சென்ற பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழுக் கூட்டம் முடிவடைந்த பின் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் எண்ம ரூபாய்களில் முதலீடு செய்பவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் அதை செய்யவேண்டும் என்றும் அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது தன் கடமை என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார்!
கடந்த சில வருடங்களாக பிட்காயின், எதீரியம், சொலோனா, ஷிபாஇனு, டோஜ் காயின் மேட்டிக், டெதர், டெரா, கார்டோனா போன்ற நுண் நாணயங்களிலும், எண்ம நாணய குறியீடுகளிலும் ஏராளமானோர் பங்கு வர்த்தக முதலீடுகள் செய்து லாபமும் அடைந்து வருகின்றனர்.
எனினும் தனியார் எண்ம நாணயங்களில் செய்யப்படும் அதிகப்படியான முதலீடுகள் இந்தியாவின் பருப்பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அவற்றின் சமநிலையை குலைத்துவிடும் என்று சொன்ன சக்திகாந்ததாஸ், 17 ஆம் நூற்றாண்டின் ஆகப்பெரிய பொருளாதார சிக்கலான ட்யூலிப் மலர் பித்தை (Tulipmania) உதாரணமாக காட்டி அதுபோல மீண்டும் நடந்துவிடக்கூடாது என எச்சரித்திருந்தார். 1
இந்த அறிவிப்பு வெளியான சில நொடிகளில் இருந்து ட்யூலிப் மேனியா என்றால் என்னவென்று பல்லாயிரக்கணக்கானோர் தேடுபொறியில் தேடத் தொடங்கினர். 2
17ம் நூற்றாண்டில் ட்யூலிப் மலர்களின் அசல் மதிப்பிற்கல்லாது லாபத்தின் பொருட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட விலையேற்றத்தால் ட்யூலிப் கிழங்குகளின் பங்கு வர்த்தக சந்தை உச்சத்தை தொட்டு, திடீரென சரிந்து பல்லாயிரக்கணக்கானோர் நஷ்டமடைந்தனர் உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட பொருளாதார சிக்கல் இதுவே என வரலாற்றாய்வாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களால் குறிப்பிடப்படுகிறது. 1634-37 ல் நிகழ்ந்த இந்த ட்யூலிப் மலர்கள் மீது மக்களுக்கு உண்டான பித்து மிக சுவாரஸ்யமானது.
மத்திய ஆசியாவின் காட்டுப்பயிரான ட்யூலிப் செடிகள் துருக்கியில் 1000 மாவது ஆண்டிலிருந்து பயிராக்கப்பட்டன.
ஏறக்குறைய 600 வருடங்கள் ஆட்சிபுரிந்து 1922 ல் முடிவுக்கு வந்த உலகின் மிகப்பெரியதும் சக்தி வாய்ந்ததுமான ராஜ்ஜியமான துருக்கிய பழங்குடியினரின் ஒட்டமான் பேரரசின் (Ottoman Empire, 1299–1922), குறியீடாகவே ட்யூலிப் மலர்கள் இருந்தன.
அரண்மனை தோட்டங்களில் மட்டும் பயிராகிக்கொண்டிருந்த ஒட்டமான் அரச வம்சத்தினரின் விருப்பத்துக்குகந்த ட்யூலிப் மலர்ச்செடிகள் மெல்ல மெல்ல நாடெங்கிலும் பரவி வளர துவங்கின. ட்யூலிப் மலர்களின் அழகுக்காக அவை மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. ஒட்டமான் மன்னரான சுல்தான் இரண்டாம் செலிம் சிரியாவிலிருந்து 50ஆயிரம் ட்யூலிப் கிழங்குகளை தருவித்து நாடெங்கும் அவற்றை பயிரிட்டார்.
அப்போது ஓட்டமான் அரசவையில் மிகச்செல்வாக்குடன் இருந்த வியன்னாவின் தூதுவர் ஓஜெர் கைஸெலின் டி பஸ்பெக் (Ogier Ghiselain de Busbecq) , ட்யூலிப்களை மேற்குலகிற்கு அறிமுகம் செய்தார். எழுத்தாளரும் மூலிகை நிபுணருமான இவர் அரிய பொருட்களை சேகரிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இவரே 6 ம் நூற்றாண்டை சேர்ந்த டயாஸ்கொரிடஸின் தெ மெடீரியா மெடிகா வின் அசல் பிரதியை தேடிக்கண்டடைந்தவர். இவர் துருக்கியின் ட்யூலிப் மலர்களை பெரிதும் ஆராதித்தார்.
