிலையை குலைத்துவிடும் என்று சொன்ன சக்திகாந்ததாஸ், 17 ஆம் நூற்றாண்டின் ஆகப்பெரிய பொருளாதார சிக்கலான ட்யூலிப் மலர் பித்தை (Tulipmania) உதாரணமாக காட்டி அதுபோல மீண்டும் நடந்துவிடக்கூடாது என எச்சரித்திருந்தார். 1

இந்த அறிவிப்பு வெளியான சில நொடிகளில் இருந்து ட்யூலிப் மேனியா என்றால் என்னவென்று  பல்லாயிரக்கணக்கானோர் தேடுபொறியில் தேடத் தொடங்கினர். 2

17ம் நூற்றாண்டில் ட்யூலிப் மலர்களின் அசல் மதிப்பிற்கல்லாது லாபத்தின் பொருட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட விலையேற்றத்தால் ட்யூலிப் கிழங்குகளின் பங்கு வர்த்தக சந்தை உச்சத்தை தொட்டு, திடீரென சரிந்து பல்லாயிரக்கணக்கானோர் நஷ்டமடைந்தனர் உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட பொருளாதார சிக்கல்  இதுவே  என வரலாற்றாய்வாளர்கள் மற்றும்  பொருளாதார நிபுணர்களால்  குறிப்பிடப்படுகிறது. 1634-37 ல் நிகழ்ந்த  இந்த ட்யூலிப் மலர்கள் மீது மக்களுக்கு உண்டான பித்து மிக சுவாரஸ்யமானது.

மத்திய ஆசியாவின் காட்டுப்பயிரான ட்யூலிப் செடிகள் துருக்கியில் 1000 மாவது ஆண்டிலிருந்து பயிராக்கப்பட்டன.

ஏறக்குறைய 600 வருடங்கள் ஆட்சிபுரிந்து 1922 ல் முடிவுக்கு வந்த உலகின் மிகப்பெரியதும் சக்தி வாய்ந்ததுமான ராஜ்ஜியமான துருக்கிய பழங்குடியினரின் ஒட்டமான் பேரரசின் (Ottoman Empire, 1299–1922),  குறியீடாகவே ட்யூலிப் மலர்கள் இருந்தன. 

அரண்மனை தோட்டங்களில் மட்டும் பயிராகிக்கொண்டிருந்த ஒட்டமான் அரச வம்சத்தினரின் விருப்பத்துக்குகந்த  ட்யூலிப் மலர்ச்செடிகள் மெல்ல மெல்ல நாடெங்கிலும் பரவி வளர துவங்கின. ட்யூலிப் மலர்களின் அழகுக்காக அவை மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன.   ஒட்டமான்  மன்னரான சுல்தான் இரண்டாம் செலிம்  சிரியாவிலிருந்து 50ஆயிரம் ட்யூலிப் கிழங்குகளை தருவித்து நாடெங்கும் அவற்றை பயிரிட்டார். 

அப்போது ஓட்டமான் அரசவையில் மிகச்செல்வாக்குடன் இருந்த வியன்னாவின் தூதுவர் ஓஜெர் கைஸெலின் டி பஸ்பெக் (Ogier Ghiselain de Busbecq) , ட்யூலிப்களை மேற்குலகிற்கு அறிமுகம் செய்தார். எழுத்தாளரும் மூலிகை நிபுணருமான இவர்  அரிய பொருட்களை சேகரிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இவரே 6 ம் நூற்றாண்டை சேர்ந்த டயாஸ்கொரிடஸின் தெ மெடீரியா மெடிகா வின் அசல் பிரதியை தேடிக்கண்டடைந்தவர். இவர் துருக்கியின் ட்யூலிப் மலர்களை பெரிதும் ஆராதித்தார்.

துருக்கி மக்களுக்கு ட்யூலிப் மலர்களை தலைப்பாகையில் சூடிக்கொள்ளும் வழக்கமிருந்தது. ஒருமுறை பயணத்திலிருக்கையில் வழியில் பலர் ட்யூலிப் மலர்களை தலைப்பாகையில் செருகிக் கொண்டிருப்பதை பார்த்த ஓஜெர் தலையிலிருக்கும் அம்மலர்களின் பெயரென்ன? என்று கேட்கையில் அவருக்கு தலைப்பாகையின் பெயரான ’ட்யூலிபா’ பதிலாக சொல்லப்பட்டது.  அதையே அவர் அம்மலர்களின் பெயராக தவறாக  நினைத்துக் கொண்டார் என்கிறது தாவரவியல் வரலாறு. எனவே ட்யூலிபா என்றே அவர் அம்மலர்களை குறிப்பிட்டார்.(துருக்கியமொழியில் ட்யூலிபா என்றால் தலைப்பாகை.)

1551ல் இவர் ட்யூலிப் விதைகளை  துருக்கியிலிருந்து ஆஸ்திரியாவிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஐரோப்பாவெங்கும் ட்யூலிப் செடிகள் பயிராக துவங்கின.

பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரின் மாபெரும் துறைமுகத்துக்கு 1562ல்  ஒட்டோமான் பேரரசின் தலைநகரமான கான்ஸ்டண்டினோபிலிலிருந்து சரக்கு கப்பலில் வந்த ட்யூலிப் கிழங்குகள் ஐரோப்பாவின் ட்யூலிப் தோட்டக்கலை துறையின் வளர்ச்சிக்கு  வித்திட்டது.

16 ம் நூற்றாண்டின் மிகப்புகழ்பெற்ற தோட்டக்கலை நிபுணரும் நவீன தாவரவியல் துறையை தோற்றுவித்தவரும் ஃப்ரெஞ்ச் தாவரவியலாளருமான கரோலஸ் க்ளூசிஸ் (Carolus Clusius) ஐரோப்பாவில் பல  புதிய ட்யூலிப்  வகைகளை பயிராக்கிய பெருமைக்கு உரியவர். ட்யூலிப் மலர்களின் நிற வேறுபாடு குறித்து ஏராளமான ஆய்வுகளையும் இவர் செய்தார். இன்றைய டச்சு ட்யூலிப் வணிகத்துக்கு அடித்தளமிட்ட  கரோலஸ் அழகிய தோட்டங்களின் தந்தை எனவும்  அழைக்கப்பட்டார் இவரே உருளைக்கிழங்கையும், வெங்காயத் தாமரையையும் ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார் 

1573 லிருந்து 1587 வரை வியன்னாவின் புனித ரோமப்பேரரசர் பூங்காவின் இயக்குநராக இருந்த காலத்தில் அங்கு அவரால் வளர்க்கபட்ட ட்யூலிப் செடிகளே டச்சு  ட்யூலிப் தொழிலை துவங்கிவிட்டன.

1590ல் கரோலஸ் க்ளூசிஸ் லெய்டன் பல்கலைக்கழகத்தில் (University of Leiden)  ட்யூலிப் தோட்டத்தை உருவாக்கிய போதுதான் துருக்கியிலிருந்து இவரது நெருங்கிய நண்பரான ஓஜெர் கைஸெலின்  ட்யூலிப் விதைகளை அனுப்பி வைத்திருந்தார்.  இவர் எழுத்துபூர்வமாக “tulipam” என்று இவற்றின் பெயரை குறிப்பிட்டு கடிதங்கள் அனுப்பியதால் அதிகாரபூர்வமாக இவை லத்தீனமொழியில் ட்யூலிபா என்று அழைக்கப்பட்டு பின்னர்  ட்யூலிப் என்பது  ஆங்கிலப்பெயராகியது

ட்யூலிப் பூங்காவிற்கு வருகை தந்த மக்களை  ஆழ்ந்த நிறங்களில் மணி வடிவில் இருந்த பெரிய ட்யூலிப்  மலர்களின் அழகு வெகுவாக வசீகரித்தது. 1596 மற்றும் 1598 ல் அதுவரை ஒற்றை நிறங்களில் மட்டும் இருந்த ட்யூலிப்  மலரிதழ்களில் வைரஸ் தொற்றினால் பிற நிறங்களும் தீற்றல்களாக  உருவானபோது அந்த மலர்கள் வெகுவாக விரும்பப்பட்டது

அப்போது ட்யூலிப் தோட்டத்திலிருந்து தீற்றல்களுடைய ட்யூலிப் செடிகளின் விதைகள்  பலமுறை திருடப்பட்டன. வெகுவிரைவில் இவற்றின் விதைகள் பரவி ட்யூலிப் மலர்  வர்த்தகமும் மலர்ந்து விரிந்தது. அப்போது இதன் மீது பித்துக் கொள்ள துவங்கி இருந்த மக்களால் உருவானதுதான் 1633-37 வரை நீடித்திருந்த  ட்யூலிப் பித்துக்காலம்.

ட்யூலிப்கள் விதைகளிலிருந்தும் வேர்க்கிழங்குகளிலிருந்தும் பயிராகும் என்றாலும் விதைகளிலிருந்து உருவாகும் செடிகளை காட்டிலும் விரைவாக கிழங்குகளிலிருந்து செடிகள் உருவாகி  மலர்களும் விரைவாக உருவானதால் பெரும்பாலும் இவை கிழங்குகளிலிருந்தே பயிர் செய்யபட்டன.

ஹாலந்தில் ட்யூலிப்  கிழங்குகளை வாங்குவதும் விற்பதும் கோடைக்காலத்தில் தான் நடைபெறும். ஜூன் மாதம் மலர்ந்து முடிந்துவிட்ட ட்யூலிப்செடிகளின் கிழங்குகள் தோண்டி எடுக்கப்பட்டு காகிதங்களில் சுற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டு மீண்டும் அக்டோபரில் நட்டு வைக்கப்படும்.அல்லது மண்ணிலேயே விட்டுவைக்கப்படும்

தொடரும் குளிர்காலம் முழுவதும் மண்ணிற்கடியில் இருக்கும் கிழங்கு  முளைத்து வளர்ந்து அடுத்த மலரும் காலத்தில்தான் மீண்டும் மலரும். இந்த குளிர்காலகட்டம் உலர் கிழங்கு மாதம் எனப்பட்டது.

ட்யூலிப் செடிகளை குறித்து நன்கு அறிந்திருக்கும் ஒரு நிபுணர் மலரும் காலம் முடிந்து இலைகள் பழுக்க துவங்குகையில் செடிகளை பார்வையிட்டு வேர்க்கிழங்குகளையும் சோதித்து, வாங்குபவருக்கும் விற்பவருக்கும் அதைக்குறித்து விளக்குவார் . பின்னர் கிழங்குகள் கைமாறி  பணப்பரிமாற்றம் நிகழும். அடுத்த பருவத்தில் அக்கிழங்குகள் புதிய உரிமையாளரின் நிலத்தில் விளைந்து மலரும்.


பிரகாசமான நிறங்களில் இருந்த ட்யூலிப் மலர்கள் அனைவரின் விருப்பத்துக்குமுரியதாயின. ட்யூலிப் மலர்களை தோட்டத்தில் அல்லது பூச்சாடிகளில் வைத்திருக்காதவர்கள் மிக மோசமான ரசனைக்காரர்களாக கருதப்பட்டார்கள். 

செல்வச் செழிப்பின், ஆடம்பரத்தின், உயர்குடியினரின் அடையாளமாக மாறிய ட்யூலிப் மலர்களின் உற்பத்தி  அதன் தேவையை காட்டிலும் மிக குறைவாக இருந்ததால் அதன் சந்தை மதிப்பு உயர்ந்து கொண்டே இருந்தது,

1610ல் ஒரு குறிப்பிட்ட வகை ட்யூலிப் கிழங்கு திருமணத்தின் போது மணமகள் சார்பில் வரதட்சணையாக அளிக்கப்பட்டது. ஃப்ரான்ஸின் புகழ்பெற்ற வடிசாலை ஒன்று அவர்களது பிரபல பியர்வகை ஒன்றை ஒரு ட்யூலிப் கிழங்குக்கு பதிலாக அளித்தது.

விரைவில் ட்யூலிப் மலர்கள் டச்சு மக்களின் அந்தஸ்தின் அடையாளமாகின. இதழ்களில் குறிப்பிட்ட நிறங்களில் தீற்றல்களை கொண்டிருந்த மலர்கள் அரிதென கருதப்பட்டு மிக அதிக விலைக்கு விற்பனையாகின. 

இப்படி பிற தாவர வர்த்தகங்களை போலவே நிகழ்ந்து கொண்டிருந்த ட்யூலிப்களின் வர்த்தகத்தில்  புதிதாக உருவான  பலநிற தீற்றல்களை   கொண்ட மலர்களின் மீது உருவான பெரும் பித்தினால் 1634ல் பெரும் மாற்றம் உண்டானது

ஒரு மூட்டை கோதுமை வாங்க ஒரு ஃப்ளோரின் போதுமானதாக இருந்த காலத்தில் தீற்றல்களையும் நெருப்பின் பிழம்புகளைப்போன்ற நிறக்கலவையையும் கொண்டிருந்த செம்பர் அகஸ்டஸ் (Semper Augustus) என்னும் ஒரு மலர்ச்செடியின் கிழங்கு சுமார்   6,000 ஃப்ளோரின்களுக்கு விற்பனையானது .

மற்றுமொரு வர்த்தகத்தில் ஒருவர் தனது 2 சாம்பல் நிற குதிரைகளையும் 4600 ஃப்ளோரின் களையும் கொடுத்து ஒரு செம்பர் அகஸ்டஸ் கிழங்கை வாங்கி இருந்தார். வைஸ்ராய் வகை ட்யூலிப் கிழங்கொன்று நான்கு  கொழுத்த காளைகள் ,8 அன்னங்கள்,12 முதிர்ந்த ஆடுகள், மற்றும் 1000 பவுண்ட் பாலாடைக்கட்டிகள் கொடுத்து வாங்கப்பட்டது.

சாகுபடி முறைகள் மேம்படுத்தப்பட்டு அதிக அளவில் ட்யூலிப் மலர் செடிகள் பயிரானபோது  பங்கு வர்த்தகர்கள் இந்த வணிகத்தில் இறங்கினார்கள்.. ஒரு கட்டத்தில் பங்கு வர்த்தகர்களின் செல்வாக்கினால் ஒற்றை மலரின் விலை ஒரு வீட்டின் மதிப்பைக் காட்டிலும் கூடுதலாகவும் இருந்தது. செல்வந்தர்கள் மட்டுமல்லாது, சாதாரணர்களும் ட்யூலிப் பங்குகளில் முதலீடு செய்ய துவங்கினர்..வீடுகள் எஸ்டேட்டுகள் தொழிற்சாலைகள் என பலவற்றையும் பணயம்  வைத்து ட்யூலிப்பில் முதலீடு செய்யப்பட்டது.

கிழங்குகள் மண்ணுக்கடியில் இருக்கையிலேயே உத்தேசமாக அவற்றின் எடை கணக்கிடப்பட்டு  விலை நிர்ணயிக்கப்பட்டது. அவை தோண்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே அவற்றின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் காகிதங்களில் அவை விற்பனையாகின.

பருத்த எடை கூடிய அன்னைக்கிழங்குகளிலிருந்து புதிய குருத்துச்செடிகள் அதிகம் வரக்கூடுமென்பதால் ஒரு அன்னைக்கிழங்கிலிருந்து எத்தனை புதிய செடிகள் வரக்கூடும் என்றும் யூகிக்கப்பட்டு அவற்றின் விலை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பலர் ட்யூலிப் கிழங்குகளை கண்ணால் கூட பார்த்திருக்கவில்லை. ஒரே நாளில் 10 கைகளுக்கு  மேல் கிழங்குகளின்  விலை எழுதபட்டிருந்த ஒப்பந்தங்கள் கைமாற்றி மாற்றி மேலும்மேலும் அதிக விலைக்கு விற்கபட்டன. 1633-37 வரையிலான காலத்தில் இந்த ட்யூலிப் பித்து அதன் உச்சத்தில் இருந்தது சந்தையின் உச்சத்தில், அரிதான ட்யூலிப்  கிழங்குகள் ஒரு சராசரி நபரின் ஆண்டு சம்பளத்தை விட ஆறு மடங்குக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

ஹாலந்திலிருந்து இந்த மலர்பித்து பிரான்சுக்கும் பரவியது. அங்கும் ட்யூலிப் கிழங்குகளும் மலர்களும் மிக அதிக விலைக்கு விற்பனையாகின. அருமணிகளுக்கிணையான விலையில் விற்கப்படும் ட்யூலிப் மலர்களை வாங்கி அணிந்து கொள்ள பெண்கள் விரும்பினர்.

பிரான்ஸின் உயர்குடிப் பெண்கள் விருந்துகளின் போது மேலாடையின் கழுத்துப்பட்டைகளில் ஆபரணங்களுக்கு பதில் ட்யூலிப் மாலைகள்  அணிந்து கொண்டனர்.

1637 ல் பிளேக் நோய் அங்கு பரவியது. அப்போது நடைபெற்ற ஒரு ட்யூலிப் ஏலத்தில் பெரும்பாலான பங்குதாரர்களால் கலந்து கொள்ள முடியாமல் போன போது, பங்குகளின்  விலை திடீரென சரிந்து ஒரே நாளில் பல முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். இதுவே ட்யூலிப்மேனியா எனப்படும் உலகின் முதல் பெரும் பொருளாதார குமிழி வெடிப்பு.

டச்சு அரசு இந்த பொருளாதார சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுத்தது. வெறும் பத்து சதவீத கட்டணம் மட்டும் பெற்றுக்கொண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்து ஒப்பந்ததாரர்களை  விடுவித்தது. எனினும் பல்லாயிரக்கணக்கானோர்  சொத்துக்களையும் சேமிப்புகளையும் இழந்தார்கள் 

ட்யூலிப் பித்து 1637ல் முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும் ட்யூலிப் மலர்களின் மீதான விருப்பம் ஆழ வேர்பிடித்திருந்தது. 

 இன்றுவரையிலும் இந்த ட்யூலிப் மலர் பித்து அதிகப்படியான பேராசையால் உண்டாகும் ஆபத்துகளுக்கு ஒரு உவமையாக சொல்லப்படுகிறது.

ட்யூலிப்கள்  லில்லியேசியே  என்றழைக்கப்படும் அல்லிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. தற்போது உலகெங்கிலும் ஏராளமாக வளர்க்கப்படுகின்றது .6 செ மீ அளவிலுள்ள இந்த ட்யுலிப் மலர்களில் அகன்ற அடிப்பகுதியும்  கூர் நுனியுமுள்ள 6 இதழ்கள் இரட்டை அடுக்கில் மூன்று மூன்றாக  நெருக்கமாக அமைந்திருக்கும். அல்லி வட்டத்தின் மூன்று இதழ்களும் புல்லிவட்டத்தின் மூன்று இதழ்களும் இணைந்து ஒன்றே போல் தோற்றமளிக்கும். இவை ஆங்கிலத்தில் tepal எனப்படும். ஒரு செடியிலிருந்து உருவாகும் 2 அடிநீளமுள்ள ஒற்றை மலர்த்தண்டில் பெரும்பாலும் ஒரே ஒரு மலர் மலர்ந்திருக்கும். அரிதாக இரு மலர்கள் உருவாகும்.  2 லிருந்து 6 வரை மத்திய பகுதியில் அகன்றும் மேல் கீழ் நுனிகளில் குறுகியும் இருக்கும் நீளமான  சதைப்பற்றுள்ள  ரிப்பனைப்போன்ற நீலப்பச்சை  இலைகள் காம்புகளின்றி நேரடியாக இச்செடியின் தண்டுகளின் அடிப்பகுதியிலிருந்து உருவாகி மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மண்ணிற்கடியில் உருண்டையான பளபளப்பான கிழங்குகள் இருக்கும். இவற்றின் சிறு வெடி கனி ஏராளமான சிறிய விதைகளை கொண்டிருக்கும். மென்மணம்கொண்டிருக்கும் ட்யூலிப்பின் இருபால் மலர்கள் ஏப்ரல் மே மாதங்களில் மலரும்.  

தூய வெள்ளை நிறத்திலிருந்து சிவப்பு, ஊதா, ஆரஞ்சு, மஞ்சள் என தனி நிறங்களிலும், பல நிறங்கள் இணைந்தும், கலவையான நிறத்தீற்றல்களுடனும்  இருக்கும் ட்யூலிப் மலர்கள் நீல நிறத்தில் மட்டும் இல்லை. நீல வைரம் என அழைக்கப்படும் வகையும் இளம் ஊதா நிற ட்யூலிப் மலர்தான். தோட்டக்கலை நிபுணர்கள் நீல ட்யூலிப்களை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஸ்விட்சர்லாந்தின் தாவரவியளாலரான கொனார்ட்கெஸ்னெரே (Conrad Gessner -1516-1565) ட்யூலிப்களின் நிறங்களை குறித்து முதலில் எழுதி ஆவணப்படுத்தியவர். 1559 ல் அவர் பவேரியாவின் தோட்டமொன்றில் ட்யூலிப்மலர்களை கண்டு பிரமித்து ’’ஒற்றை சிவப்பு மலர்  பெரிதாக ஒரு லில்லியைப்போல’’ என்று குறிப்பிட்டார்.

மலரிதழடுக்குகளின் எண்ணிக்கை, மலரின் அளவு, மலர்செடியின் அளவு, மலரும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 4000 வகைகளில் ட்யூலிப்கள் உள்ளன. Tulipa gesneriana, என்னும் அறிவியல் பெயரை கொண்டிருக்கும் தோட்ட ட்யூலிப் செடிகளிலிருந்து  கலப்பினம் செய்யப்பட் வையே பிற வகைகள்.

இவற்றில் ஒற்றை நிற இதழ்களை கொண்டவை  ’செல்ப் கலர்’ என்றும் தாவர வைரஸ் தொற்றினால் வேறு நிற தீற்றல்களை கொண்டிருப்பவை ’புரோக்கன்’ என்றும் குறிப்பிடப்படுகின்றன.

ட்யூலிப் கிழங்குகளும்   மலரிதழ்களும் உண்ணத்தகுந்தவை  குறைந்த  அளவு ஒவ்வாமை உண்டாக்கும் tuliposide A என்னும் வேதிப்பொருள் இவற்றில் இருந்தாலும்  இவை உண்ணப்படுகின்றன. இரண்டாமுலகப் போரின்போது  டச்சு அரசு எவ்வாறு ட்யூலிப் கிழங்குகளை ஆபத்தின்றி உணவாக்கலாமென்று கையேடுகள் வெளியிட்டனர். கஞ்சியும் சூப்பும் மட்டுமல்லாது அப்போது  கிழங்குகளை மாவாகி ரொட்டிகளும் செய்யப்பட்டன. ட்யூலிப் மலரிதழ்களும் உணவாகின்றன.

இப்போது இவை நட்சத்திர உணவகங்களில் பிரத்யேக விலை உயர்ந்த  உணவாக கிடைக்கின்றன.

1600ல்  பலரால் விரும்பப்பட்ட மலரிதழ்களின்  நிற வேறுபாடுகள் தாவர வைரஸினால் உருவானவை என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. 1931ல்தான் தாவரவியலாளர்கள் அவை ஆபத்தற்ற வைரஸினால் உருவாகின்றன என்பதையும் அந்த வைரஸ், செடிப்பேன் மூலமாக  பரவுகின்றன என்பதை கண்டறிந்தார்கள்

சுல்தான்கள் காலத்திருந்தே ட்யூலிப் மலர் வடிவங்கள் உலகின் புகழ்பெற்ற வடிவங்களாக இருக்கின்றன.  ஜெர்மானிய ஓவியர் ஜேகப் மரேல் (jacob Marrel-1614-1681) ட்யூலிப்  மலர் வடிவங்களுக்கென்றே பிரத்யேகமாக   ஒரு நூலை வெளியிட்டார். 

அதன்பிறகு ஆடை  ஆபரண, கட்டிடக்கலை வடிவங்களில் ட்யூலிப் மலர்கள் தவறாமல் இடம் பிடித்தன.

1800களில் பிரபல ஆளுமைகளின் முழு உருவ சித்திரங்கள் வரையப்பட்டபோது  ட்யூலிப் மலர்களும் ஓவியங்களில் இடம்பெற்றன.1800ல் தான் பிரபல ட்யூலிப் டிஃப்ஃபானி அலங்கார விளக்குகள் உருவாகி புகழ்பெற்றன.

பெரும்பாலான ட்யூலிப் மலர்களில் நறுமணம் இல்லையெனினும் ஒருசில வகைகளில் மென்மணமும் நல்ல இனிமையான நறுமணமும் இருக்கும். ட்யூலிப் மலர்களில் நறுமணங்களை உருவாக்கும் 130 வேதிச்சேர்மங்கள் இருப்பதாக குறிப்பிடும் ஜப்பானின் 2012 ல் நடந்த ஆய்வொன்று நறுமணங்களின் அடிப்படையில் ட்யூலிப்களை 

 இனிப்பு மணம் கொண்டவை

பசுந்தழை யின் வாசம் கொண்டவை

பாதாம் நறுமணம் கொண்டவை

ஆரஞ்சின் மணம் கொண்டவை

தேன் மணம் கொண்டவை

ரோஜாமணம், மூலிகை மணம், மற்றும் மரங்களின் மணம் கொண்டவை என  வகைப்படுத்துகின்றனது

17ஆம் நூற்றாண்டிலேயே ட்யூலிப் மலர் பித்து முடிவுக்கு வந்துவிட்டாலும் ட்யூலிப் களின் மீதான தனித்த பிரியம் அம்மக்களின் கலாச்சாரத்துடன் ஒன்று கலந்து விட்டிருக்கிறது..

நெதர்லாந்தில் 2015 லிருந்து உருவாக்கப்பட்டு வரும். நான்கு தீவுகளின் கூட்டான  ட்யூலிப் தீவின் நிலத்தோற்றம் அழகிய காம்புடன் கூடிய ட்யூலிப் மலரைப் போலவே இருக்கிறது. இந்த ட்யூலிப் தீவில் 12000 ட்யூலிப் வகைகளும் வளர்க்கப்படுகின்றன. (துபாயின் பானை வடிவ தீவு டச்சு  வல்லுநரால்தான் கட்டப்பட்டது.  )

 துருக்கியில் ட்யூலிப்கள் எப்போதும் மிகவும் பிரபலமாகவே இருந்தன. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ட்யூலிப்களின் காலமென்றே அழைக்கப்பட்டது. அப்போதுதான் ட்யூலிப் திருவிழாக்களும் துவங்கின. தலைநகரை தவிர பிற பகுதிகளில் ட்யூலிப் விற்பனை செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகவும் இருந்தது.

20 ஆம் நூற்றாண்டில் சுருக்கங்கள் கொண்ட மலரிதழ்களுடன் ட்யூலிப் மலர்கள் உருவாகின. வைரஸ் தொற்றினால் அவற்றின் நெருப்பின் தழல்போல சிவப்பு தீற்றல்கள் இருந்த வகைகள் பெரிதும் விரும்பப்பட்டன 

பிரிட்டனிலும் இந்த மலர் பித்து  அப்போது பரவியது இங்கிலாந்துக்கு ட்யூலிப் கிழங்குகள் 1577 ல் அறிமுகமாயின.. அப்போடிலிருந்தே இவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. புதிய கலப்பினங்களும் ஏராளம் உருவாகின, அவைகளுக்கு இங்கிலாந்தின் தாவரவியலாளர்களின்  பெயர்களும் வைக்கப்பட்டன.

19ஆம் நூற்றாண்டில் ட்யூலிப்களின் விலை உச்சத்தில் இருக்கையில் பல ட்யூலிப் சாகுபடியாளர்கள் ட்யூலிப் மலர்களுக்கென்று தனித்த அமைப்புக்களையும் நூற்றுக்கணக்கில் உருவாக்கினார்கள்.

வருடாவருடம் ட்யூலிப் மலர்க்கண்காட்சிகளும்  தொடர்ந்து நடந்தன. கண்காட்சிகளின்போது மிக அழகிய ட்யூலிப் வகைகளுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டன.  1849ல் யார்க்கில் (York) நடந்த ஒரு மலர்க்கண்காட்சியில் போட்டியில் 2000 வகை ட்யூலிப்கள் இருந்ததால் நடுவர்கள் சுமார் 6 மணி நேரம் செலவழித்து பரிசுக்குரிவற்றை தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது.

 ஆனால் முதல் உலகப்போருக்கு பின்னர் இந்த அமைப்புக்கள் பொலிவிழந்து மறைய துவங்கின 1936ல் ராயல் ட்யூலிப் அமைப்பு  மூடப்படும்போது எஞ்சி இருந்தது வடக்கு இங்கிலாந்து ட்யூலிப் அமைப்பு மட்டுமே. 1836ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்றும் செயல்படுகிறது. மே 2020 ல் நடக்க இருந்த அதன் 185 வது மலர் கண்காட்சி  பெருந்தொற்றினால்  துரதிர்ஷ்டவசமாக ரத்தானது.

 ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியரான ரெம்பிராண்ட்  வரைந்த ஒரே ஒரு மலர் ட்யூலிப் தான் என்கிறார்கள்  வரலாற்றாய்வாளர்கள். அவரது மனைவி சேஸ்கியாவை  ரோமானிய தொன்மங்களில் வளமை மற்றும் வசந்தத்தின் தேவதையான ஃப்ளோராவாக  சித்தரித்து வரைந்த ’’தி ஃப்ளோரா’’ என தலைப்பிடப்பட்ட ஓவியத்தில் சேஸ்கியாவின் தலையலங்காரத்தில்  ஒரு அருமணியைபோல  தீற்றல் நிறங்களுடன் இருக்கும் ஒரு ட்யூலிப் மலர் வரையப்பட்டிருக்கிறது (the portrait “Flora”) 3

 இந்த ட்யூலிப் நகலெடுத்து உருவாக்கப்பட்ட ரெம்பிராண்ட் ட்யூலிப் உள்ளிட்ட பல புது பிரபல கலப்பின ட்யூலிப்கள் இப்போது உலகெங்கிலும் வளர்கின்றன ஹாலந்தின் 7 ரெம்பிராண்ட் கிழங்குகள் 4 டாலர்களுக்கு இப்போது கிடைக்கின்றது.

ஐஸ்கிரீம்ட்யூலிப் என்றும் ஒரு புதிய வகை சமீபத்தில் உருவாக்கபட்டுள்ளது. இளஞ்சிவப்பு அடிப்பகுதியும் தூயவெண்ணிற நுனிப்பகுதியும் கொண்டிருக்கும் மலரரும்புகள் ஐஸ்கிரீம் போலவே தோற்றமளிக்கிறது.

’டான்ஸலைன்’ என்னும் புதிய ட்யூலிப் வகை வெள்ளை பல அடுக்கு மலரிதழ்களில் வைன் நிற சிறு பட்டைகளை கொண்டிருக்கும்.

ஒற்றை மலர்த்தண்டில் 5 சிவப்பு ட்யூலிப் மலர்களை கொடுக்கும் ’எஸ்டாட்டிக்’ வகையும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

முழு வெள்ளை மலரரும்புகள் முதிர முதிர ஊதா நிறம் கொண்டு முழு ஊதாவாக மாறும் வகையும் இப்போது புதிய வரவாகி இருக்கிறது.

  வருடத்திற்கு 3 பில்லியன் ட்யூலிப் கிழங்குகளை உற்பத்தி செய்தும் அதிக அளவில் ஏற்றுமதி செய்தும் உலகின் ட்யூலிப் வளர்ப்பில் நெதர்லாந்து முதலிடம் வகிக்கிறது . ட்யூலிப் மலர்களுக்கான திருவிழாக்கள் உலகெங்கிலும் நெதர்லாந்து ,ஸ்விட்சர்லாந்து, வாஷிங்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பல  இடங்களில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.

ஆசியாவின் மிகப்பெரிய ட்யூலிப் தோட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உலகப்புகழ் பெற்ற  தால்ஏரி   அருகே  ஜபர்வான் மலையடிவாரத்தில்  உள்ளது.  75 ஏக்கர் பரப்பளவில் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இந்திராகாந்தி நினைவுத் தோட்டத்தில் 46 வகையைச் சேர்ந்த 20 லட்சம் ட்யூலிப் மலர்ச் செடிகள்  பராமரிக்கப்படுகின்றன.  ஒவ்வொரு வருடமும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு ட்யூலிப் கண்காட்சி காஷ்மீரில் நடைபெறும். பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைப் பார்ப்பதற்காக உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வருவார்கள் இந்த கண்காட்சியில் தோட்டத்திற்கு வெளியே உணவு அரங்கம், கைவினைப்பொருட்கள் அரங்கம் ஆகியவை காஷ்மீர் பாரம்பரியத்துடன் அமைக்கப்படும். அத்துடன் உலகின் தலைசிறந்த உருது கவிஞர்களும் இந்த விழாவில் பங்குபெறுவார்கள். இந்த வருட கண்காட்சி மார்ச் 20 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

1962 ல் இதே மார்ச் மாதம் 18 ம் தேதி ஒரு சிகிச்சையின் பொருட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறிய சில்வியா பிளாத்துக்கு அளிக்கப்பட்ட ட்யூலிப் மலர் செண்டை குறித்து  அவர் எழுதிய பிரபல கவிதையின் தலைப்பும் ’ட்யூலிப்’ தான். மரணத்தை அணைத்துக்கொள்வதா அல்லது மீண்டும் துயர் நிறைந்த உலக வாழ்வுக்கு திரும்புவதா என்னும் கேள்வியை பித்துப்பிடிக்க வைக்கும் அழகு கொண்டிருக்கும் டியூலிப் மலர்கள் தன் முன்னே எழுப்புகின்றன என்றும் மிக எளிமையான மரணத்திற்கு முன்னர் அத்தனை அலங்கரமான ட்யூலிப்கள் இருப்பதன் பொருத்தமின்மையையும் இந்தக்கவிதையில் சில்வியா சொல்லுகிறார். மரணத்தின் அமைதியை கொண்டிருக்கும் மருத்துவமனையின் தூய வெண்ணிற அறையில்,உயிர்ப்புள்ள ரத்த சிவப்பு நிற ட்யூலிப் மலர்களின் இருப்பு எத்தனை முரணாக இருக்கிறது என்பதை சொல்லும் மிக அழகிய கவிதை இது. 4

ட்யூலிப்கள் மறுபிறப்பின், தயாள குணத்தின் ஆழ்ந்த அன்பின் அடையாளங்களாக கருதப்படுகின்றன. சமச்சீரான வடிவில் இருக்கும் இம்மலர்கள் 11 வது திருமண நாளின் பரிசாக அளிக்கப்படுகின்றன. மேலும் வெள்ளை மலர்கள் மன்னிப்பையும் மஞ்சள் புதிய துவக்கத்தையும், சிவப்பு புதிய உறவுகளையும் இளம் சிவப்பு நட்பையும் குறிக்க அளிக்கப்படுகின்றன.

 ஹாலந்தின் கோகென்ஹா;ஃப் (Keukenhof) ட்யூலிப் தோட்டமே உலகின் மாபெரும் ட்யூலிப் தோட்டம். இங்கு  சுமார் 7 மில்லியன் ட்யூலிப்கள் மலர்கின்றன. இந்த மாதத்தில் அத்தோட்டம் வானவில் தவறி பூமியில் விழுந்தது போல தோற்றமளிக்கும். அன்று துவங்கி இன்று வரையிலுமே உலகின் முன்னணி ட்யூலிப் உற்பத்தியாளராக 3 பில்லியன் ட்யூலிப் கிழங்குகளை உற்பத்தி செய்யும் ஹாலந்து தான் இருக்கிறது.

நெதர்லாந்தின் பெரும்பகுதி மார்ச் முதல் மே வரை பெரும் மலர்க்கடலைப் போலிருக்கும் மார்ச்சில் குங்குமப்பூ மலர்வு தொடர்ந்து டஃபோடில்கள் பின்னர் ஹயாசிந்த்துகள். இறுதியாக ட்யூலிப்கள் என மே முதல் வாரம் வரையிலும் தொடர்ந்து மலர்கள் மலர்ந்திருக்கும்

இப்போது அங்கு சென்று அந்த பேரழகு மலர்க்கடலை பார்க்கையில் ட்யூலிப் மலர்கள் 17ம் நூற்றாண்டு மக்களுக்கும் மரணத்தை விழைந்த சில்வியாவிற்கும் அளித்திருக்கும் பித்து எப்படிப்பட்டது என கண்கூடாக காணமுடியும்.

மேலும்

1.https://www.hindustantimes.com/business/shaktikanta-das-says-cryptos-a-threat-to-macroeconomy-undermines-rbi-s-ability-101644485664232.html

2. https://trends.google.com/trends/explore?q=tulip%20mania&geo=IN

3. https://en.wikipedia.org/wiki/Flora_(Rembrandt,_Hermitage)

4. https://www.poetryfoundation.org/poems/49013/tulips-56d22ab68fdd0

வலி

லண்டனின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் லிஸ்தான் சிறுநீர்ப்பை கற்களை அகற்றும் ஒரு அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்தார். நோயாளியை மருத்துவ உதவியாளர்கள் பலமாக அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அறுவை சிகிச்சையின் இடையில்  வலி தாங்க  முடியாத நோயாளி திமிறி தன்னை விடுவித்துக் கொண்டு அறையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட ஓடி  சற்று தொலைவில் இருந்த கழிப்பறையில் புகுந்து உள்ளே தாழிட்டுக் கொண்டார். மிக உறுதியான மருத்துவரான லிஸ்தான்  குருதி தோய்ந்த கத்தியுடன் அவரை தொடர்ந்து ஓடிவந்து கழிப்பறை கதவை உடைத்து திறந்து, அலறிக் கொண்டிருந்த நோயாளியை தூக்கிக்கொண்டு வந்து மீண்டும் சிகிச்சையை தொடர்ந்து வெற்றிகரமாக முடித்தார்.

இப்படியான அதிர்ச்சியும் அச்சமும் அளிக்கும் அறுவை சிகிச்சை கதைகள் பல 1846 க்கு முன்பு வரையிலும் அடிக்கடி  நாளிதழ்களில் வெளியாகும்.

1841 ஜூலை 21 தேதியிட்ட நியூயார்க் ஹெரால்ட் பத்திரிக்கையில்   மற்றொரு  அறுவை சிகிச்சை குறித்த  கட்டுரை இப்படி விவரிக்கின்றது.

//அந்த அறையில் நீண்ட உலோக மேசையில் பதினைந்து வயதே ஆன ஒல்லியான வெளுத்த  அந்த சிறுவன் படுக்க வைக்கப்பட்டு இருந்தான். அவன் மிகவும் அமைதியாகவும் தைரியமாகவும் தெரிந்தான். அவனது கண்கள் ஒரு துணியால் மறைத்துக் கட்டப்பட்டிருந்தன. 

அவனது தொடையில் உருவான ஒரு கட்டி, சிகிச்சைக்குக் கட்டுப்படாமல் ஆழமாக வளர்ந்து சீழ்பிடித்ததில் அவன் காலையே தொடையிலிருந்து வெட்டி நீக்க வேண்டி வந்தது. இல்லாவிட்டால் அவன் உயிருக்கு ஆபத்து. அந்த அறுவை சிகிச்சைதான் அப்போது நடக்கவிருந்தது. வெட்டி அகற்றப்பட வேண்டிய காலை ஒரு உதவியாளர் உயர்த்தி பிடித்துல் கொண்டிருந்தார். குருதி இழப்பைத் தடுக்கும் பட்டை தொடையில் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது  அந்த சிறுவனுக்குச் சிறிது மது புகட்டப்பட்டது.

அறுவை சிகிச்சை மருத்துவர் பளபளக்கும் கூர் கத்தியினால் தொடையின் எலும்பைத் துல்லியமாக அடையாளம் கண்டு மிக வேகமாகவும் கவனமாகவும் அறுக்கத் துவங்கினார்.  அந்த சிறுவனின் அலறல்  மருத்துவமனை முழுவதும் கேட்டது. அவன் தலையை பின்னிருந்து தாங்கி பிடித்துக் கொண்டிருந்த அவன் தந்தையின் கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.   ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவரோ பதட்டமின்றி அவர் வேலையில் மட்டும் கவனம் குவித்திருந்தார்//. 

இன்றைய நவீன மருத்துவத்தின் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் நமக்கு இக்காட்சியையும், அந்த நோயாளியின் வலியையும் முழுமையாக  புரிந்து கொள்ளக்கூட முடியாது. 1846-க்கு முன்பு வரை அறுவை சிகிச்சைகள் இப்படித்தான் தாங்க முடியாத வலியை நோயாளிக்களித்தபடி நடந்தன.

அப்போதைய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கையாண்டவை பித்தப்பை கற்களை அகற்றுவது,  உடலின் மேற்பரப்பின் காயங்கள், புற்றுநோய் கட்டிகள் இவற்றை அகற்றுவது  ஆகிவற்றை மட்டும்தான். அரிதாகவே உடலுறுப்புக்களை நீக்கும் சிகிச்சைகள் நடந்தன. வயிற்றின் உட்பகுதி, நெஞ்சுக்கூடு மற்றும் தலையோட்டுக்குள் வரும் சிக்கல்களுக்கு அறுவை சிகிச்சை அப்போது அளிக்கப்பட்டிருக்கவில்லை. அவையெல்லாம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ’’செல்லக் கூடாத பகுதிகளாக’’ மருத்துவ உலகம் அடையாளப்படுத்தி இருந்தது.

அக்காலங்களில். ஒரு சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர் என்பவர் மிக வேகமாகச் செயலாற்றுபவராகவே  இருந்தார். ஏனெனில் அவரே அதீத குருதி இழப்பினால் நோயாளி இறப்பதை தடுப்பவர்.

பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் அப்போது நோயாளியை கட்டிலில் சேர்த்துப் பிணைந்து அவரின் அலறல்களை உதாசீனப்படுத்தியபடியே நிகழ்ந்தன. பல நோயாளிகள் அந்த கட்டிலிலேயே இறப்பதும், தப்பி பிழைத்தவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகான சிக்கல்களினால் இறப்பதும் அதிகம் நடந்தது. கடவுளின் கருணை இருந்தவர்கள் அச்சத்தில் மயங்கினால் வலியறியாமல் இறக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

அறுவை சிகிச்சையின் போது முழு நினைவுடன் இருந்த நோயாளிகள் உச்சகட்டப் பெருவலியை  அனுபவித்தார்கள்.

மயக்கமூட்டும் சிகிச்சையான அனஸ்தீசியா கண்டறியப்பட்ட பின்னர் இவை அனைத்தும் மாறியது. அறுவை சிகிச்சைகள்  மெதுவாக நடந்தன, செல்லக் கூடாத பாகங்களுக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் பளபளக்கும் கத்திகள் தயக்கமின்றி நுழைந்தன.

 மருத்துவத் துறை வரலாற்றில் பல சாதனைகள் படிப்படியாக அடையப்பட்டிருக்கின்றன என்றாலும் பெருவலியை அளிக்கும் அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளை சிகிச்சையின் வலியறியாமல் நினைவிழக்கச் செய்யும் மருந்துகளின் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. 

அறுவை சிகிச்சைகளில் ஈதரும் குளோரோஃபார்மும் 19 -ம் நூற்றாண்டில்தான் பரவலாக உபயோகபடுத்தப்பட்டது. ஆனால் தாவர மயக்கமூட்டிகள் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே பெரிதும் பயன்பாட்டில் இருந்தன. தாவர மயக்கமூட்டிகளின் பயன்பாடு  மிகப் பண்டைய காலத்தில் சுமேரியர்கள், பாபிலோனியர்கள், கிரேக்கர்கள் உள்ளிட்ட நாகரீகங்களில்  இருந்திருக்கின்றது.

உலகின் முதல் வலி நீக்கியாகவும் நினைவிழக்கச்செய்யும்  மருந்தாகவும் கடுமையான மது வகைகளே முன்பு அளிககப்பட்டன. குறிப்பாக போர் வீரர்களுக்கும் போரில் காயமுற்றவர்களுக்கும்.

கிமு.4200 லிருந்தே ஓபியம் பாப்பி கனிகளின் பால் மயக்கமூட்டியாக பயன்பாட்டிலிருந்திருக்கிறது.

கிமு 2250 BC ல் ஹென்பேன் (henbane)  அல்லது கிறுக்குச்செடி எனப்படும் ஹையொசயாமஸ் நைஜர் (Hyoscyamus niger)  செடியின் சாறு,  பாப்பி கனிச்சாறு, ஹெம்லாக், மற்றும் மாண்ட்ரேக் சாறுகளில் நனைத்த பஞ்சை   நோயாளியின் மூக்கில் வைத்து மயக்கமூட்டும் வழக்கம் ரோமானியர்கள் மற்றும் அரேபியர்களிடம் இருந்தது. இந்த மயக்கமூட்டும் பஞ்சுகளை சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கும்  கொடுத்திருக்கிறார்கள் (Spongia Somnifera).

Know Your Remedies: Hyoscyamus Niger (Hyos.) | Homeopathy Plus
hyoscyamus niger

கிமு 1500 முதல் ஓபியம் பாப்பி கனிச்சாறு அறுவை சிகிச்சைக்கு முன்னர் அளிக்கப்பட்டது ஆவணப்படுத்த பட்டிருக்கிறது. பின்னர் கிமு 1100- ல்  சைப்ரஸ் மற்றும் அருகிலிருந்த பிரதேசங்களில் இதன் பொருட்டே பாப்பி செடிகள் பயிராக்கப் பட்டன.

சில சொலனேசி குடும்பத் தாவரங்கள், மாண்ட்ரேக்,  ஹென்பேன் மற்றும் ஊமத்தையின் பல சிற்றினங்களில் இருந்த ட்ரோபேன் ஆல்கலாய்டுகள் வீரியமிக்கவை என்பதால்   பண்டைய ரோமிலும் கிரேக்கத்திலும் இவை மயக்கமூட்டிகளாகப் பயன்படுத்தப்பட்டன.  ஹிப்போகிராடெஸ் மற்றும் ப்ளைனி  ஆகியோர் ஓபியம் மற்றும் சொலனம்  தாவரங்களின் வலி நிவாரணம் அளிக்கும் மற்றும் நினைவழிக்கும் பண்புகள் குறித்துப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அமெரிக்க பழங்குடியினர் கொகேய்ன் மரத்தின் இலைகளை மயக்கமூட்டியாக பயன்படுத்தினர். இன்கா பழங்குடிகள் இந்த இலைகளை மென்று காயங்களின் துப்பி  சருமம் மரத்துப் போனபின்பு  காயங்களை சுத்தம் செய்து தைத்து சிகிச்சை அளித்தார்கள்.

பாபிலோனியர்களும் பல் சிகிச்சையின் போது வாய் மரத்து போக கொகேய்ன் இலைகளை பயன்படுத்தினார்கள்.

தென்னமெரிக்க பழங்குடியினத்தவர்கள் அம்பு நுனிகளில் தடவும் தாவர நஞ்சான க்யூராரி (Curare) வேட்டைவிலங்குகளைச் செயலிழக்கச் செய்யும். தசைகளை இலகுவாக்கி நோயாளிகளை அமைதிப்படுத்தும்  பொருட்டு இந்த க்யூராரி அறுவை சிகிச்சைகளிலும் பயன்படுத்தபட்டது. 

இப்படிப் பல நூறு தாவரங்கள் பழங்குடியினரால் இன்றும் மயக்க மூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிரிக்காவின்  பன்யாரோ (Banyoro) பழங்குடியினர்,  சிக்கலாகிவிடும் பிரசவங்களின் போது வாழைப்பழங்களின் மதுவை கர்ப்பிணிகளுக்கு  அளித்து, பாதி நினைவிலிருக்கும் அவர்களையும் ஒத்துழைக்கச் செய்து வலியில்லாமல் சிசேரியன்  பிரசவங்களை  நடத்துகிறார்கள்.

Nyoro people - Wikipedia

கோலக்காய் (Wintergreen) எனப்படும் நறுமணத் தாவரங்களிலிருந்து கிடைக்கும் எண்ணையும் முடக்கு வாதம் மற்றும் பல வலிகளுக்கு நிவாரணியாகவும் அறுவை சிகிச்சையில் மயக்கமூட்டியாகவும் பயன்படுத்தப்பட்டது.

ஆப்பிரிக்க க்கனிமரமான Vitex doniana வின் மரப் பட்டைச்சாறு நாள்பட்ட காயங்களை வலியின்றி  சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டது. (இந்தக் கனியை கருப்பு ப்ளம் என்றும், அதையே நாவல் பழம் என்றும் சில தளங்கள், குறிப்பாக விக்சனரியும் சொல்கின்றன.)

சூரிய காந்தி குடும்பத்தை சேர்ந்த பல்வலிப்பூண்டு என்று அழைக்கப்படும் Spilathes acmella  இலைகளும் மலர் மஞ்சரிக் கூம்புகளும் முடக்கு வாத வலி சிகிச்சையிலும் பல் சிகிச்சையிலும் மரத்துப்போகும் உணர்வை அளிக்கும் பொருட்டு பன்னெடுங்காலமாக பழங்குடியினரால் மாற்று மருத்துவச் சிகிச்சைகளில்  பயன்படுத்தபடுகிறது.

ஆஃப்ரிக்காவின் கோந்து மரமான  Sterculia tragacantha வின் மரப்பிசின், தீக்காயங்களின் சிகிச்சையின் போது உணர்விழக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது.

sterculia - Encyclopedia of Life

உடலின் குறிப்பிட்ட பாகங்களை மட்டும் உணர்விழக்க செய்யும் மருந்தான கொகேய்ன் கொக்கோ இலைகளிலிருந்து பெறப்பட்டது. பச்சைமிளகாயிலிருந்து கிடைக்கும் காயீன் மற்றும் கேப்சாய்சின் ஆகியவையும் மயக்கமூட்டிகளாக  பயன்படுத்தப்பட்டன. (cayenne. capsaicin).  

