லண்டனின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் லிஸ்தான் சிறுநீர்ப்பை கற்களை அகற்றும் ஒரு அறுவை சிகிச்சையில் ஈடுபட்டிருந்தார். நோயாளியை மருத்துவ உதவியாளர்கள் பலமாக அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அறுவை சிகிச்சையின் இடையில் வலி தாங்க முடியாத நோயாளி திமிறி தன்னை விடுவித்துக் கொண்டு அறையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட ஓடி சற்று தொலைவில் இருந்த கழிப்பறையில் புகுந்து உள்ளே தாழிட்டுக் கொண்டார். மிக உறுதியான மருத்துவரான லிஸ்தான் குருதி தோய்ந்த கத்தியுடன் அவரை தொடர்ந்து ஓடிவந்து கழிப்பறை கதவை உடைத்து திறந்து, அலறிக் கொண்டிருந்த நோயாளியை தூக்கிக்கொண்டு வந்து மீண்டும் சிகிச்சையை தொடர்ந்து வெற்றிகரமாக முடித்தார்.
இப்படியான அதிர்ச்சியும் அச்சமும் அளிக்கும் அறுவை சிகிச்சை கதைகள் பல 1846 க்கு முன்பு வரையிலும் அடிக்கடி நாளிதழ்களில் வெளியாகும்.
1841 ஜூலை 21 தேதியிட்ட நியூயார்க் ஹெரால்ட் பத்திரிக்கையில் மற்றொரு அறுவை சிகிச்சை குறித்த கட்டுரை இப்படி விவரிக்கின்றது.
//அந்த அறையில் நீண்ட உலோக மேசையில் பதினைந்து வயதே ஆன ஒல்லியான வெளுத்த அந்த சிறுவன் படுக்க வைக்கப்பட்டு இருந்தான். அவன் மிகவும் அமைதியாகவும் தைரியமாகவும் தெரிந்தான். அவனது கண்கள் ஒரு துணியால் மறைத்துக் கட்டப்பட்டிருந்தன.
அவனது தொடையில் உருவான ஒரு கட்டி, சிகிச்சைக்குக் கட்டுப்படாமல் ஆழமாக வளர்ந்து சீழ்பிடித்ததில் அவன் காலையே தொடையிலிருந்து வெட்டி நீக்க வேண்டி வந்தது. இல்லாவிட்டால் அவன் உயிருக்கு ஆபத்து. அந்த அறுவை சிகிச்சைதான் அப்போது நடக்கவிருந்தது. வெட்டி அகற்றப்பட வேண்டிய காலை ஒரு உதவியாளர் உயர்த்தி பிடித்துல் கொண்டிருந்தார். குருதி இழப்பைத் தடுக்கும் பட்டை தொடையில் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது அந்த சிறுவனுக்குச் சிறிது மது புகட்டப்பட்டது.
அறுவை சிகிச்சை மருத்துவர் பளபளக்கும் கூர் கத்தியினால் தொடையின் எலும்பைத் துல்லியமாக அடையாளம் கண்டு மிக வேகமாகவும் கவனமாகவும் அறுக்கத் துவங்கினார். அந்த சிறுவனின் அலறல் மருத்துவமனை முழுவதும் கேட்டது. அவன் தலையை பின்னிருந்து தாங்கி பிடித்துக் கொண்டிருந்த அவன் தந்தையின் கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த மருத்துவரோ பதட்டமின்றி அவர் வேலையில் மட்டும் கவனம் குவித்திருந்தார்//.
இன்றைய நவீன மருத்துவத்தின் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் நமக்கு இக்காட்சியையும், அந்த நோயாளியின் வலியையும் முழுமையாக புரிந்து கொள்ளக்கூட முடியாது. 1846-க்கு முன்பு வரை அறுவை சிகிச்சைகள் இப்படித்தான் தாங்க முடியாத வலியை நோயாளிக்களித்தபடி நடந்தன.
அப்போதைய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கையாண்டவை பித்தப்பை கற்களை அகற்றுவது, உடலின் மேற்பரப்பின் காயங்கள், புற்றுநோய் கட்டிகள் இவற்றை அகற்றுவது ஆகிவற்றை மட்டும்தான். அரிதாகவே உடலுறுப்புக்களை நீக்கும் சிகிச்சைகள் நடந்தன. வயிற்றின் உட்பகுதி, நெஞ்சுக்கூடு மற்றும் தலையோட்டுக்குள் வரும் சிக்கல்களுக்கு அறுவை சிகிச்சை அப்போது அளிக்கப்பட்டிருக்கவில்லை. அவையெல்லாம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ’’செல்லக் கூடாத பகுதிகளாக’’ மருத்துவ உலகம் அடையாளப்படுத்தி இருந்தது.
அக்காலங்களில். ஒரு சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர் என்பவர் மிக வேகமாகச் செயலாற்றுபவராகவே இருந்தார். ஏனெனில் அவரே அதீத குருதி இழப்பினால் நோயாளி இறப்பதை தடுப்பவர்.
பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் அப்போது நோயாளியை கட்டிலில் சேர்த்துப் பிணைந்து அவரின் அலறல்களை உதாசீனப்படுத்தியபடியே நிகழ்ந்தன. பல நோயாளிகள் அந்த கட்டிலிலேயே இறப்பதும், தப்பி பிழைத்தவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகான சிக்கல்களினால் இறப்பதும் அதிகம் நடந்தது. கடவுளின் கருணை இருந்தவர்கள் அச்சத்தில் மயங்கினால் வலியறியாமல் இறக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அறுவை சிகிச்சையின் போது முழு நினைவுடன் இருந்த நோயாளிகள் உச்சகட்டப் பெருவலியை அனுபவித்தார்கள்.
மயக்கமூட்டும் சிகிச்சையான அனஸ்தீசியா கண்டறியப்பட்ட பின்னர் இவை அனைத்தும் மாறியது. அறுவை சிகிச்சைகள் மெதுவாக நடந்தன, செல்லக் கூடாத பாகங்களுக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் பளபளக்கும் கத்திகள் தயக்கமின்றி நுழைந்தன.
மருத்துவத் துறை வரலாற்றில் பல சாதனைகள் படிப்படியாக அடையப்பட்டிருக்கின்றன என்றாலும் பெருவலியை அளிக்கும் அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளை சிகிச்சையின் வலியறியாமல் நினைவிழக்கச் செய்யும் மருந்துகளின் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது.