துருக்கி மக்களுக்கு ட்யூலிப் மலர்களை தலைப்பாகையில் சூடிக்கொள்ளும் வழக்கமிருந்தது. ஒருமுறை பயணத்திலிருக்கையில் வழியில் பலர் ட்யூலிப் மலர்களை தலைப்பாகையில் செருகிக் கொண்டிருப்பதை பார்த்த ஓஜெர் தலையிலிருக்கும் அம்மலர்களின் பெயரென்ன? என்று கேட்கையில் அவருக்கு தலைப்பாகையின் பெயரான ’ட்யூலிபா’ பதிலாக சொல்லப்பட்டது. அதையே அவர் அம்மலர்களின் பெயராக தவறாக நினைத்துக் கொண்டார் என்கிறது தாவரவியல் வரலாறு. எனவே ட்யூலிபா என்றே அவர் அம்மலர்களை குறிப்பிட்டார்.(துருக்கியமொழியில் ட்யூலிபா என்றால் தலைப்பாகை.)
1551ல் இவர் ட்யூலிப் விதைகளை துருக்கியிலிருந்து ஆஸ்திரியாவிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஐரோப்பாவெங்கும் ட்யூலிப் செடிகள் பயிராக துவங்கின.
பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரின் மாபெரும் துறைமுகத்துக்கு 1562ல் ஒட்டோமான் பேரரசின் தலைநகரமான கான்ஸ்டண்டினோபிலிலிருந்து சரக்கு கப்பலில் வந்த ட்யூலிப் கிழங்குகள் ஐரோப்பாவின் ட்யூலிப் தோட்டக்கலை துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டது.
16 ம் நூற்றாண்டின் மிகப்புகழ்பெற்ற தோட்டக்கலை நிபுணரும் நவீன தாவரவியல் துறையை தோற்றுவித்தவரும் ஃப்ரெஞ்ச் தாவரவியலாளருமான கரோலஸ் க்ளூசிஸ் (Carolus Clusius) ஐரோப்பாவில் பல புதிய ட்யூலிப் வகைகளை பயிராக்கிய பெருமைக்கு உரியவர். ட்யூலிப் மலர்களின் நிற வேறுபாடு குறித்து ஏராளமான ஆய்வுகளையும் இவர் செய்தார். இன்றைய டச்சு ட்யூலிப் வணிகத்துக்கு அடித்தளமிட்ட கரோலஸ் அழகிய தோட்டங்களின் தந்தை எனவும் அழைக்கப்பட்டார் இவரே உருளைக்கிழங்கையும், வெங்காயத் தாமரையையும் ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தினார்
1573 லிருந்து 1587 வரை வியன்னாவின் புனித ரோமப்பேரரசர் பூங்காவின் இயக்குநராக இருந்த காலத்தில் அங்கு அவரால் வளர்க்கபட்ட ட்யூலிப் செடிகளே டச்சு ட்யூலிப் தொழிலை துவங்கிவிட்டன.
1590ல் கரோலஸ் க்ளூசிஸ் லெய்டன் பல்கலைக்கழகத்தில் (University of Leiden) ட்யூலிப் தோட்டத்தை உருவாக்கிய போதுதான் துருக்கியிலிருந்து இவரது நெருங்கிய நண்பரான ஓஜெர் கைஸெலின் ட்யூலிப் விதைகளை அனுப்பி வைத்திருந்தார். இவர் எழுத்துபூர்வமாக “tulipam” என்று இவற்றின் பெயரை குறிப்பிட்டு கடிதங்கள் அனுப்பியதால் அதிகாரபூர்வமாக இவை லத்தீனமொழியில் ட்யூலிபா என்று அழைக்கப்பட்டு பின்னர் ட்யூலிப் என்பது ஆங்கிலப்பெயராகியது
ட்யூலிப் பூங்காவிற்கு வருகை தந்த மக்களை ஆழ்ந்த நிறங்களில் மணி வடிவில் இருந்த பெரிய ட்யூலிப் மலர்களின் அழகு வெகுவாக வசீகரித்தது. 1596 மற்றும் 1598 ல் அதுவரை ஒற்றை நிறங்களில் மட்டும் இருந்த ட்யூலிப் மலரிதழ்களில் வைரஸ் தொற்றினால் பிற நிறங்களும் தீற்றல்களாக உருவானபோது அந்த மலர்கள் வெகுவாக விரும்பப்பட்டது
அப்போது ட்யூலிப் தோட்டத்திலிருந்து தீற்றல்களுடைய ட்யூலிப் செடிகளின் விதைகள் பலமுறை திருடப்பட்டன. வெகுவிரைவில் இவற்றின் விதைகள் பரவி ட்யூலிப் மலர் வர்த்தகமும் மலர்ந்து விரிந்தது. அப்போது இதன் மீது பித்துக் கொள்ள துவங்கி இருந்த மக்களால் உருவானதுதான் 1633-37 வரை நீடித்திருந்த ட்யூலிப் பித்துக்காலம்.