யாரோ (Yarrow – Achillea millefolium) என்ற தாவரத்தின்  வேர்களின் சாறு, மது, கஞ்சா இலைகள் பாப்பி கனியின் பால், சணப்பை புகை (hemp) கிராம்பு எண்ணை ஆகியவை பண்டைய மருத்துவ முறைகளில் வலி நீக்கியாகவும் மயக்கமூட்டி களாகவும்  அதிக பயன்பாட்டில் இருந்தன.

அஸிரியர்களும், எகிப்தியர்களும் கிபி 400 ஆண்டுகளுக்கு முன்பே கழுத்தில் சிரசுத் தமனியை (Carotid artery) அழுத்திப் பிடித்துத் தற்காலிகமாக நோயாளியை நினைவிழக்கச் செய்தும்  சிகிச்சை அளித்திருக்கின்றனர்.

 பண்டைய சுமேரியர்களும் அஸிரியர்களும் உலர்ந்த பாப்பிச் செடியின் பாலை மதுவில் கரைத்தளித்து, அந்த  போதையில் நோயாளியை நினைவிழக்க செய்து அறுவை சிகிச்சைகளை  நடத்தினார்கள்.

பண்டைய எகிப்தியர்கள் ஓபியத்தையும், ஓபியத்துக்கு இணையான செயல்திறன் கொண்டிருந்த மேண்ட்ரேக் (Mandragora officinarum) வேர்களையும் இலைகளையும் மயக்கமூட்டப் பயன்படுத்தினார்கள்.  மேலும் பல தாவர சேர்க்கைகளை  மயக்கமூட்டிகளாக  அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தினார்கள். இவற்றை குறித்து  பண்டைய எகிப்திய நூலான ஏப்ரஸ் பாபிரஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மயக்கமூட்டிகளை முதன் முதலில் உருவாக்கி பயன்படுத்தியவரான, அறுவை சிகிச்சை முறைகளின் தந்தையான சுஷ்ருதர், நோயாளி நினைவிழக்கும் வரை கஞ்சா இலைச்சாறு கலக்கப்பட்ட மதுவைப் புகட்டி பின்னரே அறுவைசிகிச்சையை தொடங்கி இருக்கிறார். கஞ்சா இலைப் புகையையும் நுகரச் செய்து மயக்கமூட்டி இருக்கிறார் சுஷ்ருதர்.  

சித்த வைத்தியத்தில் அறுவை சிகிச்சை அரிதாகவே செய்யப்பட்டிருக்கிறது. தேவ, மானுட, அசுர சித்த வைத்திய வகைகளில் அறுவை சிகிச்சையை கடைசி வழியாக அசுர வைத்தியம்  எனும் வகையில்தான் வைத்திருக்கிறார்கள். அப்போது மயக்கமூட்டியாக கோரக்கர் என்னும் சித்தர் கஞ்சா இலைகளை உபயோகப்படுத்தி இருக்கிறார்.  மயக்கமூட்டியாகவும்  உளம் பிறழ்ந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் கஞ்சா சித்தர்களால்  பயன் படுத்தப்பட்டிருக்கிறது.

 பண்டைய இந்தியா மற்றும் சீனாவில் ஓபியம் அறிமுகமாகும் முன்பே கஞ்சா இலைப் புகையும், நஞ்சுகளின் அரசி எனப்படும் அகோனிட்டமும் மயக்கமூட்ட மற்றும்  வலியை கட்டுபடுத்த  மருத்துவ சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்பட்டன.

அரேபிய வணிகர்கள் ஓபியத்தை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அறிமுகப்படுத்தும் முன்பு பயன்பாட்டில் இருந்த தாவரப் பொருட்கள் குறித்து தனது ஹிஸ்டோரியா பிளாண்டாரத்தில்  தியோஃப்ராஸ்டஸ் (கிமு 371-287 ) குறிப்பிட்டிருக்கிறார்.]

புகழ்பெற்ற  சீன மருத்துவரும், அறுவை சிகிச்சை நிபுணருமான பியன் சிய ( Bian Que. 300 BC)  பொது மயக்கமூட்டிகளை  பயன்படுத்தி அறுவை சிகிச்சைகள் செய்தார்.  

ஓபியம் பல பண்டைய நாகரிகங்களில் வழிபடப்பட்டது என்றே சொல்லலாம்.  வலி நீக்கியாகவும், மனம் மயக்கவும் மட்டுமல்லாது வலியற்ற சிகிச்சைகளுக்காகவும் ஓபியம் பயன்படுத்தப்பட்டது.  தாவர நஞ்சான ஹெம்லாக்குடன் கலக்கப்பட்ட  ஓபியம்  வலியற்ற இறப்புக்காக  மரண தண்டனைக் கைதிகளுக்கு அளிக்கப்பட்டது.

பண்டைய  கிரேக்கர்கள்  ஓபியத்தை  உறக்கத்தின் கடவுளான ஹிப்னோ, இரவின் கடவுளான நிக்ஸ் மற்றும் இறப்பின் கடவுளான தனடோஸ் ஆகியோருடன் தொடர்பு படுத்தினார்கள் .இவர்கள் ஊமத்தை சாற்றை  மயக்கமூட்டியாக சிகிச்சைகளின் போது உபயோகப்படுத்தினார்கள்.  ஹோமரின்  ஒடிஸியில் இது  குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாக்ராடிஸைக் கொன்ற ஹெம்லாக்கும் இதுபோலவே மயக்கமூட்டியாக புழக்கத்தில் இருந்திருக்கிறது.

கிரேக்க அறுவை சிகிச்சை நிபுணரான டயாஸ்கொரிடஸ்,  மேண்ட்ரேக் (Mandrake) என்னும் தாவரத்தின் வேரை மயக்கமூட்டியாக பயன்படுத்தினார்.  மந்திர தந்திரங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த தாவரத்தைக் குறித்து பல அசாதாரண நம்பிக்கைகளும் நிலவி இருக்கின்றன. 

இவற்றுடன் கொகேய்ன் மரமான Erythroxylum coca விலிருந்து கொகேய்ன், தைமஸிலிருந்து தைமோல், கிராம்பிலிருந்து யூஜினோல் ஆகியவையும் வலிநிவாரணி மற்றும் மயக்கமூட்டிகளாக பயன்படுத்தப்பட்டன. ( thymol & Eugenol ),

Erythroxylum coca - Wikipedia

   

 பண்டைய சீனாவிலும் கஞ்சா இலைப் புகை நுகருதலும், வீரியமிக்க பல வகை எரி மதுவகைகளும்  வலி மிகுந்த சிகிச்சைக்கு முன்னர் தரப்பட்டிருக்கிறது. அரேபிய மற்றும் பெர்ஸிய மருத்துவர்கள் முதன்முதலில் நுகரும் மயக்கமூட்டிகளை பயன்படுத்தினார்கள்.

கிபி 1600-லிருந்து  சீன பாரம்பரிய மருத்துவத்தில் குத்தூசி மருத்துவ மயக்கமூட்டல் (Acupuncture anesthesia)  முறை பயன்பாட்டில் இருக்கிறது.

சீனா ஹான் வம்ச ஆட்சியின் கடைசிக் காலங்களில் ஆட்சியைப் பிடித்த ஒரு வட்டார ராணுவத் தலைவனுக்கு அரச  மருத்துவராகப் பணியாற்றக் கட்டாயப்படுத்தப்பட்ட  ஹுவா டுவோ (Hua Tuo) பிரத்யேக  தாவர  மயக்க மருந்து கலவையை வலி மிகுந்த சிகிச்சைகளின் போது பயன்படுத்தினார். Mafeisan என்ற இந்த மருந்துத் தயாரிப்பு முறைகளை பரம ரகசியமாக வைத்திருந்தார். சிகிச்சை மூலம் தன்னைக் கொல்லச் சதி செய்வதாக ஐயப்பட்ட அரசரால் மரண தண்டனை கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட ஹுவா டுவோ, தன் மருத்துவக் குறிப்புகளை எழுதிய சுருளை சிறை அதிகாரியிடம் கொடுக்க முயன்ற போது, அரசரின் கோபத்துக்குப் பயந்த அதிகாரி அவற்றை வாங்க மறுத்ததாகவும், அதனால் ஹுவா டுவோ தன் இறப்புக்கு முன்னர் தனது அனைத்து மருத்துவக் குறிப்புக்களையும் நெருப்பிட்டு அழித்தாரென்றும் சொல்லப்படுவதாக விக்கிபீடியா குறிக்கிறது.

Hua Tuo - Wikipedia

ஹுவா டுவோவுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் நிறையப் பரிச்சயம் இருந்தது, பௌத்தத் துறவிகளோடு பழகி அந்த மருத்துவ முறையை அவர் கற்றுக் கொண்டிருந்தார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய மருத்துவ முறைகள் சமகாலச் சீன மருத்துவத்தை விட ஒரு நூறாண்டு முன்னே சென்றிருந்தவையாக இருந்தன என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சீனாவில் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகளைப் பயன்படுத்திய முதல் மருத்துவர் என்று இவர் கருதப்படுகிறார்.

தவிர கன்ஃபூசிய அறப் பார்வையில் உடல் புனிதமானதாகக் கருதப்பட்ட காரணத்தால், அறுவை சிகிச்சைகள் ஹூவா டுவோவின் காலத்துக்குப் பிறகு சீனாவில் கைவிடப்பட்டிருந்தன என்று விக்கிபீடியா குறிப்பு சொல்கிறது.

கிபி  940 – 1040 ல்  ஸொராஸ்டிரியன் துறவிகளால் உருவாக்கப்பட்ட மருத்துவ மது வகை ஒன்று அறுவை சிகிச்சைக்கு முன்னர் நோயாளிக்கு புகட்டப்பட்டது.

கிபி 1000 -வது ஆண்டில்  அபு அல் காசிம் அல் சஹ்ராவி ( Abu al-Qasim al-Zahrawi-936-1013), என்னும் அரேபிய மருத்துவர் 30 பகுதிகளாக  பிரசுரித்த அறுவை சிகிச்சையின் அடிப்படைகள் குறித்த மருத்துவ நூலான Kitab al-Tasrif ல் பொது மயக்கமூட்டிகள் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.

கிபி 1020-ல் இப்ன- சீனா என்னும்  மருத்துவர், (Ibn Sīnā -980–1037) நுகரும்  மயக்கமூட்டிகளின் பயன்பாட்டை விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

இப்- ஜூர் என்னும் (Ibn Zuhr -1091–1161) என்னும் மற்றொரு அரேபிய மருத்துவரும் தனது  மருத்துவப்  பாடநூலான  Al-Taisir ல் முழு மயக்கமூட்டுதல் சிகிச்சை (General anaesthesia) குறித்து விவரித்திருக்கிறார்.

நுகரும் மயக்கப்பஞ்சு மருந்தை கொண்டு பல வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் செய்தவர்களில்  இவர்கள் மூவரும் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.

13 -ம் நூற்றாண்டில் மருத்துவப் பரிந்துரைகளில்  மயக்கமூட்டும் பஞ்சுகள் இடம்பெற துவங்கின. மல்பெரி காய்கள், ஆளி விதை, மாண்ட்ரேக் இலைகள், ஹெம்லாக் ஆகியவற்றின் கலவையான இந்த பஞ்சை வெப்பமூட்டி மூக்கில் வைத்து அதிலிருந்து வரும் புகையை நோயாளிகள் சுவாசித்து நினைவிழந்தார்கள்.  

மயக்கமூட்டுவதில் துல்லியமான அளவை நிர்ணயிப்பது, தாவர மயக்கமூட்டிகளின் சிக்கலாக இருந்தது. குறைவாக  அளிக்கையில் நினைவிழக்காமல் இருப்பதும், அளவு கூடிப்போகையில் உயிரிழப்பும் நடந்தது.

கிபி 1200 – 1500  வரை இங்கிலாந்தில் கணைய சுரப்பு நீர், ஓபியம், ஹெம்லாக் உள்ளிட்ட பல தாவர சேர்மானங்கள் இருந்த dwale என்னும் ஒரு மருந்து கலவை  மயக்கமூட்டியாக பயன்படுத்தப்பட்டது. 1

இந்த கலவை  ஜான் கீட்ஸின் புகழ்பெற்ற கவிதையான “Ode to a Nightingale”மற்றும் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் உள்பட பல பிரபல  இலக்கிய படைப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஹோமர் நெபெந்தி (nepenthe)என்னும் ஒரு தாவர மயக்கமூட்டிக் கலவையை குறிப்பிட்டிருக்கிறார்,அது கஞ்சா மற்றும் ஓபியத்தின் கலவையாக இருந்திருக்க கூடும். பண்டைய தாவர மயக்கமூட்டிகளுக்கு சிகிச்சைக்கு பின்னரான விரும்பத்தகாத பக்க விளைவுகளும் இருந்தது. மேலும் பஞ்சில் நனைத்து  நுகரச்செய்யும் மயக்கமூட்டும் மருந்துகளின் அளவும் துல்லியமாக கணிக்கப்படுவதில்லை என்பதாலும் நவீன மயக்கமூட்டிகளின் தேடலும் கண்டுபிடிப்புகளும் 13 -ம் நூற்றாண்டில் இருந்து துவங்கின. இந்த தேடல் பயணம் மிக நீண்ட தாயிருந்தது. 1275-ல்  டை ஈதைல் ஈதரை கண்டுபிடித்தவராக  ரசவாதியான ரமோன் யூல் (Ramon Llull ) அறியப்படுகிறார்.

ஈதரின் வலிநிவாரணப் பண்புகள் ஆரியோலஸ் தியோஃப்ராஸ்டஸ்  (Aureolus Theophrastus  -1493–1541) என்பவரால் 1525- ல், கண்டறியப்பட்டது. ஜெர்மானிய வேதியியலாளர் சிக்மொண்ட் ஃப்ரோபீனியஸ் இதற்கு  Spiritus Vini Æthereus என்று  1730-ல்  பெயரிட்டார். 

1493–1541ல் மருத்துவரான பாராசெல்சஸ் (Paracelsus) விலங்குகளுக்கு மயக்கமூட்ட ஈதரை பயன்படுத்தினார். 

1540-ல் ஜெர்மனிய  மருத்துவர்/தாவரவியலாளர் வாலெரியுஸ் கார்டுஸ் (Valerius Cordus -1515–1544), ஓர் வேதிக்கலவையை  தயாரித்து  மயக்கமூட்டியாக சிகிச்சைகளுக்கு  உபயோகப்படுத்தினார். அதன் சேர்மானங்களை அவர் தெரியப்படுத்தவில்லை.

ராபர்ட் போய்ல் (Robert Boyle -1627–1691) ஓபியத்தை பூஞ்சிறகுகளில்  தொட்டு விலங்குகளின் ரத்த நாளங்களில் தடவி  மயக்கமூட்டி சிகிச்சை அளித்தார்.

ஆக்ஸிஜனை பிரித்து எடுத்த  ஜோஸப் ப்ரீஸ்ட்லி (Joseph Priestley -1733–1804)  மயக்கமூட்டியாக  நைட்ரஸ் ஆக்ஸைடை முதன் முதலில்  முயற்சித்தார்.

மனவசியக்கலையை தோற்றுவித்தவரான ஃப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர் (Franz Anton Mesmer-1734–1815) வசிய முறைகளையும் காந்த சிகிச்சைசைகளையும் பயன்படுத்தி  நோயாளிகளை  நினைவிழக்க செய்தார்.

ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy -1778–1829) நைட்ரஸ் ஆக்ஸைடினால்  மயக்கமூட்டுகையில் அறுவை சிகிச்சையின் வலி மற்றும் குருதி இழப்பு பெருமளவு குறைக்கிறது என்று  ஆய்வு கட்டுரை வெளியிட்டார்.

ஜப்பானிய மருத்துவர் செய்ஷு ஹனோகா ( Seishu Hanaoka -1760–1835)  ஊமத்தை, ஆஞ்சலிகா மற்றும் சில தாவரச் சாறுகள் கலந்த Tsusensan என்னும் ஒரு சூடான பானத்தை உருவாக்கி,நோயாளியின் உடல் எடை  மற்றும் வயதுக்குத் தகுந்த துல்லியமான அளவுகளில் அதை அளித்து புற்றுநோய் கட்டிகளை அறுவை சிகிச்சை செய்கையில் உபயோகப்படுத்தினார். இது கொஞ்சம் அதிகமானாலும் உயிரிழக்கச் செய்யும் கலவை.

அட்டைகளை கடிக்க வைத்து தோல் மரத்துப்போனதும் ரத்தமிழக்க செய்யும் வலி இல்லாத சிகிச்சை பண்டைய காலங்களிலிருந்தே  ஆயுர்வேதத்தில் இருக்கிறது(rakthamokshan). ஃபிரெஞ்ச் மருத்துவரான ஃப்ரேன்கோயிஸ் (François-Broussais -1772–1838) இதே அட்டை முறையை பல நோய்களுக்கு உபயோகித்தார்.

18-ம் நூற்றாண்டில் மயக்கமூட்டும் வாயுக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. விஞ்ஞானியும் மதபோதகருமான ஜோசப் பிரீஸ்ட்லி மற்றும் தாமஸ் பெடோஸ் ஆகியோர் (Joseph Priestley -1733-1804,  Thomas Beddoes -1760 – 1808)  பல வாயுக்களை குறிப்பிட அளவுகளில் கலந்து நோயாளிகளை  நினைவிழக்கச்செய்யும் சோதனைகளை தொடர்ந்து செய்தார்கள். 

இந்த சோதனைகள் குறித்து  1775-ல் பிரீஸ்ட்லி   ’’பலவிதமான வாயுக்களில் நடத்தப்பட்ட  சோதனைகளும் முடிவுகளும்’’  என்னும் 6 பகுதிகள் கொண்ட  நூலில் விவரித்தார்.( Experiments and Observations on different kinds of Air). அந்தச் சோதனைகளின் அடிப்படையில் வாயு சிகிச்சை நிறுவனமொன்றையும் 1798-ல் துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே ஜேம்ஸ் வாட் மற்றும் ஹம்ஃப்ரி டேவி அகியோரும் இவர்களுடன் இணைந்த பின்னர்  (James Watt (1736 – 1819) and Humphry Davy (1778 –1829) வாயு சிகிச்சைகளுக்கான மருந்துகளை  தயாரிப்பதில்  இந்நிறுவனம் முன்னணியில் இருந்தது

இங்குதான்  டேவி  நைட்ரஸ் ஆக்ஸைடின் மயக்கமூட்டும் பண்புகளை கண்டறிந்து அதற்கு மகிழ்ச்சி வாயு அல்லது சிரிப்பூட்டும் வாயு என்று பெயரிட்டார்.

இந்த நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவின் வலிநிவாரணப் பண்புகளின் சோதனைகளில் மிக  வருந்தத்தக்க  ஒரு நிகழ்ச்சியும் நடந்தது.

Dr. வெல்ஸ் மற்றும் சாமுவேல் ஆகியோர் (Wells & Samuel Colt)  நைட்ரஸ் ஆக்ஸைடை மயக்கமூட்டியாக சந்தைப்படுத்த முயன்றார்கள்.  இதன் பொருட்டு ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில்  பொதுமக்கள் முன்னிலையில்  ஒரு சிகிச்சையை நடத்த திட்டமிட்டார்கள்.  அவ்வாறு நடந்த  பல் பிடுங்கும் சிகிச்சையில் நோயாளிக்கு போதுமான அளவு மயக்க மருந்து  அளிக்க தவறியதால் அவர்  வலியில் கதறி அழுது அவர்களின் அம்முயற்சி படு தோல்வியடைந்தது

அந்த தோல்வியிலிருந்து  தன்னை மீட்டுக் கொள்ள முடியாத Dr. வெல்ஸ் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்கொலை செய்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு நைட்ரஸ் ஆக்சைடின் மயக்கமூட்டும் பயன்பாடு ஏறக்குறைய நின்று போனது.

 பிரிஸ்ட்லி, டேவி, பெட்டோஸ் மற்றும் வாட் ஆகியோரின் வெற்றிகளிலிருந்தும்,  வெல்ஸ் மற்றும் சாமுவேலின் தோல்வியிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொண்ட பிற்கால மருத்துவர்கள், மயக்கமூட்டும் வாயுக்களை சிகிச்சைகளில் பயன்படுத்துவதில் வெற்றி கண்டனர்.

அதிலொன்றுதான்  மார்டன்  நடத்திய அறுவை சிகிச்சை.  நவீன மயக்கமூட்டும் துறையை தோற்றுவித்தவர் வில்லியம் கிரீன் மார்டன் என்னும்  பல் மருத்துவர்.  (William T.G. Morton (1819-1868).  இளம் மருத்துவராக பாஸ்டனில் பணிபுரிந்து கொண்டிருந்த மார்டன் அப்போது மயக்கமூட்டியாக  பயன்பாட்டில் இருந்த நைட்ரஸ் ஆக்ஸைடை காட்டிலும் மேம்பட்ட மயக்கமூட்டியை தேடும் ஆர்வம் கொண்டிருந்தார், தேடலில்  அவருடன் ஜான் கோலின்ஸ் வாரேன் என்னும் அறுவை சிகிச்சையாளரும்  இணைந்து கொண்டார். 

 விடாமுயற்சியாலும் இயல்பாகவே அவருக்கிருந்த மருத்துவ அறிவினாலும் அவர் ஈதரின் மயக்கமூட்டும் பண்புகளைக் கண்டறிந்தார். அக்டோபர் 16, 1846 அன்று உலகின் வெற்றிகரமான மயக்கமூட்டி அளித்து நோயாளியை நினைவிழக்க செய்த அறுவை சிகிச்சை    நடந்தது. ஒரு தனி மனிதராக மார்டன் ஈதர் வாயுவை  துல்லியமான அளவுகளில்  மயக்கமூட்டியாக  அளித்து  நோயாளி வலியை உணராமல் அறுவை சிகிச்சையை நடத்தலாம்  என்று உலகிற்கு நிரூபித்தார்.

கில்பெர்ட் அபோட் என்பவரின் தாடையின் கீழிருந்த ஒரு கட்டியை அகற்றிய  அந்த அறுவை சிகிச்சை மருத்துவ  வரலாற்றில் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. பொதுமக்கள் முன்னிலையில்  மாஸச்சூஸெட்ஸ் (Massachusetts) பொது மருத்துவமனையில் அந்த நோயாளிக்கு ஈதர் அளிக்கப்பட்டது அவர் நினைவிழந்ததும் அறுவை சிகிச்சை எளிதாக, வெற்றிகரமாக நடந்தது. அப்போதைய நாளிதழ்களில் இந்த அறுவை சிகிச்சை படிப்படியாக  விவரிக்கப்பட்டு விரிவான கட்டுரைகள் வெளியாகின.

அமெரிக்க அறுவை சிகிச்சையாளர் க்ராஃபோர்டு லாங் (Crawford Long) 1842ல் ஈதரை மயக்கமூட்டியாக பயன்படுத்தி இருந்தாலும் அவர் பொதுவெளியில் அந்த பயன்பாட்டை தெரிவித்திருக்கவில்லை. எனவே மார்டனே ஈதரை மயக்கமூட்டியாக முதன் முதலில் பயன்படுத்தியவர் என்று மருத்துவ  வரலாற்றில் பதிவானது. 

தனது 48 -வது வயதில் மாரடைப்பால் காலமான மார்ட்னின் இறப்பை உறுதி செய்த மருத்துவர் தனது மாணவர்களிடம் ’’மனித குலத்தின் வலியை நீக்க அரும்பாடுபட்ட ஒருவரின் உடல் இது’’ என்று சொன்னதாக அப்போது உடனிருந்த  மார்டனின் மனைவி பின்னர் கூறினார் 

  மார்டனின் கல்லறையில் இப்படி  எழுதியிருக்கிறது 

’’எவருக்கு முன்பு வரை அறுவை சிகிச்சைகள்  மிகுந்த துயரளிப்பவைகளாக இருந்தனவோ, எவரால் அறுவை சிகிச்சைகளின் வலி தவிர்க்கப்பட்டதோ,
 எவருக்கு பிறகு  அறிவியல் வலியை கட்டுக்குள் கொண்டு வந்ததோ
 அவர் இங்கே உறங்குகிறார்.’’

மோர்டானின் இந்த சிகிசையளிப்புக்கு சில வாரங்களுக்கு பின்னர் லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு காலை வெட்டி அகற்றும் சிகிச்சைக்கும்  ஈதர் உபயோகப்படுத்தப்பட்டு சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.அதன்பிறகு ஈதர் மிகப்பிரபலமான மயக்கமூட்டியாக இருந்தது. 

1846-ல் ஆலிவர் வெண்டல் ’’நினைவு- இன்றி’’ என்று பொருள் படும் அனெஸ்தீசியா எனும் சொல்லை உருவாகினார்.

குளோரோஃபார்ம் எடின்பர்க் நகரில்  மகப்பேறியல் மருத்துவர் ஜேம்ஸ் சிம்சனால் 1847ல் கண்டறியப்பட்டது. குளோரோஃபார்ம் மயக்கமூட்டியாக நல்ல பலனளித்தது என்றாலும் அதன் பக்க விளைவுகள் அதிகமாக இருந்தன, சிகிச்சையின் போது உயிரிழப்பு  அல்லது சிகிச்சைக்கு பின்னர் ஈரல் செயலிழப்பு ஆகியவை உண்டாகியது. ஆயினும் அதன் பயன்பாடும் அதிக அளவில் இருந்தது. அடுத்த 40  வருடங்களில்  மயக்கமூட்டிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.  

1853-ல் பிரிட்டனில் விக்டோரியா மகாராணியின் எட்டாவது பிள்ளைப்பேற்றின் போது   (Prince Leopold) அவரது மருத்துவரான ஜான் ஸ்னோ அரசிக்கு மயக்கமூட்டியை  அளிக்க அரசு ஒப்புதல் அளித்தது.

குழந்தை மருத்துவரான   ஜோஸஃப் ஓட்வையர் (Joseph O’Dwyer- 1841-1898) முதன்முதலாக  சுவாசப்பாதையில் குழாய்களைச் செருகி, மயக்கமூட்டிகளை அதன் வழியாக  செலுத்தி அறுவை சிகிச்சை செய்யும் முறையை  கண்டறிந்தார், (metal “O’dwyer” tubes).

 இந்த சிகிச்சைகளில் மேலும் பல முக்கியமான மாறுதல்களை செய்தவர்களாக ஆர்தர் குடெல் ( Arthur Guedel (1883-1956), ரால்ஃப் வாட்டர்ஸ் ( Ralph M. Waters -1883-1979),  செவாலியர் ஜேக்ஸன்  (Chevalier Jackson -1865-1958) ஆகியோர் கருதப்படுகின்றனர்.

19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் ஓபியத்தின் வரவு வரையிலும்  ஈதர் குளோரோஃபார்ம் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகளின்  மருத்துவ பயன்பாடுகள்  உயர்த்தும் சரிந்தும் கொண்டிருந்தன. 

பின்னர் ஓபியம் மயக்கமூட்டுதல்  வெகுவேகமாக பிரபலமானது. மருந்தாளுநர் பிரெட்ரிக் வில்ஹெம் மார்ஃபீனைப் பிரித்தெடுத்த பின்னர் இதன் உபயோகம் மிக அதிகரித்தது.

 மார்ஃபீன் புகழுடன் இருக்கையிலேயே ஓபியத்திலிருந்து  ஆக்ஸிகோண்டின், ஓபியம் மாத்திரைகள், லாட்னம், கோடின், ஹெராயின், ஹைட்ரோ கோடின் ஆகியவையும் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. இவற்றில் சில இன்று வரையிலும் வலிநீக்கிகளாக  இருக்கின்றன. 

 மார்ஃபீனுக்கு அடிமையாவதும், அதிக அளவு உட்கொள்வதால் மரணமும் அவ்வபோது ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் இவற்றின் மருத்துவ உபயோகங்கள் வெகுவாக புகழ்பெற்றிருந்தன. அச்சமயத்தில் தான் மாற்று மயக்கமூட்டியாக கொகேய்ன் அறிமுகமானது. 

 1860 ல் ஆல்பர்ட் நீமேன் (Albert Niemann) கொக்கோ இலைகளை மெல்லுவது வாயை மரத்துப் போகச் செய்யும் என்பதைக் கண்டறிந்தார். அவரே கொகெய்னை பிரித்தெடுத்து கொகேய்ன் என்னும் பெயரையும் வைத்தவர்.

இவரது ஆய்வறிக்கையை வாசித்த சிக்மண்ட் ஃப்ராய்ட். மார்ஃபீன் அடிமைகளுக்கு கொகெய்னை மருந்தாக அளித்தார்.அவரது  பரிந்துரையின் பேரில் அவரது நண்பரும் வியன்னா கண் மருத்துவருமான கார்ல் கொல்லர்  (Carl Koller), 1884’ல் ஒரு துளி கொகேய்ன் கரைசலை கண் விழிகளில் இட்டு  கண் மரத்துப் போனதும் கண் புரை அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக  செய்தார்.

அதற்கு முன்பு வரை பல் மருத்துவத்தில் மட்டும்  பயன்படுத்தப்பட்ட கொக்கோ இலைச்சாறு இந்த பயன்பாட்டுக்கு வந்தது மருத்துவ வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1884ல் குறிப்பிட்ட பாகங்களை மட்டும் மரத்து போகச் செய்ய கொகேய்ன் பெருமளவில் பயன்பாட்டில் இருந்தது.

வலிநீக்கும் களிம்பாக உடல்வலிக்கும் தசைபிடிப்புக்கும், பாலுணர்வுக் குறைபாட்டிற்கும்,மன அழுத்தத்திற்குமான மருந்தாகவும் கொகேய்ன்  பரிந்துரைக்கப்பட்டது.ஆனால் மார்ஃபீனைபோலவே இதற்கும் மக்கள் அடிமையாக துவங்கினார்கள்

இவற்றின் பயன்பாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மருத்துவர்கள் இவற்றைப் பரிந்துரைப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் மருத்துவ உபயோகங்களுக்கான  ஓபியத்தின்  கட்டுப்படுத்தபட்ட பயன்பாடுகள் குறித்த  அமெரிக்க அரசின்  தீவிர சட்டங்கள் 1909’ல் தான் நடைமுறைக்கு வந்தன

1900-களில் மேலும் புதிய பக்க விளைவுகளற்ற மயக்கமூட்டிகள் வந்தன அறுவை சிகிச்சைகள் மருத்துவருக்கும் நோயாளிக்கும் எளிதாக அமைந்தன.

1910ல் மயக்கவியல் சிகிச்சைகளின் போது  சுவாசத்தை கட்டுப்படுத்துவது  அறிமுகமானது.  இந்த  சிகிச்சை முறைகள் பின்னர் 1920 மற்றும் 1930களில் மேம்படுத்தப்பட்டன/

அதன்பிறகு மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை குறைக்கும் மருந்துகளை இரத்த நாளங்கள் வழியே செழுத்தி  மயக்கமூட்டுதல் 1932-ல் துவங்கியது (barbiturates). 

 1940 மற்றும் 1950களில் கியூராரே, ஹென்பேன் போன்ற தசைகளை இலகுவாகும் மயக்கமூட்டிகள் பயன்பாட்டிற்கு வந்தன.

அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (Antiseptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டு பிடித்தது  பிரித்தானிய அறுவை சிகிச்சை நிபுணரான ஜோசப் லிஸ்டர் (Joseph Lister, 1827 –1912) . 

இவரே அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் மருத்துவக் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நோய் நுண்மங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர் , செயல்திறன்மிக்க மயக்கமூட்டிகளுடன் ஜோசப் லிஸ்டரின் கிருமி தடுப்பு முறைகளும் சேர்ந்து அறுவை சிகிச்சைகளின் போதும், சிகிச்சைக்கு பின்னருமான மரணங்களை வெகுவாக குறைத்தன.

20 -ம் நூற்றாண்டில் மயக்கமூட்டுதல் மிகப் பாதுகாப்பானதாகி, மயக்கமருந்துகளின் செயல்திறனும் மேம்பட்டது. சுவாசக்கட்டுப்பாட்டுக் கருவிகளாலும், மருந்தியக்கவியல் துறையின் முன்னேற்றங்களினாலும், தொழில்நுட்பங்களினாலும்  மயக்கமூட்டிகள் மேம்படுத்தபட்டன.

மயக்கவியல் நிபுணர்களுக்கும் மயக்கவியல் உதவியாளர்களுக்குமான அறிவியல் பயிற்சிகளும் இந்த காலகட்டத்தில் உலகெங்கும் நடந்தன.

20 மற்றும் 21 -ம் நூற்றாண்டுகளில் சீன பாரம்பரிய மருத்துவத்தின் குத்தூசி மயக்கமூட்டும் முறை மீண்டும் பரவலாகியது, முக்கியமான நீண்ட அறுவை சிகிச்சையின் போது உடலின் சில குறிப்பிட்ட புள்ளிகளின் மீது ஊசிகள் குத்தி வைக்கப்பட்டன. சில சமயங்களில் அந்த  ஊசிகளை இணைத்து லேசான மின்னதிர்வு அளிக்கப்படுகிறது இந்த ஊசிகள் உடலின் பக்கவாட்டு நரம்பு மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளை தூண்டி வலி நிவாரணமளிக்கிறது.

நவீன மயக்கமூட்டிகள் முழுமையான நினைவிழக்க செய்பவைகள், உடலின் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் நினைவிழக்க செய்பவைகள் என இரண்டு பிரிவுகளில் இருக்கின்றன.

நினைவிழக்கச் செய்யும்  மருந்துகள் இப்போது பல சிறப்பு மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றன. இவை அறுவை சிகிச்சை அரங்கில் மட்டும் அளிக்கப் படுபவை அல்ல. விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகள், மகப்பேறியல் அவசர சிகிச்சைகள், நாள்பட்ட மற்றும் உச்சகட்ட வலிகளை கட்டுப்படுத்த,மற்றும் நோயாளிகளை இடம் மாற்றுகையில் என பல நிலைகளில், பல்வேறு வகையான நோயாளிகளுக்கு மிகச்சிறப்பான மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது

இப்போதைய  மயக்கமூட்டிகள்  மிகப் பாதுகாப்பானவை, அறுவை சிகிச்சைகளின் போது மயக்கமூட்டிகளால் நிகழும் இறப்பு இப்போது 3 லட்சத்தில் ஒருவர் என்னும் விகிதத்தில் தான், அதுவும்  கவனக்குறைவால் தான் நிகழ்கின்றது.  

இப்போதைய நவீன மருத்துவ உபகரணங்களும், மிகச்சிறந்த மயக்கவியல் நிபுணர்களும், நவீன நோயறிதல் முறைகளும்,  உடற்கூறியலின் மேம்பட்ட புரிதல்களும்  மயக்கவியல் துறையை மேலும் நவீனமாக்கி இருக்கிறது.

கடந்த மாதம் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்த என் இளைய சகோதரன் மைதானத்தில் வழுக்கி விழுந்து இடது கையில் எலும்பு  முறிந்துவிட்டது. திருப்பூரில் பிரபல எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார். மயக்கவியல் நிபுணர் தோள்பட்டையில் மட்டும் உணர்விழக்கச் செய்யும் மருந்துகள் செலுத்திய பின்னர் தம்பிக்கு எந்த வகையான பாடல் பிடிக்கும் என்று கேட்டு. அவனுக்கு விருப்பமான இளையராஜாவின் இசையை அறுவைசிகிச்சை அரங்கில் மெலிதாக ஒலிக்க விட்டுக்கொண்டு ஒரு மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை முடித்தார், 

குருதிக்காயத்துடன் சிகிச்சை அரங்கிலிருந்து தப்பித்துப்போய் கழிப்பறைக்குள் தாழிட்டுக்கொண்ட நோயாளியிலிருந்து, இசைகேட்டுக்கொண்டு சிகிச்சை செய்துகொள்ளும்  இந்தக்காலம் வரையிலான,  பெருவலி நிறைந்த, மயக்கமூட்டிகள் வந்து சேர்ந்திருக்கும் பாதையை திரும்பி பார்க்கையில் மருத்துவ வரலாற்றின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மயக்கமூட்டிகள் தான்  என்பதை சந்தேகத்துகிடமின்றி சொல்லலாம். 

அறுவை சிகிச்சையின் போது  மயக்கவியல் நிபுணர்   குழந்தைகளின் பெயர்களையோ அல்லது எண்களையோ சொல்ல சொல்லுவார். ஒன்று, இரண்டு, மூன்று என எண்களை சொல்லச்சொல்ல நினைவிழந்துவிடுவோம். இனி துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு சிகிச்சைக்கு ஆளாக நேர்ந்தால் நினைவிழக்கும் வரை எண்களுக்கு பதிலாக மயக்கமூட்டிகளை கண்டறிந்த சுஷ்ருதரை, கோரக்கரை, ஆல்பர்ட் நிமானை, கார்ல் கொல்லரை, மார்டனை எல்லாம் வரிசையாக  நினைத்துக்கொள்ளலாம்.

சிக்கரி

கிரேக்க மெய்யியலாலரான ஹோரஸ் (Horace) என்கிற க்வின்டஸ் ஹோராசியஸ் ஃபிளாக்கஸ் (Quintus Horatius Flaccus), கிமு 65’ல் பேரரசர் அகுஸ்டஸின் காலத்தில் வாழ்ந்த  முன்னணி இத்தாலியக் கவிஞர். இவரே உலகில் முதன்முதலாக  தன் வரலாற்றை எழுதியவர்.  தன் வாழ்வை, ஆளுமையை, வளார்ச்சியை, கலையை என தன்னை குறித்த அனைத்தையும் மிக  விரிவாக எழுதிய ஹோரஸ் தனது, உணவு முறைகள் பற்றி குறிப்பிடுகையில் தன்னால் ’’ஆலிவ், நீல மேலோ மற்றும் சிக்கரி’’ இவைகளைக் கொண்டு மட்டுமே வாழ்ந்துவிட முடியும் என குறிப்பிட்டிருக்கிறார். இவர் குறிப்பிட்டிருந்தது சிக்கரி இலைகளை. 

இவர் மட்டுமல்லாது வர்ஜில், ஓவீட் மற்றும் பிளீனி உள்ளிட்ட பலர்  சிக்கரியின் பயன்பாடுகளை வரலாற்றில் பதிவு செய்திருக்கின்றனர். கிரேக்க மருத்துவரும், மெய்யியலாளரும் உடற்கூறாய்வாளருமான கேலன் (கிரேக்க உச்சரிப்பு காலினோஸ்) சிக்கரியை ’ஈரலின் தோழன்’ என குறிப்பிடுகிறார்.

பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே பயிராக்கப்படும் உணவுப் பயிர்களில் சிக்கரியும் ஒன்று. கிமு 1550’ ல் எழுதப்பட்ட எகிப்தின் ஈபர்ஸ் பாப்பிரைஸ் நூலில் சிக்கரியின் இலை மற்றும் வேர்கள், அவற்றின் பயன்பாடுகள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது. எகிப்தியர்கள் சிக்கரி இலைகள் வேர்கள் மற்றும் மலர்களை மருத்துவ சிகிச்சைக்கு  உபயோகித்தார்கள், குறிப்பாக மஞ்சள் காமாலை மற்றும் முடக்குவாத சிகிச்சைகளுக்கு பயன்படுத்தினர்.

பண்டைய எகிப்தில் சிக்கரி திறக்காத கதவுகள், பெட்டிகள், பூட்டுக்களை எல்லாம் திறக்கும் வல்லமை பெற்றது என்று நம்பினார்கள். சிக்கிரியின் சாற்றை உடலில் பூசிக் கொள்வதன் மூலம் நினைத்தது நடக்கும் என்றும், வேண்டியவர்களின் அன்புக்கு பாத்திரமாவோம் என்றும் அவர்களிடையே நம்பிக்கை இருந்தது. இப்படியான மந்திர சக்திகளை அளிக்க சிக்கரியை நடுநிசியில் பொன்னாலான கத்தியில் அறுவடை செய்ய வேண்டும் என்றும் நம்பினார்கள்.

சிக்கரிக்கு மந்திர பண்புகள் இருப்பதாகவும் காதல் உணர்வை சிக்கரி தூண்டுவதாகவும் பல பண்டைய நாகரிகங்களில் நம்பிக்கை நிலவியது. போருக்கு செல்கையில் சிக்கரி உண்பது வெற்றியை தரும் என்றும் நம்பப்பட்டது.

மலர் மருத்துவத்தை தோற்றுவித்தவரான  எட்வர்ட் பாக் ( Edward Bach) சிக்கரி மலர்கள்  நிபந்தனையற்ற அன்பை பெற்றுத் தரும் என்கிறார்.

பண்டைய ரோமில் முளை விட்ட இளம்  சிக்கரி இலைகளை அவை சுருளும் வரை குளிர் நீரில் இட்டு  வினிகர், ஆலிவ் எண்ணெய் மற்றும் பூண்டுடன் சேர்த்து தயாராக்கப்பட்ட புண்ட்ரெல்லா (Puntarelle) என்னும் சாலட் வெகு பிரசித்தம். 

சிக்கரியின்  வேர் மற்றும் இலை என இரண்டுமே  மிக பழைய காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் வேர்கள் மருத்துவ சிகிச்சையிலும், இலைகள் தீவனமாகவும், தளிரிலைகள் உணவிலும் பயன்படுத்தப்பட்டன. கசப்புச் சுவை கொண்டிருந்தாலும், பல சத்துக்கள் கொண்டிருந்த  இலைகள் பலரின் விருப்பத்துக்குரிய உணவாகவே இருந்திருக்கிறது. 

பண்டைய கிரேக்கத்திலும், ரோமிலும் சிக்கரி வேர் பசியை தூண்டவும் சத்துக்கள் நிறைந்த இலைகள் உணவிலும் பயன்படுத்தப்பட்டன. கிபி முதல் நூற்றாண்டில் டியாஸ்கொரீடஸ் (Dioscorides) தாவர மருந்துகளின் தயாரிப்பு, பண்புகள் மற்றும் சோதனை முறைகளை விளக்கும் தனது ’மட்டீரியா மெடிக்கா’ நூலில் சிக்கரியின் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளை விவரித்துள்ளார். 

ஐரோப்பாவில் இடைக்காலத்தில்  மருந்துத் தாவரமாகவும், தீவனமாகவும் மட்டும் பயன்பாட்டிலிருந்த காட்டு சிக்கரி செடிகளிலிருந்து  பெனெடிக்டீன் துறவிகள் உணவுக்கான  சிக்கரி  கலப்பின வகைகளை உருவாக்கினர் என்று சொல்லபடுகிறது. 

சிக்கரி பண்டைய பட்டுப்புழு வளர்ப்பு குறித்தான நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவின் பல பகுதிகளில் சிக்கரி இலைகள் விரும்பி உண்ணப்பட்டன. சிக்கரியின் நீல மலர்கள் காதலை சொல்லுமென்றும், அடைத்த கதவுகளை திறக்குமென்றும் சொல்லும் ஐரோப்பிய நாட்டுப்புற பாடல்கள் உண்டு.

காலையில் மலர்ந்து நண்பகலில் வாடிவிடும் சிக்கரி மலர்களும்  வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ்  உருவாக்கிய மலர் கடிகாரத்தில் இருந்தன.

மருந்தாகவும், தீவனமாகவும், உணவாகவும் இருந்த சிக்கரி  எப்படிகாஃபியில் கலக்கப்பட்டது?  கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பொருளாதார சிக்கல், கொஞ்சம் கலாச்சாரம், கொஞ்சம் சுவை மாறுபாடு ஆகிய கலவைதான் சிக்கரி-காபி கலவைக்கும் காரணமாயிருந்தது. நம் சமையலறைக்கு வர சிக்கரி கடந்து வந்த பாதை மிக நீண்டது.

மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த காட்டு சிக்கரி எனப்படும் சாலையோரங்களிலும் தரிசு நிலங்களிலும் இயற்கையாகவே வளரும் செடியின் முற்றிய வேர்கள் சத்துக்கள் நிறைந்தது என்பதால் வேகவைக்கப்பட்டு  நெடுங்காலமாக உண்ணப்பட்டன, இலைகள் மற்றும் இனிப்பான இளந்தண்டுகள் ஆகியவை தீவனம், மருந்து மற்றும்  உணவாக அவை வளர்ந்த பிற நாடுகளிலும்  1600 வரை இருந்தது. 

காபி அறிமுகமாவதற்கு  முன்பே காட்டுச்சிக்கரியின் வேர்கள் மருத்துவ தேநீர் உண்டாக்கவும் இலைகள் சாலட்டிலும், இனிப்பான இளம் சிக்கரி வேர்கள் உணவாகவும்  ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டாலும் ஆனால்காஃபி ஐரோப்பாவுக்குள் நுழைந்த 16’ம் நூற்றாண்டில்தான், சிக்கரி சாகுபடி துவங்கியது ஐரோப்பிய காலனியாக்குதலின் போது சிக்கரி சாகுபடி வடஅமெரிக்காவிலும் அறிமுகமானது.

புகையிலை மற்றும் தேயிலையைப் போல காஃபியும்  அதன் மருத்துவ உபயோகங்களுக்காகவே தொடக்கத்தில்  பயன்படுத்தப்பட்டது. காஃபி புத்துணர்வூட்டி சோர்வை நீக்குமென்பது அதன் பரவலான உபயோகத்திற்கு காரணமாயிருந்தது. அறிமுகமான காலத்தில்காஃபி  மதுவுக்கு மாற்று பானம் என்றுகூட கருதப்பட்டது. 17’ம் நூற்றாண்டில் ஐரோப்பிய சந்தைகளுக்குள் நுழைந்தகாஃபி வேகமாக கண்டம் முழுவதும் பரவ துவங்கியது. அறிமுகமான பத்தாண்டுகளிலேயே லண்டன், ஆம்ஸ்டர்டாம், பாரிஸ்  போன்ற முக்கிய நகரங்கள் உலகின் முக்கியகாஃபி வணிக மையங்கள் ஆகின..

1718ல் மிஸிஸிப்பியில் நியூ ஆர்லின்ஸ் நகரை நிர்மாணம் செய்கையில்  ஃப்ரான்ஸ் தனது வர்த்தக உறவுகளை கண்டம் முழுவதும் வலுவாக்கி இருந்தது. சில ஆண்டுகளிலேயே அங்கு காஃபி அருந்துதல்  கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகி விட்டிருந்தது. வில்லியம் யூக்கர்ஸின் ’’காபியை குறித்த அனைத்தும்’’ 1 நூலில் அப்போது நியூ ஓர்லின்ஸின் ஆற்றங்கரையோரம் நிறுவப்பட்டகாஃபி கடைகள் பெருமளவில் வர்த்தகம் செய்துகொண்டிருந்ததும், காஃபி மற்றும் சிக்கரியின் நறுமணங்களால் அந்நகரின் தெருக்கள் நிறைந்திருந்ததும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

காபி அருந்துதல் செல்வாக்கின் அடையாளமாகவும் ஆனது. காஃபியின் மீதான விருப்பம் கூடி காஃபி பயன்பாடு மேலும் மேலும் அதிகரித்தபோது,  காஃபி சாகுபடி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி  பல நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கியது. பொருளாதார ஸ்திரத்தன்மையின் பொருட்டு காஃபியின் பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பதற்காக, காஃபி இறக்குமதிக்கு இடைக்காலத் தடைகளும்  புதிய வரிகளும் பல நாடுகளில் விதிக்கப்பட்டன. இதில் கீழ்தட்டு மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

காபியின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால், ஐரோப்பியர்கள்காஃபி பதிலிகளாக  கோதுமை, பார்லி, கஷ் கொட்டை(chest nuts), புல்லரிசி, பாதாம்,   ஓட்ஸ் போன்றவற்றை கருக வறுத்து, தூளாக்கி  உபயோகப்படுத்தினார்கள். 

வளர்ந்த நாடுகளின் வேதியியலாளர்கள் ஆர்வத்துடன் பல வகையான கனிகளின் கடினமான விதைகள், கொட்டைகள், உலர் பழங்கள், கொக்கோ கனியின் ஒடுகள் கிழங்குகள்  பயறு வகைகள் என பலவற்றையும் உபயோகித்து  பல சோதனை  முயற்சிகளில்  ஈடுபட்டார்கள்.

1733ல் கலைக்களஞ்சிய உருவாக்குநர் யோஹான் ஹைன்ரிச் சேட்லர், ’’சிலர் வறுத்த  பார்லியிலிருந்து காஃபி தயாரித்து அருந்துகிறார்கள், அது அசல் காஃபியை போல இருப்பதாகவும் சொல்கிறார்கள்’’ என்று பதிவு செய்திருக்கிறார்.

1763, ல் ஹாலந்தில் சிக்கரி வேரை வறுத்து கலப்பது  முதன் முதலாக கண்டறியப்பட்டது, பின்னர் இந்த முறை வடக்கு ஐரோப்பா, இங்கிலாந்து ப்ரஷ்யா, பெல்ஜியம் மற்றும் பிரான்சுக்கும் மெல்ல அறிமுகமானது.