அறுவை சிகிச்சைகளில் ஈதரும் குளோரோஃபார்மும் 19 -ம் நூற்றாண்டில்தான் பரவலாக உபயோகபடுத்தப்பட்டது. ஆனால் தாவர மயக்கமூட்டிகள் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே பெரிதும் பயன்பாட்டில் இருந்தன. தாவர மயக்கமூட்டிகளின் பயன்பாடு மிகப் பண்டைய காலத்தில் சுமேரியர்கள், பாபிலோனியர்கள், கிரேக்கர்கள் உள்ளிட்ட நாகரீகங்களில் இருந்திருக்கின்றது.
உலகின் முதல் வலி நீக்கியாகவும் நினைவிழக்கச்செய்யும் மருந்தாகவும் கடுமையான மது வகைகளே முன்பு அளிககப்பட்டன. குறிப்பாக போர் வீரர்களுக்கும் போரில் காயமுற்றவர்களுக்கும்.
கிமு.4200 லிருந்தே ஓபியம் பாப்பி கனிகளின் பால் மயக்கமூட்டியாக பயன்பாட்டிலிருந்திருக்கிறது.
கிமு 2250 BC ல் ஹென்பேன் (henbane) அல்லது கிறுக்குச்செடி எனப்படும் ஹையொசயாமஸ் நைஜர் (Hyoscyamus niger) செடியின் சாறு, பாப்பி கனிச்சாறு, ஹெம்லாக், மற்றும் மாண்ட்ரேக் சாறுகளில் நனைத்த பஞ்சை நோயாளியின் மூக்கில் வைத்து மயக்கமூட்டும் வழக்கம் ரோமானியர்கள் மற்றும் அரேபியர்களிடம் இருந்தது. இந்த மயக்கமூட்டும் பஞ்சுகளை சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள் (Spongia Somnifera).
கிமு 1500 முதல் ஓபியம் பாப்பி கனிச்சாறு அறுவை சிகிச்சைக்கு முன்னர் அளிக்கப்பட்டது ஆவணப்படுத்த பட்டிருக்கிறது. பின்னர் கிமு 1100- ல் சைப்ரஸ் மற்றும் அருகிலிருந்த பிரதேசங்களில் இதன் பொருட்டே பாப்பி செடிகள் பயிராக்கப் பட்டன.
சில சொலனேசி குடும்பத் தாவரங்கள், மாண்ட்ரேக், ஹென்பேன் மற்றும் ஊமத்தையின் பல சிற்றினங்களில் இருந்த ட்ரோபேன் ஆல்கலாய்டுகள் வீரியமிக்கவை என்பதால் பண்டைய ரோமிலும் கிரேக்கத்திலும் இவை மயக்கமூட்டிகளாகப் பயன்படுத்தப்பட்டன. ஹிப்போகிராடெஸ் மற்றும் ப்ளைனி ஆகியோர் ஓபியம் மற்றும் சொலனம் தாவரங்களின் வலி நிவாரணம் அளிக்கும் மற்றும் நினைவழிக்கும் பண்புகள் குறித்துப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அமெரிக்க பழங்குடியினர் கொகேய்ன் மரத்தின் இலைகளை மயக்கமூட்டியாக பயன்படுத்தினர். இன்கா பழங்குடிகள் இந்த இலைகளை மென்று காயங்களின் துப்பி சருமம் மரத்துப் போனபின்பு காயங்களை சுத்தம் செய்து தைத்து சிகிச்சை அளித்தார்கள்.
பாபிலோனியர்களும் பல் சிகிச்சையின் போது வாய் மரத்து போக கொகேய்ன் இலைகளை பயன்படுத்தினார்கள்.
தென்னமெரிக்க பழங்குடியினத்தவர்கள் அம்பு நுனிகளில் தடவும் தாவர நஞ்சான க்யூராரி (Curare) வேட்டைவிலங்குகளைச் செயலிழக்கச் செய்யும். தசைகளை இலகுவாக்கி நோயாளிகளை அமைதிப்படுத்தும் பொருட்டு இந்த க்யூராரி அறுவை சிகிச்சைகளிலும் பயன்படுத்தபட்டது.
இப்படிப் பல நூறு தாவரங்கள் பழங்குடியினரால் இன்றும் மயக்க மூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பிரிக்காவின் பன்யாரோ (Banyoro) பழங்குடியினர், சிக்கலாகிவிடும் பிரசவங்களின் போது வாழைப்பழங்களின் மதுவை கர்ப்பிணிகளுக்கு அளித்து, பாதி நினைவிலிருக்கும் அவர்களையும் ஒத்துழைக்கச் செய்து வலியில்லாமல் சிசேரியன் பிரசவங்களை நடத்துகிறார்கள்.
கோலக்காய் (Wintergreen) எனப்படும் நறுமணத் தாவரங்களிலிருந்து கிடைக்கும் எண்ணையும் முடக்கு வாதம் மற்றும் பல வலிகளுக்கு நிவாரணியாகவும் அறுவை சிகிச்சையில் மயக்கமூட்டியாகவும் பயன்படுத்தப்பட்டது.
ஆப்பிரிக்க க்கனிமரமான Vitex doniana வின் மரப் பட்டைச்சாறு நாள்பட்ட காயங்களை வலியின்றி சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டது. (இந்தக் கனியை கருப்பு ப்ளம் என்றும், அதையே நாவல் பழம் என்றும் சில தளங்கள், குறிப்பாக விக்சனரியும் சொல்கின்றன.)
சூரிய காந்தி குடும்பத்தை சேர்ந்த பல்வலிப்பூண்டு என்று அழைக்கப்படும் Spilathes acmella இலைகளும் மலர் மஞ்சரிக் கூம்புகளும் முடக்கு வாத வலி சிகிச்சையிலும் பல் சிகிச்சையிலும் மரத்துப்போகும் உணர்வை அளிக்கும் பொருட்டு பன்னெடுங்காலமாக பழங்குடியினரால் மாற்று மருத்துவச் சிகிச்சைகளில் பயன்படுத்தபடுகிறது.
ஆஃப்ரிக்காவின் கோந்து மரமான Sterculia tragacantha வின் மரப்பிசின், தீக்காயங்களின் சிகிச்சையின் போது உணர்விழக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது.