ட்யூலிப்கள் விதைகளிலிருந்தும் வேர்க்கிழங்குகளிலிருந்தும் பயிராகும் என்றாலும் விதைகளிலிருந்து உருவாகும் செடிகளை காட்டிலும் விரைவாக கிழங்குகளிலிருந்து செடிகள் உருவாகி மலர்களும் விரைவாக உருவானதால் பெரும்பாலும் இவை கிழங்குகளிலிருந்தே பயிர் செய்யபட்டன.
ஹாலந்தில் ட்யூலிப் கிழங்குகளை வாங்குவதும் விற்பதும் கோடைக்காலத்தில் தான் நடைபெறும். ஜூன் மாதம் மலர்ந்து முடிந்துவிட்ட ட்யூலிப்செடிகளின் கிழங்குகள் தோண்டி எடுக்கப்பட்டு காகிதங்களில் சுற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டு மீண்டும் அக்டோபரில் நட்டு வைக்கப்படும்.அல்லது மண்ணிலேயே விட்டுவைக்கப்படும்
தொடரும் குளிர்காலம் முழுவதும் மண்ணிற்கடியில் இருக்கும் கிழங்கு முளைத்து வளர்ந்து அடுத்த மலரும் காலத்தில்தான் மீண்டும் மலரும். இந்த குளிர்காலகட்டம் உலர் கிழங்கு மாதம் எனப்பட்டது.
ட்யூலிப் செடிகளை குறித்து நன்கு அறிந்திருக்கும் ஒரு நிபுணர் மலரும் காலம் முடிந்து இலைகள் பழுக்க துவங்குகையில் செடிகளை பார்வையிட்டு வேர்க்கிழங்குகளையும் சோதித்து, வாங்குபவருக்கும் விற்பவருக்கும் அதைக்குறித்து விளக்குவார் . பின்னர் கிழங்குகள் கைமாறி பணப்பரிமாற்றம் நிகழும். அடுத்த பருவத்தில் அக்கிழங்குகள் புதிய உரிமையாளரின் நிலத்தில் விளைந்து மலரும்.
பிரகாசமான நிறங்களில் இருந்த ட்யூலிப் மலர்கள் அனைவரின் விருப்பத்துக்குமுரியதாயின. ட்யூலிப் மலர்களை தோட்டத்தில் அல்லது பூச்சாடிகளில் வைத்திருக்காதவர்கள் மிக மோசமான ரசனைக்காரர்களாக கருதப்பட்டார்கள்.
செல்வச் செழிப்பின், ஆடம்பரத்தின், உயர்குடியினரின் அடையாளமாக மாறிய ட்யூலிப் மலர்களின் உற்பத்தி அதன் தேவையை காட்டிலும் மிக குறைவாக இருந்ததால் அதன் சந்தை மதிப்பு உயர்ந்து கொண்டே இருந்தது,
1610ல் ஒரு குறிப்பிட்ட வகை ட்யூலிப் கிழங்கு திருமணத்தின் போது மணமகள் சார்பில் வரதட்சணையாக அளிக்கப்பட்டது. ஃப்ரான்ஸின் புகழ்பெற்ற வடிசாலை ஒன்று அவர்களது பிரபல பியர்வகை ஒன்றை ஒரு ட்யூலிப் கிழங்குக்கு பதிலாக அளித்தது.
விரைவில் ட்யூலிப் மலர்கள் டச்சு மக்களின் அந்தஸ்தின் அடையாளமாகின. இதழ்களில் குறிப்பிட்ட நிறங்களில் தீற்றல்களை கொண்டிருந்த மலர்கள் அரிதென கருதப்பட்டு மிக அதிக விலைக்கு விற்பனையாகின.
இப்படி பிற தாவர வர்த்தகங்களை போலவே நிகழ்ந்து கொண்டிருந்த ட்யூலிப்களின் வர்த்தகத்தில் புதிதாக உருவான பலநிற தீற்றல்களை கொண்ட மலர்களின் மீது உருவான பெரும் பித்தினால் 1634ல் பெரும் மாற்றம் உண்டானது
ஒரு மூட்டை கோதுமை வாங்க ஒரு ஃப்ளோரின் போதுமானதாக இருந்த காலத்தில் தீற்றல்களையும் நெருப்பின் பிழம்புகளைப்போன்ற நிறக்கலவையையும் கொண்டிருந்த செம்பர் அகஸ்டஸ் (Semper Augustus) என்னும் ஒரு மலர்ச்செடியின் கிழங்கு சுமார் 6,000 ஃப்ளோரின்களுக்கு விற்பனையானது .