1766ல் ப்ரஷ்ய மன்னரான இரண்டாம் ஃபிரடெரிக் காஃபி இறக்குமதியை பொருளாதார காரணங்களால் முற்றிலும் தடை செய்தார். காஃபிக்கு பதில் உள்நாட்டு தயரிப்பான பியரை அருந்த மக்களை அறிவுறுத்தினார். அப்போது காஃபி சுவைக்கு வெகுவாகப் பழகிவிட்டிருந்த மக்கள்,   கள்ளச்சந்தை வணிகம் காஃபியின் விலையை வெகுவாக உயர்த்தி விட்டிருந்ததால், காஃபி பதிலிகளை மும்முரமாக தேட துவங்கினர். சிக்கரியும் அந்த சோதனை முயற்சிகளில், இருந்ததென்றாலும், சிக்கரி-காபி பானம் அத்தனை பிரபலமாகி இருக்கவில்லை.

1769/70களில் சிக்கரி வேர்களை வறுத்து பொடித்து காஃபியில் மிகச்சரியான விகிதத்தில்  கலந்து பானமுண்டாக்குவதை ஜெர்மனியின்  பிரன்ஸ்விக்(Brunswick) நகரை சேர்ந்த கிறிஸ்டியன்(Christian Gottlieb Förster) கண்டறிந்து அதை தயாரிப்பதற்கு அனுமதியையும் பெற்றார். 1795 வாக்கில் 22, சிக்கரி தொழிற்சாலைகள் பிரன்ஸ்விக் நகரில் உருவாகி இருந்தன.

சிக்கரி கலந்த காஃபி தூள் முதன்முதலில் 1770களில்  ஜெர்மனியில் சந்தைப்படுத்தப்பட்ட  போது காஃபி வர்த்தகத்தில் அது ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அந்த சிக்கரி காஃபியை கலப்படக் காஃபி என்றல்லாது உயர்தர சிக்கரி கலந்த காஃபி என்றும், காலனி காப்பிக்கு மாற்றான தேசிய காஃபி, அசல் காஃபி என்றெல்லாம் விளம்பரப்படுத்தியதில் அந்த யுக்தி பெரும் வெற்றி பெற்றது.

ஏற்கனெவே சிக்கரியின் இலைத்தாவரம் அங்கு பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டுக் கொண்டிருந்ததால் விவசாயிகள் விரைவாக சிக்கரி செடிகளை வேருக்காகவும் சாகுபடி செய்து பொருளீட்ட  துவங்கினார்கள். விரைவில் ஜெர்மனி எங்குமே சிக்கரி தொழிற்சாலைகள் உருவாகின. ஜெர்மனியின் பல நகரங்களில் பெண்கள் வீடுகளில் சிக்கரித் தூளை தயாரிப்பதை  மும்முரமாக செய்ய துவங்கி இருந்தார்கள். இப்போதும் சிக்கரி காஃபியின் இணைப்பெயராக  இருப்பது ஜெர்மனி காஃபி என்ற பெயர்தான். . தினசரிகளில் அப்போது சிக்கரியின் நன்மைகள், மருத்துவ பலன்கள் குறித்து ஏராளமான விளம்பரங்கள் வந்தபடியே இருந்து.

லண்டனை சேர்ந்த, விவசாய ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தவரும் பயிர் வகைகளுக்காகவே பல நாடுகளுக்கு பயணம் செய்த வருமான ஆர்தர் யங் (Arthur Young-1741-1820) தனது ஃப்ரான்ஸ் பயணத்தின் போது (1787-1789) சிக்கரி விதைகளை சேகரித்திருக்கிறார்.2

பயிர் சாகுபடியில் விருப்பம் கொண்டிருந்த ஜார்ஜ் வாஷிங்டனுக்கும் ஆர்தருக்கும் இடையில் பல வருட கடிதப்போக்குவரத்தும் விதை பரிமாற்றங்களும் இருந்தது. ஃப்ரான்ஸில் சேகரித்த சிக்கரி விதைகளை ஜெனரல் வாஷிங்க்டனுக்கு ஆர்தர் யங் அனுப்பி வைத்தார். அவற்றில் சில விதைகளை வாஷிங்டன், விவசாய முயற்சிகளில் ஆர்வம் கொண்டிருந்த தாமஸ் ஜெஃபெர்சனுக்கு பரிசாக அளித்திருந்தார்.

18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் முதன் முதலில் தாமஸ் ஜெஃபர்சன் சிக்கரியை சாகுபடி செய்ததை ஆவணப்படுத்தி இருக்கிறார். பரிசாகக் கிடைத்த சிக்கரி விதைகளை தனது பண்ணையில் விதைத்ததையும். ‘’ஒரு விவசாயின் ஆகச்சிறந்த சொத்தாக நான் சிக்கரியை சொல்லுவேன்;’’ என்றும், தனது ’பண்ணை கட்டுரைகளில்’ குறிப்பிட்டிருக்கிறார் தாமஸ் ஜெஃபெர்சன் அங்கு சிக்கரி சாகுபடி செய்யப்பட்டதற்கான முதல் ஆவணமாக  இதுவே கருதப்படுகிறது.  

1806ல் ஃப்ரான்ஸ் துறைமுகங்களை இங்கிலாந்து ஆக்ரமித்தது. அதே வருட இறுதியில் ஃப்ரான்ஸில் பிரிட்டிஷ் பொருட்களை பயன்படுத்த நெப்போலியன் தடை விதித்தார்.  1807ல் இங்கிலாந்துக்கும் ஃப்ரான்ஸுக்குமான  பொருளாதார போரை துவங்கிய நெப்போலியன்காஃபி உள்ளிட்ட அனைத்து வணிகப்பொருட்களும் பிரான்ஸிலிருந்து  இங்கிலாந்துக்கு செல்லாமல்  தடுத்தார். அக்காலகட்டத்தில் பிரிட்டிஷாரின் கடிதப் போக்குவரத்து கூட ஃப்ரான்ஸில் தடை செய்யபட்டிருந்து.

இத்தடையினால் இருதரப்புக்கும் காஃபி தட்டுப்பாடு கடுமையாக உண்டானது. ஹாலந்தில் சிக்கரியை காஃபியில் கலப்பது குறித்து  பிரெஞ்சுக்காரர்கள் கேள்வி பட்டிருந்தார்கள். எனினும் அது அங்கு பிரபலமாகி இருக்கவில்லை. ஃப்ரான்ஸில் காஃபி-சிக்கரி கலவை 1801ல் காஃபி வணிகத்தின் முன்னோடிகள் என கருதப்படும் ஓர்பன் மற்றும் கிராட் (M. Orban and M. Giraud) ஆகியோரால் அறிமுகமாகும் வரை பொதுமக்களுக்கு அதைக் குறித்து அதிகம் தெரிந்திருக்கவில்லை.  இந்த காஃபி தடையின் பிறகு சிக்கரி விலை மலிவு. மேலும் சிக்கரி தூளை தயாரிப்பதும் எளிது என்பதால் சிக்கரி காஃபி கலவை வேகமாக ஃப்ரான்ஸ் முழுவதும் பிரபலமாகியது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வறுத்து பொடித்து காஃபியுடன் கலக்கப்படும்  சிக்கரி வேரின் உபயோகம் பரவலாக துவங்கி, சிக்கரி வணிகம் ஃப்ரான்ஸில் வேர் பிடித்தது. ஃப்ரான்ஸின் காஃபி இறக்குமதி தடை நீங்கி பொருளாதார நிலை சற்று   மேம்பட்ட பின்னரும், சிக்கரியின் மென் கசப்புடன் காஃபி அருந்துவதற்கு மக்கள் பழகி விட்டிருந்ததால் காஃபியுடன் சிக்கரி கலப்பது அங்கு வாடிக்கையாகி விட்டிருந்தது.

நெப்போலியன் தடையை நீக்கிய 1860ல் மட்டும் ஃப்ரான்ஸ் 16 மில்லியன் பவுண்டுகள்  சிக்கரியை ஏற்றுமதி செய்தது. அன்று துவங்கி இப்போது வரை உலகப்புகழ் பெற்றகாஃபி நிறுவனமான  Cafe Du Monde  சிக்கரி காஃபி தூளை தயாரித்து வருகிறது.

அதே நூற்றாண்டில்  சிக்கரியின் உறக்கம் உண்டாக்கும் திறன் கண்டறியப்பட்ட பின்னர், கேஃபீன் (caffeine) ஆல்கலாய்ட் தூக்கமிழக்க செய்வதால்காஃபியின் பயன்பாட்டை குறைத்து கொண்டிருந்தவர்களும் அதை சமன் செய்யும் சிக்கரியை காஃபியில் கலக்கத் துவங்கி, இதன் பயன்பாடு மேன்மேலும் அதிகரித்தது.

1835, ல் ஃப்ரான்ஸ் 1.25  மில்லியன் பௌண்டுகள் சிக்கரியை ஏற்றுமதி செய்திருந்தது. 25 வருடங்கள் கழித்து இது 16 மில்லியன் பவுண்டுகளானது. அதே காலகட்டத்தில் பெல்ஜியமும் டென்மார்க்கும் ஏறக்குறைய ஃப்ரான்ஸ் அளவிற்கே சிக்கரியை பயன்படுத்தினார்கள்.   

ஃப்ரெஞ்சுகாரர்களிடமிருந்து பிரிட்டிஷாருக்கு அறிமுகமாயிருந்த சிக்கரி, பிரிட்டிஷாரிடமிருந்து  இந்தியாவிற்கும் அறிமுகமானது. இந்தியாவில் சிக்கரி காஃபி கலவை பலரின் விருப்ப பானமாகியது.

1861லிருந்து 1865 வரை நடைபெற்ற அமெரிக்க உள்நாட்டு போரின் போது சிப்பாய்கள் காஃபி தட்டுப்பாட்டை சமாளிக்க சிக்கரியை காஃபித்தூளுடன் கலந்து பருக துவங்கினர்.

1832ல் சிக்கரி மேலும் அதிகமாக பிரபலமாக அப்போதைய  ராணுவ ஜெனரல் ஆன்ட்ரூ ஜாக்ஸன் காரணமானார். சிப்பாய்களுக்கு வழங்கப்பட்டு கொண்டிருந்த  ரம் மற்றும் பிராந்திக்கு பதிலாக சிக்கரி கலந்தகாஃபியை அறிவித்தார். அப்போது காஃபி இறக்குமதி 12 மில்லியனிலிருந்து ஒரே தாவலில் 38 மில்லியன் புவுண்டுகளானது. 

அக்கால கட்டத்தில் ஒவ்வொரு 100 கிலோ காப்பித்தூளுக்கும் 2 பவுண்டுகள் சிக்கரி கலப்பது வழக்கத்தில் இருந்தது.

1876ல் சிக்கரி- சர்க்கரை-காஃபி கலவையை கொதிக்க வைத்த அடர் திரவம் கேம்ப்காஃபி என்னும் பெயரில் ஸ்காட்லாந்தின் Paterson & Sons  நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாலைக் கலந்தால் போதும் மிக சுவையான காஃபி தயாராகும் என்பதால் இந்த கேம்ப்காஃபி தீயாய் பரவியது. இங்கிலாந்தில் இரண்டாம் உலகப்போரின் போதுதான் பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு   கேம்ப்காஃபி கொடுக்கப்பட்டது.  இன்றும் இதே கேம்ப்காஃபி ஸ்காட்லாந்து  சந்தைகளில் கிடைக்கிறது. 

இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டிருந்த இந்திய சிப்பாய்களின் விருப்ப பானமாக இருந்த கேம்ப்காஃபி தமிழக மற்றும் கேரளத்துக்கும் அவர்களால் அறிமுகபடுத்தப்பட்டு பிரபலமானது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மனியின் பாட்டாளி மக்களின் வாழ்வில் சிக்கரி காஃபி அருந்துதல் அன்றாட வழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டிருந்தது. அதுவரை  கஞ்சி அல்லது சூப்பாக இருந்த அவர்களின் காலையுணவு, ஒரு பெரிய கிண்ணம் நிறைய  சிக்கரி காஃபியும் ரொட்டியுமாக மாறியது.

இப்போது உலகெங்கிலும் சிக்கரி-காஃபி கலவை பலரின் விருப்ப பானமாக இருக்கிறது.காஃபியினால் உண்டாகும் தூக்கமிழப்பு மற்றும் கேஃபீன் இல்லாத சிக்கரி அகிய இரண்டு காரணங்களால் இது தொடர்ந்து பிரபலமாக இருந்து வருகிறது. அசல் காஃபியின் சுவையை சிக்கரி பாழாக்கி விடுகிறதென்று சொல்பவர்களும் சிக்கரியை விரும்புவோருக்கு இணையாகவே இருக்கின்றனர். 

உலகளாவிய சிக்கரி சந்தை 2027ல் 316.71 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என  கணக்கிடப்பட்டிருக்கிறது. 

காசனை அல்லது காசினி என்றும் அழைக்கப்படும் இயற்கையாக வளரும் காட்டு  சிக்கரியின் தாவர அறிவியல் பெயர் Cichorium intybus. சிக்கரி என்னும் சொல் ஃப்ரெஞ்ச் சொல்லான சிகோரி (chicoree) என்பதிலிருந்து பெறப்பட்டது. பேரினப்பெயரான சிக்கோரியம் என்பது கிரேக்க மற்றும் லத்தீனத்தில் ’நிலத்தில்’ என்றும் சிற்றினப்பெயர் இண்டிபஸ் என்பது ’பிளவுகளுள்ள இலை விளிம்புகளையும், வெற்று நடுப்பகுதியைகொண்ட அதன் தண்டுகளையும்’ குறிக்கிறது.  

Cichorium intybus var. sativum என்பது காஃபியில் கலக்கப்படும் சிக்கரித்தூளை கொடுக்கும் வேர்களுக்காக பயிரிடப்படும் வேர்சிக்கரி. தாவர அறிவியல் பெயர்களில் சட்டீவம் என்றால் சாகுபடி செய்யப்படும்/ பயிரிடப்படும் என்று பொருள்.  cichorium intybus var. foliosum என்பது இலைச்சிக்கரி..

டேண்டெலையன் செடிகளை ஒளியற்ற இடங்களில் வளர்த்து அதன் வேரின் கசப்பு சுவையை குறைக்கும் forcing  என்னும் ஒளி படாத இடங்களில் செடியை வளர்க்கும் முறை பெல்ஜியத்திலும் அருகிலுள்ள பிரதேசங்களிலும் இருந்துவந்தது.

1875ல் பெல்ஜியம் அரசரின் தோட்டக்காரர் அதே முறையை சிக்கரி செடிகளுக்கும் பயன்படுத்தி முதல் சிக்கரி இலை மொட்டுகளுக்கான  கலப்பினமான Cichorium endivia வை வெற்றிகரமாக  உருவாக்கினார். endives  என பொதுவில் அழைக்கப்படும்  இவை, வெள்ளை அல்லது கிரீம் நிறத்தில் வாழைப்பூக்களைபோல  அடர் இலை மொட்டுக்களை கொண்டிருக்கும் குறைந்த கசப்பு சுவையுடன் இருக்கும் இவை இன்றும் பெல்ஜியம் மக்களின் விருப்பத்துக்குரியது.

இலைமொட்டு சிக்கரியிலும். Cichorium endivia var. crispum எனப்படும் சுருள் சுருளான இலைகளைக் கொண்டிருக்கும் வகையும்(Curly endive) Cichorium endivia var. latifolium எனப்படும் நீண்ட இலைகளை கொண்டிருப்பவையுமாக (escarole) இரு வேறு வகைகள் உள்ளன. சுருள் கீரைகளை காட்டிலும் எஸ்கரோல் கீரைகள் அகலமாகவும் கசப்பு குறைவாகவும் இருக்கும்.இவை chicon, மற்றும் Witloof chicory என்றும் அழைக்கப்படுகின்றன.

சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த சிக்கரி செடி ஒரு பல்லாண்டுத் தாவரம். இவை 40-110  செ மீ உயரம் வரை வளரும். வரிகள் கொண்ட உறுதியான  ஒற்றை தண்டும், சிறிதளவு பளபளப்பு கொண்டிருக்கும் கிளைகளையும் கொண்டிருக்கும். செடியின் அடிப்புறத்தில் இலைகள் வட்ட வடிவத்தில் மலரிதழ்களைப்போல் அமைந்திருக்கும் இலைப் பரப்பின் அடிப்பகுதியில் மெல்லிய வளரிகள் படர்ந்திருக்கும். இலை விளிம்புகள்  ஆழமான  ஒழுங்கற்ற மடிப்புக்களை கொண்டிருக்கும். தண்டுகளின் இலைகளும் இதே அமைப்பில்தான் இருக்குமென்றாலும் அடியிலைகளை காட்டிலும் சிறிய அளவில், குறைவான மடிப்புக்களை கொண்டிருக்கும். உறுதியான வேர்கள் நிலத்துக்கு கிழே 5 அடிவரை வளரும். 

கூட்டு மலர்மஞ்சரிகளில் (Synflorescence) பிரகாசமான நீல நிற மலர்கள் தோன்றும். அரிதாக வெள்ளை மற்றும் சிவப்பு மலர்கள் தோன்றுவதுண்டு. தட்டையான நீளமான மஞ்சரித்தண்டு 15 லிருந்து 20 மலர்களைக் கொண்டிருக்கும். சிறிய வெடியா உலர் கனிகள் இழைகளுடன் இருக்கும்.(non dehiscent dry fruit-Achene)

இலைகள், மலர்கள்.விதைகள் மற்றும் வேர்களில் புரதம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், ஃபாஸ்பரஸ், செலினியம் போன்ற பல நுண் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வேரிலிருக்கும் இனுலின் என்னும் இயற்கை நார்ச்சத்து சமீப காலங்களில் சிக்கரியின் மற்றொரு முக்கியமான பயன்பாடாகி இருக்கிறது.

.21 ஆம் நூற்றாண்டிலிருந்து சர்க்கரையின் பதிலியாகவும், இயற்கை நார்ச் சத்துக்காகவும், உடலாரோக்கியத்துக்கு மிக அவசியமானது (prebiotic) என்பதால் இனுலின் தயாரிப்பிற்காகவும், சிக்கரி இப்போது வெகுவாக பயன்பாட்டில் இருக்கிறது. பொதுவாக, பயிரிட்ட 120 நாட்களில் மலர்கள் தோன்றிய பின்னர் வேர் அறுவடை செய்யப்படும். பயன்படும் பாகங்களைப் பொறுத்து, இவற்றில்  2 வாரங்களிலிருந்து 1 வருடம் வரை அறுவடை செய்யப்படும் வகைகளும் உள்ளன.

கிருமித் தொற்றுக்கு எதிரானது, வலி நிவாரணி, இதயம் மற்றும் ஈரலை பாதுகாப்பது, உறக்கம் கொடுப்பது, புண்களை ஆற்றுவது என சிக்கரியின் மருத்துவ பயன்கள் அதிகம். 

இந்தியாவிற்கு சாகுபடிக்கான சிக்கரி பயிர் 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் யூரோப்பியர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய விவசாயிகள் தாங்கள் அதுவரை பயிரிட்டுக் கொண்டிருந்த சிக்கரி பயிர் வணிக ரீதியாக தரமானது அல்ல என்பதைப் பின்னர் அறிந்துகொண்டார்கள். தேர்ந்தெடுத்த சிக்கரி கலப்பின வகைகள் அதன் பிறகு அதிக அளவில் இந்தியாவில் பயிராகின.  

சாதகமான காலநிலைகள் குஜராத்திலும் உத்தரபிரதேசத்திலும் இருப்பதால் இந்தியாவின் மொத்த சிக்கரி உற்பத்தியில் 97 சதவீதம் அந்த மாநிலங்களில்தான் பயிராகின்றது. இந்தியாவின் சிக்கரி ஏற்றுமதியும் தொடர்ந்து அதிகரித்தவாறே இருக்கிறது.

உலகின் மொத்த சிக்கரி உற்பத்தியில் பாதியை கொடுக்கும்  பெல்ஜியம்  முதலிடத்திலும், தொடர்ந்து பிரான்ஸ், போலந்து, நேதெர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவும் இருக்கின்றன. சிக்கரியின் முன்னணி ஏற்றுமதியாளராக ஸ்பெயினும் முன்னணி இறக்குமதியாளராக ஜெர்மனியும் இருக்கின்றன. சிக்கரி வேர்ச்செடி உலகின் 20 நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு (2014ல்) நேதர்லாந்திலிருந்து  சீனாவுக்கு அறிமுகமான சிக்கரி அங்கு பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாக சீனாவில் சிக்கரி  பசுங்குடில்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

சிக்கரி வேர்கள் இயந்திரங்கள் கொண்டு பிடுங்கப்பட்டு, சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு,   வறுத்தெடுக்கப்பட்டு, அரைத்து தூளாக்கி சந்தைப்படுத்தப் படுகிறது. 

உணவு தரக்கட்டுபாட்டு விதிகளின்படி உலகெங்கிலும் 20% to 45% சிக்கரியைகாஃபியில் கலக்க அனுமதி இருக்கிறது. தென்னிந்தியாவில் காஃபியில் கலக்கப்படும் சிக்கரியின் அளவு பரிந்துரைக்கப்பட்டதை காட்டிலும் அதிகம். குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில். 45%லிருந்து 50% சதவீதம் வரை சிக்கரி கலக்கபட்ட பிரபல உடனடி காஃபி வகைகள்(instant) இந்திய சந்தைகளில் இருக்கின்றன.

கோவிட் தொற்றினால் பணியாளர்கள் இல்லாமல் காஃபி தோட்டங்களில் அறுவடை குறைந்து, 7 வருடங்களில் இல்லாத அளவுக்கு காஃபியின் விலை இப்போது கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. கிலோ ₹ 1, 200–1, 500  க்கு விற்கப்பட்டுக்கொண்டிருந்த சிக்கரியின் விலையும் ₹2,350 ஆக உயர்ந்து விட்டிருக்கிறது.

சிக்கரியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நம் மூதாதைகள் அறிந்த சுவை இருக்கிறது. இதுவரை முயற்சிக்காதவர்கள்  இதன் பொருட்டேனும் முயற்சிக்கலாம்.

‘’ காப்பியின் ஒவ்வொரு கோப்பையும்

உதட்டை நெருங்கும் போது

நிகழ்கால துயர்ச்சாளரம் திறந்து

நாம் சுதந்திர எதிர்காலத்தை

எட்டிப்பார்க்கிறோம்,

நறுமணத்தில் ஏறி

நாம் போகிறோம்

மானுடர் அனைவருமொன்றே என்ற

அந்த கட்புலனாகாத சொர்கத்துக்கு’

பின் குறிப்புகள்:

  1. All About Coffee by William H. Ukers- இலவச மின்நூல்: https://www.gutenberg.org/ebooks/28500
  2. ஆர்தர் யங்கின் ஃப்ரான்ஸ் பயணங்கள். அங்கு அவர் மேற்கொண்ட விவசாய ஆய்வுகள் குறித்த நூல் இணையத்தில் இலவசமாக: https://oll.libertyfund.org/title/young-arthur-youngs-travels-in-france-during-the-years-1787-1788-1789
  3. காட்டு சிக்கரிகளை இனம் காண்பது குறித்தான காணொளி: https://youtu.be/leSpmlbgveM
  4. https://www.etymonline.com/word/dandelion -டாண்டெலையன் என்பது ஃப்ரெஞ்சுச் சொல்லிலிருந்து வந்த பெயர். dent de Lion- சிங்கப் பல். கொடுக்கப்பட்ட வேர்ச்சொல் விளக்கப் பக்கம் இந்தச் சொல் டாண்டெ என்பது இந்திய மொழிகளிலும் உள்ள ஒரு சொல் என்று கவனிக்கிறது. தந்தம், தாந்த் போன்றன அவை.

சோயாவும் டோஃபூவும்,

விலங்குகளின் பாலை ஒத்த நிறத்தைக் கொண்ட  தாவர பொருட்களின் சாறுகள் தாவரப்பால் எனப்படுகின்றன. இவை   சைவ உணவுக்காரர்களால்  விலங்குப்பாலுக்கு மாற்றாக உணவில் பயன்படுத்தப்படுகின்றன. சுவையும் நறுமணமும் கொண்டிருக்கும் இவற்றிலிருந்தும் காபி, தேநீர்,ஐஸ்கிரீம், தயிர், சீஸ் ஆகியவற்றை தயாரிக்கலாம். 

உலகெங்கிலும் தேங்காய்ப்பால், பாதாம் பால், பருத்திப்பால், சோயாப்பால், அரிசி ஊற வைத்த நீரான அன்னப்பால், கோதுமைப்பால், சோளப்பால், பிஸ்தா பால், முந்திரிப்பால், ஆளி விதைப் பால் உள்ளிட்ட  பல தாவரப்பால் வகைகள்  பரவலான பயன்பாட்டில் இருக்கின்றன.

கொரியாவின் இனிப்பூட்டப்பட்ட அன்னப்பாலான சிக்கே (Sikhye)  மற்றும் ஜப்பானின் இனிப்பும் சிறிது ஆல்கஹாலும் கலந்திருக்கும்  பூஞ்சையை கொண்டு நொதிக்க செய்யபட்ட அன்னப்பாலான அமாஸேக்( Amazake) ஆகியவையும் தாவரப்பால் வகைகளில் முக்கியமானவை.

வடகிழக்கு அமெரிக்க பழங்குடியினர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கனிகளின் விதைகளிலிருந்து பாலெடுத்து கொடுத்தனர். வட ஆப்பிரிக்காவில்  ஊற வைத்து, அரைத்து, இனிப்பூட்டப்பட்ட கோரைப்புல் கிழங்குகளின் பாலெடுத்து அருந்தும் வழக்கம் 10’ஆம் நூற்றாண்டுக்கு  முன்பிருந்தே  இருந்தது. நைஜீரியாவில் சிறுதானியங்கள், சோளம் மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து எடுக்கப்படும்  ’குனு’ பால் அருந்தப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக பல்வேறு தாவரப்பால் வகைகள்  உலகெங்கிலும் பயன்பாட்டில் இருந்தாலும் 13 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் இவை தாவரப்பால் என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றன. தற்போது  இவை மாற்றுப் பால், சைவப்பால், பால் பதிலிகள்,விலங்கு பால் அல்லாத பால் (non dairy  milk ) என்று பலவாறு அழைக்கப்படுகின்றன.
 
13 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க சமையல் குறிப்புகளில் பாதாம் பால் கலந்த பானங்களின் செய்முறைகள் குறிப்பிடப்பட் டிருக்கின்றன.
 
கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தேங்காய் பால்  பயன்பாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இருக்கிறது. விலங்கு பாலின் லாக்டோஸ் செரிமானம் ஆகாதவர்களாலும்,  உலகெங்கிலும் தாவரப்பால் வகைகள் அதிகம் உட்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவில் மட்டும் 40 மில்லியன் மக்கள் லாக்டோஸ் செரிமானக் கோளாறு உள்ளவர்கள். 
 
விலங்குகளை வணிகப் பொருட்களாகவும் உணவு பொருட்களாகவும்  கருதுவதை மறுக்கும் நனி சைவர்களும், பழங்கற்கால மற்றும் முழு 30 உணவு கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் தாவரப்பால் வகைகளை பெரிதும் பயன்படுத்துகின்றனர். (Vegan, Paleo, & Whole 30 Diets)) 
.
அனைத்து தாவரப்பால் வகைகளிலும்  உணவுச்சாயங்கள்,  இயற்கை பசைகள், கால்சியம் வைட்டமின் A  மற்றும் D  நுண் சத்துக்கள், இனிப்பு, மணமூட்டிகள் ஆகியவைகளும் சேர்க்கப்படுகின்றன. தாவரப்பாலில் வைட்டமின்  D சேர்ப்பது அமெரிக்காவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால், சோயா மற்றும் அன்னப்பால் ஆகியவற்றின் கலவையில், இரும்புச்சத்து, விட்டமின்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு  தாய்ப்பாலுக்கிணையான  தாவரப்பால் பொருள்  தயாரிக்கப்படுகிறது.

விலங்குப்பால் சந்தைப்படுத்தப்படுவது போலவே     அட்டைப்பெட்டிகளிலும்,  பாக்கட்டுக்களிலும் தாவரப்பால் வகைகளும் சந்தைப்படுத்தப்படுகின்றன.  இருப்பினும் அவற்றில் பால் என்னும் சொல் இடம் பெறக்கூடாது என்னும் கட்டுப்பாடு  உள்ளது.

இவற்றின் தயாரிப்பு முறைகள் எந்த தாவரப் பொருளிலிருந்து இவை எடுக்கப்படுகின்றன என்பதை பொறுத்து மாறுபடும் என்றாலும் பெரும்பாலும் எளிமையான முறைகளில் இவற்றை எடுக்கலாம். 
 
இவற்றில் அன்னப்பால் , சோயா பால் மற்றும் தேங்காய் பால் ஆகியவை மிக பழமையானவை  சோயாப்பால் சீனாவில் 1365 லிருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது ஓட்ஸ் பால் சமீபத்திய வரவு . 2021’ல், பாதாம், ஓட்ஸ், சோயா மற்றும் தேங்காய் பால் ஆகியவை உலக அளவில் அதிக விற்பனையாகின. 2030’க்கான தாவரப்பால் பொருட்களின்  சந்தை மதிப்பு சுமார் 62 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என  கணிக்கப்பட்டிருக்கிறது .

  
சோயா  விதைகளிலிருந்து  அதிக புரதமும், இரும்புச்சத்தும் நிறைந்த  சோயா பால், தயாரிக்கப்படுகிறது. நிறத்திலும் சத்துக்களிலும் பசும்பாலை ஒத்திருக்கும் இந்த பால், கொலஸ்ட்ரால் இல்லாமல், குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த சோடியம் கொண்டுள்ளதால் தாவரப்பால் வகைகளில் மிக முக்கியமானது.
 
சோயா பால், சோயா விதைகளிலிருந்து  மிக எளிதாக எடுக்கப்படுகிறது தோல் நீக்கி சுத்தமாக்கப்பட்ட சோயா விதைகள்  ஊற வைக்கப்பட்டு, அரைக்கப்பட்டு விழுதாக்கப்படும்.  இவ்விழுது சூடாக்கப்பட்டு  சோயாவின்  கடும் நெடிக்கு காரணமான  lipoxidase  என்ஸைம்கள் நீக்கப்படும். பின்னர் வடிகட்டுதல் மூலம் கசடுகள் நீக்கப்பட்ட சோயா விழுதில் சர்க்கரை மற்றும் நீர் கலக்கப்பட்டு, அதன் நறுமணமும் நுண் சத்துக்களின் அளவும் மேம்படுத்தப்படும். பின்னர் இவை கிருமி நீக்கம் செய்யப்பட்டு, கொழுப்புக் கட்டிகளை அரைத்து, கலக்கி, மிருதுவாக்கப்பட்ட பால் சந்தை படுத்தப்படுகின்றது.
 
விலங்குப்பாலுடன் ஒப்பிடுகையில் சோயாபாலில் புரதம் கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் அதே அளவில் இருந்தாலும்  பிற முக்கியமான  நுண் சத்துக்கள் மிக குறைவாக  இருப்பதால் அவை  தயாரிப்பின் போது சேர்க்கப்படுகின்றன
 
சோயா பயிர் சீனாவில் தோன்றியது. ஹ்யூனான் மாகாணத்தில் அகழ்வாய்வுகளில் கிடைத்த சுமார் 9000 வருடங்களுக்கு முன்பானவை என கணிக்கப்பட்ட தாவர மிச்சங்கள் சோயா பயிருடையது என உறுதி செய்யப்பட்டது.

  
6’ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சீனாவின் விவசாய கலைக்களஞ்சியம் கிரீஸ், ரோம், மற்றும் இந்தியாவிற்கு சென்று திரும்பிய பயணி ஒருவர் சோயா விதைகள் கொண்டு வந்ததை குறிப்பிடுகிறது.  ஆனால் வல்லுநர்கள் அதற்கும்  முன்பிருந்தே சோயா சீனாவில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் என தெரிவிக்கிறார்கள் .
 
சோயா சாகுபடி நுட்பங்கள் சீனாவிலிருந்து ஜப்பானுக்கும், கொரியாவிற்கும், தென்கிழக்காசியா முழுமைக்கும் பரவியது. 

கி மு 1500த்தை சேர்ந்த சீன,எகிப்திய மற்றும் மெசபடோமியாவின் மருத்துவ நூல்கள் சோயாவை குறிப்பிடுகின்றன.. பூஞ்சைக்காளான் படர்ந்து  நொதித்த சோயா விதைகளின் களிம்பை நுண் கிருமி தொற்றுக்கான சிகிச்சையிலும் சீனர்கள் பயன்படுத்தினர்.
 
 கி மு 2853’ல் ,சீனப் பேரரசர் ஷென் -நுங்  கோதுமை, அரிசி, பார்லி, சிறு தானியம் மற்றும் பயறு வகையான சோயா ஆகியவற்றை புனிதமான விதைகள் என  அறிவித்தார்.சோயா பற்றிய  குறிப்பு இவர் எழுதிய மெட்டீரியா மெடிக்கா நூலிலும் இடம்பெற்றுள்ளது.
 
கி.பி 220  சேர்ந்த சீன கற்சுவர் ஒன்றில் ஒரு சமையலறையில் சோயா விதைகளிலிருந்து சோயா பால் பிழிந்தெடுக்கும் சித்திரம் கண்டறியப்பட்டது.
 
கி.பி 712  ல்  உருவாக்கப்பட்ட ஜப்பானின் பண்டைய பொருட்களின் தொகுப்பான  கொஜிகி (Kojiki)  சோயாவை குறிப்பிட்டது .
 
 17 மற்றும் 11 நூற்றாண்டுகளுக்கு மத்தியில்தான் சீனாவின் கிழக்கு பகுதிகளில் சோயாவின் காட்டு மூதாதைப் பயிர்களிலிருந்து  கலப்பினம் செய்யப்பட்ட உணவுக்கான சோயா பயிர்கள்  சாகுபடி செய்யப்பட்டிருக்குமென வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்.
 
 1 லிருந்து 16 ஆம் நூற்றாண்டுக்குள்  ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், பர்மா, நேபாளம் மற்றும் இந்தியாவில் சோயா சாகுபடி அறிமுகமாயிருந்தது. கடல் வழி வாணிகம் சோயாவின் பரவலுக்கு வெகுவாக உதவியது
 
13 ஆம் நூற்றாண்டில் அல்லது அதற்கு முன்னர் ஜாவா மற்றும் மலாய் தீவு கூட்டங்களில் சோயா சாகுபடி அறிமுகமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  
1603ல் ஜப்பானின்  நாகசாகியை சேர்ந்த கிருஸ்துவ பாதிரிகளால் தொகுக்கப்பட்ட ஜப்பானிய- போர்ச்சுகீசிய அகராதியில் சோயா மற்றும் சோயா பொருட்களை குறிப்பிடும் 20 சொற்கள் இடம்பெற்றிருந்தன.
 
கிழக்கிந்தியர்களால் 1600களில் சோயா சாஸ் இந்தியாவில் அறிமுகமாயிருந்தது.  18’ம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து சோயா  ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. 19ம் நூற்றாண்டில் தான் இப்பயிர் ஆப்பிரிக்காவில்  அறிமுகமானது. 
 
1700’ல் இயற்கை ஆர்வலர்கள் இருவரால் சோயாவின் காட்டு மூதாதை செடிகள் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டன. 1804, ல் முதல் சோயா சாஸ் சிட்னியில் விற்பனைக்கு வந்தது. சாகுபடிக்கான  சோயா விதைகள் ஆஸ்திரேலியாவிற்கு ஜப்பானிய உள்துறை அமைச்சகத்தின் பரிசாக 1879’ல்  அளிக்கப்பட்டன.
 
1712ல்தான் அமெரிக்காவில் எங்கல்பர்ட் கேம்ஃபெர் என்னும் ஜப்பானில் பயின்ற தாவரவியலாளரால் சோயா அறிமுகமானது. எனினும்  அதன் சாகுபடி துவங்கியிருக்கவில்லை
 
அமெரிக்காவுக்கு  பெருமளவில் சோயா விதைகள் சரக்கு கப்பலின் சமநிலைக்காக நிரப்பப்படும் பொருளாக 1800’ல் வந்து சேர்ந்திருந்தாலும்.(Ballasting) 1829’ல் தான் முதன் முதலில் கேம்ப்ரிட்ஜ் தாவரவியல் பூங்காவில் பழுப்பு  விதைகள் கொண்ட சோயா பயிர் செய்யப்பட்டது.  அமெரிக்காவில் முழுவீச்சில் சோயா சாகுபடி  1879’ல்  துவங்கியது
 
1889’ல் அமெரிக்காவின்  விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் ஜப்பானில் இருந்து  தருவித்த விதைகளிலிருந்து சாகுபடி செய்யப்பட்ட சோயா பயிரில்  பல ஆய்வுகள் செய்தன
 
1896’ல்,  பிரபல தாவரவியலாளரும், வேதியியலாளருமான ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (G. W. Carver) அமெரிக்க விவசாய அமைச்சகத்தின் தலைவரானபோது சோயா சாகுபடியில் பல திருப்பங்கள் உண்டாயின.


1904’ல் கார்வர்  சோயா விதைகளின் புரசதசத்தையும்,எண்ணெய் சத்தையும் கண்டறிந்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டார்.அதன் பிறகு சோயா சாகுபடி வேகம் பிடித்தது.
 
அவரது ஆய்வுகளில் அதிக நைட்ரஜனை சேமிக்கும், நோய்த் தாக்குதலுக்கு ஆளாகாத, அதிக புரதம் நிரம்பிய விதைகள் கொண்ட என பல வகையான கலப்பினங்கள் உருவாகின.
 
கொடிபோல படர்ந்து வேகமாக  வெடித்து சிதறும் கனிகளையும் மிகச் சிறிய கருப்பு  விதைகளையும் கொண்ட காட்டுச்சோயா பயிரைக்கட்டிலும்  பெரிய மஞ்சள் விதைகளுடன் குத்து செடிகளாக  வளரும் இயல்புடைய  கலப்பினப் பயிர்களை விவசாயிகள் விரும்பினார்கள்
 
கார்வர்தான்  300க்கும் அதிகமான சோயா பொருட்களை உருவாக்கி சோயா எண்ணெய் மற்றும் புண்ணாக்கின் உபயோகங்களை பரவலாக அறிய செய்தவர்.


1919’ல் அமெரிக்க  தீவனப்பயிர்கள்  அமைசகத்தின் இயக்குனராக  பொறுப்பேற்ற  வில்லியம் மோர்ஸ்  அடுத்த 12 வருடங்கள் தொடர்ச்சியாக விவசாயிகளிடம் உரையாடியும்,  சோயா குறித்த ஆய்வறிக்கைகள் வெளியிட்டும் சோயா  பயிர் சாகுபடியின் பரவலுக்கு பெரிதும் பங்காற்றினார். 
 
பின்னர் 2 வருடங்கள் சீனாவிலும்  இருந்த மோர்ஸ் சுமார் 2000 சோயா வகைகளை  சேகரித்து  அமெரிக்காவுக்கு ஆய்வுக்கென கொண்டுவந்தார். அமெரிக்காவின் முதல் இயந்திர சோயா அறுவடையும் இவரால்தான் நடந்தது.
 
இவரது முயற்சிகளால் 1929’ல்  9 மில்லியன் புஷெல்ஸ்களாக* இருந்த சோயா விளைச்சல்  அடுத்த பத்தாண்டுகளில் பத்து மடங்கு அதிகமாகி 1939’ல் 91 மில்லியன் புஷெல்ஸ்களானது நிலங்களின் நைட்ரஜன் சத்தை அதிகரிக்க பயிற்சுழற்சி முறையில் சோயா பயிரிடவும் அவர் பரிந்துரைத்தார்.
 
இங்கிலாந்திலும் பிரான்சிலும் சோயா பயிர்கள்  துவக்கத்தில் அலங்காரச் செடிகளாக வளர்க்கப்பட்டன. 1804’ல் யுகோஸ்லாவியா வில் கால்நடை தீவனப்பயிராக  சோயா சாகுபடி செய்யப்பட்டது.
  
சீனாவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவாகவும் மருந்தாகவும் பயனபடுத்தப்படும்  சோயா, பட்டாணி குடும்பத்தை  சேர்ந்த பல்லாண்டுத் தாவரம். சோயாவிலிருந்து ஏராளமான உணவுப்பொருட்கள்  பெறப்படுகின்றன.
 
கிழக்காசியாவை தாயகமாக கொண்ட Glycine max என்னும் அறிவியல் பெயருடைய சோயா பயிரின் விதைகளே சோயா எனப்படுகின்றன.   
 
 சோயாவின் இனிக்கும் வேர்களை கண்டறிந்த வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் கிளைகோஸ் என்னும் இனிப்பை குறிக்கும் கிரேக்கச் சொல்லிலிருந்து கிளைசின் என்னும் பெயரை இதன் பேரினத்துக்கு வைத்தார். இதன் சிற்றினப்பெயரான மேக்ஸ் என்பது பெரிய அளவில் இருக்கும் இதன் வேர் முடிச்சுக்களை குறிக்கிறது.
 
சீனாவில் பெரிய அவரை என்றும் ஜப்பானில் மஞ்சள் அவரை என்றும் அழைக்கப்படும் சோயா கிழக்காசியாவின் முக்கிய உணவுப் பயிர். சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு அறிமுகமான சோயா தற்போது அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, இந்தியா, சீனா, மற்றும் கொரியாவில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களில் ஒன்றாக இருக்கிறது.
 
வெள்ளை, இளஞ்சிவப்பு, அல்லது ஊதா நிற மலர்களை கொண்ட சோயா மூன்றிலிருந்து ஐந்து கனிகளை கொத்தாக தோற்றுவிக்கும். ஒவ்வொரு உலர்வெடி கனியிலும் 2 முதல் 4 விதைகள் இருக்கும் சோயா விதைகளின் அளவும் நிறமும் பல விதங்களில் இருக்கும்.
 
சோயா விதைகள் கருப்பு, பழுப்பு, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களிலும்  பலநிறம் (Variegated ) மற்றும் இருநிற (bicolored) விதை உறைகளுடனும்  இருக்கும்.சோயாவின் விதையுறை (hull) கடினமானது விதை உறையின் குழிவான  பகுதியில் சிறு கண் போன்ற விதை தழும்பு (hilum) கருப்பு, பழுப்பு, சாம்பல், மஞ்சள்,வெளிர் மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படுகிறது
 
சோயா விதைகளில் 36%  முழுமையான புரதம் இருக்கிறது ஆனால் புரதம் செரிமானமாவதை தடுக்கும் காரணிகளும் சோயா விதையில் இருப்பதால் அவற்றை  சமைக்காமல் பச்சையாக சாப்பிட கூடாது. இந்த செரிமானத்தை தடுக்கும் காரணிகள் சோயா விதைகளை சமைக்கையில் நீங்கிவிடும் எனவே சோயாவை  சமைத்தே உண்ண வேண்டும். வேகவைக்கப்பட்ட சோயாவிலிருந்து கிடைக்கும் சோயா பால் மற்றும் சோயா பால் பொருட்களில் மிக குறைந்த அளவில்தான் இந்த செரிமானத்தை தடுக்கும் காரணிகள் இருக்கும்.
 
இவை 45’லிருந்து 100 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படுகின்றன .சோயா  எண்ணெய் தயாரிப்பில் கிடக்கும்  புரதம் நிரம்பிய சோயா புண்ணாக்கும்  மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும்  முக்கிய உணவாக இருக்கிறது.
 
உலகில் மிக அதிகமாக  சோயாவை உபயோகிக்கும் மற்றும் இறக்குமதி செய்யும் நாடான சீனாவிற்கு, பிரேசில், அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து சோயா இறக்குமதியாகிறது. உலகின் நான்காவது சோயா விளைவிக்கும் நாடான சீனா மரபணு மாற்றப்படாத இயற்கையான சோயா பயிரை விளைவிக்கிறது
 
ஆசியா முழுவதும் மிகவும் பிரபலமான உணவான சோயா பாலிலிருந்து கிடைக்கும் டோஃபு சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டது.. 
 
பயிறு விதையின் தயிர் என்று பொருள்படும் ஜப்பானிய dofu மற்றும் சீனாவின் tofu  என்பதிலிருந்துதான் ஆங்கில tofu  பிறந்தது. 
 
ஹன் வம்சத்தை (கிபி 206- கிபி  24) தோற்றுவித்த லியூ பாங்கின் பேரன் லியூ ஆன் தனது  16 ஆம் வயதில், தந்தையின் மறைவால் சீன இளவரசரானார்.  புத்த துறவிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த லியூ ஆன் மந்திர வித்தைகளிலும், சாவா மூவா மருந்து தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 
 
லியூ ஆன் சீன மலையுச்சி ஒன்றில் இயற்கை பொருட்களிலிருந்து  இறவாமைக்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கையில்தான்   சோயா பாலில் ஜிப்ஸம், கடல் நீரில் உப்பு தயாரிக்கையில் கிடைக்கும்  எச்சமான நிகாரி (nigari) 1 ஆகியவற்றை கலந்து  டோஃபு என்னும் சோயா  பனீரை  கண்டுபிடித்தார் என்கின்றன சீன தொன்மங்கள்.இப்படி  டோஃபு  வரலாற்றில் உறுதிப்படுத்தப்படாத  பல கதைகள் இருப்பினும் லியூ ஆன் தான் டோஃபுவை கண்டறிந்தவர் என்று சீனா உறுதியாக நம்புகிறது.
  
சோங் வம்சத்தின் (960-1127), புகழ்பெற்ற இலக்கியவாதியான சு டோங்போ  (Su Dongpo)  தனக்கு மிக பிரியமான உணவான டோஃபுவை கொண்டு அவரது பெயரிலேயே டோங்போ டோஃபு என்னும் ஒரு உணவை உருவாக்கினார்.
  
சீனாவில் இருந்து புத்த துறவிகளால் ,கொரியாவுக்கு  அறிமுகப்படுத்தப்பட்ட டோஃபு கி.பி எட்டாம் நூற்றாண்டில் ஜப்பானை அடைந்தது.  ஜப்பானில்  துவக்கத்தில் உயர் குடியினர் மட்டுமே டோஃபுவை சுவைத்து கொண்டிருந்தனர்.1400,ல் மாருமோச்சி காலத்தில் தான் டோஃபு அனைவருக்குமான புரத உணவாகியது. 
 
 எழுத்துபூர்வமான பழமையான ஆதாரமாக கி பி  1500ல் கவிஞர் சு பிங்கினால்., எழுதபட்ட  “Ode to Tofu” என்னும் கவிதை கருதபடுகிறது.
  
குவிங் வம்சத்தின் (1644-1911) பேரரசர் காங்ஜி (Kangxi Emperor) அவர் செல்லும் இடங்களில் அருமணிகளையோ பொன்னோ பரிசாக பெறுவதைக் காட்டிலும் விதம் விதமான டோஃபு உணவுகளை சாப்பிடுவதில்தான்  ஆர்வம் காட்டி இருக்கிறார் என்பதற்கான  ஆதாரங்கள் ஆச்சர்யமூட்டுபவை.
  
1770’ல் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் தனது நண்பரும் பிரிட்டிஷ் -அமெரிக்க தாவரவியலாளருமான ஜான் பார்ட்ரமிற்கு(John Bartram) எழுதிய ஒரு கடிதத்தில் முதன் முறையாக சோயா தயிரை ஆங்கிலத்தில் towfu என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர்  1840’களில் இருந்துதான்  tofu புழக்கத்தில் வந்தது.
 
சோயா பாலில்,  நிகாரி,  கால்சியம் சல்பேட், மெக்னீசியம் குளோரைடு, எலுமிச்சை சாறு, வினிகர் ஜிப்ஸம் கடல் நீர்  இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து அதை தயிராக்கி பின்னர் பலகைகளில் அழுத்தி நீரை வெளியேற்றி  கெட்டிப்பட்ட கலவையை சதுர அச்சுகளில் ஊற்றி டோஃபு தயாரிக்கப்படுகின்றது. டோஃபு தயாரிப்பின் போது கிடைக்கும் உபரிப்பொருளான நாரும், சிறிது புரதமும் ஸ்டார்ச்சும் மொண்ட ஒகரா  (Okara) கால்நடைகளின் தீவனமாகவும், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களின் தயாரிப்பிலும் பயன்படுகிறது
 
இரண்டாம் உலகப் போர் வரையிலுமே டோஃபு வீடுகளிலும் சிறு சிறு குடிசை தொழில்களிலும்தான் தயாரிக்கப்பட்டு வந்தது. 1960 களில் தான் ஜப்பானிய உணவு ஆராய்ச்சி கழகம் நிகாரிக்கு பதிலாக கால்சியம்  சல்பேட் உபயோகப்படுத்தலாம் என்று பரிந்துரைத்த பின்னர் பல நவீன இயந்திரங்கள் மூலம் விரைவாக டோஃபு தயாரிக்கப்பட்டது. எனினும் இன்றளவும் கைகளால் தயாரிக்கப்பட்ட டோஃபுவுக்குத்தான் தேவை அதிகம் இருக்கிறது.
 
தயாரிக்க எளிமையானதும், விலை மலிவானதும், மிக சுவையானதுமான டோஃபு சீனர்களின் பிரியத்துக்குரிய உணவாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.
 
 சீனா தேசிய கட்சியை சேர்ந்த பிரபல கல்வியாளர் லி ஷிஸெங் (Li Shizeng) டோஃபு தயாரிப்பிற்கான காப்புரிமையை 1900- 1910 களில் பெற்றார். பாரிஸில் ஒரு டோஃபு   தொழிற்சாலையும் அவர் நிறுவினார்.
 