உடலின் குறிப்பிட்ட பாகங்களை மட்டும் உணர்விழக்க செய்யும் மருந்தான கொகேய்ன் கொக்கோ இலைகளிலிருந்து பெறப்பட்டது. பச்சைமிளகாயிலிருந்து கிடைக்கும் காயீன் மற்றும் கேப்சாய்சின் ஆகியவையும் மயக்கமூட்டிகளாக பயன்படுத்தப்பட்டன. (cayenne. capsaicin).
யாரோ (Yarrow – Achillea millefolium) என்ற தாவரத்தின் வேர்களின் சாறு, மது, கஞ்சா இலைகள் பாப்பி கனியின் பால், சணப்பை புகை (hemp) கிராம்பு எண்ணை ஆகியவை பண்டைய மருத்துவ முறைகளில் வலி நீக்கியாகவும் மயக்கமூட்டி களாகவும் அதிக பயன்பாட்டில் இருந்தன.
அஸிரியர்களும், எகிப்தியர்களும் கிபி 400 ஆண்டுகளுக்கு முன்பே கழுத்தில் சிரசுத் தமனியை (Carotid artery) அழுத்திப் பிடித்துத் தற்காலிகமாக நோயாளியை நினைவிழக்கச் செய்தும் சிகிச்சை அளித்திருக்கின்றனர்.
பண்டைய சுமேரியர்களும் அஸிரியர்களும் உலர்ந்த பாப்பிச் செடியின் பாலை மதுவில் கரைத்தளித்து, அந்த போதையில் நோயாளியை நினைவிழக்க செய்து அறுவை சிகிச்சைகளை நடத்தினார்கள்.
பண்டைய எகிப்தியர்கள் ஓபியத்தையும், ஓபியத்துக்கு இணையான செயல்திறன் கொண்டிருந்த மேண்ட்ரேக் (Mandragora officinarum) வேர்களையும் இலைகளையும் மயக்கமூட்டப் பயன்படுத்தினார்கள். மேலும் பல தாவர சேர்க்கைகளை மயக்கமூட்டிகளாக அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தினார்கள். இவற்றை குறித்து பண்டைய எகிப்திய நூலான ஏப்ரஸ் பாபிரஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மயக்கமூட்டிகளை முதன் முதலில் உருவாக்கி பயன்படுத்தியவரான, அறுவை சிகிச்சை முறைகளின் தந்தையான சுஷ்ருதர், நோயாளி நினைவிழக்கும் வரை கஞ்சா இலைச்சாறு கலக்கப்பட்ட மதுவைப் புகட்டி பின்னரே அறுவைசிகிச்சையை தொடங்கி இருக்கிறார். கஞ்சா இலைப் புகையையும் நுகரச் செய்து மயக்கமூட்டி இருக்கிறார் சுஷ்ருதர்.
சித்த வைத்தியத்தில் அறுவை சிகிச்சை அரிதாகவே செய்யப்பட்டிருக்கிறது. தேவ, மானுட, அசுர சித்த வைத்திய வகைகளில் அறுவை சிகிச்சையை கடைசி வழியாக அசுர வைத்தியம் எனும் வகையில்தான் வைத்திருக்கிறார்கள். அப்போது மயக்கமூட்டியாக கோரக்கர் என்னும் சித்தர் கஞ்சா இலைகளை உபயோகப்படுத்தி இருக்கிறார். மயக்கமூட்டியாகவும் உளம் பிறழ்ந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் கஞ்சா சித்தர்களால் பயன் படுத்தப்பட்டிருக்கிறது.
பண்டைய இந்தியா மற்றும் சீனாவில் ஓபியம் அறிமுகமாகும் முன்பே கஞ்சா இலைப் புகையும், நஞ்சுகளின் அரசி எனப்படும் அகோனிட்டமும் மயக்கமூட்ட மற்றும் வலியை கட்டுபடுத்த மருத்துவ சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்பட்டன.
அரேபிய வணிகர்கள் ஓபியத்தை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அறிமுகப்படுத்தும் முன்பு பயன்பாட்டில் இருந்த தாவரப் பொருட்கள் குறித்து தனது ஹிஸ்டோரியா பிளாண்டாரத்தில் தியோஃப்ராஸ்டஸ் (கிமு 371-287 ) குறிப்பிட்டிருக்கிறார்.]
புகழ்பெற்ற சீன மருத்துவரும், அறுவை சிகிச்சை நிபுணருமான பியன் சிய ( Bian Que. 300 BC) பொது மயக்கமூட்டிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சைகள் செய்தார்.
ஓபியம் பல பண்டைய நாகரிகங்களில் வழிபடப்பட்டது என்றே சொல்லலாம். வலி நீக்கியாகவும், மனம் மயக்கவும் மட்டுமல்லாது வலியற்ற சிகிச்சைகளுக்காகவும் ஓபியம் பயன்படுத்தப்பட்டது. தாவர நஞ்சான ஹெம்லாக்குடன் கலக்கப்பட்ட ஓபியம் வலியற்ற இறப்புக்காக மரண தண்டனைக் கைதிகளுக்கு அளிக்கப்பட்டது.
பண்டைய கிரேக்கர்கள் ஓபியத்தை உறக்கத்தின் கடவுளான ஹிப்னோ, இரவின் கடவுளான நிக்ஸ் மற்றும் இறப்பின் கடவுளான தனடோஸ் ஆகியோருடன் தொடர்பு படுத்தினார்கள் .இவர்கள் ஊமத்தை சாற்றை மயக்கமூட்டியாக சிகிச்சைகளின் போது உபயோகப்படுத்தினார்கள். ஹோமரின் ஒடிஸியில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாக்ராடிஸைக் கொன்ற ஹெம்லாக்கும் இதுபோலவே மயக்கமூட்டியாக புழக்கத்தில் இருந்திருக்கிறது.
கிரேக்க அறுவை சிகிச்சை நிபுணரான டயாஸ்கொரிடஸ், மேண்ட்ரேக் (Mandrake) என்னும் தாவரத்தின் வேரை மயக்கமூட்டியாக பயன்படுத்தினார். மந்திர தந்திரங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த தாவரத்தைக் குறித்து பல அசாதாரண நம்பிக்கைகளும் நிலவி இருக்கின்றன.