மற்றுமொரு வர்த்தகத்தில் ஒருவர் தனது 2 சாம்பல் நிற குதிரைகளையும் 4600 ஃப்ளோரின் களையும் கொடுத்து ஒரு செம்பர் அகஸ்டஸ் கிழங்கை வாங்கி இருந்தார். வைஸ்ராய் வகை ட்யூலிப் கிழங்கொன்று நான்கு கொழுத்த காளைகள் ,8 அன்னங்கள்,12 முதிர்ந்த ஆடுகள், மற்றும் 1000 பவுண்ட் பாலாடைக்கட்டிகள் கொடுத்து வாங்கப்பட்டது.
சாகுபடி முறைகள் மேம்படுத்தப்பட்டு அதிக அளவில் ட்யூலிப் மலர் செடிகள் பயிரானபோது பங்கு வர்த்தகர்கள் இந்த வணிகத்தில் இறங்கினார்கள்.. ஒரு கட்டத்தில் பங்கு வர்த்தகர்களின் செல்வாக்கினால் ஒற்றை மலரின் விலை ஒரு வீட்டின் மதிப்பைக் காட்டிலும் கூடுதலாகவும் இருந்தது. செல்வந்தர்கள் மட்டுமல்லாது, சாதாரணர்களும் ட்யூலிப் பங்குகளில் முதலீடு செய்ய துவங்கினர்..வீடுகள் எஸ்டேட்டுகள் தொழிற்சாலைகள் என பலவற்றையும் பணயம் வைத்து ட்யூலிப்பில் முதலீடு செய்யப்பட்டது.
கிழங்குகள் மண்ணுக்கடியில் இருக்கையிலேயே உத்தேசமாக அவற்றின் எடை கணக்கிடப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது. அவை தோண்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே அவற்றின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் காகிதங்களில் அவை விற்பனையாகின.
பருத்த எடை கூடிய அன்னைக்கிழங்குகளிலிருந்து புதிய குருத்துச்செடிகள் அதிகம் வரக்கூடுமென்பதால் ஒரு அன்னைக்கிழங்கிலிருந்து எத்தனை புதிய செடிகள் வரக்கூடும் என்றும் யூகிக்கப்பட்டு அவற்றின் விலை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பலர் ட்யூலிப் கிழங்குகளை கண்ணால் கூட பார்த்திருக்கவில்லை. ஒரே நாளில் 10 கைகளுக்கு மேல் கிழங்குகளின் விலை எழுதபட்டிருந்த ஒப்பந்தங்கள் கைமாற்றி மாற்றி மேலும்மேலும் அதிக விலைக்கு விற்கபட்டன. 1633-37 வரையிலான காலத்தில் இந்த ட்யூலிப் பித்து அதன் உச்சத்தில் இருந்தது சந்தையின் உச்சத்தில், அரிதான ட்யூலிப் கிழங்குகள் ஒரு சராசரி நபரின் ஆண்டு சம்பளத்தை விட ஆறு மடங்குக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
ஹாலந்திலிருந்து இந்த மலர்பித்து பிரான்சுக்கும் பரவியது. அங்கும் ட்யூலிப் கிழங்குகளும் மலர்களும் மிக அதிக விலைக்கு விற்பனையாகின. அருமணிகளுக்கிணையான விலையில் விற்கப்படும் ட்யூலிப் மலர்களை வாங்கி அணிந்து கொள்ள பெண்கள் விரும்பினர்.
பிரான்ஸின் உயர்குடிப் பெண்கள் விருந்துகளின் போது மேலாடையின் கழுத்துப்பட்டைகளில் ஆபரணங்களுக்கு பதில் ட்யூலிப் மாலைகள் அணிந்து கொண்டனர்.
1637 ல் பிளேக் நோய் அங்கு பரவியது. அப்போது நடைபெற்ற ஒரு ட்யூலிப் ஏலத்தில் பெரும்பாலான பங்குதாரர்களால் கலந்து கொள்ள முடியாமல் போன போது, பங்குகளின் விலை திடீரென சரிந்து ஒரே நாளில் பல முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். இதுவே ட்யூலிப்மேனியா எனப்படும் உலகின் முதல் பெரும் பொருளாதார குமிழி வெடிப்பு.
டச்சு அரசு இந்த பொருளாதார சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுத்தது. வெறும் பத்து சதவீத கட்டணம் மட்டும் பெற்றுக்கொண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்து ஒப்பந்ததாரர்களை விடுவித்தது. எனினும் பல்லாயிரக்கணக்கானோர் சொத்துக்களையும் சேமிப்புகளையும் இழந்தார்கள்
ட்யூலிப் பித்து 1637ல் முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும் ட்யூலிப் மலர்களின் மீதான விருப்பம் ஆழ வேர்பிடித்திருந்தது.
இன்றுவரையிலும் இந்த ட்யூலிப் மலர் பித்து அதிகப்படியான பேராசையால் உண்டாகும் ஆபத்துகளுக்கு ஒரு உவமையாக சொல்லப்படுகிறது.