தேயிலையை போலவே டோஃபுவும் சீனாவிலிருந்து உலகெங்கும் அறிமுகமாகி புகழ்பெற்றது.   தனது  முதல் சோயா விதைகளை வடகிழக்கு சீனாவின் மன்சூரியா நகரிலிருந்து 1930’களில்  பெற்ற பிரேசில் உலகின் முன்னணி சோயா உற்பத்தி செய்யும் நாடாக இன்று வரை இருக்கிறது.
 
சூப் மற்றும் சலாட்டில் சேர்க்கப்படும் மிருதுவான டோஃபு,  சாப் ஸ்டிக்குகளில் எடுக்க முடியாத அளவுக்கு ,பட்டுப் போல மிருதுவானவை, எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் கடின டோஃபு, துருவுவதற்கேற்ற மிக கடினமான டோஃபு, டோஃபு ஊறுகாய், உறைந்த டோஃபு, உலர்ந்த டோஃபு,  மீனும் காய்களும் சேர்த்து நொதிக்க செய்த நாற்றமடிக்கும் டோஃபு மற்றும் டோஃபு பாலாடைகள் என பல வகைகளில் கிடைக்கின்றது. கட்டிகளாக்கப்படாமலும் டோஃபு கிடைக்கிறது.
 
டோஃபு பாலாடைகள் ஆழம் குறைவான, அகலமான பாத்திரங்களில்  மீண்டும் மீண்டும் கொதிக்கவும் குளிரவும் செய்யபட்ட சோயாபாலின் மீது படியும் ஆடையை எடுத்து காய வைத்து தயாரிக்கப்படுகிறது. (இந்தியாவின் பாலாடை இனிப்பான பாஸந்தியை போல)  இந்த டோஃபு பாலாடை (tofu skin) சீனா மற்றும் ஜப்பானில் காலை உணவான அரிசிக்கஞ்சியில் கிழித்து போடப்பட்டு உண்ணப்படுகிறது.
 
வேகவைக்கப்பட்ட சோயா விதையிலிருந்து எடுக்கப்படும் சோயா பாலையும், அதிலிருந்து கிடைக்கும் டோஃபுவையும் சமைக்காமலும் சாப்பிடலாம்.
 
டோஃபு வெள்ளை, பழுப்பு, மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. டோஃபுவின் நிறம் சோயா பயிர் வகையை பொறுத்து மாறுபடும். டோஃபுவின் பிரத்யேக அவரை விதை  மணம்  தயாரிப்பின் போது மட்டுப்படுத்தப்படும் அல்லது வேறு மணமூட்டிகள் பயன்படுத்துகையில் வேறுபடும்.
  
சோயாபாலை போலவே பாதாம் பால், எள், நிலக்கடலை, முட்டை,  கொண்டைக்கடலை, அரிசி மாவு ஆகியவற்றிலிருந்தும் டோஃபு தயாரிக்கப்படுகிறது.
 
ஜப்பான், சீனா மற்றும் கொரியாவில் டோஃபு உணவுகள் பிரசித்தம் இந்தோனேசியாவில் டோஃபு உணவுகள்  டஹு எனப்படுகின்றன. (tahu) பிலிப்பைன்ஸில் வெல்லப்பாகில் டோஃபு   கலந்த டாஹோ (Tahô), வியட்னாமில்  சிறு மண்பாண்டத்தில் டோஃபு, எலுமிச்சை சாறு, இஞ்சி மற்றும் சர்க்கரை சேர்த்த டவ்ஹோ  ஆகியவை மிகவும் பிரபலம், (dòuhuā). Textured vegetable protein (TVP) எனப்படும் இறைச்சிக்கு மாற்றான விலங்கு இறைச்சி போலவே இருக்கும்  டோஃபுவும்  மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில்  புழக்கத்தில் இருக்கிறது.
 
டோஃபுவில் அதிக புரதமும் பல நுண் சத்துக்களும் இருப்பதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. பல வகையான புற்றுநோய்களுக்கும் டோஃபு எதிராக செயல்படுகிறது.
 
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்  ஒரு நாள் உணவில் 25 கிராம் டோஃபு இருந்தால் இதய நோய்கள் வராது என்கிறது. சீன பாரம்பரிய மருத்துவத்தில் உடலில் நச்சு நீங்கவும் கணைய பாதுகாப்பிற்கும் டோஃபு உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன . 
 
ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் டோஃபுவில் இருக்கின்றன. தொடர்ந்து டோஃபுவை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டோஃபுவிலிருக்கும் ஐசோ ஃப்லேவொன்கள்  உடலில் எஸ்ட்ரொஜெனுக்கு இணையான விளைவுகளை உண்டாக்கும் என்பதால் 40 வயதை கடந்த பெண்களுக்கு இது மிக மிக அத்தியாவசியமான உணவு. ஜப்பானின் பாரம்பரிய உணவுகளிலொன்றான மிஸோ சூப்பில் டோஃபு கட்டிகள் சேர்க்கப்படும். ஜப்பானியர்கள் மற்றும் சீனர்களின் நீண்ட ஆயுளுக்கும் சோயா உணவுகள் காரணமாக சொல்லப்படுகிறது.
 
(38–45%) புரதமும் 20% எண்ணையும் இருப்பதால்  பயறு வகைகளில் சோயா மிக முக்கியமானதாக இருக்கிறது. உலகளாவிய சோயா உற்பத்தியில் 85% சோயா எண்ணெய் மற்றும் புண்ணாக்கு தயாரிப்பில் பயன்படுகிறது. மிக அதிகம் பயன்பாட்டில் இருக்கும் சோயா பொருட்களில் இவற்றிற்கு அடுத்தபடியாக சோயா பால், டோஃபு, மற்றும் சோயா சாஸ்’கள் இருக்கின்றன,
 
மரபணு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் பயிர்களில் சோயாவும் ஒன்று.உபயோகப்படுத்தாத  டோஃபுவை குளிர்பதனப்பெட்டியில் அல்லது நீரில் சேமித்து வைத்திருக்க வேண்டும்

டோஃபு சீனக் கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகி விட்டிருக்கிறது.  அங்கு நீத்தோர் நினைவு நாளில் கல்லறைகளில் டோஃபு வைத்து வணங்கப்படும். சீனாவில் மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அழகிய பெண்களை “tofu xishi” – டோஃபு அழகி என்று குறிப்பிடுவார்கள். சீனத்தொன்மங்களின் நான்கு பேரழகிகளில் ஒருத்தியின் பெயர் “xishi”.  காலப்போக்கில் பெண்களின் அழகுக்கே “xishi”  என்னும் சொல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. டோஃபு போல எளிமையான அழகு என்பதால் இப்படி குறிப்பிடுவது அங்கு வழக்கம்.

 
அதிக சோயா பயன்பாட்டினால் ஆண்களுக்கு பெண் தன்மை உருவாகும் என்ற உறுதி செய்யப்படாத தகவல்களினால்  soy-boy  என்னும் சொல் பேச்சு வழக்கில் சில நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது. இதற்கு எந்த அடிப்படை அறிவியல் ஆதாரமும்  இதுவரையிலும் இல்லை 
 
ஜப்பான், சீனா மற்றும் வியட்னாமில் வீடுகளிலேயே டோஃபு பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படுகிறது. இந்த காணொளி இதுவரை டோஃபு சுவைக்காதவர்களுக்கும் ஆர்வமூட்டும்

.https://www.youtube.com/embed/kOFaTjHijag?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=ta-IN&autohide=2&wmode=transparent

புகையும் புகை சார்ந்தவைகளும்

ஒரு சிகரெட் பற்ற வைத்ததால் 18 பேருக்கு கரோனா தொற்று | cigarette -  hindutamil.in

கடந்த  வார உலக செய்திகளில் மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது நியூசிலாந்தின் அதிரடி அறிவிப்பொன்று.2008’ம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்கள்  சிகரெட் மற்றும் புகை பிடிப்பதற்கான எந்த ஒரு தயாரிப்பையும் வாங்க வாழ்நாள் தடை விதித்திருக்கிறது நியூசிலாந்து. புகையிலை தொழில் வரலாற்றிலேயே இப்படியொரு அதிரடி முடிவு எந்த காலகட்டத்திலும், எந்த ஒரு நாட்டிலும் எடுக்கப்பட்டதில்லை.  சிகரெட் புகைப்பதற்கான கட்டுப்பாடுகள்  பூட்டான் உள்ளிட்ட பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கின்றன என்றாலும் முற்றிலும் தடை செய்யும் இந்த சட்டம் மிக புதியது.

2027‌ ‌லிருந்து‌ ‌புகைபிடிக்காத‌ ‌தலைமுறையினர்‌  ‌இருக்கும் நாடாக‌ ‌நியூசிலாந்து‌ ‌இருப்பதற்கான‌ ‌முன்னெடுப்பை‌ ‌இப்போதே‌ ‌துவங்கி‌ ‌இருக்கிறது‌ ‌அந்த‌ ‌நாடு.‌ ‌இங்கு‌  ‌14‌ ‌வயதும்‌ ‌அதற்கு‌ ‌குறைவாக‌ ‌இருக்கும் ‌இளைஞர்களுக்கு‌ ‌சிசரெட்‌ ‌விற்பதும்‌ ‌குற்றமென‌ ‌அறிவிக்கப்ட்டிருக்கிறது. ‌

5‌1லட்சம் ‌மக்கள்‌ ‌தொகை‌ ‌கொண்ட‌ ‌நியூசிலாந்தில்‌ ‌ஒவ்வொரு‌ ‌ஆண்டும்‌ ‌சுமார்‌ ‌5000‌ ‌இறப்புக்கள் ‌புகைபிடித்தலால்‌ ‌உண்டாகும்‌ ‌நோய்களினால் ‌ஏற்படுகின்றன.‌ இதற்கு ‌முன்பே ‌மக்கள் ‌நலனில்‌ ‌அக்கறைகொண்டு‌ ‌இந்த‌ இறப்புக்களை ‌தவிர்க்கவும், இறப்பின் எண்ணிக்கையை குறைக்கவும் ‌சிகரெட்டுக்களுக்கு‌ ‌மிக‌ ‌அதிக‌ ‌விலையை‌ ‌நிர்ணயித்தது, ப்ளெயின்‌ ‌பேக்கேஜிங்‌ ‌எனப்படும் ‌விளம்பரங்களும், ‌புகை பிடித்தலைத் ‌தூண்டும்‌ ‌வாசகங்களும்‌ ‌இல்லாத பெட்டிகளில் ‌சிகரெட்டுக்களை விற்பது,‌ ‌சிகரெட்டில் ‌நிகோட்டின்‌ ‌அளவை‌ ‌மிக‌க் ‌குறைவாக‌ ‌வைப்பது,‌ ‌சிகரெட்‌ ‌விற்பனையை‌ ‌சட்டபூர்வமாக்கிக் கட்டுப்படுத்தியது, ‌மற்றும்‌ ‌சிகரெட்‌ ‌விற்பனை‌ ‌செய்யும்‌ ‌கடைகளின்‌ ‌எண்ணிக்கையை கட்டுக்குள்  வைப்பது ஆகியவற்றையும் ‌‌செய்திருக்கும்‌ ‌ நியூசிலாந்து அரசு‌ ‌மேலும்‌ ‌கடுமையான ‌நடவடிக்கையாக  ‌இப்போது‌ ‌புகைபிடித்தலின்‌ ‌உலக‌ ‌வரலாற்றில் ‌மிகப்பெரிய ‌திருப்புமுனையாக‌ ‌கருதப்படும்‌ ‌இந்த‌  ‌தடையையும்‌ ‌அறிவித்திருக்கிறது. ‌இது‌ ‌2022’ல்‌ ‌சட்டமாக்கப்படவிருக்கிறது. இதன்‌ ‌மூலம் 2025’ல்‌ நியூசிலாந்தின்‌ மொத்த‌  ‌மக்கள் ‌தொகையில்‌ ‌வெறும்‌ ‌5‌ ‌சதவீதத்தினரே ‌புகைபிடிப்பவர்களாகவும்‌ ‌புகைபிடிக்காத‌, ஆரோக்கியமான புதிய இளைய தலைமுறையும்‌ ‌இருக்குமென்று  ‌கருதப்படுகிறது.

 ‌புகைபிடிக்கும்‌ ‌மூன்றில்‌ ‌ஒருவர் ‌இறந்துகொண்டிருக்கும்‌ ‌நியூசிலாந்தின் பெரும்பாலான  ‌மக்கள் ‌இதை  ‌வரவேற்றாலும்‌  ‌புகையிலை மற்றும் ‌சிகரெட்‌ ‌தொழிற்சாலை‌ ‌உரிமையாளர்கள் ‌கருப்புசந்தைகளில் ‌சிகரெட்‌ ‌விற்கப்படுவதை‌ ‌இந்த ‌தடை‌ ‌மேலும்‌ ‌அதிகமாக்கும்‌, புகை பிடித்தல் தொடர்பான  ‌குற்றங்களும்‌ ‌பெருகும்‌ ‌என‌க் ‌கருத்து ‌தெரிவித்திருக்கிறார்கள். ‌  

‌இன்று‌ ‌உலகில்‌ ‌சுமார்‌ ‌1‌30 கோடி  ‌புகையிலை‌ உபயோகிப்பாளர்கள்  ‌இருப்பதாக‌ உலக தேகநல அமைப்பு ( WHO) ‌மதிப்பிட்டுள்ளது.‌ புகைபிடித்தலின் வரலாறு மிகபண்டைய காலத்திலிருந்தே தொடங்கி விட்டிருக்கிறது. ‌அமெரிக்கா‌வில் கிமு 5000‌ ‌க்கு‌ ‌முன்பே‌ ‌பழங்குடியினரின்‌ ‌சமயச்‌ ‌சடங்குகளில்‌ புகையிலை‌ ‌மற்றும்‌ ‌பல்வேறு‌ ‌மனம்‌ ‌மயக்கும்‌ ‌தாவரப்பொருட்கள் ‌புகைபிடிக்கப்பட்டன‌ ‌ ‌

உலகின்‌ ‌பல‌ ‌பகுதிகளில்‌ மரணத்திற்கு‌ ‌அருகில்‌ ‌செல்லும் ‌‌மற்றும்‌ ‌மாய‌ ‌அனுபவங்கள்‌ ‌போன்ற‌ ‌அசாதாரண‌ அனு‌பவங்களுக்காகவும் மனதை ஒருமுகப்படுத்தவும், பரவச நடனங்களுக்காகவும்  போதைப்பொருட்களின் புகை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது ‌என்று‌ ‌மானுடவியல்‌ ‌ஆய்வு‌கள் ‌தெரிவிக்கிறன.

 ‌பல‌ ‌பண்டைய‌ ‌நாகரிகங்கள்  குறிப்பாக பாபிலோனியர்கள்,‌ ‌இந்தியர்கள்‌ ‌மற்றும்‌ ‌சீனர்கள்‌ ‌ ஆகியோரிடம் சமயசடங்குகளில் போதையேற்றும் புகையை  உண்டாக்கும் தாவரப்பொருட்களை பத்தி போல் எரித்து அந்த புகையை முகரும் வழக்கம் இருந்தது. இந்திய காப்பியங்களில் சிவமூலி என்று கஞ்சா இலை புகைத்தல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இஸ்ரேலியர்கள்‌ ‌மற்றும்‌ ‌பிற்கால‌ ‌கத்தோலிக்க‌ ‌மற்றும்‌ ‌ஆர்த்தடாக்ஸ்‌ ‌தேவாலயங்களிலும்,‌ ‌மத‌ ‌சடங்குகளின்‌ ‌ஒரு‌ ‌பகுதியாக‌ தாவரப்பொருட்களினாலான ‌தூபத்தை‌ ‌எரித்தனர்.‌  தூபங்களில்  ‌சில‌ ‌சமயங்களில்‌ ‌கஞ்சா‌ ‌அல்லது‌ ‌ஓபியம்‌ ‌சேர்க்கப்பட்டது.

கிரேக்கர்களும் ரோமானியர்களும் சணப்பை விதைகளை தூளாக்கி புகைத்தனர். ஸ்பெயினில் உலர்ந்த லாவண்டர் செடிகளை புகைத்தனர். இன்று வரையிலும் கேரள பழங்குடியினர் மிளகுக்கொடியை உலர வைத்து புகைக்கின்றனர். 

உலகெங்கும் இருந்த பழங்குடியினரால் இவ்வாறு சமயச் சடங்குகளில்  உபயோகப்படுத்தப்படும் போதையேற்றும்,  மனம் மயக்கும்,கிளர்ச்சியும் பரவசமும் உண்டாக்கும் தாவர பொருட்கள் ஆங்கிலத்தில்  என்த்தியோஜென் எனப்பட்டன (Entheogen)

‌ஆஸ்டெக் பழங்குடியினர் ‌  ‌வெற்று‌ ‌நாணல் தண்டுகளிலும்,  குடையப்பட்ட  இளம் பிரம்பின்  தண்டுகளிலும் புகையிலையை நிரப்பி எரித்து புகைத்தனர். மெக்ஸிகோ,‌ ‌மத்திய‌ ‌அமெரிக்கா‌ ‌மற்றும்‌ ‌தென்‌ ‌அமெரிக்காவின்‌ பழங்குடியினர்   கசக்கிய உலர் ‌புகையிலைகளை‌ ‌மக்காச்சோளக்கதிரை சுற்றியிருக்கும் துணிபோன்ற உறையில் சுற்றி புகைத்தனர். 

 ‌கிறிஸ்டோபர்‌ ‌கொலம்பஸ்‌ ‌1492 ஆம் ‌ ‌ஆண்டு ‌ தனது‌ ‌ அமெரிக்க‌  ‌பயணத்தின்‌ ‌போது‌ தற்செயலாக‌ ‌புகையிலையின்‌ ‌போதைப்பொருள்‌ ‌பண்புகளை‌க் ‌கண்டறிந்தார்.‌அமெரிக்க ‌தீவுகளில்‌ ‌தரையிறங்கியபோது,கொலம்பஸும்‌ ‌அவரது‌ ‌குழுவினரும் அங்கிருந்த பழங்குடியினரால் கனிகள், உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட புகையிலை, மது மற்றும் பலவிதமான  மலர்களுடன் வரவேற்கப்பட்டனர்.

 ‌உலர்ந்த‌ ‌இலைச்சுருள்களில் அடைக்கப்பட்ட  இலைத்துகள்களை அப் பழங்குடியினர் முகர்ந்து பரவசமடைவதை கண்ட கொலம்பஸ் தானும் அதை முயன்று பார்த்தார்.அதில் கிடைத்த மிதமான போதையில் ‌திருப்தி‌ ‌அடைந்த கொலம்பஸ் குழுவினர், அந்த செடியின் ‌காய்ந்த‌ ‌இலைகளையும்‌ ‌விதைகளையும்‌ ‌எடுத்துச்‌ ‌சென்றனர்,‌ ‌இப்படியாக ‌புகையிலை‌ ‌யூரோப்பாவில்‌ ‌அறிமுகமானது. ‌ 

பழங்குடி தாவரவியல் துறையை (Ethnobotany) தோற்றுவித்த அமெரிக்க உயிரியலாளர் ரிச்சர்ட் எவான்ஸ் ஷுல்ட்ஸ் (Richard Evans Schultz)  தனது ’’கடவுளின் தாவரங்கள்’’ நூலில்  அமேசான் காடுகளின் மனம் மயக்கும் மற்றும் போதையேற்றும் தாவரங்களை குறித்து மிக விரிவாக எழுதியிக்கிறார்.‌ புகையிலையும் அப்படி சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டு, அதில் நிகோட்டின் என்னும்  அடிமைப்படுத்தும் வேதிச்சேர்மம் இருப்பதை அறியாத மக்களால்  தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டு பின்னர் உலகெங்கிலும்  பரவியது. 

சிவப்பிந்தியர்கள் ‌புகையிலையை‌ ‌மதச்சடங்குகளுக்கும், ‌மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினார்கள்‌.‌மூங்கில்‌ ‌குழாய்களில் ‌புகையிலை தூளை‌ நிரப்பி‌, ‌எரித்து‌ ‌அதன்‌ ‌புகையை‌ ‌மூக்கி‌ல் ‌உறிஞ்சினார்கள். ‌அந்த‌ ‌மூங்கில்‌ ‌குழாய் ஷ்பேனிஷ்‌ ‌மொழியில் ‌டபாகோ (Tabaco)  ‌என‌ ‌அழைக்கப்பட்டு,  ‌ஆங்கிலத்திலும்‌ ‌அதுவே‌ டொபேக்கோ ஆயிற்று. (Tobacco) 

15‌ ‌ஆம்‌ ‌நூற்றாண்டில்,‌ ‌போர்த்துகீசிய‌ ‌மாலுமிகள்‌ ‌தங்கள்‌ ‌வர்த்தக‌ ‌புறக்காவல்‌ ‌நிலையங்கள்‌ ‌அனைத்திலும் அவர்களின் சொந்த பயன்பாடு‌ ‌மற்றும்‌ ‌பரிசுகளுக்குப் ‌போதுமான அளவில் ‌புகையிலை‌யை‌ சாகுபடி செய்தனர,‌ அந்த ‌ ‌நூற்றாண்டின்‌ ‌நடுப்பகுதியில்‌ ‌அவர்கள்‌ ‌பிரேசிலில்‌ ‌வணிக‌ ‌ரீதியாக‌ ‌புகையிலையை‌ ‌வளர்க்கத்‌ ‌தொடங்கினர்‌. பின்னர் ‌அது‌ ‌யூரோப் மற்றும்‌ ‌அமெரிக்காவில்‌ ‌உள்ள‌ ‌துறைமுகங்களில் சந்தைப்படுத்தப்பட்டது.‌‌ 

1542’ல் ஜப்பானுக்கு புகையிலை போர்ச்சுகீசிய மாலுமிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1559‌ ‌ஆம்‌ ‌ஆண்டு‌ இரண்டாம்  ‌ஸ்பானிய‌ ‌அரசர்‌ ‌ஃபிலிப்‌’பின்‌ ‌ஆணைக்கிணங்க‌ அவரது மருத்துவர் ‌‌ஹெமாண்டெஸ்‌ ‌டி‌ ‌பான்கலோவால்‌‌ ‌ ஸ்பெயினில்  புகையிலை  ‌ சாகுபடி செய்யப்பட்டது.

பலராலும் புகையிலை பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறது, குணமாக்குகிறது என்று அப்போது நம்பப்பட்டு வந்தது. 1571’ல்‌ ‌நிக்கோலா‌ ‌மொனார்டெஸ்‌ ‌போன்ற‌ ‌சிலர்,‌ ‌புகையிலை‌யின் மருத்துவ பயன்களை பட்டியயலிட்டு, அதனால்  ‌குணப்படுத்தமுடிகிற பலவிதமான  ‌ ‌நோய்களை‌ குறிப்பிட்டு ‌ஒரு‌ ‌புத்தகத்தை‌ ‌எழுதும்‌ ‌அளவுக்குச்‌ ‌சென்றனர்.‌ பின்னர் ‌அமெரிக்காவில்‌ ‌புகையிலைப்‌ ‌பொருட்கள்‌ ‌வலுவாகக்‌ ‌காலூன்றின.

 ‌போர்சுக்கலில்  ‌பணி ‌புரிந்த‌ ‌பிரன்ஸின் ‌தூதரான‌ ‌ழான்‌ ‌நிகோ (‌Jean‌ ‌Nicot,‌) ‌புகையிலையின் ‌சாகுபடியை‌ ‌குறித்து‌ ‌அறிந்துகொண்டு 1560இல்‌அதை‌ ‌பிரான்ஸுக்கு‌ ‌அறிமுகம்‌ ‌செய்தார்‌. மென்மையாகத் தூளாக்கப்பட்ட புகையிலையை மூக்கில் உறிஞ்சும் கலையையும், இவரே ஃஃப்ரெஞ்சு அரசவைக்கு அறிமுகம் செய்தார். அதன் உபயோகம் பின்னர் வெகுவாக பரவி நிகோ ஃ பிரான்ஸ் முழுவதும் பெரிதும் பிரபலமானார். ‌புகையிலையின் ‌தாவரப்பெயரான நிகாடியனா‌ ‌மற்றும்‌ ‌அதன்‌ ‌ஆல்கலாய்டான‌ ‌நிகோடின்‌ ‌ஆகியவை இவரின் ‌பெயரைத்தான் கொண்டிருக்கின்றன.

16‌ ‌ஆம்‌ ‌நூற்றாண்டின்‌ ‌இறுதியில்,‌ ‌புகையிலை‌ சாகுபடி ‌மற்றும்‌ ‌புகையிலை‌ ‌பயன்பாடு‌ ‌இரண்டும்‌ ‌யூரோப்பாவின் அனைத்து ‌நாட்டிற்கும்‌ ‌அறிமுகப்படுத்தப்பட்டன.‌ ‌புகையிலை‌க்கு‌  நோய்களை குணமாக்கும்‌ மருத்துவ‌ ‌குணங்கள்‌ ‌இருப்பதாக‌ ‌மருத்துவர்கள்‌ ‌பரிந்துரைத்து ,‌ ‌மூக்குப்‌ ‌பொடி‌ உறிஞ்சுவதும், சுருட்டாக புகையிலையின் ‌புகையை உறிஞ்சுவதும் பரவலானது.1600ல்‌ ‌ஸ்பெயினுக்கு‌ ‌அறிமுகமான  சிகார் எனப்படும் புகையிலையில் சுருட்டப்பட்டிருக்கும் புகையிலைத் தூளைக்கொண்ட சுருட்டு இi‌ரு‌ ‌நூற்றண்டுகளுக்கு‌ ‌செல்வத்தின்‌ ‌குறியீடாகவே‌ ‌கருதப்பட்டு வந்தது.‌  

 குழாய்களில் அடைக்கப்பட்டு புகைக்கப்பட்டவை சிகரெட்டின் முன் வடிவங்கள். இவை 18’ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலி மற்றும் போர்ச்சுக்கலில் அறிமுகமாகின. இவை போர்ச்சுகீஸிய வணிகர்களால்  ரஷ்யாவிற்குள் நுழைந்தன. நெப்போலியனின் ‌போர்களில்‌ ‌ஃப்ரெஞ்சு‌ ‌மற்றும்‌ ‌பிரிட்டிஷ்‌ ‌ராணுவ வீரர்கள்டையே இவை மிக விரைவாக பரவின.  ஃப்ரெஞ்சுக்காரர்கள்‌ ‌இவற்றிற்கு  ‌சிகரெட்‌ ‌என்று‌ ‌பெயரிட்டனர்.‌ 

நீண்ட உருளைகளாக கிடைத்த, பளபளக்கும் இலைகளில் அடைக்கப்பட்ட புகையிலையான சுருட்டுக்களும் அப்போது புழக்கத்தில் இருந்தன என்றாலும் சுருட்டைக் காட்டிலும்‌ ‌மிதமான‌, மிக‌ ‌நுண்மையாக‌ ‌பொடிக்கப்பட்ட புகையிலை துகள்கள்‌ ‌காகிதங்களில்‌ ‌சுருட்டப்பட்ட ‌சிகரெட்டுக்கள்‌ ‌‌அமெரிக்காவில்‌ ‌‌ வேகமாக ‌பிரபலமடைந்தன.‌ பின்னர் ‌அமெரிக்க‌ ‌சந்தை‌களில் ‌துருக்கிய‌ ‌புகையிலை‌யின் ‌கலவையில் உருவான சிகரெட்டுக்கள் பெரிதும் விற்பனையாகின. அந்த சிகரெட்டுக்களை பெரிதும் விரும்பிய ‌பிரிட்டிஷார் நாளடைவில் கலப்பில்லாத‌ ‌வர்ஜீனியா‌ ‌புகையிலை‌ ‌ நிரப்பப்பட்ட‌ ‌சிகரெட்டுகளை விரும்பத் துவங்கினர்.

‌1828‌’‌ல்‌ ‌இரு‌ ‌வேதியியல்‌ ‌மாணவர்கள் புகையிலையில் ‌இருக்கும்‌ ‌முக்கிய‌ ‌வேதிப்பொருளான‌ ‌ ‌நிகோடின் ஆல்கலாய்டை ‌பிரித்தெடுத்தார்கள்.  ‌நிகோடின்‌ ‌ஹெராயின்‌ ‌மற்றும்‌ ‌கொகெயினுக்கு‌ ‌இணையாகவே‌ ‌பயனாளர்களை ‌அடிமைப்படுத்தும்‌ ‌இயல்பு‌ ‌கொண்டது‌ ‌

துவக்கத்தில்  ‌அனைத்து‌ ‌சிகரெட்டுகளும்‌ ‌புகை பிடிப்பவர்‌களால்  ‌அல்லது‌ ‌தொழிற்சாலை பணியாளர்களால் ‌கைகளால் தேய்த்துச் சுருட்டி உருவாக்கப்பட்டன‌. ‌1880‌ ‌ஆம்‌ ‌ஆண்டில்‌ ‌ஜேம்ஸ்‌ ‌ஏ.‌ ‌பொன்சாக்‌ ‌சிகரெட்‌ உருவாக்கும்  ‌இயந்திரத்தை கண்டுபிடித்து  ‌அமெரிக்க‌ ‌காப்புரிமையும் பெற்றார்‌. ‌

அந்த இயந்திரத்தில்‌ ‌பொடித்த புகையிலை‌ ‌தொடர்ச்சியான‌ நீண்ட  ‌காகித பட்டையில்‌ ‌ வைக்கப்பட்டு ‌மூடப்பட்டு,‌ ‌சுழலும்‌ ‌கத்தியால்‌  தேவையான நீளத்தில் துண்டுகளாக  ‌வெட்டப்பட்டது.‌ ‌ மிக விரைவாக சிகரெட்டுக்கள் இயந்திரங்களில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட போது சிகெரெட் புகைத்தல் மிக அதிகமாகியது

போன்சாக்‌ ‌இயந்திரம்‌ ‌இங்கிலாந்திற்கு‌ ‌ இறக்குமதி‌ ‌செய்யப்பட்ட‌1883‌ற்குப்  பிறகு  ‌ ‌பல‌ ‌யூரோப்பிய‌ ‌நாடுகளிலும்  ‌சிகரெட்‌ ‌தொழில்‌ ‌ வேகமெடுத்து வளர்ந்தது.

‌புகையிலை‌ ‌மெல்லுவது‌ ‌19‌ ‌ஆம்‌ ‌நூற்றாண்டில்‌ ‌மிகவும்‌ ‌பிரபலமாக ‌இருந்தாலும்‌ ‌ ‌முதல்‌ ‌மற்றும்‌ ‌இரண்டாம்‌ ‌உலகப்‌ ‌போரின்‌ ‌போது‌ ‌சிகரெட்டுகள்‌ ‌அவற்றின்‌ ‌செல்வாக்கின்‌ ‌உச்சத்தில் இருந்தன.‌ ‌1847‌ ‌பிலிப்‌ ‌மோரிஸ்‌ சிகரெட் நிறுவனம் ‌இங்கிலாந்தில்‌ ‌நிறுவப்பட்ட‌போது, அவர்கள் ‌கையால்‌ ‌சுருட்டப்பட்ட‌ ‌துருக்கிய‌ ‌சிகரெட்டுகளை‌ ‌முதலில்‌ ‌விற்கத்‌ ‌தொடங்கியனர்,‌

‌புகையிலை‌ ‌நிறுவனங்கள்‌ ‌லட்சக்கணக்கான சிகரெட்‌ ‌பொதிகளை‌ ‌போர்‌ ‌ ‌முனைகளில்‌ ‌உள்ள‌ ‌சிப்பாய்களுக்கு‌ ‌அனுப்பின,‌ ‌சிப்பாய்களுக்கு ரேஷனில் ‌வழங்கப்பட்ட  ‌உணவு‌ ‌மற்றும்‌ பானங்களுடன் ‌கூடுதலாக ‌சிகரெட்டுகளுடன்‌ ‌இருந்தன.‌ ‌

 1920‌ ‌களில் ‌புகையிலை‌ ‌நிறுவனங்கள்‌ ‌பெண்களுக்கான சிகரெட்டுக்களை உருவாக்கி வசீகர பெயர்களில் அவற்றை சந்தைப்படுத்தியன. ஃபிலடெல்ஃபியாவின்‌ ‌ஜார்ஜ்‌ ‌வாஷிங்டன் ‌ஹில் ‌என்பவரே‌ ‌பெண்களும்‌ ‌சிகரெட்‌ ‌புகைக்கலாமென்று‌ ‌முதலில்‌ ‌விளம்பரம் செய்தவர். ‌1927ல்‌ ‌சிகரெட்‌ ‌விளம்பரங்களில்  அவர் ‌பெண்களை ‌மையமாக்கியபோது‌ ‌திரை நடிகைகளும்‌ ‌பாடகிகளும்‌ ‌சிகெரெட்‌ ‌புகைக்க‌த் ‌துவங்கினார்கள்‌. ‌பின்னர்‌ ‌அவரது  ‌நிறுவனம்‌ ‌அமெரிக்க‌ ‌சிகெரெட்‌ ‌விற்பனையில்‌ ‌38‌ ‌சதவீதத்தை ‌தனதாக்கிக்கொண்டது‌.   ‌அமெரிக்காவில்‌  ‌புகைபிடிக்கும் பெண்களின் ‌எண்ணிக்கை‌ ‌1935‌ ‌வாக்கில்‌ ‌மூன்று‌ ‌மடங்காக‌ ‌அதிகரித்தது.

‌புகையிலை‌ சாகுபடி 1605’ல்‌ ‌போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில்‌ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 17 ஆம்‌ ‌நூற்றாண்டில்‌  புகையிலையை மூக்குப்பொடியாக உறிஞ்சுதல் , சிகரெட்டாகப் புகைத்தல் மற்றும்  ‌நேரிடையாக  மெல்லும்  வழக்கம் ‌  ஆகியவை அறிமுகமாகி வேகமாக  பரவியது.‌    துவக்கத்தில் ‌குஜராத்தில்‌ ‌மட்டும்  ‌பயிரான  ‌புகையிலை ‌பின்ன‌ர் ‌இந்தியாவின்‌ ‌பிற‌ பகுதிகளிலும் பயிராக்கப்பட்டது. 1787’ல்‌ ‌கல்கத்தா ‌தாவரவியல் பூங்காவில் புகையிலை ‌செடியின் கலப்பின ‌ஆய்வுகள் ‌முன்னெடுக்கப்பட்டன. ‌1814’ல்‌ ‌புகையிலையின்  7  முக்கிய ‌இனங்கள் ‌ ‌அமெரிக்கவிலிருந்து  ‌தருவிக்கப்பட்டு ‌கல்கத்தாவில் பயிர்செய்யப்பட்டன‌ ‌

 ‌1875’ல்‌ ‌இங்கிலாந்தின்‌ ‌புகையிலை‌ ‌தேவைகளின்‌ ‌பொருட்டு, பீகாரில்‌ ‌புகையிலை  ‌சாகுபடிக்கான மாதிரி பண்ணையும்‌, புகையிலை ‌பதனிடும்‌ ‌தொழிற்சாலையும்‌ ‌உருவாகின‌.  ‌புகையிலை பயிரின் ‌தாவர ‌மற்றும்‌ ‌மரபியல் ஆய்வுகள்‌ ‌இந்தியாவின்‌ ‌விவசாய‌ ‌ஆராய்சி‌ ‌நிறுவனங்களில் 1903’ல்‌ ‌துவங்கப்பட்டன. Imperial‌ ‌Agricultural‌ ‌Research‌ ‌Institute‌ ‌(IARI),‌ துவங்கப்பட்டு ‌புகையிலையின்‌ ‌ சிறந்த ‌கலப்பினங்கள் இந்தியாவில் ‌வெற்றிகரமாக ‌உருவாக்கப்பட்டன.  ‌‌1930களில் தான் ‌இந்தியா‌ ‌உலக‌ ‌புகையிலை சாகுபடி‌ செய்யும் நாடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கபட்டது.

 1943-44 ‌ஆம்‌ ‌ஆண்டில், ‌புகையிலை‌ ‌மீதான‌ கலால்‌ ‌வரி‌ ‌அறிமுகப்படுத்தப்பட்ட ‌பின்னர்‌ ‌புகையிலை‌ ‌உற்பத்தி‌  இந்திய பொருளாதாரத்தின் முக்கிய‌ ‌ஆதாரமாக‌ ‌இருந்தது .இந்திய‌ ‌மத்திய‌ ‌புகையிலை‌ ‌குழு‌ ‌(ICTC)‌ ‌1945‌ லும்,‌மத்திய‌ ‌புகையிலை‌ ‌ஆராய்ச்சி‌ ‌நிறுவனம்‌ (CTRI) 1947 ம்‌ ‌ஆண்டு‌ம் ‌நிறுவப்பட்டன.‌ ‌

‌இந்தியாவில்‌ ‌விளையும்‌ ‌பல்வேறு‌ வகையான‌ ‌புகையிலை‌ ‌பற்றிய‌ ‌ஆராய்ச்சியை‌ ‌நடத்தி‌ ‌கண்காணித்து‌ ‌வரும் CTRI‌ ‌யின்‌ ‌செயல்பாடு‌கள் ‌1965‌ ’ல்‌ ‌இந்திய‌ ‌வேளாண்‌ ‌ஆராய்ச்சி‌ ‌கவுன்சிலுடன் ‌(ICAR) இணைக்கப்பட்டது.‌ ‌  ‌

20 ம் நூற்றாண்டில் புகையிலைச் செடி சாகுபடியின்  மேம்பாட்டின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்பு பல புதிய கலப்பினவகைகளும் ‌, பதப்படுத்த்தலில் செய்யப்பட்ட மாற்றங்களினால் புகையிலையின் அமில அளவு குறைக்கப்பட்டதுமாக சிகரெட் தொழில் இந்தியாவில் பெரிதாக விரிவடைந்தது.

உலகின்‌ உணவுப்பயிரல்லாதவைகளில் ‌மிக‌ ‌அதிகம்‌ ‌பயிராவதும்‌ ‌புகையிலைச்செடியே‌. புகைத்தலுக்கு‌‌ ‌அல்லது‌ ‌‌புகையிலை‌ ‌பிடித்தலுக்குப்‌‌ ‌பயன்படுத்துவதனால்‌ ‌ இச்செடியின் இலைகள் பயன்படுத்தப்படுவதால் இது‌ ‌புகையிலை‌ ‌என்னும்‌ ‌பெயரைப்‌ ‌பெற்றது.‌ ‌

 அமெரிக்காவைத் தாயகமாக கொண்ட புகையிலை‌ ‌செடியின்‌ ‌அறிவியல்‌ ‌பெயர்‌ ‌நிகோடியானா‌ ‌டபேக்கம்‌ (Nicotiana tabacum). ‌தக்காளி‌ ‌மற்றும் ‌உருளைக்கிழங்கின்‌ ‌குடும்பமான‌ ‌சொலனேசியை‌ ‌சேர்ந்தது ‌புகையிலைச்செடி‌. 

‌1 லிருந்து ‌2‌ ‌அடி‌ ‌உயரம்‌ ‌வரை‌ ‌வளரும்‌‌ பல்லாண்டுத்தாவரமான ‌இச்செடி‌ ‌வெள்ளை‌,  ‌இளஞ்சிவப்பு‌, ‌சிவப்பு‌, ‌மற்றும் ‌மஞ்சள் ‌நிற ‌மலர்களை ‌கொத்து‌ ‌கொத்தாக கொண்டிருக்கும். மிக சிறிய ‌கனிகளும் இதில்  ‌உருவாகும்‌.அகன்ற‌ ‌இலைகள் ‌20 அங்குல ‌நீளமும்‌ ‌10‌ ‌அங்குல ‌அகலமும் ‌கொண்டவை. ‌ ‌ ‌6 லிருந்து‌ ‌10‌ ‌வாரங்களான ‌நாற்றுகள் ‌வயலில்‌ ‌நடப்பட்டு, வளரும் செடிகளில்  ‌மலரரும்புகள்‌ ‌உருவாகும்‌ ‌போதே‌ ‌அகற்றப்பட்டு செடியின் ஆற்றல் முழுவதும்‌ ‌இனப்பெருக்கத்துக்கல்லாது ‌இலைகளின் ‌வளர்ச்சிக்கே ‌செலவழிக்கப்படும்.   ‌விதைக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் செடிகளை தவிர பிறவற்றில் மலரும்புகள் ‌நீக்கப்பட்ட பின்னர் தோன்றும் ‌பக்கக்கிளைகளும்‌ ‌நீக்கப்பட்டு, ‌ பளபளப்பான அகன்ற இலைகள் மட்டும் அறுவடை செய்யப்படும். ‌ ‌

 மூன்றிலிருந்து‌ ‌ஐந்து ‌மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட ‌இலைகள் ‌கொட்டகைகளில் ‌உலரவைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படும். ‌ ‌புகையிலை‌ ‌பதப்படுத்துதலில்  ‌காற்றில் ‌ பதப்படுத்தியவை, ‌நெருப்பில்‌ ‌பதப்படுத்தியவை‌, நிழலில் ‌ பதப்படுத்தியவை, நெருப்பில் வாட்டியவை  ‌என‌ப் ‌பல‌ ‌வகைகள் உண்டு.

பதப்படுத்துதலில் உலருதல், மஞ்சளாகுதல்‌,  ‌நிறம்‌ ‌மாறுதல்‌ ‌மற்றும் ‌காய்தல்‌ ‌என்னும்‌ ‌ நான்கு நிலைகள் உள்ளன. ‌பதப்படுத்தலுக்கான் கால அளவு ஒவ்வொரு‌ ‌நாட்டுக்கும்‌, ‌பிராந்தியங்களுக்கும்‌ ‌வேறுபடும்‌.பதப்படுத்தபட்ட புகையிலைகள்  ‌நிலவறையிலோ‌ ‌அல்லது ‌புகையறையிலோ‌ ‌சிலநாட்கள் ‌சந்தைப்படுத்தலுக்கு‌ ‌முன்பு‌ ‌சேமிக்கப்படும்‌ ‌ 

‌‌சிகரெட்டுக்கிணையாகவே பீடிகளும் உலகெங்கிலும் பரவலாக புகைக்கப்படுகின்றன.  16ம் நூற்றாண்டில் ஸ்பெயினின், செவில்லா நகரின் பிச்சைக்காரகள்  வீசியெறியப்பட்ட சுருட்டின் எஞ்சிய முனைகளை சேகரித்து, பிரித்து அவற்றில் இருக்கும் புகையிலையை  காகிதங்களில் சுருட்டி முனையில் நெருப்பிட்டு புகைக்க துவங்கினார்கள். ‌ ‌இவை ஸ்பானிஷ் மொழியில் “சிறிய‌ ‌சுருட்டுகள் என்று பொருள்படும்  ‌சிகரில்லோஸ்‌ என் அழைக்கபட்டன

ஏறக்குறைய அதே காலகட்டத்தில் இந்தியாவில் சிகரெட் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் புகையிலை கழிவுகளை காகிதங்களில் சுற்றி புகைக்க துவங்கினார்கள். இந்த இரண்டுமே பீடியின் முன்மாதிரிகள் என்று கருதப்படுகின்றது.

 பீடிகள் புகையிலையால் சுருட்டப்பட்டு தயாரானவை அல்லபீடி சுருட்டப்படும் இலைகள் தெண்டு மரம் எனப்படும் டையோஸ்பைரோஸ் மெலனோக்ஸைலான் (Diospyros‌ ‌melanoxylon) என்னும் அறிவியல் பெயருடைய மத்திய இந்தியாவில் அதிகம் வளரும் ஒரு மரத்திலிருந்து பெறப்படுகிறது. தெம்புருனி என்றும் அழைக்கப்படும் இம்மரம் ஆசியாவை தாயகமாக கொண்டது 

 தெண்டு இலைகள்  எளிதில் கெட்டுப்போகாத தன்மை, உலர்ந்தாலும் குறையாத இழுவைத்தன்மை, விரும்பத்தக்க மணம் மற்றும் நிதானமாக எரியும் தன்மை ஆகியவற்றைக்  கொண்டிருக்கும்.   செம்மந்தாரை, பலாசம் மற்றும் சால் மரங்களின் இலைகளும் தெண்டு இலைகளுக்கு பதில் பீடி சுருட்ட உபயோகிக்கப்படுகின்றன. இந்தியாவில் மத்திய பிரதேசம், ஒரிசா, மஹாராஷ்டிரம், பீஹார், உத்திர பிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க  மலைக்காடுகளிலும்,  காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களிலும்  தெண்டு மரங்கள் காணப்படுகின்றன. பிப்ரவரி- மார்ச் மாதங்களில் தெண்டு மரங்கள் தறிக்கப்பட்டு அடர்த்தியாக வளர்க்கப்படும்.தறிக்கப்பட்ட 45 வது நாளிலிருந்து தொடர்ச்சியாக இலைகள் அறுவடை செய்யப்படுகின்றன

 50.70. மற்றும் 100 இலைகள் கொண்ட கட்டுக்கள் மெல்லிய கயிறுகளால் கட்டப்பட்டு உலர வைக்கப்படுகின்றன.  உலர்ந்த இலையில்‌ ‌சிறிதளவு‌ ‌‌நிக்கோட்டின் ‌ ‌கரைசலில் ‌பதப்படுத்தப்பட்ட‌ ‌உலர்ந்த‌ ‌புகையிலைத்‌ ‌தூளைக்‌ ‌கலந்து‌ ‌சுருட்டி,‌ ‌மடித்து‌ ‌ பசையால் ஒட்டி பின்‌ ‌மெல்லிய‌ ‌ வண்ண நூலால்‌  ஒருமுனையில்‌ சுற்றி‌, ‌பீடி‌ ‌தயாரிக்கப்படும். இந்தியாவில் பீடிகள் எளிதில் கிழித்து எடுக்கும்படியான காகிதங்களில் சுற்றப்பட்டு விற்பனையாகின்றன.  பீடிகளிலும் மாம்பழம், சாக்லேட் மற்றும் கொக்கோ வாசனைகள்  சேர்க்கப்படுகின்றன. பீடி தயாரிப்பில் கிடைக்கும் உடைந்த இலைக்கழிவுகள் பற்பொடியாக கிராமப்புறங்களில் பயன்படுகின்றன. 

  பீடி சுற்றுதல் பல இந்திய கிராமங்களின் பிரதான குடிசை தொழிலாக உள்ளது 90 சதவீதம் இத்துறையில் பெண்களே பணிபுரிகிறார்கள். ‌937‌ கோடி மதிப்புள்ள சுமார்  ‌371,000‌ ‌ டன் பீடிகள் ஆண்டுதோறும் இந்தியாவில் தயராகின்றன.   ‌மேலும்,‌ ‌விவசாயிகள்,‌ ‌விவசாயத்‌ ‌தொழிலாளர்கள்,‌ ‌டெண்டு‌ ‌இலை‌ ‌பறிப்பவர்கள்,‌ ‌பீடி‌ ‌உருளைகள்,‌ ‌வியாபாரிகள்‌ ‌உள்ளிட்ட‌ ‌4.5 கோடி ‌மக்களுக்கு‌ ‌வாழ்வாதாரப்‌ ‌பாதுகாப்பு‌ ‌அளித்து‌ ‌வருகிறது இத்தொழில்.‌ ‌இந்தியாவில் மட்டுமே  1 கோடி தொழிலாளிகளால் சுருட்டப்பட்டு தயாரான  சுமார் 55 கோடி  பீடிகள் ஓரு வருடத்தில் விற்பனையாகின்றன

 பாக்கு, இனிப்பு, சுண்ணாம்பு மற்றும் பல வாசனைப் பொருட்களை சுற்றியிருக்கும் வெற்றிலையை குறிக்கும் மார்வாரி சொல்லான  பீடாவிலிருந்தே பீடி என்னும் சொல் வந்தது. தமிழ்நாட்டில் ‌ ‌75‌ ‌பெரிய‌ ‌பீடி‌ ‌உற்பத்தி‌ ‌நிறுவனங்கள்‌ ‌ இருக்கின்றன. வட கேரளம் பீடி தொழிலுக்கு மிக பிரபலமானது ‌  ‌ஒரு‌ ‌பீடியில்‌ ‌இருந்து‌ ‌வரும்‌ ‌புகையானது‌ ‌சிகரெட்டை‌ ‌விட‌ ‌மூன்று‌ ‌முதல்‌ ‌ஐந்து‌ ‌மடங்கு‌  அதிக ‌நிகோடின்‌ ‌அளவைக்‌ ‌ கொண்டுள்ளது‌ ‌‌ ‌.

புகையிலையின் பயன்பாடு துவக்கத்தில் அதன் அடிமையாக்கும் மற்றும் நோய் உண்டாக்கும் பண்புகளை அறியாமல் உலகெங்கிலும் பரவலாக இருந்தது. பலகோடி மக்கள் புகைபிடித்தலுக்கு அடிமையானபின்னரே அதன் தொடர் பயன்பாட்டின் ஆபத்துக்களை  உலகம் மெதுவாக அறியதுவங்கியது.