இவற்றுடன் கொகேய்ன் மரமான Erythroxylum coca விலிருந்து கொகேய்ன், தைமஸிலிருந்து தைமோல், கிராம்பிலிருந்து யூஜினோல் ஆகியவையும் வலிநிவாரணி மற்றும் மயக்கமூட்டிகளாக பயன்படுத்தப்பட்டன. ( thymol & Eugenol ),
பண்டைய சீனாவிலும் கஞ்சா இலைப் புகை நுகருதலும், வீரியமிக்க பல வகை எரி மதுவகைகளும் வலி மிகுந்த சிகிச்சைக்கு முன்னர் தரப்பட்டிருக்கிறது. அரேபிய மற்றும் பெர்ஸிய மருத்துவர்கள் முதன்முதலில் நுகரும் மயக்கமூட்டிகளை பயன்படுத்தினார்கள்.
கிபி 1600-லிருந்து சீன பாரம்பரிய மருத்துவத்தில் குத்தூசி மருத்துவ மயக்கமூட்டல் (Acupuncture anesthesia) முறை பயன்பாட்டில் இருக்கிறது.
சீனா ஹான் வம்ச ஆட்சியின் கடைசிக் காலங்களில் ஆட்சியைப் பிடித்த ஒரு வட்டார ராணுவத் தலைவனுக்கு அரச மருத்துவராகப் பணியாற்றக் கட்டாயப்படுத்தப்பட்ட ஹுவா டுவோ (Hua Tuo) பிரத்யேக தாவர மயக்க மருந்து கலவையை வலி மிகுந்த சிகிச்சைகளின் போது பயன்படுத்தினார். Mafeisan என்ற இந்த மருந்துத் தயாரிப்பு முறைகளை பரம ரகசியமாக வைத்திருந்தார். சிகிச்சை மூலம் தன்னைக் கொல்லச் சதி செய்வதாக ஐயப்பட்ட அரசரால் மரண தண்டனை கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட ஹுவா டுவோ, தன் மருத்துவக் குறிப்புகளை எழுதிய சுருளை சிறை அதிகாரியிடம் கொடுக்க முயன்ற போது, அரசரின் கோபத்துக்குப் பயந்த அதிகாரி அவற்றை வாங்க மறுத்ததாகவும், அதனால் ஹுவா டுவோ தன் இறப்புக்கு முன்னர் தனது அனைத்து மருத்துவக் குறிப்புக்களையும் நெருப்பிட்டு அழித்தாரென்றும் சொல்லப்படுவதாக விக்கிபீடியா குறிக்கிறது.
ஹுவா டுவோவுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் நிறையப் பரிச்சயம் இருந்தது, பௌத்தத் துறவிகளோடு பழகி அந்த மருத்துவ முறையை அவர் கற்றுக் கொண்டிருந்தார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய மருத்துவ முறைகள் சமகாலச் சீன மருத்துவத்தை விட ஒரு நூறாண்டு முன்னே சென்றிருந்தவையாக இருந்தன என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சீனாவில் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகளைப் பயன்படுத்திய முதல் மருத்துவர் என்று இவர் கருதப்படுகிறார்.
தவிர கன்ஃபூசிய அறப் பார்வையில் உடல் புனிதமானதாகக் கருதப்பட்ட காரணத்தால், அறுவை சிகிச்சைகள் ஹூவா டுவோவின் காலத்துக்குப் பிறகு சீனாவில் கைவிடப்பட்டிருந்தன என்று விக்கிபீடியா குறிப்பு சொல்கிறது.
கிபி 940 – 1040 ல் ஸொராஸ்டிரியன் துறவிகளால் உருவாக்கப்பட்ட மருத்துவ மது வகை ஒன்று அறுவை சிகிச்சைக்கு முன்னர் நோயாளிக்கு புகட்டப்பட்டது.
கிபி 1000 -வது ஆண்டில் அபு அல் காசிம் அல் சஹ்ராவி ( Abu al-Qasim al-Zahrawi-936-1013), என்னும் அரேபிய மருத்துவர் 30 பகுதிகளாக பிரசுரித்த அறுவை சிகிச்சையின் அடிப்படைகள் குறித்த மருத்துவ நூலான Kitab al-Tasrif ல் பொது மயக்கமூட்டிகள் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.
கிபி 1020-ல் இப்ன- சீனா என்னும் மருத்துவர், (Ibn Sīnā -980–1037) நுகரும் மயக்கமூட்டிகளின் பயன்பாட்டை விரிவாக பதிவு செய்திருக்கிறார்.
இப்- ஜூர் என்னும் (Ibn Zuhr -1091–1161) என்னும் மற்றொரு அரேபிய மருத்துவரும் தனது மருத்துவப் பாடநூலான Al-Taisir ல் முழு மயக்கமூட்டுதல் சிகிச்சை (General anaesthesia) குறித்து விவரித்திருக்கிறார்.
நுகரும் மயக்கப்பஞ்சு மருந்தை கொண்டு பல வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் செய்தவர்களில் இவர்கள் மூவரும் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
13 -ம் நூற்றாண்டில் மருத்துவப் பரிந்துரைகளில் மயக்கமூட்டும் பஞ்சுகள் இடம்பெற துவங்கின. மல்பெரி காய்கள், ஆளி விதை, மாண்ட்ரேக் இலைகள், ஹெம்லாக் ஆகியவற்றின் கலவையான இந்த பஞ்சை வெப்பமூட்டி மூக்கில் வைத்து அதிலிருந்து வரும் புகையை நோயாளிகள் சுவாசித்து நினைவிழந்தார்கள்.
மயக்கமூட்டுவதில் துல்லியமான அளவை நிர்ணயிப்பது, தாவர மயக்கமூட்டிகளின் சிக்கலாக இருந்தது. குறைவாக அளிக்கையில் நினைவிழக்காமல் இருப்பதும், அளவு கூடிப்போகையில் உயிரிழப்பும் நடந்தது.