ட்யூலிப்கள் லில்லியேசியே என்றழைக்கப்படும் அல்லிக்குடும்பத்தைச் சேர்ந்தவை. தற்போது உலகெங்கிலும் ஏராளமாக வளர்க்கப்படுகின்றது .6 செ மீ அளவிலுள்ள இந்த ட்யுலிப் மலர்களில் அகன்ற அடிப்பகுதியும் கூர் நுனியுமுள்ள 6 இதழ்கள் இரட்டை அடுக்கில் மூன்று மூன்றாக நெருக்கமாக அமைந்திருக்கும். அல்லி வட்டத்தின் மூன்று இதழ்களும் புல்லிவட்டத்தின் மூன்று இதழ்களும் இணைந்து ஒன்றே போல் தோற்றமளிக்கும். இவை ஆங்கிலத்தில் tepal எனப்படும். ஒரு செடியிலிருந்து உருவாகும் 2 அடிநீளமுள்ள ஒற்றை மலர்த்தண்டில் பெரும்பாலும் ஒரே ஒரு மலர் மலர்ந்திருக்கும். அரிதாக இரு மலர்கள் உருவாகும். 2 லிருந்து 6 வரை மத்திய பகுதியில் அகன்றும் மேல் கீழ் நுனிகளில் குறுகியும் இருக்கும் நீளமான சதைப்பற்றுள்ள ரிப்பனைப்போன்ற நீலப்பச்சை இலைகள் காம்புகளின்றி நேரடியாக இச்செடியின் தண்டுகளின் அடிப்பகுதியிலிருந்து உருவாகி மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மண்ணிற்கடியில் உருண்டையான பளபளப்பான கிழங்குகள் இருக்கும். இவற்றின் சிறு வெடி கனி ஏராளமான சிறிய விதைகளை கொண்டிருக்கும். மென்மணம்கொண்டிருக்கும் ட்யூலிப்பின் இருபால் மலர்கள் ஏப்ரல் மே மாதங்களில் மலரும்.
தூய வெள்ளை நிறத்திலிருந்து சிவப்பு, ஊதா, ஆரஞ்சு, மஞ்சள் என தனி நிறங்களிலும், பல நிறங்கள் இணைந்தும், கலவையான நிறத்தீற்றல்களுடனும் இருக்கும் ட்யூலிப் மலர்கள் நீல நிறத்தில் மட்டும் இல்லை. நீல வைரம் என அழைக்கப்படும் வகையும் இளம் ஊதா நிற ட்யூலிப் மலர்தான். தோட்டக்கலை நிபுணர்கள் நீல ட்யூலிப்களை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஸ்விட்சர்லாந்தின் தாவரவியளாலரான கொனார்ட்கெஸ்னெரே (Conrad Gessner -1516-1565) ட்யூலிப்களின் நிறங்களை குறித்து முதலில் எழுதி ஆவணப்படுத்தியவர். 1559 ல் அவர் பவேரியாவின் தோட்டமொன்றில் ட்யூலிப்மலர்களை கண்டு பிரமித்து ’’ஒற்றை சிவப்பு மலர் பெரிதாக ஒரு லில்லியைப்போல’’ என்று குறிப்பிட்டார்.
மலரிதழடுக்குகளின் எண்ணிக்கை, மலரின் அளவு, மலர்செடியின் அளவு, மலரும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 4000 வகைகளில் ட்யூலிப்கள் உள்ளன. Tulipa gesneriana, என்னும் அறிவியல் பெயரை கொண்டிருக்கும் தோட்ட ட்யூலிப் செடிகளிலிருந்து கலப்பினம் செய்யப்பட் வையே பிற வகைகள்.
இவற்றில் ஒற்றை நிற இதழ்களை கொண்டவை ’செல்ப் கலர்’ என்றும் தாவர வைரஸ் தொற்றினால் வேறு நிற தீற்றல்களை கொண்டிருப்பவை ’புரோக்கன்’ என்றும் குறிப்பிடப்படுகின்றன.
ட்யூலிப் கிழங்குகளும் மலரிதழ்களும் உண்ணத்தகுந்தவை குறைந்த அளவு ஒவ்வாமை உண்டாக்கும் tuliposide A என்னும் வேதிப்பொருள் இவற்றில் இருந்தாலும் இவை உண்ணப்படுகின்றன. இரண்டாமுலகப் போரின்போது டச்சு அரசு எவ்வாறு ட்யூலிப் கிழங்குகளை ஆபத்தின்றி உணவாக்கலாமென்று கையேடுகள் வெளியிட்டனர். கஞ்சியும் சூப்பும் மட்டுமல்லாது அப்போது கிழங்குகளை மாவாகி ரொட்டிகளும் செய்யப்பட்டன. ட்யூலிப் மலரிதழ்களும் உணவாகின்றன.