கிரேட்‌ ‌பிரிட்டனில்,‌ ‌ மூக்குப்பொடி உபயோகிப்பாளர்கள் ‌ ‌1761‌ ‌ஆம்‌ ‌ஆண்டிலேயே‌ ‌மூக்கு‌ப் ‌ புற்றுநோயின்‌ ‌ஆபத்துக்கள்‌ ‌குறித்து ‌ ‌எச்சரிக்கப்பட்டனர்,‌ ‌அதே‌ ‌நேரத்தில்‌ ‌ஜெர்மன்‌ ‌மருத்துவர்கள்‌ ‌1795‌ ’ல்‌ ‌உதடு‌ ‌புற்றுநோய்‌ ‌ஏற்படுவதற்கான‌ ‌சாத்தியம்‌ ‌குறித்து‌  பைப் எனப்படும் ‌குழாயில் அடைத்த புகையிலையை ‌உபயோகிப்பவர்களை‌ ‌எச்சரிக்கத்‌ ‌தொடங்கினர்.‌

 ‌1930‌ ‌களில்,‌ ‌அமெரிக்க‌ ‌மருத்துவர்கள்‌ ‌புகையிலை‌ ‌பயன்பாட்டை‌ ‌நுரையீரல்‌ ‌புற்றுநோயுடன்‌ ‌தொடர்புபடுத்தினர்,‌ ‌‌1948’ல் ‌ரிச்சர்ட்‌ ‌டால்‌ ‌எனும்‌ ‌பிரிட்டிஷ்‌ ‌தொற்று நோயியலாளர் ‌நுரையீரல் ‌புற்றுநோய்க்கும்‌ ‌சிகரெட்‌ ‌புகைத்தலுக்குமான் ‌நேரடி‌த் ‌தொடர்பை‌ ‌ஆய்வறிக்கையாக ‌பிரிட்டிஷ்‌ ‌மருத்துவ ‌இதழொன்றில்‌ ‌வெளியிட்டார்‌.‌அமெரிக்காவில் மருத்துவர்கள் சிகரெட் புகைத்தலை உடல்நலனுக்கென பரிந்துரைத்துகொண்டிருந்த காலத்தில்  இவர் வெளியிட்ட‌ ‌அறிக்கை பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் உண்டு பண்ணியது. அந்த ஆய்வறிக்கை வெளியான ‌நான்கு‌ ‌வருடங்களுக்கு  ‌பிறகு‌  ‌ மேலும் பல‌ ‌மருத்துவ‌ ‌ அறிக்கைகளின் ‌அடிப்படையில்‌ ‌இங்கிலாந்து‌ ‌அரசு‌ ‌புகைபிடித்தல் ‌நுரையீரல் ‌புற்றுநோயுடன் ‌தொடர்புடையது‌ ‌என்று அறிவித்தது‌ ‌ ‌

1964’ல்‌ ‌அமெரிக்க‌ ‌அறுவை‌ ‌சிகிச்சை ‌மருத்துவ‌ ‌சங்கமும்‌ ‌இந்த‌ ‌ஆய்வின்‌ ‌நம்பகத்தன்மையை ‌உறுதி‌ ‌செய்தபோது‌ ‌சிகரெட்‌ ‌விளம்பரங்களில்‌ ‌சில‌ ‌மாற்றங்கள் ‌கொண்டு‌ ‌வரப்பட்டன.‌ ‌அதன்பிறகுதான்‌ ‌புகை பிடித்தல்‌ ‌ஆரோக்கியத்துக்கு‌ ‌கேடு‌ ‌என்னும்‌ ‌வாசகங்கள் ‌புகையிலைத் ‌தயாரிப்புக்களில் ‌ இடம்பெற்றன.

அனைத்து வகையான ‌புகையிலை‌ ‌பொருட்களிலும்‌ ‌உள்ள‌ ‌நிகோடின்,‌ ‌ ‌அதைப்‌ ‌பயன்படுத்தும்போது‌ ‌இரத்தத்தில்‌ ‌உடனடியாக‌ ‌உறிஞ்சப்பட்டு ‌உடனடியாக‌ ‌அட்ரீனல்‌ ‌சுரப்பிகளைத்‌ ‌தூண்டி‌ ‌எபிநெஃப்ரின்‌ ‌என்னும் ஹார்மோனை‌ ‌வெளியிடுகிறது.‌ ‌எபிநெஃப்ரின்‌ ‌மத்திய‌ ‌நரம்பு‌ ‌மண்டலத்தைத்‌ ‌தூண்டி,இரத்த‌ ‌அழுத்தம்,‌ ‌சுவாசம்‌ ‌மற்றும்‌ ‌இதயத்‌ ‌துடிப்பை‌ ‌அதிகரிக்கிறது.‌கோகெய்ன்‌ ‌மற்றும்‌ ‌ஹெரொவின்‌ ‌போன்ற‌ ‌மருந்துகளைப்‌ ‌போலவே,‌ ‌நிகோடின்‌ ‌மூளையின்‌ ‌டோபமைனின்‌ ‌அளவை‌ ‌அதிகரிக்கிறது,‌  

சிகரெட்டின் முக்கிய  ‌போதைப்பொருளாக‌ நிகோடின்‌ ‌இருந்தாலும்,‌ ‌புகையிலை‌ ‌பயன்பாட்டினால்‌ ‌ஏற்படும்‌ ‌கடுமையான‌ ‌உடல்நல‌ ‌பாதிப்புகளில்‌ ‌பெரும்பாலானவை‌ சிகரெட்டில்  இருக்கும் ‌மற்ற‌ ‌இரசாயனங்களிலிருந்தும்‌ ‌வருகின்றன.‌ ‌புகையிலை‌ ‌புகைத்தல்‌ ‌நுரையீரல்‌ ‌புற்றுநோய்,‌ ‌நாள்பட்ட‌ ‌மூச்சுக்குழாய்‌ ‌அழற்சி‌ ‌மற்றும்‌  ‌இதய‌ ‌நோய்‌ ‌பக்கவாதம்‌ ‌அல்லது‌ ‌மாரடைப்புக்கு‌ ‌வழிவகுக்கும்.‌ ‌புகைபிடித்தல்‌ ‌மற்ற‌ ‌புற்றுநோய்கள்,‌ ‌லுகீமியா,‌ ‌கண்புரை,‌ ‌நீரிழிவு‌ ‌மற்றும்‌ ‌நிமோனியா‌ ‌ஆகியவற்றுடன்‌ ‌நேரடியான தொடர்பிலுள்ளதை பல ஆய்வறிக்கைகள் காட்டுகின்றன.

 இந்த‌ ‌அபாயங்கள்‌ ‌அனைத்தும்‌ சிகரெட், சுருட்டு,  பீடி, ‌ஹூக்கா,‌ ‌மூக்குப்பொடி, கிரீடெக் எனபப்டும் கிராம்பு சிகெரெட் (இந்தோனேசிய வகை), நேரிடையாக மெல்லும் பதபடுத்தப்பட்ட புகையிலை‌ ‌உட்பட‌ ‌புகையிலையின்  ‌எல்லா  தயாரிப்பிற்கும்‌ ‌பொருந்தும்.‌ ‌நேரிடையாக மெல்லப்படும், வாயில் அதக்கிக்கொள்ளப்படும் ‌புகையிலை‌ ‌புற்றுநோயின்‌ ‌அபாயத்தை‌ ‌புகையைக்காட்டிலும் அதிகரிக்கிறது,‌ ‌குறிப்பாக‌ ‌வாய்‌ ‌புற்றுநோய்.‌ ‌

சிகரெட்‌ ‌புகைத்தல்,  ‌கர்ப்பிணிப்‌ ‌பெண்களுக்கு‌ ‌கருச்சிதைவு,‌  குழந்தை ‌இறந்து‌ ‌பிறத்தல், ‌ ‌குறைப்பிரசவம் ‌ அல்லது ‌ ‌ ‌எடை‌குறைவான  ‌குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது. ‌ ‌கர்ப்பிணிகள்‌ ‌புகைபிடிப்பது‌ பிறக்கும் ‌குழந்தைகளின்‌ ‌கற்றல்‌ குறைபாட்டிற்கும் வழிவகுக்கலாம். புகைபிடிப்பவர்களுக்கு‌ ‌அருகில்‌ நிற்பவர்களும்,‌‌புகைபிடிப்பவர்‌ ‌வெளியேற்றும்‌ ‌புகைக்கு‌ ‌ஆளாகிறார்கள். ‌ 

‌உலகெங்கிலும்‌ ‌எப்போதும்‌ ‌புகையிலையின் உபயோகம் ‌ஏறுமுகத்திலேயே ‌இருக்கிறது‌ ‌  உலகெங்கிலும்‌ ‌ஆண்டிற்கு ‌சுமர்‌ ‌8‌ ‌மில்லியன்‌ ‌இறப்புக்கள்‌ ‌புகைபிடித்தலால் ‌உருவாகும்‌ ‌நோய்களால்‌  ‌நிகழ்கின்றன அதாவது,.ஒவ்வொரு‌ ‌8‌ ‌நிமிடத்திற்கும்‌ ‌ஒருவர்‌  ‌புகையிலையினால்‌ ‌இறக்கிறார்‌. புகைப்பழக்கத்தில்‌ ‌மாற்றங்கள் ‌இப்போது‌ ‌ஏற்படாவிட்டால்‌ ‌2030’ல்‌ ‌இந்த‌ ‌எண்ணிகக்கை ‌பலமடங்கு‌ ‌உயரும்‌ ‌என்று  ‌கணிக்ககப்பட்டிருக்கிறது.‌ ‌

 ‌அமெரிக்காவில்‌ ‌மட்டும்‌ ‌ஆண்டுக்கு‌ ‌480,000‌ இறப்புக்கள் புகைபிடிப்பதால்  ‌நிகழ்கின்றன, அதாவது ‌1300‌ ‌இறப்புக்கள் ஒவ்வொரு‌ ‌நாளும்‌ ‌. ‌இரண்டாம்‌ ‌நிலை‌ ‌புகையாளர்கள் ‌எனப்படும்‌ ‌புகைபிடிக்காத ‌ஆனால்‌ ‌புகைபிடிப்பவர்களின் அ‌ருகிலிருப்பவர்களுக்கு‌ம் புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் ஏற்படுகின்றது. தினமும்‌ ‌விற்பனையாகும்‌ ‌15‌ ‌பில்லியன்‌ ‌சிகரட்டுகளில்‌ ‌சுமார்‌ ‌10‌ ‌பில்லியன்‌ ‌சிகரட்‌ ‌கழிவுகள்‌ ‌சுற்றுச்சூழலில்‌ ‌பரப்பப்படுகின்றன.‌   

புகையிலையை ‌உபயோகிப்பவர்களில்‌ ‌70’லிருந்து‌ ‌90‌ ‌சதவீதம்‌  ‌நிகோடினுக்கு‌ ‌அடிமையாகிவிடுகிறார்கள்‌. ‌ ‌மின்‌ ‌சிகரெட்டுக்கள்  ‌எனப்படும் ‌Electronic‌ ‌cigarettes,‌   ‌பேட்டரியால்‌ ‌நிகோட்டினை‌ ‌வெளியேற  செய்யும் எளிய‌ ‌உபகரணங்கள் ‌சிகரெட்டைப்போல  ‌புகையை உருவாக்குவதில்லை ‌என்பதால் இவை‌ ‌சிகெரெட்டை‌ ‌காட்டிலும்‌ ‌பாதுகாப்பானவை‌ ‌என்று ‌சொல்லப்பட்டாலும் ‌இவற்றால்‌ ‌தீமை‌ ‌ இல்லை‌ ‌என்பதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள்  ‌இல்லை‌  ‌

2003‌ ‌ஆம்‌ ‌ஆண்டு‌ ‌உலக‌ ‌சுகாதார‌ ‌நிறுவனத்தின்‌ ‌புகையிலை‌யின்  ‌தீங்கு,‌ ‌கட்டுபடுத்துவதன்‌ ‌முக்கியத்துவம்,‌ ‌விழிப்புணர்வு‌ ‌பிரச்சாரங்கள்‌ ‌போன்றவற்றிற்கான‌ ‌பரிந்துரைகளில்‌ ‌168‌ ‌நாடுகள்‌ ‌கையெழுத்திட்டன.‌ உலக‌ ‌சுகாதார‌ ‌நிறுவனத்தால்‌ ‌ஒவ்வொரு‌ ‌ஆண்டும்‌ ‌உலக‌ ‌புகையிலை‌ ‌ஒழிப்பு‌ ‌தினம்‌ ‌மே‌ ‌மாதம்‌ ‌31‌ ‌ஆம்‌ ‌நாள்‌ ‌கடைபிடிக்கப்படுகிறது.‌ ‌

2017‌ ‌ல்‌ ‌உலக‌ ‌சுகாதார‌ ‌நிறுவனம்‌ ‌புகையிலை ‌அதன்‌ ‌சுற்றுச்சூழல்‌ ‌மாசுபாடு‌ ‌குறித்து‌ ‌விழிப்புணர்வு‌ ‌அறிக்கை‌ ‌வெளியிட்டது.‌ ‌புகையிலை‌ ‌சார்ந்த‌ ‌கழிவுகள்‌ ‌சுமார்‌ ‌7000ற்கும்‌ ‌மேற்பட்ட‌ ‌நச்சு‌ ‌வேதிப்பொருட்களையும்,‌ ‌மனித‌ ‌புற்று‌ ‌நோய்க்காரணிகளையும்‌ ‌பரப்பி,‌‌சுற்றுச்சூழலை ‌மாசுபடுத்துகின்றன.‌ புகையிலையிலிருந்து‌ ‌வெளியேறும்‌ ‌புகை‌ ‌நச்சு‌ ‌சுமார்‌ ‌1000‌ ‌டன்கள்‌ ‌மனித‌ ‌புற்று‌ ‌நோய்க்காரணிகளை‌ ‌வளிமண்டலத்தில்‌ ‌பரப்புகின்றன.‌ ‌ 

திரையரங்குகளில்‌ ‌பஞ்சுபோன்ற‌ ‌நுரையீரல்‌ ‌எப்படி‌ ‌சிதைந்துவிட்டிருக்கிறது என்பதை,, ‌வாய்ப் புற்று நோயினால் ‌ தனது உலகமே‌ தலைகீழாக ‌மாறிப்போன பெண்ணை, அவளின் பாதி சிதைந்துபோன முகத்தை, ‌புகைபிடித்ததனால் ‌இருதய‌ ‌நோயாளியானவர்‌ ‌தனக்கு‌ ‌ஊட்டப்படும்‌ ‌உணவைக்கூட ‌விழுங்க ‌முடியாமல்‌ ‌அவர்‌ ‌கடைவாயோரம் ‌உணவு‌ ‌வழிவதை,‌ ‌அப்பா‌ ‌புகைக்கும்‌ ‌சிகரெட்டின்‌ ‌புகையினால் ‌சிறு ‌மகள்‌ ‌இருமுவதைக் காட்டும் ‌காட்சிகளையும், புகைத்தல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எனும் அறிவிப்பையும் திரையில் பார்க்கும் பலர் இடைவேளையில் திரையரங்குகளில் புகை பிடிக்கிறார்கள். கொரோனா வைரஸின் இறப்புக்களுக்கிணையான இறப்புக்களை அளிக்கும் இந்த பழக்கத்தினால் அவர்களால்‌, ‌அவர்களுக்கருகில் ‌அருகில்‌ ‌இருப்பவர்களும் மட்டுமல்லாது சூழலும்‌ ‌சீர்கெட்டுக்கொண்டிருக்கிறது‌ ‌என்பதையும் புகைபிரியர்கள் ‌உணரவேண்டும்‌ ‌ ‌

 ‌ உலக‌ ‌சுகாதார‌ ‌நிறுவனத்தின்‌ புகைபிடித்தலுக்கெதிரான ‌குறிக்கோள்களில்‌ ‌இன்னும்‌ ‌சில‌ ‌மாற்றங்கள் ‌தேவையாயிருக்கின்றன‌, ‌உலகநாடுகளை ‌ஒன்றிணைத்து, ‌சான்றுகளின் ‌அடிப்படையிலான‌ ‌அறிவியல்‌ ‌பூர்வமான‌ ‌கொள்கைகளையும்திட்டங்களையும் ‌உலக‌ ‌சுகாதார‌ ‌நிறுவனம்‌ ‌எடுத்தால்‌ ‌மட்டுமே புகைத்தலின்  அபாயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

லினன்

ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரங்களில்  ஒன்றும், எகிப்தின் தலைநகருமான  கெய்ரோவுக்கு 50 கிமீ தொலைவிலிருந்தது தர்ஹான் கல்லறைப்பகுதி. இங்குதான்  எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தை சேர்ந்தவர்களின்  நெக்ரொபொலிஸ் எனப்படும்  அலங்காரமான மிகப்பெரிய கல்லறைகள் இருந்தன.  பிரிட்டிஷ் எகிப்தியலாளரும், நவீன  தொல்லியல் துறையின் தந்தை என்றழைக்கப்படுபவருமான ஃப்ளிண்டர்ஸ் பேட்ரி 1   1912, 1913  ஆகிய வருடங்களில் தர்ஹானில் இருமுறை ஆய்வுகள் நடத்தினார்.    அகழ்வாய்வுகளில்  கிடைத்தவற்றில் விலையுயர்ந்தவைகளை தவிர பிறவற்றை    பெட்டியிலிட்டு,  இங்கிலாந்தின் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைத்தார். எதிர்கால ஆய்வுக்கான பொருட்கள் இருந்த அந்த பெட்டியை பல வருடங்களுக்கு  யாரும் திறக்கக்கூட இல்லை. 1942ல் பேட்ரியும் இறந்துபோனார். 

64 வருடங்கள்  கழித்து, 1977ல் அந்த பெட்டி திறக்கப்பட்டபோது, பழைய ஆடைகளை ஆய்வு செய்பவரான ஷெய்லா ஸாண்டி  அதிலிருந்து மண்மூடிய துணி மூட்டை ஒன்றை  எடுத்து பிரித்தார். அது கத்தியால் கிழிக்கப்பட்ட,   மூன்று  லினன் துணிகளை,  கைகளால் தைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட v  கழுத்தும்,  நீண்ட கைகளும்,  கொண்டிருந்த ஒரு  மேல்சட்டை.  5,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்த லினன் சட்டையே நமக்கு கிடைத்தவற்றில்   உலகின் மிகப் பழமையான உடை.   

அந்த ஆடையின் கீழ் ஓரங்களில் ’ஹெம்’ எனப்படும்  மடிப்புத் தையல்கள்  இல்லாததால்  உடையின் நீளத்தை  யூகிக்க முடியவில்லை. ஆனால்  அளவுகளை வைத்து பதின்பருவத்தினர் அல்லது ஒல்லியான ஒரு பெண்ணின் உடையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

இந்த லினன் துணி கிபி 3482 லிருந்து  3102 க்கு இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று  நம்பப்பட்டது. எனினும், இதன் தொன்மை குறித்து  பல சர்ச்சைகள் எழுந்தபடியே இருந்தன. 2015 ல்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ரேடியோ கார்பன் கணக்கிடும் துறை  இந்த லினன் உடையின்  2.24 மி கிராம் மாதிரியை எடுத்து கணக்கிட்டு இதன் காலம் கிபி 3482-3102 க்கு இடைப்பட்டது தான் என்று  உறுதியாக தெரிவித்தது.  

தொல்லியல் ஆய்வு கண்டுபிடிப்புக்களில்  இயற்கை லினன் நாரிழைகளாலான இந்த உடை இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் கிட்டத்தட்ட  முழுமையாகவே கிடைத்திருப்பது அசாதாரணமானது என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. தர்ஹான் உடை என அழைக்கப்படும் (Tarkhan Dress) அந்த லினன் உடை லண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான ’’பேட்ரி எகிப்து தொல்லியல் அருங்காட்சியகத்தில்’’  லினன் நாரிழைகளின் காலத்தை கடந்த நீடித்த உழைப்பின் சாட்சியாக காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து  உலக  நாடுகளிலும்  ஆடை மற்றும் அணிகலன்களின் வடிவம், அவை உருவாக்கப்படும் பொருட்கள்  மற்றும் அவற்றின் வண்ணங்களை காலநிலை தான்  தீர்மானிக்கிறது. எகிப்தின் ஆடைகள் அப்பாலையின் அதி வெப்ப மற்றும் வறண்ட  வானிலையுடன் நேரடியாக  தொடர்பில் இருந்தன. குளிர்ச்சியாகவும், உறுதியாகவும் இருந்த லினன் ஆடைகளே எகிப்தில் பெரும்பான்மையினரின் விருப்ப ஆடைகளாக இருந்தன. பண்டைய எகிப்தின் சித்திரங்களில் தூய வெள்ளை இடையாடைகளுடன் ஆண்களையும், உடல் முழுதும் சுற்றப்பட்டிருக்கும் இறுக்கமான  வெண்ணிற ஆடைகளில் பெண்களையும் காணமுடியும், அவை யாவும் லினன் ஆடைகளே!

நைல் நதி எகிப்தின் நாகரிக வளர்ச்சியில்  பெரும் பங்கு வகித்தது.  வருடா வருடம் நைல் நதியில் வரும் வெள்ளம், வண்டலை கொண்டு வந்து நிலத்தில் சேர்த்து,  மண் வளத்தை  அதிகரித்தது. எனவே  எகிப்தின் மக்களுக்கு தேவையான பணப்பயிர்களும், உணவுப்பயிர்களும்  வளமான அந்த நதிக்கரையோரத்தில் பயிராகின.

குறிப்பாக லினன் நாரிழைகளை கொடுக்கும் ஆளி பயிர்களின் சாகுபடி அங்கு செழித்திருந்தது. லினன் நார்கள் எகிப்தின் எல்லாமாக இருந்தது என்றே சொல்லலாம் மீன்பிடி வலைகளிருந்து, உடைகள், மம்மிகளை பலமுறை சுற்றி கட்டும் துணிகள் என, பிறப்பிலிருந்து இறப்புவரை மட்டுமல்ல  இறப்புக்கு பின்பான வாழ்வின்  சாத்தியங்களை ஆழமாக நம்பிய எகிப்தியர்களின் மறுவாழ்விலும் லினன் துணிகள்  இருந்தன. மறுவாழ்விற்கு தேவையான ஆடை ஆபரணங்களும் கல்லறைகளில் வைக்கப்படும்.. அப்படித்தான் அந்த  புத்தம் புதிய லினன்  உடை அந்த தர்ஹான் கல்லறையில் வைக்கப்பட்டு இருக்கக் கூடும். 

எகிப்தியர்களின் விருப்பமான நிறம் வெள்ளைதான். வெண்ணிற லினன் ஆடைகளின் விளிம்புகளில்  வேறு சில வண்ணங்களும் காணப்பட்டன.கம்பளியின் உபயோகம் இருந்தது எனினும் அது விலங்குகளிலிருந்து கிடைத்ததால்  தூய்மையற்றதாகக் கருதப்பட்டது, மத குருக்கள்  கம்பளிகளை அணிவது தடை செய்யப்பட்டிருந்தது. பருத்தி உபயோகம் ஒரளவுக்கு இருந்தாலும் அதைக்காட்டிலும் தூய்மையானது என்னும் நம்பிக்கையில் பண்டைய எகிப்து  முழுவதும் லினன் தான் அதிக பயன்பாட்டில் இருந்தது. லினன் பயிரான ஆளி  சாகுபடியும் எகிப்தில் பிரதானமாக இருந்தது.  

குடிமக்களில் ஆண்கள் ஷெண்ட்டி எனப்படும் (schenti) இடுப்புத்துணியும்,  பண்டிகை காலங்களில் கொசுவம் வைத்த, கைகளில்லாத மேல்சட்டையும் லினன் துணிகளில் அணிந்தார்கள். உயர்குடியினருக்கான ஷெண்ட்டியில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இடுப்பு துணிக்கு மேல்  உயர்தர லினனில் குட்டை பாவாடை போன்ற உடையையும் வீட்டுக்கு வெளியே செல்கையில் அணிந்தார்கள்.. 

மார்பகங்களை மறைக்கும் அளவுக்கு அகலமான தோள்பட்டைகளால் இணைக்கப்பட்டிருந்த, பாதம் வரை நீண்ட, உடலை கவ்வி பிடிக்கும்   ஒற்றை லினன் ஆடையை பெண்கள் அணிந்திருந்தார்கள் 

உடைகளுக்கு மட்டுமல்லாது எகிப்தியர்கள் பாலையின் வெப்பத்திலிருந்தும் புழுதிப்புயல் களிலிருந்தும் முகத்தையும் தலையையும் பாதுகாக்க அணியும்  பொய் தலைமுடி (Wig) தயாரிப்பிலும் லினன் இழைகளை உபயோகித்தார்கள். லினன் நாரிழைகள்,  கத்தரிக்கப்பட்ட கூந்தல் இழைகள் மற்றும்  கம்பளி இழைகளில் பசை தடவி பின்னல்களைப்போல பின்னி சடைசடையாக தொங்கும்  பொய்க்கூந்தல் தலையணிகளை அணிந்தார்கள் .விழாக்களின் போது அணிய அலங்காரங்களுடனும்,  மிக சிறப்பான விழாக்களுக்கு சுருள் சுருளான இழைகளுடனும் தலையணிகள் இருந்தன. ஆண்களுக்கென்று  சதுரமாக நெற்றியை மறைத்து பக்கவாட்டில் சரியும் பட்டை பட்டையான லினன் தலையணிகளும் இருந்தன.

அரசகுடியினரின் ஆடைகள் இவற்றை போலத்தான்  இருந்தன என்றாலும் அவற்றில் பிரத்தியேக குலமுறை சின்னங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தது.  உயர்குடியினர் லினன் மேலாடைகளுடன்  எடைமிகுந்த, உலோகங்களாலான, கற்கள் பதிக்கப்பட்ட அணிகலன்களையும் அணிந்தார்கள் 

பொதுமக்கள் சிறப்பான நிகழ்வுகளுக்குப் போகையில் மட்டும் லினன் உள்ளிட்ட பல  தாவர இழைகளால் உருவான செருப்புக்களை அணிந்தார்கள். அரசகுடியினருக்கான செருப்புக்களின் நுனி மேல் நோக்கி வளைந்திருக்கும் . லினன் பூச்சிகள் மற்றும் கிருமிகளுக்கும் எதிரானது என்பதால் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த   எகிப்தியர்களின்  பிரியத்துக்குரியதாகியது. லினன் ஆடைகள் எத்தனை வெண்மையோ அத்தனை தூயது என்றும் எகிப்தியர்கள்  நம்பினார்கள்.

எகிப்தில் மதகுருக்கள்  லினன் மட்டுமே  அணிய வேண்டும் என நெறிகள் இருந்தன. கல்லறை சுவரோவியங்களிலும் சிற்பங்களிலும் லினன் துணிகள்  ஆளி நாரிழைகளிலிருந்து உருவாவதை சித்திரமாக தீட்டி இருக்கிறார்கள்.

கிபி 1922 ல் திறக்கப்பட்ட டூடன் காமன் கல்லறையில், மம்மியை இறுக்கமாக சுற்றி இருந்த, பல நூறு மீட்டர் துணிகள், திரைச்சீலைகள் மற்றும் கைக்குட்டைகளும்  லினன் இழைகளால் செய்யப்பட்டிருந்தது. அத்தனை ஆயிரமாண்டுகளுக்கு பிறகும் அவை எந்த சேதமும் இல்லாமல் இருந்தன,  

2500 வருடங்களுக்கு முன்பான காபுலி என்னும் அம்மோன் குலகுருவின் மகளின் கல்லறையிலும் அப்படியே இருந்தன மம்மியின்  லினன் துணி சுற்றுக்கள். லினன் உற்பத்தி மற்றும் ஆளி சாகுபடி நுட்பங்கள் எகிப்திலிருந்து  மத்திய கிழக்கு பகுதிகளுக்கும் ஐரோப்பாவிற்கும் அறிமுகமானது.

ஆடைகளுக்கான நூலிழைகளின் வரலாறு  பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. சீனாவின் பட்டுப் புழுக்களிலிருந்து, இன்கன் காலத்துக்கு முன்பு வரையிலான (pre-Incan) பெருவின் பருத்தி வரை தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்திருக்கும் சான்றுகளைத்தும்,  தனது தேவைகளை  நிறைவேற்றிக் கொள்ள   ஆதி மனிதன் இயற்கையைப் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியதை காட்டுகின்றன.  ஆதிமனிதனின் முக்கிய கண்டுபிடிப்புக்களில் முதன்மையானவைகளில் லினன் நாரிழைகளும் இருக்கின்றன.

வேட்டைச்சமூகத்தில் தோலாடைகளும், இடம்பெயரும் நாடோடிகளானபோது விலங்கு ரோமங்களிலாலான கம்பளியாடைகளையுமே அணிந்திருந்தவர்கள், ஓரிடத்தில் தங்கி தேவைப்பட்ட உணவுப் பயிர்களை சாகுபடி செய்யத் துவங்கிய காலத்தில், முதன் முதலில் பயிரிட்ட தாவர நாரிழைப் பயிர் ஆளியே.

 பல இயற்கைப் பொருட்களிலிருந்து நூலிழைகள் எடுக்கபட்டதற்கான சான்றுகள் கிடைத்திருப்பினும் அவற்றில் மிக மிக பழையதும் இன்றியமையாததுமாக  லினனே இருக்கிறது 

அகழ்வாய்வுகளில், ஜார்ஜியாவில் 36000 வருடங்களுக்கு முன்பிருந்த, சாயமேற்றப்பட்ட லினன் இழைகள் ஒரு குகையிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. கிபி 80000 த்தை சேர்ந்த ஆளி செடிகளின் தண்டுகள், விதைகள் மற்றும் இழைகள் சுவிஸ் ஏரியினடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன

 துருக்கியின் கிழக்கு பகுதியில் 9000 வருட பழமையான நெய்யபட்ட லினன் துணி மனித எலும்பால் செய்யப்பட்ட  ஒரு ஆயுதத்தின் கைப்பிடியை சுற்றி இருந்தது..இத்தாலியின் தூரின் நகரில் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அடக்க லினன் துணித் துண்டு  இயேசுவின் உடலைக் கல்லறையில் மூடியிருந்த போர்வை என  பல லட்சக்கணக்கானவர்களால் நம்பப்பட்டு வழிபடப்படுகிறது.ஆணி கிழித்த மற்றும் குருதி காய்ந்த தடங்களுடன் இருக்கும் லினனால் ஆன  இந்த புனித உடற்போர்வை இயேசு வாழ்ந்து இறந்த கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கூறப்படுகிறது.   

ஆதிமனிதனின்  ஆளி சாகுபடி இப்போதிலிருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வட ஆப்பிரிக்காவில்  துவங்கி இருக்கலாமென்றும் சில  ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்’

லினன் குறித்த முதல் எழுத்துபூர்வமான குறிப்புகள் கிபி 1450 சேர்ந்த பைலோசின் (pylos)  கற்செதுக்குகளில்  கிடைத்துள்ளன. அவற்றில் லினன் கிரேக்க மொழியில்   லி- நோ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (li-no).. லினனை மிக புனிதமானதாக கருதிய யூதர்கள், இதை  கம்பளியுடன் கலக்கலாகாது என வகுத்திருந்தனர்.

இஸ்ரேலிய பழங்குடிகள் தங்களது கூடாரங்களையும்,  வழிபாட்டுத்தலங்களின் திரைச்சீலைகளையும் லினன் துணிகளில் உருவாக்கியிருந்தார்கள்.

பண்டைய நாகரிகங்களில் நிலத்திற்கருகே வாழ்ந்த அனைவரும்  ஆளி சாகுபடி செய்திருந்தனர், .குறிப்பாக எகிப்தில் 4000 வருடங்களுக்கு  முன்பிருந்தே ஆளி சாகுபடியும் லினன் உற்பத்தியும் இருந்தது.

ஆளி விதை மற்றும் நாரிழை செடிகளின்  சாகுபடி ரஷ்யாவில் கிபி 2000 த்தில் அறிமுகமானது. 

 இந்தியா உள்ளிட்ட உலகின் பல தொன்மையான நாகரிகங்களில்  லினன் ஆடைகள் புழக்கத்தில் இருந்தன பல காப்பியங்களில், வரலாற்று நூல்களில் லினன் நாரிழைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  

பண்டைய இந்திய நூல்களில் லினன், பட்டு, கம்பளி மற்றும் பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளைக் குறிக்க க்ஸௌமா, கௌசியா, அவிகாயோ மற்றும் கர்பசா என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. மிக மென்மையான  லினன் துகுலா என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

ராமனின் தாயார் கெளசல்யை பூஜைகளின் போது லினன் உடைகள் அணிந்திருந்தது, சீதையின் திருமணப்பரிசுகளில் லினன் ஆடைகள் இருந்தது, மணப்பெண்ணை வரவேற்க தசரதனின் மனைவியர் லினன் ஆடைகள் உடுத்தி இருந்தது,,  ராவணனின் பிரேதம் லினன் துணியால் சுற்றப்பட்டு கிடத்தப்பட்டிருந்தது ஆகியவை வால்மீகி இராமாயணத்தில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் செய்கையில் லினன் ஆடைகள் உடுத்தி இருந்தார் என்றும், வங்கம், தாமிரலிப்தி, புண்டரம் மற்றும் கலிங்க நாடுகளிலிருந்து அவருக்கு பட்டு, கம்பளி மற்றும் லினன் ஆடைகள் பரிசாக வழங்கப்பட்டதும் சொல்லப்பட்டிருக்கிறது. கிருஷ்ணர் மஞ்சள் சாயமேற்றப்பட்ட  லினன் துணியாலான இடையாடையை  அணிந்திருந்ததையும் சொல்கின்றது பாரதம்

 கிபி 500 ல் எழுதப்பட்ட அன்றாட வாழ்வின் நியதிகளை சொல்லும் ’க்ருஹ சூத்ர கண்டிகை” குழந்தைகள் கல்வியை துவங்கும்போது சணல் அல்லது லினன் துணியாலான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்கிறது.

 பௌத்தமும் பல்வேறு பிரிவினருக்கான ஆடைகளில் மான்தோல், பட்டு, கம்பளி, மரவுரி, வைக்கோல் மற்றும் லினன் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. காசி மன்னர் 500 லினன் போர்வைகள் புத்தருக்கு பரிசளித்திருக்கிறார்.புத்த துறவிகள் லினன் துணிகளை பரிசாக பெற்றுக்கொள்ள அனுமதி இருந்திருக்கிறது.

 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  பெளத்த நூல்களின் தொகுப்பான ’திவ்ய வதனம்’ லினன் மற்றும் கம்பளி ஆடைகளை பற்றி குறிப்பிடுகிறது. 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கணிக்கப்படும் பழமையான  ’லலித் விஸ்தாரம்’ என்னும் கெளதம புத்தரின் வாழ்க்கை குறித்த சமஸ்கிருத நூலொன்று ’பாண்டு துகுலா’ என்று லினனை  குறிப்பிட்டிருக்கிறது.

 விவசாயமும் ஆடை நூலிழை வணிகமும்  பெரும் பங்காற்றிய மௌரிய சாம்ராஜ்யத்திலும் ஆளி அதிகம் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. அர்த்தசாஸ்திரம்  லினன் நாரிழைகளை நெய்தல், அவற்றின் மிருதுத்தன்மை, சந்தைப்படுத்துதல்  மற்றும் அவற்றிற்கான வரிகள் ஆகியவற்றை குறித்து  விரிவாக  சொல்கிறது.   

ரகுவம்சத்தில் காளிதாசர் லினன் ஆடைகளின் மென்மையை சொல்லி இருக்கிறார். குமார சம்பவத்தில் மண நிகழ்வுகளில் உயர்குடியினர் லினன் ஆடைகளை அணிந்ததை குறிப்பிட்டிருக்கிறார்.

மெகஸ்தனிஸ் இந்தியர்கள் எழுதும் தாளாகவும் லினன் துணிகளை பயன்படுத்தியதையும், யுவான் சுவாங் ஹர்ஷவர்த மன்னர் லினன் ஆடைகள் அணிந்திருந்ததை குறிப்பிட்டிருக்கின்றனர். 

லினன் நாரிழைகள் மட்டுமல்ல, பண்டைய இந்தியர்களுக்கு ஆளி விதையின் மகத்துவமும் தெரிந்திருந்தது.

சுஸ்ருத சம்ஹிதை நீல மலர்களிலிருந்து கிடைக்கும் உமை, பார்வதி, க்ஸௌமா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் ஆளி விதை இருமல் நிவாரணி, ஈரலை பாதுகாக்கும் என குறிப்பிடுகிறது.. மேலும் பச்சிளம் குழந்தைகளை லினன் படுக்கைவிரிப்பில் படுக்க வைப்பதின் நன்மைகளையும் சொல்கிறது சுஸ்ருத சம்ஹிதை. பருத்திக்கு முன்பே ஆளி இந்தியாவில் இருந்திருக்கிறது என்பதற்கு  ஏராளமான சான்றுகள் வேத காலத்திலிருந்தே இருக்கிறது.

மனிதனின் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தங்கள் கரங்களை பதித்திருக்கும் ஏழு தேவதைகள் தூய வெண்ணிற லினன் ஆடைகள் அணிந்திருப்பார்கள் என்கிறது விவிலியம்

1 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தில் மிக உயர்ரக லினன் துணிகள் நெய்யபட்டன  அந்த தரம் இன்றும் வரையில்  தொடருகிறது. ஃபோனிசியர்கள் அயர்லாந்திலிருந்து ஆளி சாகுபடி  முறைகளையும் லினன் உற்பத்தியையும் தங்கள்  நாட்டுக்கு கொண்டு வந்தனர்.

 12ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பாவின் பிற பகுதிகளை காட்டிலும் ஸ்பெயினில் லினன்  மிக அதிகமாக உற்பத்தியானது. 12 ஆம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸும் இத்தாலியும் மேசைவிரிப்புக்களுக்காக அதிகம் லினன் துணிகளை உற்பத்தி  செய்ய துவங்கினர்.அதற்கு முன்பு வரை உயர்குடி விருந்துகளில் திவான்களிலும்  திண்டுகளிலும்,சாய்ந்தபடி அமர்ந்திருந்தனர். பிறகு உயர்ந்த மேசைகளில் நாற்காலிகளில் அமர்ந்து உண்ணும்  வழக்கம் உருவாகி பரவலாக விரும்பட்ட போது மேசை  விரிப்பாக லினன் பயன்படுத்துவது பெரிய கெளரவம் என கருதப்பட்டது.. மேசை விளிம்புகளின் கீழே தொங்கும் லினன் துணிகளை கைகளை துடைக்கவும் உபயோகப்படுத்தினர்.அப்போது உயர்குடியினருக்கான ஆடம்பர அடையாளமாகவே லினன் கைக்குட்டைகளும், மேசைவிரிப்புக்களும், துவாலைகளும் இருந்தன  

15 ஆம் நூற்றாண்டில் லினன் நாரிழைகளை பிரித்தெடுக்கும் நூற்பு ராட்டைகள் வந்தன,அதற்கு 2 நூற்றாண்டுகளுக்கு பிறகு கால்களால் மிதிக்கும் இயந்திரம் வந்தது. 18ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தில் அதிக லினன் உற்பத்தியும் வணிகமும் நடைபெற்ற  நகரமொன்றிற்கு  லினனொபோலிஸ் என்றே பெயர்(“Linenopolis”) . 19 ஆம் நூற்றாண்டில் இயந்திர நூற்பு கண்டு பிடிக்கபட்ட பின்னர் லினன் உற்பத்தி பெருகியது. உள்ளாடைகளிலிருந்து பூத்துவாலைகள் வரை லினனிலேயே தயரானது.இயந்திர நூற்புக்கு  பின்னர், உயர்குடியினருக்கானதாக மட்டும் இருந்த லினன் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்தது.  

20 ஆம் நூற்றாண்டில் தேய்த்து அழகாக மடிக்கப்பட்ட லினன் கைக்குட்டையை சூட் பாக்கெட்டில் நுனி தெரியும்படி வைத்துகொள்வது உன்னத உடையணியும் ஆண்களின் பெருமைக்குரிய வழக்கமாக இருந்தது

பண்டைய பல நாகரீகங்களில் வில்லின் நாண்களும், புத்தக அட்டைகளும் லினொதொராக்ஸ் (linothorax.) எனப்படும் கவசஉடையும் கூட லினன் துணியால் செய்யப்பட்டது. 1923ல் ஜெர்மன் நகரமான பியெல்ஃபெல்டில் (Bielefeld) நாணயத்தாள்கள் லினன் துணியால் உருவாகி இருந்தன. இப்போது அமெரிக்காவின் நாணயத்தாள்கள் 25%  லினன்  75% பருத்தியால் உருவானவை.

லினன் மிகப்பழமையான  நெய்பொருட்களிலொன்று. ஆளி செடிகளின் தண்டுகளிலிருந்து எடுக்கப்படும் இழைகளே லினன் எனப்படுகின்றன.லினம் உசிடாஸிஸிமம் (Linum usitatissimum) .என்பது லினெசி குடும்பத்தை சேர்ந்த ஆளி விதைச்செடி (Flax seed plant)  . ஆளி வடஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா மற்றும் மேற்கு ஐரோப்பாவை தாயகமாக கொண்டது. L. angustifolium எனும் காட்டுப்பயிரிலிருந்து உட்கலப்பின முயற்சிகள் மூலம் பெறப்பட்டது இந்த ஆளி பயிர்.

இதன் அறிவியல் பெயரான  Linum usitatissimum என்பது ’’பல உபயோகங்கள் கொண்ட லினன்’’ என்று பொருள்படுகிறது. கிரேக்க Linon- லினோனிலிருந்தே ஆங்கில லினன் -Linen வந்தது இது இதன் அறிவியல் பெயரான லினம்- Linum என்பதை குறிக்கிறது.  ஆளியின் தண்டுகளில் நேராக அமைந்திருக்கும் லினன் நாரிழைகள் குறித்த சொல்லே பிற்பாடு நேர்கோட்டை குறிப்பிடும் லைன்- Line என்னும் சொல்லானது.

லினன் நாரிழைகள் பருத்தி மற்றும் பிற தாவர இழைகளை காட்டிலும் உறுதியும், நீடித்திருக்கும் இயல்பும், நீளமும் கொண்டது. இதன் இணைப்பெயர்: L. Crepitans. ஆளி பயிர் விதைகளுக்காகவும் நாரிழைகளுக்காகவும் தனித்தனியான கலப்பினங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நடந்த  கலப்பின முயற்சிகளுக்கு பிறகே இருவிதமான ஆளி பயிர்கள் கிடைத்தன

இழைப்பயிர்கள்  இடைவெளி குறைவாக, கிளைகள் அதிகம் வளராவண்னம் நெருக்கமாக   வளர்க்கப்படும். விதைப்பயிர் தாராளமாக நன்கு கிளைத்து மலரும் படி வளர்க்கப்படும். நார்பயிரில் குறைவான விதைகளும், விதை பயிர்களில் முதிராத, தரமற்ற நார்களும் கிடைக்கும்.     நாரிழைக்கான ஆளி உயரமாகவும், எண்ணெய் பயிர் குட்டையாகவும் இருக்கும்.வருடாந்திர பயிரான ஆளி 30 லிருந்து 100 செ மீ உயரம் வரை வளரும் . 

ஆளியின் அடர் பச்சை, காம்புகளற்ற சிறிய இலைகள் மாற்றடுக்கில்  பளபளப்பான தண்டுகளில் அமைந்திருக்கும்.ஒரு செடியில் 80 லிருந்து 100 இலைகள் வரை இருக்கும். .தளர்வான ரெசீம் அல்லது சைம் மஞ்சரிகளில் கொத்துக்கொத்தாக வான் நீலத்தில்  நீண்ட காம்புகளுடன்   ஐந்திதழ்கள் கொண்ட இருபால் மலர்கள் இருக்கும்.வெள்ளை, ஊதா, மற்றும் இளஞ்சிவப்பு மலர்கள் கொண்ட   கலப்பின வகைகளும் ஆளியில் உண்டு.இம்மலர்கள் அதிகாலையில் மலர்ந்து வெயிலேற துவங்கிய சிலமணி நேரங்களிலேயெ வாடி உதிர்ந்துவிடும்.மலரமுது நிரம்பியிருக்கும் இம்மலர்களிலிருந்து அக்குறைந்த காலத்தில் தேனீக்கள் ஒரு ஹெக்டேருக்கு 15 கிலோ வரை தேன் சேகரித்து விடும். இப்படியான ஒரே தாவரத்திலிருந்து பெறப்படும் (unifloral honey) தேன் பல மருத்துவ உபயோகங்கள் கொண்டது.

5 அறைகள் கொண்ட உலர் வெடிகனி, 10 முட்டை வடிவ  பளபளப்பான பொன்னிற எண்ணெய் நிரம்பிய விதைகளை கொண்டிருக்கும்.உண்ணக்கூடிய ஆளி விதைகள் அமெரிக்காவில், ஃப்ளேக்ஸ் விதைகள் (flaxseed)  என்றும்  ஐரோப்பாவில் லின் விதைகள் என்றழைக்கப்படும்(linseed).

. தண்டுகளில்  லினன் நார்கள் மையப்பகுதியை சுற்றிலும் நீளவாக்கில் கற்றைகளாக அமைந்திருக்கும். லினன் நார்கள் தண்டுகளில் உரியத்தில் (Phloem) அமைந்திருக்கும் (bast fibres). லினன் துணிகளின் தரமும் மென்மையும் ஆளி பயிரின் வாழிடம் மற்றும் அறுவடை முறையை பொறுத்து மாறுபடும்.

ஆளி நாரிழைகள்  2-36 இன்ச் நீளமும், 12-16 மைக்ரோமீட்டர்கள் விட்டமும் கொண்டிருக்கும். குட்டையான இழைகள் உறுதியான துணிகளை நெய்யவும்,  நீளமானவை மிருதுவானவற்றை நெய்யவும் பயன்படுகின்றன.

ஆளி எல்லாவித நிலங்களிலும், வளரும் இவற்றிற்கு மிகக்குறைந்த அளவே உரங்களும் நீரும்  தேவைப்படும்..பயிரிடபட்ட நிலத்தில் சத்துக்கள் எல்லாம் ஆளி உறிஞ்சிவிடுவதால் பின்னர் பல்லாண்டுகளுக்கு நிலம் தரிசாகவே விடப்படும்..ஒரு  நிலப்பகுதியில்  ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் ஆளி சாகுபடி செய்யப்படுவதில்லை. குறைந்த பட்சம் 7 வருட இடைவெளியில் ஆளி பயிரிடுகையில் மட்டுமே  நல்ல மகசூல் கிடைக்கிறது 

அதிக மனித உழைப்பை கோரும் ஆளி சாகுபடி 100 நாட்களில் முடிந்துவிடும், மார்ச் ஏப்ரலில் விதைக்கப்பட்டு, தண்டு பழுத்து மஞ்சள் நிறமாகும் ஆகஸ்ட் மாதத்தில் அறுவடை செய்யப்படும்.பெரும்பாலும் கைகளால் நிலத்தின் மட்டதுக்கு வெகு அருகிலிருக்கும் அடித்தண்டு கைகளால் அறுக்கப்படும்.

அறுக்கப்பட்டபின் கட்டைகள் மீது செடிகளை மெல்ல  அடித்து உதிர்க்கும் முறையில் விதைகள் பிரிக்கப்படும். நார்ச் செடியில் விதை முற்றும் முன்பே அறுவடை நடக்கும்.

பின்னர் இலைகளும் உதிர்க்கப்பட்டபின்னர்,  தண்டுகளில் நார்களை ஒன்றுடன் பிணைத்திருக்கும் பெக்டின் என்னும் வேதிப்பொருளை பிரித்தெடுக்க சில வாரங்கள் அவை ஓடும் நீரில் அல்லது தொட்டிகளில், குட்டைகளில் தேங்கி இருக்கும் நீரில்  அமிழ்த்தியோ அல்லது பனிநீரில்  நனையவோ செய்யப்படுகிறது  சூழலில் நிறைந்திருக்கும் பாக்டீரியாக்கள் பெக்டினை சிதைத்து நார்களை தளர்த்தி பிரிக்கின்றன. சூழல் மாசு குறித்து கவலையற்றவர்கள்    சோடா உப்பு மற்றும் ஆக்ஸாலிக் அமிலம் ஆகிய வேதிப்பொருட்களை உபயோகித்தும் நார்களை பிரிக்கிறார்கள்.

 மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் மாலையிலிருந்து அதிக பனி பொழிவும் மிதமான பகல் வெப்பமும் இருக்கும் காலங்களில்  பனிநீரில் நனைய வைத்து ஆளி தண்டுகளிலிருந்து நாரிழைகள் பிரித்தெடுக்கப்படும். (Dew retting). சுமார் 8 வாரங்கள்   பெரும் புல்வெளிகளில் நனைய வைக்கப்டும் ஆளி தண்டுகள், சீரான நார் பிரிதலுக்காக  வாரம் ஒரு முறை புரட்டி போடப்படும். பனியில் நனைந்த தண்டுகளில் இருந்து கிடைத்த நூலிழைகளால் நெய்யப்படும் லினன் துணிகள் சாம்பல் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும்.  

அடுத்ததாக இரு உலோக உருளைகளின் நடுவில்  ஊற வைத்த ஈரமான தண்டுகளை செலுத்தி நார்கள் கவனமாக தண்டின் பிற சதைப்பகுதியிலிருந்து விடுவிக்கப்படும். இது பெரும்பாலும் ஆகஸ்ட் டிசமப்ர் மாதங்களில் நடைபெறும் பிறகு பிரித்தெடுக்கப்பட்ட நார்கள் வெயிலில் காய வைக்கப்பட்டோ அல்லது வெப்பமாக்கபட்டோ உலரவைக்கப்பட்டு நெசவுக்கு தயாராக்கப்படுகின்றது.  