கிபி 1200 – 1500 வரை இங்கிலாந்தில் கணைய சுரப்பு நீர், ஓபியம், ஹெம்லாக் உள்ளிட்ட பல தாவர சேர்மானங்கள் இருந்த dwale என்னும் ஒரு மருந்து கலவை மயக்கமூட்டியாக பயன்படுத்தப்பட்டது. 1
இந்த கலவை ஜான் கீட்ஸின் புகழ்பெற்ற கவிதையான “Ode to a Nightingale”மற்றும் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் உள்பட பல பிரபல இலக்கிய படைப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஹோமர் நெபெந்தி (nepenthe)என்னும் ஒரு தாவர மயக்கமூட்டிக் கலவையை குறிப்பிட்டிருக்கிறார்,அது கஞ்சா மற்றும் ஓபியத்தின் கலவையாக இருந்திருக்க கூடும். பண்டைய தாவர மயக்கமூட்டிகளுக்கு சிகிச்சைக்கு பின்னரான விரும்பத்தகாத பக்க விளைவுகளும் இருந்தது. மேலும் பஞ்சில் நனைத்து நுகரச்செய்யும் மயக்கமூட்டும் மருந்துகளின் அளவும் துல்லியமாக கணிக்கப்படுவதில்லை என்பதாலும் நவீன மயக்கமூட்டிகளின் தேடலும் கண்டுபிடிப்புகளும் 13 -ம் நூற்றாண்டில் இருந்து துவங்கின. இந்த தேடல் பயணம் மிக நீண்ட தாயிருந்தது. 1275-ல் டை ஈதைல் ஈதரை கண்டுபிடித்தவராக ரசவாதியான ரமோன் யூல் (Ramon Llull ) அறியப்படுகிறார்.
ஈதரின் வலிநிவாரணப் பண்புகள் ஆரியோலஸ் தியோஃப்ராஸ்டஸ் (Aureolus Theophrastus -1493–1541) என்பவரால் 1525- ல், கண்டறியப்பட்டது. ஜெர்மானிய வேதியியலாளர் சிக்மொண்ட் ஃப்ரோபீனியஸ் இதற்கு Spiritus Vini Æthereus என்று 1730-ல் பெயரிட்டார்.
1493–1541ல் மருத்துவரான பாராசெல்சஸ் (Paracelsus) விலங்குகளுக்கு மயக்கமூட்ட ஈதரை பயன்படுத்தினார்.
1540-ல் ஜெர்மனிய மருத்துவர்/தாவரவியலாளர் வாலெரியுஸ் கார்டுஸ் (Valerius Cordus -1515–1544), ஓர் வேதிக்கலவையை தயாரித்து மயக்கமூட்டியாக சிகிச்சைகளுக்கு உபயோகப்படுத்தினார். அதன் சேர்மானங்களை அவர் தெரியப்படுத்தவில்லை.
ராபர்ட் போய்ல் (Robert Boyle -1627–1691) ஓபியத்தை பூஞ்சிறகுகளில் தொட்டு விலங்குகளின் ரத்த நாளங்களில் தடவி மயக்கமூட்டி சிகிச்சை அளித்தார்.
ஆக்ஸிஜனை பிரித்து எடுத்த ஜோஸப் ப்ரீஸ்ட்லி (Joseph Priestley -1733–1804) மயக்கமூட்டியாக நைட்ரஸ் ஆக்ஸைடை முதன் முதலில் முயற்சித்தார்.
மனவசியக்கலையை தோற்றுவித்தவரான ஃப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர் (Franz Anton Mesmer-1734–1815) வசிய முறைகளையும் காந்த சிகிச்சைசைகளையும் பயன்படுத்தி நோயாளிகளை நினைவிழக்க செய்தார்.
ஹம்ஃப்ரி டேவி (Humphry Davy -1778–1829) நைட்ரஸ் ஆக்ஸைடினால் மயக்கமூட்டுகையில் அறுவை சிகிச்சையின் வலி மற்றும் குருதி இழப்பு பெருமளவு குறைக்கிறது என்று ஆய்வு கட்டுரை வெளியிட்டார்.
ஜப்பானிய மருத்துவர் செய்ஷு ஹனோகா ( Seishu Hanaoka -1760–1835) ஊமத்தை, ஆஞ்சலிகா மற்றும் சில தாவரச் சாறுகள் கலந்த Tsusensan என்னும் ஒரு சூடான பானத்தை உருவாக்கி,நோயாளியின் உடல் எடை மற்றும் வயதுக்குத் தகுந்த துல்லியமான அளவுகளில் அதை அளித்து புற்றுநோய் கட்டிகளை அறுவை சிகிச்சை செய்கையில் உபயோகப்படுத்தினார். இது கொஞ்சம் அதிகமானாலும் உயிரிழக்கச் செய்யும் கலவை.
அட்டைகளை கடிக்க வைத்து தோல் மரத்துப்போனதும் ரத்தமிழக்க செய்யும் வலி இல்லாத சிகிச்சை பண்டைய காலங்களிலிருந்தே ஆயுர்வேதத்தில் இருக்கிறது(rakthamokshan). ஃபிரெஞ்ச் மருத்துவரான ஃப்ரேன்கோயிஸ் (François-Broussais -1772–1838) இதே அட்டை முறையை பல நோய்களுக்கு உபயோகித்தார்.
18-ம் நூற்றாண்டில் மயக்கமூட்டும் வாயுக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. விஞ்ஞானியும் மதபோதகருமான ஜோசப் பிரீஸ்ட்லி மற்றும் தாமஸ் பெடோஸ் ஆகியோர் (Joseph Priestley -1733-1804, Thomas Beddoes -1760 – 1808) பல வாயுக்களை குறிப்பிட அளவுகளில் கலந்து நோயாளிகளை நினைவிழக்கச்செய்யும் சோதனைகளை தொடர்ந்து செய்தார்கள்.
இந்த சோதனைகள் குறித்து 1775-ல் பிரீஸ்ட்லி ’’பலவிதமான வாயுக்களில் நடத்தப்பட்ட சோதனைகளும் முடிவுகளும்’’ என்னும் 6 பகுதிகள் கொண்ட நூலில் விவரித்தார்.( Experiments and Observations on different kinds of Air). அந்தச் சோதனைகளின் அடிப்படையில் வாயு சிகிச்சை நிறுவனமொன்றையும் 1798-ல் துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே ஜேம்ஸ் வாட் மற்றும் ஹம்ஃப்ரி டேவி அகியோரும் இவர்களுடன் இணைந்த பின்னர் (James Watt (1736 – 1819) and Humphry Davy (1778 –1829) வாயு சிகிச்சைகளுக்கான மருந்துகளை தயாரிப்பதில் இந்நிறுவனம் முன்னணியில் இருந்தது
இங்குதான் டேவி நைட்ரஸ் ஆக்ஸைடின் மயக்கமூட்டும் பண்புகளை கண்டறிந்து அதற்கு மகிழ்ச்சி வாயு அல்லது சிரிப்பூட்டும் வாயு என்று பெயரிட்டார்.