இப்போது இவை நட்சத்திர உணவகங்களில் பிரத்யேக விலை உயர்ந்த உணவாக கிடைக்கின்றன.
1600ல் பலரால் விரும்பப்பட்ட மலரிதழ்களின் நிற வேறுபாடுகள் தாவர வைரஸினால் உருவானவை என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. 1931ல்தான் தாவரவியலாளர்கள் அவை ஆபத்தற்ற வைரஸினால் உருவாகின்றன என்பதையும் அந்த வைரஸ், செடிப்பேன் மூலமாக பரவுகின்றன என்பதை கண்டறிந்தார்கள்
சுல்தான்கள் காலத்திருந்தே ட்யூலிப் மலர் வடிவங்கள் உலகின் புகழ்பெற்ற வடிவங்களாக இருக்கின்றன. ஜெர்மானிய ஓவியர் ஜேகப் மரேல் (jacob Marrel-1614-1681) ட்யூலிப் மலர் வடிவங்களுக்கென்றே பிரத்யேகமாக ஒரு நூலை வெளியிட்டார்.
அதன்பிறகு ஆடை ஆபரண, கட்டிடக்கலை வடிவங்களில் ட்யூலிப் மலர்கள் தவறாமல் இடம் பிடித்தன.
1800களில் பிரபல ஆளுமைகளின் முழு உருவ சித்திரங்கள் வரையப்பட்டபோது ட்யூலிப் மலர்களும் ஓவியங்களில் இடம்பெற்றன.1800ல் தான் பிரபல ட்யூலிப் டிஃப்ஃபானி அலங்கார விளக்குகள் உருவாகி புகழ்பெற்றன.
பெரும்பாலான ட்யூலிப் மலர்களில் நறுமணம் இல்லையெனினும் ஒருசில வகைகளில் மென்மணமும் நல்ல இனிமையான நறுமணமும் இருக்கும். ட்யூலிப் மலர்களில் நறுமணங்களை உருவாக்கும் 130 வேதிச்சேர்மங்கள் இருப்பதாக குறிப்பிடும் ஜப்பானின் 2012 ல் நடந்த ஆய்வொன்று நறுமணங்களின் அடிப்படையில் ட்யூலிப்களை
இனிப்பு மணம் கொண்டவை
பசுந்தழை யின் வாசம் கொண்டவை
பாதாம் நறுமணம் கொண்டவை
ஆரஞ்சின் மணம் கொண்டவை
தேன் மணம் கொண்டவை
ரோஜாமணம், மூலிகை மணம், மற்றும் மரங்களின் மணம் கொண்டவை என வகைப்படுத்துகின்றனது
17ஆம் நூற்றாண்டிலேயே ட்யூலிப் மலர் பித்து முடிவுக்கு வந்துவிட்டாலும் ட்யூலிப் களின் மீதான தனித்த பிரியம் அம்மக்களின் கலாச்சாரத்துடன் ஒன்று கலந்து விட்டிருக்கிறது..
நெதர்லாந்தில் 2015 லிருந்து உருவாக்கப்பட்டு வரும். நான்கு தீவுகளின் கூட்டான ட்யூலிப் தீவின் நிலத்தோற்றம் அழகிய காம்புடன் கூடிய ட்யூலிப் மலரைப் போலவே இருக்கிறது. இந்த ட்யூலிப் தீவில் 12000 ட்யூலிப் வகைகளும் வளர்க்கப்படுகின்றன. (துபாயின் பானை வடிவ தீவு டச்சு வல்லுநரால்தான் கட்டப்பட்டது. )
துருக்கியில் ட்யூலிப்கள் எப்போதும் மிகவும் பிரபலமாகவே இருந்தன. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ட்யூலிப்களின் காலமென்றே அழைக்கப்பட்டது. அப்போதுதான் ட்யூலிப் திருவிழாக்களும் துவங்கின. தலைநகரை தவிர பிற பகுதிகளில் ட்யூலிப் விற்பனை செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகவும் இருந்தது.
20 ஆம் நூற்றாண்டில் சுருக்கங்கள் கொண்ட மலரிதழ்களுடன் ட்யூலிப் மலர்கள் உருவாகின. வைரஸ் தொற்றினால் அவற்றின் நெருப்பின் தழல்போல சிவப்பு தீற்றல்கள் இருந்த வகைகள் பெரிதும் விரும்பப்பட்டன
பிரிட்டனிலும் இந்த மலர் பித்து அப்போது பரவியது இங்கிலாந்துக்கு ட்யூலிப் கிழங்குகள் 1577 ல் அறிமுகமாயின.. அப்போடிலிருந்தே இவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. புதிய கலப்பினங்களும் ஏராளம் உருவாகின, அவைகளுக்கு இங்கிலாந்தின் தாவரவியலாளர்களின் பெயர்களும் வைக்கப்பட்டன.