பெருகி வரும் லினன் சந்தையின் போட்டிகளுக்கேற்ப பல நாடுகளில் பிரத்யேக சாகுபடி மற்றும் அறுவடை முறைகளை கையாளுகிறார்கள்.பயிர் முற்றுவதற்கு முன்னரே அறுவடை செய்கையில் இளம் தண்டுகளின் நார்கள் மிக மிருதுவாக இருப்பதை அறிந்துகொண்டு, விதைகள் உருவாகும் முன்பே அறுவடை செய்யும் முறையை இன்று வரை கையாளும் அயர்லாந்தில் ஆளி விதைகள் இறக்குமதிதான் செய்யப்படுகின்றன.

லினன் துணி உற்பத்தியின்  போது வீணாகும் துண்டு லினன் இழைகளை காகிதமாக்கி பென்சில்வேனியாவின் எஃப்ரடாவில்  உபயோகிக்கிறார்கள்.

லினன் இழைகள் குளிர்ச்சியும் மென்மையுமானவை. துவைக்க துவைக்க இவை மேலும் மிருதுவாகும். இழுவைத்தன்மை குறைவானதால் நாளடைவில் இழைகள் நீண்டு விடாமல் இருக்கும். இவை பருத்தியை காட்டிலும் மூன்று மடங்கு உறுதியானவை. லினன் துணிகளை பூச்சி அரிக்காது, இவற்றில் புழுதி படியாது, கிருமிகள் தங்காது  குளிர்ச்சியானது,  

பருத்தி துணிகளை போல் நீரை உறிஞ்சி எடை அதிகமாகாமல், ஈரத்தை விரைவில் உறிஞ்சி,  விரைவில் ஆவியாக்கும் தன்மை உடையது லினன். இந்த காரணத்தால் தான் பாய்மரக்கப்பல்களின் பெரும் பாய்கள்  கெட்டியான லினன் படுதாக்களால் உருவாக்கப்பட்டிருந்தன.

லினன் துணிகள்  கோடையில் உடலை குளிர்ச்சியாகவும்,  குளிரில் வெப்பமாகவும் வைக்கும். கித்தான், தர்ப்பாய், கோணி, விரிப்பு முதலிய முரட்டுத்துணி முதல் கைக்குட்டை, சட்டைத்துணி முதலிய மெல்லிய வகை துணி வகைகள் வரை லினனால் தயாரிக்கப்படுகிறது.லினன் நாரிழைகளின் இடையிடையே காணப்படும்  நுண்முடிச்சுக்களே இவற்றை பிற தாவர இழைகளிலிருந்து வேறுபடுத்துகிறது இம்முடிச்சுக்களே லினனின் பிரத்யேக தரத்திற்கும் காரணமாக இருக்கிறது. 

இயற்கை லினன் தந்த, சாம்பல் கலந்த வெண்மை மற்றும் பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும் சலவை (bleach) செய்யப்பட்ட  லினன்  பிரகாசமான தூய வெண்ணிறம் கொண்டிருக்கும்

முறையாக உருவாக்கப்பட்ட லினன் துணிகள்  உடலின் வியர்வையை உடனே உறிஞ்சிக்கொள்ளும் இதனால்தான் இது லாஞ்சரி (lingerie) உள்ளிட்ட பெரிதும் விரும்பப்படும் உள்ளாடைகளை உருவாக்க பயன்படுகிறது. விரைப்பான நூல் இழைகளால் உருவாக்கப்படுவதால் லினன் ஆடைகள் உடலுடன் ஒட்டிக்கொள்ளும் சாத்தியங்கள் மிகக் குறைவு.   

லினன் நார்களின் இழுவை தன்மை  குறைவு என்பதால் திரும்ப திரும்ப ஒரே இடத்தில் லினன் ஆடைகள் மடிக்கப் படும்போது அந்த இடங்களில் உடையும், அதாவது கிழியும் சாத்தியம் உள்ளது

கைகளாலும்,  சலவை இயந்திரங்கள்கொண்டும் இவற்றை சலவை செய்யலாம், உலர் சலவையும் நீராவி சலவையும் செய்யலாம். துவைக்கயில் கொதிநீர் உபயோகிக்க கூடாது, லினன் துணிகளை முறுக்கி பிழியக்கூடாது. இவற்றை வெயிலிலல்லாது  நிழலில் உலர்த்துதல் மேலும் நல்லது.

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆளி பயிராகிறது. சத்து நிறைந்த ஆளி விதைகள் உண்ணப்படுகின்றன. ஆளிவிதையின்  எடையில் 36% இருக்கும் ஆளி விதை எண்ணையும் பல பயன்களை கொண்டது.   ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கி உள்ளது. ஆளி விதையின் நார்ச்சத்து வால்நட்டில் இருப்பதை விட 5 மடங்கு அதிகம்.

ஆளி விதையின் உமியில் இருக்கும்  எண்ணெய் உற்பத்தியில் கிடைக்கும் ஆளி கோந்து (Flaxseed gum (FG)) திரவ உணவுகளை அடர்த்தியாக்க பயன்படுகிறது.  சமீபத்திய  ஆய்வுகள் நீரிழிவு மற்றும் இதயநோய்களுக்கு  ஆளி விதை கோந்து நல்ல மருந்தாக  இருக்கும் என்கிறது

ஆளி விதை எண்ணெய் உணவில்லாத பிற பல உபயோகங்களையும் கொண்டுள்ளது இவை  பறவைகளுக்கான  உணவாகவும்  பயன்படுகிறது. .ஹாலந்தில் உற்பத்தியாகும் ஆளி விதைகள் உயர்தரமானவை.  

லினன் துணிகளின் உபயோகங்கள் கடந்த  30 வருடங்களில்  பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.  பருத்தியுடன், பட்டுடன், பிற செயற்கை இழைகளுடன் லினன் கலக்கப்பட்டு ஆடைகள் உருவாக்கப்படுகின்றன. மிகப்பிரபலமான லினன் பைனாப்பிள் என்னும் நூலிழை அன்னாசி செடியின் இலை நார்களை  லினன் நார்களுடன் கலந்து தயாரிக்கப்படுவது.

 உலகின் மிக மிருதுவான உயர்தர லினன் பெல்ஜியத்திலிருந்து கிடைக்கிறது இவை மேசை விரிப்புகள் பூந்துவாலைகள் மற்றும்  கைக்குட்டைகளுக்காக உபயோகமாகிறது.இத்தாலியும் உயர்தர லினன் துணிகளை உருவாக்குகிறது

ஐரிஷ் லினனும் உறுதியானதுதான்  என்றாலும் மாறுபடும் காலநிலைகளால் தரம் எப்போதும் ஒரே போல் இருப்பதில்லை என்னும் குற்றச்சாட்டு அங்கிருந்து பெறப்படும் லினன் துணிகள் மீது பொதுவாக வைக்கப்படுகிறது

குறைந்த தரமுள்ள  லினன் துணிகள்  ரஷ்யாவிலிருந்தும்,  மத்திம ரகங்கள், பால்டிக் பிரதேசங்களிலிருந்தும்  கிடைக்கின்றன.

ஜெர்மனி பிரான்ஸ் மற்றும் செக் குடியரசு ஆகியவை குறைந்த அளவில் லினனை தயாரித்து,  அவர்களின் சொந்த தேவைக்காக மட்டும்  உபயோகப்படுத்துகிறார்கள்

 கைக்குட்டைகள், அன்றாடம் அணியும் உள்ளாடைகள், மேசை விரிப்புக்கள், கோடைக்கால ஆடைகள் என்று லினன் இப்போது உலகெங்கிலும்  பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. எனினும் லினன் என்னும்  பெயர் பருத்தி, சணல் துணிகளிலும்  பொறிக்கப்பட்டிருப்பதால்  கவனமாக தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. முன்பு லினனால்  மட்டுமே உருவான  பல உடைகள்  இப்போது பெயரில் மட்டும் லினனை கொண்டிருக்கின்றன என்பதையும்  கவனிக்க வேண்டியிருக்கிறது.லினனாக்குதல்  (linenising) என்பது காகிதம், துணி அல்லது பருத்தியை லினனின் இயல்புக்கு கொண்டு வருவதை குறிக்கின்றது.  அதாவது போலி செய்வது . 

 2018 ன் சர்வதேச வணிக புள்ளிவிவரங்கள் தற்போதைய லினன் ஏற்றுமதியில்  முன்னணி நாடு சீனா ($732.3 million) தொடர்ந்து இத்தாலி ($173.0 M ), பெல்ஜியம் ($68.9 M ) மற்றும் இங்கிலந்து ($51.7M ) என்கிறது.

 ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் 1849 ல் எழுதிய ’’தி ஃப்ளேக்ஸ்’’ என்னும் தேவதைக்கதை ஆளியிலிருந்து நாரிழைகள் பெறப்படுவதை மிக அழகாகச் சித்தரிக்கிறது. நீல மலர்களுடன் வயலில் நின்றிருந்த தான் எப்படி ஒரு புத்தகத்தின் தாளாக மாற்றமடைந்து மனிதனுக்கு அறிவைத் தந்து கொண்டிருக்கிறேன் என்று ஒரு ஆளிச்செடி வயலிலிருந்து தான் பயணித்த சாலைகளையும், வந்து சேர்ந்த நூற்பாலையையும், பின்னர் புத்தகமானதையும்  சொல்வதுபோல் எழுதப்பட்ட இந்த கதை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குமானது.

வேருடன் பிடுங்கப்பட்டு, நீரில் அமிழ்த்தி, அடித்து, கசக்கி ,பிழிந்து நாரெடுத்து, இயந்திரங்களில் சிக்கி நூலாக நெய்யப்பட்டு பின்னர் துணியாகி, தாளாகி இறுதியில் அறிவை அளிக்கும் நூலாக ஆளிச்செடி மாறி இருப்பதை சொல்லும் இந்த கதையில் நமக்கும் பல படிப்பினைகள் இருக்கிறது.

1.. Flinders Petrie archaeologist – archaeology (age-of-the-sage.org)

2.Hans Christian Andersen: The Flax (gilead.org.il)

3. ஆளி பயிரின் வரலாறு தோற்றம், பரவல், சாகுபடி,  பயன்கள், லினன் உற்பத்தி  குறித்து  விரிவாக  அறிய : The Biology of Linum usitatissimum L. (Flax) – Canadian Food Inspection Agency (canada.ca)

நூடுல்ஸ்

1980 களில் பள்ளி இறுதியில் படிக்கையில் , சிறு மஞ்சள் நிற பளபளக்கும் உறையுடன் இருந்த  பாக்கெட்டுகளை மாணவிகளுக்கு இலவசமாக ஒரு  வேனில் வந்தவர்கள் கொடுத்தது நினைவிலிருக்கிறது. அதிலிருந்த ஒரு கட்டியை வெறும் கொதிநீரில் போட்டால் 2 நிமிடங்களில்  சுவையான உணவாகிவிடும் என்றது ஆச்சரியமாக இருந்தது. உடன் ஒரு சிறு வெள்ளி நிற உறையில் மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. 2 நிமிட மேஜிக் என்று எங்களுக்கு சொல்லப்பட்ட அந்த சொற்றொடர் ஒரு மந்திரம் போல வெகுநாட்களுக்கு மனதில் கிளர்ச்சியூட்டிக் கொண்டிருந்தது

 பள்ளிக்கூட கலையரங்கில் பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து கண் முன்னே சமைத்து  மாணவர்களுக்கு சுவைத்து பார்க்க கொடுத்த நூல் நூலான அந்த உணவின் சுவையும் மனமும்  வித்தியாசமாக, விநோதமாக ஆனால் மிகவும் பிடித்தமானதாக  இருந்தது. வீட்டில் அதை நாங்கள் சுயமாக செய்தும் பார்த்தோம் 

தொலைக்காட்சி பெட்டிகளும் மெல்ல மெல்ல வீடுகளில் வரத்துவங்கி அதிலும்’’ அம்மா பசிக்குது’’ என்னும் குழந்தை அழகாக ஆவி பறக்கும் நூடுல்ஸ் சாப்பிடுவதும், அம்மாக்கள் 2 நிமிடத்தில் உணவை தயார் செய்வதும் அமிதாப்பச்சன் தன் கம்பீரக் குரலில் மேகி நூடுல்ஸை குறித்து விதந்தோதியதுமாக  மளமளவென்று மேகி நூடுல்ஸ் உபயோகம்  பரவலாகியது.

காலி மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சேர்த்து கொடுத்தால் பரிசுகள், ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஆதர்ச நடிகர் அல்லது  கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் என சிறுவர்களின் உலகிலும்  இடம்பிடிக்க துவங்கியது மேகி 

ஆனாலும் இன்றைக்கு போல இத்தனை அதிகம் புழக்கத்தில் இல்லை.  ஹோட்டல்களுக்கு போவதே குற்றம் என்னும் மனப்பான்மை கொண்டிருந்த, ’’குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு சூடாக, புத்தம் புதிதாக வீட்டில் செய்து தரும் பலகாரங்கள் தான் தேவை’’ என்று கண்டிப்பாக சொல்லும் முந்தின தலைமுறை பெரியவர்கள் வீடுகளில் இருந்த காலம் ஆகையால் அவர்களை தாண்டி மரபான வீட்டு சமையலை முற்றிலும் புறக்கணிக்க முடியாமல், அங்கும் இங்குமாக மத்தியதர குடும்பங்களில் இடம்பிடிக்க  துவங்கியிருந்த நூடுல்ஸை, நகரமயமாக்கலும்,  வேகம்பிடித்த வாழ்க்கையும் விரைவாக உணவு மேசையில் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தது. 

மேகி நூடுல்ஸை போலவே மேகியின் வரலாறும் மிகச்சுவையானது தான், 1872 ல் சுவிட்ஸர்லாந்தின் ஜூரிச்சுகு அருகிலிருந்த கோதுமை வயல்களால் சூழப்பட்டிருந்த அழகிய சிறு கிராமத்தில்   தனது தந்தையின் மர சுத்தியல் தயாரிக்கும் தொழிற்சாலையின் பொறுப்புகளை முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தார் ஜூலியஸ் மேகி. அப்போது தொழிற்புரட்சி துவங்கி இருந்த காலம் ஆகையால் அவரது தொழிற்சாலை உள்ளிட்ட பல பணியிடங்களுக்கு பெண்கள் அதிகம்  வேலைக்கு வர தொடங்கினார்கள்.1     ஜூலியஸ் மேகி  தனது தொழிற்சாலையில் கோதுமை மாவையும் தயாரிக்க துவங்கினார். 

 புதிய உணவு வகைகளை தயாரிப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்த மேகி,  1863லேயே உணவுக்கு கூடுதல் சுவை அளிக்கும் மசாலா பொடிகளை தயாரித்தார். பின்னர் 1886ல்  பொடித்த பயறு வகைகளையும் சூப்களையும் தயாரித்திருந்தார். வேலைக்கு புதிதாக வரத்துவங்கி இருந்த, அதற்கு முன்பு வரை விரிவான சமையலுக்கும் சத்தான உணவுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டிருந்த பெண்கள் அதிக நேரம் தொழிற்சாலையிலும் மிக்குறைந்த நேரம் சமையலறையிலும் இருக்க நேர்ந்தையும் அவர் கவனித்தார்,  அவர்களுக்காக எளிமையாக, விரைவாக சமைக்க்ககூடிய விலை மலிவான  சுவையான சத்தான  உணவை  தயாரிக்க முனைந்தார் மேகி.

 சமையலுக்கு என மிகக் குறைவான நேரமே பெண்களுக்கு கிடைப்பது,  நாடு முழுவதும் மிகப் பொதுவான பிரச்சனையாக ஆனபோது,  சுவிஸ் பொது மக்கள் நலனுக்கான அமைப்பும்,   ஜூலியஸ் மேகியிடம்  விரைவாக சமைக்கும் படியான சைவ உணவு வகைகளை  தயாரிக்க சொல்லி கேட்டுக்கொண்டது.  

மேகி பல கட்டங்களாக முயற்சி செய்து பின்னரே ’’மேகி நூடுல்ஸை’’ கண்டறிந்தார். துவக்கத்தில் சின்ன சின்ன கட்டிகளாக  கோதுமை மாவில் செய்யபட்டு,  முன்பே பாதி வேகவைக்கபட்டு உலர வைக்கப்பட்ட மேகி நூடுல்ஸ் சிவப்பு காகிதங்களில் சுற்றப்பட்டு ஒரு விளையாட்டு பொருளை போல சந்தைப்படுத்தப்பட்டது. பின்னர் அதற்கான மசாலாவும் மேகியால் கொடுக்கப்பட்டபோது அதன் விற்பனை அதிகரித்து பலரும் விரும்பி வாங்க துவங்கினர்.   

1890ல்  மேகி  நூடுல்ஸ் உள்ளிட்ட தனது 18 முக்கியமான உணவு கண்டுபிடிப்புக்களை முறையாக பதிவு செய்த மேகி அதன் மூலம் போலிகள் சந்தைக்கு வராமாலிருப்பதையும் உறுதி செய்தார்.  முதன் முதலாக விளம்பர பலகைகளை கடைகளுக்கு முன்னால் வைத்த உலகின் ஒருசிலரில் மேகியும் ஒருவர்.

’’கேட்டு வாங்குங்கள் மேகியை’’ என்னும் வாடிக்கையாளர்களை தூண்டும் சொற்றொடரையும் அவரே முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். தெருமுனைகளில் இலவசமாக மேகி கட்டிகளை கொடுப்பதும், விற்பனை செய்யப்பட்ட கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் விலையுயர்ந்த பரிசுகளை கொடுப்பதுமாக சுவாரஸ்யமான விளம்பரங்கள் மூலம் மேகி நூடுல்ஸின் விற்பனை வைக்கோலில் நெருப்பாக மள மளவென்று பற்றிக்கொண்டது. அவர் அறிமுகபடுத்திய க்யூப்  நூடுல்ஸ் கட்டிகள்   ஒருசில வருடங்களிலேயே பிக்காஸோ  ஓவியங்களில் இடம்பெறும் அளவுக்கு  பிரபலமாகின.

நெஸ்லேவுடன் மேகி நிறுவனம் 1947ல் இணைந்த பின்னர் இந்தியாவுக்குள் 1983’ல்  மேகி தயாரிப்புக்கள் நுழைந்தன. அப்போது நகரங்களில் மட்டும்  பிரபலமாயிருந்த மேகி நூடுல்ஸ், கிராமப்புற சந்தைகளில் நுழைவதற்காகத்தான் பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களில் அவை இலவசமாக அளிக்கப்பட்டன.

  இப்போது நூடுல்ஸ் பெருநகரங்களிலும்,  குக்கிராம அண்ணாச்சி கடைகளிலும் எப்போதும் கிடைக்கும் ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது. எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில்  அவர் சென்றிருந்த ஒரு மலைக்கிராமத்தில் பழங்குடி இனத்தவர் வீடொன்றில் தொலைக்காட்சி பார்த்து கொண்டு குழந்தைகள் ஈயக் கிண்ணங்களில் மேகி நூடுல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்ததை குறிப்பிட்டிருந்தார். 

இன்று  இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் மேகியின் பலவிதமான தயாரிப்புக்கள் சந்தை படுத்தப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர், இந்தியா, பிலிப்பைன்ஸில் மேகியின் உடனடி நூடுல்ஸ் மிக பிரபலம்.

2019 ன் உலகளாவிய  மேகி உள்ளிட்ட அனைத்து உடனடி நூடுல்ஸ் சந்தை மதிப்பு 4400 கோடி அமெரிக்க டாலர்கள்!.

சிறு முடிச்சு என பொருள் படும் Nudel என்னும் ஜெர்மானிய சொல்லிலிருந்தே ஆங்கிலத்தின் noodles உருவானது வியட்நாமில் ’போ’ நேபாளத்தில் ’சவ் சவ்’ இந்தியாவில் ’சேவை’ என பல பெயர்களில், பல வகைகளிலும் கிடக்கும் இந்த நூடுல்ஸ் சுவையையும், பிரபல்யத்தையும் நாமறிந்திருக்கிறோம் என்றாலும், இதன் தோற்றம் மற்றும் வரலாறு குறித்த தரவுகள் தெளிவாக இல்லை. சீனாவும் இத்தாலியும் நூடுல்ஸ் தங்கள் நாட்டில்தான் உருவானது என்று இன்று வரை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சீனாவின் ஹன் வம்ச ஆட்சியின் போது புதிய உணவு வகைகளுக்கான தேடலும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது. எனவே சீனாவிலிருந்து இவை தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் அகழ்வாய்வுகள் ஹன் ஆட்சிக்கு முன்பு,  இன்றிலிருந்து 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நூடுல்ஸ் இருந்திருக்கிறது என்பதை சொல்லுகின்றது

1999’ல் சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில்(Qinghai Province) அகழ்வாய்வில் நூடுல்ஸும், அதன் கிண்ணமும் கண்டெடுக்கபட்டு, ரேடியோ கார்பன் காலக்கணக்கீட்டில்  அவை, 4 ஆயிரம் வருடங்களுக்கு முன்பான சியா வம்ச (Xia Dynasty) ஆட்சியின்போது இருந்திருந்ததை தெரிவித்தது.அவை புல்லரிசி யில் செய்யப்பட்டிருந்தன.

நூடுல்ஸ் தங்கள் நாட்டின் பாஸ்தாவிலிருந்து வந்ததாக சொல்லும் இத்தாலியில் அவர்கள் வாழ்வோடு இரண்டற கலந்த உணவாகவே   பாஸ்தா இருக்கின்றது.

மிகச்சிறிய சோழிகளின் அளவிலிருந்து பெரிய அட்டைகளின் அளவிலும் பாஸ்தாக்கள் அங்கு புழக்கத்தில் இருக்கிறது.  மார்க்கோ போலோ இத்தாலிக்கு பாஸ்தாவை அறிமுகப்படுத்தினார்  என்னும் சில வரலாற்றாய்வாளர்கள் கருத்துக்கு இத்தாலியர்கள்  கடுமையான மறுப்பு தெரிவிக்கின்றனர். மார்க்கோ போலோவுக்கு முன்பே இத்தாலியில் பாஸ்தாவும் நூடுல்ஸும் இருந்ததாக சொல்லப்படுகிறது

அரேபியர்கள் தான் இத்தாலியில் குச்சி குச்சியான பாஸ்தாவை எண்ணெயில் பொரித்தெடுத்த நூடுல்ஸின் முன்வடிவமான இட்ரேயா (‘itriyah’) வாக  அறிமுகப்படுத்தினார்கள் என்னும் கருத்தும்  இங்கு உண்டு

ஜப்பானுக்கு நூடுல்ஸ் சீனாவில் இருந்துதான் வந்தது. ஜப்பானின் தேசிய உணவென்று சொல்லப்படும் அளவுக்கு பிரபலமான ராமன் நூடுல்ஸ் ஜப்பான் கலாச்சாரத்தோடு ஒன்றியது. ஜப்பானின்  ராமன்  நூடுல்ஸை ஷூ லேஸ் ஆக உபயோக்கிக்கலாம் என்று  சீனாவில் வேடிக்கையாக சொல்லப்படும்

சீனாவிலிருந்துதான் நூடுல்ஸ் தோன்றியிருக்கும் என்று பொதுவாக நம்ப படுவதற்கு காரணம், கிடைத்திருக்கும் அகழ்வாய்வு ஆதாரங்கள்தான். ஒருவேளை இத்தாலியிலிருந்து எதிர்காலத்தில் ஆதாரங்கள் கிடைக்கலாம்.  

வடிவம், உருவாக்கும்  மூலப்பொருள், சமைக்கப்படும் விதம், சேர்க்கப்படும் மசாலாக்கள் இவற்றின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான வகை நூடுல்ஸ்கள் சீனாவில் இருக்கின்றன. ரிப்பன்களாகவும், தலைமுடி அளவுள்ள நூலாகவும், தாள்களாகவும் பற்பல வடிவங்களில்  வண்ணங்களில் நூடுல்ஸ் கிடைக்கிறது.

சீனாவில் சூடாக மட்டுமல்ல குளிர்ந்தும் நூடுல்ஸ் உண்ணப்படுகின்றது. சீனாவின் லெங் டாவோ (Leng tao)  நூடுல்ஸ் பனிக்கட்டியைபோல குளிர்ந்து பல்லை கிடுகிடுக்க செய்யும். சீனாவின் அனைத்து நூடுல்ஸ்களும் ஐந்து விதமான விலங்கு மற்றும் 8 வகையான தாவர பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன 

பண்டைய சீனாவில் டேன்டேன் நூடுல்ஸ் (dandan noodles) தெருத்தெருவாக கொண்டு வரப்பட்டு, வீட்டு வாசலிலேயே விற்கப்பட்டிருக்கிறது. விற்பவர் தோளில் அடுப்பும் பானையில் நீருமாக வந்து வீட்டு வாசலில் டான்டானை சமைத்தே தந்திருக்கிறார். இந்த சிறப்பான வாடிக்கையாளர் சேவையினால், இன்றும் டான் டான் நூடுல்ஸ் சீனர்களின் பிரியத்துக்குரியதாக இருக்கிறது 

இன்னும் பல வேடிக்கையான நாட்டுப்புற கதைகளை அடிப்படையாக கொண்ட நூடுல்ஸ்களும் சீனாவில் இருக்கின்றன. அண்ணன் தயவில்    வாழ்ந்துகொண்டிருந்த தம்பி ஒருவனுக்கு விதம் விதமாக அண்ணி ஒருத்தி சமைத்து கொடுத்த அசைவ நூடுல்ஸ்களை சாப்பிட்டு தேர்வில் வெற்றி பெற்ற  கொழுந்தனின் கதையினால்  அந்த நூடுல்ஸ் வகை இன்றும் அண்ணி நூடுல்ஸ் என்றே அழைக்கப்படுகிறது. .(sisiter in law noodles) 

அதைப்போலவே அசைவ வகைகளை சேர்த்து அன்னையர்கள் புதுவிதமான   நூடுல்ஸை மகன்களுக்கு கொடுத்தும், மகன்கள் தேர்வில் தோல்வியடைந்ததால் அந்த  நூடுல்ஸ் வகை இன்றும் ’’வெட்கப்படும் மகன் நூடுல்ஸ்’ என்ற பெயரில் சந்தையில் இருக்கிறது. minced noodles

ஒரு நூடுல்ஸ் கடைக்காரர். தனது நெடுநாளைய வாடிக்கையாள நண்பருக்கு உடல்நலமில்லாமல் இருக்கையில் செய்துகொடுத்த வினிகரும் குறுமிளகும் சேர்த்த காரமான நூடுல்ஸ் அவர் உயிரை காப்பாற்றியதால்  அது ’’ நெடுநாள் நட்பு நூடுல்ஸ்’’.மிக மெலியதாக இருப்பது ’டிரேகன் தாடி நூடுல்ஸ், இவற்றோடு ரிப்பன்களாக சீவியது, கைகளில் உருட்டியது என பல்லாயிரம் வகைகள் அங்கு இருக்கின்றன இன்னும் புதிய வகைகளும் கண்டு பிடிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.

1850 வரை சீனாவில் கைகளால் மட்டுமே செய்யப்பட்டு கொண்டிருந்த நூடுல்ஸ் அதற்கு பின்னரே இயந்திரங்களால்  உருவாக்கப்பட்டன. உலகின் அதிக நூடுல்ஸ் உண்பவர்களும் சீனர்கள் தான்.

அதிகரித்துக்கொண்டே வரும் சீனாவின் நூடுல்ஸ் உற்பத்தி மற்றும் நுகர்வின் புள்ளி விவரங்கள் வியப்பேற்படுத்தும். 2007 லிருந்து 2012, வரையில் சீனாவின்  நூடுல்ஸ் சந்தை 8.6  பில்லியன் யுவான் களிலிருந்து  20.26 பில்லியன் யுவான்களாக  உயர்ந்தது. 2013’ ல் உலகின் மொத்த உடனடி நூடுல்ஸ் நுகர்வான  105.59 பில்லியன் பாக்கெட்டுகளில் சீனாவின் பங்கு மட்டும் 46.22  பில்லியன் அதாவது  ஒரு தனி நபருக்கு மட்டும்  34 பாக்கட்டுக்கள்.

நூடுல்ஸ் தானியவகை உணவாதலால் உடலுக்கு தேவையான் ஆற்றல் அதிலிருக்கும் ஸ்டார்ச்சில் இருந்து கிடைக்கிறது.மேலும் இதில் சிறிது புரதமும், பாஸ்பரஸ் செலினியம் போன்றவைகளும் உள்ளன. ஆனால் உப்பு தேவையான அளவுக்கும் மிகக்கூடுதலாக இருக்கும். 18 வயதுக்கு குறைவான சீன இளைஞர்களுக்கு அதிகம் ரத்த கொதிப்பு இருப்பதாக சொல்லும் சமீபத்திய ஆய்வுகள் நூடுல்ஸை நேரடியாக  குற்றம் சாட்டுகின்றன

மியான்  (Mien)  என பொதுவாக அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான வகை  சீன நூடுல்ஸ்கள் கோதுமை, கோதுமை மாவை வெண்மையாக்கிய மைதா, அரிசி மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றது கோதுமை மாவில் முட்டை சேர்த்ததும் சேர்க்காதமாக இரு வகைகள் இருக்கிறது. பாசிப்பயறில் இருந்து உருவாக்கப்படும் நூடுல்ஸ் நிறம் இல்லாமல் கண்ணாடி போல் இருக்கும். வழுவழுப்பான இந்த கண்ணாடி நூடுல்ஸ்கள்   சூப்களில் சேர்க்கப்படும்  

 6 வருடங்களுக்கு முன்னால் (2014’ல்)  நெஸ்லேவின் மேகி நூடுல்ஸில் காரீயமும் மோனோசோடியம் குளுட்டமேட் என்னும் ஆபத்தான சேர்மமும் அதிகமாக இருப்பது உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கண்டறியப்பட்ட போது நெஸ்லே நிறுவனமே கொதிநீரில் இடப்பட்ட நூடுல்ஸை போலானது

’லக்னோவில் ’மோனோசோடியம் குளுட்டமேட் சேர்க்கப்பட்டு இருக்கவில்லை’’ என்று அறிவிக்கும் உறையுடன் இருந்த  மேகி நூடுல்ஸின் ஆய்வக சோதனைகள் மோனோ சோடியம் குளுடமேட்டை கண்டறிந்தபோது முதல் அதிர்ச்சியும், ஆயிரம் மடங்கு அதிகமாக காரீயம் இருக்கிறது என்றபோது அடுத்த அதிர்ச்சியும் நாடு முழுவதும் உண்டானது

நெஸ்லே அப்போது பிரச்சனையின் தீவிரத்தை முழுதாக அறிந்து கொண்டிருக்கவில்லை. விற்கப்பட்ட மேகி பாக்கெட்டுகளை  திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் தீர்ப்பை நெஸ்லே அலட்சியமாக எடுத்துக் கொண்டு, மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று மட்டும் சொல்லிவிட்டு  3 வாரங்கள் அமைதியாக இருந்தது 

பல மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு  மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட போதுதான் நெஸ்லே விழித்துக்கொண்டு ’’இவற்றில் ஆபத்தில்லை தான் ஆனால் நாங்கள் திரும்ப எடுத்துக் கொள்கிறோம்;; என்று சொல்லி விற்கப்பட்ட  சுமார் 27 ஆயிரம் டன் மேகி நூடுல்ஸ்களையும் திரும்ப எடுத்துக் கொண்டது. அவையனைத்தும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாக உபயோகப்படுத்தப்பட்டன

குறுகிய கால இடைவெளிக்கு பின்னர் மேகி மீண்டும் சந்தைபடுத்த பட்டபோது, காரீயத்தின் அளவு குறைக்கப்பட்டு,  பாக்கட்டுக்களின் உறையில் இருந்த  ’’மோனோசோடியம் குளுட்டமேட் சேர்க்கப்படவில்லை’’ என்னும் வாக்கியம் நீக்கப்பட்டிருந்தது.

நார்ச்சத்தும் வைட்டமின்களும் நிறைந்த முழுதானியங்களிலிருந்தும் நூடுல்ஸ் தயாரிப்பது உடலுக்கு தேவையான அதிக ஊட்டசத்துக்களை அளிப்பதால் இப்போது அவற்றையும் தயாரிக்க துவங்கி இருக்கிறார்கள் .

எனினும் முழுதானியங்களின் சத்துக்கள் நிரம்பியுள்ள உமி, தவிடு போன்றவை நூடுல்ஸுக்கு அளித்துவிடும் சொரசொரப்பான தன்மையினை நீக்குவதுதான் இவற்றில் இருக்கும் ஒரே சிக்கல். ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஜப்பானில் சிவப்பு டிராகன் முழு கோதுமை நூடுல்ஸ் சந்தைக்கு வந்திருக்கிறது .

கோதுமை நூடுல்ஸ்கள் கோதுமை மாவை தண்ணீரும் உப்பும் தாவர எண்ணெய் அல்லது விலங்கு கொழுப்பு கலந்து பிசைந்து தாள்களாக தேய்க்கப்பட்டு, சுருட்டி, வெட்டி, உலர்த்தி, நீராவியில் அல்லது எண்ணெயில், வேகவைத்தோ, பொரித்தோ அல்லது இரண்டுமே செய்தோ உருவாக்கப்படுகிறது.

 பொதுவாக நூடுல்ஸ்களில் புரதம் 8லிருந்து 12 சதவீதம் இருக்கும். நூடுல்ஸின் இழுவை தன்மை அதன் புரத அளவுடன் நேரடியாக தொடர்புடையது என்பதால் புரதத்தின் அளவு மிக துல்லியமாக நிர்ணயிக்கப்படும்.

நூடுல்ஸ் தயாரிக்கையில் மாவுடன் சோடியம் குளோரைடு என்னும் சாதரண உப்பு பொதுவில் சேர்க்கப்படும்.  பல ஆசிய நாடுகளில் கான்சுய் (kansui) எனப்படும்  பிரகாசமான மஞ்சள் நிறம் கொடுக்கும் சோடியம் மற்றும் பொட்டாசியம் கார்பனேட்டு உப்புக்கள் சேர்க்கப்படுகிறது, கூடுதலாக முட்டைத்தூளும் சில வகைகளில் சேர்க்கப்படும். ஆசியாவில் முட்டை சேர்க்கப்பட்டிருக்காத நூடுல்ஸே அதிகம் சந்தைப்படுத்தப்படுகிறது ஆனால் அமெரிக்காவில் 5 சதவீத முட்டை கலந்து  இருக்கும் கோதுமை மாவிலிருந்துதான் நூடுல்ஸ் பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது.

சீனாவின் கான்மியான்(ganmien), ஜப்பானின் ராமன் மற்றும் உடோன் (ramen & udon), கொரியாவின் கூக்சூ (kooksoo), வியட்நாமின் மி சாய் (mi chay) மற்றும் பிலிப்பைன்ஸின் மிஸ்வா (miswa) ஆகியவை ஆசியாவின் பிரபல வகை நூடுல்ஸ்கள்  

 ஆசியாவின் பிரதான உணவுகளில் ஒன்றாகவும் இருக்கும் நூடுல்ஸ் இப்போது பெரும்பாலும் கோதுமையிலிருந்தும்  மைதாவிலிருந்தும், அரிசி , உருளைக்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயிறு வகைகள் மற்றும் சிறு தானியங்களிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.  

மைதா தயாரிக்க கோதுமை மாவில் சேர்க்கப்படும் அலாக்ஸான் ஹைட்ராக்ஸைடினால்  (alloxan)  மைதா உடலுக்கு கேடு தரும்  என்று பரவலாக நம்பப்பட்டாலும் விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மட்டும் இது கணையத்தின் பீட்டா செல்களை அழித்து நீரிழிவு நோயை உண்டாக்குவது கண்டறியப்பட்டிருக்கிறது. மனிதர்களில் இந்த அலாக்ஸான் பாதகமான விளைவுகளை உண்டாக்குவதை  எந்த ஆய்வும் இதுவரை நிரூபிக்கவில்லை.

ஆசியாவின் மொத்த கோதுமை உற்பத்தியில் 20’லிருந்து 50 சதவீத கோதுமை நூடுல்ஸ் தயாரிப்பில் உபயோகமாகிறது.  உலகில் முதலில் சாகுபடி செய்யப்பட்ட 8  ஆதிப்பயிர்களில் 2 வகை கோதுமை பயிர்களும் இருக்கிறது.2. 

அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் புல் குடும்பமான போயேசியை சேர்ந்த Triticum aestivum என்னும் அறிவியல் பெயருடைய கோதுமை  உலகின் மிக முக்கியமான தானியப்பயிர். மனித குலம் பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கிய ஆதிகாலத்திலிருந்தே கோதுமையும் பயிரிடப்பட்டு வருகிறது.   இந்த பயிர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தோன்றி இருக்கலாமென்று கருதப்படுகிறது.

வருடாந்திரப்பயிரான கோதுமை தடிமனான தண்டுகளும், பளபளப்பான நீண்ட ரிப்பன்களை போன்ற இலைகளையும் கொண்டிருக்கும். சிறு மலர்கள்  கிளைத்த மென்பூக்குலைகளில் அமைந்திருக்கும். அவற்றிலிருந்து பொன்னிறத்தில் கோதுமை  மணிகள்உருவாகும்.

 கோதுமை மணிகளின் நிறம் சிவப்பு வெள்ளை மஞ்சள் என பல வகைகளில் இருக்கிறது.உலகின் மொத்த கோதுமை பயிரிடப்படும் நில அளவு 500 மில்லியன் ஏக்கர்கள். இதில் 60 மில்லியன் ஏக்கர் அமெரிக்காவில் மட்டுமே இருக்கிறது.

 கோதுமையின் புரதமான குளூட்டன் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும்.சாதா கோதுமையான ட்ரிட்டிகம் வல்கேர் நூடுல்ஸ் செய்ய பயன்படுத்தப்படுவதில்லை. ட்யூரம் கோதுமை எனப்படும் (Durum wheat – Triticum durum)  வகையே நூடுல்ஸ் செய்ய பயன்படுகிறது. இயற்கையான மஞ்சள்-ஆரஞ்சு நிறமியான கரோட்டினாய்டுகள்  இந்த வகை கோதுமையில் இருப்பதால் மஞ்சள் நிறமும், கடினத்தன்மையும் அதிக அமைலோஸ் ஸ்டார்ச்சும் அதிக புரதமும் (13%) இருப்பதால் இந்த கோதுமையே நூடுல்ஸ் தயாரிப்பில்  பயன்படுகிறது. 

கோவை பல்கலைக்கழகத்தில் இருக்கையில், தாவர மரபியல் ஆய்விற்காக கோதுமை மலர்களை சேகரிக்க உதகமண்டலத்தின் வெலிங்டன் ராணுவ பயிற்சி  முகாமிற்கு அருகில் இருக்கும் கோதுமை வயல்களுக்கு போவதுண்டு., அதிகாலை கதிரெழுகையில் பொன்னொளிரும் கோதுமை பயிர்களிலிருந்து மலர்களை சேகரிப்பது பரவசமூட்டும் ஒரு நிகழ்வாக இருக்கும். கோதுமை வயல்களின் அழகை குறித்து பல உலக புகழ் பெற்ற கவிதைகள் இருக்கின்றன. 

பிரபல  டச்சு ஓவியர் வின்சென்ட் வான்காவின் கோதுமை வயல் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. அவர் கோதுமை வயல்களையும் பயிர்களையும் மிக அணுக்கமாக அறிந்திருந்தார்’ ”எது கோதுமை விதைகளை முளைக்க வைக்கிறதோ அதுவே நமக்குள் அன்பை முளைக்க வைக்கிறது’’ என்கிறார் வான்கோ. 

நூடுல்ஸை பார்க்கையில் எல்லாம் கோதுமை நினைவுக்கு வரும் கூடவே , மலைத்தொடர்களும், முகில் நிறைந்த வானும் பின்னணியில் இருக்க உயர்ந்த சைப்ரஸ் மரங்களுக்கடியில், காற்றில் பொன் அலைகளென அசையும் கோதுமைப்பயிர்களிருக்கும் வான்கோவின்  ’’கோதுமை வயலும் சைப்ரஸ் மரங்களும்’’  ஓவியமும் நினைவுக்கு வரும். 3

சீனாவில் நூடுல்ஸ் வெறும் பசிக்கு சாப்பிடும் உணவு மட்டுமல்ல. அவர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கியமான  இடம்பெற்றிருப்பவையும் கூட. பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது கேக் வெட்டுவதை போல் அங்கு நூடுல்ஸ் உணவை வெட்டுபவர்கள் உண்டு. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நீண்ட ஆயுளை தரும் என்னும் நம்பிக்கையில் வெகுநீளமான நூடுல்ஸ்களை சாப்பிடுவது அங்கு வழக்கம் .

நூடுல்ஸ் விண்ணைத்தாண்டியும் சென்று விட்டது. 2005 ல்  கொலம்பியா அசம்பாவிதத்திற்கு பிறகு நாஸா அனுப்பிய விண்கலத்தின் பொறியாளரான   சொய்ச்சி நொகுச்சி (Soichi Noguchi) முதன் முதலாக விண்வெளி நிலையத்தில் ஜப்பானின் பிரபல நிஸின் (Nissin) நிறுவனத்தின் பிரெத்யேக  தயாரிப்பான  கப் நூடுல்ஸை சுவைத்தார். நிஸின் நிறுவனத்தை தோற்றுவித்தவரான  மொமோஃபுக்கு அண்டோ (Momofuku Ando ) தான் கொதி நீரூற்றி உடனே சாப்பிடும் கப் நூடுல்ஸை 1971ல்கண்டறிந்தவர்.

ஜப்பானின் ஒஸாகா நகரில் பிரம்மாண்டமான நூடுல்ஸ் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரம் வகையான நூடுல்ஸ் வகைகளின் கண்காட்சியும், , விற்பனையும் விளையாட்டுகளும், நூடுல்ஸ் உற்பத்தி குறித்த திரைப்படங்களுமாக கோலாகலமாக இருக்கும் 

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது காலத்திற்கேற்றபடி வாழ்வுமுறைகளும் மாறுகின்றன. துரித உணவுகளுக்கான தேவையும், விருப்பமும் சந்தையும்  பெருகிக்கொண்டிருப்பதைப்போலவே அதீத உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளும்  புது புது நோய்களும் பெருகிக்கொண்டிருக்கிறது.எதையும் முழுமையாக தவிர்க்க முடியாதென்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ளவேண்டி இருக்கிறது.

கரிய கண்களை உடைய விரால் மீன் துண்டங்களை நீரில் ஊறிய சோற்றில் கலந்து உண்டுவிட்டு நிதானமாக  வயலுக்கு போன நம் தொல் மூதாதைகளை இலக்கியத்தில் மட்டுமே கண்டிருக்கிறோம். 

உமியடுப்பிலும்  விறகடுப்பிலும்  பொறுமையாக  நஞ்சில்லாது  சாகுபடி செய்யபட்ட  சிறு தானியங்களை சமைத்தும் பண்டிகைகளுக்கு மட்டுமே நெல்லுச்சோறு சுவைத்த முந்தின தலைமுறையை பலர் பார்த்தும்,  சிலர் கேட்டுமிருக்கிறோம்.

 விறகடுப்பு, மண்ணெண்ணெய் திரி அடுப்பு, பம்ப் அடுப்பு, விரைந்து சமைக்க பிரஷர் குக்கர்கள்,  பெட்ரோலிய வாயு சிலிண்டர் அடுப்பு என வளர்ந்து, மைக்ரோ அவனுக்கு மாறி, மின் அடுப்புக்களில் புழங்கும் நம் தலைமுறையும், சமைக்கவே வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் என்னும் புதுமைக்கு மாறி நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை சார்ந்திருக்கும் இளைய தலைமுறையும், அதையும் தாண்டி, இருக்கும் இடத்துக்கே உணவை வரவழைக்க சொமேட்டோ ஊபர் ஈட்ஸ், ஸ்விக்கிக்கள் என சார்ந்திருக்கும் அடுத்த தலைமுறையுமாக உணவென்பதின் பொருளும்    தேவையும்  மாறிக்கொண்டுதான் இருக்கிறது. மாறாமல் இருப்பது பசியென்னும் நெருப்பு மட்டும் தான். 

எனவேதான்  நெருப்பின் நிறங்களான மஞ்சளையும், சிவப்பையும் மேகி, மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட சர்வதேச அளவில் பிரபலமாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும் பல உணவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் தங்கள் லோகோவில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.  

1.The magic of Maggi | Nestlé Global (nestle.com)

2. https://en.wikipedia.org/wiki/Founder_crops

3.  https://en.wikipedia.org/wiki/Wheat_Fields

போன்ஸாய்- குறைவே மிகுதி

2019 ல் ஜப்பானிய ஊடகங்கள் பலவற்றில்  டோக்கியோவின் சைதாமா நகரில் வசிக்கும் செஜிலிமுரா மற்றும் அவரது மனைவி ஃபுயூமி  வெளியிட்ட உணர்வுபூர்வமான விளம்பரம் பல நாட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது 

//எங்கள் துயரை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை எங்களின் பொக்கிஷங்களை இழந்திருக்கிறோம் அவற்றிற்கு நீர் அளிக்காவிட்டால் அவை இறந்து விடும் அபாயம் இருக்கிறது// 

என்று துவங்கும் அந்த விளம்பரம் மிக விரிவாக பல பராமரிப்பு வழிமுறைகளை சொன்னது. 3000’க்கும் அதிகமான போன்ஸாய் மரங்கள் இருக்கும் அவர்களின் மிகப்பெரிய தோட்டத்திலிருந்து 13 மில்லியன் யென் மதிப்புள்ள 7 போன்ஸாய் மரங்கள் திருட்டு போயிருந்தது. திருடர்களுக்கு அவர்கள் விடுத்த உருக்கமான வேண்டுகோள் தான் இந்த விளம்பரம். அந்த 7 மரங்களில் ஒன்றான  400 வருடங்களான ஷிம்பாகு ஜூனிபர் மரம் மட்டுமே 10 மில்லியன் யென் மதிப்புள்ளது.  ஒரு வாரம் நீரில்லா விட்டால் அது அழிந்துவிடும்

எடோ காலத்திலிருந்து(1603-1868) போன்ஸாய் வளர்ப்பில் ஈடுபட்டுவரும் அந்த குடும்பத்தில்  லிமுரா ஐந்தாம் தலைமுறை போன்ஸாய் கலைஞர். ஷிம்பாகு முன்னர் மலை உச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டு மெல்ல மெல்ல சிறிதாக்காப்பட்டு ஒரு மீட்டர் உயரத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது .’’எங்கள் குழந்தைகளைப்போல அந்த மரங்கள்’ என்று கண்கலங்கும் தம்பதியினர்  திரும்ப திரும்ப அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகளையே விளம்பரப்படுத்தினார்கள். இன்றைய தேதி வரை அவை கண்டுபிடிக்கப்படவில்லை. நிச்சயம் ஐரோப்பிய கள்ளச்சந்தையில் அவை விற்கப்பட்டிருக்கும் என்கிறார் பியூமி. 1

ஜப்பானுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு மரங்கள் திருட்டு போவதற்கு இவர்கள் இத்தனை கவலைப்படுவது வியப்பாக இருக்கலாம் ஆனால் ஜப்பானியர்களின் அனைவருக்கும் போன்ஸாய் மரங்கள் வெறும் அலங்கார மரங்கள் மட்டுமல்ல, அவர்கள் கலாச்சாரத்தோடும் வாழ்க்கையோடும் ஒன்றென கலந்தவை  அவை

ஜப்பானியர்களுக்கும் போன்ஸாய் மரங்களுக்குமான் பிணைப்பு மிக ஆழமானது. இம்மரங்கள் இவர்களின் அன்றாட வாழ்வில் மிக நெருக்கமான தொடர்பில் இருக்கிறது. இங்கு இக்கலை  இத்தனை முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், ’போன்ஸாய்’ என்னும் சொல் ஜப்பானிய மொழிச்சொல் தானென்றாலும் இந்தக் கலை ஜப்பானில் தோன்றியதல்ல,  சீனாவிலிருந்து ஜப்பானுக்கு வந்தது. 

பண்டைய சீனாவின்  துவக்ககால ஆய்வாளர்கள் மலை உச்சிகளில் வளர்ந்திருந்த குட்டையான  அழகான மரங்களை முதன் முதலாக  கண்டார்கள். மலைப்பகுதியின் அசாதாரணமான காலநிலை அவ்வாறு அம்மரங்களின் வளர்ச்சியை குறுகலாக்கி இருக்கலாமென அவர்கள் கருதினார்கள். சாதரண மரங்களைப்போல மரச்சாமான்களும், விறகுகளும் தராத இவற்றை மிக பரிசுத்தமானவைகளாகவும் புனிதமானவகளாகவும் கருதி அவர்கள்  வழிபட்டனர்.

இவ்வாறு குறுகிய மரங்களை தாமும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர்கள், தொடர்ந்து வளர் நுனிகளையும், வேர்களையும் கத்தரித்தும்,ஒளியை கட்டுப்படுத்தி, சிக்கனமாக நீர் அளித்து, கம்பிகளால் தண்டுகள் மற்றும் கிளைகளை விரும்பிய வடிவிற்கு மாற்றி, குறுகிய வடிவில் மரங்களை உருவாக்க முனைந்தனர். மேலும் மரங்களின் இறுதி வடிவம் பழமையையும், மிக வயதான தன்மையையும் காட்டுவதாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தனர். 