இந்த நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவின் வலிநிவாரணப் பண்புகளின் சோதனைகளில் மிக வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சியும் நடந்தது.
Dr. வெல்ஸ் மற்றும் சாமுவேல் ஆகியோர் (Wells & Samuel Colt) நைட்ரஸ் ஆக்ஸைடை மயக்கமூட்டியாக சந்தைப்படுத்த முயன்றார்கள். இதன் பொருட்டு ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு சிகிச்சையை நடத்த திட்டமிட்டார்கள். அவ்வாறு நடந்த பல் பிடுங்கும் சிகிச்சையில் நோயாளிக்கு போதுமான அளவு மயக்க மருந்து அளிக்க தவறியதால் அவர் வலியில் கதறி அழுது அவர்களின் அம்முயற்சி படு தோல்வியடைந்தது
அந்த தோல்வியிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள முடியாத Dr. வெல்ஸ் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்கொலை செய்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு நைட்ரஸ் ஆக்சைடின் மயக்கமூட்டும் பயன்பாடு ஏறக்குறைய நின்று போனது.
பிரிஸ்ட்லி, டேவி, பெட்டோஸ் மற்றும் வாட் ஆகியோரின் வெற்றிகளிலிருந்தும், வெல்ஸ் மற்றும் சாமுவேலின் தோல்வியிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொண்ட பிற்கால மருத்துவர்கள், மயக்கமூட்டும் வாயுக்களை சிகிச்சைகளில் பயன்படுத்துவதில் வெற்றி கண்டனர்.
அதிலொன்றுதான் மார்டன் நடத்திய அறுவை சிகிச்சை. நவீன மயக்கமூட்டும் துறையை தோற்றுவித்தவர் வில்லியம் கிரீன் மார்டன் என்னும் பல் மருத்துவர். (William T.G. Morton (1819-1868). இளம் மருத்துவராக பாஸ்டனில் பணிபுரிந்து கொண்டிருந்த மார்டன் அப்போது மயக்கமூட்டியாக பயன்பாட்டில் இருந்த நைட்ரஸ் ஆக்ஸைடை காட்டிலும் மேம்பட்ட மயக்கமூட்டியை தேடும் ஆர்வம் கொண்டிருந்தார், தேடலில் அவருடன் ஜான் கோலின்ஸ் வாரேன் என்னும் அறுவை சிகிச்சையாளரும் இணைந்து கொண்டார்.
விடாமுயற்சியாலும் இயல்பாகவே அவருக்கிருந்த மருத்துவ அறிவினாலும் அவர் ஈதரின் மயக்கமூட்டும் பண்புகளைக் கண்டறிந்தார். அக்டோபர் 16, 1846 அன்று உலகின் வெற்றிகரமான மயக்கமூட்டி அளித்து நோயாளியை நினைவிழக்க செய்த அறுவை சிகிச்சை நடந்தது. ஒரு தனி மனிதராக மார்டன் ஈதர் வாயுவை துல்லியமான அளவுகளில் மயக்கமூட்டியாக அளித்து நோயாளி வலியை உணராமல் அறுவை சிகிச்சையை நடத்தலாம் என்று உலகிற்கு நிரூபித்தார்.
கில்பெர்ட் அபோட் என்பவரின் தாடையின் கீழிருந்த ஒரு கட்டியை அகற்றிய அந்த அறுவை சிகிச்சை மருத்துவ வரலாற்றில் ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. பொதுமக்கள் முன்னிலையில் மாஸச்சூஸெட்ஸ் (Massachusetts) பொது மருத்துவமனையில் அந்த நோயாளிக்கு ஈதர் அளிக்கப்பட்டது அவர் நினைவிழந்ததும் அறுவை சிகிச்சை எளிதாக, வெற்றிகரமாக நடந்தது. அப்போதைய நாளிதழ்களில் இந்த அறுவை சிகிச்சை படிப்படியாக விவரிக்கப்பட்டு விரிவான கட்டுரைகள் வெளியாகின.
அமெரிக்க அறுவை சிகிச்சையாளர் க்ராஃபோர்டு லாங் (Crawford Long) 1842ல் ஈதரை மயக்கமூட்டியாக பயன்படுத்தி இருந்தாலும் அவர் பொதுவெளியில் அந்த பயன்பாட்டை தெரிவித்திருக்கவில்லை. எனவே மார்டனே ஈதரை மயக்கமூட்டியாக முதன் முதலில் பயன்படுத்தியவர் என்று மருத்துவ வரலாற்றில் பதிவானது.
தனது 48 -வது வயதில் மாரடைப்பால் காலமான மார்ட்னின் இறப்பை உறுதி செய்த மருத்துவர் தனது மாணவர்களிடம் ’’மனித குலத்தின் வலியை நீக்க அரும்பாடுபட்ட ஒருவரின் உடல் இது’’ என்று சொன்னதாக அப்போது உடனிருந்த மார்டனின் மனைவி பின்னர் கூறினார்
மார்டனின் கல்லறையில் இப்படி எழுதியிருக்கிறது
’’எவருக்கு முன்பு வரை அறுவை சிகிச்சைகள் மிகுந்த துயரளிப்பவைகளாக இருந்தனவோ, எவரால் அறுவை சிகிச்சைகளின் வலி தவிர்க்கப்பட்டதோ,
எவருக்கு பிறகு அறிவியல் வலியை கட்டுக்குள் கொண்டு வந்ததோ
அவர் இங்கே உறங்குகிறார்.’’
மோர்டானின் இந்த சிகிசையளிப்புக்கு சில வாரங்களுக்கு பின்னர் லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு காலை வெட்டி அகற்றும் சிகிச்சைக்கும் ஈதர் உபயோகப்படுத்தப்பட்டு சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.அதன்பிறகு ஈதர் மிகப்பிரபலமான மயக்கமூட்டியாக இருந்தது.