19ஆம் நூற்றாண்டில் ட்யூலிப்களின் விலை உச்சத்தில் இருக்கையில் பல ட்யூலிப் சாகுபடியாளர்கள் ட்யூலிப் மலர்களுக்கென்று தனித்த அமைப்புக்களையும் நூற்றுக்கணக்கில் உருவாக்கினார்கள்.
வருடாவருடம் ட்யூலிப் மலர்க்கண்காட்சிகளும் தொடர்ந்து நடந்தன. கண்காட்சிகளின்போது மிக அழகிய ட்யூலிப் வகைகளுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டன. 1849ல் யார்க்கில் (York) நடந்த ஒரு மலர்க்கண்காட்சியில் போட்டியில் 2000 வகை ட்யூலிப்கள் இருந்ததால் நடுவர்கள் சுமார் 6 மணி நேரம் செலவழித்து பரிசுக்குரிவற்றை தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது.
ஆனால் முதல் உலகப்போருக்கு பின்னர் இந்த அமைப்புக்கள் பொலிவிழந்து மறைய துவங்கின 1936ல் ராயல் ட்யூலிப் அமைப்பு மூடப்படும்போது எஞ்சி இருந்தது வடக்கு இங்கிலாந்து ட்யூலிப் அமைப்பு மட்டுமே. 1836ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்றும் செயல்படுகிறது. மே 2020 ல் நடக்க இருந்த அதன் 185 வது மலர் கண்காட்சி பெருந்தொற்றினால் துரதிர்ஷ்டவசமாக ரத்தானது.
ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியரான ரெம்பிராண்ட் வரைந்த ஒரே ஒரு மலர் ட்யூலிப் தான் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். அவரது மனைவி சேஸ்கியாவை ரோமானிய தொன்மங்களில் வளமை மற்றும் வசந்தத்தின் தேவதையான ஃப்ளோராவாக சித்தரித்து வரைந்த ’’தி ஃப்ளோரா’’ என தலைப்பிடப்பட்ட ஓவியத்தில் சேஸ்கியாவின் தலையலங்காரத்தில் ஒரு அருமணியைபோல தீற்றல் நிறங்களுடன் இருக்கும் ஒரு ட்யூலிப் மலர் வரையப்பட்டிருக்கிறது (the portrait “Flora”) 3
இந்த ட்யூலிப் நகலெடுத்து உருவாக்கப்பட்ட ரெம்பிராண்ட் ட்யூலிப் உள்ளிட்ட பல புது பிரபல கலப்பின ட்யூலிப்கள் இப்போது உலகெங்கிலும் வளர்கின்றன ஹாலந்தின் 7 ரெம்பிராண்ட் கிழங்குகள் 4 டாலர்களுக்கு இப்போது கிடைக்கின்றது.
ஐஸ்கிரீம்ட்யூலிப் என்றும் ஒரு புதிய வகை சமீபத்தில் உருவாக்கபட்டுள்ளது. இளஞ்சிவப்பு அடிப்பகுதியும் தூயவெண்ணிற நுனிப்பகுதியும் கொண்டிருக்கும் மலரரும்புகள் ஐஸ்கிரீம் போலவே தோற்றமளிக்கிறது.
’டான்ஸலைன்’ என்னும் புதிய ட்யூலிப் வகை வெள்ளை பல அடுக்கு மலரிதழ்களில் வைன் நிற சிறு பட்டைகளை கொண்டிருக்கும்.
ஒற்றை மலர்த்தண்டில் 5 சிவப்பு ட்யூலிப் மலர்களை கொடுக்கும் ’எஸ்டாட்டிக்’ வகையும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
முழு வெள்ளை மலரரும்புகள் முதிர முதிர ஊதா நிறம் கொண்டு முழு ஊதாவாக மாறும் வகையும் இப்போது புதிய வரவாகி இருக்கிறது.
வருடத்திற்கு 3 பில்லியன் ட்யூலிப் கிழங்குகளை உற்பத்தி செய்தும் அதிக அளவில் ஏற்றுமதி செய்தும் உலகின் ட்யூலிப் வளர்ப்பில் நெதர்லாந்து முதலிடம் வகிக்கிறது . ட்யூலிப் மலர்களுக்கான திருவிழாக்கள் உலகெங்கிலும் நெதர்லாந்து ,ஸ்விட்சர்லாந்து, வாஷிங்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பல இடங்களில் ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.