சில தாவொயிஸ்டுகள் குட்டையாக்கும் முயற்சியின் போது, சீனாவின் டிராகன் மற்றும் நாகங்களைப்போல அம்மரங்களின் வடிவத்தை மாற்றி அமைக்கும் முயற்சியிலும் அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இன்னும் சில தோட்டக்கலை ஆர்வலர்கள் யோகா நிலைகளில் மரங்களை அமைக்க முயன்றார்கள் 

  கி.மு. 4 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் , இயற்கையின் அம்சங்களை குறுகிய அளவில் மறுஉருவாக்கம் செய்வது  மந்திர பண்புகளை அணுக  தங்களை அனுமதிப்பதாக தாவோயிஸ்டுகள் நம்பினர்.அப்போதுதான் சுடு மண்பாண்டங்களின் மீது குறுகிய நிலப்பரப்புகளின் சித்திரங்களை உருவாக்கும்  பென்ஜிங்  அல்லது பென் ஸாய் என்னும் கலை தோன்றியது .(Pen-jing/penzai,). முதலில் சமூகத்தின் உயரடுக்குகளில் இருந்தவர்கள் மட்டுமே  இக்கலையை கற்றுக்கொண்டிருந்தனர்.  

சீன மொழியின் பானை-  நிலப்பரப்பு  என்பதை குறிக்கும்  இந்த பென் ஜிங் “penjing.”  என்பதிலிருந்தே ஜப்பானிய சொல்லான தட்டு- தாவரம் எனப்படும் Bon sai ( Tray  -plant) உருவானது. 

சீனர்களின் இந்த குட்டை மர வளர்ப்பின் வரலாறு மிக நீண்டது.  பென், புன், அல்லது பேன் (pen, pun, pan) என்றழைக்கப்படும் குழிவான, சுடுமண்ணாலான அலங்கார தட்டுகள்  சீனாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உருவாக்கப்பட்டன, ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் சீனாவின் வெண்கலக் காலத்தில் மதச்சடங்குகளுக்கென அதே குழிவான அகன்ற தட்டுக்கள் வெண்கலத்தில் உருவாக்கப்பட்டன

சுமார் 2300 வருடங்களுக்கு பின்னர் சீனாவின்’’ நீர், நெருப்பு, மரம் உலோகம், மண்’’ என்னும் ஐந்து பொருட்களை குறிக்கும் ஐந்துபொருட் கோட்பாடு உருவான போது தான் இயற்கையின் அம்சங்களை சிறிய அளவில் மறுஉருவாக்கம் செய்யும் கலையும் உருவானது.

பிறகு ஹான் வம்சத்தினரின் ஆட்சிக் காலத்தில் நறுமண பொருட்களும் வாசனை திரவியங்களும் அண்டை நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டன.  அப்போது,  ஊதுபத்தி புகையும் மலையை போன்ற  வடிவங்கள் விற்பனைக்கு வந்தன. சமுத்திரத்தின் நடுவிலிருக்கும் ஒரு  மலையின் உச்சியிலிருந்து புகை அலையலையாக பரவி மேலே செல்வது இறவாமையையும், உடலிலிருந்து பிரிந்த  ஆத்மா பிரபஞ்சதில் கலப்பதையும் குறிப்பதாக நம்பப்பட்டது.

முதன்மையாக வெண்கலம், பீங்கான் அல்லது முலாம் பூசப்பட்ட வெண்கலத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட இம்மலை வடிவங்கள் கடலைப்போல சித்திரங்கள் வரையப்பட்ட  ஆழமான அகன்ற தட்டுகளின் நடுவில் வைக்கப்பட்டன.

 துளைகள் இருக்கும் உலோக மூடியால் மூடப்பட்ட இந்த அமைப்பின்  துளைகளிலிருந்து  நறுமணமிக்க புகை வெளியேறுவது மாயத்தன்மையுடன் இருப்பதாக கருதப்பட்டு இந்த வடிவங்கள் வெகுவிரைவில் நாடெங்கும் புகழ்பெற்றது

இந்த அலங்கார தட்டுக்களின் விற்பனை அதிகரித்த போது இவற்றில்  கடற்பாசிகளையும்,  சிறு தாவரங்களையும் இணைத்து இன்னும் இயற்கையாக காட்டும்  புதுமையான  விற்பனை முயற்சிகளும் துவங்கின

 தொடர்ந்த நூற்றாண்டுகளில் இதன் வடிவங்களில் பல மாற்றங்கள் உண்டாயின மரக்கைப்பிடிகளும், மரக்கால்களும் இணைக்கப்பட்டு சிறு தாவரங்கள் அவற்றில் வளர்க்கப்பட்டன அவை பெரிதாகாமல் இருக்க கம்பிகளைக் கொண்டு முறுக்கி அவற்றின்  வளர்ச்சி கட்டுப்படுத்த பட்டது. ஒரு வரி கவிதைகள் கூட அந்த தட்டுகளில் பொறிக்கப்பட்டன. மனித  வாழ்வு மிக சுருக்கமான வட்டங்களாக இவற்றில் வரையப்பட்டன 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இவ்வடிவங்கள்’”தட்டு செடி வளர்ப்பு’’  என பொருள்படும் புன் -ட்ஸாய் (pun tsai or “tray planting.) என அழைக்கப்பட்டன

  இந்த தட்டுச் செடி வளர்ப்பு கலை சீனாவிலிருந்து ஜப்பானுக்கு சுமார் 12 நூற்றாண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி இருக்கலாமென்று நம்பப்படுகின்றது.  ஆயிரம் வருடங்களுக்கு முன்பான ஒரு ஜப்பானிய   பதிவில்  ‘’இயற்கையாக மனிதர்களுக்கு தொலைவில் வளரும் மாபெரும் மரமொன்றை,  தங்கள் அருகில் வைத்துக் கொள்ள கைகளில் மனிதர்கள் தூக்கி செல்லும் அளவிலும், வடிவிலும் சிறியதாக அழகாக வளர்ப்பது’’ குறித்த வாசகங்கள் இடம்பெற்றிருக்கிறது.

கடுமையான சிக்கன நடவடிக்கைகள் அடங்கிய  ஸென் புத்த மதம் ஜப்பானில் தோன்றிய போது ஸென் துறவிகள் இந்த தட்டுக்களில் வளரும் ஒற்றை மரத்தையே  பிரபஞ்சத்தின் குறீயீடாக காட்டினர். ஸென் குருக்கள், மாபெரும் வடிவங்களின் இந்த  மீச்சிறு வடிவங்களை உற்று நோக்குகையில்  அதன் மந்திர பண்புகளை நெருங்கி அறிய முடியும் எனவும் நம்பினர்.

 ஹான் வம்ச ஆட்சியின் போது, ஜப்பானிற்கும் ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்த சீனத்துறவிகள் தாங்கள் உருவாக்கிய குட்டை மரங்களையும் அவர்களுடன் எடுத்துக் கொண்டனர்.அவர்களிடமிருந்து  ஜப்பானிய ஜென் புத்த பிக்குகள் குட்டை மரங்களை உருவாக்க தேவையான நுட்பங்களைக் கற்றுக்கொண்டனர், இதுவே பின்னர் போன்ஸாய் என்று அறியப்பட்டது. ஜப்பானியர்கள் சீனாவின்  குள்ளமான மரங்களிலிருந்து வேறுபடும் பல பாணிகளை தங்கள் சொந்த முறைகளில் உருவாக்கினர்,

 காமகுரா காலத்தில் ஜப்பான் சீன கலாச்சாரத்தை பின்பற்ற துவங்கியபோது  குட்டை மர வளர்ப்பு கலையும் ஜப்பானில் பிரபலமானது, ஜப்பானில் சீனக்கலையின் அடிப்படைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஸென் புத்த தத்துவங்களை பிரதிபலிக்கும் பாணிகள் புகுத்தப்பட்டு புதிதாக ஜப்பானின் பிரெத்யேக கலையாக போன்ஸாய் உருவானது,

 இந்தக் கலை ஜப்பானிலும் பரவியபோது  சீனாவின் தட்டுக்களை காட்டிலும் சிறிது அதிக ஆழம் கொண்ட ஜப்பானிய தட்டுகளில் மரங்களை சிறியதாக வளர்ப்பது ’கிண்ண மரம்’  என்னும் பொருள்படும் ஹாச்சி நோ கீ எனப்பட்டது (hachi-no-ki,the/bowl’s tree) இந்தக்கலை பரவலாக உயரடுக்குகளில் இருப்பவர்களால் பயிலப்பட்டது.

  1300 களின் பிற்பகுதியில்  கடுங்குளிரிலொன்றில்  ஒரு பயணத் துறவிக்கு அரவணைப்பை வழங்குவதற்காக தனது பிரியத்துக்குரிய மூன்று குள்ள கிண்ண மரங்களை நெருப்பிலிட்டு தியாகம் செய்த ஒரு இளம் சாமுராய் பற்றிய ஒரு நாட்டுப்புறக் கதை, ஒரு பிரபலமான நோ (Noh)  நாடகமாக மாறியது,  இக்கதையின் சித்திரங்கள் பல நூற்றாண்டுகளாக மர அச்சுகள் உட்பட பல ஊடக வடிவங்களில் சித்தரிக்கப்பட்டன.

1400ல் ஜப்பானின் ஒஸக்கா’வில் கூடிய சீன தோட்டக்கலை வல்லுநர் குழுவொன்று சீனாவின் புன்-ட்ஸாயின் ஜப்பானிய உச்சரிப்பான போன்ஸாய் என்பதை இந்த கலைக்கு பெயரிட்டு இதை கிண்ன செடி வளர்ப்பிலிருந்து வேறுபடுத்தியது.

  பிறகு போன் (Bon) எனப்படும் ஹாச்சி கிண்ணத்தை ஆழம் குறைவான  தட்டுக்களில்  குள்ள  மரங்களின் வளர்ப்பு  வெற்றிகரமாக நடந்தது, அதற்கு பிறகு  போன்சாய்  வடிவமைப்பு ஜப்பானிய பாரம்பரியத்தின் அணுகுமுறை என்பதிலிருந்து விலகி தோட்டக்கைவினைக் கலையாக புகழ்பெற்றது. அக்காலகட்டத்தில் ஜப்பானெங்கும் இக்கலை பிரபலமாகி இருந்தது.

ஜப்பானிய போன்ஸாய் மரங்கள் 1 அல்லது 2 அடி உயரத்தில் பல ஆண்டுகள் உழைப்பை கோரும் வடிவங்களாக இருந்தன. விரும்பிய வடிவங்களை மூங்கில் மற்றும் கம்பிகளை  இணைத்தும் கட்டியும், திருகியும் வரவழைத்தனர். வேறு  மரங்களிலிருந்து எடுக்கப்பட கிளைகளை,  வளரும் போன்ஸாய் மரங்களில் ஒட்டு வைத்தும் புதிய வடிவங்கள் உருவாக்கப்பட்டன.

  14’ம் நூற்றாண்டில் ஜப்பானில் மிக விலை மதிப்புள்ளவையாக இருந்த  போன்ஸாய் மரங்கள்  மடாலயங்களிலும்,  அரச மற்றும் பிரபுக்களின் குடும்பங்களிலும் சீனாவை போலவே செல்வத்தின், உயர்வின், கௌரவத்தின்  அடையாளமாக வீற்றிருந்தன. 

1600’ல் ஜப்பானிய போன்ஸாய் கலைஞர்கள் மரங்களின் அத்யாவசியமான பாகங்களை தவிர மற்றவற்றை நீக்கி புதுமையான போன்ஸாய் பாணியை உருவாக்கினார். இந்த பாணி ஜப்பானியர்களின் ’’குறைவே மிகுதி’’ என்னும் தத்துவத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. இக்கலையை பலரும் பரவலாக கற்றுக்கொள்ள துவங்கிய 1603 ல் போன்ஸாய் மரங்கள் சமூகத்தின் அனைத்து தளங்களிலும் இருப்போருக்கும் உரியதாக மாறியது. பெரும்பாலும் அனைத்து ஜப்பானிய வீடுகளிலும் போன்ஸாய்கள் இடம்பெற்றிருந்தன 

இராணுவத் தலைவர்களான ஷோகன்கள் முதல் சாதாரண விவசாயிகள் வரை அனைவரும் ஒரு பானையில் அல்லது  தட்டுக்களில் அல்லது உறுதியான அகன்ற சிவந்த நிறத்திலிருக்கும் அபாலோன் கிளிஞ்சல்களில் மரத்தை அல்லது பிரகாசமான அழகிய வண்ணங்களில் மலர்கள் அளிக்கும் அஸேலியா புதர் செடிகளை  வளர்த்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தலைநகரான கியோட்டோவில் குள்ளமாக்கப்பட்ட பைன்  மரங்களுக்கான கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடைபெறத் தொடங்கியது.   போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு குள்ள பைன் மரங்கள் கொண்டு வருவார்கள்.  இந்த கண்காட்சிகளுக்கு எனவே அப்போது  பல கிராமங்களில் குள்ள பைன் மரங்களை  வித விதமான வடிவங்களில் மும்முரமாக பெரிய அளவில் வளர்க்க துவங்கினார்கள்.

 தொடர்ந்த நூற்றாண்டில் போன்ஸாயில் பல புதிய உத்திகளும், பாணிகளும் புகுத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான  நூல்களும் கட்டுரைகளும் கவிதைகளும் பாடல்களும் போன்ஸாய் தட்டுக்களை, போன்ஸாய் வளர்ப்பை, போன்ஸாய் மரங்களின் வடிவமைப்பை குறித்து எழுதப்பட்டு பிரசுரமாயின. போன்ஸாய் கண்காட்சிகள் பரவலாக நடைபெற்றது. கிளைகளை முறுக்க அதுகாறும் பயன்படுத்தப்பட்ட செம்புக்கம்பிகளுக்கு பதிலாக சணல் கயிறுகள் பயன்படுத்தப்பட துவங்கின. சீனாவிலிருந்து இறக்குமதியான பல்லாயிரக்கணக்கான போன்ஸாய் தட்டுகளில் குள்ள மரங்களை வளர்க்கும் கலை ஒரு பொழுதுபோக்காக நாடெங்கும் பரவலாக இருந்தது.  

 1923’ல் டோக்கியோவில் பெரும் அழிவை உண்டாக்கிய கண்டோ (Kanto) பூகம்பத்துக்கு பிறகு பலர் வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். அப்போது  30 குடும்பங்களை சேர்ந்த போன்ஸாய் வளர்ப்பு நிபுணர்கள் அங்கிருந்து 20 மைல் தொலைவில் இருந்த ஒமியாவில்  தங்களது இருப்பிடங்களை மாற்றி ஜப்பானின் போன்ஸாய் மையமாக ஓமியாவை (Omiya) உருவாக்க தலைப்பட்டனர். 1930 களில் இருந்து ஒமியா போன்ஸாய் கிராமம் எனவே உலகெங்கிலும் புகழ் பெற்றிருக்கிறது. ஒமியாவின் போன்ஸாய் அருங்காட்சியகமும் பிரபலமானது.

9’ம் நூற்றாண்டிலேயே ஜப்பானியர்கள்  சீனாவிற்கு சென்றிருந்ததும் அங்கிருந்து திரும்பி வருகையில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளிக்க போன்ஸாய் மரங்களை கொண்டு வந்தற்கும் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.போன்ஸாய் செடிகளையும் மரங்களையும் பரிசளிக்கும் இந்த மரபு இன்றளவும் தொடர்கின்றது. போன்ஸாயை பரிசளிப்பதும் பெற்றுக்கொள்வதும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்னும் நம்பிக்கையும் ஜப்பானில் இருக்கிறது  

ஜப்பானிய பாரம்பரியமான இந்த போன்ஸாய் கலை, தேர்ந்த  தோட்டக்காரரால்  உரிய அளவுக்கு வளராமல்,, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி  ஆழம் குறைவான அழகிய தட்டுக்களில்  வளர மரங்களுக்கு   பயிற்சியளிக்கிறது,

நீரை தெளிப்பது, வளர்ச்சிக்கு ஏற்ப  தட்டுக்களை மாற்றுவது, மண்ணின் வளத்தை சரியான இடைவெளிகளில் பரிசோதிப்பது, வளர் நுனிகளையும் வேர்களையும் தொடர்ந்து கத்தரிப்பது, குறிப்பிட்ட அளவிலேயே சூரிய ஒளியை அனுமதிப்பது, மாறும் காலநிலைகளுக்கேற்ப பாதுகாப்பது என பொன்ஸாய்களை மீது கவனமாக பராமரிக்க வேண்டும்

 போன்ஸாயாக்கப்படும் மரத்திற்கு கூடுதல் கவனிப்பும், மிகுந்த பராமரிப்பும்  தேவைப்படும். இவ்வகைச் சிறிய மரங்கள், பெரிய வளர்ந்த மரங்களுக்கு உரித்தான அடிமரத்தடிமன், பட்டைகள், வேர்கள் இலைகள், மலர்கள், காய்கள் இவையனைத்தையுமே சிறிய அளவில், கொண்டிருக்கும். 

போன்ஸாய் மரங்கள் குட்டையாக இருப்பினும்  கனிகளை பெரிய மரங்களில் இருக்கும் அதே அளவில் உருவாக்கும். எனினும் இவற்றிலிருந்து பிற மரங்களிலிருந்து கிடைப்பதுபோல் ஏராளமான கனிகளை அறுவடை செய்யமுடியாது. ஒருசில கனிகளே உருவாகும். போன்ஸாய்  லாபமளிக்கும் மகசூலை கொடுக்கும் மரம் அல்ல இது ஒரு அழகுத் தோட்டக்கலை மட்டுமே. 

1937-1945 ல் நடைபெற்ற பசிபிக் போருக்கு பின்னர் ஜப்பானுக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு போன்ஸாய் கலை உலகெங்கும் விரிவடைந்தது தாவரவியல் ஆய்வுகளில் நடைபெற்ற பல ஆய்வுகளுக்கும் கண்டுபிடிப்புக்களுக்கும்  பின்னர் பொன்சாய் வடிவமைப்பில் உபயோகிக்கப்பட்ட கருவிகளும் பல மாறுதல்களுடன் உருவாக்கப்பட்டு ஒரு கைவினைக்லை என்னும் நிலையிலிருந்து போன்ஸாய் வளர்ப்பு அசலான இயற்கை அழகு கலையாக மாறியது

  1604’ல் இருந்து இக்கலை பிற நாடுகளுக்கு பரவியது எனினும் ஜப்பான் மற்றும் சீனாவிலேயே இது அதிகம் கற்றுக்கொள்ளப்பட்டு வணிகமும் செய்யப்பட்டது. 19ம் நூற்றாண்டில்தான்  மேற்கில் இக்கலை  பிரபலமாகியது.

 பண்டைய ஜப்பானின் போன்ஸாய் கலையிலிருந்து நவீன போன்ஸாய் கலை பல படிநிலைகளில் மாற்றமடைந்திருக்கிறது. கராத்தே கிட் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் போன்ஸாய் வளர்ப்பின் முக்கியத்துவம் பேசப்பட்ட பின்னர்  உலகெங்கிலும் இளையோரிடம் இக்கலை குறித்த ஆர்வம் அதிகமாயிருக்கிறது. 26 உலக மொழிகளில் தற்போது ஆயிரக்கணக்கான போன்ஸாய் வளர்ப்பு நூல்கள் உள்ளன.பலநூறு வார மாத, வருடாந்திர இதழ்கள் இணையப்பக்கங்கள் போன்ஸாய்க்கெனவே பிரெத்யேகமாக உள்ளன. போன்ஸாய் ஆர்வலர்களின் குழுமங்களும் பல்லாயிரக்கணக்கில் உலகெங்கிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன

 போன்ஸாய் மரங்களின் பொருளானது ஒவ்வொருவரும் சார்ந்திருக்கும் கலாச்சாரம் அவர்களது நம்பிக்கைகள், கொண்டிருக்கும் விழுமியங்கள் ஆகிவயற்றை பொருத்து வேறுபடும். சிலருக்கு ஒத்திசைவின், பொறுமையின். எளிமையின் அதிர்ஷ்டத்தின் குறியீடாக இருக்கும் போன்ஸாய் பலருக்கு வெறும்  உயிருள்ள அழகு மரம் மட்டுமே! ஸென் புத்த துறவிகளுக்கு ஆழ்நிலை  தியானத்திற்கானதாக இருக்கிறது போன்ஸாய். இயற்கையின் முக்கிய மூன்று இயல்புகளான  சமனிலை. ஒத்திசைவு மற்றும் எளிமையை காட்டும் சிறுவடிவங்களாகவே போன்ஸாய்கள் உலகெங்கும் கருதப்படுகின்றன

வீட்டைச்சுற்றிலும் மரஞ்செடிகொடிகள் வளர்க்க, தோட்டம் அமைக்க இடம் இல்லையென்று கவலைப்படாமல் போன்ஸாயை சமையலறையிலும் மேசையிலும் ஜன்னலிலும் வைக்கலாமென்பதால் போன்ஸாய்களுக்கு எப்போதும் தேவையும் மதிப்பும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஜப்பானியர்கள்   அழகென்பதை மூன்று விதமாக சொல்கிறார்கள்.அருவிகள் விலங்குகள் போன்ற , மனிதர்களின்  குறுக்கீடு இல்லாத இயற்கை அழகு  முதலாவது, சிற்பங்கள்  ஓவியங்கள் போன்ற மனிதர்களால் உருவாக்கப்படும் அழகு இரண்டாவது,, மூன்றாவதாக மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கமான தொடர்புகளில் காணப்படும் அழகு. இதற்கு பொருத்தமான உதாரணமாக போன்ஸாயே முதலில்  சொல்லப்படுகின்றது

 எதற்கும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் விரைவு வாழ்க்கையில் போன்ஸாய்களின் நுணுக்கமான  தேவைகளை அறிந்து அவற்றை கவனித்து, பராமரித்து, வளர்ப்பது வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது எனவும் இயற்கையுடன் நெருங்கி இருக்கும் இந்த கலையை பொறுமையுடன், அன்புடன் முழுமனதாக செய்கையில் போன்ஸாய் நமக்கு   வாழ்வையும், வாழும் முறையையும், வாழ்வின் எல்லா பருவத்தையும் மதிக்கவும் ரசிக்கவும் கற்றுத்தரும் ஆசிரியராகி விடுகிறது  என்கிறார்கள் ஜப்பானியர்கள்.

 போன்ஸாய் வாங்குகையில் இளமையான கனிகள் நிறைந்திருப்பவற்றை விடவும் வயதான, பாசி படிந்து சுருக்கங்கள் நிறைந்திருக்கும், சாய்வான கோணங்க்களிலிருப்பவையே அதிகம் விரும்பப்படுகிறது  

இத்தாலியில், க்ரெஸ்பி எனப்படும் உலகின் முதல் போன்ஸாய் அருங்காட்சியகம் இருக்கிறது. அதில்,  ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான ’’கல் இத்தி’’(Ficus retusa) போன்ஸாய் மரம்தான் உலகின் மிகப் பழமையான போன்ஸாய் மரமாக கருதப்படுகின்றது  பல நூற்றாண்டுகளை கடந்து பல போன்ஸாய் ஆர்வலர்களின் உழைப்புக்கு சாட்சியாக அம்மரம் அங்கு இருக்கிறது.

 அமெரிக்காவின் தேசிய மரப் பூங்காவில் இருக்கும் கோஷின் எனப்படும் 11 ஜூனிபர் மரங்களின் போன்ஸாய்தான் உலகின் மிக புகழ்பெற்ற போன்ஸாயாக கருதப்படுகின்றது. இம்மரம் 1948 ல் பிரபல போன்ஸாய் கலைஞரும் ஆசிரியரும் எழுத்தாளருமான  ஜான் நாகாவினால் அவரது 11 பேரக்குழந்தைகளை குறிப்பிடும் விதமாக   உருவாக்கப்பட்டது , இம்மரம்  ஆன்மாவின் பாதுகாவலன் என்றும் அழைக்கப்படுகிறது  

 உலகின் மிக அதிக விலைக்கு விற்கபட்ட போன்ஸாயாக 300 வருடங்களான  ஜப்பான் தகாமட்ஷு’வில் நடைபெற்ற சர்வதேச போன்ஸாய் கண்காட்சியில் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்ட  வெள்ளை பைன் மரம் கருதப்படுகிறது. எனினும் அதை காட்டிலும் பல நூற்றாண்டுகளை கடந்த  மிக அதிக மதிப்புள்ள  பல போன்ஸாய்கள் பலரின் குடும்ப சொத்தாக விற்கப்படாமல்  இருக்கின்றன.  

ஜப்பானின் அட்டாமி நகரில் இருக்கும் 5 மீட்டர் உயரமுள்ள 600 வருடங்களான  சிவப்பு பைன் போன்ஸாய் மரமே உலகின் மிகப்பெரிய போன்ஸாயாக கருதப்படுகின்றது. இதுபோன்ற பெரிய வகை பொன்ஸாய்கள் இம்பீரியல் வகை எனப்படுகின்றன. மிக சிறிய போன்ஸாய் வகைகள்  கசகசா விதை வகை எனப்படுகின்றன இவை 3லிருந்து 8 செமீ உயரம் இருக்கும் .

 சிறிய மோதிர அளவில் இருக்கும் Acer momiji. என்னும் போன்ஸாய் மரமே உலகின் மிகச்சிறிய போன்ஸாயாக கருதப்படுகின்றது. கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இணைய காத்திருக்கிறது இந்த மீச்சிறு மரம். 

இவற்றைக்காட்டிலும் நுண்ணிய, விரல் நுனியில் வைத்துவிடும் அளவில் இருக்கும் சூப்பர் மினியேச்சர் வகை போன்ஸாய்களும் தனிப்பிரிவாக இருக்கின்றன,மண்ணே இல்லாமல் சிறு புட்டிகளில் வெறும் நீர்க்கரைசலில் வளரும் அக்வா போன்ஸாய்களும் கடந்த பத்து ஆண்டுகளில் உருவாகி இருக்கின்றன.  

ஒன்றுக்கு மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்படுகையில் அது போன்ஸாய் காடு என்று குறிப்பிடப்படுகிறது.

போன்ஸாய் வளர்ப்பில் மிஷோ எனப்படுவது (Misho) விதைகளிலிருந்து போன்ஸாய் மரங்களை வளர்க்கும் கலை. இது மிகச்சவாலானதும் சுவாரஸ்யமானதும் கூட. ஏனெனில் வளரும் மரம் முழுக்க முழுக்க துவக்கத்திலிருந்தே வளர்ப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும், முதன் முதலாக போன்ஸாய் வளர்ப்பில் ஈடுபடுவர்களுக்கானது மிஷோ

நறுக்கப்பட்ட தண்டுகளிலிருந்து போன்ஸாய் மரங்களை வளர்க்கும் சஷிகி  (Sashiki) முறையும் மிக பிரபலமானது. இது மிக சுலபமானதும் செலவு குறைந்ததும் கூட. ஒருசில ஆர்வலர்கள் மரக்கன்றுகளிலிருந்தும் போன்ஸாயை உருவாக்குவார்கள்

இயற்கையிலேயே சத்துக்குறைபாடு, அதீத சூழல் காரணிகள் இவற்றால் குட்டையாக வளர்ந்திருக்கும் மரங்களை ஜப்பானில் யமதோரி என்கிறார்கள்.(Yamadori). இவற்றை முறையான அனுமதியுடன் தோண்டி எடுத்து வந்தும் ஜப்பானியர்கள் போன்ஸாயாக வளர்ப்பதுண்டு

வளர்ந்து வரும் போன்ஸாய் மரத்தில் வேறொரு மரத்தின் பாகங்களை இணைந்து ஒட்டு வளர்ப்பு செய்வது  சுகிகி எனப்படுகின்றது (Tsugiki)

போன்ஸாய் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவ பல இணைய தளங்களும் நிறுவனங்களும் வழிகாட்டுகின்றன. இந்தியா உள்ளிட்ட  உலகின் பல  நாடுகளில்  போன்ஸாய் வளர்ப்பு தாவரவியல் பிரிவில் ஒரு பாடமாக கல்லூரிகளில் கற்றுத்தரப்படுகிறது

 நவீன போன்ஸாய் கலை அல்லது போன்ஸாய் கலையின் வழித்தோன்றலாக கருதப்படும் சைகே (Saikei) என்பது மிக அகன்ற தட்டுக்களில் குட்டை மரங்களுடன் பாறைத்துண்டுகளும் தரையில் வளரும் சிறு படர்தாவரங்களும் இணைந்த ஒரு குறுகிய நிலக்காட்சியின் வடிவம் இதுவும் ஜப்பானில் போன்ஸாய்களை போலவே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

போன்ஸெகி (Bonseki) எனப்படும் மற்றொரு பிரிவு கருப்பு நிற தட்டுக்களில் வெண்மணலும் சிறு கற்கள், இறகுகள், மரக்கரண்டிகள் குச்சிகள் இவற்றைக்கொண்டு உயிருள்ள தாவரங்கள் இல்லாத நிலப்பரப்புக்களில், எரிமலை, மலை, கடற்கரை போன்ற காட்சிகளை உருவாக்கும் கலையும் பரவலாக ஜப்பானில் இருக்கிறது. 35 செமீ நீளம் இருக்கும்  இதன் தட்டுகளில் வீடுகள், கோவில்,பாலங்கள் ஆகியவையும் சிறிய வடிவில் அமைந்திருக்கும் 

ஜப்பானிய தேநீர் விருந்துக்கு புகழ்பெற்றவரான சென் நோ ரிகு  (Sen no Rikyū), மற்றும் அவரது மாணவரான  கொஸோகவா சென்சே  (Hosokawa Sansei), என்பவரும் போன்ஸெகிக்கெனவே ஒரு பள்ளியை உண்டாக்கி அதன்  அடிப்படைகளை விரிவாக  கற்றுக் கொடுத்தார்கள்.பண்டைய ஜப்பானில் பெண்களிடையே பிரபலமாக இருந்த இக்கலை மெல்ல பிரபல்யத்தை இழந்தது

பாறைத்துண்டுகள், காகித மற்றும் துணிக்கூழ்கள் இவற்றைக்கொண்டு தட்டுக்களில் நிலக்காட்சிகளை உயிருள்ள தாவரங்கள்,இல்லாமல் முப்பரிமாண வடிவங்களில் உருவாக்கும்  ஜப்பானிய முறை போன்கி (bonkei) எனப்படுகின்றது.  அரிதாக போன்கியில் சிறு நீரூற்றுகளும், குறுகிய வடிவில் மனிதர்கள்  விலங்குகள், பறவைகள் ஆகியவையும் அமைவதுண்டு

ஜப்பானின் போன்ஸாய் மற்றும் சீனவின் பென் ஜிங் இவற்றின் அடிப்படைகளை கலந்து உருவாக்கப்பட்டதுதான் வியட்னாமின் ஹோ நோ போ கலை. (Hòn Non Bộ ). ஹொ நொ போ என்பது வியட்னாமிய மொழியில் தீவு, மலை, நீர்நிலை மற்றும் காடுகளின் கலவை என பொருள்படுகிறது. ஒரு தீவின் தூரக்காட்சியைபோல குறுகிய வடிவங்களில் இது அமைக்கப்பட்டிருக்கும்

போன்ஸாய் உருவாக்கத்தில்  பொதுவான விதிகள் சிலவுண்டு.  ஒரு போன்ஸாயின் எந்த இடத்திலும் அதை உருவாக்கியவரை  பார்க்கக் கூடாது என்பது முதன்மையான விதி,  அதாவது கிளைகளை வெட்டிய தழும்போ இலைகளை கத்தரித்த தடமோ கம்பிகளோ எதுவுமே பார்வையாளர்களுக்கு  தெரியக்கூடாது. போன்ஸாய்கள் ஒரு மெல்லிய துயரை பார்ப்போரின் மனதில் உருவாக்கவேண்டும் என்பதும் இதன் விதிகளில் ஒன்று  இக்கலையின் அடிப்படை  ஜப்பானின் வாபி ஸாபி எனப்படும் நேர்த்தியற்றவைகளின் அழகு  பொன்ஸாய்களில் தெரியவேண்டும் என்பதுவும்தான்

மரம் முழுக்க எல்லா பாகங்களையுமே சிறிதாக்குவது, பருத்த அடித்தண்டுகளில் இலைகளை மட்டும் சிறிதாக்குவது நேராக இருப்பது, சாய்ந்திருப்பது, காற்றில் சாய்ந்த நிலையில் இருப்பவை, தட்டுக்களிலிருந்து வழியும் வடிவில் இருப்பது, ஒரே இனத்தை சேர்ந்த சில மரங்களின் கலவை, இரு வகை மரங்களின் இணைப்பு என போன்ஸாய்கள் பல வகைப்படும். 

போன்ஸாய்களின் அளவை ’கை’ அளவுகளில் குறிப்பிடுவார்கள். விரல் நுனி,  உள்ளங்கை, ஒரு கை,  இரண்டு கை,  நான்கு கை அளவு என்று.  அதாவது ஒரு போன்ஸாய் மரத்தை  தொட்டியுடன் சேர்த்து நகர்த்த எத்தனை மனிதர்கள் தேவை என்பதையே இந்த எண்ணிக்கை குறிக்கின்றது. இரு கை அளவென்றால் இரண்டு நபர்கள் சேர்ந்தே அதை நகர்த்த முடியும். 

ஜப்பானிய வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது   டொகொனொமோ  (Tokonoma)  எனப்படும் வரவேற்பறை சுவற்றிலிருக்கும் பிரெத்யேக திட்டுக்களில்  போன்ஸாய் மரங்கள் வைக்கப்பட்டிருக்கும்

 போன்ஸாய் ஒரு தோட்டக்கலை மட்டுமல்ல அந்தரங்கமான ஒரு அனுபவமும்  கூட. . ஒரு போன்ஸாய் மரத்தை நட்டுவைத்ததுமே அதை காப்பாற்ற வெண்டிய பொறுப்புணர்வும் நமக்கு வந்துவிடுகிறது உயிருள்ள ஒரு மனிதனை கையாளும் மருத்துவருக்கு இணையானவராக நாம் அந்த கணத்தில் மாறிப்போகிறோம்.  

ஒரு போன்ஸாய் வீட்டில் இருப்பது இயற்கையின் ஒரு சிறு துண்டு வீட்டினுள் இருப்பதை போலத்தான். ஸ்திரத்தன்மை, சமச்சீர், சமநிலை மற்றும் எளிமை ஆகியவற்றின் கலவையிலிருக்கும் ஒரு அழகிய குறுகிய வடிவிலிருக்கும் தாவரம் அதன் அனைத்து இயல்புகளுடனும் நன்கு ஒத்திசையும் ஒரு தட்டில் வளருவதும் அது நம் வீட்டில், நம் தோட்டத்தில், நம் அலுவலகத்தில் நம்முடனேயே வளர்வதும் அளிக்கும் நிறைவை போன்ஸாய் வளர்த்தால்தான் பெற முடியும்.போன்சாய்  கலையில் ஈடுபடுகையில் நமது   எல்லைகளை எண்ணற்ற வழிகளில் விரிவுபடுத்தும் அனுபவத்தை நாம் உணர முடியும்.

போன்ஸாயின் ஒவ்வொரு வளைவும், ஒவ்வொரு இலையும், ஒவ்வொரு கிளையும் பல ஆண்டுகளின் உழைப்பில் உருவானவை. போன்ஸாய் மரங்கள் நம்மை கடந்த காலத்துடன் ஆழமாக பிணைப்பவை, பல தலைமுறையினரின் நினைவுகளை சேகரித்து வைத்திருப்பவையும் கூட போன்ஸாய் வளர்ப்பது வரலாற்றை வளர்ப்பதுதான்.   

 மேலதிக தகவல்களுக்கு:

நீலி

வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் தாத்தா வீட்டில் இருக்கையில், அதாவது சுமார் 40 வருடங்களுக்கு முன்னர்,  ஒவ்வொரு வாரமும் வீட்டின் மண் தரையை பாட்டி  பசுஞ்சாணமிட்டு மெழுகுவார். முந்தின நாளே பறித்து வந்து, நீரில் ஊறிக் கொண்டிருக்கும்  நீலி அல்லது அவுரி எனப்படும் சிறுசெடியை அம்மியில் மைபோல அரைத்து, மெல்லிய துணியில் அந்த விழுதை வைத்து கட்டி பசுஞ்சாணமிட்ட தரையின் ஓரங்களில் அதை பிழிந்து கரையிடுவார் . பிழிகையில் கருப்பாக இருக்கும் சாறு பின்னர் வெயிலேற ஏற அடர் ஊதா நிறத்தில் மிளிரும். பல வாரங்களுக்கு அந்த நீலக்கரை அப்படியே இருக்கும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ரசாயன உரங்களின் ஆதிக்கம் வந்திருக்காத, அந்த கிராமத்தில் அவுரிச்செடிகளை நிலத்திலிட்டு பசுந்தாள் உரமாக உழுவதையும் கவனித்திருக்கிறேன் அவுரிச்செடி நிலத்தில் இருக்கும் நஞ்சை நீக்கும் என்பதால் நிலவள மேம்பாட்டிலும் பெரிதும் பயன்பட்டது.

அப்போது கிராமங்களில்  கைகளால் நெய்யப்பட்டு  அவுரியின் நீலச் சாயமிடப்பட்ட பருத்தி துணி ஆடைகளே,.மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. . நமது பருத்திக்கும் அவுரிக்கும் ஆசைப்பட்டே ஆங்கிலேயர் இங்கு வந்ததாகவும் கிராமங்களில் இன்றைக்கும் சொல்லப்படுவதுண்டு.

  ஜீன்ஸ் என்றாலே நினைவுக்கு வரும் நீலநிறமும், தலைமுடிக்கு வீட்டிலேயே இப்போது நாம் தயாரித்துக் கொள்ள முடியும் ஆபத்தான வேதி சேர்மானங்களில்லாத இயற்கை சாயமும் கொடுப்பது அதே அவுரி என்கிற இண்டிகோ சாயத்தை அளிக்கும் Indigofera tinctoria செடிகள்தான் 

மூன்று முதன்மை நிறங்களான மஞ்சள், சிவப்பு மற்றும் நீலத்தில் மற்ற இரண்டு நிறங்களும் இயற்கையில் தாவர விலங்குகளிலிருந்து எளிதில் தயாரிக்கப்படும் சாத்தியங்கள் இருக்கையில், நீலநிறம் இண்டிகோவிலிருந்து மட்டுமே கிடைக்கின்றது.

 நீலி குறுஞ்செடி இந்தியாவின் தென்பகுதியிலும், வங்காளத்திலும் அதிகம் பயிராகிறது. இதற்கு வண்ணான் அவுரி என்ற பெயரும் உண்டு. 

நீலியின் இண்டிகோ சாயம் மிக பழமையானது இந்த  நீலச்சாயம் கிருஸ்துவுக்கு  மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, ஜெர்மானிய இண்டிகோவான Isatis tinctoria என்னும் செடியிலிருந்து எடுக்கப்படும் வோட் (woad) எனப்படும். நீலச்சாயத்துக்கு  முன்னரே புழக்கத்தில் இருந்திருக்கிறது. அதைக்காட்டிலும் மிகுந்த அடர்த்தி கொண்ட நீலியின்  சாயமே அசல் இண்டிகோ சாயம் எனப்படுகின்றது.. உயர்ந்த  தரமும் நீடித்திருக்கும் தன்மையினாலும் நீலியின் சாயம் நீலத்தங்கமென்றும், சாயங்களின் அரசன் என்றும் உலகெங்கிலும் குறிப்பிடப்படுகிறது

 கடுகு குடும்பத்தை சேர்ந்த ஜெர்மானிய இண்டிகோதான் நீலிக்கு முன்னரே புழக்கத்தில் இருந்தது என்று வாதிடுவோர் உண்டு. இதற்கு ஆதாரமாக எகிப்தின் மம்மிகளை இறுக்கமாக சுற்றியிருக்கும் லினென் துணிகளில் நீலச்சாயத்தில் கரையிட்டிருப்பது சொல்லப்படுகின்றது. இந்த துணிகள் 2400 BC யை சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டிருக்கின்றன.

எகிப்தும் மெஸ்படோமியாவும் துருக்கிக்கு மிக அருகிலிருப்பவை, ஜெர்மானிய இண்டிகோ செடியின் பல சிற்றினங்கள்  துருக்கியை சேர்ந்தவை எனவே மம்மிகளின்  லினன் துணிகள் ஜெர்மானிய நீலத்தைதான் கொண்டிருக்கின்றன என்ற கருத்தும் வலுவாக  முன் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டு நீலச்சாயங்களும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாதவை என்பதால் இவ்விஷயம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே  இருக்கிறது.

 நீலியின் இண்டிகோ சாயத்தின் பயன்பாடு  வெண்கல காலத்தில், மிகப்பண்டையதும் 5 மில்லியன் மக்களை கொண்டதாகவும் இருந்த  சிந்து சமவெளி நாகரிகத்திலேயே  (கிமு 3300-1300) இருந்திருக்கிறது, அகழ்வாய்வில் கிடைத்த அவுரியின் விதைகளும், நீலச்சாயமிடப்பட்ட துணிகளும் 2500 -1700 BC சேர்ந்தவைகள் என கணக்கிடப்பட்டது.

 கிரேக்கர்கள் இந்த நீலச்சாயத்தை’’ இந்தியாவிலிருந்து வந்தது என்னும்’’ பொருளில் இண்டிக்கான் ‘indikon’, என்று குறிப்பிட்டார்கள். அந்தச் சொல் பின்னர் ஆங்கிலத்தில் ’இண்டிகோ’வானது (indigo). இச்செடியின் மற்றொரு பெயரான நீலி என்பது சமஸ்கிருதத்தில் அடர்நீலமென்பதை குறிக்கும் சொல்லாகும். இதிலிருந்தே அரபி மொழியின் நீல நிறத்தை குறிக்கும் அல்-நீல் என்னும் சொல்  உருவானது (al-nil). அரபி அல்- நீல் ஸ்பானிஷ் மொழியில் அநீல் ஆனது  (anil).  இவை அனைத்தும் குறிப்பது நீலி என்னும் இண்டிகோவின் நீலச்சாயத்தைத்தான்  ஸ்பானிஷ் அநில் என்பதிலிருந்துதான் செயற்கை சாயங்களை குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான அனிலின் (aniline) வந்தது.

 சிலுவை போர்களின் போது,கிழக்காசியாவில் இருந்து தருவிக்கப்பட்ட இண்டிகோ மத்திய கிழக்கு நாடுகளின்  சந்தைகளில் தாராளமாக புழங்கியதை இத்தாலிய வணிகர்கள்  முதன்முதலாக கவனித்தனர்

ஜெர்மனி உள்ளிட பல நாடுகள் இண்டிகோ ஒரு கனிமத்தாது என நினைத்து சுரங்கங்கள் தோண்டி இண்டிகோவை எடுக்கும் முயற்சிகளையும் துவங்கவிருந்தனர்.  1200’களில் ஆசியாவிலிருந்து திரும்பிய மார்க்கோபோலோ இண்டிகோ நீலச்சாயம் கனிமத்தாதுவிலிருந்தல்ல, ஒரு தாவரத்திலிருந்து  பெறப்படுகிறது என்பதை விவரித்தார்

 12’ம் நூற்றாண்டின் தீராப்பயணி பிளைனியும் இந்தியாவின் நீலச்சாயமான இண்டிகோ  தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது என்று அவரது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஐரோப்பாவில் அப்போது அவுரி விளையவில்லை . தொலைவு மற்றும் அதிக  விலை காரணமாக மிக குறைந்த அளவிலேயே அவுரியை  இறக்குமதி செய்ய முடிந்தால் ஐரோப்பாவில் விளைந்த வோட்’டில் இருந்த ஜெர்மானிய நீலமே அதிகம் பயன்பாட்டில் இருந்தது.

  1498 வில் இண்டிகோவை கடல்வழி பெறுவது எளிதென கண்டுபிடிக்கப்பட்ட போது இத்தாலியர்கள் பெருமளவில் இண்டிகோ பயிரை  இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய துவங்கினர். அதற்கு முன்பு வரை அங்கு பயன்பாட்டிலிருந்த ஜெர்மனி நீலச்சாயமான வோட்’டை விட இந்திய இண்டிகோ சாயம் மிக உயர்தரமானதாயிருந்தது. இதனால் ஜெர்மனிய இண்டிகோ தயாரிப்பாளர்கள் தங்கள் தொழில் பாதிப்படைந்ததில் திகிலடைந்து இந்திய இண்டிகோ’வை ’’சாத்தானின் சாயம்’’ என்று குறிப்பிட துவங்கினர்.

15 ஆம் நூற்றாண்டில் வாஸ்கொடகாமா சீனாவிற்கு கடல்வழியை கண்டறிந்த பின்னர் இண்டிகோ நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டது. 1600’களில் மிக அதிக அளவில் இந்தியாவில் இண்டிகோ பயிர்கள் சாகுபடி செய்யபட்டபோதுதான் ஐரோப்பாவுக்கு நீலி ஏற்றுமதி வெகுவாக அதிகரித்தது. ஐரோப்பாவின் இண்டிகோ தேவைகளின் பொருட்டு இந்தியா, தென்னமரிக்கா, மற்றும் ஜமைக்காவில் அதிக அளவில் அவுரி  சாகுபடி செய்யப்பட்டது.

இண்டிகோவின் நீலக்கறை இந்திய வரலாற்றிலும் அழுத்தமாக படிந்திருக்கிறது.

பிரிட்டிஷார் இந்தியாவில் கால்பதித்த போது முதன்முதலாக அவர்கள் விலைமதிப்பு மிக்க இந்தியப்பொருளாக கவனித்தது  இண்டிகோ பயிரான நீலியைத்தான். அப்போது முதல்தரமான நீலி வடகிழக்கு ஆக்ராவில் விளைந்தது

இண்டிகோ நீலச்சாயம் ராணுவ சீருடைகளிலிருந்து அரசியின் படுக்கை விரிப்புக்கள் வரை அனைத்துரக துணிகளையும் சாயமேற்றியது .ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகள் காலம் காலமாக பயிரிட்டுக்கொண்டிருந்த  உணவுப்பயிர் வகைகளை பயிரிட அனுமதி மறுத்து, தங்கள் சுயலாபத்திற்காக கட்டாயப்படுத்தி பயிரிடச் செய்த பயிர்வகைகளில் அவுரியும் ஒன்று

 வங்காளத்தில், ஆங்கிலேயர்கள் ஜமீன்தார்கள் மூலம் அவுரி விவசாயம் செய்யச் சொல்லி விவசாயிகள் அனைவரையும் வற்புறுத்தினார்கள். மிகப்பெரிய சுரண்டலுக்கு ஆளான வங்காள விவசாயிகளால் அவுரி ஏராளமாக பயிரடப்பட்டு,  19 ஆம் நூற்றாண்டில், வங்காளம் உலகிலேயே மிகப்பெரிய இண்டிகோ உற்பத்தியாளர் என்று பெயர் பெற்றது. ஆனால் உலக சந்தையின் இண்டிகோ லாபத்தில் வங்காள விவசாயிகளுக்கு வெறும் 2.5 சதவீதம்தான் கொடுக்கப்பட்டது. மேலும் சாயத்தொழிற்சாலை முதலாளிகளும், அரசாங்க அதிகாரிகளும் கூடுதல் உழைப்பிற்காக விவசாயிகளை துன்புறுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது

 1848’ல் வங்காளத்தில் ஃபரித்பூரின் நீதிபதியான ஆங்கிலேயர் இ.டி.லதூர்,   “இங்கிலாந்தில் வந்திறங்கும் ஒவ்வொரு இண்டிகோ சாயப்பெட்டியின் மேலும், மனித இரத்தக் கறை படிந்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார்..

. 1858-59’ ல் அவுரி சாகுபடி செய்யச் சொல்லி பிரிட்டிஷாரால் கட்டாயப்படுத்தப்படும் இந்திய விவசாயிகளின் கண்ணீரை சொல்லுவதாக அமைந்த ’’நீலக்கண்ணாடி’’ என்று பொருள்படும் ’’நீல்தர்பன்’’ என்னும் பெயரிலான புகழ்பெற்ற வங்காள  நாடகாசிரியர்  தினபந்து மித்ரா’வின் நாடகம் வங்காளத்தில் பெரும்புகழும், அதற்கிணையான எதிர்ப்பையும் பெற்றது. பிரிட்டிஷ் அரசால் இந்த நாடகம், இதே பெயரிலான நூல்,  அதன் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. கிறித்துவ போதகரான டாக்டர் லாங் இந்த நாடகத்தை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தற்காக  சிறைத்தண்டனை பெற்றார்.

 பிரபல வங்காள நாடகாசிரியரும், எழுத்தாளரும், நடிகரும், இயக்குநருமான கிரீஷ் சந்திர போஸ் தனது  நேஷனல் தியேட்டர் என்னும் நாடக நிறுவனத்தின் மூலம் நீலக்கண்ணாடியை வங்காளத்தின் மூலை முடுக்குகளிலும் டெல்லி மற்றும் லக்னோவிலும்  காட்டினார்.  

விவசாயிகளின் .நிலைமை மிகவும் மோசமானபோது 1859-60 ல் இண்டிகோ புரட்சி 1 எனப்படும் பெரும் புரட்சி வெடித்தது . அப்புரட்சியை பிரிடிஷ் அரசு மிக கொடூரமாக அடக்க முயன்றது. 49 கொலைகள், கால்நடைகளும் மனிதர்களும் கடத்தப்பட்டது, பிற பயிர்கள் எரியூட்டப்பட்டது என பல கொடுமைகளுக்கும், வறுமை, அடக்குமுறை ,வன்முறை போன்ற பல இன்னல்களுக்கும் இடையில் போராட்டம் தொடர்ந்து நடந்தது. 

பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும் விவசாயிகளுக்கு முழுஆதரவளித்தார்கள். 

 அரசு தலையிட்டு இந்த புரட்சிக்கு காரணமானவற்றிற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.  விசாரணைக்குழு இறுதி அறிக்கையில் பல அநீதிகள் விவசாயிகளுக்கு இண்டிகோ பயிரிடுவதில் நடந்திருப்பதை உறுதி செய்தது..

  போராட்டம் வெற்றி பெற்று,   விவசாயிகளை அவுரி பயிரிட கட்டாயப்படுத்தக்கூடாது என்னும் தீர்ப்பும் அறிவிக்கபட்டது. இண்டிகோ சாயத்தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 1860 களுக்கு பிறகு அவுரிசாகுபடி வெகுவாக வங்காளத்தில் குறைந்தது. இந்த  போராட்டத்துக்கு நீலக்கண்ணாடி நாடகம் அடித்தளமாக இருந்தது 

பல வருடங்களுக்கு பிறகு இதே இண்டிகோ சாகுபடி பிரச்சனை பீகாரிலும் உருவானது.

 1813’லிருந்து பீஹாரில் இண்டிகோ தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன.  1850’லிருந்து பிற உணவுப்பயிர்கள் ஏதும் பயிரிடமுடியாமல், நிலமற்ற ஏழை விவசாயிகளும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் காலனிய அரசின் கட்டாயத்தின் பேரில் அவுரியை பயிரிட்டு வந்தனர்.   

 அறுவடை செய்த அவுரிச்செடியினை மிகக் குறைந்த விலையில் அரசு ஆதரவு பெற்ற பண்ணையார்களுக்கு விற்கவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். 1910’களில் இம்மாவட்டத்தில் பஞ்சம் எற்படும் நிலை உருவானபோதும் விவசாயிகளில் துன்பங்களைப் பொருட்படுத்தாத காலனிய அரசு அவர்கள் விற்கும் அவுரி மீது ஒரு புதிய வரிகளை விதித்தும், அடிக்கடி அவ்வரி விகிதத்தை அதிகரித்தும் வந்தது.

 இதனால் 1910’ல்  அரசுக்கு எதிராக கலகங்கள்  துவங்கின. தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915’ல் இந்தியா திரும்பியிருந்த காந்தியின் கவனத்துக்கு 1917’ல் பீகாரின்  சம்பரண் கிராமத்து விவசாயிகளின் நிலை கொண்டு செல்லப்பட்டது. நேரடியாக சம்பரண் வந்த காந்தி அங்கு ஆசிரமம் ஒன்றை நிறுவி அப்பகுதி மக்களின் குறைகளை விரிவாகக் கேட்டறிந்தார். 

சம்பரண் மக்களை  ஒன்றிணைத்து அரசுக்கு வரி கொடாமல் அறவழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டுமாறு காந்தி ஊக்குவித்தார். போராட்டம் வலுவடைந்தது. அறவழி போராட்டத்தை காந்தி  தொடர்ந்து நடத்தியதால், போராட்டக்காரர்களின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட பண்ணையார்கள் இறங்கி வந்து விவசாயிகளுடன் பஞ்ச காலம் முடியும் வரை வரி வசூலும், வரி விகித உயர்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக உடன்படிக்கை செய்து கொண்டனர். அவுரி பயிரிடுவோருக்கு அதிக விலை கொடுப்பதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தின் போதுதான் காந்தி முதன்முதலில் “பாபூ” என்றும் “மகாத்மா” என்றும் அழைக்கப்பட்டார்.

 ஒரு நூற்றாண்டு தொடர்ந்த இந்த சுரண்டலை மகாத்மா காந்தி அறவழியிலேயே முற்றிலும் ஒழித்தார்..தனது சுயசரிதையில் இந்த வெற்றி குறித்து ’”இண்டிகோவின் நீலக்கறையை போக்கவே முடியாதென்னும் மூடநம்பிக்கையை இவ்வாறாக முற்றிலும் பொய்யாகி கறையை அழித்தோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.2  

மிக அதிகவிலை கொண்டிருந்த இறக்குமதி செய்யப்பட்ட இண்டிகோவிலிருந்து நீலச்சாய்மேற்றப்பட்ட உடைகள் துவக்க காலத்தில் அரச குடும்பத்தினர்களுக்கும்  செல்வந்தர்களுக்கும் மட்டுமேயாயிருந்தது. அப்போதுதான் இதற்கு மாற்றாக அதே போலிருக்கும் மலிவான நீலச்சாயமளிக்கும் ஜெர்மானிய இண்டிகோ சாகுபடி ஐரோப்பாவில்  உருவாகியது. ஐரோப்பிய காலநிலை ஜெர்மானிய இண்டிகோ விளைச்சலுக்கு ஏற்றதாகவும் இருந்தது.

நிறத்தில் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லாவிட்டாலும் ஜெர்மனிய இண்டிகோ சாயம் அப்போது போலி இண்டிகோ என்றும்  அழைக்கப்பட்டது .இந்த .செடியிலிருந்து சாயமுண்டாக்குதல் அசல் இண்டிகோவுக்கு நிகரான நேரத்தையும் உழைப்பையும் பொருட்செலவும் கொண்டிருந்தாலும் கிடைத்த சாயத்தின் அளவு  இதில் மிக குறைவாகவே இருந்தது அசல் இண்டிகோவிற்கு இணையான தாவரங்களின் தேடுதல் அப்போது பல நாடுகளில் மும்முரமாக நடந்தது. 

போலி என்றறியப்பட்டாலும் ஜெர்மானிய இண்டிகோவின் சந்தையும் மிகபிரபலமாயிருந்தது. இண்டிகோ நீலச்சாயமிட்ட துணிகளின் தேவை உலகளவில் வெகு அதிகமாந்தானதாகவே இருந்ததால் இந்த பயிரின் சாகுபடியும் அசல் இண்டிகோ பயிருக்கு இணையாகவே இருந்து வந்தது

17ம் நூற்றாண்டு வரை நீலியுடன் வோட்’டும் புழக்கத்தில் இருந்து வந்தது. நீலி இண்டிகோவின் விலை மிகவும் குறைந்த போது தான். ஜெர்மானிய இண்டிகோவின் பயன்பாடு முற்றிலுமாக நின்று போனது. நீலியின் சாயம் பல நேரடி மற்றும் மறைமுக வணிக போர்களுக்கும் காரணமாயிருந்தது. பல பேரரசுகளை நீலி வளமாக்கியும் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட இண்டிகோ செடி சாகுபடி செய்யப்பட்ட பல  நாடுகளில்  இதன் நீலக்கறை  மிக அழுத்தமாக  படிந்து இருக்கிறது.

அமெரிக்காவில் 1744ல் எலிஸா லூகாஸ் எனும் பெண் அவரது சொந்த பண்ணையில் இண்டிகோ பயிரை  முதன்முதலில் சாகுபடி செய்தார். 3

இத்தாலியின் பெரிய நகரங்களில் ஒன்றான ஜெனோவா (Genoa)   இந்த நீல துணிகளுக்கான மிகப்பெரிய சந்தையை கொண்டிருந்தது. இந்நகரின் விற்பனையாளர்கள் ஐரோப்பாவின் அனைத்து இண்டிகோ சாயதொழிற்சாலைகளுடனும் வர்த்தக தொடர்பில் இருந்தார்கள் அக்காலகட்டத்தில்  மீனவர்கள், சுரங்க மற்றும் துறைமுக தொழிலாளிகளின் வசதிக்கும், பிரியத்துக்குமுரிய உடையாக  அதிகம் துவைக்க வேண்டியிருக்காத,  நீண்ட நாள் உழைக்கும் இண்டிகோ நீலச்சாயமிட்ட முரட்டுத் துணிகளில் தைக்கப்பட்ட உடைகள் இருந்தன.

 அங்கு ஃப்ரெஞ்ச் மொழியும் பரவலாக பேசப்பட்டு கொண்டிருந்ததால் இந்த முரட்டு துணியாலான  நீல உடைகள் அனைவராலும் Bleu de Gênes  -ஜெனோவாவின் நீல உடை என்றழைக்கப்பட்டது, அதுவே  ஆங்கிலத்தில்  ஜீன்ஸ் ஆனது. 

இந்த நீல துணி ஃப்ரெஞ்ச் நகரின் மிக பிரபலமான  நெசவாளர்களின் நகரமான  நிம்ஸ்’க்கு வந்து சேர்ந்தது (Nîmes).  அத்துணியை சாயமேற்றுவதில் பல கட்ட சோதனை முயற்சிகளுக்கு பின்னர் நிம்ஸ் நெசவாளர்கள் கம்பளி மற்றும் பட்டின் இழைகளை இணைத்து இரண்டு தனித்துவமான பரப்புகளைக் கொண்ட ஒரு துணியை உருவாக்கினர். இருவிதமான இழைகளின் இணைப்பில் உருவான அவ்வுடையின் நெடுக்கில் இருக்கும் இழைகள் இண்டிகோவின்  நீலத்திலும். குறுக்கு இழைகள் வெள்ளையாகவும் சாயமேற்றப்பட்டன. இத்துணிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஜீன்ஸ்கள் பிரத்யேகமாக வெளிப்புறம் நீலத்திலும்,  வெள்ளை அல்லது மங்கிய    நீலம் உட்புறமாகவும் இருந்தது. வெகு விரைவில் பிரபலமான இந்த ஜீன்ஸ்களின் ஃப்ரெஞ்ச் மொழியில் அந்நகரின் பெயரில்  de Nîmes என்றழைக்கபட்டது. அதுவே ஆங்கிலத்தில்  டெனிம்- denim எனப்பட்டது.

 டெனிம் ஜீன்ஸ்களின் வரவுக்கு பிறகு இண்டிகோ சாயமிட்ட உடைகள் சமூகத்தின் உயரடுக்கை சேர்ந்தவர்களுக்கு மட்டுமேயானவை என்பதிலிருந்து உழைக்கும் மக்களின் உடையாகவும் ஆனது .தோராயமாக ஒரு டெனிம் ஜீன்ஸ் தயாரிக்க 3 கிராமிலிருந்து 12 கிராம் வரை இண்டிகோ சாயம் தேவைப்பட்டது. 

 ஐரோப்பாவின் தொழில்புரட்சியும் அமெரிக்காவின்  செல்வச்செழிப்பு மாக  உழைக்கும் வர்க்கத்தினருக்கான தேவை மிக அதிகரித்து,  இயற்கை சாய உற்பத்தியின் பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டதால்  விலை மலிவான, செயற்கை நீலச்சாயங்களுக்கான முன்னெடுப்புக்கள் பல நாடுகளில் வேகமாக துவங்கப்பட்டன 

1870’ல் ஜெர்மனியின் வேதியியலாளர் அடோல்ப் வான் பேயர் செயற்கை இண்டிகோ சாயத்தை  ஐசட்டின் (isatin) என்னும் ஒரு கரிமப்பொருளில் இருந்து உருவாக்கினார் .எட்டு வருடங்கள் தொடர்ந்த ஆராய்ச்சிக்கு பிறகு அவரே பினைல் அசிட்டிக் அமிலத்திலிருந்தும் பின்னர்  சின்னமிக் அமிலத்திலிருந்தும் செயற்கை இண்டிகோவை வெற்றிகரமாக உருவாக்கி, தயாரிப்பின் சூத்திரங்களை ஜெர்மன் நிறுவனமான  BASF ற்கு 1897ல் விற்றார்

 1902 ற்குள் மெல்ல மெல்ல இயற்கை இண்டிகோவின் இடத்தை செயற்கை இண்டிகோ பிடித்துக் கொண்டது.செயற்கை நீலச்சாயம் கிலோ 400 ரூபாய்களுக்கு சந்தைப்படுத்தப்பட்டபோது 3000 ரூபாய்களுக்கு விற்பனை ஆகிக்கொண்டிருந்த இயற்கைச்சாயம் அதனோடு போட்டிபோட முடியாமல் பின்வாங்கியது,. மேலும் இயற்கை, செயற்கை சாய்ங்களுக்கான வேறுபாடென்பதும் பயனாளிகளால் கண்டறிய முடியாதபோது இயற்கை சாயத்துக்கான தேவை முற்றிலுமாக  இல்லாமலானது.அடுத்த இருபது ஆண்டுகளில் இந்திய இயற்கை இண்டிகோ தொழில்துறை பெரும்பாலும்  அழிந்தது.

 இப்போது இயற்கை இண்டிகோ சாய்த்தொழிலில் அரிதாக சில நாடுகளே ஈடுபட்டிருக்கின்றன. பிரேசில், இந்தோனேசியா மற்றும் இந்தியாவில்  குடும்ப தொழிலாக வெகுசிலரே இந்த சாய முறையில் துணிகளுக்கு சாயமேற்றுகிறார்கள். அனைத்து டெனிம் ஜீன்ஸ்களும் செயற்கை நீலச்சாயமிட்டே தயாரிக்கப்படுகின்றன.  

பட்டாணிக்குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த இன்டிகோஃபெரா டிங்டோரியா குறுஞ்செடியானது முட்டை வடிவ அடர் பச்சை நிற  கூட்டிலைகளையும் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களை கொத்துக்கொத்தாகவும்  கொண்டிருக்கும். இதன் பச்சை இலைகளில் இருந்து தான் நாற்றமடிக்கும், நொதித்தல் அல்லது புளித்தல்   என்னும் விரிவான செயல்பாட்டுக்கு பிறகு நீலச்சாயம் பெறப்படுகின்றது. இன்டிகோபெரா பேரினத்தின் 50 வகைகள் இந்தியாவில் வளர்கின்றன.

அவுரிச் செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமாகவும், காய்கள் முதிர்ச்சி அடையும் போது கருப்பு நிறமாகவும் இருக்கும்    இச்செடி எங்கிருந்து தோன்றியது என்பதில் தாவரவியலாளர்களுக்கே குழப்பம் நீடிக்கின்றது  எனினும் இது ஆப்பிரிகாவை அல்லது இந்தியாவை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அறிவியல் பெயரான Indigofera tinctoria விற்கான   இணைப்பெயர்  Indigofera  sumatrana. இதன் பேரினப்பெயரான Indigo fera என்பது ’’இண்டிகோவை கொண்டிருக்கும்’’ என்றும் டிங்டோரியா என்றால் ’’சாயம்’’ என்றும் பொருள். தாவர அறிவியல் பெயர்களில்  fera என்பது அளிக்கும், கொடுக்கும், வைத்திருக்கும், கொண்டிருக்கும் என்னும் பொருளிலும் tinctoria என்பது சாயத்தையும் (Dye) குறிக்கும். பல சாயத்தாவரங்கள்  டிங்டோரியா என்னும் சிற்றினப் பெயரை கொண்டிருக்கும்,  திராட்சைக்கொடி, மாமரம் போன்ற பலவற்றின் அறிவியல் பெயர்களைப்போல பெரா என்று முடியும் சிற்றின பெயர்களையும் ஏராளமாக காணலாம்.(Mangifera indica, Vitis vinifera).

18’ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  இண்டிகோ செடிகளை நொதிக்க வைக்கும் வழிமுறைகள் குறித்த விரிவான பல பதிவுகள் கிடைத்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக அடிப்படையில் எந்த மாற்றமுமின்றி  இயற்கைசாயம் உருவாக்கும் நாடுகளில் இந்த நொதித்தல் முறை தான் இன்றும் பின்பற்றப்படுகின்றது.  

அவுரி செடிகள் மலர்வதற்கு சற்று முன்பாக, செடி சுமார் 10 செமி உயரம் இருக்கையில் அறுவடை செய்யப்பட வேண்டும், அப்போதுதான் சாயத்தின் அளவு கூடுதலாக இருக்கும் அறுவடை செய்யப்பட்ட செடிகள் மூன்று மணி நேரத்துக்குள் நொதித்தல் நடைபெறும் பெரிய   தொட்டிகளுக்கு வந்து சேர வேண்டும்.

 பின்னர் செடிகளின் இலைகள் தொட்டி நீரில் அமிழ்த்தப்படுகின்றன. செடி நீரில் மிதக்காமல் இருக்க, மரத்துடுப்புகளால் மீண்டும் மீண்டும்  அவை அழுத்தப்படும்.   .

1 மணி நேரத்தில் இலைகள் அகற்றப்பட்டு கரைசல் மட்டும் இரண்டாம் தொட்டிக்கு மாற்றப்படுகின்றது. இலைகளில் இருக்கும் நீல நிறமி குளுகோஸிலிருந்து பிரிந்து வரும் வரை நீரில் இலைகள் ஊறி நொதிக்க வேண்டும்.  21 மணி நேர புளித்தல் அல்லது  நொதித்தலுக்கு பிறகு நாற்றமடிக்கும் கரைசல் வடிகட்டப்பட்டு மேலும் தெளிவாக்கப்பட்டு மற்றொரு தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. இப்படி புளிக்க/நொதிக்க  வைப்பதால் அதில் உள்ள கிளைகோசைட் இண்டிகான் (glycoside indican) என்னும் பொருள் இண்டிகோட்டின் (indigotin) என்னும் நீலச்சாயமாக மாறுகின்றது.  

இந்த மூன்றாவது தொட்டியில் சேமிக்கப்படும் நீரிலிருந்து நீல நிறமிகள் தொட்டியின் அடியில் படிகின்றது. படிந்திருக்கும் நீலக்குழம்பும், தெளிந்த நீரும் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.  நீலக்குழம்பு செங்கல் சூளைகளில்  கொதிக்க வைக்கப்பட்டு,  களிமண்ணை போல தொட்டியின் அடியில் படிந்திருக்கும் குழம்பு வெயிலில் உலர்ந்தபின்னர் கட்டிகளாக்கப்படும்.. இதுவே இண்டிகோ நீலச்சாயம்.

இண்டிகோ நீலமானது பிற சாயங்களிலிருந்து நீரில் கரையாத தன்மையால் வேறுபடுகிறது. எனவே  முதலில் ஒடுக்க வினைகளால் (Reduction) கரைக்கும் தன்மைக்கு   கரைசலை கொண்டு வந்து,  பின்னர்  ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டு நீல நிறம் கொண்டு வரப்படுகின்றது.   காற்று, வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் இலைகளில் இருக்கும் இண்டிகோ நிறமியின் அளவு இவையனைத்தும் சரியாக அமைகையில் இந்த  நிறமாற்றம் நிகழ்கிறது.

 இலைகள் அகற்றப்பட்ட  மரகதப்பச்சை கரைசல் காற்றுடன் வினை புரிகையில், மாயம் போல அழகிய அடர்  நீல நிறம் உண்டாகிறது  200 கிலோ நீலி இலைகளிலிருந்து 1 கிலோ சாயம் கிடைக்கும். இண்டிகோவின் மற்றொரு பிரெத்யேக இயல்பு, அது சாயமிடப்படும் துணியின் மேற்பரப்பில் மட்டும் தங்குகிறது என்பதுதான்.

 அசல் இண்டிகோவின் நீலச்சாயத்தில் சாயமேற்ற வேண்டிய துணியை மீண்டும் மீண்டும் பலமுறை அமிழ்த்தியும் உலரவும் செய்த பின்னர்தான்  தேவையான அளவில் துணியில் இண்டிகோவின் பிரத்யேக  நீலச்சாயம் ஏற்றப்படுகின்றது.  

இண்டிகோ நொதித்தலானது கவனமுடன் செய்யப்படாவிட்டால் எளிதில் பிழையாகும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல இடங்களிலும், இந்தோனேசியாவிலும் இண்டிகோ சாயமுண்டாக்குதலென்பது புனிதமானதாக கருதப்பட்டு, பல சடங்குகளுக்கு பின்னர் நடைபெறுகிறது. 

இந்திய கிராமங்களில் சாயத்தொட்டிகளில் செடிகளை போடும் முன்பு  வழிபாடுகள்  நடக்கும். ஆண்களை விலக்கிவிட்டு பல சாயத்தொழிற்சாலைகளில் பெண்கள் மட்டும் சாயத்தை கையாளுகிறார்கள் நீலச்சாய தொட்டிகளை ஆண்கள் பார்க்க கூடாதென்னும் விதிகள் கூட இருக்கின்றன.

முற்றிலும் மாறாக நீல அம்மன் பெண்களை சாயமுண்டாக்க அனுமதிக்கமாட்டாள் என்னும் நம்பிக்கை இருக்கும் பல பகுதிகளில் சாயத்தொட்டிகளில் ஆண்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்.

.இண்டிகோ விவசாயமும் சாய உற்பத்தியும் பிரதானமாக இருக்கும் இந்திய கிராமங்களில் பிறந்த குழந்தையை இண்டிகோ நீலச்சாயமுள்ள துணியில் முதன்முதலில் படுக்க வைப்பது அக்குழந்தையை நோயிலிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் காப்பாற்றுமென்னும் நம்பிக்கையும் உள்ளது. 

 புராதனமான இந்த சாயமேற்றும்  முறை மட்டுமல்லாது ’’நேரடி சாயமேற்றுதல்’’ என்னும் பிறிதொரு  முறையும் ஐரோப்பிய மற்றும் தென் தமிழக பகுதிகளில் புழக்கத்தில் இருக்கிறது. இம்முறையில் அவுரி இலை விழுதுடன் சுண்ணாம்பும், மாவுச்சத்தும் , நிறமிக்கு நீரில் கரையும் தன்மையை உருவாக்கும் ஆர்பிமெண்ட் எனப்படும் (Orpiment) எரிமலைக்குழம்பு அல்லது கொதிநீரூற்றுக்களின் வண்டலிலிருந்து கிடைக்கும் பொன்மஞ்சள் நிறமான  கனிமத்தாதுவையும் கலந்து  பசை போலாக்கி நேரடியாக துணிகளில் பிரஷ்மூலம் தேய்க்கப்பட்டு சாயமேற்றப்படும்..17, 18 ஆம் நூற்றாண்டுகளில் பரவலாக நடைமுறையில் இருந்த இம்முறை  தொட்டிச்சாய முறையை போல (vatting) பிரபலமாகாமல்  அப்படியே வழக்கொழிந்துபோனது. மிகச்சில இடங்களில் இப்போதும் இது புழக்கத்தில் இருக்கிறது

 மிகை சாயமேற்றும் இந்தோனேசிய முறையில் இண்டிகோவுடன் நோனி (Morinda citrifolia) மரவேர்களும் சேர்க்கப்பட்டு ஆழ் நீலசாயமுண்டாக்கபட்டது.  1980 களுக்கு பிறகு நோனி வேர்களுக்கு மாற்றாக நேப்தால் சாயம் சேர்க்கப்பட்டது. செயற்கை சாயங்களின்  காலம் துவங்கியதை இந்த நேப்தால் சேர்ப்பு முன்னறிவித்ததென்று கூட  சொல்லலாம்.  நீல சாயமேற்றும் எந்த நாட்டிலும் நோனி வேர்கள் இப்போது பயன்பாட்டில் இல்லை 

 கிழக்கு ஆசியாவின்  Polygonum tinctorium, மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்காவில் அனீல் என்றழைக்கப்படும் செடியான Indigofera suffruticosa  மற்றும் இந்தியாவின் நடால் இண்டிகோ எனப்படும்  Indigofera arrectaஆகியவையும் இயற்கை இண்டிகோ நீலச்சாயத்தைபோலவே சாயங்களை அளிக்கும்.  ஆனால் இவற்றிலிருந்து  அவுரியிலிருந்து கிடைப்பதை போலல்லாது மிக குறைந்த அளவே சாயம் கிடைக்கும்.

 Murex brandaris எனப்படும் கடல் நத்தைகளின் சுரப்பிகளிலிருந்து இயற்கை இண்டிகோவின் அதே நீல நிறத்தில் சாயம் எடுக்கப்படுகின்றது இதற்கு டைரியன் ஊதா என்று பெயர் (Tyrian purple) ,இந்த சாயம் இதுவரை செயற்கையாக தயாரிக்கப்படவில்லை

,ஜப்பான் மற்றும் தாய்வானில்  இண்டிகோவுக்கு  இணையான நீலச்சாயத்தை கனகாம்பர குடும்பத்தை சேர்ந்த Strobilanthes cusia என்னும் செடியிலிருந்து எடுக்கிறார்கள்.  100 வயதிற்கு மேற்பட்ட ஜப்பானியர்கள் அதிகமாக வாழும், மிக பிரத்யேகமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றும் ஒகினாவா தீவின்  உலக பிரசித்தி பெற்ற நீல கைக்குட்டைகள்  இந்த செடியின் இயற்கை நீலத்தில் தான் சாயமிடப்படுகின்றன.4

சமீபகாலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் உத்ரகாண்டில் மீண்டும் நீலி சாகுபடி துவங்கப்பட்டிருக்கிறது உத்ரகாண்டில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீலியை சாகுபடி செய்துகொண்டிருக்கின்றனர்.  இந்தப்குதிகளில் உணவுப்பயிர்களின் சாகுபடியில் எந்த மாற்றமும் இல்லாமல் தரிசுநிலங்களில் மட்டும் நீலி பயிராகின்றது 

 இயற்கை இண்டிகோவின் தேவை வெகுவாக குறைந்துவிட்டிருப்பினும், மருத்துவம், உணவுமுறைகள் உள்ளிட்ட அனைத்தும் இயற்கை வழிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் மீண்டும் இயற்கை இண்டிகோ தொழில் மலரும் வாய்ப்பும் இருக்கிறது. நீலிச்சாயமுண்டாக்கும் இந்தியாவின் பாரம்பரிய அறிவு பாதுகாக்கப்பட வேண்டியது மட்டுமல்ல  புதிய தலைமுறைகள் அறிந்துகொள்ள வேண்டியதும் கூட.

  நவீன செயற்கை சாயங்களினால் உருவாகி இருக்கும் சூழல்மாசு மற்றும் அதிகரித்திருக்கும் நோய்களை எண்ணிப்பார்க்கையில்   நமது  சூழலையும், பாரம்பரியத்தையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க நீலி சாகுபடியை அதிகரித்து, இயற்கை நீலச்சாய பயன்பாட்டுக்கு திரும்புவதே உகந்தது.

மேலதிக தகவல்களுக்கு:

  1. Indigo Revolt in Bengal | INDIAN CULTURE
  2. Gandhi’s Satyagraha in Champaran | INDIAN CULTURE 
  3. Eliza Lucas Pinckney | Encyclopedia.com
  4. https://japanobjects.com/features/indigo

தே, ஒரு இலையின் வரலாறு

ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி

ஜெ தளத்தில்  தே குறித்த கடிதம் வந்த வாரத்திலேயே’ தே, ஒரு இலையின் வரலாறு’ வாங்கிவிட்டேன்.  இன்று June 12, 2021 அதிகாலை தொடங்கி ஒரே மூச்சில்  3 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன்.

ஏழை விதவையின் மகனான  21 வயது , ராய் தேயிலை அல்லது புகையிலை  தோட்ட மேலாளராக தனக்கு வேலை  தேவை என்னும் விளம்பரத்தை  வெளியிட்டதில் தொடங்கும் நாவல்  மொத்தம்  250 பக்கங்களில்  தே’ இலையின் வரலாறு மற்றும் வளர்ச்சியை முழுக்க சொல்லுகின்றது. சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பு சிறப்பு..தட்டச்சு பிழை திருத்தலில் மட்டும் இன்னும் சிறிது கவனமாக இருந்திருக்கலாம் .

கார் ஓட்ட தெரியும் என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு  தேயிலை வளர்ப்பு குறித்தும், நியூசிலாந்தை குறித்தும்  ஏதும் அறியாமல், அங்கு பேசப்படும் மொழியுமே தெரியாமல்  துணிச்சலாக புறப்படும்  ராயுடன்  விமான நிலையத்தில் குடியுரிமை சரி பார்த்ததிலிருந்து  பயணித்து தேயிலையின் வரலாற்றை, வளர்ச்சியை முழுக்க  அறிந்து கொண்டது   ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அளித்தது .

1747 ல் நடக்கும் ஒரு படகு கொள்ளையில் தொடங்கும் நாவல் அதன்பிறகு 1559’ல் எழுதப்பட்ட தேயிலை குறித்த  முதல்  குறிப்புகளிலிருந்து துவங்கி வரிசைக்கிரமமாக தேயிலையின் வரலாறு,  கண்டுபிடிப்பு,  தேநீர் தயாரிப்பு அதன் வகைகள், புதிய பிராண்டுகள், கலப்படங்கள், சட்டங்கள், அடிமைகள், கூலி தொழிலாளர்கள், பல்லாயிரக்கணக்கான  இறப்புக்கள் என்று  விரிகின்றது.

தேயிலையின் தாவரவியல் சார்ந்த  தகவல்களை தவிர, இதில் சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை குறித்து  எந்த அறிதலும் இன்றி கடைகளில் வாங்கி வந்த தேயிலைத்தூளை கொதிநீரில் இட்டு  ஒரு கோப்பை தேநீரை ரசித்து அருந்தி கொண்டிருந்திருக்கிறேன் என்பதுதான் பக்கத்துக்கு பக்கம் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. அந்த காலத்துக்கே மிகை என்னும் படிக்கு பல கொலைகள், மரண தண்டனைகளும் , பிற பல சுவாரஸ்யமான சம்பவங்களும்  இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன.

போர்ச்சுக்கல் அரசரொருவரின் மகளான காத்தரின் தனது வருகையை தெரிவிக்க எழுதப்பட்ட கடிதம் அவளது வருங்கால கணவருக்கு அனுப்படுகையில் அவர் நிறை கர்ப்பமாக இருக்கும் காதலியின் வீட்டில் இரவுணவு அருந்திக் கொண்டிருக்கிறார். இளவரசியின் வருகைக்கென அனைத்து வீட்டின் முன்பும் ஏற்றப்பட்டிருக்கும் கொண்டாட்ட நெருப்பு அந்த காதலியின் வீட்டு முன் ஏற்பட்டிருக்கவில்லை. காத்தரின் வரதட்சணை பொருட்களில் ஒரு பெட்டி தேயிலையும் இருக்கிறது.

சீனாவில் மிக சாதாரணமாக புழகத்தில் தேநீர் வந்து பல நூறு வருடங்கள் கழித்தே  ஐரோப்பாவிற்கு  வந்திருக்கிறது. 1652 களில் உருவான  முதல்  காபி ஹவுஸ்களில் பார்சல்  காப்பியும் தேநீரும்  வழங்கப்பட்டிருக்கிறது. உயர்குடியினர் பல தேநீர் கடைகளுக்கு அடுத்தடுத்து செல்லும் வழமையும், அவர்களை  தூக்கி செல்ல ’செடான்’ இருக்கைகளும் தூக்கு கூலிகளும் இருந்திருக்கிறார்கள். தேயிலைக்கான  ஏலம் கொளுத்தப்பட்ட மெழுகுதிரி ஓரங்குலம் எரிந்து முடியும் வரையிலும் ஏற்கபட்டிருக்கிறது, தேநீர், பானம் என்பதால் அதன் அளவுக்கேற்ப வரிவிதிக்க பட்டிருக்கிறது.

1757’ல்  ‘வீட்டில் கிடைக்கும் நல்ல  உணவில் திருப்தியில்லாமல் எங்கோ தொலை தூரத்தில் கிடைக்கும் சுவைக்காக மக்களின் கொடிய நாக்கு ஏங்கும் நிலை’  என்று  முதல் அத்தியாயத்தின் துவக்கத்தில்  ஜோனஸ்  சொல்லியிருப்பது நியாயம்தான் என்னும்படிக்கு  மக்களின் ஆதரவுடன் நடந்த தேயிலை கடத்தலும், அவ்வியாபரங்களில் நடந்த பல உள்ளடி வேலைகள்.சதிகள்  எல்லாம் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

தேயிலையின் கலப்படத்தில்  ஸ்லோ, எல்டர் உள்ளிட்ட பல  மரங்களின் இலைகளும், இரசாயனங்களும், சாயங்களும், ஆட்டுச்சாணமும் கூட பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ’அடப்பாவிகளா, அப்போவே வா! ’ என்று அங்கலாய்க்க தோன்றியது.

தேநீர் அருந்துவதற்கு சார்பாகவும், எதிராகவும்  எழுதப்பட்ட கட்டுரைகள் வெகு சுவாரஸ்யமானவை. தேநீர் பூங்காக்களில் முதலில் உயர்குடியினர் சந்திப்புகள் நடந்திருக்கிறது,  பின்னர், மலிவு விலை புத்தகங்கள் தொடங்கி, சின்ன சின்ன வியாபாரங்களும். கொள்ளைக்கான  திட்டமிடல்களும் நடந்து,  பின்னர் கைதுகள் கூட அங்கேயே நடந்திருக்கிறது.

கல்கத்தாவில் 1819 ல் தொடங்கப்பட்ட  தேநீர் கேளிக்கையகத்தில் தேநீரை மேசை மீதோ அல்லது  அருகில் இருப்பவர் மீதோ கொட்டுபவர்களுக்கு இரண்டு அணா அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது மருந்துப் பொருளாக விற்கப்பட்டு கொண்டிருந்த தேநீர் பின்னர் பானமாகி மளிகைகடைக்காரகளும்  தேநீர் மற்றும் தேயிலை விற்பனையில் ஈடுபட்ட போது, தேயிலை முகவர்களுக்கான  அனுமதி சான்றிதழ்  கடைகளுக்கு முன்பு தொங்க விடப்படுவது கட்டாயமாக்க பட்டிருக்கிறது..

தேயிலை இறக்குமதி திடீரென  குறைந்தபோது  அமெரிக்கர்கள் ரோடோடென்ரான் செடிகளின் இலைகளில் இருந்து லாப்ரடார் தேயிலை தயாரித்திருக்கின்றனர். இன்றும்  அந்த தேயிலை பல நாடுகளில் புழக்கத்தில் தான் இருக்கிறது.

இடையிடையே  வரும் தேநீரையும் தேயிலையையும் குறித்த

‘’கொஞ்சம் தேயிலை கலந்தது கடலிலே

நூறாயிரம் பேர் ரத்த வெள்ளத்திலே’’

போன்ற  பாடல்களும் கவிதைகளும் அப்போது இந்த பானத்துக்கு இருந்த பிரபல்யத்தை சொல்லுகின்றன.

சீனாவில் தேயிலையின் தோற்றம் குறித்த பகுதிதான் இந்நூலில்  ஆகச் சிறந்தது என்று சொல்லலாம். காலத்து ட்டு தான் ச்சா வா என்பதில் தொடங்கி, ஹான் அரச வம்சம்,  டாங், மிங், அரச வம்சத்தினரின் ஆட்சிகளின் போது தேயிலையின் வரலாறு  பயன்பாடு, விற்பனை, வளர்ச்சி அனைத்தும் விரிவாக சொல்லப்படுகின்றது.

கண்டடைய முடியாத தேயிலைக்கான தேடல்கள், ”நீர் கொதிக்கையில் அது மீன்களின் கண்களை போன்று இருக்க வேண்டும் ”என்னும் தேநீருக்கான ரெசிப்பி, தேநீர் சடங்க்குகள்,.கொதிக்கும் நீரில் தேயிலையை வேகவைத்து தயாரிக்கப்பட்ட தேநீர் பின்னர் கொதிநீரை தேயிலைத்தூளில் ஊற்றி தயாரிக்கப்பட்டது, தேயிலை கொட்டப்படும்மேசையின்  ஜென்  நடுக்குழிவு, வித்தியாசமான நீள வரிசை ஜப்பானிய  தேயிலை தோட்டங்கள்,  அறுவடைக்கு முன்னர் போர்வைகள் கொண்டு மூடப்படும் தேயிலை செடிகள், மிங் ஆட்சியில் அறிமுகமான சீன களிமண்,கப்பலின் பலாஸ்டிங்க்கிற்காக  அவற்றை பயன்படுத்தி அப்படியே ஏற்றுமதியும் செய்தது, மன்னரொருவர்  தனது இறப்புக்கு பின்னர் தேயிலைகளை படைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது, மிங்கு’கள்  தேயிலையுடன் மலரிதழ்களையும் கொதிக்க வைத்து தேநீர் தயாரிப்பது   என்று புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவுக்கு ஏராளமான விஷயங்கள் அடுத்தடுத்து வருகின்றன.

தேயிலை தோட்டங்களில்  இன்றைக்கு வரை  கடைப்பிடிக்கப்படும் அறுவடை செய்ய வேண்டிய ‘’ ஒரு இலை மொக்கு,இரண்டு தளிர்கள், அல்லது  ஓரு மொக்கு, ஒரு தளிர்  அல்லது ஒரு இலை மொக்கு மட்டும்  என்ற   ‘’flush , golden flush’’  வரையரறைகள்   அப்போதே தீர்மானிக்க பட்டிருக்கின்றன.

1628 ல் சீனாவில் ஓபியம் தேயிலையின்  இடத்தை ஆக்கிரமித்ததை சொல்லும் அத்தியாயத்தில்,   மால்வா என்றழைக்கப்டும் ராஜஸ்தான் ஓபியமும் குறிப்பிடப்படுகிறது.  நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில ஆளுமைகள் ஆச்சரியப்படுத்துகிறார்கள். உறங்காமல் இருக்க உயரமான  மேசை மீது ஏறி நின்று கொண்டு இரவெல்லாம்  விழித்திருந்து  ஓபியம் கடத்தலை  தடுக்க பணியாற்றுகிறார். சண்டைக்காரரும் ராஜதந்திரிமான   பாமெர்ஸ்டன் பிரபு , 1880களில் நடந்த தேயிலை கப்பல்களின்  ஓட்டப் போட்டியில் மிக விரைவாக சென்று   பரிசு தொகையை வாங்கிய.  வில்லியம் கிளிப்டன் என்னும் மாலுமிக்கு பிறகு  விரைவாக சென்று தேயிலையை சேர்க்கும் கப்பல்கள் பின்னர்  கிளிப்பர்ஸ் என்றே  அழைக்க பட்டிருக்கின்றன.

தேயிலை தோட்டங்களின் ஒரு அங்கமாக இருந்த யானைகளில். 1300 யானைகளைக் கொன்ற  ஒரு ஆங்கிலேயர் 41 வயதில் மின்னல் தாக்கி இறந்து போகிறார்.  ராணுவத்தினரின் உபயோகப்படுத்தப்பட்ட கோட்டுகள் தோட்ட தொழிலாளர்களுக்கு குளிருக்கு பாதுகாப்பாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் கொல்கத்தா தாவரவியல் பூங்காவுக்கு  வரவழைக்கப்பட்ட தேயிலை விதைகள்  துளிர்த்து இந்தியாவில்  தேயிலை செடிகள் நுழைகின்றது. தேயிலை வளர்ப்பை பிறருக்கு சொல்லி விட கூடாதென்று கொல்லப்பட்ட 12 சீனர்களிலிருந்து ,  மரணங்கள்  கொலைகள், சவுக்கடிகள்,  உடல் உறுப்புக்கள் வெட்டப்படுவது, பெண்கள்  மானங்கப்டுத்தபடுவது,, பிரம்படிகள் என பல பக்கங்கள் வலியிலும், வேதனையிலும் கண்ணீரிலும் ரத்தத்திலும்  நிறைந்துள்ளது.

நூலை  ஆழ்ந்து வாசித்தவர்கள் பின்னர் ஒரு கோப்பை தேநீர் கூட குற்றவுணர்வின்றி அருந்தமுடியாது .  மேல் அஸ்ஸாமில் கண்டுபிடிக்கப்பட்ட கெமிலியா அஸ்ஸாமிகா   வகையும் பின்னர் நடைபெற்ற  இனக்கலப்பு களும் விரிவாகச்  சொல்லப்பட்டிருக்கிறது

தேயிலையின்வரலாற்றை சொல்லும் பல நூல்களில் இல்லாத,  இந்தியாவில் நீண்ட வரலாறு கொண்டிருக்கும் இண்டிகோ சாயத்தையும் இண்டிகோ தோட்டங்களை குறித்தும்   கொஞ்சம் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது.  ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளை உணவுப் பயிர்களுக்கு பதிலாக இண்டிகோவை பயிராக்கச்சொல்லி கட்டாயப்படுத்திய கதைகளை எல்லாம் ஒரு நூலாகவே எழுதிவிடலாம். அத்தனை கொடுமைகள் நடந்தது இப்பயிரினால்.

நான்சிறுமியாக இருக்கையில் அவுரி எனப்படும் இந்த இண்டிகோ செடியை என் பாட்டி பறித்து வர சொல்லி அரைத்து,  சாணி மெழுகிய  தரையில்  ஓரத்தில் இந்த விழுதால் நீலச்சாய கரையிடுவார். பல நாட்களுக்கு சாணிக்கறை போன பின்னும் நீலக்கறை அழியாமல் இருக்கும்..இன்றைக்கு நம் வீட்டு வாசலிலும்  சாலை ஓரங்களிலும் படர்ந்து கிடக்கும் இவை,  உலர்த்தப்பட்டு, தலைமுடிச் சாயத்திற்கென அமேசானில் விற்கப்பட்டு  காசாகிறது.

சிறில் அலெக்ஸ்

உயிரை காப்பாற்றிய சிவப்பு வைன்,  குயினைன் கருப்பு தண்ணீர் காய்ச்சல் உண்டாக்குவது  போன்ற   அப்போது நம்பப்பட்ட பல மருத்துவ தகவல்களும் உண்டு தேயிலை தோட்டக் கூலிகள் அவர்களின் சம்பளம், அவர்களை கண்காணிக்க அமர்த்தப்பட்ட  கங்காணிகள், கூலிக்காரர்களை கொள்ளையடிப்பது, கொத்தடிமை முறை,  5 வயது குழந்தைகளும் தோட்ட வேலை செய்வது, கணக்கில்லாத மரணங்கள் என்று அசாமில் நடந்த கொடூரங்கள் மனதை கனமாக்குகிறது.இத்தனைக்கு பிறகும் சொல்லப்பட்ட கொடுமைகள் உண்மையில் நடந்ததில் சிறிதளவே என்று வாசிக்கையில் கண் நிறைந்துவிட்டது

மசாலாவுக்கு பிரபலமாயிருந்த சிலோனில்  தேயிலை  அறிமுகமாகின்றது.  மஞ்சள் பூஞ்சை நோயால் காபி பயிர்கள் அழிந்த பின்னர் தேயிலை  அந்த இடங்களை பிடிக்கிறது. ’’மடிந்த காபி செடிகளின் கிளைகளுடன் வெட்டப்பட்ட  மரத்தண்டுகள்   தேநீர் மேசைகளுக்கு கால்களாக வைக்கப்பட்டன’’ எனும் வரி ஒரு பெரிய வீழ்ச்சியையும் ஒரு புதிய அறிமுகத்தையும் எளிதாக சொல்லிவிடுகிறது.

கல்கத்தாவிலிருந்து அசாம் தேயிலை செடியின் விதைகள் கண்டிக்கு அருகிலிருக்கும் பேராதனை ராயல் தாவரவியல் பூங்காவுக்கு வரவழைக்கப்படுகிறது.ஆங்கிலேய ஆட்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று இந்த  தாவரவியல் பூங்காக்கள். 1821 ல் ஆறு வளைந்து செல்லும் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவை குறித்து விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

தாவரவியல் பூங்காக்களுக்கு செல்வது குறித்த என் பல கனவுகளில் நிறைவேறிய  ஒரே ஒரு கனவு நான் இந்த பேராதனை தாவரவியல் பூங்காவுக்கு சென்றதுதான். நிச்சயம் பல நாட்கள் செலவழித்தாலே முழு பூங்காவையும் பார்க்க முடியும் என்றாலும் எனக்கு ஒரு முழு நாள் வாய்த்தது. நான் பார்த்து பிரமித்த, தாவரவியல் படிக்கும் மாணவர்கள்  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் பூங்காக்களில் இதுவும் ஒன்று. அத்தனை வசீகரமான, விஸ்தாரமான , பிரமாதமான பூங்கா அது.  அங்கிருக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பான உலர் தாவர சேகரிப்பு மிக சிறப்பானதாக இருந்த்து.

இந்திய தேயிலை குழுமம் மற்றும்   இலங்கையின் தேயிலை ஆராய்ச்சி கழகம் உருவான பின்பு    தேயிலை வளர்ப்பில் உரங்களின் பயன்பாடு, விதைகளுக்காக   தாய் செடியை தெரிவு செய்து அதிலிருந்து  நல்ல விதைகளை சேகரிப்பது, நோய் கட்டுப்பாடு  ஆகியவற்றினால் விளைச்சலும் கூடுகிறது கேளிக்கை விருந்துகளும் கிரிக்கெட் புல்வெளிகளுமாக தேயிலைதோட்டங்கள் நவீனமடைகையில் மிக மெல்ல தொழிலாளர்களின் நிலையும் உயர துவங்குகிறது.

புரூக் பாண்ட், லிப்டன், டை-ஃபூ, கோஆப் தேயிலை பிராண்டுகள் ஒவ்வொன்றும் உருவானதின் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.  பரிசு ஸ்டிக்கர் திட்டம் மட்டுமல்லாது விதவைகள் ஓய்வூதிய திட்ட மெல்லாம் கூட தேயிலை தூள் பாக்கட்டுகள் வழியே மக்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

டீ பேக் எனப்படும் தேயிலை பைகள்  தற்செயலாக, தவறுதலாக கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. ஒரு நியூயார்க் தேயிலை வியாபாரி தனது உயர்குடி வாடிக்கையாளர்களுக்கு பட்டுத்துணியில் பொதிந்த தேயிலை தூள் அனுப்பியபோது , அவர்கள் அதை துணியுடன் கொதிக்கும் நீரில் இடவேண்டுமென தவறாக புரிந்துகொண்டு விடுகிறார்கள்.  பின்னர் இன்னும் மெல்லிய துணியில் பொதிந்து கொடுத்தால் வசதியாக இருக்குமென்னும் அவர்களின் கோரிக்கையில் பிறந்திருக்கிறது இப்போது பல கவர்ச்சிகரமான வடிவங்களில் சந்தைப்படுத்தப்ட்டிருகும் தேயிலை துணிப்பொதிகள்

முதல் அத்தியாயத்தில்  நியூசிலாந்து தேயிலை  தோட்டங்களுக்குள் சென்று மறைந்துவிடும் ராய் பின்னர் இறுதி அத்தியாயத்தில் தான் புலப்படுகிறார். வேலையையும் மொழியையும் கற்றுக்கொள்கிறார். ஆச்சரியப்படத்தக்க வகையில் ஓட்டுநர் உரிமம் வாங்கி விடுகிறார். லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரி  ராய்க்கு வைக்கும் சோதனை மிக புதுமை . ஐரோப்பியர் குழந்தைகளை கொன்று விடுவார்கள் என்று நம்பும் ஆப்பிரிக்க தாய்மார்கள் ராயை கண்டதும் குழந்தைகளுடன் ஒளிந்து கொள்கிறார்கள். .

ராய் வீடு திரும்பும் ஓரிரவில் ரேபிஸ் வெறிபிடித்த நாயொன்று அவர் வீட்டு கூடத்தில் நிற்கிறது, மற்றொரு இரவில் ராயின் காரில் மாட்டிக்கொள்ளும் முயலை  சாலையோரம் இருந்து கால் நீட்டி தட்டி பறிக்கின்றது சிறுத்தை  ஒன்று. காசோலைகள் இளம் பன்றியின்  பின்பக்கத்தில் எழுதித்தரப்பட்டு, அதே பின்பக்கத்தில் ஸ்டாம்ப்பு, வைக்கப்பட்டு  பணம் கைமாறிய பின்னர் பன்றி வங்கி ஊழியர்களுக்கு உணவாகிறது. இப்படி ராயின் நியூசிலாந்து அனுபவங்கள் நமக்கு   பெரும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன

தேயிலையின் வரலாறை போலவே, பிற முக்கியமான வணிக பயிர்களுக்கும் பணப்பயிர் களுக்கு இருக்கும் வரலாறையும், தொடர்புள்ள   சுவாரஸ்யமான உண்மை கதைகளையும் இப்படி  சொல்லி கற்றுக் கொடுத்தால் அதிகம் பேர் தெரிவு செய்யாத,  விலக்கி வைக்கிற, தாவரவியல் துறைக்கு மாணவர்கள்  விரும்பி வந்து சேர்ந்து கற்றுக் கொள்வார்களாயிருக்கும்.

தென்னாப்பிரிக்காவின் சிவப்பு தேயிலை செடிகளில் இருந்து கிடைக்கும் Rooibos tea எனப்படும் செந்தேநீர் , கென்யாவில்  கடல் மட்டதுக்குமேல் 7500அடி உயரங்களில் மட்டுமே வளர்க்கப்படும் கலப்பின தேயிலை செடிகளில் இருந்து  இப்போது கிடைக்கும் அந்தோசயனின் நிறமிகள் அடர்ந்திருக்கும் ஊதா தேயிலை, சின்ன சின்ன ஜவ்வரிசி பந்துகள் மிதக்கும் குமிழி தேநீர், வெள்ளை தேயிலை, பச்சை தேயிலை, என்று நமக்கு கிடைக்கும் இத்தனை தேநீருக்கும் தேயிலை வகைகளுக்கும் பின்னே  பல்லாயிரக்கணக்கான அப்பாவி தொழிலாளர்கள் கண்ணீரிலும் குருதியிலும் எழுதப்பட்ட  நெடிய வரலாறு இருக்கிறதென்பதை இனி ஒவ்வொரு கோப்பை தேநீரும் நினைவூட்டிக் கொண்டிருக்கும்.

சிறில் அலெக்ஸ்’க்கு வாழ்த்துக்கள்

« Older posts Newer posts »

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