1846-ல் ஆலிவர் வெண்டல் ’’நினைவு- இன்றி’’ என்று பொருள் படும் அனெஸ்தீசியா எனும் சொல்லை உருவாகினார்.
குளோரோஃபார்ம் எடின்பர்க் நகரில் மகப்பேறியல் மருத்துவர் ஜேம்ஸ் சிம்சனால் 1847ல் கண்டறியப்பட்டது. குளோரோஃபார்ம் மயக்கமூட்டியாக நல்ல பலனளித்தது என்றாலும் அதன் பக்க விளைவுகள் அதிகமாக இருந்தன, சிகிச்சையின் போது உயிரிழப்பு அல்லது சிகிச்சைக்கு பின்னர் ஈரல் செயலிழப்பு ஆகியவை உண்டாகியது. ஆயினும் அதன் பயன்பாடும் அதிக அளவில் இருந்தது. அடுத்த 40 வருடங்களில் மயக்கமூட்டிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.
1853-ல் பிரிட்டனில் விக்டோரியா மகாராணியின் எட்டாவது பிள்ளைப்பேற்றின் போது (Prince Leopold) அவரது மருத்துவரான ஜான் ஸ்னோ அரசிக்கு மயக்கமூட்டியை அளிக்க அரசு ஒப்புதல் அளித்தது.
குழந்தை மருத்துவரான ஜோஸஃப் ஓட்வையர் (Joseph O’Dwyer- 1841-1898) முதன்முதலாக சுவாசப்பாதையில் குழாய்களைச் செருகி, மயக்கமூட்டிகளை அதன் வழியாக செலுத்தி அறுவை சிகிச்சை செய்யும் முறையை கண்டறிந்தார், (metal “O’dwyer” tubes).
இந்த சிகிச்சைகளில் மேலும் பல முக்கியமான மாறுதல்களை செய்தவர்களாக ஆர்தர் குடெல் ( Arthur Guedel (1883-1956), ரால்ஃப் வாட்டர்ஸ் ( Ralph M. Waters -1883-1979), செவாலியர் ஜேக்ஸன் (Chevalier Jackson -1865-1958) ஆகியோர் கருதப்படுகின்றனர்.
19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் ஓபியத்தின் வரவு வரையிலும் ஈதர் குளோரோஃபார்ம் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகளின் மருத்துவ பயன்பாடுகள் உயர்த்தும் சரிந்தும் கொண்டிருந்தன.
பின்னர் ஓபியம் மயக்கமூட்டுதல் வெகுவேகமாக பிரபலமானது. மருந்தாளுநர் பிரெட்ரிக் வில்ஹெம் மார்ஃபீனைப் பிரித்தெடுத்த பின்னர் இதன் உபயோகம் மிக அதிகரித்தது.
மார்ஃபீன் புகழுடன் இருக்கையிலேயே ஓபியத்திலிருந்து ஆக்ஸிகோண்டின், ஓபியம் மாத்திரைகள், லாட்னம், கோடின், ஹெராயின், ஹைட்ரோ கோடின் ஆகியவையும் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. இவற்றில் சில இன்று வரையிலும் வலிநீக்கிகளாக இருக்கின்றன.
மார்ஃபீனுக்கு அடிமையாவதும், அதிக அளவு உட்கொள்வதால் மரணமும் அவ்வபோது ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் இவற்றின் மருத்துவ உபயோகங்கள் வெகுவாக புகழ்பெற்றிருந்தன. அச்சமயத்தில் தான் மாற்று மயக்கமூட்டியாக கொகேய்ன் அறிமுகமானது.
1860 ல் ஆல்பர்ட் நீமேன் (Albert Niemann) கொக்கோ இலைகளை மெல்லுவது வாயை மரத்துப் போகச் செய்யும் என்பதைக் கண்டறிந்தார். அவரே கொகெய்னை பிரித்தெடுத்து கொகேய்ன் என்னும் பெயரையும் வைத்தவர்.
இவரது ஆய்வறிக்கையை வாசித்த சிக்மண்ட் ஃப்ராய்ட். மார்ஃபீன் அடிமைகளுக்கு கொகெய்னை மருந்தாக அளித்தார்.அவரது பரிந்துரையின் பேரில் அவரது நண்பரும் வியன்னா கண் மருத்துவருமான கார்ல் கொல்லர் (Carl Koller), 1884’ல் ஒரு துளி கொகேய்ன் கரைசலை கண் விழிகளில் இட்டு கண் மரத்துப் போனதும் கண் புரை அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்தார்.
அதற்கு முன்பு வரை பல் மருத்துவத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்ட கொக்கோ இலைச்சாறு இந்த பயன்பாட்டுக்கு வந்தது மருத்துவ வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1884ல் குறிப்பிட்ட பாகங்களை மட்டும் மரத்து போகச் செய்ய கொகேய்ன் பெருமளவில் பயன்பாட்டில் இருந்தது.
வலிநீக்கும் களிம்பாக உடல்வலிக்கும் தசைபிடிப்புக்கும், பாலுணர்வுக் குறைபாட்டிற்கும்,மன அழுத்தத்திற்குமான மருந்தாகவும் கொகேய்ன் பரிந்துரைக்கப்பட்டது.ஆனால் மார்ஃபீனைபோலவே இதற்கும் மக்கள் அடிமையாக துவங்கினார்கள்
இவற்றின் பயன்பாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மருத்துவர்கள் இவற்றைப் பரிந்துரைப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் மருத்துவ உபயோகங்களுக்கான ஓபியத்தின் கட்டுப்படுத்தபட்ட பயன்பாடுகள் குறித்த அமெரிக்க அரசின் தீவிர சட்டங்கள் 1909’ல் தான் நடைமுறைக்கு வந்தன
1900-களில் மேலும் புதிய பக்க விளைவுகளற்ற மயக்கமூட்டிகள் வந்தன அறுவை சிகிச்சைகள் மருத்துவருக்கும் நோயாளிக்கும் எளிதாக அமைந்தன.
1910ல் மயக்கவியல் சிகிச்சைகளின் போது சுவாசத்தை கட்டுப்படுத்துவது அறிமுகமானது. இந்த சிகிச்சை முறைகள் பின்னர் 1920 மற்றும் 1930களில் மேம்படுத்தப்பட்டன/
அதன்பிறகு மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை குறைக்கும் மருந்துகளை இரத்த நாளங்கள் வழியே செழுத்தி மயக்கமூட்டுதல் 1932-ல் துவங்கியது (barbiturates).