ஆசியாவின் மிகப்பெரிய ட்யூலிப் தோட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உலகப்புகழ் பெற்ற தால்ஏரி அருகே ஜபர்வான் மலையடிவாரத்தில் உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவில் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இந்திராகாந்தி நினைவுத் தோட்டத்தில் 46 வகையைச் சேர்ந்த 20 லட்சம் ட்யூலிப் மலர்ச் செடிகள் பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு ட்யூலிப் கண்காட்சி காஷ்மீரில் நடைபெறும். பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைப் பார்ப்பதற்காக உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வருவார்கள் இந்த கண்காட்சியில் தோட்டத்திற்கு வெளியே உணவு அரங்கம், கைவினைப்பொருட்கள் அரங்கம் ஆகியவை காஷ்மீர் பாரம்பரியத்துடன் அமைக்கப்படும். அத்துடன் உலகின் தலைசிறந்த உருது கவிஞர்களும் இந்த விழாவில் பங்குபெறுவார்கள். இந்த வருட கண்காட்சி மார்ச் 20 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1962 ல் இதே மார்ச் மாதம் 18 ம் தேதி ஒரு சிகிச்சையின் பொருட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறிய சில்வியா பிளாத்துக்கு அளிக்கப்பட்ட ட்யூலிப் மலர் செண்டை குறித்து அவர் எழுதிய பிரபல கவிதையின் தலைப்பும் ’ட்யூலிப்’ தான். மரணத்தை அணைத்துக்கொள்வதா அல்லது மீண்டும் துயர் நிறைந்த உலக வாழ்வுக்கு திரும்புவதா என்னும் கேள்வியை பித்துப்பிடிக்க வைக்கும் அழகு கொண்டிருக்கும் டியூலிப் மலர்கள் தன் முன்னே எழுப்புகின்றன என்றும் மிக எளிமையான மரணத்திற்கு முன்னர் அத்தனை அலங்கரமான ட்யூலிப்கள் இருப்பதன் பொருத்தமின்மையையும் இந்தக்கவிதையில் சில்வியா சொல்லுகிறார். மரணத்தின் அமைதியை கொண்டிருக்கும் மருத்துவமனையின் தூய வெண்ணிற அறையில்,உயிர்ப்புள்ள ரத்த சிவப்பு நிற ட்யூலிப் மலர்களின் இருப்பு எத்தனை முரணாக இருக்கிறது என்பதை சொல்லும் மிக அழகிய கவிதை இது. 4
ட்யூலிப்கள் மறுபிறப்பின், தயாள குணத்தின் ஆழ்ந்த அன்பின் அடையாளங்களாக கருதப்படுகின்றன. சமச்சீரான வடிவில் இருக்கும் இம்மலர்கள் 11 வது திருமண நாளின் பரிசாக அளிக்கப்படுகின்றன. மேலும் வெள்ளை மலர்கள் மன்னிப்பையும் மஞ்சள் புதிய துவக்கத்தையும், சிவப்பு புதிய உறவுகளையும் இளம் சிவப்பு நட்பையும் குறிக்க அளிக்கப்படுகின்றன.
ஹாலந்தின் கோகென்ஹா;ஃப் (Keukenhof) ட்யூலிப் தோட்டமே உலகின் மாபெரும் ட்யூலிப் தோட்டம். இங்கு சுமார் 7 மில்லியன் ட்யூலிப்கள் மலர்கின்றன. இந்த மாதத்தில் அத்தோட்டம் வானவில் தவறி பூமியில் விழுந்தது போல தோற்றமளிக்கும். அன்று துவங்கி இன்று வரையிலுமே உலகின் முன்னணி ட்யூலிப் உற்பத்தியாளராக 3 பில்லியன் ட்யூலிப் கிழங்குகளை உற்பத்தி செய்யும் ஹாலந்து தான் இருக்கிறது.
நெதர்லாந்தின் பெரும்பகுதி மார்ச் முதல் மே வரை பெரும் மலர்க்கடலைப் போலிருக்கும் மார்ச்சில் குங்குமப்பூ மலர்வு தொடர்ந்து டஃபோடில்கள் பின்னர் ஹயாசிந்த்துகள். இறுதியாக ட்யூலிப்கள் என மே முதல் வாரம் வரையிலும் தொடர்ந்து மலர்கள் மலர்ந்திருக்கும்
இப்போது அங்கு சென்று அந்த பேரழகு மலர்க்கடலை பார்க்கையில் ட்யூலிப் மலர்கள் 17ம் நூற்றாண்டு மக்களுக்கும் மரணத்தை விழைந்த சில்வியாவிற்கும் அளித்திருக்கும் பித்து எப்படிப்பட்டது என கண்கூடாக காணமுடியும்.
மேலும்
2. https://trends.google.com/trends/explore?q=tulip%20mania&geo=IN
3. https://en.wikipedia.org/wiki/Flora_(Rembrandt,_Hermitage)
4. https://www.poetryfoundation.org/poems/49013/tulips-56d22ab68fdd0