1940 மற்றும் 1950களில் கியூராரே, ஹென்பேன் போன்ற தசைகளை இலகுவாகும் மயக்கமூட்டிகள் பயன்பாட்டிற்கு வந்தன.
அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (Antiseptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டு பிடித்தது பிரித்தானிய அறுவை சிகிச்சை நிபுணரான ஜோசப் லிஸ்டர் (Joseph Lister, 1827 –1912) .
இவரே அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் மருத்துவக் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நோய் நுண்மங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர் , செயல்திறன்மிக்க மயக்கமூட்டிகளுடன் ஜோசப் லிஸ்டரின் கிருமி தடுப்பு முறைகளும் சேர்ந்து அறுவை சிகிச்சைகளின் போதும், சிகிச்சைக்கு பின்னருமான மரணங்களை வெகுவாக குறைத்தன.
20 -ம் நூற்றாண்டில் மயக்கமூட்டுதல் மிகப் பாதுகாப்பானதாகி, மயக்கமருந்துகளின் செயல்திறனும் மேம்பட்டது. சுவாசக்கட்டுப்பாட்டுக் கருவிகளாலும், மருந்தியக்கவியல் துறையின் முன்னேற்றங்களினாலும், தொழில்நுட்பங்களினாலும் மயக்கமூட்டிகள் மேம்படுத்தபட்டன.
மயக்கவியல் நிபுணர்களுக்கும் மயக்கவியல் உதவியாளர்களுக்குமான அறிவியல் பயிற்சிகளும் இந்த காலகட்டத்தில் உலகெங்கும் நடந்தன.
20 மற்றும் 21 -ம் நூற்றாண்டுகளில் சீன பாரம்பரிய மருத்துவத்தின் குத்தூசி மயக்கமூட்டும் முறை மீண்டும் பரவலாகியது, முக்கியமான நீண்ட அறுவை சிகிச்சையின் போது உடலின் சில குறிப்பிட்ட புள்ளிகளின் மீது ஊசிகள் குத்தி வைக்கப்பட்டன. சில சமயங்களில் அந்த ஊசிகளை இணைத்து லேசான மின்னதிர்வு அளிக்கப்படுகிறது இந்த ஊசிகள் உடலின் பக்கவாட்டு நரம்பு மண்டலங்களின் குறிப்பிட்ட பகுதிகளை தூண்டி வலி நிவாரணமளிக்கிறது.
நவீன மயக்கமூட்டிகள் முழுமையான நினைவிழக்க செய்பவைகள், உடலின் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் நினைவிழக்க செய்பவைகள் என இரண்டு பிரிவுகளில் இருக்கின்றன.
நினைவிழக்கச் செய்யும் மருந்துகள் இப்போது பல சிறப்பு மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றன. இவை அறுவை சிகிச்சை அரங்கில் மட்டும் அளிக்கப் படுபவை அல்ல. விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகள், மகப்பேறியல் அவசர சிகிச்சைகள், நாள்பட்ட மற்றும் உச்சகட்ட வலிகளை கட்டுப்படுத்த,மற்றும் நோயாளிகளை இடம் மாற்றுகையில் என பல நிலைகளில், பல்வேறு வகையான நோயாளிகளுக்கு மிகச்சிறப்பான மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது
இப்போதைய மயக்கமூட்டிகள் மிகப் பாதுகாப்பானவை, அறுவை சிகிச்சைகளின் போது மயக்கமூட்டிகளால் நிகழும் இறப்பு இப்போது 3 லட்சத்தில் ஒருவர் என்னும் விகிதத்தில் தான், அதுவும் கவனக்குறைவால் தான் நிகழ்கின்றது.
இப்போதைய நவீன மருத்துவ உபகரணங்களும், மிகச்சிறந்த மயக்கவியல் நிபுணர்களும், நவீன நோயறிதல் முறைகளும், உடற்கூறியலின் மேம்பட்ட புரிதல்களும் மயக்கவியல் துறையை மேலும் நவீனமாக்கி இருக்கிறது.
கடந்த மாதம் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்த என் இளைய சகோதரன் மைதானத்தில் வழுக்கி விழுந்து இடது கையில் எலும்பு முறிந்துவிட்டது. திருப்பூரில் பிரபல எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார். மயக்கவியல் நிபுணர் தோள்பட்டையில் மட்டும் உணர்விழக்கச் செய்யும் மருந்துகள் செலுத்திய பின்னர் தம்பிக்கு எந்த வகையான பாடல் பிடிக்கும் என்று கேட்டு. அவனுக்கு விருப்பமான இளையராஜாவின் இசையை அறுவைசிகிச்சை அரங்கில் மெலிதாக ஒலிக்க விட்டுக்கொண்டு ஒரு மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை முடித்தார்,
குருதிக்காயத்துடன் சிகிச்சை அரங்கிலிருந்து தப்பித்துப்போய் கழிப்பறைக்குள் தாழிட்டுக்கொண்ட நோயாளியிலிருந்து, இசைகேட்டுக்கொண்டு சிகிச்சை செய்துகொள்ளும் இந்தக்காலம் வரையிலான, பெருவலி நிறைந்த, மயக்கமூட்டிகள் வந்து சேர்ந்திருக்கும் பாதையை திரும்பி பார்க்கையில் மருத்துவ வரலாற்றின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு மயக்கமூட்டிகள் தான் என்பதை சந்தேகத்துகிடமின்றி சொல்லலாம்.
அறுவை சிகிச்சையின் போது மயக்கவியல் நிபுணர் குழந்தைகளின் பெயர்களையோ அல்லது எண்களையோ சொல்ல சொல்லுவார். ஒன்று, இரண்டு, மூன்று என எண்களை சொல்லச்சொல்ல நினைவிழந்துவிடுவோம். இனி துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு சிகிச்சைக்கு ஆளாக நேர்ந்தால் நினைவிழக்கும் வரை எண்களுக்கு பதிலாக மயக்கமூட்டிகளை கண்டறிந்த சுஷ்ருதரை, கோரக்கரை, ஆல்பர்ட் நிமானை, கார்ல் கொல்லரை, மார்டனை எல்லாம் வரிசையாக நினைத்துக்கொள்ளலாம்.